SHARE

உணவை உண்ணாமல் இட்டிலியை உருட்டிக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, “இட்லியோட ரேடியஸ் நேத்திக்கு விட இன்னைக்கு கொஞ்சம் பெருசா இருக்கிற மாதிரி இருக்கு இல்ல நிகி..” அருகில் அமர்ந்து வாயில் இட்லியை திணித்துக் கொண்டே வைபவ் அவளைக் கிண்டல் செய்தான்.  

“விபு.. உனக்கு ஐடெண்டிக்கல் ப்ரதெர்ஸ் பத்தி தெரியுமா?” அவன் கேட்டதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நிகிதா கேட்கவும், வைபவ் அவளை ஒரு மாதிரிப் பார்த்தான்.

“என்ன விபு.. உனக்கும் பதில் தெரியலையா? அப்பா உங்களுக்கு?” அவளது தந்தையிடம் தாவ,

“எனக்கும் புதுசா இருக்கு நிகிம்மா.. ஏண்டா அப்படி ஏதாவது புதுசா நெட்ல படிச்சியா?” கோபால் கேட்க, உச்சுக் கொட்டிவிட்டு,

“ஸ்கூல்க்கு டைம் ஆகுதுப்பா.. நான் கிளம்பறேன்..” என்றபடி உருட்டிக் கொண்டிருந்த இட்லியை அவள் உண்ணத் துவங்க, வைபவ் அவளது உதவிக்கு வந்தான்.

“நிகி.. நமக்கு தெரியாம இருக்கலாம். இப்போ தான் புதுசு புதுசா என்ன என்னவோ வெளிய வருதே.. ஆமா.. நீ ஏன் அதை நினைச்சு இவ்வளவு குழம்பி இருக்க?” அவன் வாய் விட,

“ஹ்ம்ம்.. எனக்கு கூட ஒரு விஷயம் தெரியாம இருக்கேன்னு நான் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்.. நீ என்னை கேலி செய்யற.. போ.. போய் வேலையைப் பாரு..” அவனை விரட்டி விட்டு, அவள் பள்ளிக்குச் செல்லத் தயாராக, வைபவ் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.   

“சிரிக்காதே விபு.. நானே அதைப் பத்தி தெரிஞ்சிக்கறேன்.. நீ தான் வெட்டி ஆபீசர்ன்னு எனக்குத் தெரியுமே..” என்றவள் பள்ளிக்கு கிளம்பினாள்.

பள்ளிக்குச் சென்றும் மதியம் வரை அவளது எண்ணம் முழுவதும் நிரஞ்சன் சொன்னதிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. வகுப்பில் கூட கவனத்தை செலுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவள், மதியம் நிரஞ்சனுக்கு மெசேஜ் செய்தாள்.

காலையில் அசால்டாக அப்படி ஒரு பொய்யை சொல்லிவிட்டு சென்ற நிரஞ்சனோ அதைப் பற்றிய நினைவே இல்லாமல் அன்றைய வேலைகளில் தன்னைத் தொலைத்திருந்தான்.

“நிரு அந்த மெஷின் சரியாகிடுச்சா? ப்ரடக்ஷன் எதுவும் பாதிக்காதே? நாளைக்கு லோட் அனுப்ப வேண்டி இருக்கே..” கிருஷ்ணா நிரஞ்சனைக் கவலையாகக்  கேட்டுக் கொண்டிருக்க,

“சரி பண்ணிடலாம் கிஷ்மு… நாளைக்கு மார்னிங் லோடு ஏறிடும். போர்மேன் பார்த்துட்டு இருக்கார்.. ஆல்மோஸ்ட் முடிஞ்சா மாதிரி தான்..” நிரஞ்சன் பதில் சொல்லிக் கொண்டிருக்க, கிருஷ்ணா ஏதோ யோசனையானான்.

அவனது மனதைப் படித்தவன் போல “இவங்க புது கம்பனி தான் கிஷ்மு.. பெரிய ஆர்டர் தான்.. நம்ம இவங்களுக்கு சொன்ன டைம்ல நல்லபடியா சப்ளை செய்துட்டா பெரிய ஆட்டோமொபைல் கம்பனில இருந்து ஆர்டர்ஸ் வரவும் வாய்ப்பிருக்கு.. நீ கவலைப்படாதே.. நான் நேரா போய் பார்த்துக்கறேன்..” என்ற நிரஞ்சன் அங்கிருந்து வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

மெசேஜ் அனுப்பிவிட்டு காத்திருந்த நிகிதாவின் பொறுமை பறக்கத் தொடங்கி இருந்தது. ‘நிஜமாவே ரெண்டு பேரும் வேற வேறயா? அப்போ என் கிட்ட இருக்கற நம்பர் யாரோடது? கண்டிப்பா நான் காலையில பார்த்த ஆளுதா இருக்க முடியாது. ஏன்னா அவர் என்னை தெரிஞ்சிக்கிட்ட மாதிரியே காட்டிக்கவே இல்லையே… ஆனா.. நான் மதியம் அனுப்பின மெசேஜ்க்கு பதிலே இல்லையே..’ மனதினில் புலம்பிக் கொண்டிருந்தவளைப் பார்த்த கோபால்,

“என்ன நிகிதா? ஏன் இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?” என்று வினவ,

“இல்லப்பா.. கொஞ்சம் மனசு என்னவோ போல இருக்கு. ஸ்கூல் முடிஞ்சு போச்சே.. நான் சும்மா எங்கயாவது போயிட்டு வீட்டுக்கு வந்துடவா?” கெஞ்சலாக நிகிதா கேட்க, கோபால் அவளை கூர்மையாகப் பார்த்தார்.

“அப்பா.. கோவிலுக்கு… இல்ல.. ஏதாவது பார்க்குக்கு போகலாம்ன்னு பார்க்கறேன்ப்பா.. வேற எங்கயும் இல்ல..” நிகிதா சமாதானமாகத் தெரிவிக்கவும்,

“நானும் உன் கூட வரவா? ஏன்னா நீ நல்ல மூட்ல வண்டியை ஓட்டினாலே எங்கயாவது மோதிட்டு வருவ.. இதுல இப்படி போனா சரியா வராது.. அதெல்லாம் வேண்டாம்” கவலையாக அவர் சொல்ல, நிகிதா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. நான் பத்திரமா போயிட்டு வரேன்.. போதுமா?” என்று கேட்டவள், வெளியில் செல்லும் நேரம் அவளது செல் ஓசை எழுப்பியது.

“ஏதோ மெசேஜ்..” முதலில் நினைத்துக் கொண்டு நடந்தவள், ஒருவேளை நிரஞ்சன் பதில் அனுப்பி இருப்பானோ என்ற எண்ணம் வரவும், அவசரமாக தனது செல்போனை எடுத்துப் பார்த்தாள்.

வேலை முடிந்து மீண்டும் இயந்திரம் தனது இயக்கத்தைத் தொடங்கவும் தான், நிகிதா அனுப்பிய மெசேஜ் நிரஞ்சனின் நினைவிற்கு வந்தது. அதை எடுத்துப் பார்த்தவன், அவள் அனுப்பி இருந்ததைப் பார்த்ததும் முகத்தில் மீண்டும் குறும்பு வந்து குடி கொண்டது.

‘நிரஞ்சன் நிஜமாவே உங்களுக்கு உங்களைப் போலவே அண்ணா இருக்காங்களா? ஐடெண்டிகல் பிரதர்சா?’ என்ற கேள்வியைப் பார்த்ததும், சிரித்துக் கொண்டே,

“ஆமா..  இருக்காங்க…” என்று பதில் அனுப்பிவிட்டு காத்திருந்தான்.

“நிஜமாவா? நான் இதுவரை அப்படி கேள்விப் பட்டது இல்லையே” மீண்டும் அவளது மெசேஜைப் பார்த்தவன், 

“நானே என்னை அண்ணனா நினைச்சா… அப்போ என்னைப் போலவே தானே என் அண்ணனும் இருப்பான்? ஒரே போலவே..” என்ற பதிலை அனுப்பி இருக்க, அதைப் பார்த்த நிகிதா இரண்டு முறை படித்து அதை புரிந்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள்.

“புரியலையா… நான் சொன்னது சும்மா… உள்லலாயிக்கு…” மீண்டும் நிரஞ்சனிடம் இருந்து வந்த பதிலில்,   

“அப்போ.. காலையில சொன்னது பொய்யா?” கடுப்புடன் நிகிதா மீண்டும் மெசேஜ் அனுப்ப, இப்பொழுது அவளது பதிலுக்கு நிரஞ்சனிடம் இருந்த அழைப்பு வந்தது.

எடுத்தவள்… “யூ.. யூ சீட்…” என்று பல்லைக் கடிக்க,

“ஹஹா.. நீ இப்போ நிரஞ்சன் கிட்டயா பேசிட்டு இருக்க? அப்படின்னு உனக்கு யார் சொன்னது?” நிரஞ்சன் சிரித்துக் கொண்டே கேட்க,

“அதை நான் கண்டுப்பிடிக்கிறேன்.. இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல உண்மை தெரிஞ்சிடப் போகுது..” என்று சொன்னவள், பார்க் செல்லும் முடிவை மாற்றிக் கொண்டு, நிரஞ்சனின் கம்பனிக்கு செல்ல முடிவெடுத்தாள்.

“ஹஹாஹா.. எப்படி கண்டுப்பிடிக்கிறான்னு பார்ப்போம்..” என்று சிரித்துக் கொண்டே போனை வைத்த நிரஞ்சனுக்கு அவள் சொன்னது போலவே அடுத்த பத்து நிமிடங்களில் அதிர்ச்சி காத்திருந்தது.   

அன்றைய வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நிரஞ்சன்யதேச்சையா ஜன்னல் வழியாக வெளியேப் பார்க்க, கம்பனி வாட்ச்மேனிடம் நிகிதா நின்று பேசிக் கொண்டிருப்பது அவனது கண்களில் பட்டது.

‘அடிப்பாவி.. உண்மையை கண்டுப்பிடிக்கறேன்னு இங்கயே வந்துட்டாளே..  இந்த கிருஷ்ணா வேற அவளைப் பார்த்தான்னா என்னை இன்னைக்கு வீட்ல கேலிப் பொருளா மாத்திட்டு தான் மறுவேலை பார்ப்பான்..’ மனதினில் புலம்பிக் கொண்ட நிரஞ்சன்,

“கிஷ்மு.. அவ்வளவு தான் உன்னோட வேலை முடிஞ்சது இல்ல.. எனக்கு கொஞ்சம் அவசரமா வேலை இருக்கு.. வரேன்…” எதையோ கிருஷ்ணா விடம் உளறிவிட்டு அவசரமாக நிரஞ்சன் ரிசப்ஷனை நோக்கி ஓடினான்.

“இத்தனை நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்தான்.. இப்போ இவனுக்கு என்ன வந்தது?” யோசித்த கிருஷ்ணா, நிரஞ்சனை தொடர்ந்து செல்ல முடிவெடுத்து அவசரமாக இருக்கையை விட்டு எழுந்தான்.

“இங்க நிரஞ்சன்னு ஒருத்தர் வேலை செய்யறாரே…” ரிசப்ஷன் பெண்ணிடம் நிகிதா கேட்டுக் கொண்டிருக்கும் போதே நிரஞ்சன் அவசரமாக அவள் முன்பு வந்து நின்றான்.

“நிகி.. இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. வேலை செய்யற இடத்துக்கு இப்படி எல்லாம் வந்தா பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க..” நிரஞ்சன் அவசரமாகச் சொல்ல, ரிசப்ஷன் பெண் நிரஞ்சனை அதிசயமாகப் பார்த்தாள். அவளது காலை வணக்கத்திற்கு கூட அவளைப் பார்த்து பதில் சொல்லாமல் தலையசைப்போடு முணுமுணுத்துக் கொண்டே ஓடும் அவனைத் தானே அவள் கண்டிருக்கிறாள்.

“பின்ன நீங்க செஞ்சது மட்டும் நியாயமா? இன்னைக்கு ஃபுல்லா கிளாஸ்ல இருக்கற பசங்கள்ள இருந்து எங்க அப்பா வரை எல்லாருமே என்னை ஒருமாதிரிப் பார்த்தாங்க. அண்ணனும் நீங்களும் ஒரே மாதிரி இருப்போம்ன்னு பொய் சொல்லி, காலையில என்னை யாருன்னே தெரியாத மாதிரி பேசிட்டு போயிட்டு.. என்னை இன்னைக்கு லூசு மாதிரி புலம்ப விட்டுட்டு… இப்போ நான் செய்யறது அநியாயமா?” நிகிதா பொரிந்துக் கொண்டே கேட்க, அவளையும் மீறி அவளது கண்கள் கலங்கியது.

“ச்சு நிகி.. இப்போ எதுக்கு கண்ணு கலங்குது? நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். ஆபீஸ் கிளம்பறதுக்குள்ள உனக்கு மெசேஜ் பண்ணி கிண்டல் செய்யலாம்ன்னு நினைச்சு சும்மா விளையாடினேன்.. ஆனா.. என்னவோ வேலை.. இங்க ஒரு மெஷின் ரிப்பேர் எல்லாம் சேர்ந்து காலைல உன்கிட்ட பேசினதே மறந்து போச்சு.. சாரிம்மா…” நிரஞ்சன் தணிந்த குரலில் பேச, நிகிதா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

இன்னமும் அவளது மனம் காலையில் இருந்து என்ன என்னவோ நினைத்து கலங்கியது அவளுக்கு சமாதானம் ஆக மறுத்தது. அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவன், அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து, அமைதியாக அவள் அருகே அமர்ந்தான்.

“கேட்கறவ கேனையா இருந்தா நீங்க என்ன வேணா சொல்லுவீங்களா?” மனமாறாமல் தண்ணீரைப் பருகிக் கொண்டே கேட்க,

“இந்த அழகான பொண்ணு கொஞ்சமாவது யோசிக்கும்ன்னு நினைச்சேன்.. இப்படி மக்கா இருக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலையே..” நிரஞ்சன் உதட்டைப் பிதுக்க, நிகிதா அவனை அடிக்கத் தொடங்கினாள்.

“நீங்க சொல்றதை எல்லாம் சொல்லலாம்… நான் மக்கா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்..” நிகிதா அவனை கேட்க, நிரஞ்சன் சிரிக்கத் தொடங்கினான்.

“பின்ன இல்லையா? நெட் நெட்ன்னு ஒண்ணு இருக்கே.. அதுல போய் கூகிள் ஆண்டவர் கிட்ட கேட்டு இருந்தா.. அப்படி ஏதாவது இருக்கா இல்லையான்னு தெரிஞ்சு இருக்கும். நான் சொன்னது உண்மை தானே.. நீ மக்கு…” நிரஞ்சன் அவளை கேலி செய்ய, நிகிதா அவனை முறைக்க, இருவரையும் பார்த்த அந்த ரிசப்ஷன் பெண், நிரஞ்சனை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த நிரஞ்சன் புன்னகையுடன் வாயை மூடுவது போல சைகை செய்ய, முகம் சிவக்க அந்தப் பெண் தலையை குனிந்துக் கொள்ள, அவனைப் பார்த்த கிருஷ்ணா, நிரஞ்சனின் பேய் முழியை காண ஆவலாக அவன் அருகே வந்து நின்றான்.

அவன் நினைத்தது போலவே கிருஷ்ணாவைப் பார்த்த நிரஞ்சனின் முழி திருட்டு முழியாக மாற, கிருஷ்ணாவிற்கு உள்ளூர மகிழ்ச்சி அலை கடலென பொங்கி வழிந்தது.   

‘டேய் அண்ணா.. உள்ளுக்குள்ள அப்படியே டன் கணக்குள்ள ஐஸ் கட்டி வச்சா மாதிரி சில்லுன்னு இருக்குமே.. எவன் கண்ணுல படாம இவளை அனுப்பனும்ன்னு நினைச்சேனோ அவன் கண்ணுலேயே மாட்டிக்கிட்டேனே.. நான் இப்போ எப்படி சமாளிக்கிறது? நேரா அம்மாகிட்ட போய் வத்தி வைப்பான்…’ மனதில் நிரஞ்சன் புலம்பிக் கொண்டிருக்க, கிருஷ்ணா அதைக் கண்டுக் கொள்ளாது,

“எனி ப்ராப்லம்?” என்று நிகிதாவைப் பார்த்து கேட்டான்.

“நீ..ங்..க?” நிகிதா கிருஷ்ணாவிடம் சந்தேகமாக இழுக்க, அவளது மூளையில் அவனை அன்று காரில் பார்த்தது பளிச்சிட்டது.

பதில் சொல்ல கிருஷ்ணா வாயைத் திறப்பதற்கு முன்பே, “நீங்க நிதினோட அப்பா இல்ல..” நிகிதா கேட்க, கிருஷ்ணா ‘ஆம்’ என்று தலையசைத்து,

“அவன் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டானா? ஸ்கூலுக்கு என்னோட வைஃப் வந்திருப்பாங்களே? அதைச் சொல்லத் தான் வந்தீங்களா?” கிருஷ்ணா கேட்கவும், நிகிதா மறுப்பாக தலையசைத்தாள்.

“பின்ன?” கிருஷ்ணா கெத்தாக கேட்க,

“சும்மா.. நிருவ பார்க்க…” வேண்டுமென்றே நிரஞ்சன் தனக்கு மிகவும் நெருக்கம் போல காட்டிக் கொள்வதற்கு நிகிதா அப்படிச் சொல்ல, கிருஷ்ணா குறும்பு கொப்பளிக்க நிரஞ்சனைத் திரும்பிப் பார்த்தான்.

‘நோ டா அண்ணா.. அவ எதுக்கோ பழி வாங்க வந்திருக்கா.. ப்ளீஸ்… என்னை விட்டுட்டு போய் வேலையைப் பாரு.. நான் இவளை டீல் பண்ணிக்கறேன்..’ நிரஞ்சன், கண்களின் வழியே கிருஷ்ணாவிடம் சொல்லிக் கொண்டிருக்க, கிருஷ்ணாவோ,

‘கோழி தானா செமையா இல்ல சிக்கி இருக்க… அதை அடிச்சு குருமா வைக்காம அப்படியே தடவிக் கொடுத்து விடச் சொல்றியா என்ன?’ பதிலுக்கு நிரஞ்சனைப் பார்த்துக் கொண்டிருக்க, கிருஷ்ணாவின் குறும்புப் பார்வையும், நிரஞ்சனின் பரிதாபப் பார்வையையும் கண்டுக் கொண்ட நிகிதா, கிருஷ்ணா நிரஞ்சனுக்கு மிகவும் நெருக்கம் தான் முடிவெடுத்துக் கொண்டு, குறும்பு தலைத் தூக்க ஒரு முடிவெடுத்தாள்.   

“நிரு என்ன எக்ஸ்சிபிஷினா சும்மா பார்த்துட்டு போக?” மீண்டும் கிருஷ்ணா வாயைக் கொடுக்க, அவனது கண்களில் இருந்த குறும்பு மின்னலில் நிகிதாவின் முடிவு உறுதியானது.    

“இல்ல தான்.. ஆனா.. அவர் என்னோட க்…ளோ…ஸ் பிரெண்ட்.. அப்படியே நிருவோட பாஸ் யாருன்னு பார்க்கத் தான் வந்தேன்…”

“அப்படியா என்னயா பார்க்க வந்தீங்க?” கிருஷ்ணா அதிசயமாகக் கேட்க, நிரஞ்சன் கிருஷ்ணாவை கேலியாகப் பார்க்க, அதைக் கண்டுக் கொண்ட நிகிதா,

“ஏன்னா அவர் உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கார்…” பதிலுக்கு கிருஷ்ணாவிடம் சொல்லவும், கிருஷ்ணா திகைத்து நிரஞ்ஜனைப் பார்த்தான்.

“என்னது? இவன் என்னைப் பத்தி நிறைய சொன்னானா? நான் என்ன கதையா… பக்கம் பக்கமா சொல்ல?” வேகமாக சொல்லிக் கொண்டே வந்தவன், டக்கென்று நிறுத்திவிட்டு,

“என்னைப் பத்தி இவன் உயர்வா சொல்லி இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல..” கிருஷ்ணா தானே தனது தலையைக் கொடுக்க, நிகிதா நிரஞ்சனை குறும்பாகப் பார்த்து சிரித்தாள்.     

‘ஆஹா.. இன்னைக்கு இவன் மாட்டினானா? வாடி… வாலண்டரியா வந்து தலைய கொடுத்த இல்ல.. அவ சீவி விட்டுடுவா? ஏதோ பிளானோட தான் அவ ஸ்டார்ட் பண்ணி இருக்கா.. அந்த ஆப்பு எனக்கா இவனுக்கான்னு தான் தெரியலையே.. ஓ மை காட்’ நிரஞ்சன் நினைத்துக் கொண்டு உள்ளூர சிரிக்கத் தொடங்கினான்.

“இவன் உங்ககிட்ட ஏதாவது பிரச்சனை செய்தானா?” கிருஷ்ணா மீண்டும் கேட்க,

“ஹ்ம்ம் இல்ல.. அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்ப கூட நேரம் இல்லையாம்.. அப்படி வேலை வேலைன்னு ஓடறார்.. நீங்க அதை என்னன்னு பார்க்க மாட்டீங்களா? அந்த அளவுக்கு வேலை வாங்கறது நியாயமா?” இடையே, காலையில் இருந்து நிரஞ்சன் வேலை என்று சொன்னதும், அதனால் தான் பட்ட மன உளைச்சலும் சேர்ந்து நிகிதா கேட்கவும்,

“நீ எப்போடா ஓவரா வேலை பார்த்த?” கிருஷ்ணா கிண்டலாகக் நிரஞ்சனைக் கேட்க, நிரஞ்சன் உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

“அப்போ அவர் வேலையே செய்யலன்னு சொல்றீங்களா? அப்போ அவர் என்ன செய்யறார் ஏது செய்யறார்ன்னு நீங்க பார்க்க மாட்டீங்களா?” நிகிதா மீண்டும் கேட்கவும், கிருஷ்ணா புருவத்தை உயர்த்தி நிரஞ்சனைப் பார்க்க, நிரஞ்சனின் கண்கள் சிரிப்பில் மிளிர்ந்தது.

“அவன் ஏதோ வேலை செய்யறேன்னு சொல்றான்.. அதுக்கும் மேல நான் கேட்டா எங்க அம்மாகிட்ட போய் வத்தி வைப்பான். அதான் நான் எதுவுமே சொல்றது இல்லைங்க.. அவன் மெசேஜ் பார்க்கலைன்னா அதுக்கு நானா பொறுப்பு.. உங்க சண்டையை எல்லாம் ஆபீஸ் முடிஞ்சு நீங்க வச்சிக்கணும்..” கிருஷ்ணா சொல்ல,  

“இவரோட ஐடெண்டிகள் பிரதர் வேற காலையில என்னைப் பார்த்து நீ யாருன்னு கேட்டுட்டு போனார். போகும் போது நிரஞ்சன் தண்டமா சுத்திட்டு இருக்கான்னு வேற சொல்லிட்டு போனார். இவரோட க்ளோஸ் பிரெண்ட் எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க… பதறி அடிச்சு நான் காலையில அனுப்பின மெசேஜ்க்கு இப்போ தான் பதில் அனுப்பறார்.. அதுவரை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு உங்களுக்கு புரியாது. ஏன்னா நீங்க எல்லாம் ஜென்ட்ஸ்.. ஒரு பொண்ணா இருந்தா தான் உங்களுக்கு அந்த இதெல்லாம் புரியும்…” அவள் படபடவென்று பேச,

கிருஷ்ணா ‘ஐடெண்டிகல் பிரதர்சா’ என்று ஜெர்க் ஆகி நிரஞ்ஜனைப் பார்க்க, நிரஞ்சன் கிருஷ்ணாவை பதில் சொல்லு என்பது போல பார்த்தான்.

“இவனுக்கு ஐடெண்டிகள் பிரதர் இருக்காங்களா?” கிருஷ்ணா அதிசயிக்க,

“பின்ன… உங்களுக்கே தெரியாதா? நீங்க தப்பா ட்வின்ஸ்ன்னு எல்லாம் நினைச்சிடாதீங்க.. அண்ணனும் தம்பியும் ஒரே போலவே இருக்கறதுக்கு பேர் தான் அதுவாம்.. பார்த்துங்க உங்க கம்பனியில இருக்கறது நிரஞ்சனா கிருஷ்ணாவான்னு நீங்க டெய்லி செக் பண்ணிக்கோங்க…” நிகிதா நிரஞ்சன் சொன்னதை வைத்தே போட்டுக் கொடுக்க, ‘கிருஷ்ணாவா?’ அடுத்த ஜெர்க் கிருஷ்ணாவிடம் இருந்து வந்தது.

“இவர் தான் கிருஷ்ணா.. என்னைப் போலவே இல்ல..” நிரஞ்சன் நடுவில் புகுந்து கேட்க, ‘நீ என்ன லுசா?’ என்பதைப் போல நிகிதா நிரஞ்சனைப் பார்க்க, கிருஷ்ணா அவனை முறைத்தான்.

“இவர் உங்களுக்கு அண்ணன் மாதிரியா இருக்கலாம்.. அதுக்காக இவர் உங்களுக்கு அண்ணனாகிட முடியுமா? அதும் ஒரே மாதிரி வேற…” நிகிதா பட்டென்று கேட்க, இருவரின் சண்டையில் கிருஷ்ணாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

‘இதென்னடா இது? நாம இவனை கலாய்க்கலாம்ன்னு போனா… இவன் என்ன என்னவோ பொய் சொல்லி நம்மளை மாட்டி விட்டு வேடிக்கை பார்த்துட்டு நிக்கறான். இவ கிளம்பட்டும்.. அவனை என்ன செய்யறேன்னு பாரு..’ கிருஷ்ணா மனதினில் நினைத்துக் கொண்டு, நிகிதாவிடம் எதையோ சொல்ல வாய்த் திறக்க, நிரஞ்சன் மீண்டும் இடையிட்டான்.  

“சும்மா விளையாட்டுக்கு நிகி.. அதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு எம்.டி சார் கிட்ட சண்டைப் போடக் கூடாது.. குட் கேர்ள் இல்ல..” நிரஞ்சன் அவளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட,

‘அடப்பாவி.. இன்னும் என்ன எல்லாம் பில்டப் விட்டு இருக்க?’ கிருஷ்ணா மனதினில் நினைக்க, நிரஞ்சன் அவனைப் பார்த்து கண்ணடிக்கவும்,

“இனிமே நான் இவரை உங்க மெசேஜ் வந்த உடனே பார்த்து உடனே பதில் அனுப்பச் சொல்றேங்க…” நிகிதாவிடம் கூறிவிட்டு,

“நீங்க பேசிட்டு வாங்க சார்.. நான் உங்களுக்காக மீட்டிங்குக்கு கூட வெயிட் பண்ணறேன்..” என்ற கிருஷ்ணா நிரஞ்சனை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல, நிரஞ்சன் சிரித்துக் கொண்டே தலையசைக்க, கிருஷ்ணா கடுப்பானான்.  

“என்ன சிரிக்கற? உன்னை அம்மாகிட்டயே சொல்றேன்..” என்றவன், நிரஞ்சன் பதில் சொல்வதற்கு முன்பு அங்கிருந்து நகர்ந்து செல்ல, நிகிதா நிரஞ்ஜனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“காலையில நான் உன்னை கலாய்ச்சதுக்கு என்னை திருப்பி கலாய்ச்சு பழி வாங்கியாச்சா? என்னை மட்டும் கலாய்க்க வேண்டியது தானே.. அவர்கிட்ட ஏன் எல்லாத்தையும் சொன்னா? நான் இன்னைக்கு வீட்ல மாட்டினேன்..” சிரித்துக் கொண்டே நிரஞ்சன் கேட்க, நிகிதா திரு திருவென விழித்தாள்.

“சும்மா ஒரு டைம் பாஸ்க்கு… அது என்ன என்னைப் பார்த்ததும் ரெண்டு பேரும் கண்ணுலேயே பேசிக்கிட்டீங்க? அது தான்.. என்னை வச்சு காமெடி செய்யற மாதிரி இருந்தது.. அதான் நான் செஞ்சுட்டேன்..” இளித்துக் கொண்டே நிகிதா சொல்ல..

“நல்லா செஞ்ச போ..” நிரஞ்சன் சலித்துக் கொள்ளவும், நிகிதா அவனைப் பார்த்து சிரித்தாள்.

“இப்போ போய் உங்க அண்ணன சமாளிக்கணுமா? அம்மாகிட்ட வேற சொல்லுவேன்னு சொல்லிட்டு போறார்? அன்னிக்கு கோவில்ல பார்த்த அம்மாவா?” நிகிதா கேட்கவும், நிரஞ்சன் ‘ஆம்’ என்று தலையாட்டி,

“இன்னைக்கு வீட்டுக்கு போனா குடும்பமே சேர்ந்து என்னை நடுவுல உட்கார்த்தி வச்சு கும்மி அடிக்க போறாங்க… மீ பாவம்.. நிதின் புரிஞ்சும் புரியாமையும் என்னை எதையாவது போட்டுக் கொடுப்பான்..” நிரஞ்சன் பாவமாகச் சொல்ல, நிகிதா சிரித்துக் கொண்டே,

“சாரி.. ரொம்ப ரொம்ப சாரி.. பட் யூ என்ஜாய் தி டே.. அப்போ பை பை நிரு.. நான் நைட் உங்களுக்கு டமேஜ் எவ்வளவுன்னு கேட்டு மெசேஜ் செய்யறேன்.. தவறாம பதில் அனுப்புங்க… இல்ல.. நாளை காலை மீண்டும் சந்திப்போம்.. இப்போ பை..” என்றபடி நிகிதா கிளம்பிச் செல்ல,

“அடிங்க…” என்று நிரஞ்சன் அவளை விரட்டுவது போல நடிக்க, வேகமாக நிகிதா நடக்க, அதே இடத்தில் நின்றுக் கொண்டு நிரஞ்சன் சிரித்துக் கொண்டிருக்க, அவனது தோளில் ஒரு கை விழ, நிரஞ்சன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

வாழ்க்கையில் திடீர்

அழகியலை புகுத்தும்

அழகான தருணங்களை

எல்லாம் அவளால்

மட்டுமே தர இயலும்

அசந்து போய் நிற்க வைத்தாலும்

அல்லாட வைக்கும்

இந்த காதலே வேண்டாம் சாமி!!  

SHARE
Previous articleKathalagi — 12

18 COMMENTS

    • தேங்க்ஸ் சசி … என்ன செய்யறது வருஷத்துக்கு ஒண்ணு சென்னைக்கு வருதே :p

LEAVE A REPLY