SHARE

முடிந்து போனதாய்

நினைத்த

இந்த பயணத்தின்

அடுத்த அத்தியாயத்தை

என் அனுமதியே

இல்லாமல்

ஆரம்பிக்கும்

அவளின் நினைவுத் தடங்கள்!!

 

 

 

 

 

மாலைச் சூரியன் மெல்ல மறைந்து, நிலாமகள் மெதுவாக எட்டிப்பார்த்து, அந்த அழகிய நிலவின் ஒளியை மறைக்க முயன்ற கருமேகங்களுக்கு இடையில், தன் இருப்பை உணர்த்தி, நடுவானில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தாள். டிராபிக் இல்லாத அந்த தேசிய நெடுஞ்சாலையில், விஸ்…. விஸ்… என்ற இரைச்சலுடன் விரைந்து செல்லும் லாரிகளுக்கு இடையில், ஒரு கார் ஊர்ந்து வந்துக் கொண்டிருந்தது. நிதானமாக எந்த அவசரமும் இன்றி சென்றுக் கொண்டிருந்த அந்தக் காரில் இருந்து,

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்    

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த காரை ஓட்டிக் கொண்டிருந்த நபர், அதை ரசித்து கேட்டுக் கொண்டே வர, பின் சீட்டில் அமர்ந்திருந்த, முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த வாலிபன், அதை சிறிதும் ரசிக்காமல், தனது லேப்டாப்பில் மூழ்கி இருக்க, அதை கண்டும் காணாத அந்த ஓட்டுனரோ, தலையை ஆட்டி, பாடலை முணுமுணுத்துக் கொண்டே வந்தார்.

அந்த இரவின் அமைதியையும், அந்த பாடலின் இனிமையையும் குலைத்தது, செல்போனின் ரிங்க்டோன் சத்தம்… “எஸ்… ப்ரித்வி ஹியர்…” என்று கம்பீரமாக, அதே சமயம் கடுமையாக ஒலித்த அந்த குரலைக் கேட்டதும், ஓட்டுனர், பாடலின் சத்தத்தை குறைக்க, அவரை அர்த்தப் பார்வை பார்த்தவன், வேறு எதுவும் சொல்லாமல்,

“ஹ்ம்ம்… எங்க பிடிச்சீங்க? பொய் தானே சொல்லிட்டு சுத்திட்டு இருந்தான்?” என்று கர்ஜிக்கவும், எதிர்புறம் என்ன பதில் சொல்லப்பட்டதோ,

“நான் வர வரை அங்கேயே வைங்க… அவன் உடம்புல ஒரு காயமும் படக் கூடாது… ஆனா, தண்ணியைத் தவிர சாப்பாடு எதுவும் கொடுக்கக் கூடாது…. அந்த இருட்டு ரூம்லையே போட்டு வைங்க… நான் வரும் வரை…” அந்த கடைசி வாக்கியத்தில் இருந்த அழுத்தம், அவன் இன்னும் தான் திரும்பி வரும் நாளை முடிவு செய்யவில்லை என்பதை சொல்லாமல் சொல்ல, ஓட்டுனர் ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

போனை வைத்தவன், “என்ன ராமண்ணா… மூச்சு எல்லாம் பலமா வெளிய வருது…” கல்லாக சமைந்து இருந்த முகத்தில், எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் அவன் கேட்கவும்,

“இல்லைங்க தம்பி… அந்த நந்தகோபாலை நினைச்சு தான் பெருமூச்சு விட்டேன்… அன்னிக்கு நான் போய் கேட்ட போதே, அவன் பணத்தை தந்திருக்கலாம்… கையோட மொத்த கடனையும் அடைச்சிட்டு அவன் வீட்டிற்கு வசதியும் செய்துக்கிட்டு இருந்து இருக்கலாம்.. அதை செய்யாம, ‘பணமே இல்ல…. சாப்பாட்டுக்கே கஷ்டப்படறேன்னு’ பொய் சொல்லிட்டு, இப்போ மாட்டிக்கிட்டானேன்னு நினைச்சேன்…” இயல்பாக அவர் சொல்லி முடிக்க, அதே உணர்ச்சி இல்லாத முகத்துடன், ஒப்புதலாக தலையசைத்த ப்ரித்வி, தனது லேப்டாப்பில் காரை வடிவமைக்கத் தொடங்கினான்.

பழக்கமான அவனது உணர்ச்சி துடைத்த முகத்தை கண்ணாடி வழியாகப் பார்த்தவர், தனது கவனத்தை மீண்டும் சாலையில் பதிக்க, “இந்த தடவ எனக்கு எந்த டிசைனும் சட்டுன்னு சிக்க மாட்டேங்குது… அதனால நாம திரும்பி போக எவ்வளவு நாள் ஆகும்னு சொல்ல முடியாது… நீங்க வீட்ல சொல்லிட்டு வந்திருக்கீங்க இல்ல… அப்படி இல்லைன்னா, நீங்க ராஜமுந்திரில இறங்கிக்கோங்க… நான் போன் செய்து சுந்தரை வரச் சொல்லிடறேன்…” கோபமாகச் சொல்கிறானா, இல்லை இயல்பாகச் சொல்கிறானா, என்று இரண்டொரு நொடிகள் ஆராய்ந்தவர், அவனது முகமே அப்படித் தானே என்று தேற்றிக் கொண்டு,

“இல்ல தம்பி… சொல்லிட்டுத் தான் வந்தேன்.. நானே வரேன்…” என்று சொல்லியவரை நிமிர்ந்து கூட பார்க்காமல், அவன் தனது பணியில் மூழ்க, ராமண்ணாவும், அதற்கு மேல் எதுவும் பேசாமல், காரைச் செலுத்தினார்.

ப்ரித்வி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரித்விராஜ், வளர்ந்து வரும் தொழிலதிபன்…. கார்களை வடிவமைத்து, மக்களின் ரசனைக்கேற்ப அதை மாற்றிக் கொடுப்பதில் வித்தகன்.. பலர் தங்களுக்கு பிடித்த புதிய கார்களை வாங்கி, நேராக அவனிடம் எடுத்துச் சென்று, தங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைக்க, அவனிடம் ஒப்படைக்கும் அளவிற்கு புகழ் பெற்றவன்.

அவனுக்கு இன்னொரு முகமும் உண்டு… பணத்தை வட்டிக்கு கொடுத்து, அதை தவறாமல் பெறுவதில் வல்லவன்… பொய் சொல்லாமல் வாய்தா கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும்… அதே போல், பொய் கூறி, பணம் கட்டத் தவறினால், தண்டனை கடுமையாக இருக்கும். உறவு என்று கூற யாருமில்லாத நிலையில், அவனது பாதுகாப்பிற்காக தந்தை வைத்து விட்டுப் போன சொத்தை, ஊதாரித் தனமாக அழிக்காமல், தனக்கு விருப்பமான படிப்பை படித்து, அதை மேலும் பல மடங்கு உயர்த்தி, இந்த நிலையை எட்டி இருக்கும் அவனது முகத்தில் இருக்கும் ஒரே பாவம், கற்சிலை போன்ற தோற்றமே.

புதியதாக காரின் மாடலை வடிவமைப்பதற்காக, எந்த இடையூறும் இன்றி, தனக்கு வசதியாக வடிவமைத்துக் கொண்ட காரில், சென்று சேரும் இடமறியாமல், சில பல ஊர்களைத் தாண்டி, ஏன், சிலமுறை, அடுத்த மாநிலத்திற்கே செல்லவும் நேரிடும். அது அவனது வழக்கம்… மேலும், இந்தப் பயணமானது ப்ரித்வியின் விருப்பப்படி, அவன் ஊருக்குத் திரும்பலாம் என்று கூறும் வரை தொடரும்.. இதோ இம்முறையும், அவனது அலுவலக இருப்பிடமான பெங்களூரில் இருந்து ஸ்ரீகாகுளம் வரை சென்றவர்கள், அங்கிருந்து விசாகபட்டினம் செல்லும் சாலைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.. ப்ரித்வியின் பயணம் தொடர, அதே நேரம், விசாகபட்டினத்தின் கடற்கரையில், அலையின் இரைச்சலையும் தாண்டிய சலசலப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

 

 

 

கல்லூரி மாணவர்கள் போல் காட்சியளித்த அந்த குழுவில், ஒரு இளம் பெண் கத்திக் கொண்டிருக்க, அவளை கேலி செய்தும், சீண்டியும், கூட இருந்த மாணவ மாணவிகள் பதிலுக்கு கத்திக் கொண்டிருக்க, வாக்குவாதம் பலமாக முற்றிக் கொண்டிருந்தது.

“கஜா…. டி கஜா… இங்க தனியா தான் நிக்க போறியா?” ஒரு பெண்ணின் குரலில்,

“வாய மூடிக்கிட்டு ஊருக்கு கிளம்பு… எனக்கு தனியா வரத் தெரியும்…” கஜா என்றும், கஜாவின் ஆங்கிலப் பதமான எலிஃபேன்ட் என்றும், நண்பர்களால் அழைக்கப்படும், கஜலக்ஷ்மி கோபமாகச் சொல்ல,

“ப்ளீஸ் புள்ள… இங்க நின்னு இப்படித்தான் கத்தி கூப்பாடு போடுவியா? நாம கிளம்பலாம்… இன்னும் கொஞ்ச நேரத்துல நம்மளோட பஸ் வந்துரும் புள்ள… அந்த பஸ்சை பிடிச்சாத் தான், சரியான நேரத்துக்கு ஊருக்குப் போய் சேர முடியும்… வா புள்ள கிளம்பு… இப்போ நாம கிளம்பலைனா, நம்ம நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பார்த்தியா? வம்ப விலை கொடுத்து வாங்காத கஜா…” அவளது தோழி, முல்லை சொல்லவும், முகத்தைத் திருப்பிக் கொண்ட கஜலக்ஷ்மி, கடல் கரையில் சென்று அமர்ந்தாள்.

மீண்டும் மீண்டும் முல்லை கெஞ்சவும், “இவ சொன்னா கேட்க மாட்டா… நமக்கு மணி ஆகுது… இவ எப்படியோ வரட்டும்… இங்க தனியா நின்னு பயந்து நடுங்கினா தான் அவளுக்கு புத்தி வரும்.. சும்மா விளையாட்டுக்கு செய்யறதுக்கு எல்லாம் கோவிச்சிட்டு உட்கார்ந்து இருக்கா… பேய் மாதிரி… அதுக்குத் தான் இவ நம்ம கூட வரவேண்டாம்ன்னு சொன்னேன்…” அவர்களுடன் வந்திருந்த ஒரு மாணவன் கஜாவைப் பார்த்து எகிற,

“போயேன்… யாரு வேண்டாம்ன்னு சொன்னா? எனக்கு தனியா வரத் தெரியும்… இந்த கஜாவுக்கே பயம்ன்னு சொல்றயே… ஊர்ல இருந்து, முதல் முதலா பட்டணத்துக்கு படிக்க வந்தவடா நான்…” சிறிதும் பயப்படாமல் அவள் பதிலுக்கு எகிறிக் கொண்டிருக்கவும்,

“கொஞ்சம் புத்தியோட பேசு கஜா… நான் உன்னை கிண்டல் செய்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்… தயவு செய்து கிளம்பு… நம்ம பெத்தவங்க கிட்ட பொய்யைச் சொல்லிட்டு வந்திருக்கோம் புள்ள… அந்த நினைப்பு உனக்கு கொஞ்சமாவது மனசுல இருக்கா? அவங்களைப் பொறுத்தவரை நாம இப்போ ஹாஸ்டல்ல இருக்கோம்.

கொஞ்சம் உன் கோவத்தை விட்டுட்டு யோசி கஜா… நாம பத்திரமா ஊர் போய் சேருவோம்… அத்தோட இந்த பட்டணத்து சகவாசமே வேண்டாம்ன்னு நம்ம வேலையைப் பார்ப்போம் புள்ள… இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்… நான் வீட்ல பொய் சொல்லிட்டு இப்படி ஊர் சுத்தறது தெரிஞ்சா, எங்க மாமா, சாமியாடிடும்…” முல்லை நடுங்க,

“உனக்குத் தானே கல்யாணம்… எனக்குத் தான் இப்போ கல்யாணம் இல்லையே… அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு… அதனால நீ கிளம்பு… நான் தனியா வந்துக்கறேன்… அப்படியே வரலைனாலும், என் மாமா ஒண்ணும் கண்டுக்காது… வேற செவத்த குட்டியா பார்த்து பரிசம் போட போயிருவாங்க..” விடாமல் அதே இடத்தில் கஜா அமர்ந்துக் கொண்டு, பிடிவாதம் பிடிக்க,

“அப்படியே உன் ரெண்டு கன்னத்தையும் பழுக்க வைக்கலைனா என் பேர் முல்லை இல்லடி… என்ன தாண்டி உன் மனசுல நினைப்பு… நீ வரலைன்னா என்னையும் சேர்த்து இல்ல கொன்னு போடுவாங்க…” முல்லை கண்ணீர் சிந்தினாலும், அதற்கும் அசைந்து கொடுக்காமல் கோபத்துடன் கஜா  அமர்ந்திருக்க, அவர்களுடன் வந்த மாணவனில் ஒருவனான லோகேஷ் கடுப்புடன் முல்லையைப் பிடித்து இழுத்தான்.  

“அவளை எப்படி சரி கட்டறதுன்னு எனக்குத் தெரியும்…” முல்லையின் அருகே மெல்ல கூறியவன்,  

“கஜா… நாம ஒரு பெட் வைப்போம்… நாங்க எல்லாம் இப்போ பஸ்ல கிளம்பி, சென்னை போய் அப்படியே அங்கிருந்து இன்னொரு பஸ் பிடிச்சு மதுரை போறோம்…” அவன் சொல்லத் தொடங்கும் முன்பே,

“அதுக்கு என்ன இப்போ?” கஜலக்ஷ்மி நீட்டி முழக்க,

“சொல்லிட்டே இருக்கேன் இல்ல அவசரக் குடுக்கை… நாங்க எல்லாம் சேர்ந்து போறோம்… நீ தனியாவே தான் ஊருக்கு வரணும்… நாங்க வர பஸ்லயே வருவியோ, இல்ல அடுத்த பஸ்சை பிடிச்சு வருவியோ அது எனக்குத் தெரியாது. அதே பஸ்ல வந்தாலும் தனியா தான் வரணும்… ஊருக்கு போய் சேருற வரை எங்க யாரோடையும் பேசவே கூடாது… என்ன சொல்ற?” அவன் பெட்டைச் சொல்லவும்,

“அதனால எனக்கு என்ன லாபம்?” அவள் யோசிப்பதைப் பார்த்தவன்,

“அப்படி மட்டும் நீ தனியா வந்துட்டன்னா… உனக்கு பிடிக்காத மாமாவோட நடக்க இருக்கிற உன் கல்யாணம், அதுவா நின்னு போயிரும்… அப்பறம் உனக்கு பிடிச்ச மகாராஜன் வந்து உன்னை கல்யாணம் செய்து கூட்டிட்டு போவான்…” லோகேஷ் சொல்லச் சொல்ல, கஜாவின் முகத்தில் வந்த பிரகாசத்தைப் பார்த்த முல்லை பீதியடைந்தாள்.

“ஏன் லோகேஷ் அவளை உசுப்பேத்தற?” லோகேஷை அவள் கண்டிக்கவும்,    

“அவ்வளவு தானா? கண்டிப்பா நான் இந்த சவாலை ஏத்துக்கறேன்… நீங்க ஊருக்குப் போய் சேரறதுக்கு முன்ன நான் போய் சேரல, நான் கஜலக்ஷ்மி இல்ல…” கஜா சூளுரைக்கவும்,

“கொழுப்பு அடங்குதா பாரு உன் பிரெண்ட்டுக்கு..” லோகேஷ் மீண்டும் வாயைக் கொடுக்கவும்,

“கொம்பு சீவற மாதிரி அவளை சீண்டி விட்டுட்டு அவளுக்கு கொழுப்புன்னு சொல்ற… இன்னும் கொஞ்ச நேரத்துல அவ ரூமுக்கு வரல… மவனே உன்னைப் பிடிச்சு எங்க மாமா கிட்ட கொடுத்திருவேன்…” எச்சரித்த முல்லை, லோகேஷை முறைத்துக் கொண்டிருக்க,

“இவளை கொஞ்ச நேரம் தனியா விட்டாத் தான் சரியா வருவா, முல்லை… வாங்க நாம கிளம்புவோம்…” லோகேஷ் சொல்லவும், மனம் ஆறாமல், சிறிது நேரம் கெஞ்சிப் பார்த்த முல்லை, கஜா விடாப்பிடியாக நிற்கவும், வேறு வழியின்றி, அவர்களுடன் வந்த மாணவ மாணவிகளுடன், அறைக்குக் கிளம்பிச் சென்றாள்.

“முல்லை… நீ எதுக்கு இப்போ இப்படி ஃபீல் பண்ணற… கொஞ்ச நேரத்துல நம்ம பின்னாலேயே வந்து நிக்க போறா, பாரு,…” முல்லையை சாமாதானப்படுத்திய லோகேஷ், பொருட்களை எடுத்து வைத்து, கிளம்ப ஆயத்தமானான்.

கஜலக்ஷ்மி… துடுக்குத்தனமும், பிடிவாதமும், பொறுப்பும் சேர்ந்த கலவையான பெண்  அவள். கல்லூரியின் இறுதியாண்டு படிப்பு முடித்து, மீண்டும் தனது கூட்டிற்கே பறக்க காத்திருக்கும் பறவை. அவளும் முல்லையும் ஒரே கிராமத்தைச் சேர்த்தவர்கள்…. அந்த கிராமத்தில் இருந்து முதன்முதலில், கல்லூரிக்கு, அதுவும் வெளியூர் வரை சென்று படிக்க அனுமதி பெற்ற பெருமை கஜலக்ஷ்மியையே சாரும்… அவளுக்குத் துணையாகத் தான், முல்லைக்கும் ஊரை விட்டு வெளியில் செல்ல, அனுமதி வழங்கி, அவளது பெற்றோர் கஜலக்ஷ்மியுடன் அனுப்பி வைத்திருந்தனர்.

அந்த கிராமத்தில் செல்வந்தர் வீட்டுப் பெண்ணான கஜலக்ஷ்மி, பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிவிட, அவளது ஆசிரியரின் பரிந்துரையின் பெயரிலும், அவளது பிடிவாதத்தினாலும், பட்டப்படிப்பு படிக்க அனுமதித்தனர் அவளது பெற்றோர்.

அவர்களது ஊர் பல கட்டுப்பாடுகளையுடையது. அந்த கட்டுப்பாட்டின் படி,  ஊரை விட்டு வெளியில் செல்வதற்கு முன், பரிசம் போட்டு, மாப்பிள்ளையை நிச்சயம் செய்து, அவர்களின் அனுமதியுடன், கஜலக்ஷ்மியையும், முல்லையையும் படிக்க அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முடிந்து, ஊருக்கு திரும்புவதற்கு முன், அவர்களின் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து, விசாகபட்டினத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். வந்திருந்த இடத்தில், முல்லை, மற்ற மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு, கஜம் என்ற பெயரின் பொருளான யானையை வைத்து, கஜலக்ஷ்மியை கிண்டல் செய்யவும், கோபம் கொண்ட கஜலக்ஷ்மி, அவர்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு, அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

எப்பொழுதும், அவளது கோபம் சொற்ப நேரமே என்று தெரிந்து வைத்திருந்த நண்பர்கள், சிறிது நேரத்தில் அவள் அறைக்கு வந்து விடுவாள் என்று காத்திருக்க, ஏனோ இன்று வழக்கத்திற்கு மாறாக கோபத்தில் கனன்றுக் கொண்டிருந்த கஜலக்ஷ்மியோ அசையாமல் அமர்ந்திருந்தாள்…. அதுவும் லோகேஷ் கூறியதே அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது….

“நாம தனியா ஊருக்கு போயிட்டா… கல்யாணம் நின்னுருமா?” அவளது யோசனை அங்கேயே வட்டமடிக்க, ஏனோ அவளுக்கு நிச்சயித்திருந்த அவளது ஒன்றுவிட்ட மாமாவின் முகம் அவளது மனக் கண்ணில் வந்து போனது.

“அய்யே.. எப்பவும் குடிச்சிட்டு, வெள்ளைத் தோலைப் பார்த்தா வழிஞ்சிட்டு கிடக்கற அவனை நான் எப்படி கல்யாணம் கட்டிக்க முடியும்? படிக்காதவனா கூட இருக்கலாம்… குணம் கெட்டவன நம்பி நான் எப்படி என் வாழ்க்கைய கொடுக்கறது?” அவளது மனம் சண்டித்தனம் செய்ய, மூளை பலவிதமாக யோசித்து ஒரு முடிவு கண்டது.

அனைவரும் கிளம்பித் தயாராக, “டேய் லோகேஷ்… நீ தானே கொம்பு சீவி விட்ட… போய் அவளை சமாதானம் செய்து கூட்டிட்டு வா… அவ அங்கே தனியா உட்கார்ந்து இருக்கா… ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா ஊருக்குள்ள யாருக்கும் என்னால பதில் சொல்ல முடியாதுப்பா…. கொஞ்சம் போய் பேசேன்…” முள்ளின் மேல் நிற்பவளைப் போல முல்லை நின்றுக் கொண்டு கெஞ்ச, லோகேஷும், கஜலக்ஷ்மியைத் தேடி, மீண்டும் கடற்கரைக்குச் சென்றான்.

அங்கு….

—————————-

“தம்பி… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு விசாகபட்டினம் போலாங்களா?” ராமண்ணா கேட்கவும்,

“உங்களுக்கு ரெஸ்ட் வேணுமா?” தாடையைத் தடவியவாறே ப்ரித்வி கேட்கவும்,

“இல்ல… நீங்க மதியமும் சாப்பிடல… ராத்திரியும் சாப்பிடல… அதனால கேட்டேன்…” அவரின் பதிலில்,

“இந்த நேரத்துல எந்த மோட்டலுக்கும் போக வேண்டாம்… நம்ம இன்னும் ஒரு மணி நேரத்துல விசாகபட்டினம் போயிடுவோமே… அங்க ரிசார்ட்ல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, நாம தொடரலாம்…” அவனது முடிவைச் சொல்லவும், விசாகபட்டினத்தை நோக்கி, கார் பறந்தது.

“சரிங்க தம்பி….” என்றவர், விசாகபட்டினத்தின் கடற்கரை ரிசார்ட்டில் காரைக்கொண்டு நிறுத்த, அங்கிருந்த விடுதியில், ஒரு அறையை எடுத்து, ப்ரித்வி ராமண்ணாவை அழைத்துக் கொண்டு, உள்ளே செல்ல, சிறிது நேரம் ஓய்வெடுத்தவர், குளித்து, ப்ரித்வி ஆர்டர் கொடுத்திருந்த டீயை பருகிவிட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு, மீண்டும் காருக்குச் செல்ல, அவரைத் தொடர்ந்து, சிறிது  நேரத்தில் ப்ரித்வியும் காருக்கு வந்து சேர்ந்தான்.

“லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டுக்கிட்டீங்களா தம்பி… நாம கிளம்பலாங்களா?” வழக்கமாக, ஒரு இடத்தில் ஒய்வுக்கென்று நிறுத்தினால், மீண்டும் கிளம்பும் முன் கேட்கும் கேள்வியை ராமண்ணா கேட்க,

“ஹ்ம்ம்…” ஒற்றை வார்த்தையுடன் தனது வேலையைத் தொடர்வதற்கு, அவன் லேப்டாப்பை எடுக்க, அப்பொழுது தான் கார், அந்த ரிசார்ட்டின் வாயிலைத் தாண்டி, ஒரு திருப்பத்தில் திரும்பியது.        

அந்த நேரம், அந்தக் காரை ஒரு இளம்பெண் வழி மறிக்கவும், காரை நிறுத்திய ராமண்ணா, “ஹே யாரும்மா நீ? போய் வேற வேலையைப் பாரு… நீ சாகறதுக்கு எங்க வண்டி தான் கிடைச்சதா?” தெலுங்கில் அவளைச் சாடிக் கொண்டே, ப்ரித்வியைத் திரும்பிப் பார்க்க, அவனோ அவளை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான்.

———

கடற்கரையில், கஜலக்ஷ்மியைத் தேடிச் சென்ற லோகேஷ் அவளைக் காணாது திகைத்து நின்றான். அவனுடன், கஜலக்ஷ்மியை கையோடு கூட்டிக்கொண்டு செல்லும் எண்ணத்தில் வந்த முல்லை, அவளைக் காணாததால், வாய்விட்டு கதறத் தொடங்க, லோகேஷும், அவர்களுடன் வந்த மாணவர்களும், பதட்டத்துடன் அந்த இடத்தைச் சுற்றி தேடத் தொடங்கினர்.

“நான் அப்போவே சொன்னேனே கேட்டீங்களா? இப்போ அவளைக் காணும்… எவனாவது தூக்கிட்டு போய் ஏதாவது செய்துட்டா? உங்களை நம்பித் தானே கூட வந்தோம்… இப்படியா நடுக் கடலுல விட்டுட்டு வருவீங்க?” முல்லை லோகேஷை சாடிப் பேச, பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்தவன், முல்லை சாடவும்,

“அவ்வளவு அக்கறை இருக்கறவ, எதுக்கு எங்க கூட வந்த? அவ கூட துணைக்கு இங்கேயே உட்கார்ந்து இருக்க வேண்டியது தானே… எப்பவும் கூடவே ஒட்டிக்கிட்டு தானே சுத்திட்டு இருப்ப… இப்போ உடனே ஊருக்கு போகலைன்னா உன்னை திட்டுவாங்கன்னு, அவளை விட்டுட்டு வந்தவ தானே நீ?” பதட்டம், கோபம், கஜலக்ஷ்மியைக் காணாத ஆத்திரம், எல்லாம் சேர்ந்து, முல்லையை வார்த்தையில் கடித்துக் குதற, முல்லை, கதறத் தொடங்கினாள்.

அவளது புலம்பலையும், கதறலையும் சமாளிக்க முடியாமல், உடன் வந்த மாணவிகள் திணற, “முல்லை… அவளுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது… நம்மளைத் தேடி ரூமுக்கு தான் போயிருப்பா… பாரு… நாம இப்போ அங்க போனா… காளி மாதிரி நின்னுட்டு இருப்பா…” மனதின் மூலையில் தோன்றிய ஏதோ ஒரு நம்பிக்கையில், லோகேஷ் கூறிவிட்டு, அங்கிருந்து, மீண்டும் அறைக்கு ஓடினான்.

அவனது கூற்றில் நம்பிக்கை பெற்றவளாக முல்லையும் அவனைப் பின்தொடர்ந்து ஓட, அவர்கள் தங்கி இருந்த அறை, கஜலக்ஷ்மி இல்லாமல் அவர்களைப் பார்த்து கைக் கொட்டிச் சிரித்தது.        

“அய்யோ… அவ இங்கயும் வரலையே…” முல்லை தொடங்க, லோகேஷ், அவளது செல்லிற்கு தொடர்பு கொள்ளத் துவங்கி இருந்தான்.

——

காரை வழி மறித்த பெண்ணைப் பார்த்த ப்ரித்வி கோபமாக முறைக்க, அவனைக் கண்டுகொள்ளாத அந்தப் பெண்ணோ, “ஐயோ… மொழி தெரியாத ஒரு ஊருல வந்து மாட்டிக்கிட்டு முழிக்கறேனே… கடவுளே என்னைக் காப்பாத்து.. ஏதோ ஒரு தைரியத்துல, தனியா கிளம்பி வந்துட்டேனே… இப்போ நான் என்ன செய்வேன்… எப்படி ஊருக்கு போய் சேருவேன்… கஜா உனக்கு இது தேவையா?” சத்தமாகவே கஜலக்ஷ்மி புலம்பவும்,  

“இப்போ புலம்பி என்னம்மா செய்யறது? இந்த நடுராத்திரியில, எதுக்கு போற வர காரை எல்லாம் வழி மறிக்கிற?” ராமண்ணா கேட்கவும், அவர் தமிழில் தான் பேசுகிறார் என்று புரிய,    

“ஹை… அண்ணே… நீங்க தமிழா… கடவுளே கண்ணைத் திறந்துட்ட…” என்று கையெடுத்து கும்பிட்டவள், “பிரெண்ட்ஸ் கூட டூர் வந்த இடத்துல, நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு பஸ்ல ஏர்றதுக்குள்ள எங்க பஸ் போயிருச்சுங்கண்ணா… கொஞ்சம் பக்கத்துல இருக்கற பஸ்ஸ்டாப், அல்லது ரயில்வே ஸ்டேஷன் வரை என்னை கொண்டு விடறீங்களா? இந்த நேரத்துல எனக்கு யார் கிட்ட உதவி கேட்கறதுன்னே புரியல…” பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு, அவள் கேட்கவும், ராமண்ணா ப்ரித்வியைத் திரும்பிப் பார்க்க, அவள் கூறியது உண்மையோ என்று எண்ணும் அளவிற்கு அவள் கையில், கைப்பையைத் தவிர எதுவும் இல்லாமல் போகவும்,

“எந்த ஊருக்குப் போகணும்?” ப்ரித்வி வாய் திறந்துக் கேட்க,

“இராமநாதபுரம் பக்கத்துல ஒரு கிராமம்… நீங்க அவ்வளவு தூரம் எல்லாம் என்னை கொண்டு விட வேண்டாம்… பக்கத்துல ஒரு ரயில்வே ஸ்டேஷன்… இல்ல பஸ்ஸ்டாப்ல போதும்” அவள் கூறவும்,

“அவங்க ஊருக்கே வண்டியை விடுங்க ராமண்ணா….” ப்ரித்வியின் குரலைக் கேட்டவள், குலை நடுங்க நிற்க, ராமண்ணா, அவனைப் புரியாமல் பார்த்தார்.

 

கவிதைகள் தொடரும்……..

SHARE
Previous articleCoconut ladoo
Next articleMattar Pulao …

27 COMMENTS

 1. Congrats ramyy for your new story…. Nice start da ramy rendumm inimee enna pann pokuthuganuu parkaa waiting dear..

 2. superb da rami..
  sema starting..
  hahaha intha aarvam kuraiyama porathu un kailathan irukku…
  hehehe nan padichitten…

 3. ஹாய் ரம்யா சிஸ்,

  நைஸ் ஸ்டார்ட்டிங் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு,பாவம் சின்ன பிள்ளை தெரியாம வந்திடுச்சு அதைப் போய் வீட்ல மாட்டி விட பார்க்குறிங்களே இது நியாயமா 🙁 பாவம் விட்டுடச் சொல்லுங்க ப்ர்வித்விக்கிட்ட

  • thanks veenu … thanks a lot ma … 🙂 🙂 hahah sollidalame ma … analum vanthathuku thandanai …. enna tharannu parpom ma. …

 4. ஹாய் டியர் செமையான கதை ஹீரோ ஹீரோயின் சந்திக்கிற விதம் அவங்க சண்டை போடுறது எல்லாமே சுவாரசியமான பகுதி… அப்புறம் ஹீரோயின் படுற கொடுமை ரொம்பவும் பாவம் பா … உங்க எழுத்துல என்னமோ இருக்கு டியர் படிக்க ஆரம்பிச்சா சிரிப்பு முகத்துல இருந்து போறது இல்ல …மேலும் மேலும் உயரம் தொட வாழ்த்துறேன் 😊😊😊😊

 5. Hi Ramya, vizhiorak kavithaigal pathi story than padichen full story eppadi download pannaradhu? Excellent ta irrukku.
  Please guide me. Thanks . Anu

LEAVE A REPLY