SHARE

8                             

அடுப்பில் கொதிக்கும் உலையை விட கொடியின் மனது கொதித்துக் கொண்டிருந்தது. இன்று குணாவின் செயல்கள் பீஷ்மாவினால் தடுக்கப்பட்டு, தன்னுடைய தந்தையை ஒடுக்கி வைத்திருந்தாலும், மீண்டும் இவர்கள் இருவரும் தங்கள் வேலையைக் காட்டத் துவங்க மாட்டார்கள் என்பது எந்த அளவிற்கு நிச்சயம்?

அதுவும் பீஷ்மாவை அந்த சண்டாளன் இனிமேல் இந்த ஊரில் விட்டு வைப்பது என்பதே பெரிய காரியமாக இருக்கும் பட்சத்தில், நான் அவனிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள, பீஷ்மாவின் பின்னால் ஒளிந்தது மிகவும் தவறு.. தன்னைத் தானே நொந்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் காதுகளில் இருவரின் பேச்சுக் குரல்கள் நன்றாகவே விழுந்தது.

தன்னுடைய சுயபச்சாதாபங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, அந்த குரல்களை செவி மடுத்தவளுக்கு, இத்தனை நேரம் தான் பட்ட கவலை அனைத்தும் வீண் என்பது போலத் தோன்ற, அவளையும் மீறி நெஞ்சில் உற்சாகம் பிறந்தது.

“என்ன சொல்றீங்க மாப்பிள? அந்த டாக்டர இந்த ஊர்ல இருந்து அனுப்ப முடியாதா?” கொடியின் தந்தையின் அதிர்ந்த குரலைத் தொடர்ந்து,

“ஆமா வேலு… நான் நம்ம மினிஸ்டர்க்கு போன் செய்து இவனோட போக்கு சரி இல்ல. ஊர்ல பொண்ணுங்க எல்லாம் இவனைப் பார்த்து பயப்படறாங்க. அதனால அவனை வேற ஊருக்கு மாத்துங்கன்னு சொன்னேன்… அதுக்கு மினிஸ்டர் அலறி… ‘யார அவனையா? ஏன் நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா? பொண்ணுங்க விஷயத்துல அவன் அப்படி இப்படின்னா போலீஸ் கூட நம்ப மாட்டாங்க. அவனோட கேரக்டர் அப்படி… வைய்யா போன’ன்னு திட்டிட்டு வச்சிட்டாரு. நிஜமாவே அவன் சொன்னது போல காலேஜ்ல பெரிய ரவுடி தான் போலவேய்யா… மினிஸ்டரே இப்படி அலறுறாரே” குணாவின் குரலும் கேட்க, கொடியின் மனதில் சொல்ல முடியாத அளவுக்கு நிம்மதி பெருகியது.

“நிஜமாவே அவர் காலேஜ்ஜ கலக்கித் தான் இருப்பார் போலேயே.. ஹஹாஹ் சந்தோஷமா இருக்கு ஆண்டவா…” என்றவள் மனதினில் தனது சகோதரியை நினைத்து வருந்தினாள்.

சில வினாடிகளிலேயே அவர்களது குரல் மீண்டும் கொடியின் நினைவுகளைக் கலைத்தது.

“அந்த டாக்டர ஆளை வச்சு தட்டிட வேண்டியது தான்..” குணா சொல்லவும்,

“ஆமாங்க.. நானே அவனைப் போய் தட்டிடறேன்.. குடிக்க விடமாட்டானாம் இல்ல… ரூம்ல போட்டு பூட்டுவேன்னு வேற சொல்றான் அய்யா…” கொடியின் தந்தையும் கூறவும்,

“உன்னோட குடிப்பழக்கத்துக்கு எங்க அம்மாவும் அக்காவையும் காவு கொடுத்தது பத்தாதாய்யா உனக்கு. இன்னும் குடிகுடின்னு அலையறையே… நீ எல்லாம் மனுஷனா?” தனது தந்தையை திட்டிக் கொண்டே அமர்ந்திருந்த கொடி, தன்னையும், தனது செயலையும் நினைத்து மனதினில் வருந்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அதையும் தொடர விடாமல் இருவரது பேச்சுக் குரல்களும் தடுக்க, “நாளைக்கே வெளியூருல இருந்து ஆளுங்களை வரவழைச்சு அவனுக்கு ஒரு முடிவு கட்டறேன்… நீ கவலைப்படாம அந்த சரக்கை ஊத்திக் குடி. இன்னைக்கு நான் மரியாதையோட சுத்திக்கிட்டு இருந்த ஊருக்குள்ள என்னை அசிங்கப்படுத்திட்டானிள்ள… அந்த கையை உடைச்சு அடுப்புல போட்டு எரிக்கல… நான் குணசேகரன் இல்ல…” குணம் கெட்டுப் போய் சூளுரைத்துக் கொண்டிருந்த குணசேகரனின் வார்த்தைகள் கொடியின் உள்ளே சுளீரென்று பயம் பாயச் செய்தது.

“இந்த அய்யா குடி போதையில சொன்னா செய்துடுவாறே.. அப்போ டாக்டர் சார்க்கு ஏதாவது பிரச்சனை வந்திடுமோ?” கொடியின் உள்ளம் பதைபதைக்க, எப்படியாவது பீஷ்மாவை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு, இரவு உணவை முடித்தாள்.

“ஒருவேளை ராத்திரியே ஏதாவது பிரச்சனை பண்ணி அவரோட உயிருக்கு ஆபத்து ஆகிடுமோ? இப்போ வெளிய போய் அவருக்கு எச்சரிக்கை செய்யலாம்ன்னா… அய்யா திண்ணையிலயே உட்கார்ந்து இருக்காரே… இப்போ நான் வெளிய போனா ரொம்ப பிரச்சனை ஆகுமே. நான் என்ன செய்யறது?” மனதினில் தவித்தவள்,

“இப்போ போன் போடணும்ன்னா நிறைய தூரம் அய்யா நடக்கணுமே. இந்தக் குடி குடிச்சா எங்க இருந்து இந்த ஆளு நடப்பாரு? அப்போ காலையில தான் பேசப் போவாங்களா இருக்கும். அதனால காலையில சீக்கிரமா போய் டாக்டர் சார எச்சரிக்கை செய்யணும்.” ஒரு முடிவெடுத்த பின்பு தான் கொடிக்கு சிறிது நிம்மதியாக இருந்தது.

உணவை எடுத்து வைத்து அவளது தந்தைக்காக காத்திருக்காமல், ஏதோ உயிர் வாழ்வதற்காகவும், அவர்களுடன் போராட உடல் வலிமையை காத்துக்கொள்ளும் பொருட்டும் உணவை உண்டுவிட்டு படுத்தவளுக்கு எப்பொழுதும் போல இன்றும் உறக்கம் வர மறுத்தது.

தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் படமாக ஓட, தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கவலை மறந்து திரிந்துக் கொண்டிருந்த காலம் மீண்டும் தனக்குக் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டபடி கண்களை மூட, மூடிய இமைகளுக்குள் பீஷ்மாவின் குறும்புச் சிரிப்பும், அவளது முடிக்கற்றைகளை ஊதும் போது அவனது சுவாசத்தின் தீண்டல் ஏற்படுத்திய நெஞ்சின் குறுகுறுப்பும், குணாவை எதிர்த்து நிற்கும் போது அவன் காட்டிய கம்பீரத் தோற்றம்s புன்னகையுடன் வந்து நின்றது.

“நீங்க நல்லவரு தான். எங்க ஊர்ல மத்த பயலுங்க போல நீங்களும் என்கிட்ட தப்பான எண்ணத்தோட நெருங்கறீங்கன்னு நான் கொஞ்சம் குழம்பிட்டேன்… என் மேல உங்களுக்கு அப்படி என்ன கரிசனம்?” மனதினில் பீஷ்மாவுடன் பேசிக் கொண்டே, உறங்கியும் போனாள்.

“ஏய் புள்ள கொடி… கொடி… எழுந்திரி கழுதை…” வெற்றிவேலின் குரலும் கூட எங்கோ ஒலிக்க, கொடி திரும்பிப் படுத்து தனது தூக்கத்தை துரத்த, அவளை எட்டி உதைத்து,

“எனக்கு சோறு போடு.. இப்போ எழுந்திரிக்கப் போறியா இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே பாட்டிலை அவள் மீது அடிக்க கை ஓங்க,

“டாக்டர் சார்…” கொடியின் முணுமுணுப்பு காதில் நன்றாக எட்டவும்,

“அந்தப் பையன் எங்க இங்க வந்தான்? நான் குடிக்கவே இல்லையே…” பயத்தில் உளறிக் கொட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்த வெற்றிவேல், தானே உணவை எடுத்து வைத்து உண்டு முடித்து அமைதியாக படுத்துக் கொள்ள, கொடிக்கு சந்தோசம் குமிழிடத் தொடங்க, மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த நிம்மதியான உறக்கத்தை தொடர முயன்றாள்.

உறக்கமும் நன்றாகவே பிடித்துக் கொள்ள, அன்றைய பொழுது இனிமையான கனவுகளுடன் தொடர, அடுத்த நாள் காலையில் கண்விழித்தாள்.

“கொடி… கொடி…” மாரியின் குரலில் கண் விழித்தவள், அப்பொழுது தான் பீஷ்மாவின் நினைவு வந்தவளாக வேகமாக எழுந்து ஓட, காலில் அவள் தந்தையின் கால் தட்டுப்படவும்,

“ச்சே… இந்த அப்பாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. வழியிலயே படுத்திருக்கறதும் இல்லாம துணியைக் கூட ஒழுங்கா போடல…” என்று திட்டியபடி, அருகில் இருந்த போர்வையைக் கொண்டு அவரை மூடிவிட்டு வெளியில் வந்தவள், மாரியிடம் நேராக விரைந்தாள்.

“அக்கா… அக்கா.. என்னை டாக்டர் சார் வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா? ரொம்ப அவசரம…” அவள் கேட்கவும், அவளை மேலும் கீழும் பார்த்தவர்,

“மொதல்ல போய் பல்லை விளக்கிட்டு முகத்தை கழுவிக்கிட்டு வா…” மாரி சொல்லவும், வேகமாக அனைத்தையும் முடித்துவிட்டு அவள் வருவதற்குள்,

“கொஞ்ச நாழி இரு கொடி… உங்க மாமா கூப்பிடறாங்க. என்னன்னு பார்த்துட்டு வரேன்…” என்று குரல் கொடுத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நீங்கி இருக்க, ஒரு சில வினாடிகளே அந்த இடத்தில் தயங்கி நின்றவள், அந்தக் காலை வேளையிலேயே பீஷ்மவின் வீட்டின் முன்பு நின்றாள்.

கதவு சாத்தப்பட்டிருக்க, அதை மெல்ல தட்ட அவள் கையை வைக்க அது உடனே திறந்துக் கொண்டது.

“ஐயோ… டாக்டர ஏதாவது பண்ணிட்டாங்களா? கதவு திறந்து இருக்கே…” நெஞ்சம் பதைபதைக்க, எதற்கும் வீட்டின் உள்ளே சென்று பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் தோன்ற உள்ளே சென்றவளுக்கு உறங்கிக் கொண்டிருந்த பீஷ்மா கண்ணில் பட, அத்தனை நேரம் நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது மாறி, நிம்மதி பெருமூச்சு வரவும்,

“டாக்டர் சார்…” என்று தொய்ந்து அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், மெல்ல நடந்து பீஷ்மாவின் அருகே செல்ல, பீஷ்மாவின் முகம் சிவந்து இருக்கவும், கொடிக்கு எதுவோ வித்யாசமாகத் தோன்ற, நன்றாக அவன் அருகே சென்று அவனது முகத்தை நோக்கினாள்.

“கொடி.. கொடி.. எங்கப் போன நீ? என்கிட்டே வந்து பாட்டு பாடி என்னை தூங்க வச்சிட்டு இப்படி நீ ஓடிப்போனா என்ன அர்த்தம்? எங்க அம்மா வந்ததும் உன்னை பெண் கேட்டு நான் வீட்டுக்கு வரப் போறேன்.. உங்க அப்பவோ அந்த குணாவோ தடுக்கட்டும் அப்பறம் நான் யாருன்னு காட்டறேன்..” அவன் ஜுர வேகத்தில் உளறிக் கொண்டிருக்க, அதைக் கேட்ட கொடியோ அதிர்ந்து நின்றாள்.

“ஹையோ… இது என்ன இவரு இப்படி சொல்லிட்டு இருக்காரு?” அதிர்ந்தவளின் மனது ‘ஹையோ…’ என்று கூக்குரல் இட்டது.

“உன்னை முதல் முதலா பார்த்த போதே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு கொடி…” மேலும் பீஷ்மா புலம்ப, அவன் அருகே குனிந்து நன்றாக அதைக் கேட்டவளுக்கு நெஞ்சத்தை யாரோ சம்மட்டியால் அடித்த உணர்வு… தான் இதற்கு தகுந்தவள் தானா என்ற கேள்வி மலை போன்று எழும்பி அவளை மருட்ட, பீஷ்மாவிடம் குனிந்து,

“டாக்டர் சார்… நான் இங்க தான் இருக்கேன்… எங்கயும் ஓடிப் போகல… என்னைப் போய் ஏன் டாக்டர் சார் உங்க மனசுல நினைச்சிட்டு இருக்கீங்க? நாம அப்படி என்ன பேசிப் பழகி இருக்கோம்? நீங்க இந்த அளவு என்னை விரும்பறதுக்கு நான் என்ன புண்ணியம் செய்திருக்கேன்னு எனக்கேத் தெரியல டாக்டர் சார்… ஆனா… நான்… நான்… ஒரு…” அதற்கு மேல் பேச முடியாமல் கொடி தேம்ப, மீண்டும் அவளது குரல் கேட்ட மகிழ்ச்சியில், கண்களைக் கூட திறக்க முடியாமல் திறந்துப் பார்த்து அவளது கையைப் பிடித்து தனது கைக்குள் பொத்திக் கொண்டவன்,

“அந்த குணசேகரன் உன்னை படுத்தறது எனக்குத் தெரியும் கொடி.. அப்படியே அவன் உன் மேல வன்முறை காட்டி இருந்தா கூட, எனக்கு அது பத்தி எந்தப் பிரச்சனையும் இல்லம்மா.. நான் உன்னை முழு மனசா தான் விரும்பறேன். அவனுக்கு ஒரு முடிவு கட்டிட்டு நான் உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போறேன்… என்னோட மனைவியா..” ஜுரத்தில் முடியாமல் அவன் சொல்லs, அவனது கைகளை கண்ணீரால் குளிப்பாட்டியவள்,

“இதுக்கு நான்…” கொடி விசும்ப,

“உன்னைப் போல ஒரு பெண் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும். எவ்வளவு கஷ்டத்துலையும் நீ உன்னை இழக்காம விதியேன்னு அந்த குணசேகரன் ஆசைக்கு இணங்காம இருக்கியே. மனசுல எந்த அளவுக்கு தைரியம் இருந்தா நீ அவனை சமாளிப்ப. எல்லாம் கொஞ்ச நாள் தான்.. நான் இருக்கேன் கவலைப்படாதே…” பீஷ்மா முடிக்கவும் தான், தான் வந்திருக்கும் காரியம் நினைவு வர கொடி அவசரமாக அவனிடம் இருந்து கையைப் பிரித்துக் கொண்டாள்.

பீஷ்மா கேள்வியாகப் பார்க்கவும், “டாக்டர் சார்… உங்களை கொல்ல எங்க அப்பனும், அந்த அய்யாவும் சேர்ந்து திட்டம் போட்டுட்டு இருக்காங்க.. நீங்க எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சு போயிடுங்க. என் விதி நான் பார்த்துக்கறேன். முடிலையா… எங்க அம்மாவும் எங்க அக்காவும் போன இடத்துக்கே நான் போய் சேர்ந்துடறேன்…” கொடி சொல்லவும், பீஷ்மா எழுந்து அமர்ந்தான்.

“என்ன சொன்ன? என்ன சொன்ன? சாகப் போறியா? உன்னை இங்க சாக விட்டுட்டு நான் ஊரை விட்டு ஓடிப் போகணுமா? அவனுங்க என்ன செய்யறாங்கன்னு நானும் பார்க்கறேன்.. நீ பயப்படாதே..” கொடியை சமாதானம் செய்தவன், அப்பொழுது தான் அவளது முகத்தை நன்கு பார்த்து, சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.

“எதுக்கு இப்போ சிரிக்கறீங்க? நான் சொன்ன விஷயம் என்ன கேலியாவா இருக்கு?” நொடித்துக் கொண்டவளைப் பார்த்தவன்,

“இதுக்குத் தான் இப்படி காலையிலயே பத்திரகாளி மாதிரி ஓடி வந்திருக்கியா? அது சரி.. வந்தது தான் வந்த.. எனக்கு ஒரு டீ போட்டுக் கொடேன். கொஞ்சம் தலைவலியா இருக்கு…” என்றபடி அவன் எழுந்து நிற்க, அப்பொழுது தான் அவளது கையைப் பற்றி நினைவு வந்தவனாக,

“உன் கை எப்படி இருக்கு. பரவால்லையா?” எனவும்,

“அது கொஞ்சம் பரவால்ல டாக்டர் சார். கரண்டி பிடிச்சு தானே பாலைக் காய்ச்ச போறேன்.. ஒண்ணும் சிரமம் இல்ல…” என்றபடி எழுந்தவள், அப்பொழுது தான் அவன் அருகே துணியும், கிண்ணமும் இருப்பதைப் பார்த்து,

“உங்களுக்கு உடம்பு சரி இல்லையா? துணிப் பத்து போட்டுட்டு இருக்கீங்க?” என்று கேட்க, அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே,

“இப்போ பரவால்ல.. எனக்கு கொஞ்சம் டீ மட்டும் வேணும். சாப்பாடு தான் நீ சொல்லி மாரியக்கா கொண்டு வருவாங்களே…” பீஷ்மா தொடர்ந்து பேச, இப்பொழுது குழம்புவது கொடியின் முறையாக மாறியது.

“நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரச் சொன்னேனா..” கொடி குழம்பிய நிலையில் கேட்க,

“அம்மா… தாயே.. உன்னோட கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாதும்மா… நீ மொதல்ல இருந்து ‘நானா?… நானா?’ ன்னு கேட்க, நான் உடம்பு முடியாம தவிக்க, நீ குழம்பி நிக்க… போதும்மா தாயே… எனக்கு டீயைப் போடு..” என்று சொன்னவன், பல் துலக்க பின் பக்கம் செல்ல, கொடி குழப்பத்துடன் அங்கிருந்த அடுப்பங்கரைக்குச் செல்ல, அங்கு பால் தயாராக இருந்தது.

“பால் எல்லாம் பாத்திரத்துல ஊத்தி வேற வச்சிருக்கு.. யார் செய்திருப்பா?” யோசனையுடன் அவள் பாலைப் பற்ற வைத்து, டீத் தூளை தேடித் பிடித்து போட்டுக் கொண்டு வந்து அவன் முன்பு நீட்ட,

“நீ இங்க ரொம்ப நேரம் இருக்க வேண்டாம் கொடி.. அந்த குணா மோப்பம் பிடிச்சு இங்க வந்து சத்தம் போட்டு அசிங்கப்படுத்தப் போறான். நீ கிளம்பு..” அவன் கொடியைக் கிளப்பிவிட முயல..

“இன்னைக்கு குளிக்க வேண்டாம். நான் போய் மாரியக்காவ சாப்பாடு சீக்கிரம் எடுத்துட்டு வரச் சொல்லிடறேன்.. சாப்பிட்டு பேசாம படுங்க..” கொடி சொல்லவும்,

“ஏன் கொடி… இன்னைக்கும் நீயே எனக்கு சமைச்சுக் கொடுத்தா என்னவாம்? உன் கையாள சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு…” பீஷ்மா சொல்வதைக் கேட்ட கொடி திகைத்து நிற்க, அதுவரை வாயிலில் நின்று இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மாரி உள்ளே நுழைந்தார்.

“தம்பி… உங்களுக்கு காலையில வயித்துக்கு மிதமா இருக்கணும்ன்னு இடியாப்பம் செய்து கொண்டு வந்திருக்கேன். நீங்க சாப்பிட்டு தூங்குங்க தம்பி…” என்று சொல்லிவிட்டு,

“கொடி.. நான் வரதுக்குள்ள நீ இங்க வந்துட்டியா? உன்னைக் காணோமேன்னு நினைச்சேன்…” மாரி அவளையும் இழுக்க, மாரியைப் பார்த்த கொடிக்கு, பீஷ்மா கூறியவைகள் நினைவுக்கு வர,

“ஏன் மாரிக்கா… நான் எங்க இவருக்கு சாப்பாட்டு தரச் சொன்னேன்?” என்ற கேள்வியை அவன் முன்னிலையிலேயே கேட்டு வைக்க, அவளிடம் அந்தக் கேள்வியை எதிர்ப்பார்திருந்தவர், சுற்றி பார்வையை ஒட்டி,

“என்ன கொடி? அன்னைக்கு அழுதுக்கிட்டே என்கிட்டே வந்து டாக்டர் தம்பி சாப்பாடுக்கு கஷ்டப்படுத்துன்னு சொன்னியே… நினைவில்லையா?” மாரி சமாளிக்க,

“நானா? நான் எப்போ?” கொடி மேலும் குழம்ப,

“அவளுக்கு இங்க நடக்கற பிரச்சனையில தான் சொல்றது செய்யறது போறது வரது எல்லாமே மறந்துடுது தம்பி…” என்று பீஷ்மாவிடம் சமாளித்தவர்,

“ஏய் கொடி.. இங்க நின்னு மசமசன்னு பேசிக்கிட்டு கிடக்க… துரை பையன் இங்க இருந்து வெளிய போறதைப் பார்த்தேன். அவன் திரும்ப வந்தா… இந்த ஊருக்கே நீ இங்க வந்து போறதை சொல்லிடுவான். நின்னு வளவளன்னு பேசாம சட்டுபுட்டுன்னு கிளம்பு…” அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு,

“எனக்கு வயலுக்கு போகணும் தம்பி.. மதிய சாப்பிட நல்ல சீரா ரசமா வச்சுக் கொடுக்கறேன். நீங்க படுத்து ஓய்வெடுங்க..” என்று கூறி, கொடியின் கையையும் விடாமல் பிடித்துக் கொண்டு நடக்க,

“நான் சொன்னது நினைவிருக்கட்டும். வெளிய ஜாக்கிரதையா போங்க..” கொடி சொல்லிக் கொண்டே மாரியின் இழுப்பிற்குச் செல்ல, அதைக் கண்ட இரு கண்கள் கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு அகன்றது.

5 COMMENTS

  1. hi miya.sorry work busy la pona updateku comment poda mudiyala,story padithen romba kolappuringale ethaum thing panna mudiyala anyway.update super
    thing panna time illa sorry

  2. mammmmmmmmmmm ennama nenga ipadi panringalea ma full of confusion bt very interesting nice enjoy panren story ah …..

LEAVE A REPLY