SHARE

   

பீஷ்மாவின் செல்போன் குரல் கொடுக்கவும், வெறித்துக் கொண்டிருந்த திசையிடம் இருந்து பார்வையை பிரித்துக் கொண்டவன், தனது செல்போனின் திரையில் ஒளிர்ந்த தனது அன்னையின் புகைப்படத்தைப் பார்த்து, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தான்.

“என்னம்மா எப்படி இருக்கீங்க? உங்ககிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு இல்ல…” பீஷ்மா கேட்கவும்,

“பீஷ்மா… நீ வந்து ஒரு நாள் கூட முழுசா முடியல… அதுக்குள்ள இப்படிக் கேட்கறியே… அப்போ இன்னைக்கு ஒருநாளைக்குள்ள நீ பல எதிர்ப்பாராத நிகழ்வுகளை சந்திச்சிட்ட போல…” தனது மகனின் மனநிலையை உணர்ந்தவர் போல அவனது தாய் கேட்க, பீஷ்மா பெருமூச்சொன்றை வெளியிட்டான்.

“என்னன்னும்மா சொல்றது?” என்றவன், கடகடவென்று அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, அவனது தாயிடம் அப்படி ஒரு அமைதி.

“என்னம்மா அமைதியா இருக்கீங்க? நான் நினைக்கிறது தப்பா சரியா?” வளர்ந்த பிள்ளையானாலும், சிறு பிள்ளைப் போல தன்னிடம் கருத்துக் கேட்கும் பிள்ளையை நினைத்து மனதில் மகிழ்ந்துக் கொண்டவர்,

“பீஷ்மா.. உன்னாலேயே சுயமா முடிவெடுக்க முடியும்ன்னு நான் நம்பறேன்… எனக்கு ஸ்கூல்ல இன்னும் ஒரு மாசத்துல லீவ் விடப் போறாங்க. அப்போ நான் வந்து பார்த்துட்டு அந்த பெண்ணைப் பத்தி சொல்றேன். ஆனா… இப்போ அது நமக்கு முக்கியம் இல்ல… அந்த பெண்ணோட வாழ்க்கை..”

“ஆமாம்மா…” அவசரமாக பதில் சொன்னவனை நினைத்து பெருமூச்சொன்றை வெளியிட்டவர்,

“அந்த பெண்ணை அந்த கொடுமைக்காரன்கிட்ட இருந்து மீட்கறது தான் முக்கியம். என்ன செய்யணுமோ செய். ஆனா… காதல் கீதல்ன்னு என் காதுல எதுவும் விழக் கூடாது சொல்லிட்டேன்…” ஒரு ஆசிரியை தோரணை கலந்து அன்னையாக அவர் சொல்ல, ஒரு பெருமூச்சுடன்,

“இப்போ அது தான் ரொம்ப முக்கியம்… இங்க நடக்கறது எல்லாமே புதுசு புதுசா இருக்கு…” பீஷ்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கொடி ஒரு மெல்லிய புன்னகையுடன் அவன் அருகே வர, மீண்டும் என்ன? என்ற குழப்பத்துடன், அவள் வரும் காரணத்தை அவன் யோசிக்க முயன்றுக் கொண்டிருக்க,

“சரி… நீ போய் உன் வேலையைப் பாரு. நான் இங்கே ட்யூசன் எடுக்கப் போறேன்.. பசங்க வந்துட்டாங்க…” என்று இணைப்பைத் துண்டித்தவர், பீஷ்மாவை நினைத்து மிகுந்த யோசனைக்குச் சென்றார்.

தன்னருகே வரும் மலரைப் பார்த்து குழம்பிக் கொண்டிருந்த பீஷ்மா அவள் அருகே வந்ததும், அவள் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வரவும் அங்கிருத்து வேகமாக நடக்க முயல, அவனை முந்திக் கொண்டு, மலர் அவனை வழி மறித்தாள்.

“இப்போ எதுக்கு என்னை போக விடாம தடுக்கற? நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துட்டு போறேன். நீ அழுதது தாங்காம நான் உன்கிட்ட வந்து பேசினது என் தப்புத் தான். வழியை விடு.” என்று கோபமாக கத்த, அவனை வழி மறித்தவளின் கண்கலோ கண்ணீர் சிந்தத் துவங்கியது.

“எப்போப் பாரு அழாத. எனக்கு அழறவங்களைக் கண்டாலே பிடிக்காது.” முகத்தை திருப்பிக் கொண்ட பீஷ்மாவிடம் மெல்லிய குரலில்,

“ஏன் அழுதன்னு கேட்டீங்க தானே. எல்லாம் அந்த குணசேகரனால வந்தது. அவனுக்கு பெரிய மன்மதக் குஞ்சுன்னு மனசுல நினைப்பு. ஊருல பொண்ணுங்களை இம்சை பண்ணினது பத்தாதுன்னு என்னையும் செய்ய வந்துட்டான். எங்க அப்பா ஏற்கனவே குடிகாரன் தான். ஆனா.. வெளிநாட்டு சரக்கா வாங்கிக் கொடுத்து, எங்களை இந்த பாடுபட வைக்கிறான். அதுவும் தவிர, எங்க அப்பன் வேலை செய்யாமையே தினக் கூலி வேற… எதுக்குத் தெரியுமா?” என்று நிறுத்த, பீஷ்மா அசைவற்று நிற்க,

“அந்த பணம் முழுதும் எனக்கான விலை. என்னைக்கு வேணா எங்க அப்பாவ தண்ணியில தள்ளாட விட்டுட்டு பூவை வாங்கிக்கிட்டு எங்க வீட்டுக்கு வருவான். இவனை நான் உள்ளே விடலைன்னா… வெளிய நின்னே காது கூசற வார்த்தைகளை சொல்லி என்னை கொஞ்ச ஆரம்பிப்பான். ஊருக்குள்ள என் மானமே போகும்…. இதுவரை அவனோட சுண்டு விரல் கூட என் மேல பட அனுமதிச்சது இல்ல… எப்படியோ அவனை சமாளிச்சு அனுப்பி வைப்பேன். ஆனா… அது தெரியாம ஊருக்குள்ள பல பேர் என்னை சந்தேகக் கண்ணோட தான் பார்க்கறாங்க..” சொல்லிவிட்டு அழுதவளை அணைத்து ஆறுதல் சொல்லும் எண்ணம் எழுந்தாலும், நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்தவன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அதற்கு தீர்வு காண முயலத் தொடங்கி இருந்தான்.

அவனது அமைதி மலரை வாட்ட “நீங்களும் என்னை நம்பலையா?” என்று விசும்பலுடன் கேட்க,

“ச்சே.. ச்சே… உன்னை அவன் பணம் கொடுத்து வாங்கி இருக்கற விஷயம் எனக்கு முன்னயே தெரியும். இருந்தாலும்… இப்போ இதுக்கு என்ன தீர்வுன்னு தான் யோசிக்கிறேன்…” என்று பீஷ்மா சொல்லவும், ஆவலுடன் மலர் அவனது முகத்தைப் பார்த்தாள்.

“பேசாம…” அவன் தொடங்குவதற்குள், அவள் வேகமாக ‘பேசாம…’ என்று இடையிட, அவளை விசித்திரமாய் பார்த்தவன்,

“பேசாம, போலீஸ்ல போய் கம்ப்ளைண்ட் கொடுத்துடலாமா? நீ வந்து கையெழுத்து போடு. நல்ல ஸ்ட்ராங் கேசா போட்டு உள்ள தள்ளிடலாம்…” அவன் சொன்ன விதத்தில், அவனை இப்பொழுது விசித்திரமாய் பார்ப்பது மலரின் முறையாயிற்று.

“என்ன இப்படி பார்க்கற? நான் சொல்றது நிஜம். கமிஷனர் கிட்டயே போய் கொடுத்துட்டு வந்துடலாம்… அவரு சொன்னா இவன் எல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது..” பீஷ்மா உறுதியாக கூறிக் கொண்டிருக்கும் போதே, குணசேகரன் மீண்டும் வருவதைக் கண்டவள்,

“அந்த கேடு கெட்டவன் வரான்… நான் அப்பறம் வந்து உங்களைப் பார்க்கறேன்…” என்று கூறிவிட்டு, ஓடி மறைந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மா, மீண்டும் திரும்பி நடக்க,

“இங்க நின்னு இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்ற குணசேகரனின் குரலை அசட்டை செய்துவிட்டு, தொடர்ந்து நடந்து, மருத்துவனையின் உள்ளே சென்றான்.

பீஷ்மாவைப் பார்த்ததும், அவன் எங்கோ சென்று போன் பேசிவிட்டு தான் வருகிறான் என்று புரிந்துக் கொண்ட துரை, “போன் பேச போனீங்களா சார்… இங்க எல்லா இடத்துலயும் சிக்னல் கிடைக்காது… சில இடங்கள்ல தான் கிடைக்கும்…” என்று சொல்லிவிட்டு, பீஷ்மாவின் தலையசைப்பை பார்த்து,

“முடிஞ்ச அளவு எல்லாத்தையும் சுத்தம் செய்தாச்சு சார்.. வெள்ளை அடிச்சா இந்த கரை எல்லாம் சரியாகிடும் சார்…” என்று முடிக்க,

“நாளைக்கு அந்த வேலைகளை முடிச்சிட்டு… நாளை கழிச்சு மருத்துவமனை செயல்படத் தொடங்கும்ன்னு ஊர்ல சொல்லிடுங்க.. இனி எவன் என்ன செய்யறான்னு பார்க்கறேன்…” கொடியை அவன் படுத்தும்பாடும்… மருத்துவமனையை அவன் வைத்திருந்த விதம் இரண்டையும் மனதில் வைத்துக் கொண்டு கறுவத் தொடங்கினான்.                              

“சார்… கொஞ்சம் பார்த்து சார்.. அந்த அய்யா கொஞ்சம் ஒரு மாதிரி ஆளு… உங்களுக்கு ஏதாவது ஆபத்து வரப் போகுது…” துரை சொல்லவும், அவனைப் பார்த்து தோள்களைக் குலுக்கியவன்,

“நானும் கொஞ்சம் ஒரு மாதிரி தான்…” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்ல, அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டின் பின்புறச் சுவற்றின் அருகிலேயே அத்தனை கால்நடைகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

அதைப் பார்த்த துரை, பீஷ்மாவைத் திரும்பிப் பார்க்க, “இந்த வீட்ல நானும் நீங்களும் தானே துரை… அதுங்களும் இருந்துட்டு போகட்டும்… அவங்களைப் பார்க்கும் போது நல்லா தான் இருக்கு…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘டாக்டர் சார்…’ என்ற குரல் வரவும், பீஷ்மா வாயிலுக்கு விரைந்தான்.

அங்கு ஒரு வாலிபன் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட நிற்க, அதைப் பார்த்த துரை வேகமாக மருத்துவப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான்.

“என்னாச்சு? எப்படி இப்படி ஆச்சு?” கேட்டுக் கொண்டே பீஷ்மா அவனுக்கு முதலுதவி செய்யத் தொடங்க,

“தென்னை மரத்துல இருந்து கீழ விழுந்துட்டான் சார்… கீழ இருந்த கல்லு குத்திருச்சு… நல்லவேளை அப்போ தான் ஏறத் தொடங்கி இருந்தான்…” வந்தவர்களும் பதில் சொல்லிக் கொண்டிருக்க, துரையும் அருகில் நின்று கதை கேட்டுக் கொண்டிருந்தான்.   

அதற்குள் மருத்துவமனையை சுத்தம் செய்ய வந்தவர்கள் யாரோ துரையை அழைக்க, துரையை அங்கு அனுப்பிவிட்டு, தனது பணியில் கவனம் செலுத்தியவன், அந்த வாலிபனுக்கு வலி நிவாரணி ஒன்றையும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

“நல்லவேளை ரொம்ப மேல ஏறின பிறகு கீழே  விழல.. இல்லைன்னா. இங்க இருக்கற மருத்துவ உபகரணங்களோட லட்சணத்துக்கு ஒண்ணுமே செய்திருக்க முடியாது.. என்ன தான் ஊரை வச்சு இருக்காங்களோ?” என்று புலம்பிக் கொண்டே, கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கு பின் பக்கம் சென்றவனுக்கு அங்கு நின்றுக் கொண்டிருந்த மலரைப் பார்த்து ஆச்சரியமாக இருக்க, அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

“நீங்க நிஜமாவே டாக்டர் தான்… நல்லா கட்டு போடறீங்க..” என்று கேலி செய்து வேகமாக ஓடியவளைக் கண்டு பீஷ்மா சிரித்துக் கொண்டிருக்க, அங்கிருந்த மாடுகள் கத்தத் தொடங்கின.

“மாடுங்களையே கத்த வைக்கிற அளவு நல்லா ஓடறா…” என்று சிரித்துக் கொண்டே திரும்பி வந்தவனின் மனதினில், அவள் எப்படி அங்கு வந்தால் என்ற யோசனை விரவ, யோசனையோடு அவள் நின்றுக் கொண்டிருந்த இடத்தை ஆராய்ந்தவன், அப்பொழுது தான் அவள் பின் பக்கம் வழியாக வந்து போவதை உணர்ந்து, விசிலடித்துக்கொண்டே உள்ளே வந்தான். 

“ஹ்ம்ம்… ஒரு நேரம் அழு மூஞ்சியா இருக்க… ஒரு நேரம் வாயாடியாவும் இருக்க… ஹ்ம்ம்…” நொடிக்கு ஒரு பெருமூச்சை வெளியிட்டுக் கொண்டே உள்ளே சென்றவன், தனது கணினியை இயக்கிவிட்டு அமர்ந்தான்.

பட்டென்று மின்சார இணைப்பு துண்டிக்கப்படவும், “சுத்தம்… வீடே இருட்டா இருக்கே.. கொசு வேற கடிக்குது…” அந்த சுழலை முதல் முதலாக எதிர்கொள்பவன்,

‘ஹ்ம்ம்… கிராமம்னா அப்படித் தான் இருக்கும் பீஷ்மா… எல்லாத்தையும் கடந்து வந்தா தான் உன்னால சாதிக்க முடியும்…” மனதினில் நினைத்துக் கொண்டவன் எழுந்து வெளியில் செல்ல, வாயிலில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது.

“ஹலோ… யார் சார் நீங்க? இங்க வீட்டு வாசல்ல படுத்துக்கிட்டு என்ன செய்துட்டு இருக்கீங்க? ஒருநிமிஷம் நான் சுதாரிக்களைன்னா மிதிபட்டு போயிருப்பீங்க… எழுந்திருங்க மொதல்ல…” பீஷ்மா சத்தமாகப் பேசவும், படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான். 

‘யார் இது? ஒருவேளை அந்த குணசேகரன் வம்பு செய்ய ஆளை அனுப்பி இருப்பானோ?’ என்று பீஷ்மா நினைத்துக் கொண்டிருக்க,

“நீ தான் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கற டாக்டரோ?” என்று அந்த படுத்திருந்த மனிதன் குரல் கொடுக்க,

‘ஆமா…’ என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, அவன் யாரென்பதை ஆராய முற்பட, அந்த உருவம் எழுந்து நின்றது.

“இதோ பாரு… கொடி எங்க அய்யாவுக்குத் தான்னு பரிசம் போட்டாச்சு.. புரியுதா… ஒழுங்கா வந்த வேலையைப் பாரு.. இல்ல இந்த ஊரை விட்டுப் போ… ஒண்ணும் தெரியாத என் பிள்ளை மனசை கெடுக்கப் பார்க்கறியா? என்னவோ அவ எதுக்கு அழுதான்னு கேட்க வந்துட்ட போல… அது எதுக்கு அழுவுதுன்னு தெரிஞ்சு என்ன செய்யப் போற? கண்ணைத் துடைச்சு விடப் போறியா? என் பொண்ணு கையைத் தொட்ட… தொட்ட கையை நீயே கட்டுப் போட்டுக்க வேண்டி இருக்கும்… சொல்லிட்டேன் ஆமா…” என்று அந்த மனிதன் கத்திக் கொண்டிருக்க, பீஷ்மாவிற்கு கடுப்பாக இருந்தது.

“நீங்க யாரு?” பீஷ்மா கேட்கவும்,

“நான் கொடியைப் பெத்தவன்… யாருக்கு அவளை கல்யாணம் கட்டிக் கொடுக்கணும்ன்னு எனக்குத் தெரியும்… உன் வேலை என்னவோ அதைப் பாரு… இல்ல… உன்னை இந்த ஊரை விட்டு அசிங்ப்படுத்தி அனுப்பிடுவேன்…” என்றவன் தன்னால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவு கத்திப் பேச, சுற்றி இருந்த மக்கள் கூடி வேடிக்கைப் பார்க்கவும், பீஷ்மாவிற்கு அவமானமாக இருந்தது.

வந்த முதல் நாளே இப்படி ஒரு சொற்களை கேட்க நேரிட்டதை எண்ணி மனதினில் நொந்தவன், மதுவின் வாடை வேறு மூக்கை துளைக்கவும், என்ன செய்வதென்று ஓரிரு நிமிடங்கள் யோசித்து, ஒரு வழி கண்டுவிட்ட திருப்தியில், ‘துரை’ என்று அழைத்தான்.

ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து மருத்துவமனையில் இருந்து வேகமாக வந்துக் கொண்டிருந்தவன், பீஷ்மா அழைக்கவும், ஓட்டமும் நடையுமாக, “என்ன டாக்டர் சார்.. இவரை என்ன செய்யலாம்..” கேட்டுக் கொண்டே துரை அருகில் வந்து,  

“யோவ்… இப்போ என்னத்துக்கு இங்க வந்து நின்னுக்கிட்டு இருக்க? சும்மா இல்லாம கத்தி கூப்பாடு வேற போட்டுக்கிட்டு இருக்க? என்ன குடிச்சு இருக்கியா?” கொடியின் தந்தை வெற்றிவேலிடம் கத்திக் கொண்டிருக்க, 

“துரை… இந்த ஊர்ல குடிக்கிறவங்க ஒருத்தர் கூட இருக்கக் கூடாது. நாம தான் அவங்களை திருத்தி நல்வழிப் படுத்தனும். அதனால குடிக்கிறவங்க இருந்தாங்கன்னா எல்லாரையும் பிடிச்சு இந்த ரூமுக்குள்ள போட்டு பூட்டுங்க. தஞ்சாவூர்ல இருக்கற மறுவாழ்வு மைய வேனை வரச் சொல்லி கூட்டிக்கிட்டு போகச் சொல்லிடலாம். அங்க அவங்க கொடுக்கற ட்ரீட்மெண்ட்டே வேற… எல்லாம் வரபடி வழிக்கு வருவாங்க…” பீஷ்மா சொன்ன மறுவினாடி,

“ஆமா சார்… அங்க சொன்னபடி கேட்டு குடியை நிறுத்தலைன்னா நல்லா சூடு காய்ச்சி இழுப்பாங்க..” துரை ஒத்து ஊத, வெற்றிவேலிடம் அதிர்ச்சி தெரிந்தது.

அதையும் சமாளித்துக் கொண்டவன், “என்னய்யா குடிக்க விடாம செய்யப் போறியா? அதுவும் எப்படின்னு நான் பார்க்கறேன்…” என்று கத்திக் கொண்டே நகரந்துச் செல்ல, பீஷ்மா அவனையே பார்த்துக் கொண்டு நின்றான்.        

“கொஞ்சம் நேரத்துல என்னை என்ன எல்லாம் பேசிட்டார்..” பீஷ்மா சொல்லவும்,

“நீங்க அவரோட பெண்ணை எப்போப் பார்த்தீங்க சார்.. ஏன்னா… அய்யா கிளப்பிவிட்டுத் தான் இந்த ஆளு இங்க வந்து இப்படி பேசிட்டுப் போறாரு. அந்த பொண்ணு கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கறது தான் அந்த பொண்ணுக்கு நல்லது சார்.. பாவம் அது… இன்னைக்கு இன்னும் என்ன அனுபவிக்கப் போகுதோ?” துரை பெருமூச்சொன்றை வெளியிட, பீஷ்மா என்னவென்றுக் கேட்க,

“நேத்து எவனோ ஒருத்தன் அந்தப் பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லி பொண்ணு கேட்டு வந்துட்டான்.. உடனே அய்யா அவளை வீட்டுக்குள்ள போட்டு பூட்டிட்டு, வெளிய நின்னு, ‘இவளை நான் தான் கட்டிக்கப் போறேன்… இவளை விலை கொடுத்து வாங்கி இருக்கேன். இவளுக்காக தினம் தினம் நான் கூலி கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. எவனாவது இவளை கல்யாணம் செய்துக்கற எண்ணம் இருந்தா, அதை இதோட விட்டுடுங்க’ன்னு… ஒருமாதிரி தப்பான அர்த்தம் வரும் போல சொல்லிட்டாரு…

அந்த பொண்ணு தூக்கு போட்டுக்க போயிடுச்சு… அதையும் எப்படியோ கண்டுக்கிட்டு உள்ள போய்… ‘என்னை ஏமாத்தி நீ உயிரை விட முடியுமா’ன்னு கேட்டு அந்தப் பெண்ணை பிடிச்சு வெளிய இழுத்துட்டு வந்து வெளிய தள்ளிட்டாருங்க… அந்த பொண்ணு அவமானத்துல தவிச்சுப் போச்சுங்க…” துரை பரிதாபத்துடன் சொல்லிக் கொண்டே போக, குணசேகரன் தான் நினைத்ததை விட கொடுமையானவன் என்பதை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்னவோ போங்க… அந்த பிள்ளைங்க இவர் கிட்ட மாட்டி சீரழியறது தான்னு ஆண்டவன் விதி… என்ன செய்யறது?” என்று சொல்லிக் கொண்டே போக, அதை கவனிக்காத பீஷ்மா, தனது சிந்தனையில் உழன்றுக் கொண்டே, அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.

பழக்கமில்லாத மெத்தையற்ற கட்டில்… ஏ.சி. இல்லாத அறை… வெறும் சத்தத்துடன் ஓடும் ஃபேன்.. எல்லாவற்றையும் ஒருமுறை சுற்றிப் பார்வையை ஓட்டிவிட்டு படுத்துக் கொண்டவனுக்கு உறக்கமும் வர மறுத்தது. அவனது எண்ணங்கள் முழுவதும் கொடியைச் சுற்றியே இருக்க, உறக்கம் தழுவ வெகுநேரம் பிடித்தது.

காலையில் துரை வாங்கி வந்த பொன்னம்மா கடை இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டு மருத்துவமனையை பார்வையிட்டுவிட்டு, கொடி எங்காவது இருக்கிறாளா? என்று பார்த்துக் கொண்டே ஊரைச் சுற்றி வந்தான்.

ஒரு வயலின் அருகே கொடி மரத்தின் அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், வேகமாக அவள் அருகே செல்ல, அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றவள், அவனை முறைத்து, “யாரு சார் நீங்க? எதுக்கு என்னை சுத்தி சுத்தி வரீங்க? உங்களை எனக்கு யாருன்னே தெரியாது. அப்பறம் எதுக்கு என்கிட்டே பேச முயற்சி செய்யறீங்க? உங்க வேலை என்னவோ அதையே பார்க்க வேண்டியது தானே. போட்டோ பிடிக்க வந்தா அந்த வேலையை மட்டும் தான் பார்க்கணும்… ச்சே… இந்த ஊர்ல எனக்கு நிம்மதியே இல்ல… எதுக்கு தான் இப்படி வந்து தொல்லை செய்யறாங்களோ?” என்று கத்தி அழுதவளைப் பார்த்த பீஷ்மா அதிர்ந்து நிற்க,

“என்கிட்டே பேச முயற்சி செய்யவே செய்யாதீங்க… இங்க இருந்து போயிடுங்க. உங்களைப் பார்க்கவே பிடிக்கல… நீங்க பேச வந்தாலே எனக்கு கஷ்டம் தான்…” தொடர்ந்து பேசியபடி ஓவென்று அழுதவளைப் பார்த்தவன், வேலை செய்பவர்கள் அனைவரும் அவனை நிமிர்ந்துப் பார்க்கவும், அங்கிருக்க கூசி வேகமாக நகர்ந்துச் செல்ல, அழுது கொண்டே கொடி மாரியின் அருகே சென்றாள்.

10 COMMENTS

  1. hmm.indha kodikku vimosaname kidaikkadhu.oruthan ellathayum vittu vittu pesa vandha,awana thitti anuppara.enna aga pogudho

  2. hi miya mam.நன்றாக இருந்தது.மலர் பாவம் bisma அத விட பாவம் கொசு கடி வேற மலர் வேற டெய்லி புதுசு புதுசா பேசுறா.புது இடத்துல பாவம் பிள்ள குழம்பி போய் இருக்கு மலர மீட்டு ஊருக்கு நல்லது பண்ணி எப்படி மேல வர போறனோ தெரியல என்னமா நீங்க இப்படி பண்றிங்களே மா

LEAVE A REPLY