SHARE
“பசிக்குது குணங்கெட்டவனே…. பசிக்குது…” மலரின் உறுமலைக் கேட்டு குணா பதட்டமாக கண் விழித்து,
“இல்ல மலர்… நான் தூங்கல… சும்மா… கண்ணுல தூசி விழுந்துடுச்சு.. அதான்.. கண்ணை திறக்க முடியாம மூடிட்டேன்… அதுக்காக என்னை மன்னிச்சிடு..” குணா கெஞ்ச,    
“நீ தூங்கிட்ட… நான் உன்னை கடிச்சு திங்கப் போறேன்… எனக்கு பசிக்குது… வயிறு எரியுது..” மலர் அவனருகே வேகமாக வர, குணா தரையில் கை ஊன்றி வேகமாக பின்னால் நகர்ந்து ஒரு மூலையில் ஒடுங்கினான்.
“வேணாம் மலர்… வேணாம் மலர்… என்னை எதுவும் செய்துடாதே.. எனக்கு பயமா இருக்கு…” முகத்தை மூடிக் கொண்டு அவன் கெஞ்சிக் கதற,
“கெஞ்சறியா… கெஞ்சு கெஞ்சு.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் உன் பக்கத்துல தான் உட்காருவேன் மாமா.. அப்போ தானே கடிச்சு சாப்பிட முடியும்…” என்ற மலர் குணாவின் அருகே அமரவும், குணா பயத்தில் நடுங்கத் தொடங்கினான்.
“வேண்டாம் மலர்.. வேண்டாம்.. நான் தூங்க மாட்டேன்… பாரு கண்ணை முழிச்சிக்கிட்டே இருக்கேன்..” குணாவின் பயத்தைப் பார்த்து சிரித்தவள், 
“ஹையோ… மாமா… நீங்க பயப்படறீங்களா? என்ன மாமா இது? இந்த ஊருக்கே அய்யா நீங்க… உங்களுக்கு பயம்ன்னு சொல்றீங்களே.. அதான் நான் உங்களுக்குத் துணைக்கு இருக்கேனே.. அப்பறம் என்ன?” மலர் கேட்டுக் கொண்டே இருக்கும் வேளையில், அந்த அறையின் ஜன்னல் அருகே,
“அய்யா… அய்யா.. அந்த ரூம் தாழ்பாள் சரி இல்ல… நல்லா பிடிச்சு இழுங்க.. அது கையோட வந்திரும்.. உங்க பலத்தை எல்லாம் கூட்டி இழுங்கய்யா.. இங்க இருந்தவனுங்க எல்லாம் கோவில்ல ஏதோ வேலை இருக்குன்னு போயிட்டானுங்க..” மெல்லிய குரலில் ஜன்னலின் இடுக்கின் வழியே வேலுவின் குரலைக் கேட்ட மலர் வேகமாக எழுந்து குணாவை முறைக்க,
“இல்ல… நான் எங்கயும் போக மாட்டேன்… இங்கயே இருக்கேன்… ஒரு இன்ச்சு இங்க இருந்து நகர மாட்டேன்…” அவசரமாக சொன்ன குணா, மலரைப் பார்க்க,
“அது… அந்த பயம் வேணும்… எங்களை எல்லாம் என்ன பாடு படுத்தின?” என்ற மலர் வேகமாக் கதவைக் கூடத் திறக்காமல் வெளியில் செல்ல, குணா திகைத்து அமர்ந்திருந்தான். அவனது சட்டை முழுவதும் வியர்த்து நனைந்து போயிருந்தது.
“நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கப்பா?” மலரின் குரலைக் கேட்டு அந்த போதையிலும் வேலுவின் உடல் தூக்கி வாரிப் போட, திரும்பி தனது அருகில் நின்றிருந்தவளைப் பார்த்தவர்,
“மலர்…” என்று அலற,
“நான் தான்… ஆமா.. இன்னும் நீ இந்த அய்யா கூட என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அய்யாவே மாமியார் வீட்டுக்கு போகப் போறார்… நீ அவர் கூட போகப் போறியா? உன்னை அந்த ஆளுங்க தூக்கிட்டு போகலையா? அவனுங்க கண்ணுல படாம நீ தப்பிச்சு போயிட்டயா? பதுங்கி பதுங்கி வர?” கடினமான குரலில் அவள் கேட்க, வேலு தள்ளாடி நின்றார்.
“என்னோட அம்மாவைக் கொன்னு… என்னைக் கொன்னு… இன்னமும் நம்ம கொடியை காவு வாங்க முயற்சி செய்தவனுக்கு நீ வக்காலத்து வாங்கிக்கிட்டு இருக்க? உங்களை எல்லாம் என்ன சொல்றது? குடி தான் உனக்கு வாழ்க்கையா? இந்த குடி நம்ம குடும்பத்தையே சிதைச்சது பத்தாதா?” மலர் கேட்க, தள்ளாட்டத்துடன் கையில் இருந்த பாட்டிலை தொண்டையில் சரித்துக் கொண்டு,
“என்ன சொல்ற? அய்யா தான் உங்க அம்மாவையும் உன்னையும் கொன்னதா?” நாக்கு குழற அவர் கேட்க,
“இல்ல… அவரு எங்க சாவுக்கு பத்து நாள் உட்கார்ந்து சோறு தண்ணி இல்லாம துக்கம் காத்தாரு… நீ எல்லாம் ஒரு மனுஷனாய்யா? இப்போவும் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்… நீ என்ன செய்துக்கிட்டு இருக்க? உன்னை எல்லாம் இப்படியே விட்டா சரிப்படாது… இரு டாக்டர் சார் கிட்ட சொல்லி உன்னை என்ன செய்யறேன்னு பாரு.. நீ எல்லாம் திருந்தவே மாட்ட.. நாங்க யாருமே இல்லாம நீ தனியா நிக்கும் போது தான் உனக்கு எங்க அருமை புரியும்… ச்சே.. இதே நீ வேற யாராவதா இருந்து இருந்தா உன்னை இத்தனை நேரம் ஒரு வழி பண்ணி இருப்பேன்.. எனக்கு அப்பன்னா போயிட்டயே.. உன்னை என்ன சொல்ல?” விரக்தியாக சொன்னவள்,
“நீ நாளைக்கு காலையில கண்ணு முழிக்கும் போது நீ இருக்கற இடமே வேற.. அது மட்டும் நடக்குதா இல்லையான்னு பாரு… இந்த குடிப்பழக்கத்தை நீ நிறுத்தினா தான் எங்களோட அருமை உனக்குப் புரியும்… அப்போ நீ தனியா கதறுவ பாரு.. அது தான் நான் உனக்கு தர தண்டனை…” என்றவள், வேலு தடுமாறி அமர்ந்து போதையில் சரிவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“என்னால இத விட முடியலையே.. உங்க அம்மா ரொம்ப நல்லவ.. நான் குடிக்கிறதை ஒண்ணுமே சொல்ல மாட்டா…” வேலு புலம்பிக் கொண்டிருக்க, அவருக்கு எங்கோ பறந்து செல்லும் உணர்வு.
“பார்த்தியா… நான் காசு இல்லாமலே பறந்து போறேன்… உங்களால எல்லாம் அது முடியுமா?” கேட்டுக் கொண்டே முகத்தில் பட்ட காற்றில் உறங்கத் துவங்கினார்.
********      
கொடியின் அருகே அமர்ந்து கண்களை மூடிய பீஷ்மாவிற்கு இன்னமும் அவனது இதயம் தடதடத்துக் கொண்டிருந்தது தெளிவாகவே புரிந்தது. ‘கொடி மேல நான் இவ்வளவு பாசம் வச்சிருக்கேனா?’ அவனது உள்ளம் கேள்வி கேட்க,
“இல்லையா பீஷ்மா? அவளை ஒரு கார் இடிக்க வர்ரதைப் பார்த்து உனக்கு மூளையில சூர்ருன்னு ஒரு ஷாக் அடிச்சதே… அது எதனால.. அப்போ உனக்கு நியாபகம் இருக்கா இல்லையான்னே தெரியல.. நீ அவளை படபடப்பா உன் நெஞ்சுல சாய்ச்சுக்கிட்டு நின்னையே அது எதனாலன்னு யோசிச்சு பார்த்தியா? குணா கொடுத்த புடவையை அவ கட்டிக்கிட்டு நின்னத்துக்கு நீ கோபப்பட்டியே… அதுக்கு என்ன அர்த்தம் பீஷ்மா? அந்த புடவை அவளுக்கு நல்லா இல்லன்னு கோபப்பட்டியா?” மனம் விவாதம் செய்யத் துவங்க, பீஷ்மா தலையை பிடித்துக் கொண்டான்.
“அப்போ நான் இவளைத் தான் லவ் பண்றேனா?” குழப்பத்துடன் பீஷ்மா கேட்க,
“பின்ன இல்லையா? பீஷ்மா… ஒண்ணு மட்டும் மனசுல நல்லா பதிய வச்சிக்கோ.. நீ மலரை ஒரு தடவ தான் பார்த்து இருக்க.. அவளோட போட்டோவை வச்சிக்கிட்டு நீ அவளை நினைச்சிக்கிட்டு இருந்தாலும்… நீ உணர்வு பூர்வமா பழகினது எல்லாம் கொடி கூடத் தான்… மலரே கொடி போல வந்து தானே உன் கூட பேசினா… ரெண்டு பேருக்கும் இருக்கற சின்ன சின்ன வித்தியாசங்கள் கூட உன்னால கண்டு பிடிக்க முடியாம, மறுபடியும் பார்த்த கொடியை மனசுல வச்சிக்கிட்டு தானே நீ மலர் கூடவும் பழகின..
நீ கொடி கஷ்டப்படறதை பார்க்க முடியாம தானே அவளைப் போன்னு விட முடியாம அவளுக்கு ஆறுதல் சொன்ன.. அப்படி இருக்கும் போது மலர் காதலிச்சதுக்காக நீ அவளைத் தேடினயா? இல்லையே.. போட்டோவை வச்சிட்டு வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்த.. அவளை உனக்கு பிடிச்சது தான்.. ஆனா… அவ போல இருக்கற கொடியைத் தான் நீ காதலிச்ச.. அது தான் உண்மை..
நல்லா யோசிச்சு சொல்லு… கொடி மேல உனக்கு அன்பு இல்ல? காதல் இல்ல? இல்லன்னு சொல்லிடு.. அவ லைப் எப்படியோ போகட்டும்ன்னு விட்டுட்டு போயிடலாம்…” மீண்டும் மனதின் வாதத்தில் சோர்ந்து போனவனாய் பீஷ்மா அமர்ந்திருக்க, அவனது கையைப் பிடித்திருந்த கொடியின் கையில் அசைவு தெரிந்தது.
அதை உணர்ந்த பீஷ்மா, அவசரமாக கண் விழித்துப் பார்க்க, அவளது நெற்றி வலியால் சுருங்கி இருந்தது.
“வயிறு இழுக்குது போல…” மனதில் நினைத்துக் கொண்டவன், நெற்றியை  மெல்ல நீவி விடவும், மீண்டும் கொடி பீஷ்மா கொடுத்திருந்த மருந்தின் உதவியுடன் உறங்கத் துவங்க, பீஷ்மாவின் கண்கள் அவளிடமே ஒட்டிக்கொண்டது.
“உன்னையும் கஷ்டப்படுத்தறேன் இல்ல கொடி… உன்கிட்ட காதலைச் சொல்லிட்டு.. நான் மலர்ன்னு நினைச்சு சொல்றேன்னு சொன்னா… உனக்கு எப்படி இருந்திருக்கும்? நான் ரொம்ப தப்பு பண்றேன் இல்ல கொடி? உன் மனசை காயப்படுத்தி இருக்கேன்.. நான் மலரை தான் காதலிச்சேன்னு சொல்லாம சொன்ன போது உனக்கு எப்படி இருந்திருக்கும்? நான் என்ன பண்ணட்டும்? எனக்கு குழப்பமா இருக்கே..” அவன் நொந்துக் கொண்டிருக்க,
“என்னை மன்னிச்சிருங்க டாக்டர் சார்… எனக்கு வேற வழி தெரியல…” அவள் மெல்ல முணுமுணுப்பதைக் கண்டு, அவளது உதட்டின் அருகே காதை வைத்துக் கேட்டவன் குழம்பிப் போனான்.
“என்ன செய்துட்டா? எதுக்கு மன்னிப்பு கேட்கறா?” பீஷ்மா அவள் பாதி மயக்கத்தில் தான் இப்படி புலம்புகிறாள் என்று புரிந்து, மெல்ல அவளது கன்னத்தைத் தட்டி,
“என்ன தப்பு செய்த கொடி? எதுக்கு சாரி சொல்ற?” அவளது காதுக்கருகே கேட்கவும், சில நொடிகள் கொடியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“கொடி.. கொடி.. எதுக்கு சாரி சொல்ற?” பீஷ்மா கேட்க, அவன் சொன்னது போல சமையல் செய்துவிட்டு வந்திருந்த கங்கா அவன் அருகே வந்து நின்றார்.
“கொடி.. சொல்லும்மா… என்ன தப்பு செய்த?” பீஷ்மா கேட்க,
“ம்ம்.. நான்.. நான்.. அந்த குணாவை நல்லா மாட்டிவிட தான் இப்படி செய்தேன்..” கொடி முணுமுணுக்க,
“அதான் நாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டோமே… அதுக்கு எதுக்கு இப்போ சாரி சொல்ற?” பீஷ்மாவின் கேள்விக்கு,
“கத்தியால அவன் குத்தல… அவன் சண்டை போடும் போது.. போலீஸ் கேஸ் இன்னும் ஸ்ட்ராங் ஆகுமேன்னு நானே தான் என்னை குத்திக்கற மாதிரி கத்தியோட போக்கை எடுத்துட்டு வந்தேன்..” அரை மயக்கத்தில் அவள் பேசிக் கொண்டிருக்க, பீஷ்மா அதைக் கேட்டு அதிர்ந்து போனான்.
அருகில் இருந்த கங்காவை அவன் அதிர்ச்சியாகப் பார்க்க, “ஏன்னு கேளு..” அவர் சொல்லவும், அதையே பீஷ்மா திருப்பிக் கேட்க,
“நீங்க எங்க அக்காவையும் எங்க அம்மாவையும் கொலை செய்ததுக்கு அவனுக்கு தண்டனை வாங்கித் தரணும்ன்னு எவ்வளவு கஷ்டப்படறீங்க.. அது எல்லாம்  இனிமே தான் போலீஸ் விசாரிச்சு அவனுக்கு தண்டனை கிடைக்கும்.. இது போல கண்ணுக்கு முன்னாடி நடந்தா உடனே ஆக்க்ஷன் எடுப்பாங்க இல்ல… அவன் எப்படியும் தப்பிச்சிடக் கூடாதுன்னு தான் நான் இப்படி செய்தேன்.. இப்போ எப்படியும் போலீஸ் அவனைப் பிடிச்சிக்கும் இல்ல..” கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளது காதுகளில் இறங்க, அதை துடைத்து விட்ட பீஷ்மாவிற்கு கோபம் எட்டிப் பார்த்தது.
“உன்னோட உயிர் போயிருந்தா என்ன செய்திருப்ப? பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு?” கோபமாக அவன் கேட்க, அவளது முகம் சுருங்கிக் கசங்கியது.
“நான் இருந்து என்னங்க செய்யப் போறேன்? செத்தாலாவது அந்த குணாவுக்கு அதிக தண்டனை கிடைக்கும் இல்லையா? உங்களுக்கு.. உங்க முயற்சிக்காவது அது உபயோகப்படுமே..” என்றவளின் உதடு பிதுங்க, கண்ணீர் வழிய பரிதாபமாக இருந்தவளைப் பார்த்த பீஷ்மா, அவள் சொன்ன சொல் தாங்க முடியாமல் அவளது தலையை எடுத்து தனது மார்போடு அழுத்திக் கொண்டான்.
“என்ன கொடி இப்படி எல்லாம் பேசற? நீ இல்லாம நான் எப்படி கொடி இருப்பேன்? இப்படி பேசறதுக்கு உனக்கு எப்படி தைரியம் வந்தது? லூசுத்தனமா ஏன் இந்த வேலை செய்த?” அவன் கேட்டுக் கொண்டிருக்க, அவளது கை தையல் போட்டிருந்த இடத்தை அழுத்தவும்,
“பீஷ்மா… அவளை ஒழுங்கா படுக்க வை.. தையல் போட்ட இடம் வலிக்குது போல…” அவளை கவனித்துக் கொண்டிருந்த கங்கா சொல்லவும், தலையில் தட்டிக் கொண்ட பீஷ்மா அவளை நேராக படுக்க வைத்தான்.
“பாருங்கம்மா இவ என்ன வேலை செய்திருக்கான்னு?” ஆற்றாமையுடன் கேட்ட பீஷ்மாவின் தோளை அழுத்தியவர்,
“அவ உனக்கு தன்னோட காதலை நிரூபிச்சிட்டா பீஷ்மா.. இதுக்கும் மேல அவ என்னடா செய்வா?” கங்கா கேட்கவும், கொடியின் கையைப் பிடித்தவன், பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.
தான் கேட்டதும் கொடியின் கையைப் பிடித்தவனைப் பார்த்த கங்கா, இதுவே அவனது மனமாற்றத்தைக் குறிப்பதை உணர்ந்து கொண்டு, அதற்கு மேல் அவனை வற்புறுத்தக் கூடாது என்ற முடிவெடுத்தவராக, “ஹ்ம்ம்.. நான் இங்க இருக்கேன்.. நீ போய் வேலையைப் பாரு… எனக்கு வீட்ல வேலை முடிஞ்சிடுச்சு…” கங்கா சொல்லவும்,
“இல்லம்மா… இப்போதைக்கு பேஷன்ட்ஸ் யாருமே இல்ல.. ஒரு அஞ்சு நிமிஷம்… நான் முகத்தை கழுவிட்டு, அந்த குணாவைப் பார்த்துட்டு வரேன்… இன்னமும் இவளோட அப்பா இங்க வரல… அவரு எங்கயாவது பூட்டை உடைச்சு அவனை வெளிய விட்டுடப் போறாரு..”
“அதுவும் சரி தான்… நீ போய் பார்த்துட்டு வந்திடு…” என்றவர், கொடியின் அருகே அமர, பீஷ்மா கிளம்பிச் சென்றான்.
வீடு அதே நிலையில் பூட்டி இருக்க, உள்ளிருந்து குணாவின் “காப்பாத்துங்க… காப்பாத்துங்க.. இங்க பேய் இருக்கு…” என்ற குரல் வெளியில் கேட்க, சில வினாடிகள் பீஷ்மா திகைத்துப் போனான்.
கத்திய கத்தலில் தொண்டை வறண்டு, இடையிடையே அவன் இரும்முவதையும் கேட்டவனின் இதழில் புன்னகை அரும்பியது.
“மலர் ஆன் ட்யூட்டி போலயே.. குணாவை என்ன மிரட்டி வச்சிருக்காளோ? இந்த அலறு அலறிக்கிட்டு இருக்கான்…” குழப்பம் தெளிந்தவன் போல நினைத்துக் கொண்டவன்,
“இனிமே இவனைப் பத்தின கவலை வேண்டாம்… நாம கேஸ் வேலையைப் பார்ப்போம்.. எத்தனை நாள் ஆனாலும் மலர் அவனை விட மாட்டா?” என்று நினைத்துக் கொண்டவன், அங்கிருந்து நகர்ந்து செல்ல, துரை வேகமாக ஓடி வந்தான்.
துரையின் பதட்ட முகத்தைப் பார்த்தவன், “என்ன துரை? என்ன இப்படி பதட்டமா ஓடி வர்ரீங்க?” பீஷ்மா கேட்க,
“இல்ல சார்.. அங்க நம்ம ஹாஸ்பிடல் பின் பக்கம் நம்ம கொடியோட அப்பா விழுந்து கிடக்காரு.. சீக்கிரம் வந்துப் பாருங்க.. பேச்சு மூச்சு இல்லாம இருக்கு…” துரையின் பதட்டம் பீஷ்மாவிற்கும் தொற்றிக் கொள்ள, வேகமாக இருவரும் மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்.
துரை காட்டிய இடத்தில் கிடந்த வேலுவைப் பரிசோதித்த பீஷ்மா, “உயிர் எல்லாம் இருக்கு துரை.. நல்லா முட்ட முட்ட குடிச்சு இருக்காரு..” ஆசுவாச மூச்சை வெளியிட்டு அவன் சொல்லவும்,
“அதான் சார்… நானும் தட்டிப் பார்த்தேன்.. அசையக் கூட இல்ல..” துரை சொல்லிக் கொண்டிருக்க,
“இவரை ஒரு கை பிடிங்க.. உள்ள கொண்டு போய் போட்டு ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சிடுவோம்…” பீஷ்மா சொல்லவும்,  
“கோழி தானா வலையில வந்து சிக்கி இருக்கு.. அதை சரி செய்யாம விடக் கூடாது..” என்று கூறி, இருவருமாக சேர்ந்து அவரை ஒரு கட்டிலில் கிடைத்திவிட்டு வெளியில் வர, அன்று ஒரு வீட்டின் விருந்தில் உண்டவர்கள் வரிசையாக வயிற்று வலியின் காரணமாக வரத் துவங்கி இருந்தனர்.
“வாசம் நல்லா மணக்குதேன்னு நினைச்சேன் டாக்டர்.. கடைசியில கெட்டுப் போன சாப்பாட்டை கலந்து போட்டு இருக்காங்க… வயிறு வலிக்குது…” குறை சொல்லிக் கொண்டே வந்தவர்களை கவனிக்கத் தான் பீஷ்மாவிற்கு நேரம் சரியாக இருந்தது. வந்திருந்த ஓரிருவரை அங்கேயே தங்க வைத்து கண்காணிக்க வேண்டியும் இருக்க,
“துரை.. நர்ஸ்சை இன்னைக்கு கொஞ்சம் நைட்டுக்கு வந்து இருக்க சொல்லுங்க.. அப்போ தான் நமக்கும் உதவியா இருக்கும். போற போக்கைப் பார்த்தா.. இன்னும் நிறைய பேர் வருவாங்க போல இருக்கு..” கவலையாகச் சொன்னவன், துரை வேகமாக ஓடவும், கொடியைப் பார்க்கச் சென்றான்.
காய்ந்த கொடி போல உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்த பீஷ்மாவின் மனம் கனக்க, அவனது மனமோ, “மலர் இருக்கற இடம் தெரிஞ்சும் நாம ஏன் அவளைப் பார்க்கணும்… பேசணும்ன்னு தவிக்கவே இல்லையே.. அப்போ நான் கொடியைத் தான் காதலிச்சு இருக்கேனா? ஆனா.. மலரைத் தானே முதல்ல பார்த்தேன்…” என்று யோசித்தவன்,
“ஹ்ம்ம்… அவளை பார்த்து விருப்பப்பட்டாலும்… உணர்வு பூர்வமா நான் இவ கூட தானே பழகி இருக்கேன்… இவளுக்கு ஒண்ணுன்னா நான் எவ்வளவு துடிக்கறேன்? இவளுக்கு ஒரு சின்ன ஆபத்துன்னா கூட உடனே என்னால உணர முடியுதே.. அப்போ நான் கொடியைத் தானே லவ் பண்ணி இருக்கேன்..” மீண்டும் மீண்டும் மனதில் உறுப்போட்டு, மனம் தெளிந்தவனாக பீஷ்மா கொடியின் தலையை வருடினான். 
“இன்னும் அவ கண்ணு முழிக்களையாம்மா?” சந்தேகமாக பீஷ்மா கேட்க,
“நான் கண்ணு முழிச்சிட்டேன்… எனக்கு ஒண்ணும் இல்ல.. வீட்டுக்குப் போகலாமா?” கண் திறந்து கொடி அவசரமாகக் கேட்க,
“எங்க போகப் போற? வீட்டுக்கா? இனிமே அது உன் வீடு இல்ல.. எங்க வீடு தான் உன் வீடு.. கொஞ்ச நேரம் இங்க இரு.. அப்பறம் நானே உன்னை நம்ம வீட்ல கொண்டு போய் விடறேன்… போய் முகத்தை கழுவிக்கிட்டு அம்மா செய்து வச்சிருக்கற சாப்பாட்டை சாப்பிடு.. அப்போ தான் தெம்பிருக்கும்…” பீஷ்மா சொல்லவும், கொடி அவனையே கண்கள் தெறிக்க பார்த்துக் கொண்டிருக்க,
“உங்க அப்பாவும் இங்க தான் இருக்காங்க கொடி.. அவரோட குடிப்பழக்கத்தை நிறுத்திட்டு நான் அவரை வீட்டுக்கு அனுப்பறேன்.. அப்போ கூட நீ அங்க போக வேண்டாம்…” பீஷ்மா சொல்லிவிட்டு அவளது அருகே அமர்ந்து,
“உனக்கு வயித்துல வலி ஏதும் இருக்கா?” என்று கேட்க, கொடி மெல்ல ‘இல்லை’ என்று தலையசைத்தாள். அவளது தலையை மெல்லக் கோதிக் கொடுத்தவன்,
“இனிமே இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடு.. நல்லவேளை கத்தியும் அவ்வளவு கூர்மை இல்ல.. ஆழமாவும் உள்ள இறங்கல.. அதனால நீ தப்பிச்ச..
என்னைப் பத்தி கொஞ்சமாவது நீ நினைச்சுப் பார்த்தியா? எல்லாம் உன்னோட இஷ்டம் தான் இல்ல…” அவனது வார்த்தையில் இருந்த ஆதங்கத்தை உணர்ந்த கொடியின் கண்கள் கலங்க, அதை விட, அவனுக்கு எப்படி உண்மை தெரிந்தது என்று திகைத்தவள்,
“நான்… நான்… எதுவும்..” அவள் திக்கித் திணற,
“சமாளிக்காதே ஃபிளவர்… உன்னை தூக்கத்துல பேச வச்சு விஷயத்தை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன்..” பீஷ்மா கேலிக்குத் தாவ,
“என்ன? என்ன விஷயம்?” கொடி திக்கித் திணற,
“ஹ்ம்ம்… எல்லாம்… நிறைய விஷயம்.. நிறைய ரகசியத்தை எல்லாம் நீ சொல்லிட்ட… இருந்தாலும்… நீ இவ்வளவு ரகசியத்தை ஒளிச்சு வச்சிருக்கக் கூடாதும்மா..” அவன் தொடர்ந்துக் கொண்டிருக்க, அவனது கையை இறுகப் பற்றியவள்,
“நான் நிஜமா எதுவுமே செய்யலைங்க… நான் எதையும் உங்ககிட்ட இருந்து மறைக்கல.. சத்தியமா.. எங்க ஊர் ஆத்தா மேல சத்தியமா….” அவன் தன்னை தவறாக புரிந்துக் கொண்டு விடுவானோ என்ற அச்சத்தில் சொல்ல, பீஷ்மா அவளது கன்னத்தைத் தட்டினான்.    
“சும்மா சொன்னேன் கொடி.. உன்னை வம்புக்கு இழுக்க அப்படிச் சொன்னேன்… சரி… உன்னால எழுந்துக்க முடியுதான்னு பாரு.. அம்மா கூட வீட்டுக்குப் போ.. இங்க இருந்து இன்பெக்ஷன் ஆகப் போகுது… எனக்கும் பெட்டு வேணும்..” பீஷ்மா சொல்லவும், அவசரமாக எழுந்த கொடி, காயத்தின் வலியால் சிணுங்கியபடி மீண்டும் படுத்துக் கொள்ள,
“உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.. இரு நான் எழுப்பி விடறேன்…” அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டவன், மெல்ல அவள் எழவும் உதவி செய்தான்.
அவளது தலை அவனது தோளில் படவும், பீஷ்மா கொடியின் முகத்தைப் பார்த்தான். அதே நேரம் கொடியும் அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்க்க, அந்த கண்கள் இரண்டும் மோதிக் கொண்டது. மெல்ல கைகளை உயர்த்தி, அவளது நெற்றியில் வழிந்த முடியை ஒதுக்கி விட்டபடி அவளைப் பார்த்து புன்னகைக்க, அவனது புன்னகையில் கொடி நாணத்துடன் தலை கவிழ்ந்தாள்.
நாணச் சிவப்பு கொடியின் கன்னத்தில் படர, அதை ரசித்தபடி வீட்டை நோக்கி நடந்தவனை கங்கா மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவனது நடவடிக்கைகள் கொடியின் விஷயத்தில் அவன் ஒரு நல்ல முடிவை எடுத்து விட்டான் என்பதை உணர்த்த, மருத்துவமனையில் இருந்து, தனது கணவருக்கு அழைத்தார்.
வீட்டிற்குச் சென்று துரை தயாராக வைத்திருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் பீஷ்மா அவளை படுக்க வைக்க, “எனக்கு ஒண்ணும் இல்ல டாக்டர் சார்.. நீங்க எதுக்கு இப்போ என்னை ஒரு நோயாளி போல பார்த்துக்கிட்டு இருக்கீங்க? இதோ நான் பாருங்க எப்படி பட்டுன்னு எழுதுக்கறேன்னு…” என்று அந்த கட்டிலில் இருந்து அவள் பட்டென்று எழவும், தையல் போட்ட இடம் வலிக்க, அவளது கண்களில் முணுக்கென்று கண்ணீர் வர,
“ஹஹஹஹா… நடக்கவே முடியலையாம்… இதுல இவங்க வேகமா எழுந்து வேலை செய்யப் போறாங்களாம்… என்ன கொடுமை துரை இது?” பீஷ்மா கிண்டல் செய்ய, கொடி அவமானத்தில் தலை குனிய,
“ஹே ஃபிளவர்… நான் அப்பப்போ இப்படித் தான் கிண்டல் செய்வேன்… நீ இப்படி இதுக்கெல்லாம் தலை குனிஞ்சன்னா.. உன் தலை நிமிர நேரம் கிடைக்கவே கிடைக்காது.. இதெல்லாம் பழகிக்கணும் ஃபிளவர்.. இல்லையா எங்கம்மா மாதிரி சரிக்கு சரி பேசக் கத்துக்கோ.. அப்போ தான் பொழுதும் நல்லா போகும்…
பாரு.. எங்கம்மா டீச்சர்ன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? அதுவும் ஸ்ட்ரிக்ட் டீச்சர்.. நானும் எங்க அப்பாவுமே அவங்களுக்கு பயப்படுவோம்ன்னா பார்த்துக்கோயேன்… அதை விட எங்க பெரியப்பா… அம்மா இருக்கற இடத்துல இருக்கவே மாட்டாங்க… அம்புட்டு பயம்..” பீஷ்மா கொடியிடம் கிண்டல் பேசிக் கொண்டிருக்க,
“நிஜமாவா? நீங்க பயப்படுவீங்களா?” என்று கேட்டு சிரித்த கொடியின் சிரிப்பு பட்டென்று நின்றுப் போனது.
“என்ன பாதியில சிரிப்பை நிறுத்திட்ட? நான் கோவிச்சுக்க மாட்டேன்… சிரி..” அவன் மேலும் அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க,   அவனுக்கு பின்னால் இருந்த கங்காவைப் பார்த்து கொடி விழிக்கத் தொடங்கினாள்.
“இப்போ எதுக்கு நீ டீச்சர் அம்மா வந்தா மாதிரி முழிச்சிக்கிட்டு நிக்கற? டீச்சர் அம்மாகிட்ட பிட் போட்டா சரியா போயிடும்… அது எப்படின்னு நான் உனக்கு அப்பறம் சொல்லித் தரேன்..” பீஷ்மா தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கவும், கங்கா அவனது முதுகில் தட்டினார்.
அவர் தட்டவும், “கொடிம்மா… இப்படி எல்லாம் அவங்களைப் பார்த்து என்னை அடிக்க கூடாது… அந்த உரிமை எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான்.. நீ என்னை அடிக்கிறதை டீச்சரம்மா பார்த்தாங்க.. உன்னை பெஞ்ச் மேல நிக்க வச்சிடுவாங்க…” அவனது கேலியில் சிரித்த கங்கா, தனது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு,
“இப்பவே உங்க ரெண்டு பேரையும் நிக்க வைக்கப் போறேன்.. பார்த்து இருந்துக்கோங்க.. என்ன சிரிப்பு சத்தம் வாசல் வரை கேட்குது?” பொதுவாக கண்டித்தவர்,
“உன்னை அங்க ஹாஸ்பிடல்ல தேடறாங்க… எங்கயோ கடலை வறுப்பட்டு ஓவரா தீயற வாசனை வந்துச்சேன்னு சுத்தி கித்தி தேடிட்டு வந்தா.. இங்க நம்ம வீட்ல தான் வருபட்டுக்கிட்டு கிடக்கு.. நான் போய் அடுப்பை அனைக்கறேன்… நீ போய் பிழப்பைப் பாரு…” கங்கா சொல்லவும், தலையை சொறிந்துக் கொண்டே பீஷ்மா மருத்துவமனையை நோக்கிச் செல்ல, கங்கா கொடியைப் பார்த்து புன்னகைத்தார்.
“இவனை கட்டி மேய்க்க நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டுட்டு இருப்பேன்னு புரியுதா? இனிமே நீ என்ன பாடு படப் போறியோ? ஆனா ஒண்ணு .. எனக்கு விடுதலை கிடைச்சிருக்கு… அதை நான் கொண்டாடப் போறேன்… ஸ்வீட் எடு.. கொண்டாடு…” சொல்லிச் சிரித்த கங்கா, பரிவுடன் கொடியை தன்னருகே அமர்த்திக் கொண்டு, அவளுடன் பேசத் துவங்கினார்.
வெளியில் வந்த பீஷ்மாவைத் தேடி ஊர் மக்களும்… அவர்களுக்கு நடுவே ஒரு வயதான பெண்மணியும் அமர்ந்திருக்க, பீஷ்மா யோசனையுடன் அவரைப் பார்த்தான்.
“வணக்கம் டாக்டர் சார்… நான் குணாவோட அம்மா…” அவனது பார்வையை உணர்ந்தவர் போல அந்த பெண்மணி சொல்லவும், பீஷ்மா அவர் அருகே சென்று அவரை வணங்கினான்.
“சொல்லுங்கம்மா… உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யணுமா?” பீஷ்மா கேட்க,
“ஹ்ம்ம்.. ஆமாப்பா.. குணாவை..” அவர் தயங்கித் தொடங்குவதற்குள்,
“குணா செய்த குற்றங்கள் ஏராளம்மா.. அதுவும் ஒரு உயிர்ன்னு கூடப் பார்க்காம அவன் செய்த கொலைகள் இருக்கே… அதுக்கெல்லாம் உங்க மகனுக்கு தண்டனை வேண்டாமா? கண்டிப்பா நான் வாங்கித் தருவேன்ம்மா… அதைப் பத்தி என்கிட்ட பேசணும்ன்னா… தயவு செய்து.. உங்க பேச்சை மறுத்த பாவம் எனக்கு வேண்டாம்…” வேகமாக பீஷ்மா சொல்லி முடிக்க, அந்த பெண்மணி அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
“இல்லப்பா… அவனை விட்டுடுன்னு கேட்க நான் வரல.. ஊர்ல காப்பு கட்டி இருக்கு.. அந்த சமயத்துல ஊரை விட்டு போனா அந்த குடும்பத்துக்கே ஆகாதுன்னு சொல்லுவாங்க.. இப்போ அவனை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போச்சுன்னா… எங்க குலத்துக்கே அது ஆகாதுப்பா.. எனக்கு இருக்கறது அவன் ஒரே மகன்.. எங்க அய்யாவோட மகன்.. அந்த மகன் காப்பு கட்டி இருக்கும் போது இந்த ஊரை விட்டுப் போகணுமா?
அவன் திரும்பி வருவானா? இல்ல தூக்குல தொங்கி சாகப் போறான்னான்னே தெரியல.. இன்னும் மூணு நாளுல பண்டிகை.. அதனால அவனை இப்போ பூட்டி வச்சிருக்கற போலவே பூட்டி வச்சி இருங்க.. பண்டிகை முடிஞ்ச அடுத்த நொடி அவனை போலீஸ் கூட்டிட்டு போகட்டும்..” நீளமாக அவர் பேச, அவரை பீஷ்மா யோசனையுடன் பார்த்தான்.
“என்னப்பா யோசிக்கிற?” அந்த அம்மாள் கேட்கவும்,
“அவரைத் தப்பிக்க விட எந்த யோசனையும் இல்லையே…” பீஷ்மா கேள்வி எழுப்ப,
“இல்ல தம்பி.. அவனை நானே பிடிச்சுக் கொடுக்கணும்ன்னு தான் இருந்தேன்… நீங்களே செய்துட்டீங்க… ஒரு மூணு நாள்.. திருவிழா முடியட்டும்.. நீங்க அவனை போலீஸ்கிட்ட கொடுத்திடுங்க… நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன்..” அந்த பெண்மணி பரிதாபமாகக் கேட்க, பீஷ்மா சம்மதமாக தலையசைத்தான்.
“அவனை நீங்க தப்பிக்க வச்சா அவனோட உயிருக்குத் தான் ஆபத்து.. அவன் அமைதியா தண்டனையை ஏத்துக்கற வரை.. அவன் உயிர் அவன் கையில இல்ல.. அது அவனுக்கு நல்லாவே தெரியும்.. உங்க பையன் செய்திருக்கற தப்புக்கு அவன் திரும்பி வரது எல்லாம் கஷ்டம்…” பீஷ்மா உதட்டைப் பிதுக்கவும், எழுந்துக் கொண்டவர்,
“ரொம்ப நன்றிப்பா.. நீ ஒரு நல்ல மனிதாபிமானம் உள்ள டாக்டர்ன்னு எனக்கு தெரியும்… அந்த தைரியத்துல தான் நான் கேட்க வந்தேன்… நீ சொன்னது போல திருவிழா முடிஞ்ச உடனே நீங்க கூட்டிட்டு போயிடலாம்…” என்றவர், அருகில் இருந்த பெண்ணின் உதவியுடன் நடக்கத் தொடங்க, பீஷ்மா அவரைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

4 COMMENTS

 1. Hai ramya dalu
  Haiyyyo Pazhya beeshu is back polye
  Malar neeyum konjam mouth open panna than pozhacha illa beeshu paiyan kalaippu thangathu
  Guna unnaku dandanakka dandanakka than
  Malar unnakku three days virunthu jammai
  Dalu what a speed what a speed keep going da

 2. Rams Superb ma.

  Beeshma unnoda vaai irukkae !! But nice.
  Kodi yai thaan virumbarom nu purinchikkittaan, antha vagaiyil superb.

  Malar aval appavai thookki kondu poyi Hospital Vaasal la pottuttaalaa !! Good.

  Ini thaan irukku climax.

  Unmaiyil sonnaal intha story la Ganga ma character thaan ennoda first favorite….

 3. Hei Ramya, superb ud paa
  intha ud vanthathe theriyalai paa
  sorry for the late comment
  ha ha, Guna nalla venum unakku
  Malar, avaloda amma, Guna father, Durai’s wife elloraiyum enna pannine?
  athey than paa unakkum Guna
  waiting for your lovely ud pa

LEAVE A REPLY