SHARE

தஞ்சையில் கமிஷனரிடம் பேசிவிட்டு வந்த பீஷ்மா, மலர் விபத்துக்குள்ளான பகுதியைச் சார்ந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போகச் சொல்லிவிட்டு, இருக்கையில் சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். அவனது முகத்தில் தெரிந்த அயர்ச்சியும், தவிப்பும் சதாசிவத்திற்கு வருத்தத்தை அளித்தது.

“சின்னவரே.. இப்படி நீங்க இருக்கறது நல்லா இல்ல.. எப்பவும் போல சுறுசுறுப்பா இருங்க.. அப்போ தான் எதுவா இருந்தாலும் சமாளிக்க முடியும்…” அவனுக்கு ஆறுதல் சொன்னவர்,

“அந்த பொண்ணு உங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணா சின்னவரே..” அவன் வருந்துவது பொறுக்காமல் மெல்லக் கேட்க,

“ஹ்ம்ம்.. ரொம்ப வேண்டியவளா இருக்க வேண்டியவ… இப்போ ரொம்ப தூரம் போயிட்டா…” வருந்திக் கொண்டே சொன்ன பீஷ்மா,

“என்னையும் நட்டாத்துல நிக்க வச்சு குழம்ப விட்டுட்டு போயிருக்கா.. அவளோட மரணத்துக்கு காரணமானவன நான் தண்டிச்சே ஆகணும். அவளை கொலை செய்தவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காம எப்படி இருக்க முடியும்? அதுக்குத் தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன்.. அதோட அந்த இடத்துல இருக்கற சின்னச் சின்ன கடைகள்லையும் விசாரிக்கணும்..” பீஷ்மாவின் குரலில் இருந்த உறுதி, உள்ளுக்குள் பீஷ்மா உறுதியாக இருப்பதை உணர்த்தினாலும், சதாசிவம் பீஷ்மாவின் நிலைக்காக வருந்தினார்.

“என்னவோ தம்பி.. நீங்க இப்படி இருக்கறது நல்லாவே இல்ல.. நீங்க கொஞ்சம் மனசை தேத்திக்கிட்டு தான் ஆகணும்.. அம்மா உங்களை நினைச்சு ரொம்ப வருத்தப்படறாங்க… எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு சின்னவரே.. எங்களுக்காக நீங்க பழைய படி மாறித் தான் ஆகணும்..” நிலைமையைச் விளக்கி,

“உங்க அழு மூஞ்சி முகத்தைப் பார்க்க நல்லாவே இல்ல..” அவனை கேலி செய்து, வண்டியை ஓட்டுவதில் கவனம் பதித்தார். பீஷ்மாவிடமிருந்து வெறும் புன்னகையே பதிலாகக் கிடைக்க, இருவரும் காவல் நிலையத்தை நோக்கிச் சென்றனர்.

“மாரி.. இன்னைக்கு யார் வீட்ல விருந்து… இப்படி அமர்க்களப்படுது?” கங்கா கேட்டுக் கொண்டே மாரியுடன் கோவிலை நோக்கி நடக்க, மாரி அவரைப் பார்த்து புன்னகைத்து,

“எங்க அய்யா வீட்டு விருந்து தான் முதல் விருந்துங்க. அம்மா இன்னைக்கு தான் ஊர் மக்களைப் பார்ப்பாங்க.. மத்த நாள் எல்லாம் பெரிய அய்யா இறந்ததுல இருந்தே வெளிய வரதே இல்ல.. எல்லாரையும் நியாபகம் வச்சிக்கிட்டு நலம் விசாரிப்பாங்க… ஊருக்குள்ள நடக்கற எல்லா விஷயமும் அம்மா காதுக்கு போயிடும்.. எல்லாருக்கும் புது புடவை வேஷ்டின்னு தருவாங்க.. அவ்வளவு நல்லவங்க.. உங்கள கூட பார்க்க கூப்பிட்டா கூப்பிடுவாங்க..” மாரி சொல்லிக் கொண்டே, மதியம் நடத்தப்படும் பூஜையை பார்க்க, கங்காவை அழைத்துச் சென்றார்.  

கண் குளிர அம்மனைப் பார்த்துவிட்டு வந்த கங்காவை குணாவின் வீட்டில் இருந்து ஒரு பெண் விருந்திற்கு அழைக்க வர, “அம்மா.. உங்களை அய்யா வீட்ல இருந்து விருந்துக்கு கூப்பிட வந்திருக்காங்க… நான் சொன்னேன் இல்ல..” மாரி சொல்லவும்,

“இல்ல மாரி.. நான் எங்கயும் வரல.. அவங்க என்னை அழைச்சதுக்கு ரொம்ப நன்றி சொன்னதா சொல்லிடுங்க… எனக்கு அங்க வர ஒரு மாதிரி இருக்கு..” மாரியின் அருகே நின்றிருந்தவரைப் பார்த்த கங்கா சொல்லவும், மாரியைப் பார்த்த அந்தப் பெண் தயக்கத்துடன்,

“அம்மா உங்களைப் பார்க்கணும்ன்னு ரொம்ப பிரியப்படறாங்க.. கொஞ்சம் வந்து போக முடியுங்களா? உங்க சவுகரியமும் அதுல முக்கியம்ன்னு அம்மா நினைக்கிறாங்க.. உங்ககிட்ட ஏதோ முக்கியமா பேசணும்ன்னு விருப்பப்படறாங்க..” அந்த பெண்மணி சொல்ல, கங்கா யோசனையுடன் மாரியைப் பார்த்தார்.

கங்காவின் பதிலுக்காக காத்திருந்த மாரியும் அவரை ஆர்வமுடன் பார்க்க, “சரி… நான் வரேன்.. ஆனா என்னை விருந்து சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. எனக்கு வெளிய சாப்பிட்டு பழக்கம் இல்ல..” கங்கா தயக்கத்துடன் இழுக்க,

“எங்க அம்மா.. எப்பவுமே எதுக்குமே வற்புறுத்த மாட்டாங்க… நீங்க தைரியமா வாங்க..” அந்தப் பெண் சந்தோஷத்துடன் சொல்லவும், துரையை அழைத்து விஷயத்தை கூறிய கங்கா, மாரியை துணைக்கு அழைத்துக் கொண்டு, பெரிய வீட்டை நோக்கிச் சென்றார்.

கங்காவும் மாரியும் பெரிய வீட்டின் உள்ளே செல்ல, குணா அவர்களைப் பார்த்து புருவம் உயர்த்தினான். “என்ன டாக்டர் அம்மா.. இங்க நிறைய வகை வகையா சாப்பாடு கிடைக்கும்ன்னு வந்துட்டாங்க போல…” அருகில் இருந்தவனிடம் குணா கிண்டலடிக்க, அவன் கூறியது காதில் விழுந்தாலும், அந்த நல்ல பெண்மணிக்காக கங்கா தொடர்ந்து நடந்தார்.

அனைவரும் உணவுண்ண அமர்ந்திருந்தாலும், அவர்களது முகத்தில் எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லாமல் கடனே என்று அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தனர். தனது செல்வச் செழிப்பை பறைசாற்றுவது போல இலையில் இருந்த உணவுகளைப் பார்த்துக் கொண்டே கங்கா அந்தப் பெண்ணுடன் குணாவின் தாயாரைப் பார்க்கச் சென்றார்.

அடுப்பங்கரையின் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி அனைவருக்கும் உணவுகளைப் பரிமாறச் சொல்லி ஏவிக் கொண்டிருந்தவரைப் பார்த்த கங்கா, இலையில் காலியாகும் பண்டங்களை அவர்கள் கேட்காமலே, கண்டுகொண்டு, அவர்களின் பெயரை சொல்லி நிரப்பச் சொல்லிக் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அந்தப் பெண் அருகில் சென்று ஏதுவோ சொன்னதும், ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டவர், கங்காவைப் பார்த்து எழுந்து வணக்கம் சொல்லி, “என் பக்கத்துல இருக்கற சேர்ல உட்காருங்க.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்றபடி, கங்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

தனது தாய் கங்காவின் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கவும், குணா அவர் அருகில் வேகமாகச் செல்ல, அவன் அருகே வந்ததும் அவனைப் பார்த்து முறைத்த அவனது தாய் வீரம்மா,

“டாக்டர் அம்மாகிட்ட எனக்கு பேச ஆயிரம் விஷயம் இருக்கும்.. உனக்கு இங்க என்ன வேலை? பொம்பளைங்க சகவாசம் போதாதுன்னு இது வேற இப்போ புது பழக்கமோ..” நக்கலும் கோபமும் கலந்த குரலில் அவர் கேட்க,

குணா அவரை முறைத்துக் கொண்டே, “டாக்டர் அம்மா வந்திருக்காங்க.. அதான் ஏதோ முக்கியமான விஷயமோன்னு கேட்க வந்தேன்…” கங்காவைப் பார்த்துக் கொண்டே நக்கலாக அவன் பேச,  

“வம்பு பேச்சு கேட்கறது அவ்வளவு பிடிக்குதோ? போய் உன் வேலையைப் பாரு… எனக்கு அவங்ககிட்ட தனியா பேசணும்… பொம்பளைங்க சமாசாரம்ன்னு சொன்னாலும் நிப்பீங்களோ? வர வர உன் குணம் ரொம்ப மோசமா இருக்கு..” மேலும் எள்ளல் குரலில் அவர் கேட்க, கங்கா அவனை ஒரு மாதிரிப் பார்க்க, குணா அங்கிருந்து வேகமாக விலகிச் சென்றான்.

சிறிது நேரம்வரை அமைதியாக இருந்த குணாவின் தாய், கங்காவின் பார்வை யோசனையுடன் சுற்றி வருவதைக் கண்டு, “கொடி பொண்ணு இங்க வரல.. அவ வர முடியாதுன்னு சொல்லிட்டாளாம்.. வராததும் நல்லது தானே.. காலையில அவனோட கைய நல்லா பதம் பார்த்து விட்டு இருக்கா.. கையைப் பதம் பார்த்ததுக்கு இவனை வெட்டிப் போட்டு இருக்கலாம்..” தனது வயதிற்கு தகுந்த முதிர்ச்சியால், கங்காவின் பார்வையைப் புரிந்து சொன்னவரின் குரலில் இருந்த வேதனையிலும், அவர் சொன்ன வாக்கியத்தின் பொருள் உணர்ந்து, கங்கா திகைத்துப் போனார்.

கங்காவின் திகைப்பை சிறிதும் சட்டை செய்யாமல், “உங்க வீட்டு மருமக எங்க வீட்டுல ஏன் சாப்பிட வரப் போகுது.. வந்தாலும் நான் உள்ள விட்டு இருக்க மாட்டேன்..” யதார்த்தமாக அவர் சொல்லவும், கங்கா மேலும் திகைத்துப் போனார்.

திகைப்புடன் கங்கா அமர்ந்துக் கொண்டிருக்கையிலேயே, “அவளைப் பத்தி பேசத் தான் உங்களைக் கூப்பிட்டேன்.. டாக்டர் சார் இத்தனை நேரம் விஷயத்தை உங்ககிட்ட சொல்லி இருப்பார்ன்னு நான் நினைக்கிறேன்.. திடுதிப்புன்னு நீங்க வந்திருக்கறதுல இருந்தே எனக்கு விஷயம் புரியுதுங்க…” மெல்ல அவர் தொடங்கவும், கங்கா திகைப்பு விலகாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க,  

“டாக்டர் தம்பியைப் பத்தி கேள்விப்பட்ட வரை நல்ல சிரிச்சு பேசிட்டு, தைரியமா இருக்கிற தம்பி போல தான் இருக்கு.. அதனால ஒரு யூகம்.. என் யூகம் சரி தானே..” மேலும் கேட்டவர்,

“அந்த படிக்காத கிராமத்து பொண்ணை எப்படி உங்க வீட்டு மருமகளா கொண்டு போறதுன்னு யோசிக்கறீங்களோ? அவளும் டவுனுல இருந்து ஏதோ படிச்சிருக்கா..” யோசனையுடன் அவர் கேட்க, கங்கா மறுப்பாக தலையசைத்தார்.

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க…” கங்கா இழுக்க,

“பின்ன… அப்படி எதுவும் இல்லன்னா.. சின்னஞ்சிறுசுங்க ரெண்டும் ஆசைப்படுதுங்க.. சேர்த்து வைங்களேன்..” இடையில் நடந்த குழப்பத்தை அறியாமல் அவர் பேசிக் கொண்டே போக, கங்கா சொல்வதறியாமல் திகைத்தார்.

“அந்தப் பொண்ணை எம்மகன்கிட்ட இருந்து காப்பாத்துங்க.. டாக்டர் தம்பி தான் அந்தப் பெண்ணுக்கு ரொம்ப பாதுகாப்பா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.. என் மகனையும் அடிச்சு நொறுக்கி இருக்கார் போல..” அவர் இழுக்க, கங்கா தயக்கமாய் பார்த்துக் கொண்டிருக்க,

“உங்க மகன் என்ன முடிவெடுத்து இருக்காருன்னு எனக்குத் தெரியல.. ஆனா.. அவர் எடுக்கற முடிவு.. இந்த ஊர் மறுபடியும் பழைய நிலைமைக்கே கொண்டு வரணும்ன்னு ஆசைப்படறேன்மா.. அய்யா ஊரை எவ்வளவு நேசிச்சாருன்னு எனக்குத் தெரியும்.. ஹ்ம்ம்…” எந்த சலனமும் இல்லாமல் அவர் சொல்லிக் கொண்டே போக, கங்காவின் திகைப்பு அதிகமாகியது.

எதுவுமே பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவரை பார்த்த குணாவின் தாய், “நீங்க நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.. நல்லது நடக்கறது தான் வேணும்.. அதற்கான விலை எதுவா இருந்தாலும் பரவாயில்லை.. எங்க ஊர் நல்லா இருக்கணும்..” என்று சொன்னவரைப் பார்த்த கங்கா அசையாமல் அமர்ந்திருந்தார்.

“என்னங்க பதில் எதுவுமே சொல்லவே இல்லையே…” பேச்சற்று இருந்த கங்காவைப் பார்த்த பெரியவர் கேட்க,

“இல்லங்க.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. கண்டிப்பா கொடியை நல்லபடியா சந்தோஷமா வாழ வைக்க என்னோட முயற்சியும், பீஷ்மாவோட முயற்சியும் கண்டிப்பா இருக்கும். அவளை இப்படியே விட்டுட்டு போக மாட்டோம்ங்க.. இப்போதைக்கு என்னால இவ்வளவு தான் உறுதி சொல்ல முடியும்.. அதுக்கும் மேல கடவுள் விட்ட வழி..

பீஷ்மாவோட மனசுலயும் நிறைய வலி இருக்கு.. இந்த சூழ்நிலையில வெளிய சொல்ல முடியாதது.. அதை அவன் எப்படி எதிர்கொண்டு வெளிய வரப் போறான்னே எனக்கும் தெரியல.. கடவுள் கிட்ட அவன் சீக்கிரம் ஒரு நல்ல முடிவெடுக்கணும்ன்னு தான் நானும் வேண்டிக்கிட்டு வரேன்.. அது நடக்கட்டும்ங்க.. நீங்க பெரியவங்க நீங்களும் வேண்டிக்கோங்க…” என்று கூறிய கங்கா,

“படிக்காத பொண்ணா இருந்தா என்னங்க? நல்ல குணம் இருக்கு இல்ல.. மேல படிக்கிற படிப்பை எப்போ வேணா படிச்சிக்கலாம்… குணம் அப்படி இல்லைங்களே..” அனைத்திற்கும் பதில் கூறிய கங்கா, அமைதியான புன்னகையுடன் பெரியவரைப் பார்த்தார்.

“ரொம்ப தெளிவா இருக்கீங்கன்னு மட்டும் புரியுது.. ஆனா.. உங்க மனசுலயும் ஏதோ குழப்பம் இருக்குன்னும் புரியுது. அந்த ஆத்தா மகமாயி நல்லபடியா அதை தீர்த்து வைக்கட்டும்..” குணாவின் தாயும் வேண்டிக் கொண்டு, கங்காவைப் பார்த்து புன்னகைத்தார்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு, கங்காவை வீட்டில் இருந்து அழைக்க வந்த பெண்மணி, கங்காவிற்கு ஒரு சொம்பில் மோரைக் கொண்டு வந்து தர, கங்கா தயக்கமாகப் பார்க்க, “விருந்து நடக்குது.. நீங்க சாப்பிடலைனாலும் பரவால்ல.. தொண்டையை நனைச்சுக்கிட்டு போங்க.. அப்போ தான் என் மனசு குளிரும்…” கெஞ்சலாக கேட்ட முதியவரைப் பார்த்த கங்கா, மறுபேச்சின்றி அதை வாங்கிப் பருகிவிட்டு, விடைப்பெற்று கிளம்பினார்.

வெளியில் வந்த கங்காவின் மனதில் ஆயிரம் கேள்விகள் முளைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அனைத்திற்கும் பதில் பீஷ்மாவிடம் தான் என்பதை உணர்ந்தவர் போல, கடவுளிடம் பாரத்தை போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றார்.  

“அம்மா… நான் கொடியை போய் பார்த்துட்டு, அப்படியே எங்க வீட்டுக்காரரைப் பார்த்துட்டு வரேன்… நீங்க கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுங்க…” என்ற மாரி, கங்காவிடம் விடைப்பெற்று செல்ல, கங்கா அறைக்குச் சென்று ஓய்வெடுக்க படுத்துக் கொண்டார். 

மதிய வெய்யிலின் தாக்கம் தாளாமல், மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு கங்காவிற்கு அவஸ்தையைக் கொடுக்க, பின்புறம் இருந்த மரங்களின் நிழலைத் தேடி கங்கா சென்றார். காற்று நன்றாக வீசிக் கொண்டிருக்க அங்கிருந்த திண்ணையில் சென்று அமர்ந்தவருக்கு மதிய தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது.

‘அப்படியே திண்ணையில் உறங்கலாமா?’ என்று யோசித்தவருக்கு, பழக்கம் இல்லாத செயலினால் தயக்கம் ஏற்பட்டது.

“ஹ்ம்ம்.. உள்ள போய் படுத்தா நல்லா தூங்கலாம்… ஆனா.. கரண்ட் இல்ல.. என்ன செய்யலாம்..” என்று யோசித்தவர், உட்கார்ந்து கொண்டு, அங்கிருந்த கன்றுகளையும், மாடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“தூக்கம் வந்தா.. உள்ள போய் தூங்கலாம் இல்லைங்கம்மா.. இங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க?” மெல்ல அவர் அருகே நடந்து வந்த உருவத்தைப் பார்த்தவர், கண்களை நம்ப முடியாமல், அந்த உருவத்தை அடையாளம் காண கண்களை கசக்கிக்கொண்டு பார்க்க,

“என்னை உங்களுக்கு அடையாளம் தெரியுதுங்களாம்மா…” வருத்தம் தோய்ந்த புன்னகையுடன் கேட்டவளைப் பார்த்தவர், இமைக்க மறந்து அமர்ந்திருந்தார்.

“என்னை அடையாளம் தெரியலைங்களா? நான் தான் கொடி..” தன்னை தானே அவருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள, கங்கா கண் கொட்டாமல் பார்க்க,

“அம்மா…” கொடி மெல்ல முணுமுணுக்க,

“நீ மலர் தானே…” கங்கா நம்ப முடியாமல் கேட்க, கொடி இப்பொழுது திகைத்து போனாள்.

மனதில் எழுந்த சிறு ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டவள், “இல்லைங்கம்மா… நான் கொடி.. உங்களுக்கு நன்றி சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்..” மெல்ல கொடி இழுக்க, தன்னையே மனதினில் திட்டிக் கொண்ட கங்கா,

“ஹையோ.. சாரிம்மா.. சாரி… நான் ஏதோ நியாபகத்துல சொல்லிட்டேன்… சாரிம்மா…” தன்னுடைய தவறுக்காக கங்கா மிகவும் வருந்த,

“ஹையோ… என்னங்கம்மா.. என்கிட்டே போய் சாரி கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. நீங்க எனக்கு செய்த உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்ம்மா.. அதை சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்..” கொடி இழுக்க,

“நான் என்னம்மா செய்தேன்?” கங்கா கேட்க,

“நேத்து யாரோ மயங்கிக் கிடக்காங்கன்னு இல்லாம, எனக்கு ஆப்பிள் ஜூஸ் எல்லாம் போட்டு கொண்டு வந்து கொடுத்தீங்களே அதுக்குத் தான். மாரியக்கா இப்போ தான் வந்துட்டு போனாங்க. நீங்க தனியா இருக்கறதையும் சொன்னாங்க… அதுதான் வந்து உங்களைப் பார்த்து நன்றி சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்…” கொடி மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே வர, அதில் அவர் தன்னை தவறாக நினைத்து விடக் கூடாதே என்ற தவிப்பு மிதமிஞ்சி இருந்தது கங்காவிற்கு புரிந்தது.   

“இங்க வந்து என் பக்கத்துல உட்காரும்மா…” கங்கா அழைக்கவும், கொடி தயங்க, அவளது கையைப் பிடித்து தன் அருகே இழுத்து, அமர்த்திக் கொண்டார்.

தனது சேலை முந்தானையைத் திருகிக் கொண்டு கொடி அமர்ந்திருப்பதைப் பார்த்தவர், “நான் என்ன சிங்கம் மாதிரியா இருக்கேன்? இவ்வளவு டென்ஷனா உட்கார்ந்து இருக்க? நான் மனுஷி தான்மா..” கங்கா கேலி செய்ய, கொடி அவரை அதிசயமாகப் பார்த்தாள்.

“ஹ்ம்ம்.. நீ இவ்வளவு அமைதின்னு எனக்கு தெரியாம போச்சே…” கங்கா பெருமூச்சு விட, அவரது முகத்தைப் பார்த்த கொடிக்கு புன்னகை அரும்பியது.

“ஹப்பா… உன்னை சிரிக்க வைக்க நான் என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு…” அவளை கேலி செய்தவர்,

“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்மா.. உங்க அம்மா செய்திருந்தா தேங்க்ஸ் சொல்லுவியா…” கங்காவின் கேள்விக்கு அவரை கொடி திகைப்பாய் பார்க்க, மென்மையாக கங்கா அவரைப் பார்த்து புன்னகைத்தார்.

“எனக்கு பொழுது போகலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. நீ வந்தது ரொம்ப நல்லது கொடி.. மதியத்துல தூங்கி எனக்கு பழக்கம் இல்ல.. பீஷ்மாவும் இல்லாம கொஞ்சம் போர் அடிக்குதா.. அதான் கொஞ்சம் கண்ணா சுழட்டிடுச்சு…” கங்கா தன்னிலை விளக்கம் சொல்ல,

“நீங்க உள்ள வாங்கம்மா… ஓய்வா படுங்க.. நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்.. அப்படியே விசிறி விடறேன்.. தூக்கம் வந்தா தூங்குங்க…” கொடி இயல்பாகச் சொல்லவும், கங்கா மறுப்பாக தலையசைத்தார்.

“தூங்க வேண்டாம்ன்னு சொல்றேனே.. வேற என்ன செய்யலாம்?” என்று கங்கா யோசிக்க,

“உங்களுக்கு தாயம் விளையாடத் தெரியுமாம்மா… நான் மாரியக்காவ எடுத்துட்டு வரச் சொல்றேன்… நாம கொஞ்ச நேரம் விளையாடலாம்…” சிறுபிள்ளைப் போல கொடி கேட்க, கங்கா இசைவாய் தலையசைத்தார்.

அவருக்கும் தாயம் விளையாட ஆசையாய் இருக்க, “சீக்கிரம் எடுத்துட்டு வா… நான் இங்க உட்கார்ந்து இருக்கேன்… இங்க காத்து நல்லா இருக்கு…” என்ற கங்காவைப் பார்த்து தலையசைத்தவள்,

“இருங்கம்மா… இதோ ரெண்டு நிமிஷத்துல வரேன்..” என்ற கொடி, வேகமாக சென்று மாரியுடன் திரும்பி வந்தாள். அவர்களது தாய ஆட்டம்.. மாலை வரைத் தொடர்ந்துக் கொண்டிருக்க, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தத்தை கூட கவனிக்காமல் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, களைத்துப் போய் வந்த பீஷ்மாவின் ‘அம்மா..’ என்ற குரலில், அவர்கள் விளையாட்டு நின்றது.

 

15 COMMENTS

 1. nalla iruku ramya, malar epo ganga va meet pannuvanu eager a iruku. next update epo. then pavai ne venpaavi epdi open panradhu password kekudhu

 2. Hai ramya dalu
  Enna thideernu guna ammanu oru character entry kodukuthu allu konjam azutham than pola
  Problem solve aga enna vilai kudukalamnu solranga but antha vilai gunaku panishment thane
  Appuram pavam gangamma malara romba expect panranga kojam meetinga podungalen
  Dalu intha ud konjam dull than
  Some more viruvirupu

 3. Hi Ramya unga website ramya.in ipa .com Alagitu, athula pona marubadiyum log in kekudhu forgot password kudutha unga kiterndhu mail link varamaatudhu adhu ena prblm nu Konjam paarunga plz

  • தேங்க்ஸ் அஷ்வின்… இதுலேயே எல்லா அப்டேட்டும் இருக்கும்..

LEAVE A REPLY