SHARE

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம். தஞ்சை என்பது ஒரு பெருநகரமாக இருந்தாலும், பல சிறிய கிராமங்களை தன்னுள் உள்ளடக்கியது. ஒவ்வொரு கிராமங்களிலும் முக்கிய தொழிலாக விவசாயமே நடைப்பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல், பல சிறப்பு வாய்ந்த கோவில்களையும், பல புகழ் பெற்ற கல்லூரிகளும், இந்தியாவிலேயே… ஏன் உலகத்திலேயே தமிழுக்கு பல்கலைக் கழகம் அமைந்த சிறப்பு பெற்ற நகரம்.

காலைச் சூரியன் மிதமான சூட்டுடன் ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்க, கஞ்சிக் கலயத்தை தூக்கிக் கொண்டு, புத்தம் புதிய நாளை எதிர்நோக்கி, தங்களது வயலை மேற்ப்பார்வையிடவோ, அல்லது வேலைக்கோ சென்றுக் கொண்டிருந்தனர் மக்கள்.

“ஏலேய் சொக்கா.. அங்க நின்னு என்ன வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க? சட்டு புட்டுன்னு வந்து பூவ பறிக்க வேண்டியது தானே…” ஒரு குரல் எங்கிருந்தோ கேட்க, பேசுவது யார் என்று புரிந்து கொண்டவன் போல, குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தவன்,

“வரேன் மாரியக்கா.. நம்ம கொடிய இன்னும் காணோமே… அதான் இங்க நின்னு பார்த்துட்டு இருக்கேன்.” அந்த சொக்கன் சொல்லவும், மாரி அவன் அருகே விரைந்து வந்தார்.

“நேத்து நடந்ததை நினைச்சு உள்ள உட்கார்ந்து கண்ணக் கசக்கிக்கிட்டு இருக்காளோ என்னவோ? அவளுக்கு என்ன ஆறுதல் சொல்லி என்ன நடக்கப் போகுது?” பெருமூச்சுடன் சொல்லிவிட்டு திரும்ப, தூரத்தில் கொடி வருவது தெரிந்தது.

“அதோ கொடி வந்துட்டா…” மாரியின் நிம்மதிக் குரலில், சொக்கனும் நிம்மதி உணர்வுடன் மாரியுடன் நடக்க, கொடியோ அவர்களைப் பார்த்ததும் வேகமாக நடந்து வந்து அவர்களுடன் இணைந்துக் கொண்டாள்.

“மெல்ல வா… மெல்ல வா… உன்னைத் தான் காணும்னு சொக்கனும் நானும் பேசிட்டு இருந்தோம். என்ன? இன்னமும் நேத்து நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா?” மாரி கேட்க,

“அதை நினைக்க நினைக்க எனக்கு மனசு ஆறலைக்கா.. உடம்பெல்லாம் நடுங்குது.. அப்படியே செத்துடலாம் போல இருக்கு… எத்தனை அவமானம்?” என்று இன்னமும் முன்தினம் நடந்த சம்பவத்தில் இருந்து மீளாதவலாய் அவள் சொல்லிக் கொண்டே போக, மாரி அவளது கையை அழுத்தினார்.

“உங்க அப்பன என்னத்தை சொல்ல? பெத்த பொண்ணுன்னு கொஞ்சம் கூடவா இல்ல..” மாரியும் நெஞ்சம் விம்மக் கேட்க,

“எங்க அம்மா இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது.. நடக்க விட்டு இருப்பாங்களா? இந்த மாதிரி ஒரு நிலைமையில நான் நிக்க மாட்டேன்ல… பொத்தி பாதுகாத்த உறவுகள் இல்லாம நான் அனாதையா நிக்கறேன்..” அவளது உதடுகள் துடிக்க கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கவும், மனதும் வரிசையாக நடந்த அனைத்தையும் நியாபகத்தில் கொண்டு வர, அவள் விம்மலுடன் மாரியின் தோளில் சாய்ந்தாள். 

மாரிக்கும் அவளது நிலையை நினைத்து வருத்தம் தான்… என்ன செய்வது.. விதியின் கையில் பொம்மையாக விளையாடும் இந்த பிள்ளையை நினைத்து மனம் கனக்கச் செய்தது. ‘அன்று தான் மட்டும் தனியே விட்டு விட்டு வராமல் இருந்திருந்தால், இவளுக்கு இந்த நிலை வந்திருக்காதே…’ என்ற எண்ணம் எழுவதையும் தடுக்க வழியற்றவராய் மாரியும் நிற்க, இருவரையும் பார்த்த சொக்கன் தான் நிலைமையை கையில் எடுத்துக் கொண்டான்.

“வயலுக்கு எல்லாம் காலையிலேயே தண்ணி பாய்ச்சியாச்சு… இப்போ என்னத்துக்கு நீங்க தண்ணிய திறந்து விட்டுக் கிட்டு நிக்கறீங்க? இதுக்கும் மேல வெள்ளம் வந்தா பூவெல்லாம் உதிர்ந்து போயிடும்… சீக்கிரம் போய் வேலையைப் பாருங்க. நாளைக்கு வியாபாரத்துக்கு போகணும் இல்ல…” சொக்கன் சற்று உயர்த்திய குரலில் இருவரையும் விரட்ட, கண்களை துடைத்துக் கொண்ட இருவரும் வேலையை கவனிக்கச் சென்றனர்.

என்னதான் கைகள் வேலை செய்துக் கொண்டிருந்தாலும், இருவருமே தங்களின் நினைவுகளில் மூழ்கி இருந்தனர். அன்று தஞ்சையில் பூவை விற்ற பிறகு, மலரைத் தனியே விட்டு ஊருக்கு வந்து சேர்ந்தும், மாரியின் மனதென்னவோ ஏதோ ஆபத்தை உணர்த்த, புரியாத ஒரு கலக்கத்தை உணர்த்திக் கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் மலரும் வெகுநேரம் வரை வந்து சேராமல், மறுநாள் காலை அவள் வந்து சேர்ந்த கோலம் மாரியின் மனத்திரையில் காட்சியாக விரிய, “ஹையோ…” என்று விம்மி அழத் தொடங்கினார்.

“என்னாச்சு அக்கா?” அருகில் நின்ற கொடி அவரைத் தாங்கிப் பிடிக்க,

“என்னால தானே உனக்கு இந்த நிலைமை… நான் அன்னிக்கு தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது… எல்லாம் என்னால தான்…” என்று அழத் தொடங்க, கொடிக்கும் அழுகை பீறிட்டது.  

“இப்போ அய்யா வரதுக்குள்ள ரெண்டு பேரும் வேலைய பார்க்கப் போறீங்களா இல்லையா?” தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட சொக்கன் விரட்ட, மாரி கண்களைத் துடைத்துக் கொள்ள,   

“அக்கா.. ஒரு ரெண்டு நிமிஷம் வந்துடறேன்… ஒரு மாதிரி இருக்கு..” கண்களைத் துடைத்துக் கொண்ட கொடி சொல்லிவிட்டு நகர,

“இந்தா மலரு…” என்று அழைத்த மாரி, அவள் திரும்பிப் பார்த்து,

“நான் மலர் இல்ல.. கொடி… என்னைக்கோ மலர் கசங்கி போயிட்டா..” நொந்த குரலும், மீண்டும் உதடு துடிக்க வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றவளின் பின்னால்,      

நாக்கை கடித்துக் கொண்டு, “பார்த்து பத்திரமா போயிட்டு வா… எங்கயாவது விழுந்து கிழுந்து வச்சிடாதே…” சன்னமான குரலில் சொல்லிட்டு, கண்ணீருடன் மாரியும் கீழே குனிந்துக்கொள்ள, கொடியும் விரக்திப் புன்னகையுடன் திரும்பி நடந்தாள்.

“இன்னும் இந்தப் புள்ளைய எப்படி சமாதானப்படுத்தப் போறேனோ?” பெருமூச்சுடன் மாரி, மனதினில் நொந்துக் கொண்டு, தனது வேலையைத் தொடர்ந்தார்.

பெரும்பள்ளம்… தஞ்சை கிராமங்களில் ஒன்று… அந்த அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்த இடத்தின் நெளிந்து வளைந்து செல்லும் சாலையில், ஒரு பேருந்து ஊர்ந்து வந்துக் கொண்டிருந்தது.

“ஹே பஸ் வந்தாச்சு… சீக்கிரம் ஏறுங்க…” என்றபடி சிலர் நின்றும் நிற்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்த பேருந்திற்குள் முண்டி அடித்துக் கொண்டு ஏறி இடம் பிடித்து, அறிந்தவர் தெரிந்தவருக்கெல்லாம் துண்டை போட்டு சீட்டு பிடிக்க, அந்த கூட்டத்தில் தத்தளித்த படி, தான் கொண்டு வந்திருந்த உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பீஷ்மாவும் பேருந்தில் இருந்து இறங்கினான்.

ஒருவாறு தனது பெட்டியையும், கையில் கொண்டு வந்திருந்த லேப்டாப் பையையும், காமெராவையும் எடுத்துக் கொண்டு இறங்கி நின்று ஒரு பெருமூச்சுடன், சுற்றி முற்றிப் பார்த்தான். அழகிய வயல்வெளிகள் நிரம்பிய இடம் தான்… தூரத்தில் பாத்தி போல மலர்களும் நடப்பட்டு பூத்துக் குலுங்க, கண்களுக்கு பசுமையாய் இருந்தது.

“நல்லவேளை… கருத்தம்மா படத்துல வரா மாதிரி ஒரு பொட்டல் காடா இல்ல… நம்ம ரசனைக்கு ஏத்தது போலத் தான் இருக்கு… தினமும் படம் பிடிக்க நிறைய இயற்கை கட்சிகள் கிடைக்கும்” என்று மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டவன், தனது கேமராவை கையில் எடுத்தான்.

ஒரு சிட்டுக் குருவி, அங்கிருந்த நெற்கதிரின் மீது அமர்வதைக் கண்டதும், பைகளை மறந்து, தனது கேமராவுடன் மெல்ல அடியெடுத்து வைத்து, தனது கேமராவின் லென்ஸ் வழியாக அந்த சிட்டுக் குருவியை படம் பிடிப்பதற்காகவே காத்திருந்தது போல அவனுக்கு சிறிது தூரத்தில் ஒரு அசைவு. காதில் விழுந்த கண்ணாடி வளையலின் சத்தம்.. தலையில் சூடி இருந்த மல்லிகையின் நறுமணம், அந்த மண் வாசனையையும் மீறி அவனது நாசியை எட்ட, அந்த வாசனை பீஷ்மாவைக் கவர்ந்தது.

“யார் வராங்க?” மனதினில் எழுந்த ஆர்வத்தில், கண்களின் அருகில் இருந்த கேமராவை இறக்கி, தன் அருகே திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் தலையைக் குனிந்த படி வருவதைக் கண்டு கொண்டவன், அவளை ஊன்றி கவனித்தான்.

“ஹே இவ.. இவ…” சந்தோஷம் மனதினில் நிறைக்க, மெதுவாக குதிக்கவும் செய்தான்.

அதற்குள் மலர் அவன் அருகில் வந்திருக்க, “கொடி..” சந்தோஷக் கூக்குரலை அவன் எழுப்ப, மலர் நிமிர்ந்துப் பார்த்தாள். 

அதே சிரிக்கும் கண்கள்… அழகிய சிவந்க ஆரஞ்சு சுளைகள் போன்ற உதடுகள்.. நீண்ட பின்னலில் சூடி இருந்த மல்லிகைச் சரம்… அன்று போல இன்றும் புதிதாக பூத்த மலர் போல இருந்தவளைப் பார்த்தவனுக்கு உள்ளம் அவளிடம் சரியத் தொடங்கியது.

இத்தனை நாட்களாக வெறும் நிழலோவியமாக பார்த்து ரசித்து, அன்று நடந்த நிகழ்வுகளை ரசித்துக் கொண்டிருந்தவன், இன்று மீண்டும் அவளைப் பார்த்ததில் துள்ளிக் குதித்தான். மீண்டும் அவளைக் காண்போமா என்று உள்ளிருந்த சிறு ஏக்கம் விடுபட்டு, அவளைக் கண்ட மகிழ்ச்சியில் மனம் நிரம்பியது.    

அவள் நெருங்கி வர இருந்த சிறு இடைவெளியை ஓட்டமாகவே கடந்து நெருங்கியவன், “ஹே… கொடி.. நீ எங்க இங்க?” கண்களில் ஆச்சரியமும், உல்லாசமும் படர பீஷ்மா கேட்க, மலர் பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவளது கண்களிலும் ஆச்சரியமும், அதே அளவிலான மகிழ்ச்சியும், ஆனால் அதெல்லாம் சட்டென்று மாறிய ஒரு சோகமுமே பிரதிபலிக்க,

“நீங்க… நீங்க?” மலர் கேட்க,

“நான் தான் டாக்டர்… நாம தஞ்சாவூர் கோவில்ல பார்த்தோமே..” அவளுக்கு தன்னை நினைவு இல்லை என்ற ஏமாற்றம் தோன்றினாலும், தன்னை நினைவுப் படுத்துவதில் அவன் முனைய, மலர் மெல்ல புன்னகைத்தாள்.

“உங்களை எனக்கு நினைவிருக்கு டாக்டர்… ஆனா.. நீங்க இங்க எங்கன்னு தான் கேட்க வந்தேன்…” சொல்லிவிட்டு சிரித்தவளை பீஷ்மா கண்ணிமைக்காமல் பார்த்தான்.

“வாவ்…” அவனது மனம் அவளது சிரிப்பை ரசிக்க, வெளியிலோ..

“உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்னு சொன்னா?” பீஷ்மா சொன்னதும் பட்டென்று சிரிப்பு நின்றுவிட,

“சும்மா விளையாடாதீங்க சார்.. நான் இங்கதான் இருக்கேன்னு உங்களுக்கு இப்போ வரை தெரியாது தானே…” குறும்பாக என்றாலும் அவளது குரலில் ஒரு வித இறுக்கம் இருக்கத் தான் செய்தது.

“சும்மா சொன்னேன் கொடி… நான் இங்க இருக்கற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டரா வந்திருக்கேன்… இங்க உன்னைப் பார்த்ததும் எனக்கு… எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு…” கண்கள் மின்ன சொன்னவனைப் பார்த்தவள், சிலையென நின்றுக் கொண்டிருந்தாள். அவளது தவத்தை கலைத்தது போல, தூரத்தில் வந்த பஸ் கொடுத்த ஹார்ன் சத்தம் அவளைக் கலைக்க,

“சரிங்க… நீங்க எங்க ஊருக்கு வந்ததுல ரொம்ப சந்தோசம்… நான் உங்களை அப்பறம் வந்து பார்க்கறேன்… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… வரேன்…” என்றவள், மறுநிமிடம் வேகமாக நகர்ந்துச் செல்ல, தன் பின்னால் வந்த பஸ்சை சபித்துக்  கொண்டே திரும்பிப் பார்த்தவன், மீண்டும் மலரைப் பார்க்க, அவளோ அங்கிருந்த தென்னை மரங்களின் இடையில் சென்றுக் கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்… கிராமம் இல்ல… என் கூட பேசறதைப் பார்த்தா யாராவது ஏதாவது சொல்லப் போறாங்கன்னு ஓடிட்டா போல இருக்கு… இனிமே எங்கப் போகப் போறா.. பேசிக்கலாம்..” மனதினில் நினைத்து மகிழ்ந்துக் கொண்டவன், அப்பொழுது தான் பஸ்சில் இருந்து இறங்கி வந்த ஒருவரைப் பார்த்தான்.

அவரோ வேகமாக தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்தவன், “இவர் தான் எனக்கு அசிஸ்டெண்ட்டோ.. கைல மருந்துப் பெட்டியும், மாலையும் வச்சிருக்காரு…” தனக்குள்ளே பேசிக் கொண்டே அவனை நோக்கி திரும்பி நின்றான்.

“சார்… சார்… இந்தப் பக்கமா டாக்டர் சார் யாரையாவது பார்த்தீங்களா?” பதற்றமாக அவர் கேட்க,

“டாக்டரா? அவர் எப்படி இருப்பாரு?” என்று பீஷ்மா அவனிடம் கேட்கவும், அவனை ஒரு மாதிரிப் பார்த்த அந்த இளைஞன், நக்கலாக உதட்டை சுழித்து,

“இவ்வளவு பெரிய ஆளா இருந்துக்கிட்டு உங்களுக்கு இது கூட தெரியலையே சார்…” என்று கேலியாகக் கூற, பீஷ்மாவின் குறும்பு அதிகரித்தது.

ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில், ‘என்னைப் பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலையா?’ என்ற கேள்வி எழவே செய்தாலும், சிறிது நேரத்தில் விடை கண்டுப் பிடித்து விடும் ஆர்வத்துடன், அவனைப் பார்த்தான்.

“அதான் தெரியலைன்னு சொல்றேன் இல்ல.. நீங்களே சொல்லுங்க…” அவரிடமே பீஷ்மா கேட்க, அவ்வளவு எளிதில் விடை சொல்லிவிடுவேனா என்று உறுதி எடுத்துக் கொண்டவன் போல்,

“நீங்க சினிமாவுல எல்லாம் டாக்டர எப்படி காட்டுவீங்க? அதுவும் இந்த மாதிரி ஒரு கிராமத்துல உள்ள டாக்டர்…” என்று பதில் கேள்வி கேட்க, அப்பொழுது தான் அவன் தன்னை ஏன் ஒரு மருத்துவனாக கருதவில்லை என்பதை புரிந்துக் கொண்டு, தனக்குள் சிரித்துக் கொண்டவன்,

“ஹ்ம்ம்… எப்படி? கழுத்துல  ஸ்டெதஸ்கோப்.. அப்பறம் பெரிய கண்ணாடி போட்டுக்கிட்டு ஒரு வயசானவர்…” பீஷ்மா சொல்லிக்கொண்டே வரும் பொழுதே,

“அதே தான் சார்… அந்த மாதிரி இந்தப் பக்கம் யாரையாவது பார்த்தீங்களா?” அவன் பதட்டத்துடன் கேட்க, பீஷ்மா உதட்டைப் பிதுக்கினான்.

“என்ன அவரு ஹாஸ்பிடல்ல இருந்து காணாம போயிட்டாரா? இப்படி பயத்தோட தேடறீங்க? இல்ல… மருந்து பெட்டியை வச்சிட்டு போயிட்டாரா?” அவன் மேலும் வம்பு வளர்க்க,

“நீங்க வேற சார்… அவர் இந்த ஒன்பது மணி பஸ்சுல தான் வரேன்னு ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி இருந்தார். நானும் பஸ் உள்ளே அவரைப் பிடிச்சு மாலை போடலாம்ன்னு, பஸ் உள்ள எல்லாம் ஏறிட்டேன்…

அங்க டாக்டரைக் காணோம்… ஒரு வேளை வழி தெரியாம இறங்கிட்டார் போலன்னு திரும்ப இறங்க வந்தா… அந்த கூட்டத்துல இறங்கறதுகுள்ள பஸ்சை எடுத்துட்டான், அந்த கண்டக்டர்.. அதான்… பஸ்சை திருப்பி இங்க கொண்டு வந்து விடச் சொன்னேன்…” என்று அவன் பெருமையாகவும், சலிப்பாகவும் சொல்ல, பீஷ்மா சிரிக்கத் தொடங்கினான்.

“உங்க ஒருத்தருக்காக பஸ்சையே திருப்பிட்டு வந்தாரா?” அதிசயமாகக் கேட்க,

“பின்ன.. அப்பறம் ஜுரம் தலைவலின்னு வந்தா மருந்து தர மாட்டேன் இல்ல…” அவன் பெருமை பீற்ற பீஷ்மா ஓரளவு அவன் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டான்.

“எனக்கு ஊருக்குள்ள போக வழி சொல்லுங்க… அதுவும் இங்க ஆரம்ப சுகாதார நிலையம் இருக்காமே.. அதுக்கு பக்கத்துல போகணும்…” என்று பீஷ்மா வழி கேட்கவும்,

“ஓ… நீங்க நாட்டாமை அய்யா வீட்டுக்கு போகப் போறீங்களா? சரி தானுங்க… இங்க படம் பிடிக்கிறதா இருந்தா அவர் கிட்டத் தான் கேட்கணும். இங்க ஒரு குழந்தை பிறந்தது முதல்… இறக்கற வரை அவர் அனுமதி இல்லாம எதுவுமே நடக்காதுங்க…” என்று ஒரு மாதிரிக் குரலில் புலம்பிக் கொண்டே, கீழே கிடந்த பீஷ்மாவின் ஒரு பையைத் தூக்க, பீஷ்மா அவனைத் தடுத்தான்.

“நானும் அங்க தானுங்க போறேன். நீங்களே எப்படி ரெண்டு பெட்டியைத் தூக்கிட்டு போவீங்க? நான் எடுத்துக்கறேன்..” என்று அவன் சொல்லிவிட்டு, பீஷ்மாவின் பெட்டி ஒன்றைத் தூக்க, மீதமிருந்த பைகளை தூக்கிக்கொண்டு பீஷ்மா அவனைப் பின்தொடர்ந்தான்.

இரண்டடி எடுத்து வைத்த பிறகு, பீஷ்மா மலர் சென்ற திசையைத் திரும்பிப் பார்க்க, சிறிது தூரத்தில், ஒரு மரத்தின் பின்பு ஒளிந்துக் கொண்டபடி மலர் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, ஒரு தலையசைப்புடன் அவளிடம் இருந்து விடைப்பெற்றவன்,

“உங்க பேர் என்னன்னு சொல்லவே இல்லைங்களே…” என்று அந்த உதவியாளரிடம் பேச்சுக் கொடுத்தான். 

“நீங்க கேட்கவே இல்லைங்களே..” என்றவன், “என் பேரு துரைங்க.. இந்த ஊர்க்காரன் தான்..” என்று தொடங்கியவன், அந்த ஊரைப் பற்றி பேசிக் கொண்டே வர, ஆரம்ப சுகாதார நிலையம் வந்து சேர்ந்தது.   

அதற்கு அருகிலேயே இருந்த ஒரு வீட்டின் முன்பு பீஷ்மாவை கொண்டு நிறுத்தி, “அய்யா வந்த உடனே வணக்கம் சொல்லுங்க சார்… இல்ல அய்யாவுக்கு கோபம் வந்துடும்..” துரை எச்சரிக்கை செய்து, வீட்டினுள் அவசரமாக உள்ள ஓட, பீஷ்மா உதட்டைப் பிதுக்கி அந்த அய்யா வருவதற்காக காத்திருந்தான்.

சினிமாவில் காட்டுவது போல, வயது முதிர்ந்த ஒருவரை நாட்டாமையாக எதிர்ப்பார்த்திருந்த பீஷ்மா, ஒரு இளைஞனே வந்து நிற்கவும் கண்களை விரித்து ஆச்சரியம் காட்டினான்.

“இவங்களா உங்க நாட்டாமை… இல்ல இவரு நாட்டமையோட பையனா?” அருகில் இருந்த துரையிடம் பீஷ்மா ரகசியமாகக் கேட்க,

“முறுக்கு மீசையைப் பார்த்தா தெரியலைங்களா.. இவரு தான் எங்க நாட்டாமை…” துரை சொல்லவும், மீண்டும் பீஷ்மாவின் பார்வை அந்த நாட்டாமையை நோக்கித் திரும்பியது.

கழுத்து நிறைந்த தங்கச் சங்கிலிகலும், கையில் பெரிய தங்கக்காப்பும், காதில் வைர கடுக்கணுமாக இருந்தவனைப் பார்த்த பீஷ்மாவுக்கு சிரிப்பு தான் வந்தது.

அதனை அடக்கிக் கொண்டு, அவருக்கு ‘வணக்கம்’ சொல்லியவனைப் பார்த்த அந்த நாட்டாமை..

“பட்டணத்துக்காரங்க இல்ல துர.. அதான் சட்டுன்னு மரியாதை தெரிய மாட்டேங்குது…” பீஷ்மாவிற்கு கொட்டு வைக்க நினைத்து முதலில் பேசத் தொடங்கி,

“சரி சொல்லுங்க… எத்தனை நாளைக்கு படம் பிடிக்கப் போறீங்க? எத்தனை பேர் வருவீங்க? வெளியூர்ல தங்க போறீங்களா? இல்ல உள்ளூர்ல இடம் வேணுமா?” அவர் கேட்டுக் கொண்டே போக, பீஷ்மா அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான்.

பேசி முடித்த அந்த நாட்டாமை கேள்வியாக எதிரில் நிற்பவனைப் பார்க்க, “நான் இந்த ஹாஸ்பிடலுக்கு புதுசா வந்திருக்கற டாக்டர்…” பீஷ்மா சொல்லி நிறுத்தவும், மற்ற இருவருமே அதிர்ந்து விழித்தனர்.

அகண்ட நெற்றியும், நெற்றியில் வழிந்து இருந்த கேசமும், நீண்ட நாசியும், கண்கள் நிறைந்த குறும்புச் சிரிப்பும், பீஷ்மாவை ஒரு புகைப்படத் துறையை சேர்ந்தவன் என்று அவர்கள் கருதியது தவறே அல்ல என்னும் அளவிற்கு, சர்வ லட்சணமும் பொருந்தி, அழகும் கம்பீரமும், உயரமுமாக இருந்தவனது கழுத்தில் தொங்கியது கேமரா…..

பீஷ்மாவை அளவிட்டுக் கொண்டிருந்த நாட்டாமையை பீஷ்மாவும் பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த துரையோ, வரும் வழியில், பீஷாவுடன் பேசியவற்றை சிறிது நடுக்கத்துடன் நினைவு கூர்ந்துக் கொண்டிருந்தான்.

“நீங்க டாக்டரா? பொய் சொல்லாதீங்க சார்… சும்மா படத்துல டாக்டர் வேஷம் கட்டப் போறவங்க தானே? இந்த ஆஸ்பத்திரியில ஷூட்டிங் எடுக்கணுமா? அதுக்கு என்னோட அனுமதி வேணுமா?” மீண்டும் பீஷ்மாவிடம் கேள்விகள் வந்து விழ,

“சரிங்க… உங்க பேர் என்ன? எனக்கு உங்களை அய்யான்னு கூப்பிடறது அவ்வளவு கம்ஃபர்டபிளா இருக்காது. நீங்க என் வயசு தானே இருப்பீங்க? பேர் சொல்லியே கூப்பிடலாம்ன்னு நினைக்கிறேன்… இல்ல நீங்க என்னை விட வயசுல பெரியவங்கன்னா… நான் உங்களை அய்யான்னே கூப்பிடறேன்…” பீஷ்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த நாட்டமையின் கவனம் சிதறி, வேறெங்கோ நிலைத்திருப்பத்தை பீஷ்மா உணர்ந்தான்.

அவனது பார்வை சென்ற திசையில் திரும்பிப் பார்த்த பீஷ்மாவின் கண்களில் மலர் சென்றுக் கொண்டிருப்பது விழுந்தது.

“ஆமா… இவன் ஏன் கொடியைப் பார்க்கறான்? இவனோட பார்வையே சரி இல்லையே…” என்று பீஷ்மா நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

“ஏய் கொடி… இந்தப் பக்கம் எங்க வந்த? செத்த இரு…” என்று நாட்டாமை அவளிடம் விரைய, பீஷ்மாவிற்கு உள்ளுக்குள் எரியத் துவங்கியது.

“இப்போ என்னத்துக்கு அவ கிட்ட போறான்?” பீஷ்மா உள்ளுக்குள் பொருமிக் கொண்டே கொடியைப் பார்க்க, கொடியோ அவன் அருகில் வந்தவுடன் பயத்துடன் நின்றிருந்தாள்.          

அவளது கண்களிலோ அளவுக்கு அதிகமான பயம்… அந்த பயம் தந்த நடுக்கம் அவளது உடலின் மெல்லிய நடுக்கத்தில் தெரிய, அந்த நாட்டாமை அவளை எந்த அளவிற்கு பயப்படுத்தி இருப்பான் என்று நினைத்த பீஷ்மாவின் கைகள் இறுகியது.

“நான் அப்பா வீட்டுக்கு வந்துட்டாரான்னு பார்க்க வீட்டுக்கு போயிட்ட வந்தேன்…” தந்தியடித்த வார்த்தைகளுக்கு இடையே அவள் சொல்லி முடிக்க,

“உங்க அப்பன் தான் ராவு முழுக்க குடிச்சிட்டு விழுந்து கிடந்தானே… இங்க தான் தோட்டத்துல எங்கயாவது இருப்பான்.. இப்போ அவனை என்னத்துக்கு தேடற? என்னைத் தேடினாலும் அர்த்தமுண்டு…” சொல்லிக் கொண்டே, அவளது கன்னத்தில் கை வைக்க நாட்டாமை முயல, கொடி அவனிடம் இருந்து விலகி ஓரடி பின்னால் நகர்ந்தாள்.  

“அய்யா…” பீஷ்மாவின் உயர்ந்த குரல், நாட்டாமையைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

“ஐயோ… டாக்டர் சார்… அய்யா பேசிட்டு இருக்கும் போது குறுக்க பேசினா அவருக்கு பிடிக்காது” துரை மெல்ல பீஷ்மாவிடம் சொல்ல, அதைக் கண்டுக் கொள்ளாதவன்,

“அய்யா… என்னை இங்க நிக்க வச்சிட்டு அங்க நீங்க பேச போயிட்டீங்க? நான் இருக்கவா கிளம்பவா?” வேண்டுமென்றே கெத்தாக பீஷ்மா கேட்க, நாட்டாமையோ, அவன் இடையிட்ட கடுப்பில்,

“உன் கூட பேச எனக்கு என்ன இருக்கு? ஊருக்குள்ள மருத்துவம் தானே பார்க்க வந்த… இப்படி சோக்கா சுத்தற வேலை எல்லாம் வேண்டாம்… எங்க ஊரு பொம்பளைங்க எல்லாம் பத்திரம்.. எவளுக்காவது ஏதாவது நடந்துச்சு.. உன்னை இந்த ஊர்ல இருந்து சும்மா விட மாட்டேன்…” நாட்டாமை எச்சரிக்க, அவனது எச்சரிக்கையைக் கண்டுக் கொள்ளாத பீஷ்மாவின் பார்வை கொடியை நோக்கித் திரும்ப, அவள் கசப்பான பார்வையை அந்த நாட்டாமையை நோக்கி வீசிக் கொண்டிருந்தாள்.

“இவ ஏதோ ஆபத்துல சிக்கி இருக்கா போல இருக்கு.. அடுத்த தடவ பார்க்கும் போது அவகிட்ட கேட்கணும்” ஒரு முடிவை எடுத்து பின், பீஷ்மா, ‘நான் இருக்கிறேன்’ என்பதைப் போல கொடியைப் பார்க்க, அவனது பார்வை கொடியின் மீது இருப்பதை உணர்ந்த நாட்டாமை, வேகமாக வீட்டின் உள்ளே சென்று ஒரு சாவியை எடுத்துக் கொண்டு வந்தான்.

“இந்தா… பிடி… அதோ அந்த வீடு தான் நீ இருக்க வேண்டிய வீடு… போ.. இங்க நின்னு என்ன வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க? உன்னைப் பார்த்தா மருத்துவம் பார்க்க வந்தா போல இல்ல.. சும்மா காச கொடுத்துட்டு டாக்டர்ன்னு சொல்லிக்கிட்டு வந்துட வேண்டியது..” முதலில் இருந்த மரியாதை குறையவும், பீஷ்மா கொடியைத் திரும்பிப் பார்த்தான்.

ஆனால் கொடியோ, அவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் நின்றது ஏமாற்றத்தைக் கொடுக்க, சாவியைப் பெற்றுக் கொண்ட பீஷ்மா, நாட்டாமை காட்டிய வீட்டை நோக்கி வேகமாக நடந்தான்.

10 COMMENTS

  1. hai ramya, enna aachu malarukku?ennappa suspense vachitingalae?malrin arugil irukka povathu bhismathane? nice ud.

  2. Rams
    Update nice,.
    Antha Naattaamai thaan villain aa?. Paavam Kodi avanai paarththu payanthupoyirukku, Beeshma aval oorukkae vanthuttaan, inimae thaan irukku kacheri,… Aanaalum suspense , thrilling aa irukku…

    Naattaamai veettil velai paarppavaroda ponnu thaan Kodiyaa?. Aval melae avanukku oru kann pola,,, hmmmm paarkkalaam.

  3. Hi Ramya, kadhai super aa pogudhu. enna niraya suspence irukku. malar kku enna achi nnu theriyala. nattamai ya parthu enn payappadanum puriyala. adutha episode update panna romba idaiveli eduthukkadha pa.udanr update pannu pa.

  4. aiyo ramya en ipadi suspense vaikiringa malaruku enna achu avaloda appavala ethachum abadha r naatamaiyalaiya aga motham nattamai villan ah? sikiram suspense ah clear pannunga

LEAVE A REPLY