SHARE

மலரிடம் கோபித்துக் கொண்டு பாதி பேச்சிலேயே வேகமாக வந்த பீஷ்மாவின் கண்கள் சிவந்திருந்தது. இருள் கவிழ்ந்தும் வீட்டிற்கு இன்னும் பீஷ்மா வந்து சேராமல் போகவும் துரைக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. குணாவின் ஆட்கள் அவனை ஏதாவது செய்திருப்பார்களோ என்ற பயமே அவனை உள்ளே செல்ல விடாமல் கட்டிப் போட, வெளியேயே நின்றுக் கொண்டு, பீஷ்மாவின் வரவிற்காக காத்திருந்தான்.          

தூரத்தில் பீஷ்மா வேகமாக வருவதைப் பார்த்த துரை அவனை நெருங்க, அவனது பதட்டத்தை பார்த்த பீஷ்மா எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தான். அவனது முகம் கடுப்பாக இருந்ததில் இருந்தே அவன் கோபமாக இருக்கிறான் என்பதை உணர்ந்த துரை அமைதியாக அவனுடன் நடந்தாலும், அவனது கண்கள் பீஷ்மாவின் மீது ஏதாவது காயம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தது.

அப்படி அவன் பயப்படும்படி எதுவும் இல்லை என்பதை உணர்ந்த பிறகு நிம்மதியாக உணர்ந்த துரை, பீஷ்மாவின் கோபத்திற்கான காரணத்தை கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனைக்குச் சென்றான்.

வீட்டை நெருங்கவும், ஓட்டப் பந்தயத்தில் இருந்து திரும்பியவனைப் போல களைப்பாக உணர்ந்த பீஷ்மா வாயிலில் இருந்த திண்ணையில் அமர, துரை அவன் அருகே வந்து நின்றான்.

“நான் என்ன குழந்தையா என் கூடவே வரதுக்கு… இல்ல வழி தெரியாம எங்கயாவது போயிடுவேனா?” பீஷ்மா துரை மீது எரிந்து விழவும்,

“இல்ல சார்… உங்களுக்கு எதுவோ ஆபத்துன்னு பயந்து தான் வந்தேன்.. அப்படி ஒண்ணும் இல்லையே சார்?” படபடப்பாகக் கேட்டவன், சிறிது தயக்கத்துடன்,

“ரொம்ப கோபமா இருக்கறா போல இருக்கு…. அந்த குணா உங்களை ஏதாவது வம்புக்கு இழுத்தானா?” மெல்ல கேட்க, பீஷ்மா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

அவனது முகக் கசங்கலும், களைத்துத் தெரிந்த உருவமும் துரைக்கு மேலும் பதட்டத்தைக் கொடுக்க, அதை விட பீஷ்மா கோபமாக இருப்பது புதிதாக இருக்கவும், துரை என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.

“நான் நாளைக்கு காலையில ஊருக்கு போறேன். இனிமே இங்க வேற யாராவது டாக்டர் வருவாங்க துரை.. மாரியக்காகிட்டயும் சொல்லிடுங்க. சாப்பாட்டுக்கு எவ்வளவுன்னு கணக்கு சொல்லச் சொல்லுங்க. நான் எல்லாம் கொடுத்துட்டு போயிடறேன்..” சொன்னவன், திரும்பியும் பார்க்காமல் வேகமாக வீட்டிற்குள் செல்ல, துரை அதிர்ந்து நின்றான்.

“என்னது? அடுத்த வாரம் திருவிழாவுக்கு எல்லாம் தயாரா இருக்கச் சொல்லிட்டு இப்போ இப்படி பேசறாருன்னா… என்ன தான் நடந்துச்சு?” துரையின் மனம் ஆயிரம் கேள்விகளை எழுப்ப, வேகமாக உள்ளே சென்றான்.

“சார்.. என்ன சொல்றீங்க? அடுத்த வாரம் திருவிழா இருக்கு. எல்லா ஏற்பாட்டையும் செய்துட்டு இப்போ இப்படி சொல்றீங்களே…” பீஷ்மா பெட்டியில் தனது துணியை எடுத்து வைக்கத் துவங்கவும் துரை கேட்க,

“நான் தான் எல்லா ஏற்பாடும் செய்துட்டேனே… நீங்களே எப்பவும் போல சமாளிங்க. இல்லையா வேற டாக்டர் கேட்டு போராட்டம் பண்ணுங்க. விளையாடறதே எல்லாருக்கும் வேலையாப் போச்சு…” கோபமாக சொல்லிக் கொண்டே தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தியவனைக் கண்ட துரை, குணா தான் எதுவோ செய்திருக்கிறான் என்று யூகித்துக் கொண்டு,

“நான் வேணா அந்த ஆளைக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடவா சார். நீங்க எல்லாருமே நிம்மதியா இருப்பீங்க? இல்ல அவனோட சாப்பாட்டுல விஷத்தை வச்சு கொன்னுடலாம்… இல்ல விஷ ஊசி…” துரை சொல்லிக் கொண்டே போக, கோபமாக அவன் பக்கம் திரும்பிய பீஷ்மா,

“நாம ஒரு உயிரை காக்கற பணியைச் செய்யறவங்க. அப்படி இருக்கும் போது, அவன் உயிரை எடுக்கறது எவ்வளவு தப்பு? அவன் போயிட்டா எல்லாமே சரியா போயிடுமா? நாளைக்கு வேற ஒருத்தன் இதையே செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்? மொதல்ல எல்லாரும் தைரியமா அவனை எதிர்க்கற வழியைப் பாருங்க.. என்னை ஆளை விடுங்க. நான் ஒண்ணும் உங்க ஊரை காக்க வந்த குலசாமி இல்ல…” பொரிந்து தள்ளிவிட்டு, மன உளைச்சல் தாளாமல், அப்படியே பெட்டியை கீழே எடுத்து போட்டு விட்டு, கட்டிலில் சரிந்தவனின் கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது.

“நான் என்ன நீ விளையாடற விளையாட்டு பொம்மையா? என்னோட உணர்வுகள் தான் உனக்கு விளையாட கிடைச்சதா? உன்னைத் தான் விரும்பறேன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால கொடி போல நடிக்க முடிஞ்சது?” மனம் மலரிடம் கேட்டுக் கொண்டிருக்க, இரவு உணவை அவனுக்கு எடுத்துக் கொண்டு வந்த மாரியைப் பார்த்ததும் அவன் அருகே ஓடிய துரை, பீஷ்மா சொன்னவற்றை கூறவும், மாரியும் அதிர்ந்து போனார்.

“என்ன துரை சொல்ற? அவரு ஏன் ஊருக்கு போறேன்னு சொன்னாரு? அப்போ நம்ம மலர்…” பதட்டத்துடன் பேசிக் கொண்டே போனவர், பீஷ்மா அவனது அறைக் கதவின் அருகே நின்று அவரையே பார்த்துக் கொண்டிருக்கவும், வாயை இறுக மூடிக் கொண்டு தலை குனிய, மெல்ல அடியெடுத்து, மாரியின் அருகே சென்றான்.

பீஷ்மா நின்ற கோலம் மாரிக்கு பயத்தைக் கொடுக்க, அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. “துரை… போய் வாசல் கதவை சாத்திட்டு வாங்க…” பீஷ்மா சொல்ல, துரை நகர்வதற்குள்,

“நான் உள்ள வரக் கூடாதுன்னு தான் நீங்க கதவை அடைக்கறீங்கன்னா.. அதுக்கு அவசியம் இல்ல… உங்க பின்னாலேயே நான் உங்க வீட்டுக்குள்ள வந்துட்டேன்… இல்ல… நீங்க பேசறதை யாரும் கேட்கக் கூடாதுன்னு நினைச்சு கதவை சாத்தச் சொன்னீங்கன்னா… துரையண்ணாவைப் போகச் சொல்லுங்க” மலர் அவனது அறையின் கதவின் அருகில் இருந்து வெளியில் வரவும், மாரி அதிர்ந்து நிற்க, துரையின் கண்ணுக்குத் தெரிந்த உருவத்தை நம்ப முடியாமல் இமைக் கொட்டி பார்த்தவன், அப்பொழுதும் அந்த உருவம் மறையாமல் போகவும்,

“ம… ம… ம…ல…ர்…” திக்கித் திணறி திகைப்புடன் உச்சரித்தான்.

மலரைப் பார்த்த மாரி, “மலரு… என்னடி இது இவரு ஊருக்கு போறேன்னு சொல்றாரு…” மலரிடம் முறையிட,

“அதுக்கு அவ என்ன பதில் சொல்றது? நான் சொல்றேன்…” பீஷ்மா மலரை முறைத்துக் கொண்டு நின்றான்.

அவரவர் உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்த பீஷ்மா, “உன்னை யாரு இங்க வரச் சொன்னது மலர்? நான் ரொம்ப கோபமா இருக்கேன்…” என்று கத்த, மற்ற இருவருமே திகைத்துப் போயினர்.

அவர்களைப் பார்த்தவன், “என்ன மாரியக்கா… உங்க மலர் உங்க முன்னால இருக்கறது உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கா என்ன?” நக்கலாக அவன் கேட்கவும், கண்களைக் துடைத்துக் கொண்டவர் தலைகுனிய, துரை தான் அங்கு நடப்பது புரியாமல் குழம்பி நின்றிருந்தான்.

“இவ தானே எனக்கு சமையல் செய்து கொடுக்கச் சொன்னா? சில நாட்கள் எனக்கு சமைச்சும் கொடுத்து அனுப்பினவ இவ தானே? இவளைத் தான் நான் விரும்பறேன்னு உங்களுக்கு முன்னமே தெரியும் தானே.. அப்பறம் கொடியை எதுக்கு என் முன்னால இழுத்து விட்டீங்க? அன்னைக்கு காலையில கோவில்ல நான் கொடியோட கையில அடிச்சு சத்தியம் செய்யும் போது, உங்க மனசுல, ‘அட மடையா… இவ மலர் இல்ல கொடின்’னு தானே ஒடிச்சு.. அதுக்குத் தானே ஒரு மாதிரி சிரிச்சீங்க?” பீஷ்மரின் வில்லில் இருந்த அம்பிலிருந்தும் கூட தப்பி விடலாம்.. இந்த பீஷ்மாவின் சொல் அம்பில் இருந்து தப்பிக்க முடியாது என்பது போல இருந்தது மாரிக்கு.

“அக்கா அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க..” மாரியின் நிலையை உணர்ந்து மலர் வக்காலத்து வாங்க,

“நீ வாயை மூடிக்கிட்டு நில்லுன்னு சொல்லிட்டேன். எனக்கு இப்போ அவங்க தான் பேசணும்…” பீஷ்மா விடாப் பிடியாக நிற்க,

“ஆமா.. ஆனா… மடையன்னு எல்லாம் நினைக்கல.. எங்க மலருக்கு உங்க கூட வாழ கொடுத்து வைக்கலையேன்னு நினைச்ச போது, விதி ஆடற ஆட்டத்துல எனக்கு வெறுப்பா இருந்துச்சு. அது தான்..” வேகமாக மாரி சொல்லி முடிக்க, துரை குழம்பி நின்றான்.

துரையின் பார்வை பீஷ்மாவின் அருகே நின்றுக் கொண்டிருந்த மலரின் மீதே இருக்க, அவளோ கலக்கத்துடன் பீஷ்மாவை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு எதுவோ புரிவது போல இருந்தது.

“மலர் உங்களை ஏமாத்தல.. அதை மட்டும் புரிஞ்சிக்கோங்க… அவளை நீங்க விரும்பி இருந்தாலும் அதெல்லாம் கடந்த காலமா போயிடுச்சு. கொடி தான் நிகழ்காலம்…” ரோஷமாக சொன்னவர்,

“அவளோட வாழ்க்கை தான் இப்படி பாதியிலேயே கருகிப் போச்சு. கொடியோட வாழ்க்கையும் அப்படி ஆகிடக் கூடாதுன்னு, ஒரு அக்காவா, மலர் நினைக்கிறது தப்பில்லையே. அதை விட.. உங்க வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு. மலரை நினைச்சிக்கிட்டு நீங்க எத்தனை நாளைக்கு தனிமை தவம் இருக்க முடியும்? அப்படி இருக்கத் தான் உங்க குடும்பத்து ஒரே வாரிசான உங்களை விட்டுடுவாங்களா?

நீங்க எப்படியும் மலரை ஒரு தடவை தானே பார்த்து விரும்பி இருக்கீங்க. அவளோட வெளித்தோற்றத்தை வச்சுத் தானே அவளை உங்களுக்கு பிடிச்சது. அப்படி இருக்க, அதே தோற்றதோட இருக்கற கொடியும் நல்ல பெண்ணா இருக்கற பட்சத்துல… நீங்க கொடியை கல்யாணம் செய்துக்கறதுல என்ன தப்பு இருக்கு?

நீங்க மலரோட பேரை கொடின்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு, பெரிய கோவில்ல பார்த்த கொடியும், இங்க இருக்கற கொடியும் ஒண்ணுன்னு கொடியை சுத்திச் சுத்தி வந்தீங்க. அது தான் கடவுள் போட்ட முடிச்சு.. இப்போவும் கொடி உண்மையை சொல்லலைன்னா உங்களுக்கு இந்த உண்மை தெரிஞ்சு இருக்கவே வாய்ப்பில்லையே…” யாரையும் பேச விடாமல் கடகடவென்று மாரி பேசிக் கொண்டே போக, அனைத்தையும் கேட்ட துரை அதிர்ந்து நின்றான்.

“அப்போ மலரை தான் நீங்க விரும்பினீங்களா?” வாயைப் பிளந்தவனின் குரலைக் கூட யாரும் கேட்கும் நிலையில் இல்லை.

மாரி பேசி முடிக்கவும், பீஷ்மாவின் கோபம் ஏகத்திற்கும் எகிறியது. “அதுக்காக கொடியும் மலரும் ஒண்ணா?” பீஷ்மா கேட்கவும்,

“இல்லை தான்… அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் கூட உங்களுக்கு கண்டு பிடிக்கத் தெரியல… இத்தனைக்கும் ரெண்டு பேரையும் நீங்க அடிக்கடி பக்கத்துல இருந்து பார்த்தீங்க. அப்படி இருக்க.. நீங்க மலர் மேல கோபப்படறதுல எந்த நியாயமும் இல்ல…” மாரி கோபமாகக் கூறினாலும், அவரது குரலில் சிறிது ஏமாற்றம் எட்டிப் பார்க்கவே செய்தது.

தனக்கு நெருக்கமான மலரை அவன் அடையாளம் காண முடியாமல் இருந்தது அவருக்கு சிறிது ஏமாற்றத்தையே தந்தது. மாரியின் மனம் மலர் அவரது கண்களுக்கு தெரிந்த நாளை அசைப்போட, மலரும் அதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

பீஷ்மாவின் கண்களுக்கு மலர் தெரிந்ததும், ஆவல் உந்த மலர் மாரியின் முன்பு சென்று நிற்க, அவளைப் பார்த்த மாரி கதறத் துவங்கினார்.  

அவரை சமாதானம் செய்த மலர், பீஷ்மாவிற்கு உணவை கொடுக்கச் சொல்லவும், மாரி அவளை சந்தேகமாகப் பார்த்தார். அவரிடம் எதையுமே மறைத்துப் பழகியிராதவள், பீஷ்மாவை பெரிய கோவிலில் பார்த்ததையும், அங்கு தன்னைப் பார்த்தவன் கொடியும் தானும் ஒன்று என்று நினைத்து பழக முயல்வதை சொல்லவும் மாரி பீஷ்மாவை நினைத்து கலங்கினார்.

அது தவறு, அவனுக்கு தெரிந்தால் கொடியின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும் என்று அஞ்சிய மாரி, முதலில் மறுத்தாலும் பின்பு கொடியின் நல்லதுக்காக என்று சமாதானம் செய்த மலர், அவளது யோசனைக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தாள். அதன்படியே மலர் என்ற ஒருவள் இருந்ததை சற்று தடுமாறினாலும், பீஷ்மாவிடம் சொல்லாமல் தவிர்த்தார்.

அதே போலவே துரை மலரைப் பற்றி சொல்ல வரும்போது அவர்களது கவனத்தை கலைத்து மலர் காப்பாற்றிக் கொண்டிருந்த வேளையில், தன்னைப் பற்றிய உண்மை, எதிர்பாராத விதமாக கொடியின் வாயிலாக வெளி வரவே மலர் தடுமாறிப் போனாள்.        

கொடி தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கும் போதே அதை தவிர்க்க நினைத்தவள், அவள் அழவும் பீஷ்மா சமாதானம் செய்வதைப் பார்த்து, இருவரும் பேசி ஒருவரை புரிந்துக் கொள்ளட்டும் என்று அங்கிருந்து நகர்ந்துச் செல்ல நினைக்க, அவள் எதிர்பாராத விதமாக, கொடி சொன்னதை வைத்து பீஷ்மா தன்னைக் கண்டு கொண்டது அதிர்ச்சியைத் தந்தது.

“இன்னைக்கும் நான் அவளை பேச விட்டு இருக்கக் கூடாது. அப்படி செய்திருந்தேனா.. இப்போ உங்க கோபத்துக்கு வேலையே இருந்திருக்காது..” மலர் கோபமாகச் சொல்லவும், அவள் சொல்வது பீஷ்மாவிற்கு சுருக்கென்று தைத்தது.

தான் பலகீனமாக இருப்பது போல தோன்ற, “எனக்கு நிஜமாவே தலை வலிக்குது மலர். தயவு செய்து என்னை இன்னும் கோபப்படுத்தி பார்க்காதே..” தனது பக்கம் இருந்த தவறை உணர்ந்து பீஷ்மா இறங்கி வர, மலர் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவனது மனம் புரிந்தவள் போல, “உங்க மேல எந்த தப்பும் இல்ல டாக்டர் சார். ஒரு நாளே பார்த்து, சில மணித்துளிகளே பழகிய ஒருத்தியை இந்த அளவுக்கு நினைவு வச்சுட்டு இருக்கறதே பெரிய விஷயம்…” பீஷ்மாவிற்கு ஆதரவாக பேசியவள்,

“கொடி பாவம்… அவ உங்களை விரும்பறா…” கொடிக்கும் சார்ந்துப் பேச, பீஷ்மா தொப்பென்று அமர்ந்தான்.

“உங்களுக்கும் அவ மேல ஒரு இரக்கம் இருக்கு தானே. அவளையும் உங்களுக்கு பிடிக்கும் டாக்டர் சார்…” என்றவள்,

“கொடி கண்ணுல நான் இன்னும் படவே இல்ல. அதுக்கு காரணம் அவ மேல எனக்கு கோபம் இல்ல.. எதுக்கு எடுத்தாலும் அவ அப்படியே சுணங்கி போய் உட்கார கூடாதுன்னு ஒரு எண்ணம் தான்… கொஞ்சமாவது தைரியம் வேணும்ன்னு தான், கிணத்துல தள்ளி நீச்சல் கத்துக் கொடுக்கறது போல செய்துட்டு இருக்கேன்.

இன்னொரு காரணம்… அவளோட உருவத்துல ஆவி ஒண்ணு சுத்தறதைப் பார்த்தா அவளுக்கு ஒரு மாதிரி இருக்கும்ன்னு எனக்குத் தோணுது. எல்லாத்துக்கும் மேல என்னை இப்படி பார்த்தா அவ தாங்க மாட்டா… என்னால முடிஞ்ச வரை குணா அவளை எல்லை மீறி தொடாம பாதுகாத்துட்டு இருக்கேன்… அவனை நிறைய குடிக்க வச்சோ… இல்ல எல்லை மீறும் போது எதையாவது தள்ளியோ அவளை காப்பாத்தி தான் இருக்கேன்..” மலர் சொன்னதைக் கேட்டவர்கள் அமைதியாக இருந்தனர். 

அவர்களைப் பார்த்தவள், “மொதல்ல நான் ஆவியா இங்கே வர ஆரம்பிச்சதும், இங்க இருக்கற மிருகங்கள் மிரள ஆரம்பிச்சதுங்க.. ஆனா… நான் ரொம்ப நல்லவ, நல்ல காரியத்துக்கு தான் வந்திருக்கேன்னு புரிய வச்சதுக்கப்புறம், அதுங்க எதுவும் மிரண்டு கத்துறதில்ல…” தன்னிலை விளக்கம் கொடுத்து முடித்தவள் அமைதியானாள்.  

அந்த அமைதியை கிழித்துக் கொண்டு, “மலரு… நீ ஏன் இன்னும் அந்த குணாவை விட்டு வச்சிருக்க? அவனை ஏதாவது செய்து சாகடி…” துரை ஆவேசமாக சொல்ல, அவனைப் பார்த்து புன்னகைத்தவள்,

“அவன் பேய் அடிச்சு எல்லாம் ரெண்டு நிமிஷத்துல சாகக் கூடாது துரையண்ணா… அவனை இந்த ஊர் உலகமே காரித்துப்பணும். இனிமே அவனைப் போல தப்பு செய்யறவனுக்கு இவனுக்கு கிடைக்கப் போற தண்டனை ஒரு பாடமா இருக்கணும்… அதுக்கு தான் டாக்டர் சாரை நான் இந்த ஊருக்கு வர வச்சேன். கொடிக்கும் இவருக்கும் கல்யாணம்ங்கறது எல்லாம் இவர் என்னைப் பார்த்து ‘கொடி’ன்னு கூப்பிட்ட அப்போ தோணியது தான்…” ரௌத்திரமாக சொல்லிக் கொண்டே வந்தவள்,

“உங்களுக்கு தான் மோகினியைப் பார்த்தா பயமாச்சே… நீங்க என்னை தைரியமாகப் பார்த்துக்கிட்டு நிக்கறீங்க?” உடனே இயல்பாக மாறி துரையை கிண்டல் செய்ய, துரை வருத்தமாக அவளைப் பார்த்து,

“நீ யாருக்குமே தீங்கு பண்ண மாட்டேன்னு தெரியும் மலர்.. அதான்.. தைரியம்..” என்றவன், கண்களில் கண்ணீர் கோர்க்க,

“உனக்கு போய் இந்த கதியா?” என்று கலங்கினான்.

சில நிமிடங்கள் அங்கு கால்நடைகளின் ஓசைகளும், பல்லியின் சத்தமும் மட்டுமே நிறைந்திருந்தது. இன்னமும் பீஷ்மாவிற்கு மலர் சொல்வதை கேட்கக் கேட்க கோபமே பெருகியது. தன் பக்கம் வந்து, அன்பை காட்டி, தன்னை மேலும் காதல் வயப்பட வைத்தவள் இவள் தானே என்ற எண்ணம் அவன் மனதை விட்டு மறைய மறுத்தது.

அந்த கோபத்தில் பீஷ்மா அமர்ந்திருக்க, “துரையண்ணா..” மலர் மெல்ல அழைக்கவும், அந்த அமைதி களைந்து அனைவரும் மலரைப் பார்த்தனர்.

“செல்வியக்கா உயிரோட இல்ல..” மலர் சொன்ன செய்தியை கேட்ட துரையும் மாரியும் அதிர்ந்து பார்க்க, அவர்களது அதிர்ச்சியில் இருந்தே அது யாராக இருக்கும் என்று கண்டு கொண்ட பீஷ்மா துரையைப் பார்க்க,

“அவ எக்கேடு கெட்டுப் போனா எனக்கு என்ன?” துரை சொல்லவும், அவனை பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்,

“செல்வியக்காவ அந்த குணா தான் கொன்னு அவங்க தோட்டத்துல புதைச்சு இருக்கான்… உங்ககிட்ட கோவிச்சுக்கிட்டு போனவங்க குணாகிட்ட தன்னை கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்தி இருக்காங்க. சண்டை போட்டு இருக்காங்க. அவங்களை ஏமாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு போய், கழுத்தை நெரிச்சு தொங்க விட்டு, அப்படியே அவங்க வீட்டு தோட்டத்துல புதைச்சு இருக்கான்.. தான் செய்த தப்பை நினைச்சு அவங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க…” மலர் எங்கோ வெறித்துக் கொண்டு சொல்லவும், துரை அப்படியே மடிந்து அமர்ந்தான்.

அவன் முகத்தில் திகைப்பு மட்டுமே இருந்தது. கண்களில் இருந்த கண்ணீர் காய்ந்து போயிருந்தது. “அப்போ அவ ஒட்டு மொத்தமா போயே சேர்ந்துட்டாளா பாவி…” என்ற முணுமுணுப்பு மட்டும் அவனது வாயில் இருந்து வெளி வந்தது.

“ஹ்ம்ம்… எங்க அம்மாவையும் அவன் தான் கொன்னு இருக்கான்.. அன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு வந்த அப்போ குணா எங்க அம்மாவை கொன்னுடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கான்.. சொன்னபடியே மறுநாள் வெளியூர் போகும் போது லாரி ஏத்தி கொன்னுட்டான்” என்ற மலர்,

“என்னையும் கொன்னு பேயா அலையை விட்டு இருக்கான்…” என்று கண்கள் கலங்கச் சொல்ல, மாரி அவளை அணைத்து ஆறுதல் சொல்ல நினைக்க, அவரிடம் இருந்து எட்டி நின்றவள்,

“நான் நீங்க எல்லாம் தொட முடியாத இடத்துக்கு போயிட்டேன்…” என்று விரக்தியாக சொல்லி, அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த பீஷ்மாவின் முன் அமர்ந்தாள்.

“எனக்கும் உங்களை பார்த்த அன்னைக்கே பிடிச்சுப் போச்சு. இதை நான் வெட்கத்தை விட்டுச் சொல்றேன் டாக்டர் சார். ஆனா… என்னோட காதலுக்கும் எனக்கும் ஆயுளே இல்லையே… நான் என்ன செய்யட்டும்?” என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழ, பீஷ்மாவின் கோபம் கானல் நீராய் போனது.

“மலர்…” அவன் மென்மையாக அழைக்க,

“அந்த குணாவுக்கு நீங்க தான் தண்டனை வாங்கித் தரணும். அவன் சாதாரணமா சாகக் கூடாது. அவன் செய்த தப்பை எல்லாம் நினைச்சு வருந்தி வருந்தியே உயிரை விடணும்…” கோபமாகச் சொன்னவள், எழுந்து நின்றுக் கொண்டு,

“இந்த திருவிழா முடியட்டும்.. அவனுக்கு நீங்க பண்டிகை எடுங்க.. கொடியையும் விட்டுடாதீங்க” கெஞ்சல் குரலில் மலர் சொல்ல, பீஷ்மா அவளை வெறிக்க, மலர் அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தாள்.

அவனது அறைக்குச் சென்றவள், மெல்ல பெட்டியில் இருந்த அவனது துணிகளை எடுத்து பழைய இடத்திலேயே அடுக்கி வைத்துவிட்டு, “திருவிழாவுக்கு கோவில்ல காப்புக் கட்டிட்டா, ஊருக்குள்ள இருக்கறவங்க வெளிய போகக்கூடாது, வெளியே இருந்தும் புதுசா யாரும் வந்து தங்கக் கூடாது. நாளைக்கு விடிய காலையில காப்பு கட்டிடுவாங்க. இங்க இருந்து முதல் பஸ்ஸே காலையில ஆறு மணிக்குத் தான். அதுக்கும் முன்ன காப்பு கட்டி ஆகிடும். அதனால இப்போதைக்கு நீங்க போக முடியாது..” மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே அவன் அருகே மீண்டும் வந்தவள்,  

“எனக்காக இங்க தங்க மாட்டீங்களா?” என்று கேட்கவும், பீஷ்மா அமைதியே உருவாக அமர்ந்திருந்தான். அவனது மனம் கொடியை திருமணம் செய்துக் கொள்வதில் இருந்து தப்பிக்கும் வழி வகைகளைத் தேடத் துவங்கியது.

12 COMMENTS

 1. adadaa super super…… nice update dr pawam malar pei aanalum avaloda unarvugal aaa beeshma mathipana ¿ 😰 papom innum enelam twist podringanu 😃…..

 2. Hi rams peyo penno but kadhal &unarvukal yellam ondruthannu solitinka. parkalam vera yenna vellam twist. Yen rams mormal kadhal kadhai bore akivittatha. Pei kathaiyellam yelutha arambithuvitturkal.aniway namba rams yethu yethunslam super dhan

  • hahah thanks sasi … kathal kathai ore mathiri irunthalum bore adikum ilal … athan … thanks ma … thank u so much 🙂 🙂

 3. Hai dalu
  Pavam beeshma oru naal patha ponnu mela love vechitu romba feel panraan
  Intha lovenale ore akkaporu than
  Hmmmm eppidiyo beeshma can’t go enywhere
  Let see what next
  Nice going update

 4. Hei Ramya chellam, appo Malai nijamava diedpya?
  so sad pavampa aval
  and Bhima -vum pavam pa
  orithiyai love pannittu eppidi pa adathavalai marriage panna mudiyum?
  intha guna vale ellam poche

 5. indha episode ku enna comments solluradhunea theriyala orea madri uruvam ulla 2 ponnunga adhula oruthi uyir oda illa but avala oruthan love panran ipa ava illanu therinjum innoruthi ah vitu vilaga paakura nice… waiting for next episode mam… keep rocking

LEAVE A REPLY