SHARE

மல்லிகையின் மனம் நாசியில் ஏற, பீஷ்மாவிற்கு அவன் அருகே வந்திருப்பது மலர் என்று புரிந்தது. முகத்தைத் திருப்பாமல் விறைப்பாக அமர்ந்திருந்தவனின் மனம் ஆயிரம் சுமைகளை சுமந்தது போல களைத்திருந்தது.

சிறிது நேரம் வரை அமைதியாக இருந்த மலரும் தனது வளையலை அவன் முன்பு ஆட்டி அவனது கவனத்தை கலைக்க, “எனக்கு ரொம்ப கோபம் வருது.. பேசாம போயிடு. இப்போ உங்கிட்ட பேச எனக்கு தெம்பு இல்ல…” பீஷ்மா சொல்லவும், மீண்டும் அவனைச் சுற்றி அமைதி. மனம் மட்டும் அமைதியடையாமல் மலரின் இறப்பை நினைத்தே அழுதுக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், “போய்ட்டா போல…” முணுமுணுப்புடன் திரும்பியவனின் எதிரில் மலர் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதழில் அதே மாறாத புன்னகை. தான் காதலிக்கும் பெண்ணும், தான் கையைப் பிடித்து, அணைத்து ஆறுதல் சொல்லி திருமணம் செய்து கொள்வதாக சொன்னவளும் வேறு வேறு என்ற உண்மை அவனது நெஞ்சத்தை கனக்கச் செய்தது.  

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனது மனம் அவளது அருகாமைக்கு ஏங்கத் துவங்கியது. தான் காதலிப்பது மலர் தான் என்று தெரிந்த பின்பு, கொடியும் மலரும் ஒரே போல இருந்தாலும், இருவருக்கும் இடையில் இருந்த சிறு சிறு வித்யாசங்கள் பீஷ்மாவின் கண்களுக்கு இப்பொழுது புலப்பட்டது.

தான் காதலிப்பதாலா, அல்லது இயற்கையிலேயே மலர் அழகா.. பிரித்தறிய முடியாமல் வெறித்துக் கொண்டிருந்தவன், கொடியிடம் இருக்கும் ஒரு வித படபடப்பு இல்லாமல் மலரின் முகம் அமைதியாக இருப்பதை உணர்ந்தான். உலக வாழ்வை நீத்ததாளா? நொடிக்குள் ஆயிரம் எண்ணங்களை மனதினால் உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிரூபித்தது அவனது மனம்.  

தான் இங்கு வந்த உடனே மலர் தன்னுடன் இங்கு வந்திருப்பாள்… தாங்கள் பேசுவதைக் கேட்டிருப்பாள் தான். ஆனாலும் அவள் முகத்தில் எந்த சலனுமும் இல்லாமல் அமைதியே வடிவாக புன்னகைத்துக் கொண்டிருக்கவும், பீஷ்மா ஒரு பெருமூச்சொன்றை வெளியட்டு மனதை சமாளிக்க முயன்றாலும், கண்களில் இருந்து கண்ணீர் தளும்பிக் கொண்டு வந்தது.

“இப்போ எதுக்கு அழறீங்க?” மலர் சாதாரணமாகக் கேட்க,

“கண்ணுல தூசி பட்டுடுச்சு…” என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டவன்,

“நான் உன்னை போகச் சொல்லிட்டேன்… நீ இன்னும் போகலையா?” கோபமாக பீஷ்மா கேட்க,

“இல்ல… போக மாட்டேன். நீங்க அப்படி அழும் போதே உங்க பக்கத்துல வந்திருப்பேன்… ஆனா… அவ இருந்தாளா… அதான் வரமுடியல…” மலர் சொல்ல, பீஷ்மா அவளை முறைக்கத் தொடங்கினான்.

“எதுக்கு இப்போ முறைக்கறீங்க?” அப்பாவியாக அவள் கேட்டாலும் அவளது கண்கள் கலங்கி தான் இருந்தது.

“நீ எதுக்கு இப்போ அழற? நான் தான் உட்கார்ந்து அழணும்.. உன்னை உணர முடியாம, கொடியை போய் நீன்னு நினைச்சு இருக்கேனே… என்னை என்னன்னு சொல்ல? இதுல அவளை கல்யாணம் செய்துக்கறேன்னு அம்மன் கோவில்ல சத்தியம் வேற செய்திருக்கேன்.. உன்னை மனசுல வச்சிக்கிட்டு.. உன்னைப் போல இருக்கான்னு எல்லாம் என்னால எப்படி அவளைக் கல்யாணம் செய்துக்க முடியும்…” தலையில் அடித்துக் கொண்ட பீஷ்மாவைப் பார்த்தவள்,

“அது தானே நடக்கப் போகுது…” என்று சாதாரணமாகச் சொல்லவும், பீஷ்மா அதிர்ந்து, ‘மலர்’ என்று கூவினான்.

“என்ன டாக்டர் சார்.. என்னை ஏமாத்திடலாம்ன்னு மட்டும் நினைக்காதீங்க.. அப்பறம் எனக்கு ரொம்ப கோபம் வரும்…” கண்களை துடைத்துக் கொண்டு அவள் சொல்ல, பீஷ்மா தான் பேச முடியாமல் அமர்ந்திருந்தான்.

“அவளுக்கு மட்டும் சத்தியம் செய்யல… எனக்கு ஒரு நாள் நீங்க வாக்கு கொடுத்தது நியாபகம் இருக்கா? எது நடந்தாலும் எனக்கு துணையா இருப்பேன்னு சொல்லி இருக்கீங்க…” மேலும் அவனுக்கு மலர் நினைவுப்படுத்த,

“அதெல்லாம் நல்லா நினைவு இருக்கு… ஆனா… அது என்னால முடியாது. உனக்கு துணையா இருப்பேன்.. அந்த குணாவை நான் கொலை செய்யணுமா செய்யறேன்.. அதுக்காக வேற ஒருத்தியை கல்யாணம் செய்துக்க முடியாது” பீஷ்மா நொடித்துக் கொண்டான்.

தான் சொன்னதற்கு மலர் பதில் சொல்வாள் என்று பீஷ்மா எதிர்ப்பார்த்து அமர்ந்திருக்க, மலர் வெறும் அமைதியையே அவனுக்கு பதிலாகத் தந்தாள். அதில் மேலும் கோபமுற்ற பீஷ்மா,

“உனக்கு தான் நல்லா கோபம் வருமே. அந்த கோபம் எல்லாம் என்கிட்ட தானே காட்ட முடியும்.. அந்த குணா கிட்ட எதுக்கு காட்டணும்? இந்த ஊர்ல பல நல்ல காரியங்கள் செய்தவனாச்சே அவன்…”  படு நக்கலாக அவன் சொல்லவும், மலர் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“இப்படி நீ பேசாம இருந்து என்னத்தை சாதிக்க போறன்னு சொல்லு…” அதற்கும் அவளிடம் பதில் இல்லாமல் போக,

பீஷ்மாவிற்கு மேலும் கோபம் பொங்க, “இப்போ நீ வாயைத் திறக்கப் போறியா இல்லையா? நீ கார்ல இருந்து தவறி விழுந்து அடிப்பட்டதா சொல்றாங்க. அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லு..” என்றவன், தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு,

“ஹையோ மலர்… எனக்கு எப்படி இருக்குன்னு எனக்கே சொல்லத் தெரியல… ஆனா.. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குன்னு மட்டும் புரியுது…” பீஷ்மா சொல்லவும், மலரின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

அவளது கண்ணீரைத் துடைக்க கையை அவன் உயர்த்த, “உங்களால என்னைத் தொட முடியாது. உங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன்..” பரிதாபமாகச் சொன்னவள்,

“உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியணும்.. அவ்வளவு தானே.. நான் எல்லாத்தையும் சொல்றேன். அதைக் கேட்டு நீங்க அதிர்ச்சியாகாம, கோபப்படாம இருங்க. அப்பறம் என்ன செய்யலாம்ன்னு யோசிங்க..” பீடிகையுடன் அவள் தொடங்க, பீஷ்மா தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவளைப் பார்த்தான்.  

“அன்னைக்கு அங்க வந்தது அந்த அய்யா குணசேகரன் தான். எங்க அப்பா என்னைத் தேடி தஞ்சாவூருக்கு வர போது, குடிச்சிட்டு வந்திருக்காருன்னும்.. அதனால ஒரு விபத்துல அடிப்பட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்குன்னு சொன்னான்…” அவள் சொல்லிக் கொண்டே வர,

“நீ அங்க வந்திருக்கறது அவனுக்கு எப்படித் தெரியும்?” இடைபுகுந்து பீஷ்மா கேட்டான்.

“நான் கோவில்ல இருந்த நேரத்துக்கு மாரியக்கா ஊருக்கு போயிட்டாங்களே.. அவங்க தனியா வரவும் இவன் ‘நான் எங்கன்னு கேட்டு’ அவங்க கோவிலுக்கு போயிருக்கறதா சொல்லவும், காரை எடுத்துக்கிட்டு என்னைத் தேடி வந்திருக்கான். வந்தவன் என்னை அவன் கூட கூட்டிட்டு போகறதுக்காக பொய் சொல்லி இருக்கான்.

அவன் பொய் சொல்றதை புரிஞ்சிக்கிட்டு நான் சத்தம் போட, என்னை நல்லா திட்டிட்டு, ‘உங்க அப்பா செத்தா கூட உனக்கு பரவால்ல… என் கார்ல வரக்கூடாதா’ன்னு கேட்கவும், எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. என்ன இருந்தாலும் அவர் என்னைப் பெத்தவராச்சே. அவனை நம்பி ஏறினேன்..” சொன்னவளின் குரலில் அத்தனை வலி… உடலிலும் அந்த வலியை அனுபவிப்பவள் போல அவளது கைகளை முறுக்கிக் கொண்டவள், 

“தஞ்சாவூர்ல அங்க இங்கன்னு வண்டி வேற எங்கயோ போறதைப் பார்த்து நான் அவன்கிட்ட சண்டைப் போட்டேன்.. எதுவோ ஆபத்துன்னு மட்டும் மனசு சொல்லுச்சு. அவனோட பார்வையும் சரியே இல்ல… டிரைவரை வண்டியை நிறுத்தச் சொன்னா, அவரும் கேட்கவே இல்ல.. என் பக்கத்துல உட்கார்ந்திருந்த அவன் என்னை…” சொன்னவள் வலி தாங்காமால் அழத் தொடங்கினாள்.

பீஷ்மா அழுவதை பொறுக்க முடியாத கொடி, சிறிது தூரம் வரை சென்று, அவன் அங்கிருந்து கிளம்பி விட்டானா என்பதைப் பார்க்க அவனைத் தேடிச் செல்ல, பீஷ்மா யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு அதிகம் யோசிக்காமலே அதற்கான விடை கிடைக்க, மனதில் ஒரு பெரிய கல்லை வைத்து அழுத்திய சுமை.. அதை விட, பீஷ்மாவின் பார்வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்திருப்பதைப் பார்த்த கொடி, அங்கு தான் மலர் அமர்ந்திருக்கிறாள் என்பது உறுதியானாலும், தனது சகோதரி, தனது கண்ணிற்கு தெரியாமல் இருப்பது அவளுடைய வலியை மேலும் அதிகப்படுத்தியது.

அந்த வலி அவளது கண்ணீரை அதிகப்படுத்த, அவர்களுக்கு இடையூறு இல்லாமல், ஓசை இன்றி அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.  

மலர் சொன்னதைக் கேட்ட பீஷ்மா “மலர்…” என்று அதிர,

“டிரைவர் இருக்கும் போதே என் கையைப் பிடிச்சு இழுத்து, கார்ல வச்சே என்னை நாசம் பண்ண முயற்சி பண்ணினான். அதுல இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல… நான் டிரைவரை அடிச்சு வண்டியை நிறுத்தச் சொன்னேன்… அவரும் நிறுத்தவே இல்ல.. நாமே தான் நம்மளைக் காப்பாத்திக்கணும்ன்னு கார் கதவுல இருந்த ஏதோ ஒரு பட்டனை பிடிச்சு இழுத்தேன்.. கதவு திறந்துக்கிச்சு..

நான் என் பலத்தை எல்லாம் கூட்டி அவனைப் பிடிச்சு தள்ளி கார்ல இருந்து குதிச்சேன்… அதே நேரம் அங்க வேகமா வந்த இன்னொரு கார் மேல நான் விழ… விழுந்த வேகத்துல என் தலை இடிச்சு கீழ விழுந்தேன்… அவ்வளவு தான் தெரியும்… எனக்கு கண்ணே தெரியல.. சுத்தி ஒரே இருட்டா இருந்தது…” சொல்லிக் கொண்டே வந்தவள், பீஷ்மா அவள் அருகே அமரவும், அவனை நிமிர்ந்துப் பார்த்து,

“நான் செத்துப் போனது கூட எனக்குத் தெரியாது..” பரிதாபமாக சொல்லவும், பீஷ்மா தான் தவித்துப் போனான்.

“எனக்கு ஒண்ணுமே ஆகலன்னு நினைச்சிட்டு எழுந்து நான் எங்கயோ நடந்து போறேன்… என்னைச் சுத்தி ஒரே கூட்டம்.. என்னடான்னு பார்த்தா.. நான் கீழ விழுந்து கிடக்கறேன்.. என் பின்னந்தலையிலயும், காதுலயும் ஒரே ரத்தம். கை எல்லாம் சிராய்ச்சு ரத்தம் வடியுது. கால்ல இருந்தும் ரத்தம் சொட்டுது.. ஆம்புலன்ஸ்ல என்னை எங்கயோ எடுத்துட்டு போனாங்க…” என்றவள், முட்டியில் தலையை கவிழ்த்துக் கொண்டு,

“அதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் நீங்க என்னைக் கடந்து உங்க வண்டியில போனீங்க.. நான் உங்களை கூப்பிட்டேன். அந்த கார் கதவைத் தாண்டி உங்க காதுல விழவே இல்ல…” என்று சொன்னவள், பீஷ்மாவைப் பார்க்க, பீஷ்மா குற்ற உணர்வில் துடித்தான்.

தனது தலையிலேயே அடித்துக் கொண்ட பீஷ்மா, “ஹையோ மலர்… எனக்கு தெரியவே இல்லையே… நான் என்ன செய்வேன்? தெரிஞ்சிருந்தா உனக்கு இந்த நிலை வரவே விட்டு இருக்க மாட்டேன்…” துடி துடித்துச் சொல்ல, மலரின் இதழ்களில் மெல்லிய புன்னகைக் கோடுகள்.

“அது தான் விதி.. நீங்களும் நானும் ஒண்ணு சேரக்கூடாதுன்னு கடவுள் போட்ட விதி… உங்க மனசுல நான் இருந்தாலும் இனிமே ஒண்ணுமே பிரயோஜனம் இல்ல.. நீங்க கொடியைத் தான் கல்யாணம் செய்துக்கணும்.. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா.. நான் உங்க மகளா பிறக்கணும்…” புன்னகைக்க முயன்றாலும் அவளது கண்களிலும் கண்ணீரே வழிந்தது.

“மலர்.. மலர்.. அப்படி எல்லாம் சொல்லாதே.. என்னால உன்னை விட்டு வேற ஒருத்தியை…” பீஷ்மா தொடங்க,

“அதெல்லாம் சினிமா வசனம். தயவு செய்து நீங்களும் அதே வசனம் பேசாதீங்க. நான் உங்க முன்னால வந்து போனது… கொடியை உங்க கூட நெருங்க வைக்கத் தான்.. அவளை நீங்க தான் பார்த்துக்கணும்… பாதுகாக்கணும்…” மலர் சொல்லவும், பீஷ்மா கோபமாக நிமிர்ந்தான்.

“பேசாம போயிடு… நான் நல்லா திட்டிடுவேன்.. என்னோட கோபத்தைக் கிளறாதே…” பீஷ்மா சொல்லவும், அவனது கோபத்தை ரசித்தவள்,

“அது நடந்தே ஆகணும்… அது தான் கடவுள் விதி. அவ உங்களை விரும்பறா. அவளைப் பத்தி அவளே தவறா சொல்லும் போது கூட நீங்க தப்பா எடுத்துக்காம அவளை நீங்க தூக்கி வச்சு பேசினீங்க. அப்போ உங்க மனசுல அவளுக்கும் இடம் இருக்கு இல்ல…” கொடிக்காக பேசி விட்டு, பீஷ்மா மறுப்பு சொல்வதற்கு முன்பே, 

“குணாவை நீங்க ஏதாவது செய்யணும். அவனை நான் ஏதாவது செய்யணும்ன்னா எனக்கு ரெண்டு நிமிஷம் கூட ஆகாது. அவனும் அந்த ரெண்டு நிமிஷத்துலையே செத்தும் போயிடுவான். ஆனா.. அவ்வளவு சீக்கிரம் அவன் செத்து போனா.. அவனால நாங்க அனுபவிக்கிற கஷ்டத்துக்கு ஈடு ஆகுமா.. அவனை சுதந்திரமா உலவ விட்டு இருக்கறதே அவனுக்கு தகுந்த தண்டை தரணும்ன்னு தான்..” மலர் சொல்லிக் கொண்டே போக,

“சட்டப்படி தண்டனை வாங்கித் தரணுமா? அவன் சட்டத்தை ரொம்ப ஈசியா வளச்சிடுவான். அது உனக்குத் தெரியாதா?” நக்கலாக பீஷ்மா கேட்க,

“நீங்களே இப்படி பேசறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு..” அதற்கு மேல் நக்கலாக மலர் சொல்ல, பீஷ்மா திகைத்துப் போனான்.

அவன் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “உங்க அப்பா திருச்சியையே கலக்கற பெரிய வக்கீல்… ரொம்ப நேர்மையானவர்… உங்க அப்பா வக்கீலா ஒரு கேஸ் எடுத்தா.. அந்த கேஸ் கண்டிப்பா ஜெயிக்கும்ன்னு எனக்குத் தெரியும். உங்க அப்பா உங்களுக்காக வாதாட மாட்டாரா என்ன? அதை விட உங்க பெரியப்பா பெரிய அரசியல்வாதியாமே.. உங்க குடும்பமே நேர்மைக்கு பெயர் போனவங்கன்னு எனக்குத் தெரியும்…” மலர் சொல்லிக் கொண்டே போக, பீஷ்மாவின் திகைப்பு பலமடங்கு உயர்ந்திருந்தது.

“என்னவோ நேர்ல இருந்து எல்லாத்தையும் பார்த்தவ போல சொல்லிட்டு இருக்க?” பீஷ்மா கேட்க, அவனைப் பார்த்து புன்னகைத்தவள்,

“ஆமா… நான் நேர்ல தான் பார்த்தேன். இந்த நாலு மாசம்… நீங்க இங்க வர வரை.. அடிக்கடி நான் உங்களை பார்க்க வருவேன். உங்களால தான் என்னைப் பார்க்க முடியாது..” புன்னகையுடன் சொன்னவளின் முகம், மீண்டும் இறுகிப் போக,

“என்னை ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போகும் போதும் உங்களைக் கடந்து தான் போனேன்.. உங்களைப் பார்த்த உடனே எனக்கு அடிப்பட்டு இருக்கு… என்னை காப்பாத்துங்க டாக்டர் சார்’ன்னு கத்திக்கிட்டே உங்க பின்னால ஓடி வந்தேனே.. ஓடி… ஓடி உங்க வீட்டுக்கே இல்ல வந்திருந்தேன்.. ஆவியா அலையறது கூட எனக்குத் தெரியல” என்றவள், ஒரு பெருமூச்சுடன்,

“நான் இவ்வளவு கூப்பிட்டும் உங்க காதுல விழவே இல்லையேன்னு நினைச்சிக்கிட்டு திரும்ப பஸ் ஏறி ஊருக்கு கிளம்பிட்டேன்.. அப்போ நான் இருந்த பதட்டத்துல, கண்டக்டர் ஏன் என்கிட்ட  டிக்கெட் வாங்க சொல்லலைன்னு கூட நான் யோசிக்கலை… ஊருக்குள்ள வந்து பார்த்தா என் உடம்பை போட்டுக்கிட்டு எல்லாரும் அழுதுட்டு இருந்தாங்க. நான் செத்துப் போயிட்டேன்னு எனக்கு நல்லா புரிஞ்சது. மறுபடியும் உங்களைப் பார்த்து விஷயத்தை சொல்ல வந்தா… நான் இறந்தது தெரியாம நீங்க என் போட்டோவை வச்சு அழகு பார்த்துட்டு இருந்தீங்க..” என்ற மலர் அதற்கு மேல் அடக்க முடியாமல் அழத் தொடங்கினாள்.

“நான் பேயா இருந்தாலும் எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குல..” என்றவள், மீண்டும் தன்னைத் தேற்றிக் கொண்டு,

“நீங்க உங்க அப்பா பெரியப்பா புகழ்ல இருந்து தப்பிக்க கிராமத்து ஆஸ்பத்திரிக்கு வரப் போறதா பேசிட்டு இருந்தீங்க. அந்த ஆபீசர் உங்களுக்கு எந்த இடம்ன்னு ஒரு லிஸ்ட்டை வச்சிட்டு யோசிச்சிட்டு இருக்கும் போது நான் தான் அவர் உணராமலே கையை நகர்த்தி இந்த ஊர் மேல வச்சு குறிச்சேன்.. நீங்க இந்த ஊருக்கு வந்துட்டீங்க…” மலர் பீஷ்மா இந்த ஊருக்கு வந்த கதையை சொல்லவும், கதை கேட்பது போல எந்த உணர்ச்சியும் இன்றி பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மா, மலரை முறைத்துவிட்டு வேகமாக எழுந்து அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

மனம் மொத்தமும் பாரம் மட்டுமே நிரம்பி வழிய, சோர்ந்து போய் நடந்துக் கொண்டிருந்தவனுடன் நடந்தவள்,    

“இவ்வளவு பேசறேன்… நீங்க எதுவுமே பேசாம போறீங்க?” என்று கேட்க,

“என்ன பேசணும்ன்னு நீயே சொல்லிடறியா? சொன்னா இன்னும் வசதியா இருக்கும்…” கடுப்புடன் பீஷ்மா அவளை சாடினான்.

பாவமாக அவனையே மலர் பார்க்க, “சரி… நான் இந்த ஊருக்கு வந்துட்டேன்.. அவ்வளவு தான்.. அந்த குணாவை நான் போலீஸ்ல மாட்டி, அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துட்டு இந்த ஊர்ல இருந்து போயிடறேன்.. போதுமா?” இன்னமும் மலரின் மீது கோபம் குறையாமல் அவன் பேசவும்,

“எனக்காக நீங்க கொடியை கல்யாணம் செய்துக்கணும்…” மலர் மீண்டும் அதையேத் தொடங்க,

“இங்கப் பாரு.. அதைப் பத்தி அப்பறம் பேசலாம். ஏன் என்னால உன்னை அப்போ உணர முடியல? அது என் தப்பு இல்ல. ஆனா.. இப்போ எப்படி நீ என் கண்ணுக்குத் தெரியற? எனக்கு தலை வலிக்குது மலர். கொஞ்சம் என்னைத் தனியா விடேன்… திரும்பத் திரும்ப கல்யாணத்தைப் பத்தி பேசாதே..” கை எடுத்து பீஷ்மா கும்பிட,

“மொதல்ல தான் உங்களுக்கு என் குரல் கேட்கல போல… ஆனா… இந்த ஊருக்கு வரதுக்கு முதல் நாள் நான் உங்க பக்கத்துல உட்கார்ந்து உங்க பேரைக் கூப்பிட்ட போது திடீர்ன்னு உங்க காதுல விழுந்துச்சுன்னு நினைக்கிறேன்.. நீங்க சுத்தி சுத்தி பார்த்து தேடினீங்க. அப்போ என் குரலாவது கேட்கும்ன்னு தான் நீங்க இந்த ஊருக்குள்ள வந்ததும் பேசிக்கலாம்ன்னு சந்தோஷமா உங்க எதிர்ல வந்தேன். ஆனா.. நானே உங்க கண்ணனுக்கு தெரிஞ்ச போது… நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா?” மலர் சந்தோஷமாக சொல்லிக் கொண்டே வர, பீஷ்மா தனது நடையை நிறுத்தி, அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றான்.    

13 COMMENTS

  1. Ennakku enna sollurathune theriala dalu romba feelingsa irukkuthu beeshmava ninacha romba kashtama irukku
    Ore soga geetham vasikithu manasu feel dull dalu

  2. வணக்கம் அக்கா இப்பதான் இந்த கதையை படிக்கிறேன். ரொம்ப திரில்லிங்காவும் இருக்கு. ரொம்ப வருத்தமாகவும் இருக்கு.கதையின் போக்கு ரொம்ப அருமை.வாழ்த்துக்கள் அக்கா.

  3. Mam super update romba nalla iruku aavi oda love nejamavea manasu virumburadhu indha world la illanalum adhukana place ah yarukum kodukaradhu illa la

  4. dr inna dr ore thirilling aa iruku 😃 lyt aa payam etti paakuthe mmm rly super….. pawm beeshma 😰 fb laum ungla follow pantomla 😍😍😍😍 feeling hppy. ….

LEAVE A REPLY