SHARE

தனது சகோதரி… அதுவும் தனது இரட்டை சகோதரியின் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் கொடி இவ்வாறு நடந்துக் கொண்டது பீஷ்மாவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. முகம் தெரியாத பெண்ணாக இருந்தாலும், அவளைப் பற்றி ஊருக்குள் வந்ததில் இருந்தே கேட்டதை வைத்துப் பார்க்கும் போது மிகவும் நல்ல பெண்ணாகவே பீஷ்மாவிற்கு மனதினில் பட்டது.

தானே அவளுக்காக இவ்வளவு வருத்தப்படும்பொழுது, உடன் பிறந்தவள் இவ்வாறு நடந்து கொண்டது அவனுள் ஏமாற்றத்தை தந்தாலும், மனித மனதின் வித்தியாசங்களை இப்பொழுதும் ஒரு வித கசப்போடு நினைத்துக் கொண்டவன், கொடி அழுவதைப் பொறுக்க முடியாமல்,

“நீ நடந்த விதம் தப்பு தான் கொடி… ஆனா… இப்போ நீ உன் தப்பை உணர்ந்து இருக்கியே.. அதுவே ரொம்ப சந்தோசம். இனிமே அப்படி மனசால கூட அடுத்தவங்க கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படாதே…” பீஷ்மா அவளுக்கு ஆறுதல் சொல்ல, கொடி மேலும் விசும்பினாள்.

“அழாம உன் மனசுல இருக்கறதை சொல்லு…” பீஷ்மா கூறினாலும், இன்னும் எதையாவது சொல்லிவிடுவாளோ என்று அவனுக்கு பயமாகத் தான் இருந்தது.

“ம்ம்… சொல்றேன்…” என்று சொன்னவள், 

“நான் படிக்கணும்ன்னு அடம் பிடிச்ச போது கூட, அதெல்லாம் அவன் கிட்ட பணம் வாங்க முடியாதுன்னு சொல்லி, எங்க அம்மா நடத்திட்டு வந்த இட்லி கடையை நடத்தி, அதுல வர சொற்ப வருமானமும் போதாதுன்னு புரிஞ்சிக்கிட்டு, எங்க வீட்டை சுத்தி அவ ஏற்கனவே ஆசைக்கு வளர்த்த பூச்செடிகளோட பூவை பறிச்சு விக்கத் தொடங்கினா. கூடவே எங்க அம்மா அவங்க சொந்த வருமானத்துல வாங்கிப் போட்டு இருந்த நிலத்துலயும் விதவிதமான பூச் செடிகளை எல்லாம் நட்டு, அதை பத்திரமா பராமரிச்சு சீக்கிரமே அதன் மூலமா வருமானம் வரவும் ஏற்பாடு செய்துட்டா.

அதோட மட்டும் நின்னாளா? மதியம் வரை தோட்ட வேலை… மீதி நேரம் கூலி வேலைன்னு, கடன் வாங்கி என்னை காலேஜ்ல சேர்த்து, கடனை கொஞ்சம் கொஞ்சமா அடச்சு வாழவும் ஏற்பாடு செய்துட்டா.. நான் ஆசைப்பட்ட காலேஜ்.. நானும் அவளும் ஒரே வயசு தானே.. இருந்தாலும் நான் அவளுக்கு அந்த சூழ்நிலையில எந்த உதவியும் செய்யல… தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு ஊருக்கு கிளம்பிட்டேன்..” என்றவளை பீஷ்மா வெறித்துக் கொண்டிருக்க, அந்த பார்வை தன்னை ஒண்ணும் செய்யாது என்பது போல எங்கோ பார்த்துக் கொண்டிருந்த கொடி, தன் பாட்டிற்கு தொடர்ந்துக் கொண்டிருந்தாள். 

“ஆனா… காலேஜ்ல விட்டுட்டு என் கையைப் பிடிச்சிக்கிட்டு. ‘அம்மா இல்லன்னு நீ எதுவும் கவலைப்படாதே கொடி.. உனக்கு அம்மா இருந்தா என்ன எல்லாம் செய்வாங்களோ அதை எல்லாம் உனக்கு நான் செய்யறேன். அதுக்காக அந்த ஆளுகிட்ட எல்லாம் காசு வாங்க மாட்டேன்.

என் உடம்புல தெம்பிருக்கு… அதை வச்சு என்னால உழைக்க முடியும் கொடி.. நானும் சாம்பாதிக்கிற பணத்தை எல்லாம் சேர்த்து வைக்கிறேன்.. உன்னை நான் பத்திரமா பார்த்துக்கறேன். உன்னை எப்பவுமே நான் தனியா தவிக்க விட மாட்டேன்.. என்னைப் பத்தி கவலைப்படாதே… நான் சமாளிச்சுக்குவேன்னு’ சொன்னா…” என்ற கொடி, அதற்கு மேல் சொல்ல முடியாமல் வெடித்து அழுதாள்.

சில வினாடிகள் திகைப்பில் அமைதியாக இருந்த பீஷ்மா, அவள் அழுவதைப் பார்த்து மனம் தாளாமல், “கொடி… இங்கப் பாரு அழக் கூடாது..” என்று அவளை சமாதானம் செய்ய,

“எங்க அப்பா… அப்போ கூட குடிச்சிட்டு எங்கயோ விழுந்து கிடந்தாங்க.. மாரியக்காவும் அவளும் தான் என்னை காலேஜ்ல கொண்டு வந்து விட்டாங்க. அந்த காலேஜை அவ கொஞ்சம் கூட ஏக்கமா பார்க்கவே இல்ல. என்னை விட அவளுக்கு படிக்கணும்ன்னு ரொம்ப ஆசை. அதை எல்லாம் அடக்கி வச்சிக்கிட்டு தானே என்னை அவ படிக்க அனுப்பினா… அந்த வருத்தம் அவளுக்கு கொஞ்சம் கூட கிடையாது. அந்த அளவுக்கு பக்குவப்பட்டவ…

அதை விட அவ ரொம்ப நல்லவ.. அவளை நீங்க மொதல்ல பார்த்திருந்தா என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கவே பிடிச்சிருக்காது… நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தாலும்… அவளோட அந்த சாந்தமான குணத்துனாலயே அவ ரொம்ப அழகா இருப்பா… ஒருநாள் உங்களுக்கு நான் அவளோட போட்டோ காட்டறேன் பாருங்க” கொடி சொல்லவும், என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு உணர்வு பீஷ்மாவின் மனதினில் ஏற்பட்டது.

ஏதோ மனதை பிசைவது போல… எதோ அந்தப் பெண் தனக்கு பரிச்சயம் என்பது போன்ற ஒரு உணர்வின் ஒலியை இதயம் எழுப்புவதை அவனால் தடுக்கவும் முடியாமல் அமர்ந்திருந்தான்.

“கிளம்பும்போது… ‘நான் உனக்கு பணம் அனுப்பறேன்… உனக்கு வேண்டியதை வாங்கிக்கோ.. கேட்க சங்கடப்பட்டுக்கிட்டு இருக்காதே’ன்னு சொல்லிட்டு கிளம்பினா.

அவ பேசறத கேட்க கேட்க நான் எவ்வளோ சுயநலமா நடந்து இருக்கேன்னு அப்போவே எனக்கு புரிஞ்சு போச்சு…. என் அம்மா ஸ்தானத்துல இருந்து என்ன பார்த்துக்குவேன்னு சொல்லறவள எப்படி புரிஞ்சிக்காம விட்டேன்னு ரொம்ப நொந்து போய்ட்டேன்…. அந்த நேரம் நான் எவ்வளவு துடிச்சு போயிருப்பேன்னு உங்களுக்கு தெரியாது. அப்படியே செத்து போயிட்டேன்.. ஓடிப் போய் அவளோட கையைப் பிடிச்சிட்டு அவகிட்ட மன்னிப்பு கேட்டேன்..

எனக்கு படிப்பும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. நான் அவ கூடவே திரும்ப வந்துடறேன்னு எவ்வளவோ சொன்னேன்… அவ கேட்கவே இல்ல…

‘உன்னோட அக்கா என் கிட்ட அடம் பிடிக்காம நீ என்ன பக்கத்து வீட்லயா அடம் பிடிப்ப? பேசாம நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போற வழியைப் பாரு’ன்னு அவ சொன்னா.. என்னை சமாதானப்படுத்திட்டு அவ ஊருக்கு கிளம்பி வந்துட்டா…

என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கறவளுக்கு துணையா நான் அவ கூட தானே இருந்திருக்கணும்.. இல்லையே.. நான் காலேஜ்ல அவ சொன்னான்னு தங்கிட்டேன். இங்க அந்த குணா என்னைப் படுத்தறதை  sஎல்லாம் விட அவளை அதிகமா தொல்லை செய்திருக்கான்… பாவம் எனக்காக அவ எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு இந்த ஊர்ல இருந்தா…” கொடி சொல்லிக் கொண்டே வர, பீஷ்மா அங்கிருந்த தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹ்ம்ம்… பாவம் அவ.” அவனது வாய் தானாகவே முணுமுணுக்க, ‘ஹ்ம்ம்…’ என்ற முணுமுணுப்புடன்,

“திடீர்னு ஒரு நாள் என்னோட காலேஜ்க்கு மாரியக்கா போன் செய்தாங்க.. அப்போ தான் பெரியய்யா இறந்துட்டாங்கன்னு செய்தி சொல்லிட்டு… பெரியய்யா அகாலமா இறந்ததுல ரெண்டு வருஷத்துக்கு உங்க அக்காவுக்கு கல்யாணம் நடக்காது கொடி.. ஏதோ இறந்த நேரம் சரி இல்லன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு ரெண்டு வருஷத்துக்கு ஏதோ செய்யணுமாம்… நீ நிம்மதியா இருன்னு சொன்னாங்க…  

‘அய்யா’ சாமியா நின்னு மலரை காப்பாத்திட்டாங்கன்னு தான் எனக்கு தோணிச்சு. இந்த ரெண்டு வருஷத்துல அவளுக்கு வேற நல்லது நடக்காதான்னு கடவுள் கிட்ட தினம் தினம் வேண்டிக்கிட்டு இருந்தேன்.. லீவ்ல வரும்போது எல்லாம் அவளோட சுமையை குறைக்க அவ கூட சேர்ந்து வேலைக்கு போவேன்… ‘படிக்கிற புள்ள வேலை செய்யாதே’ன்னு அவ சத்தம் போடுவா… ஆன என்னால அவளுக்கு அதாவது உதவ முடிஞ்சா சரிதான்னு நானும் வேலைக்கு போவேன்… இதுக்காக அவ என்ன திட்டினாலும் என் மேல ரொம்ப பாசம்…” என்றபடி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,

“ஆனா… நாலு மாசத்துக்கு முன்ன.. மறுபடியும் மாரியக்காகிட்ட இருந்து போன் வந்துச்சு.. அது தான் அவங்க செய்யற இரண்டாவது போன்.. மொதல் தடவ சந்தோஷத்துல பேசினவங்க… இந்த தடவ அழுகையை தவிர வேற ஒண்ணுமே இல்ல… ‘நீ உடனே தஞ்சாவூர் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வா கொடி’ன்னு சொல்லிட்டு வச்சிட்டாங்க… அவங்க குரலே எதுவோ நல்லது இல்லன்னு மட்டும் புரிஞ்சது. அங்க ஓடிப் போனா… மலர்… மலர்…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு, இப்பொழுது தான் அந்த காட்சி நடந்துக் கொண்டிருப்பது போல பீஷ்மாவின் நெஞ்சில் சாய்ந்து அழுதவளை சமாதானம் செய்ய முடியாமல் பீஷ்மா அமர்ந்திருந்தான்.

“தஞ்சை.. நாலு மாசம்…” இந்த இரண்டு சொற்களும் அவனது மனதினில் எதையோ உணர்த்துவது போல இருந்தது. அந்த குரலை அசட்டை செய்யவும் முடியாமல், கொடி அழுவதை பொறுக்கவும் முடியாமல் அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான். அந்த அரவணைப்பு தனக்கு தேவை என்பது போல அவனிடம் ஒண்டியவள்,

“மலரும் ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டா.. அவளை ஜி.எச்ல போய் பார்த்தபோது, நான் இந்த உலகத்துல அநாதையானது போல இருந்தது… நான் மட்டும் அழுது அடம் பிடிச்சு படிக்க போகலைன்னா அவ கூட நான் துணைக்கு இருந்திருப்பேன்… அவளை இப்படி சாக விட்டிருக்க மாட்டேன் இல்ல…” அழுகையுடன் கேட்டவளை தன்னோடு அணைத்துக்கொண்டவன்,

“எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு…” தொண்டையில் இருந்து வார்த்தை வராமல் தடுமாற்றத்துடன் கேட்க,

“ரோட்டை கிராஸ் பண்ற அப்போ ரெண்டு காருக்கு நடுவுல சிக்கிக்கிட்டான்னு சொல்றாங்க… ஒருத்தர் என்னடான்னா… கார்ல இருந்து அந்த பொண்ணு தவறி விழுந்தது… அதை கவனிக்காம வந்த இன்னொரு கார் அவ மேல ஏறிடுச்சுன்னு சொல்றாங்க.. நடந்ததை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமா சொல்றதுனால ஆக்சிடென்ட்ன்னு போலீஸ் கேஸ் க்ளோஸ் பண்ணிட்டாங்க…” அவனது நெஞ்சுக்குள் புதைந்துக் கொண்டே சொன்னதும்,

“காரா?” பீஷ்மா அதிர்ந்து அவளைப் பிடித்து நிமிர்த்தினான்.

“ம்ம்…” கொடி முணுமுணுப்பாக பதில் சொல்ல, 

“என்ன கலர் கார்? எந்த காருன்னு உனக்கு அடையாளம் தெரியுமா?” மனதில் சூழ்ந்திருந்த பயத்தில் பீஷ்மா படபடப்பாகக் கேட்க,

“தெரியல… அவ அப்படி எல்லாம் யார் கார்லையும் ஏற மாட்டா… அவ ரோட்டை கிராஸ் பண்ணும்போது தான் இடையில சிக்கி இருக்கணும்…” கொடி தன்னுடைய யூகத்தைச் சொல்ல, பீஷ்மாவின் இதயம் பலமடங்கு துடித்தது.

அவனது நெஞ்சத்தில் சாய்ந்திருந்தவளோ அவனது இதயத்தின் துடிப்பை உணர்ந்து, “எங்க அக்கா கதையை கேட்டு டாக்டரான நீங்களே இவ்வளவு பதட்டப்படறீங்க.. எனக்கு எப்படியிருக்கும்?” என்றவள், அவனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து,

“இந்த இடம் எங்க அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும். பேய் நடமாடும்ன்னு சொன்னா… ‘நான் தான் பேய்’ன்னு சொல்லிட்டு இங்க வந்து உட்கார்ந்து இந்த அமைதியை ரொம்ப ரசிப்பா… அதான்.. அந்த மாதிரி அவ இங்க இருக்காளான்னு தேட ஆசை வந்துச்சு… இங்க வந்தேன்…” என்றவள்,

“ஆமா டாக்டர் சார்… உங்களுக்கு இந்த இடம் பிடிக்குமா? நீங்க இங்க இதுக்கு முன்ன வந்திருக்கீங்களா?” கொடி கேட்டது தான் தாமதம், பீஷ்மாவின் உடல் சில்லிட்டு போனது.

“உங்க… உங்க அக்காவோட பேர் என்ன சொன்ன? அதாவது முழு பேர்…” திக்கித் திணறி பீஷ்மா கேட்க,

“மலர்… மலர்கொடி… என் பேர் பூங்கொடி… ரெண்டு பேரும் பூவைப் போல இருக்கணும்ன்னு எங்க அம்மா பார்த்து பார்த்து வச்சாங்க…” கொடி சொல்லவும், பீஷ்மா அதிர்ந்து போனான்.

அவனது கண்கள் அவனது அனுமதியின்றியே கலங்கத் துவங்கியது. தான் தஞ்சையில் பார்த்த பெண் தான் மலர் என்பது உறுதியாகாமலே நெஞ்சம் மட்டும் அவளுக்காக துடிக்கத் துவங்கியது.

“ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்…” அவனது கைகள் தடுமாற, தொண்டை வறண்டு போனது போல இருக்க, கைகள் நடுங்க தனது செல்போனை எடுத்து, தஞ்சையில் தான் எடுத்த அவளது புகைப்படத்தை எடுத்தவன், அதையே சில வினாடிகள் உற்று நோக்கினான்.

கண்களில் தேங்கி இருந்த கண்ணீரால் ஒழுங்காக பார்க்க முடியாமல் போக, அதை மடியில் வைத்து விட்டு, தனது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டவன், தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள சில வினாடிகள் அப்படியே கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

அதற்குள் அந்த செல்போனில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த கொடி, “உங்களுக்கு எங்க அக்காவை முன்னயே தெரியுமா? அவளோட போட்டோ எப்படி உங்க செல்போன்ல? அவ இப்படி யாருக்குமே போஸ் கொடுக்க மாட்டாளே..” என்ற கொடியின் குரலில், பீஷ்மாவிற்கு பூமி தட்டாமலை சுற்றியது.    

முகத்தில் இருந்த கர்சீப்பை வேகமாக விலக்கியவன், “என்னது?” அதிர்ச்சியுடன் அந்த சொல்லை சொல்லி முடிப்பதற்குள் குரல் திக்கித் திணறி கண்ணீரை வார்க்கத் தொடங்கியது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவனது மண்டையைத் தாக்க, அதை விட மலர் உயிரோடு இல்லை என்ற செய்தி அவனது உயிரை வலிக்கச் செய்ய, வலியைத் தாங்க முடியாமல் பீஷ்மா அமர்ந்திருக்க, 

“இது எங்க அக்கா மலர்.. அவளோட போட்டோ எப்படி?” கொடி சொல்லி முடிப்பதற்குள் அவளது குரலும் தேய்ந்து போனது.

“அவளை நீங்க பெரிய கோவில்ல பார்த்தீங்களா?” அந்த செல்போனை பார்த்துக் கொண்டே கேட்டவளைப் பார்த்த பீஷ்மாவின் தலை மட்டும் தானாக அசைந்தது.

“எங்க அம்மா இறந்ததுக்கு அப்பறம் அன்னைக்கு தான் அவ பெரிய கோவிலைப் பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டு போனதா மாரியக்கா சொன்னாங்க… அன்னைக்கு தான் அவ கார்ல அடிப்பட்டு அந்த இடத்துலேயே…” சொல்லி முடிக்கும் போதே பீஷ்மாவை பரிதாபமாகப் பார்த்தவள், அவன் எதுவும் பேசாமல் கண்ணீருடன் அமர்ந்திருக்கவும், மீண்டும் செல்போனையே வெறிக்கத் துவங்கினாள்.

“எங்க அக்கா ரொம்ப அழகு இல்ல…” கொடி கேட்கவும்,

“மலர்… மலர்…” பீஷ்மாவின் இதழ்கள் வலியுடன் முணுமுணுத்தது.

இருவருக்கும் இடையில் வலிகள் நிரம்பிய மௌனம். கொடி ஒன்றும் அவ்வளவு முட்டாள் அல்ல. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணக்கிற்கு சரியான விடையை எளிதாக கண்டு பிடிப்பவள் போல, மலரின் புகைப்படத்தைப் பார்த்ததும், பீஷ்மா தன்னிடம் மலர் என்று நினைத்துத் தான் பழகி இருக்கிறான் என்பது தெரியவும் அவளது காதல் மொட்டிலேயே கருகுவது போல இதயம் வலித்தது.

அதே நேரம், தான் ஒருநாள், சில மணித்துளிகளே பார்த்திருந்தாலும், தனது உயிரில் கலந்தவள் உயிரோடு இல்லாத உண்மை முகத்தில் அறைய, பீஷ்மா குலுங்கி அழத் தொடங்கினான்.

அவனது முகத்தைப் பார்த்த கொடிக்கு தான் என்ன செய்வதென்றே புரியாத நிலை.. மலங்க விழித்துக் கொண்டு பீஷ்மாவின் முகத்தை அவள் பார்க்க, முதல் வலி தீர அழுது ஓய்ந்தவன், “அவ அந்த கோவில்ல இருந்து கிளம்பும் போது யாரோட கார்லையே ஏறினா.. மொதல்ல அவ அந்த கார் உள்ள இருந்தவங்க கிட்ட ஏதோ சண்டை போட்டா… அப்பறம் பதட்டமா ஏறினா.. அவ சண்டை போடறதைப் பார்த்து நான் அவ பக்கம் போனேன்… அதுக்குள்ள அவ கார்ல ஏறவும் கார் வேகமா கிளம்பிடுச்சு…” சோகம் இழையோடிய குரலில் சொன்னவனைப் பார்த்த கொடி,

“நீங்க தான் அவளை கடைசியா பார்த்தது.. அது தான் அவளோட கடைசி நிமிஷம்..” மனதின் வலியை குரலில் காட்டாமல் சொன்னவளைப் பார்த்தவன், மீண்டும் தனது கண்ணீரை மறைக்க கைக்குட்டையின் உதவியை நாடினான். முகம் மட்டுமே மறைந்திருந்தாலும், அவனது மனம் அவன் ஊருக்குள் வந்த தினம் முதல் நடந்தவைகள் அனைத்தையும் அசை போட்டு ஒரு தெளிவு பெற போராடி அதில் வெற்றியும் கண்டது.

“சரி… நீ கிளம்பு… எனக்கு தனியா இருக்கணும்..” குரல் மட்டும் வர, கொடி அவனைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தாள்.

“நீங்க இங்க தனியா உட்கார்ந்து என்ன செய்யப் போறீங்க? பேய் நடமாட்டம் இருக்கும்..” இப்பொழுது அவனுக்கு தான் தான் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று உணர்ந்தவள் போல கொடி சொல்லவும்,

“அதெல்லாம் உங்க அக்கா என்னை எதுவும் செய்ய விட மாட்டா.. இப்போ கூட இங்க தான் நின்னு நாம பேசறதை லூசு மாதிரி கேட்டுட்டு இருப்பா… வேணா அவளை வரச் சொல்லி கூப்பிடவா…” பீஷ்மா சொன்னதைக் கேட்டவள், அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, பீஷ்மா தலையை மட்டும் இசைவாக அசைத்தான்.

“அவ… அவ உங்க கண்ணுக்கு தெரிஞ்சாளா? அப்போ நிஜமா அவ பேயா சுத்திட்டு இருக்காளா? ஊர்ல பலபேர் சொன்னது நிஜம் தானா? அப்போ ஏன் அவ என் கண்ணுல மட்டும் படல… ஒருவேளை நான் தான் அவளோட இந்த நிலைக்கு காரணம்ன்னு நினைச்சிட்டாளோ?” படபடப்புடன் கேட்டவள், பீஷ்மா பதில் சொல்லாமல் தன்னுடைய சோகத்திலேயே உழன்றுக் கொண்டிருக்கவும்,

“அப்படி இருந்தும் ஏன் அந்த குணாவை அவ சாகடிக்கல.. அவனை கழுத்தை நெரிச்சு கொலை செய்திருக்கலாம் இல்ல… இல்ல பேய்யடி அடிச்சு துவைச்சு அவனுக்கு நினைவே இல்லாம செய்திருக்கலாம் இல்ல… ஏன் இப்படி நான் கஷ்டப்படறதை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கா?” கொடி புலம்பிக் கொண்டிருக்க,   

சிறிது நேரம் அவள் புலம்புவதைக் கேட்டவன் தனது அதிர்ச்சியில் இருந்து மீண்டு, “உங்க அக்கா உனக்குத் துணையா இங்க தான் இருக்க கொடி. அவ உனக்கு வாக்கு கொடுத்தது போல உன்னை விட்டு எங்கயும் போகவே இல்ல… ஏன் அவ குணாவை எதுவும் செய்யலன்னு எனக்கு தெரியல… அவ என்கிட்ட இருந்து என்ன எதிர்ப்பார்க்கறான்னும் புரியல.. அவ நினைச்சா குணாவை ஒரே நாள்ல ஏதாவது செய்ய முடியும்… அந்த அளவு கோபம் அவகிட்ட இருக்கு… ஆனா… ஏன் அமைதியா இருக்கான்னு தான் புரியவே இல்ல…” என்றவன்,

“அடுத்த தடவ அவளைப் பார்க்கும் போது கேட்கணும்” என்று சேர்த்துச் சொல்ல, கொடி நம்ப முடியாமல் தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

“நான் சொல்றது தான் உண்மை.. உன்னை அவன்னு நினைச்சு தான் முதல் நாளே பேச வந்தேன். ஏன்னா.. நான் ஊருக்குள்ள கால் எடுத்து வச்ச உடனே அவளை நான் பார்த்துட்டேன்..” பீஷ்மா சொல்லிக் கொண்டே போக, கொடி குலுங்கி அழத் தொடங்கினாள்.

“அவளுக்கு செய்ய வேண்டிய காரியம் எதுவுமே செய்யாம எங்க அப்பன் விட்டதுனால ஆத்மா சாந்தி அடையாம இப்படி பேயா அலய விட்டுட்டாங்களே..” கொடி மனம் ஆறாமல் புலம்ப,

“ப்ளீஸ் கொடி.. நீ வீட்டுக்குப் போ.. எனக்கு இங்க தனியா இருக்கணும்.. அந்த மலர் வந்தா.. நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேள்வி கேட்கணும்…” பீஷ்மா கோபமாகச் சொல்ல, கொடி ஒருமாதிரி அவனைப் பார்த்துக் கொண்டே அவனிடம் செல்லைத் திருப்பிக் கொடுத்தவள், அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

போகும் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மா தன் தலையிலேயே அடித்துக் கொண்டு கையில் இருந்த செல்போனில் பார்வையை பதித்தான்.

அந்த திரையில் தெரிந்த உருவத்தை பார்த்துக் கொண்டே இருந்தவனது மன ஓலம் தாங்க முடியாமல் மீண்டும் அழத் தொடங்கினான். சிறு வயதில் இருந்தே தைரியத்திற்கும், கம்பீரத்திற்கும் பெயர் பெற்ற பீஷ்மா இன்று தனது மனம் கவர்ந்தவள் உயிரோடுயில்லாமல் ஆவியாய் சுற்றிக் கொண்டிருப்பது அவனது மனதை அசைத்துப் பார்க்க, அது கண்ணீராய் வெளிப்பட்டது.

“ஏண்டி என்னை இப்படி படுத்தி எடுக்கற? ஏண்டி கொடி வேற நீ வேறன்னு என்கிட்டே சொல்லவே இல்ல. நான் நீன்னு நினைச்சுத் தான் அவ கூட பழகறேன்னு உனக்குத் தெரியும் தானே… அப்பறம் ஏன் இப்போ கொடியை இதுல இழுத்து விட்டு இருக்க? அவ நீ இல்லன்னு தெரிஞ்ச அப்பறம் நான் எப்படி அவளை கல்யாணம் செய்துக்க முடியும்? இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம் மலர்..” என்றவன், மீண்டும் தனது தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“அன்னைக்கு நீ சொன்ன பேரை ஒழுங்கா புரிஞ்சிக்காம நான் செய்த முட்டாள் தனம் தான் இது எல்லாத்துக்கும் காரணம்..” அவன் புலம்பிக் கொண்டிருக்க, அவன் அருகே மலர் அமைதியாக வந்தமர்ந்தாள்.

18 COMMENTS

 1. super ippadi oru thirupatha naan ethir pakkala so nice.paavam la malar. innum poradikittu iruka.ini bisma enna mudivu eduppan.

 2. Hai Ramya, appo Malar is alive?
  ohh, I am so happy
  wow, what a twist? ada ada ada
  ok, ramya, but Bishma yaarai marriage pannippan?
  Malarkodi or Poongodi?
  waiting for next ud eagerly ya

LEAVE A REPLY