SHARE

                         

“இவ என்ன இவ? வரா… ஓடிப் போறா? என்னவோ கண்ணாமூச்சி ஆட்டம்ன்னு சொல்றா? ஆட்டம் நல்லா இருக்கான்னு கேட்கறா? இவ மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கா?” என்று யோசிக்கத் தொடங்கிய பீஷ்மாவின் மனம் குழம்பிய குட்டையாக இருந்தது.

“என் கையை கட்டையால அடிச்சு இருக்காங்க… ஆனா.. அதை நான் உணரக் கூட இல்லையே.. அப்போ நான் என்ன செய்துட்டு இருந்தேன்? ஒரு வலியைக் கூட உணர முடியாத அளவுக்கா நான் இவளை வேடிக்கைப் பார்த்துட்டு இருந்திருக்கேன். இவ என்ன இவ்வளவு புரியாத புதிரா இருக்கா?” மேலும் குழம்பிக் கொண்டிருந்தவனின் முன் துரை வந்து நின்றான்.

அவன் முகம் முழுவதும் சிந்திய பூரித்துப் போய் இருப்பதைப் பார்த்தவன், “என்ன துரை? இங்க என்ன நடந்திட்டு இருக்கு? நீங்க என்னவோ காமெடி படம் பார்த்துட்டு வந்த ரேஞ்சுக்கு முகமெல்லாம் சிரிப்போட வரீங்க?” ஒருமாதிரிக் குரலில் கேட்க, துரை வெளிப்படையாகவே புன்னகைத்தான்.

“இல்ல சார்… நம்ம அய்யாவோட மூக்கு ஊருக்கு முன்னால உடைஞ்சு சிதறினதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு… அது தான் என்னால சந்தோஷத்தை அடக்கவே முடியல..” குரூரப் புன்னகையுடன் கூறியவனைப் பார்த்த பீஷ்மா மேலும் குழம்பி,

“ஏன்யா… இந்த ஊர்ல எல்லாரும் நல்லா தானேய்யா இருக்கீங்க?” கடுப்புடன் கேட்க,

“ஏன் சார்… நாங்க நல்லா தானே இருக்கோம்? அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்?” துரையின் பதில் கேள்விக்கு, அவனை முறைத்த பீஷ்மா,

“இல்ல… உங்க ஊர்ல உங்க அய்யா மூக்கு உடை படறதுல உனக்கு அப்படி என்னய்யா சந்தோசம்? அதுவும் நீங்க?”

“ஏன் எனக்கு என்ன?” இடைவெட்டியவனைப் பார்த்து பெருமூச்சு விட்டவன்,

“இந்த ஊருக்குள்ள நான் வரும்பொழுது அந்த அய்யா என்னவோ இந்த ஊரைக் காக்க வந்த குலசாமி ரேஞ்சுக்கு நீங்க பில்ட் அப் கொடுத்தீங்க.. இப்போ என்னடான்னா.. என்னவோ வில்லன் ரேஞ்சுக்கு சொல்றீங்க?” மனதினில் பட்டதை பீஷ்மா கேட்டுவிட, துரை சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தான்.

“என்ன சொல்றதுன்னு வார்த்தையை தேடிக்கிட்டு இருக்கீங்களா?” நக்கலாக பீஷ்மா கேட்க, ‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைத்த துரை,

‘சார்… எங்க பெரிய அய்யா எங்களைக் காக்க வந்த குலசாமி போல தான்.. யாராவது வந்து குழந்தை பிறந்திருக்கு, கல்யாணம், கருமாதின்னு அவருக்கு தகவல் சொன்னாலும், ஒரு மூட்டை நெல், ரெண்டு தென்னை மரம், கல்யாணத்துக்கு பட்டுப்புடவையும், கல்யாண பந்திக்கு தேவையான அரிசியும், கருமாதிக்கும் அதுக்குத் தேவையான எல்லாமே தானமா தந்து அவங்களை அனுப்பி வைப்பாரு..

அவங்க வீட்டம்மாவும் அப்படித் தான். ஏன் கொடுக்கறீங்க? எதுக்கு என்ன ஏதுன்னு? எதுவுமே கேள்வி கேட்காம சிரிச்ச முகத்தோட கொடுத்து அனுப்புவாங்க… அப்படி உத்தமமா வாழ்ந்தவங்களோட நெடுநாளைய தவத்துக்கு பிறந்தவர் தான் இந்த சின்னய்யா. அய்யாவோட நேரெதிர் குணம் கொண்டவாரு..” துரை சொல்லிக் கொண்டே போக,  

“செல்லம் கொடுத்து கெடுத்துட்டாங்கன்னு சொல்ல வரீங்க?” அவனது கேள்விக்கு,

“இல்ல.. அவங்க ரெண்டு பேருமே கண்டிச்சு தான் வளர்த்தாங்க. ஆனா.. ஊர்ல உள்ளவங்க எல்லாம் அவங்க குலசாமியோட வாரிசுன்னு செல்லம் கொடுக்க, அதுவே எங்களுக்கு எல்லாம் வினையா போச்சு..” என்ற துரை கண்கள் கலங்க,

“வேலியே பயிரை மேய்ஞ்சது போல… சின்னவரு இருபது வயசைத் தாண்டினதும், பொண்ணுங்களை கிண்டல் செய்யறது, அவங்க மேல கை வைக்கிறதுன்னு அக்கிரமம் செய்ய ஆரம்பிச்சிட்டான். இதுல என்னோட மனைவியும் அடக்கம்…” என்றவன், குலுங்கி அழத் தொடங்கினான்.

“துரை..” பீஷ்மா அதிர,

“ஆமாங்க டாக்டர் சார்.. என் மனைவி ரொம்ப அழகா இருப்பா… கொடி அளவுக்கு எல்லாம் இல்ல.. ஆனாலும் பார்க்க லட்சணமா இருப்பா. நான் குறைவா சம்பாதிக்கிறேன்னு அவளுக்கு ரொம்ப வருத்தம். அதனால என் கூட அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டே இருப்பா.. அதை தெரிஞ்சிக்கிட்டவன், அவகிட்ட ஆசை வார்த்தை பேசி, பணத்தைக் காட்டி, அவனோட வலையில இழுத்து, அவளை நாசம் பண்ணிட்டான்.

அந்த விஷயம் எனக்குத் தெரிய வர, நான் கோபத்துல அவளை அடிச்சிட்டேன்.. அதுக்கு கோவிச்சிக்கிட்டு அவர் வீட்டோட போறேன்னு போனவ, திரும்ப வரவே இல்ல.. எங்க அம்மா போய் அய்யா வீட்ல கேட்ட போது, அவ இங்க வரவே இல்லன்னு பெரியவர் சொன்னாரு.. சின்னவருக்கு கிட்ட போய் எங்க ஆத்தா மன்றாடி கேட்ட போது, இந்த ஊரை விட்டே அவ போயிட்டான்னு சொன்னாங்க.. நானும் மானத்துக்கு அஞ்சி அவளைத் தேடவே இல்ல… எங்க இருக்காளோ பாவி..” ஆக்ரோஷமாக துரை முடிக்க, பீஷ்மா அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாலும், அந்த குணா மீது கொலைவெறியே எழுந்தது.

“அந்த சண்டாளன் கிட்ட சண்டை போடலாம் தான்… ஆனா… என் மானம் போயிரும்.. அதனால எங்க ஆத்தா அவ என்கிட்டே சண்டை போட்டுக்கிட்டு ஊரை விட்டு போயிட்டான்னே சொல்லிடுச்சு. எல்லாம் என் விதி டாக்டர் சார். அவன் இன்னைக்கு ஊருக்கு முன்ன தலைகுனிஞ்சு நின்னது எங்கள்ள எத்தனை பேருக்கு மனசுல குளுகுளுன்னு இருந்துச்சு தெரியுமா? பல பெத்தவங்க வயித்துல அப்படியே ஆயிரம் லிட்டர் பாலை கொட்டினது போல குளிர்ந்து போச்சு…” என்றவன், பீஷ்மாவின் கையைப் பிடித்து,

“நீங்க தான் அந்த குணாவை ஏதாவது செய்யணும்…” அது உங்களால முடியும்.. அவன் உங்களுக்கு பயப்படறான்…” வெறியுடன் சொல்ல, பீஷ்மாவிடம் அமைதியே பதிலாகக் கிடைத்தது.

“என்ன சார் பேச மாட்டேங்கறீங்க? வெளியூர்காரன் நமக்கு எதுக்கு வம்புன்னு நினைக்கறீங்களா?” துரை கேட்க,

“இல்ல… அப்படி இருந்திருந்தா… உங்கள்ள ஒருத்தனா நின்னு கொடி அவன் கைல சிக்கி கஷ்டப்படறதை வேடிக்கைப் பார்த்துட்டு உச்சு கொட்டிக்கிட்டு இருந்திருப்பேன்..” நக்கலாக அவனுக்கு ஒரு குட்டு வைத்தவன்,

“போலீஸ்ன்னு ஒண்ணு இருக்குல்ல.. அதுக்கு நீங்க எல்லாருமே ஒரு மனு கொடுத்திருக்கலாமே..” அவனது கேள்விக்கு,

“கொடுத்தா… கொடுத்தா.. அந்த மனு எல்லாம் எடைக்குப் போட்டு வடை சாப்பிட்டு போயிருவாங்க. அப்படி கொடுத்த ரெண்டு மூணு பேரோட மனுவோட சின்னய்யா அவங்க வீட்டுக்கு வந்து, அதை அவங்க முன்னாலேயே கிழிச்சுப் போட்டதை பார்த்து, யாருங்க மனு கொடுப்பாங்க. அவங்க வடை சாப்பிட நாம ஏங்க மனு கொடுக்கணும்.. வர போலீசை எல்லாம் அவன் எப்படியோ சமாளிச்சு, விலைக்கு வாங்கிடறாங்க சார்.. எங்களுக்கு ஒரு விடிவு வராதான்னு நாங்க காத்துக்கிட்டு இருந்தோம்… நீங்க வந்தீங்க..” நக்கலாகவும், ஆத்மார்த்தமாகவும் சொன்னவன்,

“போலீஸ் எல்லாம் சரிபடாது சார். அவன் கையை முறுக்கினீங்க இல்ல.. அது போலவே அவனோட காலையும் உடைச்சு எடுங்க டாக்டர் சார். அது தான் அவனுக்கு கொடுக்கற நல்ல தண்டனையும் கூட“ துரை கோபத்தில் பொரிந்துக் கொண்டிருக்க, பீஷ்மாவிற்கு துரையை நினைத்து பாவமாக இருந்தது.

“நீங்க சிரிச்சு கலகலன்னு பேசிட்டு, கிண்டல் செய்யறது எல்லாம் பார்த்து…” பீஷ்மா சொல்லிக் கொண்டு வரும்போதே,

“இந்த கோமாளி வேஷமே நான் ஊரை ஏமாத்தறதுக்குத் தான் சார்..” என்றவன் கண்களை துடைத்துக் கொண்டு,

“அந்த கொடியை நீங்க விரும்பறீங்கன்னு எனக்குத் தெரியும் சார்.. அந்தப் பொண்ணு ரொம்ப பாவம்.. தினம் தினம் அவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குது. சீக்கிரமே அதை இங்க இருந்து கூட்டிக்கிட்டு போயிடுங்க. அவளோட அக்காவோட கதி தான் அற்பாயுசா போச்சு. இதாவது நல்லா வாழட்டும்…” என்று துரை சொல்லவும்,

“அவங்க அக்கா எப்படி இருப்பாங்க? கொடிக்கும் அவங்களுக்கும் ரொம்ப வயசு வித்யாசமா?” பீஷ்மா கேட்க,

“அந்தப் பொண்ணும் கொடியைப் போலவே தான்… ரொம்ப அழகா இருக்கும்… ரொம்ப சாந்தமும் கூட… கொடியை விட அந்த பொண்ணு இன்னும் கொஞ்சம் அழகா இருக்கற மாதிரி தோணும்… ரெண்டும்…” என்று துரை தொடங்கும் நேரம், வாயில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு, இருவரும் திரும்பிப் பார்க்க, அந்த இடம் யாரும் இல்லாத வெற்றிடமாக இருந்தது.

“யாரோ கதவைத் திறந்த சத்தம் கேட்டது இல்ல துரை..” சந்தேகமாக பீஷ்மா கேட்க,

“ஆமா சார். கேட்டுச்சே.. யாராவது வெளிய நிக்கறாங்களோ?” துரை வெளியில் சென்று பார்க்க, யாரும் வந்த சுவடு கூட இல்லாமல் போகவும், வீட்டைச் சுற்றி தேடி விட்டு வந்தான்.

“யாருமே இல்ல டாக்டர் சார்.. ஆனா… யாரோ கதவைத் திறந்தாங்க…” அவன் அடித்துச் சொல்லவும்,

“ஆமா துரை.. யாரா இருக்கும்? ஒருவேளை காத்தா இருக்குமோ?” பீஷ்மா கேட்டுக் கொண்டே அருகில் இருந்த மரத்தை நோட்டம் விட்டுக் கொண்டேச் சொல்ல,

“எல்லா மரமும் பிடிச்சு வச்ச பிள்ளையார் போல நிக்குது.. இதுல காத்தடிச்சு கதவு திறக்குதோ?” எப்பொழுதும் போல துரை கிண்டல் செய்யவும், சிரித்துக் கொண்ட பீஷ்மா,

“உள்ள போய் கதவை சாத்திட்டு தூங்கலாம் துரை… சாயந்திரம் நடந்தது மாதிரி அந்த குணாவோட ஆளுங்க வந்து நம்மளை அடிச்சுப்போட்டுட போறாங்க.. வாங்க உள்ள போயிடலாம்..” பீஷ்மா சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல, துரை வேகமாக அவனோடு உள்ளே சென்று கதவடைத்தான்.

“சார்.. என்ன சொல்றீங்க? அந்தாளு உங்களை அடிக்க ஆளை ஏவினானா?” அதிர்ச்சியுடன் துரை கேட்க,

“ஆமா துரை..” என்று நடந்தவைகளை அவன் சொல்லவும், துரையின் இதழ்களின் புன்னகை நெளிந்தது.

“என்ன துரை? நான் அடிபட இருந்தது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா? நான் எங்க அம்மாவுக்கு ஒரே பையன்.. அவங்க கூடிய சீக்கிரம் இங்க வரேன்னு சொல்லி இருக்காங்க.. அவங்க வர வரைக்கும் நான் நல்லா இருக்க வேண்டாமா?” பீஷ்மா கிண்டலடிக்க,

“இல்ல டாக்டர் சார்.. அந்த கொடிப் பொண்ணு வெறி பிடிச்சவ போல நடந்துக்கிட்டான்னு சொன்னீங்க இல்ல… அது அவளோட வேலை இல்ல டாக்டர் சார். அவளோட அக்கா அவ உடம்புல புகுந்து அவளை ஆட்டி வச்சு அவனுங்களை புரட்டி எடுத்து உங்களை காப்பாத்தி இருப்பா. அற்பாயுசுல போற பொண்ணா அது? ரத்த வெள்ளத்துல அதோட முகத்தை பார்க்கவே முடியல..” மீண்டும் துரை தொடங்க,

“சுத்தம்… நீங்களும் இப்போ பேய் கதை சொல்லப் போறீங்களா துரை… எனக்குத் தூக்கம் வருது…” என்று பீஷ்மா சென்று தனது படுக்கையில் படுத்துக் கொள்ள,

“நிஜமா… அந்தப் பொண்ணு இந்த ஊருக்குள்ள உலாத்துறதா நான் கேள்விப்பட்டேன் டாக்டர் சார்.. நிறைய பேர் அவளை மல்லிகை தோட்டத்துல பார்த்தேன்.. மாமரத் தோப்புல பார்த்தேன்னு சொன்னாங்க…” துரையும் பேசிக்கொண்டே படுக்க,

“ஏன் துரை வீட்டுக்குப் போலையா? அம்மா தனியா இருப்பாங்க இல்ல…”

“இல்ல சார்… அம்மா அக்காங்க வீட்டுக்கு போயிட்டு வரேன்னு போயிருக்காங்க.. வர ஒரு வாரம் ஆகும்…” என்றவன், நேத்தே உடம்பு முடியலன்னு சொல்லிட்டு இருந்தீங்க சார்.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க..” என்ற துரை விரைவிலேயே குறட்டை விட்டு உறங்கத் துவங்க, பீஷ்மாவிற்கு தூக்கம் வர மறுத்தது.

“நிஜமாவே பேய்ன்னு ஒண்ணு இருக்கா?” என்ற மனதின் கேள்விக்கு,

“ஹ்ம்ம்.. நம்ம ஜி.எச்.ல எந்த நோயும் இல்லாமயே, எதோ முனகறாங்க, கண்ணுல இருந்து ரத்தம் வடியுதுன்னு எத்தனை பேரைப் பார்த்திருக்கோம்.. அப்போ நிஜமாவே அவங்க எல்லாம் பேய் பிடிச்சவங்க தானா? சோட்டாணிக்கரையில எல்லாம் அந்த ஆட்டம் ஆடுவாங்களே…” என்று ஏதேதோ நினைவுகளில் சுற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று ஜன்னலின் வழியே வந்த மெல்லிய பூங்காற்றில்,

“கதவு காத்துக்கு தான் அசஞ்சிருக்கும்…” என்ற முடிவுக்கு வந்தவனாய் கண்களை மூடிக் கொள்ள, சிறிது நேரத்திலேயே நன்றாக உறங்கத் துவங்கினான்.

மறுநாள் பொழுது பீஷ்மாவிற்கு மீண்டும் தென்றலின் தாலாட்டுடன் விடிந்தது. ஜன்னலின் வழியே வந்த மல்லிகைத் தோட்டத்து வாசம் சுமந்த தென்றலில் கண்களை விழித்தவன், நன்கு விடிந்து விட்டதை உணர்ந்து வேகமாக எழுந்து மருத்துவமனைக்குத் தயாராகத் தொடங்கினான்.

“டாக்டர் சார்.. நம்ம கோவில்ல இன்னைக்கு சிறப்பு பூஜை நடக்குது. நீங்களும் வந்து அம்மனை ஒரு எட்டு பார்த்துட்டு அப்பறம் ஹாஸ்பிடலுக்கு போங்களேன். அம்மன் ரொம்ப அழகா இருக்கும். பண்டிகை துவங்க இன்னைக்கு நாள் குறிப்பாங்க..” காலை உணவை எடுத்துக் கொண்டு வந்த மாரி பீஷ்மாவிடம் சொல்ல,

“கோவிலுக்கா… நானா?” அவன் இழுக்க,

“வந்தா நல்லா இருக்கும் சார். நாங்க எல்லாரும் போகப் போறோம்.. அம்மனுக்கு இந்த ஊர்ல விளையற பூவை எல்லாம் இன்னைக்கு காணிக்கையா கொடுப்போம். விதம் விதமான பூவோட அலங்காரம் செய்துக்கிட்டு அம்மன் முகத்துல அருள் சொட்டும் பாருங்க… அந்தப் பொண்ணு இன்னைக்கு பூரா அம்மனைப் பார்த்துக்கிட்டு கோவில்லையே கிடக்கும்..” தன் போக்கில் மாரி பேசிக் கொண்டே போக,

“எந்தப் பொண்ணு…” பீஷ்மா கேட்கவும்,

“எந்த பொண்ணு?….. ஹான்….. ஹான்… அதான்… நம்ம.. நம்ம… அவ தான் கொடி… கொடி.. அவளுக்கு ரொம்ப பிடிக்கும்…” என்ற மாரி, கலங்கிய கண்களுடன்,

“அவளைக் கூட்டிக்கிட்டு நான் கிளம்பறேன். நீங்க வாங்க..” என்று சொல்லிவிட்டு செல்ல, பீஷ்மாவிற்கு எதுவோ நெருடுவது போல இருந்தது.

“இவங்க வேற என்னவோ சொல்ல வந்தாங்க.. ஆனா வேற எதையோ சொல்லிட்டு போறாங்க.. என்னவா இருக்கும்?” என்ற யோசனையோடு அவன் நின்றுக் கொண்டிருக்க, மாரி கொண்டு வந்த உணவைப் பார்த்த துரை,  

“ஓ இன்னைக்கு மாரியக்கா எனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வந்துட்டாங்களா? நான் இன்னைக்கு கோவில் பிரசாதத்தை இல்ல ஒரு வெட்டு வெட்டலாம்ன்னு இருந்தேன்… சர்க்கரை பொங்கலும், புளிசாதமும் அருமையா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே பீஷ்மாவிற்கு உணவை எடுத்து வைக்க, பீஷ்மா யோசனையுடன் அமர்ந்திருந்தான்.

“என்ன சார் யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க? நீங்களும் பொங்கலை ஒரு கை பார்க்கலாம்ன்னு நினைக்கறீங்களா?” துரை கிண்டலாகக் கேட்க, 

“துரை இந்த மாரியக்கா ஏன் அழுதுக்கிட்டே போறாங்க? அவங்களுக்கு என்ன ஆச்சு?” அவன் வேறு கேள்வி கேட்டான்.

“ஏதாவது நினைப்பா இருக்கும் சார்… நீங்க சாப்பிடுங்க. அங்க கோவில்ல இன்னைக்கு பொண்ணுங்க எல்லாம் கூடி இருப்பாங்க. அந்த குணாவும் இருப்பான். நீங்க இருந்தா.. இத்தனை வருஷம் இல்லாம இந்த வருஷம் பொண்ணுங்க நிம்மதியா சாமி கும்பிடுங்க..” யதார்த்தமாக துரை சொல்லவும்,

“நான் என்ன டாக்டரா இல்ல போலீசா… பாதுகாப்புக்கு கூப்பிடறா மாதிரி கூப்பிடறீங்க?” கிண்டல் செய்துக் கொண்டே தட்டில் இருந்த இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டவனின் புருவம் சுருங்கியது.

“இது கொடியோட சமையல் போல இருக்கே..” மனதினில் நினைத்துக் கொண்டவன்,

“ஹ்ம்ம்… அவளே சமைச்சு மாரியக்கா மூலமா கொடுத்து அனுப்பி இருப்பா..” மனதினில் எழுந்த கேள்விக்கு தானே பதிலை யூகித்துக் கொண்டவன், உணவை உண்டு முடித்து துரையுடன் கோவிலுக்குச் சென்றான்.   

செழித்து வளர்ந்திருந்த நெற்கதிர்கள் பச்சை புடவையுடுத்திய பெண்ணென தலை சாய்த்து நின்றிருக்க, அதனை சுற்றி வரப்போரம் கரை கட்டியது போல இருந்த அழகான பூச்செடிகளும்.. ஒருபுறம் தென்னந்தோப்பும்… மறுபுறம் சலசலத்து ஓடும் கால்வாயும் என ரம்மியமாக இருந்த இடத்தின் நடுவே இருந்தது அந்த அம்மன் கோவில்.

கோவிலுக்கு வேலி அமைதார்போல இருந்த வேப்பமரங்கள்… அந்த இடத்தை குளுமையாக வைத்திருந்தது. கண்ணை குளுமையாக்கும் விதமாக அங்கிருந்த வண்ண வண்ண மலர்கள் மிகவும் கவனமுடன் பராமரிக்க படுவதை அந்த இடத்தின் நேர்த்தியே நன்றாக உணர்த்தியது.

“வாவ்… இந்த இடம் இவ்வளவு அழகா இருக்கே… நான் இந்தப் பக்கம் வந்ததே இல்லையே துரை… ஐயோ கேமராவை எடுத்துட்டு வர மறந்துட்டேன் பாருங்க. இருக்கட்டும்… இன்னொரு நாள் வந்து எடுத்துக்கறேன்…” என்று பீஷ்மா அந்த இடத்தை ரசித்து பார்த்துக் கொண்டே நடக்க,

“ஆமா சார்.. அம்மனும் ரொம்ப அழகா இருக்கும்…” என்று சொல்லிவிட்டு துரை பக்தியுடன் உள்ளே செல்ல, எப்பொழுதும் தனது அன்னைக்காகவே கோவிலுக்கு செல்லும் வழக்கம் உடைய பீஷ்மா, அதுவும் அந்த இயற்கைக் காட்சிகள் அவனை படம் பிடிக்க அழைக்க, மெல்ல கொடியைக் காண கண்களை சுழற்றிய படி பீஷ்மா கோவிலினுள்ளே சென்றான்.

அவர்கள் சொன்னது போலவே மலர்கள் மொத்தத்தையும் சூடிக் கொண்டு, உலகின் அழகியாக திரிசூலி காட்சியளிக்கவும், அவனையும் அறியாமல் பீஷ்மாவின் கைகள் உயர்ந்து கூப்பிக் கொண்டு நின்றது.

அம்மனின் அருள் பாலிக்கும் முகத்தை கண்டதும் மனதிற்குள் ஏதோ நிம்மதி பிறந்தது போல ஒரு உணர்வு…

“மாரியக்கா சொன்னது போலவே இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு துரை.. அப்பப்பா… அம்மன் என்ன அழகு?” பீஷ்மா சிலாகித்துக் கொண்டே சுற்றி வந்தான்.

அங்கிருந்த மண்டபத்தில் குணாவும், அவனைச் சுற்றி கோவில் அறங்காவலர்களும் அமர்ந்து, காலெண்டரை வைத்துக் கொண்டு எதையோ ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். திருவிழா தேதியை அறிய பலர் ஆவலாக அங்கு நின்றிருக்க, அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பீஷ்மா அந்தக் கோவிலை சுற்றி வந்தான்.

மாரி, ஓரிடத்தில் தலை சாய்த்து அமர்ந்திருக்க, அவரது அருகில் கொடியும் அதே அளவு சோகத்துடன் அமர்ந்திருந்தாள். ஊரே குதூகலத்துடன் தங்கள் ஊரின் திருவிழாவை எதிர்ப்பார்த்து காத்திருக்க, இவர்கள் இருவரும் இவ்வாறு அமர்ந்திருக்கும் காரணம் அறிய வேண்டி, பீஷ்மா அவர்கள் அருகில் சென்றான்.

“உங்க அக்காவுக்கு பிடிச்ச மல்லிகை பூவை சரமா தொடுத்து அம்மனுக்கு சாத்தினேன். மல்லிகைக்கு நடுநடுவுல ரோஜாவும் மரிக்கொழுந்தும் வச்சு தொடுத்தேன். அப்படித் தொடுத்தா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்… அதுவும் இன்னைக்கு அந்த மாலையை தான் அம்மன் கழுத்துலயும் தலையில கிரீடம் போலவும், அதுல இருந்து ஜடைக்கு பூ அலங்காரம் போலவும் வச்சிருச்காங்க.

அதை மட்டும் அவ பார்த்தா… ‘அக்கா அம்மன் இப்படி இருக்குக்கா… அம்மன் அப்படி இருக்காக்கா’ன்னு குழந்தையாட்டம் சுத்தி சுத்தி வருவா…” ஆற்றாமையோடு மாரி புலம்பிக் கொண்டே இருக்க, கொடியோ சொல்லமுடியாத அளவிற்கு மனதிலேயே எதையோ மறுகிக் கொண்டிருப்பது போல பீஷ்மாவிற்குத் தெரிந்தது.

“கொடியோட அக்கா ரொம்ப நல்ல பொண்ணு போல.. அதான் ரெண்டு பேரும் இப்படி அவளை நினைச்சு புலம்பிக்கிட்டு இருக்காங்க… பாவம் அவ இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்..” என்று நினைத்துக் கொண்டவன், கொடியை தாண்டிக் கொண்டு சுற்றி விட்டு கோவிலின் வெளியில் வந்து நின்றான்.

அவன் அருகே அசைவு தெரிந்து பீஷ்மா திரும்பிப் பார்க்க, “டாக்டர் சார்… மாரியக்கா கூப்பிட்டு நீங்க வந்தீங்களா? உங்களுக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” கொடி கேட்க,

“ரொம்ப நல்லா இருக்கு கொடி..” என்றவன்,

“உன் முகத்துல தான் இந்த இடத்தை ரசிச்சு பார்க்கற எந்த முகபாவமும் இல்ல… என்ன ஆச்சு? உங்க அக்கா நினைவா?” கேட்டு முடிக்கவும்,

“ஹ்ம்ம்… ஆமா.. அவ இருந்த வரை எனக்கு அவ அருமை தெரியல… இப்போ தான் அவ எவ்வளவு வலியை தாங்கிட்டு என்னை காப்பாத்தி இருக்கான்னு புரியுது.. நான் ரொம்ப சுயநலவாதி..” மனம் வருந்திச் சொன்னவளின் கையைப் பற்றி தனது கைக்குள் வைத்துக் கொண்டவன்,

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல கொடி.. நீ நல்லவ தான்.. உனக்கு என்ன பிரச்சனைனாலும் என்கிட்டே சொல்லு…” என்று பீஷ்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வந்த மாரி,

“தம்பி… அவ கையை விடுங்க.. என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க?” என்று பதற,

அவருக்கு எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கையுடன், “அவ ரொம்ப வருத்தப்படறது போல இருக்கு.. அதான் ஆறுதல் சொன்னேன்…” மாரியிடம் பதில் சொல்லவும்,

“ஹ்ம்ம்… ஆமா… அவளுக்குன்னு யார் இருக்கா..” எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவரைப் பார்த்த பீஷ்மா,

“நான் இருக்கேன்..” கொடியின் கையை அழுத்திக் கொண்டே சொல்லவும், கண்ணீருடன் கொடி அவனைப் பார்க்க, ஆறுதலாக கண் மூடித் திறந்த பீஷ்மா,

“இதே கோவில்ல அம்மன் சன்னதியில, எங்க அம்மா கையால தாலி எடுத்துக் கொடுக்க, இந்த ஊருக்கு முன்னிலையில நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் கொடி…” பீஷ்மா உறுதி அளிக்கவும், மாரியின் இதழ்களில் ஒரு விதமான புன்னகை வந்து சென்றது.

14 COMMENTS

 1. Hai ramya dalu
  Appidi koppidalama
  Ok this updatela comedy durai romba sogam pozhinjitaru
  Appuram ennoda doubtum clear ayiduchi
  Nice update keep it up dalu

 2. Hei Ramya, this episode is also supurb pa
  appo naan ninaithamathiri kodiyin akka kodi udambil pugunthuvittalo?
  Mari akka yen ippidi kalakkama pesuranga?
  avangalai guna miratti vittana? Hei kavalai padatheena Mari naan Bishma-vidam solli ungalai kappathuven
  and thank you Ramya for your supurb novel

 3. hi miya super pa nice so pei iruku intha kathaila illa kodi akka innum sacalaya illana maarium thuraium eathavathu panrangala eppadi o story superra poguthu

 4. Hi mam, Hw r u? Na keta madri kodi pei illa bt aavi pidicha ponnu? Durai kulla ivalo sogam ah adhigama sirikiravangalukulla neraiya sogam irukum nu solluradhu Unmai dha pola… Hero oda uruthi ah kaapatha Inum Ethana poratadha sandhikanumo theriyala …. Epavum pola indha episodeum super. Next episode kaga aavaludan paathu iruken … C U again mam

 5. hi ramya
  nan ungloda big fan semaya iruku ela storys umm nan paathilaye guess pante ava akka aavithanu papo next enna nadakuthunu

 6. Hi Ramya,

  Ippo thaan Ella updates um padichean pa. Romba interesting ah iruku. Guna thaan malaroda Akka and amma va konatha??? Adutha update eppo pa?

LEAVE A REPLY