SHARE

தடித்து உதிர்க்கப்பட்ட
வார்த்தைகளின்
ஓரத்தில்
பிசுறு தட்டி
ஒட்டிக்கொண்டு இருக்கும்
உன் சிறு துளி அக்கறை ,
சொல்லாமல் கொள்ளாமல்
என் நினைவின் ஓரத்தில்
ஆதிக்கம், செய்ய
வழியின்றி
திக்கற்று நிற்கிறேன் !!

 

 

 

 

மதிய இடைவேளை வரை பாதி குறுகுறுப்பும், மீதி வேலையிலும் அஜய் தடுமாறிக் கொண்டிருக்க, அவனது அன்றைய வேலையோ அவனது கழுத்தை நெறிப்பதாகவே இருந்தது…

“இன்னைக்கு வீட்டுக்கு சீக்கிரம் போகலாம்ன்னு பார்த்தா.. இப்படி மெயில் மேல மெயில் வந்துட்டே இருக்கே… என்ன செய்யறது?” பசி ஒரு புறம் வயிற்றைக் கிள்ள, வேலை ஒரு புறம் அவனை கட்டி இழுக்க, இறுதியில் வயிறே வென்றுவிட, தனது சிஸ்டம்மை லாக் செய்துவிட்டு, இருக்கையை விட்டு எழுந்தவனது கண்களில், தனது இருக்கையில் சாய்ந்திருந்த கண்ணம்மா பட்டாள்.

“என்ன இவ சாப்பிட போகாம இங்க படுத்துட்டு இருக்கா?” மனதில் எண்ணியவன், தனது கைக் கடிகாரத்தைப் பார்க்க, அது காட்டிய இரண்டு மணியைப் பார்த்தவன்,

“ஹ்ம்ம்… சாப்பிட்டு வந்து தூங்கலாம்ன்னு தூங்கறா போல…” என்று அவளிடம் ஒரு வார்த்தைக் கேளாமல், தனக்குத் தானே பதில் சொல்லிக் கொண்டு நகர முற்ப்பட, தூரத்தில் சுவாதி வருவது அஜயின் கவனத்தை கவர்ந்தது.

அதற்கு மேல் நகர முடியாமல், கண்ணம்மாவின் இடத்தின் அருகேயே நின்றவன், ‘சுவாதி சாப்பிட போனா… இவளும் போயிருப்பாளே…. அப்போ இவ சாப்பிடலைன்னு தானே அர்த்தம்…’ மீண்டும் தனக்குள் பேசிக் கொண்டவன்,

“கண்ணம்மா…. கண்ணம்மா…” இருமுறை அழைக்கவும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாளோ, அல்லது எப்படியும் திட்டத் தான் போகிறான் என்று சலிப்பாக உணர்ந்தாளோ, ‘ம்..’ என்ற ஒற்றை முனகலே பதிலாக வர, அஜய் அவளது தோளைத் தட்ட தனது கையை எடுத்துச் சென்றான்.

ஆனால், அவன் நினைத்ததை நிறைவேற்ற முடியாமல், அவனது கை அந்தரத்தில் தொங்க, ‘Mr. அஜய்… அவ கிட்ட அடி வாங்கற உத்தேசம் ஏதாவது வச்சிருக்கீங்களா?’ சம்மன் இல்லாமல் அவனது மனசாட்சி குதித்து கேள்வி கேட்க,

“அப்படி ஒண்ணும் நான் அவளை தப்பான எண்ணத்தோட தொடலையே… உடம்பு சரி இல்லாத போது சாப்பிடாம இருந்தா… உடம்பு இன்னும் வீணா தானே போகும்… அதுக்கு தான்….” அதற்கு பதில் சொன்னவன், அவளது தோளை மெல்லத் தொட, கண்ணம்மா திடுக்கிட்டு விழித்துப் பார்த்த அதே நேரம்,

“அப்படியே ரொம்ப தான் அவ மேல அக்கறை… காலையில அவ முடியாம வந்தாளே… அப்போ எங்க போச்சு இந்த கரிசனம்… ஒரு சக மனுஷனா… நல்ல விதமா பேசினயா? மனசு நோக பேசிட்டு… இப்போ உருகோ உருகுன்னு உருகறான்…” அஜய் கண்ணம்மாவின் மேல் இருந்த பார்வையை அகற்றாமல், தனது மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு நிற்க, கண்ணம்மா பதறிப் போனாள்.

“சாரி அஜய்… சாரி… தெரியாம இங்க படுத்துட்டேன்… காலையில கொஞ்சமாவது பிரெஷ்ஷா இருந்த மாதிரி இருந்தது… நேரம் ஆக ஆக… ரொம்ப தலை கனக்குது… அது தான் கொஞ்சம் தலை சாய்க்கலாம்ன்னு…” படபடவென்று சொல்லிக் கொண்டே வந்தவள், அஜயின் பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டு தலை குனிந்து நின்றாள்.

 

  

 

“சாப்ட்டியா” அஜயின் கேள்வியில், கண்ணம்மாவின் கண்களும் இப்பொழுது தெறித்து விடும் போல காட்சியளித்தது.

“என்ன இன்னும் சாப்பிடலையா?” அவன் மீண்டும் கேட்கவும், ‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைத்தவள்,

“எனக்கு சாப்பிடவே பிடிக்கல… படுத்தாப் போதும்ன்னு இருக்கு…” அவனது கரிசனம் தந்த தைரியம் உந்த, அவள் சொல்லிவிடவும்,

“என்ன லஞ்ச் எடுத்துட்டு வந்த? அதை எடுத்துட்டு வா… சாப்பிடலாம்…” என்று சொல்லியபடி, அஜய் ஓர் எட்டு எடுத்து வைக்க,

“இல்ல அஜய்… எனக்கு சாப்பாடு வேண்டாம்… நீங்க சாப்பிட்டு வர வரை நான் கொஞ்சம் படுத்துக்கறேன்… எனக்கு அது போதும்…” அவளது குரலில் மன்றாடல் இருக்கவே, ஒரு நிமிடம் தயங்கிய அஜய், ‘என் கூட வா’ என்றபடி, முன்னே நடக்க, கண்ணம்மா வெறுப்புடன் பின் தங்கி நின்றாள்.

சிறிது தூரம் சென்றவன், அவள் தன்னுடன் வரவில்லை என்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க, “எல்லாம் இவன் இஷ்டம் தானா? இவன் எல்லாம் ஒரு மனுஷனா… இவ்வளவு கெஞ்சறேன் இல்ல…” என்று முணுமுணுக்க, கையைக் கட்டிக் கொண்டு அவன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டான்…

வேறு வழி இன்றி, “அராத்து… சாடிஸ்ட்…. திமிரு… திமிரு…” என்று திட்டியபடி, கண்ணம்மா அவனுடன் சென்று, லாக்கரில் இருந்த தனது லஞ்ச் பேக்கை எடுத்துக் கொண்டு சென்றாள்.

புட் கோர்ட்டிற்கு சென்று ஒரு டேபிளில் அமர்ந்தவன், “உங்க அம்மா என்ன லஞ்ச் கொடுத்திருக்காங்க…” என்று கேட்கவும், வேண்டா வெறுப்பாக அவள் பிரிக்க, சாதமும், ரசமும் தனித் தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பதைப் பார்த்தவன், எதுவுமே பேசாமல், அந்த ரசம் இருந்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

“இவனுக்கு பைத்தியம் ஏதாவது பிடிச்சு போச்சா… புரியாத புதிராவே இருக்கானே… ஒருவேளை இப்படி டீம் மெம்பர்ஸ்சை பார்த்துக் கிட்டா… ஏதாவது அவார்ட் தரேன்னு சொல்லி இருக்காங்களா? இருந்தாலும் இருக்கும்… இல்லன்னா இவனாவது என் வயிற்றுப் பாட்டை கவனிக்கறதாவது? ஆனாலும் ரசத்தை தூக்கிட்டு எங்க போனான்? தனியா போய் குடிச்சிட்டு வந்திருவானா?… ச்சே… ச்சே… இருக்காது கண்ணம்மா… அவன் ஏன் ரசத்தை குடிக்க போறான்..” யோசனையோடே அவள் அஜயைத் தேட, அங்கு சூடு செய்து கொள்வதற்காக வைத்திருந்த ஓவன் அருகே அவன் நிற்பது அவள் கண்ணில் பட்டது.

யாருடனே பேசிக் கொண்டிருந்த அஜய், சில நிமிடங்களில், கையில் அந்த ரச கிண்டத்துடன் வந்தமர்ந்து, “இந்தா… சூடா இருக்கு… அப்படியே பிசைஞ்சு சாப்பிடு.. நல்லா இருக்கும்…. இதமாவும் இருக்கும்…” அவன் சொல்லவும், ஏனோ அவனது கரிசனை அவளை திணறடித்து, கண்களில் கண்ணீரை வர வழைத்தது.

அவளது முகம் சுருங்கவும், “ஆறுது பாரு… சாப்பிடு… பீவர்ன்னா சாப்பிட பிடிக்காமத் தான் இருக்கும்… அதுக்கு வெறும் வயித்தோட இருந்தா… இன்னும் வீக்கா இருக்கும்…” என்று விட்டு, தன்னுடைய டிபன் பாக்சைத் திறந்தவன், அதில் இருந்த சாம்பாரையும், உருளைக்கிழங்கு காரப் பொரியலையும் எடுத்து வைக்க, அவனை நிமிர்ந்துப் பார்க்கவும் முடியாமல், உண்ணவும் முடியாமல், விழுங்கிக் கொண்டிருந்த கண்ணம்மா, அவனது கிண்ணங்களை பார்த்து, ஆச்சரியத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவளது ஆச்சரியத்தின் பொருள் புரிந்தது போல, “எங்க அம்மா ஊருல இருந்து வந்திருக்காங்க… அது தான் வித விதமான டிஷ்… இல்லனா நான் வெறும் கலந்த சாதம் தான்… நானே செய்து எடுத்துட்டு வருவேன்…” வெகு நாட்களுக்கு பிறகு, அம்மாவின் கையால் சமைத்த உணவை அலுவலத்தில் சாப்பிடுவது தந்த மகிழ்ச்சியா… எதற்கு அவளிடம் விளக்கம் சொல்கிறோம் என்றே தோன்றாமல் அவளிடம் பெருமையடித்துக் கொண்டவன்,

“வெறும் பருப்புத் தொகையல வச்சு சாப்பிட்டா உள்ள இறங்காது… இந்தா… கொஞ்சம் பொறியல வச்சிக்கோ… எங்க அம்மா சமையல் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்…” சொல்லிக் கொண்டே, அவளுடைய தட்டில் வைத்தவன், தன்னுடைய உணவை உண்ணத் துவங்கினான்.

அவனது செயலில் திகைத்தவள், “ராசா… நீ நல்லவனா கெட்டவனா? இப்படி அப்போ அப்போ அந்நியனாவும் ரெமோவாவும் மாறி மாறி வந்து குழப்பறியே…” மிகப் பெரிய சந்தேகம் கண்ணம்மாவின் மனதினில் முளை விட, அவனது முகத்தை ஆராய்ந்தாள்.

நல்ல களையான சிரித்த முகம் தான்…. நேர் நாசி…. சந்தன நிறம்…. கோபமோ சந்தோஷமோ முகத்தில் பிரதிபலிக்கும் பாங்கு… அவளது யோசனையை தடை செய்தது, அவனது குரல்….

“என்ன… சாப்பிட முடியலையா? தொண்டை வலிக்குதா?” அவன் கேட்கவும், பதில் பேசாது, இரண்டு வாய் உண்டு முடித்தவளின் கண்கள் அவன் மீது மீண்டும் படிந்தது.

“இவன் சந்தோஷமா இருந்து நீ பார்த்து இருக்கியா கண்ணம்மா?” அவளது மனசாட்சி கேட்கவும்,

“எங்க பார்த்த நாள்ல இருந்தே இதே கடு கடு முகம் தானே… இன்னைக்கு சார்க்கு என்ன ஆச்சு? என்னை கரிசனையில ஒரே குளிப்பாட்டா குளிப்பாட்டி வைக்கிறான்… மூச்சு அடைக்குதே… ஆனாலும் கொஞ்சம் நல்லவன் தான்…” இரண்டு கவளம் சாதம் உள்ளே போகவும், சிறிது தெம்பாக உணர்ந்தவள், அவனை தனக்குள் கிண்டல் செய்ய, அஜய் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

“என்னாச்சு?” அவள் சந்தேகமாகக் கேட்கவும்,

“எதுக்கு என்னாச்சு? எனக்கு ஒண்ணும் ஆகலையே.. உனக்குத் தான் பதில் பேசக் கூட தெம்பு இல்லையே…” அஜய் இடக்காக பதில் சொல்லவும், வாயை மூடிக் கொண்ட கண்ணம்மா, மேலும் இரண்டு வாய் உண்டு முடித்து…. அதற்கு மேல் சாப்பிட முடியாமல் அவனைக் கெஞ்சல் பார்வைப் பார்க்க,

“முடிஞ்ச அளவு சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்பு… நாளைக்கு முடியலனா வர வேண்டாம்… ஒரு மெசேஜ் பண்ணு போதும்…” என்றவன், அவள் பதில் சொல்லப் போவதில்லை என்று உணர்ந்து,

“சரி… எனக்கு வேலை இருக்கு… நான் கிளம்பறேன்… நீ சாப்பிட்டு பொறுமையா கிளம்பு… ஃபுல்லா சாப்பிட்டு தான் கிளம்பணும் சரியா…” அதற்கு மேல் அவள் யாரோ என்பது போல, அவன் தன்னுடைய இடத்திற்கு நகர, அவளோ ஆச்சரிய லோகத்திற்கே சென்று வந்தாள்.                          

“ஹே… கண்ணம்மா… என்ன இன்னைக்கு சாப்பிடவே பிடிக்கலைன்னு சொல்லிட்டு… அஜய் கூப்பிட்ட உடனே வந்து சாப்பிட்டு இருக்க? அதுவும் என்ன அதிசயம்… அஜய் இன்னிக்கு உன்னை கூப்பிட்டு வரான்….” அஜய் கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு வந்ததைப் பார்த்த சுவாதி, மீண்டும் கண்ணம்மாவின் அருகில் வந்து அமர, ஒரு வருத்தப் புன்னகையுடன் அவள், டிபன் டப்பாக்களை எடுத்து வைத்தாள்.

“அவன் உன் கிட்ட பேசினதே சந்தோஷமா இருக்கு கண்ணம்மா… உன்கிட்ட மட்டும் தானே அவன் சரியா பேசாம இருந்தான்…” சுவாதி வருத்தமும், நிம்மதியும் போட்டிப் போட அவளிடம் சொல்ல, ஒரு கசந்த முறுவலுடன்,

“நான் வீட்டுக்குப் போறேன் சுவாதி… உட்கார முடியல… அஜய் போக சொல்லிட்டார்…” என்றவள், தனது இடத்தை நோக்கி நடக்க,

“லீவ் கொடுத்துட்டானா? எப்படி? அதுவும் இன்னைக்கு போய்…” சுவாதி கேட்கவும், கண்ணம்மா அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

“என்னாச்சு கண்ணம்மா?” அவள் நிற்பதைப் பார்த்து சுவாதி கேட்கவும்,

“இல்ல… என்னை பழி வாங்கத் தான்… அஜய் இப்படி செய்திருக்காறா? ஏதாவது முக்கியமான கால் இருக்கா?” சுவாதி கேட்ட திணுசிலேயே, பயந்த கண்ணம்மா… தன்னையே நொந்துக் கொள்ளவும், சுவாதி அவளது கவனத்தைக் கலைத்தாள்.

“என்ன கண்ணம்மா… நீ மெயில் பார்க்கலையா? இன்னைக்கு உனக்கு ஒரு டாஸ்க் அசைன் செய்திருந்தானே… இன்னைக்கு நான் கிளம்பவே எப்படியும் ஒன்பது ஆகிடும்ன்னு நினைக்கிறேன்…. நாளைக்கு மதியதுக்குள்ள அந்த மாட்யூல் முடிச்சுக் கொடுக்கச் சொல்லி, வி.பி. சொல்லி இருந்தாரே… ஏதோ ஃபாஸ்ட் ட்ராக்ல மூவ் செய்யணும் போல…” என்று சுவாதி சொல்லவும், தலைவலியின் வேகம் அதிகரிக்க, கண்ணம்மாவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“என்னை அனுப்பிட்டு…. நான் பொறுப்பில்லாம இங்க இருந்து கிளம்பிப் போயிட்டேன்னு மேனேஜர்கிட்ட சொல்லி… என்னை வேலையிலேர்ந்து தூக்க என்ன அழகா பிளான் போடறான் பார்த்தியா சுவாதி… ஃபயர் பண்ண ஸ்கெட்ச் போட்டுட்டான்…” கசப்பான குரலில் கண்ணம்மா சொல்லிக் கொண்டே, அவனை கடித்துக் குதறும் வேகத்தில், தங்கள் பேயை (bay) நோக்கி அவள் செல்ல, அஜய், கண்ணம்மாவின் சிஸ்டம் அருகே, அவளது வருகைக்காக காத்திருந்தான்.

“நல்லவேளை சீக்கிரம் வந்துட்ட… உன்னோட லாகின் பாஸ்வேர்ட் சொல்லிட்டுப் போ… கொஞ்சம் வேலை இருக்கு… உன்னால தான் இருக்க முடியாதே…” அவன் சொல்ல, அவன் அருகே இன்னொரு இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவள்,

“நீங்க கோபக்காரர்ன்னு நான் வந்த நாள்ல இருந்து பார்த்திருக்கேன்… ஆனா… இப்படி ஒரு சூழ்ச்சிக்காரர்ன்னு இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன்…” கடித்த பற்களுக்கு இடையில் அவள் வார்த்தைகளை விட, அஜய்க்கு அவள் பேசுவது புரியாமல் போனாலும், அவள் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு கோபத்தை கிளப்பியது.

“என்ன? கொஞ்சம் இளகி வந்தா… ஓவரா வாய் நீளுமோ? போனா போகுதே… உடம்பு சரியில்லாம இருக்கியே… உன் வேலையை நான் முடிச்சுக் கொடுக்கலாம்ன்னு… எனக்கு இருக்கற ஆயிரம் வேலையில, இதையும் சேர்த்துக்கலாம்ன்னு வந்து உட்கார்ந்தா… என்னையே எதிர்த்துப் பேசற…. உனக்கெல்லாம் திமிரு… வேற என்ன? அன்னிக்கு உங்க அப்பா என்னை முறைக்கிறார்… அந்த அளவுக்கு என்னைப் பத்தி வீட்ல என்ன சொல்லி வச்சிருக்கியோ? யாருக்குத் தெரியும்?

வீட்டுக்குப் போய்… ‘அப்பா… அப்பா… அந்த அஜய் கடன்காரன்… அது தான் என் டி.எல்… அவன் என்னை ரொம்ப மோசமா நடத்தறான்… திட்டிக்கிட்டே இருக்கான்…’ அப்படின்னு கண்ண கசக்கி இருப்ப… அவர் வந்து இங்க என்னை முறைக்கிறார்… என்கிட்டயே வேலை செய்ய முடியலைன்னா… நீ எல்லாம் வேலைக்கு வரவே லாயக்கு இல்ல…

இன்னும் மத்த டி.எல். கிட்ட போய் வேலை செய்துப் பாரு… அப்போ தெரியும்… வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்யத் தெரியல… இதுல முறைப்பு வேற…      

இன்னொரு தரவ உங்க அப்பா என்னை முறைக்கிறதைப் பார்த்தேன்… அப்பறம் உங்க அப்பாவுக்கு மரியாதை அவ்வளவு தான்… உன்னை பெஞ்சுக்கு அனுப்பிருவேன்… சொல்லி வை…” என்று பொரிந்த படியே, தனது இடத்திற்கு எழுந்து செல்ல, அவனது கோபத்திலேயே.. தான் அவனைத் தப்பாக எண்ணிவிட்டோம் என்று உள்ளம் வருந்த, தலையில் அடித்துக் கொண்டு, தொய்ந்து போய் அமர்ந்தாள்.

மீண்டும் அஜய் அவளை முறைக்கவும், தலைவலியும், சோர்வும், மெயிலில் வந்த வேலையின் பலுவும் சேர்ந்து அவளை பயமுறுத்த, உதவிக் கரம் நீட்டியவனின் கையை காயப்படுத்தி, மீண்டும் எப்படி உதவி கேட்பது என்று தயங்கி, அமர்ந்திருந்தவளுக்கு அழுகை வரும் போல இருந்தது…  

“சுவாதி… உன் பிரெண்ட் இப்போ கிளம்பறாளா… இல்ல வேலை செய்யப் போறாளான்னு கேளு… இன்னும் கொஞ்சம் டாஸ்க் கொடுக்கறேன்… உடம்பு சரி இல்லன்னு கொஞ்சம் குறைவா தான் தந்திருந்தேன்…” அஜய்யின் குரலில், கண்ணம்மா, அவனது அருகில் சென்று நின்றாள்.

சிறிது நேரம் தயங்கி நின்றவள், “என்னால நிஜமா முடியல அஜய்… சாரி… நான் பேசினது எல்லாமே தப்புத் தான்…. நான் பார்க்கறது எல்லாமே தப்பா தான் இருக்கு.. என்னை மன்னிச்சிருங்க… என்னால உட்காரவே முடியல…” தொண்டையடைக்க பரிதாபமாக அவள் கேட்கவும்,

“நான் உன்னை போன்னு சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு… நீ தான் சூழ்ச்சி அது இதுன்னு நின்னுட்டு இருக்க… மனுஷன்னா நம்பிக்கை வேணும்… அது இல்ல… ரொம்ப கஷ்டம்…” தோளை குலுக்கிக்கொண்டவன்,

“உன்னோட பாஸ்வோர்ட் சொல்லிட்டு போ…” என்று மேலும் சேர்த்துக் கொள்ள, அவன் கேட்டதை சொல்லிவிட்டு, அவனை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு, அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தவள், ஒரு ஆட்டோவைப் பிடித்து, வீட்டிற்குக் கிளம்ப, அனுமதி இன்றியே, நெஞ்சின் ரணங்கள், அவளை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது.

தன்னுடைய வேலையோடு கண்ணம்மாவின் வேலையும் சேர்ந்துக் கொள்ள, அஜய் அலுவலகத்தை விட்டு வெளியில் வரும் பொழுது, காலை நான்கு மணியை கடந்திருந்தது… இதற்கு இடையில் அவனது பிறந்த நாள் கொண்டாட்டமும் சேர்ந்துக் கொண்டது… அவனது டீமில், நள்ளிரவு வரை வேலைக்காக தங்கி இருந்த ஆண்கள், கேக் வெட்டி, அவனது பிறந்தநாளைக் கொண்டாட, அதுவும் சேர்த்து வேலையை இழுத்து விட்டது.

காலை ஐந்து மணிக்குள் வீட்டிற்குள் நுழைந்த அஜயை சிவந்த கண்களுடன் ராதா வரவேற்றார்….

“என்னாம்மா… உடம்புக்கு ஏதாவது படுத்துதா? ஏன் கண்ணெல்லாம் இப்படி சிவந்து இருக்கு?” என்றபடி உள்ளே வந்த அஜயை திட்டவும் முடியாமல், அவனது பிறந்த நாள் தடுக்க, கொஞ்சம் முறைத்தார்.

“என்னாச்சும்மா?” தொப்பென்று சோபாவில் விழுந்தவனின் கேள்விக்கு,

“ஹாப்பி பர்த்டே கண்ணா… நீ எப்பவும் போல சந்தோஷமா… பிள்ளை குட்டியோட வாழணும்…” என்று உச்சி முகர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.  

“நைட் லேட்டா வருவேன்னு சொல்லி இருக்கக் கூடாதாடா…. நான் போன் செய்தாலும் நீ எடுக்கவே இல்ல… நீ வருவ… கதவைத் திறந்து விடணும்னு… நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…” என்ன மறைக்க முயன்றும் அவரது குரலில் வருத்தம் இழையோட, அஜய் தன் தலையிலேயே தட்டிக் கொண்டான்.

“சாரிம்மா… எனக்காக ஒருத்தர் வெயிட் பண்ணிட்டு இருந்து எனக்கு பழக்கம் இல்லையா… அதனால உனக்கு சொல்ல தோணலைம்மா…. நமக்கு யாரு போன் செய்யப் போறான்னு… அது சைலென்ட்ல தான் இருக்கும்…” அஜய் விளக்கம் சொல்லிக் கொண்டே ஒரு கொட்டாவியை வெளியேற்ற, ராதா அவனது தலையைக் கோதினார்.

“அதுக்குத் தானேடா ஒரு கல்யாணம் செய்துக்கோன்னு சொல்றேன்…” சந்தர்பத்தை விடாமல் அவர் தூண்டில் போடவும்,

“எனக்கு தூக்கம் வருதும்மா…. நான் கொஞ்ச நேரம் படுக்கறேன்…” என்று அவரது தூண்டிலில் இருந்து தப்பியவன், சோபாவில் அப்படியே சரிய, அவனை பிடித்து அமர வைத்தார் ராதா….

“என்னம்மா… எனக்கு தூக்கம் வருது…” அஜய் சிணுங்கவும்,

“போய் பல்லு தேச்சிட்டு வா… வெறும் வயித்தோட படுக்க வேண்டாம்… கொஞ்சம் ஏதாவது சாப்பிட்டு படு…” என்ற ராதா… அவனுக்கு காபியையும், சூடாக தோசையையும் வார்க்க, அதனை உண்டு விட்டு, அவன் படுக்கவும் அசதியில் உறங்கிப் போனான்.

அவனது தூக்கம் அன்று தொலை தூரம் என்பது போல, சிறிது நேரத்திலேயே அவனுக்கு கார்த்திக்கிடம் இருந்து அழைப்பு வந்தது…

“அஜய்… ஹாப்பி பர்த்டேடா… சீக்கிரம் ரெடியாகு… நான் கிளம்பிட்டேன்… கண்மணிய மீட் பண்ண போகணும்… அவ வெயிட் பண்ணறேன்னு சொல்லி இருக்கா….” கார்த்திக் அவனுக்கு நினைவு படுத்தவும், அஜய் சோம்பலாக எழுந்து அமர்ந்தான்.

“வேண்டாம்டா… எதுக்கு கார்த்திக் அதெல்லாம்… நான் இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன்… எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு…”

“டேய்… என்ன விளையாடறியா? ஒழுங்கா மரியாதையா எழுந்துவா… நான் இன்னைக்கு உனக்காக தூக்கத்தை தியாகம் செய்து கிளம்பிட்டேன்… நான் வரதுக்குள்ள ரெடியாகி இரு… ஒருத்தர் பர்த்டே கிஃப்ட் தராங்கன்னா அதை வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது… புரியுதா?” கார்த்திக் சொல்லவும்,

“சரிடா… நான் ரெடியாகறேன்… நீ வா… அப்படியே நாம வெளிய சாப்டுட்டு ஆபீஸ் போகலாம்….” அஜய் திட்டமிடவும், அவனது குரல் கேட்டு, ராதா அவன் அருகில் வந்திருந்தார்.

“எங்கடா போகணும்? நானும் அனுவும் உன் பர்த்டேக்கு ஸ்பெஷலா செய்யலாம்ன்னு எல்லாம் ரெடி செய்து வச்சிருக்கோம்… நீ என்னடான்னா வெளிய போய் சாப்பிடறேன்னு சொல்ற?”

“ஓ… லஞ்ச்க்காம்மா… இன்னைக்கு ஆபீஸ்ல ட்ரீட்ம்மா… பர்த்டேக்கு பசங்க கேட்டு இருக்காங்க… எப்படியும் நான் ராத்திரி வந்து சாப்பிடுவேன்ம்மா… காலையில நான் கொஞ்சம் வெளிய போறேன்… கார்த்திக் ஏதோ கிஃப்ட் தந்தே ஆகணும்னு அடம் பிடிக்கறான்… அதனால… அங்க போயிட்டு மறுபடியும் இங்க வந்துட்டு போக டைம் இருக்காதும்மா… நைட் வேணா எல்லாம் ரெடி செய்ம்மா… வந்து சாப்பிடறேன்…” படபடவென்று சொன்னவன், அவர் ஆயாசமாக நிற்கையிலேயே, குளிக்கச் சென்றான்.

விரைவாகவே குளித்துக் கிளம்பி வந்தவனை அனுபமா எதிர்க்கொள்ள, “உன் சமையல்ல இருந்து நான் இன்னைக்கு எஸ்… நைட் வந்து சாப்பிட்டேன்னா… வயிறு ஏதாவது ஆச்சுன்னா கூட காலையிலகுள்ள சமாளிச்சுக்கலாம்…” என்று அவளையும் வம்பிழுத்தவன்,

“அத்தான் எங்க?” என்று கேட்டு முடித்தான்….

“அத்தான் வர எப்படியும் ஒன்பது மணிக்கு மேல ஆகும்ன்னு சொன்னார்டா… ஏதோ முக்கியமான ப்ரோக்ராம் ஒண்ணு ஆர்கனைஸ் பண்ணச் சொல்லி கேட்டு இருக்காங்களாம்… அது தான்…” அனுபமா சொல்லி முடிக்கவும், கார்த்திக் வரவும் சரியாக இருக்க, மீண்டும் ஒருமுறை நேரில் கார்த்திக் சொன்ன வாழ்த்தை ஏற்றவன், அவனுடன் தென்றல் பண்பலை அலுவலகம் நோக்கிச் சென்றான்…..

மணி காலை 6.50….. வழக்கம் போல கண்மணிக்கு அழைத்து, தனது பிறந்தநாள் அதுவுமாக கண்மணியிடம் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துக்களைப் பெற அவன் முயற்ச்சி செய்ய…..

“காலை வணக்கம் சென்னை….. இன்னைக்கு நம்ம கண்மணி லீவ்ன்னு சொல்லி எஸ் ஆகிட்டாங்க… அதனால நான் இன்னைக்கு உங்க கூட தென்றல் ராகம் நிகழ்ச்சியை வழங்கப் போறேன்…” என்று ஒரு ஆண் RJவின் குரல் கேட்கவும், அஜய்க்கு சொத்தென்று ஆகியது….

‘பிறந்தநாளின் முதல் எதிர்ப்பார்ப்பே இப்படியா?’ என்று மனதினில் தோன்றிய எண்ணத்தை தடுக்கத் தான் வழியில்லாமல், அழைப்பை துண்டித்தான்.   

அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

8 COMMENTS

  1. Hey Rammy ithelam mosam inthe Ud lay avathu kanmani a katiduvanu partha ipidi emathitiye,po un pechu ka,but thanks ethuku a pavam kanama ava jay kitte irunthu kapathi iruku,athuvum Ava mela avalo concern Vera appa,thalaivar nalavara ketavara?

    • thanks bharathy …. 🙂 🙂 no kai next epila kandipa sollidalam…. 🙂 🙂 sollidaren…. thalaivar nallavara kettavaranu sikiram therinjirum

  2. Ramz, ithellam romba aniyaayam…
    Intha update’le kanmani yaarunu therinjikkelaamnu paartha, ithulaiyum neenga sollala… Tooo bad pa…

    Nalla velai intha update’a konjam late’a padichathunala, ippove adutha update’ku thaaviduven… Huhuhu

    Nice update dear…

LEAVE A REPLY