SHARE

கோபத்திற்கான அகராதியில் கூட
உனக்கென்று தனி இடம் தான் !!
நீயும் உன் நெருப்பு சிந்தும்
சொற்களுமாய்
அந்த புத்தகத்தில் நிரம்பக் கிடக்கின்றது !!

 

“என்ன குழந்தை இப்படி தூங்கிட்டு இருக்கு?” கேட்டுக் கொண்டே வந்த விஜய், சோபாவில் தொப்பென்று அமர, ராதா அவனைப் பார்த்து நிறைவாக சிரித்தார்.

“அவனுக்கு என்னங்க… மாமா வந்தா தான் நம்ம எல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டோமே…” சந்தோஷச் சலிப்புடன் அனுபமா பதிலளிக்க,

“நான் அந்தக் குழந்தையைச் சொல்லல அனு…. உன் அண்ணனை சொன்னேன்… அம்மா மடியில படுத்து நல்ல தூக்கம் போல…. குறட்டையும் சும்மா அதிருதுல்ல” விஜய் கிண்டல் செய்துக் கொண்டிருக்கும் போதே, அனுபமா அவன் கையில் கிள்ளி விட்டாள்.     

“அவனைக் கிண்டல் செய்யலைன்னா உங்களுக்கு பொழுது போகாதே… அவனே அம்மாகிட்ட கோபம் இல்லாம இருக்கானேன்னு எனக்கு நிம்மதியா இருக்குங்க…” அனுபமா அதையே பெரிய நிம்மதியாக நினைத்துக் கூற, ராதாவின் கண்கள் கலங்க, விஜய் அவர் அருகில் சென்று அமர்ந்தான்.

“அத்தை.. நீங்க எதை நினைச்சும் கவலைப்படாதீங்க… எல்லாம் சீக்கிரமே சரியா போயிடும்… என்னை நம்புங்க… நீங்க இந்த தரவ ஊருக்கு போறதுக்குள்ள நல்ல நியூசை நான் சொல்றேன்…” ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் விஜய் சொல்லிவிட்டாலும், உள்ளூர அவன் அனைத்து தெய்வங்களுக்கும் மனு அனுப்பிக்கொண்டு தான் இருந்தான்.

“என்ன சொல்றீங்க மாப்பிள்ளை… இவன் இப்போ செய்யற அடம் உங்களுக்கு தெரியுமா? என்னையும் அவரையும் வார்த்தையாலேயே குத்திக் குதறிட்டு இருக்கான்… நான் அவன் மேல அக்கறை இல்லாம அவர் கூட துபாய் போயிட்டேன்னு என்னை எப்படி வறுத்தெடுக்கறான் தெரியுமா?” கவலையுடன் அவர் சொல்லவும், விஜய் அவரைப் பார்த்து ஆறுதலாக புன்னகைத்து,

“கொஞ்சமே கொஞ்ச நாள் அத்தை… என் மேல நம்பிக்கை இல்லயா?” விஜயின் வார்த்தையில் ஏதோ ஒரு நம்பிக்கை ஒளிந்திருப்பதை ராதா உணர, அனுபமா புரியாமல் பார்த்தாள்.

“நம்பிக்கை எல்லாம் நல்லா தான் இருக்கு… ஆனா… காலையில அவன் உள்ள வரும் போது கல்யாணத்தை பத்தி பேசின உடனே அவன் குதிச்ச குதி உங்களுக்கு தெரியும் தானே… எதையாவது சொல்லப் போய் அவனும் இங்க வராம செய்துடாதீங்க… அப்பறம் எனக்குன்னு யார் இருக்கா? நான் தனியா ஆகிடுவேன்” அனுபமா தனது மனத்தாங்கலை சொல்லவும், ராதா அதிர்ந்தே போனார்.

“அனு…” அவர் அதிர்ச்சியுடன் ஏறிட,

“இல்லம்மா… நான் உங்களை தப்பா சொல்லல… ஆனா… உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்ம்மா… சில நாள் உங்க மடி மேல படுத்துக்கணும் போல இருக்கும்… அப்போ உடனே போற தூரத்துல நீங்க இல்லைங்கற போது…. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா…” தனது மனதை அவள் சொல்லவும், விஜய் அவளை தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

அங்கு சூழ்ந்த இறுக்கத்தை தளர்த்த, “அனு… உனக்கு பட்டுப்புடவை எடுக்கலாமா? எத்தனை புடவை வேணும் சொல்லு எடுத்துத் தரேன்…” விஜய் கேட்கவும்,

“ஏன் ஏதாவது புடவை கடை ஆட் வந்திருக்கா என்ன? அவன் ஓசியா தரேன்னு சொன்னானா?” விஜய், அப்படி ஒன்றும் டக்கென்று பட்டுப்புடவை எடுத்துத் தரும் ரகம் அல்ல என்று உணர்ந்து அனுபமா அவனை வம்பிழுக்கவும், ராதா அவனைப் பார்த்து சிரித்தார்.

“என்னம்மா செய்யறது… நான் ஒரு ஏழை டிவி ப்ரோக்ராம் ஹெட்… எனக்கு அப்படி எல்லாம் மாசம் ஒரு பட்டுப்புடவை எடுத்துத் தர முடியாது…” சொன்ன விஜய், மெல்ல ‘அஜய்’ என்று இரு தரம் அழைக்க,

“அவன் தான் நல்லா தூங்கறான் இல்ல… எதுக்கு இப்போ எழுப்பிக்கிட்டு இருக்கீங்க? நீங்க இன்னைக்கு சரியா இல்ல…” அனுபமா கடியவும், விஜய் நக்கலாக சிரித்தான்.

“என் சொந்தக் காசுல வாங்கித் தரேன்னு சொல்றேன்… நீ என்னடான்னா இப்படி சந்தேகப்படறியே அனும்மா… இதெல்லாம் நல்லா இல்ல…” என்று போலியாக வருத்தம் காட்டியவன்,

“புடவை எடுத்துத் தரேன்னு உண்மையா தான் சொல்றேன்டா செல்ல குட்டி…. நீ ஒரு டைலர் சொல்லுவியே… இப்போ கொடுத்தா அவன் ப்ளௌசை தச்சுத் தரவே மூணு மாசம் செய்வான்னு…. அந்த டைலர் கிட்ட கொடு… அப்போ தானே உங்க அண்ணா கல்யாணத்துல நீ போட்டுட்டு அழகா சுத்த முடியும்…” அவன் சொல்வதைக் கேட்ட பெண்கள் இருவரும் திகைத்துப் போய் பார்க்க,

“அடுத்த வார சனிக்கிழமை உங்களை நான் கூட்டிட்டு போறேன்… அதுவரை என்ன கலர் எடுக்கலாம்ன்னு யோசிச்சு வைங்க… அத்தை நீங்களும் தான்…” என்ற விஜய்,

“எனக்கு தூக்கம் வருது அனு… நான் போய் தூங்கறேன்… நைட் ஷூட்டிங் போகணும்…” என்றபடி தங்கள் அறைக்குள் சென்று பெட்டில் விழுந்தான்.

விஜய், ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சியில், ப்ரோக்ராம் ஹெட்டாக பணியாற்றி வருகிறான். அப்படி ஒருமுறை, ஒரு கல்லூரிக்கு நிகழ்ச்சிக்காக சென்ற போது, அனுபமாவை சந்திக்க நேர்ந்தது. அது ஒரு கல்லூரி கல்சுரல் நிகழ்ச்சி…. அதில் நடனம் ஆடுவதற்காக அனுபமா மேடை ஏற, அப்பொழுது விஜயின் மனதிலும் குடி ஏறினாள்.

என்ன மறக்க முயன்றும் அனுபமாவை மறக்க முடியாமல், மீண்டும் வேறொரு நிகழ்ச்சியின் பெயரை சொல்லிக் கொண்டு, அதே கல்லூரிக்கு சென்று அனுபமாவின் அறிமுகத்தைப் பெற்று, அவளது விவரங்களை சேகரித்தவன், நேராக தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு, அவளை பெண் கேட்டு, திருமணம் செய்துக் கொண்டான்.

தான் காதலித்த தினங்களை மனதினில் ஓட்டிப் பார்த்த விஜய், அஜயின் காதல் நிகழ்ச்சியை எப்படி எடுத்துச் செல்வது என்பதை மனதில் கணக்கிட்டுக் கொண்டே உறங்கியும் போனான்.

 

 

 

“அம்மா… மணி அஞ்சரை ஆகுது… நாம இப்போ கிளம்பினா தான் இருட்டறதுகுள்ள வீட்டுக்கு போகலாம்…” அஜய் தன்னுடன் தனது தாயாரை கிளப்ப முற்பட, ராதா அனுபமாவை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

“என்னம்மா… அவளையே பார்த்துட்டு இருக்க?” அவரிடம் இருந்து பதில் வராமல் போனதும் அஜய் கேட்க,

“நான் ஒருவாரம் இங்க இருந்துட்டு வரேன் அஜய்… நீயும் அது வரை இங்கேயே இரேன்… நீ போய் உன்னோட டிரஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வா…” ராதா வழி சொல்லவும், அஜய் அவரை முறைத்தான்.

“எனக்கு அதெல்லாம் சரி படாதும்மா… நீ வேணா இருந்துட்டு வா… நான் கிளம்பறேன்…” அஜய் சொல்லிவிட்டு, திரும்ப, விஜய் அவனையே நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா இது? அத்தானோட பார்வையே சரி இல்லையே… Mr. அஜய்… சமாளி..” அஜய் மனதினில் நினைத்தையே, வாய் மொழியாக கேட்ட விஜய், வீட்டில் இருந்த டேப் ரெக்கார்டரை நோண்டத் தொடங்கினான்.

“என்னங்க… டீ எடுத்துக்கோங்க… அதை என்ன செய்துட்டு இருக்கீங்க?” அனுபமாவின் கேள்விக்கும் பதில் பேசாமல், கொற கொற சத்தத்துடன் ஒவ்வொரு அலைவரிசையாக திருப்பிக் கொண்டிருந்தான்.

அவனது செயலுக்கான காரணம் புரிந்தும் புரியாமலும் அஜய் பார்த்துக் கொண்டிருக்க, ‘தென்றல் பண்பலைல ஜாங்கரி டோங்கிரி நிகழ்ச்சிய நீங்க கேட்டுட்டு இருக்கீங்க…. உங்க கூட பேசிட்டு இருக்கறது…. மித்ரன் சன் ஆப் ருத்ரமூர்த்தி… நாம இப்போ மொக்கைய பத்தி பேசிட்டு இருக்கோம்… மக்கள் வாங்கின மொக்கை அவார்ட்சை… கொஞ்சம் கூட ஒளிவு மறைவு இல்லாம, சுவாரஸ்யமா நம்ம மக்கள் சொல்லிட்டு இருக்காங்க…. வாங்க அடுத்த காலர் என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்…’ என்ற குரல் வரவும், அஜய் முழித்த முழியில் விஜய் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இப்போ எதுக்குங்க இதை ஓட விட்டுக்கிட்டு அவனை பார்த்து சிரிக்கறீங்க… கார்ல வச்சாலே சத்தமா இருக்குன்னு சொல்லுவீங்க… இப்போ வீட்ல வச்சிட்டு என்ன செய்துட்டு இருக்கீங்க?” அனுபமாவின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல்,

“ஒரு வாரம் இங்கே இரேன் அஜய்… இங்கயும் fm ஓடும்…” விஜய் நக்கலாக சொன்னாலும், உயர்ந்த புருவத்தின் கீழே அவனது கண்களின் மிரட்டலில், சிறிது நேரம் தலை குனிந்து நின்றவன்,

“சரி… ஒரு வாரம் இங்கயே இருக்கேன்… ஆனா… எனக்கு என்னோட பைக்கும்… டிரஸ்சையும் போய் எடுத்துட்டு வரணும்… கார்த்திக்கிட்ட சொல்லணும்…” அஜய் சொல்லவும்,

“என் கூட கிளம்பு… நான் ஆபீஸ் போற வழியில உன்னை விடறேன்… நீ எடுத்துட்டு வந்திரு…” விஜய் சொல்லிவிட்டு, அனுபமாவின் கையில் இருந்த டீயை வாங்கிக் கொண்டு, தனது அறைக்குச் செல்ல, அஜய் அவனை வெறித்துக் கொண்டிருந்தான்.

“ஹே… ரொம்ப சந்தோஷமா இருக்கு அஜய்… ஹப்பா… நாம எல்லாம் சேர்ந்து இருந்து எவ்வளவு நாள் ஆச்சு…” அவனது கையைப் பிடித்துக் கொண்டு அனுபமா குதூகலிக்க, ராதா அவனை ஆராய்ச்சியுடன் பார்த்திருந்தார்.

“உனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா நீ அங்கேயே இரு… நான் ஒரு வாரம் இங்க இருந்துட்டு வரேன் அஜய்…” ராதா இழுக்கவும்,

“நானும் இங்கயே இருக்கேன்ம்மா…” விஜய் வரவும், அவசரமாக கூறிய அஜய், “நான் போய் டிரஸ் எடுத்துட்டு வரேன்…” என்று விடைபெற்று செல்ல,

“நான் ஆபீஸ்க்கு போயிட்டு வரேன்… காலையில வந்துடுவேன்னு நினைக்கிறேன்…” என்ற விஜயும் காரை எடுக்க, அஜய் அவனுடன் சென்றான்.

விஜய் எதுவும் பேசாமல் அஜயின் வீட்டை நோக்கி காரை செலுத்த, கிட்டத்தட்ட வீடு வரும் வரை இருவருமே அமைதியாக இருந்தனர். வீட்டை நெருங்கும் வேலையில், “சாரி அஜய்… அனுபமாவ சந்தோஷமா வைக்க எனக்கு வேற வழி தெரியல… அதனால தான் உன்னோட பர்சனல் விஷயத்தை வச்சு நான் ப்ளாக்மைல் செய்தேன்… அவ மனசுல இவ்வளவு ஏக்கம் இருக்கும்னு நான் புரிஞ்சிக்காம போயிட்டேன்… ஏதோ என்னால முடிஞ்சது…. இந்த ஒரு வாரம் அவ சந்தோஷமா இருப்பா…” அவன் கண்களால் மிரட்டியதற்கு மன்னிப்பை வேண்டியவன்,

“நீ கொஞ்ச நேரத்துல கிளம்பு… காலையில பார்க்கலாம்…” என்று விஜய் விடைபெற்று செல்ல, வெறும் தலையசைப்புடன் தனது வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்னடா அஜய்… இவ்வளவு லேட்டா வர…” கார்த்திக் கேட்க,

“டேய் நான் இந்த ஒரு வாரம் அனுபமா வீட்ல இருந்து தான் ஆபீஸ்க்கு வருவேன்… அங்க இருந்தே உனக்கும் சேர்த்து லஞ்ச் எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு, அவன் வேகமாக தனது துணிகளை எடுத்து வைத்துக் கொள்ள,

“என்ன மச்சி… திடீர்னு இப்படி ட்விஸ்ட் அடிக்கற… சரி… நாளான்னிக்கு உன்னோட சர்ப்ரைஸ்காக நான் ஏற்பாடு பண்ணிட்டேனே… எப்படி வருவ…. காலையில எட்டு மணிக்கு ப்ரோக்ராம் முடிஞ்சதும் உன்னை பார்க்கறேன்னு கண்மணி சொல்லி இருக்காங்க…” விஜய் ஏற்பாடு செய்ததை, தான் செய்தது போல கார்த்திக் சொல்லவும், அஜய் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“ம்ப்ச்… விடுடா… எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… அங்க அனுபமா என்னவோ ஃபீல் பண்றாளாம்… அதனால அத்தான் என்னை ப்ளாக்மைல் பண்ணி அங்க தங்க வச்சிருக்காரு… அதுவும்… நான் இன்னைக்கு கண்மணிகிட்ட பேசறதைப் பார்த்துத் தான் இந்த ப்ளாக்மைல்… இன்னும் அவளை நேர்ல பார்த்தேன்னா… அடுத்து கல்யாணம் செய்துக்க சொல்லி என்னை மிரட்டினாலும் மிரட்டுவார்… அதனால.. அதெல்லாம் வேண்டாம்டா… விடு… நான் சுதந்திரமா இருக்கணும்… என்னை எந்தத் தடையும் கட்டிப் போட முடியாது…” அஜய் சொல்லிக் கொண்டே,

“சரி… வீட்டை பத்திரமா பார்த்துக்கோ… குப்பையா வைக்காதே… ஒரு வாரம் என் தொல்லை இல்லாம நிம்மதியா தூங்கு…” என்றவனை பிடித்து நிறுத்திய கார்த்திக்,

“என்ன விளையாடறியா? உனக்காக நான் அந்த ஆபீஸ் வாட்ச்மேன் கால்ல விழுந்து…. அங்க வேலை செய்யற எல்லார் கால்லயும் விழுந்து, கண்மணிகிட்ட பேசிட்டு வந்தா… நீ இப்படி சொல்ற… அதெல்லாம் இல்ல… நான் சரியா செவ்வாய் காலையில அங்க உன்னை கூட்டிட்டு போக வருவேன்… நீ வர… இப்போ நேரமாச்சு… சண்டே வேற… போலீஸ் கெடுபிடி அதிகம் இருக்கும்… அம்மா தங்கை கூட சந்தோஷமா இரு… கிளம்பு…” கார்த்திக் அவனை விரட்டவும், உதட்டைப் பிதுக்கிய அஜய்,

“பார்க்கறேன்டா… பை” என்று கிளம்பிச் சென்றான்.

அன்றைய மீதி நேரம் மொத்தமும், அம்மா தங்கையுடன், ஸ்ரீஜித்தை கொஞ்சிக் கொண்டே செலவிட்டு முடித்தவன், மறுநாள் காலை அவசரமாக வாக்கிங் செல்வதாக சொல்லிவிட்டு, தனது செல்போனுடன் வெளியில் சென்றான்.

அப்பொழுது தான் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த விஜய், வீட்டிற்கு சற்று தள்ளி, ஏதோ முணுமுணுத்துக் கொண்டு, அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்த அஜயைக் கண்டதும், இரவு முழுவதும் கண் விழித்ததினால் உண்டாகி இருந்த எரிச்சல் மறைந்து உல்லாசம் பெருக, காரை ஓரமாக நிறுத்திவிட்டு, பூனை நடை நடந்து அவன் அருகில் சென்றான்.

“கண்மணி… பிக்அப்…” என்று அஜய் சொல்லிக் கொண்டே, முதல் காலராக பேசக் காத்திருக்க,

“ஹலோ…” கண்மணியின் குரல் கேட்டவுடன் பரவசமுடன், அஜய் பேசத் துவங்க… விஜய் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

“மாட்டினடி மகராசா… உனக்கு நாளைக்கு இருக்கு கச்சேரி…” என்று தனக்குள் சிரித்துக் கொண்டே உள்ளே சென்ற விஜய், அப்பொழுது தான் கண் விழித்து எழுந்த ஸ்ரீஜித்தை கொஞ்சிக் கொண்டிருந்தான்.

அஜய் உள்ளே வரவும், அவனைப் பார்த்து சிரித்தவன், அவனது காதில் இருந்த ஹெட்போன்ஸ்சை பார்த்து கண்ணடிக்க, தலையை குனிந்துக் கொண்ட அஜய், அவன் அருகில் வந்து அமர்ந்தான்.

அம்மாவின் கையால் காலை உணவை முடித்துக் கொண்டு, அஜய் அலுவலகம் கிளம்பிச் செல்ல, அவனுக்கு முன்பே கண்ணம்மா வந்து அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்தவன் ஒரு சில வினாடிகள் திகைத்து, பின், “என்ன உடம்பு சரி இல்லையா?” அஜய் கேட்கவும்,

“ம்ம்… நேத்து எல்லாம் எழவே முடியல…” பரிதாமாக அவள் பதில் சொல்ல, அவளது முகத்தைக் கூர்ந்தவன்,

“லீவ் போட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல..” இளக்கமாக அவன் கேட்கவும்,  

“ஹையோ கண்ணம்மா… நீ இருக்கறது இந்த லோகம் தானா? லீவ் போட்டுக்க வேண்டியது தானேன்னு அஜய்…. அதுவும் இவ்வளவு சாதுவா கேட்கறானே… கைய கிள்ளிப் பார்த்துக்கோ…” தலை பாரமாக இருந்தாலும், அஜயை நக்கல் செய்து, அவளது கை கிள்ளிக் கொள்வதற்கு எழ,

“தொண்டை வலிக்குதா?” அவனது அடுத்த கேள்வியும் வந்து விழுகவும், கண்ணம்மா கண்களை விரித்து அதிசயமாகப் பார்க்க,

“ரொம்ப எல்லாம் பெருசா நினைச்சுக்காதே… வைரல் ஃபீவரா இருந்து அது மத்தவங்களுக்கும் பரவிச்சுன்னா… அடுத்த வாரம் முடிக்க வேண்டிய மாட்யூல் படுத்துரும்… அதுக்கு சொன்னேன்…” என்றுவிட்டு, அவளது கண்கள் கலங்குவதைக் கூட பொருட்படுத்தாமல், தன்னுடைய இடத்திற்குச் சென்று, தனது வேலையைத் தொடங்க, அருகில் இருந்த சுவாதிக்குத் தெரியாமல், கண்ணீரை ஒற்றி எடுக்க விழைய, சுவாதி கண்ணம்மாவின்  கையை அழுத்தினாள்.

“அவன் அவ்வளவு மோசமா பேசிட்டு போறான்… நீ என்ன கண்ணம்மா பேசாம அழுதுட்டு இருக்க… இந்த மாதிரி ஒரு டி.எல். கிட்ட வேலை செய்யறதுக்கு பேசாம லெட்டர் போட்ரு…” தோழியின் கண்ணீரை காண சகிக்காமல் சுவாதி சொல்லவும், கண்ணம்மா மறுப்பாக தலையசைத்தாள்.

“உங்ககிட்ட எல்லாம் அஜய் இப்படி நடந்துக்கறாரா சுவாதி…” கண்ணம்மாவின் கேள்விக்கு,

“அது தானே எனக்கு புரிய மாட்டேங்குது… எங்ககிட்ட எல்லாம் அவன் இந்த அளவு ஹார்ஷ்ஷா பிகேவ் செய்தது கிடையாதே… உன்னைப் பார்த்தா தான் அவனுக்கு பிடிக்கல…

ஏன் கண்ணம்மா… நீயும் கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணலாம் இல்ல… கொஞ்சம் தலையில எண்ணைய கம்மி பண்ணி… உன்னோட சுருட்டை முடிய கொஞ்சம் அடக்கி… அப்பறம் சுடிக்கு பதிலா, குர்தா அது போல போடலாம் தானே… உனக்கும் நல்லா இருக்கும் கண்ணம்மா… உனக்கு உடம்பு சரி ஆகட்டும்… நான் நம்ம கேம்பஸ்ல இருக்கற பியூட்டி பார்லர்க்கு கூட்டிட்டு போய், உனக்கு செட் ஆகற மாதிரி செய்யச் சொல்றேன்…” அவளது தோற்றம் தான் அவளுக்கு அஜயிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கிறது என்று சுவாதி இவற்றை எல்லாம் சொல்ல,

“சுவாதி…. திங்கட்கிழமை காலையில கூட உன்னால பேசாம வேலை செய்ய முடியாதா?” அஜயின் குரல் வந்த திசையில் பார்த்த கண்ணம்மா, அவனது பார்வையின் உக்கிரத்தில், அமைதியாக வேலையைத் தொடர, முடிந்த வரை கண்ணம்மாவை முறைத்த அஜய், தனது பணியைத் தொடர்ந்தான்.

அப்பொழுது லோகேஷின் செல்போன் தனது இருப்பிடத்தை ஒரு பாடல் பாடி, உணர்த்தத் துவங்கவும், அஜய்க்கு கண்மணியின் நினைவு மனதினில் எழ, அடுத்த நாள் அவளைக் காணப் போகும் பரபரப்பும், அவள் எப்படி இருப்பாள் என்ற குறுகுறுப்பும் எழுந்து, அவனை வேலை செய்ய விடாமல் தொல்லை செய்தது….

அதே குறுகுறுப்பு அவளைப் பார்த்த பின்னும் தொடருமா?

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

 

6 COMMENTS

  1. update superb….intha ajay, yen-thaan kannama kitta ipdi pesarano….pavam ava….kannama vum yen ivlo silent ah irukka?….avan birthday ku periya surprise gift kodunga pa….?

  2. thanks sri … thanks a lot ma … 🙂 🙂 hmm en pesaran … avalum silenta irukka … enniku ava thirupi kodukkarannu parpom

LEAVE A REPLY