SHARE

உன்னை பற்றிய எல்லாமும்
பத்திரமாய்
சேகரிக்கிறேன் ,
சில பக்கங்களின்
விளிம்புகளை
கிழித்தாலும்
உன் கோபத்திற்கு
ஓர் தனி இடம் தான் ..
அனலில் மெழுகாய்
உன் சுடு சொற்களில்
உருகிப் போகின்றேன்

“ஏன் Mr. அஜய்… இப்படி நீங்களே ஆப்பை தேடித் போய் உட்கார்ந்துக்கறீங்க? அத்தான் வந்ததைக் கூட மறந்து, அப்படி என்ன உங்களுக்கு கண்மணி பேசறதை கேட்க வேண்டி கிடக்கு… மாட்டினயா… நல்லா மாட்டினயா…. இப்போ அத்தான் போய் அனுபமா கிட்ட உண்மை விளம்பியா மாறி எல்லாத்தையும் சொல்லப் போறாரு… அந்த அனுபமாவும் அதே போல அம்மாகிட்ட வத்தி வைக்கப் போறா… அம்மாவும் அடுத்த பிளைட்ல கிளம்பி வந்து… கண்மணி யாருன்னு பார்த்து… எனக்கு கல்யாணம் செய்து முடிக்க போறாங்க…. அஜய்… அதுல இருந்து எப்படி எஸ்கேப் ஆகறது? யோசி…”  என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு, தனக்கு ஒரு காபியை போட்டு குடித்துவிட்டு, குழப்பம் நீங்க வேகமாக குளித்து, தயாராகி சோபாவில் சென்று அமர்ந்து, டிவியை ஓட விட்டான்.

டிவியின் சத்தத்தில் உறக்கம் கலைந்த விஜய், தயாராகி இருந்த அஜயைப் பார்த்து, “மச்சான்… நீ எப்போடா ரெடி ஆன?” ஆச்சரியமாகக் கேட்க,

“சரியா போச்சு போங்க… என்ன அத்தான் இது… ஒரு காபி போட்டுட்டு வர கேப்ல இப்படி தூங்கிட்டு இருக்கீங்க… சரி… போனா போகுது… உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு தான் ரெடி ஆகிட்டேன்… இருங்க அத்தான்… ஒரு ரெண்டு நிமிஷம்… நான் காபி எடுத்துட்டு வரேன்… சீக்கிரம் கிளம்பணும்… லேட் ஆச்சு… அனுபமாகிட்ட என்ன பதில் சொல்றது?” தான் தாமதம் செய்யவில்லை… விஜய் தான் உறங்கி விட்டான் என்பது போல அஜய் சீனைப் போடவும், விஜயுமே ஓரிரு நிமிடங்கள் குழம்பிப் போக,

“ஏன் அஜய்…. நீ காபி போட முக்கால் மணி நேரமா ஆகும்…” என்று போர்வைக்குள் இருந்து கார்த்திக்கின் குரல் வர, “அதானே…” என்று விஜய் அவனுடன் ஒத்து ஊதினான்.

“டேய்…” அஜய் எகிற, அதைக் கண்டு கொள்ளாமல்,

“இருக்கும் இருக்கும் அத்தான்… உங்களுக்காக அவன் ஸ்பெஷலா.. காபி கொட்டையை வாங்கி… வறுத்து…. அரைச்சு… தரமான பில்ட்டர் காபியா போட்டு வச்சிருப்பான்… அதனால தான் லேட்… இல்ல அஜய்…” என்று தொடரவும்,

“அடப்பாவி… இவன் ஒருத்தன் போதும் என் மானத்தை வாங்க…” என்று மனதில் திட்டிக் கொண்டே, அவன் போர்வையை இழுத்தவன்,

“சொன்னது நியாபகம் இருக்கு இல்ல… என் பர்த்டேக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு…” கார்த்திக்கிற்கு நினைவு படுத்திய அஜய்,

“சாரி அத்தான்… ஒரு ரெண்டு நிமிஷம் வரேன்…” என்று வேகமாக அடுக்களைக்குள் சென்றவன், கையில் சூடான காபியுடன் வந்தான். அதற்குள் கண்மணியை கண்டுபிடிக்கச் சொல்லி, கார்த்திக் விஜயிடம் கெஞ்சி முடித்திருக்க, விஜய் தான் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தான்.  

அஜய் வரவும், அவனைப் பார்த்த விஜய், “உன் தங்கை கூட எனக்கு இப்படி மணக்க மணக்க காபி போட்டு கொடுத்தது இல்ல அஜய்.. பேசாம நீ அங்கேயே வந்திறேன்…” அவன் கையில் இருந்த கப்பை வாங்கிக் கொண்டு உறுஞ்சிக் கொண்டே சொல்ல,

“எப்படியும் நீங்க இந்த வழியா தானே ஆபீஸ் போகணும்… போற வழியில வாங்க… பிளாஸ்க் நிறைய காபி போட்டுத் தரேன்… குடிச்சிக்கி்ட்டே இருங்க… ஆனா… இங்க இருந்து அங்க வர சொல்ற கதையே வேண்டாம்…. நான் ஃப்ரீ பர்ட்… என்னை எல்லாம் ஒரு கூட்டுல அடைக்க முடியாது…” என்று கூறியவன், அவனை கெஞ்சுவது போல பார்க்க, ஒரு புன்னகையுடன் விஜயும் அந்த பேச்சை அத்தோடு முடித்தான்.

“சரிடா மச்சான்… கிளம்பு… நாம வீட்டுக்குப் போகலாம்… அங்க உன் தங்கை… காலையில இருந்து தலை கால் புரியாம ஆடிக்கிட்டு இருக்கா.. இன்னிக்கு கிருத்திகையாம்… அசைவம் இல்லன்னு நீ ஏமாந்து போயிட்டியாம்…. அதனால, உனக்காக, சைவ சமையலே தட புடலா ஏற்பாடு ஆகிட்டு இருக்கு… சீக்கிரம் வா மச்சான்… நீ வந்தா தான் எனக்கு இவ்வளவு ஐட்டம் கிடைக்கும்… இல்ல… வெறும் புலவு… கலந்த சாதம் தான்…” என்று பெருமூச்சு விட,

“அடப்பாவி.. அப்போ நானு… என்னை விட்டுட்டு நீ மட்டும் இவ்வளவு சாப்பிட்ட… வயிறு வலிக்கும் சொல்லிட்டேன்…” கார்த்திக் சாபம் கொடுக்கவும்,

“நீயும் வாடா… உன்னை யாரு வர வேண்டாம்ன்னு சொன்னா… சாப்பிட்டுட்டு அப்பறம் எங்கயோ வெளிய போகணும்னு சொன்னியே போயிட்டு வா…” விஜய் சொல்லவும், அஜய் திரு திருவென விழிக்க, கார்த்திக் வாயை பொத்திக் கொண்டு சிரித்தான்.

“என்ன எல்லாத்தையும் சொல்லிட்டயா?” அவனது சிரிப்பில் சந்தேகமாகிய அஜய் மிரட்டினான்.

“என்னடா ரகசியம் ஓடுது இங்க….” விஜய் இடைப்புகவும், அவனுக்கு எதுவும் தெரியாது என்று புரிந்த அஜய்,

“ஒண்ணும் இல்ல அத்தான்… அவன் எங்கயோ வெளிய போகணும்னு சொல்லிட்டு இருந்தான்… அது தான் எங்க போறான்னு சொல்லிட்டானான்னு கேட்டேன்…” என்றவன், “சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு…” அங்கு நிற்க விடாமல் கார்த்திக்கை விரட்டினான்.

“அது தான் சொல்றதெல்லாம் சொல்லியாச்சே… இதுல இவருக்கு கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டலைன்னு பில்ட்டப் வேற….” என்று மனதினில் அவனை கலாய்த்தபடியே வேகமாக குளித்துக் கிளம்பி தயாராகினான்.

அஜய் பைக் சாவியை எடுக்கவும், “நாம கார்லயே போயிடலாம்… திரும்ப நானே உங்களை கொண்டு விடறேன்… எதுக்கு ரெண்டு வண்டி…” விஜய் சொல்ல,

“எதுக்கு அத்தான் திரும்பவும் இவ்வளவு தூரம் வந்துக் கிட்டு…” அஜய் தயங்க,

“பரவால்ல அஜய்… இன்னைக்கு ஒரு நாள் தானே… ஏறு…” என்ற விஜய், அவர்களை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான்.

வீடு நெருங்கும் பொழுதே, அனுபமா தனக்காக வாயிலில் காத்திருப்பது தெரியவும், தனது தங்கையைப் பார்த்து கையசைத்துக் கொண்டே வந்த அஜய், கீழே இறங்கியதும், வேகமாக, அனுபமாவின் அருகில் இருந்த ஸ்ரீஜித்தை தூக்கிக்கொண்டான்.

“என் செல்ல பட்டு… ஸ்ரீ கண்ணா… எப்படி இருக்கீங்க?” அவனது பட்டு கன்னத்தில் முத்தமிட்ட படியே அஜய் கேட்கவும், அஜயைப் பார்த்த சந்தோஷத்தில், “காக்கி..” என்று அவன் கை நீட்டி பதிலுக்கு அவனது கன்னத்தில் முத்தம் கொடுக்கவும்,

“உனக்கு நேத்திக்கே வாங்கி வச்சிட்டேனேடா… என் செல்ல குட்டி சாப்பிட்டு பிரஷ் பண்ணிடணும் சரியா..” கேட்டபடியே ஒரு சாக்லேட் பாரை அவனிடம் நீட்டியவன், அவனுக்கு ஒரு வாய் கொடுக்க, அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனுபமாவின் காதில் இருந்து புகை வந்தது.    

“இங்க உன் தங்கை நான்…. உனக்காக வாசல்லையே காத்துக்கிட்டு நின்னுட்டு இருக்கேன்… நீ என்னடான்னா அவனை கொஞ்சிக்கிட்டு இருக்க? எனக்கு எங்க சாக்லேட்… போதும் அவனை கொஞ்சறதை விடு…” அனுபமா குறை படவும்,

“என் மருமகன் குட்டி கால்ல… இந்த மாமனைப் பார்க்க நின்னுட்டு இருக்கான்… அவனை விட்டுட்டு, ஏழு கழுதை வயசாகுது… உன்னை எதுக்கு கவனிக்கணும்…” வந்ததும் வராததுமாக அஜய் அவளைக் கிண்டல் பண்ணவும்,

“ஏங்க இங்கப் பாருங்க… இவன் என்னை என்ன சொல்றான்னு…” அனுபமா விஜயிடம் முறையிடவும், அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்,

“யாருக்குடா ஏழு கழுதை வயசாச்சு… உனக்கு தான் ஆச்சு… என் அனு குட்டி இன்னும் சின்ன பொண்ணு தான்…” தன் மனைவியை கொஞ்சிக் கொண்டே விஜய் அவள் அருகில் வரவும், அஜய் அவர்களை பார்த்து சிரித்தான்.

“போதும் அஜய்… சிரிச்சது எல்லாம்… எப்போ எனக்கு நீ மருமகளை பெத்து தரப் போற? ஸ்ரீக்கு வயசாகிட்டே இருக்கு… இப்போ இருக்கற பொண்ணுங்க எல்லாம் வயசு வித்தியாசம் அதிகம் இருக்கக் கூடாதுன்னு சொல்றாங்க வேற… உன் பொண்ணு என்ன சொல்லுமோ?” அனுபமா மறைமுகமாக அவனது திருமணத்தைப் பற்றி கேட்கவும், அஜயின் முகம் ஒரு மாதிரி ஆகியது.

“ஏய் சும்மா இரு… அவனே இப்போ தானே வந்திருக்கான்” விஜய் அடக்கவும்,

“அடப் போங்க…. இவன் எப்போ பார்த்தாலும் கழுவற மீனுல நழுவற மீனாவே இருந்துட்டு இருக்கான்… அம்மாவும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டாங்க… இவனோ சும்மா எதையாவது பேசி அவங்களை கோபப்படுத்தறான்… இவனால அம்மாவுக்கு எவ்வளவு டென்ஷன் தெரியுமா? எனக்கு இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு தெரிஞ்சே ஆகணும்…” குறையாக அனுபமா  சொன்னாள்.

“இதைப் பத்தி பேசத் தான் ரெண்டு பேரும் சேர்ந்து கார்ல என்னை அழைச்சிட்டு வந்தீங்களா? ஏன் பைக் இல்லன்னா என்னால போக முடியாதா? நான் கிளம்பறேன்…” விருட்டென்று அஜய் கிளம்பவும், விஜய் அவனைப் பிடித்து நிறுத்தினான்.

“நில்லு அஜய்… நான் அதுக்காக உன்னை கூட்டிட்டு வரல… அவ ஏதோ ஆற்றாமையால பேசிட்டா… அதுக்காக கோவிச்சுக்காத மச்சான். உள்ள வா…” அனுபமாவை பார்வையால் அடக்கிவிட்டு, விஜய் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல, அனுபமாவின் முகம் கவலையைக் காட்டியது.

“இனிமே என் கல்யாணத்தை பத்தி பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க  அத்தான்…” என்று சொல்லிக் கொண்டே, குழந்தையுடன் அவன் உள்ளே நுழையவும், அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கும் அவனுடன் உள்ளே நுழைந்தான்.

குழந்தை அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கவும், சிறிது நேரமே கோபமாக இருந்தவன், “என்னடா… மாமாவ கோபப்படுத்தி பார்க்கவே இங்க நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க… அவங்களை என்ன செய்யலாம் சொல்லு…” என்று கேட்ட படி, குழந்தையை தூக்கிப் போட்டு பிடிக்க, அவனது சிரிப்பு, மற்ற அனைத்தையும் புறம் தள்ளியது.

“டிபன் சாப்பிட்டு பேசலாம் வாங்க…” அனுபமா அழைக்கவும், உர்ரென்ற முகத்துடன் அவன் சாப்பிட அமர,

“சரி… சாரி… இனிமே உன் கல்யாணத்தைப் பத்தி கேட்க மாட்டேன்… கொஞ்சம் சிரியேன்… எப்போப் பாரு இது என்ன முகமோ… அழகான முகத்தை கெடுத்துக்கற… யோகால என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா? சிரிப்பே ஒரு நல்ல யோகான்னு” அனுபமா மன்னிப்பு வேண்டவும்…

“ஆமா… அதுக்காக சிரிச்சுக்கிட்டே இருந்தா… லூசுன்னு சொல்லிடுவாங்க…” அவளுக்கு பதில் கொடுத்த படி, உண்ணத் தொடங்கியவன்,  

“நல்லா சமைக்க கத்துக்கிட்ட போல.. ஏதோ என் அளவுக்கு இல்லன்னாலும் ஓகே…” என்று கிண்டல் செய்யவும், அவன் தலையில் நறுகென்று குட்டியவள்,

“எல்லாம் என் நேரம்…” அவள் சலித்துக் கொண்டாள்.  

“அம்மா எங்க அனு?” அடுத்த வாயை வைத்துக் கொண்டே அவன் கேட்க,

“அம்மாவா… அம்மா… அம்மா… எங்க இங்க வந்திருக்காங்க…” அவள் சமாளிக்க முயலவும்,

“என்கிட்டையே வா…” என்று அவளை ஒரு பார்வை பார்த்தவன்,  “இது அம்மா செய்த டிபன் தான்… ராதா எங்க?” என்று இடியாப்பத்தை வாயில் போட்டுக் கொண்டே அவன் கேட்கவும், அனைவரும் அவனையே ஆச்சரியமாகப் பார்க்க,

“எப்படி மச்சி… முந்தா நேத்து தான் உன் கிட்ட பேசினாங்க… அதுக்குள்ள எப்படி வர முடியும்? சும்மா எடுத்து விடாதே…” என்ற கார்த்திக்,

“ஒருவேளை பிளைட்ல யாருகிட்டயாவது கொடுத்து விட்டு இருப்பாங்களோ?” என்று யோசித்தான்.

“அடச்சே… நீயும் உன் யோசனையும்…. அங்க பிளைட்ல ஏறினா இங்க வர நாலு மணி நேரம் தான்… டிக்கெட் கிடைச்சா போதாதா என்ன? எங்க அப்பா நினைச்சா… அவங்க ஆபீஸ் மூலமா வாங்கி இருக்கலாம்…” அஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “பாயி…” ஸ்ரீ கத்திக் கொண்டே சமையல் அறைக்குள் ஓட, அனுபமாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவன்,

“அம்மா… ஒளிஞ்சு விளையாடினது போதும்… வெளிய வாங்க” அஜய் அழைக்கவும், அவனது தாய் ராதா வெளியில் வந்தார்.

“சரியான விடா கண்டன்டா நீ… எப்படி ஒரு வாய் சாப்பிட்ட உடனே… அது நான் தான் செய்தேன்னு சொல்ற? நாக்கு அவ்வளவு நீளம்… இன்னும் அம்மா சமையலை மறக்கலையா அஜ்ஜூ…” அவனின் தலையை கோதிக் கொண்டே அவர் சிரிக்கவும்,

“உன் கைப் பக்குவம் தெரியாதா ராதா? இந்த அழுகுணிக்கு அதெல்லாம் வராதும்மா… பாவம் அத்தான்… என்கிட்ட என்ன புலம்பு புலம்பறார் தெரியுமா? டெய்லி நானே சமையல் செய்துத் தரேன்… அத்தான்… ஆபீஸ் போகும் போது வாங்கிட்டு போங்கன்னு சொல்லி இருக்கேன்…” விடாமல் அவன் வம்பு வளர்த்தான்.

“அப்பா நாரத முனி… சொல்லிட்டு நீ கிளம்பிப் போயிருவ… யாருப்பா அடி வாங்கறது…” விஜய் புலம்பவும், ‘உங்களை’ என்று அனுபமா முறைக்க, கார்த்திக்கோ, இடியாப்ப சிக்கலை பிரிப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் மூழ்கி இருந்தான்.  

“எங்கம்மா… ஸ்ரீனி வரலையா? எப்படி உன்னை தனியா விட்டார்?” அஜய் ஆச்சரியமாகக் கேட்க,

“உனக்கு கொழுப்புடா… வேற என்ன? இவன் எல்லாம் போன்ல பேசினா சரிப்பட மாட்டான்… நான் நேர்ல போய் வைக்கறேன் கச்சேரியன்னு சொன்ன உடனே… எனக்கு டிக்கெட் போட்டுக் கொடுத்துட்டார்… அங்க பக்கத்துல ஒரு ஹிந்திக்காரங்க, சமைச்சு தராங்க… அவங்ககிட்ட வாங்கி சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிட்டார்…” தான் வந்த கதையை ராதா சொல்லவும், அஜய் சிரித்துக் கொண்டான்.

“நீ வந்தது நல்ல விஷயம் தான்ம்மா… நானே சமைச்சு சாப்பிட்டு சாப்பிட்டு ரொம்ப போர் அடிக்குது… கொஞ்ச நாளைக்கு உன் சமையலை சாப்பிடலாம் இல்ல…” என்றவன், தட்டில் இருந்ததை முடித்து விட்டு, எழுந்து கொண்டான்.

“கல்யாண விஷயமா பேசறதா இருந்தா சொல்லும்மா… அடுத்த பிளைட்டுக்கே டிக்கெட் போட்டு தரேன்… அப்படியே துபாய்க்கு போயிடு… இங்க இருந்தா வீணா சண்டை தான் வரும்… அதையும் சொல்லிட்டேன்…” கைகளைத் துடைத்துக் கொண்டே, அவன் எச்சரிக்க, ராதா, விஜயைப் பார்க்க, அவனோ எதுவும் பேசாமல், தனது தட்டில் கவனமாக இருக்கவும், வேறு வழி இன்றி ராதா வேறு பேசத் தொடங்க, அன்றைய பொழுது கலகலப்பாக சென்றுக் கொண்டிருந்தது.

*******          

“கண்ணம்மா… இந்த கஞ்சியையாவது குடிச்சிட்டு மாத்திரைய போடு… உடம்பு இப்படி கொதிக்குது… ஆபீஸ்லயும் லீவ் கேட்க மாட்டேங்கிற… உன்னை என்ன சொல்றது?” புலம்பிக் கொண்டே, மீனா அவளுக்கு கஞ்சியை கொடுக்க, மெல்ல எழுந்து அமர்ந்தவள் சோர்வுடன் அதனை குடித்தாள்.

“போதும்மா… எனக்கு தொண்டை முழுங்கவே முடியல… கசக்குது…” என்று ஈன ஸ்வரத்தில் சொன்னவளின் அருகே வந்த கயல்,

“கண்ணம்மா… நான் வேணா உங்க டீம் லீடர்கிட்ட போன் செய்து நாளைக்கு உனக்கு லீவ் வேணும்ன்னு சொல்லிடவா?” என்று கேட்கவும்,

“இல்ல கயல்… வேண்டாம்… அவர் ஏதாவது சொல்லிடுவார்… இன்னைக்கு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்…” மறுத்தவள், கண்களை மூடிப் படுத்துக் கொள்ள,

“என்ன பிடிவாதமோ போ.. சொன்னா கேட்காம உடம்பை இழுத்து விட்டுட்டு நிக்கப் போற…” சலித்துக் கொண்டே மீனா நகர, “கண்ணம்மா….” கயல் அழைத்தாள்.

“என்னடி… நீயும் ஏதாவது சொல்லப் போறியா?” சலிப்பாக அவள் கேட்க,

“இல்ல கண்ணம்மா உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்… அம்மா என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்கு ஒரு தடை போட்டியே… அதுக்கு…” ஒரு மாதிரிக் குரலில் கயல் சொல்லவும், பட்டென்று கண் விழித்துப் பார்த்த கண்ணம்மா, எழுந்து அமர்ந்தாள்.

“என்னடி சொல்ற? நான்… எப்போ?” கண்ணம்மா இழுக்கவும்,

“எனக்கு எல்லாம் தெரியும் கண்ணம்மா… நேத்து அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டு இருந்தாங்க… மேல படிக்கட்டும்ன்னு அப்பாவும் சொல்லிட்டாங்க… ரொம்ப தேங்க்ஸ் கண்ணம்மா…” மீண்டும் அவள் நன்றி உரைக்கவும், அவளது வாழ்க்கையையும் தான் பாழ் செய்கிறோமோ என்று கண்ணம்மா வருந்தி,

“இல்ல கயல்.. உனக்கு கல்யாணம் செய்ய வேண்டாம்ன்னு சொல்லல… கொஞ்சம் பொறுமையா பார்த்து செய்ங்க… அதுவரை அவ படிக்கட்டும்ன்னு சொன்னேன்… தப்பா இல்ல…” தயக்கமாக இழுத்தாள்.

“ஹையோ.. லூசு… நான் உன்னை எங்க தப்பா எடுத்துக்கிட்டேன்… உனக்கு நடந்ததை எல்லாம் பார்த்து, எனக்கு கல்யாணம்னாலே வெறுப்பா போயிருச்சு… கூடவே பயமாவும் இருக்கு… எவ்வளவு விசாரிச்சு செய்தும்… அந்த வீட்ல உன்னை கொன்னு போட்டு இருந்தா கூட கேட்க ஆள் இல்லாம போயிருக்கும் இல்ல… நல்லவேளை நீ அப்பாவுக்கு போன் செய்த… இல்ல… நினைக்கவே பயமா இருக்கு கண்ணம்மா… எனக்கு வேண்டவே வேண்டாம்… நான் படிச்சு நல்ல வேலைக்கு போறேன்…

அதை அம்மாகிட்ட எப்படி சொல்றதுன்னு நானே சங்கடப்பட்டுக்கிட்டு இருந்தேன்… நல்லவேளை நீயே சொல்லிட்ட… அதுக்குத் தான் தேங்க்ஸ் சொன்னேன்…” கண்ணம்மா வருந்துவது பொறுக்காமல் கயல் சொல்லவும், கண்ணம்மா கண்ணீரில் கரைந்தாள்.

“எதுக்கு இப்போ அழற? எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சிக்கோ… உனக்கு என்ன இப்போ வயசாகிடுச்சு… வேற நல்லவனா உனக்கு கிடைப்பான்.. உன்னை கையில வச்சு தாங்குவான்…” கயல் ஆருடம் சொல்லவும், கண்களைத் துடைத்துக் கொண்ட கண்ணம்மா, உதட்டிற்கு பொருந்தாத ஒரு புன்னகையை செலுத்திவிட்டு, கண்களை மூடிக் கொள்ள, அதற்கு மேல் வேறெதுவும் பேச வேண்டாம் என்று கயல் அங்கிருந்து நகர்ந்து செல்ல, கண்ணம்மாவின் விழிகளோ, கண்ணீரின் தத்தளிப்பில்!!

“ஏன் இப்படி எல்லாம் நடந்தது? எல்லாமே தப்பாகிப் போன காரணமென்ன…” என்று அவளது மனம் யோசிக்கத் தொடங்க, உண்ட மாத்திரையோ, அவளை நித்திரைக்கு அழைத்துச் சென்றது.

—————–

தனது தாயின் மடியில் படுத்துக் கொண்ட அஜய், ஸ்ரீஜித்தை தனது மார்பின் மீது அமர வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்க,

“அஜய்… நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்…” கார்த்திக் கிளம்பவும், அஜய் கட்டை விரலைக் காட்ட, விஜயோ வழக்கம் போல, தனது நண்பர்களைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான்.

அஜய்யை, தன்னையே மறக்கும் அளவு வசியப்படுத்தி வைத்திருக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரியைக் காண, விஜய் கார்த்திக்குடன் தென்றல் பண்பலையின் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

அதில் வேலை பார்க்கும் தனது நண்பனிடம், தான் அலுவலகம் வரும் தகவலைத் தெரிவித்து விட்டு, கார்த்திக்கை வெளியில் காத்திருக்க சொல்லிவிட்டு, அலுவலகத்தினுள் சென்றவனை, அவனது நண்பன் வாசலில் வந்து வரவேற்றான்.

“என்னடா இந்தப் பக்கம்…” விஜயின் நண்பன் கேட்க, தான் வந்த விஷயத்தை அவன் சொல்லவும்,

“இங்க வேலை செய்யறவங்களோட பர்சனல் டீடைல்ஸ் தரக் கூடாது விஜய்… அது கம்பெனியோட ரூல்ஸ்… அதுவும் இங்க வேலை செய்யற லேடி RJங்க போட்டோ ஒண்ணு கூட தப்பித் தவறி வெளிய தெரியாது… அவங்களும் அதைத் தான் கேட்கறாங்க… நாங்களும் அப்படித் தான் வச்சிருக்கோம்…” அந்த நண்பன் இழுக்கவும்,

“என் மச்சானோட லைப்ஃபே அதுல தான் அடங்கி இருக்கு… ப்ளீஸ்…” விஜய் கெஞ்சிக் கேட்கவும், தனது சிஸ்டமை விஜயின் புறம் திருப்பி, விஜய் கேட்ட கண்மணியின் விவரங்களைக் காட்ட, அதனை குறித்துக் கொண்ட விஜய், சிறிது நேரம் தனது நண்பனிடம் பேசிவிட்டு, விடைப்பெற்று வெளியில் வர, கார்த்திக் ஆவலாக விஜயைப் பார்த்தான்.

“என்ன அத்தான்… டீடைல்ஸ் கிடைச்சதா? எப்படி இருக்காங்க கண்மணி?” ஆர்வமாக கார்த்திக் கேட்கவும்,

“ம்ம்… போன் நம்பர் கூட கிடைச்சது கார்த்திக்… இங்க டீடைல்ஸ் எல்லாம் ரொம்ப கான்பிடென்ஷியலா வச்சிருக்காங்க… அதானால… நானே எல்லாம் பேசிட்டு உனக்கு சொல்றேன்… சரியா ப்ளான் பண்ணிக்கலாம்… ஓகே வா… அவனோட இந்த பர்த்டேவை நாம மறக்க முடியாததா ஆக்கறோம்…” விஜய் சொல்லவும்,

“கண்டிப்பா…” என்று கார்த்திக்கும் கூட்டணியில் சேர, அதன் பிறகு, எப்படி அவர்களை சந்திக்க வைப்பது என்று திட்டம் தீட்டி விட்டு, இருவரும் தனித் தனியே வீடு வந்து சேர, அஜய், அவனது அன்னையின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தான்.

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்….

6 COMMENTS

 1. super update….story is very interesting….kannamavum kanmani um oruthar thaane ?…next update la solunga pa…waiting eagerly.

 2. Thalaivaruku apu ready aguthu? Hi hi jodi sekar atha than solren ,Rammy kanama lifela nadanthathu enna nu theriyanumla?please seekiram solen chellams!

 3. hi ramz,
  ippodhan pa unga update’a padichen…

  kanmaini dhan kannamma’va irukkanum…
  appadi illai’na, antha kanmani nitchayam PKS’ai vida konjam vayasaanavangela irukkanum… hehehe

  yeppadiyo, intha PKS sir’ku aappu irukku…

  waiting waiting…

LEAVE A REPLY