SHARE

​கோபம் இல்லாத
இவன் எப்படி இருப்பான் !!
ஒட்டிப்பிறந்தது போலே
எப்பொழுதும்
உடன் வைத்துக் கொண்டே !!
ஆனாலும் கோபம் இல்லாத
இவனை
கற்பனை பண்ணவும்
மறுக்கிறது மனது !!
மொத்தத்தில் புரியாத புதிராய்
கோபத்தின் உருவாய் !!
என்னை குழப்பத்திலே
தள்ளுகிறான் !!

“என்னங்க… சாப்பிட வராம இங்கயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க?” என்றபடி உள்ளே வந்த மீனா… அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டே எழுந்த சுப்புவைப் பார்த்து, பதட்டமாக அவர் அருகில் ஓடினார்.

“என்னங்க…. எதுக்கு அழறீங்க?” கேட்டுக் கொண்டே, அவரை ஆராய்ந்தவர், “கீழ விழுந்துட்டீங்களா? இல்ல உடம்புக்கு ஏதாவது செய்யுதா? மறைக்காம சொல்லுங்க…” என்று கேட்கவும்,

“ஒண்ணும் இல்ல மீனா… மனசு சரியில்ல” என்று பதில் சொல்லவும், பெருமூச்சுடன், மீனா அவர் அருகில் பார்க்க, அங்கு இருந்த பொருளைப் பார்த்தவரது கண்கள் தானாக அனுமதியின்றியே கலங்கியது.

“இப்போ எதுக்குங்க இதை எடுத்தீங்க? பரண் மேல தானே இதைப் போட்டு வச்சிருந்தேன்… அதை நாமளே எடுத்துப் பார்த்து எதுக்கு கஷ்டப்பட்டுக்கணும்” கோபம், இயலாமை, என்று அனைத்தும் போட்டிப் போட, அந்த ஆல்பத்தை எடுக்க அவர் எத்தனிக்க,

“நான் கண்ணம்மாவோட வாழ்க்கையில ரொம்ப அவசரப்பட்டுட்டேனோ மீனா? அவ படிச்சு முடிக்கிறதுக்குள்ள அவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி… அந்த கல்யாண அலுப்பு போறதுக்குள்ள, அவ போன மாதிரியே திரும்பி வீட்டுக்கு வந்தாளே… அந்தக் கொடுமை யாருக்கு நடக்கும்… என் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு, கொடுமைப்பட்டு திரும்பி வந்தா…. அதை எங்கப் போய் சொல்ல?” தலையில் அடித்துக் கொண்டு சுப்பு அழவும், அவரது கைகளை மீனா பிடித்துக் கொண்டார்.

“அவ அதுல இருந்து இன்னும் தெளியவே இல்ல மீனா… நேத்து கூட கயல் கல்யாண விஷயம் பேசின போது, அவ கண்ணுல தண்ணி வருது… குழந்தை என்ன பாடு பட்டிருந்தா… இன்னமும் அந்த பாதிப்பு விலகாம, நம்ம அவளை இவ்வளவு ஜாக்கிரதையா பார்த்துக்கிட்டாலும் அவளுக்கு அழுகை வரும்…” மேலும் அவர் புலம்ப,

“என்னங்க செய்யறது… அவன் நல்லவன்னு நினைச்சு நாம கல்யாணம் செய்து கொடுத்தோம்… விசாரிச்சவங்க எல்லாருமே அதைத் தானே சொன்னாங்க.. ஆனா…  அவன் இப்படி எல்லாம் இருப்பான்னு யாருங்க கண்டா… நல்லவன் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்து பொண்ணு கேட்டானே… கடைசியில…” சொல்ல முடியாமல் அவரும் நிறுத்த,

“அந்த பொறுக்கி, அவன்…. இப்போவும் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வெளியில சுத்தறது தான் எனக்கு வருத்தமா இருக்கு… அவனை அப்படியே கொன்னு போடணும் போல இருக்கு… என் பொண்ண செய்யாத கொடுமை எல்லாம் செய்துட்டு… என் பொண்ணு சரி இல்லன்னு பழி சொல்றான்…” சுப்பு புலம்பவும்,

“எல்லாம் நம்ம நேரங்க… நல்ல இடம்ன்னு நாம அவசரப்பட்டுட்டோம்…” என்ற பதிலோடு, மீனாவும் அந்த புகைப்படத்தைப் பார்வையிட,

“குழந்தைத் தனமே மாறாம நிக்கறதைப் பாருங்களேன்… நாம அவளுக்கு எவ்வளவு பெரிய கொடுமைய செய்துட்டோம்…” என்று புலம்பலுடன், சிறிது நேரம் கண்ணம்மாவின் திருமணப் புகைப்படங்களையே பார்வையிட்டுக் கொண்டிருந்த இருவரின் மனதிலும், ஒரே போல நடந்த நிகழ்வுகள் அனைத்தும் படமாக விரியத் தொடங்க,

“என்னால முடியலைங்க… பெத்த வயிறு பத்தி எரியுது…” என்று கோபமாகக் கூறிக் கொண்டே, வேகமாக புகைப்பட ஆல்பத்தை பிடுங்கி பரணில் போட்ட மீனா,

“அவனை தலை முழுகி நம்ம பொண்ணை பத்திரமா கூட்டிட்டு வந்தாச்சே… ஏதோ அவ உயிரோட வீட்டுக்கு திரும்பி வந்தாளே… அதுவே கடவுள் புண்ணியம்… அதை அதோட விடுங்க… முகம் கைக் கால் கழுவிட்டு வந்து சாப்பிடுங்க… பெரிய இடம்னு கட்டிக் கொடுத்தது தப்புங்க.. இப்படிப் பட்ட மூர்க்கனா இருப்பான்னு யாருக்குங்க தெரியும்… சாதாரண குடும்பமா இருந்தாலும்… நல்லவனா பார்த்து கட்டிக் கொடுத்து.. நம்ம கண்ணம்மா நல்லா வாழணும்ங்க…” மீனா சொல்லவும்,

“ஆமா… ஆனா அவ அதுல இருந்து வெளிய வர இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும்… அதுவரை பொறுமையா இருப்போம்… கொஞ்சம் நஞ்சமா அவ அடி உதைன்னு வாங்கிட்டு வந்திருந்தா…” என்றபடியே சுப்புவும் எழுந்து சென்றார்.

நள்ளிரவு மணி பன்னிரண்டை கடந்து முப்பது வினாடிகள் சென்றிருந்தது….   அஜயும் கார்த்திக்கும் சினிமா முடிந்து வந்துக் கொண்டிருக்க, அவர்களை போலீசார் வழி மறித்தனர்.

“டேய்… நான் தண்ணி கூட குடிக்கல டா… எதுக்கு என்னைப் பிடிக்கறாங்க… நீ குடிச்சியா?” கார்த்திக் கேட்கவும், வண்டியை நிறுத்திய அஜய், அவனை திரும்பி முறைத்தான்.

“என்னை எதுக்குடா முறைக்கிற… நான் குடிக்கிற தண்ணிய தான் கேட்டேன்… அடிக்கிற தண்ணியை இல்ல…” கார்த்திக் முணுமுணுத்தான்.

“வாய மூடிக்கிட்டு கீழ இறங்கு… அப்போ இருந்து உன் கூட தானே இருக்கேன்…” என்று கடுப்படித்தவன், வண்டியைத் தள்ளிக் கொண்டு போலீசின் அருகே செல்லவும்,

“நான் அசந்த கேப்ல போயிருப்பியோன்னு ஒரு சந்தேகம்…” கார்த்திக் இழுக்கவும், போலீஸ் கான்ஸ்டபிள் அருகில் வரவும் சரியாக இருக்க கார்த்திக் வாயை மூடிக் கொண்டான்.

எப்பொழுதும் அவர்கள் செய்யும் விசாரணை முடிந்து, அவர்கள் செல்ல அனுமதி அளித்த அந்த கான்ஸ்டபிள், கார்த்திக்கை ஒரு மாதிரிப் பார்க்கவும், கார்த்திக் அவசரமாக ஏறிக்கொண்டான்.

“இப்போ எதுக்குடா நம்மளை கொலைக்காரங்க மாதிரி விரட்டறாங்க…” கார்த்திக் புலம்பவும்,

“உன்னை ஒரு பார்வை பார்த்தாரே… எனக்கு என்னவோ உன்னை பார்த்துட்டு தான் என்னையும் நிறுத்தி இருப்பார்ன்னு தோணுது..” என்று அஜய் அவனது கடுப்பில் மேலும் எண்ணை ஊற்றவும்,

“ஒரு பச்சைக் குழந்தைய இப்படி சந்தேகப்படலாமா? இது நியாயமா?” என்று கார்த்திக் தொடங்க, அஜயோ வேறு நினைவில் மூழ்கினான்.

“என்னடா அமைதியா வர? என்னாச்சு அஜய்?” அவனது அமைதி கார்த்திக்கைக் அசைக்கவும்,

“இல்ல கார்த்தி… நீ இப்படி பச்சைப் பிள்ளையா இருக்கியே… என் பர்த்டேக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு… எப்படி நீ அதுக்குள்ள கண்மணியை எனக்கு இன்ட்ரோ கொடுக்கப் போறேன்னு யோசிச்சிட்டு வந்தேனா… எனக்கே மலைப்பா இருக்கு கார்த்திக்… நீ எப்படி….” அவன் இழுக்கவும், பல்லைக் கடித்தவன்,

“என் தலைய அடமானம் வச்சாவது உனக்கு இன்ட்ரோ கொடுக்கறேன்…”

“உன் தலைய யாரு வாங்குவா? சரி… எதுக்கும் ட்ரை பண்ணு… அப்படி மட்டும் எவனாவது வாங்கிட்டான்… எனக்கு பியூச்சர்ல யூஸ் ஆகும்… உன் தலைய வச்சு நான் இன்னொரு கார் கூட வாங்குவேன்… மீட்கறதை பத்தி அப்பறம் யோசிச்சுக்கலாம்…” அஜய் அவனை கேலி செய்துக் கொண்டே, வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தி, லிப்ட்டிற்குள் நுழைந்தான்.

“ஏன் அந்த காரை வாங்கி என் தலை மேலயே ஏத்தேன்…” அவனும் உள்ளே நுழையவும்,

“எனக்கு உன் தலை வேணும்… அடிக்கடி அதை அடமானம் வேற வைக்கணும்… அதனால அதை எல்லாம் நசுக்க மாட்டேன்…” என்று சீரியசாக சொன்னவன், வீட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“டேய்… கொலைகாரா… ஒரு பேச்சுக்கு சொன்னா… அதை செய்துட்டு தான் மறுவேலை பார்ப்ப போல…”

“எதுக்கு பேச்சுக்கு சொல்லற… சும்மான்னா எது வேணா செய்துடுவியா?” என்று கேட்டவன், சோபாவில் விழுந்தான்.

“உன்னை…” என்று அவனை அடிப்பது போல சென்றவன்,

“நாளைக்கு சண்டே… எப்படியும் போய் கண்டுபிடிக்கறேன்… இந்த கார்த்திக் சொன்ன வார்த்தையை காப்பாத்தாம இருக்க மாட்டான்…” என்ற சபதத்துடன், இன்னொரு சோபாவில் அவனும் விழ இருவரும் உறங்கி போயினர்.

மறுநாள் காலையில் அலாரம் அடித்ததும்… “ஏண்டா சண்டேயும் அதுவுமா கொடுமை படுத்தற? அந்த அலாரம் டோனையாவது மாத்துடா… காலங்கார்த்தால… கண்மணி பொன்மணின்னுகிட்டு… இம்சை… அதே பாட்ஷா… பாட்ஷான்னு வச்சுப் பாரு… என்ன எனெர்ஜியா இருக்கும்… அதே எனர்ஜியோட எழுந்து வேலையச் செய்… சும்மா பம்பரம் மாதிரி சுத்துவ…” அரைத் தூக்கத்தில் கார்த்திக் புலம்பினான்.

“நான் எழுந்து ரொம்ப நேரம் ஆச்சுடா வெண்ணை… பேசாம படுத்துத் தூங்கு…” அஜயின் குரல் தூரத்தில் இருந்து ஒலிக்கவும்,

“அதே போல சத்தம்மில்லாம ரூம்ல போய் கண்மணி கூட பேசு… எனக்கு தூங்கணும்… ராத்திரி பூரா என் தலை மேல நீ காரை ஏத்தறா போலயே கனவு வந்துட்டு இருந்துச்சு…” என்றவன், போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

காலைச் சுறுசுறுப்புடன் கையில் போனை எடுத்தவன், “ஹே… பிக் அப்… பிக் அப்…” என்று மந்திரம் போல திரும்பத் திரும்ப அவன் முணுமுணுத்துக் கொண்டிருக்க,

“நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தெய்வ ராகம்…” என்று வேறொருவரின் குரல்,

“தென்றல் ராகம் நிகழ்ச்சியை வழங்க…. உங்க கண்மணி வந்தாச்சு… இந்தப் பாடலோட நான் விடைப்பெறப் போறேன்… மீண்டும் உங்களை எல்லாம் நாளைக் காலையில் சந்திக்கிறேன்… தெய்வ ராகத்தில் அடுத்து வரும் பாடலைப் பற்றி கண்மணி சொல்வாங்க…” என்று கண்மணியின் வரவை சொல்லவும், அஜய் சுறுசுறுப்பாக,

“நன்றி சாக்ஷி….” என்று நன்றியுறைத்த கண்மணி…

“தெய்வ ராகத்தில் அடுத்து நாம கேட்டக இருப்பது… வசீகர சிரிப்போட… தத்தி தத்தி நடந்து அந்த கோகுலத்தையே தனது வசம் வைத்திருந்த அந்த யசோதையின் கண்ணனைப் பற்றியது… கண்ணன்… அந்தப் பெயரைச் சொல்லும் பொழுதே நம் உள்ளம் நெகிழும்…” என்று அந்த தெய்வீக ராகத்திற்கு ஏற்ப, அமைதியான குரலில் அவள் பேசவும், அந்த குரல் ஏனோ அஜயின் உள்ளம் வரைத் தீண்டியது…

அவள் தென்றல் ராகத்திற்கு ஏற்ப பேசும் ஜாலி வாய்ஸும்… தெய்வீக ராகத்திற்கு ஏற்ப அவள் பேசும் அமைதியான குரலும்… இரு குரல்களுக்கும் இடையே இருந்த மாடுலேஷனையும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தவன், அந்தக் கண்ணனைப் பற்றி கண்மணி, 

 

ஆயர்பாடி மாளிகையில் 
தாய்மடியில் கன்றினைப் போல்
 

மாயக்கண்ணன் தூங்குகின்றான்
 
தாலேலோ

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு 
மண்டலத்தைக் காட்டியபின்
 
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
 
ஆராரோ
 
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
 
ஆராரோ….
             

என்று பாடவும், அந்த பாடல் ஒலிபரப்பாகத் தொடங்கியது.  

“வாவ்… ரொம்ப அழகா பாடிட்ட கண்மணி… இப்படி முன்னாடியே வந்து சர்ப்ரைஸ் கொடுக்கறாளே… அப்போ இனிமே சீக்கிரமே எழணுமா?” சந்தோஷச் சலிப்புடன் அவன் நினைத்துக் கொண்டே, இணைப்புக்காக காத்திருக்க,

அதே நேரம், டிங் டாங்… என்று அழைப்பு மணி ஒலிக்கவும், ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக், சலிப்புடன் திரும்பிப் படுத்தான்…. ‘கார்த்திக் யாருன்னு பாரு…’ இந்த நேரம் பேப்பர்காரன் பணம் வாங்க வந்திருப்பான்… என்ற எண்ணத்துடன், அஜய் குரல் கொடுக்க,

“இவனும் தூங்க மாட்டான்… தூங்கறவங்களையும் விட மாட்டான்… யாருப்பா அது… காலையில கதவைத் தட்டிக் கிட்டு… ஏன் பணம் வாங்கறதை எல்லாம் பத்து மணிக்கு மேல வந்து வாங்கிக்கிட்டாத் தான் என்ன?” என்று கத்திக்கொண்டே, தூக்க கலக்கத்தில் நடந்து சென்று கதவைத் திறந்த கார்த்திக், அங்கு நின்றிருந்த, அனுபமாவின் கணவன், விஜயைப் பார்த்து அதிர்ந்து விழித்தான்.

“என்னடா… இன்னும் ரெண்டு பேரும் எழுந்துக்கலையா?” விஜய் கேட்கவும்,

“என்ன அத்தான் (அஜயை விட விஜய் பெரியவன் ஆதலால் அவன் பெயரைச் சொல்லி அழைக்காமல் இவ்வாறு அழைக்க… அதே வழக்கத்துடன் கார்த்திக்கும் அவரை அத்தான் என்றே அழைக்கிறான்…) இவ்வளவு காலையிலயே வந்திருக்கீங்க? அவன் எழுந்து மார்னிங் ட்யுட்டி ஜாயின் பண்ண போயாச்சே… நான் தான் அத்தான் தூங்கிட்டு இருக்கேன்…” ஒரு கொட்டாவியை விட்டுக் கொண்டே கார்த்தி சொல்ல,

“ஏண்டா… நைட் ஷோ போயிட்டு வந்தீங்களா?” கேட்டுக் கொண்டே உள்ள வந்த விஜய்,

“அதுக்குள்ள ஆபீஸ் போயிட்டானா… இன்னைக்கு வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருந்தான் போல… போய் கையோட கூட்டிட்டு வாங்கன்னு, என்னைத் தூங்க விடாம, உங்க தங்கச்சி இங்க துரத்தி விட்டு இருக்கா… இப்போ நான் போய் என்ன பதில் சொல்லறது?” தனது ஞாயிறு தூக்கம்  பறிபோன துக்கத்தில் விஜய் சொல்லவும்,

“நீங்க வேற அத்தான்… நல்லா கேட்டீங்க போங்க… அவனாவது இந்த நேரத்துல ஆபீஸ் போறதாவது… கொஞ்சம் அவன் ரூம்ல போய் பாருங்க… அவனோட ட்யூட்டி என்னன்னு தெரியும்…” கார்த்திக் கிண்டலடிக்க, விஜய் அந்த அறையை நோக்கி நகர்ந்தான்.        

தெய்வ ராகத்தின் இறுதிப் பாடல் முடிந்து, விளம்பர இடைவேளை ஓடிக்கொண்டிருக்க, இணைப்பு கிடைத்த மகிழ்ச்சியில், ‘எஸ்’ என்று கையை மடக்கி சந்தோஷப்பட்டுக் கொண்டு, “ஹலோ…” அஜய் அழைக்க,

“ஆன் ஏர்…. கோ..” என்ற ஒரு குரல் வரவும்,

“என் கூட வாங்க…” என்று விஜயை அழைத்துக் கொண்டு வந்த கார்த்திக், வேகமாக தனது மொபைலில் fm ரேடியோவை இயக்கினான்.     

“என்னடா பண்ற?” விஜயின் கேள்வி முடியும் முன்பே,

“ஹாய்… ஹாய்… ஹாய்… சென்னை மக்களே… நான் உங்க RJ கண்மணி தென்றல் ராகம் நிகழ்ச்சியை வழங்க வந்துட்டேன்…. அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்… எல்லாரும் இன்னமும் தூங்கிட்டு சண்டேவை என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்களா? வாரத்தின் முதல் நாள் நாம சந்தோஷமான டாபிக்கைப் பற்றி பேசலாமா? இன்னைக்கு நாம பேசப் போற தலைப்பு ‘நம்பிக்கை’

‘விட்டுவிடுங்கள் என உலகமே சொல்லும் போது ‘நம்பிக்கை’ மெதுவாக உச்சரிக்கும்… இன்னுமொரு முறை முயற்சித்து பார்….. ‘  ரொம்ப அழகான வரிகள் இல்லையா? நம்பிக்கை முயற்சியைப் பற்றி எல்லாருமே பல விதமா சொல்லி இருக்காங்க… நம்ம வாழ்கையில அது நடக்கும் போது இருக்கற சந்தோஷமே தனி தானே…

உங்க வாழ்க்கையில கூஸ் பம்ப்ஸ் மொமென்ட்ன்னு சொல்லுவாங்களே… அது போல நீங்க நம்பிக்கையா இருந்து, அந்த நம்பிக்கை பொய்யாகாம நடந்த விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்… நானும் உங்க கூட அந்த சந்தோஷமான விஷயத்தை கேட்க ரெடியா இருக்கேன்… லைன்ல இருக்கற முதல் காலர் யாருன்னு பார்க்கலாமா?” கண்மணி பேசி முடித்து, ‘ஹலோ’ சொல்லவும்,

“ஹாய் கண்மணி… திஸ் இஸ் ஜெய்…  நம்பிக்கை… அதானே எல்லாம்…” அஜய் பேசவும், விஜய் இங்கே வாயில் அடித்துக் கொள்ள,

“ஹாய் ஜெய்… இன்னைக்கும் உங்க விடா முயற்சி வெற்றி பெற்றுடுச்சு போல… சொல்லுங்க… உங்களோட நம்பிக்கை வெற்றியான கதையை…” மேலும் அவள் கேட்க,

“நாம பிறந்தது முதல் இறப்பு வரை எல்லாமே நம்பிக்கையில தான் ஓடுது…. ஒவ்வொரு நாளும்…. நாம கண் விழிப்போம்ங்கற நம்பிக்கையில தானே, நாம பிற்காலத்துக்கு சேர்த்து வைக்கிறோம்…” பெரிய தத்துவமாக அஜய் சொன்னான் .

“அதெல்லாம் சரி தான் ஜெய்… உண்மை தான்… அதைத் தவிர நீங்க நம்பிக்கையோட வெற்றி பெற்ற ஒரு நிகழ்வை சொல்லுங்க” கண்மணியின் கேள்விக்கு,

“அப்படி எதுவும் என் லைஃப்ல இதுவரை நடந்தது இல்ல… இனிமே நடக்கும்ன்னு ஒரு நம்பிக்கை… அந்த நம்பிக்கை உண்மையாச்சுன்னா… உங்களுக்குத் தான் முதல்ல சொல்வேன்…” அஜய் பீடிகைப் போட்டான்.

“கண்டிப்பா ஜெய்… நீங்க சொல்ற அந்த நாளுக்காக நானும் வெயிட் பண்றேன்… இதோ உங்களுக்கான பாடலைக் கேளுங்க…” என்று கண்மணி பேச்சை முடிக்கவும், மெல்லிசைப் பாடல் ஒலிபரப்பாகத் தொடங்க, அஜய் அவசரமாக ரேடியோவைப் போட்டு விட்டு, ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ!!’ என்று பாடுவது கேட்கவும், விஜய் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.

“என்னடா இது… கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றவன்… இப்படி வழிஞ்சிட்டு இருக்கான்…” விஜய் கேட்கவும்,

“இது தான் அவரோட டெய்லி ட்யூட்டி அத்தான்… என்னை தூங்க விடாம படுத்தறான்… வந்து அதைப் பத்தி இன்னும் ரெண்டு மணி நேரம் பேசுவான்…” கார்த்திக் புலம்பவும், அதே போல,

“கார்த்திக்… இன்னைக்கும் நான் தான் முதல்ல பேசினேன்…” என்று சந்தோஷக் கூவலுடன் வெளியில் வந்த அஜய், அங்கு அமர்ந்திருந்த விஜயைப் பார்த்து அதிர்ந்து போனான்.   

“அத்தான்.. நீங்க எப்போ வந்தீங்க?” எச்சிலை விழுங்கிக் கொண்டு அவன் கேட்க,

“நீ கடலை வறுக்க ஸ்டார்ட் பண்ண போதே வந்துட்டேன்… இருடா இரு.. இதை வச்சே இன்னைக்கு ஓட்டற ஓட்டுல நீ ஒரு வழி ஆகல… என் பேரு விஜய் இல்ல…” என்று மனதிற்குள் கறுவிய விஜய், அமைதியாக அவனையே பார்க்க,

‘இருங்க அத்தான்… காபி எடுத்துட்டு வரேன்…’ என்று அங்கிருந்து அஜய் தப்பிச் சென்ற இடைவெளியில், கார்த்திக்கிடம் அஜயின் விஷயங்களைக் கறந்தான்.

“தென்றல் பண்பலைல என்னோட பிரெண்ட் ஒருத்தன் இருக்கான்… அவனைப் பிடிச்சா… கண்மணியைப் பார்த்துடலாமே… ஏன் அவகிட்ட பேசி… எல்லாம் ஓகேன்னா…. பொண்ணு கூட கேட்கலாமே…” சுலபமாக விஜய் சொல்லவும்,

“தெய்வமே… என் தலைய காப்பாத்திட்டீங்க… தயவு செய்து அவங்ககிட்ட பேசி.. அந்த கண்மணிய இவனுக்கு காட்ட ஏற்பாடு பண்ணுங்க… நீங்க நூறு வருஷம் இதே அழகோட நல்லா இருப்பீங்க..” கார்த்திக் வாழ்த்தவும், தனது தலையை தடவிக் கொண்ட விஜய், அவனை முறைத்தான்.

“சாரி அத்தான்… உணர்ச்சி வசத்துல கொஞ்சம் உளறிட்டேன்… தலையில முடி முளைச்சு அழகோட இருப்பீங்க… இப்போ ஓகே வா…” திருத்திக் கொண்டு வாழ்த்தியவன்,

“ஆனா… இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும்….” ரகசியம் போல அவன் சொல்லவும்,

“எனக்கு ஆப்பு வைக்காம இருந்தா சரி…” என்ற விஜய்… “அஜய்…” என்று அழைத்தான். ஆனால் அஜயோ, காதில் ஹெட்போனஸ்சை மாட்டிக்கொண்டு, போனின் வழியாக கண்மணியின் குரலில் லயித்திருந்தான்.

“அத்தான்… நீங்க பேசாம அந்த சோபாவுல படுத்து தூக்கத்தை கன்டினியூ பண்ணுங்க… நானும் சொர்க்க லோகத்துக்கு போறேன்… இன்னும் ஒரு மணி நேரம்… அவன் வர மாட்டான்… உள்ள அவன் உங்களுக்கு காபி போட்டுட்டு இருக்கான்னா நினைச்சீங்க… அதெல்லாம் தப்பு… காபி வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்… கண்மணி பை சொன்ன அப்பறம் தான் சார் தரை இறங்கி இந்த லோகத்துக்கு வருவார்.. சோ படுத்து தூங்குங்க…” கார்த்திக் சொல்வது வேத வாக்காகப் பட, விஜயும் சோபாவில் உறங்கத் துவங்க, கார்த்திக்கும் விட்டுப் போன உறக்கத்தை தொடர, ஒரு மணி நேரம் சென்ற பிறகு, கண்மணியின் நிகழ்ச்சி முடிந்து, வெளியில் வந்த அஜய், அங்கு தூங்கிக் கொண்டிருந்த விஜயைப் பார்த்து,

“அய்யோ… அத்தான் வந்ததையே மறந்துட்டேனே…” என்று தன்னையே திட்டிக் கொண்டவன், தலையில் கை வைத்துக் கொண்டு, என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.  

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

11 COMMENTS

  1. Super Ud,Rammy,hero ivalo jali party a,kalakuraru,jollula!kanmani yarunu therinjika avanuku ishtamo ennavo Ana enaku bayangara eager a iruku,please seekiram adutha Ud poden chellam!

  2. thanks bharathi …. ahah avan jollu party nu than first ud laye solitene …. 😛 only to kanmani …. :p sikiram kanmaniya parthudalam

  3. Update super….kannamma oda past life la enna nadanthadhu….suspense a konjam open pannuga pa…nanga eagerly waiting.

  4. hiiiiiiiiiiiiiiiiii

    ஒலிபரப்பு – 6, கேட்டாச்சு… ஒப்ஸ், படிச்சாச்சு…

    அடுத்த அப்டேட்’காக வைடிங்… சீக்கிரம் சீக்கிரம்…

LEAVE A REPLY