SHARE

கோபத்தின் மொத்த உருவிலும்
ஒரு ஓரத்தில்
சிந்தும்
கரிசனத்தில்
வெறுப்புகள் எல்லாம் தொலைந்து போக
எங்கோ உள்ளுக்குள்
இனிக்கவே செய்கிறது!!

 

 

 

“அஜய்… மணி பத்தாக போகுது… என்ன நீ இன்னும் தூங்கிட்டு இருக்க…” கார்த்திக் அஜயை எழுப்புவதற்காக குரல் கொடுக்கவும்,

“இன்னும் கொஞ்ச நேரம் கார்த்திக்… நான் எட்டு மணிக்கு தானே தூங்கினேன்…” என்றபடி சோபாவில் புரண்டவன், தொப்பென்று கீழே விழ, விழுந்த வேகத்தில், கண்களைத் திறந்துப் பார்த்தபோது, அவனைப் பார்த்து கார்த்திக் சிரித்துக் கொண்டிருக்க, அவன் மீது தலையணையை எடுத்து வீசினான்.

“இதுக்குத் தான்… கூப்பிட்ட உடனே கண்ணைத் திறந்து பார்க்கணும்…” என்று மேலும் சிரிப்புடன் கார்த்திக் அவனை கிண்டல் செய்ய,

“டேய்… நாளைக்கு சண்டே… நீ பண்ணிரண்டு மணிக்கு குறைஞ்சு என்னிக்காவது எழுந்து இருக்கியா? நாளைக்கு உனக்கு வைக்கிறேன் கச்சேரிய…” என்று கறுவிக் கொண்டே, அஜய் பல் துலக்க ப்ரஷ்ஷை எடுக்க, கார்த்திக் அவனுக்கு காபி போடத் துவங்கினான்.

“என்னடா கார்த்திக் இன்னிக்கு ரொம்ப அதிசயமா இருக்கு… எனக்கு முன்ன நீ எழுந்து… காபி எல்லாம் போடறே… ஏண்டா மச்சான்… இப்படி ஒரு விபரீத யோசனை உனக்கு… சனிக்கிழமைங்கறதால சனி பகவான் உன்னை திருத்திட்டாறா என்ன?” வாயில் இருந்த பேஸ்ட் நுரையுடன் அஜய் கார்த்திக்கை வம்பிழுக்கவும்,

“இல்லடா மச்சான்… இன்னைக்கு சனிக்கிழமை இல்ல…” கார்த்திக் மீண்டும் அதையே சொல்லி இழுக்கவும்,

“அதைத் தான் நான் சொல்லிட்டேனே…”

“அது தான் அஜய்… சனிக்கிழமையும் அதுவுமா… நாலு சோம்பேறிப் பசங்களுக்கு காபி போட்டுக் கொடுத்தா… புண்ணியமா போகுமாம்… காலையில தான் கண்மணி சொன்னா…. எனக்கு உன்னை விட்டா வேற யாரைடா தெரியும்… அது தான்… உனக்கே நாலு காபியையும் போட்டுக் கொடுத்து புண்ணியமும் தேடிக்கப் போறேன்… என்ன நான் சொல்றது சரி தானே நண்பா…” சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கார்த்திக் கேட்கவும், வாயில் இருந்த பேஸ்ட் நுரையை வாஷ்பேசினில் உமிழ்ந்துவிட்டு,

“உன்னை எல்லாம் நான் பல் விளக்கறதுக்கு முன்ன திட்டி இருக்கணும்… இப்போ திட்டறது வேஸ்ட்…” என்று அஜய் பல்லைக் கடிக்க, தனது சட்டையை தட்டிக் கொண்டவன், இரண்டு காபியுடன் டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அஜயும் சுத்தம் செய்து கொண்டு வரவும், அவனிடம் காபியை நீட்டிய கார்த்திக், “ஏன் அஜய்… அம்மா சொல்றா மாதிரி கல்யாணம் செய்துக்கிட்டாத் தான் என்ன? எத்தனை நாளைக்கு இப்படி தனியாவே இருப்ப… உனக்கும் என்ன இருபத்தி ஒன்பது வயசிருக்குமா? இது கல்யாணம் செய்துக்கற வயசு தான… என்ன தான் பொண்ணுங்களோட குழந்தைங்க இருந்தாலும்… அம்மா அப்பாக்கு, பையனுக்கு கல்யாணம் செய்து பார்த்து, அவனோட குழந்தைய கொஞ்சணும்ங்கற ஆசை இருக்கும் இல்ல…”

“இருக்கும் தான்…” மொட்டையாக அஜய் நிறுத்த,

“அப்போ செய்துக்கலாம் இல்ல… அவங்க தரப்பு நியாயம் புரியுதா உனக்கு… அப்பறம் ஏன் கல்யாணம் செய்துக்க மாட்டேங்கிற…”

“ஏன்னா எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை கல்யாணம் தான்… அந்த வார்த்தைய சொன்னாலே எனக்கு வாந்தி வரும் போல ஆகுது…” முகத்தை சுளித்துக் கொண்டு அஜய் சொல்லவும், கார்த்திக் அவனை முறைத்தான்.

“என்ன முறைக்கிற… எனக்கு பிடிக்கலைன்னா நான் என்ன செய்யறது சொல்லு… எனக்கு இந்த லைஃப் தான் பிடிச்சிருக்கு… இப்படியே இருந்துட்டு போறேனே…”

“அப்படியே எப்படி அஜய் விட முடியும்… உனக்குன்னு ஒருத்தர் வேண்டாமா?”

“அது தான் அம்மா அப்பா… ஸ்ரீஜித் எல்லாரும் இருக்காங்களே… அவங்க போதாதா எனக்கு…” விடாமல் அஜய் கேட்கவும்,

“போதாதுடா… உன்னோட மனசுல இருக்கறதை ஷேர் பண்ணிக்க… உனக்குன்னு ஒருத்தர் வேண்டாமா?” கார்த்திக்கின் கேள்விக்கு,  

“ஏன், எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்குன்னு உன்கிட்ட சொன்னா நீ கேட்க மாட்டியா என்ன?” என்ற அஜயின் பதிலில் கார்த்திக் கொலைவெறியுடன் அவனை முறைத்தான்.

“டேய் கார்த்திக்… எங்க அம்மா அப்பா… விதம் விதமா இந்த கேள்விய கேட்டு… ஒண்ணும் செய்ய முடியாம இப்போ முழிச்சிட்டு இருக்காங்க… நீ எல்லாம் எனக்கு பச்சா…” அஜய் அவனது முறைப்பை கிடப்பில் போட்டுவிட்டு, காபி கப்புடன் எழவும், சிறிது நேரம் அவனையே கோபமாக பார்த்துக் கொண்டு கார்த்திக் அமர்ந்திருந்தான்.

“காபி கப் காயக் கூடாதாம் கார்த்திக்…. அதை காய வைக்கறவங்களுக்கு அப்பறம் காபித் தண்ணியே கிடைக்காதாம்… காபிபூரணிக்கு கோபம் வந்திருமாம்…” அஜய் சொல்லவும்,

“ஆமா… அது யாரு காபிபூரணி?” கார்த்திக் கேட்டுக் கொண்டே அவன் அருகில் வர,

“அன்னத்துக்கு கடவுள் அன்னபூரணி… அப்போ காபிக்கு கடவுள் காபிபூரணி தானே…” புருவத்தை மேலே ஏற்றி அஜய் கேட்கவும், கார்த்திக் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“பார்த்துடா… இருக்கற மூளையும் கலங்கிற போகுது…” அஜய் அவனை கலாய்க்கும் பணியை தன் கையில் எடுக்க, 

“உனக்கு கண்மணியை பிடிச்சிருக்கு தானே…” என்று சம்பந்தமில்லாமல் கார்த்திக் கேட்கவும்,

“பிடிச்சிருக்கு… ஆனா… அதுக்கும்… உன் மூளை குழம்பறதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு எனக்கு புரியலையே மச்சான்…” இன்னமும் விடாமல் அஜய் அவனை கிண்டல் செய்ய,

“அவளை மட்டும் நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டா… இப்படி விடியகாலை ஏழு மணிக்கு ரேடியோவை வச்சு… கண்மணிக்கிட்ட பேச லைன் கிடைச்சிருச்சுன்னு என்னையும் எழுப்பி… அரைகுறையா தூங்கியும் தூங்காம ஆபீஸ் போற கொடுமை எனக்கும் இருக்காது இல்ல… குழந்தை பிள்ளைக்கு முழு தூக்கம் இருந்தாத் தான் மூளை வளருமாம்… இப்போ என்னை நீ படுத்தற கொடுமையில, ஒரு நாள் இல்ல ஓருநாள்.. தூக்கம் இல்லாம… என் மூளை குழம்பித் தான் போகும்…” கார்த்திக் பெரிதாக விளக்கம் சொல்லவும், ‘ஓ…’ என்று ஒரே வார்த்தையில் அஜய் அந்த பேச்சை முடிக்கவும், கார்த்திக்கிற்கு ஏமாற்றம் பரவியது.

இருந்தாலும், விடாமல் வேதாளமாக மாறி, “கண்மணியை பிடிச்சு இருந்தா… நேரா போய் ரேடியோ ஸ்டேஷன்லையே அவங்களை பார்த்து பேசிட்டு வந்துடலாமா?”

“பேசி… என்னை ஜெயிலுக்கு அனுப்ப எத்தனை நாளாடா பிளான் பண்ணற?” என்ற அஜயின் கேள்விக்கு கார்த்திக் பல்லைக் கடித்தான்.

“நிஜமா சொல்றேன்… உனக்கு பிடிச்சிருக்கு தானே…” விடாமல் அவன் தொடரவும்,

“பிடிச்சிருக்கு… ஆனா… அந்த கண்மணி ஏற்கனவே கல்யாணம் ஆனவளா!? அறுபது வயசு கிழவியா!? இது எதுவுமே நமக்குத் தெரியாதே கார்த்திக்… நானும் ஒரு ஆர்வத்துல… அவ எப்படி இருப்பான்னு பார்க்க, நெட்ல எல்லாம் சர்ச் பண்ணிப் பார்த்தேன்… ஆனா… ஒரு போட்டோ கூட சிக்கல மச்சி… அங்க தான் என் டவுட் அதிகமாகுது… கண்டிப்பா கண்மணி ஒரு கிழவின்னு…

அதுவும் தவிர… எனக்கு அவளை நேர்ல பார்க்கணும்… பேசணும் அப்படின்னு எல்லாம் எந்த இண்டரெஸ்ட்டும் இல்ல… ஜஸ்ட்… அவ கூட பேச பிடிச்சிருக்கு… அவ குரலைக் கேட்டா.. என்னவோ மனசுல ஒரு பிரெஷ்னஸ் உண்டாகுது,  அவ்வளவு தான்… அதையும் தாண்டி புனிதமான மேட்டர் எல்லாம் ஒண்ணும் இல்ல…” அஜய் மீண்டும் பேச்சை முடிக்க எண்ணி பேச்சை நிறுத்த,

“அப்போ உனக்கு ஒருவேளை அந்த கண்ணம்மாவைத் தான் ரொம்ப பிடிச்சிருக்கோ… ஏன்னா எப்பப் பார்த்தாலும் அவ கூட சண்டை போட்டுக்கிட்டே இருக்கயே…” அடுத்த இடத்திற்கு அவன் வரவும், அஜய் அவனை முறைத்தான்.

“ஆமா… ஆமா… ரொம்ப பிடிச்சிருக்கு… பட்டிக்காடு மாதிரி புடவையும், துப்பட்டாவையும் இழுத்து போர்த்திக்கிட்டு… தலையில முக்கால்படி எண்ணைய அப்பிக்கிட்டு, எப்பப்பாரு அழுகற முகத்தோட முன்னால வந்தா… கடுப்பு வராம என்ன செய்யும்…” பதிலுக்கு அவன் கேட்கவும்,

“ஓ… அப்போ ஒரு பொண்ணு ஒழுங்கா இருக்கறது பிடிக்கலைன்னு சொல்ற…. மத்தவங்க மாதிரி… தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு… அங்க அங்க தெரியற மாதிரி டிரஸ் போடறது தான் உன்னோட டிக்க்ஷனரில பொண்ணுங்களோட இலக்கணம் போல…” நக்கலாக கார்த்திக் கேட்கவும், அஜய் அவனைப் புரியாமல் பார்த்தான்.

“என்ன அஜய்… எதுக்கு இப்படி பார்க்கற…” கார்த்திக் கேட்கவும்,

“இப்போ எதுக்கு நீ எங்க அம்மாவுக்கு பி.ஏ. வேலை பார்க்கற? எங்க அம்மா உனக்கு போன் செய்தாங்களா என்ன?” அஜய் கேள்வியாக வினவவும்,

“இல்ல… நேத்து உங்க அம்மா பேசினதைக் கேட்டேனா… எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது… சரி.. நேத்தே உடனே பேச வேண்டாம்ன்னு தான் இப்போ பேசறேன்…” கார்த்திக் விளக்கம் சொல்லவும், சிரித்த அஜய்…

“எனக்கு கல்யாணமே பிடிக்காது கார்த்திக்… வேண்டாம்… இதோட இந்தப் பேச்சை விடு…” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்,

“இன்னைக்கு நான் பிரியாணி செய்யறேன்டா… கொஞ்சம் காய் வெட்டிக் கொடு… சாப்பிட்டுட்டு நான் கிளம்பறேன்… ஆபீஸ்ல கொஞ்சம் வொர்க் இருக்கு…” என்று அஜய் சொல்லவும், வேறுவழியின்றி கார்த்திக்கும் அவன் சொன்னதை செய்தான்.

 

 

 

பிரியாணி செய்துக் கொண்டே, கண்ணம்மாவிற்கு அலுவலகம் வருமாறு வழமை போல மெசேஜ் செய்தவன்… மதியம் போல அலுவலகம் சென்றடைந்தான். அவன் உள்ளே நுழைந்ததும், “இன்னைக்கு எதுக்கு என்னை வரச் சொன்னீங்க? அது தான் எந்த பிரச்சனையும் இல்லாம டெஸ்டிங்ல மூவ் ஆகிடுச்சு இல்ல… கிளையன்ட்டும் ஓகே சொல்லியாச்சு… அப்பறம் என்ன… பதினோரு மணிக்கு மெசேஜ் பண்ணி என்னை வான்னு சொல்லிட்டு… நீங்க ஹாயா ரெண்டு மணிக்கு வந்து இருக்கீங்க… இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்… நான் பண்ணிரண்டு மணியில இருந்து சும்மா உட்கார்ந்து இருக்கேன்…” அவனைப் பார்த்ததும் படபடவென்று பொரிந்தவள், அவனை முறைக்க,

“சும்மா தான் மெசேஜ் அனுப்பினேன்… உன்னைப் பார்க்காம எனக்கு பொழுது போகல கண்ணம்மா… நான் என்ன செய்வேன்…” அவன் கிண்டலாகச் சொல்லவும், அவன் முதல் முறையாக இவ்வாறு சொல்வதைக் கேட்டவள், அதிர்ச்சியும் அதிசயமுமாக அவனைப் பார்த்தாள்.

“சரி… அதிசயமா என்னைப் பார்த்தது போதும்… இப்போ என் ப்ளேஸ்க்கு வா… நேத்து உனக்கு புரியாம இருந்த அந்த கோடிங்கை சொல்லித் தரேன்…” என்றவன், தன்னுடைய இடத்திற்கு சென்று லேப்டாப்பை இயக்கினான்.

“என்னடா இது… இன்னைக்கு இவருக்கு என்ன ஆச்சு… ஒரே ஜிலு ஜிலுன்னு பேசறானே…” என்று எண்ணிய படி, தனது நோட்பேடை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

“உனக்கு நம்ம டீம்ல செய்யற ப்ராஜெக்ட்ல எது எல்லாம் புரியலன்னு லிஸ்ட் பண்ணு… நான் சொல்லித் தரேன்… எனக்கு டீம்ல வேலை ஒழுங்கா நடக்கணும்… வேற ஒண்ணும் இல்ல… அதுக்காகத் தான் வரச் சொன்னேன்…” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லி முடித்தவன், தனது மெயில்களை பார்க்கத் தொடங்கினான்.

“இப்போ என்ன புதுசா..” மனதினில் நினைத்துக் கொண்டவள், அவனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இன்னும் ஒரு வாரத்துல உனக்கு ப்ரோபேஷன் பீரியட் முடிஞ்சு போயிடும்.. அப்போ உனக்கு, இன்னும் அதிகமான டாஸ்க் தருவேன்… அதுக்கு தேவையானது தான் இதெல்லாம்…” அவன் சொல்லிக் கொண்டே தனது வேலையை முடிக்க, கண்ணம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“உனக்கு டவுட் வர ஏரியாஸ்ன்னா… இதெல்லாம் தான்…” என்று அவன் சிலவற்றை வரையறுத்து, அவளுக்கு விளக்கத் துவங்க, தன்னை இந்த அளவுக்கு கவனித்து இருக்கிறானா என்று கண்ணம்மா அதிசயித்து போனாள்.

நடுவில் அவள் தும்மிக்கொண்டே இருக்கவும், “என்ன கோல்ட்டா..” ஒருமாதிரிக் குரலில் அஜய் கேட்க,

“ஆமா… காலையில எழும்போதே தலை வலி…” அவளும் எங்கோ பார்வையை பதித்துக் கொண்டே சொல்லவும், சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், எந்த பதிலும் சொல்லாமல் மேலும் அவளுக்கு சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான்.

“அதானே பார்த்தேன்… எங்க ரொம்ப அக்கறை வந்திருச்சோன்னு…” மனதினில் சலித்துக் கொண்டவள், அவன் சொல்வதை கவனிக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில், “நான் டீ குடிக்கப் போறேன்… கூட வரியா?” விட்டேற்றியாக அஜய் கேட்கவும், மீண்டும் அதிசயப் பார்வையை அவன் மீது வீசியவள்,

“ம்ம்…” என்று, அவனைப் பின் தொடர,

“ஜின்ஜெர் டீ ஒண்ணு… கிரீன் டீ ஒண்ணு…” என்று ஆர்டர் கொடுத்துவிட்டு, அவளைப் பார்க்க, அவளோ முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டாள்.

“என்ன? நல்லதே உனக்கு பிடிக்காதோ? சளி பிடிச்சிருக்கு இல்ல… அதை கொஞ்சம் சூடா குடி… கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கும்…” அதையும் கோப த்வனியிலேயே கூறியவன், தனது கிரீன் டீயை வாங்கிக் கொண்டு, நகர்ந்து நின்றான்.

பிடிக்காத ஜின்ஜெர் டீயை எடுத்துக் கொண்டு அவள் முழிக்க, அதற்கு மேல் செய்ய எனக்கு ஒன்றும் இல்லை என்பது போல அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, கண்ணம்மாவிற்கு அழுகை வந்தது.

“சரியான சாடிஸ்ட்… இப்போ எனக்கு தலைவலி, அதனால கஷ்டமா இருக்குன்னு சொன்னேனா? பிடிக்காத ஜின்ஜெர் டீயை வாங்கிக் கொடுத்தது மட்டும் இல்லாம… அது என்ன அது… யாரோ போல தள்ளிப் போய் நிக்கறது…” மனதினில் பொருமிக் கொண்டு இருந்தவள், அவன் முறைக்கவும், அந்த டீயை வேண்டா வெறுப்பாக குடித்து முடித்தாள்.

குடித்தவள் நேராக அவனிடம் சென்று, “எனக்கு ரொம்ப தலைவலிக்குது அஜய்… நான் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்று அனுமதி வேண்டவும்,

“சரி போ…” என்று மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது….

வெளியில் சென்றவள், தப்பித்தோம்டா சாமி என்ற ரீதியில் தனது வண்டியை விரட்டினாள். அவளை பின்தொடர்ந்து வெளியில் சென்றவன், தனது பைக்கை எடுத்துக் கொண்டு நேராக வீட்டிற்குச் சென்றான்.

வீட்டிற்குள் நுழையும் போதே, “டேய் அஜய்… எப்போ வீட்டுக்கு வர…” போனடித்து அனுபமா கேட்க,

“நாளைக்கு காலையில டாண்ணு வந்து நிக்கறேன்… என்ன ஸ்பெஷல் பண்ண போறே…” அவன் பதில் கேள்வி கேட்கவும்,

“நாளைக்கு கிருத்திகைடா… அதனால நான்வெஜ் கிடையாது… வேண்ணா சாம்பார் வச்சுத் தரேன்..” அவள் சொல்லவும்,

“அப்போ அந்த சாம்பாரை வச்சு… நீயே குடி… நான் இங்க நல்ல சாப்பாடா சாப்பிட்டுட்டே வரேன்… எனக்கு சிக்கன் வேணும்…” அவன் பதில் சொல்லவும்,

“உனக்கு வர வர ரொம்ப கொழுப்பா போச்சு… இரு நாளைக்கு ஸ்ரீயை உன்கிட்ட பேசவே கூடாதுன்னு சொல்லிடறேன்… உங்க அத்தான் வந்தாலும், நீ இப்படி என்னை கிண்டல் செய்யறன்னு சொல்றேன்…” என்று அவள் சொல்லவும், சிரித்தவன்,

“சரி போ… என் தங்கைக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா… அங்கேயே சாப்பிடறேன்… நாளைக்காவது ஒழுங்கா செய்ம்மா… என் வயிறு பாவம்…” என்றவன், தனது கைக் கடிகாரத்தைப் பார்த்து

“சரி அனுபமா… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நான் அப்பறம் பேசறேன்…” அவளது பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல், அவசர அவசரமாக போனை அணைத்தவன், அதே வேகத்துடன் தென்றல் பண்பலைக்கு அழைத்தான்.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்….

9 COMMENTS

 1. Ahoy thalaivar a purinjukave mudiyaleye?oru Margama behave panraru?kanama mela concern iruku,Ana athe en kamika matenran?appa niraya questions,varuthu,story is so intersting Rammy.aduthu enna enna nu expect panna vaikithu.

 2. Nice update, Ramz…
  Ajai yenna adutha Pammal K Sambandam ah??? ?
  Kalyanam’na – wuek wuek’nu solraaru>>>

  Sir, Kannamma’ku ginger tea yellam vaangi tharaarey…
  Avlo nallavara??? Hehehe…

  Waiting for de next update…
  Come n rock it, dear…

 3. nice update…..conversations Elam super….Ajay Sir …vijaykanth mathiri….tamil la ennaku pidikatha ore varthai kalyanam nu dialogue pesuran….romba kastam .

  next ud eppo ramya sis…eagerly awaiting.

LEAVE A REPLY