SHARE

கோபத்தின் நிழலாய்
உனது கரிசனத்தின்
சுகத்தில்
அழகாய் தான் தொலைகிறேன் !!
காதல் அங்கே !!

prthivi

தனது செல்போனில் ஒளிர்ந்த நம்பரைப் பார்த்து சந்தோஷமாக போனை எடுத்தவன் “ஹலோ…” என்று உற்சாகமாய் கூவ, அழைத்தவர் சொன்னதைக் கேட்டவன்,

“ஹ்ம்ம்… சாப்பிடணும்மா… நீங்க வெளிய போயிட்டு வந்தாச்சா?” என்று கேட்டுக் கொண்டே, ஸ்பீக்கரில் போட்டு வைத்துவிட்டு, ஹாயாக சோபாவில் சாய்ந்தான்.

“என்ன அதுக்குள்ள நீ ஆபீஸ்ல இருந்து வந்துட்ட… ரொம்ப அதிசயம் தான்…” அவனது அன்னை ராதா கிண்டல் செய்யவும்,

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… ஆமா… இன்னைக்கு எங்கயும் ஷாப்பிங் போகலையா?” பதிலுக்கு இவனும் கிண்டலைத் துவங்க….

“போதும்டா… நிறுத்து… எப்போப் பாரு ஷாப்பிங் போறேன்னே கிண்டல் செய்துட்டு இருக்க… எங்களுக்கு அதை விட்டா வேற என்ன பொழுது போக்கு இருக்கு சொல்லு…”

“ஏன் இங்க வந்து, என்கூட இருந்தா பொழுது போகாதா என்ன? அது தான் அப்பாவுக்கு ரிடையர் ஆகற வயசாகிடுச்சே… இன்னும் எதுக்கு வேலை பார்க்கணும்… அதுவும் துபாய்ல போய்…” குறையாக அவன் கேட்க, ராதாவோ அமைதியாக இருந்தார்.      

“என்ன பதிலையே காணோம்… அங்க போயாவது வேலை செய்யணும்னு அப்படி என்னதான் இருக்கோ…” தனது கடுப்பை அவன் மேலும் காட்டவும்,

“அப்பாவுக்கு அந்த வேலை பிடிச்சு இருக்கு…. உன்னை அங்க வேலைய விட்டுட்டு இங்க வரச் சொல்லி நாங்க எவ்வளவு தடவ கூப்பிடறோம்… நீ கேட்டியா? அது போலத் தான்… அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கு ஒரு பக்கம் என் கையப் பிடிச்சு இழுங்க… நான் அப்படியே ரெண்டா பிளக்கத் தான் போறேன்…” கோபமாகத் தொடங்கியவர், இவ்வாறு முடிக்கவும், ‘அம்மா…’ அஜய் அலறினான்.

“பின்ன என்னடா… ஆளுக்கு ஒரு மூலையில இருந்துக்கிட்டு… நாங்க இங்க… நீயும் அவளும் சென்னையிலையே ஆளுக்கு ஒரு மூலையில இருக்கீங்க… இது என்ன குடும்பமா இல்ல வேற ஏதாவதா? எனக்கு புரியவேல்ல போ… அதெல்லாம் நினைச்சாலே நெஞ்சு வலி தான் வருது…” அவர் அங்கலாய்க்கவும்,

“எனக்கு இது தான் அம்மா ஆபீஸுக்கு பக்கம்… இங்க இருந்து பத்து நிமிஷத்துக்குள்ள ஆபீஸுக்கு போயிடலாம்… அதுவும் தவிர, பொண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்துட்டு.. கூடவே இலவச இணைப்பா நான் வேற அவங்க வீட்ல போய் உட்காரணுமா என்ன?

எனக்குன்னு ஒரு வீடு வாங்கிட்டேன்… அதை எதுக்கு நான் யாருக்கோ வாடகைக்கு விட்டுட்டு, அவ வீட்லேர்ந்து   ஒரு மணி நேரம் டிராவல் செய்து டெய்லி இங்கே வரணும்? …” தனது நியாயத்தை அவன் சொல்லவும், ராதா பெருமூச்சு விடுவது தெரிந்து, புன்னகைத்துக் கொண்டான்.

“நீ அங்க போய் இருந்தா…” அவர் முடிப்பதற்கு முன்பே,

“அங்க போய் இருந்தா பெட்ரோல் செலவு தான் ஆகும்… வேற ஒண்ணும் ஆகாது…” என்று முடிக்கவும், “டேய்…” என்று ராதா உறுமினார்.

“சரி… சரி… விடும்மா… நாமளும் அடிக்கடி இதைப் பத்தி பேசி சண்டை போட்டுக்கறோம்…. நம்ம எனெர்ஜி தான் வேஸ்ட் ஆகுது… அதனால நாம ரெண்டு பேரும் ஒரு தீர்மானத்துக்கு வரலாம்… இனிமே இதைப் பத்தி பேச வேண்டாம்… சரியா?” அவன் கேட்கவும்,

“எப்படியும் எங்க வழிக்கு வர மாட்டேன்னு சொல்ற… எல்லாத்துக்கும் நேரம் வரும் அஜய்… அப்போ உன்னை கவனிச்சுக்கறேன்..”.என்றவர்..

“நாளைக்காவது அனுபமாவை போய் பார்த்துட்டு வாடா கண்ணா… அங்க போய் ஒரு மாசம் ஆகுதாமே…” அவர் இழுக்கவும்,

“சரிம்மா… சண்டே காலையில போயிட்டு வரேன்… போதுமா?” என்றவன்,

“வேற என்னம்மா…” என்று தொடர,      

“இன்னைக்கு என்ன டிபன் செய்யப் போற? மாவு வாங்கிக்கறியா? இல்ல நீயே அரைச்சுக்கறையா?”

“ஹ்ம்ம்… என் பெண்டாட்டி வந்து அரைச்சு கொடுத்துட்டு போனா….” அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“நிஜமாவா?” ராதா அதிர்ச்சியான குரலில் கேட்க,

“ஏன்மா…. ஏன்? உங்களுக்கு தெரியாம நான் அப்படி எல்லாம் யாரையும் கட்டிக்க மாட்டேன்… கவலையே படாதீங்க…. உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் கடிவாளம் போட்டு கட்டி வைங்க… இங்க பக்கத்துல ஒருத்தர் வீட்லயே அரைச்சுத் தராங்கன்னு சொல்லி இருக்கேன் இல்ல…” அவன் சொல்லவும்,

‘ஓ…. அதானே பார்த்தேன்…’ ஆவல் வடிய, ஏமாற்றத்துடன் அவர் கேட்கவும், அஜய் சிரிக்கத் தொடங்கினான்.

“உங்களுக்கு ரொம்ப தான் ஆசைம்மா… சரி சொல்லுங்க… நீங்க இன்னைக்கு எங்கயும் வெளிய போகலையா? இல்ல என் கிட்ட பேசிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கீங்களா?” அவன் பேச்சை மாற்றவும்,

“உன்கிட்ட பேசிட்டு போகலாம்ன்னு தான்டா இருக்கோம்…” சோர்ந்து போன குரலில் ராதா சொல்லவும்,

“அதான பார்த்தேன்… இன்னைக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே… எங்க நீங்க வெளிய போகாம இருந்திருவீங்களோன்னு நான் வியந்தே இல்ல போயிட்டேன்…” விடாமல் அவன் வறுத்தெடுத்தான் .

“அஜய்… ஒரு முக்கியமான விஷயம்… நாங்க சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடா… நடுவுல பேசாதே…” என்று பீடிகையுடன் அவர் தொடங்க, அஜய் பதில் பேசாமல் இருக்கவும்,

“என்னடா… பதிலையேக் காணோம்…” ராதா கேட்கவும்,

“நீ தானேம்மா நடுவுல பேசாதேன்னு சொன்ன… இப்போ ஏன் பேசலைன்னு கேட்டா நான் என்ன சொல்றது… இப்போ நான் நடுவுல பேசவா வேண்டாமா?” அவர் தொடங்கப் போகும் விஷயம் அறிந்தோ என்னவோ, அவன் இடக்காகவே பேச, ராதா பல்லைக் கடித்தார்.

“சரி… சரி… சொல்ல வந்ததை சொல்லு… உனக்கும் ஷாப்பிங் போக டைம் ஆகுது…” அவன் நக்கல் செய்ய, அதில் கோபம் மூண்டாலும், விஷயம் சுமூகமாகவே முடிய வேண்டுமே என்று நினைத்தவர்,   

“நானும் அப்பாவும் அடுத்த மாசம் அங்க வரலாம்ன்னு இருக்கோம்… அப்பா ஒரு ரெண்டு மாசம் லீவ் போடலாம்ன்னு இருக்காருடா… அதனால…” அதற்கு மேல் சொல்ல தைரியம் இல்லாமல் அவர் இழுக்கவும்,

“அதனால… என்ன சொல்ல வரியோ சொல்லும்மா… நான் உன் மகன் தானே…” கடுப்புடன் அஜய் ஊக்கினான்.

“ஏண்டா கோபப்படற… நாங்க உனக்கு கல்யாணம் பண்ண… ஆன்லைன்ல…” அதற்கு மேல் அவனிடம் இருந்து என்ன பதில் வரும் என்பதை உணர்ந்து ராதா சொல்லத் தயங்க,

“அஜய்…” அவனது தந்தையின் குரல் ஒலித்தது.

“சொல்லுங்கப்பா… என்ன வேணும் உங்களுக்கு…” கோபமாகவே அவன் கேட்டான்.

“நான் அங்க வர ரெண்டு மாச லீவ்ல உனக்கு கல்யாணம் பேசி முடிச்சுடலாம்ன்னு பார்க்கறேன்…” அவர் சொல்லி முடிப்பதற்குள்,

“செய்து… என்னை நல்லா சிக்க வச்சிட்டு போயிடாலம்ன்னு பார்க்கறீங்க… அப்படித் தானே… பொண்ணு எல்லாம் பார்த்தாச்சா… இல்ல இனிமே தான் பார்க்க போறீங்களா? உங்க கடமையை முடிக்கணும், அது தானே… நான் என்ன பாடு பட்டாலும் பரவால்ல…” என்று கேட்டு முடிக்க,

“ஆன்லைன்ல… அம்மா ஒரு ரெண்டு இடம் பார்த்து வச்சிருக்கா… அங்க வந்த உடனே பொண்ணு பார்த்து நிச்சயம் செய்துடலாம்ன்னு இருக்கோம்… அப்பறம் வேணும்னா நான் ஒரு மாசம் லீவை எக்ஸ்ட்டென்ட் பண்ணிட்டு கல்யாண தேதி முடிவு செய்துடலாம்ன்னு இருக்கேன்…” அவர் தனது திட்டத்தைச் சொல்லவும்,

“அது எதுக்கு தண்டச் செலவு… எப்படியும் நான் என்ன பதில் சொல்லப் போறேன்னு உங்களுக்கு தான் தெரியுமே…” அவன் விடாமல் கேட்டான்.

“ரெஜிஸ்டர் எல்லாம் செய்யலடா… சும்மா அப்படியே உனக்கு பொறுத்தமான பெண்ணைப் பார்த்து பேசி வச்சிருக்கா… அவ்வளவு தான்…” பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு அவர் சொல்லவும்,

“யாருக்கு கல்யாணம்… ஸ்ரீஜித்க்கா… ஆனாலும் நீங்க ரொம்ப சுறுசுறுப்புப்பா… அவன் ரொம்ப சின்ன பையன்… ரெண்டு வயசு தானே ஆகுது” நக்கலடிக்கவும்,

“அஜய்…” ராதா அடக்க,

“நீ சும்மா இரும்மா… பொண்ணு பார்க்க போறோம்…. கல்யாணம்ன்னு இன்னும் எத்தனை தடவை என்னை பலியாடு ஆக்கப் போறீங்க… போதும் விட்டுடுங்க… எனக்கு கல்யாணமும் வேணாம்… ஒண்ணும் வேணாம்… நான் இப்படியே இருந்துட்டு போறேன்… இப்படி இருக்கறது தான் எனக்கு பிடிச்சிருக்கு… எந்த கவலையும் இல்ல… என்னோட வேலையை நான் பார்த்துட்டு இருக்கேன்…

நான் சிங்கிளா இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை… அம்மாவை சமைச்சு போடவான்னு கூப்பிடறேனா… இல்ல தானே… நானே இதை எல்லாம் கஷ்டமா நினைக்காத போது…. உங்களுக்கு என்ன கஷ்டமா இருக்கு? நீங்க லீவ் எல்லாம் போட வேண்டாம்… அங்கேயே இருந்துக்கோங்க… இங்க எவனும் கல்யாணம் செய்துக்க தயாரா இல்ல… என்னை மட்டும் பார்க்க வரதுன்னா வாங்க… இல்ல நீங்க வரத் தேவையே இல்ல…” படபடவென்று அஜய் பேசி முடித்தான்.

“அஜய்… போன தரவ…” ராதா தொடங்குவதற்கு முன்பே,

“போதும்னு சொன்னேன்… இனிமே கல்யாணத்தை பத்தி பேசினீங்க… உங்களோட நம்பரை பிளாக் பண்ணி வச்சிருவேன்…” அஜய் மிரட்ட,

“எங்களுக்கு உன்னோட பிள்ளை… நம்ம வாரிசை பார்க்க வேண்டாமாடா…” ஒரு குடும்பத் தலைவியாய் கெஞ்சலாக ராதா கேட்கவும்,

“அதுக்குத் தான் நம்ம ஸ்ரீஜித் இருக்கானேம்மா… அனுபமா உங்க பொண்ணுன்னா… அவன் உங்க வாரிசு தானே… ஆளை விடுங்க… வேணும்னா அனுபமாவை இன்னும் ரெண்டு குழந்தை பெத்துக்க சொல்லலாம்… அத்தான் நான் சொன்னா கேட்பார்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“நீ மட்டும் நாங்க சொல்றது எதையும் கேட்காதே…” அவனது தந்தை, ஸ்ரீனிவாசன் இடைப்புக,

“ஆமா… அப்படித் தான்… அப்படியே வச்சிக்கோங்க… நீங்க இதுக்காக வரதுன்னா வரவே வேண்டாம்… என்னை பார்க்கறதுக்குன்னா மட்டும் வாங்க…” கறாராக அவன் பேசவும்,  

“எப்படி பேசறான் பார்த்தியா உன் பிள்ளை… இவனை எல்லாம் சின்ன வயசுலேயே நாலு தட்டு தட்டி வச்சிருக்கணும்… அப்போ செய்யாம விட்டது ரொம்ப தப்பா போய்… தலையில ஏறி உட்கார்ந்து குதிக்கறான்…” ஸ்ரீனிவாசனின் சத்தமும்,

“அவன் தான் ஏதோ புரியாம பேசறான்னா… நீங்களும் ஏங்க?” ராதா அவரை சமாதானப்படுத்தும் சொற்களும், அஜயின் காதில் விழ,

“சீக்கிரம் எனக்கு ஒரு முடிவை சொல்லுங்க… நீங்க வரீங்கன்னா… அதுக்குத் தகுந்தா போல நான் ரூமை கிளீன் பண்ணனும்…” என்று சொல்லிவிட்டு, தயவு தாட்சண்யம் இன்றி அவன் போனை அணைக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு மனதினில் பயம் மூண்டது.

“ரூமை கிளீன் பண்றதுன்னா… நம்மளையும் வெளிய அனுப்பிருவானா? நல்ல சாப்பாடோட… ரொம்ப அட்வைஸ் செய்யாத… எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பிரெண்ட் நமக்கு வேற எங்க கிடைப்பான்…” கார்த்திக் யோசித்துக் கொண்டே நிற்கவும், கண்களை இறுக மூடிக் கொண்ட அஜய்,

“என்ன கார்த்திக்… என்ன அங்கேயே நின்னுட்டு இருக்க… பசிக்கலையா?” என்று கேட்க,

“ஏன் அஜய்… அவங்க உனக்கு ஒரு நல்லது செய்து பார்க்கணும்னு தானே ஆசைப்படறாங்க… நீ ஏன் இப்படி எல்லாம் பேசற…” என்று சீரியசாக தொடங்கியவன்,

“நான் எல்லாம் எங்க வீட்ல கல்யாணம் செய்துக்கறியான்னு கேட்க மாட்டேங்கிறாங்களேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்… நீயானா… கேட்கறவங்கள இப்படி சத்தம் போடற….” ஏக்க பெருமூச்சை விட்டுக் கொண்டே, கார்த்திக் அவன் அருகில் வந்தமர்ந்தான்.

“ஹ்ம்ம்… கல்யாணத்தை பத்தின ஜோக்ஸ் எல்லாம் வருதே… அதெல்லாம் நீ படிச்சிருக்கியா?” புதிராக அஜய் வினவ,

“ஓ… படிச்சிருக்கேனே… எல்லாம் ரொம்ப ஜோக்கா இருக்கும் அஜய்… சில சமயம் உருண்டு பிரண்டு சிரிக்கலாம்…” சிரித்துக் கொண்டே கார்த்திக் பதில் சொல்லவும்,

“அப்படித் தான்… அந்த ஜோக் போலத் தான் நம்ம கல்யாண வாழ்க்கையும் ஆகிடும்… மத்தவங்க எல்லாம் நம்மைப் பார்த்து உருண்டு பிரண்டு சிரிப்பாங்க… நாம தான் அடிபடணும்… அந்த ஜோக் எல்லாம் சும்மா சொல்லல… அவனவன் அனுபவிச்சு சொல்லி இருக்கான்…” அஜய் விளக்கம் சொல்லவும், கார்த்திக் ‘ஞே’ என்று விழிக்க,

 “அதனால நீயும் கல்யாணம் செய்துக்காதே கார்த்திக்… அதெல்லாம் நமக்கு சரி வராது… அதுவும் உன் கேரக்டருக்கு… கல்யாணம் செய்த… அந்த பொண்ணு உன்னை அடிச்சே துவைச்சு போட்ருவா… அதுவும் நல்ல தண்ணியில…” கிண்டலாக சொல்லிவிட்டு அஜய் அடுக்களைக்குள் செல்ல, அவன் நகர்ந்ததும், தன்னையே நொந்துக் கொண்ட கார்த்திக்,

“உனக்கு இது தேவையாடா… ஒரு நெய் தோசைக்கு ஆசைப்பட்டு… ‘ஞே’ன்னு முழிக்கறியே…” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு அமர்ந்திருந்தவன்,

“கார்த்திக்… தோசை ரெடி…” அஜயின் குரல் வந்த திசையில், கார்த்திக் நகரத் தொடங்கி இருந்தான்.

“அஜய்… நைட் ஏதாவது பேய் படம் பார்க்கலாமா?” வாயில் தோசையை அடைத்துக் கொண்டே கார்த்திக் கேட்கவும், அஜயிடம் இருந்து பதில் ஏதும் இல்லாமல் போகவும், கார்த்திக் அவனை திரும்பிப் பார்க்க,

அஜய் தீவிர யோசனையில் இருப்பதைப் பார்த்தவன், “என்னாச்சு அஜய்… என்ன பேய் படம் பார்க்கலாம்ன்னு தான் யோசிச்சிட்டு இருக்கியா?…” அப்பாவியாக அவன் கேட்கவும்

“இல்ல… உன்னை எப்படி பேயா அலைய விடறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருடா…” அஜய் கடுப்படித்தான் .

“அஜய் சோ ஹாட் டுடே… ஐஸ் வாட்டர் குடிக்கறயா?” அசராமல் அவனை கலாய்த்தவன், உண்ட தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

தனக்கான தோசையை அஜய் வார்க்கத் தொடங்க, “நீ போய் சாப்பிடு அஜய்… நான் உனக்கு செய்துத் தரேன்…” கார்த்திக் அவன் கையில் இருந்த கரண்டியை கைப் பற்ற நினைக்க,

“வேண்டாம் ராசா… நான் தோசைய முழுசா சாப்பிட நினைக்கிறேன்… நீ கை வச்ச… அதை பிச்சு பிச்சு தான் தருவ… கொத்து தோசை மாதிரி… நானே செய்துக்கறேன்… நீ பாத்திரம் கழுவு…” அஜய் சொல்லவும்,

“எப்படியும் தோசைய பிச்சுத் தானே சாப்பிடுவ… அப்படியேவா… முழுங்கப் போற?” அவன் கேட்கவும்,

“பிச்சு சாப்பிடறேன்… இல்ல… பிக்காம முழுங்கறேன்… ஆனா… என் தட்டுல தோசை முழுசா தான் வேணும்… போய் பாத்திரம் கழுவு கார்த்திக்… அப்போ தான் நாளைக்கு சமையல் செய்ய முடியும்…” சொல்லிவிட்டு, தனக்கான தோசைகளை எடுத்துக் கொண்டு, அஜய் சாப்பிட அமர்ந்தான்.

“இதுல இருந்து தப்பிக்கலாம்ன்னு பார்த்தாலும் விடவே மாட்டேங்கிறானே… வயிறு நிறைய கொட்டிக்கிட்ட இல்ல கார்த்திக்… போய் வேலைய செய்… அப்படியே வீடு காலி செய்யணுமான்னும் கேட்டுக்க….” தனக்குள் பேசிக்கொண்டவன்,

“ஏன் அஜய்… அப்பா அம்மா எப்போ வருவாங்க?” கார்த்திக் பேச்சுக் கொடுத்தான்.

“ஆமா… கார்த்திக் சொல்ல மறந்துட்டேன் பாரு…” என்று தொடங்கியவன், தோசையை வாய்க்குள் தள்ள,

“டேய்… சொல்லித் தொலையேண்டா…” என்று சிறிது பயம் எட்டிப் பார்க்க, கார்த்திக் மனதில் பொருமிக் கொண்டான்.

“அம்மா அப்பா வந்து ரெண்டு மாசம் தங்குவாங்க போல… அப்போ நான் எப்பவும் போல ஹால்லயே படுத்துக்கறேன்டா… எங்க அம்மா அப்பா இங்க இருக்கறதுல உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே…”  அஜய் கேட்கவும், அவனை எதில் சேர்ப்பது என்பது போல பார்த்த கார்த்திக்,

“எனக்கு ஒண்ணும் இல்ல அஜய்… இது உன்னோட பிளாட்… என்னை நீ தான் இங்க தங்க அனுமதிச்சு இருக்க… என்னை கேட்கறயே, நெகிழ்ந்த குரலில் கார்த்திக் கேட்கவும்,

“இல்ல கார்த்திக்… நான் உன்னை தங்குன்னு சொல்லிட்டேன்… அதுக்காக உன்னை நான்… என் இஷ்டப்படி ஆட்டி வைக்கக் கூடாது இல்ல.. அது தப்பு…” அவன் விளக்கினான்.

“நாம எப்பவும் ஹால் சோபாவுல தானே படுத்துக்கறோம் அஜய்… அப்படியே இருந்துக்கலாம்… அவங்க ஒரு ரூம்ல இருக்கட்டும்… எனக்கு, நீ கேட்டதே பெரிய விஷயம் நண்பா…” என்றவன், வேகமாக பாத்திரம் கழுவத் தொடங்க, அஜய் உண்டு முடித்தான்.

இருவரும் டி.வி. பார்க்கத் தொடங்கினாலும், அஜயின் எண்ணம் முழுவதும், தனது அன்னையிடம் பேசியதிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. அதே எண்ணத்தோடு, உறங்கியும் போனான்.

மறுநாள் காலைப் பொழுதில், கண்ணம்மாவை எழுப்பிய அவளது தாய் மீனா… “கண்ணம்மா… மணி அஞ்சே முக்கால் ஆகுதே கண்ணம்மா.. கோவிலுக்கு போகணும்னு சொன்னியே…” என்று எழுப்பவும்,

“ஐயோ ஆமாம்மா… டைம் ஆச்சு… போயிட்டு வந்தா தான்… அவன் போன் செய்தா கிளம்ப சரியா இருக்கும்… எனக்கு நல்லா சூடா மிளகு சீரக ரசம் வைம்மா… சாப்பிட்டு… அவன் கூப்பிடலைன்னா ரெஸ்ட் எடுக்கறேன்… சளி பிடிக்கிற மாதிரி இருக்கு… தலைய வேற வலிக்குது…” என்றவள், எழுந்து குளித்துவிட்டு வந்தாள்.

“அப்போ இன்னிக்கு வர முடியாதுன்னு சொல்லிடேன்… எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு போற?” காபியை நீட்டிக்கொண்டே மீனா சொல்லவும்,

“அதெல்லாம் முடியாதும்மா… எனக்கு போயே ஆகணும்… இல்ல அந்த ஆளு எல்லார் முன்னாலையும் கடுப்படிக்கும்” என்றவள் சூடான காபியை குடித்துவிட்டு, தனது பையை எடுத்துக் கொண்டாள்.

“இன்னிக்கு ஒரு நாள் தானே வீட்ல இருன்னு சொல்றேன்… தலைவலின்னு சொல்லிட்டு… இப்படி அரக்க பரக்க ஆபீஸுக்கு ஓடினா எப்படி… சனிக்கிழமை தானே…” அவளிடம் வாதிட்டவாறே, வண்டி வரை தொடர்ந்தவரை முறைத்தவள்,

“ஒரு தலைவலியைப் பார்த்தா…அடுத்து பெரிய பூகம்பம் வரும் … அது வேண்டவே வேண்டாம்  இந்த தலைவலி போயிந்தி… இட்ஸ் கான்ம்மா…. சோ டோன்ட் வரி… பீ…. ஹாப்பி…” என்று வண்டியை நகர்த்தியவள்,

“கவலைப்படாதேம்மா… எப்படியாவது ஓபி அடிச்சிட்டு வரப் பார்க்கறேன்… அப்பறம் கொஞ்சம் வெளிய ஊரைச் சுத்தற வேலை இருக்கு…” என்றவள், வண்டியை கிளப்பிக் கொண்டு நேராக கோவிலுக்குச் சென்றாள்.

காலை 6.45…. வழக்கம் போல அலாரத்தின் சத்தத்தில் கண் விழித்தவன், ஏனோ சோம்பலாய் இருக்க… மீண்டும் கண்களை மூடிக் கொண்டு புரண்டு படுத்தான். அதிசயமாக அவன் எழாததைப் உணர்ந்த கார்த்திக், போர்வையை விலக்கி, அஜயை அதிசயப் பிறவி போலப் பார்த்தான்….

கண்களை மூடி, இன்னும் உறங்கும் அவனைப் பார்த்த கார்த்திக், “அஜய்… மச்சி… என்ன இன்னும் தூங்கிட்டு இருக்க? உடம்பு முடியலையா?” என்று கேட்க,

“போ கார்த்திக்… இப்போ எதுக்குடா என்னை எழுப்பற… தூக்கம் தூக்கமா வருது…” என்று சோம்பலான குரலில் கூறியவன், கண்களை மூடிக் கொள்ள, தோள்களை குலுக்கிக்கொண்ட கார்த்திக், தனது போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

shraddha-story_650_042414051100

 

மணி ஏழை நெருங்கும் வேலையில், “ஹலோ… நான் ஜெய் பேசறேன் கண்மணி… குட் மார்னிங்… அண்ட் ஹவ் அ சூப்பர்ப் வீக் என்ட்…” அஜயின் குரல் போர்வைக்குள் இருந்து வெளி வரவும், 

“எங்கடா… எலி இன்னைக்கு டூட்டிய ஜாயின் பண்ணலையேன்னு பார்த்தேன்… கரெக்ட் டைமுக்கு டிங் டாங்ன்னு ஆஜராகிடுச்சே…. என்னே அஜயின் கடமை உணர்ச்சி…” என்று புலம்பியபடி, கார்த்திக் திரும்பிப் படுக்க….

“இன்னைக்கு நம்ம நிகழ்ச்சியில A. R. ரஹ்மான் ஸ்பெஷல்… உங்களுக்கு பிடிச்ச… அவரோட இசையில வெளிவந்த பாடலைப் பாடுங்க ஜெய்…” கண்மணியின் குரல் அஜயின் காதில் பாய்ந்து தூக்கத்தை விரட்ட, புத்துணர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தவன்,

“நான் இன்னைக்கு பாட்டெல்லாம் பாடப்போறது இல்ல கண்மணி… இன்னும் எனக்கு தூக்கமே கலையல… அதனால… இன்னைக்கு நீங்களே பாட்டு பாடுவீங்களாம்… நான் உங்க ப்ரோக்ராமுக்கு டெய்லி… தவறாம கால் செய்யறதுனால… இன்னைக்கு என்னோட விருப்பம்..” அஜய் கெஞ்சிக் கேட்கவும்,

“அய்யோ… திடீர்ன்னு பாடச் சொன்னா நான் என்ன பாடறது… நான் ரெடியா வரலையே…” அவள் பதிலுக்கு கெஞ்சவும்,

“நீங்க எல்லாம் ரெடியா தான் இருப்பீங்க… சும்மா கால் பண்ணினேன்னு சொல்ல, எத்தனை பேர் போன் செய்வாங்க… அப்போ நீங்க தானே ஏதோ ஒண்ணு செய்யணும்… அது தானே உங்க தென்றல் fm மோட ரூல்ஸ்…” தனக்கு இது எல்லாம் தெரியும் என்பதை அவன் பெருமையாகச் சொல்ல

“ஓகே ஜெய்… நீங்க என்னோட ரெகுலர் காலர்… விரும்பிப் கேட்கறதுனால… நான் பாடறேன்… ஆனா… என்ன பாடறது?” அவள் யோசிப்பது போல இழுக்கவும்,

“ஓகே கண்மணியில இருந்து… ஒரு பாட்டு…” அஜய் எடுத்துக் கொடுக்கவும்,

“ஓ… வெயிட்…” என்றவள்,

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
ஜஸ்ட் லைக் தட்

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

கண்மணி பாடி முடிக்கவும், அஜய் இங்கு கைத் தட்டத் துவங்க…. “ஓ… தேங்க்ஸ்… நன்றி ஜெய்…” என்று அவள் சிரிக்க,

“ரொம்ப சூப்பர் கண்மணி… உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு…” என்று அவன் மேலும் தொடரவும்,  

“சரி சொல்லுங்க ஜெய்… இன்னைக்கு உங்களுக்கு பதிலா நான் பாடிட்டேன்… நாளைக்கு இந்த மாதிரி சாக்கு எதுவும் சொல்லாம… நீங்க நான் சொல்றதை செய்து தான் ஆகணும்… உங்களுக்கு இன்னைக்கு என்ன பாட்டு போடறது?” கண்மணியின் கேள்விக்கும்…

யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக் தட்

பதிலுக்கு அஜயும் பாட்டிக் காட்டவும்,

“ஹஹாஹ்…. இன்னைக்கே பாட்டு பாடிட்டீங்களே… இதெல்லாம் போங்காட்டம் ஜெய்… சரி… அடுத்த காலர் லைன்ல இருக்காங்க… நாம நாளைக்கு பேசலாம்… பை ஜெய்…” என்று இணைப்பு துண்டிக்கப்படவும், அஜய் அவசரமாக fm ரேடியோவை இயக்க,

“நேயர்களே… இப்பொழுது நாம் கேட்டுக் கொண்டிருப்பது தென்றல் பண்பலை 102.3ல் தென்றல் ராகம்… இப்பொழுது ஜெய் விரும்பிக் கேட்ட ‘ஓகே கண்மணி’ படப் பாடலை நாம் கேட்போமா? பாடலைத் தொடர்ந்து நம்முடன் பேச காத்திருக்கும் நபர் யாருன்னு பார்க்கலாமா?

இப்போ புதுசா ரிலீஸ் ஆகி இருக்கற படத்துல இருந்து… ஒரு அருமையான பாடல்….  கேட்டு மகிழுங்கள்… தென்றல் ராகங்களில் கரையுங்கள்….” கண்மணியின் குரலைத் தொடர்ந்து, அந்த பாடல் ரேடியோவின் வழியாக வெளியில் கசிய, அப்படியே சாய்ந்து கண்களை மூடிக் கொண்ட அஜய்… அந்த கண்மணியை கற்பனையில் கண்டு, ரசிக்கத் தொடங்கினான்.

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்….

9 COMMENTS

  1. hi ramz, intha update’um super…
    En kelvigalai clear pannathukku, oru spcl thanks…

    Seekiram ajai’ya kalyanam panna sollunga ?
    Hehe

  2. Superb….Aga ajay ku Periya flashback irukku…Appadi thaane ramya sis…ajay marriage venam okay…appo Kanmani kitta correcta on- time ku pesuran…Ivan purinjikave mudiyalaiye…

  3. Rammy ena ithu kanamavum kanmani um Vera veraya?hero en ipidi Vera Peru solli kanmani kitte pasuran?ore suspense po,but so eager to know about his flashback.inthe Ud la epidi yo kanama thapichachu,vangi katama,avaloda luck a ila Rammy oda karunaya?hm.

LEAVE A REPLY