SHARE

ஒன்றாய் நெருக்கத்தில்
கழிய இருக்கும் நேரங்கள்
உரிமையாய்
உன்னை துணையென கொள்ளும்
நேரங்கள்
எனக்கென்றும்
என் சோகங்களுக்கு என்றும்
சுமை இறக்கியாய்
உன் மடியில் ஒரு தூக்கம்
மருதாணியில் சிவக்க
துடிக்கும் விரல்கள்
உன் கை கோர்க்க காத்திருக்க
மெதுவாய் சுற்றுவதாய்
தெரியும்
என் கடிகார முட்களை
இந்த புது அத்தியாயங்கள்
எல்லாமே பிடித்திருக்கிறது….

 

பட்டென்று கதவு திறக்கப்படும் சத்தத்தில் இருவரும் வாயிலைப் பார்க்க, அங்கு கண்ணம்மாவின் பெற்றவர்கள் உக்கிரமாக நின்றுக் கொண்டிருந்தனர்…

“அப்பா…” அவர்களை அந்த இடத்தில் பார்த்த திகைப்பில் கண்ணம்மா அமர்ந்திருக்க, நடக்கவிருப்பது என்னவென்று புரிந்து போன அஜய், ஒரு பெருமூச்சை வெளியிட்டு எழுந்து நின்றான்.

“ஏய்… என் பொண்ணை என்ன பண்ணற?” மீனா வேகமாக உள்ளே வரவும், அவரின் பின்னோடு வந்த சுப்பு… அஜயின் சட்டையை கொத்தாக பற்றிக் கொள்ள,

“மாமா… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க…” அஜய் பேச வருவதற்குள், 

“அப்பா… அவரை விடுங்கப்பா… விடுங்கன்னு சொல்றேன் இல்ல… விடுங்கப்பா…” கண்ணம்மா, அவரது கையை அஜயின் மீதிருந்து உருவ முயன்றபடி கெஞ்சத் தொடங்க, மீனா அவளை பிடித்து இழுத்தார்.

“உன்னை மிரட்டித் தானே இங்க இவன் கூட்டிட்டு வந்திருக்கான்… நீ வரலைன்னா… அந்த ஜெய் கூட உன் கல்யாணத்தை நடக்க விட மாட்டேன்னு சொன்னானா?” மீனா கோபமாகக் கேட்க,

“அந்த ஜெய்யே இவர் தானம்மா… அப்பறம் இவர் எதுக்கு என்னை மிரட்டப் போறார்… நான் விரும்பற ஜெய், அஜய் தான்ம்மா… அவரை நான் உயிருக்கு உயிரா லவ் பண்றேன்… என்னோட வாழ்க்கைய இவரோடதான் வாழணும்ன்னு நான் ரொம்ப ஆசைப்படறேன்ம்மா…” கண்ணீருடன் கண்ணம்மா சொல்லச் சொல்ல, சுப்புவும், மீனாவும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சுப்புவின் கை அஜயின் மீதிருந்து தொய்ந்து விழுந்தது.

“என்ன சொல்ற கண்ணம்மா?” மீனா திகைப்புடன் கேட்க,

“எப்பவுமே இவர் நல்லவர் தான்ம்மா… நான் தான் கெட்டவ… வாழப் போன குடும்பம் என் குடும்பம் தான்னு உணராம, இவரை விட்டுப் பிரியணும்ன்னு, இவங்களை எல்லாம் அவமானப்படுத்தி, கிறுக்குத்தனமா நடந்துக்கிட்டேன்…

நான் படிக்கணும்… படிக்கணும்ன்னு அவ்வளவு சொல்லியும், தாத்தா என் கல்யாணத்தைப் பார்க்க ஆசைப்படறாருன்னு நீங்க என்னை கட்டாயப்படுத்தவும், என் படிப்பு பாதிக்கப்படுமோன்னு எனக்கு பயம் வந்திருச்சு… அதனால… படிப்பு முடியற வரை… நம்ம வீட்டுக்கே வந்துடலாம்ன்னு… பிருந்தா பேச்சைக் கேட்டு, முட்டாள் தனமா அப்படி எல்லாம் செய்துட்டேன்…” கண்ணம்மா சொல்லச் சொல்ல, திகைப்பில் இருந்து மீண்ட மீனா, கோபமாக உருமாறினார்.

தனது பெற்றோர்களும் இப்பொழுது திரும்பி வந்தால், கை கலப்பு கூட நிகழுமோ என்று அஞ்சிய அஜய், விஜய்க்கு அழைத்திருக்க, அங்கு கேட்ட சத்தத்தை வைத்தே, நடப்பதை உணர்ந்து, விஜயும் விரைவாக கிளம்பினான்.

“என்னடி சொல்ற? கல்யாணம் ஆகி நம்ம வீட்டுக்கே வரதுக்காக நீ பொய் சொன்னியா? அதுக்காகவா உன்னை கல்யாணம் செய்து கொடுத்தோம்… சந்தோஷமா வாழப் போன பொண்ணு இப்படி ரெண்டே நாள்ல திரும்ப வந்துட்டாளேன்னு நானும் அப்பாவும் எவ்வளவு வருந்தி அழுதிருக்கோம்… அது கூடவாடி உன் கண்ணுக்குத் தெரியல…” உக்கிரமாக மீனா கேட்க, கண்ணீருடன் நின்றிருந்தவளின் தலை முடியை கொத்தாக பற்றியவர், அவளை அடிக்கத் தொடங்கினார்.

அவரது கோபத்தையும் திட்டையும் எதிர்ப்பார்த்தவன், அவர் அடிக்கத் தொடங்கவும், திகைத்து, “அத்தை… விடுங்க… அவ ஏதோ தெரியாம…” அஜய் அவரைத் தடுக்க முயல…

“தம்பி… எங்களை மன்னிச்சிருங்க தம்பி… எங்களை மன்னிச்சிருங்க… இவளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்ல… இவளை விடுங்க… இவளால எல்லாருக்கும் எவ்வளவு மன வருத்தம், தலை குனிவு… எத்தனை பேரோட பகை… இவளை நம்பி நாங்க ஏமாந்து… உங்களை அவமானப்படுத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் போய்… எல்லாம் இவளாலதான் தம்பி… எங்க புத்தியையும் செருப்பால அடிச்சிக்கணும்…

சின்ன பொண்ணு கஷ்டப்படறாளேன்னு மனசு தாங்காம அப்படி செய்துட்டேன்… இவளோட பேச்சை நம்பின இவளை…” என்று மீனாவை அடித்தவர்,

“பொறுமையா இருக்கலாம்ன்னு அவ்வளவு சொல்லியும்… இல்ல இல்லன்னு என் மனசை மாத்தி… இவ பேச்சைக் கேட்ட என்னையும் தான் அடிச்சிக்கணும்…” என்று பேசிக் கொண்டே, தன் கையால், தன் கன்னத்திலும் அவர் அறைந்துக் கொள்ள, அஜய் திகைத்து, அவரது கையைத் தடுக்க, ‘அப்பா…. வேண்டாம்ப்பா… அப்பா…’ கண்ணம்மா கதற, அவளை நம்பி ஏமாந்த கோபத்தில், மீனா அவளைப் பிடித்து தள்ளினார்.

“உங்களை தப்பா பேசினதுக்கு எங்களை மன்னிச்சிருங்க தம்பி…” என்று அஜயிடம் மன்னிப்பு வேண்டிய மீனா…

“இவ உயிரோடவே இருக்கக் கூடாது… எங்களை எல்லாம் நம்ப வச்சு… பொண்ணோட வாழ்க்கைய அவசரப்பட்டு நாங்களே கெடுத்துட்டோம்ன்னு எவ்வளவு நாள் தூக்கம் வராம தவிச்சு… மனசு வருந்தி… எவ்வளவு கஷ்டப்பட்டோம்… எல்லாருக்கும் எவ்வளவு துன்பம்… அப்போவாவது வீட்டுக்கு வந்த இந்த மூணு வருஷத்துல உண்மைய சொன்னாளா? ஏன் இப்போவும் வந்து ஜெய்ன்னு ஒருத்தரை விரும்பறேன்னு மட்டுமே  சொன்னவளுக்கு  நடந்த  உண்மைய சொல்ல வாய் வரலையே… இவ உங்களுக்கு வேண்டாம் தம்பி… இவ எல்லாம் பொண்ணே இல்ல…” என்ற மீனா… அவளை அடிக்கத் தொடங்கினார்.

அவர் கொடுத்த அத்தனை அடியையும் அழுதுக் கொண்டே கண்ணம்மா வாங்கிக் கொண்டிருக்க, அவள் அடிபடுவது பொறுக்க முடியாத அஜய், “அத்தை… அவ பாவம் அத்தை… சின்ன பொண்ணு தானே தெரியாம புரியாம செய்துட்டா… விடுங்க அத்தை… அவ என்னோட வைஃப்… அவளை அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு…” முதலில் கெஞ்சலாகவும், பின்பு கோபமாகவும் அஜய் கேட்க,

“அந்த உரிமைய தான் அவ அவ்வளவு சுலபமா இழந்துட்டாளே… இனி உங்க அப்பா அம்மா முகத்துலையும், பெரிய மாமா முகத்துலையும் எப்படி முழிக்கப் போறோம்… நீங்க நல்ல குடும்பம்… நல்லா விசாரிச்சு முடிவெடுங்கன்னு சொன்ன சொந்தக்காரங்களை எல்லாம் எவ்வளவு சுலபமா… இவ மேல இருந்த நம்பிக்கையில தூக்கி எறிஞ்சு பேசினோம்…

அவங்க எல்லாம் எங்ககிட்டேர்ந்து ஒதுங்கிப்போய் எங்களை விலக்கியும் வச்சிட்டாங்க… எல்லாம் இவளால… இவளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்ல… இவ எங்க பொண்ணு மட்டும்தான்…” வருத்தமாகவும், கண்ணம்மா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாளே என்ற ஆத்திரமும் கண்ணை மறைக்க, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த தினப் பத்திரிக்கைகளையும், வார இதழ்களையும் அவள் மீது வீச, அதன் நடுவே இருந்த தடிமனான புத்தகம், கண்ணம்மாவின் கண்ணிற்கு கீழே பட்டு, அவள் வலியால் துடிக்க, அஜய் அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டான்.

“மாமா… என்ன இது காட்டு மிராண்டித் தனமா நடந்துக்கிட்டு இருக்கீங்க… இதோட நிறுத்துங்க… அவளை அடிக்கிறதை நான் அனுமதிக்கவே மாட்டேன்… போதும்… நிறுத்துங்க…” அஜய் கோபத்தில் உறும, அவனை சில வினாடிகள் பார்த்தவர்,

“தம்பி… இவளை மன்னிச்சு நீங்க திரும்ப ஏத்துக்கறது உங்க பெருந்தன்மையை காட்டுது… ஆனா.. இவ உயிர் வாழவே தகுதி இல்லாதவ… நாளைக்கு இவ பேசறது பொய்யா நிஜமான்னு தெரியாம எல்லா விஷயத்துலையும் நீங்க தான் குழம்பிட்டு இருக்கணும்… இவளை எங்கக் கூட அனுப்பிடுங்க… அப்படியே சோத்துல விஷத்தை வச்சு கொன்னுடறேன்… பெத்த பாவத்துக்கு அதையாவது திருப்தியா செய்துடறேன்…” சுப்பு சொல்ல, அவர் கூறியதைக் கேட்டு அஜய் திகைக்க, கண்ணம்மா சுருண்டு அமர்ந்து கதறத் தொடங்கினாள்.

தனது சகோதரியின் வாழ்க்கை மீண்டும் நன்றாக துளிர்க்க வேண்டுமே என்ற அக்கறையில், பேச்சு வாக்கில், கண்ணம்மாவிடம் விலாசம் தெரிந்துக் கொண்டு, அஜய் வீட்டில் இல்லாத நேரம், கண்ணம்மாவிற்காக, அஜயின் பெற்றவர்களிடம் பேசலாம் என்று வந்திருந்த கயல், அங்கு இருந்த நிலவரத்தைப் பார்த்து அதிர்ந்து நிற்க, வண்டியை நிறுத்தி விட்டு விஜய் லிப்டை நோக்கி ஓடுவதை, கோவிலுக்கு போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசனும் ராதாவும் பார்த்துவிட்டு, என்னவோ ஏதோவென்று அவனைப் பின்தொடர்ந்து ஓடி வந்தவர்களும், அங்கு கண்ணம்மா இருந்த கோலத்தையும், அவள் அருகே திகைத்து நின்றுக் கொண்டிருந்த அஜயையும், கோபமாக நின்றுக் கொண்டிருந்த சுப்புவையும், தலையில் அடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்த மீனாவையும் பார்த்து, நிலைமையின் விபரீதம் புரிந்து, வீட்டினுள் நுழைந்தனர்.

விஜய் கதவை அடைக்கவும், சத்தம் கேட்டு திரும்பிய சுப்பு, ஸ்ரீனிவாசனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, மன்னிப்பை வேண்ட, அவரது செயலை எதிர்ப்பாராதவர், திகைத்து விலக,

“மன்னிப்பு கேட்கக் கூட எங்களுக்கு தகுதி இல்லை தான்… ஆனாலும் எங்க பொண்ணு செய்த நம்பிக்கை துரோகத்துக்கு நாங்க வேற என்ன செய்ய?” என்று கேட்ட சுப்புவைப் பார்த்த ராதாவிற்கு, உலகம் தட்டாமாலை சுற்றியது…

“அஜய் என்னடா..” ராதா மெல்ல கேட்க,

“கண்ணம்மா செய்தது எல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சுப் போச்சும்மா.. அதுக்குத் தான் இப்படி அடிக்கிறாங்க… ப்ளீஸ் அடிக்க வேண்டாம்ன்னு சொல்லு… அவ பாவம்மா…” என்று வேகமாக அவர் அருகில் வந்த அஜய், அவரிடம் கெஞ்ச, என்ன சொல்வதென்றே புரியாமல் அவனது பெற்றோர் திகைத்து நின்றிருந்தனர்.

“சித்தப்பா… என்ன இதெல்லாம்… அதுக்காக இப்படியா அவளை அடிப்பீங்க…” விஜய் கேட்கவுமே,

“இவளை வேற என்ன செய்யச் சொல்ற? கொன்னு புதைக்கவா? இன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுல விஷத்தை வச்சு அவளுக்கு கொடுத்துட்டு நாங்களும் குடிச்சிடறோம்… இனிமே எந்த சொந்தக்காரங்க முகத்துல முழிக்க முடியும்? அப்படி செய்து வச்சிருக்காளே பாவி…” என்று சுப்பு கத்திக் கொண்டே, அவளது முதுகில் ஒன்று வைத்து, கண்ணம்மாவின் முடியை கொத்தாக பற்றித் தூக்க, அஜய் வேகமாக அறைக்குள் நுழைந்தான்.

“அஜய்… என்ன செய்யற? இங்கப் பாருடா… அவளை எப்படி இழுத்துட்டு போறாங்க பாருடா… பாவம்டா அவ…” வலியால் துடித்துக் கொண்டு, அழுகையுடன் கண்ணம்மா சுப்புவின் இழுப்பிற்குச் செல்ல, ஒரு பெண்ணின் தாயான ராதா பதறிக் கத்த,

“சுப்பு… என்ன இது? இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கறீங்க? அவ எங்க வீட்டு மருமக… அவளைத் தொட உங்களுக்கு உரிமை இல்ல…” ஸ்ரீநிவாசன் அவரது கையை கண்ணம்மாவின் மீதிருந்து எடுத்தப்படி சத்தம் போட, சுப்பு அவரைப் பார்த்து விரக்தியாக சிரித்து, அவளை தர தரவென்று இழுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.  

“அப்பா… அவ படிக்கணும்ங்கிற வெறியில்தான் மத்த எதையும் யோசிக்காம அப்படியெல்லாம்  செய்துட்டாப்பா… விடுங்கப்பா… அவளுக்கு வலிக்கும்பா..” என்று கயல் அவரைத் தடுக்க,

“நீ எங்கடி இங்க வந்த? இவ இந்த நல்ல குடும்பத்துக்கு வேண்டாம்… இவ செய்த காரியம் தெரிஞ்சா உன்னை எவன்டி கட்டுவான்… உன் வாழ்க்கையையும் சேர்த்து இல்ல இவ சீரழிச்சி இருக்கா… செய்ததை எல்லாம் மறக்க வச்சு அந்தப் பையன வசியம் பண்ணிக்கிட்டு இருக்காடி இவ…

ஒருமாசமா இவ எங்கயோ போறாளே வராளேன்னு சந்தேகம் உண்டாகி, காலையில என்னால வரமுடியாததால இப்போ அவ ஆபீஸ்லேர்ந்து  நானும் அம்மாவும் அவளை தொடர்ந்து இன்னைக்கு வந்தா… இந்த பையனோட வாழ்க்கைய குட்டிச்சுவராக்க தயாராகிட்டு இருந்தா…” சுப்பு அருவருப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராதா கண்ணம்மாவை குழப்பமாகப் பார்க்க, அவர் அடித்த அடியில் பொறி கலங்கி அமர்ந்திருந்த மீனாவை மறுகையால் இழுத்த சுப்பு,

“எல்லாம் இவளால வந்தது… பொண்ணு சொன்னான்ன  உடனே கொஞ்சம் கூட அதைப் பத்தி ஆராயாம,அவளுக்கு அறிவுரை சொல்லி ஒழுங்கா குடும்பம் நடத்தச் சொல்லாம… பொண்ணைக் கூட்டிட்டு வர சொன்ன இவ எல்லாம் தாயா…” என்று அவரையும் பிடித்து உலுக்க, ஸ்ரீனிவாசனும் ராதாவும், அவரைத் தடுத்துக் கொண்டிருக்க, விஜய் அவரை சமாதானப்படுத்த முயன்றுக்கொண்டிருக்க, கண்ணம்மாவோ, வாங்கிய அடியின் வலியில் சுருண்டுக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் தன் அறையிலிருந்து வேகமாக கண்ணம்மாவின் அருகே வந்த அஜய், சுபமுஹூர்த்த நன்னாளில், இறைவன் சாட்சியாக, அவள் கழுத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு, தான் சூட்டிய அதே திருமாங்கல்யத்தை, அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கண்ணம்மாவின் கழுத்தில் போடவும், அவனைப் பார்த்தவர்கள் திகைத்து நின்றனர்.

“அஜய்…” அவனது செயலில் விஜயுமே திகைத்து அழைக்க, ராதாவும், ஸ்ரீனிவாசனும் அதிர்ந்து நின்றனர். கண்ணம்மா தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யதை கையில் எடுத்துப்பார்த்து, நெகிழ்ச்சியுடன் அஜயைப் பார்க்க, தன் பக்கம் அவளை இழுத்துக் கொண்டவன், “இப்போ எனக்கு உரிமை இருக்கு இல்ல… அவ மேல இருந்து கையை எடுங்க…” என்று உறும, சுப்புவின் கை தானாக விலகியது.

“அவ செய்தது தப்பு தான்… ஆனா… அவ அப்போ உலக அனுபவம் போதாத சின்னப் பொண்ணு… இத்தனை வயசாகியும் நீங்க மட்டும் அப்போ என்ன செய்தீங்க? அவ சொன்ன உடனே அதை கேட்டு அப்படியே நம்பி… என்ன ஏதுன்னு எங்ககிட்ட வந்து விசாரிக்காம… நேரா போலீஸ் ஸ்டேஷன் போய், போலீசை கூட்டிகிட்டு வந்த உங்களை என்ன சொல்றது?

சரி போலீசை கூட்டிக்கிட்டு வந்தீங்க இல்ல… அப்போவாவது என்ன நடந்ததுன்னு கொஞ்சம்… ஏன் ஒரு வார்த்தை கேட்டீங்களா? எல்லாத்துக்கும் மேல… அவளோட இஷ்டமில்லாம அவளுக்குக் கல்யாணம் செய்து வச்சது உங்க தப்பு… இப்படி பெரிய தப்பை எல்லாம் உங்க மேல வச்சிக்கிட்டு… அவளை போட்டு இப்படி அடிச்சிருக்கீங்களே… இப்போவும் நீங்க நிதானத்துல இல்ல… நான் சொல்றதை ஒரு தடவயாவது காது கொடுத்து கேட்டீங்களா? நானும் ரொம்ப நேரமா கேளுங்க கேளுங்கன்னு கத்தி கெஞ்சிக்கிட்டு இருக்கேன் இல்ல…” அஜய் கேட்கவும், அவர்கள் திகைத்து விழிக்க, ஸ்ரீனிவாசன், அஜயின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

“இவ என்னோட மனைவி… இனிமே அவளை உங்ககூட அனுப்ப எனக்கு இஷ்டம் இல்ல… இனிமே உங்க வீட்டுக்கு, சாதாரணமாவோ வேற எதுக்காகவோ கூட நான் அவளை அனுப்பவே மாட்டேன்.. அவ சாப்பிடற போது அவளுக்கு விஷத்தை வச்சிட்டா என்ன செய்யறது?” அஜய் நிறுத்தி நிதானமாக கேட்ட விதத்தில் கண்ணம்மாவின் பெற்றவர்கள் ஆடிப் போயினர்.

“நான் அவளை விரும்பறேன்… அவளும் என்னை விரும்பறா… அவ ஒண்ணும் என்னை மயக்கல… நீங்க உங்க பொண்ணை அந்த அளவு கேவலமா வளர்க்கலைன்னு நான் நம்பறேன்… என் கண்ணம்மாவைப் பத்தி எனக்குத் தெரியும்…” அழுத்தமாக அஜய் சொல்வதைக் கேட்ட விஜய்,

“சித்தப்பா… அஜய் சொல்றது நியாயம் தானே… எங்க அப்பா சொன்னதையும் நீங்க நம்பல… அவரோட பேச்சுக்கு மரியாதையும் கொடுக்காம தன்னிச்சையா முடிவு செய்தா இப்படித் தான்… அன்னைக்கே கொஞ்சம் பொறுமையா நிதானமா, ‘என்ன நடந்ததுன்னு’ விசாரிச்சு இருந்தா இன்னைக்கு இந்த நிலை அவளுக்கும் வந்திருக்காது… உங்களுக்கும் வந்திருக்காது… எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்யறதை இதோட விடுங்க…” விஜய் சொல்லவும், சுப்பு தலை கவிழ்ந்து நின்றார்.

“நாளைக்கு காலையில நான் கண்ணம்மாவுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாத்தையும் இங்கே கொண்டு வந்து தரேன் மாமா… அவ அங்க வரவே வேண்டாம்.. இவங்க, அவ மேலே உள்ள  அன்புனால முட்டாள்தனமா நடந்துக்கறாங்கன்னு தான் இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தேன்… ஆனா இப்போ, இவங்களுக்கு சுத்தமா யோசிக்கிற அறிவே இல்லன்னு புரிஞ்சுப் போச்சு…” கயல் சொல்வதைக் கேட்ட மீனா துடித்துப் போக, கண்ணம்மா அவர்களிடம் சென்று நின்றாள்.

“என்னை மன்னிச்சிருங்கப்பா… அம்மா… நான் செய்தது தப்பு தான்… உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துட்டேன்மா… அன்னிக்கே நான் விரும்பற விஷயத்தை சொன்ன போதே நான் எல்லாத்தையும் சொல்ல வாயெடுத்தேன்… ஆனா… என்னை நினைச்சே நான் அருவருத்து போய் இருந்த நேரத்துல…

நடந்ததையெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாம எனக்கு அழுகை தான் வந்துச்சு… அதுவும் தவிர, மாமாவும் அத்தையும் தான் மொதல்ல என்னை மன்னிக்கணும்ன்னு எனக்கு தோணிச்சு… அதுக்கு தான் இத்தனை நாளா நான் தள்ளிப் போட்டேன்…” என்று கண்ணீருடன் கரம் குவித்து மன்னிப்பு வேண்டியவள், அனைவரையும் ஏக்கமாகப் பார்க்க, அஜய் அவளுக்கு ஆதரவாக அவள் கரம் பற்ற, அவன் மார்பில் புதைந்தவள்,

“தேங்க்ஸ் அஜய்… இதை நீங்க இன்னும் பத்திரமா வச்சிருக்கறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” என்று கண்ணீருடன் அவள் கேட்க, சுப்புவை ஒரு பார்வை பார்த்தவன்,

“இது வெறும் கயிறு இல்ல கண்ணம்மா… நீ எனக்கு சொந்தம்ன்னு எனக்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸ்…. அதை நீ அப்போ தொலைச்சிட்ட… நான் பத்திரமா பாதுகாத்து வச்சிருக்கேன்…” அஜய் சொல்லவும்,

“சாரி அஜய்… சாரி…” என்று அழத் தொடங்க, அஜய் மென்மையாக அவள் தலையை வருடி, அவளை சமாதானப்படுத்தினான்.

“அழக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல கண்ணம்மா… வா… மொதல்ல டாக்டரைப் போய் பார்த்துட்டு வரலாம்… கண்ணுக்கு கீழ ரத்தம் கட்டி இருக்கு…” என்றவன், அவளது கண்களைத் துடைத்துவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு நகர,

“இரு அஜய்.. நீ அலையை வேண்டாம்… இப்போ தான் உனக்கு கால் சரியா போயிருக்கு…. நான் அவளை கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன் … டாக்டர் பக்கத்துல தானே இருக்காங்க…” என்று விஜய் முன்வரவும், ராதாவையும், ஸ்ரீனிவாசனையும் பார்த்தவள், தயங்கி நின்றாள்.                        

“போயிட்டு வா கண்ணம்மா… அப்பறம் கண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடப்போகுது… எதுக்கு எங்களைப் பார்த்துட்டு நிக்கற?” ராதா வாய்த் திறக்கவும்,

“அத்தை…” ஓடிச்சென்று அவரது தோள் சாய்ந்தவள், “என்னை மன்னிச்சிட்டீங்களா? நிஜமாவா?” என்று கேட்கவும், ராதா அவளைப் பார்த்து புன்னகைத்து,

“என் மருமகமேலே எனக்கு இருந்த கோபம் எல்லாம்  போயிடுச்சு… மாப்பிள்ளைக் கூட போய் டாக்டரைப் பார்த்துட்டு வா… மொதல்ல அது தான் முக்கியம்…” என்று சொல்ல, கண்ணம்மா தயக்கத்துடன் ஸ்ரீனிவாசனைப் பார்த்தாள்.

“அது தான் மேடமே மருமகள்ன்னு சொல்லிட்டாங்க… என் மகன் உன் கழுத்துல படக்குன்னு தாலியை கட்டிட்டான்… இன்னும் நான் வேற  சொல்ல என்னம்மா இருக்கு… என் டெபாசிட் காலியாகி ரொம்ப நாள் ஆச்சே…” சலித்துக் கொள்வது போல் இருந்தாலும், அவரது முகத்தில் புன்னகையே குடி கொண்டிருக்க, கண்ணம்மா அஜயைப் பார்க்க, அவனோ அவளைப் பார்த்து புன்னகைத்து,

“அத்தான் பிஸிமேன்மா… சீக்கிரம் போயிட்டு வா…” என்று சொல்லவும்,

“உனக்கு வாய்க் கொழுப்பு இருக்கே…” என்று அஜயைத் தட்டிய விஜய்,
கண்ணம்மாவை அழைத்துக்கொண்டு செல்ல, கண்ணம்மா அவனைப் பின்தொடர்ந்தாள். அலுவகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி இருந்த கார்த்திக், அஜய் வீட்டில் சத்தம் கேட்டு, உள்ளே வருவது முறையாக இருக்காது என்று வாயிலிலேயே காத்திருக்க, விஜய் கதவைத் திறக்கவும், முதலில் விஜயைப் பார்த்தவன்,

“அத்தான்… என்ன அத்தான்… ஒரே சத்தமா இருந்தது…” என்று கேட்க, அவனது கண்கள் பின்னோடு வந்த கண்ணம்மா மீது பதிய, முகத்தில் பட்டிருந்த காயத்தையும், அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் கண்டவன்,

“கல்யாணமே முடிஞ்சிப் போச்சா…” என்று திகைத்தான்.

“ஆமா… ஆமா… உள்ள கல்யாண சாப்பாடு போடறாங்க… சீக்கிரம் போ… நான் இவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிட்டு வரேன்…” என்று கிண்டலடித்த விஜய், கண்ணம்மா சிரிக்கவும், அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

“சோறு போடறாங்களா?” சந்தேகமாக உள்ளே, மெல்ல தலையை மட்டும் எட்டிப் பார்த்த கார்த்திக், குற்றம் செய்துவிட்டு கூண்டில் ஏற்றப்பட்டிருந்தது போல நின்றிருந்த இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைய,

“வாடா கார்த்திக்… இப்போவாவது வண்டி வந்துச்சா இல்லையா? நாளைக்கு அஜயை நீ தான் ஆபீஸுக்கு கூட்டிட்டு போகணும்… கண்ணம்மா ஒரு வாரம் லீவ்ல இருக்கப் போறா?” என்று அறிவிக்க,

“அதை அவ டீம் லீட் கிட்ட சொல்லிட்டீங்களா? ஏன்னா… அவரு லீவ் தர மாட்டாரு…” என்று கார்த்திக், அங்கிருந்த நிலைமையை சகஜமாக்க பேச,

“எவன்டா அவன் டி.எல்…. பெரிய இவனோ?? லீவ் தரலைன்னா வேலைய ரிசைன் பண்ணிடலாம்…” அஜய் சாதாரணமாகச் சொல்லவும், கார்த்திக் அவனைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.

“நீ வாம்மா கயல்… முன்ன பார்த்ததை விட நல்லா வளர்ந்திருக்கியே…” என்று ராதா இயல்பாக அழைத்துக் கொண்டு, சமையல் அறைக்குள் செல்லவும், கார்த்திக்கின் பார்வை கயலின் மீது படிய, கயலும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, ராதாவைப் பின்தொடர்ந்தாள்.

“அஜய்… ஆபீஸ்ல இருந்து வந்து டிரஸ்சை கூட மாத்தவே இல்ல போல… போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா… ராத்திரிக்கு உங்க அம்மா விருந்து சமைப்பா… நாம மருமக கூட உட்கார்ந்து ஒரு கட்டு கட்டலாம்… நானும் டிரஸ் சேஞ் செய்துட்டு வரேன்…” என்று அவர் சொல்லவும், சுப்புவையும் மீனாவையும் பார்த்த அஜய், வேறெதுவும் பேசாமல், தனது அறைக்குச் செல்ல, ஹால் வரை வந்திருந்த கார்த்திக், என்ன செய்வதென்று புரியாமல், திரு திருவென்று விழித்துக் கொண்டு நின்றான்.

“என்ன இது? வெளிய என்னவோ குத்து வெட்டு ரேஞ்சுக்கு சத்தம் கேட்டுது… இப்போ என்னடான்னா அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு போறாங்க…” என்றவனின் பார்வை சுப்புவிடமும், மீனாவிடமும் செல்ல, அவர்களைப் பார்க்க கார்த்திக்கிற்கு பரிதாபமாக இருந்தது.

“கண்ணம்மா செய்த தப்பிற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படி ஒரு நிலை இவர்களுக்குத் தேவையா?” என்று கருதியவன்,

“ரெண்டு பேரும் உட்காருங்க… அவங்க டிரஸ் சேஞ்ச் செய்துட்டு வந்திருவாங்க…” என்று கூறிவிட்டு, வேகமாக சமையல் அறைக்குள் செல்ல, சுப்புவும் மீனாவும் வீட்டின் வாயிலின் அருகே சென்று நின்றனர்.

“அம்மா… அவங்க பாவம்மா… தப்பு செய்தது கண்ணம்மா தானே… அவளை நம்பினது தானே அவங்க தப்பு…” கார்த்திக் ராதாவிடம் கேட்க,

“சின்ன பொண்ணு அவ … இவங்க தான் பேசி புரிய வச்சிருக்கணும் கார்த்திக்… இப்போவும் என்ன ஏதுன்னு யார் சொல்றதையும் கேட்காம அவளை கண்டபடி பேசி அடிச்சிருக்காங்க… இதுல விஷம் வச்சு வேற கொல்றாங்களாம்…” ராதா சொல்லவும், கார்த்திக் முதலில் அதிர்ந்து,

“விஷமா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… எப்படி அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பறது சொல்லு?” ராதா கேட்கவும், அமைதியாக கார்த்திக் கயலைப் பார்க்க, கயலின் பார்வையும் அப்பொழுது கார்த்திக்கின் மீது தான் இருந்தது…

“கண்ணம்மாவுக்கு இப்படி ஒரு தங்கை இருப்பான்னு தெரியாம அவளை சிஸ்டர்ன்னு கூப்பிட்டுடோமே…” கார்த்திக்கின் மனசாட்சி வெளியில் குதித்து வருந்திக் கொண்டிருக்க, அவனது வாயோ சும்மா இல்லாமல்,

“நீங்க உங்க அக்கா மாதிரி fmல எல்லாம் பேசலைங்களா…” கார்த்திக் கயலிடம் பேசுக் கொடுக்க,

“அவ தமிழ் நல்லா பேசுவாங்க… அவ சந்தோஷமா பேசும் போது, அவ பேசற அந்த டோன் நல்லா இருக்கும்… நிறைய தரவ நானும் அவளும் fm கேட்டு, அவங்களைப் போல நாங்களும் பேசி சிரிப்போம்… அதுல அவ ரொம்ப நல்லா பேசுவா… எனக்கு அதெல்லாம் வராதுங்க… எனக்கு எல்லாமே அதிரடி சரவெடி தான்…” கயல் சிரித்துக் கொண்டே சொல்லவும், கார்த்திக் ‘ஞே’ என்று பார்த்து, உடனே சமாளித்து, ராதா கயலை விட்டு நகரவும்,

“என் பேரும் ‘k’ ல ஸ்டார்ட் ஆகுது… உங்க பேரும் ‘K’ல தான் ஆரம்பிக்குது… என்ன ஒரு கோஇன்சிடன்ஸ் இல்ல…” கார்த்திக் பேச்சை வளர்த்த,

“ஹ்ம்ம்… எங்க அக்கா பேர் கூட கண்ணம்மா… எங்க அம்மா பேர் கூட கற்பகமீனா தான்…” அவன் சொல்ல வருவது புரிந்தும் கயல் பேச்சை வளர்க்க, கார்த்திக் தலையிலேயே அடித்துக் கொண்டான்…

“எனக்கு உங்களை எங்கயோ பார்த்த ஃபீல் வருதுங்க…” கார்த்திக் மீண்டும் பேச்சுக் கொடுக்க,

“எங்க அக்காவும் நானும் கொஞ்சம் கொஞ்சம் ஒரே ஜாடை தான்… அதனால இருக்குமோ?” கயல் யோசிக்க, கார்த்திக் பல்லைக் கடித்து,

“நீங்க எந்த காலேஜ்ல படிச்சீங்க?” என்று கேட்க, அவள் சொன்ன பெயரைக் கேட்டவன்,

“ஓ… நல்ல காலேஜ்ல தான் படிச்சிருக்கீங்க? ஆனா…. பெட்ரோமாக்ஸ் யுனிவர்சிட்டில டாக்டரேட் வாங்கின மாதிரி ஓவரா சீன் போடறீங்க…. வாழ்க வளமுடன்…” கார்த்திக் சொன்னதைக் கேட்ட கயல் முதலில் புரியாமல் முழித்து, உடனேயே அவன் சொல்ல வருவதை கண்டுபிடித்து, முறைக்க முயன்று தோற்றபடி, கலகலவென்று சிரிக்க, கார்த்திக்கும் அவளுடன் இணைந்துக் கொண்டான்.      

“என்ன கார்த்திக் இங்க நின்னு சும்மா சிரிச்சிட்டு இருக்க…… நீ போய் டிரஸ் மாத்திட்டு வா… ராத்திரி வடை பாயசத்தோட சாப்பிடலாம்…” ராதா சொன்ன அடுத்த வினாடி, கார்த்திக் அங்கிருந்து மாயமாய் மறைய, கயல் அவனைப் பார்த்து சிரித்தாள்.

“நமக்கு சோறுதாங்க முக்கியம்…” என்று சொல்லிவிட்டு சென்றவன், அடுத்த பத்தாவது நிமிடம் திரும்ப வந்திருந்தான்.

அதே நேரம் விஜயும் கண்ணம்மாவும் திரும்பி வர, “என்ன அத்தான் சொன்னாங்க?” என்று இருவரையும் பார்த்து அஜய் கேட்க,

“அது.. கண்னுக்கு கீழ ஐஸ் ஒத்தடம் வைக்கச் சொல்லி இருக்காங்க… மத்தபடி ஆயின்ட்மென்ட் போட சொல்லி தந்திருக்காங்க… கண்ணம்மா ரொம்ப வீக்கா இருக்கா போல… நல்லா சாப்பிடணுமாம்…” விஜய் சொல்லவும், அஜயின் கண்கள் அவளை குற்றம் சாட்ட, கண்ணம்மா தலை குனிந்தாள்.

“வா அஜய் நாம அனுவுக்கு பேசி விவரத்தை சொல்லி, அவளை இங்க வரச் சொல்லிடலாம்…” விஜய் கூர்மையாக அஜயைப் பார்த்து சொல்லிக் கொண்டே அவன் தோளில் கை போட, அவர்களுடன் கார்த்திக்கும் விலகிச் செல்ல, கண்ணம்மா தனித்து நின்றிருந்தாள்.

யாரோ போல நின்றிருந்த அவளது பெற்றவர்களைப் பார்த்த கண்ணம்மா மனம் தாளாமல் அவர்களிடம் ஓட, “ஏண்டி இப்படி எல்லாம் செய்து எங்களை தலை குனிய வச்ச… உன்னை நம்பின பாவத்தை தவிர நாங்க என்ன செய்தோம்?” மீனா கண்ணீருடன் கேட்க, அவர்களைப் பார்த்து கரம் குவித்து நின்றவள்,

“திரும்பத் திரும்ப, படிக்கணும்ங்கறதால அப்படிச் செய்தேன்ற காரணத்தையே நான்  சொன்னாலும்… அஜயே அவர் மேல தப்பைப் போட்டுக்கிட்டு என்னை சமாதானப்படுத்தினாலும்… நான் செய்தது தப்பு தான்பா… மன்னிக்க முடியாதது தான்… நம்பிக்கை துரோகம் தான்.. இனிமே நல்ல பொண்ணா… நல்ல மனைவியா… நல்ல மருமகளா நடந்துக்கறேன்ப்பா… உங்க பேரை நான் காப்பாத்தறேன்…” என்றவள், கண்ணீருடன்,

“எனக்கும் கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு எல்லாம் நிறைய  ஆசை தான்… நான் பாதி படிப்புல இருக்கும்போது, எங்க நாங்க சிரிச்சு பேசிட்டு சுமுகமா இருந்தா குழந்தை வந்துடுமோ… அதனால வாந்தி மயக்கம் வந்து… படிப்பு கெட்டுப்போயிடுமோன்னு எல்லாம்  பயந்துட்டேன்மா…” கண்ணம்மா சொன்னதைக் கேட்ட மீனா அதிர்ந்து நிற்க, சுப்புவோ, தன் மகளுக்கு அப்பொழுது திருமண வாழ்க்கையின் ஆணி வேறானா தாம்பத்யத்தின் அகரமே தெரியாது இருந்திருக்கிறாளே’ என்று நினைக்கும் பொழுதே நெஞ்சம் விம்மியது…

“எனக்கு அப்போ விவரம் போதாதே… அப்பறம் தான்… கொஞ்சம் விவரம் புரியவும் தான்… நான் செய்த பைத்தியக்காரத்தனம் எல்லாம் புரிஞ்சது… என்னோட அறியாமைய ஒருத்தி பயன்படுத்திக்கிட்ட விதம் தெரிஞ்ச போது… எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?” கண்ணம்மா சொல்லச் சொல்ல, தன் மகளின் மனநிலையை தான் சரியாக புரிந்துக் கொள்ளாமல், பேசாமல் விட்டுவிட்டோமே… என்று மீனா தவித்துப் போனார்.

கண்ணீருடன் நின்ற மகளைப் பார்த்த பெற்றவர்கள் அவளை அணைத்துக்கொள்ள, பிருந்தா பேசியவற்றையும், பின்பு நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்த கண்ணம்மா… சுப்புவின் தோளில் சாய்ந்து மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் தனிமையில் பேசுவதைப் பார்த்த விஜய், அஜயைப் பார்க்க, “எந்த ஒரு அப்பா அம்மாவுக்கும் இந்த நிலை வர வேண்டாம்… பிள்ளைங்களைப் பெத்து வளர்த்து, அவங்க நலத்துக்காகப் பார்த்து பார்த்துச் செய்யறவங்களுக்கு இதெல்லாம் தேவையா?” என்று வருந்த, ஸ்ரீனிவாசன், அஜய்யை நினைத்து பெருமை கொண்டார்.

சுப்பு மீனாவிடம் பேசிவிட்டு கண்ணம்மாவும் கூனிக்குறுகி அவர்களுடனே கதவருகில் நிற்க, அவர்களைப் பார்த்த கயலும் அதற்கு மேல் உள்ளே நிற்க முடியாமல், அவர்கள் அருகே சென்றாள்.

“அத்தை மாமா… இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நிற்கப் போறீங்க?” அஜய் விளையாட்டாய் கேட்பது போல அவர்களை உள்ளே அழைக்க,

“வாங்க சம்பந்தி…” ஸ்ரீனிவாசனும் அழைக்க, சங்கடமாகவே சுப்புவும் மீனாவும் உள்ளே வர, “உட்காருங்க… சாப்பிட்டுட்டு போகலாம்..” என்று ராதா உபசரிக்க, சுப்புவின் மனதிலும் மீனாவின் மனதிலும் குற்ற உணர்ச்சி பெருக, அதை விட கண்ணம்மா மனதிற்குள் தான் செய்த செயலை நினைத்து நொந்து கொண்டாள்.

ராதா அதிகம் பேசாவிட்டாலும், இரவு விருந்து, தடபுடலாகவே நடந்தேறியது… அடுத்து என்ன என்று அனைவருமே புரியாமல் குழம்பி நிற்க, “கண்ணம்மா உங்க வீட்லயே இருக்கட்டும் மீனா..” ராதா சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நின்றனர்…

அனைவரின் முகத்தையும் பார்த்தவர், “இதுல அதிர்ச்சி ஆகறதுக்கு என்ன இருக்கு? கண்ணம்மா உங்க வீட்லயே இருக்கட்டும்… அடுத்து வர நல்ல நாள்ல, சொந்தங்களை எல்லாம் கூப்பிட்டு, தாலி பிரிச்சு கோர்க்கற பங்ஷன் வச்சிக்கலாம்… அப்படியே ஊரறிய, நாங்க அவளை எங்க வீட்டுக்கு அழைச்சிக்கறோம்… சின்னஞ்சிறுசுங்க நல்லா இருக்கணும் இல்லையா?” ராதா சொல்லவும், அஜய் தன் அன்னையை பெருமையாகப் பார்க்க, கண்ணம்மா அவரை நன்றியுடன் பார்த்தாள்.

“கயல்… கண்ணம்மா உன்னோட பொறுப்பு… அவளை பத்திரமா பார்த்துக்கோ…” கிளம்பும் போது அஜய் சொல்வதைக் கேட்ட சுப்புவும் மீனாவும் அடிபட்டது போலப் பார்க்க, அஜய் அவர்கள் மீதிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு கண்ணம்மாவைப் பார்த்தான்.

“கண்ணு சரியாகற வரை… ரெண்டு நாள் ஆபீஸ்க்கு லீவ் போட்டுக்கோ… ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்…” அஜய் சொல்லவும், மறுப்பாக தலையசைத்தவள், ‘நான் வரேங்க…’ என்று அவனிடம் இருந்து விடைப்பெற்றுச் சென்றாள்.

மறுநாள் அலுவலகத்திற்கு அஜய் கார்த்திக்குடன் செல்ல, அங்கு அவன் நுழைந்ததுமே, அவனை அனைவரும் சூழ்ந்துக் கொண்டனர். “பாஸ்.. நேத்து தான் லவ்ன்னு டிக்ளேர் செய்தீங்க… இன்னைக்கு கல்யாணம் ஆகிடுச்சு… என்ன பாஸ் இது? அப்போ நாளைக்கு குழந்தை பிறந்துடுச்சுன்னு சொல்லுவீங்களா?” யோகேஷ் அஜயை கிண்டல் செய்ய, அஜய் கண்ணம்மாவை பார்வையால் வருடிக் கொண்டே அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“இருந்தாலும் அஜய்… ஒரே நாள்ல இதெல்லாம் ரொம்ப ஓவர்…” சுவாதி அவர்களை கிண்டல் செய்ய, அன்று அவர்கள் டீமின் ஆட்களின் கேலியில் அஜயும் கண்ணம்மாவும் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருந்தனர்.

அஜயின் குடும்பம் வந்து அழைத்துப்போகும் வரை கண்ணம்மா அஜயின் வீட்டிற்குச் செல்வது மீனாவினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. ராதா கூறியது போலவே மறுவாரமே, ஒரு நல்ல நாளில், சொந்தபந்தங்கள் அனைவரையுமே அழைத்து, கண்ணம்மாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் நடந்தது… அதைப் பெரிய விழாவாகவே ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

அஜய் தேர்வு செய்த பட்டுப்புடவையில் கண்ணம்மா தேவைதையென காட்சியளிக்க, அவன் அருகே வந்த அனுபமா… “அஜ்ஜூ… இப்படியே பார்த்தே அண்ணிய கரைச்சிடுவ போல இருக்கே… இருந்தாலும் நான் இல்லாம நீ தாலி கட்டினது கொஞ்சம் ஓவர் தான்…” என்று அவனை கிண்டல் செய்ய,

“அதெல்லாம் அந்த ஸ்பாட்ல அப்போ நீ இல்லாதது உன் தப்புத் தான்…” என்று அஜயும் அவளை கிண்டல் செய்ய, அனுபமா அவனை முறைத்துவிட்டு கண்ணம்மாவின் அருகே சென்று பேசத் தொடங்கி இருந்தாள். கண்ணம்மா, அடிக்கடி, அஜயையும், ராதாவையும், ஸ்ரீனிவாசனையும் பார்த்து நன்றியுடன் கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள். அவர்களது சொந்தங்களைக் கூட தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல், அவள் தலை குனிந்து அமர்ந்திருக்க,

அனுபமாவோ, “அண்ணி… இப்படி தலை குனிஞ்சு உட்கார்ந்து இருந்தா எங்க அண்ணா உங்க அழகை எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்து, அவளை இயல்பாக இருக்க வைக்க முயன்றாள்.      

“என்ன மச்சான்… என்ன லுக்கு விட்டுக்கிட்டு நிக்கற?” விஜய் அஜயை கிண்டல் செய்ய,

“இன்னொரு மாப்பிள்ளை ரெடி ஆகிட்டு இருக்கான் கவனிச்சீங்களா அத்தான்…” அஜய் கிண்டலாகக் கேட்கவும்,

“ஆமாண்டா கவனிச்சேன்… ரொம்ப ஓவரா அவ பின்னாலேயே சுத்திட்டு இருக்கான்… அவளும் அது தெரிஞ்சும் தெரியாத மாதிரியே காட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கா…” என்று சொல்லிய விஜய், ‘கார்த்திக்’ என்று அழைக்கவும், கயல் விஜயைத் திரும்பிப் பார்க்க, விஜயும் அஜயும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“அண்ணா…” கயல் சிணுங்க…

“என்ன மச்சான்….” கார்த்திக் வரவும், விஜய் வாயில் கை வைத்துக் கொண்டான்…

“அடப்பாவி… இப்படி அத்தான் போய் மச்சான்னு ஆக்கிட்டயே… இது நியாயமா?” விஜய் வேண்டுமென்றே வம்பு வளர்க்க,

“உங்க தங்கைய நான் கல்யாணம் செய்துக்கிட்டா நீங்க எனக்கு மச்சான் தானே ஆகணும்… என்னவோ புதுசா கேட்கறீங்க?” என்று விளக்கம் சொன்னவன், கயல் வெளியில் செல்வதைப் பார்த்து, அவளைத் தொடர்ந்து சென்றான்.     

அன்றைய தினம் ஞாயிறாக இருக்கவும், அஜய் தனது அலுவலக நண்பர்களையும் விருந்துக்கு அழைத்திருக்க, விருந்து, கேலியும் கிண்டலுமாக களைக் கட்டியது.

அன்றைய இரவு, அஜயின் அறை பூக்களின் மணத்திலும், ஊதுபத்தியின் நறுமணத்திலும் மணந்துக் கொண்டிருந்தது. வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்த அஜய், தனது மொபைலைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, படபடப்பும், நாணமும் போட்டிப் போட கண்ணம்மா அறைக்குள்ளே நுழைந்தாள்.

அஜய் மொபைலைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கவும், கண்ணம்மா நிமிர்ந்துப் பார்க்க, அவள் வந்ததைக் கூட கவனியாமல் இருந்த அஜயைப் பார்த்து, சிணுங்கலுடன், அவன் அருகே சென்றவள், “என்னங்க காலைக் காட்டுங்க…” தான் வந்ததை அவனுக்கு உணர்த்தினாள்.

“அதெல்லாம் வேண்டாம்… அந்த பாலைக் கொடு பசிக்குது…” அவளது முகத்தைப் பார்க்காமலே அவன் செல்போனில் எதையோ படித்து, மெசேஜ் அனுப்பி சிரித்துக் கொண்டிருக்க,

“இந்தாங்க…” கண்ணம்மா அவனிடம் டம்பளரை நீட்ட, அதை வாங்கியவாறு மொபைலையே அவன் பார்த்துக் கொண்டிருக்கவும், உதட்டைப் பிதுக்கியவள், அமைதியாகவே அவன் அருகே அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அவளை நிமிர்ந்துப் பார்த்த அஜய், கண்ணம்மா அமைதியாக அமர்ந்திருக்கவும், போனை கீழே வைத்துவிட்டு அவளை நெருங்கி, “என்ன கண்ணம்மா… நான் பாட்டுக்கு போன்ல சாட் பண்ணிட்டு இருக்கேன்.. நீ இவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருக்க? என்னை கூப்பிடணும்ன்னு தோணலையா?” என்று கேட்க,

“நீங்க யார்கிட்டயோ பேசிட்டு இருக்கீங்க… அது தான்… முடியற வரை வெயிட் பண்ணலாம்ன்னு…” கண்ணம்மா இழுக்க, அஜய் அவளது முகத்தை நிமிர்த்தினான்.

“நான் வந்துட்டேன்டா அஜய்… இன்னும் உனக்கு மொபைல்ல என்ன வேலைன்னு பிடுங்கிப் போடாம… விடிய விடிய நான் பாட்டுக்க சேட்ல பேசிட்டு இருந்தா நீ இப்படியே உட்கார்ந்து இருப்பியா?” அஜய் கேட்டு புருவத்தை உயர்த்த,

“இருப்பேங்க…” என்ற கண்ணம்மாவின் பதிலில் அஜயின் முகம் யோசனையில் சுருங்கியது.

அவளது செய்கைக்கான காரணத்தை யூகித்தவன், “கண்ணம்மா… நீ நார்மலா இரேன்… இப்போ எதுக்கு இன்னும் பழசை எல்லாம் நினைச்சிட்டு உன்னையே போட்டு வருத்திக்கற?” அஜய் கேட்கவும், கண்ணம்மா அவன் முகத்தில் இருந்து பார்வையை விலக்கி,

“நீங்க எவ்வளவு தான் பழசை எல்லாம் நினைக்காம என்னை நடத்தினாலும், நீங்க நல்லபடியா என்னை நடத்த நடத்த எனக்கு குற்ற உணர்ச்சி ரொம்ப படுத்துதுங்க… நான் என்ன செய்யட்டும்… இவ்வளவு நல்லவங்களை நான் என்னவெல்லாம் செய்துட்டேன்னு என் மனசே என்னைக் கொல்லுதுங்க…” கண்ணம்மா அஜயிடம் தன் மனதைப் பகிர, அஜய் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“ஹ்ம்ம்… அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவன், “நான் ஒண்ணு சொல்றேன் அதை செய்… அப்பறம் உனக்கு பழசைப் பத்தி யோசிக்க நேரமே இருக்காது…” அஜய் சீரியஸாக சொல்ல, கண்ணம்மா ஆர்வமாக அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்க்க,

“உன்னோட காதை இங்க கொடேன்…” என்று அவளது முகத்தை தன் அருகே இழுத்துக் கொண்டவன், அவளது காதில் எதையோ சொல்ல, அதைக் கேட்ட கண்ணம்மா நாணத்தில் அவன் மார்பிலேயே புதைய, அஜய் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான்…..

அஜயின் சேட்டையில் தன்னைத் தொலைத்தவள், சிணுங்கலுடன் அவனிடம் தஞ்சம் புக, ஆனந்த வலியோடு கொலுசின் நாதமும் சேர, வாழ்க்கையை அழகாக்கும் இணையில்லாத பந்தம் அவர்களுள் தொடங்க, கிழக்கில் சூரியன் உதிக்க, ஜன்னல் திரையை மீறி, வெளிச்சம் உள்ளே தன்னை பரப்பிக் கொண்டிருந்தது…

“அஜ்ஜூ… விடிஞ்சிடுச்சு போல இருக்கே…” கண்ணம்மா அரை மயக்கத்தில் முனக,

“ஆமா… அதுக்கு என்ன இப்போ…” என்றபடி அவளை அணைத்தவன், மீண்டும் அவளுடன் சங்கமிக்க முயல, கண்களை நன்றாகத் திறந்தவள், எதிரிலேயே மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்து, “அஜ்ஜூ… மணி ஏழாக போகுது… அத்தை என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…” என்று தன் பலத்தை எல்லாம் திரட்டி அவனைத் தள்ளிவிட்டவள், அவசரமாக குளித்து முடித்து வெளியில் பதறிக்கொண்டு செல்ல, அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி, தலையணையை இழுத்து தலை மீது போட்டுக் கொண்டு அஜய் மீண்டும் தனது உறக்கத்தைத் தொடர்ந்தான்.

ராதாவை எந்த வேலையும் செய்ய விடாமல் கண்ணம்மாவே அனைத்தையும் செய்துக் கொண்டிருக்க, “அஜய் இன்னும் எழுந்துக்கலையா கண்ணம்மா… மணியாகுதே…” ராதா இயல்பாகக் கேட்கவும், நாணத்தில் முகம் சிவந்தவள், ‘இல்லை’ என்று தலையசைக்க, ராதா தனக்குள் சிரித்துக் கொள்ள, சில நிமிடங்களிலேயே அஜயும் வெளியில் வந்தான்.

“கண்ணம்மா… நீ உட்கார்ந்து சாப்பிடு… நான் மதிய சமையலுக்கு ரெடி பண்ணறேன்…” ராதா அவளிடம் மன்றாடிக் கொண்டிருக்க,

“இல்லத்தை.. நான் தான் வந்துட்டேன் இல்ல… நீங்க இனிமே ரெஸ்ட் எடுங்க… நான் காலையில எல்லா வேலையையும் செய்து வச்சிட்டு ஆபீஸுக்கு போறேன்.. சாயந்திரம் சீக்கிரம் வந்துடறேன்… வந்து மீதி வேலை எல்லாம் செய்யறேன்…” கண்ணம்மா அவருக்கு ஓய்வை கொடுக்க நினைக்க,

“அம்மா… ‘அது தான் நான் வந்துட்டேனே… இனி நான் வீட்டு ராஜ்யத்தை எடுத்துக்கறேன்… நீ பேசாம உட்காரு’ன்னு சொல்றாம்மா…” அஜய் சிண்டு முடியத் துவஙகினான்.,

“ஐயோ… அத்தை… நான் அப்படி சொல்லவே இல்ல… அந்த அர்த்தத்துல சொல்லல… நீங்களே எல்லாம் பார்த்துக்கோங்க…” கண்ணம்மா பதற,

“பார்த்தியாம்மா… நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்னு சொல்லாம சொல்றா….” அஜய் மீண்டும் தொடர,

‘இல்லைங்க… நான் அப்படி எல்லாம் சொல்லலைங்க…” கண்ணம்மாவின் கண்களில் கண்ணீர் சரம் கோர்க்க, ராதா அஜயின் காதைப் பிடித்து திருகினார்…

“அம்மா… வலிக்குதும்மா…” அஜய் பொய்யாக அலற,

“என் மருமகளும் நானுமே இந்த குடும்ப நிர்வாகத்தைப் பார்த்துக்கறோம்… நீ ஆபீஸ் போனியா வந்தியான்னு இரு… இந்த சிண்டு முடியற வேலை எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்… என் மருமகளைப் பத்தி எனக்கு தெரியும்…” ராதா அவனை கண்டிக்க, கண்ணம்மா சிரித்தாள்.

“அடிப்பாவி… ஒரே நாளுல இப்படி மகளிர் கூட்டணி கட்சி அமைச்சிட்டீங்களே… அப்பா… வாங்க நாம வருத்தப்படாத ஆண்கள் சங்கம் அமைக்கலாம்…” என்று அஜய் ஸ்ரீனிவாசனை கூட்டில் சேர்க்க,

“அது நமக்குள்ள பேசிக்கத் தான் மகனே… மகளிர் அணிகிட்ட நம்மளால மோத முடியாது… அப்பறம் நம்ம வயித்துக்கு வஞ்சகம் ஆகிடும்…” ஸ்ரீனிவாசன் பதிலுக்கு சொல்ல, ராதா அவரை முறைத்தார்.  

“அது ஒண்ணு இருக்கோ” அஜய் பெரிதாக யோசிக்க,

“ஆமாடா… இந்த மகளிர் கூட்டணி இருக்கே…” கார்த்திக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுப்பு மீனாவுடன் கயல் உள்ளே நுழைய, கார்த்திக்கின் வாய் தானாக பூட்டிக்கொண்டது…

“நாமளாவது கல்யாணத்துக்கு அப்பறம் தான் இது போல இருக்கோம்  அத்தான்… இவன் இப்போவே இப்படி ஆகிட்டானே…” அஜய் கார்த்திக்கை கிண்டல் பண்ண, அவனைப் பார்த்த அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.

“என்னடா… உங்க வீட்ல பேசலாமா? அப்போ தானே எங்க சங்கத்துல ஐக்கியம் ஆக முடியும்…” விஜய் கேலி செய்ய, “போங்கண்ணா…” கயல் சிணுங்க, சந்தோஷ நாதம் அந்த இல்லத்தில் நிறைந்தது….

மூன்று வருடங்களுக்குப் பிறகு….

“இது தென்றல் பண்பலை 102.3… ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்… உங்கள் இல்லத்தில் என்றும் புதுத் தென்றலாய் வீசும் நாதம்… இது தென்றல் ராகம்…. இன்னைக்கு முதல் காலரா யார் பேசறாங்கன்னு பார்க்கலாமா?… ஹலோ…” ரேடியோவின் வழியாக கண்மணியின் குரல் கேட்கவும், அஜய் ரேடியோவின் சத்தத்தைக் குறைக்க,   

“ஹலோ… கண்மணிம்மா…” அழகிய தேன் மழலையின் குரல் கேட்கவும்,

“ஹலோ செல்லம்… குட் மார்னிங்… என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்தாச்சு?” கண்மணி கேட்க,

“நான் போன் பேச ஏந்தேன்… பால் குடிச்சிட்டேன்…” என்ற அந்த மழலைக் குரலைக் கேட்ட கண்ணம்மா உருகாமல் போனால் தானே அதிசயம்… அஜய் கண்ணம்மாவின் காதலெனும் இல்லறத்தில் பிறந்த அவர்களது செல்வச் சீமாட்டி, ப்ரேமி அல்லவா பேசுவது….

“ப்ரேமி… நீங்களே போன் செய்தீங்களா? உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்?” கண்ணம்மா கேட்க,

“அப்பா சொல்லி…” என்று சொன்னவள், அஜயின் கையில் போனைக் கொடுக்க, “குட் மார்னிங் கண்மணி… எனக்கு இந்த அழகான காலை வேளையில…” என்று இழுத்தவன், ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே…’ என்று பாட, கண்ணம்மாவின் முகத்தில் புன்னகை அரும்பியது…

“ரொம்ப அழகா பாடிட்டீங்க அஜய்… உங்க கண்மணி சௌக்கியமா தான் இருப்பாங்கன்னு நம்புவோம்…” என்று அவனுக்கு பதில் சொல்லியவள்,

“இதோ உங்கள் தென்றல் ராகம் நிகழ்ச்சியில… அஜய்யும்… ப்ரேமியும் கேட்ட பாடல்…” என்று கண்மணியும் அதே பாட்டை பாடிக் காட்ட,

“அப்பாவுக்கும் பொண்ணுக்கும் காலையிலேயே நல்ல பொழப்புடா சாமி…” என்று கார்த்திக்கின் குரலை கேட்ட அஜய் சிரித்துக் கொண்டே, அதே பாடலை கூடச் சேர்ந்து பாட, கார்த்திக் தலையில் கை வைத்து அமர்ந்தான்.

“என்னாச்சுங்க…” என்று வந்த கயல், அதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டு,

“ஹே…. கண்ணம்மாவோட ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகியாச்சா… என்ன மாமா… என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல… ஏங்க நீங்களாவது கூப்பிடலாம் இல்ல…” படபடவென்று கேட்ட கயல், அவளும் கூடச் சேர்ந்து ரசிக்க, கார்த்திக் இருவரையும் பார்த்து விளக்கெண்ணை குடித்தது போல முகத்தை வைத்துக் கொண்டான்… கார்த்திக்கின் முகத்தைப் பார்த்த அஜயும் கயலும் சிரிக்கத் தொடங்க… அவர்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாத மழலையும் தன் அரிசிப் பற்கலைக் காட்ட, அவளை நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு ராதாவும் ஸ்ரீனிவாசனும் தூக்கிக் கொஞ்சினர்…   

தென்றல் பண்பலையின் ராகங்கள் போல்… ஸ்ருதியும் லயமும் சேர்ந்து அழகிய இசையை கொடுப்பது போல… என்றும் மகிழ்வே  அவர்கள் இல்லத்தில் நிறைந்திருக்க வாழ்த்தி விடை பெறுவோம்….

 

8 COMMENTS

    • நன்றி ஜெயா …. 🙂 🙂 உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙂

  1. super novel mam… sema twist kannamam life la vera yaro yemathitanganu nenacha ajay than husband… supportive character vijay super… then karthick comedy nice… all are superb mam

  2. ஒலிபரப்பு Migavum arumayana novel. Etharthamana kadhal kadhai. I liked the ending . Characters oda life style ellamaey super . Thanks for the novel.

LEAVE A REPLY