SHARE

நாதியற்ற என்
நினைவுகளுக்கு
உயிர் கொடுப்பது ஏனோ
நீயும் உன் காதலும் மட்டுமே …
கரம் பிடிக்க நினைத்து
காத்துக் கொண்டிருந்தாலும்
விதியின் சுழலில்
திக்கி நிற்கிறேன்

 

“என்னடி சொல்ற?” என்று மீனாவும்,

“என்னம்மா… என்ன இது ஒரு புது குண்டை தூக்கிப் போடற?” என்று சுப்புவும் அதிர்ந்து நின்றனர்….

“யாரு கண்ணம்மா அது? என்கிட்ட கூட நீ சொல்லவே இல்ல…” கயல் தன் பங்கிற்கு எடுத்துக் கொடுக்க, கண்ணம்மா அவளை முறைத்தாள்.

“முறைக்காதே கண்ணம்மா… உண்மைய சொல்லு… என்ன நடந்தது… யாரு அவரு, எல்லாத்தையும் சொல்லு… அப்போ தானே தீர்வு கிடைக்கும்…” கயல் மேலும் அவளை ஊக்க, கண்ணம்மா சிறிது தடுமாறினாள்.

“ஹையோ… நான் இவ்வளவு எடுத்துக் கொடுக்கறேன்… அதை அப்படியே பிடிச்சுக்கிட்டு ,நடந்த விஷயங்களை மேலும் விவரமா விளக்கி,  அப்பா அம்மா கிட்ட எல்லா உண்மைகளையும் சொல்லிட்டு, அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்காம, மரம் மாதிரி நிக்குது பாரு…. ஜடம்… அன்னிக்கு அந்த பிருந்தா பேச்சைக் கேட்டு நல்லா ஆடின இல்ல… நான் அவ கூட சேரும் போதே சொன்னேன்… அவ சரி இல்லைன்னு… கேட்டியா? உன் வாழ்க்கையையே குட்டிச்சுவராக்கிக்கிட்டு வந்து நிக்கறியே.. இதுல மாமாவோட அம்மா அப்பா வேற என்ன சொல்வாங்களோ??” கயல் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“அவர் பேரு ஜெய்… இப்போ அமெரிக்கால இருக்கார்… அடுத்த மாசம் இந்தியா வருவார்… அவர் வரும் போது வீட்ல கல்யாணத்தை பேசி முடிச்சு… என்னையும்  கையோட கூட்டிட்டு போயிடுறேன்னு சொல்லி இருக்கார்…” ஒரு முடிவாக சொன்னவளைப் பார்த்த கயல், பல்லைக் கடிக்க,

“அவனை உனக்கு எப்படித் தெரியும்? நல்ல பையனா?” என்ற கேள்விகள் அணிவகுத்து வந்தன.

“எங்க ஆபீஸ்ல தான் வேலை செய்யறார்…” கண்ணம்மாவின் பதிலைக் கேட்ட சுப்பு,

“கண்ணம்மா… அந்த அஜய்க்கும் அவனுக்கும் பழக்கம் இருக்கா? அவன் எங்கயாவது, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அந்த பையனோட மனசை கலைச்சிடப் போறான்…” மீனா அவசரமாக இடையிட, கயல் மூவரையும் கடுங்கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அஜய் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்… அவருக்கும் நான் அவரை விரும்பற விஷயம் தெரியும்… அவருக்கும் ரொம்ப சந்தோசம் தான்… அவரும் இவரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு…” அவர் அவர் என்று பொதுப்படையாக கண்ணம்மா பேசி, சுப்புவின் யூகத்துக்கே விட்டாள்.

“அஜய் ரொம்ப நல்லவர்ப்பா… அவரை மாதிரி ஒரு நல்லவரை நான் தான் என் முட்டாள் தனத்துனால மிஸ் பண்ணிட்டேன்… எனக்கு அவர் எப்பவுமே உதவி தான் செய்திருக்கார்… ஆபீஸ்ல அவர் ஒவ்வொரு முறை திட்டினதும் கூட, நான் செய்த தப்புகளுக்காகத் தான்.. முன்னாடி நீங்க அவரைப் பத்தி விசாரிச்சதுல எதுவுமே தப்பில்ல… அவர் நல்லவர் தான்… நான் தான் சரி கிடையாது…” வேக வேகமாக சொல்லியவள், தொண்டையடைக்க, அழுதுக்கொண்டே உள்ளே ஓட,        

“அந்த அஜய் இவளை ஏதோ சொல்லி மிரட்டி இருக்கான் போல இருக்கு… அது தான் அவனைப் பத்தி நல்ல விதமா சொல்லிட்டு, அவன் செய்ததை எல்லாம் மறக்க முடியாம உள்ள ஓடறா…” மீனா, கண்ணம்மாவின் அழுகைக்கு ஒரு காரணம் கற்பிக்கவும்,

“நீங்க இன்னுமா திருந்தல? யாரவது எதாவது ஒரு விஷயத்தை  சொன்னா… அதை ஈரை பேனாக்கி… பேனை பெருமாளாகின கதையா நல்லா கற்பனை செய்து சண்டைக்கு வரிஞ்சுக் கட்டிக்கிட்டு போறதை நிறுத்திட்டு… கொஞ்சம் உங்க மூளையையும் தட்டி எழுப்புங்க… அப்போ தான் உண்மையும்.. சுத்தி என்ன நடக்குதுன்னும் புரியும்… நடந்தது எல்லாத்தையும்… இவ பேசினது.. அவங்க பேசினது எல்லாத்தையும் திரும்ப திரும்ப யோசிச்சு பாருங்க… அப்பறம் மாமா மேல பழி சொல்லலாம்…” கடுப்புடன் சொல்லிவிட்டு, கயல், கண்ணம்மாவின் அருகில் செல்ல, இங்கோ அவர்களைப் பெற்றவர்கள் இருவரும் திகைத்து, புரியாமல் குழப்பிக் கொண்டு நின்றிருந்தனர்.

“கயல் என்னங்க சொல்றா?” மீனா கேட்க,

“அஜய்யை நல்லவன்னு சொல்றா மாதிரி இருக்கு? எல்லாத்துக்கும் காரணம் இவ தான்னு சொல்றாளா? எனக்கு ஒண்ணுமே புரியலையே…” அவர் தன் பங்கிற்கு குழம்ப, இருவரும், நடந்தவை என்ன என்பதே புரியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர்…

“ஒருவேளை அப்பா சொன்னது போல.. அவன் ரொம்ப நல்லவனோ?? நாம கண்ணம்மாவ கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினதுனால,இவதான்  அவங்களை ஏதாவது தொல்லை செய்துட்டாளோ?” சுப்பு மெல்ல இழுக்க, மீனா திரும்பவும் அப்பொழுது நடந்த நிகழ்வுகளை அசை போடத் துவங்க, எதுவுமே சரியாகப் புரியாமல், இருவருக்கும் இருட்டில் துழாவுவது போல இருந்தது.

உள்ளே சென்ற கயல், கண்ணம்மாவைப் பிடித்து கடித்துக் குதறிக் கொண்டிருந்தாள். “உனக்கு இப்போ கூட மாமா மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்ல முடியல தானே… உனக்கு அவ்வளவு சுயநலமா கண்ணம்மா… நான் உன்கிட்ட இதை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல… அப்போவும் நீ அவரை தான் பலியாடா நிறுத்தின… இப்போவும் நீ உண்மைய சொல்லாம நிக்கறது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல… சொல்லிட்டேன்… அவரு இப்போவும் உன்னையே நினைச்சிட்டு இருக்கார் இல்ல… அந்தத் திமிருதாண்டி…” என்று பொரிந்துத் தள்ளியவள், அவளது போனை எடுத்து அஜய்க்கு அழைத்தாள்.

—————–

“அஜய்… இங்கப் பாரு… அந்த கண்ணம்மா கூட பேசாதே அப்படின்னா உனக்கு கோபம் வருது… அது உன் பர்சனல் விஷயம் தான்… ஆனா… அவ செய்தது எல்லாம் மறந்துப் போச்சா…. என்னவோ அவளை டிவியில பார்த்த உடனே அப்படியே ஐஸ் மாதிரி உருகிட்டு இருக்க? என்னடா உன் மனசுல நினைப்பு?

அந்த சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ள நின்னு இருந்தாக் கூட பரவால்ல… அவ எங்களையும் சேர்த்துத்தானே அவமானப்படுத்திட்டா… நம்ம அனுவையும் மாப்பிள்ளையையும் கூட அவ விட்டு வைக்கல… அனுவைப் பார்த்தா… அவ புடவைய பிடிச்சு இழுக்கறா போலவா இருக்கு?” மெல்ல உணவை கொடுத்துக் கொண்டே ராதா அஜயிடம் பேச்சைக் கொடுக்கவும், சில வினாடிகள் மௌனத்தில் கடத்தியவன்,

“அவ செய்தது தப்பு தான்ம்மா… படிக்கணும்னு ஆசை… ஆசை கூட இல்ல, படிப்பை பாதில விட்டுடக் கூடாதேன்ற வெறியினால, யாரோட பேச்சையோ கேட்டுத்தான் அவ அப்படி பண்ணிட்டாம்மா…அனுபவம் இல்லாத சின்ன வயசு என்கிறதால நல்லது கெட்டது எதையும் யோசிக்காம இப்படி செய்துட்டாமா அவ. எல்லாம் போதாத நேரம்… வேற என்ன சொல்ல? என்கிட்ட அவளோட விருப்பு வெறுப்பை சொல்லி இருக்கலாம்… அதுக்கு நான் தான் அவகூட தோழமையா இல்லையோன்னு கூட தோணுது… எடுத்த உடனே அவளை வெறுப்பேத்தறேன்னு ஏட்டிக்கு போட்டியா செய்தேன்.. அதுல அவ, என்கிட்டே பேசி பயன் இல்லன்னு நினைச்சு இருப்பா போல… சின்னப் பொண்ணு தானேம்மா…” அஜய் மெதுவாக அவள் செய்ததற்கான விளக்கத்தைச் சொல்லவும், ராதா அவனை கோபமாக முறைத்தார்.

“ஏண்டா… படிக்கணும்னு ஆசை இருந்தா, அதுக்காக  அப்படியெல்லாமா செய்வாங்க? நானும் தான் கேட்கறேன்… எங்க காலத்துல எல்லாம் பதினஞ்சு வயசுலயும், பதினெட்டு வயசுலயும் கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்ணுங்க எல்லாம் சிட்டாட்டம் குடும்பம் நடத்தல? அவங்களுக்கு மட்டும் படிக்கணும்னு ஆசை இருக்காதா என்ன? ஏன் நான் உங்க அப்பாவை கல்யாணம் செய்துக்கும் போது எனக்கு பதினேழு வயசு தான்… பி.யூ.சி. படிச்சிட்டு இருந்தேன்… எனக்கு கூடத் தான் காலேஜ் போய் படிக்கணும்னு ஆசை இருந்தது… அதுக்காக இப்படியா செய்தேன்…

கல்யாணம் ஆன மறுநாளே காலையில காபி கொடுக்க ரெண்டு நிமிஷம் லேட் ஆச்சுன்னு என்னை வறுத்தெடுத்தார் உங்க அப்பா… அதுக்காக  நான் என்ன கண்ணைக் கசக்கிக்கிட்டு உடனே எங்க அம்மாவுக்கு போன் போட்டு சொல்லி… போலீசை கூட்டிட்டு வந்து அவரை ஸ்டேஷன்லயா கொண்டு போய் நிறுத்தினேன்…

எங்க அம்மாகிட்ட இவர் சத்தம் போடற விஷயத்தை சொன்னாக் கூட… ‘அப்படி தான் இருப்பாங்க… நீ தான் அனுசரிச்சு போகணும்’னு சொல்லி வாய அடைச்சிடுவாங்க… அவளோட அம்மாவும் அப்பாவும் ஆடின ஆட்டம் இருக்கே.. இனி எப்பவுமே அவங்க முகத்துல முழிக்கவே கூடாதுன்னு நானும் அப்பாவும் இருக்கோம்… இப்படி இருக்கும்போது, நீ இப்போ அவளுக்கு வக்காலத்து வாங்கற… அந்த அளவுக்கு அவ உன்னை மாத்தி வச்சிருக்கா…” கோபமாக அஜயை திட்டிக் கொண்டே, ராதா கொடுத்த உணவை வாயில் வாங்கிக் கொண்டவன், ‘இதற்கு மேல் கண்ணம்மா தான் அவர்களிடம் பேச வேண்டும்… தான் பேசினால் சரி வராது போல…’ என்று யோசனையில் இருக்க, அவனது செல் இசைக்கத் தொடங்கியது… 

மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ  தொல்லை

Like a Like my லைலா… லைலா…

செல்போனின் இசையிலேயே ராதா அஜயை ஒரு மாதிரிப் பார்க்க, அஜயோ, கண்ணம்மாவின் எண் திரையில் ஒளிரவும், ராதாவையும், போனையும் மாறி மாறிப் பார்த்தான்.

“என்னடா… போன் அடிச்சிக்கிட்டு இருக்கு… எடுக்காம முழிச்சிட்டு இருக்க? என்ன? அந்த பிசாசு போன் பண்றாளா?” ராதா ஒரு மாதிரிக் கேட்கவும், அவரிடம் பொய் சொல்ல முடியாமல், பார்வையை தாழ்த்திக் கொண்டவன், அவசரமாக போனை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

“ஹலோ…” அஜயின் குரல் கேட்ட உடன்,

“மாமா… உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?” கயலின் குரல் எடுத்தவுடன் இவ்வாறு கேட்கவும், ‘ஹான்…’ என்று அஜய் முழிக்க,

“மாமா.. லைன்ல இருக்கீங்களா?” மீண்டும் கயல் கேட்கவும்,

“இருக்கேன்… இருக்கேன்… எடுத்த எடுப்புல இப்படி ஒரு கேள்விய கேட்டா நான் யோசிக்கணும் இல்ல… அது தான் யோசிக்கிட்டு இருக்கேன்… இருந்தாலும் இந்த கேள்வியை நான் எதிர்ப்பார்க்கல” அஜயின் பதிலைக் கேட்டவள், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“அது இல்லன்னு தான் தெரிஞ்சு போச்சே… உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா?” மீண்டும் கயல் கேட்கவும்,

“ஏய் என்னடி அவரை மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க? போனை இங்க கொடுடி… கொடுன்னு சொல்றேன் இல்ல..” என்று கண்ணம்மா கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டவன்,

“அக்காவுக்கும் தங்கைக்கும் விளையாட வேற நேரமே கிடைக்கலையா? நல்ல நேரம் பார்த்தாங்கடா… இதுக்குப் பேரு தான் மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கறது போல…” என்று மனதினில் சலித்துக் கொண்டிருந்தான்.

“மாமா… நீங்க இவளை நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கும் போது ரெண்டு அப்பு அப்பி விடுங்க… இன்னைக்கு ஒரு வழியா அம்மா அப்பாகிட்ட ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்லிட்டா… இவ தானா உண்மைய சொல்லுவான்னு நானும் எவ்வளவோ எடுத்துக் கொடுக்கறேன்… எங்கே….இவ உண்மைய சொன்னா தானே… இவளை எல்லாம் மியூசியத்துலதான் கொண்டு போய் வைக்கணும்…” கயல் படபடக்க,

“நான் ஆபீஸ் வர இன்னும் ஒரு மாசம் ஆகும்… அதனால என் சார்பா… ரெண்டென்ன… நாலா… நீங்களே கொடுங்க…” அஜய் சொல்லவும், அதைக் கேட்ட கயல்,

“என்ன மாமா… ஏன் ஒரு மாசம் வர மாட்டீங்க?” அதிர்ச்சியுடன் கேட்க,      

“மாமாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு… அதுவும் என்னால தான்… என்னால தான்…” கண்ணம்மாவின் அழுகை அஜய்க்குக் கேட்கவும், அவன் பதில் பேச முடியாமல், பெருமூச்சை வெளியிட, கயலுக்கு எதுவோ புரிந்தது.

“பக்கதுல அத்தை இருக்காங்களா மாமா…” அவள் கேட்கவும்,

“ஹ்ம்ம்… சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்… அம்மா தான் கொடுக்கறாங்க… வலது கைய கீழே ஊணினதுல கொஞ்சம் கிராக் ஆகி இருக்கு…” என்று அஜய் சொல்லவும், கயல் ஒரு சில வினாடிகள் மௌனம் காத்து…

“மாமா… அடி ரொம்ப பட்டுடுச்சா… இவ சொல்லவே இல்ல…”

“பரவால்ல விடுங்க… என்ன விஷயமா கால் பண்ணினீங்க?” அஜய் கேட்கவும்,

“சாரி மாமா… நானும் உண்மை தெரியாம உங்ககிட்ட நிறைய சண்டை போட்டுட்டேன்… எல்லாம் இந்த மக்கு செய்த வேலை… நான் அந்த பிருந்தா கூட சேராதேன்னு மொதல்லையே சொன்னேன்… இவ தான் முஸ்தபா பாட்டு பாடிக்கிட்டு அவகூடவே சுத்திக்கிட்டு இருந்தா… இப்போ அவ நல்லா இவ மூக்கை உடைச்சு… முகமே இல்லாம செய்துட்டு போயிருக்கா… இவ பேச்சைக் கேட்டு எங்க வீட்ல உள்ளவங்க செய்ததும் ரொம்ப தப்பு தான் மாமா… ரொம்ப ரொம்ப சாரி… இப்போ எங்க அம்மா அப்பாவையும் திட்டிட்டு தான் வந்திருக்கேன்…” கயல் வருத்தமாகச் சொல்லவும்,

“ஹ்ம்ம்… இல்ல கொஞ்சம் தான்…” அஜய் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“இன்னும் ரெண்டு தோசை எடுத்துட்டு வரேன் அஜய்… மெல்ல சாப்பிடு…” என்று ராதா சொல்லிவிட்டு நகர, அவர் அறையைத் தாண்டி சென்றதை உறுதி செய்துக் கொண்டவன்,

“கயல்… அம்மா இருந்தாங்க… அது தான்… அவளை அழ வேண்டாம்ன்னு சொல்லு… சும்மா நைநைன்னு அழுதுக்கிட்டு… மொதல்லையே புத்தி வேணும்… அறிவுக்கெட்டத் தனமா எல்லாத்தையும் செய்துட்டு, இப்போ அழுது என்ன பண்றது… இத்தனை நேரம் அம்மா அவ செய்ததை எல்லாம் சொல்லி திட்டோ திட்டுன்னு திட்டிக்கிட்டு இருந்தாங்க… நான் என்ன பதில் சொல்ல முடியும் சொல்லு… அவ என்னோட மட்டுமாவது நிறுத்தி இருந்தா பரவால்ல…” அஜய் கோபமாகச் சொல்லவும்,

“அது தான் இல்லையே…” கயலின் பதிலில்,

“சரி கயல்.. என்ன விஷயம்? அம்மா வந்தா நீ தான் பேசறன்னு தெரிஞ்சா கண்டிப்பா உனக்கும் திட்டு விழுகும்… அது தான் அவசரமா பேசறேன்…” என்று அஜய் கேட்டான்.

“இல்ல மாமா… இவ இப்போவும் இப்படி உண்மைய சொல்லாம சொதப்பறாளே… கண்டிப்பா உங்களுக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமான்னு கேட்கத் தான் கூப்பிட்டேன்… ஆண்டவனா பார்த்து உங்களுக்கு ஒரு மாசம்… ஒரு மாசம் மாமா… முழுசா முப்பது நாள் டைம் கொடுத்திருக்கான்… நல்லா யோசிச்சு முடிவெடுங்க… இவ வேற உங்களை அமெரிக்காவுக்கு பார்சல் பண்ணி இருக்கா… அதுவும் ஜெய்யும் நீங்களும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாம்…” என்று கண்ணம்மா சொன்னதை சொன்ன கயல்…

“இந்த மேட்டரை சொல்லத் தான் கூப்பிட்டேன்…” என்று முடித்தாள்.

“உங்க அக்கா மட்டும் என் கையில கிடைக்கட்டும்…. அவளுக்கு இருக்கு… நல்ல சான்ஸ்… ஈஸியா முடிக்க வேண்டிய காரியத்தை இப்படி அவ நூடுல்சை விட மோசமா சிக்கு போட்டு வைக்கிறாளே… அவளை என்ன செய்தா தேவலாம்… உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி… அவங்க இங்க வந்து நடந்ததை சொன்னா எல்லாமே கொஞ்சம் ஸ்மூத்தா முடிய சான்ஸ் இருக்கு… இவ ஏன் இப்படி பண்ணினா?

இங்க டிவில நான் அவளைப் பார்த்ததுக்கே எங்க அம்மாவும் தங்கையும் என்னை பொளந்து கட்டிக்கிட்டு இருக்காங்க… நானும் உடம்பு முடியாத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது…” என்று சலித்துக் கொண்ட அஜய், கயல் சிரிக்கவும்,

“எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு… கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்தவன், திரும்பவும் அதே கிணத்துக்குள்ள குதிக்க ரெடி ஆகிட்டு இருக்கேன்… இது தான் விடாது கருப்பு போல…” என்று அவன் மேலும் கண்ணம்மாவை கிண்டல் செய்துக் கொண்டிருக்க, கயல் சத்தமாக சிரித்துக் கொண்டிருக்க, ‘அஜய்….’ கண்ணம்மாவின் குரல் எரிச்சலாக ஒலித்தது.

“உங்களுக்கு இவ கிட்ட என்ன பேச்சு? போய் ரெஸ்ட் எடுங்க…. விட்டா ரெண்டு பேரும் சேர்ந்து விடிய விடிய என்னை கேலி செய்துட்டு இருப்பீங்க போல… நான் மொதல்ல அத்தை மாமாகிட்ட தான் உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்கணும்னு இருக்கேன்… அதுவும் நீங்க குணமானதும் தான்…

என்னோட தைரியமே நீங்க தான் அஜய்… நீங்க பக்கத்துல இருக்கும் போது நான் கேட்கறேன்… அதுவரை எங்க அப்பா அம்மாகிட்ட கூட சொல்ல மாட்டேன்…” கண்ணம்மா சொல்லவும், அவளது குரலில் இருந்த தயக்கம், அஜய்க்கு புரியவே செய்தது.

“சரி… விடு… இந்த விஷயத்தை ஒரு மாசத்துக்கு தள்ளிப் போட்டுக்கலாம்… நாளைக்கு காலையில அப்பா ஊர்ல இருந்து வரார்… அம்மா ஏற்கனவே பக்கத்துல இருக்கற கோவில்ல சொல்லி வச்சிட்டாங்க… நாளைக்கு அப்பா கூட போனா… ஏதாவது ஜாதகத்தை எடுத்துக்கிட்டு வருவாங்க… எப்படியும் இந்த மாசத்துக்குள்ள பொண்ணு பார்த்து ரெடி பண்ணிடுவாங்க… நான் குணமானதும் போய் நானும் பார்த்துட்டு வரேன்… சரியா? வந்து எங்க கல்யாணத்துக்கு பெரிய மனுஷியா ஆசிர்வாதம் செய்துட்டு போ…” அஜய் அவளிடம் சிடு சிடுத்தான்…

“ஐயோ …நான் இப்போ என்ன செய்யணும்? எனக்கு ஒண்ணுமே புரியலயே…” கண்ணம்மா கேட்க,

“ஹ்ம்ம்.. அதையும் அந்த பிரெண்ட்கிட்டயே போய் கேளு… ந….ல்….லா சொல்லிக் கொடுப்பா… பிரெண்ட் பேச்சைக் கேட்டாளாம் பேச்சை… உங்க அப்பா தாத்தா சொன்னதை எல்லாம் காத்துல பறக்க விட்டா… எவளோ சொன்னாளாம்… அதைக் கேட்டு எங்க அம்மா அப்பாவை இவ அசிங்கப்படுத்துவாளாம்… இப்போ அவங்க அதையே சொல்லிச்சொல்லி என்னை கேள்வி கேட்கறாங்க… நான் என்ன பதில் சொல்லட்டும்…” என்று வறுக்கத் தொடங்கியவன், அவளது விசும்பல் கேட்டு,

“இன்னொரு தரவ நீ அழுகற சத்தம் கேட்டது… அன்னிக்கு விழுந்த அடி பொய்யா போயிடும்…” என்று கடுப்படித்தான்…

“சரி… இனிமே அழல… என்ன செய்யறது? நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க…” கண்ணம்மா கேட்க,

“எல்லா குழப்பதையும் நீ தானே செய்த… அதை எல்லாம் நீயே அவிழ்த்து எடு… எப்படி எங்க அம்மா அப்பா மனசை மாத்தி அவங்களை மன்னிக்க வைப்பியோ… உன் சாமர்த்தியம்… இப்போவாவது சுய புத்தியை யூஸ் பண்ணு…” என்று முடிக்க,

“நானும் கயலும் என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறோம்…” கண்ணம்மா சொல்லவும்…  

“இது சரி… ஒழுங்கா நல்லா யோசி… திங்கட்கிழமைல இருந்து ஆன்லைன்ல வருவேன்… கொஞ்சம் வீட்ல இருந்தே வேலைகளை பார்த்துக்க சொல்லி பி.எம். சொல்லி இருக்காங்க… அப்போ பார்த்துக்கலாம்… பை…” அஜய் வேறு யாருடனோ பேசுவது போல சொல்ல,

“இன்னுமாடா பேசி முடிக்கல… என்னவோ நான் துபாய்ல இருக்கும் போது என்கிட்டே பேசுன்னா மட்டும் வேலை இருக்கு அது இருக்குன்னு பேசவே மாட்ட…” ராதா அவன் அருகில் வந்து அவனுக்கு உணவை கொடுத்துக் கொண்டே கேட்க, அனுபமா அவனை ஒரு மாதிரி நக்கலாகப் பார்த்துக் கொண்டே,

“அதெல்லாம் இப்போதைக்கு இந்த பேச்சு முடியாதும்மா.. விடிய விடிய கூட பேசுவான்… ஏன்னா அவனுக்கு நம்மகிட்ட பேசறது மட்டும்தான் இப்போ கசக்கும்…” என்று தனது எதிர்ப்பைக் காட்டினாள்.

“என்ன அனும்மா…” அஜய் கேட்டுக்  கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்த விஜய்,

“அஜய்… நான் இன்னைக்கு நைட் அங்க வீட்டுக்கு போயிட்டு… நாளைக்கு காலையில மாமாவையும் ஏர்போர்ட் போய் கூட்டிட்டு வரேன்… அனுவையும் என் கூட கூட்டிட்டு போறேன்… அங்க வீடெல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு…” என்று சொல்லவும்,

“இங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண நான் இருக்கணும்ங்க…” அனுபமா தொடங்கும் போதே, விஜய் அவளை ஒரு பார்வைப் பார்த்ததும்,

“சரி… நானும் கூட வரேன்…” என்று அனுபமா ஒப்புக்கொள்ள, அஜய் அவனைக் கெஞ்சுவது போல பார்த்தான்.

“நாளைக்கு காலையில வந்துடறேன் அஜய்… கொஞ்சம் வேலை இருக்கு…” என்றவன், சிறிது நேரத்திலேயே அனுபமாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

அன்று இரவு முழுவதும், அன்றைய நாளின் நிகழ்வுகள் அனைத்துமே, அஜயை, மருந்து உண்ட பிறகும் உறங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன… கண்ணம்மா முன்பு புரியாமல் செய்த செயல்கள் அனைத்துமே இப்பொழுது அவனது கண் முன் வந்து மருட்ட, அதை சுட்டிக் காட்டி, ராதாவும் அனுபமாவும் அழுது கரைய, ஒருபக்கம் ஸ்ரீனிவாசன் வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருப்பது போன்ற கற்பனை தோன்ற, தூக்கம் எட்டாக் கனியானது…

“இந்த மாதிரியெல்லாம் இவ செய்யாம இருந்திருக்கலாம்… இப்போ என்ன செய்யறது? எப்படி இவங்களை சமாதானப்படுத்தறது? நானுமே இன்னும் கொஞ்சம் சமாதானம் ஆகித் தான் ஆகணும் போல இருக்கே…

அவள் தன்னிடமிருந்து  பிரிந்திருக்க சொன்ன காரணங்கள் எல்லாம், நடக்க வாய்ப்புகள் அதிகம் இருந்தது தான்… அவள் தன்னுடன் சாதாரணமாக இருந்திருந்தால் தானும் அவளிடம் மனைவியின் உரிமையை எடுத்துக் கொண்டிருப்போமோ? அதனால் அவளது படிப்பு தடை பட்டிருக்குமோ? சிறு பிள்ளையின் பயம் போல… எங்கே பேசினால், நான் ஏதேனும் மறுப்பு சொல்லி விடுவேனோ என்று இப்படி எல்லாம் செய்திருக்கிறாள்… இதில் யாரைக் குற்றம் சொல்ல…

அவளுக்கு தவறான போதனைகளை கொடுத்த அந்த உயிர்த் தோழியையா? அல்லது அவள் சொன்னதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொண்டு, ஒரு குடும்பத்தையே அவமானப்படுத்திய கண்ணம்மாவையா? அவள் சொன்னது போல… அவள் தான் அம்மா அப்பாவிடம் பேசி மன்னிப்பு கேட்க வேண்டும்… அதன் பிறகு, தான் பேசிக் கொள்ளலாம்…” என்று பலவாறாக யோசித்துக் கொண்டே விழித்துக் கிடந்தவன், நடு இரவைத் தாண்டியே உறங்கவும் செய்ய, விடிந்தும் வெகு நேரமாகிய பிறகே அஜய் கண் விழித்தான்.

அதுவும் அருகில் கேட்ட ஸ்ரீனிவாசனின் குரல், எங்கேயோ கிணற்றுக்குள் இருந்து கேட்பது போலவே இருந்தது… கண்களை கஷ்டப்பட்டு பிரித்தவன், தன் அருகே அமர்ந்திருந்த தனது தந்தையைப் பார்த்துவிட்டு, மெல்லிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு, கண்களை மூடி, மீண்டும் உறங்கத் துவங்கினான்.

“நைட் கால் வலிச்சதோ என்னவோ? ரொம்ப நேரம் தூங்கவே இல்ல… நான் தூங்கறேன்னு நினைச்சு அவன் என்னை எழுப்பல போல…” ராதா சொல்லவும், விஜய் சந்தேகமாக அஜயின் காலைத் தொட்டுப் பார்த்தான்.

“அஜய்… கால் வலி இருக்கா என்ன?” அவனது கன்னத்தைத் தட்டி விஜய் கேட்க,

“ஒண்ணும் இல்ல அத்தான்… என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்… தூக்கம் வரல…” கண்களை திறக்க முடியாமல் சொன்னவன், மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, விஜய்க்கு அவனை நினைத்து கவலை தொற்றிக் கொண்டது…

“எதுக்கு என்ன செய்யறதுன்னு யோசிக்கிறான்?” ஸ்ரீனிவாசன் கேட்கவும்,

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா… நாளைல இருந்து அவனை வீட்ல இருந்தே ஆபீஸ் வொர்க்கை பார்க்க சொல்லி இருக்காங்க… அதுக்கா இருக்கும்…” என்று அனுபமா சமாளித்தவாறே விஜயைப் பார்க்க, அவனோ, அவளுக்கு சபாஷ் போட்டுக் கொண்டான்.

“சரி ராதா… நான் குளிச்சிட்டு வரேன்…  நீ அந்த கோவில் பத்தி  சொன்னயே… அங்க போய் நம்ம அஜய் பேரை ரெஜிஸ்டர் செய்துட்டு வரலாம்… அப்படியே வேற வரன் ஏதாவது தோதா இருக்கான்னு பார்ப்போம்…” ஸ்ரீநிவாசன் வந்ததும் வராததுமாகக் கிளம்ப, அஜயோ அது எதுவும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவர் சொன்னது போலவே விஜய் அவர்களை அழைத்துக் கொண்டு, அந்த கோவிலுக்குச் சென்றான். வாசலில் காரை பார்க் செய்துவிட்டு, செருப்பை உரிய இடத்தில் போட்டுவிட்டு வந்தவர்கள், உள்ளே நுழைந்ததுமே தீக்கங்குகளாக உருமாறினர்…. அப்படி அவர்களை கோபப்படச் செய்தது…. அங்கு நின்று கண்களை மூடி மனமுருக வேண்டிக் கொண்டிருந்த கண்ணம்மா…

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்….     

13 COMMENTS

  1. Kannamma yeppadi sammaalikka poranu paarkanum… Seekiram update podunga ramz…
    Seekiram update potta, unggalukku naan kuchi mittai vaangi tharen…

LEAVE A REPLY