SHARE

உன்னை விலக்கி வைத்து
இறுக்கத்தை அணிந்து
கொண்டதால்
எனது மனதின் உள்ளே எல்லாம் புழுக்கம்,
நீ காட்டிய
அன்பு முகத்தின் நினைவுகள் எல்லாம்
என்னை திட்டி தீர்க்க
உன் நிழல் சேரும்
பாதை ஒன்றில்
உடைபட்ட மனதின்
பிரிவு துயரங்களோடு
கால் கடுக்க ஒரு பயணம் !!
என்னை சேர்வாயா
என் விரல் பிடிப்பாயா !!

 

அஜய் சொன்னதைக் கேட்டு கண்ணம்மா திகைக்க, உடனேயே அவளது கண்கள் கலங்கியது… அஜயை பரிதாபமாக அவள் பார்க்க,  

“என்ன அஜய் உளறிட்டு இருக்க?” கார்த்திக் கோபமாகக் கேட்கவும்,

“ஹ்ம்ம்… எனக்கு அவகிட்ட எந்த வகையில உரிமை இருக்குன்னு நினைக்கிற கார்த்திக்… லீகலா?? நம்ம சாஸ்திரப்படி??” என்ன மறைக்க முயன்றும் அவனது குரலில் தெரிந்த வலியையும் மீறி, கண்ணம்மா மனம் வருந்துவாளே… என்று அஜய் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்த விதம், அவளை வேதனையூட்ட, அது தாளாமல், அவள் அழத் தொடங்கினாள்.  

“சிஸ்டர்… அவன் கிடக்கான்.. நீங்க அழாதீங்க…” கார்த்திக் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.  

“அய்யே… நீ சரியான அழு மூஞ்சிப் பிள்ளையா?” அஜய் கிண்டல் செய்ய, கண்ணீருடன் புன்னகைத்தவள், தனது விரலில் இருந்த மோதிரத்தை அவன் முன்பு நீட்டி, “இதைப் போட்டு நிச்சயம் செய்தீங்க இல்ல… அந்த சம்பந்தம்.. உரிமை எல்லாம் இருக்கு… என் மனசுல நீங்க எப்பவுமே என்னோட புருஷன் தான்… அது எப்படி மாறும்… ஒரு பேப்பரும், மஞ்சள் கயிறும் தான் நம்ம உரிமைய நிலை நாட்டுமோ? அப்போ மனசுக்கு அங்க என்ன வேலை?” படபடவென்று கேட்கவும், அஜய்யின் கண்கள் பளிச்சிட்டது…

“அது என்னமோ உண்மை தான்… மனசுல… அடியாழத்துல அன்பு புதைஞ்சு இருக்கும்போது… அது எல்லாம் சும்மா தான்…” அஜய் அவளுக்கு ஒத்து ஊதி,

“இதை நீ தினமும் போட்டுட்டு தான் ஆபீஸ் வருவியா?” சந்தேகமும், ஆவலும் போட்டிப் போட அஜய் கேட்டு அதை வருட,  

“இதை நான் தான் ஒரு போதும் கழட்டினதே இல்லையே…” கண்ணம்மா சொல்லவும், ‘பொய்.. பொய்..’ என்று கூவிய அஜய், நிச்சயம் முடிந்து அவன் கண்ட காட்சியைச் சொல்ல, கண்ணம்மா திரு திருவென விழித்தாள்.

“நீ சொன்னது பொய் தானே…” மீண்டும் அவன் கேட்கவும்,

“அப்போ கழட்டி வீசினது உண்மை தான்… ஆனா… அந்த குட்டி எடுத்துட்டு வந்து கொடுத்ததுக்கு அப்பறம் கையில போட்டது தான்… அதுக்குப் பிறகு நான் இதை கழட்டினதே இல்லையே… என் விரல்லையே தானே இருக்கு…” என்றவள், அதை ஆசையாக வருடிக் கொடுத்து, அஜயின் விரலைப் பார்க்க, அவனது விரல்கள் வெற்று விரல்களாக இருக்கவும், அவளது முகத்தில் ஏமாற்றம் பரவியது.    

அவளது பார்வையை புரிந்தவன் போல, “அது.. அது… எங்கக்கிடக்குன்னே தெரியாது… அப்போ உன் மேல இருந்த கோபத்துல கழட்டிப் போட்டது தான்… அம்மா எங்கயாவது எடுத்து வச்சிருக்காங்களான்னு கூட கேட்கல…” சிறிய குரலில் சொன்னவனை வேதனையுடன் பார்த்தவள், சிறிது நேரம் அமைதியாகவே இருந்தாள்.

அவளது முகம் பலவாறு யோசனையைக் காட்ட, “என்னாச்சு கண்ணம்மா?” அஜய் கேட்கவும் தான்…

“முன்னாடி நீங்க என்னை அந்தளவு வெறுத்து இருந்தீங்களா? ஆனா இப்போ, போடின்னு வெறுத்து தள்ளிட்டு போகாம… என்னை எப்படிங்க உங்களுக்கு பிடிக்குது… நான் எல்லாம் உங்க நேசத்துக்கு தகுதியானவளா?” கண்ணம்மா வருத்தமாகக் கேட்க, அஜய் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என்ன கண்ணம்மா இது நீயே உன் மனசை இப்படி வருத்திக்கற?” அஜய் கேட்கவும்,

“நிஜமாவே உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கா? எப்படிங்க?” கண்ணம்மா கேட்க,

“நம்ம கல்யாணம் ஆன புதுசுல… ஏதோ சில வினாடிகள் நீ பேசின அந்த சாந்தமான பேச்சுல இருந்த உன்னோட குரல் என் மனசுல பதிஞ்சு இருக்குன்னா… உன்னை நான் அப்போவே விரும்பத் தொடங்கி இருக்கேன்னு தானே அர்த்தம்… அதனால என்னால உன்னை வெறுக்க முடியலையோ… ஏன் இப்படி செய்தன்னு கோபம் மட்டும் தானோ… எனக்கே புரியல கண்ணம்மா… ஆனா… கோபம் இன்னும் அடங்கத் தான் மாட்டேங்குது…அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் எட்டிப் பார்க்கத்தான் செய்யுது” அஜய் தன்னிலை விளக்கம் சொல்லவும், கண்ணம்மாவின் முகம் யோசனையைக் காட்டியது.  

“ஏங்க… என் குரலை நீங்க fmல கேட்ட போதே கண்டுப்பிடிச்சிட்டீங்களா?” ஆவலாக கேட்க,

“இல்ல… கண்டுபிடிக்கல… ஆனா… எங்கயோ கேட்ட குரல்… மனசுக்கு கொஞ்சம் நெருக்கமான குரல் போல தோணிச்சு… அது தான் போன்ல பேசிப் பார்க்கலாம்ன்னு முதல் முறை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டேன். ஆனா… என்னவோ உன் கூட பேசப் பிடிச்சது… காலையில இவன் தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு  போன் பண்ணுவேன்… இவன் பலமுறை இந்த வீட்டை விட்டு வேற வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டிருப்பான்…

யூ நோ… போக முடியாத அளவு எங்க நட்பு அவனை இறுக்கி பிடிச்சது… இல்ல கார்த்திக்…” அவனையும் வம்புக்கு இழுக்க, கார்த்திக் விழித்து,

“அஜயோட சமையல் தான் என்னை கட்டி வச்சது… சூப்பரா சமைப்பான்… நீங்க கொடுத்து வச்சவங்க சிஸ்டர்..” என்று கார்த்திக் கண்ணம்மாவையும் தங்களின் வம்பில் சேர்த்துக் கொண்டவன்… ‘ஹான்….’ என்று எதுவோ நியாபகம் வந்தது போல இழுத்தான்.

“என்னடா..” அஜய் கேட்க,

“சிஸ்டர்… உங்களுக்கு உடம்பு முடியாத போது எப்படி நீங்க லீவ் போடாம… அவ்வளவு தெளிவா… உடம்பு சரி இல்லைங்கறதை, கொஞ்சம் கூட குரல்ல காட்டாம பேசினீங்க? அதுவும் குரல்ல கூட கொஞ்சமும் மாறுபாடே இல்ல… அதை வச்சு கூட நாங்க, நீங்க கண்மணியா இருக்க முடியாதுன்னு யோசிச்சோம்…” கார்த்திக் கேட்கையிலேயே…

“இதுக்குத் தான் ஒரு நண்பன் வேணும்னு சொல்றது… பார்த்தியா… உன்னைப் பார்த்து நான் மறந்து போனதை எல்லாம் எப்படி பிடிச்சுக் கேட்கறான்னு…” அஜய் சொல்லிவிட்டு சிரிக்க, இருவரையும் பார்த்தவள், அஜயின் முகத்தில் பார்வையை நிறுத்தி,

“எவ்வளவு முடியலைனாலும் நான் காலையிலேயே fm ஸ்டேஷனுக்கு போறதுக்கு ரீசன் இருக்கு… ஒண்ணு அங்க பக்கத்துலேயே இருக்கற கோவில்… தினமும் அங்க போய் பிள்ளையாரை சுத்திட்டு, ‘எனக்கு அஜய் திரும்ப வேணும்… அவர் என்னை மன்னிச்சு, என்னை மறுபடியும் அவர் கூடவே கூட்டிட்டு போகணும்’னு வேண்டிக்கிட்டு வருவேன்…

அது என்னவோ மனசுக்கு நிம்மதியா இருக்கும்… போக முடியாத நாட்கள் தவிர, மாசத்துல இருபத்தைஞ்சு நாள் அங்க சுத்துவேன்… ஒருநாள் சுத்தலைன்னாலும் என்னவோ பிள்ளையார் உங்களை என்கிட்டே கொடுக்காம போயிடுவாறோங்கற பயமே, என்னை எதுவுமே செய்ய விடாது…” கண்ணம்மா சொல்வதைக் கேட்டு அஜய் அவளை வாஞ்சையாகப் பார்த்தான்.

அஜயின் பார்வையைக் கண்டவன், அவர்கள் முழுதாக பேசித் தீர்க்கட்டும் என்று எண்ணிய கார்த்திக், “நீங்க பேசிட்டு இருங்க… நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்…” சொல்லிவிட்டு அங்கிருந்து மெல்ல நகர, அஜய் அவனைப் பார்த்து புன்னகைக்க, கார்த்திக்கோ கண்ணடித்துவிட்டு சென்றான்.

“என்னாச்சு… நான் பேசிப்பேசியே ரொம்ப போர் அடிக்கிறேனா?” கண்ணம்மா கேட்க, அஜய் பதிலேதும் பேசாமல், அவளிடம் கையை நீட்ட, கண்ணம்மா புரியாமல் பார்த்தாள்.

“என்னாச்சு அஜய்?” இன்னமும் புரியாமல் கேட்டவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன்,

“நமக்கு தனிமை கொடுத்துட்டு போறானாம்… இது கூட புரியாம இருக்கியே கண்ணம்மா…” கேலி செய்தவன், மீண்டும் கையை நீட்டவும், அதைப் பற்றிக் கொண்டவள், அவன் அருகே வந்தமர, அவனது அருகாமை அவளுக்கு கூச்சத்தையும், நாணத்தையும் கொடுத்தது…

தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் நாடியைப் பற்றி மெல்ல நிமிர்த்தியவன், “அப்படியாவது உடம்பு முடியாம இருக்கும்போது கூட சுத்தணுமா?” அவனது குரலில் தான் அத்தனை அக்கறை…

“ஹ்ம்ம்… ஆமா…” என்றவள், “நிறைய நாள் உங்க நினைவுல அழுதுகிட்டே போய்… குரல்ல அந்த கனம் தெரியாம இருக்க முயற்சி பண்ணி ஷோவுல நல்லா சமாளிச்சு பேசி இருக்கேன்… அதே போல தான் உடம்பு முடியாத போதும்… ஆனா… இந்த துர்வாசர் கூட போன்ல அப்படி பேசுவார்ன்னு தெரியாம போச்சே… சத்தியமா அந்த சினிமா விமர்சனம் நிகழ்ச்சியில, நீங்க சொன்னதைக் கேட்டு நான் ஆடியே போயிட்டேன்… ஸ்பீச்லெஸ் தான்….” கண்ணம்மா விழி விரிக்க, மெல்ல அந்த விழிகளில் இதழ் பதிக்க அஜய் நெருங்க, அவனது செல்போன் அலறியது…

“ச்சே…” அஜய் சலித்துக் கொண்டு போனை எடுக்க, கண்ணம்மா அவன் மார்பிலேயே சாய்ந்து, தனது நாணத்தை மாறைத்துக் கொள்ள, விஜய் தான் அழைத்திருந்தான்.

“அஜய்… வேற ஏதாவது வேணுமாடா… நாங்க ஷாப்பிங் முடிச்சிட்டோம்… குட்டிய சமாளிக்க முடியலடா… சீக்கிரம் சொல்லு…” விஜயின் குரலைக் கேட்டவன் சிரித்து,

“அப்படியே எங்க அம்மாகிட்டயும் தங்கைகிட்டயும் எங்க கல்யாணத்துக்கு பெர்மிஷன் வாங்குங்களேன்…” அஜய் சொன்னதைக் கேட்டு, கண்ணம்மா அவனை நிமிர்ந்துப் பார்க்க, அந்தப் பக்கம் விஜயோ,

“நான் வேணா பறந்து போய் அந்த நிலாவ பிடிச்சிட்டு வரேன் அஜய்… அது கூட செய்துடுவேன்… இது மட்டும் நம்மால முடியாது… அதுக்கு வேற ப்ரோக்ராம் தான் ஆர்கனைஸ் பண்ணனும்…” விஜய் சொல்வதைக் கேட்டவன் சிரித்து, கண்ணம்மாவைப் பார்க்க,

“எனக்கு ஷோவுக்கு டைம் ஆச்சு… லைவ் ஷோ ஒண்ணு போயிட்டு இருக்கறதுனால என் ஸ்லாட் தள்ளிப் போகுது… நான் கிளம்பறேன்… பாவம் அத்தையும் அண்ணியும்… நான் உங்களைப் பார்க்கணும்ங்கறதுனால அவங்களை வெளிய அலைய விடறது தப்பு… எனக்கு இதுவே கில்ட்டியா இருந்தது… ஆனா… மனசு கேட்கல… போகும் போது சுவாதிக்கும் எல்லாம் சொல்லணும்…” என்று கண்ணம்மா எழுந்து நிற்க, ‘நீங்க வாங்க அத்தான்…’ என்று சொல்லி போனை வைத்தவனும் எழுந்து நிற்க முயன்று தடுமாறினான்.

“என்னங்க… மெல்ல…” பதட்டமாக கண்ணம்மா அவனைப் பிடிக்கப் போக, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன், விட்டதை தொடர்ந்தான்.

“இதெல்லாம் அநியாயம்… ஒத்தைக் கால்ல நின்னுக்கிட்டு இது என்ன இது? விழுந்துடப் போறீங்க… நான் கிளம்பறேன்…” அவளது வாய் முணுமுணுக்க, கண்களோ, அவனது இதழ் தீண்டலுக்கு வசதியாக மூடிக் கொண்டது…

அவனது இதழ் மென்மையாக… மிக மிக மென்மையாக அவளது இமைகளில் தீண்டவும், மெய் சிலிர்த்துப் போக, அவளை அறியாமலே, கண்கள் கலங்க, இதழில் ஈரம் உணர்ந்தவன், அதை துடைத்து விட்டு, “இனிமே நீயும் பழசை நினைச்சு அழக் கூடாது… ஏதோ… நம்ம போதாத நேரம்… இருபது வயசு பொண்ணு ஒருத்தி, அறிவை மொத்தமா அடகு வச்சிருந்த நேரம்… அதுனால தான் இதெல்லாம்…

இப்போ தான் அந்த பொண்ணு பெரிய மனுஷி மாதிரியே யோசிக்கிறாளே…” அஜய் கிண்டல் செய்ய, கண்ணம்மா அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.

“இனிமே… உனக்கு ஏதாவது வேணும்னா… ஏதாவது செய்யணும்னா… மனசைத் திறந்து, வாயைத் திறந்து, என்கிட்ட கேளு… நான் கண்டிப்பா உனக்கு சப்போர்ட்டிவா தான் இருப்பேன்… உன் நியாயமான ஆசைகளை கூட நிறைவேத்தி வைக்காம போக நான் என்ன கொடுமைக்காரனா?” அஜய் கேட்கவும்,

“அப்போவே பேசி இருக்கணும்… உங்களைப் பத்தி தெரியாம… நானே தப்பா யூகிச்சு… எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்…” என்று சொன்னவள், அவன் ‘அழக்கூடாது’ என்று கண்களைத் துடைத்து விடவும், மண்டையை ஆட்டி,

“நான் போயிட்டு வரேன் அஜய்… இனிமே நீங்க ஆபீஸ் வரும்போது தான் பார்க்க முடியும்… ஜாக்கிரதை… இப்படி எல்லாம் பட்டுன்னு எழுந்து வராதீங்க… கால் ஸ்லிப் ஆகிடப் போகுது…” என்று கூறியவள்,

“இன்னைக்கும் ஃபர்ஸ்ட் காலரா நீங்க தானே பேசுவீங்க? நான் ஷோவுக்கு பேசப்போறதுக்கு முன்ன உங்களுக்கு மிஸ்ட் கால் தரேன்…” தன்னிடம் எப்பொழுதும் முதல் காலராக பேசுவது அஜய் தான் என்ற உற்சாகத்தில், அவள் திட்டமிட, அஜய் சிரிப்பதைப் பார்த்து, ‘போங்க…’ என்ற சிணுங்கலுடன், மனமே இல்லாமல் அவனிடம் இருந்து விடைப்பெற்று, கிளம்பிச் சென்றாள்.

அவள் சென்றதும் தான், ஒற்றைக் காலில் ஊனி நின்றதின் வலி தெரிய, அஜய் மெல்ல சோபாவில் அமர, கண்ணம்மா செல்வதைப் பார்த்து, கார்த்திக் உள்ளே வந்தான். அஜய்யின் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து, சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தவன், அவனை கிண்டல் செய்யும் பணியைத் தொடர்ந்தான்.

வீட்டிற்கு வந்த ராதா… “கோவில்ல நல்ல கூட்டம் அஜ்ஜூ… அப்படியே நீ ப்ரெட்டைக் கேட்டன்னு வாங்கிட்டு வர சூப்பர் மார்கெட்டுக்கு போனா… உன் மருமகன் அங்க ஓடி இங்க ஓடி… அதை எடுத்து இதை எடுத்து…. சமாளிக்கிறதுக்குள்ள போதும்ன்னு ஆகிடுச்சு… அப்படியே உன் கல்யாணத்துக்கு தகுந்த பொண்ணு பார்க்கச் சொல்லி, அந்த அய்யர்கிட்டயே சொல்லிட்டு வந்தேன்…

அந்த கோவில்லையே ஜாதக பரிவர்த்தனை கூட செய்யறாங்களாம்… கும்பல் அதிகமா இருந்ததுனால என்னால பேச முடியல… நாளைக்கு வாங்க சொல்றேன்னு சொல்லி இருக்கார்… நாளைக்கு போகணும்… சீக்கிரமே உனக்கு நல்ல பொண்ணா வரணும்னு வேண்டிக்கிட்டு வந்திருக்கேன்…” ராதா படபடவென்று பேசிக் கொண்டே போக, அவரது அந்த ‘நல்ல பெண்’ணில் இருந்த கூடுதல் அழுத்தம் அஜய்க்கு புரியவே செய்தது…  

கையில் இருந்த பிரசாத பொட்டலத்தைப் பிரித்தவர், அவனது நெற்றியில் விபூதி வைக்கப் போக, அப்பொழுது தான் அவனது நெற்றியில் இருந்த வீபூதியைக் கண்டவர், “அஜய்.. இதை யாரு வச்சி விட்டா…?” சந்தேகமாக அவர் கேட்க,

“நான்தாம்மா வச்சு விட்டேன்… வெளிய  நின்னு பக்கத்துக்கு வீட்டு அங்கிள் கூட பேசிட்டு இருந்த போது, ஆன்ட்டி கோவிலுக்கு போயிட்டு வந்தேன்னு பிரசாதத்தை கொடுத்தாங்க… அதை கொண்டு வந்து வச்சு விட்டேன்…” கார்த்திக் அபயக் கரம் நீட்ட, அஜயும் ‘ஆம்’ என்று குற்ற உணர்வுடன் தலையசைக்க,

“நல்லதுடா… பாரு… இன்னைக்கு எல்லாமே நல்லதாவே நடக்குது… சீக்கிரமே கல்யாணம் கூடி வரப் போகுது…” என்று சொன்னவரின் கண்கள் அஜயை ஆழ்ந்து நோக்கியது…

அஜய் அமைதியாகவே இருக்கவும், “நாளைக்கு அப்பா ஊருல இருந்து இங்க வராராம் அஜய்…. ரிசைன் பண்ணிட்டு இங்கேயே இருக்க வராங்க… அங்க ஆளுங்களை வச்சே சாமானையெல்லாம் பேக் பண்ணிக்கிட்டு இருக்காங்க…” சமையல் அறையில் இருந்துக் கொண்டு அவர் சொல்லவும், விஜய், கார்த்திக் இருவரும் அஜயைப் பார்க்க, அஜயின் முகமோ வாட்டம் கண்டது.

அத்தனை நேரம் இருந்த முகத்தின் பொலிவு மங்கிப் போக, அதை தவறாக யூகித்த அனுபமா, “இந்த தடவையும் அப்பா உன்னை கட்டாயப்படுத்தி எவளையாவது கல்யாணம் செய்து வச்சிடுவாருன்னு பயப்படறியா அஜய்… போன தரவையே நீ எவ்வளவோ சொன்ன… அப்பா தான் கேட்கல… இப்போ அந்த மாதிரி செய்ய மாட்டாங்க… அவங்களும் அதனால நிறையவே அனுப்பவிச்சிட்டாங்க…” அவள் அவனை சமாதானப்படுத்தவும், அஜய் ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டான்.

“எனக்கு கல்யாணம் எல்லாம் ஒண்ணும் வேண்டாம்…” அஜய் மெல்ல முணுமுணுக்க, அவனைப் பார்த்த விஜய்க்கும் கார்த்திக்கிற்கும் சிரிப்பு பொங்கியது…

அவர்களை கண்களால் அடக்கியவன், “அம்மா… எனக்கு இன்னும் ஒரு மாசம் டைம் வேணும்… என் உடம்பு கொஞ்சம் சரியா போகட்டும்… அது வரை என்னோட கல்யாணத்தை பத்தி யாரும் பேசக் கூடாது… அப்பா வந்தாலும் சொல்லிடு… நான் ஆபீஸுக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்பறம் அதைப் பத்தி பேசலாம்… ஏற்கனவே உடம்பு வலி தாங்கல… இதுல நீங்களும் கல்யாணம்ன்னு டார்ச்சர் செய்து, மண்டையில ஏற்பட்டு கிராக்கை பெருசு பண்ணி என்னை பைத்தியமா அலைய விடாதீங்க… எனக்கு சண்டைப் போடக் கூட தெம்பில்ல…” ஒருமாதிரிக் குரலில் சொன்னவன், வாக்கரின் உதவியுடன் எழ, விஜய் அவனைப் பிடிக்கப் போக,

“நீங்களும் கொஞ்சம் சொல்லி வைங்க அத்தான்…. அப்பா வந்தப்புறம் மறுபடியும்   சண்டை ஏதாச்சும் போடப் போறாங்க…”  எரிச்சலாக சொல்லிக் கொண்டே, அவனோடு நடந்து, அறைக்கு வந்தவன், கட்டிலில் கால் நீட்டி அமர்ந்தான்.

“என்னடா… எல்லாமே ஓகே தானே.. ஒண்ணும் பிரச்சனை இல்லையே… அவளைப் பார்த்து வெறுப்பு… கோபம் இப்படி….” விஜய் சந்தேகமாகக் கேட்கவும்,

“ம்ம்… எல்லாம் ஓகே தான் அத்தான்… இப்படி பண்ணிட்டாளேன்னு கொஞ்சம் வருத்தம் இருந்தது… அது அப்பப்போ தலை காட்டிச்சு…சமாளிக்க ட்ரை பண்ணினேன்… போகப் போக சரியா போயிடும்ன்னு நினைக்கிறேன்..” அஜய் சொல்லவும்,

“ஹ்ம்ம்… இந்த சின்ன விஷயத்தை உன்கிட்ட பேசி சரி பண்ணாம… யாரோட பேச்சையோ கேட்டு அவளா என்ன என்னவோ செய்துட்டா… நீயும் கோபமா இருந்தாலும்… உனக்குள்ள அவ மேல அப்போவே பாசம் இருந்து இருக்கு போல… இப்போ நீ அவ மேலேயே காதல்ன்னு வந்து நிக்கற… வீட்ல உங்க அப்பா அம்மா என்ன செய்யப் போறாங்களோ? அவங்களை சமாளிக்கிறதே ஒரு பெரிய கஷ்டம் தானே…” விஜய்க்கும் கவலையாகவே இருந்தது…

“கஷ்டம் தான் அத்தான்…. மொதல்ல, அம்மாவை மட்டும் ஈஸியா சரி கட்டிடலாம்ன்னு பார்த்தேன்… இப்போ ஸ்ரீனியும்  தொபுக்குன்னு வந்து பிக்சர்ல குதிக்கிறார்… அவரோட சேர்ந்துட்டா, இந்த ராதாவும் லேடி டானா இல்ல மாறிடுவாங்க… அவங்களை சொல்லியும் குத்தமில்ல.. இவ செய்த காரியத்துக்கு, அவளை நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கப் போறாங்க… அவளே தான் அவங்களை சமாளிக்கணும்…

எனக்கு நிஜமாவே இப்போ இவங்க கூட போராட தெம்பில்ல அத்தான்… கொஞ்சம் உடம்பு சரி ஆகட்டும்… அப்பறம் பேசலாம்… அதுவரை நானும் கொஞ்சம் லவ் பண்ணிக்கிட்டு சுத்தறேனே…” அஜய் அயர்ச்சியாகவும், இறுதியில் குறும்பாகவும் சொல்ல, விஜய் அவனது தோளைத் தட்ட, அஜய் ‘ஆ’ என்று அலறினான்.

“டேய்… சத்தம் போடதே…” என்றவன், அவசரமாக அவன் அருகே இருந்த தண்ணீரை எடுத்து அஜயின் ஷர்ட்டில் கொட்டவும், ‘அத்தான்’ அஜய் திடுக்கிட,

“உன்னோட ஷர்ட்ல குங்குமக்கறை.. நல்லவேளையா இதுவரை  உங்க அம்மாவும், தங்கையும் கவனிக்கல… இப்போ நீ கத்தி ஊரை கூட்டினா… இதுவரை கண்ணுல படாத கறை,  இப்போ பட்டு எல்லாருமே மாட்டிக்கிட்டு முழிக்கலாம்…  இப்போ பாரு, நீ  கத்தி வச்சதுல, அவங்க வராங்க… சமாளி…” விஜய் ஐடியா கொடுக்க, தனது சட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டவன்,

“என்னாச்சு…” என்று ராதாவும், அனுபமாவும் ஓடி வரவும், விஜய், அஜயின் சட்டையை கழட்ட உதவிக் கொண்டே,

“நான் வாயில தண்ணிய ஊத்தறேன்னு சொன்னேன்… இல்ல… நானே தான் குடிப்பேன்னு அடம் பண்ணி குனிஞ்சு எடுத்து குடிச்சான்.. அது கொட்டிப் போச்சு….” என்று விஜய் கூறினான்.

“பார்த்துடா… மெல்ல செய்யலாம் இல்ல… எல்லாத்துலையும் அவசரம்…” என்று புலம்பிய படி, ராதா வெளியில் செல்ல, அனுபமா அஜயைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

“என்ன அனும்மா… போய் அத்தைக்கு ஏதாவது உதவி செய்…” விஜய் அங்கிருந்து அவளை அனுப்ப முயல, அனுபமா அஜயை நெருங்கினாள்.

சிறிது தயக்கத்துடன், “அஜய்… நீ பேசாம இப்போ இருக்கற வேலையை ரிசைன் பண்ணிடேன்… எதுக்கு அவளை தினம் தினம் பார்த்துக்கிட்டு இருக்கணும்?? அதே போல அந்த fmக்கு பேசறதையும் நிறுத்திடு… அவ கூட உனக்கு என்ன பேச்சு?…” அனுபமா கேட்கவும்,

அவளது நியாயம் புரிந்தாலும், பட்டென்று “அது ஆபீஸ் வேலை அனு… அதுல யாரும் தலையிடறது எனக்குப் பிடிக்காது… அதுவும் தவிர அவ எனக்கு எதிரி இல்ல… fmக்கு பேசறது என்னோட விருப்பம்…” அஜயின் குரலில் இருந்த அழுத்தம், ‘அதில் எல்லாம் நீ தலையிடாதே’ என்பதை சொல்லாமல் சொல்ல, அனுபமா திகைத்துப் போனாள்.

கண்ணம்மாவின் விஷயத்தில், அஜய் இவ்வளவு தீர்மானமாக ஒன்றை சொல்லுவான் என்று அனுபமா எதிர்ப்பார்க்காமல் திகைக்க, “சாரி அனு.. ஆனா… ப்ளீஸ்… என்னையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்களேன்…” என்ற அஜய் கண்களை மூடிக் கொள்ளவும், அனுபமா அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே வெளியே சென்றாள்.     

அனுபமா வருந்துவது பிடிக்காத விஜய், “அஜய்… ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற? அவங்க காயம் அவங்களுக்கு… உனக்கு அவ மேலே காதல் வந்ததும், பழைய காயங்களை எல்லாம், நீ மறக்க முயற்சி பண்ணலாம்… அவங்களும் உடனே அதை செய்யணும்னு நீ எதிர்ப்பார்க்கறது தப்பு…” அவனை சமாதானப்படுத்தவும்,

“எனக்கு இவங்களையும் விட்டுத் தர முடியல அத்தான்… அவளையும்… எனக்கு என்ன செய்யறதுன்னே புரியல…” அஜய் தலையில் கை வைத்துக் கொள்ள, விஜய்க்கு அவனது நிலை நன்றாகவே புரிந்தது.

“அவ செய்ததும் சாதாரணமான விஷயமா அஜய்… அவ தான் இனிமே இவங்களை  சமாதானப்படுத்தறதுக்கான முதல் அடியை எடுத்து வைக்கணும்…” விஜய் சொல்வதும் சரியாகப்பட, அஜய் அமைதியானான்.

“சரிடா… நீ ரெஸ்ட் எடு…” விஜய் விலகிச் செல்ல நினைக்க, “ஏன் அத்தான்?” என்ற அஜயின் குரல் அவனை நிறுத்தியது.

“என்ன அஜய்?” விஜய் புரியாமல் கேட்க,

“இல்ல… கண்ணம்மா தான் கண்மணின்னு மொதல்லயே என்கிட்டே சொல்லாம, வேற ஒரு பொண்ணை கொண்டு வந்து என் முன்ன நிறுத்தினீங்க? அழகுன்னா நான் மயங்கிடுவேன்னா? அதுவும் வேற ஒருத்தரை விரும்பற பெண்ணைப் போய்… என்னைப் பத்தி அவ்வளவு மட்டமாவா நினைச்சிட்டு இருக்கீங்க?” அஜய் வருத்தம் இழையோடக் கேட்க, விஜய் ஒரு புன்சிரிப்புடன் அவன் அருகே அமர்ந்தான்.

“என் மச்சான் மேல ஒரு சின்ன டவுட் இருந்தது… அதுக்குத் தான்… மொதல்ல கண்ணம்மா தான் கண்மணின்னு சொன்னா… நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு எனக்கு எப்படித் தெரியும்? அதுவும், அவ உன் டீம்ல தான் வேலை செய்யறான்னு நீ அதுவரை சொல்லவே இல்ல… அதை நான் எப்படி எடுத்துக்கறது?

அப்பறம் கல்யாணம் ஆன புதுசுல நீ ஒரு ரெண்டு மூணு தரவ, அவளை, கலர் கம்மி, அப்பறம் உன் பெர்சனாலிட்டிக்கு அவ தகுந்தவளான்னு எல்லாம் கேட்டு இருக்க… அதனால…” விஜய் இழுக்க,

“அதனால…”

“அதனால… ஒருவேளை நீ நல்ல அழகான பெண்ணை தான் கல்யாணம் செய்துக்கணும்னு விரும்பறியோன்னு ஒரு சின்ன உறுத்தல் இருந்தது…  அதனாலதான் நான் கொஞ்சம் சோதிச்சு பார்த்தேன்…” விஜய் சொல்லிக் கொண்டே வரவும், அஜய் அவனை முறைத்தான்.

“சின்ன உறுத்தல் தாண்டா… உன் மேல இருந்த நம்பிக்கையினால தானே நான் என் பிரெண்ட்டோட ஆளை உனக்கு முன்னால கொண்டு வந்து நிறுத்தினேன்… முதல் நாளே… எங்க அஜய் தங்கம்ன்னு நிரூபிச்சடா என் மச்சான்… அவளைப் பார்த்து ஈஈன்னு நிக்காம… இன்டெரெஸ்ட்டே இல்லாம…. பேசாம கிளம்பின பாரு… சபாஷ்டா ராஜான்னு உடனே  உனக்கு நான் பாராட்டு பத்திரம் கொடுத்தேன் தெரியுமா?

அப்பறம் அவளை ஒரு வாரம் மெசேஜ் செய்துப்பாருன்னு சொன்னேன்… உன்கிட்ட இருந்து ரொம்ப ஃபார்மலா தான் ரெஸ்பான்ஸ் வருதுன்னு காட்டினா… அப்பறம் மால்ல நீ உண்மைய கண்டுப்பிடிச்சது ஒரு புறம் அவளுக்கு பயத்தை கொடுத்தது.. அதுவும் நீ கண்ணம்மாவோட பேசிட்டு வரதையும், கண்ணம்மா அவளை கேள்வியா, பரிதாபமா பார்த்துட்டு போறதையும் பார்த்து… அவ, ‘என்னால இதுக்கும் மேல நடிக்க முடியாது’ன்னு சொல்லி… என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தா… அப்பறம் தான் நீ சினிமா முடிஞ்சு கண்ணம்மா கூட சிரிச்சு பேசிட்டே வந்தியா…. எனக்கு மயக்கம் வராத குறை தான் அஜய்…

அவ உனக்கு ஏற்படுத்தின அவமானம் கொஞ்ச நஞ்சம் இல்ல தான்… ஆனா… மறுபடியும் நீ எப்படி அவளோட சகஜமா இருப்பன்னு புரியவே இல்ல… அன்னிக்கு நீ பேசிட்டு வரதைப் பார்த்துத்தான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு… ‘இனிமே அஜய் கிட்ட தைரியமா பேசு’ன்னு நான் அவகிட்ட சொன்னா..

அவ பிரெண்ட் சுவாதியாம்…. அவகிட்ட இவ எல்லாத்தையும் சொல்லி இருப்பா போல… அவளும் இவளைத் திட்டி… ‘இனிமே எல்லாத்தையும் சரி பண்ணு… இப்படி நீ அழு மூஞ்சியா இருந்தா அவனுக்கு எப்படி பிடிக்கும்? தைரியமா அவன் கிட்ட போய் பேசு… நீ என்ன அவனை பேச விட்டு வேடிக்கைப் பார்க்கற? என்ன உனக்கு நினைப்புன்னு போய் கேட்டு வா’ன்னு அனுப்பினது… அவ உன்னை கலாய்ச்சது எல்லாம் சொன்னா… நீ இன்னும் அவளோட பர்த்டே கிஃப்ட்டை பிரிச்சுப் பார்க்கவே இல்லையாமே…” விஜய் சொல்லவும், பல கேள்விகளுக்கான விடை கிடைத்த நிம்மதியில் அஜய் விஜயைப் பார்த்தான்.

“ஹ்ம்ம்.. ஆமா அத்தான்… அதுவும் அவ கிஃப்ட்டை கொடுத்துட்டு ஒருமாதிரியா, உங்க பிரெண்ட்… அந்த பொண்ணு கொடுத்த பொக்கேவைப் பார்த்தாளா? அதனால என் மேல ஏற்பட்ட சந்தேகமான்னு எனக்கு கொஞ்சம் கோபம் வந்துச்சு… அது தான் அவகிட்ட ஒரு மாதிரியா சொல்லிட்டு உள்ள வச்சிட்டேன்… அப்பறம் என்னவோ அதை எடுத்து பிரிக்கவே இல்ல…” அஜய் விளக்கம் சொல்லி,   

“அவ என்ன கொடுத்திருக்கான்னு பார்க்கணும்… அங்க இருக்கு… எடுத்துட்டு வாங்க அத்தான்…” என்று அவன் காட்டிய இடத்தில் இருந்து அஜய் எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆவலே வடிவாக அஜய் பிரிக்க, அதில் இருந்த இரண்டு அழகிய டால்பின்கள் ஒன்றொரு ஒன்று பிணைந்து, அதன் மூக்கின் நுனியில் இதயத்தை பிடித்துக் கொண்டிருப்பது போல இருந்த ஒரு கிரிஸ்டல் பொம்மை… சிறியதே ஆனாலும், அதன் வேலைப்பாடும்… அந்த இதயத்தில் அழகாக, ‘அஜய், கண்ணம்மா’… என்று எழுதி இருந்ததையும் பார்த்தவனின் இதழில் புன்னகை விரிந்தது.

“இதை அன்னிக்கே பார்க்காம போயிட்டேனே அத்தான்…” அஜய் குறைபட,

“எனக்குத் தெரிஞ்சு, அன்னிக்கு மட்டும்  நீ இதைப் பார்த்திருந்த, இது மொத்தமும் சுக்கல் நூறா போயிருக்கும்… சார்க்கு தான் லவ்ல எல்லாம் விருப்பமே இல்லையே…” விஜய் அவனை கிண்டல் செய்ய, அஜய் விஜயை முறைக்க முயன்று தோற்று புன்னகைத்தான்.

அந்த நேரம் அறைக்கு வெளியே, “அந்த பிசாசு… ஆறே மாசத்துல நல்ல பொண்ணு மாதிரி நடிச்சு நம்ம அஜய் மனசையே இப்படி குளிர வச்சிருக்கா பாரேன்… மறக்குமா.. என் பிள்ளைய போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் உட்கார்த்தி வச்சவள எனக்கு எப்படி மறக்கும்?” கண்ணம்மா செய்ததை சொல்லிச் சொல்லி, ராதா புலம்பிப் கொண்டிருக்க, அனுபமாவும் கூட சேர்ந்து கொள்ள, அதை எல்லாம் அறையில் இருந்தபடியே கேட்ட கார்த்திக், அதிர்ச்சியுடன் அஜயைப் பார்க்க, அஜய் அவனை சங்கடமாகப் பார்த்தான்.

கண்ணம்மாவா இப்படி செய்தது… அதை அதிர்ச்சியுடன் நினைத்து,

“அவ மேல கோபமே இல்லையா அஜய்… நீ கோபப்படும் போது கூட ஏன் இவன் இப்படி திட்டறான்னு யோசிச்சு இருக்கேன்… ஆனா… இப்படி எல்லாம்??” கார்த்திக் இழுக்க,

“அவ சின்ன பொண்ணு கார்த்திக்… தெரியாம செய்துட்டா… இந்த ஆறு மாசமா அவ நடந்துக்கற விதம்.. அவ என்னைப் பார்த்தாலே பயப்படறது எல்லாமே அவளோட நிஜமான முகத்தை தானே காட்டுது… ஒருத்தரால… அதுவும் கூடவே இருக்கற நேரம் முழுதும்… அதுவும் ஆறு மாசமா  எல்லாம் நடிக்க முடியாதுடா… எதோ ஒரு நேரத்துல உண்மையான முகம் வெளிய வந்துடும்… அவ நம்ம ஆபீஸ்க்கு வந்த நாள் முதலா இப்படியே தானே இருக்கா…”

“எப்படி?”

“ஹ்ம்ம்… அமைதியா… பயந்த பொண்ணா… அப்படி…” என்றவன் தொடர்ந்து, 

“அப்போ இது தானே அவளோட உண்மையான முகம்… என் மனசுல எங்கயோ ஒரு மூலையில இருந்த, ‘அவ என் மனைவி’ங்கற நினைப்பு மட்டும்தான்…  இப்போ நடந்துக்கற அவளோட செயல்களால… என்னை முழுசா அவகிட்ட சாச்சிருக்கு…” அஜய் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, கண்ணம்மாவிடம் இருந்து போன் வந்தது…

‘மேடமோட கால்… கொஞ்சம் வெயிட் பண்ணு…’ என்றவன், உடனேயே போனை எடுத்தவன், “ஹாய் கண்மணி… நான் ஜெய் பேசறேன்… நீங்க இன்னைக்கு டிவி நிகழ்ச்சியில பேசினது ரொம்ப நல்லா இருந்தது…” அஜய் சிரிப்புடன் சொல்ல,

“அடப்பாவிங்களா… வீட்ல ஒரு மணி நேரமா கடலைப் போட்டது பத்தாதுன்னு போன் பண்ணி வேறயா?” கார்த்திக் புலம்ப, விஜய் சிரிக்க, அப்பொழுது அறைக்கு வந்த அனுபமா, அவன் கண்மணியிடம் போனில் பேசுவதைக் கேட்டு. அஜயை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளது முறைப்பைப் பார்த்த அஜய்க்கு, தான் இவர்களை எல்லாம் எப்படி சமாளிக்க போகிறோம் என்ற அச்சமே மேலெழும்பியது…

சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைந்த கண்ணம்மாவை வரவேற்றது மீனாவின் புன்னகை முகம்…

“என்னம்மா… இன்னக்கு என்ன விசேஷம்…” கண்ணம்மா அவர் கப்பில் ஊற்றி வைத்திருந்த பாயசத்தை எடுத்துக் கொண்டே கேட்க,

“ஹ்ம்ம்.. உனக்கு அதுவே மறந்து போச்சா… இன்னைக்கு ஆயுத பூஜைடி… அதுவும் இல்லாம… நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க கண்ணம்மா.. வர பையனும், அவங்களோட முதல்  மனைவி சரி இல்லாம டிவோர்ஸ் பண்ணிட்டாராம்… குழந்தை எதுவும் இல்ல…

நீ கல்யாண வாழ்க்கைன்னு ஒண்ணையும் வாழலைனாலும்.. ஒருத்தன் கூட கல்யாணம் ஆகிடுச்சே… பையன் நல்ல லட்சணமா… அமெரிக்காவுல இருக்கான்…” மீனா சொல்லவும், பாயச கப்பை அப்படியே வைத்தவள், ஒரு பெருமூச்சை இழுத்து வெளியிட்டு, “அம்மா… அப்பா…” என்று ஹாலிற்கு சென்று கத்தினாள்.

“ஏண்டி… நான் உன்கூட தானே பேசிட்டு இருந்தேன்… அங்க இருந்து இங்க வந்து கத்தற?” கேட்டபடி வந்த மீனாவும்,

“என்னம்மா? என்ன விஷயம்…” என்று வந்த சுப்புவும், அவருடன் அமைதியாகவே, எதையோ எதிர்ப்பார்த்து வந்த கயலையும் ஒரு முறைப் பார்த்தவள், “நாளைக்கு என்னை யாரும் பெண் பார்க்க வர வேண்டாம்… ஏன்னா நான் ஒருத்தரை விரும்பறேன்… அவரைத் தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்…” கண்ணம்மா அறிவிக்க, கயல் அவளைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தினாள்.

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

9 COMMENTS

  1. Ud sema sis. Nanga ketka nenaicha qus romba azhaga ans sonninga aj & vijay mulama adhu romba super sis?. 2 perum veetula epdi samalika poranganu therilaiye sis?. Sikiram serthu vachitunga sis v r waiting?.

  2. Hi ramya sis,
    Nice update…story romba nalla poguthu sis…. rendu perum enna panna poranga …. especially kannamma epdi samalikka pora….Kannamma first start pannita….eagerly waiting to know.

LEAVE A REPLY