SHARE

தயங்கி நிற்கும் மன்னிப்பு வார்த்தைகள்
எல்லாம்
கஷ்டப்பட்டு பயணப்பட,
இதற்கு மேல் முடியாமல்
என்னை முழுதும்
உன்னில் தொலைத்து விட்டு
மீட்டெடுக்க தேவையின்றி
முழுவதுமாய் உன்னில்
தஞ்சம் அடைகிறேன் !!

 

கண்ணம்மா அவனது நெற்றிக் கட்டை வருடவும், அஜயின் கண்கள் அவளது முகத்தையே வெறித்துக் கொண்டிருந்தது… எப்பொழுதும் கோபமோ, கிண்டலோ போட்டிப் போட்டுக் கொண்டு காட்டும் அந்த விழிகளில், எந்த சலனமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தவளுக்கு, அந்தப் பார்வையின் பொருள் புரிந்துத் தான் இருந்தது…

அதற்கு சாட்சி தான் கண் முன்னே தொகுப்பாக காட்சியளிக்கிறதே… தான் செய்தது மன்னிக்கக் கூடியதா? அஜய் மீது தனக்கு என்ன உரிமை இருக்கிறது? நினைத்த நிமிடம் நெஞ்சை அடைத்துக் கொண்டு பெரும் கேவல் ஒன்று அவளிடம் இருந்து வெளிவந்தது…

அதனைத் தொடர்ந்து, அவளது தவறுகளை கண்ணீரிலேயே கழுவுபவள் போல கண்ணம்மா அழத் தொடங்கினாள். அவளது மனநிலை புரிந்தவன் போல அஜய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்… அவள் அலுவலகம் வந்த நாட்களில் இருந்தே அவளது கண்களில் தெரிந்த ஏக்கத்தையும், வருத்தத்தையும் புரிந்தவன் தானே அவன்…

இத்தனை அன்பை தன் மீது வைத்துக் கொண்டு அப்பொழுது ஏன் அப்படி நடந்தாள்?? மது தந்த போதையில், அவளது உளறலின் படி, படிக்க வேண்டும் என்பது தான் முக்கிய காரணமா? இல்லை வேறேதாவது இருக்குமா? அதைக் கேட்டே ஆக வேண்டும் போல மண்டை குடைந்தது…

“என்னை மன்னிச்சிருங்க அஜய்… நான் செய்தது தப்புன்னு கூட சொல்ல முடியாது… துரோகம்… நம்பிக்கை துரோகம்… உங்களுக்கு… அத்தை மாமாவுக்கு… எங்க அப்பா அம்மாவுக்கு… விஜய் அண்ணாவுக்கு எல்லாருக்குமே நான் துரோகம் பண்ணிட்டேன்… நான் எல்லாம் மனுஷ பிறவியே இல்ல… சாத்தான்…” என்று முகத்தில் அடித்துக் கொண்டு அழுதவளை, காணப் பொறுக்காமல், அஜய் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவனது அந்த செயலில் திகைத்தவள், மலங்க விழித்தபடி அவனது முகத்தைப் பார்க்க, கண்களில் இறங்கிக் கொண்டிருந்த கண்ணீரை, அவளது கன்னத்தில் கோடிழுந்தவன், “எனக்கு யாருமே அழுதா பிடிக்காது கண்ணம்மா…” என்று சொல்லவும், அந்த வார்த்தை அவளது கண்ணீரை அதிகப்படுத்த, அவனது மார்பிலேயே சாய்ந்து அழுதாள்.  

“அழாதன்னு சொல்றேன் இல்ல..” சிறிது கண்டிப்புடன் சொன்னவன், அவளது கண்களைத் துடைத்து விட்டான்.

“என் மேல உங்களுக்கு கோபம் போயிருச்சா? என்னை நீங்க வெறுக்கவே இல்லையா? அப்படி திட்டினீங்க தானே… இப்போ இதெல்லாம் நியாபகம் வந்தும் கோபமே படாம பேசறீங்க?” விசும்பலுடன் ஆச்சரியமாக அவள் கேட்க, அஜய் அவளது தலையை வருடினான்.

“கோபம் முழுசா போச்சுன்னு சொல்ல முடியாது தான்… ஆனா… முன்ன அளவு கோபம் இல்ல…” அஜய் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல,

“அப்போ கோபம் இருக்கா… இல்லையா?” கண்ணம்மா புரியாமல் கேட்டாள்.

“இருக்கு… ஆனா இல்ல…”

“அப்படின்னா?” அவள் மீண்டும் புரியாமல் இழுக்கவும்,

“அது எப்படின்னா… அன்னைக்கு அத்தான், ‘நீ இல்லாம என்னால இருக்க முடியுமா? இருந்தா உன்னோட தப்பை எல்லாம் சுட்டிக்காட்டாம வாழ்க்கை நடத்த முடியுமா? என்னோட கசப்பான அனுபவங்களை மறந்து உன் கூட சந்தோஷமா இருக்க முடியுமா..? இதெல்லாம் கொஞ்சம் யோசி தம்பி… அப்பறம் உன்னோட லவ் எவ்வளவு தூரம்ன்னு யோசின்னு…’ கொஞ்சம் என் மைன்ட்ட தட்டி விட்டாங்க…

அப்போ கொஞ்சம் யோசிச்சேன்… முன்னையும் பலமுறை என் கோபத்தை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு யோசிச்ச போது, உனக்கு படிக்கணும்ங்கற எண்ணம் அதிகம் இருந்ததுன்னு புரிஞ்சது… நான் கோபம் படும்போது உன்னோட பயம்.. நீ இயற்கையிலேயே மென்மையானவ… ஏதோ புரியாம செய்யறேங்கற மாதிரி தோணிச்சு… ஆனா… நான் பட்ட அவமானகள் அதுக்கும் மேல அப்போ என்னை யோசிக்க விடல…  

ஆனா இப்போ… என்னால உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதுன்னு தோணிச்சு… என் கோபம் எல்லாம் பின்னுக்கு போச்சு…” அஜய் சிறு சிரிப்புடன் சொல்லவும், கண்ணம்மா அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.

“என்ன மேடம்… இப்படி டவுட்டா பார்க்கறீங்க?” அவன் கேட்கவும்,

“போன வாரம் கூட எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு தொலைஞ்சு போன்னு திட்டினீங்க தானே…” கண்ணம்மா கேட்கவும், அஜய் சத்தமாக சிரித்து, தான் யூகித்ததையும், அதனால் தனக்கு விளைந்த கோபத்தையும் சொல்ல, கண்ணம்மா அவனை முறைத்தாள்.  

“உங்களைத் தவிர என்னால எப்படி வேற யாரையோ ஏத்துக்க முடியும்? நான் தான் உங்களை அப்போ இருந்தே விரும்பறேனே…” நாணத்துடன் அவனுக்கு முகம் காட்டாமல், சொன்னவளின் குரலில் கண்ணீர் இருந்ததோ??

“என்ன கண்ணம்மா சொல்ற? எப்போ இருந்து?” அஜய் குழப்பமாகக் கேட்க,

“அது…. அந்த பிராடு பிருந்தா சரியான புளுகு மூட்டைன்னு தெரிஞ்ச நிமிஷமே எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அந்த நிமிஷம் தான் நான் இழந்தது எவ்வளவு பெருசுன்னு எனக்கு புரிஞ்சது… அப்போவே உங்களை பார்க்கணும்… உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னு தோணிச்சு…

உடனே விஜய் அண்ணாகிட்ட வந்து மன்னிப்பு கேட்டு உங்களை எப்படியாவது பார்க்கணும்னு பஸ்சும் ஏறிட்டேன்… ஆனா.. என் நேரம் அப்பாவும் அதே பஸ்ல இருந்தாங்களா… என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க…

தினம் தினம் உங்க நினைப்பு என்னை கொல்லும்… ஆனா.. நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னு அப்பா சொன்னாங்க…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“நடுவுல… கோர்ட் பேப்பர்ல சைன் எங்க இருந்து வந்தது?” அஜய் மனத்தாங்கலுடன் நக்கலாகக் கேட்டான்.

“அது… நான் செய்த தப்புக்கு எல்லாம் பிரயாசித்தமா… நீங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் சைன் பண்ணினேன்… கோர்ட்ல உங்களை பார்க்கும் போது எல்லாம்.. என் கூட பேச மாட்டீங்களா? இந்த டிவோர்ஸ் வேண்டாம்… என் கூட வந்திருன்னு கூப்பிட மாட்டீங்களான்னு உள்ளுக்குள்ள என் மனசு ஏங்க தான் செய்தது… ஆனா… நீங்க தான் என் முகத்தைப் பார்க்கக் கூட முடியாத அளவு என்னை வெறுத்து இருந்தீங்களே…” மனதில் இருந்ததை அவள் கொட்டித் தீர்க்கும் முடிவோடு அஜயிடம் சொல்ல, சில வினாடிகள் அஜய் மௌனமாகவே கழித்தான்.  

அவனது மௌனம் அவளைக் கொல்ல, மெல்ல நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தவளைக் கண்டவன், “ஏன் இப்படி எல்லாம் செய்த கண்ணம்மா? ஒருவேளை நீ வேற யாரையாவது விரும்பறயோ… நான் தான் நடுவுல வந்து குட்டையைக் குழப்பிட்டேன் போலன்னு கூட ரொம்ப ஃபீல் பண்ணி இருக்கேன்…” அஜய் சொல்லி முடிப்பதற்குள்,

“லவ்வா… அதெல்லாம் யாரையும் நான் பண்ணல… என் மனசுல உங்களைத் தவிர யாரும் இல்ல…” ரோஷமாக சொன்னவளைப் பார்த்து அஜய் சிரித்தான்.

“சிரிக்காதீங்க.. நிஜமா தான் சொல்றேன்… நான் இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நினைச்சு அப்படி பண்ணல… எங்க அப்பா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவார்… ரெண்டு வருஷம் படிப்பு முடிஞ்சதும் உங்க கிட்டயே திரும்பி வந்துடலாம்ன்னு தான் நினைச்சேன்…” உதடு பிதுங்க, அவனது மார்பில் புதைந்தவள்,

“எனக்கு விவரமே போதலை அஜய்… நான் ஒரு ஏமாளி… யாரை நம்பறது… யாரை நம்பக் கூடாதுன்னு புரியாம செய்துட்டேன்… நீங்களும் என்னை மிரட்டவும்… எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு…” என்று கண்ணீர் உகுத்தாள்.

“என்ன கண்ணம்மா.. என்ன சொல்ற நீ? மொதல்ல அழுகைய நிறுத்து…” அஜய் அதட்டவும், அவளது உடலில் நடுக்கம் ஏற்பட, அஜய்க்கு முன்பும் அவள் இது போல நடுங்கியது நினைவிற்கு வந்தது…

“எனக்கு தெளிவா சொன்னா தான் எல்லாம் புரியும்… அதுவும் தவிர… என்னால பிராக்ச்சர் ஆன கையால உன்னை எவ்வளவு நேரம் பிடிச்சு இருக்க முடியும்ன்னு நீ நினைக்கிற? வலிக்குதும்மா?” என்று கிண்டல் செய்தவன், அவள் பதறி விலகவும், மற்றொரு கையால் அந்தக் கையை தேய்த்துக் கொடுக்க, அவனது கையை மெல்ல தன் கையில் எடுத்துக் கொண்டவள், மென்மையாக பிடித்து விட்டாள்.

“நீங்க தான் மொதல்ல இழுத்தீங்க….” நாணத்துடன் தலை குனிந்து சொன்னவளின் முகத்தை நிமிர்த்தியவன்,

“ஆமா… நான் தான் கையைப் பிடிச்சு இழுத்தேன்… அதுக்கு என்னங்கற?” அஜய் கேட்டு சிரித்தான்.

“உங்களை..” என்று சிணுங்கியவள், “மணியாச்சுங்க… நான் கிளம்பறேன்…” அவள் சொல்லவும் தான் இருக்கும் சூழல் நினைவு வர,

“ஆமா… நீ எப்படி இவ்வளவு தைரியமா இங்க நம்ம வீட்டுக்கு வந்த? அட்ரஸ் எப்படித் தெரியும்? அம்மா இருந்திருந்தா என்ன ஆகறது?” அஜய் கேட்கவும்,

“அதெல்லாம் பிளான் பண்ணித் தான் அண்ணா அத்தையை வெளிய கூட்டிட்டு போனாங்க… அண்ணி இருந்தாலும் எனக்கு அடி கிடைச்சாலும் கிடைக்கும்ன்னு தான் அவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போனாங்க…” அவனது முகம் பார்க்காமல் சொன்னவளைப் பார்த்து சிரித்தவன்,

“என்னைப் பார்த்து பயம் இல்லையா?” என்று கேட்டான்.

“ஹையோ… சிங்கக் குகைக்குள்ள போகும் போது நீங்க கூட இருந்தா நல்லா இருக்கும் அண்ணா… ப்ளீஸ் அவங்களை மட்டும் அனுப்புங்க… நீங்க வீட்ல இருங்கன்னு எவ்வளவோ கெஞ்சினேன்… எங்க?? மனுஷன் அசஞ்சு கொடுக்கலையே…” கண்ணம்மா உதட்டைப் பிதுக்க,

“என்கிட்டே…. உனக்கு பயம்… அப்படியா?” நக்கலாக அஜய் கேட்டான்.

“பின்ன பயம் இல்லையா? உங்ககிட்ட பேச எனக்கு நாக்கு ஒட்டிக்கும்… மொதல்ல இருந்தே… கஷ்டப்பட்டு தான் நானே பேசுவேன்… அதுவும் நீங்க கொஞ்சம் குரலை உயர்த்தினாலும், எனக்கு ஹார்ட் வெளிய குதிக்கத் தொடங்கிடும்… அதுவும் உங்களை இந்த ஆபீஸ்ல பார்த்த போது… ‘அடி கன்ஃபார்ம் கண்ணம்மா’ன்னு உள்ளே இருந்தே கூவிச்சு பாருங்க ஒரு குரல்…” கண்ணம்மா சொன்னதைக் கேட்டு சிரித்தவன்,

“நம்பிட்டேன்” என்றான்…

“நம்பினாலும் நம்பலைனாலும் அது தான் உண்மை” என்றவள், பெண் பார்க்க வந்த நாள் முதலாய், தான் நடந்துக் கொண்டதற்கான செயல்களின் காரணத்தைச் சொல்லியவள், “நீங்க பாசமா பேசும்போது எனக்கு அப்படியே மனசுக்கு கஷ்டமா இருக்கும்… ஆனா… எனக்கு படிக்கணும்… அதுக்கு வேற வழி இல்லன்னு நானே என்னை தேத்திப்பேன்… அதுவும் தவிர… நான் உங்க கூடவே இருந்தா… ஏதாவது… ஏதாவது…” சொல்லிக் கொண்டே வந்தவள் இழுக்க, அஜய் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கவும்,

“புரிஞ்சுக்கோங்களேன்…” அவளது குரல் இறைஞ்ச… அஜய் ‘ம்ம்…’ என்று கண்கள் பளபளக்க சிரிப்பை அடக்க, கண்ணம்மாவின் முகம் நாணத்தில் சிவந்து… கன்னம் சூடாக.. தலையை குனிந்துக் கொண்டவள்,

“நான் 12thல எவ்வளவு மார்க் தெரியுமா? 1177… எனக்கு எஞ்சினீரிங் படிக்கணும்னு ரொம்ப ஆசை… மெரிட்ல கிடைச்சா நான் சேர்த்து விடறேன்னு அப்பா சொன்னதுக்காக நான் கஷ்டப்பட்டு படிச்சு சீட்டும் வாங்கி படிச்சா… நடுவுல தாத்தாவுக்கு என் கல்யாணத்தைப் பார்க்கணும்னு ஆசைப் படறார்ன்னு சொன்னா… எனக்கு எப்படி இருக்கும்?”

“எங்க அப்பா உன்னை தொடர்ந்து படிக்கட்டும்ன்னு சொல்லிட்டாங்க இல்ல…” அஜய் சிறிது எரிச்சலாகக் கேட்க,

“ஆமா… சொன்னீங்க.. ஆனா… அந்த பிருந்தா.. ‘அப்படி தான் சொல்லுவாங்க… ஆனா… இன்னும் உனக்கு காலேஜ் திறக்க ரெண்டு மாசத்துக்கும் மேல இருக்கு… அதுக்குள்ள நீ உண்டாகிடுவ… அப்பறம் அதை சாக்கு வச்சு உன்னோட படிப்புக்கு முழுக்கு போட்டுடுவாங்க… அதுக்கு தான் சம்மதிச்சு இருக்காங்க… நல்லவங்க மாதிரி வேஷம் போட எல்லாரும் அப்படித் தான் செய்வாங்க’… அப்படின்னு என்ன என்னவோ சொல்லி, என்னை குழப்பி விட்டுட்டா…

எங்க அம்மாவும் ‘நீ படிச்சு என்ன ஆகப் போகுது… அவரே கை நிறைய சம்பாதிக்கிறார்… குடும்பத்தை கவனி… காசை வேஸ்ட் பண்ணாதேன்னு சொல்லவும்’… என் படிப்பு இதோட முடிஞ்சு போச்சுன்னு தான் எனக்கு தோணிச்சு… நான் சின்ன பொண்ணு தானே… நிஜமாவே எனக்கு வெளி விவகாரங்கள் எல்லாம் தெரியாது… அப்படி தானோன்னு நினைச்சு.. படிப்பு முடியற வரை அம்மா வீட்ல இருக்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சேன்… அதுக்குத் தான் அப்படி எல்லாம் முட்டாள் தனமா செய்துட்டேன்…. என்னை மன்னிச்சிருங்க அஜய்…

போலீஸ் வந்தது எல்லாம் நான் நிஜமா எதிர்ப்பார்க்கவே இல்ல… எனக்கே ஷாக் தான்… அதுவும் இல்லாம, எங்க அப்பா ஸ்டேஷன்ல தாலியைப் பிடுங்கவும், எனக்கு ரொம்ப… ரொம்ப..” என்று கண்ணீர் விடத் துவங்கினாள்.

அந்த நேரத்தின் வலி அவன் முகத்தினில் தெரிய, “எதையோ என்கிட்டே இருந்து பிடுங்கின மாதிரி இருந்தது… ஆனா… அதெல்லாம் யோசிக்க விடாம என்னோட படிப்பு எனக்கு முக்கியமா இருந்தது…” கூனிக் குறுகி அவள் சொல்லவும், அஜய் ஒரு பெருமூச்சுடன் அவளது தலையை தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

அவனது அருகாமைத் தந்த இதத்தில் கண் மூடியவளின், கண்ணீர் அவன் தோளின் மீது வழிய, “அழாதே… விடு… என்கிட்டே ஒரு வார்த்தை பேசி இருக்கலாம்… மொதல்ல எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனாலும்…” அஜய் சொல்லவும், பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவள்,

“நீ சின்னப் பொண்ணு… படிப்பு கெடும்ன்னு தான்… அதுவும் தவிர அப்போ நானும் சின்னப் பையன் தானே… இன்னும் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் பொருத்து கல்யாணம் செய்துக்கலாம்ங்கற எண்ணம்… உன்னைப் பிடிக்காம இல்ல…” என்று விளக்கம் சொன்னவன்,

“நான் உன் படிப்புக்காக ட்ரான்ஸ்பர் கேட்டு இருந்தேன்… அதுவும் உடனே வேணும்னு கேட்டு இருந்தேன்… அப்போ நான் செய்துட்டு இருந்த ப்ராஜெக்ட்ட சென்னைல இருந்தே முடிச்சு கொடுக்கறேன்னு சொல்லி இருந்தேன்… அதனால நீ போன ஒரே வாரத்துல எனக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிருச்சு… நாங்க சென்னை வந்துட்டோம்…” ஒரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தவனை விட்டு மெல்ல விலகியவள்,

“சாரிங்க… நான் பேசி இருக்கணும்… பேசாமையே அவசரப்பட்டு நான் இப்படி எல்லாம் செய்தது என் தப்புத் தான்…” என்றவள், அவனை ஏக்கமாகப் பார்த்தாள்.

“நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு…” அவள் இழுக்க, நினைவு வந்தவனாக,

“ஹே… ஆமா… இங்க வர உனக்கு எப்படி தைரியம் வந்தது?” அஜய் கிண்டல் செய்தான்.

“கிண்டலா… உங்களைப் பார்க்காம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா? தினமும் நீங்க எனக்கு சமாதானம் சொல்றதை நம்பாம, நான் அண்ணாகிட்டயும் கேட்டுக்கிட்டேன்… அவங்க தான் இன்னைக்கு என்னை வர சொல்லி சொன்னாங்க…” என்று வேகமாகச் சொல்லியவள்,

“மறந்தே போயிட்டேன் பாருங்க…” என்றவள் தனது கைப் பையைத் திறந்து, ஒரு வீபூதிப் பொட்டலத்தை பிரித்து அவனது நெற்றியில் வைத்து விட்டாள்.

“அண்ணாவும் தங்கையும் நல்லா தான் பிளான் பண்ணறீங்க…” அஜய் கிண்டலடித்து, விஜய்க்கு அழைத்தான்.

“அத்தான்… நீங்க ரொம்ப நல்லவங்க…” அஜய் கிண்டல் செய்து சிரிக்க, அந்தப் பக்கம் விஜயோ,

“என்னடா அஜய்… ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” சிறிது பதட்டமாகவே கேட்டான்.

“ஒண்ணும் இல்ல… உங்க தங்கை வந்து இருக்கா… நாங்க பேசிட்டு இருக்கோம்… இன்னும் கொஞ்ச நேரம் நீங்க சாமி கும்பிட்டுக்கிட்டே இருங்க…” அஜய் சிரித்துக் கொண்டே சொல்லவும்,

“அடப்பாவி…” என்று முணுமுணுத்த விஜய்,

“என்னடா… சாப்பிட ப்ரெட்.. அப்பறம் வேற ஏதாவது காரமா வேணுமா? சரிடா… நான் அப்படியே கொஞ்சம் காய்கறியும் வாங்கிட்டு வரேன்… கார்த்திக் இருக்கான் தானே…” விஜய் கேட்கவும்,

“அப்படி ஒரு கேரக்டர் இங்க இருக்கோ…” அஜய் சத்தமாக கேட்க, கண்ணம்மா களுக்கென்று சிரித்தாள். அந்த நேரம் சரியாக அஜய்க்கும் கண்ணம்மாவிற்கும் காபி வேண்டுமா என்று கேட்க வந்த கார்த்திக், அஜய் சொன்னதைக் கேட்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

“சரிங்க அத்தான்… நீங்க எல்லாத்தையும் பொறு….மை….யா வாங்கிட்டு வாங்க…” என்ற அஜய், போனை வைக்க,

“டேய் இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்…” என்று கார்த்திக் உள்ளே வந்தான்.

“சும்மாடா கார்த்திக்…” என்றவன், என்ன என்பது போல பார்க்க,

“பிகரைப் பார்த்தா பிரெண்டை கழட்டி விடுவாங்கன்னு சொல்றது இதைத் தான் போல…” நன்றாவே வாய் விட்டுப் புலம்பியவன்,

“காபி வேணுமா அஜய்… சிஸ்டர் உங்களுக்கு?” கார்த்திக் கேட்கவும்,

“நீங்க இருங்க அண்ணா… நான் போய் போட்டுக் கொண்டு வரேன்… எது எங்க இருக்குன்னு சொல்லுங்க…” என்று கண்ணம்மா முன்னே நடக்க, அஜயின் முகத்தைப் பார்த்த கார்த்திக், மனம் நிறைந்து,

“ரொம்ப ஹாப்பியா இருக்குடா மச்சான்…” என்று கூறிவிட்டு செல்ல, ‘அப்படியா பலப் எரியுது’ என்று அஜய் நினைத்து சிரித்துக் கொண்டான்.

அஜய் மெல்ல வாக்கரை வைத்து நடந்து வருவதைப் பார்த்த கார்த்திக், அவசரமாக அவனை சென்று பிடித்து, “உனக்கு இப்போ என்னடா அவசரம்… என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல…” என்று கேட்கவும்,

“சும்மா நடக்கலாம்ன்னு தான்…” என்று அவன் கண்ணம்மாவைப் பார்க்க அவளோ, அவசரமாக கார்த்திக்கை கண்களால் காட்டி விட்டு, அஜயை முறைக்க. கார்த்திக் அவனைப் பிடித்து சோபாவில் அமர வைத்தான்.

“சிஸ்டர்… நிஜமாவே சொல்லுங்க… நீங்க தான் கண்மணியா?” காபி போட்டுக் கொண்டிருந்த கண்ணம்மாவிடம் கார்த்திக் கேட்கவும்,

“ம்ம்… நான் தான்… ஏன் அண்ணா?” என்று கண்ணம்மா கேட்க,

“இல்ல.. ஆக்சுவலா இந்த வருஷம் அஜயோட பர்த்டே கிஃப்ட்டா நான் உங்களை மீட் பண்ண வைக்கிறதா தான் சொல்லிட்டு இருந்தேன்… நானும் அத்தானும் வந்து உங்களை மீட் பண்ண வைக்கிறதுக்கு பெர்மிஷன் எல்லாம் கேட்டோமே… நீங்க ஏன் அந்த பொண்ணை அனுப்பினீங்க?” கார்த்திக்கிற்கு மண்டை வெடிக்கும் போல இருந்த கேள்வியை கேட்க, அஜய் கண்ணம்மாவை கேள்வியாகப் பார்த்தான்.

“நீங்க வந்து என்னை மீட் பண்ண பெர்மிஷன் கேட்டீங்களா?” கண்ணம்மா திகைத்து,

“நான் அப்படி யாரையும் அனுப்பலையே…” என்று யோசனையாக இழுத்தவள், முகம் பிரகாசமுற,

“அப்போ அன்னிக்கு நான்னு நினைச்சு தான் சாக்ஷி கூட பேசிட்டு இருந்தீங்களா? அங்க… அந்த மால்ல…” கண்ணம்மா வியக்க, அஜய் ‘ஆம்’ என்றும் இல்லை என்றும் தலையசைத்தான்.

“ஏதாவது ஒரு பக்கம் மண்டையை ஆட்டுங்க…” கண்ணம்மா சொல்ல,

“அவனுக்கு அப்போவே அது கண்மணி இல்லன்னு ஒரு டவுட்… ஏன் முதல் நாள்… அதாவது பர்த்டே அன்னைக்கு பார்த்த போதே அவன் ஒண்ணும் இன்ட்ரெஸ்ட்டா பேசல… அன்னைக்கு சினிமா முடிஞ்சு நீங்க வந்த போதே உங்க மேல அவனுக்கு ஒரு டவுட் வந்திருச்சு… ஆனாலும் நீங்க சரியான பயந்தாங்கொள்ளின்னு தான் அவன் நினைச்சான்…” கார்த்திக் விளக்கம் சொல்லவும், அஜய் நக்கலாக சிரிக்க,

“போதும் சிரிச்சது… காபிய குடிங்க…” என்று அவன் கையில் கொடுக்க, அஜய் வாங்கிப் பருகத் தொடங்க, கார்த்திக்கிற்கும் ஒன்றை கொடுத்துவிட்டு, தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.    

“இந்த அத்தானைப் பாரேன் அஜய்… நடுவுல ஷோவ தன் கையில எடுத்துக்கிட்டு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற ஷோவை ஆர்கனைஸ் பண்ணிட்டார்… நல்ல ஷோ ஆர்கனைசர் தான்…” என்று கார்த்திக் பாராட்ட, அஜய் விஜய்க்கு மனதினில் நன்றி கூறிக் கொண்டான்.

“ஓ… அப்போ நீங்க ரெண்டு பேரும் வந்து என்னைப் பத்தி விசாரிச்ச போது தான் நான் கண்மணின்னு தெரிஞ்சதா? ஆனா நீங்களும் கூட போனேன்னு சொன்னீங்க?” குழப்பமாக அவள் கேட்க,

“இல்ல… என்னை உள்ள வர வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனவர், கொஞ்சம் யோசனையா தான் வந்தார்… வந்துட்டு நான் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு… இவனோட பர்த்டே அன்னைக்கு, ஒரு பொண்ணு வெளிய வருவா… அவ தான் கண்மணின்னு சொன்னார்… அந்த பொண்ணைப் பார்த்து நான் கூட, தென்றல் ராகம்க்கு தூங்காம முழிச்சு போன் பேசி இருக்கலாம்ன்னு நினைச்சேன்…” தலையை சொரிந்த படி கார்த்திக் சொல்லவும், அஜையும் கண்ணம்மாவும் அவனைப் பார்த்து சிரித்து,

“அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு… ராபர்ட் சார் தான் அவளோட ஆள்… ரெண்டு பேர் வீட்லயும் அப்பா அம்மா சம்மத்துக்காக காத்திருக்காங்க..” கண்ணம்மா விளக்கம் கூறினாள்.   

“சின்னப் பையன்… ரெண்டு வருஷமா கூடவே இருக்கேன்… இவன் கல்யாணம் ஆனவன்னு எனக்கே தெரியாது… காலையில அம்மா சொல்லவும், உள்ள போன வடை தொண்டையிலேயே சிக்கிக்கிச்சு…” கார்த்திக் சொல்லவும், அவனிடம் பத்திரம் கட்டிய அஜய் கண்ணம்மாவைப் பார்த்து,

“உன்னை வந்து அத்தான் பார்த்தாரா?” என்று கேட்க, ‘ஆம்’ என்று கண்ணம்மா மண்டையை உருட்டினாள்.

“உடம்பு சரி இல்லாம மதியம் கிளம்பிப் போயிட்டு இருக்கும் போது, அண்ணாகிட்ட இருந்து போன் வந்தது… நான் உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க… நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு சொன்னதும், எங்கன்னு கேட்டு உடனே வந்து என்னைப் பிடிச்சு செம திட்டு…

உன்னை யாரு fmல வொர்க் பண்ண சொன்னது? கல்யாணத்துல இருந்து விடுதலைக் கிடைச்சதுல ரொம்ப சுதந்திரமா சந்தோஷமா இருக்க போல… அப்படி இப்படின்னு காச்சு மூச்சுன்னு கத்தி விட்டார்… எனக்கு ரொம்ப அழுகையா வந்துச்சு…

அப்போவே அண்ணாகிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி சாரி கேட்டு… நான் உங்க டீம்ல தான் வொர்க் பண்றேன்னு சொன்னேன்… அண்ணாகிட்ட நீங்க சொல்லவே இல்லையாமே…” கண்ணம்மா நடுவில் அஜயைக் கேட்க,

“சொன்னா என்ன நடக்கும்ன்னு உனக்கு தெரியாதா?” என்று அஜய் கேட்கவும்,

“ஹ்ம்ம்… வெளிய சொல்றா மாதிரி காரியத்தையா செய்திருக்கேன்…” மனம் நொந்து சொன்னவள், தன் கையில் இருக்கும் மோதிரத்தை வருடத் தொடங்க, அஜயின் கண்கள் விரிந்தது…

“அப்பறம் அண்ணா… உனக்கு அஜயைப் பிடிக்குமான்னு என் கையில இருக்கற மோதிரத்தைப் பார்த்து கேட்டாங்க… நான் ஆமா… ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்ன உடனே… அப்போ நாளைக்கு அவன் பர்த்டேக்கு என்ன கிஃப்ட் தரப்போறன்னு கேட்டாங்க…” கண்ணம்மா அஜயை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க,

“அதை இன்னும் நான் பிரிக்கவே இல்ல…” இப்பொழுது அஜய் தலையைச் சொரிந்தான்.

“அது தான் தெரியுதே…” என்று முணுமுணுத்தவள், “நாளைக்கு அவனுக்கு கிஃப்ட் கொடு… அப்பறம் இத்தனை நாளா தப்பா யூஸ் பண்ணிட்டு இருந்த குருட்டு தைரியத்தை இப்போ சரியா யூஸ் பண்ணு… அப்போ தான் நீங்க மறுபடியும் சேர முடியும்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க…

எனக்கு அடுத்த நாளே ஆபீஸ்க்கு வரணும்னு தான் டாக்டரே ஊசி வேண்டாம்ன்னு சொல்லியும், என்னால ஆபீஸ்க்கு லீவ் போட முடியாது… அது இதுன்னு சொல்லி ஊசி போட்டு, பீவரை இறக்கி அடுத்த நாள் ஆபீஸ்க்கு வந்தேன்… அப்பறம் சுவாதியும் எனக்கு தைரியம் சொன்னா… அதனால தான் துணிஞ்சு உங்ககிட்ட அப்படி பேசினேன்…” சொன்னவள்,

“என்ன பாஸ்… போதுமா விளக்கம்…” என்று குறும்பாகக் கேட்க,

“அடிப்பாவி… சுவாதிக்கு தெரியுமா? தெரிஞ்சுமா அம்மா முன்னால உன் பேரை சொல்லி என்னை அலற வச்சா?” அஜய் கேட்க, ‘ம்ம்’ என்று தலையசைத்தவள்,

“அத்தையும் மாமாவும் என்னை மன்னிப்பாங்களா?” வருத்தமாகக் கேட்டாள்.

“ரொம்ப கஷ்டம் தான்… ஏன்னா அம்மா ரொம்ப அழுதுட்டாங்க… எனக்கு அவசரமா கல்யாணம் பண்ணி வச்சு என் வாழ்க்கையே போச்சுன்னு அவங்களுக்கு ஒரு குற்ற உணர்வு… அதுல நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சத்தம் போடறது வேற ஒரு பக்கம்… அப்பாகிட்ட நான் சாதாரணமா பேசறதை விட்டே மூணு வருஷம் ஆச்சு…

எங்க ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிக்கிட்டு பாவம் அவங்க தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க… இப்போ கூட என்னை எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கத் தான் வந்திருக்காங்க… ரெண்டு மூணு பொண்ணு போட்டோ கூட வச்சிருக்காங்க…” அஜய் சொல்லவும்,

“பொண்ணை பார்ப்பீங்களா?” கண்ணம்மா மிரட்ட,

“பார்க்க வேண்டியது தான்… அம்மா ஆசைக்கு நான் எப்படி தடை சொல்ல முடியும்? பாவம் அவங்களும் எவ்வளவு நாள் தான் இதை நினைச்சே ஃபீல் பண்ணிட்டு இருக்கறது? இப்போ தான் கொஞ்ச நாள் முன்னால கல்யாணத்தை பத்தி யோசிக்கிறேன்னு சொல்லி இருக்கேன்… இப்போ ஓகே சொல்லிட வேண்டியது தான்…” சாதாரணமாக அஜய் சொல்ல, கண்ணம்மாவின் முகம் சுருங்கி கண்களில் கண்ணீர் அதோ இதோ என்று எட்டிப் பார்த்தது.

“டேய்… கண்ணம்மா உன் வைஃப்… அவளை விட்டு நீ எப்படி?” கார்த்திக் அவன் சொன்னதில் அதிர்ந்து போய் அஜயைக் கேட்க,

“ஷி இஸ் நாட் மை வைஃப்….” அஜயின் பதிலில், கண்ணம்மா ஆடிப் போனாள்.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

9 COMMENTS

  1. Hi ramya. Story super aa pogudhu. flash back super. Ajay um Kannammavum yar yaronnu partha irandu perum Husband and Wife. Arumayana ubdate.keep it up.

  2. Nice ud sis. Sorry middle la 2-3 ud read pannama rombaaa miss panna. Fb super. Kalakiringa sis. Conversation la sema. Superb writing sis.

LEAVE A REPLY