SHARE

ஸ்வரம் இல்லாத கீதமாய்
வலி ஒன்றையே
கிரகித்தவண்ணம்
ஓயாத உன்
அவஸ்தை நினைவுகள்
எனக்குள்ளே
ஒலிக்க ஆரம்பிக்க
புரியாத புதிராய்
விடை இல்லாத கேள்விகளய்
சுமந்தவண்ணம்
தடுமாறிய
பயணங்களால்
தவித்து நிற்கிறேன்!!

 

கண்ணம்மாவின் கையில் கட்டிட்ட டாக்டரிடம் பேசிவிட்டு வந்த அஜய், விஜயின் அருகே நின்றுக் கொண்டான்… “என்ன அஜய் இதெல்லாம்… என்னாச்சு?” விஜய் கேட்கவும், அஜய் நடந்தது அத்தனையையும் சொல்லி முடித்தான்.

அதைக் கேட்ட விஜயும் தயங்கி… “அவங்க நல்ல குடும்பம்ன்னு தான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்… இவ ரொம்ப அமைதின்னும் கேள்விப்பட்டேன்… ஆனா… இப்படி எல்லாம்?? எனக்கே அதிர்ச்சியா இருக்கே..” யோசனையுடன் சொல்ல,

“எனக்கு அவளை எப்படி ஹான்டில் செய்யறதுன்னே தெரியல அத்தான்… எனக்கு இவளை இப்படியே விட்டுட்டு எப்படி ஆபீஸ் போகறதுன்னும் புரியல… இவ இந்த மாதிரி ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துக்கிட்டா.. அம்மா என்ன செய்வாங்க? அதுவும் தவிர இவ இன்னைக்கு செய்து வச்சிருக்கற காரியத்துக்கு… நான் இனிமே அந்த ஆபீஸ்க்கு எப்படிப் போவேன்.. வீட்லயே இருந்து நான் காவல் காக்க முடியுமா?” அஜய் வருந்திக் கொண்டிருக்க, விஜய்க்குமே கண்ணம்மாவின் செயல்கள் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

“ஹ்ம்ம்… கண்ணு முழிக்கட்டும் பேசிப் பார்ப்போம்…” விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்த டாக்டர், 

“ட்ரிப்ஸ் போட்டு இருக்கேன் அஜய்… அவங்க சரியா சாப்பிடாம ரொம்ப வீக்கா இருக்காங்க… ட்ரிப்ஸ் முடிஞ்சதும் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… புதுசா கல்யாணம் ஆனவங்களா? ட்ரிங்க்ஸ் எடுத்தாங்களா?” என்று கேட்க, அஜய் ‘ஆம்’ என்று தலையசைக்கவும்,

“அவங்க கொஞ்சம் மெண்டலி டிஸ்டர்ப் ஆனது போல இருக்கு… அவங்ககிட்ட கொஞ்சம் மனம் விட்டு பதமா பேசுங்க… எல்லாம் சரியா போகும்…” என்று அறிவுரை சொல்லவும், அவரிடம் சரி என்று தலையசைத்தவன், மெல்ல கண்ணம்மாவின் அருகே சென்றான்.

அருகில் சென்றவன், நிர்மலமான முகத்துடன் உறங்கியவளைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அந்த முகத்தில் எந்த சூதும் இல்லை… குழந்தைப் போன்ற முகம்… அடிப்படையிலேயே மென்மையான குணம் போலத் தான் தெரிகிறது… இவளா இப்படி செய்கிறாள் என்று மனதினில் நினைத்து வருந்திக் கொண்டான்.

ஃபேன் காற்றினால் அவளது தலை முடி கற்றை ஒன்று அவளது முகத்தில் விழவும், அதை விலக்கியவன், மெல்ல அவள் தலைக் கோதினான்… “உனக்கு என் கூட இருக்கப் பிடிக்கலைன்னா அதுக்குன்னு இப்படியா செய்துப்ப கண்ணம்மா? ஒரு பிரெண்ட்டா கூட என்னோட உன்னால இருக்க முடியாதா? ஏன் இப்படி எல்லாம் செய்யற?” என்று புலம்ப, கண்ணம்மா வலியால் சிணுங்கினாள்.

“ரொம்ப வலிக்குதா?” அவள் அருகே குனிந்து அஜய் இதமாகக் கேட்க, ‘ம்ம்… ரொம்ப வலிக்குதுங்க… எனக்கு பயமா இருக்கு… என்னை விட்டு போயிடாதீங்க…’ அந்த உறக்கத்தில் அவள் சொன்னதைக் கேட்ட அஜய், அவள் கையை மெல்ல வருடினான்.

அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லவும், அவளிடம் சண்டை போட்டது அனைத்தும் நினைவிற்கு வர, தன்னை நினைத்தே சிரித்துக் கொள்ளத் தான் முடிந்தது…    

மீண்டும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன், ட்ரிப்ஸ் தீரவும், டாக்டரிடம் சொல்லிவிட்டு, அவர் வீட்டிற்குச் செல்லலாம் என்று சொல்லவும், மருத்துவமனைக்கு பணம் கட்டிவிட்டு, எழ முடியாமல் எழுந்தவளை கைத் தாங்கலாக பிடிக்கப் போக, அவனது மார்பினில் கோழிக் குஞ்சு போல ஒன்டியவள், சில வினாடிகளிலேயே, அவனது கையை தட்டிவிட்டு, “நீங்க என்னைத் தொடக் கூடாது…” என்று சீறினாள்.

“நீங்க எல்லாம் செய்யறது மட்டும் சரியா இருக்கோ… தாத்தாவுக்காக என் வாழ்க்கையையே இப்படி சீரழிச்சிட்டீங்களே… உங்களுக்கே நியாயமா? இதுல நீங்க எல்லாம் என்னைக் குத்தம் சொல்றீங்க?” விஜயிடம் அவள் எரிந்து விழவும், வேகமாக அஜய் அவள் அருகே வந்து, அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

“ஏய் என்ன விட்டா பேசிட்டே போற? என்னவோ உங்க வாழ்க்கைய நாங்க சீரழிச்சா மாதிரி பேசற… நீ தான் எங்க உயிரை எல்லாம் வாங்கிட்டு இருக்க… இந்த அர்த்த ராத்திரியில நிம்மதியா தூங்கக் கூட விடாம எங்களை ஹாஸ்பிட்டலுக்கு அலையை வச்சிருக்க… வா… நேரா போலீஸ் ஸ்டேஷன் போகலாம்.. நீ இந்த மாதிரி எல்லாம் செய்தன்னு நான் அங்க கம்ப்ளைன்ட் தந்து வைக்கிறேன்… நாளைக்கே நீ செத்து கித்து தொலைச்சா… எவன் போலீஸ் கேஸ்ன்னு அலையறது?” அஜய் அவளை கோபமாக சாட, கண்ணம்மா நடுக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவளது முகத்தில் பயத்தின் ரேகை ஓடி மறைய, “காருல ஏறு…” அஜயின் உறுமலில், வேகமாக காருக்குள் ஏறிக் கொள்ள, விஜய் காரை எடுக்க, அஜய் அவள் அருகில் அமர்ந்தான்.

“என்னை அடிச்சிறாதீங்க ப்ளீஸ்…” பயத்துடன் அவள் கெஞ்ச…

அவளது  நிலையில், தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், அவளது கையை மெல்ல தன் கைக்குள் கொண்டு வந்து, “உன்னை நான் எதுக்கு அடிக்கப் போறேன் கண்ணம்மா… நீ ஏன் இப்படி பண்ணின? உனக்கு என்ன கோபம்? ஒரு பிரெண்டா என் கிட்ட சொல்லு.. எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..” அஜய் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்க,

“உன்னை எனக்கு பழி வாங்கணும்… நீ என் விரோதி…” கண்ணம்மாவிடம் இருந்து வந்த பதிலில் அஜயும் விஜயும் அதிர்ந்தனர்.

“கண்ணம்மா…” விஜய் அதட்ட,

“ஆமா… நான் தான் பொண்ணு பார்க்க வந்த போதே உங்களை நிமிர்ந்து கூட பார்க்கலை தானே… காபி கொடுக்கும் போது என் கையில, எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு எழுதி இருந்ததை பார்த்தும் நீங்க என்னை கல்யாணம் செய்து இப்படி கொடுமை படுத்தறீங்க இல்ல… அதுக்குத் தான்… இதுலா பிரெண்டா வேற நினைக்கணுமா?” கண்ணம்மா சொன்னதைக் கேட்ட அஜய்க்கு தலை சுற்றியது.

“கையில எழுதி இருந்தயா?” அஜய் திகைப்புடன் கேட்க,

“ஆமா… சிகப்பு பேனாவால எழுதி இருந்தேன்… நீங்க மொதல்ல என் கைய தானே பார்த்தீங்க?” உச்சபட்ச எரிச்சலில் அவள் கேட்க, அஜய்க்கு பெரும் திகைப்பாக இருந்தது.

அவள் தன்னை கவனிக்கவே இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருக்க, அவளோ தான் முதலில் அவள் கையைப் பார்த்தது முதல் சொல்கிறாள் என்றால்… அவன் யோசிக்க, அவனுடைய கோபம் அதிகரித்தது…

“ஆமாடி நீ அப்படியே ரொம்ப கலரு… சிவப்பு கலர் பேனால எழுதினா பளிச்சுன்னு தெரிய… ஆமா… உன் கையைப் பார்த்தேன்னா… ஒரு பொண்ணு என் முன்னால கைய நீட்டி இருக்கான்னு தான் நான் பார்த்தேன்… அதுல ஏதாவது எழுதி இருப்பன்னு நான் கண்டேன் பாரு…

செய்யறது தான் செய்த… கல்யாணத்துக்கு முன்ன எனக்கு ஒரு போன் செய்து உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைங்கற விஷயத்தை சொல்லி இருக்கலாம்… இல்ல அப்படியே வீட்டை விட்டு போய் ஒரு ரெண்டு நாள் எந்த பிரெண்ட் வீட்டுலயாவது இருந்துட்டு, நம்ம கல்யாண நாள் முடிஞ்ச உடனே வந்திருக்க வேண்டியது தானே…

என் உயிரை வாங்கவே வந்திருக்கா… நான் மட்டும் என்ன உன்னை அப்படியே லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிட்டேன்னு நினைப்போ? உன்கிட்ட எனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டமில்லன்னு சொல்லிட்டு ஓடிப் போயிடலாம்ன்னு பார்த்தேன்… எங்க? உங்க தாத்தாவைப் பார்த்த உடனே எல்லாமே மாறிப் போச்சு…” அஜய் அவளிடம் கத்தினான்.

கண்ணம்மா அமைதியாகவே இருக்கவும், “வண்டியை எடுங்க அத்தான்… ரொம்ப தலை வலிக்குது… போய் கொஞ்சம் தூங்கணும்….” தலையை நீவிக் கொண்டவன்,

“நாளைக்கு நீங்க ஊருக்கு போகும் போது இவளை கொண்டு போய் அவங்க வீட்லயே விட்டுடுங்க… எப்போ வரணும்னு தோணுதோ வரட்டும்… நானும் கண் காணாம எங்கயாவது போயிடறேன்… இல்லைன்னா இன்னைக்கு இவ எனக்கு ஏற்படுத்தின அவமானத்திற்கு நான் முகத்தை எங்க கொண்டு போய் வச்சிக்கறது?” அஜய் பொருமி,

“நீ என்ன குடிகாரியா? அப்படியே ஒரு முழு கிளாசை கட கடன்னு குடிச்சிருக்க? அதோட டேஸ்ட் கூடவா உனக்கு தெரியல… எப்படி உன்னால முடிஞ்சது… பழி வாங்கணும்னா என்ன வேணா செய்வியா?” அஜய் கத்திக் கொண்டே வந்தான்.

வீட்டிற்கு வந்தவன், அவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து, ரூமில் தள்ளிவிட்டு, “பயப்பட ஒண்ணும் இல்ல… நாளைக்கு அத்தான் கூட அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பிடறேன்… நீங்க போய் தூங்குங்க…” பெற்றவர்களின் முகத்தைப் பார்க்காமல் சொன்னவன், கதவை அடைத்தான்.

ராதாவும் அனுபமாவும் கண்ணீருடன் விஜயைப் பார்க்க, அவனோ தனது தந்தைக்கு அழைத்து விவரத்தை கூறியவன், ‘அப்படியா’ என்று அதிர்ந்தான்.

“சரி… நான் பார்த்துக்கறேன்…” என்று போனை வைத்தவன்,

“இவளோட அப்பா… எங்க அப்பாவுக்கு போன் பண்ணி… உங்களை நம்பித் தானே அந்த கொடுமைக்கார பொறுக்கிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தேன்… இங்க இருந்து கூட்டிட்டு போன மறுநாளே என் பெண்ணை கொலை பண்ணப் பார்த்திருக்கான்… நீங்க தானே நல்ல பையன்னு சொன்னீங்க… இப்போ என் பொண்ணு வாழ்க்கைக்கு பதில் சொல்லுங்கன்னு அப்பாவை பேச விடாம சண்டையாம்.. இனிமே முகத்துல கூட முழிக்க மாட்டேன் அப்படின்னு கத்தி போனை வச்சிட்டாராம்… அவங்க கண்ணம்மாவை கூட்டிட்டு போக இங்க கிளம்பி வந்துட்டு இருக்காங்க போல…” விஜய் சொல்லவும்,

“நான் தான் போன் பண்ணி அவங்களை வரச் சொன்னேன் மாப்பிள்ளை… இவ ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டா ஒரு உயிர் போன பாவம் நம்மளை சும்மா விடுமா? அவங்களே அவங்க பொண்ணை வச்சிக்கட்டும்… அவசரப்பட்டு என் பையனோட வாழ்க்கையே போச்சு…” ஸ்ரீனிவாசன் புலம்ப, யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று புரியாமல், அஜயின் அறையின் அருகேயே அமர்ந்தனர்…..

கை வலி ஒரு புறமும், அஜய் கூண்டுப் புலி போல நடந்து கொண்டிருந்தது ஒரு புறமும் கண்ணம்மாவின் மனதில் பயத்தை விளைவிக்க, அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

“உன்னை எல்லாம்…” அஜய் அடிக்கடி அவளைப் பார்த்துக் கறுவிக் கொண்டே, அவளது பெட்டியை தூக்கி தொப்பென்று கட்டிலின் மேல் போட்டான்.

கண்ணம்மா பயந்து ஓரடி நகர, “உன்னை அப்படியே அடிச்சு துவைச்சு போடணும்னு ஆத்திரம் வருது… ஆனா எங்க வீட்ல ஒரு பெண்ணை அடிச்சு பழக்கம் இல்ல… எங்க அப்பா கோபக்காரர் தானே ஒழிய,இதுவரை  எங்க அம்மாவை கை நீட்டி அடிச்சது இல்ல..” என்றவன், அவளது துணிகளை கொண்டு வந்து அதில் திணித்தான்.

அவள் அமைதியாகவே அமர்ந்திருக்கவும், “உன் இஷ்டப்படியே உங்க வீட்டுக்கே போ… ஆனா.. அது தான் நீ என் முகத்துல முழிக்கிற கடைசியா இருக்கணும்… எனக்கும் உன்னைப் பார்க்கவே பிடிக்கல… பொண்ணா நீ? பேய்… பிசாசு… உன்னைப் போல ஒருத்திய நான் பார்த்ததே இல்ல…” என்று கூறிய அஜய், அவளது பெட்டியை கீழே போட்டுவிட்டு கட்டிலில் விழுந்தான்.

மறுநாள் காலை… பதட்டமாக கதவு தட்டப்படும் சத்தத்தில், கண்ணம்மா வேகமாக கதவைத் திறக்க, அறையின் வாயிலில், சுப்புவும் மீனாவும் ஒரு காவல் துறை அதிகாரியுடன் நின்றிருந்தனர். “கண்ணம்மா… உனக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே… உன்னைப் பார்க்கற வரை எங்க உயிர் எங்க கிட்டயே இல்ல…” அவளின் முகத்தை வருடி கேட்ட மீனா… அறை இருந்த கோலத்தைப் பார்த்து கதறத் தொடங்கினார்.

ஆங்காங்கே கண்ணம்மாவின் துணிகள் இறைந்துக் கிடக்க, கட்டிலில் குப்பற விழுந்து அஜய் உறங்கிக் கொண்டிருக்க மீனாவின் முகத்தைப் பார்த்த கண்ணம்மா… “அம்மா… என்னை காப்பாத்துங்கம்மா…. இவர் என்னை… என்னை… அடிக்க வந்துட்டாரும்மா…” அதற்கு மேல் சொல்ல முடியாதவள் போல தேம்பினாள்.

“எப்படி நடிக்கிறா பாருங்க…” அனுபமா சீற,

“இவ நேத்து என்னோட புடவை பிடிச்சிருக்குன்னு, கட்டி இருந்த புடவையை அவளுக்கு வேணும்னு அப்படியே பிடிச்சி இழுத்தாம்மா…” அsனுபமாவையும் விடாமல், அவள் குற்றம் சாட்டவும், “ஏய்…” விஜய் கத்தினான்.    

“பார்த்தீங்களா இன்ஸ்பெக்டர் சார்… என் பொண்ணை என்ன செய்தான்னே புரியலையே… ரூமை எல்லாம் பாருங்க… எப்படி துணி மணி எல்லாம் இறைஞ்சு கிடக்கு… அவ கையில பாருங்க சார் கட்டு…” மீனா சத்தமிட்டு அழவும், அவர் பேசிய பேச்சைக் கேட்டு அனைவருமே அதிர்ந்தனர்…

“என்ன சித்தி பேசறீங்க? அது நேத்து அவ வாந்தி எடுத்த போது சுத்தம் செய்ய கழட்டிப் போட்டது…” விஜய் விளக்கம் சொல்ல,

“அவளுக்கு என்ன ஆச்சு வாந்தி எடுக்க? அவ நல்லா தானே இருந்தா? நீங்க தான் சாப்பாட்டுல எதையோ கலந்து கொடுத்திருக்கணும்… இல்ல பழைய சாப்பாடா கொடுத்திருக்கணும்… அது அவ வயித்துக்கு ஒத்துக்காம போயிருக்கும்…” படபடவென்று அவர் குற்றம் சாட்டிக்கொண்டே அங்கிருந்த டைனிங் டேபிளின் அருகே செல்ல, இவள் செய்த கூத்தில் ஒதுக்கப்படாமல், ஊசிப் போன பொரியலும், சாம்பாரும் இருக்கவும், அதை மீனா இன்ஸ்பெக்டரிடம் காட்டினார்.

“இங்கப் பாருங்க சார்… எப்படி நாத்தம் எடுக்குதுன்னு… இதைத் தான் என் பொண்ணுக்கு போட்டு இருப்பாங்க…” மீனாவின் குற்றச்சாட்டுக்கு…  

“அவ ஏதாவது சாப்பிட்டா தானே ஒத்துக்காம போகும்…” ராதா நக்கலாக சொல்ல, அதுவே அவருக்கு வினையாகிப் போனது…

“அம்மா… எனக்கு போடற சாப்பாட்டுல மட்டும் உப்பையும் காரத்தையும் அள்ளி போட்டுடறாங்கம்மா… எனக்கு வாயில வைக்கவே விளங்கல… இல்ல, இது போல ஊசிப் போனதா போடறாங்க…” என்று உமட்டுவது போல செய்தவள்,

“சாப்பாடு கூட பரவால்லம்மா… நேத்து அவரு என்னை ஒரு பார்ட்டிக்கு கூட்டிட்டு போயிட்டு, நீ குடிச்சுத் தான் ஆகணும்… இல்லன்னா உன்னை கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினாரும்மா… நானும் எவ்வளவோ கெஞ்சிக் கதறினேன்… கேட்கவே இல்ல… குடிக்க மாட்டேன்னு நான் சொன்னதுக்கு தான் வீட்டுக்கு என்னை இழுத்துட்டு வந்து, என் கைய கிழிச்சு விட்டுட்டாரு…” முகத்தை மூடிக் கொண்டு அவள் கதற, சத்தம் கேட்டு நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்த அஜய், தனது அறை வாயிலில் நின்றிருந்த போலீஸ் அதிகாரியைப் பார்த்து அவசரமாக எழுந்து வந்தான்.

“என்னாச்சு சார்… என்ன பிரச்சனை?” அஜய் கேட்கவும்,

“என்ன Mr. அஜய்… நீங்க இவங்களை ரொம்ப கொடுமை படுத்தறதா கேள்விப்பட்டேன்…” என்று கேட்ட போலீஸ் அதிகாரி, அவன் மீது ஏதோ வாசனை வரவும், முகர்ந்து பார்த்தார்.

“குடிச்சு இருக்கீங்களா?” என்று அவனை மேலும் தன் அருகே இழுத்துக் கொண்டு கேட்க,

“இல்ல சார்… எனக்கு குடிக்கிற பழக்கமே கிடையாது…” அஜய் தன்னை முகர்ந்துப் பார்த்துக் கொண்டே சொல்ல, தன் மீது வந்த மதுவின் வாசனையில் குழம்பிப் போனான்…  

“ஆமா சார்… அவனுக்கு குடி… சிகரட் ரெண்டுமே பிடிக்காது…” விஜய் அஜய்க்கு பரிந்து வந்தான்.

“அப்போ இவர் மேல எப்படி சாராய நெடி வீசுது…” அந்த அதிகாரி கேட்கவும், அஜய்க்கே குழப்பமாக இருக்க, மீண்டும் தன்னைத் தானே மோப்பம் பிடித்துக் கொண்டான்.

“இப்பொல்லாம் பொண்ணுங்க பாதுக்காப்புக்காக இருக்கற வரதட்சணை கேசை அவங்க மிஸ் யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுதான் , கீழ வரும் போது கொஞ்சம் பேரை விசாரிச்சுட்டு தான் வந்தேன்… நீங்க இந்தப் பெண்ணை வெளிய இருந்து தர தரன்னு இழுத்துட்டு வந்ததையும், ரூம் உள்ள போட்டு பூட்டி கொடுமைப்படுத்தறதாகவும் சில பேர் சொன்னாங்க…

இந்த பொண்ணு அடிக்கடி, நீங்க அவளை அடிக்கிறதா சத்தம் போடுதுன்னு சொன்னாங்க… இப்போ பார்த்தா… கொலை முயற்சி வேற  செய்திருக்கீங்க… என் கூட ஸ்டேஷனுக்கு வாங்க…” அஜயின் கையைப் பிடித்து இழுக்க,

“என்ன சார்… இவங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தா… உடனே நீங்க அரெஸ்ட் செய்திடுவீங்களா? இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?” ஸ்ரீனிவாசன் சீற, மீனாவின் கையில் இருந்த போனை வாங்கிய அதிகாரி,

“இந்த போன்ல பேசும்போது அது தானே ரெகார்ட் ஆகற மாதிரி வசதி இருக்கு… அதுல இந்தப் பொண்ணு பேசினதைக் கேளுங்க…” என்று அதில் கண்ணம்மா பேசும் போது பதிவாகி இருந்த கால்களை போட்டுக் காட்ட, அனைவருமே வாயடைத்து போயினர்.

கண்ணம்மா அஜயைப் பார்க்க, அவனோ வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் நின்றிருந்தான்.

“இப்போ என்ன சொல்றீங்க? இதெல்லாம் பொய்ன்னு சொல்லப் போறீங்களா? இந்த ரூம் இருக்கற நிலவரத்தைப் பார்த்து கூடவா அந்த பொண்ணை உங்க பையன் கொடுமை படுத்தலைன்னு சொல்றீங்க? இந்தப் பெண்ணை, மனைவியே ஆனாலும் உறவுக்கு கட்டாயப்படுத்தறது தப்பு… அதனால நான் அஜயை ஸ்டேஷன் கூட்டிட்டு போறேன்…” அதிகாரி சொன்னதைக் கேட்டு ராதா பதறிவிட்டார்.,

அதற்கு எந்த மறுப்பும் சொல்லாத கண்ணம்மா அஜயைப் பார்த்துவிட்டு கண்ணீரில் கரைந்து, “எனக்கு வாழவே பிடிக்கல… நேத்து… நேத்து…” என்று அவள் திக்கித் திணற, அவள் சொல்ல வருவது புரிந்த அஜய், அவளது கன்னம் பழுக்கும் அளவிற்கு அறைந்தான்.

அவன் அடித்த அடியில், கண்ணம்மா விழப் போக, “பார்த்தீங்களா சார்… உங்க கண்ணு முன்னாலேயே என் பெண்ணை எப்படி அடிக்கறான்னு…” சுப்பு கத்தவும்….   

“சித்தப்பா… என்ன பேசிட்டு இருக்கீங்க? அஜய் அப்படிப் பட்ட பையனே இல்ல… நேத்து நடந்ததுக்கு நாங்க எல்லாம் சாட்சி… செய்யாத தப்ப அவன் மேல சொன்னா.. அவனுக்கு கோபம் வராதா… உங்க பொண்ணை நல்ல மனநல டாக்டர் கிட்ட காட்டுங்க… அப்போதான் முழு விவரமும்  தெரியும்…” விஜய் காட்டமாகவே கூறினான்.

“டேய்… நீ சொன்னதை வச்சுத் தான்… நான் எங்க கண்ணம்மாவை கல்யாணம் செய்துக் கொடுத்தேன்… ஆனா… நீ இருக்கும் போதே இப்படி நடந்திருக்கே… நீயும் தான் இவன் கூட சேர்ந்து அவளை அவசரமா கார்ல அள்ளிப் போட்டுட்டு கூட்டிட்டு போனதை இந்த பிளாட் வாட்ச்மேன் சொன்னாரு… நீயும் தானே உன் மச்சானுக்கு வக்காலத்து வாங்கற… உன் கூட பிறந்த தங்கை இல்லைன்னாலும்… இவளும் உன் தங்கை தானே… உனக்கு அந்த பாசம் கூடவா இல்ல…” விஜயின் சட்டையைப் பிடித்து சுப்பு கேள்வி கேட்கவும், விஜய் இப்பொழுது அதிர்ந்து நிற்க, நடந்ததை அனுபமாவும் எடுத்துச் சொல்ல, எதையும் கேட்காத அந்த அதிகாரி… அஜய்க்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதால், அவனை அழைத்துச் செல்வதாக கூற, கையாலாகதவர்களாக அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர்.

“போய் முகத்தை கழுவிட்டு வாங்க…” அதிகாரி சொல்லவும், இயந்திரத்தனமாக அதைச் செய்தவன், அவருடன் ஸ்டேஷனுக்கு நடந்தான்.

“நீ போ அஜய்… நான் உடனே ஒரு வக்கீலைப் பார்த்து கூட்டிட்டு வரேன்…” விஜய் அவனுக்கு தைரியம் சொல்ல, ராதாவும் அனுபமாவும் அந்த அதிகாரியிடம் கெஞ்ச, எதற்கும் இளகாமல், அஜய் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டான்.

தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம், ஒரு நல்ல வக்கீலை ஸ்ரீனிவாசன் தேட, விஜய் ஒருபுறம் தனது நண்பர்கள் மூலம் முயற்சி செய்தான்.

கண்ணம்மாவின் பெட்டியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்த மீனா… “அவளுக்குப் போட்ட நகை எல்லாம் எங்க?” என்று கேட்க, ராதா சுப்புவை முறைத்தார்.  

“நீங்க போட்ட நகை எல்லாம்….மே அவ கழுத்துல தான் இருக்கு… இதைத் தவிர நீங்க ஒண்ணும் கொடுத்ததா எனக்கு நினைவு இல்ல…” முகத்தில் அடித்தது போல சொன்ன ராதா…

“இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இந்த வீட்ல இருக்கக் கூடாது… சந்தோஷமும் நிறைவுமா நிறைஞ்சு இருந்த வீட்ல ஒரே நாளுல சூனியத்தை வர வச்ச நீ எல்லாம் நல்லா இருப்படி… பெத்த வயிறு பத்தி எரியுது…” கண்ணம்மாவை மேலும் அவர் திட்டித் தீர்த்தார்.,

“உன் பையன் மட்டும் நல்லா இருப்பானா? ஒரே நாளுல எங்க கண்ணம்மாவை எப்படி எல்லாம் கொடுமை படுத்தி இருக்கான்.. முதல் ராத்திரியிலயே உங்க மகன் அவகிட்ட கேட்ட கேள்வியை எல்லாம் சொன்னா… அதை கேட்டு என் காதே கூசிச்சு… அப்படிக் கேட்டவன், இப்படி எல்லாமும் செய்திருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?” மீனா பதிலுக்கு கேட்க, அங்கே பேச்சு வளர்ந்துக் கொண்டே செல்ல, கண்ணம்மா நின்று வேடிக்கைப் பார்த்தாள்.

“அம்மா… தாயே… உன் பொண்ணை நாங்க எங்க பையனுக்கு கல்யாணம் செய்துக்கிட்டு வந்ததுக்கு எங்களுக்கு நல்ல சன்மானம் தான் கிடைச்சிருக்கு … அதனால உடனே இங்க இருந்து கிளம்பிப் போயிடுங்க…” ஸ்ரீனிவாசன் கையெடுத்து கும்பிட, சுப்பு இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

அவரைப் பின்தொடர்ந்து சென்ற விஜய், அவரிடம் மன்றாடி, அவர் அஜயின் மேல் கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்குமாறு கேட்க,

“இனி உங்க வீட்டு பையன் என் பொண்ணு இருக்கற திசையில கூட தலை வச்சு படுக்கக் கூடாது… அப்படி ஏதாவது நடந்துச்சு…” சுப்பு விஜயை மிரட்ட,

“இதுக்கும் மேல அவன் உங்க பொண்ணை திரும்பிப் பார்ப்பான்னு உங்களுக்கு நினைப்பு வேறயா?” நக்கலாகக் கேட்டவன், அவரை அழைத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் செல்ல, அங்கு அஜயோ கூனிக் குறுகி அமர்ந்திருந்தான்.

கம்ப்ளைன்ட்டை திரும்பப் பெற்ற சுப்பு… கோபத்தில், கண்ணம்மா கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை கழட்டி அஜயின் முகத்தில் வீச, “அப்பா…” என்று கண்ணம்மாவும், “என்னங்க…” என்று மீனாவும் அவரது செயலில் திகைத்து கத்தினர்.

“கிளம்புங்க… ஊருக்கு போகலாம்…” என்று ஒற்றை வரியில் முடித்தவர், வேகமாக அங்கிருந்து நகர, இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.  அவரது செயலில், முகம் கன்ற, அஜய் அதை எடுத்து கையில் வைத்து வெறிக்க, அவனை அழைத்துக் கொண்டு, விஜய் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

“அப்போவே நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன… நாங்க தான் கேட்கல… இந்த ஆளுக்கு பதில் சொல்ற மாதிரி… இன்னும் ஒரே மாசத்துல உனக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு.. நீ ஜாம் ஜாம்ன்னு வாழறதை அவன் பார்த்து பொறாமை படல… என் பேர் ஸ்ரீநிவாசன் இல்ல…” அவர் சூளுரைக்கவும், அவரை கோபமாகப் பார்த்தவன்,

“இன்னொரு கல்யாணம் செய்து… செய்து… எங்க, நான் ஒட்டு மொத்தமா ஜெயிலுக்கு போயிடவா… ஒருத்தி என் வாழ்க்கையில வந்து நான் பட்டது போதாது… ரெண்டே நாளுலயே, இந்த ஜென்மம் இல்ல… இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத அசிங்கத்தை செய்து வச்சிட்டு போயிருக்கா… இனிமே இந்த வீட்ல கல்யாணம்ன்னு யாராவது பேசினீங்க… என்ன நடக்கும்ன்னே தெரியாது…” உறுமிய அஜய், வேகமாக சென்று குளித்து, தனது பெட்டியை அடுக்கத் துவங்கினான்.

“இன்னும் ரெண்டு நாளுல எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கும்ன்னு நேத்து ராத்திரி தான் மெசேஜ் வந்தது… அது வர வரை நான் இந்த ஊர் பக்கமே வர மாட்டேன்… எனக்கு யாருமே போன் செய்ய வேண்டாம்…” அஜய் சொல்லிவிட்டு, பெட்டியை கையில் எடுக்க,

“அஜய் அவசரப்படாதே… கொஞ்சம் நாங்க சொல்றதையும் கேளேன்…” விஜய் அவனைத் தேக்க முயல,

“அவ எல்லாம் என்னோட பெர்சனாலிட்டிக்கு ஈடா அத்தான்… சொல்லுங்க… எனக்கு அவ கொஞ்சமாவது பொருந்துவாளா? அவளுக்கு நான் கிடைச்சதே பெருசு… அதுல, அவளுக்காக எனக்கு பிடிச்ச பெங்களூர விட்டு சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கேட்டேன்… இதுல என்னோட தப்பு எங்க இருந்து வந்தது…

கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லைன்னாலும்… அவளைத் தான் கல்யாணம் செய்துக்கப் போறோம், இனிமே அவதான் என் வாழ்க்கையில் ஒரே பொண்ணுன்னு மனசு ஒன்றி தானே செய்தேன்… அவ என்னோட மனைவி… என்னோட வாழ்க்கை… என்னோட எதிர்காலம்ன்னு நான் நினைச்சது தப்பா என்ன? அதுக்கு இது தான் பரிசா?” என்று கேட்ட அஜய், விஜய் அவன் தோளை அழுத்தவும்,

“ட்ரான்ஸ்பர் கிடைச்சதுன்னு எனக்கு மெசேஜ் வந்ததும்… நான் ஆபீஸுக்கு போய் ஆர்டரை வாங்கிட்டு நேரா சென்னைக்கு வந்துடறேன்… அதுவரை நீங்க யாரும் வெளிய போக வேண்டாம்… அதே போல ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் கிட்ட நான் சொல்லிடறேன்… அவங்களே இந்த வீட்ல உள்ள சாமான்களை பேக் பண்ணி மாத்தி கொடுப்பாங்க… நீங்க கூட இருந்தா போதும்..” ராதாவைப் பார்த்து சொன்னவன்,

“அத்தான்… எனக்கு சென்னையில வீடு வேணும்… மொதல்ல வாடகைக்கு… அப்பறம் விலைக்கே வாங்கலாம்… அதுக்கு கொஞ்சம் ஏற்பாடு செய்ங்க…” என்றவன், அதற்கு மேல் நில்லாமல், அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

பால்க்காரன், பேப்பர்காரன் முதல், கதவைத் தட்டி வம்பு வளர்க்கும் பக்கத்து வீட்டு பெண்கள் வரை, அனைவரும் குசலம் விசாரித்ததோடு அல்லாமல், “உங்க மகனை ஒரு நல்ல மனநல டாக்டர்கிட்ட காட்டுங்க… அப்போ தான் இந்த வியாதி சரியா போகும்…” என்று இலவச ஆலோசனையும் வழங்கிவிட்டு சென்றனர்.

விஜய் அனுபமாவை அவர்களுக்குத் துணையாக விட்டுவிட்டு, அஜய் கேட்டுக் கொண்டது போல தங்கள் வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தான். அஜயிடம் பேச முயலும் போது எல்லாம், அவனது செல்போன் சுவிட்ச்ஆஃப் என்று வர, வீட்டில் உள்ள அனைவரும் அவனது நிலை தெரியாமல் தவித்துப் போயினர்… ஒருநாள் அதிகாலையில், அஜிடம் இருந்து போன் வந்தது…

அவன் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவனுக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்த செய்தியை அவர்களுக்குச் சொன்னவன், மதியம் வீட்டை காலி செய்யுமாறு சொல்ல, தான் ஆசையாக வாங்கிய வீட்டை ஸ்ரீனிவாசன் ஏக்கமாகப் பார்க்க,

“இப்போதைக்கு வாடகைக்கு விடறதைப் பத்தி யோசிப்போம் மாமா… பிளாட் செகரெட்டரி கிட்ட நான் சொல்லி வைக்கிறேன்… எப்படியும் நீங்களும் துபாய் போயிட்டு… அஜய் சென்னைக்கு வந்துட்டான்னா.. இதை வாடகைக்கு விட்டுத் தானே ஆகணும்..” அவரை சமாதானம் செய்தான்.  

அவர்கள் சென்னை வரும் நேரத்தை கணக்கிட்டு மீண்டும் கால் செய்தவன், அவர்கள் வந்து சேரவும், அன்றே கிளம்பி, விஜய் சொன்ன முகவரிக்கு வந்து சேர்ந்தான். அவனது முகத்தில் சாந்தம் போய் இறுக்கம் வந்து குடிகொண்டிருந்தது… மறுநாளில் இருந்தே அஜய் வேலைக்குச் செல்லத் துவங்கினான்..

***************

வீட்டிற்கு வந்த கண்ணம்மா… தனது பொய்யை நிரூபிக்கும் வகையில் அழுதே கரைந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்… எப்பொழுதும் அழுது கொண்டே இருந்தவளை தேற்ற வழி தெரியாமல், அவள் குடும்பம் தடுமாற, அவளை மீண்டும் கல்லூரிக்கு அனுப்புவதே சிறந்த வழி என்று முடிவெடுத்த சுப்புவும் மீனாவும், கண்ணம்மாவை தொடர்ந்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

தான் எண்ணிய காரியம், எண்ணிய படியே முடிந்த மகிழ்ச்சியில், கல்லூரிக்கு சென்று வந்த கண்ணம்மா… வீட்டில் மட்டும், சோகமாக இருப்பது போலவே காட்டிக் கொண்டாள்.

சென்னை வந்த ஒரே வாரத்தில் ஸ்ரீனிவாசன் சொன்னது போலவே, துபாய்க்கு கிளம்பிச் செல்ல, இவர்களின் பிரச்சனையில் தன் உடல் நிலையையே மறந்திருந்த அனுபமா, அவள் தாயாகப்போகும் செய்தியைச் சொல்ல, அதுவே அந்த குடும்பதிற்கு சிறு ஆறுதலை அளித்தது…

அவளின் பேறு கால உபாதைகளுக்காக துணைக்கு இருந்த ராதா, குழந்தை பிறந்ததும், சிறிது நாட்களிலேயே, விஜயின் அன்னையை அவளுக்கு துணைக்கு வைத்துவிட்டு, துபாய்க்குச் சென்றார்.

சென்னைக்கு மாற்றலாகி வந்த அஜயை, சிலர், நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டதை வைத்து துக்கம் விசாரிக்க, முயன்று வேறு கம்பெனிக்கு பதவி உயர்வுடன் மாறிக் கொண்டான். காலம், காயத்தின் ரணத்தை குறைக்கும் என்பதற்கேற்ப, அஜய் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான்.  

நாட்கள் அதன் வேகத்தில் நகர்ந்து, கண்ணம்மா நான்காம் வருடத்தில் அடி எடுத்து வைத்திருந்தாள். அன்று கல்லூரிக்கு குதூகலமாக வந்த அவளது உயிர்த் தோழி பிருந்தா… “கண்ணம்மா… எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு… அடுத்த மாசம் கல்யாணம்… அதனால நான் இதோட படிப்பை நிறுத்தப் போறேன்…” என்று அறிவிக்க, கண்ணம்மாவிற்கு ஏக அதிர்ச்சி…

“என்ன சொல்ற பிருந்தா… நாம இத்தனை நாள் படிச்சது எல்லாம் இந்த ஒரு வருஷமும் சேர்த்து படிச்சா தானே பலன் கிடைக்கும்… எனக்கு கல்யாணம்ன்னு வரும் போது நீயும் அதே தானே சொன்ன?” கண்ணம்மா கேட்க,

“எவடி இவ… நல்ல அழகான பையன்… கை நிறைய சம்பளம்… இருக்க ஒரு பிளாட்.. இப்படி ஒரு வரன் தானா தேடி வரும் போது அதை யாராவது கெடுத்துப்பாங்களா? படிப்பாம் படிப்பு… அதெல்லாம் தேவையே இல்ல… அவனை கல்யாணம் செய்துக்கிட்டு ஜம்முன்னு லைஃப்பை ஹாப்பியா அனுபவிக்க வேண்டியது தான்…” என்று சொன்னவள்,

“இருந்தாலும், உன்னோட மாஜி புருஷனை விட இவன் ஒண்ணும் அழகு இல்ல தான்… உன் ஆளு என்ன ஸ்மார்ட்டுடி… உன் கிராமத்து லுக்குக்கு அவர் உனக்கு கிடைச்சதே பெரிய அதிர்ஷ்டம் தான்… என்ன செய்யறது உனக்குத்தான் வாழ்க்கைய அனுபவிக்க கொடுத்து வைக்கல…” என்று வருந்தியவள், கண்களில் கனவு மின்ன, தனது வருங்கால கணவனைப் பற்றி பேசத் துவங்க, கண்ணம்மாவிற்கு மயக்கம் வரும் போல இருந்தது.

அதற்கு காரணம்… அஜய் தன்னைப் பெண் பார்க்க வருவதை தனது ஆருயிர் தோழியான பிருந்தாவிடம் கூறி, தனக்கு தொடர்ந்து படிக்க விருப்பம் இருப்பதையும் சொல்ல, ‘அவளுக்குத் திருமணமா’ என்று மனதினில் வெந்த பிருந்தா… கண்ணம்மாவிற்கு தவறான போதனைகளை உபதேசிக்கத் தொடங்கினாள்.

அதன் படிதான், தனது கையில் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கண்ணம்மா எழுதிக் கொண்டதும்… பின்பு அவள் நடந்துக் கொண்ட அத்தனை பைத்தியக்காரத்தனங்களும்….

நிச்சயம் முடிந்து, நடந்த விஷயங்களை அவளிடம் போனில் சொன்ன கண்ணம்மா… இன்னும் பத்தே நாட்களில் தனக்குத் திருமணம் என்பதை அவளிடம் தெரிவிக்க, “ஐயோ அப்போ உன் படிப்பு போச்சா…?” என்று மிகவும் அதிர்ச்சியுடன் கேட்டவள்,

“இல்ல நான் படிப்பேன்…” கண்ணம்மாவின் பதிலைக் கேட்டவள்,

“அப்போ நான் சொல்ற படி செய்… நீ சந்தோஷமா படிக்கலாம்…” என்றவள், திருமணத்திற்குப் பிறகு அவள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறியவைகளைக் கேட்ட கண்ணம்மா…

“இதெல்லாம் தப்பு பிருந்தா… அவங்க எல்லாம் பாவம்… அவங்க தான் படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்களே… ரொம்ப நல்லவங்களாம்… சொன்னா செய்வாங்க.. நான் தொடர்ந்து காலேஜூக்கு வருவேன்… இப்படி எல்லாம் செய்தா… அவருக்கு என் மேல எப்படி பாசம் வரும்? அவருக்கு என் மேல கோபம் வராதா? அவரும் நானும் ஒத்துமையா இருந்தா தானே எங்க லைஃப்பும் நல்லா இருக்கும்…” வெகுளியாக கண்ணம்மா சொன்னதைக் கேட்ட பிருந்தா விழுந்து விழுந்து சிரித்தாள்.

கண்ணம்மா குழப்பமாகப் பார்க்க, “இப்போ, எல்லாம் நல்லா சொல்லுவாங்க கண்ணம்மா… கல்யாணம் ஆன உடனே கொஞ்ச நாள்ல உனக்கு குழந்தை உண்டாகும்… அப்பறம் நீ எங்க காலேஜ்க்கு வருவ? வாந்தி மயக்கம்ன்னு உன்னை படுத்தி எடுத்திரும்… அது தான் அவங்க சம்மதம் சொன்னதுக்கான அர்த்தமா இருக்கும்…” பிருந்தா அடித்துச் சொல்ல, வெளி விவகாரங்கள் அனைத்தும் அவளை விட இந்த பிருந்தாவுக்கு அத்துப்படி என்று கண்ணம்மாவின் கருத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றி இருந்தது தற்சமயம் நன்றாக வேலை செய்ய,

“அப்படியா?” அதிர்ச்சியுடன் கண்ணம்மா கேட்டாள்.

“அவர் வேற ரொம்ப நல்லா இருப்பாருன்னு சொல்லி இருக்க… அவர் உன்னை கல்யாணம் செய்துக்கறார்ன்னா அதுல அர்த்தம் இல்லாமையா இருக்கும்… அதுவும் உன்னை படிக்க அனுப்பறேன்னு சொல்றது எல்லாம் சுத்தப் பொய்… நான் சொல்றபடி செய்தேன்னா… அவங்க உன்னை உன் வீட்டுக்கே அனுப்பிடுவாங்க….

நீ சோகமா இருக்கறது போலவே நடிச்சன்னு வை… உங்க அப்பா உன்னை காலேஜூக்கு அனுப்பி வச்சிடுவார்… அப்பறம் நீ மீதி ரெண்டு வருஷம் படிப்பை முடிச்சிட்டு… நடந்ததை எல்லாம் சொல்லி… இதுக்காகத் தான் அன்னிக்கு அப்படிச் செய்தேன்னு உன் வீட்டுக்காரர்கிட்ட மன்னிப்பு கேட்டு கால்ல விழுந்து, அவர் கூட சேர்ந்திடு…” சுலபமாக பிருந்தா சொல்ல, கேட்ட  கண்ணம்மாவிற்கும் அது சுலபமாகவே தோன்றியது.

இயற்கையிலேயே பயந்த சுபாவமுள்ள கண்ணம்மா… அஜயின் கோபத்தை கண்டு நடுங்கினாள் என்பதே உண்மை… அஜயின் குடும்பத்தவரை எதிர்த்து பேசிவிட்டு அறைக்குள் ஓடி மறைந்து பெரிய மூச்சுகளாக விட்டு, தன்னை சமன் செய்துக் கொள்வதும், அஜய்யிடம் நக்கலாக பேசும் போதும், வெளியில் திமிராக காட்டிக் கொண்டாலும், உள்ளம் என்ன பதறு பதறியது…

இதயமே வெடித்து விடுமோ என்பது போல எழுந்த உணர்வுகள்… எல்லாவற்றிற்கும் மேல், அஜய் தன் விருப்பமின்றியே தன்னை நெருங்கியதாக தான் சொன்ன பொய்… அஜயின் முகக் கன்றல்…. அனைத்தும் அவள் மனதில் இப்பொழுது படமாகத் தோன்ற, அவளை அறியாமலே அவளது கைகள் கழுத்தை தடவிப்பார்த்தது… 

“சரி கண்ணம்மா… நான் இப்போ அவர் கூட சினிமாவுக்கு வெளிய போறேன்… இனி அனேகமா காலேஜூக்கு வர மாட்டேன்னு தான் நினைக்கிறேன்… நான் சொன்னது போல உன் புருஷன் கிட்ட போய் மன்னிப்பு கேட்டுடு… அப்படி அவன் மன்னிக்கலைன்னா… போடான்னு டிவார்ஸ் வாங்கிட்டு வேற ஆளைப் பார்த்து கல்யாணம் செய்துக்கோ…” என்று போகும் போக்கில் சர்வ சாதாரணமாக, மூன்று வருடம் உயிராக பழகி இருக்கிறோம் என்று எந்த வித நட்புணர்வையும்  பாராட்டாமல் சொல்லிவிட்டு சென்றவளைப் பார்த்த கண்ணம்மா, அவளின் துர்போதனையால் தான் ஏமாந்ததை எண்ணி அருவருத்து போனாள்.

“அஜய்…” அவளது மனம் கூக்குரலிட, காரில் அஜய் அவளிடம் அன்பாகக் கேட்டதும், அவனது சிரித்த முகமும், தான் செய்த காரியத்தின் விளைவாக அவனது கன்றிய முகமும்… அனைத்தும் இப்போது  மனதில் வந்து அலை மோதியது….

‘அஜய்… அஜய்… என்னை மன்னிச்சிருங்க… கேட்கக் கூடாதவங்க பேச்சைக் கேட்டு நான் உங்களுக்கு செய்யக் கூடாத கொடுமை எல்லாம் செய்துட்டேன்… அஜய் நீங்க ரொம்ப நல்லவங்க… கைக்கு கிடைச்ச சொர்க்கத்தை ஒரு கோட்டானோட பேச்சைக் கேட்டு நழுவ விட்டுட்டேனே…” மனம் அடித்துக் கொள்ள, அஜயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது…

கண்களைத் துடைத்துக் கொண்டவள், விஜய்யிடம் கேட்டு அஜயை சந்திக்கலாம் என்ற முடிவுடன் கல்லூரியை விட்டு வெளியில் சென்றாள். ‘அஜய் கண்டிப்பாக தன்னை மன்னிப்பான் என்று ஒரு மனதும்… நீ செய்த காரியத்துக்கு அவன் உன்னை போட்டு மிதிப்பான்’ என்று இன்னொரு மனமும் வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க, இரண்டிற்க்கும் நடுவில் சிக்கித் தத்தளித்தவள், விஜய் வீடு இருக்கும் இடத்திற்கு போக, பஸ்சிலும் ஏறி அமர்ந்தாள்.

அப்பொழுது அதே பஸ்சில் வந்த சுப்பு… “என்ன கண்ணம்மா… எங்க போகறதுக்காக இந்த பஸ்ல ஏறி இருக்க?” என்று கேட்க, தூக்கி வாரிப் போட்டு அவரைப் பார்த்தவள், என்ன சொல்வது என்று புரியாமல், மலங்க மலங்க  விழிக்க, இன்னமும் தன் மகள் அந்த சம்பவங்களின் இருந்து மீளவில்லை என்று நினைத்து வருந்திய சுப்பு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அஜயின் ஒவ்வொரு அசைவும் இப்பொழுது அவளை இம்சிக்க, அஜயைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் முன் எப்போதும் விட அவளை வாட்டி வதைத்தது… வீட்டிற்கு வந்தவள் தன் பெற்றோரிடம் உண்மையைச் சொல்ல முடியாமல், அழுது தீர்க்க, “இந்த டிவர்ஸ் பத்திரத்துல கையெழுத்து போடு கண்ணம்மா… இனி அவனுக்கும் நமக்கும் எந்த சங்காத்தமும் வேண்டாம்… இதை நான் விஜய் வீட்டு அட்ரஸுக்கே அனுப்பறேன்… அந்த கடன்காரன் ஊரை விட்டே தலைமறைவு ஆகிட்டான் போல…” என்று சுப்பு ஒரு பேப்பரை நீட்டவும், அதையே வெறித்துப் பார்த்த கண்ணம்மா… அனுபவத்தினால்  கிடைத்த அறிவுக்கண்ணின் வழியாக, யோசித்து, மனதை கல்லாக்கிக் கொண்டு, இனிமேலாவது அஜயின் வாழ்க்கை அவன் மனதிற்கு பிடித்தாற்போல இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், தன்னிடமிருந்து அஜய்க்கு விடுதலை வழங்க அதில் கையெழுத்திட்டாள்.

இரு தரப்பினரும் சுமூகமாகவே அந்த வழக்கை முடிக்க நினைக்கவும், அவர்களது விவாகரத்தும் சுலபமாகவே கிடைத்தது. வழக்கின் போது கோர்ட்டிற்கு வந்த அஜய், கண்ணம்மா என்றொருத்தியை தெரியாதது போலவே காட்டிக் கொண்டான். அவளைத் திரும்பியும் பார்த்தான் இல்லை… ஆனால் கண்ணம்மாவோ…. அஜயை கண் நிறைந்து பார்க்க அது ஒரு சந்தர்ப்பம் என்று மனதை தேற்றிக் கொண்டு, அவன் அருகே இருக்கும் நிமிடங்களை மனதினில் சேகரிக்கத் தொடங்கினாள். 

அவளது கண்கள் அவனை ஏக்கமாகப் பார்ப்பதும், ஏதோ சொல்லத் துடிப்பது போலவும் இருப்பது போல தோன்றினாலும், அஜய் அவளை நெருங்கினான் இல்லை…

இதற்கு இடையில், அஜய் சொந்தமாக வீடு வாங்கிக் கொண்டு குடியேறினான்… அந்த வீட்டின் தனிமை அவனை வெறுமை கொள்ளச் செய்ய, ராதாவும் இங்கில்லாத தனிமை அவனுக்கு வெறுப்பாக இருந்தது… அப்பொழுது தான் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த கார்த்திக்கின் கலகலப்பான சுபாவம், அவனை தன்னுடன் தங்குமாறு அழைக்கத் தூண்டியது… அவனது தினசரிகளிலும் சிறிது வண்ணம் எட்டிப்பார்த்தது. 

கண்ணம்மா, தான் செய்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து, அதில் தானே அருவருத்துக்கொண்டு அழுது கரைவது வாடிக்கையாகியது… அப்பொழுது ஒவ்வொரு முறையும் அஜயைப் பற்றி அவளின் பெற்றவர்கள் வசவு பாடுவதும் வாடிக்கையாகியது. தான் செய்த தவற்றின் அளவு முழுவதுமாக புலப்பட, கண்ணம்மா மனதளவில் மிகவும் உடைந்து போனாள்.

அவளது மன உளைச்சலின் காரணமாக அவளது மதிப்பெண்கள் குறைய, கண்ணம்மாவிற்கு கல்லூரி வளாகத் தேர்வில் வேலை எதுவும் கிடைக்காமல் போனது…

வீட்டில் வேலை இல்லாத நேரங்களில், அஜயின் நினைவும், அவன் தன் மீது இறுதியாக காட்டிய கோபமும், வெறுப்பும் அவளை சுருளச் செய்யும்… ஒரு நல்ல வாழ்க்கையை… ஒரு நல்ல மனிதனை தான் ஒரு தவறான நபரின் துர்போதனைகளைக் கேட்டு, அநியாயமாக  இழந்துவிட்டோம் என்று மனம் கூறு போடத் தொடங்கும் நேரம், கட்டுக் கடங்காமல் கதறி அழுவாள்… அவளது அந்த துன்பத்தைப் காணச் சகிக்காத கயல்தான் அந்த யோசனையைக் கூறினாள்.

“இப்போ எல்லாம் fmல நல்லா தமிழ்ல பேசறவங்கள RJவா எடுக்கறாங்களாம் கண்ணம்மா… அவங்களே, எப்படி பேசணும் என்ன செய்யணும்னு ட்ரைனிங் கொடுக்கறாங்களாம்…” கயல் வந்து சொல்லவும்,

“என் மூஞ்சிக்கு அதெல்லாம் யாரும் தர மாட்டாங்க… விடு…” கண்ணம்மா சலித்துக் கொண்டாள்.

“இல்ல கண்ணம்மா… நிஜமா… இப்போ கூட தென்றல் fmல நல்லா தமிழ் பேசத் தெரிஞ்சவங்களை இன்டெர்வியூவுக்கு வரச் சொல்லி இருக்காங்க… நீ தான் நல்லா பேசுவியே… நீ போ கண்ணம்மா… போறதுனால உனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லையே… சும்மா, வேற வேலை கிடைக்கிற வரை செய்… அப்பறம் பிடிச்சா தொடர்ந்து செய்யலாம்… இல்ல விட்டுடலாம்… இது உனக்கு புது அனுபவமா இருக்கும்…” கயல் வற்புறுத்தவும், வேறு வழி இன்றி கண்ணம்மாவும் அங்கு சென்றாள்.

கயல் சொன்னது போலவே கண்ணம்மாவிற்கு அது புது அனுபவமாக இருந்தது… அவளது உச்சரிப்பு அவர்களுக்கு பிடித்துப் போக, கண்ணம்மா தென்றல் பண்பலையின் RJ கண்மணியாக உருமாறினாள்.

“ஒருநாள் விஜய் அனுபமாவுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த அஜய், தென்றல் ராகம் நிகழ்ச்சியை கேட்க நேர்ந்தது… அந்த RJ பேசும் மொழியும், உச்சரிப்பும், அவள் இனிமையாக பேசும் விதமும்,  அவனது கவனத்தை ஏனோ ஈர்க்க,அன்றிலிருந்து  கண்மணியின் தீவிர ரசிகனானான்….

அஜய் வேலை செய்யும் கம்பெனியிலேயே தனக்கும் வேலை கிடைத்த கண்ணம்மா.. ட்ரைனிங் முடிந்து, அஜய் வேலை செய்யும் கிளைக்கே அனுப்பி வைக்கப் பட்டாள். காலையில் உற்சாகத்தோடு அலுவலகத்தில் நுழைந்தவளை, ஹெச். ஆர். கூறிய பெயர் உலுக்கி எடுத்தது…

“நீங்க செகண்ட் ஃப்ளோர்ல ரைட் சைட் போங்க… அங்க அஜய்ன்னு ஒருத்தர் இருப்பார்… நீங்க அவங்க டீம்ல தான் ஜாயின் பண்ணனும்… ஆல் தி பெஸ்ட்…” அவர் கை குலுக்கிச் சொல்ல, அஜயின் பெயரைக் கேட்ட கண்ணம்மா பேந்த பேந்த  விழித்துக் கொண்டு நின்றாள்.

அவளது முகத்தைப் பார்த்தவர், “சரி வாங்க…” அவரும் கை காட்டிவிட்டு முன்னே நடக்க, ‘அஜயா? அவரா இருக்குமோ?’ உள்ளத்தில் எழுந்த ஆவல் அவளை சந்தோஷக் கடலில் தள்ளிவிட,

மனசாட்சியோ, “உனக்கு திரும்ப அவரைப் பார்க்கணும்னு வேற ஆசை இருக்கா… உன்னை அவர் முகத்துலேயே முழிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார்… இது வேற யாரோவா இருக்கும்… இது அவரா இருக்காது… அவரா இருந்தா என்ன செய்யறது? இருக்காது தானே…” என்று பலவாறு தனக்குத் தானே சொல்லிக் கொண்ட தைரியங்கள் அனைத்தும், அங்கு இருந்த அஜயைப் பார்த்து, பின்னங்கால் பிடரியில் பட ஓடியது.

தனது டீமிற்கு ஒரு புது நபர் வரும் செய்தியை முன்னமே அறிந்திருந்த அஜய், அதுவும் அந்தப் பெயரைக் கேட்டவுடன், மனதில் என்ன தான் நினைக்கிறான் என்றே சொல்ல முடியாத அளவில் அந்த நபர் வரும் வரை பொறுமையின்றி காத்திருந்தான்… ஹெச். ஆர். ருடன் அவள் நடந்து வரும்போதே அவளை பார்த்திருந்த அஜய், அது கண்ணம்மா தான் என்று உறுதியானதும், “கண்ணம்மா…” அவனை அறியாமலே ஒரு குரல் மனதில் உள்ளே ரீங்காரம் செய்தது…

அவளது இளைத்த தோற்றமும், கண்களில் விரவி இருந்த ஆவலும் பயமும், அவளுக்கும் தன் பெயரைக்  கேட்டுத்தான் அந்த உணர்வுகள் என்பதை உணர்த்தியதோ?? அவள் அருகே வரும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அருகே நெருங்க நெருங்க அவளது அன்றைய செயல்கள் நொடியில் மனதில் வட்டமிட, அந்த செயல்களுக்கு அவளை இன்று வாட்டி வதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் அவள் வரவுக்காக ஆவலோடு காத்திருந்தான்.  

அவனைப் பார்த்து கண்ணம்மா சிலையென நிற்க, “ஹாய் ஐயாம் அஜய்… மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்…” அஜய் கேட்கவும், அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே அவள் நிற்க,

“கொஞ்சம் பயந்திருக்காங்க போல இருக்கு… பார்த்துக்கோங்க அஜய்…” ஹெச். ஆர் நகர்ந்து செல்லவும், நக்கலாக சிரித்த அஜய்,

“உனக்கு போய் பயம்ன்னு சொல்றான் பாரு… அவன் எவ்வளவு பெரிய கூமுட்டையா இருப்பான்… இங்க நான் டி.எல்.. நீ ஸ்டாஃப் அவ்வளவு தான்…” அஜயின் முதல் சீறல், அவள் அந்த டீமில் நுழைந்த மறுநிமிடத்தில் இருந்தே தொடங்கி, அவனுக்கு விபத்து நடப்பதற்கு முன்பு வரை அதுவே தொடர்ந்தது.

அஜய்யின் அனைத்து திட்டுகளையும் பொறுமையாக, தான் அவனுக்கு செய்த அநீதிக்கு தண்டனையாக அவள் ஏற்க நினைத்தாலும், அவனது சொற்கள் அவளைக் காயப்படுத்தும் போதோ, அல்லது அஜய் தன்னை பழி வாங்கி, தன்னால் அவனை காண முடியாத தூரத்திற்கு அனுப்பி விடுவானோ என்ற பயம் எழும் பொழுதும், அவளை அறியாமலே எதிர்த்துப் பேசி.. அதற்கும் அவனிடம் வாங்கிக் கட்டுவதும் தொடர் கதையானது…

அஜய்க்கோ… தான் அவளை… தன் மனைவியை பிறர் முன், அவள் தலை குனியும் படி திட்டுகிறோமே என்று சில சமயங்களில் எழும் எண்ணத்தை கண்டு அவனே திடுக்கிட்டு, அதற்கும் சேர்த்து கண்ணம்மாவை அவன் பார்வையால் வறுத்தெடுப்பதும் தொடர்ந்தது…

கண்ணம்மா உடம்பு சரி இல்லாமல் டேபிளில் படுத்திருந்த போது, என்ன முயன்றும் தடுக்க முடியாமல், அஜயின் மனதில், அவள் கையைக் கிழித்துக் கொண்ட போது, அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றது நினைவு வந்தது… அவள் உணவு உண்ண கூட எழுந்து செல்ல முடியாமல் சோர்ந்து கிடந்தது மனதை அறுக்க, என்ன தான் கோபம் இருந்தாலும், அவள் தன் மனைவி என்ற எண்ணம் மேலே எழும்பத் தான் செய்தது… அந்த தாக்கமே… அஜயின் மனதில் கண்ணம்மாவின் ஆட்சி நடக்கத் துவங்கியதோ??       

****************************

தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்த அஜயும், அஜயைக் காண ஓடி வந்த கண்ணம்மாவிற்கு கதவைத் திறந்து விட்ட கார்த்திக், அஜய் இருந்த அறையை காட்டிவிட்டு விலகிச் செல்ல, அவனை ஆவலாகப் பார்க்க வந்த கண்ணம்மா, அவன் அருகே இருந்த ஆல்பத்தைப் பார்த்ததுமே மனக்கண்ணில் தான் நடந்துக் கொண்ட செயல்கள் அனைத்தும் நினைவிற்கு வந்து, அவளை மனம் நோகச் செய்தது.

கண்களைத் திறந்தவள், அஜயின் நெற்றியில் இருந்த கட்டைப் பார்த்து, நடுங்கும் கரங்களுடன் அந்த கட்டை மென்மையாக வருட, அவளது ஸ்பரிசத்தில் கண் விழித்த அஜய், தன் அருகே அமர்ந்திருந்த கண்ணம்மாவை வெறித்தான்.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சிந்திப்போம்…. 

 

12 COMMENTS

 1. Ithelam loosu thanam ila Rammy ,I aloda kolupu than pavam ajay evalo kashtam avamanam?full family a yum aasingapaduthitu ipo nalavala ayita sari agiduma enna?ava parents ayum sollanum avanga veetu thathaku mudiyalanu seekiram marraige pannitu ,periya ponnu nalavanu ninapu,che enaku Ava mela kovama varuthu Rammy,ajay adicha oru adi ellam pathathu,nalla kathava sathitu veluthurukanum!

  • thanks bharathi … hmm kobam than varuthu ana ajay enna solran ??? avanuku avalai pidichu vera iruke… parpom ma… 🙂 🙂

 2. Kannamma friend pechae kettu ippadi ellama seivaa,, Konjam kooda yosika maatala..Ajay Ku paavam evlo avamanam, avanga family ve asinga paduthura maathiri pannitta.. Kannamma mela romba romba kobam varuthu.. Nice update sis kannamma mattum enga munnadi ninna avangala naagalum adikanum nu nenaikara alavuku azhaga eluthirinthinga Ajay oda unarvugalai.. Eagerly waiting for next update..

  • thanks hari proua … hmm ama enna seyyarathu avalai …. ellam seithachu … ini enna parigaram seyya pora parpom ma… 🙂 🙂

 3. ayyo intha kannamma romba mosam…. ajay ah ivlo avamana paduthi irukka….avan oda family ah romba kastapaduthita…too bad…eppadi ivala accept pannuvanga?

 4. ramz, ovvoru muraiyum ungakita sollanumnu ninaichi,
  ‘antha’ vishayaththai mattum solla marathidurren…
  yenna theriyuma???
  unga kutty kutty kavithaigal…
  superb pa… ovvoru kavithaiyum, unga update’a padikka thoondugira kavithaigal dhan…

  adutha update’a seekiram podunga…

  IM WAITING, RAMZ…

 5. Hey I couldn’t accept kannamma ‘s justification because she should talk to someone before she did all this nonsense. Doesn’t she having that much knowledge? Her parents they are also nonsense, they should completely ask two sides before they belive their daughter. Nowadays most of the girls misuse the law for their convenient, this is very bad. I never forgive this kind of thing. Fool kannamma.

LEAVE A REPLY