SHARE

அசாதரணமான உனது
அலட்டல்கள் எல்லாம்
இப்போது அதி முக்கிய
இஷ்டங்களாய் மாறி போக
அவிழ்க்க முடியாத
இந்த குழப்ப முடிச்சுகளின்
இறுக்கத்தில்
இறுகித் தவிக்கிறேன்!!

 

கண்ணம்மா சொன்னதைக் கேட்ட மீனா உறைந்து நிற்க, கண்ணம்மாவோ அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று, குளித்து அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்தாள்.

அவளைப் பார்த்ததும், அருகில் வந்த சுப்பு… “கண்ணு… போய் மாப்பிள்ளைக்கு ஏதாவது வேணுமான்னு கேளு… அவருக்கு இந்த வீடு புதுசு இல்ல…” என்று சொல்லவும், நல்ல பிள்ளையாக தலையசைத்தவள், அஜயின் அருகே சென்று நின்றாள்.

நின்றதோடல்லாமல், “இப்போ தானே காபி குடிச்சான்… அதுக்குள்ள சாப்பிட ஏதாவது வேணுமாமா?” என்று முணுமுணுக்க,  

‘என்ன’ என்பது போல அஜய் அவளைப் பார்க்க, “உங்களுக்கு ஏதாவது வேணுமா?” கண்ணம்மா சத்தமாகக் கேட்கவும், அவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே, வேண்டாம் என்று அவன் தலையசைக்கவும்,

“சரி…” என்று திரும்பியவள், “வாயைத் திறந்து பேச அ…வ்வ்….வளவு வலிக்குது… சும்மாவா… ராத்திரி பூரா லூசு மாதிரி சிரிச்சா… இப்படித் தான் வாய் வலிக்கும்…” என்று அவனை கேலி செய்துக் கொண்டே, கிட்செனுக்குள் செல்ல, அது அஜயின் காதில் விழுந்து, எரிச்சலைக் கிளப்பியது.

“நல்ல பெண்டாட்டி… இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு.. போற வழியில இறக்கி விட்டு தவிக்க விடறேன்…” தனக்குள் சூளுரைத்துக் கொண்டவன், பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

மீனா சுப்புவிடம் அஜயைப் பற்றி சொல்ல நினைத்து அவர் அருகே நெருங்க, பெரியவர் இருந்த அறையில் இருந்து காலிங் பெல் ஒலித்தது…

“அப்பா ரூமுல இருந்து பெல் சத்தம்…” உள்ளே ஓடிச் சென்ற சுப்பு, சிறிது பதட்டமாகவே வெளியே ஓடி வந்து, “மாப்பிள்ளை… உங்களை தாத்தா கூப்பிடறாங்க… கண்ணம்மா.. நீயும் வா…” அவசரமாக அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

உள்ளே சென்ற அஜய்க்கு அந்த முதியவர் தனது இறுதி மூச்சுக்கு போராடுவது நன்றாகவே தெரிந்தது… அது போன்றதொரு காட்சியை அவன் நினைவு தெரிந்த நாள் முதலாக, இப்பொழுது தான் பார்க்கிறான்… மனம் பதைபதைக்க அவரைப் பார்த்துக் கொண்டு நிற்க, கண்ணம்மா அவர் அருகே ஓட, அவரது கை அஜயை நோக்கி நீண்டது…

அஜய் அவர் அருகே நெருங்கி அவரது கைகளைப் பற்றிக் கொள்ள, கண்ணம்மாவையும் அவனையும் சேர்த்துப் பார்த்தவரின் கண்கள் சந்தோஷத்தில் ஓரிரு வினாடிகள் மின்னி முகத்தில் புன்னகை மெல்ல எட்டிப்பார்க்கவும், ‘அப்பா டாக்டர கூப்பிடறேன்…’ சுப்பு சொல்லிவிட்டு நகர, மறுப்பாக தலையசைத்தவரின் கண்கள் மெல்ல மூடிக் கொண்டது…

மிகவும் அன்பான மனிதர்…. அவரின் மறைவு, அந்தக் குடும்பத்தையே சிறிது அசைத்துப் பார்த்தது… அவரது இறுதிக் காரியங்கள் முடியும்வரை, கண்ணம்மாவை அங்கேயே இருக்குமாறு ராதா சொல்லிவிட, திருமணத்திற்காக விடுமுறை எடுத்திருந்த அஜயும் அங்கேயே தங்கினான்.

அனைத்து உறவினர்களும் அங்கேயே இருக்க, மூன்றாம் நாளே காரியங்கள் அனைத்தும் முடிந்தது… கண்ணம்மாவை எப்பொழுது புகுந்த வீட்டில் கொண்டு விடுவது என்று வீட்டிற்கு வந்திருந்த சொந்த பந்தங்கள் கலந்து ஆலோசிக்கத் தொடங்கினர். ஆளுக்கு ஒன்றாக சொல்லிக் கொண்டிருக்க, “நாளைக்கே நல்ல நாளா இருக்கு… நாங்க கூட்டிட்டு போறோம்…” அந்த வாக்கு வாதத்தை ஸ்ரீநிவாசன் முடித்து வைத்தார்.

“அதுக்குள்ளயேவா?” சில குரல்கள் எழுந்தாலும், சிலர் அவள் செல்லத் தானே வேண்டும் என்று மீனாவிடமும், சுப்புவிடமும் சமாதானம் கூறி, கண்ணம்மாவை அனுப்பி வைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளச் சொன்னார்கள்… அந்த சூழலில், வேறு எதுவும் யோசிக்க முடியாத மீனாவும், கண்ணம்மாவை அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை கவனிக்கத் துவங்கினார்.

கண்ணம்மா கூறியவைகளை சுப்புவிடம் சொல்ல முடியாமல் தடைப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், அந்த சூழலிலும், கண்ணம்மா உண்ணாமல் இருப்பதைப் பார்த்த அஜய், கயலின் மூலம் அவளை உண்ண வைத்ததில், அவனுக்கு கண்ணம்மா மீது இருந்த அக்கறையை  கவனித்த மீனாவிற்கு, அஜயின் மீது சிறு நம்பிக்கைப் பிறந்திருந்தது…    

“கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் மாப்பிள்ளை நல்லவங்க தான் கண்ணம்மா… அவருக்கு உன் மேல அன்பு இருக்கு… அவரைப் புரிஞ்சு நடந்துக்கோ…” என்று கண்ணம்மாவிற்கு சமாதானம் செய்ய முயன்றவர், அவளது பெட்டியை அடுக்கத் துவங்கினார்.

“அம்மா… என்னால அங்க எல்லாம் போய் இருக்க முடியாது…” கண்ணம்மா அடம் பிடிக்க, மீனா அவளை கோபமாக முறைத்து,

“ஏண்டி… கல்யாணம் ஆனா புருஷன் வீட்டுக்கு போய் தான் ஆகணும்… இங்கயே உட்கார்ந்து சொகுசா சாப்பிட்டுட்டு இருக்கலாம்ன்னு பார்க்கறியா? இனி உனக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு… அவரையும் உன்னையும், உங்களுக்கு பிறக்கப் போற குழந்தைங்க எல்லாத்தையும் பொறுப்பா நீ தான் பார்த்துக்கணும்… இன்னும் நீ சின்னப் பிள்ளை இல்ல…” மீனா அதட்டல் போட, கண்ணம்மாவின் மனதில் அதிர்ச்சி தோன்ற, வேகமாக யோசித்து,    

“அம்மா… எனக்கு பயமா இருக்கும்மா… என்னால எப்படி அந்த அரக்கன் கூட போய் இருக்க முடியும்… நம்ம வீட்லயே அவன் என்னை எப்படி எல்லாம் பேசினான்… அங்க போனா என்னை அடிச்சே கொன்னு போட்டாலும் போடுவான்…

எனக்கு படிக்கணும்மா… அங்க போனா என்னால எப்படி படிக்க முடியும்? இப்போ செமஸ்டர் லீவா இருக்கறதுனால அங்க இருக்கலாம்… அப்பறம்??” பரிதாபமாக அவள் கேட்டுக் கொண்டே போக, அவளை தன் அருகே அமர்த்திக் கொண்ட மீனா…

“இங்கப் பாரு கண்ணம்மா.. மாப்பிள்ளையப் பார்த்தா நல்ல மாதிரி தான் தெரியுது… கொஞ்சம் அனுசரிச்சு போ… அவரை உன் வழிக்கு கொண்டு வந்துடலாம்… மாப்பிள்ளை உன் படிப்பு தடை படாம இருக்க ஏதாவது ஏற்பாடு செய்யறேன்னு சொல்லி இருக்கார் போல….

அவரால முடியலைன்னா கூட என்னடி… அவர் சம்பாதிக்கிறதே உங்களுக்கு குடும்பம் நடத்தப் போதும்… வீணா செலவு பண்ணி நீயும் எதுக்கு படிச்சிக்கிட்டு… குடும்பத்தைப் பாரு… போதும்… இப்போ நீ படிச்சு ஒண்ணும் ஆகப் போறது இல்ல…” மீனா சொல்லவும், கண்ணம்மாவின் மனம் மேலும் கொதித்தது.

“ஓ… இவர் முயற்சி தான் செய்வாரோ… ஓவரா இல்ல இருக்கு.. இவர் என்ன எனக்காக செய்யறது… குடும்பம் குட்டின்னு என் படிப்பு பாதியில நிக்கப் போகுது… எல்லாம் இவனால வந்தது…” மனதினில் கறுவிக் கொண்டவள், தனது செல்லை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

மீனா அவளது துணி மணிகளை பெட்டியில் எடுத்து வைத்து, அவளை அறைக்கு அழைத்து, அறிவுரைகளை வழங்கத் துவங்க, கண்ணம்மாவின் மனம் பதறிப் போனது… ‘நிஜமாவே நான் இந்த வீட்டை விட்டு போகப் போறேனா? நான் கஷ்டப்பட்டு மார்க் எடுத்து வாங்கின பி.இ. சீட்… எல்லாம் அவ்வளவு தானா? அவனுக்கு சமைச்சுப் போடவா நான் படிச்சேன்…” கண்ணம்மா எண்ணவும், அவளது கண்கள் தாரை தாரையாக கண்ணீரைப் பொழியத் துவங்கியது.

“கண்ணம்மா… பொண்ணுங்களுக்கு படிப்பை, மத்த எல்லாத்தையும் விட நல்ல குடும்பம் அமையறது தான் கஷ்டம்… அந்த வகையில நீ கொடுத்து வச்சவ தான்… உங்க அப்பாகூட இந்த மூணு நாளா… நான் சாப்பிட்டேனா… கொஞ்சமாவது உட்கார்ந்தேனான்னு கவனிக்கல… ஆனா… மாப்பிள்ளை அப்படி இல்ல…

அதுவே எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அன்னிக்கும் அவர் என்ன சொல்லி, நீ என்ன தப்பா புரிஞ்சிக்கிட்டயோ.. எல்லாம் நல்லதாவே நடக்கும் கண்ணம்மா… சந்தோஷமா போயிட்டு வா..” ஒருவழியாக தேறுதல் மொழி சொல்லி, அவளை அஜயுடன் அனுப்பி வைத்தனர்…

கேலி கிண்டல்களுடன், விஜயும் அனுபமாவும் அவர்களை ரயில்நிலையம் வரை வந்து வழியனுப்பி வைக்க, ட்ரெயினில் ஏறியதும், கண்ணம்மா ஓடிச்சென்று ஜன்னல் சீட்டில் அமர, ராதா அவளைப் பார்த்து புன்னகைத்தார்… அவளது சிறு பிள்ளைத் தனமான செயல் இரு ஆண்களைக் கூட புன்னகைக்க வைத்தது…

“அஜ்ஜூ… நீ அவ பக்கத்துல உட்காரு… பேசிட்டே வர வசதியா இருக்கும்…” ராதா யதார்த்தமாகச் சொல்ல, “சரிம்மா…” என்று அமர்ந்த அஜய்,

“நீ பெங்களூருக்கு வந்திருக்கியா கண்ணம்மா… கிளைமேட் நல்லா இருக்கும்…” தன்னை நம்பி தன்னுடன் வாழ்க்கையை பகிர வந்தவளிடம் அனுசரணையாக இருக்க, அஜய் முதல் அடியை எடுத்து வைத்தான்.

“எனக்கு தூக்கம் வருது…” பட்டென்று முகத்தில் அடித்தது போல சொல்லியவள், ஜன்னலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

அவள் சொல்லிய விதத்தில் ராதாவின் முகம் வாடிப் போக, யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசன், அஜயை கேள்வியாகப் பார்க்க, அவனோ தோளை குலுக்கிவிட்டு, தனது மொபைலை எடுத்து விளையாடத் துவங்க, ராதா ஸ்ரீனிவாசனை குற்றம் சாட்டுவது போல பார்த்தார்.

“சின்னப் பொண்ணு… கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும்… எல்லாம் அஜயே சரி பண்ணிடுவான்.. உன் மகனைப் பத்தி தெரியாதா?” மெல்ல அஜய்க்கு கேட்காமல் அவர் முணுமுணுக்க, அஜய் உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவைத் திரும்பிப் பார்த்தான்.

எதுவோ சரியில்லை என்பது போல ராதாவிற்குத் தோன்ற, அஜயிடம் பேச வேண்டும் போல மனம் அடித்துக் கொண்டது… திருமணமே வேண்டாம் என்ற பிள்ளை… சம்மதித்ததே சந்தோசம் என்றாலும், கண்ணம்மாவைப் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வதற்கு கூட நேரமும் சந்தர்ப்பமும் அமையாமல் அவசர கதியில் திருமணம் நடந்தது, அவருக்கு சிறு வருத்தத்தை கொடுத்திருந்தது.

இப்பொழுதும் தங்கள் முன்னிலையிலேயே கண்ணம்மா அஜயை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காதது அவரது மனதிற்கு கஷ்டத்தைக் கொடுக்க, சில மணி நேரங்கள் அமைதியாக வந்தவர், “அஜய்.. மதியமும் கண்ணம்மா சாப்பிடல… அவளுக்கு டீ வேணுமான்னு கேட்டு வாங்கிக் கொடு…” ராதா அஜயிடம் சொல்லவும்,

“இப்போ எழுப்பினா, பிசாசு… என்னவெல்லாம் சொல்லுமோ… Mr. அஜய்… அம்மா அப்பா முன்னால உனக்கு இந்த அவமானம் தேவையா? அன்னைக்கே எனக்கு இவளைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஓடி வந்திருக்கலாம்…” என்று தன்னையே நொந்துக் கொண்டு, அங்கிருந்து எழுந்து சென்றான்.

“என்னங்க இவன் இப்படி இருக்கான்… ஒருவேளை இவ கோபமா பேசறதுக்கு அவன் தான் காரணமோ?” ராதா தனது கணவரிடம் புலம்ப, அஜய் ஒரு டீயை வாங்கிக் கொண்டு வந்து, ராதாவின் கையில் கொடுத்துவிட்டு, கண்ணம்மாவின் கையைத் தொட்டு மெல்ல எழுப்ப எத்தனிக்க, பட்டென்று கண் திறந்தவள்,

“என்ன?” என்று எரிந்து விழவும்,

அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு எரிச்சல் உண்டாக “ஹான்… அப்படியே மயங்கி கியங்கி வச்சன்னா உங்க வீட்டுக்கு யாரு பதில் சொல்றது… அதுவும் தவிர… நீ கொண்டு வந்த லக்கேஜ்ஜே அதிகம்… அதுல நீயும் ஒரு லக்கேஜா ஆனன்னு வை… உன்னைத் தூக்கிட்டு போக நான் ஒண்ணும் பீமன் கிடையாது… குடிச்சிட்டு எவ்வளவு நேரம் வேணாலும் கண்ணை மூடிட்டு கிட… யாரு வேண்டாம்ன்னு சொன்னது.. ட்ரெயினை விட்டு இறங்க மனசு வரலைன்னாலும், அப்படியே திரும்ப இதுலயே சென்னை போய் சேர்… விட்டது தொல்லைன்னு நானும் சந்தோஷமா இருப்பேன்…” அஜய் படபடக்கவும், இருவரையும் பார்த்த அஜயின் பெற்றோர்கள் கவலை கொள்ள, அதிலும் ராதாவின் கண்கள் கலங்குவதைப் பார்த்தவன், அவரது கையில் இருந்த டீயை அவளிடம் நீட்ட,

“எனக்கு டீ பிடிக்காது…” என்று அதை வாங்க மறுத்தாள்.

“சரி போ… நானே குடிச்சிக்கறேன்…” என்றவன், அதை தானே குடித்து முடித்து, கப்பை கொண்டு போய் வீசி விட்டும் வந்தான்.

அதற்குப் பிறகு அவளது வயிற்றுப் பசியைப் போக்க, ராதா முயன்றாலும், கண்ணம்மா அடமாக வேண்டாமென்று அமர்ந்திருக்க, அவளது சிறு குடலை பெருங்குடல் தின்னத் துவங்கி இருந்தது.

ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கேயே உணவை முடித்துக் கொள்ள எண்ணி, ஹோட்டலுக்குச் செல்ல, உணவு வந்ததும் அது கண்ணம்மாவின் வயிற்றுக்குள் போன வேகத்தைப் பார்த்து அஜய்க்கு சிரிப்பு தான் வந்தது.. வீடு வந்து சேர்ந்தவர்களை, வாசலில் நிற்க வைத்துவிட்டு, ராதா வீட்டிற்குள் ஓடிச் சென்றார்.

ஆலம் சுற்றியபிறகு மணமக்களை உள்ளே அழைக்க அவர் நினைத்ததில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அவர்களிருவரையும் வெளியே காத்திருக்கச் சொல்லாமலே அவசரமாக உள்ளே ஓடினார். அவர் வரும் வரை கூட காத்திருக்க பொறுமை இல்லாமல், கண்ணம்மா திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து சுற்றிப் பார்க்கத்தொடங்க, ஆலத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த ராதா அஜயை பரிதாபமாகப் பார்த்தார்.

“நீ ஏன்ம்மா அதை சும்மா வச்சிக்கிட்டு இருக்க? எனக்கு சுத்து… இப்படி ஒருத்திய வெற்றிகரமா கல்யாணம் செய்து பெங்களூர் வரை கூட்டிட்டு வந்திருக்கேன் இல்ல…” என்று அவன் நக்கலாகச் சொல்லவும், அந்த தட்டை வாங்கி ஸ்ரீநிவாசன் வாஷ்பேசினில் கொட்ட, தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு, அஜய் தனது அறைக்குள் நுழைந்தான்.

“என்னோட சூட்கேசை தூக்கிட்டு போக இங்க வேலைக்காரங்க யாரும் இல்லையா?” நடுக் கூடத்தில் நின்றுக் கொண்டு, கண்ணம்மா கேட்கவும்,

“இங்க அவங்கவங்க வேலைய அவங்கவங்க தான் பார்த்துப்பாங்க… வீடு பெருக்கித் துடைக்க தான் வேலைக்காரம்மா வருவாங்க… மத்தபடி சமையல் எல்லாம் ராதா தான் செய்வா… நாளையில இருந்து நீயும் எழுந்து அவளுக்கு கூட மாட உதவி செய்…” ஸ்ரீனிவாசன் சொல்லிவிட்டு உள்ளே செல்ல நகரவும், எந்த பதிலும் பேசாமல், அஜய் இருந்த அறைக்குள், தனது பெட்டியை தூக்கிக்கொண்டு சென்றாள்.

பயணத்தின் அலுப்பில் ஒரு குளியல் போட்டவுடன் அஜயின் கண்கள் சொருகியது. அவன் படுத்ததும் உறங்கி விட, சில வேலைகளை செய்த கண்ணம்மா, அதற்கு பின்பு நிம்மதியாக உறங்கினாள். மறுநாள் காலை, வழக்கம் போல எழுந்த அஜய், தனது அறையைப் பார்த்து அலறாத குறையாக எழுந்து அமர்ந்தான்.

அலமாரியில் இருந்த அவனது துணிகள், ஆங்காங்கே,  இறைந்துக் கிடக்க, அயர்ன் செய்யப்பட்டு பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்ட் ஷர்ட் அனைத்தும் டிரெஸ்ஸிங் டேபிளின் மீது சரிந்துக் கிடந்தன… அவனது லேப்டாப்பின் மேல், ஈர துண்டு ஒன்று பாதி காய்ந்தும் காயாத நிலையில், தனது மணத்தை பரப்பிக் கொண்டிருக்க, காலையிலேயே கண்ட இந்தக் காட்சியில், அஜயின் பி.பி… எகிறத் தொடங்கி இருந்தது….

அவளை எழுப்பி இப்பொழுது எது கேட்டாலும், ஏட்டிக்குப் போட்டியாகவே  பதில் சொல்வாள் என்றுணர்ந்தவன், மீண்டும் அவை அனைத்தையும் எடுத்து வைக்க அலமாரியைத் திறக்க, அதில் சாரை சாரையாய் எறும்புகள் மேய்ந்துக் கொண்டிருந்தன…

“இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல இப்படி கொழுப்பை வச்சு செய்தாங்களா? எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குப் பாரு…” என்று புலம்பியபடியே, பொறுமையாக அனைத்தையும் சுத்தம் செய்தவன், பல் துலக்கி விட்டு, குளித்தும் முடித்து, அறையை விட்டு வெளியில் செல்ல, ராதா ஒரு எதிர்ப்பார்ப்புடன் அஜயைப் பார்த்தார்.

“என்னம்மா அப்படி பார்க்கற?” புரியாமல் அஜய் கேட்க,

“கண்ணம்மா… இன்னும் எழலையா?” அஜயின் அறையைப் பார்த்துக் கொண்டே ராதா கேட்கவும்,

“அவ சின்னப் பொண்ணு தானேம்மா… சீக்கிரம் எழுந்து பழக்கம் இருக்காது… இன்னும் காலேஜ் கூட முடிக்கலையே… மெல்ல மெல்ல மாத்திக்கலாம்மா…” அவருக்கு சமாதானம் சொல்வது போல தனக்குமே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

“அப்பாவுக்கு இன்னும் பத்து நாள்ல துபாய்க்கு கிளம்பற மாதிரி இருக்கும்ம்னு சொன்னாங்க அஜய்… நான் வேணா கொஞ்ச நாள் உன் கூட இங்க இருக்கவா?” ராதா அவனை பாவமாக பார்த்துக் கொண்டே கேட்கவும்,

“அப்பா உன்னை அப்படி எல்லாம் இங்க இருக்க விட மாட்டார்… அவர் கிளம்பச் சொன்னா கிளம்பு… நான் பார்த்துக்கறேன்… அது தான் உங்க விருப்பப்படியே என்னைப் பார்த்துக்க ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கீங்களே…” அஜய் சொல்லி முடிப்பதற்குள்,

“நான் என்ன ஆயா வேலை பார்க்கவா இங்க வந்திருக்கேன்…” என்று கேட்டபடி, கண்ணம்மா வந்து நின்றாள்.

“நீ ஒண்ணும் என்னைப் பார்த்துக்க வேணாம்… ஆனா இங்க நடக்கறதெல்லாம் பார்த்தா, நான் தான் நர்சரி ஸ்கூல் நடத்தற மாதிரி இருக்கு…” அஜய் அவளிடம் எரிந்து விழவும்,

“கண்ணம்மா… நீ போய் குளிச்சிட்டு வா… காலையில எல்லாரும் சேர்ந்தே டிபன் சாப்பிடலாம்…” அவர்கள் இருவருக்கும் தொடங்கவிருந்த வாக்குவாதத்தை குறைக்க, ராதா அவளை உள்ளே அனுப்ப முயன்றார்.

“ஏன் நான் குளிக்காம சாப்பிட்டா அது உள்ள இறங்காதோ?” என்று கேட்டவள், டைனிங் அறைக்குச் செல்ல, அஜய் அவளது கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு அறையில் தள்ளி, “குளிச்சிட்டு கதவைத் தட்டு…. திறக்கறேன்… குளிக்காம சாப்பிடற பழக்கம் இங்க வேண்டாம்…” என்றபடி கதவை அடைத்தான்.

உள்ளே சென்றவள், அவசரமாக தனது அன்னைக்கு அழைத்தாள்… “அம்மா…” மீனா போனை எடுத்ததுமே பெருங்குரலில் அவள் அழ, மீனா பதறிப் போனார்.

“என்ன கண்ணம்மா… என்னாச்சு? எதுக்கு இப்படி அழற?” தாயுள்ளம் பதறியது.

“நான் பசிக்குதுன்னு சாப்பிடப் போனேன்மா… அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து, எனக்கு சாப்பாடு போட மாட்டேன்னு சொல்லி ரூம் உள்ள போட்டு அடைச்சிட்டாங்கம்மா… எனக்கு ரொம்ப பசிக்குதும்மா… அய்யோ… பசியில வயிறு வலிக்குதே… நேத்து நம்ம வீட்ல சாப்பிட்டுக் கிளம்பினது… அதுக்கு அப்பறம் ஒரு டீ கூட எனக்கு வாங்கித் தரவே இல்ல… தெரியுமா?” அழுகையின் இடையில் அவள் சொல்லவும், அதைக் கேட்ட மீனா திகைக்க,

“நேத்து ராத்திரி கூட நான் தூங்கவே இல்லம்மா… அவரோட அலமாரில இருந்த துணி மணி எல்லாத்தையும் எடுத்து வெளிய போட்டு… அதை எல்லாம் அடுக்கி வச்சிட்டு தூங்குன்னு சொல்லிட்டார்ம்மா…. அதுவும் தவிர வேணும்னே அயர்ன் பண்ணின துணயெல்லாம் கலைச்சுப் போட்டு மறுபடியும் அயர்ன் செய்து வைக்க சொல்லிட்டாரேன்னு, நான் செய்து முடிக்கவே விடிஞ்சு போச்சும்மா… இப்போ சோறும் போட மாட்டேங்கிறாங்க… கொஞ்சம் பழைய சாதம் இருந்தாக் கூடப் போதும்ன்னு கேட்டாலும்…. கிடையாதுன்னு சொல்லிட்டாங்கம்மா….” தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அவள் மேற்கொள்ள, அந்தப் பக்கம் மீனாவோ, தனது மகளின் சொல்லை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

அவரது அமைதி, அவர் நம்பவில்லை என்பதைக் காட்ட, உடனே ஓடிச் சென்று, கதவை படபடவென்று தட்டினாள்.

“திறக்க முடியாதுடி… ஒழுங்கா நான் சொன்னதை செய்… அப்பறம் தான் உனக்கு சாப்பாடு எல்லாம்” அஜயின் குரல் கோபமாக வரவும், அவன் சொன்னது அவருக்கு தெளிவாக காதில் விழுந்தது.     

“ஹையோ…” மனம் பதை பதைக்க மீனா சுப்புவை அழைக்க,

“ப்ளீஸ்ங்க… எனக்கு ரொம்ப பசிக்குது… பழைய சாதம் இருந்தா கூட போதுங்க… நீங்க சொல்றபடி, எல்லா வீட்டு வேலையையும் நானே செய்யறேன்…” மெல்லிய குரலில் அவள் கெஞ்சிக் கதற… அஜய் குழப்பமாக ராதாவைப் பார்க்க, அவரோ அதிர்ச்சியுடன் அஜயைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று இருவரும் குழம்பி நிற்கையிலேயே, உள்ளே வந்த ஸ்ரீனிவாசனுக்கு, கதவைத் தட்டிக் கொண்டே கெஞ்சிக் கொண்டிருந்த கண்ணம்மாவின் குரலைக் கேட்டு குழப்பமே ஏற்பட, அவசரமாக சென்று கதவைத் திறந்து, “எதுக்கு இப்படி சத்தம் போடற?” என்று என்ன முயன்றும் அவரது குரல் அதட்டலாகவே வெளி வந்தது.

“மாமா… பசிக்குது மாமா… ப்ளீஸ் அவரை சாப்பாடு போடச் சொல்லுங்க…” அவள் அவரிடம் கெஞ்ச…

“உனக்கு யார் சாப்பாடு போட மாட்டேன்னு சொன்னா? போய் குளிச்சிட்டு வான்னு தானே சொன்னேன்…” அஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனை கட் செய்தவள், அஜயை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அமைதியாக அறையின் உள்ளே சென்றாள்.

இத்தனை நேரம் அவள் சத்தம் போட்டது என்ன? இப்பொழுது அவள் அமைதியாக போவது என்ன? என்ன நடக்கிறது என்ற குழப்பத்துடனே மூவரும் நின்றுக் கொண்டிருக்க, அவர்களது வீட்டின் வாசல் கதவின் வழியாக இருவர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீனிவாசன் திரும்பிப் பார்க்கவும், “சார்… ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, இத்தனை வருடம் வாழ்ந்த இடத்தில், இப்படி ஒரு கேள்வி எழுந்தது, அவருக்கு அவமானத்தைக் கொடுக்க, அதை மறைக்க முயன்றபடி,

“இல்ல சார்… சும்மா பேசிட்டு இருந்தோம்… சின்னப் பொண்ணு இல்ல… அது தான் சத்தமா பேசறா…” என்று அவர்களை சமாளித்து அனுப்பி வைத்து, ராதாவிடம் என்னவென்று விசாரித்தார். ராதாவும் அஜையும் நடந்ததைச் சொல்லவும், ஸ்ரீநிவாசன் அவசரமாக விஜய்க்கு அழைப்பதற்காக தனது போனை எடுக்க….

“ஏதாவது சொல்லி அவங்களையும் கலவரப்படுத்த வேண்டாம்ங்க… கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்… அனுவும் மாப்பிள்ளையும் தான் கிளம்பி வரேன்னு சொல்லி இருக்காங்களே…” ராதா சொல்லவும், அஜயைப் பார்த்துவிட்டு,

“அடுத்த வாரம் நான் மட்டும் ஊருக்கு கிளம்பறேன்… அம்மா இங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும்…” என்று ஸ்ரீனிவாசன் சொல்லவும், அஜய் அமைதியாகவே உள்ளே சென்றான்.

அங்கு மீனாவோ, சுப்புவத் தேடி விஷயத்தைச் சொல்ல, “ச்சே… அவங்க குடும்பம் நல்ல குடும்பம்ன்னு எல்லாருமே சொன்னாங்க மீனா… அப்படி எல்லாம் எதுவும் இருக்காது…” என்று சமாதானம் செய்துவிட்டு, நகர்ந்தார்.

“இல்லங்க… நாம எதுக்கும் போய் அவளை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்… மனசுக்கு கொஞ்சம் திருப்தியா இருக்கும்…” மீனா வற்புறுத்த,

“இங்க இவங்க எல்லாம் கிளம்பி போனதுக்கு அப்பறம் நாம போகலாம் மீனா… இப்போ கிளம்பிப் போனா அது இவங்க பேச வாயில அவல் கிடைச்சா போல இருக்கும்…” என்று சமாதானம் செய்தார்.

—————

குளித்து முடித்து வந்தவள், ஹாலில் சட்டமாக அமர்ந்துக் கொண்டு, டிவியை சத்தமாக ஓட விடத் துவங்கினாள். அவள் எதிரில் அமர்ந்திருந்த ஸ்ரீனிவாசன், “கண்ணம்மா… சவுண்ட்டை கம்மியா வைம்மா… சின்ன ஹால்ல சவுண்ட் ரொம்ப எக்கோ ஆகுது…” தன்மையாகவே சொன்னார்.

“அப்போ பெரிய பங்களாவா பாருங்க… என்னவோ உங்க மகன் கை நிறைய சம்பாதிக்கிறான்… நீங்க இங்கயே ரெண்டு பிளாட்ஸ் வச்சிருக்கீங்க அப்படி இப்படின்னு ரொம்ப பெருமையா சொன்னாங்க… இந்த புறா கூண்டுக்குத் தான் அவ்வளவு பீத்தல் போல…” உதட்டை சுழித்து ஒரு மாதிரிச் சொன்னவள், டிவியை அணைத்துவிட்டு, அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.

சாப்பிட அழைத்தும் வர மறுப்பவள், ராதா கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிய பிறகு, வந்து பெயருக்கு இரண்டு வாய் கொறித்துவிட்டு, “இதுல உப்பே இல்ல… அதுல காரமே இல்ல… இதை நாய் கூட சாப்பிடாது…” என்று குறைகளை சொல்லி, மீதமிருந்த சாப்பாடு முழுவதையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, மீண்டும் அறைக்குள் புகுந்துக் கொள்வாள்.

அவசர கதியில் நன்றாக விசாரிக்காமல் திருமணத்தை முடித்து விட்டோமோ என்று ஒரே நாளில் அஜயின் பெற்றவர்கள் கலங்கும் நிலைக்கு அவர்களை ஆளாக்கி இருந்தாள்.

திடீரென்று சத்தம் போட்டு அழுவதும், ‘வேண்டாங்க… வேண்டாங்க… சொன்னப் பேச்சைக் கேட்கறேங்க…’ என்று கதறுவதும், அவளுக்கு மனநிலை சரி இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு இருந்தது…

அங்கு அவளது குரலைக் கேட்ட மீனாவோ, தனது மகளின் நிலையை எண்ணி தவியாய் தவித்தார்… ஆனால், அவர் யோசிக்கத் தவறியது, எப்படி அவள் ஒவ்வொரு முறையும் கதறுவதற்கு முன்பு வரை, அவரிடம் சாதாரணமாக போனில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதே… ஒரு தாயாய் அவளது கதறலை மட்டுமே அவரால் யோசிக்க முடிந்தது…. 

மறுநாள் சனிக்கிழமை, அஜய் தன்னுடைய நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க பெரியவரின் இறப்பை ஒட்டி மாற்றி ஏற்பாடு செய்திருந்த நாள். காலையிலேயே அஜய் அவளிடம் சொல்லி இருக்க, அவளோ தூங்கி விழித்து, நைட்டியோடு அமர்ந்திருந்தாள்.

“கண்ணம்மா.. நாம இங்க இருந்து அஞ்சு மணிக்கு கிளம்பினா தான் அங்க ஆறு மணிக்குப் போக சரியா இருக்கும்… ப்ளீஸ் கிளம்பு… இன்னைக்கு ஒரு நாள் என் சொல் பேச்சைக் கேளு… என் பிரெண்ட்ஸ் முன்னால என்னை அசிங்கப்படுத்திடாதே…” அஜய் கெஞ்ச, கண்ணம்மா சட்டமாகவே அமர்ந்திருந்தாள்…

“ஏய் கிளம்புன்னு சொல்றேன் இல்ல…” பொறுமை காற்றில் பறக்க, அஜய் உறுமவும், அவனது அந்தக் குரலைக் கேட்ட கண்ணம்மாவின் உடல் தூக்கிப் போட்டு நடுங்கியது. கண்களின் முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்க்க, அதைப் பார்த்த அஜய், தன்னையே நொந்து கொண்டான்.

“போ… போய் ரெடியாகு… குட் கேர்ள் இல்ல…” என்றவன், அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அறைக்குச் சென்று, அவளுடைய புடவைகள் இருந்த இடத்தில் இருந்து ஒரு அழகான புடவையை தேர்வு செய்து கொடுத்து, அவளை அணியுமாறு சொல்ல, அஜயின் உறுமல் வேலை செய்தது…

விரைவிலேயே கிளம்பி தயாராகி வந்தவளை வரவேற்றது, அவர்களுடன் இரண்டு நாட்கள் சேர்ந்து ஊரைச் சுற்றலாம் என்ற ஆசையுடன் சென்னையில் இருந்து வந்திருந்தவிஜயும், அனுபமாவும்… “வாவ் அண்ணி… ரொம்ப அழகா இருக்கீங்க…” அனுபமா அவளின் கன்னத்தை வழித்து சொல்லி, தன் கழுத்தில் இருந்த ஒரு டிசைனர் செட் செயினை கழட்டி அவள் கழுத்தில் மாட்டி விட்டு,

“நீங்க போட்டு இருக்கற தோடே இதுக்கு செட் ஆகும் அண்ணி… ரொம்ப அழகா இருக்கீங்க… இங்கத் திரும்புங்க… உங்க கிளிப் சரியா இல்ல…” என்றபடியே அதை சரி செய்ய எத்தனிக்க,   

“என்ன என்னைப் பார்த்து கிண்டல் செய்யறியா?” கண்ணம்மா தொடங்கும் போதே, அனுபமா அதிர்ந்து விழித்தாள்.

“அண்ணி…” அதிர்ச்சியுடன் அவள் அழைக்க,

“நீயும் உங்க அண்ணனும் ரொம்ப அழகு… நான் கொஞ்சம் கலர் குறைவு தான்… என்னைப் போய் அழகுன்னு சொல்ற? நக்கல் தானே…” வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தமாக விழ, அஜய்க்கு எதுவோ புரிந்தும் புரியாமலும் இருந்தது…

ஒருவேளை அவளது தாழ்வு மனப்பான்மை தான் அவள் இந்த மாதிரி நடக்க காரணமோ? என்று யோசனை ஓட, விஜய் அஜயை யோசனையோடு பார்த்தான்.

“கண்ணம்மா.. நிஜமாவே நீ ரொம்ப அழகா இருக்க… இந்த புடவை உனக்கு நல்லா இருக்கு…” அஜய் அவளது மனநிலையை மாற்ற எடுத்துச் சொல்லவும்,

“அப்போ கல்யாணம் ஆன அன்னிக்கு சுள்ளான்னு சொன்னது யாரு?” யோசிப்பது போல அவள் கேட்கவும், அஜயின் கை தானாக நெற்றியில் தட்டிக் கொள்ள எழும்பியது.

“என்ன அஜய்… என் தங்கைய அப்படிச் சொன்னயா?” விஜய் கண்டிக்கும் குரலில் கேட்க,

“அத்தான்… நான்.. அது வேற… அதை எல்லாம் இப்போ சொல்ல முடியாது.. இப்போ பார்ட்டிக்குப் போக டைம் ஆச்சு… நாங்க போயிட்டு வரோம்…” அஜய் கிளம்ப நினைக்க, கண்ணம்மா கைக் காட்டித் தடுத்தாள்.

“எதுல போகப் போறோம்?” அவளது கேள்விக்கு அஜய் ‘பைக்’ என்று சொல்லவும்,

“பைக்கா… அதுல எல்லாம் என்னால புடவை கட்டிக்கிட்டு உட்கார முடியாது… இல்ல நான் வேற டிரஸ் போட்டுட்டு வரேன்…” என்றவள்,

“பார்ட்டிக்கு ஒரு கார்ல கூட கூட்டிட்டு போக முடியல… இவர் எல்லாம் கை நிறைய சம்பாதிக்கிறாராம்… இந்த லட்சணத்தில கல்யாணத்துக்கு பார்ட்டி வேற…” என்று சத்தமாகவே முணுமுணுத்தாள். அவளது அந்த சொற்ப நேர நடவடிக்கையிலேயே அனுபமாவும் விஜயும் அசந்து நின்றனர்.

“இந்தா அஜய்… என்னோட காரை எடுத்துட்டு போ…” விஜய் தனது கார் சாவியை நீட்ட, அஜய், அதை வாங்கிக் கொண்டு, கண்ணம்மாவை இழுத்துக் கொண்டு பார்ட்டிக்குக் கிளம்பினான்.

ஏண்டா இப்படி ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்தோம் என்று அந்த ஹோட்டலுக்கு போன சிறிது நேரத்திலேயே அஜய் நொந்துக் கொள்ளத் துவங்கினான். ஒரு ஹோட்டலின் லானில் அவர்களுக்கான விருந்தை அஜய் ஏற்பாடு செய்திருந்தான்.

அவனது நண்பர்களை கண்ணம்மாவிற்கு அவன் உற்சாகமாகவே அறிமுகம் செய்ய, அதற்கான எந்த பிரதிபலிப்பும் இன்றி கண்ணம்மா மூன்றாம் மனுஷி போல அவனை விட்டு தள்ளி நின்றுக் கொண்டிருந்தாள்.

அவனுடன் பணி புரிந்தவர்கள் வெளிப்படையாகவே அஜயிடம் வந்து, ‘இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்…” என்று கேட்கும் அளவிற்கு கண்ணம்மா அங்கு நடந்துக் கொண்டிருந்தாள்.

அனைத்திற்கும் மகுடம் வைத்தார் போல, பாச்சிலர் பார்ட்டி தராத காரணத்தினால், அவனது நட்பு வட்டத்தில் இருந்த சில பேர் மதுவும் வேண்டும் என்று கேட்டிருக்கவும், அதற்கும் அஜய் ஏற்பாடு செய்திருந்தான். அஜய் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நேரம், வேண்டும் என்றே அஜய் ஆர்டர் செய்திருந்த உணவுகளை சரியாக சாப்பிடாமல் சுற்றிக் கொண்டிருந்த கண்ணம்மா, பசி தாங்காமல், ஜூசையாவது குடிக்கலாம் என்று, மது வகைகள் வைத்திருந்த இடத்திற்கு சென்றாள். 

அவளைப் பார்த்ததும் அஜயின் நண்பர் ஒருவர் அதிர்ச்சியுடன், “சிஸ்டர்.. அஜய் இங்க இல்ல… அங்க இருக்கான்…” என்று அவளை அங்கிருந்து அனுப்ப முயல,

“ஐ நோ… கேன் ஐ ஹேவ் சம் ஜூஸ்…” என்று அவனிடமே கேட்டவள்,

– அவன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ‘இவன் ஏன் இப்படி முழிக்கறான்’ என்று எண்ணியவாறே தன் பசியைத் தணித்துக்கொள்ளும் எண்ணத்தில் அங்கிருந்த ஒரு கோப்பையை, அதை ஜூஸ் என்று தவறாக நினைத்து  ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக் கொண்டாள். 

அஜயின் நண்பன் வேகமாக ஓடிச் சென்று, அஜயை அழைத்து வர, அதற்குள்ளாகவே, கண்ணம்மா தள்ளாட ஆரம்பித்திருந்தாள்.

“கண்ணம்மா என்ன பண்ணிட்டு இருக்க?” அஜய் கேட்கவும்,

“ஏன் என்னோட கல்யாணத்தை நான் கொண்டாடக் கூடாதா?” அஜயின் தோளில் சாய்ந்துக் கொண்டு, கையில் இருந்த மற்றொரு கோப்பையை அவள் சரிக்கப் போக, அஜய் அதை தட்டிவிட, அது அவன் மீதே சிந்திக் கீழே கொட்டியது…

அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே இருக்க, “நம்ம கல்யாணத்தை நாம கொண்டாடிக்கலாம் தான்… அதுக்காக இப்படியா?” அஜய் கண்டிக்கும் குரலில் கேட்க,

“எனக்கு உன்னைப் பிடிக்கல… இந்தக் கல்யாணம் பிடிக்கல… என்னை விடு… நான் எங்க வீட்டுக்குப் போறேன்… நீ என்னை ரொம்ப கொடுமை படுத்தற” அவள் உளறல் அதிகமாக, அவனது உதவிக்கு, பார்ட்டிக்கு வந்திருந்த அவனது தோழிகள் வந்தனர்.

“அஜய்… நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… நாங்க இங்க பார்த்துக்கறோம்… ஜூஸ்ன்னு நினைச்சு ட்ரிங்க்ஸ்சை குடிச்சிட்டாங்க போல…” அஜய்க்கு அவர்கள் சமாதானம் சொல்ல, ‘தேங்க்ஸ்’ என்ற வார்த்தையை உதிர்த்தவன், அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.

“என்னை விடு… நீ என்னை ஏதாவது செய்துடுவ… என்னை எங்க அம்மாகிட்ட கொண்டு விடு… எனக்கு உன்னைப் பார்த்தா பயமா இருக்கு..” அங்கிருந்து வெளியேறும் வரை கண்ணம்மா கத்திக் கொண்டே வர, அஜய்க்கு பெருத்த அவமானமாகிப் போனது.

ஒருவழியாக அவள் திமிரத் திமிர காரில் ஏற்றிய அஜய், காரைக் கிளப்பவும், கண்ணம்மா அவன் தோள் சாய்ந்தாள். வண்டியை சிறிது தூரம் ஓட்டிச் சென்று, ஓரமாக நிறுத்தியவன், அவளது கன்னத்தை மெல்ல தட்டி, “கண்ணம்மா… ஏன் இப்படி எல்லாம் பண்ற? உனக்கு என்னைப் பிடிக்கலையா?” அஜய் பொறுமையாகக் கேட்கவும், அந்த நிலையிலாவது அவளது மனதில் இருக்கும் உண்மை வெளிவரும் என்று எதிர்ப்பார்த்தவன்,   

“எனக்கு படிக்கணும்.. எனக்கு எங்க அம்மா வீட்டுக்கு போகணும்… என்னால இப்போ கல்யாணம் குடும்பம்ன்னு எல்லாம் இருக்க முடியாது… எனக்கு உன்னைப் பார்த்தாலே பயமா இருக்கு…” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்ல, அஜய் வெறுப்புடன் காரை எடுத்தான்.

வீட்டிற்கு வந்ததும், காரை நிறுத்தி அஜய் அவளை காரில் இருந்து இறக்க பெரும்பாடு பட்டான்… அந்த பிளாட்டின் வாட்ச்மேன் அவனது உதவிக்கு வர, “என்னை விடு… என்னை எதுவும் செய்துடாதே…” கண்ணம்மா முனக, அவசரமாக அவளைத் தூக்கிக் கொண்டு பிளாட்டிற்கு ஓடினான். விஜய் கதவைத் திறக்க, கைகளில் கண்ணம்மாவை ஏந்திக் கொண்டு அஜய் நிற்கவும், “என்னாச்சுடா…” என்று பதட்டத்துடன் அவன் உள்ளே வர வழி விட்டான்….

அதற்குள் அவள் உமட்டத் துவங்கவும், அஜய், அவசரமாக அவளை அறைக்கு அழைத்துச் செல்வதற்குள், வழியிலேயே வாந்தியும் எடுத்து வைத்தாள்.

“குடிச்சிருக்காளா?” விஜய் அதிர்ச்சியுடன் கேட்கவும், அவர்கள் பேச்சு சத்தம் கேட்டு வெளியில் வந்த அனுபமா, கண்ணம்மா இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

சத்தம் கேட்டு ராதா வெளியில் வருவதற்குள், அஜய் அவளை உள்ளே தூக்கிக் கொண்டு படுக்கையில் கிடத்தி, “அனும்மா.. அவளுக்கு நைட்டி மாத்தி விடு.. புடவை எல்லாம் ஒரே வாந்தி..” என்று சொல்லி, கண்ணம்மாவின் நைட்டியை எடுத்துக் கொடுக்க, அனுபமா அவளுக்கு உடை மாற்ற முயல, அஜய் ஹாலை சுத்தம் செய்தான்.

அதற்குள் உள்ளே ஏதுவோ உருளும் சத்தமும், “அஜய்… அஜய்… சீக்கிரம் உள்ள வா…” அனுபமா கத்தும் சத்தத்தை கேட்ட அஜய் உள்ளே செல்ல, விஜயும் அவனுடன் விரைய,  

“விஜய் நீங்க வர வேண்டாம்…” என்றும் சேர்த்து பதட்டமாக கத்தினாள்.

விஜய் தயங்கி நிற்க, உள்ளே சென்ற அஜய், அதிர்ந்து நின்றான். புடவையை மேலே சுற்றிக் கொண்டு அனுபமாவை நைட்டி மாற்ற விடாமல் கண்ணம்மா கையில் ஒரு பேப்பர் வெட்டும் கத்தியை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அனுபமா நைட்டியை கையில் வைத்திருக்க, அஜய் உள்ளே வந்ததும்,

“அஜய்… சரியான பைத்தியத்தை உன் தலையில கட்டி இருக்காங்க… டிரஸ் மாத்தவே விட மாட்டேங்கிறா.. நான் புடவையை உருவினதுக்கு தலகாணிக்கு அடியில இருந்து இந்த கத்தியை எடுத்து கையில வச்சிருக்கா…” அனுபமா அழாத குறையாக சொல்லி, ‘என்னை அடிச்சிட்டா அஜய்..’ என்று கண்ணீருடன் நிற்க, அஜயைப் பார்த்த கண்ணம்மா,

“நீ என் பக்கம் வந்த… நான் என்னையே ஏதாவது செய்துப்பேன்” என்று மிரட்ட, அதை கண்டு கொள்ளாமல், அஜய் அவள் அருகில் சென்றான்.

அஜய் பக்கம் வருவதைப் பார்த்தவள், அந்த கத்தியை தன் பலம் கொண்ட மட்டும் தன் கையில் கிழித்துக் கொள்ள, நொடியில் அவள் செய்த செயலில், அஜய் உறைந்து போய் நிற்க, அனுபமா, “அம்மா…” என்று அழைத்துக் கொண்டே ஓடினாள்.

அதற்குள் அவள் கையில் இருக்கும் கத்தியைப் பிடுங்குவதற்காக அஜய் வேகமாக அவள் அருகில் நெருங்க, மேலும் ஒரு ஆழமான கீறலை தன் கையில் போட்டுக் கொண்டவள், தள்ளாட்டத்துடன் நிற்க, சமயம்பார்த்து அவள் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டவன், அவளை தூக்கிக் கொண்டு போய் ஷவரின் அடியில் நிறுத்தினான்.

“இங்கப் பாரு… என்னை தொட்ட.. நான் என்ன செய்வேன்னே தெரியாது…” அந்த நிலையில் தன்னை அவன் ஏதாவது செய்து விடுவானோ என்ற எண்ணமே மேலோங்க, அவனை அடித்து தள்ளி கடித்து காயப்படுத்தியவளை சமாளித்துக் கொண்டே, அவளை ஈர உடையுடன் வெளியில் தூக்கிக் கொண்டு வந்தவன், அவளது எதிர்ப்புகளை சமாளித்து, வேகமாக நைட்டியை மாற்றவும் செய்தான்.

வீட்டில் இருந்த முதலுதவிப் பெட்டியில் இருந்து, விஜயை கையைப் பிடித்துக் கொள்ளுமாறு சொல்லி, அவளுக்கு முதலுதவி செய்தவன்,

“அத்தான்… காரை எடுங்க… பக்கத்துல டாக்டர் கிட்ட போயிடலாம்…” சொல்லவும், விஜய் அவசரமாக சென்று காரை எடுத்தான்.

அந்த இரவு நேரத்தில், சுப்புவின் வீட்டில் டெலிபோன் மணி ஓங்கி ஒலித்தது… “ஹையோ என் பொண்ணுக்கு என்னவோ ஆச்சுங்க… அது தான் அவ என்னோட செல்போன்ல கூப்பிடாம வீட்டு போனுக்கு கூப்பிடறா…” மீனா அலறவும், நடுக்கத்துடனே சுப்பு போனை எடுக்க,

“யோவ்… என்னய்யா ஒரு கிறுக்கிய என் பையன் தலையில கட்டி வச்சிருக்க… அவ கைய அறுத்துக்கிட்டு நிக்கறா… என் பையன்  அவளை ஹாஸ்பிடலுக்குத் தூக்கிக் கிட்டு ஓடி இருக்கான்… வந்து உடனே அவளை கூட்டிட்டு போயிடுங்க…” என்ற ஸ்ரீனிவாசன் போனை வைக்க, அன்று இரவே அடித்துப் பிடித்து சுப்புவும் மீனாவும், பெங்களூர் கிளம்பினர்….

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்… 

 

 

 

4 COMMENTS

  1. Kannamma mela kobam kobama varuthu.. Evlo velai panni vechruka.. Kannanma ivlo pannathuku apramum ippo Ajay Kannamma ve love panraan na periya visiyam thaan.. Kannamma very bad.. Ajay too good.. Kannamma Ku padikanum nu aasai irunthaalum marriage la ishtam illai naalum ippadi ellam panniruka koodathu..

  2. Nice update…..kannamma va ithu…..yean ipdi nadanthukura sis….vera ethavathu reason irukka pa…eagerly waiting for next update.

LEAVE A REPLY