SHARE

வட்ட நீர் திவலைகளை
தெளிர் மனதில்
கல் எரிந்து கலைக்கிறாய்
அமைதி குலைந்த
ஆத்திரத்தில்
என் கோபங்களை தேடிப் பார்க்க
அதையும் என்றோ திருடிக் கொண்டு
விடாய் போலும்..
உன்னை சேரும் ஒரு
வெளிச்சத்தை காணும் நோக்கில்
இருட்டில் சுற்றித் திரியும்
என் நினைவுகள்!!!

 

அனுபமா, ராதா, கார்த்திக் மூவருமே அதிர்ச்சியின் உச்சத்தில் அஜயைப் பார்க்க, அவனோ, எந்த பாதிப்பும் இன்றி டிவியைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்தான்.

“அஜய்… அப்போ அன்னிக்கு நீ போற போக்குல… இந்த கல்யாணமாவது அவளுக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி அமையட்டும்ன்னு சொன்னது எல்லாம்… உன்னையா? உன்னை அவளுக்குப் பிடிக்கலையா?” திகைப்புடன் கார்த்திக் வரிசையாக கேள்வியைத் தொடுத்துக் கொண்டிருக்க,

“இவளை உங்களுக்குத் தெரியுமா கார்த்திக் அண்ணா…” அனுபமா இப்பொழுது அவனிடம் கேள்வி கேட்க,

“ஏன் தெரியாது? இவ பேர் கண்ணம்மா… இவனோட டீம்ல வந்து சேர்ந்து ஆறு மாசம் ஆகுது.. வந்த நாள்ல இருந்தே இவன்கிட்ட திட்டு வாங்கற ஒரே ஜீவன்… இவன் சில சமயம் திட்டறதைப் பார்த்து எனக்கே பாவமா இருக்கும்…. ஆனா.. அவ வேலையை விட்டு போகாம பொறுமையா அவனோட திட்டை கேட்டுக்கிட்டு இருக்காளேன்னு நானும் நினைச்சிருக்கேன்… இது தானா விஷயம்… அதுவும் கொஞ்ச நாளாவே அஜய் அவளைத் திட்டறது கூட இல்ல…” கார்த்திக் அவசரமாக விளக்கம் சொல்லிவிட்டு,

“இவ அஜயோட வைஃப்பா… அஜய்க்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்று திகைத்த கேள்வியுடன் முடித்தான்.

“அவ அஜயோட வைஃப்ன்னா… அப்போ அஜய்க்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு தானே அர்த்தம் கார்த்திக்… நீ இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கியே…” கிண்டலாகவே விஜய் முடிக்க நினைக்க, கார்த்திக் அவசரமாக அவன் அருகில் வந்தான்.

“அப்போ உங்களுக்கு, எனக்கு நீங்க கண்மணின்னு அந்த பொண்ணை காட்டறதுக்கு முன்னயே, கண்ணம்மா தான் கண்மணின்னு தெரியும் அப்படித் தானே…” கார்த்திக் கேட்க,

“ஆமா… தெரியும்…” விஜயின் பதிலில் அஜயின் பார்வை விஜயின் மீது பதிய, கார்த்திக்கோ,

“அப்பறம் ஏன் அத்தான்… கண்ணம்மா தான் கண்மணின்னு சொல்லி இருக்கலாமே… அதை விட்டுட்டு ஏன் இப்படி செய்தீங்க… நானும் நம்பி… அதை அவனும்…” பாதியில் நிறுத்தியவன்,

“இல்ல… அவன் நம்பல… அவன் அறிவாளி… அவன் முன்னயே சுதாரிச்சிட்டான்…” என்று கார்த்திக் புலம்பிக் கொண்டான்.

ராதா கோபமாக ஏதோ பேசத் தொடங்கவும், “அத்தை… இப்போ அவனை எதுவும் கேட்க வேண்டாம்… இதைப் பத்தின பேச்சே இனி இங்க பேசாதீங்க…” அவரை அடக்கிய விஜய்,  

“கார்த்திக்…. அது ஒரு சின்ன டெஸ்ட்… உங்களுக்கு எல்லாம் நான் சொன்னா புரியாது… சாயந்திரம் நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்… அஞ்சு மணிக்கு ரெடியா இருங்க…” பொதுவாகச் சொன்னவன்,

“அஜய் ஒரு பதினைஞ்சு நிமிஷம் தான்… நாங்க பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போயிட்டு வந்துடறோம்… கதவை வெளிய சும்மா தாழ் போட்டுட்டு போறோம்…” விஜய் சொல்லவும், தன்னுடைய மனதிற்கு அந்த தனிமை தேவை என்பது போல அஜய் தலையாட்ட, அவனுக்கு மாத்திரையை கொடுத்த விஜய், அந்த மருந்தின் உதவியுடன் அவன் தூங்கவும், அங்கு நில்லாமல் வெளியில் சென்றான்.

உறக்கம் கலைந்தும், கண்களை மூடிக் கொண்டே, விஜய் வரும்வரை அஜய் பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தான்… அன்றைய மனநிலையில்,   சொன்னது போலவே விஜய் ஐந்து மணிக்கு தயாராக, வேறு வழியின்றி, அஜய்க்கு குடிக்க டீயைக் கொடுத்துவிட்டு, ராதா, அனுபமா இருவரும் கிளம்ப,

“நான் வரல… நான் இங்கயே இருக்கேன்…” கார்த்திக் சட்டமாக அமர்ந்துக் கொள்ள, ஒரு பெருமூச்சுடன் விஜய், இரு பெண்களையும் வரச் சொல்லி கைக் காட்டிவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு, காருக்குச் சென்றான்.

அவர்கள் கிளம்பவும், அஜய், தனது மொபைலில் பாடலை ஓட விடத் துவங்கி, கண்களை மூடிக் கொண்டான். காலையில் கண்ணம்மாவைப் பார்த்ததில் இருந்தே ராதாவின் கண்களில் அடிக்கடி வழிந்த கண்ணீர், அனுபமாவின் கோபம், கார்த்திக்கின் முறைப்பு… மூன்றும் சேர்ந்து, அந்த வீட்டின் அமைதி, அவனது கடந்த காலத்தை நினைக்கத் தூண்டியது.

“நிஜமா கண்ணம்மா உன் மனைவியா…” கார்த்திக் கேட்கவும், கண்களைத் திறந்து, ஒரு சிறு புன்னகையை சிந்தியவன்,

“அந்த கருப்பு கலர் பெட்டிய கொஞ்சம் கீழ இறக்கேன்….” அஜய் சொல்லவும்,

“இப்போ அதுல என்ன இருக்கு?” கார்த்திக் சலித்துக் கொண்டான்.

“அதை எடு… உண்மை தெரியும்…” அஜய் சொல்லவும், அவசரமாக ஒரு சேரை இழுத்துப் போட்டு, அதை எடுத்தவன்,

“அதை திற…” அஜய் அடுத்ததைச் சொல்லவும், அதைப் பிரித்த கார்த்திக், அதில் இருந்த ஒரு புகைப்பட ஆல்பத்தையும், அதற்கு கீழே கொடுக்கப்படாமல் மீதமிருந்த பத்திரிக்கைகளில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.

மணமகன் பெயரின் இடத்தில் ‘அஜய்… சாப்ட்வேர் டெக்னாலஜீஸ்.. பெங்களூர்..’ என்றும், மணமகளின் இடத்தில் ‘கண்ணம்மா’ என்ற பெயரும் இருக்கவே,

‘பெங்களூர்லயா இருந்த…’ என்று கேட்டுக் கொண்டே, ஆல்பத்தைத் திறந்தவன், உர்ர்ரென்ற முகத்துடன், கடமையே என்று அமர்ந்திருந்த அஜயைப் பார்த்து, கேள்வியாக நோக்க, அஜயோ கண்களை மூடி இருந்தான்….

2012ம் வருடம்… ஏப்ரல் மாதம்… ஏப்ரல் மேயில பசுமையேயில்ல காஞ்சிப் போச்சுடா என்ற பாடலை மெய்ப்பிக்கும் விதமாக பெங்களூரிலேயே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த நேரம், அஜயும், அவனது தந்தை ஸ்ரீனிவாசனும் எதிர் எதிர் துருவங்களாக நின்று அனல் கக்கும் பார்வையை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டிருந்தனர்.

“அஜ்ஜூ கண்ணா… உனக்கும் அவளுக்கும் ஜாதகம் நல்லா பொருந்தி இருக்காம்… இப்போ நாம பொண்ணு தான் பார்க்கப் போறோம்… பிடிக்கலைன்னா… அதை அப்பறம் பார்த்துப்போம்… நம்ம சம்பந்தி வீட்ல வச்சுத் தான் பொண்ணே பார்க்கப் போறோம்…

நம்ம அனு கல்யாணத்துக்குக் கூட அவ தங்கை வந்திருந்தா… மூக்கும் முழியும் நல்ல லட்சணமா இருந்தா அஜய்… அப்போ உனக்குப் பார்த்திருக்கற பொண்ணு கூட நல்லா தான் இருப்பா… உனக்கு ஏத்தது போல…” ராதா அவனை சமாதானம் செய்ய முயலவும்,

“அம்மா… மொதல்ல நான் என்ன சொல்ல வரேன்னு காதுல வாங்கிக்கோ… அந்த பொண்ணு இப்போ தான் படிக்கிறா… ரொம்ப சின்னப் பொண்ணும்மா… அவளுக்கு அதுக்குள்ள கல்யாணம் செய்து வைக்கணும்ன்னு என்ன அவசரம்? இதுல தொடர்ந்து காலேஜ் எல்லாம் போவான்னு வேற சொல்றீங்க…. அது சரி படுமா? அது அவ படிப்பை பாதிக்காது?

இப்போ எனக்கு மட்டும் கல்யாணத்துக்கு என்ன வயசாகுது? இன்னும் குறைஞ்சது ஒரு வருஷம் போகட்டுமேம்மா… எனக்கும் இப்போ தானே இருபத்தி ஆறு வயசு ஆகுது… நானும் ஆன்சைட் எல்லாம் போய்ட்டு வர வேண்டாமா? எனக்கும் கல்யாணத்தைப் பத்தி நிறைய கனவுகள் இருக்கும்மா… ஆனா… அதுக்கு இது நேரமில்ல… ப்ளீஸ் ரெண்டு பேரும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்களேன்” அஜய் இருவரிடமும் பொதுவாக கெஞ்சிக் கொண்டிருக்க, ஸ்ரீனிவாசனோ இளகும் நிலையில் இல்லை.

“எனக்கு துபாய்ல நல்ல ஆஃபர் ஒண்ணு வந்திருக்கு… ரிடையர் ஆகற வயசுல இந்த ஆஃபர் கிடைச்சது நம்ம அதிர்ஷ்டம்… எனக்கும் இப்போ வீட்ல உட்கார்ந்து இருக்கற அளவுக்கு வயசாகிடலை… அதனால உனக்கும் கல்யாணம் செய்து வச்சிட்டா ராதா கொஞ்சம் நிம்மதியா என்கூட அங்க வருவா… உன்னையும் தனியா விட்டா போல ஆகாது… உன்னோட பொறுப்பை அவகிட்ட கொடுத்திடலாம்..

அதுவும் தவிர… இருபத்தி ஆறு வயசு ஒண்ணும் சின்ன வயசு இல்ல… அவளுக்கும் இருபது வயசாகுது… நீ ஆன்சைட் போகணும்னா அவளையும் கூட்டிட்டு போ… அதுல என்ன பிரச்சனை உனக்கு…

அவங்க தாத்தா ரொம்ப முடியாம இருக்காங்க அஜய்… பேத்தி கல்யாணத்தை சீக்கிரம் செய்து பார்த்துடணும்னு பிரியப்படறார்… அவங்களும் நிறைய இடம் பார்த்து இருக்காங்க… உன் ஜாதகம் நல்லா பொருந்தி இருக்காம்… அவங்களுக்கும் ரொம்ப திருப்தி… நமக்கும் திருப்தியா இருக்கு… அதனால நாளைக்கு சாயந்திரம் நாம பொண்ணு பார்க்கப் போறோம்…” உறுதியான குரலில் கூறிய ஸ்ரீனிவாசன்…

“ராதா… போய் பொண்ணு பார்க்க எடுத்துட்டு போக வேண்டியது எல்லாம் எடுத்து வை… ட்ரைனுக்கு டைம் ஆச்சு…” என்று கட்டளையிட, அதற்கு மேல் அவரிடம் வழக்காடி பழக்கமில்லாத அஜய், அமைதியாக யோசிக்கத் தொடங்கினான்.

பெண் பார்த்துவிட்டு, அங்கு அவர்களுக்கு முன்னிலையிலேயோ… அல்லது அந்த பெண்ணிடமோ, தனக்கு திருமணத்தில் இஷ்டமில்லை என்பதை சொல்லிவிட வேண்டும் என்று அவன் முடிவெடுத்துக் கொண்டு, தனது பெற்றோருடன் பெண் பார்க்கக் கிளம்பினான்.

விஜய் அனுபமாவிற்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அஜயிடம் கேட்காமலே அஜயின் திருமணத்திற்கு பெண் பார்க்கச் சொல்லி, தனது உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட, விஜயின் தந்தை… தனது தூரத்து உறவில், தனக்கு தம்பியாகும் முறையில் இருந்த சுப்ரமணியைப் பற்றியும், அவரது சூழ்நிலையைப் பற்றியும் சொல்லி… அவருடைய பெண்ணிற்கு வரன் பார்ப்பதாகவும், சொல்லவும்… சின்னப் பெண்ணாக இருந்தாலும் நல்ல பெண்ணாக வேண்டும் என்ற எண்ணத்துடன், ஸ்ரீனிவாசன் அந்தப் பெண்ணை அஜய்க்கு பார்க்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்….

அவள் என்ன செய்கிறாள் என்று கேட்ட அஜய் அதற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபடலானார்.

உர்ர்ரென்ற முகத்துடன் அஜய் காரில் ஏறவும், “ஏங்க… அவனுக்கு தான் இப்போ கல்யாணம் வேணாம்ன்னு சொல்றானே…” ராதா அஜய்க்கு வக்காலத்து வாங்கத் தொடங்க..

“அவன் சொன்னா விட்டுடறதா? நமக்குன்னு ஒரு பொறுப்பு இல்ல…” என்று கேட்டு, ராதாவின் மீது ஒரு பார்வையை வீசவும், ராதா வாயை மூடிக் கொண்டார்.

சென்னைக்கு வந்த தனது மனைவியின் குடும்பத்தவரை அழைக்க வந்த விஜய், அஜயின் முகம் வாட்டமாக இருக்கவும், யோசனையுடனே அஜயை கூர்ந்துப் பார்க்க, அவனது பார்வையை உணர்ந்தது போல, “என்ன அத்தான்… இந்த ஒரு மாசத்துல நான் இன்னும் ஹான்ட்சம்மா ஆகிட்டேனா என்ன?” கிண்டலாக கேட்டு, இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ளத் துவங்கினான்.

“இருப்ப… இருப்ப… முகத்துல ஒரு ஒளி வட்டம் தெரியுதேன்னு பார்த்தேன்…” விஜய் அவனை கேலி செய்துக்கொண்டே, அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

ஒரு மாத பிரிவிற்குப் பிறகு அனுபமாவைப் பார்த்ததும் மற்ற அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட, அவளுடன் அளவளாவத் துவங்கினான்.

“மாமா… அந்த தாத்தாவுக்கு நேத்து இருந்து கொஞ்சம் முடியலை போல… நம்ம அஜயையும் பார்க்கணும்னு அவர் பிரியப்படறார்…” என்று கூறிய விஜய்,

“அஜய்க்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே… பொண்ணு கொஞ்சம் சின்னப் பொண்ணு தான்…” அவன் இழுக்க,

“ஏன் மாப்பிள்ளை.. எங்க அனுபமாவுக்கும் அவளுக்கும் ஒரே வயசு தானே வித்தியாசம்…” ஸ்ரீனிவாசனின் பதிலில் விஜயும் வாயை அடக்கிக் கொண்டான்.

மாலை அனைவரும், பெண் பார்க்க கிளம்பினார்கள்… அஜய் மனதினில், அங்கேயே மறுத்துவிட்டு வரும் முடிவோடு இருந்த காரணத்தினால், அவனது முகம் சற்று இயல்பாகக் கூட காணப்பட்டது.

விஜயின் அருகே அஜயும், ஸ்ரீனிவாசன் ராதா தம்பதிகளின் நடுவே அனுபமாவும் அமர்ந்திருந்தனர்.. அங்கு அமர்ந்திருப்பதையே சங்கடமாக உணர்ந்த அஜய், தனது செல்போனில் கேம் ஆடிக் கொண்டிருக்க, அந்த வீட்டில் குழுமி இருந்த உறவினர்களின் பார்வை மொத்தமும், அஜயின் மீதே இருந்தது.

கண் நிறைந்த, நல்ல வேலையில், நல்ல குணங்கள் கொண்ட மாப்பிள்ளை தன் முன் அமர்ந்திருக்க, மனதில் எழுந்த திருப்தியுடன் சுப்பு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். நேரமாக ஆக… காட்சிப் பொருளாக அமர்ந்திருப்பது என்னவோ போல் இருக்க… அஜய்க்கு எரிச்சல் மூளத் துவங்கி இருந்தது.

“பொண்ணு வரா அஜய்.. நல்லா பார்த்துக்கோ… அப்பறம் அது குறை… இது குறைன்னு எல்லாம் சொல்லக் கூடாது…” விஜய் அவனை கிண்டல் செய்ய, தன் முன் நீண்ட வளைக்கரத்தைப் பார்த்த அஜய், தன் கண்களை மட்டும் உயர்த்தி, பட்டுப்புடவையை சுற்றிக் கொண்டு வந்திருந்த பெண்ணைப் பார்க்க, அவளோ அவனது முகத்தை ஒருமுறை கூடப்பார்க்காமல், இறுகிய முகத்துடன், தன் கையில் இருந்த காபி கப்புகளில் தனது ஆராய்ச்சியை நடத்திக் கொண்டிருக்க, அஜயின் கண்களில் அவளது கண்ணீர் தளும்பும் கண்கள் பட்டதோ??

 

 

 

 

தயக்கத்துடன் அவன் ஒரு காபி கப்பை எடுத்துக் கொள்ள, அப்பொழுதும் அவனது முகத்தைப் பார்க்கும் ஆவல் கூட இல்லாமல், அவள் அடுத்தவருக்கு காபி கொடுக்க நகர்ந்து செல்ல, அவளது செயல் அஜய்க்கு மேலும் கடுப்பை கிளப்பியது.

“அத்தான்… இந்தப் பொண்ணு வேண்டாம் அத்தான்…. ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா… இவளை என்னால வைஃப்பா நினைச்சுக் கூட பார்க்க முடியாது… ப்ளீஸ் அப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க…” விஜயின் காதில் அவன் முணுமுணுக்க,

“என்ன அஜய் சொல்ற? இப்போ… இங்கேயே நிச்சயம் கூட நடக்கப் போகுது…” விஜய் ஒரு பெரிய வெடி குண்டை வீச… அஜய் அதிர்ந்து ராதாவைப் பார்க்க, அவரோ, அஜயின் பக்கம் பார்வையைத் திருப்பினால் தானே வம்பு என்கிற ரீதியில் அமர்ந்திருந்தார்.

அவன் ராதாவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் அருகில் நாற்காலியை ஒருவர் கொண்டு வந்து போட, சுப்பு, ஒருவரை அஜயின் அருகில் தூக்கிக் கொண்டு வந்தார்…  

அவரைப் பார்த்த அஜய், அவசரமாக எழ, “உட்காருப்பா…” காற்றும், குரல் வளையில் இருந்து வந்த ஒலியும் சேர்ந்தது போல அவர் சொல்ல,

“உட்கார சொல்றார் மாப்பிள்ளை…” அவனுக்கு புரியுமோ என்று சுப்பு மீண்டும் சொன்னார்.

அந்த முதியவரின் குறுகிய உடலும், வெறும் எலும்புகள் போர்த்திய சரீரத்தைக் கண்டவன், அவர் சொல்படியே செய்ய,

“கண்ணம்மா…. பிடிச்சி…..ருக்…கா… கல்யாணம்… சீக்கிரம்… நான்… பார்க்கணும்…” வார்த்தை ஒவ்வொன்றையும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் அவர் உதிர்க்க, அஜய் ராதாவைப் பார்த்தான்.

அவரின் பார்வையும் அந்த முதியவர் மீதே இருக்க, “கண்ணம்மா… நல்ல பொண்ணு…” அவர் மீண்டும் சிரமமாகச் சொல்லவும், அந்த முதியவரை, அந்த நிலையில் காயப்படுத்த விரும்பாத அஜய், சம்மதம் என்பது போல மண்டையை ஆட்ட, அதுவே அவருக்கு பெரும் திருப்தியாக, அவரது அந்த குச்சிக் கைகளை எடுத்து அவன் தலை மீது வைத்து ஆசீர்வாதித்தார்…

அஜய் அவரது முகத்தைப் பார்க்க, அந்த ஜீவனற்ற கண்களில் தான் அத்தனை சந்தோசம்…. இதைப் போய் கெடுக்க இருந்தோமே… மனதினில் நினைத்தவன், தான் நினைத்து வந்ததை மறந்து அமர்ந்திருந்தான்.

“இப்போ என்ன? ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செய்துக்கப் போறதுக்கு பதிலா இப்போ செய்துக்கப் போறேன்… இதுல என்ன இருக்கு? அவளும் படிக்கட்டும்..” நினைத்துக் கொண்ட அஜய், ஒருவாறு தன்னை திருமணத்திற்கு தேற்றிக் கொள்ளத் துவங்கி இருந்தான்.

அவர்களின் ஏற்பாட்டின் படி, உடனே நிச்சயமும் நடக்கத் தொடங்கியது…. திருமணத் தேதியை வெகுநாட்கள் தள்ளிப் போடாமல், அடுத்த பத்தாவது நாளையே குறித்திருந்தனர்.

அதைக் கேட்டு அதிர்ந்தாலும், ‘எப்போ ஆனா என்ன? கல்யாணம்ங்கறது உறுதி ஆகிடுச்சு…’ தன் மனதை தேற்றிக் கொண்டான்.

அவன் அருகே நிறுத்தப்பட்ட கண்ணம்மாவை ஒருமுறை பார்த்துவிட்டு… அனுபமா கொடுத்த மோதிரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, அஜய் அவள் கையில் போடுவதற்காக கையை நீட்ட, கண்ணம்மாவோ தனது கையால் புடவையை இறுக்கமாக பிடித்திருந்தாள்.

அஜய் அவளைப் பார்க்க, அவளோ வேண்டாம் என்பது போல குனிந்த தலை நிமிராமல், கைகளை நீட்ட மறுக்க, அவள் அருகில் வந்த மீனா, “மாப்பிள்ளை எத்தனை நேரம் உனக்காக காத்திருப்பார்… கையை நீட்டு…” என்று அவள் கையை எடுத்து விட, வேறுவழி இன்றி, கண்ணம்மா அஜய் போட்ட மோதிரத்தை வாங்கிக் கொண்டாள்.

நிச்சயம் முடிந்து, விருந்தும் உண்ட பின், கையை கழுவிக் கொண்டு, விஜயுடன் அஜய் வந்துக் கொண்டிருந்தான். ஒரு அறையைக் கடக்கையில், கண்ணம்மா வெறுப்புடன் அஜய் போட்ட மோதிரத்தை கழட்டி வீசுவதும், ஒரு சிறு பெண் அதை ஓடிச் சென்று எடுத்து கண்ணம்மாவின் கையில் கொடுப்பதும் பட, மனதில் உருப்போட்டு வைத்திருந்த சமாதானங்கள் அனைத்தும் காற்றில் பறக்க, திருமணத்திற்குப் பிறகு, கண்ணம்மாவை வெறுப்பேற்றுவதையே தனது முழு குறிக்கோளாகக் கொண்டான்.

பத்து நாட்களும், பத்து நிமிடங்கள் போல் விரைவாகக் கரைந்தன. அந்த குறைந்த இடைவேளையில் மண்டபம் கிடைக்காத காரணத்தினால், அவர்களது திருமணம் ஒரு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமணம் நிச்சயம் ஆனதும், ஊருக்குச் சென்ற அஜய், அலுவலகத்தில், திருமணத்திற்கு விடுப்பை விண்ணப்பித்துவிட்டு, திருமணம் முடிந்து, திரும்பி வந்ததும், தனது நண்பர்களின் கோரிக்கைப் படி, பார்ட்டி கொடுப்பதற்காக ஒரு ஹோட்டலில் ஏற்பாடும் செய்து வைத்திருந்தான். ஸ்ரீனிவாசனின் கட்டளைப்படி!! கண்ணம்மாவின் படிப்பிற்கு வசதியாக, சென்னை கிளைக்கு மாற்றலையும் விண்ணப்பித்திருந்தான்.                 

திருமண நாள் அன்று, பட்டு வேஷ்டி சட்டையில் விஜய் அழைத்து வர, மாணவறைக்கு வந்த அஜய், கண்ணம்மாவின் வரவுக்காக காத்திருந்தான்… இப்பொழுதாவது அவளது வெறுப்பு குறைந்திருக்கிறதா என்று பார்க்கும் ஆவலும் அவனை அறியாமலே அவனுள் எழுந்தது.

அரக்கு நிற பட்டுப்புடவையில், ஆங்காங்கே ஜரிகையிட்டு, கொடி போன்று இருந்தவளை சுற்றி அழகாக வீற்றிருந்தது அந்த புடவை… அஜயின் அருகே கண்ணம்மா வந்து அமரவும், அவனது கண்கள் அவளைக் காணத் திரும்ப, அவளோ குனிந்த தலை நிமிரவே மாட்டேன் என்பது போல நன்றாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“ஹே… உன் மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்போ… இங்க யாரும் உன்னைப் பார்க்க காத்துக் கிடக்கலை… ஓவரா குனிஞ்சு சீன் போடாதே…” அவள் வந்து அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்த அஜய் கடுப்புடன் முணுமுணுக்க, அப்பொழுதும் அந்த நிலையை மாற்றாமல், அவள் அமர்ந்திருந்தாள்.

“உனக்கு…. வச்சிக்கறேன்…” அஜய் பல்லைக் கடிக்கும் போது அதைப் பார்த்த சுப்பு…

“என்னாச்சு மாப்பிள்ளை…” அவனது முக மாறுதல்களைப் பார்த்து அவர் கேட்க, ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தவன், அய்யர் சொல்லும் மந்திரங்களை சொல்லத் துவங்கினான்.

அவனது கையில் திருமாங்கல்யமும் வந்து சேர, கெட்டிமேளம் கொட்ட, பூக்கள் மழையாகப் பொழிய, மாங்கல்யத்தை சூட அவள் கழுத்தின் அருகே எடுத்துச் சென்றவன், ஓரிரு நிமிடங்கள் தயங்கி, பின் ஒரு பெருமூச்சுடன் அதை சூட்டினான்.

அவளது கழுத்தில் சூடி, மூன்று முடிச்சிடும் போதும், அவனது விரல் நுனி கூட அவள் கழுத்தில் படாமல், சர்வ ஜாக்கிரதையாக முடிச்சிட்ட அஜயைப் பார்த்த மீனாவிற்கும், ராதாவிற்கும் சுருக்கென்று மனதில் நெருடல் எழுந்தது….

மீதிச் சடங்குகள் அனைத்தும் ஏனோ தானோவென்று நடந்து முடிய, அவர்களின் முதல் இரவிற்கும் கண்ணம்மாவின் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது…

கண்ணம்மாவின் காதில் இருந்து ரத்தம் வடியும் வரை விடாமல், அவளுக்கு அறிவுரைகளை சொல்லிக் கொண்டே வந்த மீனா, அவளை அறையின் உள்ளே அனுப்பிவிட்டு கதவை அடைக்க, கண்ணம்மாவிற்கு நெஞ்சை அடைத்தது.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி, அவள் வந்ததைக் கூட கவனியாமல், அஜய் அமர்ந்திருக்க, ஒரு பெருமூச்சை வெளியிட்டு, தன்னை சமன் படுத்திக் கொண்டு, நகர்ந்து அவன் அருகில் வந்த கண்ணம்மா, பால் சொம்பை அங்கிருந்த டேபிளின் மேல் வைத்துவிட்டு, அஜய் அமர்ந்திருந்தற்கு மறுபுறம் சென்று படுத்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவளிடம் இது போன்றதொரு நடவடிக்கையையே எதிர்ப்பார்த்திருந்த அஜய், அவள் கண்களை மூடிக் கொண்டதும்,

“என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்…” தனது குரலை மாற்றி அஜய் கீச்சுக் குரலில் பேசவும், குழப்பமாக கண்ணம்மா திரும்பிப் பார்க்க, “கோழி அடிச்சு குருமா வைக்கட்டுமா?” கண்ணம்மா தன்னைப் பார்ப்பதையும் பொருட்படுத்தாமல், அவன் அதே குரலில் தொடர்ந்து,

“நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு எதுக்கு தண்டனை தர.. அது பாவம்…” தனது குரலில் அதற்கு பதில் சொன்னவன், சத்தமாக சிரிக்க, அவனது கேலி புரிந்த கண்ணம்மா அவனைப் பார்த்து முறைத்தாள்.

சில வினாடிகள் மௌனத்தின் பின், கண்ணம்மா உறங்குவதற்காக கண்களை மூட, “பக்தா… உன் தவத்தை யாம் மெச்சினோம்… என்ன வரம் வேண்டும் கேள்…” மீண்டும் அஜயின் குரல்…

“கடவுளே… எனக்கு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரோடுs போடணும்… போட்டுக் கொடு சாமி…” மிகவும் பவ்யமாக அவன் குரலை மாற்றிக் கொண்டு சொல்ல, கண்ணம்மா பல்லைக் கடித்தாள்.

“அது ரொம்ப கஷ்டம் வேற ஏதாவது கேளு…

அப்ப என் மனைவி என்னோட சொல் பேச்சைத் தான் கேட்கணும்… அவ பேச்சை குறைக்கணும்… எதிர்த்து பேசவே கூடாது… என் கண்ணைப் பார்த்து அவ வேலை செய்யணும்… அப்படி செய்யுங்க சாமி….

அமெரிக்காவுக்கு ரோடு சிங்களா டபுளா?” என்று அந்த ஜோக்கை முழுவதுமாக கடவுள் போலவும், தான் கேட்பது போலவும் படித்தவன், கையைத் தட்டிக் கொண்டு சிரித்தான்.

“கடவுளே இந்த பயம் பயப்படறாரே… அப்போ அவர் தன் பெண்டாட்டிகிட்ட என்ன பாடுபட்டிருப்பார்… ஏன்…. உன் பேர் என்ன?” என்று அவளை உலுக்கியவன், அவள் பல்லைக் கடிக்கவும்,

“அது என்ன கண்ணம்மான்னு ஒரு பேர்… ரொம்ப பழைய பேர்… அதை எப்படியாவது சுருக்க முடியுமா? கண்ணு மூக்குன்னு வரும்… இல்ல முழ நீளத்துக்கு கூப்பிடணும்… எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கற பேரைப் பாரு……. ஆசையா கூட கூப்பிட முடியாத பேர்…” என்று சலித்துக் கொண்டவன்,

“இந்த பெண்டாட்டிங்களே இப்படித் தானா?” என்று தொடர்ந்து கேட்கவும்,

“நீங்க என் பேரை கூப்பிடணும்னு அவசியம் இல்ல… உங்க வேலையைப் பாருங்க…” என்றவள், போர்வையை தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

“ஹே… என்ன கொஞ்சம் கூட மரியாதையே இல்ல… புருஷன் கேட்டா பெண்டாட்டி பதில் சொல்லணும்… புரியுதா?” அஜய் அவளது போர்வையை பிடித்து உருவ, அதை விடாமல் பற்றிக் கொண்டவள்,

“இப்போ நீங்க ஏதாவது வம்பு செய்தீங்க… நான் கத்தி ஊரை கூட்டுவேன்… சொல்லிட்டேன்…” அவள் மிரட்டவும், அஜயின் கை தானாக விலகியது.           

“எல்லாம் என் நேரம்…” என்று தலையில் அடித்துக் கொண்டவன், மீண்டும் தேடித் தேடி… அது போல ஜோக்குகளை சத்தமாக, ஒவ்வொன்றாக படித்து, சிரித்து, கைத்தட்டிக் கொண்டே, “என்னம்மா ஆழ்ந்து அனுபவிச்சு எழுதி இருக்காங்க… இதெல்லாம் உண்மை தானே… ஹான்… உன் பேர் என்ன?’ என்று ஒவ்வொரு முறையும் அவளைத் தூங்க விடாமல் பேசிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவன் தன்னை உறங்கவும் விடப்போவதில்லை என்று உணர்ந்த கண்ணம்மா,

“என்னை நிம்மதியா தூங்கவாவது விடலாம் இல்ல…” என்று எரிந்து விழுந்தாள்.

“என் நிம்மதி… தூக்கம்…. எல்லாமே போச்சே… அதுக்கு நான் யார்கிட்ட போய் கேட்கறது… எல்லாம் பறிபோனது உன்னால தானே… அது தான் அந்த கணக்கை உன்கிட்ட தீர்த்துக்கறேன்…” பதிலுக்கு அவளுக்கு குறையாத எரிச்சலை அவனும் அவள் மீது காட்ட,

“அந்த அளவுக்கு என்னைப் பிடிக்காம இருந்தா… அப்போவே பஜ்ஜி சொஜ்ஜியை மட்டும்  தின்னுட்டு போக வேண்டியது தானே… ஆசை யாரை விட்டது… இருந்து மொத்தவிருந்தையும் இல்ல ஒரு பிடி பிடிச்சீங்க… இதுல நல்லவன் மாதிரி எங்க தாத்தாகிட்ட வேற பேச்சு… சாப்பிட்டது தான் சாப்பிட்டீங்க… அப்படியே ஓடி போயிருக்க வேண்டியது தானே… எல்லாம் என் தலையெழுத்து…..” என்றபடி, பட்டென்று அவள் தலையில் தட்டிக் கொள்ளவும், அஜய் அவளை முறைத்துவிட்டு,

“சுள்ளான் மாதிரி இருந்துகிட்டு பேச்சைப் பாரு பேச்சை… நீ நல்லா வருவடி… நான் என்ன சோத்துக்கு வழி இல்லாம உன்னை கல்யாணம் பண்ணினேன்னு நினைச்சியோ? இன்னையோட உன் நிம்மதி எல்லாம் போச்சுடி… உன்னை எப்படி கதற விடறேன்னு பாரு…” சொல்லிவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு அஜய் படுத்துக் கொள்ள, விடிய விடிய, கண்ணம்மா அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்.

மறுநாள் காலை, ஆவலே வடிவாக அஜயும் கண்ணம்மாவும் இருந்த அறையை தட்டிய மீனா, கதவைத் திறந்த கண்ணம்மாவைப் பார்த்து அதிர்ந்து போனார்.

இரவு முழுவதும் அழுது வீங்கிய கண்களும் முகமும் அவரைக் கலவரப்படுத்தினாலும், இன்னமும் தன் மகள் சின்னப்பெண் தானே… பயந்திருப்பாளோ என்ற எண்ணத்துடன், அவளை மற்றவர்கள் பார்க்கும் முன் அவசரமாக, தங்கள் அறைக்கு அவர் இழுத்துச் சென்றார்.

“உனக்கு நான் எவ்வளவு சொல்லி அனுப்பினேன்… இப்படி அழுதுட்டு வந்து நிக்கற? மாப்பிள்ளை என்ன நினைப்பார்?” மீனா அவளை கடியவும்,

“அம்மா…” என்று அவரது தோளில் சாய்ந்தவள்,

“அம்மா… நான் நல்ல பொண்ணு இல்லையாம்மா?” கண்ணம்மாவின் கேள்வி, மீனாவைக் குழப்ப,

“நீ நல்ல பொண்ணு தான் கண்ணம்மா… இப்போ எதுக்கு உனக்கு இந்த சந்தேகம்..” என்று பதில் கூறி, அவள் ஏதோ சிறுபிள்ளைப் போல் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவர் நினைத்துக் கொண்டார்.

“அவர் இல்லம்மா… அவரு… நீ எத்தனை பசங்க கூட சுத்தி இருக்க? உனக்கு ஏற்கனவே லவ் பண்ணின அனுபவம் இருக்கான்னு எல்லாம் கேட்கறார்ம்மா…” என்று விசும்பிக் கொண்டே சொன்ன மகளைப் பார்த்து மீனா திகைத்து விழித்தார்.

“இது என்ன இது…. முதல் இரவில் சந்திக்கும் தனது மனைவியிடம் இப்படிக் கேட்பது?“ மீனாவின் மனதில் கோபம் மூண்டாலும், உடனே சமாளித்துக் கொண்டவர்,

“அது… இப்போ தான் நிறைய பொண்ணுங்க லவ்… லிவ்விங் டுகெதர்… அது இதுன்னு சுத்துதுங்க இல்ல… அதனால சும்மா உன்னைப் பத்தி தெரிஞ்சிக்க கேட்டு இருப்பார்… உன் கருத்தை தெரிஞ்சிக்க சும்மா பேச்சு கொடுத்திருப்பார்…” கோபத்தை விடுத்து அவளை தேற்ற அவர் முயல,

“ஹான்… அவருக்கு கல்யாணத்துல எல்லாம் விருப்பம் இல்லையாம்மா… பிடிச்சிருக்கற வரை ஒரு பொண்ணு கூட சேர்ந்து வாழணுமாம்… அப்பறம் விட்டுட்டு போயிட்டே இருக்கணுமாம்… ஏற்கனவே பெங்களூர்ல அவருக்கு அப்படி ஒருத்தி இருக்காப் போல…

இந்த தாலி சென்டிமென்ட் இதெல்லாம் சுத்த அபத்தம்ன்னு சொல்லி, இதை பிடுங்கி எறிய வந்துட்டார்.. என்னையும் அப்படித் தான்… பிடிக்கலைன்னா வீட்டுக்கு அனுப்பிடுவாராம்…” கதறிக் கொண்டே சொன்ன கண்ணம்மாவை நம்ப முடியாமல் மீனா பார்த்துக் கொண்டிருக்க, கண் விழித்து எழுந்த அஜய், குளித்து, உடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தவன், கண்ணம்மாவைத் தேடாமல், ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு அமர்ந்திருந்த சுப்புவின் அருகில் நின்றான்.

“ஹையோ.. வாங்க மாப்பிள்ளை… மன்னிச்சிருங்க… நீங்க வந்ததை நான் கவனிக்கவே இல்ல…” என்று மன்னிப்பு வேண்டியவர்,

“மீனா..” என்று அழைக்க, மீனாவோ அவரது அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை…

“உள்ள ஏதோ வேலையா இருக்கா போல…” அஜயிடம் சமாதானம் சொன்னவர், “கயல்…” என்று அழைக்கவும், அந்த சின்னப்பெண் அவர் அருகில் சிறு தயக்கத்துடன் வந்து நின்றாள்.

“அம்மாவோ கண்ணம்மாவோ இருந்தா.. மாப்பிள்ளைக்கு காபி கொண்டு வரச் சொல்லு… மாமா எழுந்தாச்சுன்னு சொல்லு…” அஜய் எழுந்துவிட்ட செய்தியை அவர் படபடப்பாகச் சொல்ல, உடனே சொல்ல வேண்டும் போல என்று நினைத்துக் கொண்ட கயல் உள்ளே ஓடிச்சென்றாள்.    

“அம்மா… மாமாவுக்கு உடனே காபி கொண்டு வரணுமாம்… அவர் அங்க  அப்பாகிட்ட இருக்காரு…” கயல் சொன்ன விதம், அஜய் தான் அப்படிக் கேட்டான் என்பது போல மீனாவிற்குத் தோன்ற,

“சரி நீ போ..” என்று அவளை அனுப்பியவர்,

“நீ போய் குளிச்சிட்டு வா… பொறுமையா உன்கிட்ட பேசறேன்… வேணா அப்பாவை விட்டோ… சம்பந்தி அம்மாவை விட்டோ மாப்பிள்ளை கிட்ட பேசச் சொல்லலாம்…” என்று அவளை அப்போதைக்கு சமாதானம் செய்து அனுப்ப முயன்றவர், அவள் சென்றதும், காபியை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு விரைந்தார்.

அதே நேரம், “மாமா… நான்… ஊருக்கு” என்று தொடங்கியவன், சுப்புவின் அதிர்ச்சியை கண்டதும், “நாங்க இன்னைக்கு மதியமே ஊருக்குப் போறோம்… ஏற்கானவே டிக்கெட் போட்டாச்சு… இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா அப்பாவும் அத்தான் வீட்ல இருந்து வந்திடுவாங்க…” என்று அறிவிக்க, தாலி அணிவிக்கும் போது அவன் காட்டிய அந்த ஒதுக்கம் மீனாவின் மனதில் படமாக விரிய, இப்பொழுது அவன் முதலில் ‘நான்’ என்று தொடங்கியது, அவரது மனதில் பெரும் கவலையை விதைத்தது.

அஜய்க்கு காபியைக் கொடுத்தவர், சம்ப்ரதாயமாக புன்னகையை சிந்திவிட்டு, கண்ணம்மாவின் அறைக்குள் வேகமாக நுழைந்தார்…. சொம்பில் இருந்த பாலும் அப்படியே திரிந்திருக்க, வைத்தது வைத்தது போலவே இருக்கவும், திகைப்புடனே, “ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தீங்களா?” ஒரு தாயாய் கவலையுடன் கண்ணம்மாவைப் பார்த்து கேட்டார்.  

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, மீனா அவளைப் பிடித்து உலுக்கவும், “உனக்கு லவ்வர் இருக்கானா இல்லையாங்கற உண்மையச் சொல்லு… நீ உண்மையைச் சொன்ன அப்பறம் தான்… நான்… நான்..” அதற்கு மேல் பேச முடியாமல், கண்ணம்மா அழ, மீனா அதிர்ச்சியில் உறைந்தார்.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

8 COMMENTS

  1. Haiyoo yenna ithu kannamma periya fraud velai pakkuthu first cat mathiri padunguchi, fbla sathivela pannuthu. Hmmm interesting ramya pavam ajay avan thiturathula thappu illa. Anu and radha kobathukana reason puriyuthu

  2. Acho Ajay paavam.. Kannamma ku ennathaan marriage pidikalainaalum ippadi ellama solluvaanga.. Ajay athaan starting lae irunthu kannamma ve paatha koba patrukaan.. Ratha and Anu kobamum nyayam thaan.. Nice update..

LEAVE A REPLY