SHARE

திக்கு தெரியாமல் சுத்தி
திரியும்
சிறு பிள்ளை போலே
என் நினைவுகள்
முழுவதுமாய்
அலைய விடும்
இந்த வித்தை
எங்கு கற்றாயோ
உன் மேல் கோபப்பாடவும் வழி இன்றி
திணறி நிற்கிறேன்
உன் கை சேரும் நிமிடம் வேண்டி!!

 

‘கண்ணம்மா’ அஜய் மெல்ல முணுமுணுக்க, ஒரு காலத்தில் அந்தப் பெயர் பழம் பெயராக இருக்கிறது என்று எரிச்சலாக சொன்னது அவனது நினைவில் நில்லாமல், இன்று அந்த பெயர் உயிரின் ஆழம் வரை தித்தித்தது.

அந்த தித்திப்பை மனம் உணர, அஜயின் இதழில் புன்னகை அரும்பியது… வீட்டில் இருந்து அஜய்க்கு உணவு கொண்டு வந்த ராதா, விஜயையும் உண்டுவிட்டு கிளம்பச் சொல்ல, அங்கேயே தனது அலுவலகத்திற்குச் செல்ல, தயாராகிக் கொண்டிருந்த விஜய் அவனை நோட்டம் விட்டான்.

அஜயின் முகத்தில் தீவிர யோசனையைக் கண்டவன், கட்டாயம் அதில் அவன் தீர்வு காணுவான் என்ற நம்பிக்கையுடன், அனுபமாவுடன் பேசிக் கொண்டே தனது கிளம்பும் வேலையைத் தொடர்ந்தான்.

அஜய்க்கு உணவு ஏதேனும் தேவையா என்று கேட்க அவன் அருகில் வந்த ராதா, அவனது கண்களின் கனவும், இதழில் புன்னகையையும் பார்த்து, வந்த சுவடே இல்லாமல், அந்த அறையில் போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்தார். 

அழகிய கண்கள்… அதுவும் தன்னிடம் பேசும் பொழுது மட்டும் தண்ணீரில் இருந்து வெளி வந்த மீனாய் துடிப்பதும், அதற்கு தகுந்தாற்போல, அவளது இதழ்களின் நடுக்கமும், தட்டுத் தடுமாறி வந்து விழும் குரலின் வெளிப்பாடும்.. அவளது ஒவ்வொரு அசைவும் இப்பொழுது மனதில் படமாக விரிய, தான் அவளை இந்தளவுக்கு கவனித்து இருக்கிறோமா என்று அஜய்கே ஆச்சரியமாக இருந்தது…

“என்னடா இது? அவளை முதன் முதலில் பார்த்த நாளில் இருந்தே அவளை வெறுத்துக் கொண்டு தானே இருந்தோம்… இது என்ன இது?” தனக்குள் கேட்டுக் கொண்டவனின் இதழ்களில் அதற்கும் சேர்த்து புன்னகை தான் அரும்பியது.

“அடிப்பாவி… இப்படியா என்னை முழுசா ஆட்டிப்படைச்சு இருக்க?  எப்போலேர்ந்து  நீ என்னை உன் மனச்சிறையில் கைது செய்த?? எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்..” நினைத்த மாத்திரம் சிரித்துக் கொண்டவன், விஷயம் தெரிந்தால் ராதாவின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் தடுமாறினான்.

“அம்மாவைக் கூட சரி கட்டிக்கலாம்… இந்த ஸ்ரீனிய….” அந்த யோசனை வந்த உடனே கண்ணம்மாவின் நடுக்கம் அவனது மனக்கண்ணில் விரிய, அஜயின் மனம் சுருங்கியது.

“அப்பா என்ன சொல்வாங்க…” அவன் யோசித்துக் கொண்டிருக்க, கண்ணம்மா மீண்டும் அவனது மனதில் ஆஜரானாள்.

“அவளை பொண்ணு பார்க்கறாங்கன்னு சொன்ன உடனே எனக்கு எவ்வளவு கோபம் வந்தது… அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதுங்கறதுனாலயா? அவ என்னோட…” அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஸ்ரீ மெல்ல அவன் அருகில் வரலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றது அவன் கண்ணில் பட்டது.

அவனைக் கண்டதும் யோசனை ஒருபுறம் ஒதுங்கிக்கொள்ள, “ஸ்ரீ கண்ணா… வாடா…” என்று அழைத்தான்.

“மாமா… உவ்வ்வா…” அவன் தயங்கித் தயங்கி அவன் அருகே வர,

“ஒண்ணும் இல்ல… இங்க மாமாகிட்ட வா..” என்று மெல்ல கையை நீட்ட, தயக்கத்துடன் குழந்தை அவன் அருகில் வந்தான்.

அருகில் வந்ததும்… “பாண்டா போடு…” என்று அவன் ரிமோட்டை எடுத்து நீட்ட, அஜய் புரியாமல்,

“என்னது?” என்று கேட்க, மீண்டும் சிறுவன், அதையே திரும்பச் சொன்னான்.

“நீ பேசறது திடீர்ன்னு மாமாவுக்கு புரியாம போச்சே… என்ன செய்யலாம்?” அஜய் வாய்விட்டே யோசிக்க, மீண்டும் அஜய்க்கு புரிய வைத்துவிடும் நோக்கத்தோடு, மீண்டும் ரிமோட்டை நீட்டி, ‘பாண்டா’ போடு..’ என்று சொல்லவும், ஏனோ அவன் சொல்ல வருவது புரியாமல்,

“அனு…. இங்க உன் பையன் என்னவோ சொல்றான்… என்னன்னு கேட்டுச் சொல்லு…” அனுபமாவை அழைக்க, விஜய் அவன் முன்பு வந்து நின்று, குழந்தையிடம் கேட்டு,

“அவன் சுட்டி டிவி போடச் சொல்றான்… அவனுக்கு இங்க போர் அடிக்குது போல…” என்றவன், அஜயின் கையில் இருந்த ரீமோட்டை வாங்கி போட்டு விட்டு, “யோசிச்சயா?” என்று கேட்க, அஜய் மெல்லிய புன்னகையை சிந்தி,

“நீங்க ஆபீஸ்ல இருந்து வர வரை டைம் தாங்க அத்தான்… நான் பதில் சொல்றேன்… எனக்கு அப்பா அம்மாவ நினைச்சா தான் பயமா இருக்கு.. அதுவும் அவளைப் பத்தி தெரிஞ்சா….” என்று அவன் தனது சம்மதத்தை சொல்லாமல் சொல்ல,

“எல்லாமே சமாளிக்கணும் தான்… சமாளிப்போம்… உனக்கு பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு… வேற எதைப் பத்தியும் யோசிக்காதே… வேற ஏதாவது வேணுமா? நான் ஆபீஸ் கிளம்பவா?” அவனுக்கு வேறு ஏதேனும் உதவி தேவைப்படுமா என்பதை கேட்டு, அவன் இல்லை என்று மெல்ல தலையசைக்கவும்,

“சரிடா… நான் கிளம்பறேன்…” என்று விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்றான். 

“மலை மெல்ல கரையுது…. விடாதே ராஜா… விடாதே…” விஜய் தனக்குள் சொல்லிக் கொண்டே அலுவலகம் கிளம்பிச் செல்ல, ஸ்ரீ டிவி பார்க்கத் துவங்கவும், மீண்டும் அஜயின் எண்ணம் கண்ணம்மாவிடம் தாவியது.

“எப்படி எனக்குள்ள இந்த மாற்றம்? கண்ணம்மாவுக்கு உடம்பு சரி இல்லாத போது அவ கஷ்டப்பட்டதைப் பார்த்தா?” அவனது யோசனை இவ்வாறாகச் செல்ல,

“இல்லையே… அப்படி இருந்தா அது பச்சாதாபம் தானே… இது அப்படி இல்லையே… ஏன் அவ என் மனசுல புகுந்து இந்த ஆட்டு ஆட்டி வைக்கிறா? அப்போ அவ மேல முன்ன இருந்தே பாசம் இருந்து இருக்கோ?? அது தான் சந்தர்ப்பம் தேடி இப்போ வெளிய வருதோ? அப்போ எப்படி….” யோசனை எங்கோ செல்லத் துவங்க, அந்த நினைப்பை அங்கேயே தடுத்தான்.

“இல்ல… அன்னைக்கு தியேட்டர்ல கண்மணி குரல் மாதிரியே கண்ணம்மாவோட குரல் இருந்ததுனால எனக்குள்ள ஏற்பட்ட மாற்றமா?” வேறு திசையில் யோசனையைத் திருப்பினான்.

குரல்…. தென்றல் பண்பலையில் பேசும் கண்மணியின் குரல், கண்ணம்மாவினுடையதாக இருப்பதால் தான் எனக்கு அந்த குரலின் மேல் அவ்வளவு தாக்கம் வந்ததோ!! அவளது குரல் அந்த அளவிற்கா என் மனதில் பதிந்திருக்கிறது!! அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

“ஹ்ம்ம்.. ஏன் கண்மணியா வேற பொண்ணு வந்தா… ஒருவேளை நான் திட்டுவேன்னு கண்ணம்மா நினைச்சு இருப்பாளோ?” இருக்கலாம்.. நான் எங்க அவகிட்ட சாதாரணமா பேசினேன்” அவளிடம் மனம் சாய்ந்ததை உணர்ந்து, இப்பொழுது அவளுக்கு சாதகமான விஷயங்களை அவன் மனம் ஆராயத் துவங்கியது.

“தியேட்டர்ல அவ அந்த படத்தோட விமர்சனத்தை எவ்வளவு அழகா சொன்னா… என் கண்ணம்மாவா அது?” என்ற எண்ணம் வந்தவுடன், அன்றைய தனது கோபம் அனைத்தும் அஜய்க்கு நினைவு வர, இன்று அதே சம்பவத்திற்கு கோபத்திற்கு பதிலாக சிரிப்புத் தான் வந்தது…

“பாவம் அவ… ரொம்ப திட்டிட்டேன்…” என்று வருந்தியவனின் மனதில் ஒன்று மட்டும் நன்றாகவே ஓங்கி ஒலித்தது.

“தன்னால் கண்ணம்மாவை எந்தக் காரணம் கொண்டும் நழுவ விட முடியாது” என்பதுவே…

அந்த எண்ணம் மனதில் வலுவாக வந்தவுடன், ‘இனிமே, ஏன் அவளை எனக்கு பிடிச்சது… எதுக்குப் பிடிச்சதுங்கற ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம்… அவளை எனக்கு பிடிச்சிருக்கு அவ்வளவு தான்… ரொம்ப நாளா, அவ என்னுடையவள் அப்படிங்கற நினைப்பு தான் அவ மேல நான் காட்டின கோபத்துக்குக் காரணமோ? இன்னைக்கு அவளை யாரோ பொண்ணு பார்க்கறாங்கன்ன உடனே அவளை ஏன் இவ்வளவு காயப்படுத்தறோம்…’ நினைத்தவுடன் சிரித்துக் கொண்டான்.

அவன் தானே சிரித்துக் கொள்ளவும், ஸ்ரீ அவனைத் திரும்பிப் பார்த்து, ‘பாண்டா மாட்டி… பாண்டா மாட்டி…’ என்று குதூகலிக்க, அவன் சொன்னதைக் கேட்டவனுக்கு குழந்தை கவனிக்கும் அளவிற்கு தான் இருந்ததை எண்ணி வெட்கினான்..

“என்னடா அஜய்… காலையில இருந்து பார்க்கறேன்… முகம் முழுதும் ஒரே சிரிப்பா இருக்கு… அப்படி என்னடா சந்தோசம்?” கேட்டுக் கொண்டே ஒரு தட்டில் இட்லியை எடுத்துக் கொண்டு ராதா வர, அஜய்க்கு ‘அப்படியா இளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்’ என்று மேலும் வெட்கம் எழுந்தது.

“இல்லம்மா… நான் நான்..” அஜய் சொல்ல முடியாமல் இழுக்க, ராதா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

“சரிடா… நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரவான்னு கேட்கத் தான் அப்போ பக்கத்துல வந்தேன்…” என்று சொன்னவர்,

“வாயைத் திற… இந்த இட்லியை சாப்பிட்டு அப்பறம் யோசனை பண்ணு…” என்று சொல்லவும், அஜய் அதிர்ச்சியாகப் பார்க்க, ராதாவோ தீவிரமாக அவனுக்கு உணவு கொடுப்பதிலேயே கவனமாக இருந்தார்.

தனது கையின் வலியை பொறுத்துக் கொண்டு, தனது செல்லை மெல்ல எடுத்தவன், அதில் ஏதாவது குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்க, அதில் அப்படி எதுவும் இல்லாமல் போகவும், மனதில் ஏமாற்றமே மிஞ்சியது.

அவன் உண்டு முடித்ததும், ராதா தட்டை கழுவி வைப்பதற்காகச் செல்ல, வயிற்றின் உபாதையால், அவன் மெல்ல எழ முயல, “என்னடா ராஜா… இப்போ எதுக்கு எழுந்துக்கற?” என்று வேகமாக ராதா அவன் அருகே வரவும், கால் வலியால் தடுமாறியவன், அவரது தோளைப் பிடித்துக் கொண்டு, நின்றான்.

“ஏதாவது வேணும்னா நான் எடுத்துத் தருவேன் இல்ல…” அவர் கேட்க,

“அதுக்குன்னு எல்லாமே நான் பெட்ல இருந்தே கேட்க முடியாதும்மா… மெல்ல நான் நடக்கறேன்… அதான் ஒரு காலை கீழே ஊண வேண்டாம்ன்னு வாக்கர் வாங்கித் தந்திருக்காரே அத்தான்” என்றவன், அறையில் ஒட்டி அமைக்கப்பட்டிருந்த குளியல் அறைக்குள் ராதாவின் உதவியுடன் சென்றான்.

வெளியில் வந்தவனைப் பார்த்த ராதா முறைத்துக் கொண்டிருக்க, “அம்மா… நான் என்ன சின்னப் பிள்ளையா.. கொஞ்சமாவது வலியை தாங்கிக்க முடியும் தானே…” என்று அவன் சொல்லவும்…

“தாங்கிக்கலாம் தான்… ஆனா… காலை எங்கயாவது நியாபக மறதியா ஊனிட்டன்னா… என்ன ஆகும்? சொன்ன பேச்சை ஏதாவது கேட்கறியா? அத்தான் வேலை முடிஞ்சதும் வந்திடறேன்னு சொல்லி இருக்கார்…” என்று கடிந்துக் கொண்டவர்,

“இந்த வலியெல்லாம் என்ன வலி… இதை விட மனசால எவ்வளவு வலியை நீ அனுபவிச்சு இருக்க..” ராதாவின் கண்களின் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“ம்ம்ம்ப்ச்… விடும்மா அதையே நினைச்சிக்கிட்டு… என்னவோ எங்க போதாத நேரம்…” அஜய் சொல்லவும்,

“நம்ம போதாத நேரம்டா…” கன கச்சிதமாக ராதா திருத்த, அஜய் தனக்குள்ளேயே, காதல் தன்னை பக்குவப்படுத்திய அளவை எண்ணி வியந்துக் கொண்டிருந்தான்.

“மத்யானதுக்கு கீரை செய்திருக்கேன்… அப்பறம் சிக்கன் சூப் எடுத்துட்டு வந்திருக்கேன்… ரத்தம் நிறைய போயிருச்சுன்னு அத்தான் சொன்னார்…” ராதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, போன் அழைப்பு வர, அவசரமாக அதை இயக்கினான்….

“சார்.. நாங்க பிளாட்டினம் கிரெடிட் கார்ட் தரோம்…” என்று அதில் வந்த குரலைக் கேட்டவன், கடுப்புடன் பதில் பேசாமல் போனை அணைத்துவிட்டு, வயிற்றை நிரப்பும் பணியை செவ்வனே செய்ய முயன்றான்…

————————–      

காலையில் கண்ணம்மா அலுவலகத்தின்னுள் நுழைந்த பொழுதே, அவர்களது டீம் இருந்த இடம் வெகு பரபரப்பாகவும், பதட்டமாகவும் காணப்பட்டது.

“என்ன ஆச்சு நம்ம டீம்ல எல்லாருக்கும்… நம்ம அஜ்ஜூ காலையிலயே எல்லாரையும் பிடிச்சு வாட்டி எடுக்கறாரா? போய் முன்னால நின்னா என்ன செய்வார்… அன்னைக்கு ஆரம்பிச்ச கோபம் இன்னிக்கும் கன்டினியூ ஆகுமோ?? ஆத்தாடி ஆத்தா… நேர்ல நெற்றிக் கண்ணை திறந்து என்னை பஸ்பமாக்கி பல் பொடி போல யூஸ் பண்ணிடுவாரே…” என்று நினைத்தவள்,

“ஆத்தா மகமாயி… உன் சிஷ்ய பிள்ளை மேல ஏறி இருக்கற சாமிய கொஞ்சம் இறக்கி விடு… உனக்கு நான் ஒரு பெரிய கட்டு வேப்பிலை தரேன்…” என்ற வேண்டுதலோடு, சிறு பயமும், சிறு குறும்புமாக எண்ணியவள், வேகமாக டீமை நோக்கிச் செல்ல, அவளது கண்கள் முதலில் தேடியது அஜயைத் தான்.

அஜய் இருந்த இடம் வெறுமையாக இருக்கவும், “என்னாச்சு இந்த அஜய்க்கு… ஏன் இன்னும் வரல… அப்போ வேற என்ன விஷயம்??” யோசித்த படி தன் இடத்தில் அமரப் போனவளின் அருகே இருந்த சுவாதி, சிறிது பயத்துடனே கண்ணம்மாவைப் பார்த்தாள்.

அவளது பயம் கண்ணம்மாவை கலவரப்படுத்த, “சுவாதி… என்னாச்சு… ஏன் எல்லாரும் டென்ஷனா இருக்கீங்க?” ஒருவாறு அவள் கேட்டு முடிக்க,

“கண்ணம்மா… அஜய்க்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சாம்… ரெண்டு நாள் ஆகுது போல… ஒரு மாசம் வரை பெட் ரெஸ்ட்ல தான் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம்…. தலையிலயும் கை கால் எல்லாம் செம அடி போல…” சுவாதி சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கண்ணம்மாவின் இதயம் தொண்டைக் குழியில் வந்து துடிக்க, அவள் சொல்லியதைக் கேட்டு, பதட்டம் தொற்றிக் கொண்டது.

“என்னது? ஆக்சிடென்ட்டா… எப்போ? எங்க? எப்படி ஆச்சு? ஏன் என்கிட்டே முன்னமே சொல்லல…” பதட்டத்தில் அவள் குரல் உயர்ந்து ஒலித்ததோ! அவளது டீமில் இருந்த அனைவரும் அவளை கேள்வியாகவும், ஆச்சரியமாகவும் பார்க்க, சுவாதி அவள் கையை அழுத்தினாள்.

“கண்ணம்மா… எல்லாரும் உன்னையே பார்க்கறாங்க… அவனுக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல… புரியுதா? அவனுக்கு ஒண்ணும் இல்ல… ரெண்டு  நாள் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு… அவன் எப்படி இருக்கான்னு பார்த்துட்டு வீட்டுக்கு போக சொல்லிடுவாங்களாம்… அஜய் பிரெண்ட் கார்த்திக் வந்து சொல்லிட்டு போனாங்க…

எல்லாரும் இன்னைக்கு சாயந்திரம் அவனை ஹாஸ்பிடல்ல பார்க்கப் போறாங்க போல… நானும் என் ஹஸ்பன்டோட போயிட்டு அப்படியே வீட்டுக்குப் போறேன்… நீயும் வரியா?” சுவாதி கேட்கவும், கண்ணம்மாவின் பார்வை வலியைக் காட்டியது.

“என்ன கண்ணம்மா… வரீங்களா?” அவர்கள் பேசுவதைக் கேட்ட யோகேஷ் அவள் அருகில் வந்துக் கேட்கவும்,

“இல்ல யோகேஷ்… நீங்க… நீங்க எல்லாம் போயிட்டு வாங்க… நான் போன்ல பேசிக்கறேன்… எங்க வீட்ல விட மாட்டாங்க…” என்று பதில் சொல்லியவள், இன்னமும் பதட்டம் குறையாமல், தனது செல்போனை எடுத்துக் கொண்டு ரெஸ்ட்ரூமிற்கு ஓடினாள்.

சுவாதி அவளைப் பின்தொடர்ந்து செல்ல, அடைத்த தொண்டையை சரியாக்கும் பொருட்டு அவள் கண்ணீர் விடத் துவங்க, “அதானே பார்த்தேன்… எங்கடா… நீ அவனுக்கு இத்தனை நேரம் போன் செய்து பேசி இருப்பயோன்னு நினைச்சேன்… உனக்கு அழறதைத் தவிர என்ன தெரியும்?” சுவாதி நக்கலடிக்க, கண்ணம்மா அவளை வெறித்தாள்.

“இந்த பார்வை என்கிட்டே வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்… போன வாரம் ரெண்டு பேருமே உம்முன்னு இருந்தீங்க… சரின்னு விட்டேன்… இப்போவும் நீ பேசாம இருந்தா என்ன ஆர்த்தம்… பேசு கண்ணம்மா… அவன் உன்னோட போனுக்காக காத்திருக்கலாம் இல்லையா?” அவள் கேட்கவும், கண்களைத் துடைத்துக் கொண்ட கண்ணம்மா போனை எடுக்க, அதில் அஜயின் பெயரில் மெசேஜ் இருக்கவும், ஆவலாக அதை எடுத்தாள்.

“என்னாச்சு கண்ணம்மா?” அவளது முகத்தில் இருந்த ஆவலைப் பார்த்த சுவாதி கேட்க,

“அஜய் சாரி கேட்டு மெசேஜ் செய்திருக்கார்… அவருக்கு அடிப்பட்டதையும் சொல்லி இருக்கார்… நான் தான் பார்க்கவே இல்ல…” என்றவள், நொடியும் தாமதிக்காமல், அஜய்க்கு அழைத்தாள்.

அவளது போனுக்காகவே காத்திருந்தது போல அஜய் போனை எடுக்க, “அ….ஜ…ய்…” அந்தப் பெயரைச் சொல்லி முடிப்பதற்கு முன்பே தொண்டை அடைக்கச் செய்ய, செருமிய படி, கண்ணம்மா அதை சரி செய்துக் கொள்ள,

“சாரி கண்ணம்மா… அன்னைக்கு என்னவோ கோபம்… அதே கோபத்தோட போய் இப்படி ஆச்சு…” அஜய் அவளிடம் போனில் மன்னிப்பு கேட்க, “ஹையோ…” கண்ணம்மா மெல்லிதாகவே அலறினாள்.

“நான் அன்னைக்கு நிஜமாவே வண்டியை ஓட்டிட்டு தான் இருந்தேன்… நீங்க இதுக்குத் தான் கூப்பிட்டீங்களா? நான் முதல்லையே போனை எடுக்காம போயிட்டேனே..” அப்பாவியாக அவள் கேட்க,

“ஆமா.. ஆக்சிடென்ட் ஆகி விழுந்து இருக்கற நிலமையில, உனக்கு கூப்பிட்டு… அதுக்கு பதிலா நீ எனக்கு மெசேஜ் அனுப்ப… அந்த sms பார்த்து, அதுக்கு பதிலா விடாம கூப்பிட்டு… உன்னைத் திட்டிட்டு மயக்கமானேன்… எவடி இவ… மக்கு..” அஜய் செல்லமாகத் திட்டவும், கண்ணம்மாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“சாரி… ஒரு ஆர்வக் கோளாறு…” அவள் இழுக்க,

“சரி… சரி விடு.. உன் அறிவைப் பத்தித் தெரிஞ்ச நான் இந்த அளவு தான் எதிர்ப்பார்த்து இருக்கணும்… ரொம்ப எதிர்ப்பார்த்தது என் தப்புத் தான்..” அவனும் கேலி பேச, ‘ஹான்…’ கண்ணம்மா இழுத்தாள்.

“அதெல்லாம் விடுங்க.. எனக்கு மூளை இவ்வளவு தான்… அதுவும் உங்க ராசியோ என்னவோ எனக்கு அவ்வளவு தான் வேலை செய்யுது… அதை விடுங்க… உங்க உடம்பு எப்படி இருக்கு? என்னால உங்களை இப்போ நேர்ல வந்து பார்க்க முடியாது.. நான்…. நான் எப்படி…” அவள் தயக்கமாக இழுக்கவும்,

“எனக்கு ஒண்ணும் இல்ல… கை கால் எல்லாம் கொஞ்சம் பிராக்ச்சர் ஆகிருக்கு அவ்வளவு தான்… ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்… வேணா நான் என்னை போட்டோ எடுத்து அனுப்பவா….” நக்கலாக அவன் கேட்க,

“ஹ்ம்ம்… அதெல்லாம் வேண்டாம்… நிஜமா நீங்க நல்லா இருக்கீங்க தானே…” பதட்டத்துடன் அவள் கேட்க,

“நான் நல்லா இருக்கேன்… நிஜமாவே நல்லா தான் இருக்கேன்… இன்னும் ஒரு மாசத்துல உன்னை திட்ட ஆபீஸ்க்கு வந்திருவேன் போதுமா?” என்றவன், டிவியின் ரிமோட்டை எடுக்க முயன்று, அவனது கையின் வலியில் அவன் முனக,

“பார்த்தீங்களா… பார்த்தீங்களா… நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு முனகறீங்க…” கண்ணம்மா கேட்கவும், அஜய்க்கு சிரிப்பு தான் வந்தது.

“கை கால் தலை எல்லாமா சேர்ந்து எப்படி வலிக்குது தெரியுமா?” சிறு பிள்ளை போல அவன் சொல்ல, அதைக் கேட்ட கண்ணம்மா தவிக்கத் தொடங்கினாள்.

“அப்போ சரியாகற வரை ஹாஸ்பிடல்லையே இருங்க… வீட்டுக்கு வர வேண்டாம்…” அழாத குறையாக அவள் சொல்ல,

“அடிப்பாவி… இப்படி என்னை படுக்க வைக்கிறதுலேயே குறியா இருக்கியே…” என்று சிரித்தவன், ‘ஸ்… ஸ்…” என்று முனக, “என்னாச்சு…” கண்ணம்மா பதறினாள்.

“ஒண்ணும் இல்ல.. சிரிச்சிட்டே கைய தூக்கி, தலை மேல வச்சிட்டேன்… அது தான் ரெண்டு காயமும் சண்டை போட்டு எனக்கு வலிக்க வச்சிடுச்சு…” கேலியாக சொன்னாலும், அவனது குரலில் இருந்த வலி, அவளையும் தவிக்க வைத்தது.

“என்னால தான் உங்களை வந்து பார்க்க முடியாது…” வருத்தமாக அவள் சொல்ல,

“அதனால என்ன விடு கண்ணம்மா… அதுல என்ன ஃபார்மாலிட்டி இருக்கு… சரி… நேரமாகுது போய் வேலையைப் பாருங்க… எனக்கு ஒண்ணும் இல்ல…” என்றவன்,

“சாரி கண்ணம்மா…” மீண்டும் மன்னிப்பு வேண்ட…  

“நீங்க தானே திட்டினீங்க.. நீங்க என்னை அடிச்சா கூட பரவால்ல… எல்லாம் நான் செய்ததால தானே… இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கே எல்லா விஷயமும் தெரிஞ்சிரும்… அது உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கனுன்னு தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்… என்னை எவனாவது வந்து பொண்ணு பார்த்துடுவானா? பார்த்தா சும்மா விடுவானா?” கண்ணம்மா சொன்னதன் பிற்பாதியை கேட்ட அஜய், ‘அதானே…’ என்று முணுமுணுக்க, அதைக் கேட்ட கண்ணம்மாவின் விசும்பலே அஜயின் காதில் விழ,

“சரி… நீயும் அழுது வைக்காதே…” எரிச்சலாக அவன் சொல்ல,

“ப்ளீஸ் அஜய்… கொஞ்ச நாள் தான்… அந்த சர்ப்ரைஸ் பார்த்து நீங்க எப்படி ஃபீல் பண்ணறீங்கன்னு எனக்கு நீங்களே தான் போன் செய்யணும்… ப்ளீஸ்… ஓகே வா…” கண்ணம்மா கெஞ்சலுடன் கேட்க,

“ஹ்ம்ம்… சரிங்க மேடம்… உண்மை தானா வெளிய வரை நான் அமைதியா வெயிட் பண்ணறேன்… ஆனா… தெரியற அன்னைக்கு நீ என்கிட்ட மாட்டின…” அவன் ஒரு மாதிரிக் குரலில் சொல்லவும்,

“பை… டேக் கேர்…” என்று போனை அணைத்தவளின் முகத்தில் அப்படி ஒரு திருப்தி… ‘அஜய் தன்னை பற்றி நினைக்கிறான்… தான் சொல்லாத விஷயம் கூட அவனை பாதிக்கிறது..’ அந்த நினைப்பே அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க, அவள் முகத்தில் பூத்த வெட்க முறுவலைப் பார்த்த சுவாதி சிரித்தாள்.

“ஹ்ம்ம்… அய்யா அப்படி என்ன சொன்னார்?” அவள் கேட்க,

“அதெல்லாம் பக்கத்துல இருந்து கேட்டுட்டு தானே இருந்த…. சரி போய் வேலையைப் பார்ப்போம்… இல்ல… நம்ம டி.எல். அப்பறம் அந்த வலியோட வீட்ல இருந்தே வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிடப் போறார்…” கேலியாகச் சொன்னாலும், அக்கறையாக அவள் சொல்லவும், சுவாதியும் வேலையை கவனிக்கத் தொடங்கி இருந்தாள்.

அன்று மாலையே அலுவலகத்தில் இருந்து அனைவரும் அஜயைப் பார்க்க வரவும், கண்ணம்மா வர மாட்டாள் என்று தெரிந்தும் அவனது கண்கள் அவளைத் தேடியதென்னவோ உண்மை…

“ஹ்ம்ம்…” யோகேஷ் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு நடுவில், வேறு கவனத்தில் இருந்த அஜய் பெருமூச்சு விடவும்,

“கண்ணம்மா உங்கக்கிட்ட போன்ல பேசிக்கறேன்னு சொன்னா… பேசினாளா?” 

சுவாதி அப்பாவியாகக் கேட்க, ராதா அஜயை டக்கென்று நிமிர்ந்துப் பார்க்க, அவனோ, எங்கோ பார்வையை பதித்துக் கொண்டவன், மானசீகமாக சுவாதியைப் பார்த்து முறைத்தான்.

அவர்கள் கிளம்பிப் போனதும், கண்ணம்மாவிடம் இருந்து அவனது நலத்தை விசாரித்து குறுஞ்செய்தி வந்தது…

இரவும், அவன் உண்டானா… மருந்துகளை எடுத்துக் கொண்டானா? என்ற குறுஞ்செய்திகளின் மூலம்… அவள் அஜயின் நலனை கேட்டு அறிந்துக் கொண்டாள்.

அன்று இரவு, வேலை விட்டு திரும்ப வந்த விஜய், தனக்கான உணவை எடுத்துக் கொண்டு, அஜயின் அருகே வரவும், அஜய் உறங்குவது போல கண்களை மூடிக் கொள்ள, தனது செல்போனில் இருந்து அவனது செல்லிற்கு மெசேஜ் ஒன்றை விஜய் அனுப்பவும், மெசேஜ் வந்த ஒலியைக் கேட்ட, அஜய் அடித்துப் பிடித்து கண் திறந்து மொபைலைத் தேட,

“ச்சே… என் மச்சானுக்கு என் மேல எம்புட்டு பாசம்டா.. நான் அனுப்பின மெசேஜைப் பார்க்க உனக்கு இவ்வளவு ஆவலா?” அவன் கிண்டல் செய்யவும்,

“போங்க அத்தான்… நான் கண்ணம்மாவோன்னு நினைச்சேன்…” தனது சம்மதத்தை அவன் சொல்லாமல் சொல்ல, விஜய் சிரித்துக் கொண்டே, வேறு பேசத் துவங்கினான்.

அஜய்யின் உடல் நலம் நன்றாக தேறி வரவும், அடுத்த நாளே அவனை வீட்டிற்கு அழைத்து வந்தனர்…. அந்த ஒரு வாரம் முழுவதும், நலம் விசாரிப்புக்கள், கேலி கிண்டல் என அனைத்தும் குறுஞ்செய்தி வாயிலாகவே பகிரப்பட, அஜய், கண்ணம்மாவின் இடையில் நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

அந்த வார இறுதியில் வீட்டிற்கு வந்த சுப்பு… “மீனா… கண்ணம்மா..” என்று அழைக்கவும், கண்ணம்மா கயலுடன் வந்து நிற்க, மீனாவும், வேலையை விட்டு விட்டு, அவர் முன்பு வந்து நின்றார்.

“நான் கண்ணம்மாவுக்கு வரன் பார்க்கலாம்ன்னு இருக்கேன்… என் பிரெண்ட் ஒரு நல்ல தரகர்கிட்ட கூட்டிட்டு போனான்… அவரும் ரெண்டு வரன் பத்தி எனக்கு சொன்னார்… எனக்கு முழு திருப்தி.. நீங்களும் பாருங்க… கண்ணம்மா எப்போப் பாரு அந்த ராஸ்கலை நினைச்சு அழுதுட்டு இருக்கறதைப் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… ஒரு கல்யாணம் குடும்பம்ன்னு வந்தா… அவ மாறவும் வாய்ப்பு அதிகம் இருக்கும் இல்ல… அந்த கடன்காரனைப் பத்தி நினைக்கவே நேரம் இருக்காது…” முடிவாகச் சொன்னவர், தனது பேச்சு முடிந்தது என்பது போல அங்கிருந்து நகர்ந்து செல்ல, கண்ணம்மா திகைத்து நின்றிருந்தாள்.

“நல்ல முடிவை எடுத்து இருக்கீங்க… ரெண்டு பையனுமே பார்க்க நல்லா இருக்காங்க… ஜாதகம் எல்லாம் நல்லா பார்க்கணும்… நாளைக்கு ஆயுத பூஜை… அது முடிஞ்ச உடனே, ஜாதகம் சரியா இருந்தா… பொண்ணு பார்க்க வரச் சொல்லலாம்…” மீனா திட்டமிட, கண்ணம்மா கயலைப் பார்க்க, அவளோ, தோளைக் குலுக்கிவிட்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.

மனதில் இருப்பதை சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கண்ணம்மா, அஜயின் உதவியை நாடுவதற்காக போனை எடுக்க நினைக்க,

“ஹையோ கண்ணம்மா… அஜய் கிட்ட உங்க அப்பா சொன்னதைப் பத்தி சொல்லப் போறியா? அப்பறம் இப்போ தரையில இருக்கற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடும்…” என்று மனசாட்சி அபாயமணியை அடிக்க, கண்ணம்மா சோர்ந்து போய் அமர்ந்தாள்.

அவளது தவிப்பை பார்த்துக் கொண்டே மெல்ல அவள் அருகில் வந்த கயல், “ஜாதகம் தானே பார்க்கப் போறாங்க… வேற எதுவுமே இல்லையே… இதுக்கே இப்படி உட்கார்ந்தா… இன்னும் நீ சமாளிக்க வேண்டியது நிறைய இருக்கு…” என்று அவளிடம் சொல்ல, கண்ணம்மா அதிர்ச்சியுடன் நிமிர்த்துப் பார்த்து, ‘நானா’ என்று கேட்க,

“நீயே சொல்லிட்டா நல்லது… இல்ல… ரொம்ப கஷ்டம்… நீ செய்தது நம்பிக்கை துரோகம் இல்லையா?” கயல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,

“வீட்ல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கன்னு தான் பேரு… எனக்கு ஒரு ஒத்தாசையும் செய்யறது இல்ல… கண்ணம்மா… போய் பூஜை அறைய சுத்தம் பண்ணு… கயல்… நீ வீட்டுல ஒட்டடை அடி…” என்று வேலைகளை ஏவ, அதற்கு மேல் பேசிக்கொள்ள இருவருக்குமே நேரம் இருக்கவில்லை.            

அன்று ஆயுத பூஜை… வீட்டில் பூஜை முடிந்து, அஜய்யின் நெற்றியில் திருநீறு பூசியவர், அவனுக்கு அன்றைய உணவுகளைக் கொடுக்க, அஜய் அதை சுவாரசியமாக உண்டுக் கொண்டிருக்க, அவசரமாக வந்த விஜய், பட்டிமன்றம் ஓடிக் கொண்டிருந்த சானலைத் திருப்பி, தான் பணி புரியும் சானலுக்கு மாற்றினான்.

“என்ன அத்தான்… அது நல்லா தானே இருந்தது… எவளோ ஒரு நடிகையை பேட்டி எடுத்துப் போட்டுட்டு உங்க அலும்பு இருக்கே…” அவன் சலித்துக் கொள்ள, ‘நன்றி வணக்கம்…’ என்று கிள்ளைத் தமிழில் வணக்கம் சொன்ன நடிகை, ஆயுத பூஜை வாழ்த்தை சொல்லிவிட்டு விடைப்பெற, அடுத்து விளம்பரங்கள் அணிவகுத்தது.

“அத்தான்… உங்க பொறுப்புக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு… இந்த கேப்ல கூட மாத்த மாட்டீங்களா?” வடையை வாயில் தள்ளிக் கொண்டே கார்த்திக் கேட்க,

“டேய்… வடை தானே சாப்பிடற… அந்த வேலையை கவனி… ஒரு முக்கியமான ப்ரோக்ராம்… அது சரியான நேரத்திற்கு வருதா வரலையான்னு நான் பார்க்க வேண்டாமா…” விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த ரியாலிட்டி ஷோ ஆரம்பம் ஆனது…

“நீங்களுமா?” அஜய் நக்கல் அடிக்க,

“ஹாய் ஹாய் ஹாய்… நேயர்கள் அனைவருக்கும் எங்கள் சார்பாக ஆயுத பூஜை வாழ்த்துக்கள்… இன்னைக்கு ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி இன்னும் சிறப்பா அமையப் போகுதுங்கறதுல எந்த ஐயமும் இல்ல… என்னடா… இவன் இவ்வளவு பீடிகை போடறான்ன்னு பார்க்கறீங்களா? அதுக்கு காரணமும் இருக்கு…

இன்னைக்கு இந்த ஷோ… இன்னைல இருந்து ஆரம்பிக்கப் போற ஒரு புது ஷோ… அந்த ஷோல… முதன்முதலா தங்கள் முகங்களை காட்ட வரப் போற நம்ம செலிப்ரிட்டீஸ்… தென்றல் பண்பலையின் காந்தக் குரல்களின் சொந்தக்காரர்கள்…” அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சொல்லவும், அஜயின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு…

டிவி திரையை அவன் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்க, வாயில் கவ்விய வடையுடன் கார்த்திக் அந்த உண்மைக் கண்மணியைப் பார்க்க ஆவலாக காத்திருந்தான்.

திரையில் வரிசையாக வந்து நின்ற தென்றல் பண்பலையின் RJக்களைப் பார்த்தவுடன் அஜயின் நெஞ்சம் சிறு அதிர்வில் இருந்து மீண்டு… இதழில் மெல்ல மெல்ல புன்னகையை குடி வைத்தது.

அஜயின் முக மாறுதல்களை விட, ராதாவின் முகமாறுதல்களே அங்கு முதன்மையாக விஜய்க்குத் தோன்றியதோ?? ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் அவரது அதிர்ச்சி தவறாமல் பட, அதை விட அதிர்ச்சியுடன் கார்த்திக், “அஜய்…” என்று தொடங்கும் முன்பே…

“அஜய்… அவ… அவ… உன் பெண்டாட்டி கண்ணம்மா தானே…” தனது கண்களையே நம்ப முடியாமல், ராதா அதிர்ச்சியின் உச்சத்தில் கேட்க, அதைக் கேட்ட கார்த்திக் அதிர்ந்து, விஜயைப் பார்க்க,

“அஜய்… அண்ணி போட்டு இருக்கறது… அன்னைக்கு நீ வாங்கின செட்… அது எப்படி??” அனுபமா ஒரு புறம் அவளது கண்களை நம்ப முடியாமல், அவனைக் கேள்வி கேட்க, அஜயோ, அவள் அணிந்திருந்த பச்சை நிற சுடிதாரையும், அதற்கு தோதாக, அவன் தேர்வு செய்த அந்த நகையில் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த கண்ணம்மாவைப் பார்த்து, நிம்மதி பெருமூச்சு விட்டு, கனவில் மிதப்பவனைப் போல கண்களை மூடிக் கொண்டான்.    

“மாப்பிள்ளை… இவ… இவ…” இன்னமும் கண்ணம்மாவை மீண்டும் பார்த்த ராதா… அதிர்ச்சி விலகாமல், நடந்த சம்பவங்களின் வலி குறையாமல் கேட்க,

“அவ… என் தங்கை கண்ணம்மாவே தான்…. அவ தான் கண்மணி… RJ கண்மணி… கண்ணம்மா சுப்பிரமணியை திரிச்சு… fmக்காக கண்மணின்னு பேரை வச்சுக்கிட்டு இருக்கா…” நிதானமாக விஜய் விளக்கம் சொல்லவும், கண்களைத் திறந்துப் பார்த்த அஜய், தொலைக்காட்சித் திரையில் தெரிந்த கண்ணம்மாவின் குரலையும், சிறிது பயத்துடனும், முதன்முறை திரையில் தோன்றும் நாணத்துடனும், பேசுபவளை ரசிக்கத் தொடங்கினான்.

 

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

15 COMMENTS

 1. Super Update.. Ippadi oru twist ah Mam.. Kannamma thaan Kanmani ah irupaanga nu guess panna mudinjuthu first ae but Kannamma Ajay oda wife ah??? Story super ah poguthu seekirama next ud kudunga..

 2. nice ud,i can’t post in the comment area .it shows you left a field r duplicate comments while pressing the send button,please tell how to send .send the password for paavai nee venpaavai in snila22@gmail.com

 3. What….. kannama aj wife ah?. Enna ma idhu sollave illa. Appave doubt ta irunthuchi 2 peroda relationship um.Nice ud sis.

 4. Nice update….kannamma thaan kanmani nu oru guess irunthuchu ….ana intha twist unexpected thaan ….superb. Great going sis.?
  Romba aavala irukku next update padikka….waiting.

 5. hahaha…
  ithallava kathai… super super…
  unggalukku varen irumga ramz…
  yetho oru epi padichittu, naan ungakitta ketten nu ninaikkiren,
  appave enakku intha santhegam vanthiduchi… ivanga 2 perum husb & wife’a iruppaangelonu…

  neenga koduththa intha twist enakku rombavey pidichirukku…
  ippadhan kathai innum athigama soodu pidikkithu… hahaha

LEAVE A REPLY