SHARE

முன் ஜென்ம பந்தமாய்
என் சிந்தையின் ஊடே
ஊறித் திளைத்த படியே
என்னை ஆட்டுவிக்கும்
உன் நினைவு இம்சைகளால்
கோபங்களின் முகவரி கூட
தொலைந்து போய்
உன்னை சேரும் தேதி
ஒன்றே எதிர்பார்த்து
காத்திருக்கிறேன் ….

 

 

“ஹலோ… கண்மணி….. ஹலோ…” அஜய் இரண்டு முறை அழைக்க, இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஒரு பாடல் ஒலிபரப்பாகத் தொடங்கி இருக்க, அஜய் புரியாமல் குழம்பி, போனையே வெறித்துப் பார்த்தான்.

அன்று ஏனோ அவன் கண்மணியின் குரலை கண்டுப்பிடித்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்… 

“ச்சே… என்ன இது? இப்படி பாதியிலேயே கட் ஆகிடுச்சு… இன்னைக்கு ரிலாக்ஸ்ட்டா அவ குரலைக் கேட்கலாம்ன்னு நினைச்சேன்… இப்படி ஆகிப் போச்சே…” புலம்பிக் கொண்டே, fmல் அந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான்.        

பாடல் முடிந்து, அந்த திரைப்பட விமர்சன நிகழ்ச்சியில், கண்மணி பேசியது அனைத்தையும் கேட்ட அஜயின் மனதில் முன் எப்போதையும் விட நெருடல் அதிகமாகிக் கொண்டே சென்றது.

உடனே தனது செல்போனை எடுத்தவன், கண்ணம்மாவின் எண்ணிற்கு அழைக்க, அவனது காலைப் பார்த்தவளுக்கோ, “இவர் எதுக்கு இப்போ கால் செய்யறார்?” என்ற யோசனை ஓடியது.

போனை எடுக்க யோசித்தவள், “நான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன் அஜய்… என்ன விஷயம்?” மெசேஜ் செய்து கேட்கவும், சுர்ரென அவனது கோபம் ஏறியது… மீண்டும் மீண்டும் அவள் போனை எடுக்கும் வரை அடித்துக் கொண்டே இருந்தவன், ஒரு கட்டத்தில், கண்ணம்மா போனை இயக்கவும், அவள் ‘ஹலோ’ சொல்லி முடிப்பதற்குள்,

“ஹான்… உனக்கு எல்லாம் இன்னும் திமிரு குறையலைடி… அப்படியே தான் இருக்கு… உன் கூட கொஞ்சம் பிரெண்டா பழகலாம்ன்னு முயற்சி பண்றேன் பாரு… அதுக்கு என்னை வந்து அடிச்சிட்டு போ…” அஜய் கத்த, அந்தப் பக்கம் கண்ணம்மாவிற்கு சிறிது சந்தோஷமாகவே இருந்தது.

“தான் அவனுடன் உடனே பேசவில்லை என்று தானே இத்தனை கோபம்…” அவளது மனம் சொல்ல,

“அஜய்… என்னாச்சு?” மெல்லிய குரலில் கேட்டாள்.  

“ஹ்ம்ம்… அப்படியே குளுகுளுன்னு இருக்கு…” கோபம் எரிச்சல் ஆற்றாமை அனைத்தும் போட்டிப் போட்ட குரலில் அவன் கடுப்படிக்க, நிலைமை விபரீதம் என்று அவளது மனதில் மணி அடித்தது.

“என்னவோ கேட்க கூப்பிட்டீங்க போல இருக்கு” அபாய மணியையும் பொருட்படுத்தாமல் கண்ணம்மா திக்கித் திணறிக் கேட்க, அஜயின் ஆத்திரம் அதிகமாகியது.

“நான் என்ன கேட்க கூப்பிட்டேன் தெரியுமா?” அதே கடுமையுடன் அவன் கேட்க,  

“தெரியாது…” அவள் இழுக்க,

“அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தவன், சரின்னு சொல்லிட்டு போனானா… இல்லையா? இல்ல…. உன்னைப் பத்தி தெரிஞ்சு அப்படியே ஓடிப் போயிட்டானா?” அஜய் வார்த்தைகளை நெருப்பாக அவள் மீது வீச, அந்தப் பக்கம் கண்ணம்மா தவித்துப் போனாள்.

“ஒருவேளை அவன் உண்மை தெரியாம ஓகே சொல்லிட்டானோ? அது தான் வலிய வலிய வந்து என்கிட்ட பேசறவ, இத்தனை தரவ நான் கால் பண்ணியும் போனை எடுக்கலையோ?” அவளது தவிப்பு புரியாதவன், வார்த்தைகளை மேலும் அவள் மீது வீசிக் கொண்டிருக்க, கண்ணம்மா போனையே மலங்க மலங்க விழித்தபடி, கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“போனை வை… உனக்கெல்லாம் எதுக்கு போன்… அதை தூக்கிப் போடு…” என்று அவளிடம் சொன்னவன், தனது போனை தூக்கி வீச, அது சுவற்றில் பட்டு தனது உயிரை விட்டது.

அவனது கோபத்தையும், அவன் செல்லை தூக்கி எறிந்த வேகத்தையும் பார்த்த விஜய், யோசனையுடன், அங்கிருந்து நகர்ந்தான்.

“என்னங்க… இந்த அஜயை எங்கயாவது பார்த்தீங்களா?” அனுபமா அவனிடம் வர,

“உங்க அண்ணாவ இப்போ தான் பாக்கெட்ல இருந்து வெளிய எடுத்து விட்டேன்… அங்க போறானா பாரு…” விஜய் கிண்டல் செய்யவும், அவனை முறைத்தவள்,

“இவன் எப்போப் பாரு போனையும், ஹெட்செட்டையும் எடுத்துட்டு காணாம போயிடறான்… கேட்டா ஆபீஸ் கால்ன்னு சொல்றான்… என்னன்னே புரியல… இப்படியா தினமும் கால் பேசுவாங்க…” அனுபமா ஆச்சரியமாகக் கேட்க, விஜய்க்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

அவனது கண்கள் பளபளப்பதைப் பார்த்த அனுபமா, “விஜய்… உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு நினைக்கிறேன்… என்னன்னு சொல்லுங்க…” அவனை வற்புறுத்த,

“தென்றல் fmல, நீ எப்பவும் காலையில தென்றல் ராகம்ன்னு ஒரு நிகழ்ச்சில பாட்டெல்லாம் நல்லா போடறாங்கன்னு சொல்லுவியே… அந்த நிகழ்ச்சிக்கு பேசறது உங்க அண்ணாக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்… மற்ற எல்லாத்தையும் விட, அவனுக்கு அந்த வேலை ரொம்ப முக்கியம்…  அதுவும் அந்த RJ கூட….” என்றவன் பாதியில் நிறுத்தி, மந்தஹாச புன்னகையை வீச, அனுபமா அதிர்ச்சியுடன் விழி விரித்தாள்.

“நிஜமாவா?” அவள் வாய் பிளக்க,

“நிஜமா… அவ குரல் மேல உங்க அண்ணாக்கு ஒரு லைக்கிங்… அதோட… அவனோட ஆபீஸ்ல ஒரு பொண்ணு மேல பிரெண்ட்ஷிப்பைத் தாண்டின ஒரு பாசம்… அந்த பாசம் உங்க அண்ணாவை ரொம்ப இம்சை செய்யுது… முன்ன நடந்ததுல அவன் மனசு அடிக்கடி இறுகிப் போனாலும், இப்போ அவ மேல மனசுல இருக்கற பாசம்… காதலின் ஆரம்ப அறிகுறி… அவனை ரொம்ப படுத்தி எடுக்குது…

அவனோட மாற்றம் பற்றின உண்மை அவனுக்கே புரிஞ்சதுனால தான் சார் ரொம்ப டென்ஷனா சுத்திட்டு இருக்கார்… மேல போய் பாரு… உண்மை புரியும்… கூடவே ஸ்ரீய கூட்டிட்டு போ… அவன் கோபமா இருக்கான்… அவனைப் பார்த்தா கொஞ்சம் டென்ஷன் குறைய வாய்ப்பிருக்கு…” விஜய் சொல்வதைக் கேட்ட அனுபமா சந்தோஷமாக, ஸ்ரீயை அழைத்துக் கொண்டு, அஜயை காணச் சென்றாள்.

“இன்னும் கொஞ்ச நாள் தான் மச்சான்…. உனக்கு இருக்கு திருவிழா… நான் நடத்தி வைக்கிறேன்…” மனதினில் கறுவிக் கொண்ட விஜய், வெளியில் சென்றான்.

மேலே சென்ற அனுபமாவிற்கு, அஜயின் நொறுங்கிய செல்போன் காலில் தட்டுப்பட, அதையும், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த அஜயையும் பார்த்தாள்.

“மாமா…” ஸ்ரீயின் அழைப்பில் நிமிர்ந்தவன், கண்களில் தான் அத்தனை வேதனை… அதைப் பார்த்து பதறிய அனுபமா அவனிடம் செல்ல, அஜய் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“என்னை கொஞ்ச நேரம் தனியா விடேன்…” ஸ்ரீயின் முகத்தைப் பார்த்தும் வேதனை தீராதவன் அனுபமாவிடம் சொல்ல, அஜயின் குரலில் இருந்த கெஞ்சலில், வருத்தத்துக்கு பதிலாக அனுபமாவிற்கு சந்தோஷமே மிஞ்ச,

“போன் உடைஞ்சு போச்சா அஜய்…” என்று பரிதாபமாகக் கேட்டாள்.

“ஆமா… தூக்கிப் போட்டா உடையத் தான் செய்யும்…” முணுமுணுத்தவன்,

“நான் போய் வேற போனை வாங்கிட்டு வரேன்…” என்று கிளம்பிச் சென்றான்.

இரண்டாக பிளந்து இருந்த போனை எடுத்துக் கொண்டு, ஸ்ரீயையும் தூக்கிக் கொண்டு கீழே இறங்கிச் சென்றாள். வெளியே கிளம்ப தயாராக இருந்த அஜயை ராதா கேள்வியாகப் பார்க்க, கையில் செல்போனை வைத்துக் கொண்டு, திரு திருவென விழித்துக் கொண்டிருந்த அனுபமாவைப் பார்த்தவன், அவளது கையில் இருந்த செல்போனை பிடுங்காத குறையாக பிடுங்கிக் கொண்டு வெளியில் சென்றான்.

“என்னாச்சு இவனுக்கு… முகம் இப்படி உர்ருன்னு இருக்கு…” ராதா கேட்க, அனுபமா விஜயைப் பார்க்க, அவனோ,  ‘சொல்லாதே’ என்பது போல சமிக்ஞை செய்தான்.

“ஒண்ணும் இல்லம்மா… அவனோட செல்போன் உடைஞ்சு போச்சு… அது தான்… அது சரி செய்ய முடியுதான்னு பார்க்கப் போறான் போல…” அனுபமா சமாளிக்க,

“என்னவோ போ… திடீர்ன்னு நல்லா தான் இருக்கான்… சில சமயம் இப்படி ஆகிடறான்… இவனுக்கு ஒரு கல்யாணம் ஆனா தான் சரியா இருக்கப் போகுது…” என்று ராதாவும் சலித்துக் கொண்டார்.

வெளியில் சென்ற அஜய், புது மொபைலை வாங்கிக் கொண்டு, தன் மீதே எழுந்த எரிச்சல் அடங்குவதற்காகவும், அது யாரிடமும் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், வண்டியை வேகமாக ஈ.சி.ஆர். ரோட்டில் செலுத்தினான்.

“எதுக்கு கண்ணம்மாவ அப்படி திட்டின… அவ வண்டியில வந்ததுனால போன் பேசல… அதுக்கு ஏன் உனக்கு அவ்வளவு கோபம் வருது… அதுக்குன்னு அப்படியா திட்டுவ…” மனம் அவனை சாடிக் கொண்டிருக்க,

“அவ நின்னு மெசேஜ் செய்யற நேரத்துக்கு என்னன்னு போன்ல கேட்டு இருக்கலாம் இல்ல…” பதில் கேள்வி அவன் கேட்க,

“நீ போன் பண்ணி திட்டிடுவியோன்னு அவளுக்கு பயமா இருக்கும்… அது தான்… அப்பறம் போனை எடுத்தா இல்ல…” மீண்டும் மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லும் முன், ரோட்டில் கவனம் இல்லாமல், வேகத்தைக் குறைக்காமல், ஒரு ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கியவன், முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார் மீது மோதி, அதே வேகத்துடன் வண்டியில் இருந்து விழுந்தான்…  

மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது விபத்து… அவன் சென்றுக் கொண்டிருந்த வேகம், அவனை சில தூரங்கள் இழுத்துச் சென்றது.. அவனது கைகளிலும், நெற்றியிலும் ரோட்டில் உராய்ந்ததில் ரத்தம் கசியத் தொடங்க, வண்டியும், சில தூரம் ரோட்டில் உரசிக் கொண்டே சென்று, அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்தது.  

சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அஜய், சாலையின் ஓரம் போடப்பட்டிருந்த சிமெண்ட் தடுப்பில் சென்று முட்டிக் கொண்டு நிற்க, தலையில் பலமான அடிப்பட்டது.

கார் மீது டொம்மென்று மோதிய சத்தமும், அதனைத் தொடர்ந்து கீழே விழுந்த அஜயின் பைக் ரோட்டில் உரசிக் கொண்டே சென்ற சத்தமும், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அவன் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டு, க்ரீச்சிட்டு நிறுத்திய சத்தமும், ஒரு சில வினாடிகள், அந்த இடத்தையே பதட்டத்துக்குள்ளாக்கியது.

அஜய் விழுந்ததைப் பார்த்தவர்கள் கூட்டம் கூட, அதில் ஒருவர் உடனே ஆம்புலன்சிற்கு அழைத்து, அவனுக்கு தண்ணீர் கொடுக்க முற்பட, அதைத் தடுத்தவன், ‘வீட்டுக்கு போன்’ ஈனஸ்வரத்தில் முனகினான்.

“உங்க வீட்டுக்கு தகவல் சொல்லணுமா… சீக்கிரமா நம்பர் சொல்லுங்க…” அவன் முனகுவதைப் புரிந்த கூட்டத்தில் ஒருவர், அவனது கண்கள் சொருகுவதை உணர்ந்து, அவனது கன்னத்தை தட்டிக் கேட்கவும், சிரமமாக கண்களைத் திறந்த அஜய், கார்த்திக்கின் நம்பரைச் சொல்லி, வலியில் முகத்தை சுருக்கியப்படி, கண்களை மூடினான்.

அவனது கண்கள் மூடவும், அங்கு கூடி இருந்தவர்களின் பதட்டம் தொற்றிக் கொள்ள, அவனது நாடியை பரிசோதித்து, அது துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, நிம்மதியுடன், அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து, அவனை சுய நினைவிற்கு கொண்டு வர முயன்றுக் கொண்டிருந்தனர்.

அவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல், ஆம்புலன்சும் விரைந்து வந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அதே நேரம், அவனது குடும்பமும், கார்த்திக் தகவல் சொன்னதன் பேரில் அங்கு ஓடி வந்தனர்.

கையில், காலில் ஏற்பட்டிருந்த காயங்களை சுத்தம் செய்து மருந்திட்டு முதலுதவி செய்த மருத்துவர், தலையில் அடிப்பட்டு, மயக்கம் வந்ததால், தலையை ஸ்கான் செய்து பார்க்க வேண்டும் என்று சொல்லிவிடவும், ராதா பதட்டத்துடன் விஜயைப் பார்க்க,

“நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க… ஒண்ணும் இருக்காது அத்தை… தைரியமா இருங்க…” என்று தேறுதல் சொன்னாலும், அவனும் உள்ளே பயந்துக் கொண்டிருக்க, அனுபமா பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அஜய் போட்டிருந்த வெள்ளை நிற டீ-ஷர்ட்… ரத்தத்தில் தோய்ந்து, சிவப்பாக காட்சியளித்ததைப் பார்த்தவளுக்கு அழுகை பீறிட்டது. அதைப் பார்த்த ராதா உள்ளம் நடுங்க அஜய் கண் விழிக்க காத்திருந்தார்.   

விரைவிலேயே ஸ்கேனும் எடுக்கப்பட்டு, ‘பயப்பட ஒன்றும் இல்லை…’ என்று மருத்துவர்களின் வாயில் இருந்து வார்த்தை வரும் வரை அனைவரும் பயத்துடனே அமர்ந்திருந்தனர்.

“அம்மா… அவனுக்கு வலி தெரியாம இருக்க இன்ஜெக்ஷன் போட்டு இருக்காங்க… அது தான் நல்லா தூங்கறான்… நீங்க இந்த டீ சாப்பிடுங்க…” அனுபமா, ராதா இருவருக்கும் டீயை வாங்கிக் கொண்டு வந்த கார்த்திக் சமாதானம் சொன்னான்.               

“எனக்கு எதுவும் வேண்டாம்…” பலகீனமான குரலில் ராதா சொல்ல,

“அம்மா.. கொஞ்சமாவது குடிங்க… அவனை பார்த்துக்க உங்களுக்கு தெம்பு வேண்டாமா? அவனுக்கு ஒண்ணும் இல்லம்மா… நீங்க பட்டினி கிடந்தா என்ன ஆகறது?” கார்த்திக் வற்புறுத்தவும், மெல்ல அந்த டீயை வேண்டா வெறுப்பாக பருகினார்.

ஒருநாள் முழுவதும் கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக அஜயை ICUவில் வைத்திருந்தனர். அன்றைய நாள் முழுவதும் உறக்கமின்றி அவர்கள் காத்திருக்க, மறுநாள் காலை வரை மருந்தின் உதவியால் உறங்கிக் கொண்டிருந்த அஜய், மருந்தின் வீரியம் குறைந்ததும், வலியால் முனகத் தொடங்கினான்.

அவன் முனகவும், அவனை பரிசோதித்த நர்ஸ்… வெளியில் காத்திருந்த ராதாவை உள்ளே அனுப்பிவிட்டு, டாக்டரை அழைக்கச் செல்ல, உள்ளே சென்ற ராதா, “அஜ்ஜூ… எப்படி இருக்கடா கண்ணா… என்னடா இதெல்லாம்…” கண்ணீருடன் அவனது முகத்தை வருடினார்.

“ம்ப்ச்… அழாதம்மா… எனக்கே உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது… இதுல நீ வேற அழுது என்னை டென்ஷன் பண்ணாதே…” அஜய் வேதனையுடன் முனகி, தான் இருக்கும் இடம் உணர முயன்றான்.

“ஹாஸ்ப்பிட்டல்ல தான்டா இருக்கோம்… தலை அசைச்சிடாதே… தலையில கட்டு போட்டு இருக்கு…” ராதா சொல்லவும் தான், உடம்பு வலியில் தலைவலியும் சேர்ந்திருப்பதை உணர்ந்து, தனது கையை எடுத்து, தலையை தொட முயல, ‘ஹையோ’ என்று வலியில் முனகினான்.    

“ஏண்டா அவ்வளவு வேகமா போன? எப்பவும் ஜாக்கிரதையா இருக்கற நீ எப்படிடா இப்படி செஞ்ச? நேத்து உன்னைப் பார்த்ததுல இருந்தே எங்களுக்கு எல்லாம் எப்படி இருந்தது தெரியுமா?

நீ தான் ரொம்ப வேகமா போனியாம்… அங்க இருந்தவங்க சொல்லி இருக்காங்க… உன்னோட வண்டி முன் பக்கம் எல்லாம் நொறுங்கி போச்சு போல… கார்த்திக் இன்னைக்கு காலையில பட்டறையில விடறேன்னு சொல்லிட்டு இருந்தான்…” ராதா விவரம் சொல்லவும், அஜய் கண்களை மூடிக் கொண்டான்.

“என்னோட புது செல்போன்ம்மா…” நினைவு வந்தவனாக அஜய் கேட்கவும், அங்கு வந்த கார்த்திக்,

“ஹான்.. அது அங்க இருந்த கால்வாய் தண்ணியில குளிச்சிட்டு இருக்கு…” நக்கலாக சொல்லிக் கொண்டே அவன் இருந்த அறையின் உள்ளே வர, அஜய் புரியாமல் பார்த்தான்.

“இந்த லுக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… ஏண்டா… கொஞ்சமாவது அறிவு இருக்கா… வண்டிய அந்த ஸ்பீட்லயா ஓட்டிட்டு போவ… எனக்கு போன் வந்த உடனே எந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறாங்கன்னு அத்தான் கிட்ட சொல்லிட்டு ஸ்பாட்டுக்கு வந்தா… அவனவன் நீ பறந்த ஸ்பீடைப் பத்தி தான் அங்க பேசிட்டு நின்னுட்டு இருந்தான்…

உனக்கு அடிபட்டதால கார்க்காரன் சும்மா விட்டான்.. இல்ல… அவனோட கார்ல விழுந்த டொக்குக்கு உன்கிட்ட பணம் கேட்டு பிச்சு எடுத்திருப்பான்…” கார்த்திக் படபடவென்று பொறியவும், அஜய் சலிப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“உன் புது மொபைல் வண்டியோட நீ கீழ விழுந்ததுல நொறுங்கி போயிருந்தது அஜய்… அதை சர்வீஸ்க்கு அப்பறமா கொடுத்துக்கலாம்… போட்டா ரெண்டு பேரீச்சம்பழம் தருவானோ என்னவோ? அதனால உனக்கு இப்போ உபயோகத்துக்கு உனக்கு அதே போல வேற செல்போன் வாங்கி இருக்கேன்டா…

இந்தா… அந்த மொபைல்ல இருந்த சிம்மை எடுத்து இதுல போட்டுட்டேன்… எல்லா நம்பரும் சிம்ல இருந்து சேவ் பண்ணிட்டேன்…” கார்த்திக் வரிசையாக சொல்லிக் கொண்டே வர, அஜய் அவன் கையில் இருந்த செல்போனைப் பார்த்தான்.

“இதை வாங்கவா அவ்வளவு அவசரமா போன?” விஜய் சந்தேகமாகக் கேட்க,

“இல்ல… என் செல்போன் உடைஞ்சு போச்சு… கொஞ்சம் கோபம்…” வருந்திய குரலில் அஜய் சொல்ல, வலியில் அவன் முகம் சுருங்கியது.

“சரிடா… டாக்டர் ரௌண்ட்ஸ் வர நேரமாச்சு… நாங்க வெளிய இருக்கோம்…” விஜய் சொல்லவும், அஜய் தலையசைக்க முயன்று வலியில், ‘அம்மா…’ என்று முனக, ராதாவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“மெல்ல ராஜா… அப்பாவுக்கு போன் பண்ணி சொன்னா… ரொம்ப டென்ஷன் ஆகிட்டார்டா… ஒரு மணி நேரத்துக்கு ஒரு போன் பண்ணி கேட்டுட்டு இருக்கார்…” அவன் தந்தையை இந்த நேரத்திலாவது மன்னிக்க வேண்டுமே என்று அவர் இடையில் சொல்லவும், ‘ம்ப்ச்’ என்று அவன் முகத்தை சுளிக்க, ராதா அதற்கு மேல் அவனை இம்சிக்காமல், வெளியே சென்றார்.

மருத்துவரும் வந்து பரிசோதித்து விட்டு, மேலும் இரண்டு நாட்கள் சாதாரண அறையில் கண்காணிப்பில் இருந்த பிறகு பிரச்சினை ஏதும் இல்லையென்றால் மறுநாள் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று, சில அறிவுரைகளுடன், மருந்துகளையும் சேர்த்து கொடுத்தனர்.

“நல்லவேளையா உனக்கு பயப்படற அளவுக்கு அடி எதுவும் படலையாம்… கொஞ்சம் தப்பி இருந்தா என்ன ஆகி இருக்கும் அஜய்? அப்படியா கோபம் கண்ணை மறைக்கும்…” முதலில் கடிந்து கொண்ட விஜய்,

“ஒரு மாசம் ஃபுல்லா ரெஸ்ட்ல இருக்கணுமாம்… கால்ல நல்ல பிராக்ச்சர்… கையில லைட்டா கிராக் ஆகி இருக்கு… மோதினதுல தலையிலயும் லைட்டா பிராக்ச்சர் ஆகி இருக்காம்… நல்லவேளை இதோட போச்சு… தலையில இருக்கறது தானே கூடிக்குமாம்… தலைக்கு வெளிய இருக்கற காயம் ஆறர வரை இந்தக் கட்டு இருந்தா போதும்… நாளைக்கு ஆபீஸ்க்கு போய் கார்த்திக் லீவ் சொல்லிடுவான்… மருந்து ஒழுங்கா சாப்பிடு… சீக்கிரமே சரியாகிடும்…” விஜய் மேலும் சொல்லவும், ‘ம்ம்…’ என்று முனகியவன்,  

“என்னால எவ்வளவு பேருக்கு கஷ்டம்…” என்று மனதில் நினைத்த நொடி, கண்ணம்மாவின் முகம் மனக் கண்ணில் விரிந்தது.

“தேவை இல்லாம அவளை பிடிச்சு சத்தம் போட்டு… மொதல்ல அவகிட்ட சாரி கேட்கணும்… நேத்து   ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன்…” மனதினில் நினைத்தவன், மொபைலை எடுக்க விரல்களை மடக்க, விரல்களில் இருந்த காயம் வலிக்க, “ஆஹ்…” என்று முனகினான்.

“இப்போ என்னடா அதுல வேலை… பேசாம வை… விரல் முட்டில நல்லா அடி பட்டு இருக்கு…” அவனது கையில் இருந்த செல்போனை கார்த்திக் பிடுங்கி வைக்க, வலி ஒருபுறம், கண்ணம்மாவை அதிகமாக பேசிவிட்ட வேதனை ஒருபுறம் அஜய் நிலை கொள்ளாமல் தவிக்கத் தொடங்கினான்.

முன்தினம்….

அஜய் செல்போனில் கடுமையான வார்த்தைகளை கொட்டவும், கண்ணம்மாவிற்கு தன்னை நினைத்தே அருவருப்பு தோன்றியது… வீட்டிற்குச் சென்றவள், தன்னை மாய்த்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் எழவும், அமைதியாக அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

உள்ளே வரும் போதே அவளது முகத்தில் இருந்த வலியை உணர்ந்துக் கொண்ட கயல், அவள் தாழிட்டுக் கொண்டதும், அவளிடம் வேகமாக ஓடினாள்.

“கண்ணம்மா… கதவைத் திறடி… உள்ள என்ன செய்யற?” விடாமல் அவள் தட்டிக் கொண்டிருக்க, மீனா பதட்டத்துடன் அவள் அருகில் ஓடி வந்தார்.

“என்னாச்சு கயல்… கண்ணம்மாவுக்கு என்ன?” மாவாட்டிக் கொண்டிருந்தவர், சத்தம் கேட்டு அவசரமாக ஓடி வந்தார் போலும்… கையில் இருந்த மாவோடு, அவரும் சேர்ந்து கதவைத் தட்டிக் கொண்டே கேட்க,

“ஹையே…. என்னம்மா இது…. நான் அவகூட பேசறதுக்காக கதவைத் தட்டிட்டு இருக்கேன்… நீங்க என்னடான்னா… இப்படி மாவு கைய வச்சு தட்டி… கதவை எல்லாம் வீண் பண்ணறீங்க… போங்க போய் துடைங்க… அப்பா வந்தா திட்டப் போறாங்க…” கயல் அவரை விரட்ட, உள்ளே அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணம்மா, மெல்ல கதவைத் திறந்தாள்.

அவளது முகத்தைப் பார்த்த மீனாவின் மனதிலும் வலி எழ, “அவளை கொஞ்சம் சமாதானப்படுத்து கயல்… அந்த ராஸ்கல் நியாபகம் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்…” கயலின் காதருகே அவர் மெல்ல முணுமுணுக்க, கயல் அவரைத் திரும்பி முறைத்தாள்.

“வேண்டாம்… அப்பறம் நான் ஏதாவது சொல்லிடுவேன்… போய் வேலையைப் பாருங்க…” என்று மீனாவை விரட்டியவள், கண்ணம்மாவைத் தள்ளிக் கொண்டு, அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

“என்ன நடந்துச்சு? உங்க டி.எல்… அது தான் ‘எங்க மாமா’ திட்டினாங்களா?” கயல் கேட்டது தான் தாமதம், அனைத்தையும் ஒரு மூச்சு சொல்லி அழுதவள்,

“அவருக்கு என்னைக் கண்டாலே பிடிக்கல கயல்… என்னை தொலைஞ்சு போன்னு சொல்றார்… நான் பேசாம செத்துப் போயிடலாமான்னு யோசிச்சேன்… தைரியம் தான் வர மாட்டேங்குது…” அழுகையின் நடுவில் அவள் சொல்லவும், கயல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கவும், “நீயும் என்னை சாக சொல்றியா?” பரிதாபமாக அவள் கேட்க,

“அப்படியே அறைஞ்சேன்னா பாரு… மாமா அத்தனை தரவ விடாம கூப்பிட்டாரே… ஏதோ அவசரமா பேசணும்னு தானே கூப்பிட்டு இருக்கார்.. நீ நின்னு மெசேஜ் செய்த நேரத்துக்கு பேசி இருக்கலாம் இல்ல…” கயல் கேட்கவும்,

“அவர் எதுக்கு போன் செய்திருப்பாருன்னு எனக்கு ஒரு கெஸ் இருக்கு கயல்…” மெல்லிய குரலில், அந்த காரணத்தை சொன்னவள், மெளனமாக அமர்ந்தாள்.

“ஹ்ம்ம்… உன் ஆசை இப்படி இருக்கு… ஆனா.. அவரோட கோபம் வேற மாதிரி போகுது.. சரி விடு… மாமாவுக்கு கோபம் குறைஞ்சா அவராவே உன்கிட்ட பேசுவார்… எப்பவும் அப்படித் தானே செய்யறார்….” கயல் அவளை சமாதானம் செய்ய, மனம் சமாதானம் ஆகாமல், கண்ணம்மா அவளையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

“நான் இதுக்கு வேற என்ன செய்ய முடியும் சொல்லு… மாமாவைத் திட்டவா?” சலிப்பாக அவள் கேட்க,

“எல்லாமே என் மேல தான் தப்பு… நான் தான் எல்லாத்துக்கும் காரணம்… அவர் கூட போய் பேசினேன் பாரு… என்னைச் சொல்லணும்…” கண்ணம்மா புலம்பிக் கொண்டே, கயலின் மடியில் தலை சாய்க்க, அவளது இந்த வெறுமை அஜய் பேசினால் தீர்ந்து போகும் என்ற முடிவுடன், மென்மையாக அவளது முதுகை அவள் வருடிக் கொடுத்தாள்.  

துள்ளித் திரியா விட்டாலும், கண்ணம்மா ஓரளவு சுறுசுறுப்பாகவே வீட்டினில் வலம் வருபவள்…. இந்த ஒரு வாரமாக அவளை கவனித்த சுப்பு… அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து, மனதினில் வருந்தி கையாலாகாத்தனத்துடன் அதை வேடிக்கைப் பார்த்தார்.

*************

“அம்மா… தலை, கையெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா…” வலியின் வேதனையுடன் அஜய் முனகவும்,

“பெரிய ஸ்டன்ட் மாஸ்டர்ன்னு நினைப்பு இருந்தா இப்படித் தான் இருக்கும்…” கார்த்திக் அருகில் அமர்ந்து, அவனுக்கு வாங்கி வந்திருந்த ஆரஞ்சு பழத்தை உரித்து வாயில் போட்டுக் கொண்டே, நக்கலடித்துக் கொண்டிருந்தான்.

“அவனே வலியில கஷ்டப்படறான்… நீ வேற ஏன் கார்த்திக்?” ராதா கேட்க, கார்த்திக் அமைதியாக அமர, அஜய் அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

“போதும்டா… சிரிக்காதே… அப்பறம் கன்னத்துல சிராய்ச்ச சிராய்ப்பு வலிக்கப் போகுது…” கார்த்திக் அவனை கேலியாகவே கண்டிக்க, அனுபமாவுடன் வந்திருந்த ஸ்ரீ, அவன் அருகே அமர்ந்து, அவனது கட்டுகளை மெல்ல தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.    

“மாமா… கையில புண்ணு…” அஜய் அவனைப் பார்த்து சொல்ல, அவனது முகத்தில், நெற்றியில், கைகளில் இருந்த கட்டைப் பார்த்தவன், வெளியே நின்றுக் கொண்டிருந்த விஜயிடம் ஓடிச் சென்றான்.

திங்கட்கிழமை காலை…

அரக்க பரக்க எழுந்த அஜய், மணியைப் பார்க்க, மணி ஒன்பதை கடந்திருந்தது… “ஹையோ… கண்மணி குரலை கேட்காம விட்டுட்டோமே…” மனதினில் வருந்தியவன், தனது செல்லை எடுக்க கை நீட்ட, ஆழமான சிராய்ப்புகள் வலித்தது.

“என்னடா வேணும்?” அவன் விழித்ததைப் பார்த்த விஜய் அவன் அருகில் வரவும்,

“அத்தான்… ஆபீஸ்க்கு லீவ் சொல்லணும்… அதுக்கு தான் போனை எடுத்தேன்…” அஜய் சொன்னதைக் கேட்ட விஜய் அவனை முறைத்தான்.

“என்ன அத்தான்?” அவனது முறைப்பை புரிந்து அஜய் கேட்கவும்,

“அதை என்கிட்டே கேட்க வேண்டியது தானே… நான் எடுத்துக் கொடுப்பேன் இல்ல… நீ பாட்டுக்கு கைய எங்கயாவது இடிச்சுக்கிட்டா கஷ்டம் தானே… என்ன வேணும் சொல்லு நான் ஆபீஸ் கிளம்பற வரை செய்யறேன்…

உன்னால நடக்க முடியாது… வாக்கர் வாங்கிக்க சொல்லி டாக்டர் சொல்லி இருக்காங்க… நான் வாங்கிடறேன்… நான் இல்லாத போது மெல்ல அதை வச்சு நடக்கப் பாரு… அப்போ தான் வீட்டுக்கு வந்தா ஈஸியா இருக்கும்ன்னு சொன்னாங்க…

கால் முட்டியில நல்ல அடி… காலை ரொம்பத் தொங்க போட வேண்டாம்ன்னு டாக்டர் சொல்லி இருக்கார்… இந்த ஒரு மாசம் நல்ல ரெஸ்ட்ல தான் இருக்கணும்…” அவன் கண்டிப்புடன் சொல்லிவிட்டு, அஜயின் மொபைலை எடுத்து,

“பாஸ்வர்ட் சொல்லு.. ஓபன் பண்ணி அந்த நம்பர் போட்டுத் தரேன்… நீ லீவ் சொல்லிடு…” என்றபடி, அஜயைப் பார்க்க, அவனோ பார்வையை எங்கோ பதித்துக் கொண்டு, ’2012’ என்று முணுமுணுத்தான்.

அந்த எண்ணைக் கேட்டதும், அதை அப்படியே அவனது செல்லில் பதித்த விஜயின் மனதினில் மின்னல் வெட்ட, அவசரமாக அஜயை நிமிர்ந்துப் பார்த்தான்.

அவனது பார்வையின் பொருளை உணர்ந்தும் அதை வெளிக்காட்டாமல், “போன் புக்ல ஈஸ்வர்ன்னு பேர் இருக்கும்… அதுக்கு கால் பண்ணிக் கொடுங்க அத்தான்…” விஜயின் அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமல் அஜய் சொல்லவும், அவன் சொன்னதைச் செய்தவன், அவன் போன் பேசி முடிக்கவும், அஜயின் அருகில் அமர்ந்தான்.

விஜய் என்ன கேட்க வருகிறான் என்பது புரிந்தாலும், “அதுல கண்ணம்மா நம்பர் இருக்கும்…  அந்த நம்பருக்கு ‘சாரி ஃபார் ஹர்ட்டிங்…’ அப்பறம், நான் ஒரு மாசம் ஆபீஸ்க்கு வர மாட்டேன்… ஆக்சிடென்ட் ஆச்சு’ அப்படின்னு ஒரு மெசேஜ் அனுப்புங்க அத்தான்…” விஜயைப் பார்க்காமல் சொன்னவன், கண்களை மூடிக் கொள்ள, அதை கண்ணம்மாவின் நம்பருக்கு அனுப்பிவிட்டு, ‘அஜய்..’ மென்மையாக அழைத்தான்.

கண்களைத் திறந்தவன், அவன் கேட்க வருவது புரிந்தது போல, “கண்ணம்மா… அவ என் டீம் தான்…” என்று தொடங்கவும்,

“ம்ம்… அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” விஜய் கேட்கவும்… கண்ணம்மாவைப் பார்த்தது முதல், முன்தினம் அவளிடம் கடுமையாக பேசியது வரை அனைத்தையும் சொல்லி முடித்தவன்,

“ஏன் அத்தான் நான் இப்படி இருக்கேன்… ஒண்ணு, அவளைத் தன் வழில  போன்னு விட்டுடணும்… இப்படி விடவும் முடியாம, நெருங்கவும் முடியாம நான் தடுமாறிட்டு இருக்கேன்… அது எனக்கே என் மேல கோபமா வருது… அதை அப்படியே அவ மேல காட்டறேன்…” பரிதாபமாக சொன்னவனைப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“அதுக்கு அவ என்ன பண்ணுவா பாவம்… எல்லாம் விதி.. வேற என்ன சொல்றது? சரி.. எப்போவாவது, அவ இல்லாம நான் இல்லங்கற மாதிரி யோசிச்சு இருக்கியா?” விஜய் கேட்கவும், உதட்டைப் பிதுக்கிய அஜய், ‘இது வரை இல்லை…’ என்று பதில் கூறினான்.

“ஹ்ம்ம்.. ஆனா… அவளை நெருங்கணும்னு மட்டும் ஆசை இருக்கு…” நக்கலாக விஜய் கேட்கவும்,

“ஹையோ அப்படி இல்ல… தப்பா இல்ல… எனக்கு அவளை பிடிச்சிருக்கு… அதை ஏத்துக்க தான் எனக்கு முடியல போல…” யோசனையாகச் சொன்னவனின் கண்களில் அந்த அறையில் இருந்த டிவி பட, அஜய் மெல்ல எழுந்து அமர்ந்தான்.

“ஏன் அத்தான்… நாம அன்னிக்கு மால்க்கு போனோமே…”

“ஆமா… அதுக்கு என்ன இப்போ?” விஜய் வேண்டும் என்றே தெரியாதவன் போலக் கேட்க, தனது பிறந்த நாளில் கண்மணியை சந்தித்ததில் இருந்து, மாலில் அவளிடம் பேசியது வரைச் சொன்னவன், “அதுக்கு அப்பறம் அவ பேசவே இல்ல அத்தான்….” என்று முடித்து……

“எனக்கு என்னவோ அந்த கண்மணியோட குரல், கண்ணம்மாவுது போலவும் இருக்கு… ஆனா… அவ சரியான பயந்தாங்கொள்ளி… அவ எப்படி அ…வ்…வ்…வளவு தைரியமா ரேடியோல பேசுவா..” கேள்வியாகவே முடித்தான்.   

“சரி… அப்போ உன்னோட கூற்று படி, அந்த fmல பேசற கண்மணி தான் கண்ணம்மான்னு நினைக்கற… அப்படித் தானே…?” விஜய் மீண்டும் கேட்க,

“அப்படி இருக்குமோன்னு மனசுல தோணுது… ஆனா… இல்லைன்னும் தோணுது…” குழப்பமாகவே அஜய் பதில் கூறினான்.  

“சரி… அப்படி இருந்தா நீ என்ன செய்வ? அதாவது கண்ணம்மா தான் கண்மணின்னு யாராவது சொன்னா என்ன செய்வ? நீ பார்த்த கண்மணி ரொம்ப அழகு… அதுக்கு அப்புறம் கண்ணம்மா கண்மணி அளவுக்கு இல்லைன்னாலும்…” விஜய் இழுக்க, ‘அவளுக்கு என்ன குறைச்சல்…’ நொடியும் தாமதிக்காமல், அஜயிடம் இருந்து பதில் வந்தது…

“அதெல்லாம் சரி… நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…” விஜய் அவனது மாற்றத்தை குறித்துக் கொண்டே கேட்க,

“என்ன செய்வேன்னா? எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லுவேன்… அவ்வளவு தான்…” பட்டென்று அஜய் சொல்லவும், அவன் அதைத் தான் சொல்லப் போகிறான் என்று உணர்ந்திருந்த விஜய்,

“அவ உன்னை தூக்கத்துல கூட  ரொம்ப டிஸ்டர்ப் பண்ணறாளோ?” மர்மப் புன்னகையுடன் அவன் கேட்க, ‘ம்ம்’ தலையாட்டக் கூட முடியாமல் முணுமுணுத்தான்.

“ஆனா… அவளை இந்த வாரம் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க போல… அப்படித்தான் நான் நினைக்கறேன். அதை  கேள்விப்பட்டதுலேர்ந்து தான் நான் சரியாவே இல்ல அத்தான்… அவளுக்கு கல்யாணம்ன்னா எனக்கு என்ன வந்தது?” மெல்லிய குரலில் சொன்ன அஜயை குழப்பமாகப் பார்த்த விஜயின் வாயில் இருந்து, ‘என்னிக்கு?’ என்ற கேள்வி வந்து விழுந்தது.

“அது… போன புதன்கிழமை….” அவன் சொல்லவும், ஒரு மூச்சை வெளியிட்ட விஜய்,

“அவ்வளவு தானா… சரி… உனக்கு ஒரு…. ஒருமணி நேரம் டைம் தரேன்… அது தான், நீ முடிவா… உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போற நிமிஷங்கள்ன்னே வச்சிக்கோ… நல்லா யோசிச்சு சொல்லு… நீ கண்ணம்மாவை விரும்பறையா இல்லையா? அவளோட கடந்த காலம் பத்தி ஒரு வார்த்தை கூட குத்திக் காட்டாம, உன்னால அவ கூட வாழ முடியுமா?

உன்னோட பழைய கசப்பான விஷயங்களை எல்லாம் நீயும் மறந்துட்டு, அவ கூட சந்தோஷமா வாழ முடியுமா? அந்த அளவுக்கு நீ அவளை லவ் பண்றியா? யோசி… நல்லா பலமுறை யோசிச்சு சொல்லு… எப்படியும் நான் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்… கிளம்பறதுக்குள்ள சொன்னா போதும்… அவசரம் இல்ல… அவ இல்லாம உன்னால இருக்க முடியுமா?

சும்மா வீம்புக்கு, ‘அவ மேல லவ் இல்ல… எனக்கு கல்யாணமே வேண்டாம்’ன்னு கத்தறதை விட்டுட்டு, அவ மேல இருக்கற லவ் எந்த அளவுக்குன்னு யோசி… அதை எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போலாம், வாழ்க்கையில் ஜெயிக்கலாம்ன்னு யோசி…” என்ற விஜய், ‘லவ்வா’ அஜயின் அதிர்ந்த குரலைக் கேட்டும் நில்லாமல், அங்கிருந்து விலகிச் சென்றான்.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…​

 

8 COMMENTS

  1. தேங்க்ஸ் அருணா … எப்படின்னு சீக்கிரமே தெரியும்மா ??

  2. Superb ud sis. Irunthalum aj ku accident panna irunthuthirukalam neenga pavam aj?. Story ya pakkava kondu poringa super super?.

  3. update superb…ajay thaan kannama oda husbanda?….Innum enga guessing dhaana pa…. Epo enga guess correct or wrongnu solla poreenga sis… Waiting eagerly for next ud

LEAVE A REPLY