SHARE

உன் வார்த்தைகள்

தராத இதத்தை

உன் அருகாமைத் தர…

நானோ உன்னில்

மனதைத் தொலைப்பவளாய்…. 

 

 

அலுவலகதில் இருந்து நெடுஞ்சாலையில் வண்டியைத் திருப்பியவன், “வீடு எந்த ஏரியான்னு சொல்லு…” என்று கேட்கவும், கண்ணம்மாவிற்கு ஏமாற்றமே நிரம்பி வழிந்தது.

தன்னளவு இல்லாவிடினும், சிறிதளவேனும் தன் மேல் விருப்பம் இருந்திருந்தால், அவன் தன்னுடைய முகவரியை தெரிந்து வைத்திருப்பான் அல்லவா? என்ன முயன்றும் மனதினில் எழுந்த ஏமாற்றத்தை மறைக்க முடியாமல்,

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டும் வைத்தாள்.

“நீ எங்க இருக்க ஏது இருக்கன்னு பார்த்துட்டு இருக்கறது தான் என் வேலைன்னு நினைச்சியோ?” என்ன முயன்றும் அஜய்க்கும் குரலில் இருந்த எரிச்சலை குறைக்க முடியாமல் போக, அதை அப்படியே வெளியிட்டான்.     

“இல்ல தான்…” மெல்ல முணுமுணுத்தவள், “என்னோட ப்ரோஃபைல்ல பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன்…” என்று சொல்லவும், அஜய் சிறிது நேரம் அமைதியாக வந்தான்.

“அஜய்… எனக்கு கடைக்குப் போகணும்… என்னை அங்க டிராப் பண்ணிட்டா… நான் பார்த்து வாங்கிட்டு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்…” அவர்கள் இடையில் நிலவிய மௌனத்தை கலைந்தவள், மெல்ல அவனிடம் கேட்டாள். 

“எந்த கடைன்னு சொல்லு… நானும் கூட வரேன்…” அஜயின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், கண்ணம்மா திகைத்துப் போயிருக்க,

“என்ன நான் வரவேண்டாம்னா சொல்லு… எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல…” விட்டேற்றியாக அவன் சொல்லவும், அதை ஏற்க மறுக்க கண்ணம்மாவிற்கு பைத்தியமா என்ன?

“வாங்களேன்.. நான் என்ன வரவேண்டாம்ன்னா சொன்னேன்…” அவனுடன் ஷாப்பிங் செய்வதை கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டே மெல்லக் கேட்டவள், ஒரு சிக்னலில், அவன் திடீரென்று பிரேக் போடவும், தடுமாறி அவன் மீது சாய,

“முன்னப் பின்ன பைக்ல போனதே இல்லையா? நல்லா உட்கார்ந்து பிடிச்சிக்கோ… கீழ விழுந்து வச்சேன்னா அதுக்கு வேற உங்க அப்பா என் மேல பழி போட்டு ஜெயிலுக்கு அனுப்பவா?” அஜய் எரிந்து விழவும், கண்ணம்மாவின் மனதில் சுருக்கென்று தைத்தாலும், பைக்கில் சுற்றி முற்றி தேடினாள்.

“என்ன ஆடிக்கிட்டு இருக்க..?”

“இல்ல.. எங்க பிடிக்கறது… பிடிக்க இங்க எதுவுமே இல்லையே…” கண்ணம்மா கேட்கவும், அவளைத் திரும்பிப் பார்த்தவன், அவளது கண்களை சந்திக்காமல்,

“என் தோளப் பிடிச்சிக்கோ…” பட்டென்று சொல்லிவிட்டு திரும்பியவன், சிக்னல் பச்சைக்கு மாறவும், வண்டியை செலுத்தத் துவங்கினான்.

“சிக்னல்ல மட்டும் பச்சை விழலடா என் அஜ்ஜூ…. எனக்கும் விழுந்தா மாதிரி தான் தோணுது..” மனம் குதூகலிக்க, அவனுடைய தோளைப் பற்றிக்கொண்டு சந்தோஷத்துடன் பயணம் செய்தாள்.

“இப்போ வர கட்ல திரும்புங்க… அங்க இருக்கற கடையில வாங்கிடலாம்…” கண்ணம்மா வழி சொல்லவும், அந்த வழியில் வண்டியைத் திருப்பியவன், அவள் சொன்ன கடையின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

“நீங்க உள்ள வருவீங்களா?” கண்ணம்மா சந்தேகமாகக் கேட்கவும்,

“ஹ்ம்ம்.. வரேன்… இங்க என்ன செய்யப் போறேன்.. அப்படியே என் தங்கைக்கும் பார்க்கலாம்…” சொல்லிக் கொண்டே அவளுடன் நடந்தவனை கண்ணம்மா பார்த்துக் கொண்டே வந்தாள்.

“என்ன பார்க்கற?”

“இல்ல… நீங்க அவங்களுக்கு அடிக்கடி இப்படி வாங்கித் தருவீங்களா?” சந்தேகமாக கேட்டவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“இல்ல… இப்போ நான் வாங்கிட்டு போனா… என்னை ஏற இறங்க பார்த்து கேலி பண்ணியே ஒரு வழி ஆக்கிடுவா… அவ அமைதியா இருந்தாலும் அத்தான் என்னை ஒரு வழி பண்ணிடுவார்…” முகத்தில் சிறு புன்னகை இழையோடச் சொன்னவனைப் பார்த்த கண்ணம்மாவிற்கும் முகத்தில் புன்னகை அரும்பியது.

“என்ன சிரிப்பு?” அவளது சிரிப்பைப் பார்த்து கேட்டவன்,

“ஒண்ணும் இல்ல.. ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர அவங்க வீட்ல எல்லாரும் கேலி செய்தா அந்தக் காட்சி எப்படி இருக்கும்ன்னு கற்பனை பண்ணிப் பார்த்தேன்… சிரிப்பு வந்திருச்சு…” கண்ணம்மா சொல்லவும், இப்படியும் அப்படியும் தலையை உருட்டியவன்

“வர வர எல்லாருக்குமே நான் கேலிப் பொருளா ஆகிட்டு இருக்கேன்… எல்லாம் என் நேரம்… அந்த லிஸ்ட்ல நீயும் இப்போ என்னை கலாய்க்கிற… நடத்துங்க… எவ்வளவு நாள்ன்னு நானும் பார்க்கறேன்…” என்றவன், ஒரு சிறு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

“என்னாச்சு?” மீண்டும் கண்ணம்மா கேட்க,

“இது போல ஏதாவது வாங்கிக் கொடுத்தா… அனு ரொம்ப சந்தோஷப்படுவா… அவ முகம் எப்படி இருக்கும்ன்னு நினைச்சேன் சிரிப்பு வந்துச்சு… போன வாரம் சர்ப்ரைஸா அம்மா துபாய்ல இருந்து வந்த போது, ஏதோ பேசிட்டு இருந்தோம்.. அப்போ யாருமே தன்னோட பக்கத்துல இல்லைங்கறது போல அவ ரொம்ப ஃபீல் பண்ணி சொன்னா… எனக்கே கஷ்டமா போச்சு… அதனால தான் நான் அங்க தங்கினேன்” அவளிடம் பகிர வேண்டிய விஷயங்களில் இது  விடு பட்டு விட்டது என்பதைப் போல அவன் சொல்லிக் கொண்டே வர, கண்ணம்மாவின் மனது, அவனிடம் கேட்க வேண்டி நிறைய கேள்விகளை அடுக்கியது…

“ஹுக்கும்… இப்போ நான் இதுல எந்த கேள்வி கேட்டாலும் அஜய் முருங்கை மரம் ஏறுவது உறுதி… பேசாம வாய மூடு…” அவளது மனம் சொல்லவும், வாயை இறுக மூடிக் கொண்டாள்.

முதல் தளத்தில் இருந்த அந்த கடைக்குச் சென்று, “கிரீன் டிரஸ்க்கு மாட்சிங் செட் காட்டுங்க…” என்று கடைக்காரரிடம் சொன்னவள்,  

“நீங்க என்ன கலர் டிரஸூக்கு பார்க்கறீங்க அஜய்…” அவள் கேட்கவும், சில வினாடிகள் யோசித்தவன்,

“அவ ஏதோ பட்டுப் புடவை எடுத்தா… இரு அவகிட்டயே கேட்டு சொல்றேன்…” என்றவன், அனுவிற்கு போன் செய்து கேட்க, அந்தப் பக்கம் அனுவின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று சொல்லத் தான் வேண்டுமோ?

“அஜய்… நிஜமா தான் கேட்கறியா? என் கூட வான்னு சொன்னா கூட, அங்க எல்லாம் ஒரே பொண்ணுங்களா இருப்பாங்கன்னு சொல்லுவ… இப்போ உனக்கு என்னாச்சு?” அனுபமா கேட்கவும், அஜய்க்கே தன்னை நினைத்து வெட்கமாகிப் போனது.

“அனு கூப்பிட்டு போகாதவன் இப்போ எதுக்கு இவ கூட வந்திருக்கேன்.. எனக்கு என்ன ஆச்சு?” அவன் மனம் கேள்வி கேட்க, அவனது கண்களோ தீவிரமாக டிசைனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணம்மாவின் மேல் படிந்தது.

‘அஜய்… லைன்ல இருக்கியா?’ அனுபமாவின் குரல் கேட்கவும், தலையை உலுக்கி தன்னை சமாளித்துக் கொண்டவன்,

“எனக்கு என்ன ஆனா என்னம்மா… சும்மா ஒரு பிரெண்ட் கூட இங்க ஒரு கடைக்கு வந்தேன்… அந்த கடைக்கு பக்கத்துல இந்த மாதிரி ஷாப் இருந்தது… சரி.. நம்ம ஆசை தங்கைக்கு இது வரை ஒண்ணு கூட வாங்கிக் கொடுத்தது இல்லையே… ஏதாவது வாங்குவோம்ன்னு பார்த்தா.. நீ என்னையே கேள்வி கேட்கற… இதுக்குத் தான் பழக்கம் இல்லாத பழக்கம் எல்லாம் பழகக் கூடாதுன்னு சொல்றது…” போலியாக சலித்துக் கொண்டவனை,

“ஹையோ இல்ல… திடீர்ன்னு இப்படி செய்தா… குழம்பாம என்ன செய்யறது அண்ணா… அது தான் அண்ணா… வேற என்னடா அண்ணா? சரி நான் ரெண்டு புடவை எடுத்தேன் இல்ல… ஒண்ணு நீ செலக்ட் பண்ணின பச்சைப் புடவை.. இன்னொன்னு.. விஜய் செலக்ட் பண்ணின ஒரு மாதிரி ஊதா கலர்…” அனுபமா சொல்வதைக் கேட்ட அஜய்க்கு தலை சுற்றியது.

“எனக்கு ஒண்ணுமே புரியல… பேசாம புடவைய போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்ல அனுப்பேன்… அது தான் ஈசி…” அஜய் சொல்லவும்,

“நான் இங்க உன் வீட்டுக்கு வந்திருக்கேன் அஜய்… புடவை அங்க இல்ல இருக்கு…” அனுபமா சோகமாகச் சொல்ல, அஜய்க்கு சிரிப்புத் தான் வந்தது.

“ஸ்ரீ குட்டி வந்து இருக்கானா… அப்போ இன்னைக்கு எனக்கு ஜாலி தான்…” என்றவன்,

“சரி… என் பீரோல அது போல கலர் ஷர்ட் இருக்கான்னு பார்த்துச் சொல்லு… இல்ல விடு… இன்னொரு நாள் உன்னை நான் இங்க கூட்டிட்டு வரேன்… இங்க நல்லா இருக்கு செட் நகை எல்லாம்..” என்று சமாதானமாக அஜய் சொல்லவும், அனுபமாவிற்கு சந்தோசம் பொங்கியது.

அதே சந்தோஷத்தோடு அவள் அஜயின் பீரோவைத் திறந்து, அதில் இருந்த ஷர்ட்டுகளை ஆராயத் தொடங்க, அவளது சந்தோஷத்தைக் கண்ட அஜயும் சிரிப்புடன் திரும்ப, அவனுக்கு பின்புறம் கண்ணம்மா நின்றிருந்தாள்.                          

அவளும் அஜயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “எல்லாம் உன்னால வந்தது.. பச்சை ஒண்ணாம்… ஏதோ ஊதா கலர் ஒண்ணாம்… சொல்றா… அதுவும் ஒரு மாதிரி ஊதாவாம்… நான் எங்க போய் அந்த கலர் எல்லாம் தேடுவேன்…” சந்தோஷ சலிப்புடன் சொன்னவனைப் பார்த்து கண்ணம்மா அபயம் அளிப்பது போல் நின்றாள்.

“என்ன?” அஜய் புருவத்தை உயர்த்த,

“யாம் இருக்க பயமேன்… நான் செலக்ட் பண்ணித் தரேன்… கொடுத்துப் பாருங்க… பிடிச்சு இருந்தா ஓகே… இல்லன்னாலும் ப்ராப்ளம் இல்ல.. நாளைக்கு அவங்களையும் கூட்டிட்டு வந்து வாங்கலாம்… சாரி… சனிக்கிழமை வந்து மாத்திக்கலாம்… நானும் கூட வரேன்.. இந்த கடைக்காரங்க எனக்கு தெரிஞ்சவங்க தான்…” என்றவள்,

“இந்த ரெண்டுல எது நல்லா இருக்கு?” என்று அவனிடம், தான் எடுத்த இரண்டைக் காட்டினாள்.

இரண்டையும் பார்த்தவன், “ரெண்டுமே நல்லா இருக்கு… உனக்கு எது பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ…” சொல்லி விட்டு, கடையை சுற்றி பார்வையை ஓட்டத் தொடங்கினான்.

“இதை நான் எடுத்துக்கறேன்… இது ரொம்ப அழகா இருக்கு… உங்க தங்கைக்கு கொடுங்க…” கண்ணம்மா இயல்பாகச் சொல்லவும், அஜய் கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை சிறிது நேரம் சந்தித்தவள், தலையை குனிந்து கொள்ள, “சரி… எடு… நேரம் ஆகுது…” என்ற அஜய், வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

“எப்போ சாதாரணமா இருக்கார்… எப்போ கோபம் வருதுன்னே தெரியல… ரொம்ப கஷ்டம்…” தனக்குள் புலம்பிக் கொண்டவள், மீதம் இருந்த நகையையும், கண்களாலேயே அவனுடைய விருப்பத்தைக் கேட்டு வாங்கி பில்லிற்கு அனுப்பினாள்.

அவள் பணத்தை எடுக்க தனது பையைத் திறக்க, “இரு நானே பில் பே பண்றேன்…” என்றவன், தனது பர்சில் இருந்து, கார்டை எடுத்து நீட்டினான்.

“எதுக்கு அஜய்.. இதெல்லாம் போய்….” ‘அதனால என்ன? உனக்கு வாங்கித் தராம யாருக்கு வாங்கித் தரப் போறேன்…’ என்று அவன் சொல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், கண்ணம்மா தயக்கத்துடன் இழுக்க,

“அதனால என்ன கண்ணம்மா… நீ எனக்கு பர்த்டே கிஃப்ட் கொடுத்தியே… அப்போ நான் ஏதாவது சொன்னேனா என்ன?” அவன் சொல்லவும், கப்பென்று அவள் வாயை மூடிக் கொண்டாள்.

மீண்டும் அஜயிடம் மெல்ல இறுக்கம் சூழத் தொடங்கி இருந்தது… மனதில் ஏதேதோ எண்ணங்கள் மோத, அமைதியாக நடந்தவனை, வேறு எதுவும் பேசாமல், பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளவும் விரும்பாமல், கண்ணம்மாவும் உடன் நடந்தாள்.

அந்த கடையில் இருந்து, காம்ப்ளெக்ஸ்களின் படிக்கட்டுகளில் அவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அஜய், கண்ணம்மாவை தன் அருகே இழுத்துக் கொண்டான்.

“அஜய்…” அவள் திகைக்க,

“ச்சே… இந்த நேரத்துலையே குடிச்சிட்டு வரானுங்க… யார் மேல இடிக்கறோம்ங்கறது கூட தெரியாத அளவுக்கு குடிக்க வேண்டியது…” திட்டிக் கொண்டே, அஜய் அவளை நகர்த்தாமல், தன் அருகேயே கைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கீழ் தளம் வரும் நேரம் மழை நன்றாக பிடித்துக் கொண்டது.

“நல்ல மழை வேற…” சலித்துக் கொண்டவன்,

“வீட்டுக்கு போன் பண்ணி மழைக்கு ஒதுங்கி இருக்கேன்னு சொல்லிடு… கவலை படப் போறாங்க… ஏற்கனவே வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு லேட்… இப்போ இது வேற…” அவன் சொன்னதும், கவனமாக அவனிடம் இருந்த தனது கையை பிரித்துக் கொள்ளாமல், அப்படியே போனை எடுத்து, தனது அன்னைக்கு சொல்லிவிட்டு, போனை வைத்தாள்.

இன்னமும் அஜய் மழையை வேடிக்கைப் பார்க்க, “இங்க பக்கத்துல நான் இருக்கேன்… அதை விட்டுட்டு மழைய வேடிக்கைப் பார்க்கறதைப் பாரு… ரொம்ப கஷ்டம்டா சாமி” கண்ணம்மா நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

“குடிக்கிறவங்கள பத்தி நீ என்ன நினைக்கிற கண்ணம்மா?” அஜயின் கேள்வியில் ஏதோ உள் குத்து புதைந்திருப்பது நன்றாகவே விளங்க, கண்ணம்மா அமைதி காத்தாள்.

“உனக்கு குடிக்கிறவங்கள பிடிக்குமா?” அஜய் அடுத்த கேள்வி கேட்கவும், நிமிர்ந்துப் பார்த்த கண்ணம்மா…

“எனக்கு பிடிக்காது…” மெல்லிய குரலில், கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க அவள் சொல்லவும், ‘ஓ…’ ஒற்றை வார்த்தையுடன் அவன் முடித்துக் கொண்டான்.

அத்தனை நேரம் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிய, மெல்ல தனது கையை அவனிடம் இருந்து பிரித்துக் கொள்ள முயல, “ஓ… சாரி… நான் ரியலைஸ் பண்ணவே இல்ல..” என்று அவளிடம் மன்னிப்பு வேண்டியவன்,

“’அஜய் என் கையை பிடிச்சு இழுத்தான்னு’ இதையும் உங்க வீட்ல போய் சொல்லி வைக்காதே… அப்பறம் ஆளாளுக்கு என்னை பார்க்கும் போது எல்லாம்… கையப் பிடிச்சு இழுத்தியான்னு கேட்கப் போறாங்க….

நான்… அவன் உன் மேல இடிச்சிடப் போறானேன்னு தான் என் பக்கம் இழுத்தேன்… தப்பா இல்லம்மா…” நக்கலாக அஜய் சொல்லவும், அவனது கோபம் ஏறிக் கொண்டிருப்பதை உணர்ந்த கண்ணம்மா… அதற்கு மேல் அங்கே நின்றால் என்ன நடக்கும் என்று உணர்ந்தவளாக, மழையில் இறங்கி நடக்க எண்ணி, காலை எடுத்து வைக்க, அஜய் அவள் கைப் பற்றித் தடுத்தான்.

“ப்ளீஸ்.. உங்க மூட் மாற ஆரம்பிச்சாச்சு.. இதுக்கும் மேல நான் இங்க இருந்தேன்னா நீங்க என்னைத் திட்டுவீங்க… வேணாம்… நான் கிளம்பறேன்…” சிறு பிள்ளைப் போல கெஞ்சல் குரலில் கேட்டவளைப் பார்த்த அஜய், உதட்டை கடித்துக் கொண்டு, தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான். 

“இரு… கொஞ்சம் மழை குறைஞ்சு இருக்கு… இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல நின்னு போய்டும்… போகலாம்…” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவன், அமைதியாகவே நின்றான்.

அருகில் மழைக்கு ஒதுங்கியவர் புகைக்கத் தொடங்கவும், கண்ணம்மா முகத்தை சுளித்து இருமத் தொடங்க, அவளை ஒரு மாதிரிப் பார்த்தவன், “வா.. கிளம்பலாம்…” என்று தன்னுடைய பையில் இருந்த ரெயின் கோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“இது வச்சிக்கிட்டா இத்தனை நேரம் நின்னீங்க?” இதழ் வரை கேட்க வந்த வார்த்தைகள், அடங்கிப் போக, அமைதியாக அதை வாங்கி மாட்டிக் கொண்டு, அவனுடன் வண்டியின் அருகே நடந்தாள்.

“உன்னோட ரெயின் கோட் வண்டியில இருக்கோ… இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்துட்டு ஆட்டோல அனுப்ப மனசு வரல… அது தான்…” காரணம் சொல்லிக் கொண்டே வண்டியை எடுத்தவனின் பின் அவள் ஏறிக் கொண்டாள்.

“அஜய் சாரி… ரொம்ப ரொம்ப சாரி…” கண்ணம்மா மன்னிப்பு வேண்ட,

“இனிமேலாவது சின்னப் பிள்ள தனமா எல்லாத்தையும் வீட்ல சொல்றதை நிறுத்து… ஆபீஸ்ல நான் திட்டறது எல்லாம் ரொம்ப முக்கியமா போய் ஒவ்வொருத்தர் கிட்டயும் சொல்லுவியா என்ன?” எரிச்சலாக சொன்னவன்,

“ப்ளீஸ்.. வேற எதுவும் அதைப் பத்தி பேசாதே… வர கோபம் எப்படி இருக்கும்னே தெரியாது…” அதோடு பேச்சை முடித்தவனிடம் மீண்டும் அமைதி…

தன்னுடைய செயல்களை நினைத்து மனதினில் நொந்துக் கொண்டு வந்தவள், “அந்த தெரு தான் அஜய்…” வீடு நெருங்கியதை தொடர்ந்து அவள் சொல்லவும்,

“ஹ்ம்ம்… நாளைக்கு என்ன விஷேசம்ன்னு சொல்லவே இல்லையே…” அந்த தெருவின் தொடக்கத்தில் விட்டவன், மனதினில் குறுகுறுத்துக் கொண்டிருந்ததை அஜய் கேட்க, அவளது முகத்தில் ஒரு வித உற்சாகம் வந்தது.

“அது… நாளைக்கு முடியட்டுமே சொல்றேன்.. ப்ளீஸ் அஜய்… எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல… எல்லாம் நல்லா முடியட்டுமே…” கண்ணம்மா சொல்லவும், அஜய்க்கு எரிச்சலில் உடம்பு எரிந்தது.

“உன்கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும்.. பெரிய இவ… நாளைக்கு என்னவா இருந்தா எனக்கு என்ன? சீக்கிரமே எவனையாவது கல்யாணம் செய்துக்கிட்டு போனா நானும் நிம்மதியா இருப்பேன்.. எங்கயாவது ஃபாரின் மாப்பிள்ளையா பார்த்து செட்டில் ஆகு… என் கண்ணுலயாவது படாம இருப்ப…” படபடவென்று பொரிந்துத் தள்ளியவன், கண்ணம்மா அதிர்ந்து விழிக்கும் போதே,

“வீட்டுக்குப் போ… உங்க அப்பா வாசல்லையே உனக்காக குடை பிடிச்சிட்டு நிக்கறார்… பை…” என்று அவன் பைக்கை முறுக்கிக் கொண்டு செல்ல, ரெயின்கோட்டில் இருந்து வழிந்த தண்ணீரோடு அவளது கண்ணீரும் கரைந்தது.

“கண்ணம்மா… ஏய் கண்ணம்மா…” கயலின் குரல் கேட்கவும், கண்ணம்மா நின்று முகத்தைத் துடைக்க,

“என்னம்மா… இப்படி பண்றீங்களேம்மா..” கயல் அவளைப் பார்த்து கேலியாகப் பாட, அவளோ கயலை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்… ரொம்ப தைரியம்டி உனக்கு… நம்ம வீடு வரை மாமாவ கூட்டிட்டு வந்துட்டியே… அங்க வெளிய அப்பா உனக்காக காத்துட்டு இருக்கார்.. நீயானா ஜாலியா மாமா கூட வந்து இறங்கற?” குறும்பாக கயல் கேட்க, கண்ணம்மா தலை குனிந்தாள்.

“அவர் ஒண்ணும் ஆசையா என்னை கொண்டு விடல… போகும் போது, கண் காணாம எங்கயாவது தொலைய சொல்லிட்டு தான் போறார்… அப்போ தான் நிம்மதியா இருப்பாராம்..” என்ன மறைக்க முயன்றும், கண்ணம்மாவின் கண்ணீர் வழியத் தொடங்க, கயல் அவளை முறைக்கத் தொடங்கினாள்.

“என்னடி? எதுக்கு முறைக்கிற?” கண்ணீருடன் கேட்டவளை ஆயாசமாகப் பார்த்த கயல்,

“உன்னை எல்லாம் என்ன செய்ய.. அவரைப் பத்தி வீட்ல கொடுமைக்காரன் ரேஞ்சுக்கு கதை கட்டி விட்டு இருக்க… அதைக் கேட்டு அப்பா ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் அவரைத் திட்ட வேற செய்தோம்.. அது தெரிஞ்சும் உன்னை எக்கேடோ கேட்டு போன்னு சொல்லாம, வீடு வரை கொண்டு வந்து விடறாரே… அவரைச் சொல்லணும்… அவர் அப்படி திட்டற அளவுக்கு என்ன செய்து வச்ச..” கயல் கேட்கவும், காலையில் நடந்தது முதல் அனைத்தையும் அவள் ஒப்பிக்க, கயல் அவளை யோசனையுடன் பார்த்தாள்.

“ஏதோ கொஞ்சம் உன் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும் போல தான் இருக்கு கண்ணம்மா… இல்லன்னா எதுக்கு அவர் நாளைக்கு என்னன்னு தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வம் காட்டணும்… சரி விடு.. போக போக என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…” கயல் அவளை சமாதானம் செய்ய, அவர்கள் இருவரையும் பார்த்த சுப்பு, அருகில் ஓடி வந்தார்.

“நீ எங்கடி போயிட்டு வர?” கண்ணம்மா கேட்கவும்,

“நான் என் பிரெண்ட் வீட்டுக்குப் போயிட்டு வரேன்… காலேஜ்ல சேர்ந்து மேல படிக்கிறதுக்கு பதிலா சர்வீஸ் கமிஷன்… இல்ல ஏதாவது பேங்க் எக்ஸாம் எழுதலாம்ன்னு பார்க்கறேன்… கோச்சிங் கிளாஸ் சேரலாம்ன்னு இருக்கேன்… கரெஸ்ல மேல படிச்சிக்கறேன்…” தனது முடிவை கயல் சொல்லவும், கண்ணம்மா ஒரு பெருமூச்சை வெளியிட்ட நேரம், சுப்பு அவர்கள் அருகில் வந்திருந்தார்.

“கண்ணம்மா, யார் கூட பைக்ல வர? உன் வண்டி எங்கே? நீ வர லேட் ஆகுதே… பேசாம நான் வண்டியை எடுத்துட்டு அந்த கடைக்கு வந்துடலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்… இது யாரோட ரெய்ன் கோட்… உன்னோடது இல்ல தானே…” கடகடவென்று அவர் கேள்விகளை அடுக்க, கண்ணம்மா அந்த ரெய்ன் கோட்டை தடவிப் பார்த்து,

“பிரெண்ட்டுதுப்பா… அவங்க தான் இங்க வந்து டிராப் பண்ணிட்டு போனாங்க…” கண்ணம்மாவின் பதிலைக் கேட்டவரின் பார்வை கூர்மையாக,

“ஏன் வீட்டு வாசல்லையே கொண்டு வந்து விட்டிருக்கலாமே… அது என்ன தெரு முனையில விடறது… பார்க்கறவங்க தப்பா நினைக்கவா?” கொஞ்சம் காட்டமாகவே அவரின் கேள்வி விழுந்ததோ, கண்ணம்மா பதில் சொல்லத் திணறிக் கொண்டிருக்கும் போதே,

“என்னைப் பார்த்துட்டு தானப்பா அவ வண்டியில இருந்து இறங்கினா… நான் தான் அவளைக் கூப்பிட்டேன்…” கயல் சாமாளிக்க, அவளை நன்றிப் பார்வை பார்த்த கண்ணம்மா, வேகமாக வீட்டிற்குள் சென்று, தன் அறைக்குள் புகுந்து கொள்ள, அவளின் மனநிலை புரிந்த கயல் அவள் பின்னோடு வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

அதே நேரம் அஜயை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்த அனுபமா, அவன் வீட்டின் உள்ளே நுழையவும், “எங்க நீ வாங்கிட்டு வந்த செட்டை காட்டு..” ஆவலே வடிவாக கேட்க,

“பேக்ல இருக்கு எடுத்துக்கோ…” என்று சொல்லவும்,

“ஏண்டி… அவனே மழையில நனைஞ்சு வந்திருக்கான்… வந்த உடனே அதைக் கொடு இதைக் கொடுன்னு வம்பு பண்ணற?” அனுபமாவை அதட்டிக் கொண்டே ராதா, அவனுக்கு டவலை எடுத்துக் கொண்டு வர, அதை வாங்கிக் கொண்டவன், தனது பையை அனுபமாவின் கையில் கொடுத்து விட்டு, வேகமாக தனது அறைக்குச் செல்ல, ஆர்வம் தாங்காமல், அனுபமா அவனது பையைத் திறந்தாள்.

“என்ன அனு? என்ன பழக்கம் இது?” ராதா கண்டிக்க, அவன் வாங்கி வந்திருந்த நகை செட்டை பிரித்தவள்,

“வாவ் அம்மா… உன் பையன் என்ன அழகா செலக்ட் பண்ணி இருக்கான் பாரு… அதும் மூணு வாங்கி இருக்கான்…” அனு வாய் பிளக்க, ராதாவின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

திருமணத்திற்கு அவன் ‘பார்க்கலாம்’ என்ற பதில் சொன்னதற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டு பார்த்தவர்,

“மாப்பிள்ளை சொன்னது போல சீக்கிரமே கல்யாணம் வந்திருமோ?” என்று சொல்லிப் பார்க்கும் போதே, அவரது மனம் நிம்மதியாக உணர்ந்தது.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

8 COMMENTS

  1. Hi sis nice ud. Ama sis avanga soltra mathiri daily ud kudunga yappoda neenga ud kudupinganu wait panite iruken???. Nanga pavam plsssssssss karunai katungal ???.

    • thanks hema … thanks a lot ma … 🙂 🙂 hahah daily tharavum asai than enna seyya … 3 uds ku kandipa try panren ma… 🙂

  2. update superb…..shopping ellam romba nalla pochu …..ena ajay ku thaan posuk posuk nu kobam vardhu….pavam kannama.
    Waiting for next update sis…

LEAVE A REPLY