SHARE

கோபத்தை நிறைய பூசிய படியே
வார்த்தை பிரயோகம்
பழகிப்போன ஒன்று எனக்கு
ஆனால்
இப்பொழுதெல்லாம்
என் இந்த சாமர்த்தியம்
தோற்றுப் போகும் சாயலில்
உன்னை கொஞ்சமாய் ஆராதிக்க சொல்ல
எங்கே எதை தொலைத்தேன்
எனக்கான ஒரு அழுத்தத்தை !!
எப்போது நீ வந்தாய் என்னுள்
விடை தெரியா கேள்விகள் !!

 

“என்ன சுவாதி? அவர் திட்டனதுக்கு அப்படி என்ன உனக்கு யோசனை?” சுவாதியின் யோசனையைப் பார்த்த கண்ணம்மா கேட்கவும்,

“ஹ்ம்ம்… லட்டுக்கு உப்பு போட சொன்னானா… காரம் போட சொன்னானான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. எவடி இவ… அவன் திட்டினா நீ வாய் பேசாம கேட்டுட்டு வந்தியாக்கும்… தேவை இல்லாதது எல்லாம் பேசத் தெரியுது இல்ல… இப்போ இதுக்கு பதில் சொல்லிட்டு வந்திருக்கணும் கண்ணம்மா… ஹார்ஷா இல்ல… நக்கலா… இனிமே அவன் திட்டினா நக்கலடிச்சிட்டு வா… இல்லையா சிரிச்சிட்டே பதில் பேசு… சும்மா வராதே…” சுவாதி சொல்லவும், கண்ணம்மா அஜயைப் பார்க்க, அவனோ கார்த்திக்குடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.  

“நேத்து ரெண்டு பேரும் படம் போனீங்களா?” சுவாதியின் கேள்விக்கு,

“ம்ம்… ஆமா.. ஆனா.. தனித் தனியா தான் போனோம்… நான் என் தங்கை கூட போனேன்.. அவர் தனியா தான் வந்தார்… அந்த பொண்ணு கூட கொஞ்ச நேரம் தான் பேசிட்டு இருந்தார்.. ஒருவேளை நிஜமாவே பிரெண்டா தான் இருக்குமோ? இவருக்கு எப்படி அவளைத் தெரியும்? அவ நல்ல அழகு தெரியுமா? என்னை அவருக்கு பிடிக்குமா? என்னைப் பார்த்து ஏன் இப்படி சொன்னார்?” கார்த்திக்குடன் பேசிக்கொண்டே தனது உணவை உண்டுக் கொண்டிருந்த அஜயின் மீது பார்வையை பதித்துக் கொண்டே கண்ணம்மா சொல்ல, சுவாதி தலையில் அடித்துக் கொண்டாள்.  

“லுக்கு விட்டது போதும்… இப்போ போய்… நான் அந்த பொண்ணைப் பார்த்து ஒண்ணும் இப்படி செய்துக்கல.. நேத்து மால்க்கு வந்ததே அதுக்குத் தான்னு சொல்லிட்டு வா… காரமா சொல்லாம, சாதாரணமா பேசிட்டு வா…” சுவாதி ஊக்கினாலும், கண்ணாமாவின் முகத்தில் தயக்கம் தெரிய,

“உன் மனசுல தயக்கம் இருந்தா உன்னோட இந்த காதல் அவனுக்கு தெரியாமையே போயிடும் கண்ணம்மா… நீ சொல்றதை வச்சு பார்த்தா… அவன் அந்த பொண்ணு கூட பேசலாமா வேண்டாமான்னு தான் அவன் பிறந்தநாள் அன்னிக்கு யோசிச்சு இருப்பானோ என்னவோ? உன் மேல அவனுக்கும் கொஞ்சம் அக்கறை இருக்குன்னு நினைக்கிறேன்… இல்ல… உங்க வீட்ல நீ செய்து வச்சிருக்கற காரியத்துக்கு உன்னை தூக்கி போட்டு மிதிக்காம, அப்போ அப்போ கோபத்தை காட்டினாலும், உன் மேல அன்பு இருக்கப் போய் தானே கரிசனம் காட்டறான்.. அந்த சின்ன விஷயத்தை பிடிச்சிக்கோ…. நம்பிக்கையா தைரியமா அவனை நெருங்கு கண்ணம்மா…  

அதுவும் அவன் இடக்கா பேசினா… நீ மடக்கிப் பேசு… அழ மட்டும் கூடாது… தைரியமா இரேன்…” கண்ணம்மாவிற்கு எடுத்துச் சொல்லிய சுவாதி… அவளது கையை அழுத்த, ஏனோ அவள் சொல்வதைக் கேட்டவளுக்கு மனதில் புது தெம்பு பிறந்தது.

“ஹ்ம்ம் போறேன்… போய் சொல்லிட்டு வரேன்…” கண்ணம்மா எழுந்து கொள்ள,

“உம்ம்ம்ம்… ஜுர வேகத்துல திட்டிட்டுப் போன பொண்ணு… இன்னைக்கு அவன் தான் வேணும்னு அடம் பிடிக்குது… இந்த அஜய் என்ன செய்தான்… ஒருவேளை ரசத்துல வசியம் வச்சிட்டானோ?” சுவாதி சத்தமாகவே புலம்ப, அவளைப் பார்த்து சிரித்த கண்ணம்மா..

“அவர் வசியம் வைக்கலைன்னாலும் இப்படி தான் நடந்திருக்கும்…” குறும்பாக பதில் சொல்ல,    

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… இதே மோட்ல போய் அவன் கிட்டயும் பேசு…” என்று கண்ணம்மாவை அனுப்பி வைத்தாள்.

அஜய் அமர்ந்திருந்த டேபிள் வரை சென்றவளுக்கு அவனை நெருங்கத் தான் முடியாமல், கால்கள் வலுவிழந்தது போல தோன்ற, இதயம் அடித்த வேகத்தில், வெடித்து விடுமோ என்று அவளுக்கு பயமே வந்தது….

“கண்ணம்மா… ரிலாக்ஸ்… என் கிட்ட பேச என்ன பயம்?” அவள் மனதில் இருந்த அஜய், அவளுக்கு தைரியம் சொல்ல, கைகளை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தவள், கண்களையும் மூடி, தன்னை சரி செய்துக் கொண்டு, அஜய் அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

அஜயுடன் பேசிக் கொண்டிருந்த கார்த்திக், கண்ணம்மா அவ்வாறு வந்து அமரவும், “ஹான்…” என்று அதிர்ச்சியில் பார்த்து, பின்பு அவனது கண்கள் சுவாரஸ்யத்திற்குத் அஜயிடம் தாவ, அவனது முகத்தைப் பார்த்த அஜய், கண்ணம்மாவிடம் கடுகடுத்தான்.

“இப்போ எதுக்கு இங்க வந்து உட்காரற?” கடுப்புடன் அவன் கேட்க, அவனது குரலில் இருந்த கடுப்பில் கண்ணம்மாவின் இதயம் நின்றுத் துடிக்க, அவசரமாக அவன் அருகே இருந்த பாட்டில் தண்ணியை எடுத்து மடமடவென்று குடித்தாள்.

“தண்ணி குடிக்கத் தான் வந்தியா?” அஜய் மீண்டும் கேட்க,

“பாஸ்… இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டா… பாவம் நான்… சின்னப் பொண்ணு.. பயந்துக்குவேன் இல்ல…” அஜயிடம் கேட்டவள்,

“கார்த்திக் அண்ணா… நீங்களே சொல்லுங்க… இவர் என்னை ஸ்கூல் பிள்ள போல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா… எனக்கு பயம் வரும் தானே…” என்றபடி கார்த்திக்கையும் பேச்சில் இழுத்து விட, அவளது ‘அண்ணா’ என்ற அழைப்பு கார்த்திக்கின் முகத்தை வேப்பங்காயை தின்றது போல சுளிக்க வைக்க, அஜய்யின் இதழிலோ புன்னகையை வர வைத்தது…

“ஆமா… தங்கச்சி… ஆமா…” சினிமா வசனம் போல சொன்னவனைப் பார்த்து சிரித்த அஜய்,

“இப்போ என்னைப் பார்த்தா உனக்கு பயமா இருக்குன்னு சொல்லத் தான் வந்தியா? நம்பிட்டேன்…” அவள் வந்ததற்கான காரணத்தை அறிய அஜய் கேட்க, மீண்டும் மனதில் பயம் வந்து தொற்றிக் கொள்ள, என்ன செய்வது என்று யோசித்தவளின் கண்களில், அஜயின் டிபன் பாக்ஸ்ல் இருந்த சேனைக் கிழங்கு வறுவல் பட, அதை எடுத்துக் கொண்டு வாயில் வைத்து கடித்தபடி,

“உங்க அம்மா சமையலா பாஸ்….. ரொம்ப டேஸ்டியா இருக்கு…” கண்ணம்மா சொல்லவும், அஜயின் பார்வை இடுங்கியது… சட்டென்ற அவனது மாற்றம் மனதில் உரைக்க, அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல், கடித்த வறுவலும் தொண்டைக்குள் இறங்காமல் சண்டித் தனம் செய்ய, மீண்டும் தண்ணீரைக் குடித்து அதை உள்ளே தள்ளியவள், ஒரு பெருமூச்சில் தன்னை சரி செய்து கொண்டாள்.

“அஜய்… நீங்க சாப்பிட வரதுக்கு முன்னால சொன்னதை நான் அகைன் ரீவைண்ட் பண்ணிப் பார்த்தேன்… அதுல ஒரு பெரிய ஓட்டை இருக்கறது போல எனக்கு தெரிஞ்சது… சரி அந்த ஓட்டையை சரி செய்யலாம்ன்னு தான் இங்க வந்தேன்…” தன்னை சமாளித்துக் கொண்ட கண்ணம்மா… முன் வைத்த காலை பின் வைக்க முடியாது என்ற பிடிவாதத்துடன் அவனிடம் சொல்ல, அஜய் புரியாமல் பார்த்தான்.

“என்ன ஓட்டை? நான் தப்பா என்ன சொல்லிட்டேன்?” குழப்பமாகவே அவன் கேட்க,

“முதல் பாய்ன்ட்… நான் ‘நீங்க யாரையாவது லவ் பண்ணறீங்களா’ன்னு கேட்கவே இல்லையே… நீங்களே ஏன் பாஸ்… ‘நானே ரவடி… நானே ரவுடி’ங்கற மாதிரி… என் மனசுல லவ்க்கு எல்லாம் இடம் இல்லன்னு சொல்றீங்க?” கண்ணம்மா கேட்கவும், வாயடைத்துப் போய் அவன் பார்க்க, கண்ணம்மா அவனையே வாயடைக்கச் செய்துவிட்ட மகிழ்ச்சியில், அவனைப் பார்த்து குறும்பாக புன்னகைத்தாள்.

“அடுத்த பாயின்ட்… உங்களுக்கு என்ன அவ்வளவு கான்பிடன்ஸ்.. நான் அந்த பெண்ணைப் பார்த்துத் தான் பீயூட்டி பார்லர்க்கு போனேன்னு சொல்றீங்க? உங்களுக்குத் தெரியுமா? நானும் சுவாதியும் போன வாரமே போகலாம்ன்னு பார்த்தோம்… எனக்கு உடம்பு சரி இல்லைன்னு தான்… அப்போ போக முடியாம… கயல் கூட சினிமாவுக்கு வந்துட்டு நேத்து போனேன்…. அதை எப்படி நீங்க அப்படி சொல்லலாம்… அதுவும் எப்படி எப்படி… புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்டதா?

அது என்ன பாஸ்… அதுல யாரு புலி யாரு பூனைன்னு கொஞ்சம் சொல்லிட்டீங்கன்னா… அந்த பொண்ணுகிட்டப் போய் என்னைப் போல வேஷம் போடாதே… நீ நீயா இருன்னு சொல்லிடலாம்… இல்ல நீங்களே கூட சொல்லிடுங்க… சரியா?” கேள்வியாக அவள் கேட்டு, புருவத்தை உயர்த்த, அஜயின் கண்கள் அவள் முகத்திலேயே நிலைத்தது….

அவளது கண்கள் அவனை கதை பேச அழைக்க, இதழ்கள் கூடச் சேர்ந்து சிரிக்க அழைக்க, முகத்தில் நிறைந்த குறும்புத்தனம், அவளுடன் வாய்க்கு வாய் பதில் பேச தூண்டியது. மெல்ல கண்ணம்மாவின் இந்தத் தோற்றம் தன்னுள் ஏதோ மாற்றத்தை தோற்றுவிக்கிறது என்பதை அஜய் உணரத் தொடங்கி இருந்த நேரத்தில், மீண்டும் அவனது டிபன் பாக்சில் இருந்த சேனை வறுவல் கண்ணம்மாவின் கையில் தஞ்சம் புகுந்திருந்தது…

“அய்யோ என்னோட எச்சில்..” அஜய் சொல்லத் தொடங்கும் போதே,

“நேத்தும் பாப்கார்னை ஷேர் தானே பண்ணிக்கிட்டோம்… அப்போ என் எச்சில்ன்னு நான் சொன்னேனா என்ன? இப்போ என்ன நீங்க சின்ன பிள்ள மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்…” என்றபடி, மீண்டும் அவள் எடுக்கவும்,

“எங்கம்மா சமையல் எப்படி இருக்கு?” இறுகிய குரலில் அவன் கேட்கவும், சுரீல் என்று மின்னல் வெட்ட கண்ணம்மா அவனை நிமிர்ந்துப் பார்க்க, அஜய்யின் முகத்தில் இருந்த கடுமை அவளுக்கு பயத்தைக் கொடுத்தது.

உள்ளுக்குள் நடுக்கம் பிறக்க, அவனை எப்படி இயல்புக்கு கொண்டு வருவது என்ற யோசனை செய்ய மூளை முயல… அவனது கண்களின் கனலோ, அவளை யோசிக்க விடாமல் செய்ய, கார்த்திக் அவளது உதவிக்கு வந்தான்.

“அம்மா சமையல் எப்பவுமே நல்லா தானேடா இருக்கும்.. அது அவளுக்கும் பிடிச்சிருக்கு… அதுக்கு ஏன் இவ்வளவு கோபமா கேட்கற? சேனை வறுவல் வேணும்னா நாளைக்கும் அம்மாவை செய்துத் தரச் சொல்லி வீட்லயே வச்சு சாப்பிடு.. இது என்ன இது சின்னப் பிள்ளத் தனமா.. அதுக்கு போய் கோவிச்சிக்கற?” கார்த்திக் இடைப்புகவும், “ம்ப்ச்…” அஜயிடம் இருந்து வெளிப்பட்ட சலிப்பை பயன்படுத்திக் கொண்டு,

“உங்க அம்மா சமையல் நல்லா இருக்கும் அஜய்… அன்னைக்கு…” என்று தொடங்கியவள்,

“விடுங்க.. நீங்க கோபமா இருக்கீங்க.. நான் அப்பறம் வரேன்… இந்த ஸ்டைல் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…” என்று சொன்னவள், மீண்டும் ஒரு வறுவலை எடுத்துக் கொண்டே, அந்த இடத்தை விட்டு அகல, அஜயின் இதழில், புன்னகையின் சாயல்.

அஜயைக் கண்டாலே பேயைக் கண்டது போல முழிக்கும் கண்ணம்மா, தைரியமாக அவனிடம் வந்து அவனையே கலாய்த்து விட்டு சென்றதையும், தன்னை ‘அண்ணா’ என்று அழைத்ததையும் எண்ணிய படி, அஜயின் மீது பார்வையை பதித்தவன், அவனது முகத்தில் கோபத்திற்கு பதிலாக, இதழில் புன்னகை இருக்கவும், குழப்பத்தின் உச்சிக்குச் சென்றான்.

“என்னடா கார்த்திக் இது? உலகம் தலைகீழா சுத்துதா என்ன? வாயில்லா பூச்சி பேசறதை கேட்டு, நம்ம சிங்கம் சீராம சிரிக்குது? என்னடா நடக்குது? ட்ரைன் ரூட் மாறுதோ?” கார்த்திக் தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க, அஜய் மீதமிருந்த உணவை உண்ணத் துவங்கினான்.

கைகள் நடுங்க, சுவாதியின் அருகே சென்ற கண்ணம்மா, மீண்டும் தண்ணீரை குடிக்கத் தொடங்கவும், போருக்கு போய் விட்டு வந்த தோழியை பார்ப்பது போல, என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ளக் காத்திருந்த சுவாதி, கண்ணம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.

“என்னாச்சு? போனது காயா பழமா?” எதிர்ப்பார்ப்புடன் அவள் கேட்கவும்,

“என் கன்னம் பழுக்காம வந்ததே பெருசு… நீ வேற சுவாதி… நல்லா தான் பேசிட்டு இருந்தார்.. ஆனா… திடீர்ன்னு குரல் மாறிச்சுப் பாரு… உள்ள எடுத்த உதறல்… அங்கேயே நான் மயங்கி விழுந்திருந்தாலும் ஆச்சரியம் இல்ல…” கண்ணம்மா சொல்லவும், சுவாதி சிரிக்க, கண்ணம்மா அவளை முறைத்தாள்.

“உனக்கு சிரிப்பா இருக்கா?” முறைப்புடன் அவள் கேட்க,

“அவனுக்கு உன்னை அடிக்க என்ன உரிமை இருக்கு? அடிக்கிற அளவு நீ விடுவியா என்ன?” சுவாதி நக்கலடிக்க, ‘அவருக்கு இல்லாத உரிமையா?’ என்று கண்ணம்மா முணுமுணுத்தாள்.

“உரிமை எல்லாம் இப்போ கிடையாது… அது எல்லாம் அவனுக்கு நீ உரிமையான அப்பறம் தான் கொடுக்க முடியும்…” சுவாதி கறாராகப் பேச, கண்ணம்மா பெருமூச்சுடன், சுவாதியைப் பார்க்க, அவள் கண்கள் கலங்கி இருந்தது.

“என்ன கண்ணம்மா? ஒரே நாளுல இப்படி கலங்கினா எப்படி? அவனை நெருங்கறது கஷ்டம் தான்… ஆனா… வேற வழி இல்ல… உனக்கு அவன் வேணும்ன்னா நீ அவன்கிட்ட சாதாரணமா பேசி நெருங்கித் தான் ஆகணும்…” சுவாதி சொல்லவும், தன்னையே சமாதானம் செய்து கொண்டவள், திரும்பி அஜயைப் பார்க்க, அவனும் ஏதோ யோசனையில் இருப்பது புரிந்தது…

“அஜய்… எனக்கு ஒண்ணு புரியல.. கொஞ்சம் கிளியர் பண்ணுங்க…” மதியம் உண்ட மயக்கம் தீர்ந்த பின், ஏதோ வேலையில் மும்முரமாக இருந்த அஜயை கண்ணம்மா அழைக்க,

“எப்போப் பாரு ஸ்கூல் பசங்க மாதிரி டவுட் கேட்க வேண்டியது.. உன்னை எல்லாம் எவன் வேலைக்குச் சேர்த்தான்…” திட்டிக் கொண்டே அவளிடம் வந்தவன், அதில் தெரிந்த ஸ்மைலியைப் பார்த்து கேள்வியாக அவளைப் பார்க்க,

“இந்த ஸ்மைலி எப்படி இருக்குன்னு சொல்லுங்க… இது இப்படித் தானே சிரிக்குது…” என்றவள், அவனது முகத்தைப் பார்க்காமல், அதைப் போலவே சிரித்துக் காட்டி விட்டு, சிஸ்டத்தை நோக்கி பார்வையை திருப்ப, அஜய் பல்லைக் கடிக்க, சுவாதி சிரிப்பை அடக்க போராடினாள்.

“ஏய் என்ன? உனக்கு திமிரு கூடிப் போச்சா.. இல்ல பயம் போய் மனசுல துளிர் விடுதா? வேலை செய்ய விடாம என்ன விளையாடிட்டு இருக்க…” அஜய் கோபமாகக் கேட்கவும்,

“இது எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போனா… நானும் என் வேலையைப் பார்ப்பேன் இல்ல… எனக்கும் தலைக்கு மேல நிறைய வேலை இருக்கு…” சிரிக்காமல் அவள் கேட்கவும், அஜய் முறைக்க,

“டீம் லீடர்ன்னா சும்மாவா… டீம் மெம்பெர்ஸ் டவ்ட் கேட்டா கிளியர் பண்ணனும்… அதுக்குத் தானே சம்பளம் கொடுத்து எங்க பக்கத்துல உட்கார்த்தி வச்சிருக்காங்க…” அவள் முணுமுணுக்க, அவள் சொன்ன விதத்தில், அஜய் புன்னகைத்து விட்டு,

“இப்படித் தான் இருக்கு… வெட்டி வேலை பார்க்காம உன் வேலையைப் பாரு…” என்று விட்டு தனது இடத்திற்குச் செல்ல, கண்ணம்மா மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள்.

தலையை அப்புறமும் இப்புறமும் ஆட்டிக் கொண்டு, மெல்ல புன்னகை புரிந்துக் கொண்டே, தன் இடத்தில் அமர்ந்தவனையே பார்த்துக் கொண்டிருந்த சுவாதி, கண்ணம்மாவிற்கு கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

தன்னை நினைத்தே சிரித்துக் கொண்ட கண்ணம்மாவின் மனம் அடுத்த நொடி தன்னுடைய இறந்த காலத்தை நினைத்து, சோர்ந்து போனாள்… ‘அஜய் தன்னை ஏற்றுக் கொள்வானா?’ என்ற எண்ணம் வந்தவுடன், ‘அத்தனை நேரம், எந்த தைரியத்தில் அவனிடம் வம்பு வளர்த்தோம்’ என்றே புரியாமல் குழம்பியவள், தனது கூட்டுகள் ஒடுங்கத் துவங்க, சிறிது நேரத்திற்கு பிறகு, அவளைத் திரும்பிப் பார்த்த சுவாதி, கண்ணம்மாவின் முகத்தில் தெரிந்த கலக்கத்தில், ஒரு பெருமூச்சுடன்,

“அவளா அதிலிருந்து வெளிய வந்தா தான் உண்டு…” என்று நினைத்துக் கொண்டாள்.                  

மணி ஏழாகவும், கண்ணம்மாவிடம் விடைபெற்று சுவாதி வீட்டிற்கு கிளம்பிச் செல்ல, தானும் வீட்டிற்கு கிளம்ப எழுந்துக் கொண்டாள். “கண்ணம்மா வீட்டுக்கு கிளம்பிட்டயா?” அஜய் கேட்கவும், அவனை ‘ஏன்’ என்பது போல அவள் பார்க்க…

“இல்ல… பார்த்து போயிட்டு வான்னு சொல்லத் தான் கூப்பிட்டேன்…” அஜய் அவளை நக்கல் செய்ய, இப்பொழுதும் ‘ஏன்’ என்று அவள் கண்களால் கேட்க,

“இன்னைக்கு நீ என்னவோ சரி இல்ல… மதியம் என்னை அந்த கலாய் கலாய்ச்ச… அப்பறம் ரொம்ப ரொம்ப சைலென்ட்டா இருக்க… பார்த்து… இப்போ போகும் போது தூங்கிடப் போற? வண்டியில வேற போகணும் இல்ல…” அஜய் கிண்டல் செய்யவும், கண்ணம்மா அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு செல்ல, அவளுடன் இணைந்து அஜயும் நடந்தான்.

கண்ணம்மா அமைதியாக வரவும், “என்னாச்சு திடீர்னு…?” அஜய் பேச்சைத் தொடங்க,

“ஒண்ணும் இல்லையே.. என்ன என்னாச்சு?” அவன் கேட்டதையே அவள் திருப்பிப் படிக்க,

“இல்ல… ரொம்ப அமைதியா வரியே அது தான் என்னாச்சு கேட்டேன்…” விம் போடாத குறையாக அவளுக்கு விளக்கியவன், அவள் முகத்தைப் பார்க்க, கண்ணம்மா சில நொடிகள் தயங்கினாள்.

“எனக்கு புதன்கிழமை மத்யானம் லீவ் வேணும்… ஒரு பர்சனல் விஷயம்…” கண்ணம்மா இழுக்கவும், ‘பர்சனல் விஷயம்’ அஜயின் உள் மனம் மெல்ல முணுமுணுக்க, ஏனோ அவள் தன்னிடம் சொல்லாமல் மறைப்பது போல அவனுக்கு எரிச்சல் உண்டானது…

“சரி உன் பர்சனல நீயே வச்சிக்கோ…” மனதில் அவளுக்கு பழிப்புக் காட்டியவன், தன்னுடைய பைக்கை எடுக்க,

“அஜய்…” என்று தயக்கத்துடன் அவன் அருகில் கண்ணம்மா நின்றாள்.

“ஏன் உன் வண்டி என்னாச்சு?” தன்னிடம் லிஃப்ட் கேட்கிறாள் என்று நினைத்துக் கொண்டு, அஜய் கேட்க, கண்ணம்மா தனது வண்டியை திரும்பிப் பார்த்தாள்.  

“அது அங்க பக்கத்துல தான் இருக்கு..”

“அப்பறம் என்ன? வண்டி ஸ்டார்ட் ஆகலையா?” யோசனையாக அவன் இழுக்க,

“இல்ல லீவ் கேட்டேனே… நீங்க ஒண்ணும் சொல்லவே இல்ல…” அவன் சரி என்று சொல்லி விட வேண்டுமே என்ற வேண்டுதல் அதில் தெரிய…

“காலையில சீக்கிரம் வந்து லாகின் பண்ணிட்டு போகலாமே… எதுக்கு அனாவசியமா லீவ் போடணும்?” அஜய் யோசனை சொல்ல, கண்ணம்மா உதட்டைப் பிதுக்கினாள்.  

“அதெல்லாம் சரியா வராது அஜய்… சீக்கிரம் ஆபீஸ் வரணும்னா சீக்கிரம் எழணும்… அப்பறம் சாயந்திரம் முகம் டல்லா இருக்குமே… அதெல்லாம் சரியா வராது… நீங்க என்னை சனிக்கிழமை வர சொன்ன காம்ப் ஆஃப் எல்லாம் நிறைய இருக்கு… அதுல இருந்து கொடுங்க…” அவள் கேட்கவும், அஜயின் மனதில் ஏனோ எரிச்சல் குமையத் தொடங்கியது…

“சரி எடுத்துக்கோ… நாளைக்கு வந்த உடனே அப்ளை பண்ணிடு…” என்றவன், அதற்கு மேல் நில்லாமல், தன்னுடைய வண்டியை கிளப்பிக் கொண்டு செல்ல, கண்ணம்மாவிற்கு ஆயாசமாக இருந்தது…

வீட்டிற்குச் செல்லும் பத்து நிமிட பயணத்திலும், வழியில் போவோர் வருவோர் அனைவரும் அஜயிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்க, வீட்டிற்குச் சென்றவன், ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருக்கவும், “என்னம்மா எப்பப்பாரு  ஏதாவது சீரியல் பார்க்கற… இல்ல… ரியாலிட்டி ஷோ பார்க்கற… அந்த சத்தத்தைக் கேட்டாலே அப்படியே எரிச்சலா வருது… எப்படித் தான் நாள் பூரா இதை பார்க்கறயோ?” எரிச்சலாக மொழிந்த படி, ஷூவை விட்டெறிந்தவன், பேகை தூக்கி சோபாவின் மீது விட்டெறிந்து விட்டு, அறைக்குள் செல்ல, தன் மகனின் எரிச்சலைக் கண்டவர், அவனுக்கென தயாரித்து வைத்திருந்த ஜூசை எடுத்துக் கொண்டு, அவனைப் பின்தொடர்ந்து அறைக்குச் சென்றார்.

“கொஞ்சம் ஜூஸ் குடி அஜ்ஜூ…” ராதா டம்ப்ளரை நீட்டவும்,  

“ஜூசா… அதெல்லாம் எனக்கு வேண்டாம்மா… இன்னும் கொஞ்ச நாள்ல நீ துபாய்க்கு பிளைட் ஏறிப் போயிடுவ… அப்பறம் வீட்டுக்கு வந்தா எனக்கு ஜூஸ் வேணும் போலத் தோணும்… அப்போ யார் இருப்பா போட்டுக் கொடுக்க… அதை கொண்டு போய் வை… கார்த்திக் வருவான்.. அவனுக்குக் கொடு…” முகத்தை கழுவிக் கொண்டே, அவன் எரிந்து விழ, அவனது இந்த நிலை ராதாவை கவலைக்குள்ளாக்கியது.

எப்பொழுதும் வீட்டையும், தன்னுடைய பொருட்களையும் ஒழுங்காக நேர்த்தியாக வைப்பவன், இன்று விட்டெறிந்து விட்டு வரவும், அவனது எரிச்சல் அவரை கவனிக்க வைத்தது.. சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், அவன் சோபாவில் வந்து அமரவும், “என்னடா அஜ்ஜூ… ஆபீஸ்ல ஏதாவது டென்ஷனா?” மெல்ல பேசுக் கொடுக்க, அவர் மடி சாய்ந்தவன், ‘ஆம்’ என்று தலையசைத்து, கண்களை மூடிக் கொண்டான்.

“என்னாச்சுடா… நிதானமா யோசிச்சா அதுக்கான தீர்வு கண்டிப்பா கிடைக்கும்… இல்லையா எனக்கு புரியுதோ புரியலையோ… அதை என்கிட்டே சொல்லு… நீ என்கிட்டே சொல்லச் சொல்ல… உனக்கே கூட அதுக்கான தீர்வு கிடைக்கலாம் இல்லையா?” அவனது தலையை கோதிக் கொண்டே ராதா எடுத்துச் சொல்லவும், பெயரைச் சொல்லாமல், கண்ணம்மா விடுப்பு கேட்டதும், அதற்கு தான் விடுப்பு எடுக்காமல் இருக்க வழி வகை சொன்னதையும், அதை புறக்கணித்தவள், தன் முகம் பிரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்று சொல்லியதையும் சிறுபிள்ளைப் போல சொல்லிக் கொண்டே வந்தவன்,

“ஏன்ம்மா… ஒரு டி. எல்.. நான் அவகிட்ட என்ன ரீசன்னு கேட்கறேன்… பெர்சனல்ன்னு சொன்னதும் இல்லாம, நான் சொன்னதுக்கு மறுப்பு சொல்லி, பிரெஷ்ஷா இருக்கணும்னு சொல்றா? அவ என்ன சினிமாலையா நடிக்கப் போறா… லீவ் போட்டுட்டு வீட்ல இருக்கறதுக்கு இதெல்லாம் சாக்கு…” ஏனோ கண்ணம்மாவை திட்டியவன், ராதா சிரிக்கவும், மேலும் எரிச்சலாக,

“என்னைப் பார்த்தா உங்க தாய் குலத்துக்கே சிரிப்பா தான் இருக்கும்… சிரிங்க… நல்லா சிரிங்க…” அஜய் மேலும் கத்தவும்…

“ஏண்டா… ஒரு பொண்ணுக்கு ஆயிரம் பர்சனல் விஷயங்கள் இருக்கும்… முகம் பிரெஷ்ஷா இருக்கணும்… அரை நாள் லீவ் வேணும்ன்னு கேட்டான்னா… கல்யாணம் ஆகாத பொண்ணா இருந்தா… அவளை பொண்ணு பார்க்கக் கூட வரலாம்.. சரி.. நிச்சயம் ஆகற வரை சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சு கூட பர்சனல்ன்னு சொல்லி இருப்பாளா இருக்கும்…

அதுவே ஒரு கல்யாணம் ஆன பெண்ணா இருந்தா.. அவ வீட்டுக்காரர் கூட எங்கயாவது வெளிய போகலாம்… இல்ல வீட்ல பார்ட்டி… இப்படி எத்தனையோ இருக்கே… அதுக்கு நீ ஏண்டா இந்த குதி குதிக்கிற…” இயல்பாக ராதா கேட்கவும், அஜய்க்குத் தான் இயல்பு தொலைந்து போனதொரு உணர்வு…

“பொண்ணுப் பார்க்கவா?” தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டவன், அதை கேட்டு விடும் வேகத்தில், கண்ணம்மாவின் எண்ணுக்கு அழைத்திருக்க, அவனது எண்ணைப் பார்த்த கண்ணம்மா, அவன் மனது மாறி லீவ்வை தர மாட்டேன் என்று சொல்லி விடுவானோ… என்று அஞ்சி, போனை எடுக்காமல் அப்படியே விட, அஜய் முள்ளின் மேல் நிற்பதைப் போல உணரத் தொடங்கினான்.

கார்த்திக் வீட்டிற்கு வரவும், “அம்மா… சேனை வறுவல் நல்லா இருந்தது… என்னோட தங்கை கூட நிறைய சாப்பிட்டா…” அஜயை பார்த்து சிரித்துக் கொண்டே, கார்த்திக் கிண்டல் செய்யவும், அஜயின் முகத்திலும் புன்னகை அரும்பியது…

“ரொம்ப கொழுப்புடா அவளுக்கு… நாளைக்கு இருக்கு அவளுக்கு…” அஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“யாருடா…” ராதா கேட்டுக் கொண்டே, இருவருக்கும் ஜூஸ் டம்பளரை நீட்ட… அதைப் பெற்றுக் கொண்ட அஜய், கார்த்திக்கை பார்த்து, சொல்லாதே என்பது போல தலையசைக்க, கார்த்திக் “எதுக்கு இவன் மண்டையை ஆட்டறான்…” என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அது இவனோட ப்ராஜெக்ட் பொண்ணும்மா… பாசமலர் சிவாஜி சாவித்திரி கூட இவங்க அண்ணன் தங்கை பாசத்துல தோத்தாங்க…” அஜய் சமாளித்து, கார்த்திக்கைப் பார்த்து முறைக்க,

“ஹ்ம்ம்ம்.. எங்கயாவது அந்தப் பொண்ணைப் பார்த்து அவனுக்கு கல்யாணம் செய்து வச்சிருவாங்களோன்னு, அம்மாகிட்ட என்ன பயம் பயப்படறான்…” கார்த்திக் சிரித்துக் கொண்டே, தன்னுடைய அறைக்கு செல்ல, அஜய் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

இரவு படுக்க சோஃபாவில் சாய்ந்தவனுக்குத் தான் தூக்கம் தொலை தூரம் சென்று நின்று பழிப்புக் காட்டியது…

 

 

 

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்….

 

8 COMMENTS

 1. Super ud sis. Aj love la matikitana . Kannama kalakura po???. Sis apram unga dialogue ka marakama change panitunga. Waiting for next ud.

 2. kannamma nee super ma…ajayaye kalakita…so sweet . ippo thaan ajay ku light a bulb eriyuthu….dialogue ellam supera irunthathu sis…nice update pa.

  hearty congratulations ramya sis….. innum niraya story ezhutha yen vazhthukal…..keep rocking.??

 3. Adhan yappo parthalum solluvingala thanks thanks a lot nu adha soltren nalla ve illa sis. Thanks la solla kudathunu periyavanga solli irukanga??

 4. hi hi hi…

  PKS kaathal valaiyila sikkittaaru… jolly jolly…

  kannamma’ku yenna thairiyam ippa yellam… super…

  karthik, un nilamaiya ninaichadhan kavalaiya irukku…
  athu yeppadi unnai yellorum anna anna’nnu koopiduraange???
  ((ithellam ramz’in thittam… avangala muthalla gavani)) :p

LEAVE A REPLY