SHARE

கோபங்களில் ஒளிந்து கொண்டு
போக்குக் காட்டும்
நினைவுகளைத்
தோண்டி துருவ
எத்தனித்தால்
என்னை முழுதும்
ஆட்கொள்ள தயாராகி நிற்கும்
எதோ ஒரு வித மாற்றம்!!
மாற்றத்தில்
ஒளிந்திருக்கும் மர்மம்
அறியும் முன்னமே
எதற்குள்ளோ தொலைந்து போய்
விடுகிறேன்!!

 

“கண்ணம்மா… உண்மைய சொல்லு… உனக்கு அவரைப் பிடிச்சு இருக்கா?” வீட்டிற்கு வந்ததில் இருந்தே பலமுறை கேட்டு சலித்துப் போன குரலில், விடாமல் கயல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க, கண்ணம்மாவோ எந்த பதிலையும் சொல்லாமல், தலையை முட்டியில் கவிழ்ந்துக் கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள்.

“அவருக்கு உன்னைப் பிடிக்கணும்னு தான் நீ பியூட்டி பார்லர் போனயா?” கயல் அவளது முகத்தை நிமிர்த்த முயன்றுக் கொண்டே கேட்க, அவளது செயலுக்கு இடமளிக்காமல் இப்பொழுதும் கண்ணம்மா அமர்ந்திருந்தாள்.

“இங்கப் பாரு கண்ணம்மா… ஏதாவது சொன்னா தானே தெரியும்…. அவர் உன்னை கன்னா பின்னான்னு… பேசக் கூடாத வார்த்தை எல்லாம் சொல்லி திட்டினார்…. அப்பறம் இன்னும் என்ன என்னவோ சொன்ன… இப்போ அவரை பிடிச்சிருக்கற மாதிரி நடந்துக்கற…. கண்ணம்மா மனசைத் திறந்து சொல்லு… அவர் அப்படி இருந்திருந்தா… உனக்கு எப்படி பிடிக்கும்… பிடிக்க முடியும்” கயல் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்க, கண்ணம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது…

அவளது முதுகு குலுங்குவதைப் பார்த்தவள், “த்ச்சு…. எதுக்கு எடுத்தாலும் அழுது வைக்காதே… இந்த மாதிரி நீ அழு மூஞ்சியா இருந்தா.. அவருக்கு எப்படிப் பிடிக்கும்? வாயைத் திறந்து சொல்லு… மனசுல என்ன இருக்குன்னு சொல்லு…” கயல் அவளைப் பிடித்து உலுக்கவும்….

“ஆமா… எனக்கு அவரைப் பிடிச்சு இருக்கு…. எனக்கு அவரை மட்டும் தான் பிடிக்குது… என்ன தான் கோபமா திட்டினாலும்… அடுத்த சில  நிமிஷங்கள்ல அவர் காட்டற கரிசனம் பிடிக்குது… டீம்ல எல்லார்கிட்டயும் அப்படி நடந்துக்கறாரான்னு எனக்குத் தெரியாது… ஆனா… அவர் எனக்கு தான் சொந்தம்… அவர் காட்டற கரிசனம் எனக்கே எனக்கு மட்டும் தான்னு தான் என் மனசு நம்புது…

நான் நினைக்கிறது ஏதாவது தப்பா கயல்… நான் டிவர்ஸ் வாங்கினவ தான்… அதுக்காக என் மனசு அவர்கிட்ட போகக் கூடாதுன்னு வேலி போடற தெம்பு எனக்கு இல்ல கயல்… நான் என்ன செய்வேன்… அவர் மேல கோபப்படறேன்… ஆனா… அதே நேரம் அவர் எனக்காக தான் செய்தார்ன்னு தெரியும் போது என் மனசு எப்படி இருக்கும் தெரியுமா?

நான் என்ன செய்யணும்ன்னு நீயே சொல்லு… எனக்கே மண்டைய பிச்சிக்கலாம் போல இருக்கு… சுவாதிகிட்ட என் வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன்…  அதுல இருந்து அவ என் கூட பேசக் கூட மாட்டேங்கிறா… அவளே அப்படின்னா.. இவர்… என்னைத் திரும்பி கூட பார்க்க மாட்டார் தானே…” ஏக்கம் வழிந்தோடிய குரலில் அவள் கேட்க, கயல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

“பார்த்தியா… நீயும் பேச மாட்டேங்கிற…” அழுகையுடன் கண்ணம்மா கேட்க,

“எப்படி கண்ணம்மா… நம்ம வீட்ல என்ன ஆகும்ன்னு கொஞ்சம் நினைச்சுப் பார்த்தியா?” பயத்துடன் கயல் கேட்க, அவள் அருகே வந்த கண்ணம்மா…

“கயல்… நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்…” சிறிதும் தயக்கம் இல்லாமல் அணை உடைந்தார் போல, கண்ணம்மா பேசத் தொடங்க, அதை கேட்க கேட்க, கயலின் முகம் மாறியது…

**********       

“அனு… அந்த கலர் புடவையைப் பாரு… உன் கலருக்கு நல்லா இருக்கும்…” கடையில், விஜய் அனுவிற்கு பட்டுப்புடவையை தேர்வு செய்துக் கொண்டிருக்க, அஜயின் யோசனையோ கண்மணியினிடத்தில் நிலைத்திருந்தது….  

“சாதாரணமா பேசற வரை எல்லாம் பேசறா… ஆனா… நான் அவ நிகழ்ச்சியை பத்தி கேட்டா மட்டும் ஏன் அவ்வளவு தடுமாற்றம்…. என்னாச்சு அவளுக்கு? ஒருவேளை நிகழ்ச்சியப் பத்தி பேசவே கூடாதுன்னு சொல்லி இருக்காங்களா?” அஜய் யோசித்துக் கொண்டிருக்கவும், அவனது மனசாட்சி அவனது சிந்தையை இடையிட்டது….

“நிகழ்ச்சி பத்தி அவ பேசாமயா இருந்தா… இல்லையே பேசறா தான்… ஆனா… ரொம்ப தெரிஞ்சா மாதிரி காட்டிக்கலையே…” அவனது யோசனை இவ்வாறாக சென்றுக் கொண்டிருக்க, திடீரென்று இன்று குரலைப் பற்றி பேசியதும் அவளது தயக்கமும், சமாளிப்பும் நினைவிற்கு வந்தது…

“இல்ல… இது.. கண்டிப்பா கண்மணி இல்ல… என்ன தான் போன்ல பேசும் போது சிலருக்கு குரல் மாறினாலும்… இந்த அளவுக்கு மாறுமா? நம்ம கூட அவ போன்ல பேசும்போது இருக்கற ஸ்பார்க் இல்லையே..” ஆரம்பத்தில் இருந்தே மனதில் உறுதிக் கொண்டிருப்பது என்னவென்று புரிய, அஜயின் முகத்தில் பிரகாசம் பெருகியது…

புடவை எடுப்பதின் நடுவிலும் விஜயின் பார்வை அஜயின் மீதே இருந்தது…. அவனது முகத்தில் தெரிந்த யோசனையும், அதனைத் தொடர்ந்து வந்த பிரகாசமும், அஜய் கண்மணியை விரும்புவதை புரிந்து கொண்டான் என்பது போல அவனுக்குத் தோன்ற, சந்தோஷத்துடன், புடவை எடுப்பதில் கவனம் பதித்தான்….

“இல்ல… அது கண்மணியோட குரல் இல்ல… இவ வேற யாரோ…. எப்படியாவது பேச்சுக் கொடுத்து இவ யாரு என்னன்னு கண்டுபிடிக்கணும்… அதே போல நிஜ கண்மணியையும் பார்த்தே ஆகணும்.. இதெல்லாம் நம்ம கார்த்திக் செய்த சதியா?” அஜய் மனதில் ஒரு தெளிவு பிறக்கவும், தங்கைக்கும் தாய்க்கும் புடவை எடுப்பதில் கலகலப்பாக கலந்து கொள்ள முடிந்தது….

வீட்டிற்குள் நுழைந்ததும், பால்கனியில் நின்று கார்த்திக் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அஜய், “அம்மா… வாங்கம்மா…. வா அனு….” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு, லிப்ட்டின் அருகே சென்றவன், குழந்தையை கொஞ்சிக் கொண்டே, வந்தான்.

அதைப் பார்த்த ராதாவின் மனதில் அஜய் குடும்பத்துடன் இது போல இருப்பது போன்ற காட்சி எழ, அந்த ஏக்கம் அவரிடம் இருந்து பெருமூச்சாக வெளிப்பட்டது….

“என்னம்மா… இந்த பையன் இப்படி ஜாலியா சுத்திட்டு இருக்கானே… இவனை எப்போடா சம்சார சாகரத்துல தள்ளி மண்டைய உடைக்கிறது… இவன் சிக்காம இப்படி ஓடிட்டு இருக்கானேன்னு தானே உங்க மனசுல நினைச்சீங்க..” அஜய் சிரித்துக் கொண்டே கேட்கவும், மறுப்பாக தலையசைத்த ராதா….

“என் பையனுக்கு இன்னும் நல்ல புத்தியே வரலையே… என்ன செய்யறது ஆண்டவான்னு மனு போட்டுட்டு இருந்தேன்… ஆனா பாரு… அவரே உன்னை திருத்த முடியாதுன்னு கை விரிச்சிட்டார்…. அது தான் உங்களாலேயே முடியலையான்னு பெருமூச்சு விடறேன்…” ராதா அவனை நக்கல் செய்ய, விஜய் அவனைப் பார்த்து சிரிக்க, அஜய் ராதாவைப் பார்த்து முறைத்தான்.

“முறைக்காதேடா… நைட் குழந்தைக்கு கொடுக்க பால் இருக்குமா… இல்ல வாங்கணுமா? வெறும் வயித்தோட அனுப்ப முடியாது” அவர் சொல்லவும்…

“மொதல்ல போய் வீட்ல கால் வைக்க இடம் இருக்கான்னு பார்ப்போம்… அப்பறம் குடிக்க தண்ணி இருக்கான்னு பார்ப்போம்… அப்பறம் பாலைப் பத்தி யோசிக்கலாம்… ஏன்னா சார் நல்ல தண்ணிய விட்டு தான் துணியே துவைப்பார்…” அஜய் கிண்டல் செய்துக் கொண்டே வரவும், அவர்களை வரவேற்க லிப்டின் அருகே நின்றிருந்த கார்த்திக், அஜய் தன் மானத்தை வாங்குவதை கேட்டு….

“அவன் சும்மா சொல்றான்ம்மா… இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு வீடெல்லாம் கிளீன் பண்ணி… தண்ணி கேன் வாங்கி வச்சு… பால் வாங்கி வச்சு எல்லாம் வேலையும் சமத்தா செய்துட்டேன்… நீங்க வேணா வந்து பாருங்க… இவன் வாயைத் திறந்தாலே பொய் தான் சொல்றான்… பேட் பாய்…” கார்த்திக் அவசரமாகச் சொல்லவும், அஜய் நக்கலாக சிரித்தான்.

“இதுக்குத் தான் சினிமா தியேட்டர்ல இருந்து தலை போற அவசரத்துல ஓடி வந்தியா…. நான் கூட என்னவோ ஏதோன்னு இல்ல நினைச்சேன்…” விஜய் கார்த்திக்கை கிண்டல் செய்ய, கலகலப்புடன் வீட்டிற்குள் நுழைந்தனர்…

வீடு சுத்தமாக இருக்கவும், அஜய் கார்த்திக்கைப் பார்த்து புருவத்தை உயர்த்த, “அம்மாகிட்ட நாங்களும் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்க வேண்டாமா? நைட்க்கு மாவு கூட வாங்கி வச்சிட்டேன்…” என்றபடி ஸ்ரீஜித்தை தூக்கியவன்,

“இந்த குட்டிக்கும் சாக்லேட் வாங்கி வச்சிருக்கேன்..” என்று கொஞ்ச, “நீ ரொம்ப நல்லவன்டா…” என்று ராதா சொல்லவும், மீண்டும் சிரிப்பலை எழுந்தது….

அன்று மீதம் இருந்த நாள் முழுவதும், சிரிப்பும் கேலியுமாக கழிய, மறுநாள் காலை, வழக்கம் போலவே எழுந்தவன், கண்மணியின் குரலைக் கேட்க, வெகுநாட்களுக்குப் பிறகு, அதே போன்றதொரு உற்சாகத்துடன் அழைத்திருந்தான்….

“தெய்வ ராகம் நிகழ்ச்சி இத்துடன் நிறைவடைகிறது… பக்தி மனம் கமழும்… இந்த தெய்வ வழிப்பாட்டுப் பாடல்களை மீண்டும் நாளை காலையில் நாம் கேட்போம்… இப்பொழுது உங்கள் மனதை நிறைக்கும் தென்றல் ராகம் நிகழ்ச்சியை வழங்க உங்க கண்மணி வந்தாச்சு….  நான் இந்த பாடலோட உங்களிடம் இருந்து விடைபெற்று கிளம்பறேன்…” என்ற குரல், ரேடியோவின் வழியாகக் கேட்க…. அஜயின் இதழில் புன்னகை நெளிந்தது….

“Mr. அஜய் இதுக்கே இப்படி அசந்தா எப்படி? இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க ஆளு பேசுவாங்க இல்ல… அப்போ நீங்க பேசணுமே…” அவனது மனசாட்சி குரல் கொடுக்க, அஜய் தென்றல் ராகம் நிகழ்ச்சிக்கு முயலத் தொடங்கினான்…

வழக்கம் போலவே இணைப்பு கிடைத்ததும், ‘ஹாய் கண்மணி… நான் ஜெய் பேசறேன் கண்மணி…. ஹொவ் ஆர் யு?” அவனது உற்சாகக் குரலைக் கேட்டவள்,

“அஜய்??” புரியாமல் இழுக்க,

“ஹ்ம்ம்… ஜெய் தான்… எப்படி இருக்கீங்க? ஒரு வாரத்துக்கு அப்பறம் நான் பேசறேன்…” என்று அதே உற்சாகம் நிறைந்த குரலில் அவன் பேசவும்….

“ஓ… சாரி ஜெய்… நான் தப்பா பேரை சொல்லிட்டேன்… சொல்லுங்க… ஏன் ஒரு வாரமா கால் பண்ணவே இல்ல… உடம்பு சரி இல்லையா?” கண்மணியின் கேள்விக்கு, அஜயின் மனது உண்மை கண்டு கொண்ட சந்தோஷத்தில் குத்தாட்டம் போட, “ஜெய்… ஜெய்…” இரண்டு முறை கண்மணி அழைத்திருந்தாள்.

“சாரி… லைன்ல தான் ஏதோ டிஸ்டர்பென்ஸ்….” என்றவன், அவளிடம் வழக்கம் போல பேசிவிட்டு வைத்ததில், அவன் மனதில் இருந்த சிறு உறுத்தலும் முழுதாக காணாமல் போய் புது உறுத்தல் ஒன்று முளைத்தது….

“கண்மணியின் குரலை எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கே… யாரோட குரலோடவோ ஒத்துப் போகுதே..” அஜய் யோசனை செய்ய, அந்த நபரைத் தான் நினைவு வராமல் தடுமாறினான்.

எவ்வளவு முயன்றும், அந்த போலிக் கண்மணியின் குரலை சட்டென்று  பிரித்தறிந்தவனால், தினமும் பரிச்சயமான கண்மணியின் குரலை எவ்வளவு முயன்றும் இனம் காண முடியாமல், யோசனையில் மூழ்க, ‘அஜய்… அங்க என்ன பண்ணற?’ ராதாவின் குரல் அவனது யோசனையை கலைத்தது.

“மைன்ட்ல சிக்காமையா போகும்? பிறகு பார்த்துக்கலாம்… இப்போ போய் அம்மாவை பார்ப்போம்…” தனது யோசனையை அத்தோடு ஒத்தி வைத்தவன், உற்சாகமாக விசில் அடித்துக் கொண்டே, சமையல் அறையில், அவனுக்காக அரக்க பரக்க சமையல் செய்துக் கொண்டிருந்த ராதாவிடம் சென்று நின்றான்….

“என்னம்மா சமையல் இன்னைக்கு…” அஜய் கேட்கவும், அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவர், அவனுக்கான பதிலைச் சொல்லாமல், தனது வேலையில் ஈடுபட, அவரது மௌனம் எதற்காக என்று புரியாவிட்டாலும்… அமைதியாக மேடை மீது ஏறி அமர்ந்தான்….

சிறிது நேரம், அவன் ஏதாவது கேட்பான் என்று ராதா எதிர்ப்பார்த்து காத்திருக்க, அவனோ, வெங்கயாத்தை தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தான்….

“உனக்கு ரொம்ப திமிருடா…. இங்க நான் பேசாம இருக்கேனே… என்ன ஏதுன்னு கேட்பன்னு பார்த்தா… விளையாடிட்டு இருக்க…” ராதா பொரியத் தொடங்க… அஜய் சிரிக்கத் தொடங்கினான்….

“ஏம்மா… நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம சமைச்சது நீ? என்கிட்ட பதில் கேள்வி கேட்கற?” அவன் மேலும் வம்பு வளர்க்க,

“நான் என்ன சொல்லப் போறேன்னு உனக்குத் தெரியாதா? ஒரு கல்யாணம் பண்ணிக்கோயேன்…” ராதா இழுக்கவும், அஜய் அமைதியாக அவரது முகத்தைப் பார்த்தான்… அவனது முகத்தில் தெரிந்த இறுக்கமும், கடுமையும், அவரை வாயடைக்கச் செய்ய, சமையல் செய்வது போல பார்வையை விலக்கிக் கொண்டார்.

“பார்க்கலாம்மா… கொஞ்ச நாள் ஆகட்டும்…” என்று பதில் சொல்லிக் கொண்டே மேடையில் இருந்து இறங்கிச் சென்றவனைப் பார்த்த ராதா சந்தோசம் தாளாமல் அனுபமாவிற்கு அழைத்தார்.

அலுவலகம் சென்றவனை புது சுடிதார்… விரித்து விடப்பட்ட புது ஹேர் ஸ்டைல்… உதட்டில் மெல்லிய உதட்டுச்சாயம்… நகத்தில் சாயம்… அவளது உயரத்தை மேலும் உயர்த்திக் காட்ட சிறிய ஹீல்ஸ்… கண்களில் மை என்று புது கண்ணம்மாவாக உருவெடுத்து உள்ளே நுழைந்தவளைப் பார்த்த அஜயின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது….                                  

“ஹே கண்ணம்மா… ரொம்ப அழகா இருக்க… இத்தனை நாளா இதை ஒழுங்கா செய்துக்கத் தெரியாம ஒளிச்சு வச்சிருந்தயா கள்ளி…” சுவாதி அவளைப் பாராட்டவும், கண்ணம்மா அவளை முறைத்துக் கொண்டே அமர்ந்தாள்.

“என்ன? மேடம் ரொம்ப ஹாட்டா இருக்கீங்க?” அவளது கோபம் புரியாமல் சுவாதி அவளை கிண்டல் செய்யவும்…

“ஹாட்டா தான் இருக்கேன்… மூணு நாளா உனக்கு எத்தனை முறை அழைச்சேன்.. நீ போனை எடுக்கவே இல்ல…” கண்ணம்மா குறைப்பட்டாள்.

“ஹே… நான் தான் ஊருக்கு போறேன்னு சொல்லி இருந்தேனே… இங்க இருந்து ஆபீஸ் விட்டுப் போய்… அன்னிக்கே நைட்டே கார்ல கிளம்பலாம்ன்னு எங்க வீட்டுக்காரர் ரெடியா நிக்கறார்… அவசர அவசரமா போனதுல என்னோட போனை விட்டுட்டு போயிட்டேன்… நான் என்ன செய்ய… காலையில வந்தேன்… டயர்ட்ல தூங்கிட்டேன்… எழுந்து அவசர அவசரமா ஆபீஸ் கிளம்பி வரேன்..” சுவாதி விளக்கம் சொல்ல…. ‘என்ன என்னவோ நினைத்து தன்னையே வருத்திக் கொண்டதை நினைத்து கண்ணம்மா தலையில் தட்டிக் கொள்ள, சுவாதி அவளது எண்ணம் எவ்வாறு சென்றிருக்கும் என்று புரிந்துக் கொண்டு சிரித்தாள்.

“ஹே லூசு… உன்னை… சரி… உன்னோட இந்த மோகினி அவதாரத்துக்கு சார் ரியாக்ஷன் என்ன?” சுவாதி அவளிடம் ரகசியமாகக் கேட்க, உதட்டை பிதுக்கிய கண்ணம்மா… அஜயைக் கண் காட்டினாள்.

“என்னவோ யோசனைலேயே துரை சுத்திட்டு இருக்கார் போல… என்னை பார்த்தார்… அப்பறம் முகத்தை திருப்பிக்கிட்டார்… அவ்வளவு தான்… பார்ப்போம்… ஏதாவது நான் தப்பு செய்து திட்டினா தான் மனசுல இருக்கற உண்மை எல்லாம் வரும்…” உதட்டை சுருக்கிக் கொண்டே அவள் சொல்லவும், சுவாதி அவளைப் பார்த்து சிரித்தாள்.

“உனக்கு ரொம்ப கொழுப்பாகிப் போச்சு… சரி வேலைய கவனி.. சிங்கம் சீறப் போகுது…” சுவாதி சொல்லவும், ‘ஆமா… ஆமா…’ என்ற பாட்டோடு கண்ணம்மாவும் வேலையைத் தொடங்கினாள்.

மதியம் வரை கண்ணம்மாவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டே இருந்த அஜய், மதிய உணவு உண்பதற்காக அனைவரும் கிளம்பிச் செல்லத் துவங்கவும், “கண்ணம்மா… கொஞ்சம் வேலை இருக்கு… இரு…” என்று அஜய் அவளைத் தேக்க,

“நீ ரொம்ப அழகா இருக்கன்னு சொல்லப் போறான்… என்ஜாய்… பழசை எதுவும் போட்டு குழப்பிக்காதே… நடந்ததுல உன் தப்பு எதுவும் இல்ல… நம்பக் கூடாதவங்கள நம்பினது தான உன் தப்பு… அதனால நடக்கறது எல்லாமே புதுசா… நல்லதாவே நடக்கும்… தைரியமா இரு… உன் புது வாழ்க்கையின் தொடக்கம் சந்தோஷமா அமையும்…” காலையில் அவளிடம் சொல்ல முடியாததையும் சொல்லி, அவளுக்கு தைரியம் கொடுத்துவிட்டு, சுவாதி எழுந்து செல்ல, அஜய் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

ஆசையும், நாணமும் போட்டிப் போட கண்ணம்மா அவன் முகத்தைப் பார்க்க, “இது என்ன இது புது கோலம்…” அஜய் தொடங்கவும், கண்ணம்மாவின் முகம் இருண்டது….

“நீ எப்பவும் போல இருந்தாலே நல்லா தானே இருந்த… இது என்ன இது புதுசா? நேத்து கூட இப்படி நீ இல்லையே…” ஒரு மாதிரி ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே அவன் கேட்கவும்… அவளோ உதட்டைக் கடித்துக் கொண்டு, தலைகுனிந்து கொண்டாள்.

“என் லைஃப்ல லவ் எல்லாம் எதுவுமே கிடையாது… நேத்து பார்த்தவ ஜஸ்ட் பிரெண்ட்… ஜஸ்ட் ஒரு பிரெண்ட்லி மீட் தான்… அதை நீ தப்பா எடுத்துக்கிட்டு… அந்த பொண்ணு போல இருக்கணும்னு நினைச்சா… அது புலியப் பார்த்து பூனை சூடு போட்டுக் கிட்டா மாதிரி தான்… நீ நீயா இரு… போதும்… அதுவே நல்லா தானே இருக்கு…” அஜய் சொல்லவும், கண்ணம்மா அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள்.

“இதும் நல்லா தான் இருக்கு… ஆனா… போலியானது எல்லாம் எதுக்கு? இதே நீ முதல்ல இருந்தே இதே போலவே இருந்திருந்தா… ஒரு வித்யாசமும் தெரிஞ்சிருக்காது… ஆனா… இது.. என்னவோ புதுசா… வேஷம் போட்டுகிட்டா மாதிரி இருக்கு… அப்பறம் உன் இஷ்டம்…” சொல்லிவிட்டு அதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்பது போல எழுந்து செல்ல, அவன் என்ன சொல்ல வருகிறான் என்றே புரியாமல் கண்ணம்மா குழப்பமாகவும், ஏமாற்றமாகவும் சுவாதியின் அருகே சென்று நின்றாள்.

“என்னாச்சு கண்ணம்மா… என்ன சொன்னான்..” கண்ணம்மாவின் கேள்விக்கு, அஜய் கூறியது அனைத்தையும் சொல்ல, சுவாதி யோசனையில் ஆழ்ந்தாள்.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…​

 

4 COMMENTS

  1. Superb …..finally itha ponnu kanmani illa nu kandu pidichachu ……pavam kannama…ajay ah evlo deep a love panra, sikirama ajay ku puriya vainga pa….eagerly waiting for next update.

  2. Hi sis nice ud. Aj kanmani yarunu identify panitana illaiya sis?. But aj idhalam romba over unnakaga kannama chance aguna vanthu advise ah soltra?? sis idhulam sari illa solli vanga?.

  3. hahahaha… sir’ku kannamma mela luv vanthiduchi…
    aana, othukka dhan maattikiraar…
    yevlo naalaiku intha naadagamnu paarppom…

    nice update, ramz kutty…

LEAVE A REPLY