SHARE

​ஈரம் இல்லாத கண்ணீரை
இலவசமாய் கொடுக்க
ஏதும் ஏற்பாடா
உன் உதாசீனம் கொண்டு,
உற்றுப்பார்
என் கண்களை
உன் உருவம் கலங்கி நிற்பதை !!

 

“என்னடா.. இன்னைக்கு காலையில கண்மணி கூட பேசலையா? அதுவும் இன்னைக்கு உன் பர்த்டே… அவ கூட பேசாம கால கட் பண்ணற” அஜய் அழைப்பைத் துண்டிக்கவும், கார்த்திக் சந்தேகமாகக் கேட்க, உதட்டைப் பிதுக்கிய அஜய்,

“வேற யாரோ இன்னைக்கு தென்றல் ராகம் நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க… கண்மணி இன்னைக்கு லீவாம்…” கார்த்திக்கை ஏளனமாக பார்த்துக் கொண்டே அஜய் சொல்லவும், ‘லீவா’ கார்த்திக் குழப்பத்துடன் அதிர்ந்தான்.

“உன்னை இங்க வர சொல்லிட்டு எப்படி ஏமாத்தி இருக்கா பாரு…” ஏளனமாக சொன்னவன்,

“வீட்டுக்குப் போகலாமா கார்த்திக்… இங்க இதுக்கும் மேல நிக்க வேண்டாம்…. என்னவோ அசிங்கமா இருக்கு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கார்த்திக்கின் கண்கள் விரியவும், அஜய் அவன் பார்வை போன திசையைப் பார்த்தான்.

அவனது முகத்தில் தோன்றிய ஒரு வித வெற்றிக் களிப்பையும், பரவசத்தையும் கண்டவன், “இதோ யாரோவா இருக்கும்…. வந்து வண்டியில ஏறு… நான் வண்டியை எடுக்கறேன்…” என்றபடி, அஜய், வண்டியில் கை வைக்க, ‘இருடா..’ என்று கார்த்திக் தயங்கினான்.  

பளிச் சென்ற முகத்துடன், கண்களில் புன்னகை ததும்ப, கை நிறைய ரோஜா பூங்கொத்தை வைத்துக் கொண்டு ஒரு அழகிய மங்கை, அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தாள்…. மிதந்து வந்துக் கொண்டிருந்தாள் என்று சொல்ல வேண்டுமோ… பாதம் வலிக்குமோ எண்ணும் அளவிற்கு அவளது பாதங்கள் தரையில் பதிந்து அவன் அருகில் அவளை கொண்டு வந்து சேர்த்தது.

பார்ப்பவர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு தான்… சினிமா நடிகைகளின் பொலிவையும், மெல்லிய கொடி போன்ற தேகமுமாக இருந்தாலும், அஜய் ஆர்வமின்றி நின்றிருந்தான்.

“என்ன அஜய்…. அப்படி பார்த்துட்டு இருக்க… ஆளு சும்மா சிம்ரன் போல இல்ல…” கார்த்திக் வம்பிழுக்கவும், அஜய் அவனை முறைத்துப் பார்த்தான்.

“சும்மா முறைச்சிட்டே இருக்காதேடா… ஏன்டா… உன்னோட கண்மணிய பார்க்கப் போறோங்கற சந்தோஷமே இல்லாம கடனேன்னு இருக்க? என்னாச்சு அஜய்…” கார்த்திக்கின் கேள்விக்கு,

“எதுக்குடா இங்க வந்து வெட்டியா நின்னுட்டு இருக்கோம்… அவங்க வராங்களான்னு கேளு… இல்ல நாம கிளம்புவோம்… என்னவோ சைட் அடிக்க வந்து நிக்கற மாதிரி இருக்கு… எனக்கு ஒரு மாதிரி இருக்கு…” அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்த பெண்ணை ஒரு முறை பார்த்துவிட்டு, அசூசையாக அஜய் சொல்லவும், அதைக் கேட்காமல் கார்த்திக், அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் பொண்ணையே பார்க்காத மாதிரி வெறிச்சு வெறிச்சு பார்க்காதே… மானத்தை வாங்காம கிளம்பு…” அஜய் அவனை அவசரப்படுத்த, அதே நேரம் அந்த அழகியும், அவர்கள் அருகில் வந்திருந்தாள்.

“ஹாய்… ஹாப்பி பர்த்டே அஜய்…” என்றபடி, தனது கையில் இருந்த பொக்கேவை அவனிடம் நீட்ட, திடீரென்று அவள் அவ்வாறு சொல்லவும், அஜய் புரியாமல் பார்த்தான்.

“என்ன ஜெய்…. இப்படிப் பார்க்கறீங்க? நீங்க தானே அஜய்… உங்களுக்குத் தானே பர்த்டே…” புன்னகையுடன் அவள் கேட்டு, பொக்கேவை நீட்ட, அனிச்சை செயலாக அஜய் அதை வாங்கிக் கொண்டான்.   

“ஒரு தேங்க்ஸ் கூட சொல்லத் தோணலையா?” புன்னகை மாறாமல், அவள் கேட்க,

“இல்ல… சாரி…. தேங்க்ஸ்…” என்று தடுமாறியவன்,  

“என்னோட முழு பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?” அஜயின் குழப்பமான கேள்விக்கு, அந்த பெண் கார்த்திக்கைப் பார்க்க, கார்த்திக்கோ, அவளை விட்டு கண்களை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன கார்த்திக்… முதல் தரவ என்னைப் பார்க்கற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க? நீங்க தானே எங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கிறேன்னு சொல்லி இருக்கேன்னு சொன்னீங்க… அதுவும் பர்த்டே கிஃப்ட்டா… இப்போ இப்படி அமைதியா நின்னா எப்படி? எங்களை அறிமுகப்படுத்தி வைங்க…” கார்த்திக்கிடம் கேட்டவள்,

அஜயிடம் கையை நீட்டி, “நான் கண்மணி… நீங்க என்னோட ரெகுலர் காலர் ஜெய்… ஐ மீன்… அஜய்… அம் ஐ கரக்ட்…” அவள் கேட்கவும், அஜய் திகைத்து நிற்க, கார்த்திக்கோ, கண்மணி என்ற பெயரில் இப்படி ஒரு அழகி வந்து நிற்பாள் என்று சற்றும் எதிர்பாராமல் திகைத்து நின்றிருந்தான்.

“நீங்க கண்மணியா?” அஜயின் கேள்வியில் நம்பாத தன்மை இருக்கவும், கார்த்திக் இப்பொழுது சுதாரித்துக் கொண்டான்.

“அஜய்… இவங்க தான் கண்மணி… என்னடா… ஆளுக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லன்னு பார்க்கறியா? இவங்க பூர்வீகம் மஹாராஷ்டிரா தான்… ஆனா… அவங்க அப்பாவோட வேலை காரணமா இவங்க பிறக்கறதுக்கு முன்னயே அவங்க இங்க வந்து தங்கிடவும், இங்கயே வளர்ந்தவங்க… தமிழ் நல்லா பேசறாங்க… நானும் முதல் முறையா அவங்களை பார்த்து இப்படி தான் நினைச்சேன்…” கார்த்திக், விஜய் கண்மணியைப் பற்றி சொன்ன அனைத்து விவரங்களையும் ஒப்புவிக்கவும், கண்மணியின் கண்களில் மெச்சுதல் தெரிந்தது….

“ஓ… அப்போ கண்மணிங்கற பேர் எப்படி?” விடாமல் அஜய் அடுத்த கேள்வியைக் கேட்கவும், இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கண்மணி கார்த்திக்கின் உதவிக்கு வந்தாள்.

“என்னோட க்ளோஸ் பிரெண்ட்டோட பேர் கண்மணி… அதனால அந்த பேரையே நான் என்னோட புனைப் பெயரா வச்சிக்கிட்டேன்… இங்க இருக்கறவங்க பேர்ல பாதி பொண்ணுங்களோட பேர் புனைப் பெயர் தானே…” அவள் விளக்கம் சொல்லவும், அஜய்க்கு தெரியாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்ட கார்த்திக், சுற்றி எங்கேனும் விஜய் நிற்கிறானா என்று பார்த்தான்.

தென்றல் பண்பலை அலுவலகத்தின் வாயிலில் அவன் நின்றிருக்க, அவனைப் பார்த்து தைரியமாக உணர்ந்தவன், அஜயைப் பார்த்தான். போனில் பேசும்போது, அவளிடம் தோன்றும் உற்சாகமும், பரபரப்பும் தொலைந்திருப்பதைக் கண்டவன், ‘ப்ளான் சொதப்பிடுமோ?” என்று மனதினில் வருந்தி,  

“நீங்க பேசிட்டு இருங்க… ஒரு போன் பண்ண வேண்டி இருக்கு…” என்று மன்னிப்பு வேண்டிய படி, அவர்களுக்கு தனிமையளித்து அங்கிருந்து நகர்ந்தவன், விஜய்க்கு அழைத்தான்.

விஜய் போனை எடுக்கவும், “அத்தான்… நிஜமாவே இவங்க தான் கண்மணியா…” தனது முதல் சந்தேகத்தை கார்த்திக் கேட்கவும்,

“வேணும்னா… வா… என் பிரெண்ட்கிட்ட கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்யச் சொல்றேன்… அவ தான் கண்மணிடா… அதுல என்ன சந்தேகம்?’ போனில் விஜய் பதிலளிக்கவும்,

“இது தெரிஞ்சு இருந்தா… நானும் டெய்லி அவனுக்கு போட்டியா போன் செய்திருப்பேனே அத்தான்… இப்படி சோம்பேறித் தனத்துனால கோட்டைய விட்டுட்டேனே… என்னே கொடுமை… என்னே கொடுமை…” கார்த்திக் நெற்றியில் தட்டிக் கொள்ளவும், விஜய் சத்தமாகவே சிரிக்க, அதைக் கேட்ட கார்த்திக்கோ, கடுப்புடன்….

“என்ன சிரிப்பு… உங்க மச்சானுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து சேர்த்து வச்சிட்டீங்க… அதுவும் ரெண்டு பேரும் நல்ல பெர்சொனாலிட்டி… ஜோடிப் பொருத்தம் பிரமாதம்…

நான் அப்படியா… விஜயகாந்துக்கு கசின் ப்ரதர் மாதிரி ஒரு லுக்கு… வடிவேலுக்கு அண்ணன் பையன் போல ஒரு சிரிப்பு… ஹ்ம்ம்… எல்லாத்துக்கும் மச்சம் வேணும் அத்தான்… மச்சம் வேணும்…” அவன் விட்ட அனல் மூச்சில், கண்மணியின் கையில் இருந்த ரோஜாக்கள் வாடி இருந்தாலும், சந்தேகமில்லை….

“கார்த்திக்… போதும்… நீ அவங்க என்ன பேசிக்கறாங்கன்னு கவனிச்சு சொல்லு… நான் ஏற்கனவே கண்மணிகிட்ட உன்னைக் காட்டி… ‘அந்த அண்ணன் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்ததா சொல்லணும்’னு சொல்லி இருக்கேன்… நீ எதுவும் பேசி சொதப்பிடாதே…” விஜயின் எச்சரிக்கை, அவனுக்கு எரிச்சலைக் கொடுக்க,

“அண்ணனா… அவ என்னோட பாசமலர் தங்கையா? நீங்க எல்லாம் நல்லா வருவீங்க? என்ன வில்லத்தனம்” என்று கோபத்துடன் போனை வைத்தவன், அவர்கள் அருகே சென்று நின்றான்.

“என்ன ஜெய்… கால் செய்தா மூச்சுக்கு முன்னூறு வார்த்தை பேசுவீங்க… இப்போ இவ்வளவு அமைதியா இருக்கீங்க?” அவள் கேட்டுக் கொண்டிருக்க,

“இல்ல… அது போன்ல பேசிட்டேன்… நேர்ல என்ன பேசறதுன்னு தெரியல…” என்றவன், சிறிது இடைவெளி விட்டு,

“ஏன் இன்னைக்கு ப்ரோக்ராம் பண்ணாம லீவ் போட்டுட்டு என்னைப் பார்க்க வந்தீங்க…. உங்க ரெகுலர் காலர்ன்னா… நீங்க இப்படி செய்யறது வழக்கமா?” அஜய் கேள்வியைத் தொடுக்கவும், அவனையே ஆழ்ந்து நோக்கிய கண்மணி,

“எல்லாரையும் இப்படி பார்க்க வர மாட்டேன்… சிலர் ஸ்பெஷல் தானே…” கண்மணியின் பதிலுக்கு,  

“புரியலையே…” அவசரமாக கார்த்திக் இடையில் கேள்வி கேட்கவும், அஜய் அவனை முறைக்க, ‘அண்ணா…’ கண்மணி சிணுங்க, கார்த்திக் தனது வாயை மூடிக் கொண்டான்.

“தேவையாடா உனக்கு? விட்டா… மலர்ந்தும் மலராத அப்படின்னு பாட வச்சிடுவா போல…” அவனது மனம் கேள்வி கேட்க, அதே கேள்வியை, அஜயின் பார்வை கேட்டுக் கொண்டிருந்தது.

“அவ்வளவு என்ன நான் ஸ்பெஷல்…” அளவிடும் பார்வையை அவள் மீது வீசிக் கொண்டே, அஜய் கேட்கவும், ‘இவன் தேற மாட்டான்…’ என்று கார்த்திக் சலிப்புடன், விஜய்க்கு மெசேஜ் அனுப்பினான்.  

“நீங்க டெய்லி பேசினாலும்… நீங்க என்னைக்குமே எல்லை மீறினது இல்ல… நிறைய பேர்… டெய்லி காலர்ஸ் தான்… அவங்க எல்லாம் பேசற பேச்சு… நாங்க காலையே கட் பண்ண வேண்டியதா இருக்கும்… இண்டீசென்ட் பெல்லொவ்ஸ்..” அவளது பதிலைக் கேட்டவனுக்கு திருப்தி தான் எழுந்திருக்க வேண்டும்… மாறாக ஏனோ சொல்ல முடியாத ஒரு உணர்வு எழுந்து அவனை ஆட்டிப் படைத்து, அவனது பேச்சுக்கும் தடை விதித்தது….

“பாருங்க… இப்போவும் நான் எவ்வளவு நேரமா உங்க கூட பேசிட்டு இருக்கேன்… உங்க கண் என் முகத்தை விட்டு இம்மி கூட நகரவே இல்ல…” கண்மணி பெரிதாக விளக்கம் சொல்லவும், அஜய் தோளைக் குலுக்கிக் கொண்டான். 

ஏனோ போனில் அவளது குரலைக் கேட்கும் பொழுது இருக்கும் உற்சாகம், அந்த குரலில் இருக்கும் ஒரு குழைவு எதுவும் இல்லாமல், “தேங்க்ஸ்…” உற்சாகமில்லாமல் அவன் சொல்ல,

“ஏன் என்னைப் பார்க்க உங்களுக்கு பிடிக்கலையா?” கண்மணி புன்னகையுடனே கேட்க, அஜய் மெல்லிதாக புன்னகைத்தான்.

“அப்படி எல்லாம் இல்ல…  ஆபீஸ்ல வேலை முடிச்சிட்டு இப்போ தான் வந்தேன்…. வந்ததும்… உங்களைப் பார்க்க வந்துட்டேன்… அது தான் ரொம்ப டயர்ட்டா இருக்கு…” என்று பதில் சொன்னவன்,

“சொல்லுங்க…. அப்பறம்…” என்று கேட்கவும், கண்மணி தோளைக் குலுக்கிவிட்டு, தன்னுடைய விருப்பு வெறுப்புகளை சொல்ல, அஜய் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்….

“நீங்க சொல்லுங்க…” கண்மணி ஊக்கவும், அஜய் சிறிது நேரம் மௌனம் காத்து யோசித்தான். 

“எனக்கு பெருசா எல்லாம் ஒண்ணும் இல்ல… எல்லாம் பெர்பெக்ட்டா இருக்கணும்… அவ்வளவு தான்…” சொல்ல வேண்டுமே என்று சொன்னவன்,  

“ஓகே… கண்மணி… உங்களை நான் இன்னொரு நாள் மீட் பண்றேன்… ஆபீஸ்ல வேலை அதிகம்… அதனால இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்… உங்களை சந்திச்சத்துல ரொம்ப சந்தோசம்… உங்க ரசிகன நீங்க பார்க்க சம்மதிச்சதும் ரொம்ப சந்தோசம்… தேங்க்ஸ்…” அவன் விடைபெற எத்தனிக்க, கண்மணி அவனது கையை விடாமல்….

“கீப் இன் டச்… இது என்னோட செல் நம்பர்…. நோட் பண்ணிகோங்க… அப்படியே உங்க நம்பரும் தாங்க… நாம அடிக்கடி மீட் பண்ணலாம்…” என்று கூறி, அவனிடம் இருந்து  நம்பரைப் பெற்றுக் கொண்டு,

“பை ஜெய்… பை பை… வர சண்டே நான் ப்ரீ… நாம வேளச்சேரி மால்ல மீட் பண்ணலாம்… காலையில பதினோரு மணிக்கு… கண்டிப்பா வந்திருங்க… உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..” என்று நகர்ந்துக் கொண்டே சொல்லவும், அஜய், அவளுக்கு கையசைத்து வழியனுப்பி வைக்க,

“பை அண்ணா… தேங்க்ஸ்…” போகும் போக்கில், கார்த்திக்கின் எரிச்சலையும் கிளப்பிவிட்டே செல்ல, கார்த்திக் பல்லைக் கடித்தான். அதைப் பார்த்த அஜயின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“சிரிடா… சிரி… இப்போ சந்தோஷமா?” கேட்ட கார்த்திக்,

“ஏண்டா டல் அடிக்கிற? அவகிட்ட சந்தோஷமா பேசினா மாதிரியே தெரியலையே…. என் கிஃப்ட் பிடிக்கலையா?” கவலையுடன் அவன் கேட்கவும், தன் நண்பன், தனக்காக இவ்வளவு தூரம் செய்திருக்கிறானே என்று அஜயின் உள்ளம் நெகிழ, ‘பிடிச்சிருக்கு…’ என்ற வார்த்தையை உதிர்த்தான்.

“ஹே… சூப்பர்… அப்போ நேரா ஆபீஸ்க்கு போய் உன்னோட ட்ரீட் தான்…” கார்த்திக் ஆர்ப்பரித்து, வண்டியை எடுக்க, அஜய், அவனது வண்டியில் ஏறிக் கொள்ள, அவன் அறியாமல், விஜய்க்கு கட்டை விரலை உயர்த்திக் காட்ட, விஜய் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

அலுவலகம் சென்று அங்கு காலைச் சிற்றுண்டியில், தனக்கு ஒரு பிரட் சான்ட்விட்சையும், கார்த்திக்கிற்கு ஒரு பொங்கலையும் வாங்கிக் கொண்டு அமர்ந்தவனை,

“கண்மணியோட நம்பரை சேவ் பண்ணி வச்சிக்கோ மச்சான்… அவ கூட இதுலே பேசலாம்… காலையில தூக்கம் முழிக்க வேண்டாம் இல்ல… எப்படி என் ஐடியா…” கேட்டுக் கொண்டே கார்த்திக் சட்டைக் காலரைத் தூக்கி விடவும், அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே, அஜய், அவளது பெயரை பதிக்கத் தொடங்க, ஆங்கில எழுத்தின் ‘kan’ என்று போட்டவுடன், அவனது மொபைல் கண்ணம்மாவின் பெயரைக் காட்ட, ஏனோ மெல்ல கண்மணியைப் பார்த்ததை நினைத்து துளிர் விடத் தொடங்கி இருந்த உற்சாகம், வடிவதைப் போல் உணர்ந்தான்.

“கட்டுப்பெட்டியான கண்ணம்மா எங்கே? நவநாகரீகப் பெண்மணி போல், பளிச் புன்னகையுடன், தன்னை நோக்கி வந்த கண்மணி எங்கே… இருவரும் இரு வேறு துருவங்கள்…” என்று இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தவன்,

“ச்சே… இப்போ சம்பந்தமே இல்லாத ரெண்டு பேரையும் ஒத்திட்டு பார்க்கறேன்… எனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு… ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி…” தன்னையே திருத்திக் கொண்டு, கண்மணியின் பெயரைப் பதித்து முடிக்கையில், கண்ணம்மாவிடம் இருந்து விடுப்பு கோரி குறுந்தகவல் வந்து சேர்ந்தது….

“ஓகே….” அவன் பதில் அனுப்பிய மறு நிமிடம், அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து செய்தி வர, பதிலுக்கு நன்றி தெரிவித்து, பதில் மெசேஜ் அனுப்பியவன், யோசனையுடனே தனது இருக்கைக்கு வர, கார்த்திக் அமைதியாக அவனை பின் தொடர, புத்துணர்வுடன், தனது இருக்கையில் கண்ணம்மா அமர்ந்திருந்தாள்…..             

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

9 COMMENTS

  1. hi Ramya

    kannama is the kanmani i think so she request leave but now she is in her work eagerly waiting for the next update

  2. Atcho…

    Naan Kanmani dhan Kannammanu ninaichen… Irunthalum intha vijay anna mela enakkoru doubt… Oru velai kanmani leave’nu therinji, kanmaninu vera aala intro panna sollittaro???

    Irunthalum karthik’ai annanu arimuga paduthittangeley… Unakkaga naanum varunthugiren Karthik… Hehe

    Super update, my dear…

LEAVE A REPLY