SHARE

காலை பொழுது விடியலை நோக்கி துவங்க…. இலேசாய் கண் திறந்து பார்த்த தனா நெஞ்சில் துயில் கொண்ட மனைவியை காணாமல் எழுந்து அமர்ந்தான்… நேரம் சரியாக ஐந்து என்று காட்டியது…

“இவ்வளவு காலைல எங்க போய்ட்டா???”

கேள்வி கேட்ட மனதிற்கு பதில் இல்லாமல் பாத்ரூம் அருகே சென்றவன்… கதவு தள்ளப்பட்டவுடன் திறந்துக் கொள்ள… மீனா இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு வெளியே வந்தான்.

மறுபடியும் கட்டிலிற்கு சென்று விழுந்தவன் எண்ணம் முதல் நாள் இரவு நடந்ததை அசை போட்டு பார்த்தது… அழகாய் நெஞ்சில் துயில் கொண்டவள்… இன்று எழுவதற்கு முன் சென்றது ஏனோ மனதை பாரமாக்கியது.

அவள் முகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று உத்வேகம் எழ சரிதான் என்று கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தான்…. ஜன்னல்கள் திறக்காமல் சாத்தப்பட்டிருக்க….. இன்னும் சூரியன் உதித்திராத காலை பொழுது வீட்டை மெல்லிய இருட்டாய் காட்டியது.

மெதுவாய் ஒவ்வொரு இடமாய் பார்வையால் துழாவி கொண்டே வந்தவன்… கிட்செனில் பேச்சுக் குரல் கேட்டு சத்தம் வராமல் பூனை நடை போட்டு அருகே சென்றான்…

மனம் ஏனோ ரயில் வேகத்தில் துடிக்க தொடங்கியது… அங்கு செல்லாதே என்று தடைப் போட்ட நெஞ்சம்… என்ன அறிகுறியை அவனுக்கு கட்டியதோ??? அதனால் விளைந்த படபடப்பில் துடிக்கும் இதயத்தின் ஓசை அவனுக்கே பயத்தைக் கொடுக்க…. ஏனென்று புரியாத குழப்பத்துடன் மறைந்து நின்றவாறு அவர்களின் பேச்சை கேட்டான்.

“சித்தி என்னால முடில சித்தி… அவரு பாவம்…. இப்படி அவரை என்னால பார்க்க முடில… காரணத்தை அவர்ட சொல்லிடலாமே… சொன்னா அவரு புரிஞ்சிப்பாருன்னு தான் தோணுது சித்தி….”

மெல்லிய விசும்பலுடன் கேட்ட மீனாவின் குரலில் இவனுக்கு வியர்க்க தொடங்க… ஏதோ தனக்கு பிடிக்காத விஷயம்… தான் கேட்க கூடாத செய்தி எதையோ கேட்க போகிறோம் என்று புரிந்தும்.. அங்கிருந்து நகர முடியாமல் வேரோடி போன கால்களை நகர்த்த முடியாமல் அங்கேயே நின்றான்.

“ஹ்ம்ம்… போ போய் சொல்லு… சொல்லிட்டு அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா இங்க வந்து என்கிட்டே அழாதே… உனக்கு நல்லதுன்னு சொன்னா அது ஏன் புரிய மாட்டுது உனக்கு??? என்ன இன்னும் அஞ்சு மாசமோ ஆறு மாசமோ… இப்படியே பொறுத்துக்க முடியாதா???” சுந்தரியின் குரல் கோபத்தை சிந்தியது…

“ஹையோ சித்தி என்ன வார்த்தை சொல்லிட்டீங்க… பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க சித்தி…. அதுவும் உங்க வாயால வேணாம் சித்தி ப்ளீஸ்… அவரு நல்லா இருப்பாரு…” மெதுவாய் தேய்ந்துப் போன குரலில் மீனா அழத் தொடங்க.. அவளை இழுத்து தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்த சுந்தரி…

“வேணாம் தங்கம்… அழாதே…. இப்படி நீ காலம் பூரா அழுதுட கூடாதுன்னுதான்… நான் இவ்வளவும் பண்றேன்… இப்ப கொஞ்சம் பொருதுட்டு இருந்துட்டேன்னா பின்னாடி உனக்குதான் நல்லது மீனா…

நீ சொல்ற மாதிரி அவரால புரிஞ்சிக்க முடியாது மீனா… அந்த பக்குவம்லாம் அவருக்கு இருக்குற மாதிரி தெரியல… இந்த காலத்து பையன்…”

அவரும் அவர் பங்குக்கு பொடி வைத்து பேச… என்ன விஷயம் என்று புரியாமல்… கோபத்தில் கத்த தோன்றிய வாயை பொத்தி அவர்கள் பேசுவதை மேற்கொண்டு கேட்க…

“அது மட்டுமில்லாம தனியா ஆசிரமத்துல வளர்ந்த பையன்… அவருக்கு யார் நல்லது கெட்டதுல்லாம் சொல்லி கொடுத்துருக்க போறா??? கடவுள் நம்பிக்கையே அரைவேக்காட இருக்கப்ப இதை சொன்னா நம்மலைத்தான் நக்கலா பார்ப்பார்…”

அப்படி எதை பற்றிதான் இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்??? ஒருவேளை மீனு தன்னை விட்டு விலகி இருப்பதற்கான காரணம் பெரிதாகத்தான் இருக்குமா??

நான் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்று எப்படி அவர்களாகவே முடிவெடுக்கலாம்… என்னை பற்றி அப்படி என்ன தெரியும் இவர்களுக்கு??? மீனு விஷயத்தை போய் நான் சாதரணமாக எடுத்துக் கொள்வேனா???

மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டாலும் வாய் விட்டு கேட்க முடியாத காரணத்தால் கண்களையும் காதுகளையும் மட்டும் அவர்களிடம் கொடுத்தான்.

ஆனால் அதற்கு மேல் அவர்கள் எதையும் பேசவில்லை… மௌனம் குடிகொண்டிருந்த சில நொடிகளில்… எதுவும் பேசாமல் மீனா அங்கிருந்து வெளியே வர பார்க்க…

இதற்கு மேல் இங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என வந்த சுவடு தெரியாமல் மீண்டும் அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தான்.

இன்னமும் தனாவின் நெஞ்சம் படபடப்பை அடக்கப் போராடிக் கொண்டிருந்தது. அவர்கள் பேசியதில் இருந்து,  அவனது மனதிற்கு இரண்டு விஷயங்கள் ஆறுதலை அளித்தது.

‘மீனா தன் மேல் கொள்ளை கொள்ளையாய் பிரியம் வைத்திருக்கிறாள் என்பதும், தன்னை பிரிந்திருப்பது அவளுக்கு ஒன்றும் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை என்பதையும் உணர்ந்தவனுக்கு சந்தோஷமே மிஞ்சியது.

துள்ளிக் குதிக்க வேண்டும் போல எழுந்த ஆவலைத் தாண்டி, மீனாவின் விலகலுக்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளும் ஆவல் எழ, அதை எப்படி தெரிந்துக் கொள்வது என்று அவன் மண்டையை பிய்த்துக் கொள்ளத் துவங்கினான்.

அதே நேரம், அறையின் கதவு திறக்கப்படும் சத்தத்தைக் கேட்ட தனா மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்த மீனா, உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த தனாவின் அருகே சென்று அமர்ந்தாள்.

மெல்ல அவனது கையை எடுத்து தனது கையுடன் கோர்த்துக் கொண்டவள், அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஃபேன் காற்றில் அசைந்துக் கொண்டிருந்த தலை முடியைப் பார்த்தவள், அதை மெல்ல கோதிக் கொடுத்து, அவனது நெற்றியில் இதழ் பதித்தாள்.

அவளாகவே முதன்முதலில் பதிக்கும் இதழ் முத்திரை… தனாவின் உள்ளம் சிலிர்க்க, கைகள் அவளை கட்டித் தழுவ பரபரக்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மரமென கிடந்தான்.

அடுத்து, மெல்ல, கண்கள், மூக்கு, காது என்று இதழ் பதித்துக் கொண்டே வந்தவள், அவனது உதடுகளை நெருங்கவும், வெட்கம் ஆட்க்கொண்டது. அவனது இதழ் தீண்டல்கள் நினைவு வர, வெட்கத்தில் கண்களை மூடி, பட்டும் படாமலும் இதழ்களைப் பதித்தவள், அவன் சிறிது அசைந்துக் கொடுக்கவும், அவசரமாக எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.

குளியலறையின் கதவு மூடப்படும் சத்தம் கேட்டு கண் திறந்து பார்த்த தனா, இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டான். “ஹையோ மீனு.. என்னை இப்படி கொல்லறியே… உனக்குள்ளேயும் இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு என்னையும் வதச்சு நீயும் ஏன் இப்படி கிடந்து அல்லாடற? உனக்கு அப்படி என்ன தான் பிரச்சனை… எதனால விலகிப் போற? அப்படி என்ன நான் புரிஞ்சிக்க முடியாத ஒண்ணு இருக்கு…” என்று தனக்குள்ளேயே மீனாவிடம் கேட்டு கொண்டிருக்க, குளித்து முடித்து புதுப் பூ போன்ற மலர்ச்சியுடன் மீனா வெளியில் வந்தாள்.

“எழுந்துட்டீங்களா தனு… பிரெஷ் ஆகிட்டு வாங்க… காபி எடுத்துட்டு வரேன்…” என்று அவள் பொட்டை வைத்துக் கொண்டே சொல்ல, அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த தனா, அவளை பின்னால் இருந்து அணைத்தான்.

“தனு நான் குளிச்சிட்டேன்…” ஆசையும், நாணனும் போட்டிப் போட்ட குரலில் அவள் சொல்ல, அவளது கழுத்து வளைவில் முகம் பதித்தவன், எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றான்.

“என்னாச்சு தனு…” கையை அவனது கன்னத்தில் பதித்தபடி அவள் கேட்க,

“இல்ல மீனு… இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கற மாதிரி இருக்கு… அதுக்கு என்ன காரணம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்…” என்று சொன்னவனது கை மெல்ல அவள் வயிற்றில் பதிய, மீனா விலுக்கென்று அவனிடம் இருந்து விலகினாள்.

“நான் போய் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் தனு..” அவனது முகத்தைப் பார்க்காமல் கடமை மனைவியாக சொல்லிவிட்டுச் சென்றவளைப் பார்த்துக் கொண்டே தனா நின்றிருந்தான்.

“ஹ்ம்ம்…” என்று யோசனையுடன் பெருமூச்சை வெளியிட்டு, குளியலறைக்குள் சென்றவனுக்கு, மீண்டும் மீண்டும் சுந்தரி பேசிய பேச்சிலேயே மனம் சுழன்றுக் கொண்டிருந்தது.

‘மீனா ஒதுங்குவதற்கு காரணம் சாமியிடம் வேண்டுதல் ஏதாவது இருக்குமோ?’ தனா யோசிக்க, ‘இருக்கலாம்’ என்று ஒரு மனம் சொல்லியது.

“அப்படி எனக்கு கெடுதல் வரக் கூடிய அளவு என்ன இருக்கும்? மீனா இந்தளவு பயந்து நடுங்குகிறளே… என்கிட்டே சொன்னா அதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து பரிகாரம் செய்திருக்கலாமே…” ஏதேதோ யோசித்துக் கொண்டு, அதை வாய் விட்டு கேட்கவும் முடியாமல், எப்படி கையாள்வது என்றும் புரியாமல், ஷவரை நிறுத்திவிட்டு வெளியில் வந்தவன், காபியும் கையுமாக நின்றிருந்த மீனாவைப் பார்த்தான்.

அழகோவியமாக, துடைத்து சரியாக காயாத கண்ணீருடன் அவள் நின்றிருந்த கோலம் தனாவையும் வாட்டியது. ‘தான் நெருங்க நெருங்கத் தானே, எனது தவிப்பை நினைத்து அவள் கலங்குகிறாள்’ என்ற அவனது மனது அவளது நிலையையும் அறிவுறுத்த, இதற்கு மேல் அவளிடம் நெருங்கி எந்த ஒரு கஷ்டத்தையும் அவளுக்கு கொடுக்கக் கூடாது என்ற முடிவை எடுத்துக் கொண்டு, ‘ஹாய் மீனு…’ என்று அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“காபி எடுத்துட்டு வந்திருக்கேன்…” மீனா வாய் திறக்க,

“எனக்கு இன்னைக்கு காலையில டிபனுக்கு பூரி கிழங்கு வேணும் மீனு.. அதை ரெடி பண்ணிடு… அப்பறம் நாம அப்படியே ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வரலாமா? உன்னால முடியுமா?” அவன் நேரிடையாக அவளது முகத்தைப் பார்த்து கேட்கவும், மீனாவின் முகம் மலர்ந்தது.

தனாவுடன் வெளியில் செல்லக் கிடைக்கும் தனிமையான நேரம்… திருமணத்திற்குப் பிறகு முதல் முதல் அவனுடன் சேர்ந்து வெளியில் செல்லப் போகிறோம் என்ற குதூகலமே அவளது முகத்தை மலரச் செய்திருந்தது.

“நிஜமாவா… சரிங்க நான் போய் டிபன் செய்யறேன்… சாப்பிட்டு போகலாம்…” என்று வேக வேகமாக சொல்லிக் கொண்டவள், அவனது கையை எடுத்து காபியைக் கொடுத்துவிட்டு, அடுப்பங்கரைக்குச் சென்றவள், வேகமாக அவனுக்கு டிபன் செய்வதில் இறங்கினாள்.

“என்ன மீனு ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி இருக்கு?” அவளது பரபரப்பைக் கண்ட சுந்தரி ஆழம் பார்க்கவும்,

“இல்ல… அவருக்கு பூரி கிழங்கு வேணுமாம்.. அப்பறம் கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னார்… வீட்லயே இருக்க அவருக்கு ரொம்ப போர் அடிக்குதாம்…” சந்தோஷமாக மீனா சொல்ல, சுந்தரியின் பார்வை கூர்மையானது.

“கோவிலுக்குத் தானே போறீங்க? இல்ல பொய் சொல்லிட்டு… அப்பறம் ஏதாவது ஆனா…” என்று இழுக்க, பட்டென்று மீனாவின் கண்கள் கலங்க,

“நான் உங்க கிட்ட பொய் சொல்லுவேனா சித்தி… நிஜமா அவர் கோவிலுக்குத் தான் போகலாம்ன்னு சொன்னார்.. எனக்கும் அவரோட நலன் தானே முக்கியம்..” என்று கண்களைத் துடைத்துக் கொள்ள, சுந்தரி, அவளது தலையைக் கோதிக் கொடுத்தார்.

“உங்க நல்லதுக்கு தானே கண்ணு சொல்றேன்… அதுக்குள்ள இப்படி நீ கண்ணு கலங்கலாமா? மாப்பிள்ளை பார்த்தா என்ன நினைப்பார்?” சுந்தரி ஒருமாதிரிக் குரலில் சொல்ல, காபியை குடித்து முடித்து, கப்பை எடுத்துக் கொண்டு வந்த தனா அதைக் கேட்க நேர்ந்தது. அதைக் கேட்டவனுக்கோ, மனதில் ஏதுவோ நெருடுவது போல தோன்றத் தொடங்கியது.

 

7 COMMENTS

LEAVE A REPLY