SHARE
​​
என்னை விட்டு விட்டு 
அவள் நினைவாகவே 
இருக்க ஆரம்பிக்கும் 
மௌனமான தவம்,
வரமாய்  வந்தவள் 
வாழ்வினில் தித்திப்பாய் 
சிறு விலகல் தாங்காது 
நெருக்கத்தை நேசித்து 
காதல் பக்கங்களை 
புரட்டியபடி 
எங்கள் வாழ்க்கை டைரி !!
 

“ஷிவானி… எப்படி இருக்க? ரெண்டு நாளுலயே முகத்துல ஒரு புது ஒளி தெரியுது…” என்று சித்ரா கிண்டல் செய்ய,

“போங்க அண்ணி… ரொம்ப தான் கிண்டல் செய்யறீங்க?” என்று ஷிவானி வெட்கத்துடன் சொல்லவும், சித்ரா பெரிதாக சிரிக்கத் தொடங்கினாள்.

“அண்ணி… ரொம்ப சிரிக்கறீங்க… இருங்க என் கையாள காபி போட்டு எடுத்துட்டு வரேன்…” ஷிவானி உள்ளே செல்லத் திரும்ப,

“நான் உன்னை கிண்டல் செய்தது தப்பு தான் சிவா… அதுக்காக எனக்கு ஏன் இந்த தண்டனை?” சித்ரா கிண்டல் செய்ய,

“அண்ணி…” என்று செல்ல முறைப்புடன் உள்ளே செல்லத் திரும்பியவளின் அந்த குணத்தைக் கண்ட புகழுக்கு தான் என்னவோ போல் ஆகியது.

தான் அவர்கள் வீட்டில் இருக்க சங்கடப்படுவது தெரிந்தும், அவன் வீட்டிற்கு அவள் விருப்பமாகவே வருவதை நினைத்தவனுக்கு, தானும் அது போல அவளது வீட்டில் பொருந்த முயல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

“டேய்.. புகழ்… அவ இன்னும் சமையல்..” சித்ரா பீதியுடன் புகழிடம் சரணடைய,

“அதெல்லாம் நல்லா சமைக்க கத்துக்கிட்டு தான் இருக்கா… காபி நல்லாவே போடறா…” என்று புகழ் அவளிடம் சொல்லவும், சித்ரா வியப்பாகப் பார்க்க, ஒரு மெல்லிய புன்னகையை சிந்தியவன்,

“வந்து உட்காருக்கா…” என்று சித்ராவையும் அழைத்துக் கொண்டு, சோபாவில் அமர, ஷிவானி காபியுடன் வந்து சேர்ந்தாள்.

அதைப் பருகிய சித்ரா… “சூப்பர் சிவா… அம்மாவுக்கும் கலந்து கொடு… ரொம்ப ரொம்ப சந்தோசம் ஆகிடுவாங்க…” என்று சொல்லிக் கொண்டே சித்ரா பருகி முடிக்க, ஷிவானி, தனது பொருட்களை கொண்டு வந்து வைக்கத் துவங்கினாள்.

“ஹே… என்ன அவசரம்?” புகழ் கேட்க,

“இல்லைங்க.. சீக்கிரம் நம்ம வீட்டுக்குப் போனா.. உங்களுக்கும் வேலைக்கு கிளம்ப ஈசியா இருக்குமேங்க… அது தான் லேட் பண்ணாம எடுத்துட்டு வரேன்…” என்று ஷிவானி சாதாரணமாகச் சொல்லவும், புகழ் சித்ராவை நிமிர்ந்துப் பார்க்க, சித்ராவோ அவனை கண்டிக்கும் பார்வை பார்த்தாள்.

“இப்போ உனக்கு என்னடி அவசரம்? காலையில டிபன் செய்துடறேன்… சாப்பிட்டே போகலாம்…” சசி தொண்டையடைக்க கேட்க,

“அவருக்கு வேலை இருக்கேம்மா…” ஷிவானி தயங்க, புகழுக்குத் தான் சங்கடமாக இருந்தது.

தான் பேசியதைக் கேட்டு, தனக்கு இங்கே பொருந்த கஷ்டமாக இருப்பதை உணர்ந்து தானே அவள் இவ்வாறு செய்கிறாள் என்று எண்ணிய நொடியில், தனது மனைவி, தன்னை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறாள் என்ற பெருமிதம் அவனது மனதில் எழவே செய்தது.

“அத்தை தான் சொல்றாங்களே சிவா… சாப்பிட்டே கிளம்பலாம்…” என்று புகழ் சொல்லவும்,

“சரிங்க…” என்ற ஷிவானி… சமையல் அறைக்குள் சசியை தள்ளிக் கொண்டு சென்று

“சீக்கிரம் ஏதாவது டிபன் பண்ணும்மா… அவர் வேலைக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருக்காரு..  நம்மளால அவருக்கு லேட் ஆகக் கூடாதும்மா..” கண்டிப்புடன் கூற,

“ரொம்ப ஓவரா பண்றடி… இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்…” என்று அவளை முறைத்துக் கொண்டே, சசி அவசரமாக வேலையைத் தொடங்கினார்.

“எதுக்கு இப்போ சின்ன பிள்ளைய இப்படி முறைக்கற?” ஷிவானி கேட்க,

“உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட அம்மாவை விட்டு பிரியற கஷ்டமே இல்லடி… இது தான் பெத்த மனம் பித்து… பிள்ளை மனம் கல்லுன்னு சொல்லுவாங்க…” சசி புலம்பிக் கொண்டே அன்றைய காலை உணவை தயாரித்தார்.

உணவை உண்டு முடித்ததும் புகழ் கிளம்புவதற்கு முன் ஷிவானி கிளம்ப, தனது ஒரே மகளை விட்டுப் பிரியும் சோகம் சசியை கண்கலங்க வைத்தது…

“சமத்தா இருடி… வாயடிக்கமா நல்ல பேர் வாங்கணும்…” பல அறிவுரைகளை சசி சொல்லிக் கொண்டிருக்க, ஷிவானி தலையசைத்துக் கொண்டிருந்தாள்.

“வேலை எதுவும் தெரியாதுன்னு சும்மாவே உட்கார்ந்து இருக்காதே… கூட மாட ஒத்தாசை செய்…” மேலும் சசி சொல்ல,

“இது நம்ம பொண்ணான்னு நீயே அசந்து போற அளவுக்கு நான் நடந்துப்பேன்ம்மா… போதுமா… இப்போ கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே பேசும்மா… இதோ நான் இங்க அடுத்த தெருவுக்கு தான் போக போறேன்… நினைச்ச நேரம் நீ வந்து பார்க்கவும் அத்தை ஒண்ணும் சொல்லப் போறது இல்ல… நான் வந்து பார்க்கவும் அவங்க ஒண்ணும் சொல்லப் போறது இல்ல… என்னை அவங்க நல்லா பார்த்துப்பாங்க… இனியன் என்னை ரொம்ப விரும்பறார்… இவ்வளவு இருக்கும் போது நான் எதுக்கும்மா அழணும்.. நீயும் அழாதே..” சசியைத் தேற்றியவள், தனது தந்தையைப் பார்க்க, அவரோ, பிறந்த பொழுது புத்தம் புது ரோஜாவாக கையில் ஏந்திய தனது மகள், நொடியில் வளர்ந்து, திருமணம் முடித்து கணவருடன் வேறு வீட்டிற்குச் செல்வதை எண்ணி கலங்கி நின்றார்.

இருவரின் முகத்தைப் பார்த்த ஷிவானிக்கு மனதில் மிகுந்த வருத்தம் எழுந்தது. இவ்வளவு காலம் தான் மட்டுமே உலகம் என்று சுற்றும் இருவரும், இனிமேல் தான் இல்லாத பொழுதுகளை நினைத்துத் தான் கலங்குகின்றனர் என்ற எண்ணம் எழவும், தனது தந்தையின் தோளில் சாய்ந்து ஷிவானி கண்ணீர் சிந்த,

“என்னடா அம்மு… இத்தனை நேரம் எங்களை அழக் கூடாதுன்னு குதிச்சிட்டு இருந்த… இப்போ நீயே அழற?” என்று சேகர் கேட்கவும், புகழ் ஷிவானியின் அருகே வந்து அவளது தோளை அழுத்தினான்.

அவனது ஸ்பரிசம் பட்டதும், நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டவள், “இல்லப்பா… சும்மா கண்ணுல வேர்த்துடுச்சு…” என்று புன்னகைக்க முயன்றபடி, குறும்பாகச் சொன்னவள், புகழைப் பார்க்க, அவளது கன்னத்தை பிடித்து, மெல்ல அவளது கண்களைத் துடைத்தவன், அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தான்.

“நேரமாகுது மாப்பிள்ளை… அப்பறம் ராகு காலம் வந்துடும்…” சசி நினைவு படுத்தவும், அனைவரும் கிளம்பி, புகழின் வீட்டிற்குச் சென்றனர்.

ஷிவானியைப் பார்த்த புகழின் தாய்க்கு மகிழ்ச்சி பிடி படாமல் அவளை வரவேற்க, “நான் வந்துட்டேன் அத்தை…” என்று ஷிவானியும் குதூகலத்துடன் உள்ளே நுழைந்தாள்.

“ஆமாடி ராஜாத்தி… நீ வந்ததும் வீடுக்கே ஒரு தனி களை வந்திருச்சும்மா… இனிமே நம்ம வீடு கலகலன்னு இருக்கும்…” என்று மல்லிகாவும் அவளுக்கு இணையான குதூகலத்துடன் அவளை சோபாவில் அமர வைக்க, இருவரையும் பார்த்துக் கொண்டே, புகழ் அவளது பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்தான்.

“ஹையோ என்னங்க இது நீங்க போய் பெட்டியை எடுத்துட்டு வரீங்க?” அவனைப் பார்த்த ஷிவானி பதற,

“அதனால என்ன?” புகழ் சொல்லி முடிப்பதற்குள்,

“சிவா… கல்யாணம் ஆனா… இந்த பெட்டி தூக்கற வேலை எல்லாம் செய்துத் தானே ஆகணும்… அது தானே கல்யாண வாழ்க்கையோட முதல் பாடம்…” என்று சித்ரா கிண்டல் செய்யவும், புகழ் அவளை முறைக்க முயல, ஷிவானியின் கலகல சிரிப்பில், அவனது கவனம் அவளிடம் சென்றது.

சிரித்து முடித்தவள், “இருங்க… நான் எடுத்துட்டு வரேன்…” என்று வேகமாக சென்று, அவன் முதல் பெட்டியை கொண்டு வைத்த அறையில் மீதிப் பெட்டிகளையும் எடுத்து வைத்தாள்.

“கொஞ்சம் டிரஸ்சை அங்கேயே வச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல…” புகழ் கேட்க,

“என்னோட டிரஸ்ல பாதியைக் கூட நான் எடுத்துட்டு வரலைங்க… அம்மா தான்… போகும்போது வரும் போதும் எடுத்துக்கோன்னு சொன்னாங்க…” என்று அப்பாவியாக சொன்ன தனது மனைவியைப் பார்த்த புகழ் சிரிப்பதா அழுவதா என்றே புரியாமல் குழம்பி, தன்னுடைய அலமாரியைத் திரும்பிப் பார்த்தான்.

அவனது அறையில், அவன் புழங்கிக் கொண்டிருந்த அலமாரியிலும், தனது பீரோவிலும் தன்னுடைய துணிமணிகளை ஒதுக்கி, சிறிது இடத்தை அவளுக்காக ஒதுக்கி வைத்திருந்த தனது முட்டாள் தனத்தை எண்ணி அவன் நொந்துக் கொண்டிருக்க,

“ஷிவானி… நீ பெட்டியை எல்லாம் அப்படியே வச்சிடு… நான் உனக்குன்னு ஒரு பீரோ ஆர்டர் செய்திருக்கேன்… அது இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துடுவேன்னு சொல்லி இருக்கான்… அதுவரை அப்படியே இருக்கட்டும்…” என்று சொன்ன மல்லிகா…

“நேத்து பாலை கால்ல கொட்டிக்கிட்டன்னு புகழ் சொன்னான்… அது பரவால்லயாம்மா? ஒண்ணும் காயம் ஆகலையே?” கரிசனையாக அவர் கேட்க,

“ஒண்ணுமே ஆகலை அத்தை… மதியத்துக்கு என்ன சமையல் செய்யலாம் அத்தை… நீங்க சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன்…” என்று பேசிக் கொண்டே, அவருடன் நடக்க, புகழ் அங்கு தனித்து நின்றான்.

“இவளால எப்படி எல்லார் கூடவும் சகஜமா பேச முடியுது? நமக்கு தான் கஷ்டமா இருக்கு…” என்று நினைத்தவனின் மனதில், மல்லிகா, தனது மருமகளைப் புரிந்து செய்த ஏற்பாட்டை நினைத்து மனம் லேசானது.

“தான் தான் அவளைப் புரிந்து கொள்ளவில்லையோ?” என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவனது செல்போன் இசைக்க, அதை எடுத்துப் பேசியவன், அவசரமாக தனது அலுவலக பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மல்லிகாவுடன் பேசிக் கொண்டே இருந்த ஷிவானி, மல்லிகா அவளுக்கு காபி போட்டுக் கொடுக்கவும், “இருங்க அத்தை… நான் அவருக்கு காபி வேணுமான்னு கேட்டுட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு, அறைக்குச் செல்ல, அங்கு புகழைத் தேடியவள், தனது அறையில் இருந்து வெளியில் வந்த சித்ராவிடம்,

“அண்ணி… இனியன் எங்க காணும்…” என்று இயல்பாகக் கேட்க,

“அவன் அப்போவே பையைத் தூக்கிட்டு கிளம்பிட்டானேம்மா… ஆபீஸ்க்கு தான் போயிருப்பான்…” என்று சித்ரா சொல்ல, ஷிவானிக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அவளது முகம் சுருங்கி விட,

“என்கிட்டே சொல்லவே இல்லயே அண்ணி…” என்று அவள் முணுமுணுக்கவும்,

“அவனுக்கு இந்த மாதிரி சொல்லிட்டு போறது பழக்கம் எல்லாம் இல்லமா… அவனோட அரவம் இல்லாம இருக்கறதை பார்த்து அவன் வீட்ல இல்லன்னு தெரிஞ்சிப்போம்…” என்று சித்ரா தங்களது வழக்கத்தைச் சொல்ல, வெளியில் கிளம்பும் பொழுது, பலமுறை, ஒவ்வொருவராக தேடி சென்று, சொல்லிவிட்டுச் செல்லும் வழக்கத்தை உடைய வீட்டில் இருந்து வந்த ஷிவானிக்கு மனதில் சுருக்கென்று ஒரு வலி எழவே செய்தது.

“இவங்க எல்லாம் பழகினவங்க தான்… நான் இந்த வீட்டுக்கு புதுசு இல்ல.. இப்போ தானே என்னை கூட்டிட்டு வந்தார்.. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல…” மனதில் வருந்திக் கொண்டவள், உடனேயே,

“ஹ்ம்ம்… இங்க யார் கிட்டயும் சொல்லிட்டு போற பழக்கமே இல்லாத போது… என்கிட்டே மட்டும் சொல்லிட்டு போற பழக்கம் எப்படி வரும்?” என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவள், மல்லிகா, சித்ராவுடன் அரட்டை அடித்துக் கொண்டே, அவர்கள் செய்யும் சமையலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க,

“சிவா.. புகழ் உன்கிட்ட நல்லா பேசி பழகறானா?” என்று மகனது குணம் தெரிந்து மல்லிகா பேச்சைத் தொடங்க,

“நல்லா தானே பேசறார்.. சில சமயம்… அவர் தான் இப்படி பேசறாறாங்கற அளவுக்கு என்னை கிண்டல் செய்யறாரு அத்தை.. இப்போ தானே கல்யாணம் ஆகி இருக்கு… கொஞ்சம் கொஞ்சமா கலகலப்பா மாத்திடலாம்..” என்று அவள் சொன்னதைக் கேட்ட மல்லிகா சந்தோஷமாக புன்னகைத்தார்.

“ஹப்பாடி… இப்போ தான் மனசு லேசா இருக்கு…” என்று அவர் சொன்னதைக் கேட்ட ஷிவானி, வெங்காயத்தின் தோல்களை உரித்துக் கொண்டிருக்க,

“அவன் மதியம் சாப்பிட வரானான்னு போன் செய்து கேளு…” என்று மல்லிகா சொல்லவும், அவனிடம் பேச சந்தோஷமாக ஷிவானி போனை எடுத்து அழைக்க, ‘என்னடா இது?’ என்று நொந்து கொள்ளும் அளவிற்கு புகழ் போனில் பேசினான்.

“ஹலோ… என்னங்க.. மதியம் சாப்பிட வரீங்களா?” ஷிவானியின் கேள்விக்கு,

“ம்ம்…” என்ற ஒற்றைச் சொல்லை அவன் பதிலாகத் தர,

“வரீங்க தானே…” மீண்டும் அவள் உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்க,

“ம்ம்…” மீண்டும் அதே ஒற்றைச் சொல்லைக் கேட்ட ஷிவானி, அவன் என்ன சொல்ல வருகிறான் என்றே புரியாமல்,

“சரி… நீங்க வரேன்னு சொன்னீங்கன்னு அத்தைகிட்ட சொல்லிடறேன்… சீக்கிரம் வாங்க..” என்றுவிட்டு போனை அணைத்தவள், ஒரு பெருமூச்சுடன்,

“இப்படி தான் இவர் போன்ல பேசுவாரோ? இதுக்கு பேசாம நாம மெசேஜ்ல பேசிடலாம் போல இருக்கே… அதையும் ட்ரை பண்ணிப் பார்த்துடலாம்…” என்று நினைத்துக் கொண்டவள், அவன் சாப்பிட வரும் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மீண்டும் மல்லிகாவிற்கு உதவத் தொடங்கினாள்.

அலுவகத்தில் அமர்ந்து பேசியவனை கிண்டல் செய்யத் தொடங்கிய விக்ரம், “என்ன புகழ்… நாங்க இருக்கறதுனால சிஸ்டர்கிட்ட இப்படி பேசறியா என்ன?” என்று கேட்க,

“எப்பவும் போல தானே பேசறேன்…” என்ற புகழின் பதிலைக் கேட்ட விக்ரம் தலையில் அடித்துக் கொண்டான்.

“சரி… அன்னைக்கு சினிமா போனியே… எப்படி இருந்தது?” ஆவலுடன் மற்றொருவன் கேட்க,

“அங்க போய் நான் தூங்கிட்டேன்டா…” புகழ் சொன்னதைக் கேட்டு அவன் தலையில் கை வைத்துக் கொள்ள,

“அவ தான் பாவம்… வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லிட்டே இருந்தா… அப்பறம் ஒருவழியா சமாளிச்சு படம் பார்த்துட்டு வந்தோம்…” என்று புகழ் சொல்லவும், விக்ரம் என்ன சொல்வதென்று புரியாமல் அமர்ந்திருந்தான்.

“புகழ்… நீ உன்னை கொஞ்சம் மாத்திக்கோடா… ஷிவானி கொஞ்சம் துறுதுறு பொண்ணு… நீ இவ்வளவு அமைதியா இருந்தா அவளோட நிலைமையை யோசி…” விக்ரம் மெல்ல எடுத்துச் சொல்ல, அதைக் கேட்ட புகழ்,

“அவ என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்காடா… அதனால கவலை இல்ல..” என்று புகழ் நம்பிக்கையாச் சொல்ல,

“புரிஞ்சிக்கறது வேற… இது வேற புகழ்… ரொம்ப அமைதியா இருக்காதே… அவளுக்கு அப்பறம் ஒரு மாதிரி இருக்கும்…” விக்ரம் எப்படி சொல்வது என்று புரியாமல் திகைத்து நிற்க,

“சரிடா… நான் அந்த அம்பாள் ஸ்ட்ரீட் கஸ்டமர் வீட்டுக்கு போயிட்டு வரேன்… அவங்க காலையில இருந்து நாலு தடவ கால் பண்ணிட்டாங்க… வந்து நாம இந்த வீக் ஆர்டர்ஸ் பார்த்துட்டு… நம்ம புது பிஸினெஸ் பத்தி பேசலாம்…” என்று சொல்லிக் கொண்டே எழுந்து செல்ல, இப்படி பாதி பேச்சில் தன் வேலையை மட்டுமே முக்கியமாக எண்ணி, அதே நினைப்புடன் செல்பவனை விக்ரம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

புகழ் நல்லவன் தான்.. ஷிவானியின் மீது நிரம்ப அன்பை வைத்திருப்பவன் தான்… ஆனால் அவனது இந்த அமைதியான குணம், ஷிவானிக்கு போர் அடித்து, ‘என்னடா வாழ்க்கை’ என்று சலித்து விடக் கூடாதே என்ற கவலை விக்ரமிற்கு எழவே செய்தது… அதை வெளிப்படையாக அவனிடம் சொல்லவும் முடியாமல் அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்பதே விக்ரமிற்கு பெரும் கவலையாக இருந்தது.

புகழ் சொன்னது போலவே வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வந்ததும், தங்களது புது தொழிலைப் பற்றி பேசிவிட்டே வீட்டிற்கு கிளம்ப, மதிய உணவு நேரத்தைத் தாண்டி, மணி நான்கை கடந்து சென்றுக் கொண்டிருந்ததைப் பார்த்த விக்ரம் ஒரு பெருமூச்சுடன் அவனை அனுப்பி வைத்தான்.

“என்ன சிவா… புகழ் வரேன்னு சொன்னானா?” என்று ,மல்லிகா சந்தேகமாகக் கேட்க,

“ஆமா அத்தை… வரேன்னு தான் சொன்னார்…” என்று ஷிவானி பதில் சொல்ல,

“சரிம்மா… அவன் வரப்படி வரட்டும்… நீ இப்போ சாப்பிடு… மணி இப்போபே மூணாக போகுது…” என்று மல்லிகா வற்புறுத்த,

“இல்ல அத்தை… இன்னைக்கு தான் இங்க நான் வந்திருக்கற முதல் நாள்… அவர் கூட சேர்ந்து சாப்பிடறேனே… இல்ல அவருக்கு போட்டுட்டு நான் சாப்பிடறேன்…” ஆசையாக அவள் சொல்ல, அவளது ஆசையை புரிந்துக் கொண்ட மல்லிகாவும் அவளது இஷ்டப்படியே புகழ் வந்ததும் உண்ண சம்மதித்தார்.

மணி நான்கை கடந்த வேளையில், ஷிவானியின் பெருங் குடலை சிறு குடல் தின்றுக் கொண்டிருந்த வேளையில் வீட்டிற்குள் நுழைந்த புகழ், “அம்மா… ரொம்ப பசிக்குது… சாப்பாடு எடுத்து வைங்க…” என்று குரல் கொடுக்க, அவனது குரலைக் கேட்டதும், ஷிவானி அரக்க பரக்க உணவை எடுத்து வைக்க, கைகளைக் கழுவிக் கொண்டு வந்தவன்,

அவளை “சாப்டியா?” என்ற ஒரு வார்த்தை கேளாமல், அவள் வைத்திருந்த உணவை வேக வேகமாக உண்ணத் துவங்க,

“புகழ்… இன்னும் சிவா…” என்று தொடங்கிய மல்லிகாவை, கண் காட்டி,

“ரொம்ப பசி போல அத்தை… அவர் சாப்பிட்டதும் சாப்பிடறேன்…” என்று ஷிவானி முணுமுணுக்கவும், மல்லிகா அமைதியானார்.

புகழ் உண்டு முடித்ததும், தனக்கான உணவை தட்டில் போட்டுக் கொண்டு ஷிவானி உண்ண அமர, மல்லிகா அவளுக்கு உணவு பரிமாற, மீண்டும் புகழ் பையுடன் வெளியில் கிளம்புவதைப் பார்த்த ஷிவானிக்கு தொண்டையடைத்து, உணவு உள்ளே இறங்க மறுத்தது…

14 COMMENTS

  1. romba wait panna episode mam. intha update padikkirappo eno nenjula baarama irukka mathiri irunthathu. nice update. waiting for the next update. apram thendral panbalai oda 26th and 27 th update link kodunga mam. recent ah than ungaloda vizhiyora kavithaigal padichen. romba pidichathunala thiruppi thiruppi read pannite irukken. became die hard fan of Vizhiyora kavithaigal and your novels and words especially the poem before the starting of every upd

  2. Soooo pity Shiva.. Indha plot parka romba simple ah therinjalum , romba sensitive aanadhu.. En friend husband kooda pesave maataru.. But romba nalla parthupanga.. But en friend pesaradhe koranjidichi.. Felt bad for her.. Adhu avanga nature naama onnum pana mudiyadulla..

  3. pugazh .. perula mattum thanaa… po paa.. paavam shiva…………….. ava unna nalla purinju vachurkkaa. aana nee…..avala purunji vachurkiyaa enna… oruu bye sollitu pona.. un thathu property kuranjaa poitum….. nee feel pannathey da shiva.. avanukku…mandaila naalu adi hammer la potturlaammmmmmmmmmmmmmm………………………

  4. Appadiye 18yrs munnadi en husbanda thirumbi paartha mathiriye iruku ramya… innum maarala… avaruku thaguntha maari naan maariten… ethaiyum ethir paakama irukarathula… inga enna nadaka poguthunu paarka aavala iruken… take care of ur health…

LEAVE A REPLY