SHARE

உன் புன்னகை சொல்லாத 

ஓராயிரம் அர்த்தங்களை 

உன் மௌனம் சொல்லுதே 

எதனால் கண்மணியே!! 

 

புகழின் குரல் அருகில் கேட்கவும், ஷிவானியின் இதயம் தடதடக்கத் தொடங்கியது. “தூங்கிட்டயா?” மீண்டும் புகழ் கேட்கவும், அவளை அறியாமலே ‘ம்ம் ஹும்…” என்று பதிலைக் கொடுத்தாள்.

“பால் குடிக்கலையா?” மேலும் அவளை நெருங்கிக் கேட்க,

“வேண்டாம்… பசிக்கல…” எழிலை விழுங்கிக் கொண்டு அவள் சொல்லவும், அவளது கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தவன், அவளை அணைத்துக் கொள்ள, பயம் பாதியும், அவனது அணைப்பின் மகிழ்ச்சி மீதியுமாக அவன் கை வளைவிற்குள் வந்தவள், அவனது சட்டையை இறுக பற்றிக் கொள்ள, அவளது முகத்தில் இதழ்களைப் பதித்து அவளது பதட்டத்தை குறைத்து, புகழ் தனது தேடலைத் தொடங்க, ஷிவானி அவனிடம் தஞ்சம் புகுந்தாள்.

நிலா மகள் விடைப்பெற்று, சூரியக் கதிர்கள் மெல்ல சோம்பலை முறித்து மேகத் திரைக்கு பின்னால் இருந்து எட்டிப்பார்க்க, பறவைகள் கூட்டை விட்டு வெளியில் வந்து, தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து, தங்கள் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.

அறையில் சூரிய ஒளியே புகாதவாறு இருந்த திரையை தகர்க்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தன சூரியக் கதிர்கள். புகழின் கைவளைவில் நன்றாக ஒட்டிக் கொண்டு, அவனது மார்பில் தலை சாய்த்து துயில் கொண்டிருந்த ஷிவானி, சுகமாக உறங்கிக் கொண்டிருக்க, வழக்கம் போல, காலை ஆறு மணிக்கே விழிப்பு வந்த புகழ், அவளது உறக்கத்தைக் கலைக்காமல், அசையாமல் படுத்திருந்தான்.

அவனது கண்கள் அவளது உறங்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்க, இதழ்களோ, அவளது நெற்றியில் பதிந்துக் கொண்டிருந்தது.

“வனி…” மெல்லிய குரலில் அவளை அழைத்து, அவனது கை அவள் தோளை அழுத்த, ‘ஹ்ம்ம்…ஸ்..’ என்று சிணுங்கியவள்,

“எனக்கு தூக்கம் வருது…” என்று திரும்பிப் படுக்க, அவளை விட்டு விலக மனமில்லாதவன், மீண்டும் அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.

நொடிகள் நிமிடங்களாகக் கரைவதை உணர்ந்தவன், எவ்வளவு நேரம் இப்படியே படுத்திருப்பது என்றும் யோசித்தான். ‘வெளியில் சென்றும் வேலை இல்லையே…’ என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் உறங்க முயல, அவனை உறங்க விடாமல், ஷிவானி மீண்டும் அவன் பக்கம் திரும்பிப் படுக்க, மீண்டும் தனது பார்க்கும் பணியை அவன் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

மேலும் சில நிமிடங்கள் இப்படியே கடக்கவும், அறையின் கதவு தட்டப்பட்டது. ‘எழுந்து சென்று கதவைத் திறக்கலாமா?’ தயக்கத்துடன் புகழ் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “அம்மா… ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் தூங்கறேன்… தூக்கம் தூக்கமா வருது… இன்னைக்கு காலேஜ் லீவ் தானேமா” என்று ஷிவானி இருக்கும் இடம் உணராமல் கத்த, புகழின் தோள் வளைவில் முகம் பதித்திருந்தவள் கத்தவும், புகழின் காதுக்குள் ‘கொய்ங்’ என்ற ரீங்காரம் பாடத் துவங்கியது.

“சப்பா… எப்படி கத்தறா பாரு… இவ இப்படி கத்தினா அம்மா ரொம்ப பயந்துடுவாங்க…” சிரிப்புடன் அவன் நினைத்துக் கொண்டிருக்க, மீண்டும் கதவு தட்டப்படவும்,

“என் காது தாங்காது… இவ கத்தறதை கேட்கறதுக்கு பேசாம நாமளே போய் திறந்துடலாம்…” என்று நினைத்தவன், அவளை மெல்ல தலையணையில் கிடத்தி விட்டு கதவைத் திறக்க, அங்கு நின்றிருந்த சசியும் சித்ராவும் அவனைப் பார்த்து முழித்தனர்.

சசி அமைதியாக நிற்க, சித்ரா முதலில் சுதாரித்து, “டைம் ஆச்சு புகழ்… குளிச்சு சாப்பிட்டு கோவிலுக்கு போக சரியா இருக்கும்… கொஞ்சம் சீக்கிரம் ரெடி ஆகி வாங்க…” என்று சொல்ல,

“பாவம்க்கா… நல்லா தூங்கிட்டு இருக்கா…” புகழ் தயக்கமாக இழுக்க,  

“நீங்க வேற மாப்பிள்ளை… அவளை விட்டா சாயந்திரம் வரை தூங்குவா… பாவம் பார்க்காம எழுப்பி விடுங்க…” சசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பேச்சுக் குரல்கள் கேட்டு விழித்திருந்த ஷிவானி, சசியைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, சசியின் பார்வையோ அவளைக் குற்றம் சாட்டியது.

சசியின் பார்வையைக் கண்டவன், திரும்பி ஷிவானியைப் பார்க்க, அவளோ பத்திரக்காளியின் மறு உருவம் போல சசியை முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த புகழின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“நாங்க சீக்கிரம் கிளம்பி வரோம் அத்தை… நீங்க கவலைப்படாதீங்க…” என்று சொல்லி அவர்களை அனுப்பியவன், ஷிவானியை நோக்கித் திரும்ப,

“அம்மா என்னைத் திட்டினா உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குதோ? அப்படியே முகம் முழுசும் சிரிப்பா இருக்கு… இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்… நீங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்…” ஷிவானி பொரிந்துத் தள்ள, புகழ் அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

“என்ன செய்வீங்க தானே…?” அவள் உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்க,

“என்ன செய்யணும்ன்னு சொல்லிட்டா… நானும் அதையே செய்துடுவேன்…” என்று சாதுவாக அவன் கேட்கவும்,  

“எங்க அம்மா ஏதாவது சொன்னா… ‘அதெல்லாம் இல்ல அத்தை… ஷிவா சின்னப் பொண்ணு… நல்ல பொண்ணு… திட்டாதீங்க’ன்னு சொல்லணும். இப்படி நின்னு சிரிச்சிட்டு இருக்கக் கூடாது..” என்று அவள் விரல் நீட்டி சொல்லவும், புகழ் அவளது விரலைப் பிடிக்க, ஷிவானியின் வாய் மூடிக் கொண்டது.

விரலை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டே, விழிகள் விரிய அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவளது விரல்களை விட்டு, “எங்க அம்மா இப்படி உன்னைச் சொன்னாங்ன்னா நான் என்ன சொல்லணும்? அதுவும் கொஞ்சம் சொல்லேன்..” புகழ் வம்பு வளர்க்க,

“அத்தை…. அத்தை…” என்று சிறிது நிதானித்தவள், “அத்தை ரொம்ப நல்லவங்க… என்னைத் திட்ட மாட்டாங்க… நான் நல்ல பொண்ணா நடந்துப்பேன்…” வாக்குறுதி கொடுத்தவளின், நெற்றியில் இதழ் பதித்தவன்,

“இப்போ உங்க அம்மாவை முறைச்ச மாதிரி எல்லாம் செய்துடாதே… எங்க அம்மா பயந்துடுவாங்க… பாவம்…” என்று அவன் கிண்டல் செய்யவும், அவனை ஒருமாதிரிப் பார்த்தவள்,

“இதுக்கு மட்டும் நீங்க வாய் பேசறீங்க பாருங்க… இந்த ஷிவான்னா அப்படிப் போச்சு… நானும் அமைதியா இருக்கப் போறேன் பாருங்க… நீங்களும் பேசு பேசுன்னு கெஞ்சணும்..” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் சொன்னதை நினைத்துச் சிரித்தவன், தலையை இடமும் புறமும் ஆட்டிக் கொண்டு, தனது மொபைலில் இருந்து ஒரு மெசேஜய் அனுப்பிவிட்டு, தானும் தயாராக எத்தனித்தான்.

ஷிவானி குளித்து வெளியில் வந்தும், அவள் அமைதியாக இருக்க, அவளைப் பார்த்துக் கொண்டே அவனும் குளிக்கச் சென்றான்.

ஷிவானி தயாராகி வெளியில் செல்லவும், அவளுக்காகவே காத்திருந்த சசி, “என்ன சிவா… இப்பவுமா கும்பகர்ணி மாதிரி தூங்குவ… மாப்பிள்ளை கதவைத் திறக்கவும் ஒரு மாதிரி ஆச்சு..” என்று புலம்ப,

“சரி விடும்மா… என்னவோ இன்னைக்கு திறந்துட்டார்… நாளைக்கு நான் திறக்கறேன் சரியா… இல்லன்னா வா… நான் மறுபடியும் ரூமுக்கு போறேன்… வந்து கதவைத் தட்டு.. நானே திறக்கறேன்…” என்று இடக்கு பேச, சசி அவளை முறைத்தார்.

“சும்மா முறைக்காதேம்மா… எனக்கு இன்னும் தூங்கணும் போல இருக்கு… கோவிலுக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடலாம் இல்ல… மதியமாவது நல்லா தூங்கறேன்மா…” பாவமாக அவள் கேட்கவும், அவளைப் பார்த்து சிரித்த சசி, எதுவும் பேசாமல் அவளையே கூர்ந்துப் பார்த்தார்.  

அவரது பார்வையில், அவள் தலை தானாக தாழ, அதற்கு மேல் எதுவும் பேசாமல், “சரி… காபி போடறேன்… கொண்டு போய் மாப்பிள்ளைக்கு கொடு… மொதல்ல நீயும் குடி…” சசி சொல்லவும்,

“எனக்கு எப்படி போடறதுன்னு சொல்லும்மா… அவருக்கு நானே போடறேன்…” என்று அவள் சொன்னதைக் கேட்ட சசி, அவளை அதிசயமாகப் பார்க்க,

“ஏதோ கொஞ்சம் திருந்தலாம்ன்னு பார்க்கறேன்.. வேண்டாமா?” என்று அவள் கிண்டலாகக் கேட்டாலும், அவளது முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்தவர், அவளது கன்னத்தை வழித்து கொஞ்சி விட்டு, அவளுக்கு காபி போடச் சொல்லித் தர, அவளும் மிகுந்த கவனத்துடன் கற்றுக் கொண்டாள்.

சந்தோஷத்துடன் காபியைப் போட்டு எடுத்துக் கொண்டு புகழைத் தேடிச் செல்ல, அவளது சிஸ்டத்தில் அமர்ந்து, எதுவோ பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் காபி கப்புடன் வரவும், அவளை நிமிர்ந்துப் பார்த்தவன், புருவத்தை உயர்த்த,

“நானே காபி போட்டு எடுத்துட்டு வந்தேன்… ஃபர்ஸ்ட் டைம் போட்டு இருக்கேன்… இந்தாங்க… குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க…” என்று நீட்ட, புகழ் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“என்னங்க இப்படி பார்க்கறீங்க?” ஷிவானி கேட்டுக் கொண்டே, தன்னிடம் இருந்த கப்பை அவனிடம் நீட்ட, அதை எடுத்துக் கொள்ளாமல் தயங்கியவன்,

“நீயே போட்டு நீ குடிச்சியா?” என்று கேட்க,

“ம்ம்… எனக்கு அம்மா கலந்து வச்சிருந்தாங்க… நான் குடிச்சிட்டு தான் உங்களுக்கு எடுத்துட்டு வந்தேன்… எப்படி இருக்குன்னு சொல்லுங்க…” ஆசையுடன் அவள் நீட்ட, சிறிது பயத்துடனே அதை வாங்கி ஒரு மிடறு குடித்தவன், சுவை நன்றாக இருக்கவும், எதுவும் பேசாமல் குடித்து முடித்தான்.

அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் எதுவும் பேசாமல் குடித்து முடிக்கவும், “நல்லா இருக்கா?” ஆவலாகக் கேட்க,

“ம்ம்..” என்றவன், கப்பை அவளிடம் நீட்டிவிட்டு, மீண்டும் அந்த சிஸ்டத்தில் எதையோ குடைந்துக் கொண்டிருக்க, முன்தினம் பெருமையாக அவள் நினைத்த அவளது சிஸ்டம் இப்பொழுது எதிரியாகத் தெரிந்தது.

“இப்போ இந்த சிஸ்டம்ல என்ன செய்யறீங்க?” அவள் கேட்கவும்,

“அது தான் வொர்க் பண்ணலைன்னு சொன்ன இல்ல… அது தான் என்னன்னு பார்த்துட்டு இருக்கேன்..” என்றவன், பேச்சு முடிந்தது என்பது போல கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, சிஸ்டமில் பார்வையை பதித்தான்.

“இப்போ ரொம்ப முக்கியம்…” என்று அவனிடமே சிடுசிடுத்தவள்,

“நல்லா இருக்குன்னு வாயைத் திறந்து சொன்னாத் தான் என்ன?” என்று முணுமுணுத்துக் கொண்டவள், வெளியில் சென்று,

“நாம போட்டது அவ்வளவு நல்லா இல்லையோ? மனசு நோகக் கூடாதுன்னு ஒருவேளை ‘ம்ம்’ன்னு சொல்லி சமாளிச்சிட்டாரோ?” என்று யோசித்தவள், அந்த கப்பில் மீதம் இருந்த காபியை ருசி பார்த்து,

“வாவ்… ஷிவா… ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்டே சக்செஸ்… நல்லா தான் இருக்கு…” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே, நகர்ந்துச் செல்ல, அவளிடம் எதையோ கேட்க வந்த புகழ் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

மனம் நிறைந்து அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்ராவின் கண்களில் கண்ணீர் தளும்பியது.

சித்ராவின் கணவன் அவளது நிலை புரிந்து, அவளது தோளை அழுத்த, “புகழ் இனிமே சந்தோஷமா இருப்பான்ங்க…” என்று மகிழ்ந்தாள்.

காலை உணவை அனைவரும் சாப்பிட அமரவும், ஷிவானி புகழை அழைக்க, “நீயா செய்த?” அவன் கேலியாகக் கேட்கவும்,

“இல்ல… இல்ல… அப்பறம் அதை யாரு சாப்பிடறது? நீங்க பயப்படாம வாங்க… அம்மா தான் செய்தாங்க… நம்ம வீட்டுக்கு போய் உங்களுக்கு பிடிச்சது எல்லாம் செய்து தரேன்…” சமாதானமாக அவள் சொல்லவும், அதைக் கேட்டவன், பெருமூச்சை வெளியிட்டான்.

“அது தான் செய்து தரேன்னு சொல்றேன் இல்ல… இப்போ வாங்க வந்து சாப்பிடுங்க…” சிரித்துக் கொண்டே அவள் அழைக்கவும், புகழ் அவளோடு நடக்க, ஷிவானி வாயைப் பொத்தி கொண்டு சிரித்தாள்.

“இப்போ எதுக்கு சிரிக்கிற?” சந்தேகமாகப் பார்த்துக் கொண்டு அவன் கேட்க,

“இல்ல… ஷிவானின்னா எப்பவுமே ஒரு பயம் இருக்கனும்… அது உங்ககிட்ட லைட்டா வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்… அதை நினைச்சேனா சிரிப்பு வருது.. என்ன செய்யறது?” அவள் பேசிக் கொண்டே போக, புகழ் அவளை முறைத்தான்.

“சரி… நாம சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வந்து தூங்கலாம்ங்க… ப்ளீஸ்…” என்று அவனது முறைப்பை டீலில் விட்டு, சிறுகுழந்தையாய் மாறி கெஞ்ச,

“சரி… நீ போய் எடுத்து வை… நான் ஒரு ரெண்டு நிமிஷத்துல வரேன்… விக்ரம் போன் பண்றான்…” என்றவன், உடனே விலகிச் செல்லவும்,

“ஆமா… ஆமா… இவரு ‘ம்ம்… ம்ம்’ன்னு சொல்லப் போறாரு… அந்த அண்ணா மட்டும் பேசப் போறாங்க… இதுல இவரு எதுக்கு தனியா போறார்…” என்று நினைத்தவள், அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு, உணவு அறையை நோக்கி செல்ல, அவளைத் திரும்பிப் பார்த்த புகழ், ‘கொழுப்பைப் பாரு…’ என்று செல்லம் கொஞ்சி, விக்ரமுடன் பேசத் துவங்கினான்.

காலை உணவை முடித்துக் கொண்டு, அவர்கள் கிளம்பத் தயாராக, மல்லிகாவும் அவர்களுடன் வந்து இணைந்துக் கொண்டார்.

“அத்தை… காபி போட்டுத் தரவா?” அவரைப் பார்த்ததும் ஷிவானி கேட்க,

“எங்க அம்மா பாவம் வனி… வேண்டாம் விட்டுடேன்…” புகழ் அவளிடம் வம்பு பேச, மல்லிகா அவனை ஆச்சரியமாகப் பார்த்து, கண்கலங்கினார்.

“காலையில நான் போட்ட காபி குடிச்சீங்க தானே… அது உங்களுக்கு ஒண்ணும் பண்ணல தானே… அப்போ அத்தைக்கும் ஒண்ணும் பண்ணாது…” என்று ஷிவானி புகழிடம் சொல்லிவிட்டு,

“அத்தை அதெல்லாம் சும்மா சொல்றாங்க.. நான் நல்லா தான் போட்டேன்… வேணா உங்களுக்கும் தரேன்… நீங்க குடிச்சுப்பாருங்க… இவருக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு…” என்றவள், ரோஷமாக சென்று அவருக்கும் காபியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“வேண்டாம்மா.. சொன்னா கேளுங்க…” புகழ் சிரித்துக் கொண்டே எச்சரிக்கை செய்ய,

“நீங்க குடிங்க அத்தை…” என்று ஷிவானி வம்புக்கு நீட்ட, மல்லிகா அவள் கையில் இருந்த கப்பை வாங்கிக் கொண்டார். அவரது முகத்தைப் பார்த்த புகழுக்கும் சிரிப்பு வரவே செய்தது. புகழ் மல்லிகாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, மல்லிகா ஆசையாக அதைப் குடித்து முடித்தார்.

“நல்லா போட்டு இருக்கா புகழ்… இப்போ நீ எதுக்கு சிரிக்கற?” என்று அவனை கண்டித்தவர்,

“ரொம்ப நல்லா இருக்குடா ஷிவா… நீ நம்ம வீட்டுக்கு வா… நானே உனக்கு சமையல் எல்லாம் சொல்லித் தரேன்…” என்று அவரும் கொஞ்ச, புகழ் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருவழியாக கோவிலுக்குச் சென்றவர்கள், சாமியை தரிசித்துவிட்டு, வீட்டிற்கு திரும்புகையிலேயே, ஷிவானி புகழின் தோளில் சாய்ந்து உறங்கத் துவங்க, புகழ் அவளது உறக்கம் கலையாதவாறு பார்த்துக் கொண்டான்.

வீட்டிற்கு வந்ததும், “எனக்கு தூக்கம் வருது…” மீண்டும் ஷிவானி தொடங்க,

“சாப்பிட்டு போய் படு சிவா… கொஞ்சமாவது கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி நடந்துக்கோ… எல்லாரும் இருக்கும் போது சின்னப் பிள்ளை மாதிரி நடந்துக்காதே… உன்னை குறை சொல்ல மாட்டாங்க… என்னைத் தான் வளர்த்திருக்கா பாருன்னு சொல்லுவாங்க..” என்று சசி அவளிடம் சொல்லவும், ஷிவானியும் அமைதியாகி,

“இப்போ என்ன செய்யணும்னு சொல்லு…” என்று கேட்டாள்.

“எல்லோருக்கும் இலை போடு… பசிக்கும்…” என்று சொன்னவர், அவளது கையில் இலையைக் கொடுக்க, அதை எப்படி போடுவது என்று தெரியாமல் அவள் முழிக்க, அவள் முழிப்பதைப் பார்த்த மல்லிகா அவளுக்கு சொல்லித் தர, ஷிவானியும் பொறுப்பாக கற்றுக் கொண்டு, சசிக்கு உதவத் தொடங்கினாள்.    

பொறுப்பாக அவள் வேலை செய்வதைப் பார்த்த புகழுக்கு என்னவோ போல் இருந்தது. அவன் வரும்பொழுது எல்லாம் அவளது அறையை அவன் பார்த்து இருக்கிறான்… ஒன்று ஏதாவது தீனியைத் தின்றுவிட்டு, அந்த தட்டு அப்படியே சிஸ்டம்மின் அருகில் இருக்கும்… அல்லது காபி குடித்த கப் காய்ந்து போய் இருக்கும்… அதுவும் இல்லையா… அவளது கிளிப்புகளும், புக்குகளும் அங்கும் இங்கும் இறைந்திருக்கும்.

என்றுமே அவளது அறை நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்ததில்லை… அப்படி இருந்தவள், இப்பொழுது வேலை செய்வதைப் பார்த்து, சிறிது மனம் சுனங்கினான்.

“சிவா… தூக்கம் வருதுன்னு சொன்ன இல்ல… சீக்கிரம் சாப்பிட்டு போய் படு…” புகழ் சொல்லவும்,

“இல்லைங்க… அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்…” என்று சொல்லிவிட்டு, சசி சொல்லும் வேலைகளை செய்தாள்.  

மல்லிகா விடைப்பெற்றுச் சென்றவுடன், “அம்மா… இதுக்கும் மேல முடியாதும்மா… ரொம்ப டயர்ட்டா இருக்கு…” அழுவது போல சிவா சொல்ல, அவளைப் பார்க்க சசிக்கும் பாவமாக இருக்கவும்,

“சரி… போய் படு… நான் கூப்பிட்ட உடனே எழுந்து வா… சரியா…” என்று சசி சொல்லவும், தலையாட்டிச் சென்றவள், களைப்பாக அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள்.  

அவள் கண்கள் சொருகுவதைப் பார்த்த புகழ், “ஷிவா… ஒரு நிமிஷம்..” என்று அழைத்து, அவளது நெற்றியில் இதழ் பதிக்க,

“எனக்கு ரொம்ப தூக்கமா வருது இனியன்… ப்ளீஸ்… நான் தூங்கறேனே..” அவள் கெஞ்சவும், அவனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

“இல்ல சிவா… இது உனக்கு பிடிக்கும்.. ஒரே நிமிஷம்… அப்பறம் நீ தூங்கு…” என்று அவன் சொல்ல,

“சரி… என்னன்னு சொல்லுங்க…” என்று கண்களைத் திறந்தவள், அவனைப் பார்க்க, அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன், அவளிடம் தனது செல்போனைக் காட்ட, அதைப் பார்த்தவளின் கண்கள் விரிந்தது….

“நிஜமா… நிஜமாவா…” கண்களில் இருந்த தூக்கம் துணி கொண்டு துடைத்தார் போல மாறிவிட,

“நிஜமா போகப் போறோம்… ஓகே வா… இப்போ நீ தூங்கு…” என்று புகழ் சொல்லவும், எட்டி அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள்,

“அப்படியே அந்த ஸ்க்ரீனை எல்லாம் இழுத்து விட்டு நீங்களும் தூங்குங்க… நல்ல இருட்டா இருக்கும்… தூக்கமும் சூப்பரா வரும்…” என்று சொன்னவள், சில நிமிடங்களிலேயே உறங்கிப் போக, ஏ.சி.யை ஆன் செய்தவன், மீண்டும் சிஸ்டமின் அருகே சென்று அமர்ந்தான்.

17 COMMENTS

  1. rasumaa… semma ud… en room too ippidi thaan window ellam… close seithuttaa.. appidi oru thuukkam varum paarunga…………………… che chance illaiy..

    aama enga poraainga rendu perum… ??????

LEAVE A REPLY