SHARE

 

Here goes the fourth episode of the story … Shows shivani’s love towards pugazh. 

சொல்ல நினைக்கும் வார்த்தைகள் எல்லாம்
தொண்டைக் குழியில் சிக்க
எல்லா தருணங்களிலும்
மௌனம் காணும்
என் நாணமும்
மொழியும் !!

“என்ன சிவா… இங்க என்ன பண்ணிட்டு இருக்க? போய் கொஞ்ச நேரம் படுக்கலாம் தானே… காலையில சீக்கிரம் எழுந்தது…” சசி அவளை படுக்கச் சொல்ல, ஷிவாவோ முழித்துக் கொண்டு நின்றாள்.

“என்னடி இப்படி நிக்கற? போய் படு…” அவர் வற்புறுத்த,

“அது தான் கார்ல வரும்போதே நல்லா தூங்கிட்டேனே… இப்போ தூக்கம் வரலைம்மா… நான் என்ன செய்யட்டும்?” அவள் கேட்டுக் கொண்டு நிற்கும் போதே, பாஸ்கருடன் பேசிக் கொண்டிருந்த புகழ் அவளை நிமிர்ந்துப் பார்க்க,

“மாப்பிள்ளை இருக்கும் போது இப்படி வம்பு பண்ணிக்கிட்டு நிக்காதே… அப்பறம் அவர் தப்பா எடுத்துக்கப் போறார்…” என்று சசி சொல்லவும்,

“ஹ்ம்ம்… போம்மா…” என்று வேகமாக அறைக்குள் புகுந்தவள், படுத்து கண்களை மூடிக் கொண்டாள். உள்ளே வேகமாக போகும் ஷிவானியைப் பார்த்த புகழுக்கு இதழ்களில் மெல்ல புன்னகை எட்டிப்பார்த்தது.

“என்ன புகழ்… எதுக்கு அவளைப் பார்த்து சிரிக்கறீங்க?” பாஸ்கர் கேட்கவும்,

“இல்ல மாமா… சும்மா தான்…” என்ற புகழ் தயக்கத்துடன் அவரைப் பார்க்க, பாஸ்கரும் புன்னகைத்து,

“இன்னும் சின்ன பிள்ள போலவே இருக்கணும்னு நினைக்கிறா… கொஞ்ச நாள் ஆனா சரியா போயிடும்…” பாஸ்கர் சொன்னதைக் கேட்ட புகழ், சிரித்தாலும், மனதில்,

“அவ இப்படியே இருக்கட்டும்… அது தான் நல்லா இருக்கு…” என்று நினைத்துக் கொண்டான்.  

உள்ளே சென்ற ஷிவானிக்கு, உறங்க முடியாமல், புகழின் நினைவுகள் மெல்ல ஆட்க்கொள்ள, எழுந்து தனது சிஸ்டமின் அருகே சென்றவள், அதன் அடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை வருடிக் கொடுத்தாள்.

‘A-Z ஹோம் நீட்ஸ்’ என்று ஒட்டப்பட்டிருந்த அந்த ஸ்டிக்கரை வருடியவளின் இதழில் உல்லாசப் புன்னகை ஒன்று குடி புகுந்தது. “இனியன்… சோ.. ஸ்வீட்…” தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவள், கம்ப்யூட்டரை ஆன் செய்ய, அது வழக்கம் போலவே ஆன் ஆக மறுத்தது.

“ஹையா… நீயும் ரொம்ப ஸ்வீட்…” என்று குதூகலித்தவள், அவசரமாக வெளியில் வந்து, “அப்பா…. இனியன் எங்க?” என்று கேட்க,

“என்ன சிவா இது? மாப்பிள்ளைய பேர் சொல்லி கூப்பிட்டுட்டு இருக்க…” என்று கண்டித்தவர்,

“அவர் இப்போ தான் அவரோட மாமா கூட கார்டன்ல பேசிட்டு வரேன்னு போனார்… என்னம்மா விஷயம்?” என்று அவர் கேட்கவும், அதற்கு பதில் சொல்லாமல் நகர்ந்தவளின் அருகே வந்த சசி…

“இப்போ எங்க போற? எங்கயும் போகக் கூடாது… பேசாம போய் எங்க ரூம்ல உட்காரு… எனக்கு தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கு… நீ எங்க போற… எங்க வரன்னு பார்த்துட்டு இருக்க முடியாது… கொஞ்சமாவது அடக்கம் இருக்கா பாரு… போடி…” என்று கண்டிக்க, ஷிவானியின் முகம் வாடியது.

“ஏன்ம்மா… கல்யாணம் ஆனா அடக்க ஒடுக்கமா மாறிடணும்ன்னு ஏதாவது இருக்கா என்ன? நான் இயல்பா இருகேன்ம்மா… அதுல என்ன தப்பு?” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளைப் பார்த்த சசி,

“இந்த நடிப்பெல்லாம் உங்க அத்தைக்கிட்ட வச்சிக்கோ.. உன்னோட அம்மா என்கிட்டே வேண்டாம்… அவங்க வேணா அதை எல்லாம் நம்பலாம்… நான் நம்ப மாட்டேன்… போடி… கல்யாணம் ஆனா… அப்படியே இருக்க முடியாது… கொஞ்சமாவது மாறணும்…” என்றவர், “போ..” என்று கண்ஜாடை காட்ட, அவருக்கு பழிப்புக் காட்டியவள்,

“என்ன மாறணுமாம்? அவர் தான் இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து என்னை பார்த்து இருக்காரே… இதுல இப்போ என்ன நான் அடக்க ஒடுக்கமா இருக்கறதைப் பார்க்கப் போறாரோ? நான் ரொம்ப ஒடுங்கிடப் போறேன்…” என்று புலம்பிக் கொண்டே, அந்த அறைக்கு ஓடிச் செல்ல, அதே நேரம் புகழ் உள்ளே நுழைந்தான்.

அவள் துள்ளி ஓடுவதைப் பார்த்துக் கொண்டே, பாஸ்கரின் அருகே அமர்ந்தவன், பொழுதை போக்க வழி தெரியாமல் சங்கடமாக அமர்ந்திருக்க, அவனது மொபைலுக்கு விக்ரமிடம் இருந்து மெசேஜ் வந்தது.

“நல்லவேளை… இவனாவது மெசேஜ் பண்றானே…” என்று நினைத்துக் கொண்ட புகழ், உடனே பதிலனுப்பவும், உற்சாகமான விக்ரமும் பதிலனுப்ப, புகழுக்கு கொஞ்சம் பொழுது கழிந்தது.

பாஸ்கரும் ஏதோ வேலையாக நகர்ந்து விட, சித்ராவும், அவளது கணவரும் அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்க, இதுவரை மெசேஜில் பேசிப் பழகி இராத புகழும் அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல், மெசேஜ் அனுப்புவதை விடுத்து, நேரத்தை நெட்டித் தள்ளிக் கொண்டிருக்க, அவன் முகத்தைப் பார்த்த பாஸ்கர், “நீங்க வேணா கார்டன்ல ஷிவா கூட பேசிட்டு இருங்க புகழ்… நான் அவளைக் கூப்பிடறேன்…” என்று சொல்லவும்,

“இல்ல… அவ ரெஸ்ட் எடுக்கட்டும்… நான் சும்மா அப்படியே சுத்திட்டு இருக்கேன்…” அவன் சொன்னதை கேட்காமல்,

“சிவா…” என்று பாஸ்கர் அழைத்திருந்தார்.

“என்னப்பா…” அதுவரை அந்த அறையில் இருந்தே அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், உடனே வெளியே வரவும்,

“கொஞ்ச நேரம் மாப்பிள்ளை கூட பேசிட்டு இரும்மா… நம்ம தோட்டத்துக்கு கூட்டிட்டு போ… அப்படியே நம்ம தோப்பையும் காட்டு…” பாஸ்கர் அவர்கள் பேசத் தனிமை அளிக்க,  

“சரிப்பா…” சாதுவாக ஒத்துக் கொண்டவள், “வாங்க இனியன்… நான் எல்லா இடமும் நல்லா சுத்திக் காட்டுவேன்… வாங்க…” என்று ராகம் பாடவும், புகழ் அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே அவளோடு நடக்க, ஷிவானிக்கு துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது.

கால்கள் தரையில் தான் இருக்கிறதா என்று அவளுக்கே சந்தேகம் தோன்ற, தனது கால்களைப் பார்த்துக் கொண்டவள், புகழ் அவளைப் பார்க்கவும்,

“ஒண்ணும் இல்ல… கால்ல மெட்டி இருக்கான்னு பார்த்தேன்…” என்று சொன்னவுடன், ‘ம்ம்’ என்ற புகழ் அமைதியாகவே நடக்கத் தொடங்க,

“இப்படி ஒரு அழகான பெண்டாட்டி பக்கத்துல வரேனே… ஏதாவது பேசுவோம்ன்னு இருக்காப் பாரு… நாமளே பேச்சைத் தொடங்க வேண்டியது தான்…” என்று நினைத்தவள், ‘என்ன பேசலாம்..’ என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள்.

‘மொதல்ல இருந்தே தொடங்கலாம்…’ என்று நினைத்தவள்,

“நீங்க ரொம்ப நல்லா கார் ஓட்டறீங்க? எனக்கு கார்ல போறதுன்னா ரொம்ப பிடிக்கும்…. நீங்க பைக் ஓட்டுவீங்களா? எனக்கு காரை விட அது தான் ரொம்ப பிடிக்கும்… என்னை எங்க எல்லாம் கூட்டிட்டு போவீங்க?” ஷிவானி ஆர்வமாகக் கேட்க,

“எங்க போகணும்?” ஒற்றை வார்த்தையில் புகழ் கேட்கவும்,

“எங்கயாவது ரொம்ப தூரம் பைக்ல போகலாம் இனியன்… ஜாலியா..” அவள் சொல்லவும்,

“ம்ம் போலாம்… கூட்டிட்டு போறேன்..” புகழ் சொல்லி முடிக்கையிலேயே, ‘எப்போ’ என்று ஷிவானி குதூகலமானாள்.

“இப்போ தான் கல்யாணத்துக்கு லீவ் போட்டு இருக்கேன்… அதனால அங்க வீட்டுக்கு போன உடனே நான் வேலைக்குப் போயிடுவேன்.. இதுவே சும்மா இருக்கறது கஷ்டமா இருக்கு.. எனக்கும் போர் அடிக்குது… அதுவும் இல்லாம கஸ்டமர் போய்ட்டாங்கன்னா அப்பறம் பிடிக்கிறது கஷ்டம் இல்ல…” புகழ் விளக்கவும், ஒரு நிமிடம் மனம் வாடியவள், அதில் உள்ள நியாயம் புரிந்து,

“சரி.. எப்போவாவது கடை லீவ்ன்னா போயிக்கலாம்… அதுவரை குட்டி குட்டி இடமா கூட்டிட்டு போங்க..” என்று விட்டுத் தரவும், அவளை ஆழ்ந்து பார்த்த புகழ், சம்மதமாக தலையசைத்தான்.

மீண்டும் இருவருக்கும் இடையே சிறிது நேர மௌனம்… அதை எப்படி கலைப்பது என்று மீண்டும் மூளையை தட்டி யோசித்தவள், “என்னோட சிஸ்டம் மறுபடியும் ஆன் ஆகலை…” யோசித்து ஷிவானி மெல்ல இழுக்க, புகழ் அவளை அதிசயப் பிறவி போல பார்த்து வைத்தான்.

“என்ன இனியன்… நான் சிஸ்டம் ஆன் ஆகலைன்னு தானே சொன்னேன்… அது எதுக்கு இப்படி லுக்கு விடறீங்க?” பெரிய சந்தேகமாக அவள் இழுக்க,

“அது காயிலாங்கடைக்கு போக வேண்டிய சிஸ்டம்… இன்னமும் நீ அதை வச்சிட்டு இருக்க… அதையே ரிப்பேர் செய்து… அதையே தான் யூஸ் பண்ணுவேன்னு சொன்னா என்ன செய்யறது சொல்லு… விட்டா அதை அங்க வீட்டுக்கு தூக்கிட்டு வந்திருவ போல…”

“ஹை… குட் ஐடியாங்க… சூப்பர்… நாளைக்கு என் டிரெஸ்ஸை எல்லாம் பேக் பண்ணும் போது அப்பாவை அதையும் எடுத்து வைக்க சொல்றேன்…” என்று சொன்னதைக் கேட்டவன் தலையிலேயே அடித்துக் கொள்ள,

அதைப் பார்த்தவள், “எனக்கு அந்த சிஸ்டமை ரொம்ப பிடிக்குமே… அதுல தானே எனக்கு தேவையான… முக்கியமான எல்லாமே இருக்கே… அதுல எவ்வளவு பாட்டு வச்சிருக்கேன் தெரியுமா? ப்ளீஸ் அதை சரி பண்ணிக் கொடுங்க இனியன்… எனக்கு என்னவோ அது தான் ரொம்ப பிடிச்சிருக்கு… எத்தனை லேப்டாப் விதம் விதமா வந்தா என்ன? இந்த டெஸ்க்டாப் போல வருமா?” ஷிவானி சிரித்துக் கொண்டே சொல்லவும், புகழ் தோளைக் குலுக்கினான்.

“உன்னை எல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியல…” என்று சலித்துக் கொள்ளவும்,

“என்ன? வெறுமன தோளைக் குலுக்கறீங்க? செய்து தர மாட்டீங்களா?” அவனிடம் பேச்சை வளர்த்த அவள் கேட்க,

“ஒண்ணும் இல்ல… இங்க பூச்சி பொட்டு எல்லாம் இருக்கும்… இருட்டற மாதிரி இருக்கு… உள்ள போகலாமா?” சம்பந்தமில்லாமல் புகழ் பதில் கேள்வி கேட்கவும், ஷிவானிக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது.

“என்கிட்டே பேசவே பிடிக்கலையா? ஏன் இப்படி ஒட்டியும் ஒட்டாம பேசறார்?” முதல் முறையாக ஷிவானியின் மனதில் இந்தக் கேள்வி எழ,

“அடி லூசே… அவர் என்னிக்கு தான் பேசி இருக்கார்… அது தான் சித்ரா அண்ணி சொன்னாங்க இல்ல…” என்று நினைத்துக் கொண்டவள், 

“கொஞ்ச நேரம் இங்க மரத்துக்கு கீழ நின்னுட்டு இருக்கலாமா?” முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு அவள் கேட்கவும், அவளது முகத்தைப் பார்த்தவன், சரி என்று தலையசைத்தான்.

“ஹ்ம்ம்… இப்போவே கண்ணக்கட்டுதே சிவா…” என்று மனதினில் நினைத்துக் கொண்டவள், ஒரு பெருமூச்சை வெளியிட, அப்பொழுது காபி பலகாரங்களை எடுத்துக் கொண்டு வந்த சசி, அவளை அழைத்து அவள் கையில் கொடுத்துவிட்டு சென்றார்.

“ஒருவேளை காபி குடிக்கத் தான் உள்ள போகலாம்ன்னு சொல்லி இருப்பாரோ? நமக்கு ஏன் இன்னும் பசிக்கல? இத்தனை நேரம் பசிச்சு இருக்குமே…” அவள் நினைத்துக் கொண்டே அவனை நோக்கி நடந்தாள்.

“மாப்பிள்ளைக்குன்ன உடனே பலகாரம் களைக்கட்டுதே…” சசியை கிண்டலடித்துக் கொண்டே, ஒரு முறுக்கை வாயில் போட்டுக் கொண்டவள், புகழைப் பார்த்தாள்.

அவள் கண்களில் குறும்புப் போய் காதல் வந்து குடிபுக, ஓரிரு நிமிடங்கள் அவனை பார்வையால் வருடினாள்.

‘நான் அவர் மேல வச்சிருக்கற காதலைப் போல அவருக்கும் என் மேல காதல் இருக்குமா? எப்படி தெரிஞ்சிக்கறது?” என்று யோசித்துக் கொண்டே மெல்ல அவனிடம் நடந்தாள்.    

காபி தட்டை அவனுக்கு எடுத்துச் சென்றவளின் நினைப்பு, புகழ் அவளைப் பெண் பார்க்க வந்த தினத்தில் வந்து நின்றது.

அதை நினைத்தவளின் இதழில் புன்னகை அரும்ப, “புகழ் நீங்க பொண்ணு பார்க்க வந்த போது என்ன நினைச்சீங்க?” என்று ஆசையுடன் கேட்கவும், காபியை கையில் வாங்கியவன்,

“நான் பொண்ணு பார்க்கப் போற முதல் பொண்ணு தான் எனக்கு மனைவியா வரணும்னு எனக்கு மொதல்ல இருந்தே ஒரு குறிக்கோள் இருந்தது.. அது போல உன்னை தான் முதன்முதலா பார்க்க வந்தேன்.. இதுல நினைக்கிறதுக்கு என்ன இருக்கு?” புகழ் சாதாரணமாகச் சொல்லவும், ஷிவானியின் முகம் சுருங்கியது.

அதை கவனிக்காமல், “நீ எப்படி இருப்பியோ என்னவோன்னு வேற அம்மாவுக்கு பயம்… நான் சொல்லிட்டேன்… ‘அவ எப்படி இருந்தாலும் அவ தான் என் மனைவி’ன்னு… உன்னைப் பார்த்ததும் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு…” பெருமையாக புகழ் சொல்ல, ஷிவானிக்கு அழுகை வரும் போல் இருந்தது.

“ஜடம் ஜடம்… நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்… இவர் என்ன சொல்றார் பாரு… நீங்க எல்லாம் பார்க்க போற பொண்ணு பத்திரகாளி மாதிரி இருந்திருக்கணும்… அப்போ உங்க குறிக்கோள் எங்க பறந்து போயிருக்கும்ன்னு தேடணும்..” என்று கண்ணீரை உள்ளிழுத்த படி சலித்துக் கொண்டாள்.

“உன்னை எனக்கு பிடிக்கும்ன்னு ஒரு வார்த்தை சொல்லலாம் இல்ல…” ஷிவானி நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த பேச்சு அத்தோடு முடிந்தது என்பது போல புகழ் நடந்துக் கொண்டான்.

“உன் சிஸ்டம் சரி இல்லன்னு சொன்ன இல்ல… வா.. காபியை அங்க போய் குடிச்சிக்கிட்டே பார்க்கலாம்…” என்று புகழ் சொல்லவும்,

“இந்த முறுக்கு” என்று கேட்க,

“காபி கூட முறுக்கை சாப்பிட்டுக்கலாம்…” என்று அவன் முன்னே நடக்க,

“இவருக்கு ரொமான்ஸ்ன்னா என்னன்னு தெரியுமா தெரியாதா?” என்று முணுமுணுத்துக் கொண்டே, தலையில் அடித்துக் கொண்ட ஷிவானி, அவனோடு நடந்தாள்.

“சரி அதை விடுங்க… இங்க வீட்டுக்கு வரும்போது என்னை பார்த்து இருக்கீங்க இல்ல.. அப்போ…” விடாமல் இழுக்க,

“நான் உன்னை நேர்ல பார்த்ததே இல்லையே… நீ என்னை பார்த்து இருக்கியா?” புகழ் சாதாரணமாகக் கேட்கவும் ஷிவானிக்கு திகைப்பாக இருந்தது.

“என்னைப் பார்த்தது இல்லையா?” அதிர்ச்சியுடன் அவள் கேட்க,

“இல்ல ஷிவா… நான் பார்த்தது இல்ல… எதுக்கு கேட்கற?” அவனது பதில் கேள்விக்கு,

“வேற எங்கயாவது பார்த்து இருக்கீங்களா?” விடாமல் அவள் கேட்க,

“உன் சிஸ்டம் சரி பண்ணிட்டு அதுல இருக்கற உன் போட்டோவைப் பார்த்து இருக்கேன்…” என்று புகழின் பதில் வந்தது.

“அதுவா…” என்று கேட்ட ஷிவானி அசடு வழிந்தாள்.

“ம்ம்…” புகழ் சிரிப்பை அடக்கிக் கொண்டு பதில் சொல்ல,

“அய்யே… அந்த போட்டோவா…” அவள் மீண்டும் கேட்க, புகழ் சிரிக்கத் தொடங்கினான்.

“எதுக்கு சிரிக்கறீங்க? உங்களை யாரு அதைப் பார்க்கச் சொன்னது?” அவள் சிணுங்க,

அவளது தலையை மெல்லத் தட்டியவன், “ஹ்ம்ம்… பின்ன சிஸ்டமைத் திறந்த உடனே அது தானே வந்து நிக்குது… சரி போஸ் கொடுக்கறது தான் கொடுக்கற… அதுக்குன்னு அப்படியா கொடுப்ப?” சிரிப்பினூடே அவன் கேட்க, ஷிவானி அவனது சிரிப்பை ரசிக்கத் தொடங்கினாள்.

“என்ன அமைதியா வர… உனக்கே அது ஓவரா தெரியல…” மீண்டும் புகழ் கேட்க,

“உங்க சிரிப்பு அழகா இருக்கு இனியன்…” ரசனையுடன் அவள் சொல்ல, புகழ் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் கண்களில் ஒளிர்ந்த காதலையும், அவளது சிரிப்பையும் பார்த்தவன், அவள் அருகே நெருங்கி, “ஆனாலும்… இப்போ இருக்கறதை விட அதுலரொம்ப அழகா இருக்க…” அவளது கையில் இருந்த முறுக்கை கடித்துக் கொண்டே அவன் சொல்ல,

“எப்படி?” ஷிவானி கேட்கவும்,

“சரியான பத்திரகாளி மாதிரி… நெத்தி நிறைய குங்குமம்… கண்ணுல மை… சிவப்பு கலர் டிரஸ்… இதுல நாக்கை வேற வெளிய தொங்கப் போட்டுக்கிட்டு… முதல் தடவ பார்க்கும் போது கொஞ்சம் பயந்தேன்… அப்பறம் பார்க்க பார்க்க எனக்கு பழகிடுச்சு…” புகழ் சொல்லவும், ஷிவானி சிணுங்கினாள்.

“அது சும்மா சிஸ்டம்க்கு திருஷ்டி படப் போகுதேன்னு போட்டு வச்சேன்… இருந்தாலும் அது அடிக்கடி ரிப்பேர் ஆகுது…” வருத்தமாகச் சொன்னவளின் முகத்தைப் பார்த்தவன், தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“அந்த போட்டோ இல்லாட்டியும் உன் சிஸ்டம்க்கு ஒண்ணும் வராது… அது தான் லேப்டாப், டேப்ன்னு எல்லாம் வாங்கி வச்சிருக்க இல்ல… அப்பறம் இது எதுக்கு?” என்று கேட்டுக் கொண்டே அவளது அறைக்கு அருகே வர, சசியும், சித்ராவும் சேர்ந்து அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த புகழ் சட்டென்று நின்றான்.

“ஐயோ என்னோட ரூமை கிளீன் பண்றாங்க… அப்பறம் அது என் ரூம் போலவே இருக்காது..” அவள் பதற, எதுவும் பேசாமல் புகழ் பார்த்த பார்வையிலேயே அவளுக்கு அனைத்தும் விளங்க,  அத்தனை நேரம் இருந்த வாய்ப் பேச்சுப் போய் ஷிவானி அமைதியானாள்.

அவளது முகத்தில் வந்த நாணச் சிவப்பும், இதழ்களை கடித்துக் கொண்டு அவள் நின்ற கோலமும், புகழுக்கு புதியதாக இருக்க, கையில் காபியை வைத்துக் கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவர்கள் இருவரையும் பார்த்த சித்ரா, “என்ன புகழ்? ஏதாவது வேணுமா?” என்று கேட்க,

ஷிவானியிடம் இருந்து தனது கண்களைத் திருப்பிக் கொண்டவன், “இல்லக்கா.. வேண்டாம்… அவ சிஸ்டம் சரி இல்லன்னு சொன்னா… அது தான் பார்க்கலாம்ன்னு வந்தேன்…” என்றவன், மீண்டும் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.

கையில் இருந்த காபிப் கப்பை விரல்களால் வருடிக் கொண்டிருந்தவள், மெல்ல அதை குடித்து முடிக்க, புகழோ அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். புகழின் பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்தவள், “நான் ரூமுக்கு போறேன்…” என்றபடி, அவனது பதிலுக்குக் கூட காத்திராமல், சசியின் அறையின் உள்ளே சென்று மறைய, போகும் அவளையே புகழ் ரசித்துக் கொண்டிருந்தான்.

மாலை மங்கி, இரவும் கவிழ்ந்து, சித்ரா ஷிவானிக்கு தலையை சீவி விட, அவளோ, தயக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ ரொம்ப அழகா இருக்க சிவா… உங்க ஜோடிப் பொருத்தம் ரொம்ப அழகா இருக்கு…” என்ற சித்ரா, “சீக்கிரம் புடவை கட்டு… நான் அவன் ரெடியான்னு பார்க்கறேன்…” என்று அங்கிருந்து விலக, 

அவளது கன்னத்தை தட்டிய சசி, மீதி அலங்காரங்களையும் முடித்து, அவளது அறைக்கு அழைத்துக் கொண்டு செல்ல, அந்த சூழலின் உணர்வுகளை கையாளத் தெரியாமல், வார்த்தைகள் தான் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

அவளது தயக்கம் புரிந்த சசி, அவளது நெற்றியில் இதழ்களைப் பதித்து, “உள்ள போ…” என்று சொல்லிவிட்டுச் செல்ல, அமைதியாகவே அறைக்குள் சென்றவளுக்கு நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. அந்த அறையில் இருந்த பூக்கள் அவளைது கண்களைப் பறித்தாலும், “ஹையோ ஷிவானி… இந்த டென்ஷன் நமக்கு ஆகாது… பேசாம வெளிய ஓடி போய் ஒளிஞ்சிக்கலாமா? இன்னும் இனியன் வரல போலேயே…” என்று நினைத்துக் கொண்டு, முதலில் பால்கனிக்கு செல்ல நினைக்க, அந்தக் கதவின் மீதும் பலூன்கள் ஓட்டப்பட்டிருக்க, அதை திறக்க முடியாமல் திணறியவள்,

“ரொம்ப முக்கியம்..” என்று அந்த பலூன்களை பிய்த்து எறிந்தவள்,

“நெஞ்சு வெளிய வந்து குதிச்சிரும் போல இருக்கு… இதுக்கு பேசாம மொக்கை படமா இருந்தாலும் போய் உட்கார்ந்துட்டு வரலாம்… பேசாம இனியன்கிட்ட டீல் பேசலாமா? அவரு அதுக்கு ஒத்துக்குவாரா?” என்று யோசிக்க,

“ஹ்ம்ம்.. இல்ல மாட்டேன்னு சொல்லிட்டா… வேண்டாம்… ரிஸ்க்கே வேண்டாம்… இந்த இனியன் வரதுக்குள்ள எஸ் ஆகு ஷிவானி… இப்படியே போய் வராண்டா வழியா தோட்டத்துக்கு போயிடு..” தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டவள், அறையின் கதவை நோக்கிச் செல்ல, அதன் மீது சாய்ந்து நின்று, புன்னகையுடன் ஷிவானியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த புகழைப் பார்த்தவள், அதிர்ச்சியுடன் நிற்க, அவளது அதிர்ச்சியை சற்றும் சட்டை செய்யாமல், நிதானமாக கதவை அடைத்து விட்டு, புகழ் அவள் அருகே வந்தான்.

“என்ன படத்துக்கு போகலாம்ன்னு பார்க்கற? டிக்கெட் கிடைச்சதா? இல்ல நான் வேணா புக் பண்ணவா?” இயல்பாகக் கேட்டுக் கொண்டே புகழ் அவளை நெருங்க,

“இல்ல… படத்துக்கு எல்லாம் போகல… சும்மா… ரூமை சுத்திப் பார்க்கலாம்ன்னு…” என்று அவள் தந்தியடிக்க, புகழ் பெட்டில் சென்று அமர்ந்தான்.

“மாட்டினடி நீ…” என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

“இங்க வா..” அவளது கையைப் பிடித்து மெல்ல அவன் அழைக்கவும், மெல்ல அடியெடுத்து வைத்து வந்தவளின் நெஞ்சம் படபடக்க,

“சிவா… ஆல் இஸ் வெல்…” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, அவன் காட்டிய இடத்தில், அவன் அருகே சென்று அமர்ந்தாள்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே…” அவன் கேட்கவும்,

“என்ன கேட்டீங்க?” அவனிடமே அவள் திருப்பிக் கேட்க, புகழ் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வை ஷிவானியை நாணம் கொள்ள வைக்க, அதை மறைக்க தலைகுனிந்தவளின் முகத்தை பூ போன்று பிடித்து நிமிர்த்தினான்.

அவனது கண்களை சந்திக்காமல் ஷிவானி இமைகளை தாழ்த்த, அவளது முகத்தில் உறவாட நினைத்த இதழ்களை கட்டுப் படுத்திக் கொண்டு, அவளது பயத்தை உணர்ந்து, அவளை இயல்பாக்கும் பொருட்டு, “எனக்கு ஒரு சந்தேகம்…” என்று தொடங்கவும், கண்களைத் திறந்தவள், அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

“இல்ல…. நான் ஆன்ட்டி வைரஸ் போட்டும்…. உன் சிஸ்டம்ல எப்படி வைரஸ் எப்போப் பாரு வருது? என்ன பண்ற அப்படி?” புகழ் சந்தேகம் கேட்கவும், ஷிவானி அவனை ஒரு பார்வை பார்ததாள்.

“என்ன ஆச்சு? சொல்லு… உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன்..” அவன் கேட்கவும்,

நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டவள், “நான் நிறைய சைட்ஸ்க்கு போய் பாட்டு எல்லாம் டவுன்லோட் பண்ணுவேன்… அதுல வருமா இருக்கும்…” என்று அவள் சொல்ல, புகழ் சந்தேகமாகப் பார்த்தான்.

“அது எப்படி அந்த சாப்ட்வேரையும் மீறி வரும்…” அவன் மீண்டும் கேட்க,

“அது வார்ன் பண்ணும்… ஏதாவது ஆச்சுன்னா…. நீங்க தான் இருக்கீங்களேங்கற தைரியத்துல செய்துடுவேன்…” அவள் பட்டென்று சொன்னதைக் கேட்ட புகழ் அதிர்ந்துப் பார்க்க, ஷிவானி அமைதியாக தலை குனிந்தாள்.

“நான் எப்பவுமே வருவேன்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“அது தானே உங்க வேலை… அதனால தெரியும்…” என்று சொன்னவள், புடவை நுனியை பிரித்துக் கோர்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன்,

“சரி படுத்து தூங்கறியா?” என்று கேட்கவும், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், ‘அப்பாடி..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டு, “ம்ம்” என்று தலையசைக்க,

“சரி… தூங்கு… நான் லைட்டை ஆஃப் பண்ணறேன்…” என்று விளக்கை அணைக்கவும், மனதில் ஏமாற்றமாக ஷிவானி உணர்ந்தாள்.

தான் என்ன நினைத்தேன்? ஏன் அந்த படபடப்பு? எதற்கு இந்த பயம்? இப்பொழுது ஏன் இந்த ஏமாற்றம்? இப்போ எனக்கு என்ன வேணும்? என்று புரிந்தும் புரியாமலும் கண்களை மூடி அவள் குழம்பிக் கொண்டிருக்க,

“வனி… தூங்கிட்டயா?” புகழின் குரல் அவளது காதிற்கு அருகில் கேட்கவும், மீண்டும் அவளது இதயம் தடதடக்கத் தொடங்கியது.

14 COMMENTS

LEAVE A REPLY