SHARE

This is the second update of the story… what happens in the college? did shivani write her exam well? Here goes the episode..

உன் மௌனத்தின் அர்த்தங்களைப் 

படிக்க நானும் சேர்ந்தேன் 

காதல் வகுப்பில் மாணவியாக!! 

ஷிவானிக்கு ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு அறையில் இருந்து, கல்லூரியின் கார் பார்க்கிங் இடம் நன்றாகவே தெரியும்… முழு மணப்பெண்ணின் அலங்காரத்தில், கழுத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த மஞ்சள் தாலியும் சேர, தனது கணவன் கல்லூரி வாயில் வரை கொண்டு வந்து விட்ட மகிழ்வும் சேர்ந்து, அழகுக்கு அழகு சேர்ப்பது போல ஷிவானியின் முகம் விகசிக்க, கல்லூரில் பெண்கள் பலர் அவளைத் திரும்பிப் பார்த்தனர். அவளது தோழிகள் அவளுக்கு வாழ்த்து கூற, சந்தோஷத்துடன் அதனை ஏற்றவள், காரில் சாய்ந்து நின்ற புகழை அவர்களுக்கு காட்டினாள்.

“ஹே.. நீ சொல்லும்போது கூட நாங்க நம்பள ஷிவா…. நேர்ல போட்டோவை விட ரொம்ப நல்லா இருக்கார்….” அவளது தோழி ஒருத்தி சொல்ல, காரின் அருகே நின்றிருந்த படியே, ஷிவானியைக் கண்களால்  தொடர்ந்துக் கொண்டிருந்தவனின் கண்களில் அதுவும் தவறாமல் பட்டது.

அவளது வகுப்பே ஷிவானியின் அருகே நின்று அவனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த புகழுக்கு என்னவோ போல் இருந்தது.

“இவளைப் போய் எக்ஸாம் எழுதச் சொன்னா.. இவ என்னை வேடிக்கை காட்டிக்கிட்டு இருக்கா… நான் என்ன எக்ஸ்ஹிபிஷனா?” புகழ் மனதினில் நினைத்து, என்ன செய்வதென்று சில நொடிகள் யோசித்து, அவளது எண்ணிற்கு அழைத்தான்.

“ஹே.. அவர் தான் போன்… என் நம்பர் அவர் கிட்ட இருக்கா?” அருகில் இருந்த அவளது தோழி அனிதாவிடம் சொன்ன ஷிவானி, சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனை எடுக்க,

“அங்க எக்ஸாம்க்கு படிக்காம என்ன வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க? லாஸ்ட் மினிட்லயாவது கொஞ்சம் புக்கை புரட்டலாம் இல்ல…” புகழின் கேள்விக்கு, முகத்தை சுருக்கியவள், அருகில் இருந்த தோழிகளைப் பார்த்துவிட்டு,

“கொஞ்சம் பெர்சனலா பேசணும்னு சொல்றார்… வரேன் இருங்க…” என்று சற்று தள்ளிச் சென்று, புகழை நன்றாக பார்ப்பது போல நின்றுக் கொண்டாள்.

அவள் தோழிகளிடம் சொன்னதைக் கேட்ட புகழ், “நான் எப்போ அப்படி சொன்னேன்” என்று யோசித்துக் கொண்டிருக்க,

“ஹ்ம்ம்… இனியன்… லாஸ்ட் மினிட்ல தான் சுத்தமா படிக்கவே கூடாது தெரியுமா? நான் திரும்பவும் சொல்றேன்… நீங்க பயப்படவே வேண்டாம்… நான் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்…” என்று அவனுக்குத் தேறுதல் சொல்லவும், அவள் அருகில் இருந்திருந்தால், புகழ் அவளை முறைப்பது நன்றாகவே தெரிந்திருக்கும்…

“அப்பறம் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் இனியன்…” தேனாக அவள் கேட்க, முதல் முறையாக அவள் கேட்பதை தட்ட முடியாத புகழ்,

“ஹ்ம்ம்… சொல்லு…” என்று கேட்டான்.

“இல்லங்க… நான் எக்ஸாம் முடிச்சிட்டு வந்த அப்பறம் என் பிரெண்ட்சுக்கு எல்லாம் உங்களை இன்ட்ரோ கொடுக்கணும்.. அப்போ கொஞ்சம் பெருசா ஸ்மைல் பண்ணணும்… சரியா?” அவள் அவ்வாறு கேட்கவும், புகழ் ‘என்னது’ என்று கேட்கும் பொழுதே, கல்லூரியின் மணி ஒலிக்க,

“சரி இனியன்… எக்ஸாம்க்கு ஃபர்ஸ்ட் பெல் அடிச்சாச்சு… நான் வரேன்… போனை வைக்கறேன்…” என்று சொல்லவும்,

“சரி ஷிவானி… ஆல் தி பெஸ்ட்… நான் மண்டபத்துக்கு போயிட்டு திரும்ப வரேன்…” என்றவன், போனை அணைக்க, ஷிவானிக்கு பட்டென்று என்னவோ போல் ஆகியது.

“ஷிவானியா? அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூப்பிட்ட வணி என்ன ஆச்சு?” மனம் சிணுங்க…           

“நீ பாட்டுக்கு உன்னோட ஊர் வாயை எல்லாம் அவர்கிட்ட காட்டினா அவர் அப்படி தான் பேசுவார்… இனிமே கொஞ்சம் வாயை அடக்கியே பேசு… மொதல்ல மதியம் வந்த உடனே அவர் கிட்ட சாரி கேளு…” மனசாட்சி எடுத்துச் சொல்ல, அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு பரீட்சை அறைக்குச் சென்றாள்.

“புகழ் தப்பாக எடுத்துக் கொண்டிருப்பானோ? தான் பேசியது அதிகம் தான்…” என்று பலவாறு யோசனை செய்துக் கொண்டே அமர்ந்திருந்தவள், கேள்வித் தாளை கையில் வாங்கிப் பார்த்ததும், உலகமே தலைகீழாக திரும்பிய உணர்வு ஏற்பட்டது. கேள்வித் தாளை வைத்துக் கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த அவளது ஆசிரியை அவள் அருகில் வந்தார்.

“என்ன ஷிவா… எதுவுமே படிக்கலையா?” ஆசிரியைக் கேட்டதும், ஷிவானியின் கண்கள் கலங்கியது.

“என்ன ஷிவா… படிக்கலையா?” கண்களில் கண்ணீர் தளும்புவதைப் பார்த்த அவர் மீண்டும் கேட்கவும்,

“இல்ல மேடம்…. நான் இந்த எக்ஸாமை நல்லா எழுதணும்ன்னு முன்னாடியே எல்லாம் படிச்சு வச்சிட்டேன்… எங்க கல்யாண நாள் அன்னைக்கு எதுவுமே தப்பா ஆகிடக் கூடாதுன்னு நான் ரொம்ப கவனமா இதைப் படிச்சேன்… இன்னைக்கும் காலையில கூட உட்கார்ந்து படிச்சேன்… ஆனா… எனக்கு இப்போ எதுவுமே நியாபகத்துக்கு வரல..” உள்ளம் கலங்க சொன்னவளைப் பார்த்த அந்த ஆசிரியைக்கும் வருத்தமாகவே இருந்தது.

“நீ எப்படியும் படிச்சு இருப்பன்னு எனக்கு தெரியும் சிவா.. இருந்தாலும் கல்யாண பரபரப்புல படிக்க முடியல போலன்னு கேட்டேன்… நீ தான் கிளாஸ்ல கவனிச்சதை வச்சே அழகா எழுதுவியே… முதல்ல போய் தண்ணிய குடிச்சிட்டு வந்து ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா உட்கார்ந்து யோசி… எல்லாம் நியாபகத்துக்கு வரும்..” நன்றாக படிக்கும் மாணவி தடுமாறுவதைப் பொறுக்க முடியாமல், அவரும் உற்சாகப்படுத்த, அவர் சொன்னது போலவே ஷிவானி செய்தாள்.

அனைத்தையும் புறம் தள்ளியவள், படித்ததை முயன்று நினைவுக்கு கொண்டு வர முயன்று, அதில் வெற்றியும் பெற்று, ஒருவாறு மனம் நிதானப்படவும், கேள்வித் தாளைப் பார்க்க, இப்பொழுது அனைத்தும் சுலபமான வினாக்களாகவே இருந்தது.

“ஷிவா… நீ கலக்க ஆரம்பி… ஆல் தி பெஸ்ட்…” என்று தனக்குத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டவள், வேக வேகமாக அனைத்தையும் எழுதத் துவங்கினாள். ஒருவழியாக பரிட்சை முடிந்து வெளியில் வந்தவளை, அவளது ஆசிரியை ஒருவர், “ஷிவா.. கொஞ்சம் ஸ்டாஃப் ரூம் வரை வந்துட்டு போ“ என்று அழைக்கவும்,

“என்னடி இது? எதுக்கு இப்போ என்னை மேடம் வந்து கூப்பிடறாங்க? அவர் வேற வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பார்… இன்னைக்கே லேட்டா போனா அவர் என்னை என்ன நினைப்பார்?” என்று புலம்ப,

“என்ன தான் சொல்றாங்கன்னு பார்ப்போம் வா…” என்று அவளது தோழி அனிதா, அவளை அழைத்துச் செல்ல, அங்கு ஒரு சிறு வியப்பு அவளுக்காக காத்திருந்தது.

கையைக் கட்டிக் கொண்டு, தப்பு செய்து மாட்டிக் கொண்ட பள்ளி மாணவன் போல், புகழ் நின்றுக் கொண்டிருக்க, அவனைப் பார்த்த ஷிவானிக்கு எதுவோ பிரச்சனை என்றே தோன்றியது.

“ஹையோ.. இன்னைக்கு என்ன இப்படி பிரச்சனை மேல பிரச்சனையா வந்துட்டு இருக்கு… ஷிவா உள்ளே புகுந்து உன் மணாளனைக் காப்பாத்து…” என்று எண்ணிக் கொண்டவள்,

“மேடம்… இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் இனியன்… நீங்க நினைக்கிற மாதிரி இவர் ரோட் சைட் ரோமியோ கிடையாது… என்னை கூட்டிட்டு போக வந்திருக்காரு…” அவன் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததை தவறாக புரிந்துக் கொண்டு, அவன் மீது நடவடிக்கை எடுக்கத் தான் இவ்வாறு நிறுத்தி இருப்பதாக நினைத்துக் கொண்ட ஷிவானி பதட்டத்துடன் சொல்லவும்,

‘இது வேறயா?’ என்பது போல புகழ் பார்த்துக் கொண்டு நின்றான்.

“அதெல்லாம் எனக்குத் தெரியும் ஷிவானி… உங்க கல்யாணத்துக்கு கிஃப்ட் கொடுக்கத் தான் அவரையும் உன்னையும் இங்க கூட்டிட்டு வந்தோம்…” என்று ஷிவானியின் பதட்டத்தை தணித்த ஆசிரியை,

“சாரி Mr. புகழ்… எங்களால கல்யாணத்துக்கு வர முடியல… எக்ஸாம்னால எங்கயுமே நகர முடியல… ரிசெப்ஷன் இருந்தா வரலாம்ன்னு பார்த்தோம்… ஆனா.. நேத்து வீட்டோட நிச்சயமும், இன்னைக்கு கல்யாணமும்ன்னு ஷிவா சொன்னா… அதனால எங்களுக்கு வேற வழி தெரியல… சிவாகிட்டேயே கொடுத்திருப்போம்… நீங்களும் வரவும், உங்களையும் கூப்பிட்டு கொடுக்கலாம்ன்னு தான்…” என்று அவர் விளக்கம் சொல்லவும், அவரது நீண்ட உரையாடளுக்கு பதிலாக,

“இட்ஸ் ஓகேங்க… தேங்க் யூ சோ மச்…” என்று முடித்தான்.

“ஷிவா… நீ இங்க வந்து அவர் பக்கத்துல நில்லு…” என்று ஆசிரியை சொல்லவும், அவளது தோழி அனிதாவையும் இழுத்துக் கொண்டு வந்து நின்ற ஷிவானியை ஒரு பார்வை பார்த்தவன்,

“விஷ் யூ போத் எ வெரி ஹாப்பி மேரீட் லைஃப்…” என்று ஆசிரியை வாழ்த்தி கொடுத்த பரிசை பெற்றுக் கொண்ட ஷிவாவும், புகழும், அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

“ஷிவா ரொம்ப ஸ்மார்ட் கேர்ள்… எப்பவுமே துருதுருன்னு இருப்பா… ரொம்ப நல்ல பொண்ணு… இன்னைக்கு எக்ஸாம்ல கூட அவளுக்கு எல்லாமே மறந்து போச்சு. அப்பறம் ‘நிதானமா யோசி’ன்னு சொன்ன உடனே, சொன்னதை செய்து, உடனே எக்ஸாம் எழுதத் தொடங்கிட்டா.. ரொம்ப நல்லா எழுதி இருக்கா…” என்று இன்று அவர்கள் அறைக்கு வந்திருந்த ஆசிரியை சொல்லவும், புகழின் பார்வை புன்னகையுடன், ஷிவானியை நோக்கித் திரும்பியது.  

புகழின் கையில் கொடுத்ததும் அவளது வேலை முடிந்தது என்பது போல, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அந்த ஆசிரியை சொல்வதைக் கேட்டு, “இதென்னடி இது இப்படி என்னை புகழோ புகழ்னுன்னு புகழறாங்க… நான் புகழ்க்கு வைஃப் ஆகிட்டேன்னு எனக்கு இந்த புகழ் எல்லாம் வந்து சேருதோ? இந்த மேடம் நம்மளை எத்தனை முறை ‘லாஸ்ட் பெஞ்ச் கெட்அவுட்’ அப்படின்னு சத்தம் போட்டு இருப்பாங்க… நாம கூட எத்தனை முறை பெஞ்சோட வெளிய போய் உட்கார்ந்து இருக்கோம்… அதெல்லாம் மறந்து போச்சோ?” ஷிவானி கிண்டல் செய்ய,

“அது தானே ஷிவா… நாமளும் வெளிய போய் என்ன செய்யறதுன்னு தெரியாம எத்தனை நாளா கஷ்டப்பட்டு இருக்கோம்… அந்த லைப்ரரிக்கு அனுப்பி இருந்தா கூட போய் நல்லா புக்கை வச்சிட்டு தூங்கி இருக்கலாம்… ஆனா.. வெளியவே நிக்க வச்சு எப்படி எல்லாம் திட்டி இருப்பாங்க… கொடுமை படுத்தி இருப்பாங்க” என்று அனிதாவும் அவளுக்கு ஒத்து ஊத, அவர்கள் பக்கத்தில் நின்று இவற்றை கேட்டுக் கொண்டிருந்த புகழுக்கோ, அவர்கள் பேசியதைக் கேட்டு, அழுவதா சிரிப்பதா என்றே புரியாமல், இருக்கும் இடம் கருதி அமைதியாக நின்றான்.

“ஹ்ம்ம் இப்போ ஸ்மார்ட் கேர்ளாம்…. கல்யாணம் ஆனா தான் இந்த பேர் கிடைக்கும்ன்னா அதை நான் எப்போவோ செய்திருப்பேனே… வீட்ல அப்பாவை கூட்டிட்டு வந்து… இங்க திட்டு வாங்கி… அதோட தொடர்ச்சியா வீட்லயும் போய் வாங்கி.. ஹ்ம்மம்ம்ம்ம்…” வாய் சும்மா இல்லாமல் ஷிவானி தொடர,

“உன் ஆளு அதுக்கு பதில் சொல்லாம ஸ்மைல் பண்ணிட்டு இருக்காரு பாரு.. ‘அவளைப் பத்தி என்கிட்டையே சொல்றீங்களே’ன்னு நினைச்சு ஸ்மைல்  பண்ணி இருப்பாரு போல…” அனிதா ஷவானியை கிண்டல் செய்தாள்.

“இவர் என்னையே வேலைக்கு போக வச்சிடுவாரு போல இருக்கு அனி…” என்று ஷிவானி உடனே சோக கீதம் வாசித்தாள்.

“ஏண்டி? என்ன ஷிவா? வேலைக்கு போகணும்னு கண்டிப்பா சொல்லிட்டாரா?” அனிதா பதட்டமுடன் கேட்க,

“இல்ல இவர் சிரிக்கவும், பேசவுமே காசு கேட்பார் போல… அதுக்கு நான் சம்பாதிச்சு தானே ஆகணும்…” சிரிக்காமல் ஷிவானி சொல்ல, அனிதாவோ அவள் சொன்னதைக் கேட்டு சிரித்துவிட, அதைப் பார்த்த புகழ் ஷிவானியின் கையைப் பிடித்து அழுத்தினான்.

ஷிவானி அவன் முகம் பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன், “ரொம்ப தேங்க்ஸ் மேடம்… நாங்க அப்போ கிளம்பறோம்… அங்க எல்லாரும் எங்களுக்குக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…” என்று புகழ் விடைபெற, ஷிவானி இன்னமும் அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன என்னைப் பார்த்துட்டு இருக்க? வீட்டுக்கு போகணும் இல்ல..” என்று புகழ் கேட்கவும், ஷிவானி இந்த உலகத்திற்கு வந்து, மண்டையை உருட்டினாள்.

இன்னமும் அவளது கைகள் புகழின் கையில் சிறைப்பட்டிருந்தது. பேரைச் சொல்லி அழைத்ததும் அல்லாது… இயல்பாக எந்த தயக்கமும் இன்றி அவன் அவளது கையைப் பற்றி இருக்க… ஷிவானி தான் தடுமாறிப் போனாள்.

அவளது திடீர் அமைதி புரியாத புகழ், “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணுமா? பிரெண்ட்ஸ் விட்டு பிரியறது கஷ்டமா இருக்கா?” என்று கேட்க,

“இல்ல போகலாம்… நான் இவங்களை அப்பறம் மீட் பண்ணிக்கறேன்” என்று அவள் சொல்லவும், அவளைப் பார்த்து அவனது மென்மையான புன்னகையை சிந்தியவன்,

“ஓகே மேடம்… சீ யூ…” என்று அவர்களிடம் விடைப்பெற்று, அவர்களை சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, ஷிவானியும் தனது தோழிகளிடம் விடைப்பெற்று, அவனுடன் நடந்தாள்.

இன்னமும் தான் ஷிவானியின் கையை பிடித்திருப்பதை உணராத புகழ், காருக்கு அவளை அழைத்துச் சென்றான். காரில் அவள் ஏறியதும், அவளது பையையும், அவர்கள் கொடுத்த பெரிய கிஃப்ட்டையும் பின் சீட்டில் போட்டவன், தானும் காரில் ஏறி அமர்ந்தான்.

ஷிவானி அமைதியாக வரவும், “என்ன வணி? அது எப்படி படிச்சது எல்லாம் மறக்கும்? அது தான் நீ கடைசி நிமிஷம் வரை படிக்கவே இல்லயே…” புகழ் கேலி செய்தாலும், அவனது முகம் சாதாரணமாகவே இருக்கவும், ஷிவானி அவனை சங்கடமாகப் பார்த்தாள்.

“இந்த மேடம் இதை எல்லாம் இவர்கிட்ட சொல்லியே ஆகணுமா? நான் வேர காலையில ஓவரா பேசி வச்சேனே…” என்று ஷிவானி மனதினில் நினைத்துக் கொள்ள, புகழ் பதிலுக்காக அவளது முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் எதுவோ தீவிர யோசனையில் இருப்பதைப் பார்த்தவன், “என்ன இன்னைக்கு எக்ஸாம் சரியா செய்யலையா?” வருத்தமாகக் கேட்க,

“இல்லையே…” ஷிவானியின் பதில் பட்டென்று வந்தது.

“சரியா பண்ணலையா? விடு… பார்த்துக்கலாம்…” அவன் சமாதானப்படுத்த,

“இல்லயே…” மீண்டும் அவள் அதே பதிலைச் சொல்லவும், புகழ் அவளைப் பார்க்க,

“ரோட்ல வண்டியை ஓட்டும் போது ரோடைத் தான் பார்க்கணும்… வணியைப் பார்க்கக் கூடாது… அப்பறம் இந்த வணி… சட்னி ஆகிடும்…” என்று அவள் சொல்லவும், அவளது கையில் பட்டென்று ஒரு அடி விழ, ஷிவானி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

“நல்ல நாள்ல என்ன பேசறதுன்னு இல்ல…” என்று கண்டித்தவன்,

“ஒழுங்கா படின்னு சொன்னேன்… கேட்டா தானே…” என்று மேலும் கடுகடுக்க, அப்பொழுது தான் ‘தான் என்ன பேசினோம்?’” என்று ஷிவானி யோசிக்கத் தொடங்கினாள்.

யோசித்தவள் நாக்கை கடித்துக் கொள்ள, அவளை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தவன், “சரி விடு.. எக்ஸாம் சரியா எழுதலைன்னா பார்த்துக்கலாம்…” என்று புகழ் விட்டுக் கொடுக்கவும்,

“இல்லையே… நான் எக்ஸாம் நல்லா எழுதி இருக்கேனே… அதான் நான் நல்லா எழுதி இருக்கறதா எங்க மேடம் சொன்னாங்களே… கொஞ்ச நேரம் தான் எல்லாம் மறந்தா மாதிரி இருந்தது… அப்பறம் எல்லாத்துக்கும் டாப்பா ஆன்சர் எழுதிட்டேனாக்கும்…” ஷிவானி கண்களை உருட்டி, கையை ஆட்டிச் சொல்லவும், இப்பொழுது முழிப்பது புகழின் முறையாக மாறியது.

“ஹ்ம்ம்… நான் இன்னைக்கு எதுலையும் தப்பா ஆகிடக் கூடாதுன்னு முன்னாடியே படிச்சு வச்சி இருந்தேனே… காலையில எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்த போது கொஞ்சம் ஒரு மாதிரி என்னன்னே புரியாம கண்ணை கட்டி காட்டுல விட்டது போல இருந்தது… ஒருமாதிரி… பபடப்பா இருந்துச்சு.. அப்படி” அவன் பதிலுக்கு ஏதாவது சொல்வான், அப்பொழுது அவன் ‘வணி’ என்று அழைக்காமல், ‘ஷிவானி’ என்று அழைத்தது தனக்கு ஏதோ போல் இருந்தது என்று சொல்ல வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டு, தனது மன உணர்வுகளை அவனிடம் பகிர, ஒரு ‘ம்ம்’முடன் கேட்டுக் கொண்டே வந்தவன்,

“உனக்கு குடிக்க ஜூஸ் வாங்கிட்டு வந்தேன்… போய் இன்னும் ஏதோ மாமா செய்யற சடங்கு இருக்காம்… அது முடிச்சிட்டு தான் சாப்பாடுன்னு சொன்னாங்க… அதனால கொஞ்சம் குடி… பசி தெரியாது..” என்று சொல்லவும், அவளுக்கு சொத்தென்று ஆகியது.

“ரொம்ப முக்கியம்… சரியான சாமியாரா இருப்பாரோ?… இருக்கும் இருக்கும்… பின்ன… நிச்சயம் முடிஞ்சா அவனவன் பொண்ண எங்க கூட்டிட்டு ஊரைச் சுத்தலாம்ன்னு ப்ளான் போட்டுவானுங்க… இவரு போன் பேசக் கூட நேரமில்லாம சுத்தினவராச்சே..” என்று மனதினில் சலித்துக் கொண்டே, அந்த வெயிலுக்கு அவன் சில்லென்று வாங்கி வைத்திருந்த ஜூசை எடுத்து மடமடவென்று குடித்து முடித்து, காரின் ஏ.சி.யை அதிகப்படுத்திவிட்டு, இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிய நொடியே, உறக்கம் அவளை தன்னுள் இழுத்துக் கொண்டது.

அது ஒரு சிக்னல் நிறுத்தம் என்பதால், வண்டியை நிறுத்திய புகழ், அவளை நெருங்கி, அவளது சீட்டை நன்கு சாய்த்து விட, உறக்கத்தில் இருந்தவள், ‘தேங்க்ஸ் இனியன்…’ என்று கண்களைக் கூடத் திறக்காமல், நன்றாக சாய்ந்துக் கொண்டு உறங்க, அவளது சிறுபிள்ளைத் தனத்தைக் கண்ட புகழ் அவளை ரசிக்கத் தொடங்கினான்.

அவளது தலையில் சூடி இருந்த பூக்களை மெல்ல வருடியவன், ஸ்டாஃப் ரூமில் அவள் பேசியதை நினைத்து, தனக்குள் சிரித்துக் கொண்டு, சிக்னல் மாறவும் காரை கிளப்பிக் கொண்டு மண்டபத்திற்குச் சென்றான்.

வாயிலேயே சசியும், அவளது தாய் மல்லிகாவும் அவர்களுக்காக காத்திருக்க, கார் நிற்பதற்குள் அவளைத் தேடிய சசி, காரில் அவளைக் காணாது, புகழ் முதலில் இறங்கவும், “எங்க மாப்பிள்ளை அவ… நீங்க போறதுக்கு முன்னாடி அப்படியே சினிமாவுக்கு கிளம்பிப் போயிட்டாளா?” என்று கேட்கவும்,

அவருக்கு பதில் சொல்லாமல், “ஹ்ம்ம்… இது வேற செய்வா போல இருக்கே… இவளை கட்டி மேயக்கறதுக்கே நான் p.Hd பண்ணனும் போலயே” என்று புகழ் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

“சொன்னா… அன்னைக்கே சொன்னா… ‘நீ வேணா பாரு… எங்க தளபதி படம் ரிலீஸ் ஆகி இருக்கு… எக்ஸாம் எழுதிட்டு என் பிரெண்ட்ஸ் கூட சினிமா போயிட்டு தான் நான் மண்டபத்துக்கு வரப் போறேன்’னு சொன்னா… பாருங்க அப்படியே செய்து வச்சிருக்கா கழுதை…” என்று அவர் திட்டத் தொடங்கி இருந்தார்.

கார் நின்றதை உணர்ந்து, உறக்கம் களைந்து எழுந்து வந்த ஷிவானியைப் பார்த்து, அவரது வாய் தானாக மூடிக் கொள்ள, அங்கு நின்று அவளையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், புகழைத் திரும்பி முறைக்க, புகழும் சிரிப்பை அடக்க முடியாமல் புன்னகைத்து வைக்க, விக்ரம் புகழை நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க, ஷிவானி சசியை நெருங்கினாள்.

“என்ன நான் சினிமா போயிட்டேன்னு பயந்து இங்க புலம்பிட்டு இருக்கியோ? கொஞ்சம் கேப் கிடைக்கக் கூடாதே… உட்கார்ந்து கிடா வெட்ட ஆரம்பிச்சிருவீங்களே… இன்னிக்குள்ள நான் சினிமாவுக்கு போகல… நான் ஷிவானி இல்ல…” சசியின் காதில், சூளுரைத்துவிட்டு மணமகள் அறைக்குள் சென்றவளை, சசி துரத்திக் கொண்டு ஓட, இருவருக்கும் இடையில் நடந்த சம்பாஷனை புரியாமல், புகழ் மல்லிகாவையும், விக்ரமையும் பார்த்துக் கொண்டு நின்றான்.     

 

16 COMMENTS

LEAVE A REPLY