SHARE

மௌனம் என்றொரு மொழி – 1 

First episode of the New novel — Start reading now …

This episode of this story moves with the introduction of hero and heroine and their marriage… characters of the lead pair… 

கொட்டிக்கிடக்கும் வார்தைகளை 

எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு 

அவளின்  மௌனத்தில் 

ஒளித்து வைத்திருக்கும் 

ஆயிரம் கேள்விகளை  

என் உள் மனதெங்கிலும் 

பதியம் போட்டு செல்கிறாள்!!!

 

தொலைக்காத பொக்கிஷம் 

இவளென 

ஒவ்வொரு நொடியும் 

கூப்பாடு போடும் 

என் மன ஓலங்கள் 

வெளியில் கேட்பார் இல்லை தான் !!

 

எனதாய் நினைத்த இதயம் 

இப்போதெல்லாம் 

அடம் பிடிக்க பழகிக் கொண்டதால் 

அவள் மட்டுமே 

எனக்கு பிடித்தவளாய் 

இருக்கிறாள் !!

என்றும் இருப்பாள் !!

 

அவள் நிழலையே  தொடரும் 

கால் தடங்கள் ,

சில 

இரகசியங்களை தாங்கிய படி 

பின் தொடரும் 

இந்த மௌன மொழி 

காதல்கவிதை  !!

 

 

அந்தத் திருமண மண்டபம் கல்யாண பரபரப்பில் சுழன்றுக் கொண்டிருந்தது. பட்டுப் பாவாடைகள் சரசரக்க சின்னஞ்சிறு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்க, ‘புகழினியன் வெட்ஸ் சிவானி’ என்று தங்க நிற எழுத்துக்கள் மெரூன் நிற பட்டுத் துணியில் மின்னிக் கொண்டிருக்க, மேளமும் நாதஸ்வரமும், அந்த இனிய வேலையை இனிமையாக்கிக் கொண்டிருக்க, உறவினர்களில் பாதி பேர் அதை ரசித்துக் கொண்டும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த உறவுகளின் அளவல்களும்… இவை தானே ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடப்பதற்கான முக்கிய அடையாளம்… 

ஹ்ம்ம்… விட்டுப் போயிற்றே… மணமகளைப் பெற்றவர்களின் பரபரப்பு… அதுவும் தவறாமல் நடந்துக் கொண்டிருந்தது.

“அய்யரே… சீக்கிரம் எல்லாம் ரெடி பண்ணுங்க… முஹுர்த்த நேரம் வந்துடப் போகுது… கொஞ்சமும் லேட் ஆகாம எல்லாம் சரியான நேரத்துல நடக்கணும்… கல்யாணம் முடிஞ்சு பொண்ணு எக்ஸாம் எழுத காலேஜ் போகணும்…” என்று பெண்ணின் தந்தை பாஸ்கர், கையைப் பிசைந்துக் கொண்டு, அய்யரை அவசரப்படுத்த,

“அதுக்கெல்லாம் இன்னும் நேரம் இருக்கு சுவாமி… மொதல்ல மாப்பிள்ளை பையன கூட்டிண்டு வாங்கோ…” என்று அவர் சொல்லிவிடவும்,

‘சம்பந்தியம்மா… மாப்பிள்ளை ரெடின்னா கூட்டிட்டு வாங்க…” என்று புகழின் தாய் மல்லிகாவிடம் அவர் அதையே திருப்பிப் படிக்க, மல்லிகா தனது தம்பியிடம் சொல்ல, அவரும் மாப்பிள்ளையின் அறையை நோக்கிச் சென்றார்.   

“சசி… சீக்கிரம் போய் சிவா குட்டி ரெடியான்னு பாரு… அப்பறம் எல்லாத்துக்கும் லேட் ஆகிடும்…” என்று தனது மனைவியையும் பாஸ்கர் அவசரப்படுத்த, அவரும் வேகமாக பெண்ணின் அறையை நோக்கி ஓடினார்.    

மணமகன் அறை…

பட்டு வேஷ்டியை கட்டிக் கொண்டு, தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த புகழ், அருகில் இருந்த தன் நண்பனைத் திரும்பிப் பார்க்க,

“நல்லா தாண்டா இருக்க…  இன்னும் எத்தனை நேரம் கண்ணாடியையே முறைச்சு முறைச்சுப் பார்ப்ப… கீழ டைம் ஆகுதுன்னு அங்க கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க… சீக்கிரம் வா.. கல்யாணம் முடிஞ்ச உடனே ஷிவானிக்கு எக்ஸாம் எழுதப் போகணும்… அதனால நீ லேட் பண்ணாதே…” அவனது நண்பன் விக்ரம் சொல்லவும், புகழ் இதழ் பிரிந்தும் பிரியாமலும் புன்னகைத்தான்.

“ஏண்டா இன்னமுமா நீ இந்த அளவுச் சிரிப்பை நிறுத்தல.. பாவம்டா அந்தப் பொண்ணு… உன் சிரிப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கப் போகுது… நீயானா கஞ்சத் தனமா… ரேஷன் போல… லிமிட்டா சிரிக்கறதைப் பார்த்து மிரளப் போறா…” என்று அவன் கிண்டல் செய்ய, அதற்கும் அவனது ட்ரேட்மார்க் சாந்தமான புன்னகையையே உதிர்த்தவன், அவனது மாமா மாலையை எடுத்துக் கொண்டு வரவும் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“புகழு.. ரொம்ப நல்லா இருக்குப்பா… ராஜா மாதிரி இருக்க… சரி கொஞ்சம் தலையை குனி.. மாலையை போட்டு உன்னை கூட்டிட்டு போறேன்… முஹுர்த்ததுக்கு நேரமாகுது… அப்பறம் நம்ம மருமக எக்ஸாம் வேற எழுதப் போகணுமே..” என்று அவரும் சொல்லவும்,

“அதுக்குத் தான் நான் அம்மாகிட்ட கல்யாண தேதியை மாத்தி வச்சிக்கலாம்ன்னு சொன்னேன்.. கேட்டாத் தானே… இன்னைக்கு தான் நாள் நல்லா இருக்காம்… நாங்க அமோகமா இருப்போம்ன்னு சொல்லி வாயை அடைச்சிட்டாங்க… இந்த நாளை விட்டா வேற நாளே இல்லையாம்… பாவம் அவ.. என்ன படிச்சு இருக்காளோ? என்ன போய் எழுதப் போறாளோ?” புகழின் பதிலில், அங்கு சுற்றி இருந்தவர்கள் அனைவருமே அவனை வாயைப் பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்குக் காரணம் இது தான்… புகழ் சமீபத்தில் பேசிய மிகப் பெரிய வாக்கியம் இது… அதுவும் ஷிவானியைப் பற்றி அவனது கவலையைக் கண்ட அனைவருமே வார்த்தைகளை மறந்து தான் இருந்தனர்.

திருமணத்திற்கு பெண் பார்க்கச் சென்ற போதே, புகழின் முதல் கண்டிஷன், ‘இது தான் நான் முதன்முதலா பொண்ணு பார்க்கப் போறது… பெண் எப்படி இருந்தாலும் அவள் தான் என் மனைவி… எனக்கு ரதியோ ரம்பையோ தேவை இல்லை… நல்ல பெண்ணா மட்டும் இருந்தா போதும்’ என்பதே. அதைக் கேட்ட அவனது தாய் அவனை மேலும் கீழும் பார்க்க, அந்த பார்வை புரியாமல் அவன் கிளம்ப எத்தனித்தான்.

“இது என்னடா இது இவன் இப்படி சொல்றான்… பொண்ணை இவன் என்னவோ பார்க்காத மாதிரியே கண்டிஷன் போடறானே… அந்த மனுஷன் என்னன்னா.. இவன் பெண்ணை பார்த்து இருப்பாங்கற மாதிரியே பேசினாரே.. ஒருவேளை பொண்ணு நல்லா இருக்காதோ?” என்று புலம்பியபடி, அவனது தாய் மல்லிகா, பெண் பார்க்கக் கிளம்பினார்.

ஷிவானியைப் பார்த்த மல்லிகாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. மெல்லிய கொடி போல, அழகிய பதுமை போல… துலக்கி வைத்த குத்துவிளக்கு என்பார்களே அதே போல இருக்கவும், அவருக்கு மிகுந்த சந்தோஷம். ஏற்கனவே தெரிந்தவன் என்பதால் அவனுக்கு காபி கொடுக்கும் பொழுது ஷிவானி புகழைப் பார்த்து புன்னகைக்க, அப்பொழுது தான் அவளைப் புதிதாக பார்ப்பது போல புகழ் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த வீட்டிற்கு தொழில் விஷயமாக பலமுறை அவன் வந்திருந்தாலும்… ஷிவானியைக் கடந்து சென்றிருந்தாலும் கூட அவளை அவன் கவனித்துப் பார்த்ததும் இல்லை… நின்று பேசியதும் இல்லை… அப்படி இருக்க, அவனது பார்வையில் தவறில்லை தான்.

அவனது பார்வையைக் கண்ட ஷிவானி நாணத்தில் முகம் சிவந்து, நகர்ந்து செல்ல, அவளது முகத்தில் இருந்தே அவளின் சம்மதத்தை தெரிந்துக் கொண்ட பெற்றவர்கள், நிச்சய தேதியையும், கல்யாண தேதியையும் குறித்தனர்.

ஷிவானி முதுகலைப்பட்டப் படிப்பை படித்துக் கொண்டிருந்ததால், அவளது பரீட்சை முடிந்தே திருமணம் என்று இரு தரப்பும் சொல்லிவிட, அதற்கு தோதான தேதியை அவர்கள் பார்த்தனர்.

புகழ் ஷிவானி திருமணத்திற்கு பொருத்தமான நல்ல நாள் என்று குறிக்கப்பட்ட இரண்டு தேதிகளில் ஏப்ரல் மாதம் பரிட்சைக்கு இடையூறாக இருக்கும் என்று அதை விட்டு, மே மாதத்தில் இருந்த தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

பரீட்சை முடிந்துவிடும் என்று அவர்கள் நினைத்திருக்க, அந்தமுறை வந்த பொதுத் தேர்தலின் காரணமாக, பரீட்சைகள் தள்ளிச் சென்று, அவர்கள் திருமண நாள் அன்று அவளது இறுதித் தேர்வின் அட்டவணை மாட்டிக் கொண்டது. வேறு தேதிகள் அவர்களுக்கு பொருந்தாமல் போக, வேறு வழியின்றி திருமணம் முடிந்து அன்றே அவள் பரிட்சையும் எழுதட்டும் என்று மல்லிகா சொல்லிவிட, குறித்த நாளிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.

நிச்சயம் முடிந்த நாளில் இருந்தே தான் உண்டு தன் வேலையுண்டு என்றே புகழ் சுற்றிக் கொண்டிருந்தான். ‘ஷிவானியை பார்க்கச் சென்றாயா?’ என்ற நண்பர்களின் கேள்விக்கு ஒரு தோள் குலுக்களோடு, மறுப்பாக தலையசைத்தான்.

வழக்கம் போல ஷிவானியின் வீட்டிற்கு வேலை விஷயமாக சென்றாலும், ஒருமுறை கூட ஷிவானியிடம் பேச முயலாதது அவனது நண்பர்களுக்கு தெரிந்த ஒன்றே.

இந்த ஆறு மாதங்களாக அப்படி இருந்தவன், இப்பொழுது ஷிவானியைப் பற்றி கவலையாகப் பேசும் போது, ஆச்சரியத்தில் வார்த்தைகள் எங்கிருந்து வரும்?

“அந்தப் பொண்ணு மேக்கப் பண்ணிக்கிட்டே படிச்சிட்டு இருக்குன்னு அவங்க அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாங்க புகழு.. அதனால நீ கவலைப்படாதே… நீ வா… நேரமாச்சு..” என்று அவனது தாய் மாமன் சொல்லவும், புகழ் அவருடன் நடக்க, விக்ரமும், புகழின் மீதி நண்பர்களும் அவனுடன் நடந்தனர்.

சராசரி ஆண்களின் உயரத்தை விட சற்று உயரமாகவும், ஒல்லியும் அல்லாமல், பெருத்த தோற்றமும் அல்லாமல், கட்டுக் கோப்பான உடல் வாகுடன், உழைப்பு தந்த வெற்றியின் கம்பீரத்துடன் நடந்து வந்த தனது மருமகனைப் பார்த்த பாஸ்கர், அவனது அருகில் சென்று கையைக் குலுக்கினார்..

அதே அளவான புன்னகையை சிந்திவிட்டு, மணமேடையில் அமர்ந்த புகழின் பார்வை கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் சென்று மீண்டது. மணி ஏழு தான் ஆகி இருந்தது.. மேடைக்கு அருகில் இருந்த ஷிவானியின் அறையை நோக்கி அவன் பார்வை சென்று மீள, அவனது உயிர் நண்பனான விக்ரம் அதை கவனித்து ஆறுதல் அடைந்தான்.

புகழின் நண்பர்கள் பட்டாளம் ஐந்து பேரைக் கொண்டது. மற்ற நால்வரும் கலகவென்று பேசிக் கொண்டிருந்தாலும், புகழ் மெல்லிதான புன்னகையோடு அவர்களின் விளையாட்டை, அரட்டையை ரசித்துக் கொண்டிருப்பான். கலகலவென்று பேசும் ரகம் அல்ல அவன்… தனது உணர்வுகளைக் கூட வெளியில் காட்டாமல், தனக்குள்ளே புதைத்துக் கொண்டு, அதே சிறு சிரிப்புடன் உலா வருபவன்.

இவன் இது போல இருப்பது அவனது நண்பர்களுக்கு சிறு பயத்தையே கொடுத்தது. ஷிவானியைப் பற்றி அவர்களுக்கு தெரிந்த வகையில், மிகவும் கலகலப்பான பெண்.. பேச்சை நிறுத்துவது என்பது அவள் உறங்கும் பொழுது தான்… அப்படி ஒரு பெண்ணுக்கு புகழைப் போன்ற அமைதியானவன் பொருந்துவானா? ஷிவானியின் கலகலப்பை புகழ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அந்த பெண் இவனது அமைதிக்குப் பழக வேண்டுமே… முக்கியமாக புகழுக்கு காதல் என்ற ஒரு உணர்வு புரியுமா? ஷிவானியிடம் அவனுக்கு அன்பிருக்குமா?”  என்றெல்லாம் அவர்கள் சிந்தித்து நண்பனின் வாழ்வைக் குறித்து கவலைக் கொள்ள, இந்த ஒரு சிறு கண்ணசைவே, புகழுக்கு அவள் மீது இருக்கும் அன்பை தெரிவிக்க, தாங்கள் பட்ட கவலைகள் எல்லாம் வீண் என்பது போல விக்ரமிற்கு தோன்றியது.

மணமகளின் அறை…

“சிவா கண்ணு… காபி குடிக்கறியா? முகம் எல்லாம் வாட்டமா இருக்கு…” என்று அவளது தாய் கேட்டுக் கொண்டிருக்க,

“அதெல்லாம் வேண்டாம்மா… இன்னும் மேடைக்கு கூட்டிட்டு போக நேரம் இருக்கு இல்ல… எனக்கு பாட்டில் ஜூஸ் வேணும்… தொண்டை வறண்டு போகுது…” தனது கையில் இருந்த புத்தகத்தில் இருந்து கண் எடுக்காமல் அவள் கேட்கவும், சசி அவளை முறைத்துக் கொண்டு நின்றார்.

அவரிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும், ஷிவானி நிமிர்ந்துப் பார்க்க, “தலைக்கு வேற குளிச்சு இருக்க… இப்போ ஜூஸ் வேறயா? இன்னொரு டம்ப்ளர் காபி வேணா தரச் சொல்றேன்… குடிச்சிட்டு படி… என்ன எழுதப் போறியோ? ஃபெயில் ஆகாம இருந்தா சரி..” என்று அவளிடம் சொன்னவர்,

“புடவை எல்லாம் கட்டியாச்சு… இன்னும் தலையலங்காரம் தானே… அதை சீக்கிரம் செய்துடுங்க.. மாப்பிள்ளை மேடைக்கு வந்தாச்சு…” என்று அவளுக்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தவரிடம் சொன்ன சசி, வெளியில் சென்று மறக்காமல் அவளுக்கு ஒரு காபியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பாஸ்கரின் அருகில் சென்று நின்றார்.   

அய்யர் சொல்லும் சடங்கை எல்லாம் புகழ் செய்துக் கொண்டிருக்க, “பொண்ணை வரச் சொல்லுங்க…” அய்யர் குரல் கொடுக்கவும், மீண்டும் புகழின் பார்வை ஷிவானியின் வரவை நோக்கி திரும்பியது.

“சிஸ்டர் வருவாங்க புகழ்… அவசரப்படாதே…” விக்ரம் குனிந்து அவனது காதுக்கருகில் சொல்ல, அவனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தவன்,

“எக்ஸாம்க்கு டைம் ஆச்சுடா… அங்க போடோக்ராஃபர் போட்டோ எடுக்கறேன்னு லேட் பண்ணிட்டு இருக்காங்க பாரு” எனவும், விக்ரமுக்கு சொத்தென்று ஆகியது.

“அட லூசே… இதுக்குத் தானா நான் ஒரு பெருமூச்சு விட்டு என்னோட மூச்சை வேஸ்ட் பண்ணினேன்.. விட்டா இவனே கூட்டிட்டு வந்து கழுத்துல தாலிய கட்டிட்டு ஷிவானியை காலேஜ்க்கு கூட்டிட்டு போயிடுவான் போல இருக்கே… தத்தி… தத்தி… இவ்வளவு அழகான பொண்ணு… அழகா டிரஸ் பண்ணிட்டு வருதே… அதை சைட் அடிப்போம்ன்னு இல்லாம… எக்ஸாம் அது இதுன்னுகிட்டு…” என்று புகழை முறைத்துக் கொண்டே, அவனை மனதில் திட்டிவிட்டு அவன் அருகே நின்றுக் கொண்டான்.  

“போதும் மனோ… டைம் ஆச்சு.. சடங்கெல்லாம் முடிக்க நேரமாகிடும்…” பாஸ்கர் சொல்லவும், ஷிவானியை மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வர, மீண்டும் புகழின் பார்வை அவளிடம் திரும்பியது.

“சந்தைக்கு போனும்… ஆத்தா வையும்ன்னு பதினாறு வயதினிலே கமலஹாசன் போல, எக்ஸாமுக்கு நேரமாச்சு… சீக்கிரம் வந்து உட்காரு.. தாலி கட்டணும்ன்னு சொல்லப் போறான் போல..” விக்ரம் அருகில் இருந்த நண்பனிடம் புகழை கேலி செய்துக் கொண்டிருக்க, புகழோ, அழகு தேவதையென வந்த ஷிவானியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அருகே வந்து அமர்ந்ததும், அவளுக்கு இடம் விட்டு சற்று தள்ளி அமர்ந்தவன், அவளைப் பார்த்து தனது புன்னகையை சிந்த, ஷிவானியும் மெல்லிய இதழ்களை விரித்து பதிலுக்கு புன்னகைத்து, நாணத்துடன் தலை குனிந்தாள்.   

அவன் அருகே அமர்ந்ததும், ஷிவானியின் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. இத்தனை நேரம் இல்லாத படபடப்பு இப்பொழுது ஒட்டிக் கொள்ள, முகத்தில் முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கியது.

நேரத்தை கடத்தாமல் சடங்குகளை முடித்தவனின் முன்பு, மஞ்சள் தேங்காயின் மீது வைத்த தாலி சரடு நீட்டப்பட, அதை எடுத்துக் கொண்டு, ஷிவானியின் முகத்தைப் பார்த்தான். அவனுக்காகவே காத்திருந்தவள் போல அவள் விழியை மட்டும் அவனை நோக்கித் திருப்பி, தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் அருகே எடுத்துச் சென்றவன், அதை அவள் கழுத்தில் வைத்து ஒரு முடிச்சிட, மீதமுள்ள முடிச்சை அவனது சகோதரி போட்டு முடிக்க, செல்வி ஷிவானி… திருமதி ஷிவானியாக மாறிப் போனாள்.

அக்னியைச் சுற்றி வலம் வந்தவர்கள், தாய் தந்தைக்கு பாத பூஜை செய்து முடித்து, பெரியவர்களிடம் ஆசிர்வாதமும் வாங்கி முடிக்க, நேரம் எட்டே முக்கால் எனக் காட்டியது.

“வணி… உனக்கு எக்ஸாம்க்கு வேற டைம் ஆச்சே.. நீ இன்னும் சாப்பிடக் கூட இல்ல…” என்று இருவருக்கும் நிச்சயித்த நாளில் இருந்து, ஒரு வார்த்தை கூட பேசாதவன், முதன்முதலாக அவளை அழைத்துச் சொல்லவும், அவன் தன்னை ‘வணி’ என்று அழைத்துப் பேசியதைக் கேட்ட ஷிவானிக்கு கால்கள் ஆகாயத்தில் பறந்தது.

“ஹ்ம்ம்…” வாயில் இருந்து வார்த்தைகள் வர மறுக்க, ஷிவானி மண்டையை உருட்டவும்,

“அப்போ… சீக்கிரம் போய் டிரஸ் மாத்திட்டு வா… டிபன் சாப்பிட்டு கிளம்பலாம்…” என்று அவன் அவசரப்படுத்தவும், ஷிவானி திருதிருவென விழித்தாள்.

“என்னாச்சு?” அவளது முழியைப் பார்த்து புகழ் கேட்கவும்,

“இல்ல… நம்ம வீட்டுக்கு முதன்முதலா இந்தப் புடவையில தான் வரணும்னு அம்மாவும் அத்தையும் சொல்லிட்டு இருந்தாங்க…” என்று அவள் மென்று முழுங்கவும், புகழ் தனது தாயைத் திரும்பிப் பார்த்தான்.

“ஆமாடா.. இதே போல போனா தானே நல்லா இருக்கும்… திரும்ப வந்து மாத்திட்டு இருக்க டைம் இல்ல தம்பி… அவ வந்த உடனே சாப்பிட்டு கிளம்பத் தான் நேரமும் சரியா இருக்கும்… மதியத்துக்கு மேல நேரம் நல்லா இல்ல..” அவனது தாய் சொல்லவும், அவரை முறைத்தவன், ஷிவானியை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.

உடல் முழுவதும் ஜரிகையில் வேயப்பட்டிருந்த புடவையும், தலையில் பூ அலங்காரமும், கழுத்து முழுவதும் நிறைந்திருந்த நகைகளையும் பார்த்தவன், “இப்படியே போனா எல்லாரும் வேடிக்கைப் பார்க்க மாட்டாங்களா?” என்று கேட்க, ஷிவானியின் வாய்ப் பூட்டு அவிழ்ந்தது.

“நீங்களும் இதே டிரஸ்ல என்னை காலேஜ்ல கொண்டு விடுங்க… அப்போ நம்ம ரெண்டு பேரையும் சேர்ந்தே வேடிக்கைப் பார்ப்பாங்க… நாமளும் ஊர்வலம் போனா மாதிரி இருக்கும்…” துடுக்கென ஷிவானி சொல்லவும், அவளிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்ப்பார்க்காத புகழ் இப்பொழுது ‘ஞே’ எனப் பார்க்க, அவனது முகத்தைப் பார்த்த விக்ரமிற்கு சிரிப்பு பொங்கியது.

“நானுமா?” புகழ் கேட்க, இப்பொழுது பேசியதற்கே அவளது தாயிடம் இருந்து கிள்ளு வாங்கி இருந்த ஷிவானி,

‘இதென்ன கேள்வி? இப்போவாவது நான் என் ஆளை பிரெண்ட்ஸ் கிட்ட காட்டலாம்ன்னு பார்த்தா பயபுள்ள எஸ்கேப் ஆகிடும் போல இருக்கே… கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி தான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூட ஊரைச் சுத்தணும், பேசணும்னு தோணல.. இப்போ கூடவா?” என்று மனதினில் அவள் நினைத்துக் கொண்டு, வாயை மூடிக் கொண்டு அமைதியாக நிற்கவும், சிறிது யோசித்த புகழ்,

“சரி வா… சாப்பிட்டு கிளம்பலாம்… நேரமாகுது…” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு, உணவு அறைக்குச் சென்றான். வந்தவர்களை கவனிக்கும் பணியில் பெற்றவர்கள் இறங்க, பாஸ்கர் மெல்ல அவர்கள் அருகில் வந்தார்.

“இன்னைக்கே நீங்க காரை ஓட்டிட்டு போக வேண்டாம் புகழ்…. நான் நம்ம டிரைவரை அனுப்பறேன்…” என்று சொல்ல,

“அதெல்லாம் பரவால்ல மாமா… நானே கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்…” என்றவன், நேரமாகிவிடுமே என்று வேகமாக உணவை முடிக்க, ஷிவானியோ, மெல்ல ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“இன்னும் என்னம்மா வேணும்?” உணவு பரிமாறுபவர் வந்து கேட்க,

“ஸ்வீட் போடுங்க… ரொம்ப நல்லா இருக்கு…” என்று பாராட்டிக் கொண்டே, சப்பு கொட்டிக் கொண்டு உண்டவளைப் பார்த்த புகழுக்கு அடுத்த ‘ஞே’ என்ற முழி பரிசாகக் கிடைக்க, விக்ரம் அடக்க முடியாமல் சிரித்தும் வைத்தான்.

“ஷிவா… பரீட்சைக்கு நேரமாகுதும்மா.. சீக்கிரம் சாப்பிடு… மாப்பிள்ளை சாப்பிடாச்சு பாரு…” பாஸ்கர் பொறுமையாகச் சொல்ல,

“இருங்கப்பா… கல்யாணத்துக்கு போனா தானே இது போல ஸ்வீட் எல்லாம் கிடைக்கும்… வீட்ல அம்மாவை செய்யச் சொன்னா எங்க செய்யறாங்க? உங்களுக்கு சுகர் இருக்கு… வீட்ல செஞ்சா நீங்க அவங்களுக்கு தெரியாம சாப்பிடறீங்கன்னு செய்தே கொடுக்க மாட்டேங்கிறாங்க…” என்று பதில் பேசிக் கொண்டே உண்டவளை என்ன செய்வது என்று புரியாமல், சங்கடமாக பாஸ்கர் புகழைப் பார்க்க, புகழோ என்ன சொல்வதென்று புரியாமல் விக்ரமைப் பார்த்தான்.

‘நீயே சமாளி’ என்பது போல அவன் நிற்க,

“நான் வேணா எங்க அம்மாவை செய்து தரச் சொல்றேன்… இப்போ நேரமாகுது…” என்று புகழ் சொல்லவும், அதற்கு மேல் அவனையும், அந்த ஸ்வீட்டையும் மாறி மாறிப் பார்த்தவள், இலையில் இருந்த ஸ்வீட்டை வாயில் போட்டுக் கொண்டு, கையைக் கழுவிக் கொண்டு, அவனுடன் கிளம்ப மனம் வைத்தாள். அவளது தாய் சசி, அவளுடைய பையை எடுத்துக் கொண்டு வந்து அவள் கையில் கொடுக்கவும், அவரது காலில் விழுந்து வணங்கியவள், “‘ஆல் தி பெஸ்ட்ன்னு’ நீ தான்ம்மா முதல்ல சொல்லணும்..” என்று கேட்கவும்,

“நல்ல எழுதிட்டு வா சிவா…” என்று அது வழக்கம் தான் என்பது போல வாழ்த்தவும், அவளை பார்த்துக் கொண்டிருந்த புகழ், அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

காரில் ஏறி அமர்ந்தவள், வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, “காலேஜ் போற வரை படிச்சிட்டு வரலாம் இல்ல…” புகழ் கேட்கவும், அவனைத் திரும்பிப் பார்த்தவள்,

“எக்ஸாம் போற கடைசி நிமிஷம் வரை படிக்கக் கூடாதுன்னு யாரோ சொல்லி கேள்வி பட்டு இருக்கேங்க… அப்படி படிச்சா படிச்சது எல்லாம் மறந்து போயிடுமாம்… நீங்க கடைசி வரை படிப்பீங்களோ? அப்படி படிச்ச போது உங்களுக்கு அப்படி எதுவும் மறக்கலையா?” ஒருவரியில் அவன் கேட்ட கேள்விக்கு விடாமல் அவளும் தொடர் கேள்விகள் கேட்கவும், புகழ் தலையை இடம் வலமாக அசைத்தான்.

“நீ எப்போ கடைசியா படிச்ச?”

“என்னங்க கேள்வி இது? நான் தினமும் தான் படிக்கறேன்… படிப்பேன்… அதுல என்ன ஃபர்ஸ்ட் படிக்கிறது கடைசியில படிக்கிறது?” மீண்டும் அவள் கேட்ட கேள்வியில், பொறுமையாகவே மீண்டும் புகழ் பதில் கூறினான்.

“நான் கேட்டது… இன்னைக்கு எக்ஸாம்முக்கு எப்போ படிச்சேன்னு?” ஒற்றை வரியில் அவன் கேட்க,

“அதுவா… இந்த எக்ஸாம் ஒழுங்கா செய்யனும்னு அம்மா ரொம்ப சொல்லிட்டே இருந்தாங்க… அதனால ஸ்டடி லீவ்லையே இந்த சப்ஜெக்ட்டை படிச்சு வச்சிட்டேன்… இப்போவும் மேக்அப் பண்ணிக்கிட்டே நான் படிச்சிட்டு இருந்தேன்… அதனால கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்… பயப்படாதீங்க…” அவன் என்னவோ பயந்து கேட்பது போல, அவள் அவனுக்கு ஆறுதல் சொல்ல, புகழ் அவளை புதுப் பிறவியைப் பார்ப்பது போல பார்த்தான்.

“ரொம்ப பேசறேனோ?” திரு திருவென விழித்துக் கொண்டே அவள் கேட்க, அவளது முழியைப் பார்த்த புகழுக்கு சிரிப்பு பொங்கியது. மெல்லிய சிரிப்பை அவன் உதிர்த்துவிட்டு, வண்டியை ஓட்ட,

“கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்… அப்படியே பல்லெல்லாம் உதிர்ந்து போயிடுமோ?” என்று திட்டிக் கொண்டே, அவன் வரும் செய்தியை அவளது தோழிகளுக்கு மெசேஜ் செய்தாள்.

அதற்குள் கல்லூரி வந்துவிடவே, “ஆல் தி பெஸ்ட்…” புகழ் அவளுக்கு வாழ்த்த,

“தேங்க்ஸ் இனியன்…” என்ற நன்றியுடன், கன்றென துள்ளிக் கொண்டு அவள் கல்லூரிக்குள் செல்ல, அவளைப் பார்த்துக் கொண்டே காரில் சாய்ந்து நின்றான், புகழ்.

 

30 COMMENTS

  1. arrambame super ramya. naan padikkum bodhe serichukkittai padichen.rendu perum opposite charecter. ivanga sendhu vazharadhiladhan irukku kadhai. parpom sekkirama next episode update pannunga ramya.

  2. Story starting super sis. Name selection sema. Indha sivani ya enga irunthu pudichinga sis sema character ponga .Waiting for next ud sis.

  3. Such a nice opening Ramya.. Marriage mudicha kaiyyoda exam ezhudha pordhu nalla irukku 👍
    Inikku dhan padikka arambichen.. Iniyan’s amaidhaayana smile and Vani’s kurumbu are too good 👌

LEAVE A REPLY