SHARE

கனவில் வந்தாய்

என தெரியாமல்

அவசரப்பட்டு விழித்து

தொலைத்து விட்டேன்

இனிஎல்லாம் இரவுகள் கொஞ்சமாய்

நீளட்டும்

ஆசை தீர காதலித்து

கொள்கிறேன் !!

 

உணவைக் கொரித்துக் கொண்டிருந்த ஷிவானியைப் பார்த்த மல்லிகாவின் மனதில் சிறு கவலை முளைக்கவே செய்தது. தானும் இந்த வயதைத் தாண்டி வந்தவர் தானே… அவளது முகம் போன போக்கை கண்டு கொண்டவர், “அவனுக்கு அவங்க அப்பா இறந்ததுல இருந்தே…” என்று சொல்லத் தொடங்க, அவரது நிலை உணர்ந்தவள்,

“ஹையோ அத்தை… நான் சும்மா ஏதோ பார்த்துட்டு இருந்தேன்… வேற ஒண்ணும் இல்ல…” என்று சமாளிக்க,

“இல்ல சிவா… எனக்கு அவனைப் பத்தி தெரியாதா? என்னவோ ரொம்ப கூட்டுக்குள்ள போயிட்டான்… எல்லாம் என்னால தானோன்னு எனக்கு ரொம்ப உறுத்திக்கிட்டே இருக்கு சிவா…” என்று கண்கலங்கச் சொன்னவர், தண்ணீரைக் குடித்து தனது துக்கத்தை தொண்டையில் விழுங்கி, தலை குனிந்த நிலையிலேயே இருந்தார்.

அவரது மௌனத்தைக் கண்டு மனம் வருந்தியவள், “அத்தை நான் சாப்பிடறேன் அத்தை… அதுவும் இல்லாம என் கூட சேர்ந்து இனியன் பேசாம போயிடுவாரா என்ன? பேச வச்சிட்டு தான் நான் மறுவேளை பார்ப்பேன்…” ஷிவானி குதூகலமாகச் சொல்ல, மல்லிகாவிற்கும் சிறிது நம்பிக்கை வந்தது.

“அவங்க அப்பா இறந்த அப்பறம் தான் சிவா இப்படி ஆகிட்டான்… அதுவரை அவன் கேலி செய்ய ஆரம்பிச்சிட்டான்னா நமக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே வலிச்சு போயிடும்…” என்று தனது மகனின் புராணத்தை அவர் சொல்லத் தொடங்க, ஷிவானிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“என்ன அத்தை சொல்றீங்க? இனியன் சிரிச்சு பேசுவாரா?” வாயில் இருந்த சாதம் தெரியும் அளவிற்கு அவள் கேட்க,

“ஆமா ஷிவானி.. அவன் அப்படித் தான் பேசுவான்… ஒருநாள் சித்ரா சமையல் செய்யறேன்னு உள்ள வந்து கத்துக்கிட்டா… ‘சாதம் வைக்க என்ன போட்டு இருக்க? பருப்பு தானே… அது தானே வெள்ளையா இருக்கும்? என்ன பருப்பு போட்ட? கடலைப்பருப்பா.. இல்ல உளுத்தம்பருப்பா’ன்னு கேட்டு கிண்டல் செய்துக்கிட்டே சாப்பிட்டு… ரெண்டு வாய் வச்ச உடனே வயிறு வலிக்கற மாதிரி நடிச்சு… எங்களை எல்லாம் அலற வச்சுட்டான்…

அப்பறம் சிரிச்சுக்கிட்டே எழுந்து, ‘இவ சமையலை சாப்பிட்டா இப்படி தானே இருக்கும்?’ன்னு எழுந்தான் பாரு.. சித்ரா அழவே தொடங்கிட்டா… எப்போப் பாரு அவளை வம்பு வளர்க்கணும்… அது தான் பொழுது போக்கே…” என்று சிரித்துக் கொண்டே சொன்னவர்,  

உடனேயே குரல் இறுக, “அவன் இப்படி ஆனது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு… நீ இவ்வளவு கலகலன்னு இருக்கறது தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே… அவனையும் உன்னைப் போல, பழைய படியே மாத்திடு… அப்படியே சீக்கிரம் எனக்கு பேரனையோ பேத்தியையோ பெத்துக் கொடுத்திரு…” என்று மல்லிகா சொல்வதைக் கேட்ட ஷிவானியின் கன்னங்களில் வெட்கப் பூ பூக்க, அதை ரசித்த மல்லிகா மனதில் மகிழ்ச்சி நிரம்பியது.

அதற்கு மேல் ஷிவானியின் மனதில் எழுந்திருந்த சின்னஞ்சிறு வலியும் அவரைது பேச்சினில் மறைய, அதற்குப் பின் வந்த நேரங்கள் முழுவதும் ஷிவானிக்கு சிறப்பாகவே சென்றது.

மாலை சித்ராவும் தனது வீட்டிற்குப் புறப்பட, “சித்ரா அண்ணி… இங்க என்னை தனியா விட்டு நீங்க ஜாலியா இருக்காதீங்க? என்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு போயிடுவாங்க… எனக்கும் போர் அடிக்கும் அண்ணி… அதனால என் முகத்தைப் பார்த்து அத்தைக்கும் போர் அடிச்சிரும்… அடிக்கடி வாங்க…” என்று சொல்லவும், சிரித்துக் கொண்ட சித்ரா,

“கண்டிப்பா… என்ன இந்த அண்ணி எப்போப்பாரு வந்துடறாங்கன்னு நினைக்கிற அளவுக்கு வந்துடறேன் சரியா?” என்று கேட்டு சிரித்துக் கொண்டே புறப்பட, அவள் சென்ற பிறகு, சிறிது நேரம் ஷிவானிக்கு என்னவோ போல் இருந்தது.

காலை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொன்ன பீரோவும், மாலையே வந்து இறங்கவும், “சரி… நம்ம துணியை அடுக்கியாவது வைப்போம்…” என்று நினைத்தவள்,

“அத்தை… பீரோவுக்கு சந்தன குங்குமம் வைங்க… நான் துணியை அடுக்கறேன்…” என்று மல்லிகாவின் அந்த சிறு செயலுக்கே அவள் குதூகலமாக சொல்லவும், மல்லிகாவும், ஷிவானியின் மகிழ்ச்சியில் கலந்து கொண்டு, அவளுக்கு உதவியாக பெட்டியை பிரித்து, அவளது துணிகளை அடுக்க உதவினார். 

ஷிவானி வளவளத்துக் கொண்டே, புகழுடன் சினிமா சென்று வந்த கதையைச் சொல்லவும், “அவனுக்கு சினிமா எல்லாம் போகவே பிடிக்காதும்மா… விக்ரம் தான் வற்புறுத்தி கூட்டிட்டு போவான்… அவனா உன்னை கூப்பிட்டதே சந்தோஷமா இருக்கு?” என்று மல்லிகா வியந்து சொல்லவும்,

“சினிமா பிடிக்காதா? அத்தை… என்னை எல்லாம் விட்டா நான் நல்லா தியேட்டர்லையே குடி இருப்பேன்… சினிமா பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்… அப்போ என்னைப் பார்த்து அலறுவாருன்னு சொல்லுங்க…” சிரித்துக் கொண்டே சொல்லவும், மல்லிகா சிரித்துக் கொண்டார்.    

“அவருக்கு என்ன டிபன் பிடிக்கும்ன்னு சொல்லுங்க அத்தை… அதை அப்படியே சொல்லியும் கொடுங்க.. நீங்க சொல்லித் தருவீங்கன்னு நானும் அம்மாகிட்ட வீராப்பா சபதம் எல்லாம் போட்டுட்டு வந்திருக்கேன்…” என்ற ஷிவானியைப் பார்த்து சிரித்தவர்,

“உனக்கு சொல்லித் தரேன்டா…” என்று வாஞ்சையாக அவளது தலை கோதி சொன்னவரின் கண்களில் மெல்லிய நீர் படலம்…

“என்ன அத்தை இது… எல்லாம் சரி ஆகிடும்…” என்று மல்லிகாவைத் தேற்றியவள்,

“அவர் சீக்கிரம் வந்துடப் போறார் அத்தை… வாங்க நம்ம களத்துல குதிக்கலாம்…” என்று அவரை இழுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் சென்றாள்.    

மல்லிகா செய்யச் சொல்வது போலவே, சப்பாத்தியையும், அதற்கு தோதான குருமாவையும் அவள் செய்தாலும், ஷிவானியின் கண்கள் அடிக்கடி சமையல் அறையில் இருந்த கடிகாரத்தில் சென்று மீள்வதை மல்லிகாவும் கவனித்து கொண்டு தான் இருந்தார்.  

“இந்த புகழ் இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் வந்தா தான் என்ன? இந்த விக்ரமுக்கும் கொஞ்சம் கூட அறிவே இல்ல… அவனை அனுப்பி விடாம உட்கார்த்தி வச்சு அரட்டை அடிச்சிட்டு இருக்கான் போல்…” என்று மல்லிகா திட்டிக் கொண்டிருக்கும் போதே, விக்ரமின் குரல் வாயிலில் கேட்டது.

“நல்லவேளை இவன் கூட்டிட்டு வந்துட்டான் போல… இல்ல புகழ் வர இன்னைக்கும் பதினோரு மணி செய்திருப்பான்… ஏன் தான் இந்த பையன் இப்படி இருக்கானோ?” என்று நினைத்துக் கொண்ட மல்லிகா வேகமாக வாயிலுக்கு விரைந்து, புகழும் வந்திருப்பதை உறுதி செய்து கொண்டு,

“சிவா… விக்ரம் வந்திருக்கான் பாரு… அவனுக்கு ஒரு காபியைப் போட்டு எடுத்துட்டு வாம்மா… அப்படியே விக்ரம் கூட புகழும் வந்திருக்கான்…” என்ற செய்தியை அவர் சொல்லவும், புகழ் அவரை ஒருமாதிரிப் பார்க்க, அவர் சொல்ல வரும் செய்தியை புரிந்துக் கொண்ட விக்ரமோ,

“என்னவோம்மா… உங்க பிள்ளைய வீட்டுக்கு கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சும்மா… சீக்கிரம் சிவா கொடுக்கற காபியைக் குடிக்கணும்… பசி வயித்தைக் கிள்ளுது…” என்று மல்லிகாவிடம் சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவன்,

“சிஸ்டர்… புகழ் மேல இருக்கற கோவத்துல காபியில உப்பை போட்டுடாதேம்மா…” அவன் குரல் கொடுக்கவும்,

“ஓ… இப்படி வேற செய்யலாமோ?” என்று ஷிவானியின் குரலைத் தொடர்ந்து, புகழ் விக்ரமைப் பார்த்து சிரிக்க, விக்ரம் அவனைப் பார்த்து பழிப்புக் காட்டி,

“எனக்கும் சேர்த்து உங்க ஆளுக்கே போடும்மா…” என்று சொல்லவும், ஷிவானி சிரித்துக் கொண்டே காபியை எடுத்துக் கொண்டு வந்து இருவரிடமும் நீட்டினாள்.

“இதுல..” விக்ரம் சந்தேகமாக இழுக்க,

“நீ அவனை சீக்கிரம் கூட்டிட்டு வந்ததுனால உனக்கு சர்க்கரை தான் போட்டு இருப்பா… புகழுக்கு வேணா உப்போட கொஞ்சம் மிளகாய் பொடியையும் போட்டு இருப்பா… அப்படி தானே ஷிவா…” மல்லிகாவின் கிண்டலுக்கு, அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், ஷிவானியை புகழ் பார்க்க, அவளோ குறும்பு கொப்பளிக்க நின்றுக் கொண்டிருந்தாள்.

அவளது முகத்தைப் பார்த்தே புகழ் குடிக்கலாமா வேண்டாமா என்று காபி டம்பளரையும் அவளையும் மாறி மாறிப் பார்க்க, அவனது பார்வை புரிந்தது போல, அவனது கையில் இருந்த டம்பளரை வாங்கியவள், அதை ஒரு மடக்கு குடித்துவிட்டு, அவனிடம் மீண்டும் நீட்ட, ஒரு பெருமூச்சுடன் புகழ் அதை வாங்கிக் குடிப்பதை விக்ரமும் மல்லிகாவும் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“புகழ் சிவா மேல இவ்வளவு பயம் இருக்கக் கூடாது…” விக்ரம் கேலியைத் தொடங்கவும்,

“பேசாம இருடா… அவளுக்கு நீயே எல்லாத்தையும் சொல்லிக் கொடுப்ப போல இருக்கு… நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்..” என்ற புகழ் அறைக்குச் செல்லவும்,

“என்ன சிஸ்டர் வீடெல்லாம் செட் ஆச்சா?” விக்ரம் ஷிவானியிடம் பேசத் தொடங்க,  

“ஹ்ம்ம்… எல்லாம் ஆச்சு அண்ணா… அத்தை இருக்க எனக்கு என்ன பயம்?” என்று கேட்டவள்,

“ஒரு ரெண்டு நிமிஷம்.. நான் அவருக்கு டவல் எடுத்து கொடுத்துட்டு வந்துடறேன்…” என்று வேகமாக அறைக்கு ஓட, அவளுக்கு முன்பே புகழ் கையில் டவலையும், மாற்றுடையையும் வைத்திருக்க, அதைப் பார்த்த ஷிவானிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“ஆடி அசஞ்சு வந்தா.. அவரே தான் எடுத்துப்பாரு… இதுல என்ன உனக்கு ஏமாற்றம்? இதெல்லாம் முன்னையே எடுத்து வச்சிருக்க வேண்டாமா?” என்று தன்னையே கடிந்துக் கொண்டவள்,

“என்ன இனியன்.. என்னை கூப்பிட்டு இருந்தா… நான் வந்து எடுத்து கொடுத்திருப்பேன் இல்ல…” என்று இயல்பாக அவனிடம் பேச்சு கொடுக்க,

“இது என்ன புது இடமா ஷிவானி… என் ரூம்ல இருக்கற என்னோட துணியை நான் எடுத்துக்க என்ன கஷ்டம்?” அவனது பதிலைக் கேட்டவளின் முகம் சுருங்கி விட,

“சாரி… எதோ ஒரு இதுல கேட்டுட்டேன்…” என்று திரும்பி வெளியில் சென்றாள்.

அவளது முக வாட்டம் எதனால் என்று புரிந்துக் கொள்ள முடியாத புகழ், யோசனையுடனே குளிக்கச் செல்ல, ஆவலாக உள்ளே சென்றவளையும், வாடிய முகத்துடன் திரும்பி வருபவளைப் பார்த்த மல்லிகாவிற்கு மனம் துணுக்குற்றது…

“என்ன நடக்குது? ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லையா? ஷிவானி முகம் வாடி இருக்காளே? என்ன ஏதுன்னு எப்படி கேட்கறது?” என்று மல்லிகா கவலையாக நினைத்துக் கொண்டிருக்கும் நேரம், “ஷிவா…” என்ற புகழின் குரலில், ஷிவானியின் முகம் பிரகாசமாக மாற, வேகமாக அறைக்குள் திரும்பிச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவளை தனது கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்,  “வணி… எனக்கு ஒரு குட்டி ஹெல்ப் பண்ணணுமே…” அவன் சொல்லி முடிக்கும் முன்பாகவே,

“என்ன செய்யணும்?” என்று கேட்டவளை தன்னோடு பிணைத்துக் கொண்டவன்,

“இல்ல சிவா.. நம்ம ரூமை கொஞ்சம் மாத்தி வச்சா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கிற? பீரோவும் வச்ச உடனே கொஞ்சம் இடம் கம்மியானது போல இருக்கு… நாளைக்கு மீதி எல்லாத்தையும் நீ உனக்கு பிடிச்சா மாதிரி இடத்தை மாத்தி வை… நான் மதியம் சாப்பிட வரும்போது பீரோவை நகர்த்தித் தரேன்…

வீர தீர சிகாமணி போல அதை நகர்த்தாதே… நான் வந்து செய்யறேன்… புரியுதா?” என்று கேட்கவும், ஷிவானி அவனைப் பார்த்துக் கொண்டே மண்டையை உருட்ட,

அவளது தலையில் கை வைத்து செல்லமாக அழுத்தியவன், “நான் ஏதோ தூங்கறதுக்கு மட்டும் ரூமுக்குள்ள வந்து போயிட்டு இருந்ததுனால ரூம் எப்படியோ இருந்தது… இனிமே அது அப்படி விட முடியாது இல்லையா? என்னோட மகாராணிக்கும் பிடிச்சு இருக்கணுமே… மஹாராணி அப்பறம் எங்க ரூம் போல இல்லன்னு நினைச்சிக்கிட்டா…” புகழ் கிண்டல் செய்ய,

“நக்கல் தானே… என் ரூம் என்னைக்காவது சுத்தமா இருந்து பார்த்திருக்கீங்களா? ரூமை நீட்டா வைன்னு சொல்லிட்டா செய்துட்டு போறேன்… எதுக்கு இப்படி ஹனி தடவின பேச்சு…” என்று சிணுங்கியவள்,

“நாளைக்கு சுத்தம் செய்துடறேன் இனியன்… அப்பறம் இந்த பெட்டியை எல்லாம் மேல வச்சிடலாம்…” என்று அவள் சொல்லவும், செல்லமாக அவளது நெற்றியில் இதழ் ஒற்ற, ஷிவானியின் முகம் மலர்ந்து விகசித்தது.

“சரிங்க… நானே உங்ககிட்ட இந்த டேபிளை எல்லாம் இடம் மாத்தி வைக்கலாமான்னு கேட்க நினைச்சேன்… நீங்களே சொல்லிட்டீங்க… நான் செய்துடறேன்…” குழந்தைக் குதூகலத்துடன் சொன்னவள்,

“நைட்க்கு சப்பாத்தியும் குருமாவும் செய்திருக்கேன்… அத்தை சொல்லிக் கொடுத்தாங்க…” என்று மேலும் சேர்த்துக் கொள்ள, அவளது நெற்றியில் முட்டியவன்,

“சரி… நான் வரேன்… நீ போ…” என்று அனுப்பி வைக்க, முகம் கொள்ளாப் புன்னகையுடன் வெளியில் வந்தவளைப் பார்த்த மல்லிகாவிற்கு சிறிது நிம்மதி பிறந்தது.

“அண்ணா… தட்டு வைக்கிறேன்… சாப்பிட்டு போகலாம்…” என்று ஷிவானி சொல்ல, விக்ரம் வேண்டாம் என்று மறுத்தான்.

“இல்ல அண்ணா… நீங்க சாப்பிட்டு தான் போகணும்…” என்று அவனையும் கட்டாயப்படுத்த,

“நான் ஷிவா நல்லா சமைப்பான்னு சொன்னா நீ கேட்கறியா? வா விக்ரம்…” என்று மல்லிகாவும் அழைக்க,

“வாடா…” என்று புகழும் அழைக்கவும், விக்ரம் அவர்களுடன் உணவருந்தச் சென்றான்.

புகழ் ஏதாவது சொல்வான் என்று ஷிவானி அவனது முகத்தையேப் பார்க்க, அவனோ, உண்பதையே பெரிய கடமையாக செய்துக் கொண்டிருக்க,

“சமையல் செய்து போடுன்னு வாய் நிறைய சொல்லத் தெரியுது… எப்படி இருக்கான்னு சொல்லத் தெரியுதான்னு பாரு…” ஷிவானி மனதினில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.   

“சூப்பர் சிவா…” விக்ரம் வாய் நிறைய பாராட்ட… ஷிவானியின் பார்வை புகழை நோக்கி திரும்பியது.

“இன்னும் கொஞ்சம் குருமா போடு…” புகழ் கேட்கவும், அதை அவனுக்கு பரிமாறியவள்,

“ஒருவேளை இப்படித் தான் தெரிஞ்சிக்கணுமோ?” என்று மனதினில் எண்ணிக் கொண்டாள்.

“சிவா… நீயும் சாப்பிடு.. மணியாகுது…” என்ற மல்லிகா அவளுக்கு தட்டை எடுத்து வைக்க,

“அத்தை… நீங்களும் சாப்பிடுங்க…” என்று ஷிவானி பதிலுக்குச் சொல்லவும்,

“ரெண்டு பேருமே உட்கார்ந்து சாப்பிடுங்க… மணியாகுது… இவ்வளவு நேரம் சாப்பிடாமையா இருந்த?” என்று புகழ் வாய் திறக்கவும், ஷிவானிக்கு உச்சி குளிர்ந்து போனது.

இருவரும் சாப்பிட அமரவும், புகழும் விக்ரமும் மெல்ல உணவை கொறித்துக் கொண்டே, தங்களது புது வியாபாரத்தைப் பற்றி பேசத் துவங்கினர்.

சிறிது நேரம் அதை கேட்டுக் கொண்டே உணவை உண்டு கொண்டிருந்த ஷிவானி… “அய்யடா… அப்படியே ஒபாமாவுக்கு எவ்வளவு லோன் கொடுக்கறதுன்னு பேசுவாங்க போல… ரொம்ப தான் சாப்பாட்டு டேபிள்ல உட்கார்ந்து பிசினஸ் பத்தி பேச்சு… இவங்களை என்ன செய்யலாம்?” ஷிவானியின் யோசனை இவ்வாறாக செல்ல,

“என்ன ஷிவா… இப்படி ரெண்டு சப்பாத்தியை வச்சிட்டு முழிச்சிட்டு இருக்க?” என்று மல்லிகா கேட்கவும்,

“இல்ல அத்தை… சாப்பிடறேன்…” என்று சொன்னவள், யோசனையுடன் விக்ரமைப் பார்க்க,

“ஹையோ… இவ ஏதோ பிளான் பண்றா போல இருக்கே…” என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,

“விக்ரம் அண்ணா… உங்களுக்கு ஸ்பைசி மிர்ச்சி டீ போட்டுத் தரவா? சப்பாத்தி சாப்பிட்டு உடனே அதைக் குடிச்சா சும்மா….” என்று அவள் இழுக்க, அவள் எதையோ புதிதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று புகழ் கவனித்துக் கொண்டிருக்க, ஆனால் அவள் சொல்ல வருவது புரிந்த விக்ரம்,

“அம்மா தாயே… வேண்டாம்… வெட்டிக் கதை பேசாம வீட்டுக்கு கிளம்புன்னு சொல்லு… கிளம்பிடறேன்… அதுக்குன்னு மிர்ச்சி டீயா…” என்று அலறி,

‘புகழ் அதை நீ குடிச்சிட்டு… நல்லா இருந்தன்னா ஆபீஸ்க்கு வா… என்னை இந்த ரிஸ்க்ல எல்லாம் மாட்டி விடாதே…” புகழிடம் மிர்ச்சி டீயை தள்ளிவிட்டு அவன் அவசரமாக எழுவது போல் நடிக்க, அவனைப் பார்த்த ஷிவானி சிரிக்கத் தொடங்க, மல்லிகாவும் அவளுடன் இணைந்துக் கொண்டார்.

புகழும் அவர்களுடன் சேர்ந்து புன்னகைக்க, “சும்மா சொன்னேன் அண்ணா…” என்று ஷிவானி வம்பைத் தொடங்க, விக்ரம் பதிலுக்கு பேச, அந்த இடமே சிரிப்புச் சத்தத்தை நிரப்பியது.

தானும் அந்த உரையாடலில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற சின்ன ஏக்கம் புகழின் மனதில் எழவே செய்தது… அவர்களது நண்பர்கள் பட்டாளத்திலேயே விக்ரம் தான் அனைவரையும் காலாய்ப்பவன்… அவனையே ஷிவானி விழி பிதுங்க வைப்பதை ரசித்துக் கொண்டிருந்தவன், தானும் அவர்களது பேச்சில் கலந்துக் கொள்ள நினைத்தாலும் ஏதோ ஒரு தடை… ஏதோ ஒன்று அவனை பேச விடாமல் செய்துக் கொண்டிருந்தது.

ஒருவழியாக பேசி முடித்து விக்ரம் கிளம்பவும், புகழ் வாயில் வரை அவனுடன் செல்ல, “ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சிருக்கேன் புகழ்.. அம்மாவோட முகத்துலையும் எவ்வளவு சந்தோசம்…” நிறைவாய் சொன்னவன்,

“வரேண்டா… நாளைக்கு பார்ப்போம்… காலையில எட்டு மணிக்கே வந்து உட்கார்ந்துக்காதே… கொஞ்சம் பொறுமையா வா…” என்று வீட்டிற்கு கிளம்ப, உள்ளே வந்த புகழ், மல்லிகா ஷிவானியுடன் எதையோ சிரித்துப் பேசிக் கொண்டிருப்பத்தைப் பார்த்துவிட்டு, தன்னுடைய லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.

புகழும் அறைக்குச் செல்லவும், ஷிவானி சமையல் அறையை ஒதுக்கி வைக்கத் துவங்க, “நிறைய ஆண்கள் இப்படித் தான் சிவா..” என்று மல்லிகா பேச்சு கொடுக்க, ‘என்ன?’ என்பது போல ஷிவானி அவரைப் பார்த்தாள்.

“நிறைய ஆண்கள் சமையல் நல்லா இருக்குன்னு வாயைத் திறந்து பாராட்ட மாட்டாங்க… அவங்க திரும்பத் திரும்ப கேட்கறதுலையே தான் நாம அவங்களுக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சிக்கணும்..” என்று மல்லிகா சொல்லவும், ‘ஹான்…’ என்று ஷிவானி உற்சாகத்துடன் கூறினாள்.

“நானும் அப்போவே இதைத் தான் நினைச்சேன்…” என்று கூறியவள், மல்லிகாவிற்கு உதவ,

“நீ போய் படுடாம்மா… நேரமாகுது…” என்று சொல்ல, மறுப்பாக தலையசைத்தவள், வேலைகளை முடித்துக் கொண்டே அறைக்குச் சென்றாள்.. புகழ் ஏதோ மும்முறமாக வேலை செய்வதைப் பார்த்து, அவள் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்து படிக்கத் தொடங்கினாள்.

“என்னங்க ரொம்ப லேட் ஆகுது… தூங்கலையா?” தூக்கம் வருவது போல இருக்கவும் ஷிவானி புகழிடம் கேட்க,

“இல்ல சிவா… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீ தூக்கம் வந்தா தூங்கு…” என்று வேலையிலேயே கவனமாகச் சொன்னவன், சிறிது நேரம் கழித்து நிமிர்ந்துப் பார்க்க, புக்கைப் படித்துக் கொண்டிருந்த நிலையிலேயே தலை சரிந்து விழ, உறங்கிக் கொண்டிருந்த ஷிவானியைப் பார்த்தவனது மனம் அதற்கு மேல் வேலையில் பதியாமல் அவளிடமே ஓடியது.

“தூக்கம் வந்தா தூங்குன்னு சொன்னேன் இல்ல…” என்று செல்லமாக கடிந்துக் கொண்டவன், அவளது கையில் இருந்து புக்கைப் பிடுங்க, “கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் இஸ் எ…” என்று அவள் அவசரமாக மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல, உறக்கத்தில் இருந்தவள் அரைத் தூக்கத்தில் சொல்லத் தொடங்க, புகழின் சிரிப்பு தான் அதிகம் ஆகியது.

“ஹையோ வணி… நீ எக்ஸாம் முடிச்சாச்சு… கொஞ்சம் நல்லா கண்ணை முழிச்சுப் பாரு…” என்று எழுப்பி,

“வீட்ல அம்மாவை ஏமாத்தறது போலவே செய்யறா பாரு…” மனதிலும் சொல்லிக் கொண்டவன், தனது லேப்டாப்பை எடுத்து வைக்க, ஷிவானி அசடு வழிய அமர்ந்திருக்க, அவளை நெருங்கி,

“தேங்க்ஸ்…” கூற, ஷிவானி குழப்பமாகக் பார்க்கவும், அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டவன்,

“உன்னால அம்மா ரொம்ப நாளைக்கு அப்பறம் சிரிச்சு இருக்காங்க… மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது..” என்றபடி அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே, அவளது இதழ்களை நெருங்க, அவனது பார்வை தாளாமல், அவனது தோளில்  முகம் புதைத்துக் கொண்டாள்.

காதலின் களியாட்டம் முடிந்து, ஷிவானி உறங்கத் துவங்க, உறக்கம் வராமல், ஷிவானியைப் பார்த்துக் கொண்டிருந்த புகழுக்கு அவளை தூக்கிக் கொண்டு சுற்ற வேண்டும் போல் இருந்தது.

தனது காதலை அவளிடம் சொல்ல நினைத்த மனதிற்கு வார்த்தைகள் வாராமல் சிக்கித் தவிக்க, மனதை பகிரும் வகை அறியாமல், அவளை அணைத்துக் கொண்டு உறங்கத் துவங்கினான்.

12 COMMENTS

      • Ramya ungaloda vizhiyora kavithaigal story oda die hard fan.romba pidichathunala ethana thadava padichen theriyuma!!??. ovvoru story um romba pidichurukku ipo than padikkiren bt enakku thendral panbalai oda 26th and 27th update oda link venum. atha search kodutha error kattuthu. neenga link anuppureengala

    • தேங்க்ஸ் இந்து … ஹஹா மிர்ச்சி டீ குடுக்க வேண்டியது தான்

LEAVE A REPLY