SHARE
ஓடிப் பிடித்து விளையாடிய படி 
 அவளிடமே அடிக்கடி சென்று விடும் 
என்  மனதினை 
கேட்டுப்  பார்க்கிறேன்
ஓய்வு வேண்டாமா என்று 
சிரித்து விட்டு 
மீண்டும் அவளிடமே !!

“சிவா… என்ன பண்ணிட்டு இருக்க? ஒழுங்கா பார்த்து செய்ய மாட்டியா?” புகழ் பதட்டத்துடன் கேட்க,

“எனக்கு ஒண்ணும் இல்ல இனியன்… லைட்டா புடவையில தான் சிந்தி இருக்கு… நான் நகர்ந்துட்டேன்…” அவள் சாமாதானம் சொன்னாலும், அதை நம்பாதவன், அவளது காலை ஆராய்ந்தான்.

“ஒண்ணும் இல்லப்பா… நம்புங்க…” அவனது முகத்தை நிமிர்த்தி அவள் சொல்லவும், புகழ் இன்னமும் நம்பாமல் அவளைப் பார்க்க,

“நிஜமாப்பா… நான் போய் புடவைய மாத்திட்டு வந்திடறேன்…” சொல்லிவிட்டு நகர்ந்தவள், அறைக்குள் சென்று, காலில் சூடு பட்டிருந்த இடத்தை தண்ணீரில் கழுவினாள்.

“நல்லவேளை சிவந்து மட்டும் தான் போயிருக்கு… ஆனா… ரொம்ப எரியுதே…” என்று கண்களில் கண்ணீர் மல்க காலை தண்ணீரில் காட்டியவள், அதற்கு மருந்திட்டு, புடவையை மாற்றிக்கொண்டு, இயல்பாக இருப்பது போல மீண்டும் சமையல் அறைக்குள் வந்தாள்.

“சிவா.. கால்ல ஒண்ணும் காயம் படலையே…” சசி கேட்கவும், புகழ் அவளை ஆராய்ந்துக் கொண்டிருக்க,

“ஒண்ணும் இல்லம்மா… என் புடவை மேல தான கொட்டிச்சு… சமையல்ன்னா இதெல்லாம் சாதாரணமப்பா…. சரி நம்ம மீதி சமையலை செய்யலாம் வா..”  என்று அவள் சொல்லவும், அவளை கூர்ந்த சசி வேலையைத் தொடரவும், அதுவரை நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த புகழ், ஹாலிற்கு சென்று சோபாவில் அமர்ந்தான்.

“சரிடி… மாப்பிள்ளைக்கு காபி  கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்… நான் மிக்ஸில போட்டு வச்சிருக்கறதை அரைச்சு வை…” என்று விட்டு, புகழுக்கு காபியை எடுத்துக் கொண்டு அவர் செல்ல, ஷிவானியும் மிக்ஸியின் அருகே சென்றாள். 

“ஓ… நீ தான் மிக்ஸியா?” என்று ஷிவானி அதனிடம் கேட்டு,

“நல்லா அரைச்சுத் தரணும் என்ன? நான் செய்யறதை சாப்பிட்டு புகழ் அப்படியே அசந்து போயிடணும்… இந்த சசி என்னை திட்டினதுக்கு எல்லாம் இன்னைக்கு வாய திறக்க முடியாம திணறனும் என்ன? அப்படி மட்டும் செய்த… நான் உனக்கு ஹல்வா கொடுக்கறேன்…” அவள் தனியாக பேசிக் கொண்டிருக்க,

“ஹையோ பாவம்…. யாரு பெத்த புள்ளையோ… இப்படி தனியா மிக்ஸி கிட்ட பேசிட்டு இருக்கு…” என்றபடி சசி வர, ஷிவானி அவரைப் பார்த்து அசடு வழிந்தாள்.

“நீ பெத்த புள்ள தான்… உன்னோட ஒரே மகள்ம்மா… இது உன்னோட மிக்ஸியா…. உன்னை போலவே சண்டித் தனம் செய்யப் போகுதோன்னு அதுக்கிட்ட பேச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்…” ஷிவானியும் பதிலுக்கு கிண்டல் செய்ய, சசி அவளை முறைப்பார் என்று அவள் எதிர்ப்பார்த்திருக்க, அவரோ, கேலிப் பேச்சைக் கை விட்டார்.

“சிவா… உன் காலுல காயம் ஒண்ணும் படலையே? நான் அங்க வைக்கும் போதே சொன்னேன்… கேட்டா தானே…” என்று வருத்தமாக அவர் கேட்க

“இல்லம்மா… கால் சிவந்து இருக்கு அவ்வளவு தான்… வாஷ் பண்ணிட்டு கொஞ்சம் மருந்து போட்டுட்டு வந்தேன்… புடவை இருந்ததுனால ரொம்ப சூடு படல…” அவள் சொன்னதைக் கேட்ட சசியின் இதழ்களில் சிறிய புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

“எனக்கு காலுல சூடு பட்டது உனக்கு சிரிப்பா இருக்கோ?” ஷிவானி கேட்க,

“இல்ல சிவா… இதே நீ முன்னன்னா என்ன செய்திருப்ப?” பாதியிலேயே அவர் நிறுத்த,

“என்ன செய்திருப்பேன்?” அதே கேள்வியை அவள் கேட்க,

“ஹ்ம்ம்.. இது உனக்கே ஓவரா இல்ல… என்னவோ நான் உன்னோட போன பிறவியில இருந்து கேள்வி கேட்கறது போல பில்டப்பை தரியே சிவா…” என்று கிண்டல் செய்தவர்,

“இதுவே முன்னாடின்னா… ‘இதுக்குத் தான் சொன்னேன்… சமையல் ரூமுக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு… கேட்டியா… பாரு பால் கொட்டிடுச்சு…’ அப்படி இப்படின்னு தைய்யா தக்கான்னு குதிச்சு இருப்ப… அதை தான் நினைச்சேன்… சிரிப்பு தானா வருது… நான் என்ன செய்யறது?” அவர் கேட்ட கேள்வியில் திகைத்தவள்,

“அம்மா…” என்று மிரட்ட முயன்று முடியாமல் சிரிக்கத் தொடங்கினாள்.

என்ன தான் கேலி செய்தாலும், தாயாய் அவளது கால்களை ஆராய்ந்தவர், அவள் சொல்வது போலவே இருக்கவும், “கொஞ்சம் தேங்காய் எண்ணெய வை… சரியா போயிடும்…” என்று தடவி விட்டு, மீதமுள்ள வேலைகளை செய்ய அவளுக்கு உதவினார்.

“இனியன்… வாங்க.. டிபன் ரெடி…” என்று ஷிவானி அழைக்கவும், புகழ் எழுந்துக் கொள்ள

“சிவா… அப்பாவுக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு கண்ணு… நான் போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்துடறேன் சரியா?” என்று கேட்டபடி பாஸ்கர் நகரவும்,

“அப்பா இதெல்லாம் அநியாயம்… நான் முதல் தடவை சமைச்சு இருக்கேன்… நீங்க சாப்பிடாம ஓடினா எப்படிப்பா? என்னோட சங்கத்துல ஓல்ட் மெம்பரான  நீங்களே இப்படி சொன்னா… புதுசா சேர்ந்திருக்க மெம்பெர்கள் எல்லாம் பதற மாட்டாங்களா… நான் டேஸ்ட் பார்த்துட்டேன்ப்பா… அம்மா டேஸ்ட் வரலைனாலும், நல்லா தான் இருக்கு… தைரியமா நீங்க சாப்பிடலாம்…” என்று அவள் அழைக்கவும், புகழ் அவள் சொன்ன விதத்தை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தான்.  

“வாங்க புகழ்… சிவா முதன்முதலா சமைச்சு இருக்கறதை ஒரு கட்டு கட்டுவோம்… நமக்கு வேற வழி இல்ல… நல்லா இல்லைனாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்லணும் புரியுதா?” என்று கேலி செய்துக் கொண்டே பாஸ்கர் நகர, அவர்கள் பேசுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த புகழ், அவருடன் நடந்தான்.

“அம்மா… நீ அப்பாவுக்கு போடு… நான் இவரை கவனிச்சுக்கறேன்…” என்ற ஷிவானி… புகழுக்கு அனைத்தையும் எடுத்து வைக்க, புகழும் சந்தோஷத்துடனே அனைத்தையும் உண்டு முடித்தான்.

“நல்லா இருக்குடா ஷிவாகுட்டி… இது தான் நீ முதல் முறை செய்யறேன்னே சொல்ல முடியாது…” பாஸ்கர் சொல்லிக் கொண்டே சாப்பிட, ஷிவானி பெருமை பிடிபடாமல் சசியைப் பார்த்து இளிக்க, 

அவரோ அதைக் கண்டு கொள்ளாமல், “மகள்களைப் பெற்ற அப்பாவுக்குத் தான் தெரியும்… மகளின் சமையலை சாப்பிட்டு பாராட்டாமல் போனால், அடுத்த வேலை சாப்பாடு வயிற்றில் இறங்காது என்று…” என்று சிரிக்காமல் சசி சொல்லவும், புகழ் ஷிவானியைப் பார்த்து சிரிக்க,

“என்ன சசி… நம்ம பொண்ணு சமையல் ரூமை கண்டு பிடிச்சு வந்ததே பெரிய விஷயம்… நீ கிண்டல் செய்து… அதையும் மறந்துடப் போறா…” என்று பாஸ்கரும் கேலி பேசவும், “உங்க ரெண்டு பேரையும்….” என்று தொடங்கியவள், சிணுங்கினாள். அவர்கள் மூவரும் வார்த்தைக்கு வார்த்தை பேசி கேலி செய்து விளையாடுவதைப் பார்த்த புகழுக்கு தன் குடும்பம் இறுகிக் கிடப்பது உறைக்கவே செய்தது.

மூவரும் பேசி சிரித்த படி உணவை முடிக்க, புகழ் உண்டு முடிக்கும் வரை அவன் ஏதாவது சொல்வான் என்று ஷிவானி காத்திருக்க, அவனோ, வாயையே திறக்காமல் அனைத்தையும் உண்டு கொண்டிருந்தான்.

“என்னங்க… உங்களுக்கு பிடிக்கலையா? எதுவுமே சொல்லாம சாப்பிடறீங்க?” அவன் எதுவுமே பேசாமல் எழவும், பொறுக்க முடியாமல் ஷிவானி கேட்க,

“நல்லா இருந்தது சிவா… நல்ல டேஸ்ட்டா இருந்தது. பொங்கல்ல மட்டும் கொஞ்சம் உப்பு கம்மி… இன்னும் கொஞ்சம் குழைவா வெந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்…” புகழ் சொல்லிவிட்டு, கை கழுவச் செல்ல,

“உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?” ஷிவானி அதிர்ச்சியுடன் கேட்க, புகழ் புன்னகைத்து விட்டு சென்றான்.

“ஹையோ… இந்த மனுஷன் என்னை சிரிச்சே கொல்றாறே…” என்று நினைத்துக் கொண்டவள்,

“இவருக்கு சமைக்கத் தெரியும்ன்னு தெரிஞ்சு இருந்தா… நாம கஷ்டப்பட்டு இப்படி கால்ல சுட்டுக்கிட்டு சமைச்சிருக்க வேண்டாமே… பயபுள்ள இப்படி பண்றாரே…” என்று தனக்குள் நினைத்துக் கொண்டு, சாப்பிட்டு முடித்தாள்.

“மதியத்துக்கு என்ன வேணும்?” காலை உணவு முடிந்த சிறிது நேரத்திலேயே ஷிவானி புகழிடம் வந்து நிற்க,

“போதும் சிவா… இன்னைக்கு இது கத்துக்கிட்டதே போதும்… ஏற்கனவே கால்ல பாலைக் கொட்டியாச்சு… இன்னும் என்ன செய்யப் போற?” என்று அவன் பதட்டத்துடன் கேட்க,

“நான் சொல்லல மாப்பிள்ளை ரொம்ப பாவம்ன்னு… ப்ளீஸ் வேண்டாம்ன்னு அவர் ரொம்ப கதறராறு பாரு…” பாஸ்கர் இடையில் புகுந்து கேலி பேச, ஷிவானி அவரை முறைத்துக் கொண்டு நின்றாள்.

“அதெல்லாம் இல்ல மாமா… ஒரே நாள்ல அவ செய்தா.. அப்பறம் அவளுக்கு சமயல்ல இன்டெரஸ்ட் போயிடும்… அதுக்கு தான் சொன்னேன்…” என்று அவன் சொல்லவும்,

“அட போங்கப்பா… உங்களை எல்லாம் இனிமே கேட்கவே கூடாது… விடுங்க… நானே போய் செய்யறேன்” என்று சலித்துக் கொண்டு அவள் உள்ளே செல்ல, அதைப் பார்த்து புகழும் பாஸ்கரும் ஆளுக்கு ஒரு மனநிலையில் புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.

புகழ் தனது குழந்தை மனைவியை எண்ணி புன்னகைக்க, பாஸ்கரோ, குழந்தையான தன் மகள், பொறுப்பான மனைவியாக மாறியதை நினைத்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

“புகழ்… ஹனிமூன்க்கு எங்க போகலாம்ன்னு இருக்கீங்க… உங்க மனசுல ஏதாவது பிளான் இருக்கா… இல்ல… நான் ஏற்பாடு செய்யவா?” பாஸ்கர் மெல்ல பேச்சைத் தொடங்கவும்,

“எனக்கு எந்த ஐடியாவும் இல்ல மாமா… இப்போ ஹனிமூனுக்கு எல்லாம் அதிகம் செலவு செய்ய வேண்டாம்… நாளைக்கு மதியமே நான் கடைக்கு போயாகணும்… இதுவே ரொம்ப நாள் ஆகிடுச்சு… அப்பறம் கஸ்டமர்ஸ் கை விட்டு போயிடுவாங்க…” புகழ் தொழிலை மனதில் வைத்துக் கொண்டு சொல்ல, அதைக் கேட்ட மற்ற மூவருக்குமே சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது. 

“இப்போ விட்டா போக முடியாது… போனாலும் இப்போ இருக்கற ஒரு ஃபீல் இருக்காது…” பாஸ்கர் மேலும் தொடர,

“எனக்கு என்னைக்குமே ஷிவானி ஸ்பெஷல் தான் மாமா…. எப்போ போனாலும் அந்த ஃபீல் இருக்கும்…” என்று புகழ் சொல்லி விடவும், அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல், பாஸ்கரும் அமைதியானார்.

ஷிவானி சசியைப் பார்க்க, “அவரு வேலை இருக்குன்னு சொல்றார் இல்ல… வேற சௌகரியப்படற நாள்ல கூட்டிட்டு போவார்… உன் மேல ஆசையா தானே இருக்கார்… அவரு சொன்னதைக் கேட்டியா? நீ ரொம்ப ஸ்பெஷலாம்…” என்று சிரித்துக் கொண்டே சசி சொல்லவும், ஷிவானியும் சிறிது சமாதானம் அடைந்தாள்.

இரவு உணவை முடித்துக் கொண்டு, அன்றைய சமையல் அறையின் மீதி காரியங்களை சசியுடன் பேசிக் கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அங்கிருந்த பத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்க,

“சரி.. நீ தூங்க போடி… வேடிக்கைப் பார்த்தது போதும்… நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகணும்…” சசி சொல்லவும், ஷிவானியின் முகம் மேலும் பிரகாசமுற்றது.

அதைப் பார்த்த சசி… “அடிப்பாவி… நான் இதை சொன்னா… நீ ஃபீல் பண்ணுவேன்னு பார்த்தேன்… இப்படி ஃபேர் அண்ட் லவ்லி போட்டா மாதிரி முகம் பிரகாசமாகுது… அம்மாவை விட்டுட்டு வேற வீட்டுக்கு போறோம்ன்னு இல்லையா?” கிண்டலாகத் தொடங்கியவர், வருத்தமாக முடிக்க, ஷிவானி அவரது தோளில் முகம் பதித்துக் கொண்டாள்.

“அம்மா… எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. வேற ஏதோ முன்ன பின்ன தெரியாத வீட்டுக்கு போனா பரவால்ல… உன்னை போலவே என்னை அத்தை நல்லா பார்த்துப்பாங்கம்மா… புகழ் மட்டும் என்ன?

நான் ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகிட்டவர்ம்மா… எனக்கு இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போகணும்னு சொன்னா கூட்டிட்டு வராமையா இருக்கப் போறார்… கவலைப்படாதேம்மா…” என்று சமாதானம் செய்தாள்.

“சரிடா… ரொம்ப சந்தோசமா இருக்கு… ஆனா… எனக்கு தான் நீ இல்லாம போர் அடிக்கும்…” என்று ஒரு தாயாய் ஆசையுடன் அவளது கன்னத்தை வழித்தவர், அவளது கையில் பால் கப்பைக் கொடுத்து,

“சரிடா… போய் படு… நாளைக்கு அவங்க வரதுக்குள்ள நீ கிளம்பி ரெடியா இருக்கணும்…” என்று சொல்லவும், அறைக்குச் சென்றவள், புகழ் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, என்ன மனநிலையில் இருக்கிறோம் என்றே புரியாமல் குழம்பினாள்.

“அக்கா… காலையில சீக்கிரமே வந்து கூட்டிட்டு போ அக்கா… எனக்கு இங்க இருக்க ஒரு மாதிரியா சங்கோஜமா இருக்கு… அதுவும் எனக்கு நாளைக்கு வேலைக்கு போகணும்… சீக்கிரம் வந்தா தான் சரியா இருக்கும்…” என்று பேசிக் கொண்டே, தனது துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.

“சரி… அவங்ககிட்ட நீ வர டைம் போன் செய்து சொல்லிடு… ஒரு ஏழு மணி வாக்குல வந்தா எனக்கு சௌகரியமா இருக்கும்…” புகழ் மேலும் வலியுறுத்த, அதைக் கேட்டுக் கொண்டே ஷிவானி உள்ளே வந்தாள்.

அவன் அருகே அமைதியாக சென்று அமர, அவளைப் பார்த்ததும் புகழ் புன்னகைத்து, “சரி அக்கா… நாளைக்கு பார்க்கலாம்…” என்று பேச்சை முடித்துக் கொள்ள, பால் கப்பை அவனிடம் நீட்டியவள்,

“நாளைக்கே வேலைக்கு போகணும்னு என்ன இருக்கு? ஒருநாள் என்கூட நம்ம வீட்ல இருக்கலாம் இல்ல…” ஷிவானி கேட்க,

“அதெப்படி?” புகழ் அதிர, அவனது அதிர்ச்சியைப் பார்த்த ஷிவானி குழம்பினாள்.

“என்னங்க? நம்ம வீட்ல…  எனக்கு கொஞ்சம் தயக்கம் போற வரை ஒரு நாள் கூட இருக்கலாம் இல்ல… அத்தை கூட நான் பேசி பழகி இருக்கேன் தான்… ஆனாலும்… நீங்க இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்…” என்று அவள் சொல்லவும், அப்பொழுது தான் அவள் சொல்வது அவனது வீட்டை என்று புரிந்த புகழ் நாக்கை கடிக்க,

“நீங்க நம்ம வீடுன்னு நான் சொன்னது எல்லாம்… இந்த வீட்டை தான்னு தானே நினைச்சீங்க? அதனால தானே அதிர்ச்சி ஆனீங்க?” தொண்டையடைக்க அவள் கேட்கவும், புகழ் அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“இல்ல சிவா… உன்கிட்ட இருந்து பட்டுன்னு நம்ம வீடுன்னு ஒரு வார்த்தை எதிர்ப்பார்க்கல சிவா…” என்று அவன் சமாதானப்படுத்தவும், ஷிவானிக்கு என்னவோ போல் ஆகியது.

“சரி விடுங்க… இப்போ பாலை குடிச்சிட்டு நாம ரெண்டு பேருமே பேக் பண்ணி முடிக்கலாம்… எனக்கு தூக்கம் வருது…” என்று ஷிவானி சொல்ல, வேறு எதுவும் பேசாமல், புகழும் பாலை குடித்து முடித்து, அவளுக்கு பெட்டியை அடுக்க உதவினான்.

புகழ் தனது காலில் சூடு பட்டதைப் பற்றி ஏதாவது கேட்பான் என்று எதிர்ப்பார்த்த ஷிவானி, அவனது முகத்தை முகத்தைப் பார்க்க, அவனோ அதை மறந்தவன் போல பேக் செய்து கொண்டிருக்க, எடுத்து வைத்து முடித்த நேரம், அவளது கண்கள் சொருக, அப்படியே படுத்து உறங்கத் துவங்கினாள்.

மறுநாள் காலை ஏழு மணிக்கே சித்ரா வரவும், அவர்களைப் பார்த்த ஷிவானி “ஹாய் அண்ணி… வாங்க வாங்க…” என்று புன்னகையுடன் வரவேற்க, அதைப் பார்த்த புகழுக்கு ஒரு மாதிரி ஆகியது.

 

14 COMMENTS

    • thanks jaya … thank u so much ma… 🙂 :0 konjam personal velaigal muzhuga adikuthu … kuttieskum leave ellam mudiyave illa … sikiram podaren ma … 🙂

LEAVE A REPLY