SHARE

3rd episode  of Mounam endroru Mozhi 
உன் இதழ்கள் சிந்தும் 
ஒற்றை வார்த்தைக்கு ஏங்கினேன்
நீ சொல்லும் மௌன மொழி 
சலித்துப் போய்…

 

 

“அம்மா… உங்க புகழுக்கு ஷிவானி சரியான ஜோடி தான் போங்க…” விக்ரம் மல்லிகாவை கிண்டல் செய்ய,

“ஹாஹாஹா… சரியான வாயாடி தான்… புகழுக்கும் சேர்த்து பேசிடுவா.. அவனுக்கு கவலையே இல்ல… ரொம்ப நாளைக்கு அப்பறம் வீடே கலகலன்னு இருக்கப் போகுது… நீ தினமும் வீட்டுக்கு சாப்பிட வந்திரு… சாப்பிடற நேரம் கலகலக்கும்” என்று கண்களில் கண்ணீர் துளிர்க்க மல்லிகா சொல்லவும், புகழ் அவரது தோளை அழுத்தினான்.

“ஒண்ணும் இல்லடா… என்ன இருந்தாலும் அந்த மனுஷன் இருந்திருக்கலாம்ன்னு மனசுல தோனத் தான் செய்யுது… என்ன செய்யறது? இருபத்திரெண்டு வருஷம் கூட வாழ்ந்தது…” மல்லிகா வருத்தமாகச் சொல்லவும், புகழும் இறுகத் தொடங்க, அந்த சூழலை மாற்றும் பொருட்டு விக்ரம் இடைப்புகுந்தான்.

“மச்சான்… சிஸ்டர் என்ன சொல்லிட்டு உள்ள போறாங்க தெரியுமா?” விக்ரம் ராகம் பாட,

“என்னடா சொன்னா? அவங்க அம்மா இப்படி பயந்து உள்ள ஓடறாங்க?” என்று புகழ் இறுக்கம் தளர்ந்து சுவாரஸ்யமாகக் கேட்கவும்,

“இன்னைக்குள்ள அவ பிரெண்ட்ஸ் கூட சினிமாவுக்கு போகப் போறாளாம் புகழ்… நைட் ஷோ போகப் போறா…” என்று சிரித்துக் கொண்டே மல்லிகா சொல்லவும், கல்லூரியில் அவள் செய்த அலும்புகளும் நினைவு வர, புகழின் புன்னகை சற்று விரிந்து, முகம் பிரகாசமானது.

“அவ காலேஜ்ல செய்த அலும்பு தெரிஞ்சா நீங்க இதைச் சொல்ல மாட்டீங்க…” என்று சொன்னவன், 

“வாங்கம்மா உள்ள போகலாம்… நான் வர லேட் ஆகுதுன்னு அவ இப்போவே சினிமாவுக்கு கிளம்பிடப் போறா… செய்தாலும் செய்வாம்மா அவ… வீட்ல நீங்க தான் அதிக நேரம் அவ கூட இருக்கப் போறீங்க… ரொம்ப ஜாக்கிரதையா இருங்க..” என்று சிரிப்புடனே புகழ் எச்சரிக்கை செய்து, மல்லிகாவை கூட்டிக்கொண்டு உள்ளே நுழைய, எந்த களைப்பும் இல்லாமல், ஷிவானி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

“மேடம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு போலேயே… இதுக்கும் சேர்த்து என்னை கேள்வி கேட்கப் போறா…” என்று புகழ் புலம்புவதைக் கேட்ட விக்ரம்,

“என்ன புகழ்… இன்னைக்கு ஒரு அரை நாளுக்குள்ளயே இந்த புலம்பு புலம்பற?” என்று கேட்கவும், புகழ் அவளது கல்லூரியில் நடந்ததைச் சொல்ல, விக்ரம் கடகடவென்று சிரித்தான்.

“நம்ம செட்ல… நீ தான் எங்க நாலு பேருக்கும் சம்பந்தமே இல்லாம இருந்த… இப்போ உன்னை ஈடு கட்ட சிஸ்டர் வந்தாச்சு… சூப்பர் போ…” என்று விக்ரம் கிண்டல் செய்யவும்,

“உங்க நாலு பேர் வாயும் சேர்ந்து இவ ஒருத்திக்கு இருக்கு… காலேஜ்ல மேடம் பேசிட்டு இருக்காங்க… இவ பாட்டுக்கு தனியா அவ பிரெண்ட் கூட பேசிக்கிட்டு நிக்கறா… உங்க நாலு பேரையும் சமாளிக்கலாம் போல இருக்கு… இவ ரொம்ப கஷ்டம்டா…” என்று புகழ் மேலும் சொல்லவும், விக்ரம் மேலும் சிரிக்க, பேசிக் கொண்டே இருவரும் ஷிவானி நின்றிருந்த இடத்தின் அருகே வந்திருந்தனர்.

அவன் அருகே வந்தும், அவனது தாமதத்திற்கு எந்த கிண்டலும் செய்யாமல், அமைதியாக நின்றிருந்த ஷிவானியை புகழ் ஆச்சரியமாகப் பார்க்க, அவளோ தான் தான் அமைதியின் சிகரம் என்பது போல நின்றுக் கொண்டிருந்தாள்.

“புகழ்… ஒருவேளை நீ அங்க வெளிய சொன்னது எல்லாம் உன் கற்பனையோ… சிஸ்டர் இவ்வளவு அமைதியா இருக்காங்க..” விக்ரம் புகழின் காதைக் கடிக்க,

“ஹ்ம்ம்… நான் எதுக்குடா பொய் சொல்லப் போறேன்? காலையில சாப்பிடற அப்போ நீ தான் பார்த்தியே…” புகழ் பரிதாபமாகக் கூறினான்.

“சரி… சரி… நம்பிட்டேன்…” என்று விக்ரமும் அவனுக்கு விட்டுக் கொடுக்க, அதற்கு மேல் பேச இடமில்லாமல், தாய்மாமாக்கள் செய்யும் சடங்குகளும் முறைகளும் நடக்கத் தொடங்க, ஷிவானியோ, காலையில் இருந்ததற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தாள்.

“சீக்கிரம் சாப்பிட வாங்க… புகழ் அவளை சாப்பிட கூட்டிட்டு வா… ரொம்ப நேரமாகுது… ஷிவா ரொம்ப சோர்ந்திருக்கா பாரு…” மல்லிகா சொல்லவும்,

“வா…” என்று புகழ் அழைக்க, ஒரு தலையசைப்புடன் ஷிவானி அவனுடன் நடந்தாள்.    

உணவு அறையை நெருங்கும் போதே, புகழ் ஷிவானியைப் பார்க்க, அவளோ தனது கையில் இருந்த மருதாணியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, அவனுடன் நடந்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு?” புகழ் மெல்லக் கேட்க,

“ஒண்ணும் இல்லயே… ஏன் கேட்கறீங்க?” ஷிவானி தனது கையைப் பார்த்துக் கொண்டு கேட்கவும்,

“இல்ல… ரொம்ப அமைதியா வரியேன்னு கேட்டேன்…” என்றவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான். இருவருக்குமான உணவு பரிமாறப்படவும், புகழ் பசியில் வேகமாக உண்ணத் துவங்க, ஷிவானி மெதுவாக கொரித்துக் கொண்டிருந்தாள்.

“ஸ்வீட் போடவாம்மா…” காலையில் அவள் ஸ்வீட் கேட்டதை நினைவு வைத்துக் கொண்டு, பரிமாறுபவர் கேட்கவும்,

“இல்லண்ணா வேண்டாம்… இதுவே போதும்… சாப்பிட முடியல…” என்று ஷிவானி சோகமாக சொல்லவும், புகழ் உண்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

“இங்க ஒருத்தி அமைதியா இருக்காளே… என்ன தான் ஆச்சுன்னு பிடிச்சு கேட்டிருக்க வேண்டாமா? சும்மா லுக் விட்டுக்கிட்டு…” ஷிவானி மனதினில் பொறுமிக் கொண்டிருக்க,  

“ஹே… ரெண்டு பேரும் நிம்மதியா சாப்பிடறாங்க போல இருக்கே…” விக்ரம் தொடங்கவும்,

“அதானே… எப்படி அப்படி சாப்பிட விடலாம்… நம்ம செட்லையே அவனுக்கு தானே மொதல்ல கல்யாணம் ஆகி இருக்கு… அவங்களை விடக் கூடாது..” என்று அவர்களது இன்னொரு நண்பன் முத்து ஒத்து ஊத, ‘பேசாம இருங்கடா…’ என்பது போல் புகழ் அவர்களைப் பார்த்தான்.

அவர்கள் அமைதியாய் இருந்தால் தானே, “சிஸ்டர்… உங்க இலையில இருக்கற ஜாங்கிரியை அவனுக்கு கொடுங்க…” விக்ரம் சொல்லவும், ஷிவானி பாவமாக அவர்களைப் பார்க்க,

“அவங்க தயங்கறாங்க புகழ்.. நீ மொதல்ல கொடு..” என்று முத்து சொல்லவும், புகழ் ஜாங்கிரியை எடுத்து அவளது வாயின் அருகே கொண்டு செல்ல, மெல்ல அதை கடித்தவள், அதே போல தானும் ஒன்றைக் கொடுத்தாள்.

அவள் ஏதாவது வம்பு செய்வாள் என்று அவர்கள் எதிர்ப்பார்த்திருக்க, ஷிவானியோ அமைதியின் உருவாய் இருக்கவும், “சிஸ்டர்… என்ன அமைதியா இருக்கீங்க? ஏதாவது ப்ளான் போட்டுட்டு இருக்கீங்களா? இப்படி பட்டும் படாமலும் எல்லாம் கொடுக்கக் கூடாது… சாதத்தை பிசைஞ்சு கொடுங்க…” விக்ரம் உணவை உண்டுக் கொண்டே சொல்லவும்,  

“இல்லையே… நான் எதுவும் ப்ளான் பண்ணல…” அவளது தாயை முறைத்துக் கொண்டே சொன்னவள், அவர்கள் சொன்னது போலவே பிசைந்து ஒரு உருண்டையை எடுத்து புகழுக்கு கொடுக்க, அதை புகழ் வாயில் வாங்கிக்கொண்டு அவளுக்கும் திரும்பக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டவள், மீண்டும் தனது இலையில் இருந்த உணவை உண்ணத் துவங்கினாள்.  

“ஏன் சசி…. நீங்க அவளை ஏதாவது சொன்னீங்களா? கலகலன்னு இருக்கற பொண்ணு இப்படி அமைதியாவே இருக்கா?” மல்லிகா கேட்கவும், பட்டென்று நிமிர்ந்து அவள் தனது தாயைப் பார்க்க,

“பார்த்தீங்களா? நீங்க தான் அவளை ஏதோ சொல்லி இருக்கீங்க? குழந்தை எப்படி முகம் வாடி இருக்கு பாருங்க…” அருகில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தவர், இடதுகையால் அவளது முகத்தை வருடிக் கொடுக்க, ஷிவானி முகத்தை மேலும் பாவமாக வைத்துக் கொள்ள, சசி அவளை முறைத்தார்.

“என்னை எப்போப் பாரு முறைச்சுக்கிட்டே இருக்காங்க அத்தை… நான் அவங்களை சும்மா வெறுப்பேத்த சினிமாவுக்கு போவேன்னு சொன்னதை வச்சு எப்படி திட்டினாங்க பார்த்தீங்களா?” ஷிவானி அவரிடம் செல்லம் கொஞ்ச, மல்லிகா உருகியே போனார்.

அவள் சொன்னதைக் கேட்ட புகழ், “ஹப்பாடா… நிஜமாவே அவளுக்கு சினிமாவுக்கு போற பிளான் இல்ல… நான் தப்பிச்சேன்…” என்று மனதினில் நினைத்துக் கொண்டே, விக்ரமைப் பார்க்க, ‘பிழைச்ச போ…’ என்று அவன் வாயசைத்தான்.  

“நீ எப்பவும் உங்க வீட்ல இருக்கறது போலவே இரும்மா… அது தான் நல்லா இருக்கும்… இப்போவே நீ இந்த அளவு சகஜமா பேசறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” மல்லிகா ஷிவானியை சார்ந்துப் பேசவும், அவளோ தனது இதழ்க்கடையில் சிரிப்பை அடக்கிக் கொண்டு சசியைப் பார்க்க,

“என்னம்மா சீனைப் போடறாடா…. நம்ம எல்லாம் இவகிட்ட கத்துக்கணும் போல இருக்கே… ஹாஹாஹா… புகழ் நீ காலி…” முத்துவின் அருகில் அமர்ந்திருந்த விக்ரம் புகழைப் பார்த்து சிரிக்க, புகழ் ஷிவானியின் முகத்தைப் பார்த்து, அவளது சிரிப்பைக் கண்டு, நிம்மதி மூச்சு விட்டான்.

“சரிங்க அத்தை…” நல்லபிள்ளை போல ஷிவானி மல்லிகாவின் சொல்லுக்கு ஒத்துக்கொள்ள,

“ஐயோ அண்ணி… இவளை மட்டும் நீங்க நம்பவே நம்பாதீங்க… எங்க வீட்ல போல அவ இருந்தா உங்களால சமாளிக்க முடியாது.. சரியான சோம்பேறி.. நல்லா நாலு தட்டு தட்டி வேலை வாங்குங்க..” சசி எச்சரிக்கை செய்யவும்,

“அதெல்லாம் அவ சமத்து.. கல்யாணம் ஆகிடுச்சு இல்ல… தானா பொறுப்பு வந்துடும்…” மல்லிகாவின் கூற்றில், திகைத்த சசி, ‘உங்க இஷ்டம்… உங்க கஷ்டம்…’ என்பது போல பார்த்து வைத்தார்.  

அத்தனை நேரம் அமைதியாக இருந்த ஷிவானி சந்தோஷமாக மீதி உணவை முடிக்க, அவளது சிறுபிள்ளை தனத்தை ரசித்த பாஸ்கர், அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டார். உணவு முடிந்து, நேராக புகழின் வீட்டிற்குச் சென்றவர்களை மல்லிகா சந்தோஷமாக உள்ளே அழைக்க, உள்ளே சென்ற ஷிவானி, வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டினாள்.

“உங்க வீடு போல பெருசா இருக்காது..” புகழ் சொல்லவும்,

அதை விட்டுவிட்டு “அத்தை ரொம்ப அழகா வச்சிருக்காங்க… வீட்டுக்குள்ள வந்த போதே ஒருமாதிரி ஃபீல் ஆச்சு இனியன்…” என்று சொன்னவள், ஷோகேசில் வைத்திருந்த போட்டோக்களை பார்வையிட்டாள்.

மல்லிகா வந்தவர்களை உபசரிக்க, அதைப் பார்த்தவள், அவருடன் உள்ளே சென்று, “ஏதாவது ஹெல்ப் பண்ணவா அத்தை” என்று கேட்க, அதைப் பார்த்த சசி தான் திகைத்துப் போனார்.

“அடிப்பாவி… வீட்ல நான் கரடியா கத்தினாலும் எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுவாளாங்க… அந்த சிஸ்டம்ல எதையாவது குடைஞ்சுக்கிட்டு, காதே கிழியற அளவுக்கு பாட்டை போட்டுக்கிட்டு இல்ல என்னை கடுப்பேத்திட்டு இருப்பா… இப்போ பாருங்க… ‘ஹெல்ப் பண்ணவா’ன்னு கேட்கறதை” சசி பாஸ்கரிடம் புலம்ப,

“ஏதோ சசி… பொண்ணுக்கு இந்த அளவுக்கு பொறுப்பு இருக்கேன்னு சந்தோஷப்படு.. இல்ல அவங்களுக்கு தானே கஷ்டம்” என்று அவளது அந்த சிறு செயலுக்கே பாஸ்கர் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

“உங்க பொண்ணை நீங்க தான் மெச்சிக்கணும்… புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு… நாலு வேலைய பழகுன்னு சொன்னா… ‘வேற வீட்டுக்கு போற பொண்ணு… அங்க எப்படி இருக்குமோ? இப்போவாவது நல்லா தூங்கட்டுமே’ன்னு என் வாயை அடைச்சிடுவீங்க… இவளுக்கு காபியில சர்க்கரை போடறதா… உப்பு போடறதான்னே தெரியாது… இவ என்ன போய் ஹெல்ப் பண்ணப் போறா… வந்தவங்கள கொல்லப் போறா” சசி நொடித்துக் கொள்ள, மல்லிகா போட்ட காபியை எடுத்துக் கொண்டு ஷிவானி வந்தாள்.

“மச்சி… சிஸ்டருக்கு காபி போடவே தெரியாதாம்…” என்று அவர்கள் பேசுவதை அருகில் இருந்து கேட்ட விக்ரம் புகழிடம் சொல்லவும்,

“அவளுக்கு குடிச்ச காபி கப்பை கூட எடுத்துட்டு போய் கழுவி வைக்கணும்ன்னு தெரியாதுன்னும் எனக்குத் தெரியும்…” புகழ் பதில் சொல்ல, அதைக் கேட்ட விக்ரம் அவனை சந்தேகப் பார்வை பார்த்தான்.    

அதற்குள் அங்கு வந்த ஷிவானி, “அம்மா காபி எடுத்துக்கோங்க” என்று சசியிடம் ட்ரேயை நீட்டவும், அவளை பார்த்துக் கொண்டே கப்பை எடுத்துக் கொண்ட சசி, மல்லிகாவைப் பார்க்க, மல்லிகாவும் அவரைப் பார்த்து சாந்தமாக புன்னகைத்தார்.

“என்னவோ சமாளிச்சா சரிடி..” என்று சசி முணுமுணுக்கவும், அவருக்கு அழகு காட்டிவிட்டு நகர்ந்தவள், அனைவருக்கும் கொடுத்துவிட்டு, மல்லிகாவின் அருகே பதிவிசாக நிற்க, புகழ் காபியைப் பருகிக் கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரிங்க சம்பந்தி… நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்… அப்பறம் ரொம்ப லேட் ஆகிடும்…” என்று சசி சொல்லவும்,

“ஆமா…” என்று அவரிடம் சொன்னவர், “புகழ் ஒரு மூணு நாளைக்கு உனக்குத் தேவையான டிரஸ்சை எடுத்துக்கோ… மூணு நாள் நீ அங்க தான் இருக்கணும்… அப்பறம் அக்கா வந்து உங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவா..” மல்லிகா சொல்லவும், ‘எதுக்கும்மா’ என்று புகழ் இழுக்க,

“அதெல்லாம் சம்ப்ரதாயம் தான் புகழ்…” என்று மல்லிகா அவனிடம் சொல்லவும், அடுத்த வார்த்தை பேசாமல், புகழும் தனக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டான்.

“போகலாமா மாப்பிள்ளை…” புகழிடம் பாஸ்கர் கேட்க, அவனது சகோதரி சித்ராவும், அவளது கணவன் தினகரனும் அவர்களுடன் கிளம்பினர்.

“நீங்களும் வரீங்களா?” புகழ் கேட்கவும்,

“ஆமாடா… வந்துட்டு நாங்க நைட் திரும்ப வந்துடறோம்… அப்பறம் நாளைக்கு எல்லாரும் குலதெய்வம் கோவிலுக்கு போகணும்… இங்க இருந்து நாங்க அங்க கிளம்பி வந்துடுவோம்… எல்லாரும் சேர்ந்து போகலாம்” என்று சொல்ல, பாஸ்கரும் ‘ஆம்’ என்று தலையசைக்க, புகழ் சரி என்று ஒப்புக்கொண்டான்.

ஷிவானியின் வீட்டிற்குச் சென்றவர்களை ஆலம் சுற்றி உள்ளே அழைத்து, அவர்களுக்கு பால் பழம் கொடுத்ததும், “ஷிவா… நீ போய் டிரஸ் மாத்திக்கோ… ஃப்ரீ ஆகிக்கோ… ரொம்ப நேரமா இப்படியே இருக்க..” என்று சித்ரா சொல்லவும்,

“இந்த வார்த்தையைத் தான் எப்படா சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்… நீங்க நல்லா இருக்கணும் அண்ணி…” என்று வாழ்த்தியவள், அறைக்குள் சென்றாள்.

சில நொடிகளிலேயே, “அம்மா… இங்க கொஞ்சம் வாங்க…” என்று குரல் கொடுக்கவும், அங்கு வந்திருந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்த சசி,

“நீ டிரஸ் மாத்து ஷிவா… நான் வரேன்…” என்று பதில் கூற,

“அம்மா… ரொம்ப தலை வலிக்குதும்மா… ப்ளீஸ்… சீக்கிரம் வாங்க…” என்று அவள் அழைக்க,

“இரு சிவா… நான் வரேன்… உனக்கு டிரஸ் மாத்த ஹெல்ப் பண்றேன்… அப்பறம் தலை எல்லாம் பிரிச்சு விடறேன்…” என்று சித்ரா உதவிக்கு வர, ஷிவானி தயக்கத்துடன் அவளைப் பார்த்தாள்.

“நானே சாரீ மாத்திக்கறேன் அண்ணி… நீங்க எனக்கு தலையை மட்டும் ஃப்ரீ பண்ணி விடுங்க… தலை எல்லாம் ரொம்ப வலிக்குது…” ஷிவானி தயக்கத்துடன் சொல்ல, அவளது கூச்சம் புரிந்த சித்ரா சிரித்துக் கொண்டாள்.

“உனக்கு புகழை ரொம்ப பிடிக்குமா?” அவளது ஜடையை பிரித்துக் கொண்டே, சித்ரா மெல்ல பேச்சுக் கொடுக்க,

“ம்ம்…” உதட்டில் நாணப் புன்னகை ஒட்டிக்கொள்ள பதில் சொன்ன ஷிவானியைப் பார்த்து சிரித்த சித்ரா,

“அவனுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்… நிச்சயத்துக்கு அப்பறம் உன் படிப்பு கெட்டுடக் கூடாதுன்னு அவன் நினைச்சான்னு நினைக்கிறேன்… ஏன்னா அம்மா ஒரு தடவ, உன்கிட்ட பேசினயான்னு கேட்டதுக்கு, ‘படிக்கிற பிள்ளைய டிஸ்டர்ப் பண்ணக் கூடாது’ன்னு சொல்லிட்டு இருந்தான்… அதை வச்சு சொல்றேன்…”

“அவன் கொஞ்சம் கலகலன்னு பேச மாட்டான் தான்… எப்போப் பாரு அந்த கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து என்னவோ குடைஞ்சுக்கிட்டே இருப்பான்… அதுல உட்கார்ந்தா தூக்கம், சாப்பாடு எதுவுமே வேண்டாம்… அதை கொஞ்சம் மாத்தணும்… மனுஷங்களை விட அவன் அதோட தான் எப்போப் பாரு இருப்பான்…” சித்ரா சொல்வதைக் கேட்டு,

“அது தானே அண்ணி அவரோட தொழில்… அப்போ அதை சின்சியரா செய்து தானே ஆகணும்…” ஷிவானி இடைப்புக, சித்ரா அவளை பரிதாபமாகப் பார்த்தாள்.

“என்ன அண்ணி… பார்க்கற பார்வையே சரி இல்ல… நான் நினைக்கிறதையும் தாண்டி மோசமா இருப்பாரோ…” ஷிவானி கிண்டலாகக் கேட்க,

“ஹ்ம்ம்… கொஞ்சம் மோசம் தான்… பார்ப்போம்… நீ வந்த அப்பறம் எப்படி இருக்கான்னு பார்ப்போம்… அதுக்காகவே அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யணும்னு அம்மா செய்தாங்க… உன்கிட்ட மாட்டிக்கிட்டான்…” என்று கிண்டல் செய்தவள்,

“அப்பா வீட்டை விட்டு போனதுல இருந்தே அவன் ரொம்ப இப்படி ஆகிட்டான் ஷிவா… வீட்டோட நிலைமை அவனை ரொம்ப இறுக வச்சிருச்சு… அப்பா போனதுக்கு அப்பறம் அவன் பட்ட அவமானங்கள் எல்லாம் சொல்ல முடியாது ஷிவா… என் கல்யாணத்தை நல்லபடியா நடத்தணும்னு அவன் உழைச்ச உழைப்பிருக்கே… அதை அப்படியே அவன் வாடிக்கையா வச்சிக்கிட்டான்… அது அவனுக்கு நல்லது இல்ல… நீ தான் அவனை மாத்தணும்…  

அவங்க அஞ்சு பிரெண்ட்ஸ்சும் சேர்ந்து தான் அந்த ஏஜென்சிய நடத்திட்டு வராங்க… நல்ல லாபத்துல தான் போகுது… அதையும் தாண்டி மனுஷனுக்கு ரெஸ்ட் வேணும் இல்ல… அதுக்கு சொல்றேன்…” சித்ரா விளக்கம் சொல்லவும், புகழை நினைத்து ஷிவானிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

தனது தந்தை விட்டுச் சென்ற குடும்பத்தை தனது தோளில் தாங்கி, தன்னுடன் பிறந்தவளையும் கரை சேர்த்து, இன்றும் தொழிலில் நல்ல பெயருடன் இருப்பவன் தன் கணவன் என்ற பெருமிதம் அவளை சூழ்ந்துக் கொண்டது.

“பார்த்துக்கறேன் அண்ணி…” என்று சொன்னவள், விரித்து விட்ட தலையை கோதிக் கொண்டு, அதை சீவி முடிச்சிட்டாள்.

“ஹ்ம்ம்… சீக்கிரம் புடவையை மாத்திட்டு ரெஸ்ட் எடு… காலையில் நேரத்துல எழுந்தது…” ஷிவானியிடம் சொன்ன சித்ரா… வெளியில் சென்று, சசிக்கு உதவத் தொடங்கினாள்.

புகழின் A to Z ஏஜென்சி அந்த ஏரியாவில் மிகவும் பிரபலம்… இரண்டு தெரு மட்டுமே இடைவெளியில் இருக்கும் இருவரது வீடுகளும்… புகழுக்கும் ஷிவானிக்கும் நிச்சயம் ஆன பிறகு இரு குடும்பங்களும் ஒன்றுடன் ஒன்று நன்றாகவே பழகியது.

புகழ், ஷிவானியின் கம்ப்யூட்டரில் ஆகும் பழுதை சரி செய்வதற்காக அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம்… அப்படி தான் பாஸ்கருக்கு  புகழுடன் பழக்கம் ஏற்ப்பட்டது. புகழைப் பிடித்து, புகழுக்கு பெண் பார்ப்பதை அறிந்து, மல்லிகாவிடம் பேசி ஷிவானியை நிச்சயம் செய்தனர்.

ஷிவானிக்கு அமைதியாகவே தங்கள் வீட்டிற்கு வந்து செல்லும் புகழை எப்பொழுதுமே பிடிக்கும்… பாஸ்கர் மாப்பிள்ளை யார் என்று சொல்லி, திருமணத்திற்கு சம்மதம் கேட்கவும், உடனே எந்த தயக்கமும் இன்றி மண்டையை உருட்டி வைத்தாள்… முன்பு தான் தன்னை நிமிர்ந்துப் பார்க்காமல் சென்றவன், நிச்சயம் முடிந்தாவது பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருக்க, அவனோ இன்று காலை திருமணம் முடிந்து பேசும் வரை ஒரு வார்த்தை பேசாமல் நாட்களைக் கடத்த, ஷிவானிக்கு சிறிது ஏமாற்றமாகவே இருந்தது..

அந்த நினைவுகளுடனே உடையை மாற்றிக் கொண்டவள், “இருக்கட்டும்… என்கிட்ட பேசாம போனதுக்கு என்ன ரீசன்னு கேட்கறேன்.. காலேஜ்ல அவ அவ கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாம திணறினேன் இல்ல… அவர் அதுக்கு என்ன பதில் சொல்றார்ன்னு நானும் பார்க்கறேன்…” என்று நினைத்துக் கொண்டவள், இதமான காட்டன் புடவையில் வெளியில் வந்தபொழுது, சசி பை நிறைய பூக்களை வாங்கி வைக்க, அதைப் பார்த்த ஷிவானிக்கு, நெஞ்சம் தொண்டையில் வந்து துடித்தது.

“ஷிவா… நீ எஸ்கேப் ஆகற சமயம் வந்துடுச்சு… எந்த சினிமாவுக்கு போகலாம்ன்னு நல்லா யோசி… உன் ஸ்கூட்டி கீ எங்க? பர்ஸ் எங்க?” என்று அவளது பார்வை சுற்றி அலசத் தொடங்க, எப்பொழுதும் இருக்கும் இடத்தில் இருந்த சாவி அவள் கண்ணில் பட்டு, கைப்பற்ற நினைக்க, அவள் அருகே சசி வந்து நின்றார்.

12 COMMENTS

  1. kalyanam aana ella pnnungalukkum poruppu vandhudumnu solvangale adhudhan shivani yum amadhiyana ponna marittalonnu partha.awa vandiyudaya key ya kaipatrri eduthukondala…………….nice update pa ramya.

  2. Haha semma vaalu indha Shivani. . Pugazh romba pavam.. Avar sister solra madhiri seekrame pugazh andha shell lendhu velila kondu varanum..
    Madam enna movie ku escape ayiduvaalo.. 😉😋

LEAVE A REPLY