SHARE

“போட்டோல நான் ரொம்ப அழகா இருக்கேன் இல்ல..” அந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டே நிரஞ்சன் சொல்ல,

“இப்படி ஒரு போட்டோ எடுத்து.. அதை அழகுன்னு சொல்லிக்கிற உன்னை என்னன்னு சொல்ல? எனக்கு என்னவோ இதெல்லாம் சரி இல்லன்னு தோணுது..” அரவிந்தன் நிரஞ்சனை கண்டித்தான்.  

“சரி இல்ல தான் அர்வி.. அதனால தான் நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தறேன்.. சரி.. அதை விடு.. இதை அந்த நிகிதாவுக்கும் ஃபார்வர்ட் பண்ணிடு.. அவளும் இதைப் பார்த்து ரசிக்கட்டும்..” என்று கூறியவன், அவனிடம் ஃபோனைக் கொடுக்காமல், தானே அதில் இருந்து நிகிதாவின் செல்லுக்கு தன்னுடைய போட்டோவை அனுப்பி வைத்தவன், அதைப் பார்த்து சிரித்தான்.

“அந்த பிசாசுக்கு இந்த ஒரு போட்டோ போதும்.. அழுது கரைஞ்சே இந்தக் கல்யாணத்தை நிறுத்துவா பாரேன். எப்படி என்னை ஏமாத்தினாலோ அதே போலவே இப்போவும் அவங்க அப்பா அம்மாவை ஏமாத்துவா.. ராட்சசி..” கிண்டல் குரலில் சொன்னாலும், அவனது குரலில் இருந்த வருத்தம் அரவிந்தனுக்கு புரியவே செய்தது.

‘மனசுல அவ மேல ஆசை நிறையவே இருக்கு… இந்த பாழா போன கொள்கையை விட்டு வெளிய வர இவனோட ஈகோ இடம் கொடுக்கல.. இவனை என்ன சொல்றது? எப்படியும் கிருஷ்ணா அண்ணா இந்தக் கல்யாணத்தை நடத்தியே தீரப் போறார்.. இவன் எப்படியும் மாட்டிக்கிட்டு முழிக்கப் போறான்..’ மனதினில் நினைத்துக் கொண்டவன்,

“இப்போ என்னடா.. அதான் அனுப்பியாச்சே.. வீட்டுக்கு கிளம்பிப் போய் தூங்கு..” அர்விந்த் பல்லைக் கடிக்க,

“அதான்டா செய்யப் போறேன்.. இந்தப் போட்டோவைப் பார்த்த நிகிதாவோட அப்பா பதறி எப்படி இந்தக் கல்யாணத்தை நிறுத்தப் போறார்ன்னு பாரு.. நான் யாரு?” நிரஞ்சன் பெருமையாக சொல்ல, அர்விந்த் தலையில் அடித்துக் கொண்டான்.

“நீயும் உன் ஐடியாவும்.. இதெல்லாம் அர்த பழைய ஐடியா.. எனக்கு என்னவோ இதெல்லாம் பெரிய பிரச்சனையாகும்னு தோணல.. சரி.. நீ வீட்டுக்கு போ.. நான் புஜ்ஜுக்கு ஸ்வீட் வாங்கிட்டு போகணும். நேத்திக்கே ஐஸ்கிரீம் கேட்டா..” நிரஞ்சனை கிண்டல் செய்தவன், தன்னுடைய வேலையை திட்டமிட,

“இங்க ஒருத்தன் எரிஞ்சிக்கிட்டு இருக்கான். உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஐஸ்கிரீம் கேட்குதா?” நிரஞ்சன் பல்லைக் கடித்தான்.

“ஏண்டா ராசா.. நீ தான் நல்லா இருக்கற வாழ்க்கைய சொதப்பிக்கிட்டு எரிஞ்சிக்கிட்டு இருக்க.. எனக்கு என்ன வந்தது? நான் இன்னைக்கு ஒண்ணு இல்ல.. ரெண்டு ஐஸ்கிரீமா சாப்பிடத்தான் போறேன்.. வேணும்னா நல்லா நாலு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு, மூளையை தட்டி யோசிச்சு பாரு.. வீட்ல சொல்றது சரியா தான் இருக்கும். நான் இப்போ கிளம்பறேன்.. நீ உன் வேலையைப் பாரு..” என்றவன், அதற்கு மேல் தாமதிக்காமல் நிரஞ்சனின் கையில் இருந்த தன்னுடைய செல்லைப் பிடுங்கிக் கொண்டு, காரில் ஏறிப் புறப்பட, நிரஞ்சன் தனது காரை கோபத்தில் எட்டி உதைத்தான்.

“இவன் எல்லாம் ஒரு பிரெண்ட்டு.. ஐஸ்கிரீம் சாப்பிடப் போறானாம்.. போடா போ.. நல்லா ஐஸ்கிரீம் சாப்பிட்டு தொண்டை வலியால கஷ்டப்படு..” நிரஞ்சன் கோபமாக தனது காருக்குள் ஏற, அவனது செல்போன் சிணுங்கியது.

அதைப் பார்த்தவன், அதில் ஒளிர்ந்த கோபாலின் எண்ணைப் பார்த்து, “ஹஹஹா.. போட்டோ சரியா வேலை செஞ்சிடிச்சு போலயே.. சூப்பர்.. சூப்பர்.. இனிமே நாம ஜாக்கிரதையா பேசணும்..” என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டவன், போனை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

“மாமா..” அவன் குழறலாக பேச நினைத்தாலும், அவனது குரல் பவ்ய்மாகவே வெளி வந்தது.

“என்ன மாப்பிள்ளை? எங்க இருக்கீங்க?” கோபால் நிரஞ்சனிடம் கேட்க,

“அது.. அ..து.. வந்து..” என்று மென்று விழுங்கியவன்,

‘நிரு.. நீ இப்போ தயங்கி எந்தப் பிரயோசனமும் இல்ல.. அவர் கிட்ட நீ இருக்கற இடத்தைச் சொன்னா தான் நீ நினைச்சது நடக்கும்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்,

“நான் பார்ல இருக்கேன் மாமா..” பட்டென்று சொல்லி முடித்தான்.

“மாப்பிள்ளை.. பார்ல இருக்கீங்க சரி.. உங்களுக்கு அங்க என்ன வேலை?” கோபால் சிரித்துக் கொண்டே கேட்க,

“பார்ல என்ன மாமா செய்வாங்க? தண்ணியடிக்கத் தான் வந்திருக்கேன். நான் எப்பவும் வெளிப்படையானவன் மாமா..” நிரஞ்சன் பெருமையாக சொல்லிக் கொள்ள,

“ஹஹஹா.. மாப்பிள்ளை.. நீங்க என் பொண்ணுகிட்ட பொய் சொல்ற மாதிரி என் கிட்ட சொல்ல முடியாது. தண்ணியடிக்கிறவன் முகத்தைப் பார்த்தா தெரியாதா? சும்மா கூல் ட்ரிங்க்சை ஊத்திக்கிட்டு பார் முன்னால நின்னா நீங்க குடிக்காரன்னு நான் நம்பிடுவேனா? போங்க மாப்பிள்ளை.. நீங்க இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கீங்க..” தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும், நிரஞ்சனுக்கு சப்பென்று ஆகியது.

“மாமா.. நான் குடிக்கிறேன்னு சொல்றேன்.. நீங்க சிரிக்கறீங்க?” நிரஞ்சன் அதிர்ச்சியுடன் கேட்க,

“ஹையோ.. ஹையோ.. நீங்க சொல்றது சிரிப்பா இல்ல இருக்கு… மாப்பிள்ளை குடிக்கிறவன் முகம் எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்.. நீங்க நிகிதாவை கேலி செய்யறா மாதிரி செய்யாதீங்க… அந்த ஜூசை மிச்சம் வைக்காம குடிச்சிட்டு வீட்டுக்குப் போய் சேருங்க.. நான் இப்போ தான் சமையல் காண்ட்ராக்டர் கிட்ட பேசி முடிச்சிட்டு வந்தேன்.. சரிங்க மாப்பிள்ளை.. நேரத்தோட போய் தூங்குங்க..” என்று கூறியவர், நிரஞ்சன் சொல்ல வருவதைக் கேட்காமல் போனை கட் செய்துவிட, நிரஞ்சனுக்கு சப்பென்று ஆகியது.   

“என்னது? சின்னப் பிள்ளைத் தனமா இருக்கா? எவ்வளவு கஷ்டப்பட்டு பாருக்கு எல்லாம் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து அனுப்பினா.. ஒத்த வார்த்தையில இப்படி சொல்லிட்டு வச்சிட்டாரே..” என்று புலம்பிக் கொண்டே அமர்ந்தவன், நிகிதாவிற்கு அழைத்தான்.

அவள் தூக்க கலக்கத்தில் போனை எடுக்கவும், அதில் மேலும் கடுப்பானவன், “நல்லா தூங்கற போல.. சந்தோஷமா இருக்கியோ? ஒருத்தன் இங்க உயிரைக் கொடுத்து கல்யாணத்தை நிறுத்த போராடிட்டு இருந்தா.. உனக்கு தூக்கம் கேட்குதோ தூக்கம். உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன்.. அதைப் பார்த்துட்டு என்ன செய்ய முடியுமோ செய்.. அதான் பொண்ணுங்க எல்லாம் டாங்க் கணக்கா கண்ணீரை வச்சு இருப்பீங்களே.. அதை கொஞ்சம் திறந்து விட்டு எதையாவது செய்து கல்யாணத்தை நிறுத்து.. வேணும்னா நான் ஒரு பொண்ணு கூட இருக்கற போட்டோவையும் அனுப்பி வைக்கிறேன்.. அதையும் யூஸ் பண்ணிக்கோ… உங்க அப்பா நான் விளையாடறேன்னு நினைச்சிட்டு இருக்கார்..” படபடவென பேசியவனின் சொற்கள் புரியாமல் விழித்தவள், அவன் போனை வைத்ததும், அவன் அனுப்பிய புகைப்படத்தை பார்வையிட்டாள்.

“அடப் பாவி நிரு.. பாருக்கு வெளிய என்ன வேலை எல்லாம் செய்துட்டு இருக்க? இதெல்லாம் உண்மையா?” என்று திகைப்புடன் வாய்விட்டே கேட்டவள், அதை எடுத்துக் கொண்டு தனது தந்தையைத் தேடி ஓடினாள்.    

அதே நேரம் போட்டோவைப் பார்த்த வைபவ் திகைத்துப் போய் கிருஷ்ணாவிற்கு அழைத்து விஷயத்தை கூற, “அட இவ்வளவு தானா? அவன் கூடப் போயிருக்கறது நம்ம ஆளு தான். அவன் தான் போட்டோவை அனுப்பி இருக்கான். எனக்கும் ஒரு போட்டோ அனுப்பி இப்போ தான் புலம்பிட்டு போனை வச்சான். நீ ஒண்ணும் கவலைப்படாதே.. மெதுவா உங்க அப்பா ரியாக்ஷன் மட்டும் எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லு சிஷ்யா.. அது போதும்..” என்று தைரியமாகப் பேசவும்,

“நீங்க எப்படித் தான் இவ்வளவு தைரியமா இருக்கீங்களோ? எங்க அப்பாவுக்கு குடிக்கிறவங்களைப் பார்த்தாலே பிடிக்காது. இந்த போட்டோவை எங்க அப்பா பார்த்தார்.. என்ன நடக்கும்ன்னே தெரியாது..” பதட்டமாக வைபவ் சொல்ல,

“வைபவ்.. இந்தக் கல்யாணம் நடக்கணும்ங்கறது தான் இவங்களோட விதி.. அதும் மீறி நின்னா நாம என்ன செய்யப் போறோம்.. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு பேசாம நடக்கறதைப் பாரு. வேற ஒண்ணுமே செய்ய வேண்டாம். நான் போய் என் பையனை தூங்க வைக்கிறேன் வைபவ்.. நிரு இல்லாம அவன் தூங்க மாட்டேன்கிறான்..” என்ற கிருஷ்ணா, ஒரு குட் நைட்டுடன் போனை வைத்து விட, வைபவ் அவசரமாக கோபாலைத் தேடிச் சென்றான்.

நிகிதாவும் வேகமாக அப்பொழுது அவரருகில் வரவும், ‘போச்சு.. இந்த பேய் கையில சும்மா இல்லாம சலங்கைய வேற இந்த நிரஞ்சன் கொடுத்து விட்டு இருக்காரே.. என்ன ஆகப் போகுதோ?’ என்று மனதினில் புலம்பிக் கொண்டே நிற்க, நிகிதா தனது செல்போனை கோபாலிடம் நீட்டினாள்.

“என்ன இருக்கு நிகிதா?” அந்த போனை வாங்கிக் கொண்டே கோபால் கேட்க,

“நீங்களே பாருங்கப்பா.. இவரை நான் நல்லவர்ன்னு நினைச்சு லவ் பண்ணினா.. இப்படி குடிச்சிட்டு என்னை வெறுப்பேத்தவே போட்டோ அனுப்பி இருக்கார் பாருங்கப்பா.. இவரை நம்பி நான் ரொம்ப ஏமாந்து போயிட்டேன்…” அழுவது போல முகத்தை மூடிக் கொண்டு நிகிதா கோபாலிடம் முறையிட, கோபால் அவளது செல்போனைப் பார்வையிட்டார்.

அவரது முகத்தைப் பார்த்த வைபவ், “அப்பா.. நிரஞ்சனுக்கு இப்படி எந்த பழக்கமும் இல்ல.. இது யாரோ வேண்டாதவங்க செய்யற வேலை..” வைபவ் பதைபதைக்க,

“எனக்குத் தெரியும் விபு.. மாப்பிள்ளை இவகிட்ட விளையாடற மாதிரி நம்மகிட்டயும் விளையாடறார். அவருக்கு அப்படி எந்தப் பழக்கமும் இல்லைன்னு எனக்குத் தெரியுமே. நான் இப்போ அவர்கிட்ட பேசிட்டேன்.. அவர் குரல்ல எந்த வித குழறலும் இல்ல.. நீ கவலைப்படாதே..” கோபால் நிகிதாவிடம் நிறுத்தி நிதானமாக தெளிவாகச் சொல்ல, வைபவ் நிம்மதி பெருமூச்சு விட, நிகிதா அவரைப் பார்த்து விழித்தாள்.

“என்ன முழிக்கிற? இதும் அவரோட விளையாட்டு தான். சும்மா நம்மளை கலவரப்படுத்தறாராம்.. யார் கிட்ட.. சரி.. நீ போய் தூங்கு.. நாளைக்கு காலைல பார்லர்ல இருந்து ஆள் வருவாங்க.. டெஸ்ட் மேக்கப் ஏதோ செய்து பார்க்கணும்ன்னு அம்மா சொன்னாங்க.. அது முடிச்சிட்டு புடவை எடுக்கப் போக நேரம் சரியா இருக்கும்.. நேரமே இல்ல.. நேரம் கிடைக்கிற போது எல்லாம் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.. போ..” என்று கோபால் சிரித்துக் கொண்டே ஆனாலும் திட்டவட்டமாக சொல்ல, நிகிதா அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“என்னம்மா நிக்கற?” அவள் தயங்கி நிற்பதைப் பார்த்து கேட்க,

“ஒண்ணும் இல்லப்பா.. அவரைப் பத்தி நல்லா விசாரிச்சிட்டீங்களா?” ஏதாவது அவரை குழப்பி விட அவள் நினைக்க,

“நல்லா தெரிஞ்சவர் தான் நிகி.. அய்யாவோட வளர்ப்பு கண்டிப்பா தப்பா போகாது. அதுவும் தவிர, நான் இவரைப் பத்தி நிறைய கேட்டு இருக்கேன்.. தனியா விசாரிக்க எந்த இதுவும் இல்ல..” திட்டவட்டமாக அவர் சொல்லவும், வேறு வழியின்றி நிகிதா தனது அறைக்குச் சென்றாள்.

போகும் அவளையே பார்த்துக் கொண்டு வைபவ் நிற்க, “நீ எதுக்கு இப்போ நின்னுட்டு இருக்க? போய் நீயும் தூங்கு.. சும்மா வெட்டி நியாயம் பேசிட்டு அவகிட்ட வம்பு வளர்த்துட்டு இருக்காதே..” கோபால் கண்டிப்புடன் சொல்ல, வைபவ் தலையசைத்து விட்டு அமைதியாக அறைக்குச் சென்று கிருஷ்ணாவிடம் செய்தியை மெசேஜ் மூலம் சொல்லிவிட்டு, தானும் உறக்கத்திற்குச் சென்றான்.                

வீட்டிற்கு வந்த நிரஞ்சனுக்கு, தன்னுடைய திட்டம் தவிடு பொடியானதில் உறக்கம் வர மறுத்தது. ‘ச்சே.. எவ்வளவு கஷ்டப்பட்டு போகாத இடத்துக்கு எல்லாம் போய் இப்படி ஒரு ஐடியா பண்ணி போட்டோ அனுப்பினா.. கடைசியில சின்னப் பிள்ளைத் தனமா இருக்குனு ஒரே வார்த்தையில சொல்லிட்டாரே… என் மேல அவ்வளவு நம்பிக்கையா?’ புலம்பிக் கொண்டே இருந்தவன், ஒரு கட்டத்தில் தன்னை மறந்து உறங்கத் துவங்கினான்.

ஒரு அழகான, பூக்களின் வாசம் நிரம்பிய அந்த அறையில், அழகு மயிலைப் போல நிகிதா அமர்ந்திருக்க, அவளருகே நிரஞ்சன் மையல் பார்வையுடன் அமர்ந்திருந்தான். நாணத்தில் சிவந்த கன்னங்களை மறைக்க அவனது மார்பிலேயே தஞ்சம் புகுந்தவளை இழுத்து அணைத்து கழுத்து வளைவில் முத்தம் பதித்தவனின் உடலெங்கும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்த உணர்வு.

“நிகி.. ஐ லவ் யூ.. நான் இதை உன்கிட்ட வாயைத் திறந்து சொல்றதுக்கு முன்னயே நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இப்போ கூட என்ன.. இனிமே நாம காதலர்களா திரிவோம்..” அவளது காதில் உதடுகளால் உரசிக் கொண்டே நிரஞ்சன் சொல்ல, நாணமும், கூச்சமும் சேர்ந்த அந்த பெண் பாவை தள்ளாடிக் கொண்டே,

“உங்க இஷ்டம் எதுவோ அதுவே எனக்கும் இஷ்டம்..” என்று மென்மையாக முணுமுணுக்க,

“நீ எவ்வளவு சாஃப்ட் நிகி.. உன்னைப் போய் ராட்சசின்னு நான் திட்டி இருக்கேன்..” நிரஞ்சனின் உதடுகள் அவளது காதுகளில் இருந்து கழுத்துக்கு இறங்கியது.

“நானும் உங்க மனசு புரியாம திட்டி இருக்கேன்.. ரொம்ப சாரிங்க..” அவனது மார்பில் மேலும் ஒடுங்கியவளை தன்னுடன் சேர்த்து இறுக்கியவன்,

“இப்போ நம்ம கொள்கையை என்ன செய்யலாம்.. ரெண்டு பேரும் சேர்ந்து ட்ரஸ்ட் போல ஆரம்பிச்சு எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணலாமா?” நிரஞ்சன் மென்மையாக கேட்க,

“உங்க இஷ்டம் எதுவோ அப்படியே செய்ங்க.. நீங்க என்ன சொன்னாலும் நான் அப்படியே கேட்டுக்கறேன்..” நிகிதாவின் பதிலில் சந்தோஷத்துடன் நிரஞ்சன் அவளது முகத்தை நிமிர்ந்திப் பார்க்க, அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“ஏண்டா.. என்னோட கொள்கையை பொய் சொல்லி குட்டிச் சுவர் ஆக்கினது பத்தாதுன்னு இப்போ என்னை கொஞ்சிட்டு இருக்கியா? உன்னை..” என்று அம்மன் படங்களில் வரும் உக்கிரமான பத்திரகாளியைப் போல கையில் சூலம் இல்லாத குறையாக அவனை உதைத்துத் தள்ளியவளைப் பார்த்த நிரஞ்சன் நடுங்கிக் கொண்டிருக்க, அவனது முகத்தைப் பார்த்தவள், கடகடவென்று சிரிக்கத் தொடங்கினாள்.

“ஆ… அம்மா…” நிரஞ்சனின் அலறலில், உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா அவசரமாக ஓடி வந்து நிரஞ்சனின் அறைக் கதவைத் தட்ட கை வைக்க, அது தன்னாலயே திறந்துக் கொள்ள, கீழே விழுந்துக் கிடந்த நிரஞ்சனின் அருகே கிருஷ்ணா வேகமாக ஓடிச் சென்றான்.

“என்னை விட்டுடு நிகி.. நான் என்ன தப்பு செய்தேன்? உன்னை லவ் பண்ணினது தப்பா? அதுக்கு எதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தர?” கண்களைத் திறக்காமல் நிரஞ்சன் புலம்பிக் கொண்டிருக்க, அவனது நிலையைப் பார்த்த கிருஷ்ணா, அவனைப் பிடித்து உலுக்கினான்.

“நிரு… டேய் நிரு.. என்னடா ஆச்சு? ஏன் இப்படி வேர்த்து வடிய கீழ விழுந்து கிடக்கற?” கிருஷ்ணாவின் உலுக்கலில் மெல்ல கண்களைத் திறந்தவன்,

“கிஷ்மு.. இந்த நிகிக்கு சாமி வந்துடுச்சு.. என்னைப் போட்டு அடிச்சு தள்ளிட்டா..” நிரஞ்சன் பரிதாபமாக சொல்ல,

“என்னது?” கிருஷ்ணா திகைப்புடன் கேட்டான்.

“அவ தான் கிஷ்மு என்னை பெட்ல இருந்து தள்ளி விட்டா.. என்னா அடி தெரியுமா?” நிரஞ்சன் சொல்வதைக் கேட்ட கிருஷ்ணாவிற்கு சிரிப்பு பீறிட்டது. அவன் கனவு கண்டு இப்படி புலம்புவதை புரிந்துக் கொண்டவன்,

“மொதல்ல நீ எழுந்திரு..” அவனுக்கு கைக் கொடுத்து தூக்கியவன், மெல்ல அவனை பெட்டில் உட்கார வைத்து விட்டு,

“எங்க அடிச்சா? நிகிதா இங்க எப்படி வந்தா?” தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க, நிரஞ்சன் சற்று நிதானித்து கிருஷ்ணாவைப் பார்த்தான்.

“நிகிதாவா? அவ எதுக்கு இங்க வரா?” நிரஞ்சன் இப்பொழுது கிண்டல் போல கிருஷ்ணாவைக் கேட்க, கிருஷ்ணா அவனை ஏளனமாகப் பார்த்தான்.

“ஏதோ கனவு கண்டுட்டேன் போல.. நீ போய் தூங்கு..” கிருஷ்ணாவின் ஏளனப் பார்வையைத் தவிர்க்க நிரஞ்சன் அவனை விரட்ட முற்பட,

“மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு உனக்கு ஏன்டா இந்த வேலை? கனவுல அவ கூட ரொமான்ஸ் பண்ணி இருப்பியே?” கிருஷ்ணாவின் கேள்வியில் திகைத்தவன்,

“உனக்கு எப்படித் தெரியும்?” என்று உளறி வைத்தான்.

“ஹ்ம்ம்.. பின்ன.. கனவுல வந்து அவ என்ன காளி அவதாரமா எடுத்து இருப்பா?” கிருஷ்ணா கேலியாகக் கேட்க,

“ஆமா கிஷ்மு.. மொதல்ல நீங்க என்ன சொன்னாலும் சரி.. சரின்னு சொல்லிட்டு இருந்தவ.. கடைசியில காளி மாதிரி என்னைப் பிடிச்சு தள்ளினா பாரு.. நான் அப்படியே நடுங்கிப் போயிட்டேன்..” என்று நிரஞ்சன் தனது கனவை உளறி வைக்க, கிருஷ்ணா சிரிக்கத் தொடங்கினான்.

“டேய்.. தம்பி..” கிருஷ்ணாவின் கேலியில்,

“அதுக்குத் தான் சொல்றேன் இந்தக் கல்யாணமே வேண்டாம்ன்னு.. கனவுலேயே இந்த மிரட்டு மிரட்டறவ.. நேர்ல என்னை என்ன பாடு படுத்துவான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு.. உனக்கு என்ன அண்ணி மாதிரி ஒரு சாதுவான மனைவி கிடைச்சிட்டாங்க.. எனக்கு இப்படி ஒரு பத்திரகாளி வேண்டாம் கிஷ்மு.. சொன்னா புரிஞ்சிக்கோ.. என் உடம்புல அடி வாங்க எல்லாம் தெம்பு இல்ல. இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு.. இல்ல.. நான் எங்கயாவது ஓடிப் போயிடுவேன்..” நிரஞ்சன் கோபமாகவும், கெஞ்சலாகவும் கிருஷ்ணாவிடம் மன்றாடத் துவங்க, கிருஷ்ணா அவனது முகத்தை கூர்ந்து பார்த்து, தனது அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

“உன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணா போனா பரவால்லையா நிரு..” ஏற்ற இறக்கத்துடன் மென்மையான குரலில் கிருஷ்ணா கேட்க, நிரஞ்சன் திகைப்புடன் அவனது முகத்தைப் பார்த்தான்.

“என்ன சொல்ற கிருஷ்ணா? நான் அவளோட வாழ்க்கை கெட்டுப் போற அளவுக்கு எதுவுமே செய்யவே இல்லையே.. நான் லவ் சொல்லியே இன்னும் முழுசா ரெண்டு நாள் ஆகல தெரியுமா? இதுல நான் அவ வாழ்க்கை கெட்டுப் போக என்ன செய்தேன்?” அதிர்ச்சியுடன் கேட்க,

“ஒருநாள் இல்ல நிரு.. உன்னை மறந்த ஒரு நிமிஷம் போதும்..” கிருஷ்ணா பீடிகைப் போட, நிரஞ்சன் புரியாமல் முழித்தான்.

‘நான் அவளை கிஸ் கூட செய்தது இல்லையே.. இதுல அவ வாழ்க்கை எப்படி கெட்டுப் போகும்? ஒருவேளை கனவுல அவளைக் கட்டிப் பிடிக்கலையோ? நிஜமாவே செய்துட்டோமோ?’ நிரஞ்சன் கனவிற்கும் நினைவிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்க, அவன் குழம்பி இருப்பதை உணர்ந்த கிருஷ்ணா, 

“ஹ்ம்ம்.. உண்மையைத் தான் சொல்றேன் நிரு.. நீயும் நிகிதாவும் சேர்ந்து இருக்கற போட்டோ இப்போ ஊரெல்லாம் சுத்துது தெரியுமா? அதுவும் காதலர் தினத்தை தினம் தினம் கொண்டாடும் ஜோடின்னு தலைப்பு கொடுத்து ஷேர் ஆகிட்டு இருக்கு” கிருஷ்ணா வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்க, நிரஞ்சன் அதிர்ந்துப் போனான்.

“என்னடா சொல்ற? நாங்க நெருக்கமா இருந்ததே இல்லையே..” நிரஞ்சன் முணுமுணுக்க,

“இந்தப் போட்டோவைப் பாரு..” தனது செல்லில் இருந்து கிருஷ்ணா ஒரு புகைப்படத்தைக் காட்ட, அதைப் பார்த்த நிரஞ்சன் அதிர்ந்துப் போனான்.

அன்று காலை இருவரும் வாகிங் சென்ற போது, கையைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாக அமர்ந்திருந்த புகைப்படம், கிருஷ்ணா சொன்னது போலவே தலைப்பிட்டு அவனது வாட்ஸ்அப் க்ரூப்பில் வந்திருப்பதைப் பார்த்த நிரஞ்சன் திகைத்துப் போய் கிருஷ்ணாவை ஏறிட்டான்.

“இது வச்சு தான் சொல்றேன்.. இன்னைக்கு கோயம்புத்தூர்லையே இந்த போட்டோ தான் வைரலாம்.. உனக்குத் தெரியுமா? இன்னும் ஏதோ சோஷியல் சைட்ல எல்லாம் கூட போட்டு இருந்தாங்கன்னு என் பிரெண்ட் சொன்னான்…” கிருஷ்ணா அடுக்கிக் கொண்டே போக, நிரஞ்சன் சிறிது சுதாரித்தான்.

“இந்த போட்டோல அவ வாழ்க்கையைக் கெடுக்கிறா போல என்ன இருக்கு? கையைப் பிடிச்சிட்டு தானே உட்கார்ந்து இருக்கோம்?” நிரஞ்சன் கேட்க,

“கையைப் பிடிச்சிட்டு உட்கார்ந்து இருந்தாலும், உன் முகத்துல இருக்கற காதலும், அவ முகத்துல இருக்கற வெட்கமும், இது பிரெண்ட்ஷிப்ன்னு சொல்லும்ன்னு நினைச்சியா? சில பேர் உன்னை அடையாளம் கண்டுக்கிட்டு எனக்கு போன் செய்து வேற கேட்டாங்க..” கிருஷ்ணா கவலைக் குரலில் சொல், நிரஞ்சன் திகைத்துப் போனான்.

“இப்போ என்ன செய்யறது கிருஷ்ணா? நான் வேணா இது பொய்ன்னு ஒரு கேஸ் போட்டு அதை எல்லா இடத்துலயும் போஸ்ட் பண்ணிடவா?” நிரஞ்சன் குழப்பமாகக் கேட்க,

“பண்ணிட்டா அதோட நின்னுடுமா என்ன? எத்தனையோ ஷேர் பல வருஷத்துக்கு… ஏன் மாசத்துக்கு முன்னால வந்தது கூட நமக்கு இப்போ திரும்ப வரது இல்லையா? அது போல ஒருவேளை நாம கல்யாணத்தை நிறுத்தின அப்பறம்… நிகிதா வேற கல்யாணம் செய்துக்கிட்ட அப்பறம் இதை அவளோட ஹஸ்பண்ட் பார்க்க நேர்ந்தா அவளோட வாழ்க்கை என்ன ஆகும்? இது இன்னையோட முடியற விஷயமா?” கிருஷ்ணா அவனை மேலும் குழப்ப, நிரஞ்சன் கவலையுடன் அவனைப் பார்த்தான்.

“அப்படியே கேஸ் போட்டாலும்.. இதுக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு நிகிதாவையும் இல்ல இதுல இழுத்து விடுவாங்க.. அப்போ?” என்று கிருஷ்ணா கேட்டு பாதியில் நிறுத்த, நிரஞ்சன் தலையில் அடித்துக் கொண்டான்.

“ச்சே.. ஒரு நிமிஷம் பப்ளிக் பிளேஸ்ன்னு பார்க்காம செய்த தப்பு.. அவ பாவம் கிஷ்மு.. வாய் தான் அதிகமே ஒழிய.. அவ நல்ல பொண்ணு தான்.. என்னால அவளோட வாழ்க்கை வீணா போறது சரி இல்ல தான்.. இப்போ என்ன செய்யறது?” நிரஞ்சனின் இளகிய மனதை கிருஷ்ணா பயன்படுத்திக் கொள்ள, அது சரியாக வேலை செய்தது.

“அவ நல்ல பொண்ணு தானே..” கிருஷ்ணா மீண்டும் உறுதி செய்துக் கொள்ளக் கேட்க,

“நல்ல பொ…ண்…ணு  தான்.. ஆனா.. சரியான ராட்சசி.. ஒரு நிமிஷம் அண்ணிய குறைச்சு மதிப்பிட பார்த்தா பாரு..” நிரஞ்சன் அவசரமாக தனது தரப்பிற்கு வலுவைச் சேர்க்க,

“அது தப்புன்னு அவளே அதுக்கான விளக்கத்தை சொன்னா இல்ல.. அவ குரல்ல உண்மையான மன்னிப்பு இருந்தது நி..ரு… சரி.. விடு அதுக்காக இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம். அவ வாழ்க்கை எப்படி போனா நமக்கு என்ன? ஆனா.. பெண் பாவம் ந…ம்..ம்..ம குடும்பத்தை வாட்டும்.. அதுக்கு தான் யோசிக்கிறேன்.. விடு.. யாராவது ஜோசியரைப் பார்த்து நாம அதை சரி செய்துக்கலாம்..

இல்ல இப்படியே போகட்டும்.. நீ வேற கல்யாணம் செய்து உனக்கு குழந்தை பிறந்தாலோ, இல்ல நம்ம நிதினுக்கோ அது வராம பார்த்துக்கணும்..” கிருஷ்ணா கவலையுடன் சொல்ல, நிரஞ்சன் திகைத்துப் போனான்.

“ஒருவேளை இந்த அவமானம் தாங்காம அவங்க வீட்ல எல்லாரும்..” கிருஷ்ணா மேலும் இழுக்க, ‘கிருஷ்ணா..’ நிரஞ்சன் அலறினான்.

“இல்லடா.. எல்லாரும் கஷ்டப்படுவாங்களேன்னு சொல்ல வந்தேன்..” கிருஷ்ணா நிரஞ்சனின் முகத்தைப் பார்த்துச் சொல்ல, நிரஞ்சன் கலங்கிப் போனான்.

“நான் வேணும்ன்னு அப்படி செய்யல கிருஷ்ணா.. அவளை எனக்கு பிடிக்கும் தான்.. ஆனா.. என் கொள்கை வேற இல்ல.. இவ அந்த கொள்கைக்கு சரிப்பட்டு வர மாட்டா.. அது தான்..” நிரஞ்சன் இழுக்க,

“கொள்கை பெருசா.. இல்ல அவங்க வீட்ல இருக்கறவங்க நிலைமை பெருசான்னு நீ முடிவு செய்து காலையில சொல்லு.. இப்போ நிம்மதியா தூங்கு.. எனக்கு தூக்கம் வருது..” என்று அவனது தோளைத் தட்டிய கிருஷ்ணா, நிரஞ்சனைப் பார்த்துவிட்டு தனது அறைக்குச் செல்ல, நிரஞ்சன் உறக்கம் வராமல் தவிக்கத் தொடங்கினான்.

கண்களை மூடிய வேளையில் எல்லாம் நிகிதாவின் குடும்பம் கதறும் கட்சிகளே விரிய, அந்த காட்சிகள் அவனை ஆட்டிப் படைத்தது. உறக்கம் வராமல் தனது செல்லை எடுத்தவனுக்கும் அடுத்த அதிர்ச்சி அவனது நண்பர்கள் மூலமாய் காத்திருந்தது. அவனது அதே புகைப்படத்தைப் போட்டு அனைவரும் நிரஞ்சனை கிண்டல் செய்தும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் மெசேஜுக்கள் நிரம்பி வழிய, கிருஷ்ணா எதிர்பார்த்த முடிவையே நிரஞ்சன் எடுக்க நேர்ந்தது.

காலை வேளை விடிந்தும் விடியாத வேளையில் நிகிதா வழக்கம் போல வாக்கிங் செல்லலாமா வேண்டாமா என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருக்க, அவளது அறைக்கு அவசரமாக வந்த வைபவ், “நிகி.. என்கூட கொஞ்சம் வெளிய வாயேன்..” என்று பதட்டமாக அழைக்க, நிகிதா, அவனை புரியாமல் பார்த்தாள்.

“என்ன விபு? என்னாச்சு? நான் சொன்னது போல அந்த நிரு சரியான குடிக்காரன் தானே.. கூட வேற ஏதாவது இருக்கா?” நிகிதாவின் இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்க, அவள் கேட்டு முடிக்க,

“இல்ல.. இது உன் கேரக்டர் சம்பந்தப்பட்ட விஷயம். வீட்ல பேச வேண்டாம்.. அம்மா அப்பா காதுல விழுந்தா ரொம்ப வருத்தப்படுவாங்க.. நீ வெளிய வா..” வைபவ் அவசரமாக அழைக்க, அவன் சொன்னதைக் கேட்ட நிகிதா, பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“என்ன விபு சொல்ற? நான் என்ன செய்தேன்?” நிகிதாவின் கேள்வியில்,

“எல்லாத்தையும் இங்கயே பேச வேண்டாம்ன்னு சொல்றேன்.. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பு..” என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்ற வைபவ், அவனது செல்லை எடுத்து, நிகிதா, நிரஞ்சன் அருகருகே இருந்த புகைப்படத்தைக் காட்டினான்.

அதைப் பார்த்த நிகிதா திகைப்புடன் வைபவ்வைப் பார்க்க, “இந்த போட்டோ இன்னைக்கு கோயம்புத்தூர் ஃபுல்லா பிரபலம்.. ஏன்… இன்னும் எங்க எங்க போயிருக்கோ? இதைத் தான் சொல்ல கூப்பிட்டேன்..” வைபவ்வின் முகத்தில் இருந்த பாவத்தைப் பார்த்த நிகிதாவின் வயிறு கலங்கத் துவங்கியது.

“விபு… இதை அப்பா பார்த்து இருப்பாரா?” கலக்கமாக அவள் கேட்க,

“தெரியல.. இது வரை பார்த்ததா எனக்குத் தெரியல.. ஆனா.. எப்போ வேணா அப்பா அம்மா பார்வைக்கு இந்த போட்டோ போகலாம்..” வைபவ் சொல்லிக் கொண்டே போனை தனது பாக்கட்டிற்குள் போட, நிமிர்ந்து அந்த நேரம் வாக்கிங் செல்பவர்களை நிகிதா பார்க்க, அவர்கள் அவளைக் கேலியாக பார்ப்பது போல இருந்தது. உடலில் கூச்சமான உணர்வு தென்பட,

“விபு… நாம வீட்டுக்குப் போகலாம்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. எல்லாரும் என்னை கேலியா பார்க்கற மாதிரி இருக்கு..” கண்களில் கண்ணீருடன் நிகிதா சொல்ல, வைபவ்விற்கு அவளது நிலைமை பாவமாக இருந்தது. ஆனாலும் இருவரின் காதலையும் இந்த வரட்டுப் பிடிவாத கொள்கையினால் தோர்க்க விடாமல் செய்ய வேறு வழியின்றி வைபவ் அமைதி காத்தான்.

“எனக்கு அப்படித் தெரியலையே நிகி.. நீ வேற இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்ட.. இப்போ இந்த போட்டோ வேற சுத்துது.. கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு தான் நானும் காலையில முடிவு செய்திருந்தேன். நீயே வேண்டாம்ன்ன அப்பறம் உன்னை வற்புறுத்தி இதை நடத்த எனக்கு இஷ்டம் இல்ல.. ராத்திரி முழுக்க தூங்காம நல்லா யோசிச்சுப் பார்த்தேன்.. எனக்கு அப்படி தோணிச்சு.. காலையில அப்பாகிட்ட பேசிடலாம்ன்னு பார்த்தா.. இப்படி ஒரு புது புயல்.. என்னம்மா செய்யறது?

எனக்கு ரொம்ப கவலையா இருக்கு நிகி.. அப்பா அம்மாகிட்ட யாராவது இந்த போட்டோவைக் காட்டி ஏதாவது கேள்வி கேட்டா என்ன செய்யறதுன்னு தான் யோசிக்க வேண்டியதா இருக்கு.. கல்யாணத்தை நிறுத்திடலாமா? என்ன செய்யறதுன்னு ஒண்ணுமே புரியல..” வைபவ் குழப்பமாக பேசிக் கொண்டே போக, நிகிதா எந்த பதிலும் பேசாமல், குனிந்த தலை நிமிராமல் அவனுடன் நடந்தாள்.

“இந்த போட்டோவை அவன் தானே எடுத்து இருப்பான்…” குரல் கம்ம கோபமாக நிகிதா கேட்க,

“இல்லடா நிகிம்மா.. இந்த போட்டோவை எடுத்தது அவருக்கு தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்.. ஏன்னா காலையில நான் அவரோட அண்ணாகிட்ட இதைப் பத்தி பேசினேன்.. அவரும் நிரஞ்சன் கிட்ட கேட்டதுக்கு.. அவர் ரொம்ப ஷாக்காகி உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்பட்டாராம்.. சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தார்..” வைபவ் பொய் மேல் பொய்யாக அடுக்கிக் கொண்டு போக, நிகிதாவின் நெஞ்சம் நிரஞ்சனை நினைத்து ஒரு நிமிடம் தவித்தது.

“நிரு அப்படி செய்திருக்க மாட்டார் தான்.. இருந்தாலும்.. கோபத்துல..” நிகிதா இழுக்க,

“ச்சே.. ச்சே.. அவருக்கு நீ கஷ்டப்பட்டா நல்லா இருக்குமா என்ன? அப்படி பட்ட ஆளா நிரஞ்சன்?” வைபவ் சந்தேகமாக இழுக்க, நிகிதா மறுப்பாக தலையாட்டிக் கொண்டாள்.

“இதை அப்பா பார்க்கறதுக்குள்ள எப்படியாவது அழிச்சிட முடியாதா? யாரோ எங்களுக்கு வேண்டாதவங்க தான் இப்படி செய்திருக்கணும்..” நிகிதா புலம்பிக் கொண்டே வர, வைபவ்வோ மனதினில்,

‘உனக்கு வேண்டியவங்க தான் இதை செய்து இருக்கோம்.. உங்களோட அந்த லூசு கொள்கையை உடைச்சு உங்களை சேர்த்து வைக்க, எங்களுக்கு வேற வழி தெரியலையே..” என்று சொல்லிக் கொண்டே நிகிதாவை வீட்டிற்கு அழைத்து வந்தான்.

வீட்டில் நுழையும் பொழுது, காயத்ரியும் கோபாலும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த நிகிதாவிற்கு மனதில் பக்கென்று இருந்தது. காயத்ரியின் முகத்தில் எல்லையில்லா வருத்தமும், கோபாலின் முகத்தில் யோசனையையும் பார்த்தவள், அதற்கு மேல் எதுவும் அவர்களிடம் பேசாமல், தனது அறைக்குச் செல்ல, காயத்ரி நிகிதாவை அதிசயமாகப் பார்த்தார்.

“பொம்மு.. நாங்க இங்க உட்கார்ந்து இருக்கோம்.. நீ எங்க கிட்ட பேசாம போற? என்ன விஷயம்?” காயத்ரி கேட்கவும்,

“அம்மா.. நான் எந்த தப்பும் செய்யலம்மா.. நான் நீங்க சொல்றபடி நல்ல பிள்ளையா இருக்கேன்.. ப்ளீஸ்.. என்னை தப்பா எடுத்துக்காதீங்க..” என்று கதறிக் கொண்டே நிகிதா அவரது மடியில் சாய, காயத்ரி அவள் சொல்வது புரியாமல் வைபவ்வை பார்த்தார்.

“அது ஒண்ணும் இல்லம்மா.. அவளுக்கு நீங்க பார்த்த மாப்பிள்ளை இல்லாம லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கப் போறோம்ன்னு ஒரு சின்ன கில்டி ஃபீலிங்.. அது தான்..” வைபவ் நிலைமையை சமாளிக்க,

“ச்சே பைத்தியம்.. நல்ல மாப்பிள்ளை.. நல்ல இடம்ன்னு நாங்க சந்தோசம் தான் பட்டுக்கிட்டு இருக்கோம். இந்தக் கல்யாணம் எந்தத் தடங்கலும் இல்லாம நல்லவிதமா நடந்தா போதும்ன்னு எங்களுக்கு இருக்கு. நடுவுல யாரும் புகுந்து கெடுத்துடக் கூடாதேன்னு நாங்களே கவலைப் பட்டுக்கிட்டு இருக்கோம்.. மாப்பிள்ளையோட வீட்ல எல்லாருமே ரொம்ப யதார்த்தமா பழகுவாங்க.. நானும் கேள்வி பட்டு இருக்கேன்.. அந்த குடும்பத்துக்கு போனா.. நீயும் கவலை இல்லாம இருக்கலாம்..” காயத்ரி ஒரு தாயாய் நிறைவுடன் சொல்லிக் கொண்டிருக்க, நிகிதா அவரை நிமிர்ந்து ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“இந்த போட்டோ அந்த போட்டோன்னு எது வந்தாலும் கலங்க வேண்டாம் நிகி.. மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்.. அவர் எந்தத் தப்பும் செய்ய மாட்டார்.. நீ தைரியமா இரு..” அவளுக்கு தேறுதல் சொல்ல, கண்களைத் துடைத்துக் கொண்ட நிகிதா,

“என்னையும் அறியாம ஏதாவது செய்திருப்பேன்மா.. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கும். நீங்க கவலைப்படாதீங்கம்மா.. நான் உங்க பேரை எந்த விதத்துலையும் கெடுக்க மாட்டேன்..” என்று நிகிதா காயத்ரிக்கு வாக்கு கொடுக்க, வைபவிடம் இருந்து ஒரு பெரிய மூச்சு வெளிப்பட்டது.

‘இந்த வார்த்தையை வாங்க எவ்வளவு டைலாக் அடிக்க வேண்டி இருக்கு.. இனிமே இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கும்.. டும் டும் டும்…’ மனதினில் நினைத்துக் கொள்ள, அதற்கு மேல் திருமண வேலைகள் தங்குத் தடையின்றி நடந்தேறியது. அவர்கள் குறிந்த நாளில் நிச்சயமும், திருமணமும் முடிய, இருவரின் கோபம் அப்படியே இருந்தாலும், திருமணம் மட்டும் நல்லபடியாக நடந்தேற, இதோ முதலிரவில், அந்த நாட்களை எண்ணி அவர்கள் காதுகளில் இருந்து கோபத்தில் புகை வந்தது.

அவளின் பெயர் தெரிந்த அடுத்த கணம்

அதில் ரிங்டோனை தேட வைத்தது

எது வென்று ஆராயத் தேவையில்லை

 

தேவதைக் கதை கேட்ட

பக்கத்துக்கு வீட்டு வாண்டு ஒன்றிடம்

உன்னை பற்றி சொல்லி

உள்ளுக்குள் சில்லென்ற புன்னகை

 

கொஞ்சமாய் கோபப்பட

ஒன்றும் இல்லையென்றாலும்

சண்டை முடிவுகளில்

உன் கொஞ்சல்களில்

சற்றே இளைப்பாறி

பழகியதில்

உன் அடுத்த சண்டைக்கு

காத்திருக்கிறேன்

இந்தக் காதலே வேண்டாம் சாமி!!

10 COMMENTS

 1. Super UD Ramya .
  Niru cho sweet and soft . How good he is . Nikki is very lucky to get him as her life .
  I enjoyed this commedy , emotional and sentimental episode . This episode satisfied the long waiting time of 13 days . Nearly 2 weeks . How is your health now . Take good care of yourself .
  Keep Rocking Ramya .
  Anaivarukkum Inniya Tamil Puthaandu Nalvaalthukkal .

  • thanks urmila .. thank u so much ma.. 🙂 🙂 hmm will finish the story soon ma.. my health is ok .. 🙂 🙂 thanks a lot

LEAVE A REPLY