SHARE

“என்னடா தம்பி.. கார்ல இருந்து இறங்க உனக்கு மனசு வரலையா என்ன?” கிருஷ்ணா கிண்டல் செய்ய,

“இது யார் வீடு கிஷ்மு? இவ்வளவு பெரிய வீட்டு வாசல்ல வந்து காரை நிறுத்தி இருக்க? அட்ரஸ் ஒழுங்கா தெரியலைன்னா என்கிட்டே கேட்க வேண்டியது தானே.. அதுவும் இல்லாம காலையில தானே வந்த? அதுக்குள்ள மறந்துட்டியா?” நிரஞ்சன் நக்கலுடன் கேட்க, அதே நக்கலான பார்வை பார்த்த கிருஷ்ணா,

“தம்பி சார்.. உங்களுக்குத் தான் வீடு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.. இந்த வீடு இல்லன்னா வேற எந்த வீடு?” என்று கேட்க, நிரஞ்சன் திரு திரு வென்று விழித்தான்.

அவன் விழிப்பதைப் பார்த்தவன், “தெரியாது இல்ல.. அப்போ கீழ இறங்கு. எங்களுக்கு வீடு தெரியும்..” என்று கூறியபடி கிருஷ்ணா காரை விட்டு கீழே இறங்க,

“இந்த வீட்டோட சைடு போர்ஷன்ல தான் அவ இருக்காளா? அதை சொல்லித் தொலைய வேண்டியது தானே. நான் கூட பயந்துட்டேன்” நிரஞ்சன் கிருஷ்ணாவைத் திட்டிக் கொண்டு கீழே இறங்க, கிருஷ்ணா சிரிப்புடன்,

“இந்த வீடே நிகிதாவோடது தான்..” கிருஷ்ணா கூறிய பதிலைக் கேட்ட நிரஞ்சன் அதிர்ந்து,

“என்னது?” என்று கூவிக் கொண்டே, புன்னகையுடன் நின்றிருந்த கிருஷ்ணாவைப் பார்த்து கடுப்புடன்,

“பொய் சொல்றதுக்கு ஒரு அளவே இல்லையா? விளையாடாத கிருஷ்ணா..” என்று பல்லைக் கடித்தான்.

“யார் விளையாடறா? அங்கப் பாரு அவங்க அப்பா அம்மா எல்லாம் உன்னை வரவேற்க வராங்க..” என்றபடி நிரஞ்சனின் அருகே வந்து நின்று கோபாலைப் பார்த்து புன்னகைக்க, நிரஞ்சன் புரியாமல் விழித்தான்.  

“என்னது?” நிரஞ்சன் மீண்டும் அதிர்ந்து கூவ, கோபாலும், காயத்ரியும் இன்முகத்துடன் நிரஞ்சனைப் பார்த்தனர்.

“கிஷ்மு.. என் வாழ்க்கையோட விளையாடாதே.. உண்மையைச் சொல்லிடு.. நிகிதா வீட்டுக்கு வரேன்னு நீங்க வேற எங்கயோ என்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்திருக்கீங்க… கிஷ்மு.. உண்மையைச் சொல்லு..” நிரஞ்சன் கிருஷ்ணாவிடம் கோபமாகக் கேட்க,

“என்னை நம்புடா.. நான் ஏன் பொய் சொல்லப் போறேன்?” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன கிருஷ்ணாவின் பதிலில் சூடானவன்,

“உன்னை நம்பித் தானேடா வந்தேன். கடைசியில என் கழுத்தை மொத்தமா அறுத்துட்டியே. உள்ள போய் அந்தப் பொண்ணை என்ன பாடு படுத்தறேன்னு பாரு.. முகத்துக்கு நேரா முடியாதுன்னு சொல்லிடப் போறேன். நீயும் அப்பா அம்மாவோட கூட்டு தான் இல்ல.. போடா..” நிரஞ்சன் கோபமாக சொல்லிக் கொண்டிருக்க, கோபால் அவன் அருகே வந்திருந்தார்.

“என்ன மாப்பிள்ளை இங்கேயே நின்னு பேசிட்டு இருக்கீங்க? உள்ள வாங்க.. உங்களுக்காகத் தான் எல்லாரும் காத்துட்டு இருக்கோம்..” கோபால் நிரஞ்சனை அழைக்கவும், ராஜமாணிக்கம் நிரஞ்சனைத் திரும்பிப் பார்க்க, அவரது பார்வையில், நிரஞ்சன் அவசரமாக கோபாலைப் பார்த்து புன்னகைத்தான்.

‘ச்சே.. இப்படி அப்பா பார்த்த உடனே நான் பயப்படறேனே.. உள்ள போய் என்ன பண்ணப் போறேன்? நிரு.. பீ ஸ்டெடி.. உள்ள அதிரி புதிரி பண்ணப் போற.. அதுக்கு ரெடி ஆகிக்கோ..’ என்று தனக்குத் தானே மனவலிமையை கூட்டிக் கொண்டவன், கிருஷ்ணாவைப் பார்க்க, கிருஷ்ணா நிரஞ்சனின் முதுகில் கை கொடுத்து நகருமாறு சைகை செய்தான்.  

“உள்ள வாங்க மாப்பிள்ளை.. என்ன யோசனை?” அவனது கைகளைப் பற்றி கோபால் அழைக்கவும், நிரஞ்சன் கிருஷ்ணாவை முறைத்துக் கொண்டே அவருடன் உள்ளே நடந்தான்.

உள்ளே சென்றவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கொள்ளளவு முழுவதும் உறவினர்களால் நிரம்பி வழிந்தது. ‘போச்சு.. ஊரையே கூட்டி வச்சிருக்காங்களே.. எல்லாரும் சேர்ந்து என்னை இப்படி பலியாடு மாதிரி கூட்டிட்டு போறாங்களே.. கடவுளே என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்து..’ நிரஞ்சன் புலம்பிக் கொண்டே உள்ளே நடக்க, உள்ளே வந்த நிரஞ்சனைப் பார்த்தவர்களின் கண்களில் நிறைவு தெரிந்தது.

அவர்களைப் பார்த்தவுடன் நிரஞ்சனுக்கு சங்கோஜமும் குடி புகுந்துக் கொள்ள, சோபாவில் அமர்ந்தவன், நிகிதாவிற்கு அழைக்க முயன்று தோற்றுப் போனான்.

வரிசையாக காபி பலகாரங்கள் போன்றவைகள் வந்த வண்ணம் இருக்க, அதை வாங்கவா வேண்டாமா என்று அவன் முழித்துக் கொண்டிருந்த வேளையில், ராஜமாணிக்கம் நிரஞ்சனிடம் சாப்பிடுமாறு கண் காட்டினார்.

‘ஆமா.. நான் இன்னும் சின்னப் பிள்ள.. இவர் சொன்னா தான் வாங்கி சாப்பிடறதுக்கு.. ஹையோ ஆண்டவா.. என்னை இப்படி ஒரு கும்பலுக்கு நடுவுல உட்காத்தி வச்சு வேடிக்கைப் பார்க்கறாங்களே..’ நிரஞ்சன் மனதினில் புலம்பி,

‘இவ வேற சமயம் சந்தர்ப்பத்துல போனை எடுக்காம வேற படுத்தி எடுக்கறா..’ அவளையும் திட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனது நாயகியோ, அவன் இருந்த மனநிலைக்கு முற்றிலும் எதிரான மனநிலையில் இருந்தாள்.

காலையில், நிரஞ்சன் வீட்டில் இருந்து வந்து விட்டுப் போனதும் அவளுக்கு அழைத்த கோபால், அவர்கள் அன்று மாலையே பெண் பார்க்க வரும் செய்தியைக் கூற, நிகிதாவின் மனம் சந்தோஷத்தில் பூரித்துப் போனது.

தான் தனது காதலுக்காக மிகவும் போராட வேண்டும் என்று அவள் நினைத்திருக்க, அது இவ்வளவு எளிதில் முடியக் கூடும் என்று அவள் கனவிலும் எதிர்ப் பார்க்கவில்லை. பூரிப்பும், வீட்டில் உள்ளவர்களின் முகத்தையும் மனநிலையையும் காணும் ஆவலும் சேர்ந்துக் கொள்ள, மதியமே வீட்டிற்கு வந்தவள், கோபால் காயத்திரியின் முகத்தை ஆராய்ந்தாள். அவார்களது முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், நிகிதாவின் கால்கள் வானத்தில் பறக்கத் துவங்கியது.

‘ச்சே.. நிரு வந்து பேசும் போது நான் இல்லாம போயிட்டேனே.. அவர் எப்படி பேசி இவங்களை சரி பண்ணி இருப்பார்? இல்ல இவங்களுக்கு அவரைப் பார்த்த உடனே பிடிச்சு இருக்குமோ?’ தனக்குள்ளே நினைத்துக் கொண்டவள், 

‘நிரு யாரு.. சரியான மாயக்கண்ணன் ஆச்சே.. அவரைப் பிடிக்காம போகுமா? ஆனாலும் பாருடா.. அவரை வந்து வீட்ல பேசச் சொன்னா.. குடும்பத்தையே கூட்டிட்டு வந்து பேசி இருக்கார். அதுவும் நல்லது தான்.. அவங்க குடும்பத்தைப் பார்த்து அம்மா அப்பாக்கும் கொஞ்சம் நிம்மதி இருக்கும்..’ என்று நினைத்துக் கொண்டே அறைக்கு வந்தவளின் மனதில் நிரஞ்சனின் நினைவுகளே நிரம்பி வழிந்தது.  

‘ஆனா.. நிரு.. நான் பணக்காரின்னு தெரிஞ்சா என்ன செய்வார்? நம்ப வச்சு என்னை ஏமாத்திட்டன்னு என் மேல கோபப்படுவாரோ? ஏன் என்கிட்ட முதல்லையே சொல்லலன்னு கேட்பாரோ? அவரை நாம எப்படி எதிர் கொள்ளப் போறோம்? கோபப்பட்டாலும் நம்ம அமுல் பேபிய சமாதானம் செய்துக்கலாம். அவர் அவ்வளவு ஒண்ணும் புரிஞ்சிக்க முடியாத மக்கு கிடையாது.. பேசி புரிய வச்சிடலாம்.’ தனது எண்ணத்திற்கான தீர்வையும் அவளே சொல்லிக் கொண்டவள்,

‘அவங்க வீட்ல என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே அசந்து போகணும். அந்த நிருவும் பேச முடியாம திண்டாடிப் போகணும்..’ என்று நினைத்துக் கொண்டு, அதற்கு தோதான ஆடை அணிகலன்களை எடுத்துக் கொண்டு காயத்ரியைத் தேடிச் சென்று, அவரது சம்மதத்துடன், மாலை அவர்கள் வரவுக்காக காத்திருக்கத் துவங்கினாள்.

அழகிய மங்கையாக, நிகிதா நிரஞ்சன் தன்னை காணப் போகும் அந்த நொடிக்காக ஆவலாக காத்திருக்கத் தொடங்க, நிரஞ்சனோ முள்ளின் மீது அமர்ந்திருப்பவனைப் போல அவர்கள் வீட்டில் அமர்ந்திருந்தான்.

சில கார்கள் வரும் சத்தமும், அதைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை பார்க்க ரொம்ப நல்லா இருக்காரு நிகி..’ என்று சில உறவினர்கள் வந்து அவளிடம் சொல்லி விட்டுப் போனதும் நிகிதாவிற்கு சந்தோஷத்தையே கொடுத்தது.

ஹாலில் அமர்ந்திருந்த நிருவோ… “கிஷ்மு.. இப்போவும் சொல்றேன்.. ஏதாவது செஞ்சு இந்த பெண் பார்க்கும் படலத்தை சொதப்பி விட்டுடு.. நிஜமா சொல்றேன்.. நிகிதாவைத் தவிர என்னால யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது. அது எப்பேர்ப்பட்ட கிளியோபாட்ராவா இருந்தாலும்..” நிரஞ்சன் தனது அருகில் இருந்த கிருஷ்ணாவை மிரட்டிக் கொண்டிருக்க, அவர்களது அருகில் வைபவ் வந்தமர்ந்தான்.

“சாரி குருவே.. கொஞ்சம் வேலை முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சு. மாப்பிள்ளை என்ன கொஞ்சம் கூட முகத்துல சிரிப்பே இல்லாம இருக்காரு.. என்னாச்சு? ஏதாவது டென்ஷனா?” சிரிப்பை அடக்கிக் கொண்டு வைபவ் கேட்கவும்,

“இவ்வளவு சிரிச்சா போதுமா?” என்று கேட்டுக் கொண்டே நிரஞ்சன் தனது உதட்டை இழுத்து வைத்து சிரிக்க, வைபவ் வெளிப்படையாகவே நிரஞ்சனைப் பார்த்து சிரித்தான்.

“என் தங்கை எப்படி இருப்பா? என்ன ஏதுன்னு உங்களுக்கு டென்ஷனா இருக்கா? கவலையேப் படாதீங்க.. அவ உங்களை அசத்தியே தீரணும்ன்னு கொலைவெறியில ரொம்ப அழகா இருக்கா. எனக்கே என் தங்கையான்னு இருக்குன்னா பார்த்துக்கோங்களேன்..” நிரஞ்சனின் கடுப்பில் மேலும் சில லிட்டர் கெரோசினை வைபவ் ஊற்ற,

“இப்போ நான் உங்க தங்கையைப் பத்தி கேட்டேனா?” நிரஞ்சன் பல்லைக் கடித்தான்.

“நீ தானேடா பொண்ணு எப்படி இருப்பான்னு கேட்டுட்டு இருந்த?” கிருஷ்ணா வைபவுடன் கூட்டுச் சேர,

“நான் கேட்டேனா? நிஜமா சொல்லு.. நான் கேட்டேனா?” நிரஞ்சன் வெளிப்படையாகவே கிருஷ்ணாவிடம் கோபப்பட,

“நீங்க நேரடியா கேட்டு இருக்க மாட்டீங்க தான்.. ஆனா.. ஒரு ஆணா எங்களுக்கு உங்க ஃபீலிங்க்ஸ் புரியும் மாப்பிள்ளை.. அதோ அங்க பெரிய சைஸ்ல படி ஏறுற வழி ஃபுல்லா போட்டோக்களை மாட்டி, பயமுறுத்தி, என்னோட தூக்கத்தை கெடுத்துட்டு இருக்கறவ தான் என் தங்கை. சரியான ராட்சசி.. பாருங்க.. அப்படியே முகம் அப்பாவியா இருக்கும்.. ஆனா அவ அடப்பாவின்னு நம்மளை எண்ண வச்சிடுவா..” என்று வைபவ் கைக்காட்டிய இடத்தை, நிரஞ்சன் கோபமாகத் திரும்பிப் பார்க்க, அங்கு மாட்டப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்தவன் திகைப்புடன் சோபாவில் இருந்து எழுந்து நின்றான்.          

அவன் பட்டென்று எழுந்து நிற்கவும், “என்னாச்சு நிரு?” ஷோபி கேட்க, அதே நேரம், “என்ன மாப்பிள்ளை?” என்று கோபால் கேட்கவும், நிரஞ்சன் திகைப்புடன் மறுப்பாக தலையசைத்துக் கொண்டே மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தான்.

“என்ன மாப்பிள்ளை.. என் தங்கையைப் பார்த்த உடனே அப்படியே ஷாக் அடிச்சது போல எழுந்து நின்னுட்டீங்க? அவ என்ன அவ்வளவு அழகாவா இருக்கா?” கண்களில் சிரிப்புடன் வைபவ் கேட்க,

“இவ நிகிதாவா? இல்ல அவளைப் போல யாராவதா? அவ ஸ்கூல்ல டீச்சரா தானே இருக்கா? இவ்வளவு பெரிய வீடு எப்படி?” நிரஞ்சன் புரியாமல் முணுமுணுப்புடன் கிருஷ்ணாவிடம் கேட்க, கிருஷ்ணா வைபவ்வைப் பார்த்து புன்னகைத்தான்.

“இப்போ என்னைப் பார்த்தா லூசு மாதிரி இருக்கா? நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சிரிச்சுக்கறீங்க?” நிரஞ்சன் கடுப்புடன் கேட்க,

“இல்லடா நிரு.. அவ டீச்சர் தான்.. ஆனா.. அவ ஸ்கூல்லயே டீச்சரா இருக்கா.. அவ உன்கிட்ட ஏழைன்னு என்னிக்காவது சொல்லி இருக்காளா என்ன?” கிருஷ்ணா கேட்ட கேள்வியில் நிரஞ்சன் யோசனைக்குத் தாவினான்.

‘இல்லையே.. அவ சொல்லவே இல்லையே.. நானா தானா நினைச்சிக்கிட்டேன்.. இருந்தாலும் அவளோட நடவடிக்கை எல்லாம் அப்படித் தானே இருந்தது. ஏன் அவ ஒரு வார்த்தை இதைப் பத்தி சொல்லவே இல்ல..’ அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணா அவனது கையைத் தட்டி,

“ரொம்ப யோசிக்காதே.. அங்க நிகிதா வரா பாரு.. பொண்ணை நல்லா பார்த்துக்கோ.. அப்பறம் அது நொள்ளை இது நொட்டைன்னு சொல்லக் கூடாது..” கிருஷ்ணா கேலி செய்ய,

“ஆமா மாப்பிள்ளை.. என் தங்கச்சி பாவம்.. மதியத்துல இருந்து நீங்க வருவீங்கன்னு கையும் ஓடாம காலும் ஓடாம இப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டு நிக்கறா.. ப்ளீஸ் அவளைப் பிடிக்கலைன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. அவ மனசொடிஞ்சு போயிடுவா..” வைபவும் அவனுடன் சேர்ந்துக் கொண்டு நிரஞ்சனைக் கிண்டல் செய்ய, அவர்களின் கிண்டலில் கடுகடுத்த முகத்தை அவர்களிடம் காட்டியவனின் பார்வை அன்னமென நடந்து வந்த நிகிதாவின் மீது படிந்தது.  

அவனது கடுகடுத்த முகத்தைப் பார்த்த வைபவ் கிருஷ்ணாவை கவலையுடன் பார்க்க, கிருஷ்ணா நிரஞ்சனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கடுகடுப்புடன் திரும்பிய அவனது பார்வை, நிகிதாவைக் கண்டதும் மெல்லக் கனியத் துவங்கி இருந்தது.

படிகளில் இறங்கி வரும் அவளது தோற்றமும், அவளது முகத்தில் இருந்த புன்னகையும், அவனது மனதில் இருந்த கோபத்தை மெல்ல தணியச் செய்ய, நிரஞ்சனின் பார்வை அவளிடமே ரசனையுடன் ஒட்டிக் கொண்டது.

அவனது கண்களின் ரசனையைப் பார்த்த கிருஷ்ணா அவனைச் சுட்டிக் காட்டி வைபவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க, மெல்ல நடந்து வந்த நிகிதா, நிரஞ்சனை நாணத்துடனும், தயக்கத்துடனும் அந்த கூட்டத்தின் நடுவே ஏறிட்டுப் பார்த்தாள்.

முதலில் அவளது கண்களுக்குப் பட்டது கிருஷ்ணாவும், அவனது அருகே அவனிடம் பேசிக் கொண்டிருந்த வைபவ்வும் தான். ‘பரவால்ல பொண்ணு பார்க்க நம்ம ஆளு அவரோட முதலாளியை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்காரே..’ என்று நினைத்துக் கொண்டவள், மெல்ல இறங்கி வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிற்க,

“நிகிம்மா.. இது தான் மாப்பிள்ளையோட அப்பா.. அம்மா..” என்று தனது அறிமுகப்படலத்தைத் தொடர்ந்து, ‘இது அவரோட அண்ணா.. ஸ்ரீ ஃபவுண்டரி எம்.டி.’ என்று கோபால் கைக்காட்டிய இடத்தில் அமர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்த கிருஷ்ணாவைப் பார்த்தவள், அதிர்ந்து நிரஞ்ஜனைப் பார்த்தாள்.

அவளது அதிர்ச்சியை கண்ட நிரஞ்சனின் பார்வை மீண்டும் கோபத்துடன் அவள் மீது படிய, அந்த கோபப் பார்வையைக் கண்டவளின் முகமும் ஏமாற்றத்தை அப்பட்டமாகக் காட்டியது.

“என்னம்மா? கிருஷ்ணாவை உனக்கு ஏற்கனவே தெரியும் தானே? ஆபீஸ்ல மீட் பண்ணி இருக்கீங்கன்னு கிருஷ்ணா சொல்லிட்டு இருந்தான்..” கோதை அவளிடம் பேச்சுக் கொடுக்க, நிரஞ்சனிடம் இருந்து பார்வையைத் திருப்பியவள், கோதையைப் பார்த்து விழித்துக் கொண்டு நின்றாள்.

‘இவ எதுக்கு இப்போ முழிச்சிக்கிட்டு நிக்கறா? நான் தானே இவளோட எல்லா பொய்யையும் கேட்டு முழிச்சிட்டு இருக்கேன்..’ அவளை நிரஞ்சன் மனதினில் வசை பாட,

“அவங்க கேட்கறாங்க இல்ல.. பதில் சொல்லு..” காயத்ரி நிகிதாவை ஊக்கினார்.     

“ஆமாங்க.. பார்த்து இருக்கேன்..” மெல்லிய குரலில் நிகிதா பதில் சொல்ல, கோதை அவளைப் பார்த்து நிறைவாய் புன்னகைத்தார்.

‘ஹையோ.. நடிக்கிறா.. நடிக்கிறா.. ராட்சசி.. இவளுக்கு இவ்வளவு சாஃப்ட்டா பேசத் தெரியுமா என்ன? என்னை கவுக்கவே இவ ப்ளான் பண்ணி இருக்கா.. ஏமாத்துகாரி..’ நிரஞ்சன் மனதினில் அவளை வசைப்பாடிக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றிருந்த நிகிதாவோ, ‘என்னை எவ்வளவு ஏமாளியா நினைச்சு இருந்தா.. இவர் எங்க அண்ணன் மாதிரி.. இவங்க எங்க அம்மா மாதிரி.. அப்படின்னு சொல்லி என்னை ஏமாத்தி இருப்பார். இவரோட கம்பனில இவர் மேனேஜரா? இவனுக்காக நான் இவனோட பிரெண்ட் கிட்ட எல்லாம் போய் வேலையைக் கேட்டேனே.. அந்தப் பொண்ணு என்னை லூசுன்னு இல்ல நினைச்சு இருப்பா? அந்தப் பொண்ணு என்னைப் பார்த்த பார்வைக்கு அர்த்தம் இப்போ தானே புரியுது.. ஹையோ நிகி.. நீ இவ்வளவு பெரிய ஏமாளியா?’ தனக்குத் தானே அவள் புலம்பிக் கொண்டிருக்க,

“உங்க ரெண்டு பேருக்கும் சந்தோசம் தானேம்மா? இந்தக் கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடலாம்ன்னு இருக்கோம்.. எங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவன் காலையில ‘நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்’னு சொன்ன போது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. இவனுக்குத் தான் பொண்ணுங்கனாலே ஆகாதே.. எப்படின்னு.. கொஞ்சம் நாங்க பயந்து தான் போயிட்டோம். உன்னைப் பார்த்த அப்பறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்மா..” அன்பாய் ராஜமாணிக்கம் சொல்ல, நிகிதா நிரஞ்சனைப் பார்த்தாள்.

‘இவனுக்கா பொண்ணுங்கன்னா ஆகாது.. என்ன நடிப்புடா சாமி.. என்ன எல்லாம் பேசி.. சிரிச்சே என்னை மயக்கி இருக்கான்..’ நிகிதா மனதினில் பல்லைக் கடித்தாலும், ராஜமாணிக்கத்திற்கு புன்னகையை பதிலாக தந்தாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேச டைம் தரோம்.. பேசிட்டு வாங்க. அப்பறம் எங்களை பேச விடலன்னு குறை சொல்லக் கூடாது..” மேலும் அவர் கிண்டலாகச் சொல்லவும், கிருஷ்ணாவும் வைபவ்வும் ஒருவரை ஒருவர் பீதியாக பார்த்துக் கொள்ள, சண்டைக்குப் புறப்படும் சேவல்களைப் போல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஹையோ குருவே.. இவங்க ரெண்டு பேரோட பார்வையும் சரி இல்லையே.. இவங்களை விட்டா இவளோட தலை முடி அவர் கையிலயும், அவரோட தலைமுடி இவளோட கையிலயும் இருக்கும் போலவே.. எப்படியாவது இதை தடுத்து நிறுத்தி ஆகணும்..” வைபவ் பதறவும்,

“சிஷ்யா.. எப்படி இவங்க அடிச்சிக்கிட்டாலும் இவங்களோட கல்யாணம் நடப்பது நிச்சயம். அதனால.. போய் பேசிட்டு வரட்டுமே.. ரொம்ப நேரமா மைன்ட் வாய்ஸ்ல பேசிட்டு இருக்காங்க.. கொஞ்சம் நேரடியா பேசிட்டு வரட்டும்.. என்ன நடக்குதுன்னு பார்த்துடுவோம்..” கிருஷ்ணா தைரியமாய் சொல்ல, வைபவ்விற்குத் தான் அந்த தைரியம் குறைவாய் இருந்தது.

“என்னை நம்பு வைபவ்.. அவங்க போய் பேசட்டும்..” கிருஷ்ணா சொல்லவும், வைபவ் நிகிதாவின் முகத்தைப் பார்த்தான்.

நிகிதா நிரஞ்சனின் பதிலுக்காக காத்திருக்க, “எனக்கு ஒண்ணும் அப்படி எல்லாம் இல்லப்பா..” நிரஞ்சன் பதவிசாக பதில் கூற, நிகிதாவிற்கு மேலும் கடுப்பானது.

‘அராத்து… அராத்து.. அப்படியே அப்பா முன்னால பம்மிக்கிட்டு நிக்குது பாரு.. நீ தனியா மாட்டும் போது நல்லா வாங்குவடா..’ என்று அவள் கறுவிக் கொண்டிருக்க,

“என்ன வைபவ்.. அவங்களை தனியா பேச அழைச்சிட்டு போ.. ரெண்sடு பேரும் நம்ம முன்னால பேசத் தயங்கறாங்க..” கிருஷ்ணா சொல்லவும், அவனை சங்கடமாக பார்த்துக் கொண்டே வைபவ் எழ, நிகிதா நிரஞ்சனைப் பார்த்தாள்.

‘நீ பார்த்தா நான் எழுந்து வந்துடணுமா? சதிகாரி..’ நிரஞ்சன் மனதினில் அவளை வசைப் பாட,

“நீ என்னடா இங்க உட்கார்ந்து இருக்க? எழுந்து போ..” கிருஷ்ணா ஊக்க, நிரஞ்சன் அவனை முறைத்து விட்டு எழுந்து கொண்டான்.

வைபவ் இருவரையும் மாடிப்படியின் பக்க வாட்டில் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.

“நிகிம்மா.. நீ இங்க நின்னு பேசு..” என்று வைபவ் கைக் காட்டிய இடத்தில் நிகிதா சென்று நின்றுக் கொள்ள,

“நீ எங்க வேலை செய்யற?” நிரஞ்சன் வைபவ்விடம் கேள்வியைக் கேட்டான்.

“நான் எங்க ஃபவுன்ட்ரியைப் பார்த்துக்கறேன்.. எனக்கு ஸ்கூல் அட்மினிஸ்ட்ரேஷன்ல இன்டெரெஸ்ட் இல்ல.. அதனால அது நிகி பார்த்துக்கறா..” வைபவ் புன்னகையுடன் சொல்ல, நிரஞ்சன் புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான்.  

“நிகி மேல எந்தத் தப்பும் இல்ல.. அவ ரொம்ப நல்லவ.. அவளோட கொள்கையினால அவ உங்கக் கிட்ட சொல்லாம மறைச்சிருக்கலாம்.. ப்ளீஸ்.. அவ மேல கோபப்படாதீங்க..” என்று வைபவ் எடுத்துக் கொடுக்க, நிரஞ்சனுக்கு தன்னுடைய கொள்கை நினைவிற்கு வந்தது.

‘போச்சு.. எல்லாம் போச்சு.. என் கொள்கை எல்லாம் காத்தோட போச்சு.. இப்போ நான் என்ன செய்யறது? ஒருவேளை கல்யாணத்துக்கு நான் அவசரப்பட்டு இருக்கக் கூடாதோ?’ மனதினில் நினைத்த நிரஞ்சன்,

“உங்க தங்கை ரொம்ப நல்லவன்னு எனக்கும் தெரியும்.. நான் பார்த்துக்கறேன்..” என்று வைபவ்வை அனுப்பி விட்டு, நிகிதாவின் அருகே செல்ல, அவனுக்காகவே காத்திருந்த நிகிதா, நிரஞ்சன் அவனது அருகில் வந்ததும்,

“என்னை நல்லா நம்ப வச்சு ஏமாத்திட்ட இல்ல..” என்று தொடங்க, அதே நேரம், நிரஞ்சனும் அதையே சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர்.

உன் இதழ்மொழி மீட்டும் இசைதனில்

மகிழ்ந்து களித்தாலும்

உன் பேசாத மௌனங்களில்

தனிமை வெறுத்துப் போவதால்

இந்த காதலே வேண்டாம் சாமி!!

17 COMMENTS

 1. Soooper ud Ramya .
  Beginning to end Niru reaction attakaasam
  Nikki eppavum pola samatha Niruvaiye ninaichu kanavu kandukittey irukka avanai nerla paakura varaikkum .
  Krishna and Vaibhav conversation semmaya irrukku
  Rendu perum onna sandaiyai aarambikura maathiri ey seekiram samathanam agi ,samsara saagarathil karai seruvanga endru ethirpaarkkappadukirathu …
  Kalakkal episode continue aagattum .
  We are waiting .

 2. அடா! அடா! ஹா ஹா ஹா! எனக்கு ரெண்டு பேர் முகத்தையும் பார்க்கனும் போல இருக்கு ரம்யா.

 3. சண்டக்கோழிகளோட சண்டயப் பார்க்க ஐ அம் வெய்ட்டிங்…………..

LEAVE A REPLY