SHARE
 
அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடித் பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால்
உன்னுள்ளே நானும் வந்தால்
மெதுவாய் சரியாய் அது போகாதா

வகுப்புக்குள் வந்த மித்ரா, தனது கோபம் அடங்குவதற்காக சிறிது நேரம்  அமைதியாக இருக்கவும், அவளது தோளில் கை வைத்து அழுத்திய அனிதாவும் நித்யாவும், அவளை தங்களுடன் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அது, கல்லூரியின் இருபுறமும், தென்னை மரங்களும், மாமரங்களும் அடர்ந்து விரிந்த  சோலை போன்று தோற்றமளிக்கும் தோப்புகள் … மதிய உணவிற்கு மாணவிகள் அங்கு செல்வது வழக்கம். மாமரம் பூத்து, காய் காய்க்கும் நேரங்களில், தென்னந்தோப்பு வரை மட்டுமே மாணவிகள் செல்ல அனுமதி உண்டு…

அந்த இடம், எப்போதுமே மித்ராவிற்கு சொர்க்கம் என்றே கூறலாம். தற்போதைய அவளது மனநிலையைப் புரிந்த அனிதாவும் நித்யாவும் அவளை அங்கே அழைத்துச் செல்ல, அங்கு அமர்ந்ததும் அனிதாவின் மடியில் கவிழ்ந்தவளின் கண்களில், அவள் அனுமதியின்றியே கண்ணீர் உடைப்பெடுக்கத் தொடங்கியது.

“மனசுல எதையோ போட்டு அடைச்சு வச்சிட்டிருக்க மித்ரா.. கார்ல அவன் என்ன சொன்னான்னு நீ கோபமா வந்த… உன் முகம் எல்லாம் எப்படி சிவந்திருக்கு தெரியுமா?” நித்யா கேட்கவும்,

“அவன் தான் உன்னை அப்போவே ஏமாத்திட்டான் இல்ல… அன்னைக்கு ஃபேர்வெல்ல இருந்து நீ சீக்கிரம் போனதும், பாலாஜி அவனை சத்தம் போட்டுட்டு இருந்தான்… அப்போ ‘நானா அவளை லவ் பண்ணறேன்னு சொன்னேன்? இல்ல அவகிட்ட அதுபோல எப்பவாச்சும் நடந்துக்கிட்டு இருக்கேனா? நல்ல பிரெண்ட்ஷிப்பை அவளா தப்பா புரிஞ்சிக்கிட்டு லவ்வு கிவ்வுன்னு சுத்தினா நான் என்ன செய்ய? எங்க அம்மாக்கு லவ்வுன்னாலே பிடிக்காது… நான் எப்படிடா லவ் பண்ணுவேன்…” அப்படின்னு வசந்த் கேட்டான்… எங்களுக்கு எல்லாம் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது மித்ரா…” அனிதா சொல்லச் சொல்ல, மித்ராவின் வயிற்றில் எதுவோ பிரள்வது போல இருந்தது.

“அது மட்டுமா… எனக்கு அப்படியே அவன் சட்டையைப் பிடிச்சு கேட்கணும் போல இருந்தது. நாம பைனல் இயர் படிக்கும் போது, நியூ இயர்க்காக, உனக்கு ஒரு கிரீட்டிங் கார்ட் தந்தான் இல்ல.. அதுல அவன் ‘உன்னை லவ் பண்ணறேன்… என் லைஃப்புக்கு நீ எவ்வளவு முக்கியம்’ அந்த மாதிரி வார்த்தைகள் தானே இருந்தது… அதை கொண்டு போய் காட்டி இதுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்ல சொல்லி இருப்பேன்… அனிதா தான் வேண்டாம்ன்னு தடுத்துட்டா…  உனக்கு வசந்தின் எண்ணம்  எல்லாம் தெரிஞ்சு போச்சுன்னு, உன் முகத்துலேர்ந்தே, இவளுக்கு புரிஞ்சிருச்சு….

அதனால என்னை ‘பேசாம இரு’ன்னு அடக்கிட்டா… அதுக்கு அப்பறம் உங்க அண்ணா கல்யாணத்துல பார்த்தது தானே… அப்பறமும் நாம சரியா பேசவே முடியல… அப்பறம் சுத்தமா காண்டாக்ட்டே விட்டுப்போச்சே” வசந்தின் மீது கோபமாகத் தொடங்கி, மித்ராவின் மீது வருத்தமாக நித்யா முடிக்க, இப்பொழுது மித்ரா மடி மாறி, நித்யாவின் மடியில் கவிழ்ந்தாள்.

“எனக்கு உங்க கூட பேசக் கூடாதுன்னு எல்லாம் இல்ல நித்யா… என்னவோ… பேசினா, நீங்க உண்மை தெரியாம கிண்டல் செய்யப் போறீங்களோன்னு பயந்துதான் பேசாம இருந்துட்டேன்… அப்பறம் அனிதாவுக்கு கல்யாணம் ஆன அப்பறம், சுத்தமா காண்டேக்ட் விட்டுப் போச்சு… ஆனா, நான் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?… தினமும் உங்களை நினைச்சுப் பார்த்துப்பேன்…” மித்ரா அவள் முகத்தைப் பார்த்துச் சொல்லவும், நித்யா அவள் முகத்தைப் பற்றினாள்.

“இனிமே அப்படி எல்லாம் விட வேண்டாம் மித்ரா… நாங்க இனிமே எப்பவும்,  உன்னோட காண்டக்ட்ல தான் இருப்போம்…” நித்யா சொல்லி விட்டாலும், அனிதாவின் முகம், மித்ராவிற்கு அவளது நிலையைச் சொல்ல,

“ஹே… உனக்கு நான் ஒரு வழி யோசிச்சு வச்சிருக்கேன்… யூ.எஸ்.ல இருந்து உங்களுக்காக நான் வாங்கிட்டு வந்ததை தரவே மறந்துட்டேன்… நேத்து தான் பெட்டிய பிரிச்சேன்…. வாங்க கிளாஸ்க்கு போகலாம்…” என்று மனம் லேசான உணர்வுடன், அவர்களை இழுத்துக்கொண்டு வகுப்பிற்குச் சென்றவள், தனது பையில் வைத்திருந்த இரண்டு பெட்டிக்களை எடுத்து அவர்களிடம் நீட்டினாள்.

“ஹே மித்ரா… என்ன இது?” அனிதா ஆச்சரியமாகக் கேட்க,

“அனி… நம்ம காலேஜ்ல மறுபடியும் இப்படி சேர்ந்திருக்க ஒத்துக்கிட்டாங்கன்னு, பாலாஜி மெயில்ல சொன்ன உடனே, உங்க அம்மா வீட்டுக்கு கூப்பிட்டு, உன் ஹஸ்பண்ட் நம்பர் வாங்கித் தந்து, அவரைப் பிடிச்சு பேசறதுக்குள்ள, நாக்கு தள்ளிப் போச்சு…” என்று நாக்கை துருத்திக் காட்டியவள்,

“அப்போவே டிசைட் பண்ணிட்டேன் அனி, உனக்கு ஒரு போன் வாங்கறதுன்னு… இது உனக்கே உனக்கு மட்டும் தான்… எனக்கு அப்பப்போ  சௌமி குட்டி போட்டோஸ் எல்லாம் இதுல போடு… இப்போதைக்கு ஒரு மாசத்துக்கு வரமாதிரி நெட்பேக் போட்டு இருக்கேன்… அப்பறம் உன் அவர் என்ன சொல்றாருன்னு கேட்டு சொல்லு… அவர் போடலைன்னா… நான் போடறேன் அனி… ஆனா, எனக்கு ஒவ்வொரு ஒண்ணாம் தேதி அன்னிக்கு கரெக்ட்டா சொல்லிடணும்.. சரியா?” என்று மித்ரா கேட்கவும்,

“அவரு ஏதாவது சொல்லுவார் மித்ரா…” அனிதா தயங்க,

“நான் கிஃப்ட் தந்தேன்னு சொல்லு… ஒண்ணும் சொல்ல மாட்டார்…” என்று கண்ணடித்த மித்ரா, “நித்தி…. உனக்கு சும்மா.. என் அன்பு பரிசா” கிண்டலாக மித்ரா சொல்லவும்,

“கொசுறுக்கு வாங்கிட்டு வந்தியா? உன்னை…” என்று நித்யா அவளை மொத்தவும், மித்ராவின் செல்போன்,

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை     

என்ற பாடலை இசைக்க, அந்த பாடல் காதுகளில் விழுந்ததும், வசந்த் எரிமலையாக உருவெடுத்தான்.

கண்கள் சிவக்க, அவளை அவன் உறுத்து விழித்துக் கொண்டிருக்க, அதனைக் கண்டு கொள்ளாமல், மித்ரா, புன்னகையுடன், தனது செல்போனை எடுத்துக் கொண்டு, வெளியில் சென்றாள்.

பாலாஜி அவளது புன்னகையை பார்த்து மனதில் நிம்மதியுடன், வசந்தைப் பார்க்க, “என்ன, அவளோட சிரிப்பைப் பார்த்தா, அப்படியே சில்லுன்னு இருக்கா? எனக்கு அப்படியே எரியுது….” தனது எரிச்சலை அவன் மறைக்காமல் காட்ட, பாலாஜி சிரித்துக்கொண்டே, “சூப்பரப்பு… இப்படித் தான் கூலா இருக்கணும்” என்று கூறியபடி, செல்போனில் விளையாடத் தொடங்கினான்.

“ஹே ஜெகன்… என்ன இந்த நேரத்துல போன் செய்திருக்கீங்க? நான் காலேஜ்ல இருக்கேன்…” மித்ரா அந்த பேரைச் சொன்னவுடன், வசந்த், அவள் அருகில் சென்று அவள் பேசுவதை கேட்க வசதியாக நிற்க,

“நான் அடுத்த வாரம் யூ.எஸ். வரேன்… ஏற்கனவே விசா எல்லாம் ரெடியா இருந்தது… இப்போ தான் ப்ராஜெக்ட் கன்பார்ம் ஆச்சு… அது தான், இந்த விஷயத்தை உன்கிட்ட மொதல்ல சொல்லலாம்ன்னு கூப்பிட்டேன்…” ஜெகனின் உற்சாகக் குரல், போனையும் தாண்டி, வெளியில் கேட்க, அருகில் வந்து நின்ற வசந்தோ, மித்ராவை முறைத்தான்.

“ஓ… எங்க வரீங்க?”

“ஓஹையோ…”

“ஹே சூப்பர்… அப்போ ஒரு வீக் எண்ட், நீங்க என்னோட ப்ளேஸ்க்கு வாங்க… இன்னொரு தரவ நான் அங்க வரேன்… ஆமா, நீங்க எத்தனை மாசம் இருப்பீங்க?” உற்சாகமாக மித்ரா கேட்க,

“நான் ஒரு வருஷம் கேட்டு இருக்கேன்… அப்பறம் வேணும்னா எக்ஸ்ட்டென்ட் செய்துக்கலாம்… உனக்கு ஓகேவா?” மித்ராவின் விருப்பத்தை அவன் சூசகமாகக் கேட்க,

“நல்ல விஷயம்… நாம நேர்ல பேசலாமா? சண்டே பங்க்ஷனுக்கு வரீங்க இல்ல.. அப்போ நாம பேசலாம்… இப்போ காலேஜ்ல ரொம்ப நேரம் பேச வேண்டாம் ஜெகன்… இங்க ஒரே டிஸ்டர்பென்ஸ்சா இருக்கு… கொசுத் தொல்ல தாங்க முடியல….” என்று முறைத்துக் கொண்டிருந்த வசந்த்தைப் பார்த்து சொல்லிவிட்டு,

“நாம நேர்ல பேசலாம்… இப்போ வைக்கட்டா…” என்று கேட்டு, “ம்ம்…” சோகமாக கேட்ட அவனது குரலைத் தொடர்ந்து, இணைப்பைத் துண்டித்து, வகுப்பிற்குள் செல்ல நகர,

“சமி… யாரு அவன்? எதுக்கு அவன் அங்க யூ.எஸ்ல வீட்டுக்கு வரணும்?” வசந்த் அவளது கையைப் பற்றி நிறுத்திக் கேட்க,

“கைய விடுன்னு சொல்றேன்…” மித்ராவின் கோபத்திற்கும் அவன் அசையாமல் நிற்க, அவனது கையை தன் புஜத்தில் இருந்து பிரித்தவள்,

“என்னோட கல்யாணத்துக்கு நான் கட்டாயம் உனக்குப் பத்திரிக்கை அனுப்பறேன் வசந்த்… அதுவும் நீ இல்லாமையா? பத்திரிக்கை அடிச்சு வந்த உடனே, நான் உனக்குத் தான் மொதல்ல அனுப்புவேன்… உன் வைஃப், குழந்தை குட்டிங்க, ஹ்ம்ம்… உங்க அம்மாவை மறந்துட்டேன் பாரு… அவங்களையும் மறக்காம கூட்டிட்டு வா வசந்த்… நீங்க எல்லாம் வந்து தான் என்னோட கல்யாணத்தை சிறப்பிக்கணும்…. மறந்துறாம வா…” மித்ரா புருவத்தை ஏற்றி இறக்கி உற்சாகமாகக் கூறினாள்.  

“எனக்குப் பொறுமை ரொம்பக் கம்மின்னு உனக்கே தெரியும் சமி… விளையாடாதே…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் எச்சரிக்கவும்,

“இன்னொரு தரவ சமின்னு கூப்பிட்ட, என்ன செய்வேன்னே தெரியாது…. இத்தனை நாளா இல்லாம, இப்போ மட்டும் என்ன ‘சமி’ வேண்டிக்கிடக்கு… என்னை ஏமாத்தும் போது எல்லாம் நான் ‘மித்ரா’ வா இருந்தேன் … இப்போ சமியா? உன்னோட பேச்சைக் கேட்டு ஏமாற நான் இன்னும் பழைய மித்ரா இல்ல… இப்போ இருக்கறது சங்கமித்ரா… இனியொரு தரம் என்னை சமின்னு கூப்பிடாதே… கேட்கவே நாராசமா இருக்கு…” சொல்லிவிட்டு மித்ரா உள்ளே செல்ல, வசந்த் தலையில் அடித்துக் கொண்டு, சுவற்றில் சாய, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்த வேல், அவனது தோளில் கையைப் போட, திடுக்கிட்டு திரும்பிய வசந்த், அவரை அதிர்ந்து நோக்கினான்.

அவர் ஏதாவது கேட்பார் என்று வசந்த் எதிர்ப்பார்க்க, அவரோ “உங்க கோகிலா மிஸ் கிளாஸ்க்கு வராங்க.. அவங்க வரதுக்குள்ள உள்ள போனீங்கன்னா நல்லா இருக்கும்…” வேல் கிண்டல் செய்வது அவனுக்குப் புரிந்தாலும், அவர் தன்னை எதுவும் கேட்காமல் இருப்பதே போதுமானதாக, வசந்த் வகுப்பின் உள்ளே செல்ல, கோகிலா உள்ளே நுழைந்தார்.

வணக்கம் கூறி, அமைதியாக அவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு, அவர் பேசப் போவதைக் கேட்க ஆவலாக இருந்தவர்களைப் பார்த்து, “என்ன பசங்களா? நான் கிளாஸ் உள்ள வரும்போது எப்பவும் நீங்க கொடுக்கற ‘உச் உச்’ சவுண்ட்டைக் காணும்… இன்னைக்கு பல்லி எதுவும் கண்ணுல படவே இல்லையா?” கிண்டல் குரலில் கேட்க, முன்பு விளையாட்டாக அவர்கள் செய்ததை எண்ணி, இப்பொழுது அவர்கள் தலைகுனியவும்,

“நான் பேசறதை  கேட்க, இவ்வளவு அமைதியா நீங்க தயாரா இருக்கறதைப் பார்த்தா, இந்த இரண்டு வருஷத்துல, நீங்க எவ்வளவு முதிர்ச்சி அடைந்து இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது… ஆனா எனக்கு, நீங்க செய்யற அந்த குரங்கு சேஷ்டைங்க தான் பிடிச்சிருந்தது… இப்படி அமைதியா இருக்கறதைப் பார்த்தா வேற கிளாஸ் உள்ள வந்தது போல இருக்கு… எஞ்சாய் பண்ணுங்க பசங்களா” என்று பேசத் தொடங்கியவர், அன்றைய முழு நாளிலும், அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட பழைய கல்லூரி கால நிகழ்வுகளை சந்தோஷத்துடன் நினைவுகூர, அவரை மாணவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னடா… இந்த சிடுமூஞ்சி இப்படியெல்லாம் பேசறாளேனு பார்க்கறீங்களா?” மாணவர்களைப் பார்த்து அவர் கேட்கவும், அவர்கள் அமைதியாக இருக்க, அந்த அமைதியே, அவர்கள் ‘ஆம்’ என்று சொல்லாமல் சொல்கின்றனர் என்பதை புரிய வைக்க,

“அப்போ நீங்க ஸ்டுடென்ட்ஸ்… அதனால, உங்களை படிக்க வைக்க நான் அப்படித் தான் இருந்தாகணும்… இப்போ அப்படி இல்லையே… நீங்களும் உங்க புதிய அனுபவத்தை சொல்லி என்ஜாய் பண்ணுங்க…” அவர் உற்சாகத்துடன் பேசவும், அனைவரும் தாங்கள் முன்னர் செய்ததை நினைத்து வருந்தினர்.     

“சாரி மேடம்… உங்களை நாங்க ரொம்ப கிண்டல் செய்திருக்கோம்…” ஈஸ்வரி மன்னிப்பு வேண்ட, அவளது கூற்றை ஆமோதிப்பது போல அனைவரும் எழுந்து நின்று, அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

“டேய் பசங்களா…. உங்களோட, பல்லி மாதிரி கத்தற சத்தம், ஈ ஓட்டற அழகு, நீங்க எழுதாம கொடுக்கற டெஸ்ட் பேப்பர்…. எல்லாத்தையுமே நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்… நாளைக்கு ஒரு டெஸ்ட் எழுதலாமா? அதுவும் பொதுவான கேள்விகள் கேட்கறேன், சரியா? இப்போ எனக்கு வேற கிளாஸ் இருக்கு… நாளைக்கும் நான் கிளாஸ்க்கு வருவேன் பசங்களா…

ஒரு குட்டி செமினார் மாதிரி வைச்சுக்கலாம்… அதுக்கு நல்லா தயார் செய்துட்டு வாங்க… ப்ரின்சியும் அதைக் கேட்க வருவார்…” என்று கூறிவிட்டு, விடைப்பெற்றுச் செல்ல, மித்ரா அவசரமாக பாலாஜியின் அருகே வந்து நின்றாள்.

“என்னாச்சு மித்ரா… இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமா வர… ஏதாவது பிரச்சனையா?” புரியாமல் அவன் கேட்க,

“சாரி பாலாஜி… நேத்து உன்னோட ஃபோனை என்னால அட்டென்ட் பண்ண முடியல… நீ எதுக்கு கால் பண்ணினன்னு எனக்குத் தெரியும்… ஆனா அதுக்கு முன்னே, ஒருத்தர் கிட்ட இருந்து ஒரே நியூசென்ஸ் காலா வந்துட்டு இருந்தது… அது தான் போனை அணைச்சு தூக்கிப் போட்டுட்டேன்…” என்றவள், அவசரமாக அவள் பையைப் பிரித்து, ஒரு பெட்டியை எடுத்தாள்.

“ஹ்ம்ம்… நினைச்சேன்… என்னை கூப்பிட்டு, நான் உன் கூட பேசினேனான்னு கேட்டுட்டு இருந்தான்… நிஜமாவே என்னோட பொறுமை எருமையா மாறி பறந்துட்டு இருக்கு… அவனை நாலு சாத்து சாத்தலாம்ன்னு ஆத்திரமா வருது  மித்ரா… நீ தான் என் கையை கட்டிப் போட்டுட்ட. நானும் ஆரம்பத்துல இருந்து அவனை திருத்த எவ்வளவோ முயற்சி செய்துட்டேன்…

உனக்குத் தெரியுமான்னு தெரியல… ஃப்ரெண்ட்ஸுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா அவன் தான் முதல் ஆளா செய்வான்… அதனால, ரொம்பவே சுயநலமா இருக்கறதைத் தவிர, அவன் முழுசா கெட்டவன் கிடையாதுங்கற நம்பிக்கை இருந்தது. ஆனா, அந்த மாதிரி ஓடி ஓடி ஹெல்ப் பண்ணினா, அதுக்காகவே எல்லாரும் அவனை சுத்தியே இருப்பாங்க என்கிற எண்ணமோன்னு இப்போ தோணுது.” பாலாஜி வருத்ததுடன் சொல்ல,

“விடு பஜ்ஜி… அவங்களைப் பத்தி பேசாதே…” மித்ரா இடையிட,

“இல்ல மித்ரா… அவனோட இந்த மாதிரி எண்ணம் தான் உன் விஷயத்துல, இப்போ இந்த அளவுல வந்து நிக்குது… நான் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து, மொதல்லையே அவன் கிட்ட பேசி இருக்கணுமோன்னு மனசு உறுத்துது…. சரி, நீயும் வெளிநாட்டுக்கு படிக்க போயிட்டா அவனை மறந்திருவன்னு நினைச்சு, பெரிசா கவலைப்படாம  விட்டுட்டேன்…”

“அவங்க யூ.எஸ். வர விஷயம் உனக்கு முன்னவே தெரியுமா பாலாஜி…” நெடுநாட்களாக மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை அவள் வாய் திறந்து கேட்க,

“ம்ம்… மொதல்ல தெரியாது மித்ரா… நீ அங்க படிக்கப்போறன்னு சொன்னதும், அவனும் போட்டிக்கு, வெளிநாட்டுல படிக்க என்ட்ரன்ஸ் எழுதறேன்னு சொன்னான் தான்… சரி, எப்பவும் போல இதுலயும் விளையாட்டுக்கு சொல்றான்னு நினைச்சு கண்டுக்காம விட்டுட்டேன்… நீயும், லீவ்ல கம்பெனில வேலைக்குப் போய்ட்டு கொஞ்சம் பிஸியாகிட்ட… நானும் வேலைக்கு போயிட்டேன்… நாம பேசறதும் அறவே குறைஞ்சு போச்சு…”

“ஆமா… எங்க நம்ம பேசினோம்… ஊருக்கு போறேன்னு சொல்லத்தானே உனக்கு போன் செய்தேன்…” கசப்புடன் அவள் சொல்லவும்,

“நீ கிளம்பின அன்னைக்கு, ஒரு பத்து நாள் கழிச்சு, தனக்கும் அங்க படிக்கறதுக்கான சீட் கிடைச்சிருக்கு, கிளம்ப பேக் பண்ணிட்டு இருக்கற விஷயத்தை அவன் போன்ல சொன்னான். எனக்கே, அதைக் கேட்டு ஷாக் தான்… அப்பவும், நீயும் அவனும் ஒரே காலேஜ்லதான் படிக்கப் போறீங்கன்னு  எனக்குத் தெரியாது… ஆறு மாசம் கழிச்சு மெயில்ல நீ அதைப் பத்தி சொன்னதும் தான், உன்னைப் பார்த்துக்கச் சொல்லி, அவன் கிட்ட சொன்னேன்…” பாலாஜி, வசந்த்தின் துரோகத்தை பொறுக்க முடியாமல் பொரும,

“ஹம்ம்…” மனதில் உள்ள வலியை அவள் பெருமூச்சாக வெளியிட, பாலாஜி அவளை ஆதூரத்துடன் பார்த்தான்.

“அப்பறம் நான் உனக்கு அனுப்பின மெயில் எதுக்குமே பதில் இல்ல… கடைசியா, நம்ம காலேஜ்ல நாம எல்லாரும்  திரும்ப மீட் பண்ணி கொஞ்ச நாள் ஸ்பென்ட் பண்றதுக்கு பெர்மிஷன் கிடைச்சிருக்குன்னு சொல்லி மெயில் பண்ணினதுக்குத் தான் உன்கிட்டேர்ந்து பதில் வந்தது…” சிறிது மனத்தாங்கலுடன் அவன் சொல்லவும்,

“உன்னோட மெயில் மொத்தமும் ஸ்பாம்ல இருந்தது பாலாஜி… அதுவும், எல்லாத்தையுமே வசந்த் தான் ஓபன் செய்து படிச்சு இருக்காங்க… உன் மெயில் வந்ததே எனக்கு தெரியாது…”

“உன்னோட பாஸ்வொர்ட் அவனுக்கு…” பாலாஜி இழுக்க,

“நான் செய்த முட்டாள் தனத்துல அதுவும் ஒண்ணு….” பார்வை எங்கோ நிலைகுத்த, அவள் கூறிய பதிலைக் கேட்டு, பாலாஜி தலையில் அடித்துக் கொண்டான்.

“சரி விடு பாலாஜி… நடந்தது எதையுமே மாத்த முடியாது இல்ல…” வருத்தமாகக் கூறியவள், எச்சிலை கூட்டி விழுங்கி,

“ஹே… நேத்து தான் என்னோட இன்னொரு பெட்டிய பிரிச்சேன்.. உங்க எல்லாருக்கும் வாங்கிட்டு வந்தது எல்லாம் அதுல தான் இருந்தது… அதுனால தான் லேட்டா தரேன்… தப்பா எடுத்துக்காதே…” என்றபடி, கையில் எடுத்த ஒரு பெட்டியை அவள் நீட்ட, அதை வாங்கியவன்,

“என்னை நினைவு வச்சிட்டு நீ வாங்கிட்டு வந்திருக்கறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு… ஆனா, இது என்ன ஃபார்மாலிட்டி….” கேட்டுக் கொண்டே பிரித்தவன், அதில் இருந்த சென்ட் பாட்டிலின் வாசனையை முகர்ந்து, “இதோட வாசனை ரொம்ப நல்லா இருக்கு மித்ரா… ஹே, இந்த வாட்ச்சும் ரொம்ப அழகா இருக்கு…” என்று வாங்கிக் கொள்ள,

தூரத்தில் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்த், அவள் கொடுத்த பரிசைப் பார்த்து, “ச்சே… என்னை வெறுப்பேத்தவே இப்படி செய்யறா…” என்று பல்லைக் கடித்துக்கொண்டே, அங்கிருந்து நகர்ந்து செல்ல, அவனது முகத்தை ஓரக்கண்ணால் பார்த்த மித்ரா, திருப்தியுடன் புன்னகைத்தாள்.

“என்ன… சாரை இன்னைக்கு ரொம்ப காச்சற போல… அவரோட முகமே ஒரு மாதிரி போயிருச்சு…” கேலியாக கேட்டுக் கொண்டே, அவள் கொடுத்த பெட்டிகளை அவளிடமே திருப்பி நீட்டவும்,

“அவங்கள வெறுப்பேத்த வாங்கிட்டு வரல பாலாஜி… நிஜமாவே உனக்காகத் தான் வாங்கிட்டு வந்தேன்… நித்யா அனிதாவுக்கு கூட நான் போன் வாங்கிட்டு வந்திருக்கேன்… ஆனா, இப்போ வசந்தோட கோபத்துக்கு காரணமே…” மித்ரா கள்ளப் புன்னகையுடன் சொல்லவும்,

“என்னது?” பாலாஜி ஆவலுடன் கேட்க,

“இது ரெண்டுமே அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்… இந்த பிராண்ட் சென்ட்டை எப்பவும் அவங்களுக்கு, தேடித் தேடி வாங்கித் தருவேன்… இதே பிராண்ட் வாட்ச்சைத் தான்.. நான் அவங்ளோட பர்த்டேக்கு…” அதற்கு மேல் சொல்ல முடியாமல், அவளின் தொண்டையடைக்க, அவசரமாக பாலாஜியின் அருகே அமர்ந்துக் கொண்டாள்.

“இப்பவாவது எனக்குப் பெர்மிஷன் கொடு மித்ரா… நான் அவனை நியாயம் கேட்கறேன்… இதுக்கு ஒரு முடிவு தெரியணும் இல்ல…” அவளது வருத்தம் தாளாமல் அவன் அனுமதி கேட்கவும்,

“மப்ச்… விடு பாலாஜி… எனக்கு அவங்க தேவையில்லை… எப்போ இன்னொருத்திய கல்யாணம் செய்ய ரெடி ஆகிட்டாங்களோ… இனிமே அவங்க எனக்கு வேண்டவே வேண்டாம்…” உறுதியாக கூறிய மித்ரா,

“கெஞ்சியோ, மிரட்டியோ வாங்க, இது ஒண்ணும் பொருள் இல்ல… காதல்…” என்றவள், “நான் கிளம்பறேன் பாலாஜி… வீட்ல ஃபங்க்ஷன் இருக்கு… வெளிய போகணும்…” அவனிடம் இருந்து விடைப்பெற்று, வெளியில் சென்றதும், தனது கைப்பையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொண்டு, காரை நோக்கிச் சென்றாள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜியின் மனதில் ஏதோ சந்தேகம் முளை விடத் துவங்கியது.

மறுநாள் வசந்த் உள்ளே நுழையும் போதே, அவன் கையில் இருந்த வாட்சைப் பார்த்த ராஜேஷ், “டேய்… இதே மாதிரி பாலாஜி ஒண்ணு போட்டுட்டு வந்திருக்கான்… நீதான் அவனுக்கும்  வாங்கிட்டு வந்தியா?” அவன் கேட்கவும், வசந்த் மித்ராவை முறைக்க, மித்ரா, கண்களில் கேலியுடன் வசந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணிக்கொரு முறை சிறு பிள்ளை போல வசந்த் கையை அசைத்துக் கொண்டிருக்க, அது எதையுமே கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத மித்ரா தனது பார்வையைத் திருப்பிக் கொண்டாள். வசந்த் மனதினில் நினைத்த, அவளிடம் ஏற்படக்கூடிய எந்த ஒரு மாற்றமும், அவளிடம் இல்லாமல் போக, ஏமாற்றத்துடன் அவன் வீட்டிற்குச் சென்றான்.

வீட்டிற்குச் சென்ற வசந்த், லதா காட்டிய, அவனது திருமண உடைகளை பார்த்துவிட்டு, வெறும் தலையசைப்போடு, டி.வி.யை இயக்கி, ஏதோ நியூஸ் சேனலை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.

அவனை ஒரு மார்க்கமாய் பார்த்துவிட்டு, உடைகளை உள்ளே எடுத்து வைத்த லதாவை இடையிட்டது, ஸ்வப்னாவின் ‘வசந்த்’ என்ற குரல்….

லதா நின்றுத் திரும்பிப் பார்க்கவும், அவன் அருகில் சென்று அமர்ந்தவள், “இன்னிக்கு நான் ஒரு ஹோட்டலுக்கு போனேன் வசந்த்… அங்க ஒரு தாய் டிஷ் செர்வ் பண்ணான் பாரு… ரொம்ப டேஸ்டியா இருந்தது…. நாம ரெண்டு பேருமா ஒரு நாள் போய் சாப்பிடலாம்…” அவள் உற்சாகமாக சொல்லிக் கொண்டிருக்க, லதா வசந்தைப் பார்த்தார்.

அவன் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, “இன்னைக்கும் நீ எதுவும் சமைக்க கத்துக்கலையா? அங்க போனா நீ தானே அவனுக்கு சமைக்கணும்…” லதா வசந்தைப் பார்த்துக்கொண்டே கேட்க, வசந்தோ விட்டேற்றியாக அமர்ந்துக் கொண்டிருந்தான்.

“என்னது?…. நான் எதுக்கு சமையல் கத்துக்கணும்… அங்க போய் ஒரு சமையல் ஆளைப் பார்த்து வேலைக்கு வச்சிட்டாப் போச்சு… நான் லாஸ்ட் டைம் போன போது சுத்திப் பார்க்காத இடமெல்லாம் சுத்திப் பார்க்கணும்… அதுவும் தவிர… சமையல் செய்யப் போய் என் கை கால் எல்லாம் சுட்டுக்கிட்டா?” சாதாரணமாக அவள் கேட்கவும், லதா அதிர்ந்து வசந்தைப் பார்க்க,

அவனோ ‘எனக்கு என்ன வந்தது?’ என்பதைப் போல அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அங்க எல்லாம் வேலைக்கு ஆள் வச்சா கட்டுப்படி ஆகுமா?” லதா பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்கவும்,      

“ஏன் ஆன்ட்டி, உங்க பையன் அந்த அளவுக்கு கூட சம்பளம் வாங்கலையா?” அவள் இழுத்துக் கேட்ட விதமே, அவள் நக்கலாக கேட்கிறாள் என்று புரியவும், வசந்த் லதாவைப் பார்த்து முறைத்தான்.

இந்தத் திருமணப் பேச்சை மும்முரமாய் பேச ஆரம்பித்ததில்  இருந்தே, அவனது தன்மானம் ஒருபுறம் வெகுவாக அடிவாங்க, அவனது மனமோ வேறோருபுறம் எதிலோ சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

வசந்த்,…. கிருஷ்ணமூர்த்தி-லதா தம்பதிகளின் ஒரே புதல்வன்… கிருஷ்ணமூர்த்தியின் தந்தை, வட்டிக்கு பணத்தை கடனாக கொடுத்து பெரும் செல்வத்தை ஈட்டி இருந்தார். அவரது உடல் நலம் குறைந்த பிறகு, அந்தத் தொழில் கிருஷ்ணமூர்த்தியின் கை வசம் முழுவதுமாக வர, அந்தத் தொழிலின் நெளிவு சுளிவு முழுவதுமாக தெரியாத கிருஷ்ணமூர்த்திக்கு நஷ்டம் ஏற்படத் துவங்கியது.

அதை அறிந்த அவரது தந்தை, அவரை வேறெந்த தொழிலிலாவது முதலீடு செய்யச் சொல்ல, அவரும் தனது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் என்று அனைவரிடமும் ஆலோசனைக் கேட்டு, இறுதியாக ஒரு மருத்துவமனை கட்டுவது என்ற முடிவெடுத்தார்.

மருத்துவராக அல்லாமல், ஒரு மருத்துவமனை கட்டுவதில், அனுபவமற்ற கிருஷ்ணமூர்த்தி திணற, அவருக்கு தோள் கொடுக்கும் தோழனாக வந்தவர் தான், ஸ்வப்னாவின் தந்தை, ரத்னவேலு.

அப்பொழுது தான் படித்து முடித்து வந்திருந்த ரத்னவேலுவிற்கும் அது பெரிய வாய்ப்பாக பட, அந்த மருத்துவமனையிலேயே தலைமை மருத்துவராகவும், வொர்க்கிங் பார்ட்னராகவும், தன்னை அந்த மருத்துவமனையில் இணைத்துக் கொண்டார்.

ரத்னவேலுவின் அறிவோ அல்லது கைராசியோ, முதலில் மந்தமாகக் தொடங்கிய மருத்துவமனையின் செயல்பாடுகள், பின்பு புகழ் பெற்ற மருத்துவமனையின் பட்டியலில் சேரும் அளவிற்கு, பெயர் பெறத் துவங்கியது.

லதாவைப் கைப்பிடித்த பின், அவரும், ரத்னவேலுவின் மனைவி ராஜாத்தியும், அந்த மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்க, அதனால் பெருத்த லாபமடைந்து, இந்த மருத்துவமனைக்கு மற்றொரு கிளை தொடங்கும் அளவிற்கு வளர்ந்து நின்றது.

மருத்துவமனையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்த ரத்னவேலுவை, வொர்கிங் பார்ட்னரில் இருந்து பார்ட்னராக கிருஷ்ணமூர்த்தி மாற்றி விட, அந்த சந்தோஷத்தின் பரிசாக, தனது மகளையே வசந்த்திற்கு மணம் முடிப்பதாக அவர் வாக்கு கொடுத்தார். கிருஷ்ணமூர்த்தி அதைக் கேட்டு, இந்த சம்பந்தத்தால், நட்பு விட்டுப் போகாது என்று ஆனந்தமாக அவரைத் தழுவ, லதாவின் கணக்கோ வேறு மாதிரி சென்றது.

“வசந்திற்கோ, ஸ்வப்னாவிற்கோ, தனித்தனியாகத் திருமணம் என்ற பெயரில் வெளி நபர்கள் உள்ளே நுழைந்தால், அந்த மருத்துவமனை இரண்டாக பிரிய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நினைத்த லதா, ரத்னவேலு தனியாக மருத்துவமனை கட்டிக்கொண்டு வெளியே செல்லாமல் இருக்கவும், ஸ்வப்னாவை வசந்த்திற்கு திருமணம் செய்து வைத்தால், மருத்துவமனை முழுவதும், ரத்னவேலுவிற்குப் பிறகு தங்களுக்கே சேரும் என்ற அதீத ஆசையினாலும், அவரும் ஸ்வப்னா-வசந்த் திருமணத்தை வெகுவாக வரவேற்றார். அதே காரணத்திற்காகத் தான், ரத்னவேலுவும் இந்த திருமணத் திட்டத்தை முன் வைத்தார் என்பது வேறு விஷயம்.          

கைக் காசைப் போட்டு, கடன் வாங்கி ஒரு மருத்துவமனை கட்டாமலே, அதில் இருந்து கணிசமான பங்கு வரும்பொழுது, அதை விட்டு, வேறு ஒரு மருத்துவமனைக்குச் செல்ல ரத்னவேலு, முட்டாளா என்ன? மருத்துவமனையின் முழு உரிமைக்காக, ஒரு திருமணமே நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும், சிறப்பாக நடக்கத் தொடங்கி இருந்தன.

சந்தோஷமாக எதிர்கொள்ள வேண்டிய திருமணமோ, வசந்திற்கு, அவனுடைய தன்மானம் அடிபட்டு துன்பத்தைக் கொடுக்க, ஸ்வப்னாவிற்கோ, அமெரிக்க வாழ்க்கையை கண் முன் விரித்து, அவளது சிறகை விரிக்க வைத்திருந்தது. ஆம், வசந்திற்கும், அவன் படித்த மாகாணத்திலேயே வேலை கிடைத்திருந்தது. திருமணம் முடித்துக் கொண்டு, அவன் அங்கு போவதாய் முடிவும் எடுக்கப்பட்டிருந்தது.

“அங்க போய் எல்லாத்துக்கும் ஆள் வைக்கிற அளவு அவன் இன்னும் சம்பாதிக்கல ஸ்வப்னா…” சிறிது கண்டிப்புடன் லதா சொல்லவும், அவரைப் பார்த்தவள், வசந்தை நெருங்கி, அவன் முகத்தைப் பிடித்து, தன் புறம் திருப்பினாள்.

வசந்த் அவளை கடுப்புடன் பார்த்து, “இப்போ எதுக்கு என்னைத் தொட்டு பேசற… என்ன வேணும் உனக்கு?…” என்று கேட்கவும்,

“நான் அங்க வந்து, உனக்கு சமைச்சுப் போடுவேன்… வீட்டு வேலையெல்லாம் பார்ப்பேன்னு கனவு காணாதே வசந்த்… நீ வேலைக்குக் கிளம்ப வேண்டிய அந்த ஏழு மணிக்குள்ள எல்லாம், என்னால எழுந்து எதுவுமே செய்ய முடியாது. நானும் அங்க வந்து வேலைக்கு எல்லாம் போக மாட்டேன்… என் லைஃப்பை நல்லா என்ஜாய் பண்ணனும்… அவ்வளவு தான்.. நீ வீணா, உன் மனசுல கற்பனையை வளர்த்துக்காதே..” கண்டிப்பான குரலில் அவள் சொல்லவும், வசந்த் ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டு, டி.வி.யில் தனது கவனத்தைப் பதிக்க, அவளது பேச்சைக் கேட்ட லதா தான் ஆடிப் போனார்…

“இந்தத் திருமணம் எந்த அளவு வெற்றிப் பெரும்??? மருத்துவமனையின் பங்குக்காக ஆசைப்பட்டு, தன் மகனின் வாழ்வே விலை போகுமோ?” முதன் முதலாக அவர் மனதில் தோன்றிய சலனம், அவரை கலங்கச் செய்ய, மீண்டும் வசந்தின் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்க்க, அவனோ, டி.வி. பார்ப்பதே முக்கியம் என்பது போல, விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி வசந்த்… நான் பார்லர்ல அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருக்கேன்… வாங்கி இருக்கற புடவை எல்லாம் எருமை கணக்கா வெயிட்டா இருக்கு… என்ன இதுவோ போ…. நீ, இந்தியாவுலேயே இருக்கற மாதிரி பிளான்ல இருந்திருந்தா, நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துட்டு இருக்கவே மாட்டேன் வசந்த்… எனக்கு அமெரிக்கா பார்க்கணும்… அங்கேயே சொகுசா வாழணும்….. அதனாலத் தான் ஒத்துக்கிட்டேன்…” சர்வ சாதாரணமாக வெறுப்புடன் சொன்னவள், அவள் கூறியதற்கு, எந்த ஒரு பதிலும் இல்லாமல் போனாலும், அதைக் கண்டுக்கொள்ளாமல்,

“நான் கிளம்பறேன்…” என்றபடி வெளியில் செல்ல, வசந்த் ஒரு வெற்றுப் பார்வையை லதா மீது வீசினான்.

அவன் மனக் கண்ணில் மித்ரா வந்தாள்… “வசி… நாளைக்கு சண்டே… வெஜ் வேணுமா, இல்ல நான்வெஜ் சமைக்கவா? நான் இப்போ வந்தனா கூட கடைக்கு போறேன்…. வேண்டியதை வாங்கிட்டு வரணும், அதான்” தேன் போன்ற குரலில், ஃபோன் செய்து கேட்கும் மித்ராவின் குரலும்,

“நாளைக்கு சண்டே மித்ரா… காரசாரமா பிரியாணி செய்யேன்.. நல்லா ரிலாக்ஸ்ட்டா சாப்பிட்டு நல்லா தூங்கி எழணும்…” பதிலளித்த தனது குரலும்,

“அப்போ மட்டனா… சிக்கனா…” அவனது விருப்பத்தைக் கேட்டே நடப்பேன் என்று ஆசையே உருவாக மித்ராவும்,

“எது செய்தாலும் எனக்கு காரமா செய்தா தான் பிடிக்கும்னு உனக்கே தெரியும்… எதுனாலும் எனக்கு ஓகே தான் மித்ரா…. இப்போ வந்து சும்மா நய்யு நய்யுன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காதே… நிம்மதியா பீரடிக்க விடு மித்ரா… போனை வை… பசங்க ஒருமாதிரி பார்க்கறாங்க” கடுப்புடன் பேசிட்டு விட்டு வைத்த தானும், மித்ராவின் இனிமையான நினைவுகள் மனதினில் படமாக விரிய, தன்னையே நொந்துக் கொண்டவன், “சமி…” என்ற பெயரை முனகினான்.     

வார்த்தைகளில் மட்டுமே உமிழ்ந்த வெறுப்பு 
அவள் சமையலறையில் 
ஒரு இடம் தேட
சுகமான அவஸ்தை இனிதே ஆரம்பம் !!

மௌனங்கள் தொடரும்…..  

LEAVE A REPLY