SHARE
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

“என்ன மித்ரா? என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?” எதையோ வரைந்துக் கொண்டு, ஹால் சோபாவில் அமர்ந்திருந்த விஜயலட்சுமி, வீட்டினுள் நுழைந்த மித்ராவைப் பார்த்துக் கேட்கவும், அவரை அந்த நேரம் வீட்டில் எதிர்ப்பார்க்காத மித்ரா அதிர்ந்து நிற்க,

“என்ன மித்ரா… கிளாஸ் கட் அடிச்சிட்டு வந்துட்டியா?” அவளது அதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து, மிரட்டலாக அவர் கேட்கவும்,

“இல்ல பெரியம்மா… இன்னிக்கு கிளாஸ் இல்ல… பர்ஸ்ட் இயர் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாருமே கிளம்பிட்டாங்க…” குனிந்த தலை நிமிராமல் அவள் சொல்லவும், அவளது முகத்தை நிமிர்த்திய விஜி,

“அப்போ எப்படி வந்த? பாட்டி இன்னிக்கு பாக்டரிக்கு கிளம்பினதே லேட் ஆச்சே…” கூர்மையாக அவர் கேட்கவும்,

“தினமும் காலேஜுக்கு பேரெண்ட்ஸ் கூட வர ஸ்டூடெண்ட்சை, இன்னிக்கு திடீர்னு போக சொல்லிட்டதால காலேஜ் கேப்ல ட்ராப் பண்ணினாங்க. எனக்கு ரொம்ப தலைவலியா இருந்தது பெரியம்மா… அதுனால நானும் அதுல வந்துட்டேன்….” என்று கூறியவள், அவர் எதுவோ அடுத்து கேட்க வருவதற்கு முன்,

“எல்லாரையும் வீட்டு வாசல்ல விட முடியாது இல்லயா? அதனால தெருமுனையில விட்டுட்டு போயிட்டாங்க… நான் அங்க இருந்து நடந்தே வந்தேன்…” அவள் சொல்லவும், அவளை ஓரிரு வினாடிகள் பார்த்தவர்,

“சரி… மணி கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆக போகுது… காலையில சரியா சாப்பிடாம போயிட்ட இல்ல… அதனால தான் தலைவலியா இருக்கும்… போய் சாப்பிட்டு படு…” என்று கூறியவர், தன்னுடைய டிசைனில் கவனத்தைப் பதிக்க, அவரைப் பார்த்துவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனது அறைக்குள் ஓடிச்சென்றாள்.

அவசரமாக, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவளைப் பார்த்துவிட்டு விஜயலட்சுமி, தன்னுடைய பணியைத் தொடர, பெயருக்கு உண்டோம் என்று அவளும் கொறித்துவிட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அறைக்குள் நுழைந்ததில் இருந்தே மித்ராவிற்கு வசந்தின் நினைவுகள் வந்து ஒட்டிக் கொண்டது. தான் என்றோ சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு, இன்று அவன் அதை நிறைவேற்றியது, பனி மழைச்சாரலாக மனத்தைக் குளிர்விக்க, கண்களை மூடி, அவனது உருவத்தை மனதினில் கொண்டு வந்தாள்.

தலையைக் கோதி, சிரித்துக் கொண்டு, “மித்ரா…” என்று அழைக்கும் அவனது குரலைக் கேட்டவளின் உள்ளம் சிலிர்க்க,

“நான் உனக்கு அவ்வளவு ஸ்பெஷலா வசந்த்… நான் சொன்ன ஒவ்வொண்ணையும் நியாபகம் வச்சிட்டு, தினமும் எனக்காக சாக்லேட்டை வேற கொண்டு வந்தீங்களா?” அவன் கூறியதை அப்படியே நம்பிய இந்த பேதைப் பெண், அவனுடன் கழித்த அந்த நொடிகளை, ஆசையாக மனதிற்குள் ரசிக்கத் தொடங்கினாள்.

என்னைச் சிறைப்படுத்தி
வேடிக்கை பார்க்கும்
அக்கறை முலாம் பூசப்பட்ட
உன் வார்த்தைகள் !!

உள்ளம் முழுவதும் வசந்தே நிறைந்திருக்க, அவன் அப்பொழுது, அவளது கையைப் பிடித்து அமைதிப்படுத்தியது, இப்பொழுது, அவளுள் எழுந்த அவனது நினைவுகளை அமைதிப்படுத்தாமல், அதிகப்படுத்தியது.

‘நாம அவனோட இப்படி வெளிய போயிட்டுவந்ததை யாருக்கும் சொல்லக் கூடாதாமே…’ அவனது ஒவ்வொரு வார்த்தையையும் அசைப்போட்டவள், ‘அப்படினா.. என்ன அர்த்தம் வசந்த்?’ தனக்குள் ரசித்துக் கேட்டுக் கொண்டவள், உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தாள்.

வீட்டில் அத்தனை உறுப்பினர்கள் இருந்தும், அனைத்து வசதிகள் இருந்தும், எப்போதுமே, அவள் மனதில் உள்ள ஆசைகளை தனக்குள் ஒடுக்கிக்கொண்டு, தனது கூட்டுக்குள்ளேயே இருப்பவள், இன்று சிறகு விரிக்க காத்திருந்தாள்.

மூன்று அண்ணன்கள் இருந்தும், “வந்தியா வா… போறியா… எங்கப் போற அதைச் செய்யாத மித்ரா? உனக்கு அறிவே இல்லையா? ஏன் இப்படி செய்த?” என்ற அடக்குமுறை கேள்விகளை மட்டுமே இத்தனை நாட்கள் கேட்டிருந்தவளுக்கு, “உன்னோட ஆசைய நிறைவேத்திட்டேன் பார்த்தியா?” என்று அவன் கர்வமாக கேட்டது, அவளுக்கும் கர்வத்தையே கொடுத்தது. 

வயது வித்தியாசம் காரணமாக, மனோ அவளிடம் இருந்து சற்றுத் தள்ளியே நிற்க, எப்பொழுதாவது, “என்ன மித்ரா? காலேஜ் எல்லாம் எப்படி போகுது? வரியா நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்?” என்றும்,

“மித்ரா… இந்த டிரஸ் உனக்கு நல்லா இல்ல… போய் மாத்திட்டு வா…”, “மித்ரா… இந்தா இந்த டி.வி.டி பாரு… படம் நல்லா இருக்கு…” அவன் படங்களை முதலில் பார்த்து, எதில் அளவுக்கதிகமான காதல் காட்சிகள் இல்லாமல் இருக்கிறது என்று உறுதி செய்துக் கொண்டு, பிறகு அவளிடம் அந்த சி.டி.யைக் கொடுத்து, தானும் கூடவே அமர்ந்து பாதி படம் பார்த்துவிட்டு, “இதை நான் ஏற்கனவே பார்த்துட்டேன்… எனக்கு போர் அடிக்குது… நீ இதை அப்பறம் பாரு… இப்போ நான் வேற டி.வி. ப்ரோக்ராம் பார்க்கறேன்…” என்று சேனலைத் திருப்பும் திவாகரும்,

“மித்ரா… எதுக்கு இன்னைக்கு ரெண்டு நிமிஷத்துக்கும் மேல அந்த கிளாஸ் கிட்ட நின்னுட்டு இருந்த… என்ன ஏதாவது விவகாரம் ஓடுதா?”, “இன்னிக்கு எதுக்கு எதிரே இருந்த பிளாக்ல யாரையோ பார்த்து சிரிச்ச?” கல்லூரியில் அவள் எடுத்து வைக்கும் ஒரு ஒரு அடிக்கும் விளக்கம் கேட்டு, அவளை உஷாவிடம் திட்டு வாங்கி வைக்கும் சந்தோஷும்…

இப்படி அனைவரின் கேள்விகளும் அவளை ஒடுக்கி, சொந்த வீட்டிலேயே ஒரு அன்னியத் தன்மையை உருவாக்கி இருக்க, அத்தனை சொந்தங்களும் தராத அந்த இதமான உணர்வை, ஒரே நாளில், தான் செய்த ஒரே செயலில், வசந்த் அவளுக்குத் தந்திருந்தான்.

பொய் சொல்லத் தூண்டி இருந்தாலும், அவனது அக்கறை மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த தாக்கம் அவள் மனதில் தித்திப்பை ஏற்படுத்த, சுகமாக அவனது நினைவுகளில் லயித்தாள்.

மித்ரா, அவனது ஐஸ்கிரீம் தூண்டிலில், வசமாக சிக்கிக் கொண்டாள். வாழ்க்கை என்னும் ஆற்றில், இருந்து வெளியில் வர முடியாமல், மீனின் கண்ணீரைப் போல் தனது கண்ணீரும் கரைந்து போகப் போவதை அறியாமல், அந்தப் பேதையும், காதலின் விதையை தனது உள்ளத்தில் விதைக்கத் தொடங்கினாள்.

அவனுடைய நினைவுகளுடனே கண்ணுறங்கியவளுக்கு, உடல் வலி எடுக்கத் தொடங்கியது. கால்களின் வலியும், உடலில் ஏறிய சூடும், அவளை உறக்கத்தில் இருந்து எழுப்ப, கண்களை சிரமமாக திறந்தவள், தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.

கண்களும், முகமும் சிவந்து காணப் பட, உடலில்தெரிந்த உஷ்ணத்தில், தனக்கு ஜுரம் வந்திருப்பதை அறிந்தவள், கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

‘இப்போ இதுக்கும் திட்டு வாங்கணுமே… உஷா சித்தி வரதுக்குள்ள நாம ஓடி போய் காபி குடிச்சிட்டு வந்திரலாம்… இல்ல… மித்ரா… நீ செத்த…’ தனக்குள்ளேயே பேசிக்கொண்டவள், கட்டிலில் இருந்து வேகமாக இறங்கி, முகத்தை நன்கு கழுவிக் கொண்டு, வெளியில் ஓடிச்சென்றாள்.

அவள் காபி குடித்துக் கொண்டிருக்கும் போதே, அன்றைக்கென்று நேரத்திலேயே வீட்டிற்கு வந்த உஷா, அவளது முகச் சிவப்பைப் பார்த்து, “மித்ரா… உன் உடம்புக்கு முடியலையா என்ன?” என்று கேட்கவும்,

“இல்லை…” என்று அவள் தலையசைக்க, அவளைத் தொட்டுப் பார்த்தவர், “இப்படி கொதிக்குது.. இல்லன்னு பொய் சொல்ற… என்ன, ஐஸ்கிரீம் ஏதாவது சாப்பிட்டியா?” உஷா கோபமாகக் கேட்கவும்,

“இல்ல சித்தி… காலையில இருந்தே தலைவலி…” அவள் வார்த்தையை மென்று விழுங்க,

“மொதல்ல காபி குடிச்சிட்டு எழுந்திரு… டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்… நல்லா ஜுரத்தை இழுத்து விட்டுக்கிட்டு, காலேஜ்க்கு லீவ் போடற பிளான்ல இருக்கியோ? அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு… இதுல நீயும் இழுத்து விட்டுக்கிட்டா என்ன செய்யறது?” அவர் கோபமாக கேட்டுக்கொண்டே, தனது அறைக்குள் செல்ல, கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது மித்ராவிற்கு.

“அம்மா…” மனதினில், எப்பொழுதும் போல் அம்மாவின் ஏக்கம் அவளை வாட்டியது.

அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்தவர், “கூலா எதையோ குடிச்சிருக்க போல… அது தான் இப்படி தொண்டை வலியும் சேர்ந்து எடுத்து இருக்கு… போய் கஞ்சிய குடிச்சிட்டு பேசாம படு… நீயா எதுவும் இழுத்து விட்டுட்டு வராதே…” அன்றைய வேலையின் சோர்வினால் விளைந்த பேச்சோ, இல்லை கண்டிப்பு காட்டவென்று அவர் பேசியதாலோ, மித்ராவின் மனம் வசந்தின் அருகாமைக்கு ஏங்கியது.

வீட்டிற்குச் சென்று, அவர் கூறியதைப் போலவே கஞ்சியைக் குடித்து, சிறிது இடைவேளையில் மாத்திரையையும் போட்டுக் கொண்டு, அறைக்குள் சென்றவள், வசந்திற்க்கு அழைப்பதற்காக, தனது மொபைலை எடுத்தாள். தயக்கம் அவளைக் கட்டிப் போட, எப்பொழுதும் உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே புதைக்கும் அவளால், அந்த குணத்தை விட்டு வெளியில் வரமுடியாமல், செல்போனை கையில் இறுகப் பிடித்திருக்க, அப்பொழுது அவளது செல்போன் கிணுகிணுத்தது.

பதட்டத்துடன் அதை கீழே விட்டவள், ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு, அதன் திரையைப் பார்க்க, அதில் ஒளிர்ந்த வசந்தின் பெயரைப் பார்த்தவள், அவசரமாக செல்லை இயக்கி, “ஹலோ…” என்று குரல் கொடுத்தாள்.

அவள் செல்லை எடுக்கத் தாமதமான அந்த வினாடிகளில், “என்னாச்சு… பட்சி போனை எடுக்க மாட்டேங்குது… ஒருவேளை ஏதாவது உண்மை தெரிஞ்சுப் போச்சோ?” என்று முள்ளின் மீது நிற்பது போல அவன் நிற்க, அவளது குரல், அந்த முட்களை பூக்களாக மாற்றியது.

“மித்ரா… என்னாச்சு போன் எடுக்க இவ்வளவு நேரம்?” பதட்டத்துடன் அவன் கேட்கவும்,

“இல்லங்க… போன் கீழ விழுந்திருச்சு…”

“மித்ரா… ஏன்ம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு… என்னாச்சு? அழுதியா? இல்ல இப்போ தான் தூங்கி எழுந்தியா? உடம்புக்கு ஒண்ணும் இல்லையே…” அவன் கரிசனையாகக் கேட்ட அந்த நொடிகளை அனுபவித்தவள், கண்ணீருடன்,

“எனக்கு உடம்பு சரி இல்ல… டாக்டர் கிட்ட போயிட்டு வந்தேன்…” மெல்லிய குரலில் மித்ரா சொல்லவும்,

“என்னாச்சு… என்ன மித்ரா? ரொம்ப பீவரா இருக்கா… குரல் ஒரு மாதிரி இருக்கேம்மா…” அன்பாக அவன் கேட்கவும், அவளுக்கு அழுகை வந்தது.

“இன்னிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் இல்ல…” மெல்லிய குரலில் அவள் சொல்லவும்,

‘ஓ… இன்னிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டதோட எஃபக்ட்டா….’ என்று மெதுவாக சொல்லிக் கொண்டவன், சத்தமாகக் கிண்டலடித்ததுடன் நில்லாமல்,

“அதுக்காக போய் அழுவாங்களா? உடம்பு ரொம்ப வலிக்குதா?” அவனது குரலில், உருகத் தொடங்கி இருந்தாள் மித்ரா.

“இல்ல… கால், தலை தான் செம வலி… சித்தி திட்டிட்டாங்க…” சிறுப்பிள்ளை போல அவனிடம் கூறியவளை, நினைத்துச் சிரித்தவன்,

“இதுக்குத் தான் நீ சொன்ன உடனே வாங்கித் தந்து இருக்கக் கூடாது… இப்போப் பாரு… இதுக்குத் தான் பெரியவங்க சொல் பேச்சு கேட்கணும்… இப்போ அவதிப்படறது நீ தானே… என்னைச் சொல்லணும்… நீ கேட்ட உடனே வாங்கித் தந்தேன் பாரு…” அவள் ஐஸ்கிரீம் கேட்டு வாங்கித் தந்தது போல அவன், அவளுக்கு அறிவுரை வழங்கத் தொடங்க, இப்பொழுது மித்ரா சிரிக்கத் தொடங்கினாள்.

“ஹையோ… என்னால சிரிக்க முடியல… தொண்டை வலிக்குது…” மித்ரா சிரிப்புடன் சொல்லவும்,

“எதுக்கு இப்போ சிரிக்கிற? அழுத குழந்தை எதுக்கு சிரிக்குது?” வசந்த் கேட்கவும்,

“நீங்களும் உங்க அம்மா சொல்ப் பேச்சை போய் சமத்தா கேளுங்க…”

“எங்க அம்மா சொன்ன பேச்சை நான் என்ன கேட்கணும்?”

“இல்ல பொண்ணுங்க கூட பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல… அதச் சொன்னேன்…” சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவள் சொல்லவும்,

“ஆஹா… நீ எனக்கே திரும்ப ஆப்பு வைக்கறியே மித்ரா… இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்… நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்தா தானே காலேஜ்ல கெத்தா இருக்கும்…” என்று கூறியவன், அவளின் “என்னது?!” என்ற மிரட்டல் குரலில்,

“சரி… சரி… காலேஜ் லைஃப்ல இதெல்லாம் சாதாரணமப்பா… சரி மித்ரா… என்ன செய்யறேன்னு கேட்கத் தான் இப்போ கூப்பிட்டேன்… இங்க ஸ்வப்னா வந்தாச்சு… நான் போன் பேசறதைப் பார்த்தாலே அவளுக்கு மூக்குல வியர்த்து, எங்க அம்மாகிட்ட போட்டுக் கொடுத்திருவா…. நான் அப்பறம் மெசேஜ் செய்யறேன்… பை…” வசந்த் சொல்லவும்,

“யாரு ஸ்வப்னா?” ஏமாற்றம் பரவ, அத்தனை நேரம் இருந்த உற்சாகம் போய், அவள் கேட்கவும்,

“அவ, எங்க அப்பாவோட பார்ட்னர் கம் பிரெண்ட் பொண்ணு… சின்ன வயசுல இருந்தே பிரெண்ட் தான்…. இப்போ ட்வெல்த் படிக்கிறா… எக்ஸாம் நடக்குது இல்ல… அது தான் டவுட் கேட்க வந்து இருக்கா… போய் சொல்லிக் கொடுக்கணும் மித்ரா… பை…” என்று அவன் விடைப்பெறவும்,

“பை…” என்று விடைபெற்றவள், மனதில், ஆயிரம் வினாக்கள் எழ, அதுவும் ஒன்றை மட்டுமே மையப்படுத்தி, அவளை குழம்பச் செய்தது. அது… வகுப்பில் ஈஸ்வரி கூறிய, ‘வசந்த் யாரோ ஒரு பொண்ண லவ் பண்றானாம்… ரொம்ப சின்சியர் லவ்வாம்… ஆனா, யாரு அந்த பொண்ணுன்னு வெளிய யாருக்குமே தெரியாது. படிப்பு முடியறத்துக்காக அவன் வெயிட் பண்ணிட்டு இருக்கானாம்… அப்பறம் தான் அந்தப் பெண்ணை பத்தி வெளிய சொல்லுவானாம்..’ என்ற வரிகளே….

“ஒருவேளை அவள் கூறிய அந்தப் பெண் ஸ்வப்னா தானோ…?” என்று மித்ரா அவனிடம் கேட்க நினைத்த கேள்விகள், தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது.

நாட்கள் நகர்ந்து, அந்த வருட இறுதிப் பரீட்சையும் தொடங்கியது. தினமும் மாலையில், மித்ராவிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான் வசந்த். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மித்ராவின் உள்ளே பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவனது ஒவ்வொரு செயலும், அவளை அவனிடம் நெருங்கச் செய்தது.

வசந்த்தின் சொல்படி, மித்ரா அவனுடன் பேசுவதை பாலாஜியிடம் வெளிப்படுத்தாமல் இருந்தாள். அன்றும் அப்படித் தான், அன்றைய, பரீட்சைக்காக கேன்டீனில் நித்யா அனிதாவுடன் அமர்ந்து அவள் படித்துக் கொண்டிருக்கையில், அங்கு வந்த வசந்த் அவளுக்கு எதிர்ப்புறம் அமர்ந்து புத்தகத்தைப் புரட்டத் தொடங்கினான். அவன் அருகே அமர்ந்த பாலாஜி,

“மித்ரா… படிச்சிட்டியா?” என்று கேட்டு, “ஆமா… அது தான் நீ எப்பவோ படிச்சு முடிச்சிட்டியே…” என்றும் சேர்த்துக்கொள்ள,

“இன்னும் கொஞ்சம் இருக்கு பாலாஜி… பயமா இருக்கு…” என்று அவளது பதில் பாலாஜியிடமும், கண்கள் வசந்த்திடமும் செல்ல, வசந்த் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

அவனது புன்னகையைக் கண்டவளின் இதழ்களும் தானாக விரிய, வசந்த் அவளை பார்த்து ‘வேண்டாம்’ என்று தலையசைத்து, பாலாஜியைக் கண்களில் சுட்டிக் காட்ட, அவளது கவனம் அவனிடம் இல்லாததை கண்ட பாலாஜி, அவள் கண்கள் இருந்த திசையில் திரும்பிப் பார்க்க, வசந்த் அவளிடம் ஜாடையாக பேசுவதைப் பார்த்தவன், மித்ராவை அதிசயமாகப் பார்த்தான்.

“மித்ரா…” பாலாஜி கண்டிக்கும் நேரம்,

“டேய் மச்சி… இன்னிக்கு என்ன எக்ஸாம்ன்னு சீக்கிரம் சொல்லுங்கடா… நான் படிக்கணும்… டைம் வேஸ்ட் பண்ணறது எல்லாம் எனக்குப் பிடிக்காது…” ராஜேஷ் கேட்டுக் கொண்டே வர, அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்த பாலாஜி,

“டேய்… மேத்ஸ் எக்ஸாம் நாளைக்குடா.. இப்போ இந்த புக்கை வச்சிக்கிட்டு இன்னைக்கு எக்ஸாம்க்கு எப்படி படிப்ப…” என்று கேட்க,

“டேய்… நாங்க எல்லாம் அடுத்த எக்ஸாம்க்கு முன்னாலேயே படிக்கற பிள்ளைங்க… அதாவது முன் கூட்டியே படிக்கிறவங்கன்னு சொல்ல வந்தேன்..”

“அப்போ… நேத்து எக்ஸாம்க்கு நீ வரும்போது புக்கே எடுத்துட்டு வரலையே… கை வீசிட்டு தானே வந்த?” என்று சிரித்துக் கொண்டே, பாலாஜி அவனை வாரவும்,

“அட ஆமாடா ஆமாம்… அது.. நே…த்..து… இது இன்னைக்கு…” அவன் அவ்வாறு சொல்லவும், மித்ரா சிரிக்க, வசந்த் அவளை அடக்கினான். அவனைப் பார்த்து புருவத்தை சுளித்தவள், பாலாஜியைப் பார்க்க, பாலாஜி ராஜேஷை முறைத்துக் கொண்டிருந்தான்.

“அய்யனாரு… கொஞ்ச நேரம் உன் புக்கை கடன் கொடுடா… நான் படிச்சிட்டு வரேன்… இல்ல அரியர்ஸ் வந்தா யார் திட்டு வாங்கறது?” ராஜேஷ் பாவமாகக் கேட்கவும்,

“டேய்…. நானே இன்னும் ஒரு சாப்ட்டர் படிக்கணும்டா…” என்று அவனிடம் கூறியவன்,

“மித்ரா… நீ இப்போ ரிவிஷன் தானே செய்துட்டு இருக்க.. நீ எடுத்த நோட்ஸ்ல தானே ரிவிஷனைப் பார்ப்ப… ராஜேஷ்க்கு உன் புக்கைக் கொடேன்…” பாலாஜி சொல்லவும், மித்ரா, தனது புத்தகத்தை நீட்ட, அதை அவசரமாக பிடுங்கிக் கொண்ட வசந்த், தன்னுடைய புத்தகத்தை ராஜேஷிடம் கொடுக்க, பாலாஜி இருவரையும் சந்தேகமாகப் பார்த்தான்.

அவனது பார்வையைக் கண்டுக் கொண்டவள், “அனி… இது எல்லாம் இப்படி எழுதணும்…” என்று அவளுக்கு விளக்கம் சொல்வதைப் போல அவனது பார்வையைத் தவிர்க்க, நேரமாவதை உணர்ந்து, மித்ராவிடம் கூட விடைப்பெறாமல், வேகமாக வகுப்பறைக்குச் சென்றான் வசந்த்.

“மித்ரா… நேரமாச்சு கிளாஸ்க்கு போகலையா?” அனிதா, நித்யாவுடன் படித்துக் கொண்டிருந்தவளை பாலாஜி கலைக்க, மித்ரா நிமிர்ந்து, வசந்தைத் தேட, அவன் இருந்த இடமோ காலியாக இருக்கவும், அவள் முகம் சுருங்குவதைப் பார்த்த பாலாஜிக்கு குழப்பம் பல மடங்காக அதிகரித்தது.

பரீட்சை முடிந்து, வெளியில் வந்த பாலாஜி, மித்ராவை நிறுத்தினான். “என்னாச்சு பாலாஜி… எக்ஸாம் எப்படி செய்த?” என்று கேட்கவும்,

“நீ நல்லா செய்து இருக்கியா? நான் எப்பவும் போல தான்…” பாலாஜி பதில் சொல்லிவிட்டு, “இன்னிக்கு ஈவினிங் ஆறு மணிக்கு உனக்கு நான் போன் பண்ணறேன் மித்ரா… எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” பாலாஜி சொல்லவும்,

“ஹையோ… அது வசந்த் பேசற நேரமாச்சே…” என்று மனதினில் நினைத்தவள்,

“நான் அந்த டைமுக்கு கொஞ்சம் வெளிய போனாலும் போவேன் பாலாஜி… நீ ஒரு ஏழு மணிக்கா போன் செய்யறியா? நாம பேசலாம்..” மித்ரா கேட்கவும், அவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டே வந்த வசந்த், மனதினில் சிரித்துக் கொண்டான்.

“மித்ரா… இந்தா உன் புக்…” அவர்களை நெருங்கிய வசந்த், அவளிடம் நீட்டவும், புன்னகையுடன் அவனிடமிருந்து, அதை வாங்கிக் கொண்டவள், அவனிடம் கண்களால் விடைபெற, வசந்த், அவளைப் பார்த்து தலைக் கோதி சிரித்தான்.

மித்ராவின் கண்களில் தெரிந்த ஆவலும், அன்பும், பாலாஜிக்கு அவளுடன் கண்டிப்பாக பேசிவிட வேண்டும் என்ற அபாயச் சங்கை ஊதியது.

பரீட்சையின் போது, மாலையில் வசந்துடன் சேர்ந்து படிக்க வருவது பாலாஜியின் வழக்கம். சில நேரங்களில், முழு இரவும் அங்கேயே தங்கி படித்துவிட்டு, கல்லூரிக்கு கிளம்பி வருவான். அன்று சீக்கிரமாகவே வசந்த் வீட்டிற்கு வந்த பாலாஜி, “ஹே மித்ரா… அந்த சாப்ட்டர் படிச்சிட்டியா? ரொம்ப படிச்சு உடம்பைக் கெடுத்துக்காதேம்மா.. அப்பறம் நான் எல்லாம் என்னத்துக்கு ஆகறது……” என்ற வசந்தின் வார்த்தைகள், கோபத்தை ஏற்படுத்த, அவனுடன் பேசுவதை தன்னிடம் இருந்து மறைத்த மித்ராவின் மீது அவனது கோபம் திரும்பியது.

 

மௌனங்கள் தொடரும்…

2 COMMENTS

  1. oh my god akka intha vasanthai enna seirathu appadinu theriyala y he is behaving so selfish ivanukku aanaalum ivvalavu aagathu

LEAVE A REPLY