SHARE

கல்லூரி வாழ்க்கை

காலத்தால் நான் தொலைத்த 

அழகான பொக்கிஷம் !!

அதில் நீ கோர்த்த 

சந்தோஷப் பூச்சரங்கள்

வாடாமல் இன்னுமும் !!

 

 

 

கல்லூரி… நம் வாழ்க்கையின் வண்ணங்களால் நிரப்பப்பட்ட அழகிய பக்கங்கள் அவை. எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற நினைவுகளின் கல்வெட்டுகள். பல புதிய நண்பர்களையும், காதலையும், அனுபவ பாடத்தையும் சேர்த்து கற்பிக்கும் ஒரு கூடம் அது. மகழ்ச்சியை மட்டுமே பலருக்கு கொடுத்து, சிலருக்கு துன்பத்தைக் கொடுத்தாலும், அந்த கல்லூரிக் காலம், அனைவருக்குமே, கனா காணும் காலங்கள் தான்… மறக்க முடியாத பொற்காலம் தான்.

அன்று முதல் நாள் கல்லூரி… அந்த முதல் நாளுக்கே உண்டான பரபரப்பில் அங்கும் இங்கும் மாணவர்கள் குழுமி இருந்தனர்…. சீனியர் மாணவர்கள் தங்கள் ஜூனியர்களைக் காணவும், சில மாணவர்கள் புதிய மாணவிகளை காணவும் ஆவலாக காத்திருந்தனர்.

முதல் வருடத்தின் மாணவர்கள் குழு ஒன்று, அப்பொழுது தான் சீனியர் கூறிய அனைத்தையும் செய்து முடித்து, தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்து, கல்லூரியின் அடுத்த வளாகத்திற்குச்  செல்லும், படிகளில் ஏறிக்கொண்டிருக்க, அந்த படிக்கு அருகில் சறுக்கிக் கொண்டு வந்து நின்றது ஒரு பென்ஸ் கார்…

பளிங்கு போல் மின்னிக் கொண்டு, சிறு தூசி கூட இல்லாமல், சுத்தமாக இருந்த அந்தக் காரில் இருந்து, தயக்கத்துடன் இறங்கிய பெண்ணை, படிகளில் ஏறிக்கொண்டிருந்த அந்த க்ரூப் மாணவர்கள் திரும்பிப் பார்த்தனர்.

நெற்றியில் கீற்றாக இருந்த விபூதியும், அதற்கு கீழே இருந்த குங்குமமும், அவள் கோவிலுக்கு சென்று வந்திருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்ல, படிகளில் நின்றிருந்த மாணவர்களில், நெட்டையாக இருந்த அந்த மாணவனின் முகத்தில், ஒரு வசீகர கள்ளப்புன்னகை தோன்றியது.

அவன் அருகில் இருந்த ஒருவன், அவனைப் பார்த்து, “என்ன பாஸ்… இப்போ எதுக்கு இப்படி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கறீங்க?” என்று கேட்கவும்,

“சும்மா.. கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமான்னு தோணிச்சு… அது தான்…” என்றவன், காரை அனுப்பிவிட்டு, அந்தப் பெண் படிகளில் கால் வைக்கும் முன், “ஹே கேர்ள்…” என்று சத்தமாக அழைத்தான்.

ஏற்கனவே ராகிங், காலேஜ் என்று பயந்திருந்தவள், முதல் படியில் கால் எடுத்து வைக்கும் முன்பே குரல் வரவும், பயத்துடன் குரல் வந்த திசையைப் பார்த்தாள்.

 

 

அங்கு நின்றிருந்த மாணவர்கள் அவளைக் கைக் காட்டி அழைக்க, அவர்களை கெஞ்சலுடன் பார்த்தப் பார்வையை, உதறித் தள்ளிய அந்த நெட்டையன், “இங்க வான்னு சொன்னா உடனே வரணும்…” என்று அதட்ட, மெல்ல அடியெடுத்து, தயக்கத்துடன் அவர்களிடம் சென்றவளை, “எந்த டிபார்ட்மெண்ட்…” என்று அந்த நெடியவன் கேட்க,

“இன்ஸ்ட்ருமென்டேஷன்…” திக்கித் திணறி அவள் கூறிய பதிலைக் கேட்டவர்கள்,

“மச்சி… நம்ம கிளாஸ்டா…” அந்த நெடியவனின் காதில், அருகில் இருந்த ஒருவன் சொல்லவும், அந்த நெடியவன், அவனை பார்வையால் அடக்கினான்…. மச்சி, மாமா, மாப்ள… என்ற புதிய உறவுகள் நிமிடங்களில் பிறப்பது இந்த கல்லூரிக் காலத்தில் மட்டும் தான் அன்றோ?

“பேசாம இரு….” என்று அவனை அடக்கியவன், “உன் பேர் என்ன?” என்று அவளிடம் கேட்கவும், “சங்கமித்ரா…” என்ற பதில் வந்தது.. கூடவே, “நான் உள்ள போகவா?” என்றும்.

“இரு… இரு… நீ என்ன கொஞ்சம் கூட பயபக்தியே இல்லாம இருக்க… இப்படி இருந்தா படிப்பு எப்படி வரும்?”

“பக்தி எல்லாம் இருக்கு… நான் கோவிலுக்கு போய்ட்டு தான் வந்தேன்… இங்கப் பாருங்க…” அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று அவள் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகளும், கைகள் அவசரமாக பையில் இருந்து எடுத்த விபூதிப் பொட்டலத்தைக் பிரித்துக் காட்டியது.

“நான் அதைச் சொல்லல…”

“பின்ன?” அவள் புரியாமல் கேட்கவும்,

“காலேஜூக்கு முதல் முதலா வர… அதுவும் முதல் அடி எடுத்து வைக்கும்போது, காலேஜ் மண்ணைத் தொட்டு கும்பிட்டுப் போக வேண்டாமா? அப்போ தானே படிப்பு நல்லா வரும்…. இல்ல சரஸ்வதி சாமிக்கு கோபம் வந்து உனக்கு அரியர்சா தருவாங்க… உனக்கு அது தேவையா?” வசந்தின் சீரியசான முகபாவத்தில், சங்கமித்ராவும் மிகவும் பயபக்தியுடன், அவன் சொன்னதைச் செய்தாள்.

அந்த நெடியவனின் முகத்தில் ஒரு வெற்றிப் பெருமிதம் வந்து குடிகொண்டது… “மச்சி… சீனியர் பசங்க வராங்க…” மீண்டும் அருகில் இருந்தவன், காதைக் கடிக்கவும்,

“சரி சரி… நல்ல நேரம் போகறதுக்குள்ள கிளாஸ்க்குப் போ… இல்ல எங்களுக்கும் சீனியருங்க வந்தா, அவங்க உன்னை விழுந்து கும்பிடச் சொல்லுவாங்க… ஓடு.. ஓடு..” என்று அவளை விரட்டியவன், அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடவும், சீனியர் மாணவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.

“உன் பேர் என்ன பசந்த்தா?” சீனியரில் ஒருவன் கேட்க,

“வசந்த்…” தன் பெயரை வேண்டுமென்றே கொலை செய்த அவனை, முறைத்தபடி வசந்த் பதில் சொல்லவும், “டேய் வசந்த்டா… வசந்த்…” என்று ஒருவன் கூவினான்.

“இங்க நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? உங்களை தான் நாங்க அப்போவே கிளாஸ்க்கு போக சொல்லியாச்சே…”

“இல்ல… அந்தப் பொண்ணு கிளாஸ்க்கு போக வழி கேட்டா… அது தான் சொல்லிட்டு இருந்தோம்…” வசந்தின் பதிலில்

“சொல்லியாச்சு இல்ல… ஓடு… போ.. போ.. இடத்தைக் காலி பண்ணு… இது எல்லாம் எங்க ஏரியா….” சீனியரில் ஒருவன் அவர்களை விரட்ட,

“டேய் நாம நின்னா சீனியருக்கு கால் வலிக்குதாம்டா… வாங்க நாம கிளாஸ்க்குப் போகலாம்…” என்ற வசந்த் நகரவும், “ஏய் நில்லு…” என்று ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.

வசந்த் நின்றுத் திரும்பிப் பார்க்கவும், “அந்தப் பொண்ண ராகிங் செய்தியா?”

“இல்லேயே சீனியர்… அந்தப் பொண்ணுக்கிட்ட ‘முதல் முதலா போற… காலேஜ் மண்ணைத் தொட்டு கும்பிட்டுப் போன்’னு சொன்னேன்… அது என்ன தப்….ப்…ப்…பா…” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்கவும்,

“இந்த அலம்பல் வேலை எல்லாம் இங்க வேண்டாம்… கொஞ்சம் அடக்கி வாசி…” ஒரு சீனியர் மாணவன் எச்சரிக்கவும்,

“இல்லைங்க சீனியர்… நாங்க உங்க ஜூனியர்ங்க இல்ல… இப்போல இருந்து நாங்களும் ராகிங் பண்ண பழகினாத் தானே… அடுத்த வருஷம் உங்க பேரை எல்லாம் காப்பாத்த முடியும்… இல்ல உங்க ஜூனியரான்னு கேட்டு கேட்டு துப்புவாங்க இல்ல… அதுக்குத் தான்…” முதலில் சாதாரணமாகத் தொடங்கியவன், இறுதியில் நக்கலாக முடிக்க, சீனியர் மாணவர்களே சிறிது அசந்து தான் நின்றனர்.

முதலில் சுதாரித்த ஒருவன், “போ… போ கிளாஸ்க்குப் போ… நிக்காதே நிக்காதே…” என்று விரட்டவும்,

தோளைக் குலுக்கிக் கொண்ட வசந்த், “அப்படியே கிளாஸ் எங்கன்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்…” என்று இழுக்கவும்,

“நேரா போய் ரைட்ல திரும்பினா… தனியா உங்களுக்குன்னு ஒரு பிளாக் இருக்கும்… அங்கப் போ… கொட்டையா போர்ட் போட்டு வச்சிருப்பாங்க…” என்று கடுப்புடன் ஒருவன் பதில் சொல்லவும், வசந்த் அங்கிருந்து, தனது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு வேகமாக நகர,

“டேய்… அவன் நம்மளைக் கலாய்ச்சிட்டு போறான்…” என்று ஒரு சீனியர் கத்தவும், அவர்களைப் பின்தொடர்ந்துப் போக நகர்வதற்குள், ஒரு ஆசிரியர் அவர்களை நோக்கி வரவும், அவர்களும் அமைதியாக அங்கிருந்து தங்கள் வகுப்பிற்கு நகர்ந்தனர்… வசந்தின் மேல் புகைச்சலுடன்….

சீனியர்களான அவர்கள் வகுப்பு மாணவிகள் கூட வசந்தின் தோற்றத்தை புகழ்ந்துப் பேசினால், அவன் மீது எரிச்சல் வராமல், இருந்தால் தானே அதிசயம்!!!

முதல் நாள் வகுப்புக்கள் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது…. முதல் பெஞ்சில், அமர்ந்திருந்த சங்கமித்ரா, அவள் அருகில் இருந்த மாணவியைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவளும் பதிலுக்கு புன்னகைக்க, “உன் பேர் என்ன…” என்று இரண்டு மூன்று முறை புன்னகைத்த பின், அருகில் இருந்தவள் கேட்க,

“என் பேர் சங்கமித்ரா… மித்ரான்னு எல்லாரும் கூப்பிடுவாங்க… உன் பேர் என்ன?”

“அனிதா… இவ பேர் நித்யா…” என்று அவள் அருகில் இருக்கும் இன்னொரு பெண்ணிற்கும் சேர்த்து அனிதா அறிமுகம் செய்து வைத்தாள்… அழகான ஒரு நட்பு மெல்ல மணம் பரப்பத் தொடங்கியது.

“ஹே பாலாஜி…” ஐஐடி கோச்சிங் கிளாசில் பார்த்த அந்த மாணவனை, தன் வகுப்பிலேயே பார்த்தவளுக்கு, முகம் பிரகாசமுற, அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“அந்தப் பையனைத் தெரியுமா?” அனிதா கேட்ட கேள்விக்கு, “ஹும்… பார்த்து இருக்கேன்… ஆனா பேசினது இல்ல…” மித்ரா தயக்கத்துடன் சொல்லவும், “ஓ…” என்று அனிதா கேட்டுக் கொண்டாள்.

அவளை அங்கு பார்த்த பாலாஜிக்கு, அவளுடன் நின்று பேசுவதா? அல்லது புன்னகையுடன் நகர்ந்து விடலாமா என்று யோசித்து, புன்னகையுடனே அங்கிருந்த மாணவர்களின் இடத்திற்குச் சென்றான்.

சிறிது நேரத்தில் ஒரு பேராசிரியர் உள்ளே நுழைந்து, “நான் வேல்… உங்க கிளாஸ் இன்சார்ஜ்…” என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டவர், “உங்களைப் பத்தி ஒரு குட்டி அறிமுகம் செய்துக்கிட்டு உட்காருங்க…” என்று கூறவும், ஒவ்வொருவராக, தங்களைப் பற்றிக் கூறத் தொடங்கினர்.

“நான் வசந்த் கிருஷ்ணமூர்த்தி… கிருஷ்ணா ஹாஸ்பிட்டல் எங்களது தான்…” என்று அவன் பெருமையாகச் சொல்லிக் கொள்ளவும், “ஓ…” என்று வியந்தவர், “அடுத்து உங்க பேர் சொல்லுங்க…” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

“நான் பாலாஜி… எங்க அப்பா அரிசி மண்டி வச்சிருக்கார்…” சந்தோஷமாகச் சொல்லும் அவனை முதல் பார்வையிலேயே பிடித்தது வேலிற்கு…

“இப்போ கேர்ள்ஸ்… நீங்க சொல்லுங்க…” வேல் சொல்லவும், முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த சங்கமித்ரா எழுந்து நின்றாள்.

“நான் சங்கமித்ரா…” அவள் பேரைச் சொன்னவுடனே,

“நீ ருக்மணியம்மா பேத்தி தானே… அவரோட ரெண்டாவது மகனோட பொண்ணு…” அவர் ஆச்சரியமாகக் கேட்கவும், சங்கமித்ரா ஆம் என்று தலையசைக்க,

“நீ சொல்லவே வேண்டாம்… உட்காரும்மா…” என்று வேல் சொல்லவும்,

“சார்… யாரு சார் அவ… நாங்களும் தெரிஞ்சிக்கணும் இல்ல…” பின் பெஞ்சில் இருத்து ஒரு குரல் இடையிட,

“எங்க பாட்டி, ருக்மணி க்ரூப் ஆப் கம்பெனீசோட மேனேஜிங் டைரக்டர்…” அவள் சொல்லவும்,

“சார்… அவங்க அப்பா அம்மா யாரு…” வசந்த் கிண்டலாகக் குரல் கொடுக்க, “வசந்த்… பேசாம இரு…” வேல் அடக்கவும்,

“எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்ல… எனக்கு எல்லாமே பாட்டி தான்…” என்றவள், அமர்ந்து, அருகே இருந்த அனிதாவைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவளின் பரிதாபப் பார்வையைப் பார்த்தவள், “ஹே… எனக்கு இது எல்லாம் சொல்லி பழக்கம் தான்… நீ ஃபீல் பண்ணாதே…” என்று தேறுதல் கூறியவள், அடுத்தவர் கூறும் அறிமுகங்களைக் கேட்கத் துவங்கினாள்.

“ரொம்ப நல்ல பொண்ணு…” பாலாஜி சொல்லவும்,

“டேய்… என்ன அதுக்குள்ள ரூட் போடறியா?” என்று வசந்த் நக்கலாகக் கேட்க, பாலாஜி அவனைப் பார்த்து பழிப்புக் காட்டி, “உன்னை மாதிரி இல்ல…” என்று சொல்லிவிட்டு, வேலின் பேச்சில் கவனத்தைப் பதித்தான்.

வகுப்புகள் தொடங்கி, ஒரு வாரம் ஓடிச் சென்றது. தினமும், காலையில் மித்ரா வரும் நேரம் படிக்கருகில் நிற்கும் வசந்தும், அவனது குழுவும், அவளை வணக்கம் வைக்கச் சொல்லி, அதன் பின்னரே அவளை வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வசந்த், தனது வகுப்பு மாணவன் தான் என்பதை அறியாத மித்ரா தான், தினமும் வணக்கம் வைத்துக் கொண்டிருந்தாள்.

வகுப்பிற்குள் நுழைந்ததும், அனிதாவிடம் பேசுவதும், முந்தய தினம் நடத்திய பாடங்களை படிப்பதில் மட்டுமே கவனத்தை பதித்து, தன்னுடைய வேலையில் மட்டுமே மூழ்கி இருந்தவள், ‘வசந்த்’ என்ற பெயரை மட்டுமே கேட்டு இருக்கிறாள்.

அன்று ருக்மணி பாட்டியுடன், சீக்கிரமாகவே கல்லூரிக்கு வந்தவள், அனிதாவின் வரவுக்காக காத்திருக்க, “என்னடா இன்னைக்கு பென்ஸ் வரல போல… இவ்வளவு நேரம் நின்னு வேஸ்ட்டா போச்சே…” என்றபடி, வகுப்பிற்குள் வந்த வசந்த்தைப் பார்த்து, வேகமாக எழுந்து நின்று வணக்கம் சொல்லியவளை,

“என்ன இன்னைக்கு எங்ககிட்ட இருந்து தப்பிக்க சீக்கிரம் வந்துட்ட போல…” நக்கலாக கேட்கவும்,

“இல்லண்ணா…” அவள் தொடங்கவும்,

“என்னது… அண்ணாவா!! ஹே.. இந்த அண்ணா நொண்ணா எல்லாம் வேணாம்… மரியாதையா சீனியர்ன்னு கூப்பிடு…” என்று அவன் மிரட்டவும், சரியென்று கூறியவள், அவனைப் பார்த்துக் கொண்டு நிற்க,

“என்ன படிக்கிற…” என்று அவளது நோட்டைத் திருப்பிப் பார்த்தவன், அவள் எடுத்திருந்த நோட்ஸ்களைப் பார்த்து,

“ரொம்ப படிக்கிற பிள்ளையோ? 12த்ல உன் மார்க் என்ன?” என்று கேட்டவனுக்கு கிடைத்த பதிலில், வசந்த் கண்கள் விரித்துப் பார்க்க,

“நல்லா டப்பா அடிச்சு பாஸ் பண்ணி இருப்பியோ? அது சரி… இன்னிக்கு என்ன சீக்கிரம் வந்துட்ட?” அவள் நோட்டில் பார்வையைப் பதித்துக் கொண்டே கேட்டவனின் கண்களில் பட்டது அவளது கைகள். கையில் இருந்த பென்சிலை கெட்டியாக பிடித்திருந்தவள், அதை தன்னுடைய துப்பட்டாவில் போட்டு சுருட்டிக் கொண்டிருக்க, மெல்ல நிமிர்ந்து, அவளது முகத்தைப் பார்த்தான்.

கண்கள், நீரில் இருந்து வெளியில் விழுந்த மீனாய் தவித்துக் கொண்டிருக்க, சுவாசம் நின்றுவிடும் போல, பயத்தினில் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்து, அவனது உள்ளத்தில் ஆனந்தம் பீறிட்டது.

“என்ன பயம் பயப்படறா? இவளை வச்சே… நம்ம ரெக்கார்ட்ஸ் எல்லாம் எழுத வைக்க வேண்டியது தான்…” முடிவுக்கு வந்தவனாக,

“இங்கப் பாரு… நான் சொல்றதுதெல்லாம் செய்தன்னா நீ நிம்மதியா இந்த காலேஜ்ல படிக்க முடியும்… இல்ல…” வசந்த் இழுத்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்து, வசந்தின் அருகில் ஸ்வாதீனமாக நின்ற ரவியைப் பார்த்தவள்,

“இவன் நம்ம கிளாஸ் பையன் தானே… சீனியர் கிட்ட போய் ஃபிரெண்ட் மாதிரி நிக்கறான்….” அவள் யோசனை செய்துக் கொண்டிருக்க,

அவர்களின் பின்னால் வந்த பாலாஜி, வசந்த்தின் அருகில் வந்து, “என்னடா வசந்த்…. இன்னிக்கு சீக்கிரம் கிளாஸ்க்கு வந்துட்ட… மித்ரா கிட்ட ஏதாவது கேட்டுட்டு இருந்தியா என்ன?”

“ஒண்ணும் இல்ல சும்மா…” வசந்த் மித்ராவை அளந்துக் கொண்டே பதில் சொல்ல,

“சரி வாடா… நேத்து கொடுத்த ஹோம்வர்க் முடிச்சியா?” என்று கேட்கவும், அதற்கும் பதில் கூறாமல், அதிர்ந்து நிற்கும் மித்ராவை, நிதானமாக மேல் இருந்து கீழ் வரை அளந்துக் கொண்டு நின்றிருந்தான், வசந்த்.

அவனைத் தட்டிய பாலாஜி, “மித்ரா… நீ போய் வேலையைப் பாரு…” என்று அவளை உட்காருமாறு சைகை செய்ய

“இவங்க சீனியர் இல்லையா?” ஒருவழியாக, நட்புடன் பேசும் பாலாஜியிடம் அவள் வாய் திறந்து கேட்கவும்,

“ஓ.. இவனுங்க ராகிங் பண்ணற பொண்ணு நீ தானா? யாராவது ஏதாவது சொன்னா உடனே செய்துடுவியா?” அலுத்துக் கொண்டே, வசந்தை திரும்பி முறைக்க,

“எனக்கு யார்ல்லாம் நம்ம கிளாஸ் பாய்ஸ்ன்னு தெரியாது இல்ல பாலாஜி… இனிமே கவனமா இருக்கேன்…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, தனது இடத்தில் அமர்ந்து, தனது புக்கை வைத்து மீண்டும் நோட்ஸ் எடுக்கத் தொடங்கினாள்.

அவளது புன்னகையை பார்த்து நிம்மதியடைந்த பாலாஜி, “வா வசந்த்… நம்ம இடத்துக்கு போகலாம்… இவளா இருக்கறதுனால தப்பிச்ச… இதுவே வேற யாராவதா இருந்தா… உன்னை ஹெச்.ஓ.டி. கிட்ட மாட்டி விட்டு இருப்பாங்க…” என்று அவனை அழைக்கவும், தன்னிடம் அல்லாது, ஒரு பெண், அதுவும் அழகான ஒரு பெண், வேறொரு நபரிடம் நட்புடன் சிரித்துப் பேசுவது, வசந்த்திற்கு எரிச்சலைக் கொடுத்தது.

“உனக்கு அவளை முன்னமே தெரியுமா?”

“தெரியும்… நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல தான் ஐஐடி கோச்சிங் போனோம்… அப்போ தெரியும்…”

“ரொம்ப திமிரு பிடிச்சவளோ?”

“இல்ல ரொம்ப ரொம்ப நல்லப் பொண்ணு… இங்க எப்படி அவளோட வேலைய அவ பார்த்துட்டு இருக்காளோ… அதே போலதான் எப்பவும் இருப்பா…”

“ஹும்… பாராட்டு பத்திரம் எல்லாம் பிரமாதமா வாசிக்கிற… என்ன லவ்வா?” நக்கல் வழிந்தோடியது வசந்தின் குரலில்.

“ச்சே… கொஞ்சம் பரிவா பேசினா உடனே லவ்வா? பாவம்டா… அப்பா அம்மா இல்லாம வளர்ந்தப் பொண்ணு… வா… போதும்… அவளைப் பத்தி பேசினது… மத்தவங்கள வம்பு செய்யற மாதிரி அவளையும் செய்யாதே… அதுக்கு நான் விட மாட்டேன்…” கண்டிப்புடன் பாலாஜி கூறவும், மீண்டும் நக்கலாக வந்தது வசந்தின் சிரிப்பு.

“பெரிய வீட்டுப் பொண்ணு… பணம் நிறைய இருக்கு… எப்படியும் கேட்டதெல்லாம் கிடைக்கும்… அப்பறம் என்ன?” அலட்சியமாக வசந்த் கேட்கவும்,

“அது தான் கஷ்டம்.. அவகிட்ட போய் கேட்டுப்பாரு… அவங்க கிட்ட இருக்கற இண்டஸ்ட்ரீசோட எண்ணிக்கையை விட அவளோட சின்னச் சின்ன ஆசைகள் அதிகமா இருக்கும்…” பாலாஜி சொல்லி முடிக்கும் முன், வசந்த் மித்ராவின் அருகில் இருந்தான்.

அனிதா இன்னும் வராத நிலையில், மித்ராவின் அருகில் அமர்ந்தவன், “உன்னோட சின்னச் சின்ன ஆசைகள் என்ன…. கொஞ்சம் சொல்லு கேட்கறேன்…” என்று கேட்கவும், மித்ரா அதிர்ந்து விழித்தாள்.

“சொல்லு… ஒண்ணு ரெண்டா… இல்ல நிறையாவா… அதெல்லாம் சொல்லத் தெரியுமா தெரியாதா?

“ம்ம்… இருக்கு.. நிறைய இருக்கு…” என்றவள், அதைச் சொல்லத் தான் நாவெழாமல், தலைகுனிந்தபடியே, “சொன்னா சிரிப்பீங்க… வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு, நோட்ஸ் எடுக்கத் தொடங்க, தோளைக் குலுக்கிக் கொண்டவன், எழுந்து பாலாஜியின் அருகே சென்றான்….

இங்கு மித்ராவின் மனதில் மெல்லிய சாரல் அடித்தது. அவளுக்கு தேவையானது அனைத்தும் அவளிடம் இருக்கும்… மிகவும் விலை உயர்ந்ததாகவே இருக்கும்… ஆனால் ஏதோ ஒன்று தன் வாழ்வில் குறைவது போல, அவள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும்… அந்தக் குறை இன்று தீர்ந்துவிட்டது போல் தோன்றிய எண்ணம், அவள் மனதை நிறைத்து, வசந்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தது….

 

“உன் பெயரைக் கேட்ட நாள் முதல்

உன்னை யார் கூப்பிட்டாலும்

நான் முதலில் திரும்பிப் பார்க்கிறேன் !!”

 

அப்பொழுது பாலாஜி அவளைப் பார்த்து புன்னகைக்க, அவளும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு, நோட்ஸ் எடுக்கத் தொடங்கினாள். அன்று அனிதா, நித்யா இருவருமே விடுமுறை எடுத்தப்படியால், அவள் தனித்தே இருந்தாள். இந்த ஒரு வாரமாக மற்ற மாணவிகளுடன், புன்னகை அளவில் மட்டுமே நட்புக் கொண்டிருந்த அவளால், திடீரென்று அவர்களுடன் சகஜமாகப் பேச முடியாமல் போனது.

அவள் கல்லூரிக்கு வரும் தோரணையும், எல்லோருடனும் பேசாமல் புன்னகைக்க மட்டுமே செய்தவளிடம், அவர்களும் ஒதுங்கியே இருந்தனர்…. மதிய உணவு இடைவேளையில் அவள் அருகே வந்த பாலாஜி, “என்ன, உன் பிரெண்ட்ஸ் இன்னைக்கு லீவ்வா?” என்று கேட்க,

“ம்ம்… ஆமா வரல… ஏன்னு தெரியல…”

“போன் நம்பர் இருந்தா… போன் பண்ணி கேளு…”

“இல்ல பாலாஜி… என் கிட்ட மொபைல் இருக்கு… ஆனா காலேஜ்ல பேசக் கூடாதுன்னு பாட்டி சொல்லி இருக்காங்க… அதுவும் இல்லாம நான் அவங்களோட நம்பர் எல்லாம் வாங்கிக்கவே இல்லையே…” அவளின் கவலையான பதிலில்,

“இதெல்லாம் வாங்கி வச்சுக்கோ மித்ரா… இந்தா என்னோட நம்பர்… சமயத்துக்கு உதவும்… அவங்க நம்பரும் மறக்காம நாளைக்கு வாங்கிக்கோ… இப்போ இங்க இருக்கறவங்க கிட்ட போய் பேசு… போ.. நீ பெரிய வீட்டு பொண்ணுங்கறதுனால அவங்களுக்கு ஒரு தயக்கம்…” என்ற பாலாஜி,

“எழுந்திரு… போ… போய் பேசு…” என்று ஊக்கியவன், அவள் எழுந்து செல்லவும்,

“ஹே ராஜி… ஈஸ்வரி, மித்ராவை உங்க கேங்ல சேர்த்துக்கிட்டு அரட்டை அடிங்க…. அவ தனியா இருக்கா இல்ல…” என்றபடி, மித்ரா அவர்களுடன் பேசத் துவங்கியதைப் பார்த்த திருப்தியுடன், தனது நண்பர்களைத் தேடிச் சென்றான்.

அப்பொழுது ஒரு சீனியர் மாணவன், மித்ராவை அழைத்து பேசத் தொடங்கினான்.

 

மௌனங்கள் தொடரும்……

 

 

LEAVE A REPLY