SHARE

ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சு பூப்பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீப்பிடித்தாலும் பிடிக்கட்டும்
ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய்
உயிர் வாழ்வதாயினும் வாழட்டும்
இல்லை சாவதாயினும் சாகட்டும்

 

 

“வசந்த்….” பாலாஜி அழைக்க, தன்னை பெயர் சொல்லி அழைத்தே பல நாட்கள் ஆகி இருந்த நிலையில், திடீரென்று அவன் அழைக்கவும், வசந்த் பாலாஜியை குழப்பத்துடன் பார்த்தான்.

“வீட்டுக்குப் போகல?” இன்னும் மனதினில் கோபம் கனன்றுக் கொண்டிருந்ததால், அவனால் இயல்பாக பேச முடியாமல், வார்த்தைகள் திணற,

“போகணும்…” என்ற வார்த்தையை சத்தமாக சொன்னவன், “ஆனா, போகவே பிடிக்கல… அம்மா பேசறதைக் கேட்க முடியல…. அம்மா, பொண்ணுங்க கிட்ட பேசக் கூட கண்டிப்பு காட்டறாங்கன்னு எனக்குத் தெரியும்… ஆனா, அவங்க கண்டிப்புக்கு பின்னால, என் கிட்ட ஸ்வப்னாவை தவிர யாரும் நெருங்கக் கூடாதுன்ற எண்ணம்தான், அவங்க மனசுல மேலோங்கி இருந்திருக்குன்னு இத்தனை நாள் புரியாம போச்சு…” மனதினில் கசப்புடன் நினைத்துக் கொண்டான்.

இரண்டு நாட்களாகவே வசந்தின் முகத்தில் இருந்த ஒரு வித வெறுமையான சோக உணர்வில், பாலாஜி குழம்பிப் போய் இருந்தான். அவன் அறிந்த வரையில் வசந்த், ‘‘டேக் இட் ஈஸி பாலிசியாக’ அனைத்தையும் எடுத்துக் கொள்பவன்.

“ஏன்… அன்று மித்ரா, ஃபேர்வெல் பார்ட்டியில் இருந்து பாதியில் கிளம்பியதற்கு, கொஞ்சம் கூட வருத்தம் கொள்ளாமல், நான்கு வருடங்கள் அவளுடன் சேர்ந்து பழகிய அந்த நினைவும் இல்லாமல் தானே, அன்றைய நாளை சர்வ சாதாரணமாக மற்றவர்களுடன் கொண்டாடினான். அதே போலவே, எதுவுமே எப்போதுமே அவனை பாதிக்காது. ஏன்… அத்தனை நெருக்கமாக அவளுடன் பழகிய பின்னரும், கவலையே படாமல் துணிந்து தானே, மித்ராவிடம் கூட சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்திருக்கிறான்… அதுவும் காதலாகி கசிந்து உருகியவளிடம் இருந்து…

அந்த அளவிற்கு சுயநலம் அவன் கண்ணை மறைத்திருக்கிறது என்பது தானே கசப்பான உண்மை… அப்படிப் பார்க்கையில், எந்த சந்தோஷத்துடன், ஸ்வப்னாவுடன் தனக்குத் திருமணம் என்று கூறி, முன்பு மித்ராவின் மனதை சிதைத்தானோ! அதே ஸ்வப்னாவுடன் தானே இன்று திருமணம் நடக்கவிருக்கிறது… அப்படியிருக்க, முன்பிருந்த அந்த மகிழ்ச்சி இப்பொழுதும் இருக்கத் தானே வேண்டும்… ஆனால் இப்போது ஏன் இப்படி இருக்கிறான்?

ஒருவேளை, இதுவும் அவனது சுயநலத்தின் ஒரு பகுதி தானோ?? மித்ரா, தன்னை விடுத்து வேறொருவனை மணப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா?

இருக்கலாம்… கல்லூரியில் யாரும் அவளிடம் நெருங்காமல் இருக்க, என்ன மாதிரியான கதை புனைந்து வெளியில் சுற்ற விட்டிருந்தான். நல்லவேளை அவளைப் பற்றி யாரும் கல்லூரியில் விசாரிக்கவில்லை… செய்திருந்தால்?? அவளுடைய பெயருக்கே களங்கம் வந்திருக்குமே!!’ பாலாஜியின் மனம் யோசித்துக் கொண்டே வர, அடக்கி வைத்திருந்த கோபம், மீண்டும் வந்து கண்ணை மறைக்க, முயன்று தன்னை அடக்கிக் கொண்டு,

“சரி நான் வீட்டுக்குப் கிளம்பறேன்… நீ எப்போ போறியோ போ… நாளைக்கு மித்ரா ஊருக்கு கிளம்பறா… அவளுக்கு கிஃப்ட் வாங்கணும்…” என்றபடி ஓரடி நகர்ந்தவன்,

நின்று, “இனிமே இங்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா… உன்னால முடிஞ்ச பெரிய உதவியைச் செய்துட்ட இல்ல… அவ உனக்கு என்னடா செய்தா? இந்த காலேஜ்ல படிக்கும்போது, மத்த எல்லாரையும் விட்டு அவளை பிரிச்ச… இப்போ அவங்க வீட்ல இருந்தும் பிரிக்கப் போற… நல்லா…” என்று தொடங்கியவன், “ச்சே…” என்றபடி, அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

அவன் என்ன சொல்ல வந்திருக்க கூடும் என்று புரிந்த வசந்த்திற்கும், தன் நண்பனை நினைத்து பெருமையாக இருந்தது. இது தானே பாலாஜி… ‘நான் எவ்வளவு மோசமானவனாக இருந்த போதும் என்னை ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்காதவன்…’ மேலும் எதை எதையோ யோசித்துக் கொண்டே அவனும் வீட்டிற்கு கிளம்பினான்.

————————————————————————–

ருக்மணி அன்று வீட்டில் இருக்கவும், “பாட்டி…” என்று கூவியபடி மித்ரா அவரிடம் ஓடிச் செல்ல,

“என்னடா ராஜாத்தி… பாட்டி இந்த நேரத்துல வீட்டுல இருக்கறதைப் பார்த்து ஆச்சரியமா இருக்கா?” ருக்மணி சிரித்துக் கொண்டே கேட்கவும்,

“ஆமா பாட்டி… ரெஸ்ட்டே இல்லாம… சும்மா சும்மா பிஸினஸ்ன்னு சுத்துவீங்களே..” ஆதூரத்துடன் அவள் சொல்லவும், ருக்மணி அவளது தலையைக் கோதினார்.

“ஆமாடா தங்கம்… அதனால தான் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு நினைச்சு, ஒரு யோசனையில இருக்கேன்… சீக்கிரமே உங்க அண்ணனுங்க கிட்ட எல்லா பொறுப்பையும் கொடுத்துட்டு, நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்…” ருக்மணி அறிவிக்க,

“ஹய் சூப்பர் பாட்டி… அப்போ நான் அங்க போயிட்டு வீட்டை ரெடி பண்ணிட்டு சொல்றேன்… என் கூட வந்து இருங்க…” மித்ராவின் வாய் கூறினாலும், அவளது கண்கள் யோசனையைக் காட்ட, ருக்மணி மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டார்.

“நீ மனசார ‘வா’ன்னு சொல்லலைன்னாலும் நான் வருவேண்டா செல்லம்… என் பேத்தி, அன்புக்காக ரொம்ப ஏங்கி இருப்பா போலிருக்கே… அந்த ஏக்கம் அவளை தவறா வழி நடத்திடுமோன்னு பயமா இருக்கு…” காலம் கடந்த அவரது கவலை, மித்ராவை எட்டாமல், டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் வந்து அமர்ந்த ரோஹிணி, அவளை முறைத்துக் கொண்டிருக்க, “அண்ணி… பாப்பா வயத்துல இருக்கும் போது இப்படியெல்லாம் என் மேல கோபமா இருக்கக் கூடாது. அப்பறம், அதுவும் என் மேல கோபமாவே இருக்கும்…” செல்லச் சிணுங்கலாக அவள் சொல்ல,

“போடி… பெரிய இவளாட்டம் பேசறா… இங்கேயே  இருந்துடேன்… நீ இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு… என் கூட வம்பு பண்ணிக்கிட்டு, ஷாப்பிங் போய்ட்டு, என் மனசுல இருக்கறத ஷேர் பண்ண… இப்படி எனக்கு யார் இவ்வளவு க்ளோசா இருக்கா மித்ரா… மூணு தடி மாடுங்கள வச்சிட்டு போர் அடிக்குது…” கண்களில் கண்ணீர் துளிர்க்க ரோஹிணி சொல்லவும்,

“யாரும் என் முன்னாடி அழுகாதீங்க… நானும் சந்தோஷாமா போகலை… அதை மட்டும் புரிஞ்சிக்கோங்க… நான் சீக்கிரமா திரும்ப வரேன்… என்னையும் கொஞ்சம்  புரிஞ்சிக்கோங்க அண்ணி… நான் தான் நேத்து அவ்வளவு சொன்னேனே… திரும்பவும் அதையே சொன்னா, நான் என்ன செய்யட்டும்>” தான், அந்த வீட்டுப் பெண் என்று அதிகாரம் காட்டாமல், அனாவசியமாக ரோஹிணியின் விஷயங்களில் தலையிடாமல், நட்புடன் பழகும் மித்ராவை, ரோஹிணிக்கு பிடிக்காமல் போனால் தானே அதிசயம்!!

“பாட்டி… உங்க மடியில படுத்துக்கவா?” மித்ரா கேட்கவும், தன்னுடைய ஒரே பேத்தியை, அனுமதி கேட்கும் அளவிலா வைத்திருக்கிறோம் என்று ருக்மணி மிகவும் துடித்துப் போனார்.

அவர் மடியில் படுத்த மித்ராவிற்கு, சிறிது நேரத்திலேயே உறக்கம் தழுவியது. அப்படியே உறங்கியவளின் விழிகளின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீரை, துடைத்து எடுத்தவர், ஒரு பெருமூச்சுடன், ரோஹிணியைப் பார்க்க,

“நீங்க போயிட்டு வாங்க பாட்டி… நாங்க இங்க பார்த்துக்கறோம்… என்னோட டெலிவரி பத்தி கவலைப்படாதீங்க… அதுக்குத் தான் இன்னும் நாலு மாசம் இருக்கே… அவளுக்கும் மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்கும்…” கூறிய ரோஹிணியும், மித்ராவை வாஞ்சையுடன் பார்த்தாள்.

அன்று முழுவதும், வீடே அமைதிக் கடலில் மூழ்கி இருக்க, எதுவும் பேச விரும்பாமல், மித்ராவும் அமைதியாகவே இருந்தாள்.

மறுநாள் அதிகாலையிலேயே அவளை எழுப்பிய ருக்மணி, அவளை கிளம்பச் சொல்லி, கோவிலுக்கு அழைத்து சென்றார். அவருடன் அமைதியுடன் போனவள், அதே அமைதியுடனே காலை உணவை முடிக்க, வீட்டில் உள்ளவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சந்தோஷ்… என்னை இன்னைக்கு, நீயே காலேஜூக்கு கொண்டு விடு… அப்பறம், மதியம் கொஞ்சம் முன்னாடியே வந்து என்னைக் கூட்டிட்டு போ… அப்போ தான் நான் வீட்டுக்கு வந்துட்டு, உடனே கிளம்ப சரியா இருக்கும்… இல்லன்னா, என்னோட பெட்டியை எடுத்துட்டு வந்திடு… நாம அப்படியே ஏர்போர்ட் போயிடலாம்…” ஹாலில் அமர்ந்தவாறே மித்ரா சொல்லவும், சந்தோஷ் அவளைப் பார்த்து முறைத்தான்.

“ஏன்… இப்போவே பெட்டியோட கிளம்பி போய் பிளைட்ல ஏறி உட்கார்ந்துக்கோயேன்… பார்த்து மித்ரா…. அடி வெளுத்திறப் போறேன்…” சந்தோஷ் கடுப்புடன் சொல்லவும்,

“அடிய எப்டி வெளுப்ப…?” சிரிப்புடன் அவள் கேட்க,

“இப்படியே பேசிட்டு இரு… நான் அதையும் காட்டறேன்… ஏன் மித்ரா… உங்க பிளான் படி, அடுத்த வாரம் தானே காலேஜ் முடியறதா இருந்தது… நீ ஏன் ஒரு வாரம் முன்னாடியே டிக்கெட் புக் பண்ணிட்டு வந்த? என்ன நினைச்சிட்டு இருக்க? அதுவும், இன்னைக்காவது லீவ் போட்டுட்டு வீட்டுல இருக்கலாம் இல்ல… இப்போவும் காலேஜ் கிளம்பறேன்னு நிக்கற… உன்னை என்ன பண்ணலாம்?” சந்தோஷ் பொரியவும்,

“என்னை காலேஜ்ல விடு.. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்… மூணு மணி நேரம் காலேஜ்ல இருந்துட்டு… ஒரு பன்னிரெண்டு மணிக்கு எல்லாம் கிளம்பி வந்துடறேன்… அப்பறம் இங்க வந்துட்டு ரெடி ஆகிட்டு ஏர்போர்ட்  போறேன்… சரியா?” மித்ரா கேட்கவும், “கிளம்பித்தொலை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டே, அவன் காரை எடுக்க, மித்ரா, அவனது பைக்கிற்கு அருகே சென்று நின்றாள்.  

“என்ன அங்க நிக்கற… காருக்கு வா… நேரமாகுது…” சந்தோஷ் அவளை அழைக்க,

“சந்தோஷ்.. இன்னைக்கு ஒரு நாள் என்னை பைக்ல கூட்டிட்டு போயேன்… எனக்கு ஆசையா இருக்கு…” கண்களை சுருக்கி அவள் கெஞ்சவும், மறுத்துப் பேசாமல், சந்தோஷ், தன்னுடைய பைக் கீயை எடுத்துக் கொண்டு வந்தான்.

“இன்னைக்கு மழை தான் வரப் போகுது..” என்ற கிண்டலுடன் அவள் பைக்கில் ஏறி அமர, பைக் காலேஜை நோக்கி நகர்ந்தது. “காலேஜூக்கு, டெய்லி உன் கூட பைக்ல வரணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும் சந்தோஷ்.. நீ தான் எப்போப் பாரு என்னைத் திட்டிட்டே இருப்பியா? அதனால, கேட்கவே வாய் வராது…” யதார்த்தமாக அவள் சொல்லவும், கண்ணாடி வழியே அவளைப் பார்த்த சந்தோஷ்,

“ஒரே ஒரு தடவையாவது நீ வாய் விட்டு கேட்டு இருக்கலாம் இல்ல மித்ரா…” மனம் வருந்தி அவன் வினவவும்,

“இப்போ இப்படி சொல்ற… ஆனா அப்போ நான் இதைக் கேட்டு இருந்தேன்னு வை… என் காது கிழியற அளவுக்கு எனக்கு அட்வைஸ் பண்ணியே பிச்சிருப்ப…” மித்ரா சொல்லவும், ‘தானும் அதிகப்படியான கண்டிப்பைத்தான் காட்டிவிட்டோமோ?’ என்று வருத்தத்துடன் சந்தோஷ் அவளைப் பார்க்க, கண்ணாடியின் வழியே மித்ரா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“உன்னை பத்திரமா, எந்த கஷ்டமும் இல்லாம காலேஜுக்கு கூட்டிட்டு வந்து போகணும்ன்னு தானே பாட்டி கார்ல அனுப்பினாங்க…” சந்தோஷ் கேட்கவும்,

“ஆனா… எனக்கு தனியா அப்படி வர பிடிக்கலையே… சரி விடு… போனது போனது தான்… இன்னிக்காவது இப்படி பைக்ல வரது எனக்கு சந்தோஷமா இருக்கு…” மித்ரா அவனை சமாதானப்படுத்த, பைக் காலேஜினுள் நுழைந்தது.  

மித்ராவிற்காக காத்திருந்த வசந்த், அவள் சந்தோஷுடன் வருவதைப் பார்த்து ஏமாற்றத்துடன் நிற்க, வண்டியை விட்டு இறங்கியவள்,

“பரவால்ல… பைக்கை நல்லா ஓட்டற… இருந்தாலும் ஸ்பீட் பத்தாது தம்பி.. உன் கூட, உன் கேர்ல் பிரெண்ட் வந்தான்னு வை… ‘உன்கூட வரதுக்கு பதிலா மாட்டு வண்டியிலேயே போயிடறேன்’னு சொல்லிட்டு போயிருவா… ஜாக்கிரதை…” மித்ரா கிண்டலாக மிரட்ட, அதைக் கேட்ட சந்தோஷ் சிரிக்கவும், வசந்த் அவர்களை பேந்த பேந்த விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்க கிளாஸ் ரோமியோ, உனக்காகவா வெயிட் பண்ணறான்?” சந்தேகமாக சந்தோஷ் கேட்கவும்,

“யாருக்குத் தெரியும் சந்தோஷ்? ஒருவேளை, அவரோட வருங்கால மனைவி வருவாங்களா இருக்கும்…” சத்தமாக மித்ரா சொல்லவும், அவளை முறைத்துக் கொண்டே, சந்தோஷின் அருகில் வந்த வசந்த்,

“என்னோட கல்யாணப் பத்திரிகையைத் தரதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்… வேற எதுவும் இல்ல…” என்றவன், ஒரு பத்திரிக்கையை எடுத்து சந்தோஷிடம் நீட்ட,

“ரொம்ப நல்லது… வாழ்த்துக்கள்…” என்றபடி, சந்தோஷ் அதை வாங்கிக் கொள்ள, மித்ரா எட்டி பத்திரிக்கையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் எழுந்த வலியும், அதை பறித்து கிழித்து எறியும் வேகமும், அவனது சட்டையை பிடித்து உலுக்கி, அடித்து, அவனை கடித்துக் குதறும் வேகமும், அவளைப் புரட்டத் தொடங்கி இருந்தது. அதை, வசந்த்தும் சந்தோஷும் அறியாதவாறு, பத்திரிக்கையை வெறித்துக் கொண்டு, உணர்ச்சிகளின் பிடியில் போராடிக் கொண்டிருந்தவளை,

“மித்ரா… நான் பன்னிரண்டு மணிக்கு வரேன்… ரெடியா இரு…” சந்தோஷின் குரலில், மித்ரா, தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள,

“பை பை சந்தோஷ்… நான் ரெடியா இருக்கேன்…” அவனிடம் சொன்னவள், அவளையே பார்த்துக்கொண்டிருந்த வசந்திடம்,

“ஹே மேன்.. எனக்கெல்லாம் இன்விடேஷன் கிடையாதா? எனி வேஸ்… கன்க்ராட்ஸ் அண்ட் ஆல் தி பெஸ்ட்… அவகிட்டயாவது உண்மையா இரு…” என்று ஒரு கொட்டும் வைத்து…. அவன் கையில் இருந்து ஒரு பத்திரிக்கையை பிடிங்கிக் கொண்டு, அவனது கையை பிடித்து குலுக்கியவள், வகுப்பை நோக்கிச் செல்ல, சந்தோஷை கடுப்பேற்றவென்று அவன் செய்த செயல், இப்பொழுது அவனுக்கே கடுப்பேற்றுவதாய்!!

அனிதாவும், நித்யாவும் சோகமாக அமர்ந்திருக்க, “நாம தான் ஸ்கைப்ல, அப்பறம் சாட்ல பேசிக்கப்போறோமே.. அதனால ஃபீல் பண்ணக் கூடாது.. எல்லாருமே இப்படி முகத்தை வச்சிக்கிட்டு இருந்தா மித்ரா ஹாப்பி இல்ல… சாட் ஆகிடுவேன்” முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு அவள் சொல்லவும், இருவரும் சிரித்து,

“மித்ரா எப்போதும் ஹாப்பி தான்…” நித்யா அவள் கன்னத்தில் முத்தமிட, “ஹே…” என்று கூவிய மித்ரா, அவளை அடிக்கத் துரத்த, சிறிது நேர விளையாட்டுக்கு பிறகு, இருவரும் சேர்ந்து ஒரு சுடிதாரை மித்ராவிடம் நீட்டினர்.

“தேங்க்ஸ்… எதுக்குடா இதெல்லாம்?” அவ்வாறு சொன்னாலும்… அவர்களின் திருப்திக்காக, சந்தோஷமாகவே வாங்கிக் கொண்டாள். பாலாஜியும் அவளிடம் ஒரு பரிசை நீட்ட,

“நான் திரும்ப வரவே மாட்டேன்னு முடிவே பண்ணிட்ட போல..” என்றபடி அதை வாங்கிக் கொள்ள,

“முன்ன இருந்த மித்ராவா இருந்தா, பேசி கன்வின்ஸ் செய்யலாம்… இப்போ இருக்கறவ, அடாவடி பிசாசா இல்ல இருக்கா? ஒண்ணும் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது…” தன் பாட்டிற்கு பாலாஜி புலம்ப,

“போதும் பாலாஜி… மீ பாவம்…” என்று சிரித்துக் கொண்டே, ஒரு டார்க் சாக்லேட்டை வாயில் போட்டுக் கொண்டவள், அவர்களிடம் அளவளாவிக் கொண்டிருக்க, அனைவரும், கையில் வசந்தின் திருமண அழைப்பிதழை வைத்துக் கொண்டு, மித்ராவை வேடிக்கைப் பார்த்தனர்.

அதைக் கண்டும் காணாமல் வகுப்பில் பேசிக்கொண்டிருந்த மித்ராவிற்கு, நேரத்தை தள்ளுவதே பெரும் பாடாக இருந்தது. கிளம்பும் நேரமும் ஒரு வாறாக வந்து சேர, போர்டிற்கு அருகில் வந்து நின்றவள், “பிரெண்ட்ஸ்… உங்களுக்கு எல்லாம் ஒரு ஹாப்பி நியூஸ்… நான் இன்னைக்கு சாயந்திரமே ஊருக்கு போறேன்…”

“மித்ரா… அப்படி சொல்லாதே…” ராஜேஷ் சொல்ல,

அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்… நீங்க என்னை மிஸ் பண்ணுவீங்களா?” கேட்டு அனைவரையும் பார்த்தவள்,

“ஹையோ… மிஸ் பண்ணனும்னு அவசியம் எல்லாம் இல்ல… ஏதோ, இப்படி ஒருத்தி நம்ம கிளாஸ்ல படிச்சான்னு, அப்பப்போ நினைச்சிக்கோங்க அதுவே போதும்… என்னோட மெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, இதெல்லாம் நோட் பண்ணிக்கோங்க…” என்று தன்னுடைய முகவரிகளைத் தந்தவள்…

“சாட்ல இருந்தா, கண்டிப்பா பேசுவேன்… அடிக்கடி உங்க ஃபோட்டோஸ் எல்லாம் போடுங்க… நானும் போடறேன்… சோ, கீப் இன் டச்… எல்லாருக்கும் பை… டேக் கேர்…” மித்ரா பேசிக்கொண்டிருக்கவும், வசந்த் அந்த இடத்தில் அமர முடியாமல், அவளை முறைத்தான்.

அவன் முறைக்கவும், மேலும் உற்சாகத்துடன், “ட்விட்டர், பின்ட்ரெஸ்ட் எல்லாத்துலயும் நான் அக்கவுன்ட் வச்சிருக்கேன்… நீங்க அதுலயும் வரலாம்… இன்னும் என்னனென்ன சோஷியல் நெட்வர்க் வந்தாலும், நான் இதே நேம்ல இருப்பேன்…” வசந்தைப் பார்த்துக் கொண்டே அவள் அந்த ஐடிக்களையும்  தெரியப்படுத்தவும், வசந்த் பல்லைக் கடிக்க, அவனைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பு சிரித்தவள்,

“சரி பிரெண்ட்ஸ்…… நான் கிளம்பறேன்… சார், மேடம்கிட்ட எல்லாம் சொல்லிட்டு போக நேரம் சரியா இருக்கும்…. பை..” என்று விடைப்பெற்றவள், நேராக ஸ்டாஃப் ரூமிற்கு சென்றாள்.

“டேக் கேர் மித்ரா… சீக்கிரம் உன் கல்யாண பத்திரிக்கையையும் தரணும்… அமெரிக்கால கல்யாணம் வச்சா… டிக்கெட், விசா செலவு எல்லாம் உன்னோடது தான்…” என்று கிண்டலாகவே வாழ்த்திய வேல்,

“எதையும் மனசுல வச்சுக்காதே மித்ரா… பை” என்றபடி அவளை வழியனுப்பினார்.

சந்தோஷ் அழைத்துச் செல்ல வருவதற்கான நேரம் கொஞ்சமே கொஞ்சம் மீதம் இருக்க, மித்ரா, மீண்டும் வகுப்பிற்குள் தன்னுடைய பையை எடுக்க வர, பாலாஜி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“கிளம்பணுமா மித்ரா?” பாலாஜி கேட்கவும், ‘ம்ம்’ என்று அதற்கு மேல் அடக்க முடியாமல், கண்ணீருடன் தலையசைக்க, அவள் கண்கள் வசந்த்தைத் தேடியது.

“அவன் இங்க இல்ல… எங்கயோ கிளம்பிப் போயிட்டான்… கடைசியா அவன் கிட்ட பேசிப் பாரேன் மித்ரா… உன் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.” பாலாஜி சொல்லவும், “ம்ம்” என்று தலையசைத்தவள்,

“பை அனி.. பை நித்தி… பை பிரெண்ட்ஸ்…” என்று விடைப்பெற்று, பைக் ஸ்டாண்டை நோக்கிச் செல்ல, அனிதாவும் நித்யாவும், பாலாஜியைப் பார்க்க, அவனோ அவசரமாக, தன் கையில் இருந்த காகிதத்தில் பார்வையை ஓட்டினான்.

அவள் ஏதோ மாத்திரை உண்பது பாலாஜிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுவும், அவளுக்கும் வசந்துக்குமான உறவைப் பற்றி வசந்திடம் பேசக் கூடாது என்று அவள் சத்தியமும் வாங்கி இருக்க, மனதில் உறுத்திய விஷயத்தை உறுதி செய்துக் கொள்ள, அனிதாவின் துணையுடன் பாலாஜி, மித்ராவின் பையில் சோதனையிட, அவள் உண்ணும் மாத்திரைகளின் அட்டைகளும், ஒரு காகிதமும் அவனுக்குக் கிடைத்தது. அவற்றை அவன் எடுத்து முடிக்கவும், மித்ரா உள்ளேவரவும் சரியாக இருக்க, பையை இருந்த இடத்தில்  திரும்ப வைத்து விட்டு, அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

வெளியில் வந்த மித்ரா, நேராக ரெஸ்ட்ரூம் சென்று ஒரு மூச்சு அழுது, முகத்தை கழுவிக்கொண்டு, சந்தோஷ் காலையில் அவளை விட்ட இடத்திற்கே வந்து, அவனுக்காக காத்திருக்க எண்ணி நடக்க, அவள் எதிர்ப்பார்த்தது போல, வசந்த் அங்கு மித்ராவிற்காக காத்திருந்தான். அவனைப் பார்த்தவளின் கால்கள் தயங்க, அவனிடம் பேச அவள் மனம் தவிக்க, மித்ரா வசந்தை நெருங்கினாள்.

அவளின் பார்வை அவனது முகத்தினில் பதிய, வசந்த்தும் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, “ஏன் வசி…” கேட்கத் துடித்த வார்த்தைகள் வெளியில் வருவதற்கு அவளது நா எழாமல், சண்டித்தனம் செய்தது.

இன்னும் உன்னை
வெறுக்கப் பழகிக் கொள்ளாததால்
உள்ளுக்குள்ளே
நொந்து கொள்ளும்
எதிர்பார்ப்புகள்

வார்த்தைகளற்ற மௌனத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, அவனது நினைவுகளில் இருந்தவளின் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர், வெளிவரத் துவங்கியது. “குட்டி…” அவளது உள்ளம் தவிக்கும் தவிப்பு புரிந்த வசந்த், அவளது கண்ணீரைத் துடைக்க கைகளை எடுக்க,

அதற்குள் அவன் மார்பில் சாய்ந்த மித்ரா, எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். “சமி…” திகைத்த வசந்த், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து, அது மறைவான இடம் தான் என்பதை உறுதி செய்துக் கொண்டு அவளைப் பார்க்க, மேலும் எம்பி, அவனது நெற்றியில் இதழ் பதித்து,

“தேங்க்ஸ்…. அண்ட் சாரி வசி… நீங்க வேற ஒருத்திக்கு சொந்தமாகப் போறீங்கன்னு தெரிஞ்சும்… நான் இப்போ செய்தது தப்புத் தான்… பை ஃபார் எவர்…” கண்ணீருடன் கூறிவிட்டு, அவனது கைகள் அவள் மேல் பதியும் முன்பே அவனை விட்டு நகர்ந்தவள்,

“இனிமே, எப்பவுமே நீங்க என்னை பார்க்காம நிம்மதியா இருக்கலாம்..” என்றபடி, வேகமாக அங்கிருந்து நகர, “குட்டி… ப்ளீஸ் என்னை விட்டுப் போகாதே” வசந்த் அவள் கைப் பிடிக்க,

“ப்ளீஸ்… விடுங்க வசந்த்… இன்னும் உங்களால எப்படி என்னை அப்படி கூப்பிட முடியுது” அவனது முகத்தைப் பார்க்காமல், தன் கைகளை உருவிக்கொண்டவள், அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

 

உடன் இருந்த வரை

என் உலகத்தின் வெளிச்சம்

பெரிதாக தெரியவில்லை

இன்று உன் பிரிவோடு சேர்த்து

வெளிச்சங்களும் போய் விட

எல்லாம் இருண்டு போக காண்கிறேன்!!

 

மித்ராவின் பையில் இருந்து எடுத்த காகிதத்தை படித்த பாலாஜி, அதில் இருந்த விஷயத்தை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அவளைப் பின் தொடர்ந்து வந்திருக்க, அங்கு அவன் கண்ட காட்சியில், அவன் கண்கள் கலங்கியது.

“மித்ரா…” வேகமாக வசந்திடம் இருந்து விலகும் மித்ராவை, பாலாஜி அழைக்க, சிலையென நின்றிருந்த வசந்த், உயிர் பெற்று அவனைப் புரியாமல் பார்த்தான்.

அவ்வளவு பேசிவிட்டு செல்லும் மித்ராவை, தடுக்காமல் நிற்கும் வசந்தை கோபமாக முறைத்தவன், “மித்ரா… உன் கூட பேசணும்… ஒரு ரெண்டு நிமிஷம் நில்லு” பாலாஜி அவசரமாக அழைக்க,

“ப்ளீஸ் பாலாஜி… இதுக்கும் மேல பேச எதுவுமே இல்ல… எனக்கு இதுக்கும் மேல இங்கேயிருக்க தெம்பில்ல… பை பாலாஜி… போயிட்டு மெயில் பண்ணறேன்…” என்றவள், திரும்பியும் பார்க்காமல் விடு விடுவென்று நடக்க, “மித்ரா…” அவன் என்ன அழைத்தும் நில்லாமல் செல்லும் அவளைப் பார்த்த பாலாஜி செயலற்று நிற்க, அதே நேரம் சந்தோஷ் வரவும், பாலாஜி மேலும் அவளை நெருங்க, தயங்கி நின்றான்.

“போகலாம் சந்தோஷ்… சீக்கிரம் போ…” என்றவள், அவசரமாக பைக்கில் ஏறி அமர, அங்கிருந்த வசந்தைப் பார்த்த சந்தோஷ், முறைத்து விட்டு பைக்கை கிளப்ப, மித்ரா வசந்த்தை விட்டு தொலை தூரம் சென்றாள்.

போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த வசந்தின் விரல்கள், தனது கன்னத்தையும், நெற்றியையும் மென்மையாகத் தொட்டுத்தடவிப் பார்க்க,

“சந்தோஷமாடா… போயிட்டா வசந்த்… மித்ரா போயாச்சு… இனி நீ நிம்மதியா இரு… சந்தோஷமா? இனிமே உனக்கிருந்த ஒரு நண்பனும் கிடையாது..” பாலாஜி கோபமாக பேச,

“பாலாஜி…” வசந்த் அதிர,

“பேசாதேடா…” என்று அங்கிருந்து நகர்ந்தவன், வசந்த் அவனை சோகமாக பார்த்திருக்கும் போதே, “எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு… உன்னோட வருங்கால மாமனாரை ரொம்ப அர்ஜென்ட்டா எனக்கு மீட் பண்ணனும். ஒரு ஹெல்த் ப்ராப்ளம் பத்தி தெளிவா கேட்கணும்… நேரம் கடத்தாம இப்போவே பேசி அப்பாயின்மென்ட் கேளு… அத்தோட நான் உனக்கு குட்பை சொல்லிட்டு போயிடறேன்… இத்தனை நாள் பழகினதுக்காக, இதை மட்டுமாவது செய்” பாலாஜி படபடவென்று கேட்கவும்,

“யாருக்கு என்ன உடம்புடா? ஏன் இவ்வளவு பதட்டப்படற…” பதில் கேள்வி கேட்டாலும், அவன் மனதில் அவனறியாமலே, மித்ராவின் முகம் வந்து போனது.

“என்னோட ஒரு பிரெண்ட்டுக்கு… டைம் ரொம்ப கம்மியா இருக்கு… அதுக்குப் பிறகு நான் உன்னை தொல்லை செய்யவே மாட்டேன்… கேள்வி கேட்காம, வரலாமான்னு கேட்டுச் சொல்லு” மீண்டும் பாலாஜி சொல்லவும், அவன் சொல்வது எதுவுமே வசந்தின் மனதில் பதியவே இல்லாமல், மித்ராவிடமே நிற்க,

“யாருக்கு பாலாஜி..?.” அதை அறிந்து கொள்ளவே அவன் குறியாக நிற்க,

“இப்போ அப்பாயின்மென்ட் கேட்க முடியுமா? முடியாதா? அர்ஜென்ட்… எனக்கு இப்போவே அவரைப் பார்க்கணும்…” பாலாஜி உறுதியாக சொல்லவும், அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் கிடைக்காது என்று புரிந்த வசந்த், ஸ்வப்னாவின் தந்தைக்கு அழைத்தான்.

“அவர் போனை எடுக்கல… நர்ஸ் யாரோ எடுக்கறாங்க… நேராவே போயிடலாம்டா… டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம்….. அங்க போய்ட்டு விஷயத்தை  சொன்னா நாம உடனே அவரைப்  பார்த்துடலாம்… வா என் பைக்லையே போகலாம்… ஆனா நீ ஓட்டு…” சாவியை அவன் கையில் திணித்து, வசந்த் வண்டியில் ஏறி அமர்ந்துக்கொள்ள, வேறு வழியின்றி பாலாஜி, வண்டியை எடுத்தான்.

“எந்த பிரெண்ட்டுடா எனக்குத் தெரியாம? யாருடா? சொல்லேண்டா…” மித்ராவின் பெயரை சொல்லாமல், வசந்த் அதே கேள்வியை பலவாறாக கேட்க,

“அவங்களை உனக்குத் தெரியாதுடா… என்னோட வேலை செய்யறவ…” பாலாஜியின் பதிலில் திருப்தியில்லாமல், வசந்த் அவனுடன் சென்றான்.

ஏதோ ஒரு அவசர அறுவை சிகிச்சையில் இருந்த ரத்னவேலு வருவதற்குள், பாலாஜி தவித்த தவிப்பை பார்த்த வசந்த், மீண்டும் யாரென்ற கேள்வியை கேட்க, அவனுக்கு பதில் சொல்லாமல், பாலாஜி மித்ராவிற்கு அழைத்தான்.

அழைப்பு எடுக்கப்படாமல் போய் கொண்டே இருக்க, “ச்சே… இவ ஒரு முடிவோட தான் போயிருக்கா… இந்த டாக்டர் எப்போ வருவார்ன்னு தெரிஞ்சா, அவர்க்கிட்ட சீக்கிரமா  பேசிட்டு, உடனே அவளைப் போய் பிடிக்கலாம்…” என்று மனதில் நினைத்தவாறே போனை அணைத்தவன், “எப்போ வருவாருன்னு கேட்டுச் சொல்லுடா…” வசந்தை அவசரப்படுத்த,

“இருடா கேட்கறேன்…” வசந்த் கேட்டு வந்து, “இதோ இன்னும் அஞ்சு நிமிஷம்டா… ஆபரேஷன் முடிஞ்சிருச்சாம்…” என்று வசந்த் கூறிய சிறிது நேர காத்திருப்பிற்குக் பிறகு, ரத்னவேலு அறைக்குள் அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

“சொல்லுங்க மாப்பிள்ளை சார்… அப்படி யாரோட ரிப்போர்ட் பத்தி அவ்வளவு அவசரமா கேட்கணும்…?” ரத்னவேலு அவனை வரவேற்க,

“இவன் என்னோட பெஸ்ட் பிரெண்ட், பாலாஜி… இவனுக்குத் தான், அவன் கூட வேலை செய்யறவங்களோட ரிப்போர்ட் பத்தி ரொம்ப அவசரமா கேட்கணுமாம்…” பாலாஜி கூறியதையே வசந்தும் திருப்பிப் படிக்க,

“என் பொண்ணு முன்னால, வேற யாரையும் ‘பெஸ்ட்’ பிரெண்ட்ன்னு அறிமுகப்படுத்திறாதே… அவ்வளவு தான்…  அவ தான் பெஸ்ட்ன்னு நீ சொல்ற வரை, உன்னை விட மாட்டா… நானே பல தடவ வாயை விட்டுட்டு, அவகிட்ட மாட்டி இருக்கேன்..” பாலாஜி பக்கத்திலேயே இருக்கிறானே என்று கூட சிறிதும் யோசியாமல், அவர் சொல்லிவிட்டு,

“சாரி… நான் உங்களை மீன் பண்ணலை.. என் பொண்ணோட குணம் அப்படி…” என்று அவனிடம் மன்னிப்பும் வேண்டியவர், “சொல்லுங்க யாரோட ரிப்போர்ட்… ரிப்போர்ட்டைக் கொடுங்க பார்ப்போம்…” என்று கை நீட்ட, பாலாஜி, அந்தக் காகிதத்தை, ‘மித்ராவின் ரிப்போர்ட்டை’ நீட்டினான்.

அந்த ரிப்போர்ட்டில் இருந்த மருத்துவமனையின் பெயரைப் பார்த்த வசந்த் அதிர்ந்து பாலாஜியைப் பார்க்க, அவனோ எந்த சலனமும் இல்லாமல் ரத்னவேலுவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நொடியில் அவனது மனம் எங்கெங்கோ சுற்றி வர, மித்ராவின், “நான் என்ன நிலைமையில…” என்று தொடங்கி பாதியில் முழுங்கிய வாக்கியம், அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

“ஹ்ம்ம்… பாவம் சின்ன பொண்ணு தான்… கூட வேலை செய்யற பொண்ணுன்னு சொன்னீங்க? அமெரிக்காவில படிச்சப் பொண்ணா?” ரத்னவேலு கேட்டதற்கு, பாலாஜி மெதுவாக தலையசைக்கவும்,

“கொஞ்சம் பெரிய பிரச்சனையா தான் வந்திருக்கு பாலாஜி…” அவர் சொல்லவும், “சார்…” பாலாஜி அதிர, வசந்த்தின் மனது இப்பொழுது வந்தனாவிற்கு தாவி இருந்தது.

“ஒருவேளை வந்தனாவுக்கா இருக்குமோ?” ஆசை கொண்ட மனது அவ்வாறு மித்ராவை இதிலிருந்து விலக்க நினைக்க,

“தடுக்கி விழுந்து ஏதோ கூரான பொருள் மேல விழுந்திருக்காங்க… விழுந்த வேகத்துல, அவங்க வயித்துல டீப்பா குத்தி, அதுவும் அடிவயித்துல குத்தி, ரத்தம் நிறைய லாஸ் ஆகி இருக்கு… அந்த நேரம் அவங்க கன்சீவ்ட்டா இருந்து, அதுவும் அபார்ட் ஆகிருக்கு…. அதனாலயும் ரொம்ப ப்ளட் லாஸ் ஆகி இருக்கு… இந்த ரெண்டும் சேர்ந்து அவங்க ரொம்ப கிரிடிக்கல் பொசிஷனுக்கு போய், ஒரு நாள் முழுதும் நினைவில்லாம இருந்து, கொஞ்சமா ரெக்கவர் ஆகி இருக்காங்க…

அவங்க வயித்துல குத்தினது ஒரு இரும்பு பொருள்… துரு பிடிச்சு, மண்ணோட இருந்திருக்கு. அதனால, செப்டிக் ஆகி, வேற எந்த பின் விளைவும் ஏற்படுத்தாம இருக்கறதுக்காகத்தான் ட்ரீட்மெண்ட் கொடுத்து, தொடர்ந்து மாத்திரை சாப்பிடச் சொல்லி இருக்காங்க அந்த ஹாஸ்பிடல்ல…. அந்த டோசை ஒழுங்கா சாப்பிட்டாங்க தானே” அவர் கேட்கவும்,

பாலாஜி, வசந்தைப் பார்த்து முறைத்து, “தெரியல சார்… ஆனா, கண்டிப்பா சாப்பிட்டு இருப்பா தான்…” மெல்லிய குரலில் பாலாஜி சொல்லவும், “ஹும்…” என்ற பெருமூச்சுடன் அவர் மேலும் தொடர்ந்தார்.

“குத்துப்பட்டதுலயும், அவங்க விழுந்த வேகத்துலையும் யூடரஸ் ரொம்ப வீக்கா போயிடுச்சு…. அபார்ஷன் ஆனதோட இல்லாம, அடிக்கடி ப்ளீடிங் வேற இருக்கறதுனால, அதுக்கு டேபிலட் கொடுத்து இருக்காங்க… எப்படியும் இன்னும் கொஞ்ச காலம் அதைச்சாப்பிடற மாதிரி தான் இருக்கும்…. நேரம் தவறாம சாப்பிடணும்.. அப்பறம் தான்… அவங்க ஒரு வருஷம் கழிச்சு தான் அடுத்த பிள்ளை உண்டாகறதைப் பத்தி யோசிக்க முடியும். ரொம்ப அனிமிக்கா இருக்காங்க… அதனால அடிக்கடி தலை சுத்தல், மயக்கம் வர வாய்ப்புகள் இருக்கு.. கொஞ்சம் நல்லா சாப்பிட்டு ஜாக்கிரதையா இருக்கணும்… உடம்பை நல்லா தேத்தணும்.”

பாலாஜி அதிர்ச்சியில் பேச்சு மறந்து போய் அமர்ந்திருக்க, “நல்ல மாத்திரை தானே அங்கிள்…” வசந்த், தானும் ஏதோ கேட்க வேண்டுமே என்று கேட்டு வைக்க,

“ஹ்ம்ம்… ஆமா… அவளுக்கு குணமாகிடும் தானே சார்..” பாலாஜி இப்பொழுது கேட்க,             

“நல்ல மாத்திரை தான்… கண்டிப்பா எந்த பின் விளைவும் ஏற்படுத்தாது… நேரம் தவறாம தொடர்ந்து தினமும் சாப்பிட சொல்லுங்க… கண்டிப்பா குணமாகிடும்.. எதுக்கும், இன்னொரு தரவ ஸ்கேன் செய்து…. புண் நல்லா குணமாகி, வேறெந்த இன்பெக்ஷனும் இல்லாம இருக்கான்னு பார்த்துடச் சொல்லுங்க…” அவர் சொல்லி முடித்து இழுக்கவும், வசந்த் குழப்பத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

“பாலாஜி… யாருன்னு சொல்லு பாலாஜி…” வசந்த் பதட்டத்துடன் இடையிட, அதைக் கண்டு கொள்ளாமல்,  

“அவ நேரம் தவறாம மாத்திரையைச் சாப்பிடறா சார்… அப்போ நிச்சயமா சரியா போயிடும் இல்ல… எனக்கு இந்த ரிப்போர்ட்டைப் பார்த்த உடனே பயமா போச்சு…” படித்து புரிந்துக் கொண்டதை விட, அவர் விளக்கியதைக் கேட்ட பாலாஜி, பயத்துடன் அவரைக் கேட்க,

“டேய் யாருன்னு சொல்லுடா…” வசந்த், அவனது சட்டையைப் பிடித்து இழுக்க, ரத்னவேலு அவனை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே,

“ஹோப் பார் தி பெஸ்ட்… பாவம்… சின்ன பொண்ணு… இந்த வயசுல இதெல்லாம் தாங்கிக்க, உடம்புலயும் மனசுலயும் தெம்பு வேணுமே… அவங்களுக்கு ஆதரவா, அவங்க மனதையும் உடல் நிலையையும் கவனிச்சிக்கணும்… உடம்பை நல்லா கவனிச்சிக்கச் சொல்லுங்க… இவங்க உங்களுக்கு என்ன வேணும்?”  அந்த மருத்துவமனையின் பெயரையும், வசந்தின் பதட்டத்தையும் பார்த்து, அவர் சந்தேகமாக இழுக்கவும்,

“அவ என்னோட பெஸ்ட் பிரெண்ட் சார்…” பாலாஜியின் பதிலில்

“சமி…” வசந்த் அதிர, பாலாஜியோ அதைக் கண்டு கொள்ளாமல், “இன்னொரு சம்பந்தமும் இருக்கு… அவ என்னோட பெஸ்ட் பிரெண்ட்டோட மனைவி…” என்று அவரிடம் கூறியவன், அவர் ‘ஓ’ என்று கேட்டுக்கொள்ளவும்,

‘சாரி மித்ரா… உனக்கு செய்த சத்தியத்தை இதுக்கும் மேல என்னால காப்பாத்த முடியாது… அது உனக்கு நல்லதும் இல்ல…’ மனதினில் மன்னிப்பு வேண்டியவன்,

ரத்னவேலு அவளது பெயரைப் பார்த்திருப்பார் என்று தெரிந்தும், “அவங்க முழுப்பெயர், Mrs. சங்கமித்ரா வசந்த்…” வசந்தை வெறித்துக் கொண்டே சொல்ல, அதைக் கேட்ட வசந்த்தின் உலகமே சுழற்சியை நிறுத்தியது.

 

விலக்கி வைத்த தருணம்
உணரவில்லை
இப்போது
காயமில்லாத இரணங்களாய்
உள்ளுக்குள் குடைந்து எடுக்கும்
உன் பிரிவு !!!

 

மௌனங்கள் தொடரும்………..

6 COMMENTS

  1. hello ramya ippothu than muluvathum patithu mutithen,ippadithan irukum endru yugikika
    mutiyathapadi kadhai migamiga suvarasiyamaga sendrathu ithan mutivu enna pa next
    podalaiya pls episodes link kodunga pa.

LEAVE A REPLY