ஒரு சொல்! சில மௌனங்கள்!! – 16

ஒரு சொல்! சில மௌனங்கள்!! – 16

1042
0
SHARE
மௌனம் – 16

கொதிக்க தெரிந்த நிலவே
உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே
உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா
உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா
உனக்கு என்னை புரியாதா…


“உன்னை அப்படியே கடிக்கணும் போல இருக்கு குட்டி… நீயும் நானும் மட்டும் தனியா… எங்கயாவது, யாருமே நம்மளை நெருங்க முடியாத இடத்துக்கு உன்னை கடத்திட்டு போயிடவா?” காலையில் வசந்த் கூறிய வார்த்தைகள், அவள் மனதை விட்டு நீங்க மாட்டேன் என்று வட்டமடித்துக் கொண்டிருந்தது.

“ஹையோ…” தலையில் கை வைத்துக் கொண்டவள், ‘அவன் சொல்ல வருவது தான் என்ன? என்னை கடத்திட்டு போய்…??? ஸ்வப்னா கூட கல்யாணத்தை வச்சிட்டு இது என்ன பேச்சு? யாருக்குமே உண்மையா இருக்க மாட்டாங்களா?’ அவளது பயம், நெஞ்சை வலிக்கச் செய்தது.

தலையைக் குலுக்கிக்கொண்டு “ச்சே… இப்போ எதுக்கு பயப்படற? அவங்க என்ன தான் செய்திடுவாங்க? அதையும் தான் பார்ப்போமே…” மித்ராவின் உள்ளே இருந்து, ஏதோ ஒரு குரல் தைரியத்தைக் கொடுக்க,

“அவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாதா? யூ.எஸ்.ல இருக்கும்போது எந்தளவு என்னை நம்ப வச்சு, என்னவெல்லாம் செய்தாங்க?” அவளது பயம் அவளை வந்து ஒட்டிக்கொள்ள, அந்த நேரம் பார்த்து வந்தனா அழைத்தாள்.

“வந்தனா… வந்தனா…” எடுத்த எடுப்பில் அவள் பதட்டமாக அழைக்கவும், வந்தனாவும் பயந்துப்போய் பேசத் தொடங்க,

“எனக்கு பயமா இருக்கு வந்தனா… நான் நாளைக்கே கிளம்பி அங்க வந்திறவா?” மித்ராவின் கேள்விக்கு, வந்தனா என்ன கூறினாளோ?,

“அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? எனக்கு பயமா இருக்கு…” என்ற மித்ரா, வசந்த் சொன்னதைச் சொல்லவும், சிறிது நேரம் யோசித்தபடி, வந்தனா அமைதியாக இருக்க, “வந்தனா… வந்தனா…” மித்ரா பலமுறை அழைக்க,

—–

“அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சிட்டு இப்போ வந்து இப்படி பேசிட்டு இருக்காங்க… அன்னைக்கு வந்து கட்டிப் பிடிக்கிறாங்க… இவங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்காங்க.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” நடுக்கத்துடன் கேட்கவும்,

—-

“சரி… நீ சொல்ற மாதிரியே செய்துடறேன்… இனிமே ஏதாவது பேசினா சப்புன்னு அறைஞ்சிடறேன் ஓகேவா..” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டவள், “இனிமே தான் பேக் பண்ணனும்… சரி… கண்டிப்பா உன்னோட பப்ளியா அங்க வரேன்… சரியா?” என்று புன்னகையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவள், மனதில் ஒரு தெளிவுடன், தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.

அப்பொழுது உள்ளே வந்த ரோஹிணி, “மித்ரா… கண்டிப்பா ஊருக்குப் போய் தான் ஆகணுமா? நம்ம வீட்டு குட்டிப் பாப்பாவை உனக்குப் பார்க்க வேண்டாமா?” கேட்டுக்கொண்டே, மித்ராவின் அருகில் வந்து அமர, மித்ரா புன்னகையுடன் அவளை ஏறிட்டாள்.

“இப்படி சிரிச்சே சமாளிக்காதே மித்ரா…” ரோஹிணி சலித்துக் கொள்ள, அவளின் கையை எடுத்து தன் கையில் வைத்து, அவளின் கையில் இருந்த கண்ணாடி வலையல்களைத் வருடிக் கொண்டே,

“அண்ணி… ஒரு ரெண்டு வருஷம் தானே அண்ணி… திரும்ப இங்கயே வந்திடறேன்… எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…” சம்பந்தமில்லாமல் அவள் சொல்லவும், அதை அவள் திருமணத்திற்காக சொல்கிறாள் என்று தவறாக புரிந்துக்கொண்டு,

“உன்னை இப்போ யாரும் கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தல… உனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லு… வரன் பார்க்கலாம்.. அதுக்காக அங்க போகணுமா?” அவளது கையைப் பற்றிக் கொண்டே ரோஹிணி கேட்கவும்,

“ஹஹாஹா… ரொம்ப தான் ஆசை அண்ணி உங்களுக்கு… நானே வந்து உங்ககிட்ட, ‘எனக்கு கல்யாணம் செய்து வைங்க’ன்னு சொல்வேனா… நல்ல நினைப்புத் தான் போங்க உங்களுக்கு…” சிரித்துக் கொண்டே, ரோஹிணியின் கெஞ்சல்களை சமாளித்தவள்,

“எனக்கும் ஆசையா தான் இருக்கு அண்ணி… உங்களை எல்லாம் விட்டு தனியா போய் இருக்க எனக்கும் கஷ்டமா தான் இருக்கு… ஆனா… எனக்கும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்… நான் இன்னும் கொஞ்சம் மாறணும் அண்ணி… இப்போவும் நான் எமோஷனல் இடியட்டா தான் இருக்கேன்… அது, மத்தவங்களுக்கு என்னை ஏமாத்த ஒரு வாய்ப்பா அமையுது…

பிஸ்னஸ்ல இறங்கும் பொழுது, நான் அப்படி இருந்தா சரிப்படாதே அண்ணி… நான் இன்னும் கொஞ்சம் தெளிவாகணும்… அதுக்கு தான் எனக்கு டைம் வேணும்ன்னு சொல்றேன்…” தன்னுடைய நிலையைப் பற்றி விளக்கி, ரோஹிணியின் முகத்தைப் பார்த்தாள்.

அவள் தன் முகத்தைப் பார்க்கவும், ஒரு பெருமூச்சுடன் “நான் கல்யாணம் ஆகி வரும்போது இருந்த மித்ராவா, இப்போ நீ இல்ல… அப்போ எல்லாம் நீ பேசவே ரொம்ப யோசிப்ப… யார் என்ன சொன்னாலும் தலையாட்டிட்டு இருப்ப… ஆனா, இப்போ நீ அப்படியா இருக்க?”

“வேற எப்படி இருக்கேன்….. அதே கண்ணு, மூக்கோட எந்த மாற்றமும் இல்லாத அதே மித்ராவா, இப்பவும் அப்படியே தானே இருக்கேன்…” கள்ளப் புன்னகையுடன் அவள் கேட்கவும்,

“அடிப்பாவி… ஆழம் பார்க்கறியா நீ? முன்ன எல்லாம் யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவ… இப்போ பார்த்தியா? என்னையே ஆழம் பார்க்கற… இதுக்கு மேல உனக்கு என்ன மாற்றம் வேணும்? இன்னமும் நீ மாறணும்னு சொல்ற… இப்படியே ரெண்டு டீலர்ஸ் கிட்ட பேசி ஆழம் பாரு… அதுலயே நீ பெரிய பிசினெஸ் மாக்னட் ஆகிடுவ…” அவளை புகழ்ந்து பேசவும், மித்ரா சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள்.

“சிரிக்கறதோட சேர்த்து ஒரு உண்மையையும் சொல்லேன்… உன் மனசுல யாராவது இருக்காங்களா? அவங்களையே கல்யாணம் செய்துக்கணும்ன்னு தான், நீ இந்த ரெண்டு வருஷம் எக்ஸ்ட்ரா டைம் கேட்கறியா? உன் கூட படிச்சப் பையனா?? அவன் செட்டில் ஆகற வரை வீட்ல சொல்ல வேண்டாம்ன்னு இருக்கியா? ஒரு பிரெண்டா என் கிட்ட சொல்லு மித்ரா… நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்…” ரோஹிணி கேள்விகளை அடுக்கவும், சிரிப்பதை நிறுத்திய மித்ரா,
அசந்து போய் அவளையே பார்க்க,

“நான் சொல்றது சரி தானே??” அவளது அமைதியில், ரோஹிணி உற்சாகமடைய,

“என்ன அண்ணி… நான் மாறினதைப் பத்தி புகழ்ந்து பேசிட்டே இருந்தீங்க… திடீர்ன்னு லவ் அது இதுன்னு பிளேட்ட மாத்தி போட்டு தோசை சுடறீங்க? சத்தமா சொல்லிடாதீங்க… எங்க சந்தோஷ் அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் காதுல விழுந்தது…. ஒரு மணி நேரம் லெக்சர் எடுப்பான்…” கண்ணை உருட்டி அவள் கிண்டலாக முடிக்கவும், ரோஹிணியின் முகம் வாடியது.

“ஹஹாஹா… அண்ணி… இப்போ எதுக்கு இந்த வாட்டம்… உங்க கற்பனைக்கு அளவே இல்ல போங்க… ஒரு பொண்ணு கல்யாணத்தை தள்ளிப் போட்டா, அதுக்கு இது ஒண்ணு தான் காரணமா இருக்க முடியுமா?” மித்ரா சிரித்துக் கொண்டே கேட்டாலும், அவள் கண்கள், அதோ இதோவென்று கண்ணீரைக் கொட்ட காத்திருந்தது.

அவளது சிரிப்பில் ரோஹிணி அவளையே வெறிக்க, அவளை மித்ராவிடம் பேச அனுப்பி வைத்த மித்ராவின் மூன்று சகோதரர்களும், ஏமாற்றத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நிஜமாவே ஒண்ணும் இல்ல போலருக்குடா… நாம தான் அவளோட மாற்றத்தை தப்பா புரிஞ்சிட்டு இருக்கோமோ?” மனோ கேட்க, அவனது கேள்வியில் திருப்தியுறாத சந்தோஷும் திவாகரும், உதட்டைப் பிதுக்கினர்.

“என்னடா, இன்னும் நீங்க நம்பலையா?” மனோ கேட்கவும்,

“இல்ல மனோ… அவ சிரிச்சு பேசறா தான்… ஆனா, அவ பேசறதுல என்னவோ மிஸ்ஸிங்… இதுக்கு முன்ன அவ இப்படி சிரிச்சு பேசினது இல்லையா? அவ சிரிப்பு, வெறும் உதட்டு அளவோட தான் இருக்கா மாதிரி நிச்சயமா தோணுது. அது கண்ணுக்கு எட்டலையோன்னு எனக்கு ஒரு ஃபீல் வருது மனோ…. நமக்காக நடிக்கிறான்னு தான் தோணுது? ஆனா, ஏன்னு தான் எனக்கு அது பிடிபட மாட்டேங்குது…” சந்தோஷ் இழுக்கவும்,

“ஒருவேளை, அங்கேயே யாராவது ஒரு வெள்ளைக்காரன லவ் பண்ணி இருப்பாளோ? அதை எப்படி சொல்றதுன்னு தயங்கிட்டு இருக்காளோ?” திவாகர் சந்தேகமாக இழுக்கவும்,

“ஏற்கனவே, இவ திரும்ப ஊருக்கு வரதுக்கு, அப்போ இப்போன்னு இழுத்துட்டு இருந்தா பாரு… உடனே, பாட்டி அவளுக்கே தெரியாம, அவ கூட போய் இருக்கணும்னு, எங்க ரெண்டு பேருக்கும் யூ.எஸ். விசாக்கு அப்பளை பண்ணிட்டாங்க…
இவகிட்ட பேசி ஒரு விஷயமும் நமக்கு தெரியப்போறது இல்ல…. இப்போ அந்த விசா தான் நமக்கு கடவுள்… இப்போ இவ போகட்டும்… பின்னாலேயே பிளைட் ஏறிப் போய் அவ வீட்லயே தங்கிட்டு, இவளை வழிக்கு கொண்டு வர வேண்டியது தான்… கடைசியா அது ஒண்ணுதான் வழி… இதை அவளுக்கு தெரியாம ரகசியமா வைக்கணும்..” சந்தோஷ் ஒரு பெருமூச்சுடன் சொல்ல, திவாகரும், மனோவும் ஒப்புதலாக தலையசைத்தனர்.

“இந்த அமுக்குணி எப்படி எல்லாம் நம்மளை யோசிக்க வைக்குது பாரு… ஆனா, காலேஜ்லையும் நான் ரொம்ப மிரட்டிட்டேன் போல… என்னைப் பத்தி எப்படி கிண்டலடிக்குது பாரு… சரி… நம்ம வேலையப் பார்ப்போம்…” சந்தோஷ் சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

மறுநாள் கல்லூரிக்கு செல்வதற்கு முன், வந்தனா கூறியவைகளை செய்து வைத்து விட்டே மித்ரா வீட்டை விட்டு கிளம்பினாள். அடுத்த இரண்டு நாள் கல்லூரி வாழ்க்கை, எந்த வேறுபாடும் இல்லாமல் செல்ல, வியாழனும் விடிந்தது.

காலை எழுந்ததில் இருந்தே, மித்ரா சமையல் அறையில் உருட்டிக் கொண்டிருக்க, “ஹே மித்ரா, எனக்கும் சேர்த்து செய்துடு…” அவள் பிரியாணி செய்யப் போகிறாள் என்று தெரிந்து, வீட்டில் உள்ள அனைவரும் தனித் தனியாக தங்கள் விருப்பத்தை சொல்ல, மித்ரா, அவர்களுக்கும் சேர்த்து செய்துக் கொண்டிருந்தாள்.

“மித்ரா குட்டி…” அவளது பெரியப்பாவின் அழைப்பில் டக்கென்று திரும்பியவள், அவரை அதிசயமாகப் பார்க்க,

“நீ இல்லாம எங்களுக்கு கஷ்டமா இருக்குடா… வீட்ல ஒரு பொண்ணு சுத்தி சுத்தி வந்தா எவ்வளவு அழகா இருக்குத் தெரியுமா? இங்கேயே இருந்துறேன்…” கெஞ்சல் குரலில் அவர் கேட்கவும், அவரது குரலில் மித்ரா நெகிழ்ந்து போய், அவரது கையைப் பற்றிக்கொள்ள, அவளது முகத்தைப் பார்த்தவர், அவள் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.

சிறிது நேரம் அங்கே ஒரு அமைதி நிலவ, இத்தனை நாள் பிரிவு உணர்த்திய அவளது முக்கியத்துவமும், இப்பொழுது அவள் ஓரிரு வினாடிகள் தன் கையை பிடிக்க தயங்கியதும், அவருக்கு வலியைக் கொடுத்தது. அவரது அன்பில் மித்ரா நெகிழ்ந்திருந்தாள்.

“சொல்லுடா குட்டிம்மா… நீ இங்கேயே இருந்துடற தானே?” மீண்டும் அவர் கேட்கவும்,

“இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு, இங்கேயே வந்து இருக்கேனே பெரியப்பா… இப்போ எனக்கு கண்டிப்பா போகணும்… ஆனா, நிச்சயமா திரும்ப வந்து, அப்பாவோட பேக்டரிய பார்த்துக்கறேன்… எனக்கு அது போதும்… அதுக்காக அப்பா எவ்வளவு உழைச்சிருப்பார்…” மனம் கனிந்து அவளது தந்தையின் நினைவில் சொல்ல, அவளது தலையைக் கோதிக் கொடுத்தவர்,

“ஹ்ம்ம்…” போவதில் உறுதியாக நிற்கும் மித்ராவை தடுக்க வழி இல்லாமல், அவரும் தனது முயற்சியில் தோல்வியைத் தழுவி, ஒரு பெருமூச்சுடன், “சரிடா… நீ வேலைய பாரு… நாளைக்குத் தானே நீ ஊருக்குப் போகணும்… இன்னைக்கே போகணும்ன்னு அடம் பிடிக்க மாட்டியே…” கிண்டலாக அவர் கேட்டு விட்டு,
அவள் ‘ஆம்’ என்று புன்னகையுடன் தலையசைக்கவும்,

“நான் கடைக்கு போயிட்டு வரேண்டா.. ஒரு ஆறு மாசத்துக்கு அப்பறம் நான் அங்க வரேன்… வந்து ரெண்டு மாசம் உன்கூட இருந்துட்டு தான் வருவேன்” என்றபடி, மீண்டும் அவளது தலையை தடவி விட்டு, அவர் நகர்ந்து செல்ல, போகும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில், “திருடி…” என்ற சொற்கள் எதிரொலிக்க, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

வீட்டில் தன் மேல் அனைவரும் வைத்திருந்த அன்பு, இப்பொழுது அவளுக்கு நன்றாக விளங்க, ஒரு பொய்யனை நம்பி ஏமாந்த தன்னை நொந்து கொண்டு, வேலைகளில் ஈடுபட்டாள்.

தயார் செய்த பிரியாணியை, ஒரு பெரிய ஹாட்பேக்கிலும், ஒரு சிறிய டிபன் பாக்சில் வசந்திற்கு தனியாகவும் எடுத்துக் கொண்டு, சந்தோஷத்துடன் கல்லூரிக்கு கிளம்பிச் செல்ல, வழக்கம் போல காரை நிறுத்தும் இடத்தில் வசந்த் அவளுக்காக காத்திருந்தான்.

“வாடா என் பொய் புழுகிப் புலவா… உன் நாக்கு எத்தனை பொய் சொல்லி இருக்கு… இன்னைக்கு உன் நாக்குக்கு இருக்குடா ஆஆஆ….ப்ப்ப்பப்ப்ப்…. புபுபு…” மனதினில் நினைத்துக் கொண்டே, புன்னகை முகத்துடன் காரில் இருந்து இறங்கினாள்.

“இவ என்ன சிரிச்சிட்டே வரா? நாளைக்கு ஊருக்குப் போறேன்னு சொன்னாளே… என்னை அவ மிஸ் பண்ணவே இல்லையே… அவ்வளவு தானா?” மனதில் எழுந்த ஏமாற்றத்தில்,

“மித்ரா…” வசந்த் கோபமாக அழைக்க,

“ஹாய் வசந்த்… என்ன இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க… வாங்களேன்.. சேர்ந்தே கிளாஸ்க்கு போகலாம்…” புன்னகை முகத்துடன் அவள் அழைக்க, வசந்த் புரியாமல் குழம்பி நின்றான்.


“என்னாச்சு… ஏன் நின்னுட்டீங்க… ஓ… இது தான் ஃப்ரீஸ் ஆகி நிக்கறதா?” புருவத்தை ஏற்றி இறக்கிக் கேட்டவள், “எனக்கு பைத்தியம் எல்லாம் பிடிக்கல… உங்ககூட தான் வசந்த், சிரிச்சு பேசிட்டு இருக்கேன்… சுயநினைவோட தான்…” கண்களை உருட்டி சிரித்துக் கொண்டே அவள் சொல்லவும், வசந்தின் நிதானம் பறந்தது.

“ஏய்.. உனக்கு கொஞ்சம் கூட வருத்தமாவே இல்லையா? அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்டி” அவளைப் பிடித்து உலுக்கவும்,

“ம்ப்ச்… ம்ப்ச்… கைய எடுங்க வசந்த்… எனக்கு வலிக்குது..” என்று சிணுங்கவும், அவனது கை தானாக விலக,

“இப்போ என்ன பேசிட்டு இருந்தோம்… எனக்கு கஷ்டமாவா? இல்லையே வசந்த்… உங்களை மாதிரியே, நானும் உங்களை பொய்யா தான் லவ் பண்ணி இருப்பேன் போல… நீங்க அப்போ பேசினது, நடந்துக்கிட்டது எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிட்டு ஃபீல் பண்ணி.. ஹையோ ஹையோ… செம காமெடி போங்க… இப்போ அதெல்லாம் நினைச்சா சிரிப்பா வருது… அதுவும் நான் உங்க பர்த்டேக்கு ஒரு கிரீடிங் வாங்கிக் கொடுக்க தேடினேன் பாருங்க… இப்போ நினைச்சா அது எவ்வளவு லூசுத்தனமா இருக்கு தெரியுமா?”

“பொய்யா….”

“ம்ம்… ஆமா… சரி விடுங்க, அப்பறம் உன் கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது…… டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா? கல்யாணம்னாளே ஜாலி இல்ல… புது டிரஸ்… தனி மரியாதை… அப்பறம், அவ பேர் என்ன?” மித்ரா யோசிப்பது போல நிறுத்தவும், வசந்த் பதில் சொல்லாமல் வெறிக்க,

“ஹான், ஸ்வப்னா…. அவ ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்ய கத்துக்கிட்டாளா? இல்லன்னா சொல்லுங்க… எப்படி செய்யறதுன்னு நான் அவளுக்கு மெயில் அனுப்பறேன்…” கேட்டுக்கொண்டே அவள் நடக்க, வசந்த் அவள் கையைப் பிடிக்க வர,

“கையைப் பிடிச்சு இழுக்காதீங்க வசந்த்… கையில பாத்திரம் இருக்கு இல்லையா… முடிஞ்சா, உங்க கையில இருக்கறதோட சேர்த்து இதையும் தூக்கிட்டு வாங்களேன்.. பாருங்க என் கை எப்படி சிவந்துபோச்சுன்னு” மித்ரா சொல்லவும், அவள் பேசிய விதத்தில் குழம்பி இருந்த வசந்த், அவளது கண்களில் தெரிந்த கோபத்தை கவனியாமல்,

“கொடு… அதை அப்போவே கொடுக்கறதுக்கு என்ன? சும்மா வளவளன்னு பேசிட்டு…” என்று கடுப்புடன் சொன்னாலும் ஆசையாக வாங்கியவன், நைசாக அவள் கொண்டு வந்த பையில் நோட்டம் விடத் துவங்க, அதில் இருந்த சிறிய டிபன் பாக்சை கண்டுக் கொண்டு, அதை அவளுக்குத் தெரியாமல், எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டான்.

அவன் எடுத்ததை ஓரக்கண்ணால் பார்த்தவள், மனதினில் சிரித்துக் கொண்டு…. “அப்பறம் வசந்த்…” என்று கேட்க, “ஒண்ணும் இல்லையே… இனிமே என்கிட்டே என் கல்யாணத்தை பத்தி பேசாதே… நான் கிளாஸ்க்கு போறேன்…” என்றபடி, அவன் வேகமாக முன்னே நடக்க, அவன் பின்னால் சிரித்துக்கொண்டே மெதுவாக வந்த மித்ராவோ, அவனுக்கான பிரியாணியை சாப்பிட்ட பிறகு, அவனது முகம் போகப் போகும் போக்கை நினைத்து, சந்தோஷத்தில் குதித்தாள்.

வகுப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுப் பாத்திரங்களைப் பார்த்த வேலும், கோகிலாவும், தங்கள் பாத்திரங்களையும் வைத்துவிட்டு,

“இன்னைக்கு ஒரு மினி முனியாண்டி விலாசே இங்க இருக்கும் போல இருக்கே… தூக்குற வாசனையில, நீங்க எல்லாம் இப்போவே சாப்பிடத் தொடங்காம இருந்தா சரி… அதுக்குள்ள நாள் போனதே தெரியல… சில மேனேஜ்மண்ட் காரணங்களால உங்களுக்கு அலாட் பண்ண நாட்கள் வேற குறைஞ்சு போச்சு… பரவால்ல… அடுத்த வருஷமும் நாம அலுமினில பார்க்கலாம்…” வேல் சோகமாக சொல்ல, வகுப்பு முழுவதும் அமைதியில் ஆழ்ந்தது.

“சியர் அப் கய்ஸ்… நாளைய தினத்தை நினைச்சு இன்னைக்கு ஃபீல் பண்ணாதீங்க… இப்போ, இந்த மொமென்ட்டை எஞ்சாய் பண்ணுங்க…” அவரது அறிவுரையைக் கேட்டு, அவர்களும் தங்களைத் தேற்றிக்கொண்டனர்..

சிறிது நேர அரட்டைக்குப் பிறகு, “சார்… இங்க இருக்கற சாப்பாடு எல்லாம் வாசனை தூக்குது சார்… ப்ளீஸ்… சாப்பிட போகலாம் சார்… உருண்டு பிரண்டு நாங்க சாப்பிட்டு முடிக்க சாயந்திரம் ஆகும்…” ரவி சொல்ல, வேல் பதில் சொல்வதற்குள் பாபுவும், ராஜேஷும் பாத்திரங்கள் வைத்திருந்த இடத்தில் இருந்தனர்.

“அடப்பாவிகளா… இருங்க, நான் போய் ஸ்டாஃப்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்.. அப்பறம் சாப்பிடத் தொடங்கலாம்…” வேல் சொல்லிவிட்டு, அவசரமாக ஸ்டாப் ரூம் நோக்கி விரைய, மித்ரா, பெஞ்சில் தன் கையை வைத்து, உள்ளங்கையில் சாய்ந்த படியே, வசந்த் இருந்த திசையை திரும்பிப் பார்த்தாள்.

வைத்த கண் வாங்காமல், அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த வசந்த், அவளைத் திரும்பிப் பார்க்க, அவன் பார்ப்பது தெரிந்தும், குறும்பு மின்ன, கண்களை விலக்காமல், அவனையே பார்வையால் தொடர்ந்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த பாலாஜி, கண்களால் மிரட்ட, “சும்மா… விளாட்டுக்கு” அவனிடம் வாயசைத்தவள், வசந்தை பார்க்கும் பணியைத் தொடர்ந்தாள்.

அவளைப் பார்த்த வசந்தோ, அவள் பையில் இருந்து தான் எடுத்துக்கொண்ட டிபன் பாக்சை எடுத்து டேபிளில் வைத்து, மித்ராவை குறும்புடன் பார்க்க, மித்ரா இளித்த இளிப்பில், பாலாஜி அவளைப் புரியாமல் பார்த்தான்.

“வசந்த் பையா… அவளோட சிரிப்பே சரியா இல்லையே… டிபன் பாக்சைப் பார்த்து அவ அதிர்ச்சியாவான்னு பார்த்தா… இப்படி சிரிக்கிறா? எலிக்கு ஆப்பு வைக்கிற வடை மாதிரி, எதுக்காவது வச்சிருக்காளோ?” வசந்த் தன் மனதில் அடித்த அபாய அலாரத்தை அணைத்துவிட்டு,

“மித்ரா எனக்காக ஸ்பெஷலா செய்தது…” வசந்த் பெருமையுடன் பாலாஜியிடம் சொல்ல, பாலாஜி மித்ராவை முறைக்க, வசந்த் என்ன சொல்லி இருப்பான் என்று யூகித்த மித்ரா, வசந்தைப் பார்த்துக் கொண்டே மொபைலில் பாலாஜிக்கு ஒரு மெசேஜைத் தட்டினாள். அதைப் படித்துப் பார்த்து சிரித்த பாலாஜி, ஒரு பாட்டிலில், தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து வசந்த்தின் அருகில் வைத்தான்.

“தேங்க்ஸ் குட்டி…” வாயசைத்த வசந்த், அவளையே பார்த்துக் கொண்டு, ஒரு வாய் வைக்க, அதில் இருந்த அளவுக்கதிகமான காரம், அவன் கண்களை விரியச் செய்து, அவளை பரிதாபமாக பார்க்கவும் வைத்தது.

இதழில் விரிந்த புன்னகையுடன், அவனை வெட்டும் பார்வை பார்த்தவள், “நித்தி… வா சாப்பிட போகலாம்…” என்று கூறிவிட்டு, எழுந்து செல்ல, பாலாஜி, வசந்தின் அருகில் தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுக்க,

“தேங்க்ஸ்… ஐ நீடட் திஸ்…” என்று வாங்கி வேகமாக பருகியவன், சிறிது காரம் மட்டுப்படவும்,

“நீயும் இதுல கூட்டா… எனக்கு இந்த டிஷ் ரொம்ப பிடிக்கும்… அதுவும் அவ செய்யறது எனக்கு ரொம்ப இஷ்டம்…” வருத்தமோ, ஏமாற்றமோ, எதுவோ ஒன்று, பாலாஜியிடம் உண்மையை உளற வைக்க, பாலாஜி அவனை கூர்ந்து பார்த்தான்.

“உங்களுக்கு எல்லாம் காரம் கம்மியா போட்டுதான் செய்திருப்பா… சாப்பிட்டு பாரு… சூப்பரா இருக்கும்” என்றபடியே, அவசரமாக தன்னுடையதையே சாப்பிடத் துவங்க…

“ரொம்ப கரமா இருக்கா?” பாலாஜி கேட்கவும்,

“எனக்கு காரம்னா ரொம்ப பிடிக்கும்ன்னு அவ ஆசையா செய்திருக்கா… அதனால நான் மிச்சம் வைக்காம சாப்பிடுவேன்…” தன்னை மறந்து, ஏதோ ஒரு நினைப்பில் உளறிக் கொட்டியவன், சாப்பிடத் துவங்க, மித்ரா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

“ஹையோ… இது என்ன இப்படி சாப்பிடறாங்க..” மித்ராவின் மனம் துணுக்குற, வசந்த் அவளைப் பார்த்துக் கொண்டே, அந்த டிபன் பாக்ஸ் மொத்தத்தையும் காலி செய்து, எவ்வளவு தண்ணீர் குடித்தும், காரம் அடங்காமல், அவசரமாக சர்க்கரை பொங்கலுக்கு அருகில் சென்றான்.

மித்ராவிற்கு மிகவும் பிடித்தமான, வசந்த்திற்கு பிடிக்கவே பிடிக்காத சர்க்கரைப் பொங்கல், மித்ரா செய்த வேலையினால் அவன் வாயில் அடைப்பட்டுக் கிடந்தது.

மித்ரா அவனை பரிதாபமாக பார்க்க, “பாலாஜி… நீ தான் சர்க்கரை பொங்கல் செய்துட்டு வந்தியா? அம்மா செய்தது நல்லா இருக்குமே…” ஆசையாக கேட்டபடி, மித்ரா அதை எடுக்க கை வைக்க, அந்த பாத்திரத்தின் மேல் இருந்த ‘கிருஷ்ணா’ என்ற பெயரைப் பார்த்த மித்ரா, பாலாஜியை யோசனையுடன் ஏறிட்டாள்.
அவளது பார்வையைத் தவிர்த்தவன், பின்பு, மித்ராவின் முறைப்பை உணர்ந்து, அவளை இயலாமையுடன் பார்க்க, தோளைக் குலுக்கிக்கொண்டவள், அதை அப்படியே வைத்து விட்டு, வேறு பதார்த்தங்களை நோட்டம் விட்டு எடுக்கத் துவங்க,

“டேய்… அவளை ஒழுங்கா சர்க்கரை பொங்கலைச் சாப்பிடச் சொல்லுடா… நான் பாத்திரம் மட்டும் தான் உனக்குக் கொடுத்தேன்னு சொல்லி சமாளிடா” வசந்த் பாலாஜியின் காதில் சொல்ல, பாலாஜியும் அவளிடம் சென்று நின்றான்.

“மித்ரா… உனக்கு சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும்னு எழுதி கொடுத்த தானே… அது தானே செய்துட்டு வந்து வச்சிருக்கு… சாப்பிடலாம் இல்ல…” பாலாஜி கேட்கவும்,

“எனக்கு சர்க்கரை பொங்கல் பிடிக்காது பாலாஜி… அதுவும் இப்போல்லாம், ஸ்வீட்டே சாப்பிடறது இல்லைன்னு முடிவு செய்துட்டேன்… ஈஈஈஈஈ சாக்லேட் தவிர…” அங்கிருந்த உருளை வறுவலை கடித்துக் கொண்டே அவள் சொல்ல,

“ரெண்டு நாள் முன்ன பிடிக்கும்ன்னு எழுதிக் கொடுத்தது, இப்போ பிடிக்கலையா?” அவன் சந்தேகமாக இழுக்கவும்,

“அது முந்தா நேத்து பாலாஜி… இது இன்னைக்கு… எனக்கு ஸ்வீட் சாப்பிடவே பிடிக்கலை… அதுவும் தவிர… எனக்கு இப்போ காரமா சாப்பிடணும் போல இருக்கு… என் மூட் மாறிப் போச்சு… உன் பிரெண்ட் கிட்ட சொல்லிரு… சர்க்கரை பொங்கலுக்கும், சாக்லேட்டுக்கும் மயங்கற மித்ரா காணாம போய் ரெண்டு மாசம் ஆகுதுன்னு…” ஒரு மாதிரிக் குரலில் கூறிவிட்டு, அவள் நகர, அனிதா அவளை பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எங்க வீட்ல,… சாக்லேட் சாப்பிட்டா உடனே டான்சில் இன்பெக்க்ஷன் ஆகும்.. ஐஸ்கிரீம் சாப்பிட்டா உடனே ஜுரம் வரும், எனக்கு உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சு தான் அதெல்லாம் கொடுக்காம இருந்திருக்காங்க. ஆனா நாந்தான், எது நல்லது எது கெட்டதுன்னு தெரிஞ்சிக்காம அசிங்கமா…” அந்த வார்த்தைக்கு அடுத்த வார்த்தை கூட சொல்ல முடியாமல், அவளது தொண்டையடைக்க,

“விடு மித்ரா… ஏதோ நீ இந்த வரை தப்பிச்சியே…. கொஞ்சம் டைம் எடுத்துக்கோ… இப்போதைக்கு எல்லாத்துலேர்ந்தும் விலகி இருந்து, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு, அப்பறம் மனசுக்குப் பிடிக்காத விஷயங்களை மறந்து, நல்லபடியா உன் வாழ்க்கையை அவன் முன்னால வாழ்ந்து காட்டணும்…” அனிதா சொல்லவும், திரும்பி வசந்தை பார்த்தவள், ஒரு விரக்திப் புன்னகையுடன்,

“அது ரொம்ப கஷ்டம் அனிதா… என்னால எதையுமே மறக்க முடியாது… நான் இனி இங்க திரும்ப வரவே மாட்டேன்… இவனால, ரெண்டு வருஷத்துல கண்டிப்பா திரும்ப வரேன்னு, வீட்ல வேற பொய் சொல்லி இருக்கேன்…

சரி விடு அனி… வளர்ந்திருக்கற டெக்னாலஜிய உபயோகப்படுத்தி, நாம கடைசி வரை தொடர்புல இருக்கலாமேன்னு தோணிச்சு… அதான் உனக்கும் போனை வாங்கிக் கொடுத்தேன்… இப்போதைக்கு வேற எதுவும் கேட்காதே அனிதா… போக போக பார்த்துப்போம்…” மித்ரா சொல்ல, அனிதா நித்யாவைப் பார்க்க, நித்யா “விடு… சரியாகும்…” என்பது போல அவளுக்கு ஜாடை காட்டினாள்.

தான் கொண்டு வந்த சர்க்கரை பொங்கலை, மித்ரா தொடாதது வருத்தமாக இருக்க, அங்கிருக்க பிடிக்காமல் வசந்த் கேன்டீனை நோக்கிச் சென்றான்.

காலையில் லதா கூறிய வார்த்தைகள் அவன் மனதில் வந்து போனது.

“நீ மனசுல யாரை வேணா விரும்பலாம் வசந்த்… ஆனா, கல்யாணம் அந்த ஸ்வப்னா கூடத் தான் நடக்கும்… உன் முகம் சரி இல்லாம போறதைப் பார்த்து, எனக்கு சந்தேகமா இருக்கு… ஆனா ஹாஸ்பிடலை பாகம் போடறதுல எனக்கு விருப்பம் இல்ல… அதோட வளர்ச்சியைப் பார்த்து பார்த்து ரசிச்சவ நான்… கல்யாணத்துக்கு தயாராகற வழியைப் பாரு… நாளையோட காலேஜ் முடியுது தானே… இந்தா உன் பிரெண்ட்ஸ்க்கான பத்திரிக்கை… கொடுத்துட்டு, நாளைக்கு அந்த பார்லர்ல அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருக்கேன்… போயிட்டு உன் தலை முடியை சரி செய்துட்டு வா… இந்த ஃபங்க் ஸ்டைல் எல்லாம் வேண்டாம்…” கண்டிப்பான அவர் குரலில், வசந்த் சிறிது ஆடியே போனான்.

“அம்மா…” திகைப்புடன் அவன் அழைக்க, “சொல்றதை செய்… இல்லைன்னா நான் என்ன செயவேன்னே தெரியாது” என்ற சொல்லோடு அவர் வெளியில் கிளம்பிவிட, அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தி, அவனது தோளைத் தட்டிவிட்டு, லதாவுடன் பத்திரிக்கை கொடுக்க வெளியில் கிளம்பினார்.

அவற்றை நினைத்தவன், தலையில் கை வைத்து அமர, மீண்டும் கல்லூரிக்கு வந்ததில் இருந்து வசந்தின் மேல் கோபமாக சுற்றிக் கொண்டிருந்த பாலாஜிக்கு, ஏனோ, இப்போது அவனிடம் பேசலாமா என்ற எண்ணம் எழுந்து, வசந்தை நோக்கி நகர, அப்பொழுது அங்கு வந்த மித்ரா… “பாலாஜி…” என்று அழைக்கவும், அவள் முகத்தைப் பார்த்தவனின் எண்ணம் உடனே மாறியது.

“இவளுக்கு போய் துரோகம் செய்தான் இல்ல…” பாலாஜி மனதினில் நினைக்க,

“எனக்கு செய்திருக்கிற ப்ராமிஸ் நியாபகம் இருக்கட்டும்… நீ யாருகிட்டயும் சொல்லக் கூடாது… நான் நாளைக்கு காலேஜ்ல இருந்து நேரா ஏர்போர்ட் போயிருவேன்னு நினைக்கிறேன்… சந்தோஷ் என்ன சொல்றான்னு தெரியல… ஏற்கனவே சீக்கிரமா போகலாம்னு புக் பண்ணினது தான். இப்போ எதேச்சையா, நாளையோட காலேஜ் முடியற மாதிரியும் ஆகிடுச்சு…” மித்ரா சிரித்துக் கொண்டே சொல்லவும்,

“ஒரே ஒரு தடவை அவன்கிட்ட பேசிப் பார்க்கலாமா?” நப்பாசையுடன் அவன் கேட்க,

“என்னன்னு… எனக்கு வாழ்க்கை பிச்சை போடுன்னா?” அவள் ஏளனமாக கேட்ட விதமே, அவளது மனதில் உள்ள காயங்களை சொல்ல, பாலாஜி வாயடைத்துப் போனான்.

“அவங்களுக்குன்னு இருக்கற… அவங்களோட நல்லதை மட்டுமே விரும்பற, ஒரே நல்ல பிரெண்ட் நீ தான் பாலாஜி… உனக்கு அவங்க மேல இப்போ கோபம் அதிகம்னாலும், உன்னால அவங்களை வெறுக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்… ப்ளீஸ்… அவங்க முகமே சரி இல்ல பாலாஜி… கொஞ்சம் அவங்க கூட பிரெண்ட்லியா இரு.. எனக்காக அவங்க கூட சண்டை போடாதே… நான் சொல்றதை செய்வியா?” கெஞ்சலுடன், கண்களில் ஜீவனைத் தேக்கி வைத்து அவள் கேட்கவும், பாலாஜி அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

“அந்த ஸ்வப்னா சரி இல்ல பாலாஜி… அதை நான் இப்போ சொல்லக் கூடாது தான்…. ஆனா, அவ யூ.எஸ்.க்கு வந்திருந்த போதே கவனிச்சேன்… அவங்க குணத்துக்கு, அவ கூட தொடர்ந்து வாழறது ரொம்ப கஷ்டம்… அவங்க வாழ்க்கையே வீணா போயிரும்… என்ன சொல்றதுன்னே புரியல…” தொண்டையடைக்க சொல்லிவிட்டு,

“அவங்களைப் பார்த்துக்கோ பாலாஜி… நான் கிளம்பறேன்… என்னைப் பத்தி அவங்ககிட்ட இனி எதுவுமே பேசாதே… அவங்க வாழ்க்கையில, நான் முடிஞ்சு போன அத்தியாயம்… இனி அதைப்பத்தி பேச வேண்டாம் ப்ளீஸ்…” என்றதுடன், அவள் காரைக் கிளப்ப, பாலாஜி, ‘இப்படியும் ஒரு பெண்ணா?’அவளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மௌனங்கள் தொடரும்….

LEAVE A REPLY