SHARE

ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வளி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா

 

ஸ்வப்னா பேசியதில் அவனுக்கு உண்டான அந்த வலி, ‘சமி…’ என்ற பெயரால் மறைவதைப் போல் உணர்ந்தான்…. மித்ராவின் நினைவுகள் அவனுள் வந்த நொடி, அவன் இதழினில் மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

 

“முன்னாடி, நான் எவ்வளவு கடுப்பா பேசினாலும், என்கிட்டே அந்த சிரிச்ச முகத்தைத் தவிர எதைக் காட்டி இருக்கா? யம்மாடி யம்மா… ஆனா இப்போல்லாம் என்ன கோபம் வருது… ராட்சசி மாதிரி கத்தறா…” அவளின் கோபத்தை அவன் இப்பொழுது ரசிக்கத் தொடங்க, அவனது இதழ்கள் மீண்டும் ‘சமி’ என்று ரகசியமாக சொல்லிப் பார்த்துக்கொண்டது.

 

சட்டென்று மனதில் மின்னல் வெட்ட, “சமி…” என்ற பெயர் தன் மனதில் பதிந்த காரணமும் நினைவுக்கு வந்தது. மித்ராவிடம், காதலைச் சொல்லி, அந்த காதலின் ஒரு பகுதியாக, தனித்துவமாக அழைப்பதற்காக ஒரு செல்லப் பெயரை யோசிக்க, அவன் மனதில் பலவாறான பெயர்கள் வந்து போனது.

 

‘சங்கி, மிது, SM, சரா…” போன்ற பல செல்லப் பெயர்கள் மனதில் தோன்றினாலும், அவையெல்லாம், அவன் தனக்குள்ளே அழைத்துப் பார்க்கும் பொழுது, சற்று நெருக்கம் குறைவது போல உணர, மீண்டும் பெயர் யோசிக்கும் படலத்தை தொடர்ந்தான். இறுதியில் சங்கமித்ரா, என்ற பெயரில் இருந்து ‘ச’வையும், ‘மி’யையும் அவன் சேர்த்துப் பார்க்க, ‘சமி’ என்ற பெயர் அவனுக்கு மிகவும் பிடித்தது.

 

பெயரை யோசித்து, அந்த பெயரைச் சொல்லி அவன் அவளை அழைக்கும் முன்பே, காலம் அவர்களை பிரித்தது தான் விதியின் சதியோ!! அந்தப் பெயரை அவன் அப்பொழுது மறந்திருந்தாலும், அவன் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும்….

நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த மித்ராவும், அவளது அலட்சியமும், அவள் பேச்சில் இருக்கும் நிமிர்வும், எல்லாம் சேர்ந்து, அவன் மறந்துப் போன அந்தப் பெயரை, தானாகவே வெளிக் கொண்டு வந்திருக்க வேண்டும்… ஏதேதோ நினைவுகள் அலைமோத, சோபாவில் சாய்ந்து கண் மூடியவனின் அருகில், தொப்பென்று வந்து அமர்ந்தாள் ஸ்வப்னா.

 

தன் அருகில் இடித்துக் கொண்டு அவள் அமரவும், “இப்போ என்ன வேணும் ஸ்வப்னா? தலை வலிக்குது… கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டியா?” வசந்த் எரிந்து விழ,

 

“ஆமா… இவரு அப்படியே பெரிய இவரு… இவர் கூட ஒட்டிட்டு உட்கார தான் நாங்க அலையறோம் பாரு… கால் தடுக்கி இப்படி உட்கார்ந்துட்டேன்…” உதட்டை சுளித்து அவள் சொல்லவும்,

 

“அது தான் அப்போவே கிளம்பிட்டியே… திரும்ப எதுக்கு வந்த?” எரிச்சல் மறையாமல் அவன் கேட்க,

 

“பத்திரிக்கை எடுத்துட்டு வந்தேன்… கொடுக்க மறந்துட்டேன்… இந்தா… உன் பிரெண்ட்ஸ்க்கு கொடுக்க எவ்வளவு வேணுமோ அதை எடுத்துட்டு, பாக்கியை எனக்குத் தா…” அவள் சொல்லவும், வசந்தின் கண்கள் அவள் கையில் இருந்த பத்திரிக்கையின் மீது படிய,

 

அதைப் பார்த்து மேலும் எரிச்சலுற்றவன், “இந்த ஜிகு ஜிகுன்னு இருக்கற பத்திரிக்கையை எல்லாம் கொண்டு போய் கொடுத்தா, என் கிளாஸ் பசங்க எல்லாம் உருண்டு பிரண்டு சிரிப்பாங்க…. எனக்கு இது வேண்டாம்… நான்… நான்.. அம்மா அடிச்சிருக்கற பத்திரிக்கையை கொடுத்துக்கறேன்…” மென்று முழுங்கி அவன் பதில் சொல்லவும், லதாவின் பார்வை வசந்தின் மீதே, ஆராய்ச்சியாக படிந்திருந்தது.

 

எப்பொழுதும் அவன் முகத்தில் இருக்கும் அந்த குறும்பும், சிரிப்பும், கண்களில் இருக்கும் அந்த கர்வமும், எல்லாம் தொலைந்து, ‘யாருக்கோ திருமணம்’ என்பது போல அவன் அமர்ந்திருக்க, லதாவின் மனது துணுக்குற்றது.

 

“வேண்டாம்னா போ…” என்று தோளைக் குலுக்கியவள், “உனக்குக் கொஞ்சம் கூட ரசனையே இல்ல… உன்னைக் கட்டிக்கிட்டு நான் தினமும் போராடணும் போல இருக்கே… எதுக்குத்தான் இந்த கல்யாணமோ?” என்று சலிப்புடன் கூறி, டொக் டொக் என்ற நடையுடன் வெளியில் செல்ல, அதே சலனமற்ற பார்வையுடன் வசந்த் பார்த்திருந்தான்.

 

“இவளால தானே மித்ராவை விட்டு வரும்படியா ஆச்சு…” அவன் மனம் கேள்வி கேட்க, ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டவன், கைகால்களை, சோபாவில் படர விட்டபடி, டிவியை வெறிக்க,

 

“வசந்த்…” என்ற அழைப்புடன், லதா அவன் அருகில் வந்தார்.

 

“என்னம்மா? இன்னைக்கு எங்கயாவது போகணுமா? இல்ல அவளை கூட்டிட்டு பீச்சுக்கு போகணுமா? என்னால எதுவும் முடியாது… உங்களுக்கு வேணும்னா, நீங்களே அவளை கூட்டிட்டு போங்க…” எரிந்து விழுந்த அவனைப் பார்த்தவர்,

 

“வசந்த்…. உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? உன் முகமே சரியா இல்லையே.. கல்யாண மாப்பிள்ளைக்கு உண்டான எந்த ஒரு மலர்ச்சியும் இல்லாம இருக்க… உன் முகம் நாளுக்கு நாள் வாட்டம் கண்டுக்கிட்டு இருக்கு… மனசுல என்னத்த போட்டு குழப்பிக்கிற…” ஒரு மாதிரி குரலில் கேட்கவும்,

 

“ஒண்ணும் இல்ல…” பதில் பேச விருப்பமின்றி அவன் வெட்டிப் பேச,

 

“இல்லடா… இந்தியா வர வரை நீ நல்லா தான் இருந்த மாதிரி இருந்தது… நிச்சயம் நடந்த அப்போ, உன்னை மோதிரம் போட சொன்னா… அதைக் கூட போட முடியாம திணறிட்டு இருந்த!! கல்யாண நாள் நெருங்க நெருங்க, நீ சரியாவே இல்ல வசந்த்… ஸ்வப்னாவும் இதை ஒரு கல்யாணமாவே பார்க்கல போல… ஏதோ, அமெரிக்கா போக ஒரு விசா கிடைச்சுட்ட மாதிரி மட்டுமே இந்தக் கல்யாணத்தைப்  பார்த்துட்டு இருக்கா… நீயோ… யாருக்கோ கல்யாணம் என்கிற மாதிரி சுத்திட்டு இருக்க.. என்னன்னு சொல்லு வசந்த்…” அவன் தலை முடியைக் கோதிக் கொண்டே அவர் கேட்கவும், தலையில் இருந்து அவரின் கையை விலக்கியவன், ஒரு வெற்றுப்பார்வையை அவர் மீது வீசிச் சென்றான்.

 

“நில்லு வசந்த்… அந்தப் பொண்ணை… அவ பேர் என்ன? மித்ராவா?” அவர் தொடங்கும்போதே,

 

“அம்மா ப்ளீஸ்… அவளைப் பத்தி நாம பேச வேண்டாம்… அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகப் போகுதுதாம்… (என்னவோ பொய் சொல்றா.. அவ எப்படி என்னை விட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செய்துக்க சம்மதிப்பா…) மே மூணாம் தேதி கல்யாணமாம்…. (என் பர்த்டே அன்னைக்கு…) அன்னைக்கும், நாம பார்த்த போது, அவ கல்யாணத்துக்கு நகை பார்க்கத் தான் வந்திருக்கா… சும்மா, உங்க மனசுல எந்த தப்பான எண்ணத்தையும் ஓட்டிப் பார்க்காதீங்க… (உண்மை தெரிஞ்சா அவளை நீங்க என்ன வேணா செய்வீங்க)” ஒரு ஒரு வரியையும் ஏதோ ஒரு தைரியத்தில் அவரிடம் சொல்லிவிட்டு, தனது மனதிற்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டு, அதற்கு மேல் லதா கேள்வி கேட்க இடம் இல்லாதபடி, அறைக்குள் புகுந்தவன், இரவு உணவிற்கு கூட, லதா பலமுறை அழைத்த பின் தான் வெளியில் வந்தான்.

 

அடுத்த நாளும் வழக்கம் போலவே செல்ல, மறுநாள் சனிக்கிழமை, கல்லுரிக்குள் வந்த வசந்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அன்று மித்ரா விடுமுறை எடுத்திருந்த காரணத்தை அறிய, வசந்த் பாலாஜியிடம் கேட்க,

 

“அவங்க வீட்ல நாளைக்கு விசேஷம்… அதனால அவ வரல… அவளோட நிச்சயதார்த்தமும், அவங்க அண்ணியோட வளைகாப்பும் நடக்கப் போகுது… அதுல மேடம் ரொம்ப பிஸி… நேத்து பேசும்போதே, பியூட்டி பார்லர் போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தா… ஏற்கனவே அவ நல்ல அழகு… இதுல அதெல்லாம் வேற செய்துக்கிட்டா… மாப்பிள்ளை நாளைக்கே கல்யாணத்தை வைன்னு ஒத்தைக் காலுல நிக்கப் போறார்…” பாலாஜி சிரித்துக் கொண்டே சொல்லவும்,

 

வசந்த் ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு, “போதும்டா…” என்று இடையிட,

 

“நாளைக்கு என்னையும் கூப்பிட்டு இருக்கா…. போகப் போறேன்…” சந்தோஷமாக அவன் சொல்லவும், வசந்த் தனது மனதில் உறுத்தியதைக் கேட்கத் தொடங்கினான்..

 

“சமி… அவ தான் மித்ரா….. உன்கிட்ட ஏதாவது இந்த கல்யாணத்தைப் பத்தி சொன்னாளா? நிஜமாவே அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமா பாலாஜி?” அவன் என்ன பதிலை சொல்லப் போகிறான் என்று தெரிந்தும், தனது மனம் என்ன தான் எதிர்ப்பார்க்கிறது, என்றும் புரியாமல், அவன் பாலாஜியைப் பார்க்க,

 

“ஓ… சொன்னாளே…” பாலாஜி இழுக்கவும்,

 

“என்ன சொன்னா? என்ன சொன்னா?” ஆவலே உருவாக வசந்த் கேட்க,

 

“அந்தப் பையன் ரொம்ப நல்ல பையனாம்… இப்போவே மித்ராவை ரொம்ப தாங்கு தாங்குன்னு தாங்கறானாம்…. நல்லவேளை… காதல் கண்றாவின்னு அவ எதுலையும் விழல… தப்பி பிழைச்சா… உனக்கு தாண்டா தேங்க்ஸ் சொல்லணும்” பாலாஜி சொல்லவும், அடிப்பட்ட பார்வையை அவன் பார்க்க, அதை கண்டுகொள்ளாமல், பாலாஜி, தன் தலையில் தட்டிக் கொண்டான்.

 

“உனக்கு தான் அவளைப் பத்தி பேசறதைக் கேட்கவே சகிக்காதே… உன் கூட ஒரே இடத்துல தான் படிக்கிறான்னு வெளில சொல்லிக்கறது கூட, உனக்கு அசிங்கமாச்சே… சே…. நான் அந்த விஷயத்தையெல்லாம் மறந்துட்டு, உன்கிட்டயே போய் அவளைப் பத்தி சொல்லிட்டு இருக்கேன் பாரு… தப்புடா… சாரி… தப்பா எடுத்துக்காதே” வாயில் விரல்களால் தட்டிக் கொண்டே, நக்கலாக அவன் சொல்லவும், “பாலாஜி…” வசந்த் கோபத்தில் கத்தினான்.

 

பாலாஜி, அதே நக்கலுடன் பார்க்க, “இனிமே நான் அவளைப் பத்தி உன்கிட்ட பேசினேன்னா என்னை என்னன்னு கேளு… ஏதோ சும்மா விட்டா, ஓவரா போற… ஆமா, நான் சொன்னேன் தான்… இப்பவும் சொல்றேன்… அந்தாளைப் பார்த்தா எனக்கு சரியா தெரியல… என்னை பழிவாங்கறேன்னு அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்தான்னா… அவளோட வாழ்க்கை வீணாக போகுமேன்னு தான் விவரம் கேட்டேன்… அவ்வளவு தான்… நீயா வேற எதையும் நினைச்சுக்காதே…” வசந்த் கடுப்புடன் கூற,

 

“அவ எதுக்கு உன்னை பழி வாங்கணும்…” பாலாஜியின் கேள்விக்கு கூட பதில் சொல்லாமல், நேராக வேலிடம் சென்று, விடுப்பை பெற்றுக் கொண்டு, கல்லூரியை விட்டு வெளியேறினான்.

 

“பாலாஜி… நானும் பார்த்துட்டு இருக்கேன்… திரும்ப நாம எல்லாம் காலேஜ்க்கு வந்ததுல இருந்தே, நீ அவன் கூட கோபமாவே பேசற… என்ன விஷயம் பாலாஜி… அவன் மித்ராவை லவ் பண்ணி, ஏதோ ரெண்டு பேருக்கும் ஒத்து வராம, பிரேக்அப் ஆகி, இப்போ அவன் வேற யாரையோ கல்யாணம் செய்துக்கப் போறான்னு உனக்கு கோபமா?” ராஜேஷும் பாபுவும் கேட்கவும்,

 

“என்னத்த சொல்லடா.. அவன் வெறும் SGயா நம்ம கிட்ட இருக்கற மாதிரியே இருந்திருந்தா கூட பரவாயில்ல… மித்ராவை லவ் பண்ணவே இல்லன்னு சொல்றான்… காலேஜ்ல எல்லார் மத்திலையும் சீன் போடத் தான் அவ கூட பழகினேன்னு, சொல்லாம சொல்லிட்டான்…” உண்மையை கூற முடியாமல், அவர்கள் கல்லூரி முடித்த காலத்தில் நடந்ததை பாலாஜி ஒரு வரியில் சொல்லவும், ராஜேஷும், பாபுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  

 

“ஃபேர்வெல் பார்ட்டி நடந்த ஹோட்டல்ல இருந்து மித்ரா கிளம்பினதும்… இவன் காரணமாத்தான் அவ வருத்தமா போறாளேன்னே கொஞ்சம் கூட கவலைப்படாம, அன்னிக்கு இவன் நம்ம கூட எப்படி கொண்டாடி கூத்தடிச்சான்… அதுவே சொல்லலையா அவனோட எண்ணத்தை?” அவர்கள் மெளனமாக இருக்கவும், பாலாஜி தொடர்ந்து பேச, ராஜேஷ் அவன் தோளைத் ஆதரவாகத் தட்டினான்.

 

“அவங்களுக்குள்ள இப்படின்னு காலேஜ்ல பரப்ப நாங்க தான் இருந்தோமே… தப்பு பண்ணிட்டோம்டா… வசந்த் எங்களை நல்லாவே உபயோகப் படுத்திக்கிட்டாண்டா…. சரி விடு… இப்போ அவளும், தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கப் போறா.. அதுவே ரொம்ப நல்லது தான்…” பாபு ஆறுதல் சொல்ல, வெளிநாட்டில் நடந்துவிட்ட உண்மைகளை வெளியில் சொல்ல முடியாமல், பாலாஜியும் கிளம்பிச் சென்றான்.

 

வளைக்காப்பு விழா, குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாக  இருந்தாலும், மிகவும் சிறப்பாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ருக்மணி…. ரோஹிணிக்கு நாத்தனார் முறையில் மித்ரா சீர் செய்ய, அனைவரும் மகிழ்ச்சியுடன் அந்த விழாவை கொண்டாடினர். மித்ராவிற்கு தான் மனதில் கொஞ்சம் வருத்தமாக இருந்தது….      

 

 

திங்களன்று காலை, தன்னுடைய பைக்கை கல்லூரியில் நிறுத்திய வசந்த், தலையை கோதிக்கொண்டே, சாவியை சுழற்ற, அப்பொழுது தான் காலேஜின் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த மித்ரா, காரை நிறுத்திவிட்டு இறங்க, அவளது கைகளில் இருந்த மெஹந்தியும், அவள் கட்டி இருந்த புடவையும், வசந்திற்கு கோபத்தைக் கொடுத்தாலும், அவளைப் பார்த்து சீட்டி அடித்து, “ஹே… நீ ரொம்ப அழகா இருக்க….” என்று ஸ்டைலாக வசனம் பேசிவிட்டு, அவள் அருகில் செல்ல, மித்ரா புரியாமல் விழித்தாள்.

 

“என்ன சமி… இப்படி முழிக்கிற… நான் இந்த மாதிரி சொல்றது புதுசா என்ன? உன் கைக்கு மருதாணி ரொம்ப அழகா இருக்கு… இந்த புடவைக்கு பதிலா… நான் வாங்கிக் கொடுத்த புடவை கட்டி இருந்த, இன்னும் அழகா இருக்கும்” அவன் இழுக்கவும், பதட்டத்துடன் அவள் உதட்டைக் கடிக்க, அவளை மேலும் நெருங்கியவன், அவள் காதில் ரகசியமாக எதையோ சொல்லிவிட்டு முன்னே நடக்கவும், மித்ராவின் உடல் நடுங்கத் தொடங்கியது.

 

தனது பையில் இருந்த ஒரு பாட்டில் நீரையும் ஒரே மடக்காக அவள் குடித்து முடிக்க, கொஞ்சம் பதட்டம் தணிவது போல் இருந்தாலும், இன்னமும் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில்தான் துடித்துக் கொண்டிருந்தது.

 

மேற்கொண்டு நடக்கவும் முடியாமல், நின்ற இடத்திலேயே அவள் வேரோடி நிற்க, அதிர்ச்சியுடன், பயமும், கலக்கமும் முகத்தினில் அப்பிக் கிடக்க, சிலை போல் நின்றிருந்த மித்ராவை பார்த்த நித்யா, அவள் அருகில் வேகமாக வந்து அவளை உலுக்கினாள்.

 

“மித்ரா… ஹே மித்ரா… என்ன ஆச்சு… வசந்த் என்ன சொல்லிட்டு போறான்?” அவள் கன்னத்தை தட்டிக் கேட்க,

 

அவள் கேளவிக்கு பதில் சொல்லாமல், “நான் வீட்டுக்குப் போறேன் நித்யா… என்னால கிளாஸ்க்கு எல்லாம் வர முடியாது…” அழும் குரலில் மித்ரா சொல்ல,

 

“என்ன மித்ரா? அவன் ஏதாவது சொல்லி மிரட்டினானா?” பதட்டமான அவளது கேள்விக்கு, “இல்ல…” மித்ரா தலையசைக்க,

 

“அப்பறம் எதுக்கு இப்படி பேய் அடிச்சா மாதிரி நிக்கற… நமக்கு கிடைச்சிருக்கறதே இன்னும் ஒரு வாரம் மட்டும் தான் மித்ரா… ஏற்கனவே, திடீர்ன்னு மேனேஜ்மண்ட் ரீசன்னு சொல்லி, ஒரு நாலு நாள் குறைஞ்சு போச்சு… இதுல நீயும் லீவ் போட்டேன்னா… ப்ளீஸ் மித்ரா… உன் கூட இருக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு… அனிதாவைப் பத்தி நினைச்சுப் பார்த்தியா? நானாவது, அவ இங்க வரும் போது பார்த்துப்பேன்… ஆனா, உன்னை அப்படி பார்க்க முடியாது இல்ல… வா மித்ரா கிளாஸ்க்கு போகலாம்…” நித்யா கெஞ்சிக் கேட்கவும்,

 

சிறிதளவு சுதாரித்து, தன் நிலைக்கு வந்தவள், “லவ் யூ நித்தி…” என்று கூற,

 

“ஹே… என் லவ் சக்செசஸ் ஆகிடுச்சா…” என்று கேட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டு நித்யா குதிக்கவும், முழுவதுமாக தனது அதிர்ந்த மனநிலை மாறி, மித்ரா சிரிக்கத் தொடங்க, அதே சிரிப்பினூடே அவளை இழுத்துக் கொண்டு, நித்யா வகுப்பிற்குள் நுழைந்தாள்.

 

சிரித்த முகத்துடன், நித்யாவுடன் விளையாடிக்கொண்டே வகுப்பினுள் நிழைந்த மித்ராவைப் பார்த்தவன், “நான் சொன்னது கொஞ்சம் கூட உன்னை பாதிக்கவே இல்லையா?” வசந்த் மனதினில் நினைக்க, அவனது எண்ணம் அவளை எட்டியதோ, என்னவோ? ஒரு அலட்சியப்பார்வையை அவன் மீது வீசிவிட்டு, மித்ரா, தன் இடத்தில் அமர்ந்தாள்.

 

சிறிது நேரத்தில், வேல் உள்ளே நுழையவும், “எக்ஸ்க்யூஸ் மீ சார்… நான் ஒரு சின்ன ஐடியா சொல்றேன்… எல்லாருக்கும் பிடிச்சா… நாம அதை செயல்படுத்தலாம்?” மித்ரா தொடங்க,

 

“நம்ம கிளாஸ் பூனை எல்லாம், என்ன போடு போடுது பாரு…” ரவி சொல்ல, வசந்த் அவனை முறைத்தான்.

 

“சொல்லும்மா… என்ன செய்யலாம்?” ஆவலுடன் வேல் கேட்கவும்,

 

“நாங்க பைனல் இயர் படிக்கும் போது கூட இந்த சான்ஸ் கிடைச்சது இல்ல சார்… இப்போ கிடைச்சிருக்கு… சோ… எல்லாருமே சேர்ந்து என்ஜாய் பண்ணத் தான் இப்போ சொல்றேன்… இஷ்டம் இல்லாதவங்க வாய் விட்டே சொல்லிடலாம்… நோ இஷ்யூஸ்…” புன்னகையுடன் மித்ரா சொல்லவும், அனைவரும் அவளை சுவாரஸ்யமாக பார்க்க,

 

“என்னவோ பெரிய ஐடியா தான் போல இருக்கே… நீ சொல்லும்மா…” வேல் ஊக்கவும், மித்ரா தனது திட்டத்தை சொல்லத் துவங்கினாள்.

 

“சார்… நாம ஒரு குறிப்பிட்ட நாள் அன்னிக்கு, ஒரு கெட்டுகெதர் மாதிரி வச்சிக்கலாம் சார்… அன்னைக்கு எல்லாருக்கும் பிடிச்ச டிஷ் செய்து எடுத்துட்டு வரலாம்…” அவள் சொல்லவும்,

 

“எத்தனைனும்மா செய்யறது?…” வேல் இடையிட,

 

“ஒருத்தரே எல்லாம் செய்துட்டு வர வேண்டாம்  சார்… இப்போ என்ன ஐடியான்னா…… அவங்கவங்களுக்கு பிடிச்ச டிஷ்ஷை, ஒண்ணே ஒண்ணு மட்டும் தான்… ஒரு பேப்பர்ல எழுதி அதை ஒரு பாக்ஸ் உள்ள போட்டுடலாம்… அந்த சீட்டை, நாம எல்லாரும், ஆளுக்கு ஒண்ணா எடுக்கணும். அந்த சீட்டுல வந்திருக்க டிஷ்ஷை அவங்க செய்துட்டு வரணும்…  இந்த ஐடியா உங்க எல்லாருக்கும் ஓகேன்னா… நாம, வியாழன் அன்னிக்கு இந்த கெட்டுகெதர் மாதிரி வச்சிக்கலாம்… வெள்ளிக்கிழமை நான் மறுபடியும் ஊருக்கு கிளம்பறேன்…” மித்ரா சொல்லவும்,

 

“ஹே சூப்பர்… ஆனா, ரொம்ப கஷ்டமான டிஷ் எல்லாம் சொல்லக் கூடாது…”

 

“எனக்கு சமைக்கவே தெரியாதே… என்ன செய்ய?”

 

“ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வரலாமா?”

 

இப்படி பலவாறான கேள்விகள் அவளிடம் கேட்கப்பட, மித்ரா அதே புன்னகையுடன், “அது உங்க இஷ்டம்… வீட்டுல செய்துட்டு வந்தா நல்லது… வீட்ல செய்யறது கஷ்டம்ன்னா… ஒண்ணும் பிரச்சனை இல்ல… ஹோட்டல்ல கூட ஆர்டர் செய்துக்கலாம்… உங்க எல்லாருக்கும் ஓகே வா?” அவள் கேட்கவும், அனைவரும் ஒரு மனதாக தலையசைக்க,

 

“எனக்கு இஷ்டம் இல்ல சார்… எங்க வீட்ல, இப்போ அதுக்கு எல்லாம் டைம் இல்ல…” ஒரு குரல் அவளது யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, மித்ரா தோளைக் குலுக்கி விட்டு அமர்ந்தாள்.

 

“என்ன வசந்த்… வீட்ல முடியலைன்னா வெளிலேர்ந்து வாங்கிட்டு வா… எல்லாரும் சந்தோஷமா பேசி சிரிச்சு… இதைவும் ஒரு ஃபேர்வெல் மாதிரி எடுத்துக்கோங்க… இனி, லீவ் கிடைச்சு, இது போல நீங்க எல்லாம் எப்போ வருவீங்கன்னு தெரியலையே…” வேல் அவனை வற்புறுத்த,

 

“ஏதோ நீங்க சொல்றீங்கன்னு நான் ஒத்துக்கறேன் சார்… சீட்டை போடச் சொல்லுங்க…” விட்டேற்றியாக அவன் சொல்லவும்,

 

“அவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு யாரும் எதுவும் செய்ய வேணாம் சார்… விருப்பம் இருக்கறவங்க மட்டும் இதுல கலந்துக்கிட்டா போதும்… அப்போ தான் சந்தோஷமா இருக்கும்… சும்மா பேருக்கு வந்துட்டு, மத்தவங்க சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டாம்” மித்ரா பதில் சொல்லவும்,

 

“ஹையோ… இப்போ நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க… இதுல, நாங்க ஸ்டாப்ஸ்சும்  கலந்துக்கப் போறோம்… அதிகமா எதுவும் செய்துட்டு வர வேண்டாம்… எல்லாரும், கொஞ்சமா செய்துட்டு வாங்க போதும்.. அப்போ தான் மிச்சம் ஆகாது…” வேல் வழிமுறை சொல்ல,

அனைவரும் ஒரு பேப்பரில், தங்களுக்கு பிடித்த உணவை எழுதி வைத்தனர்.

 

ஒரு சாக் பெட்டியில், அனைவரும் அந்த சீட்டை போட, வசந்த் மித்ராவைப் பார்த்துக் கொண்டே, சீட்டைப் போட்டு விட்டு சென்று அமர்ந்தான்.

 

ஆளுக்கு ஒரு சீட்டாக, ஒவ்வொருவராக வந்து எடுக்க, வசந்த் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது…. “ஏன் ராசாத்தி… நீ மொதல்ல வந்து  எடுக்கலாம் இல்ல… என்னை மண்டை காய விடறதே உனக்கு வேலையாப் போச்சு… இருக்குடி உனக்கு…. சேர்த்து வைக்கிறேன் கச்சேரிய…” வசந்த் மனதினில் புலம்பிக் கொண்டிருக்க, கடைசியாக வந்த மித்ரா, கையில் எடுத்த சீட்டைப் பார்த்ததும்,

 

“சப்பா… எனக்கு பிடிச்ச மட்டன் பிரியாணி…” வசந்த் நாக்கை சப்பு கொட்டிக்கொள்ள, அந்த சீட்டைப் பார்த்த மித்ராவோ, வசந்தை முறைத்துவிட்டு, தன்னுடைய இடத்தில் அமர்ந்தாள்.

 

“எதுக்கு இப்போ அவனை முறைக்கிற… அவனுக்கு, அந்த பேப்பர் உன் கிட்ட தான் வரும்ன்னு தோணிச்சு போல… அதனாலதான், ‘TO’ போட்டு உன் பேர் எழுதி வச்சிருக்கான்… அதனால அதை வேற யாருமே எடுக்கலை …. இதுல என்ன தப்பு?” அனிதா கேட்கவும்,

 

“தப்பொண்ணும் இல்ல… ஆனா, இப்படி எழுதினதே தப்புன்னு ஃபீல் பண்ண வச்சிட்டா?” குறும்புடன் மித்ரா கேட்கவும்,

 

“வச்சிடுவோம்….” நித்யா எசப் பாட்டுப் பாட, வசந்தின் கையில், வேறு யாருடைய சீட்டோ சிக்கிக் கொண்டது.

 

“இந்த சமி என்ன எழுதி வச்சிருக்கான்னு தெரியலையே… அது நம்மக்கிட்ட வராம போச்சே…” மனதினில் தவித்த வசந்த், மாணவர்களிடம், ஒவ்வொருவராக விசாரிப்பது போல விசாரித்து, மித்ராவின் சீட்டு கிடைத்த ரவியிடம் இருந்து அதை வாங்க முயற்சிக்க, அதைக் கண்டு கொண்ட மித்ரா,

 

“பாலாஜி.. உனக்கு கிடைச்ச சீட்டுல இருக்கறதைத்தான் நான் எழுதினேன்… அனிதா, நான், நித்யா, மூணு பேரும் சும்மா விளையாட்டுக்காக  மாத்தி மாத்தி எழுதிப் போட்டோம்…” என்று கண் சிமிட்டிக் கூற, வசந்த் அவளை முறைக்க, கள்ளப் புன்னகையுடன் மித்ரா வகுப்பை விட்டுச் சென்றாள்.

 

மாணவர்கள் அனைவரும் அந்த நாளை ஆவலாக எதிர்ப்பார்க்க, வசந்த் பாலாஜியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்….  

 

“ப்ளீஸ் பாலாஜி… எனக்கு சமியோட சீட்டைக் கொடேன்… அவளுக்கு பிடிச்ச சர்க்கரைப் பொங்கலை நான் செஞ்சு எடுத்துட்டு வரேன். அதே போல, அவளுக்கு ரொம்பப்  பிடிச்ச ஐஸ்க்ரீமை, நீ உங்க கடைலேர்ந்து எடுத்துட்டு வந்துடு. ப்ளீஸ்… நானே உங்க அப்பாக்கிட்ட பில் கட்டிடறேன்…”

 

“இது என்ன புதுசா இருக்கு?” பாலாஜி யோசனையாக கேட்க

 

“நான் அப்போ உன்கிட்ட பேசினது எல்லாம் தப்பு தான் பாலாஜி. ப்ளீஸ்… சமி என்னோட பெஸ்ட் பிரெண்ட் இல்லயா… என்னால அப்பறம் அவளை பார்க்கவே முடியாம போயிடுச்சுன்னா? ரொம்ப கஷ்டமா இருக்குடா…” வசந்த் கெஞ்சவும், இது நாள் வரை ‘ப்ளீஸ்’ என்ற வார்த்தையையே உபயோகிக்கத் தெரியாமல் இருந்த வசந்த், இன்று இப்படி கெஞ்சவும், பாலாஜியின் கை தானாக மித்ராவின் சீட்டை நீட்ட,

 

வசந்த் சந்தோஷத்துடன், “தேங்க்ஸ்டா…. தேங்க்ஸ்…. நண்பன்டா…” என்று அவனை கட்டித் தழுவ, பாலாஜி, அவன் முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்…. வசந்தின் இந்த சந்தோசம் உண்மையா? இது நிலைக்குமா?

 

மௌனங்கள் தொடரும்…..​

 

 

4 COMMENTS

  1. hi rams akka intha vasanthai entha list la serkarathunu onnum puriyallaiye

    paavam mithra seekiram ava pathiladi tharanum akka

    waiting for ur next ud

LEAVE A REPLY