SHARE

ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டாடடி
கண் சொல்வதை உன்வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி….

 

1913455_319216064951838_1467101738740654334_o

“என்ன வசந்த்… இங்கேயே நின்னுட்டு இருக்க?” வெளியில் நின்றுக்கொண்டு, தனது நினைவுகளை பின் நோக்கி அசை போட்டுக் கொண்டிருந்த வசந்த்தை, வேல் கலைக்க,

“சும்மா தான் சார்… பழைய நியாபகம்…” வசந்த் தன்னிலையில் இல்லாமல் உளறிக்கொட்ட,

“என்னடா… மித்ராவை பத்தி யோசிச்சிட்டு இருந்தியா? அவளுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுன்னு பாபு சொன்னான்…. உனக்கும் நிச்சயம் ஆகிடுச்சு… முன்ன, உனக்கும் அவளுக்கும் இடையில இருந்ததை எல்லாம் மறந்துட்டு, ரெண்டு பேருமே அவங்கவங்க வழியில போனது, ஒரு வகையில சந்தோஷமா இருந்தாலும்… கொஞ்சம் வருத்தமாவும் தான் இருக்கு. அவ உன் மேல கொஞ்சம் சின்சியரா தான் இருந்தான்னு எனக்குத் தோணுச்சு… நீ?” சந்தேகமாக அவர் இழுக்க, வசந்த் அதிர்ச்சியுடன் நின்றிருந்தான்.

“என்னடா… இதெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்ன்னு பார்க்கறியா? எனக்கு எல்லாமே தெரியும் வசந்த்… பாஸ்ட் இஸ் பாஸ்ட்… ஆனா மித்ராகிட்ட ஏன் இவ்வளவு மாற்றம்? உனக்கு ஏதாவது தெரியுமா? பூனை போல கிளாஸ்ல உட்கார்ந்து இருக்கற பெண்ணா இவன்னு இருக்கு..” வசந்தை மேலும் அவர் குடைய,

“எனக்கும் தெரியல சார்… திடீர்ன்னு தான் இப்படி இருக்காப் போல…” மெல்லிய குரலில் சொல்லிவிட்டு,

மனதினில், “நான் அவளை கடைசியா பார்க்கற வரைக்கும் என் மேல உயிரா தான் இருந்தா… திடீர்ன்னு ஏன் இப்படி ஆகிட்டா?” யோசனையுடன் அவன் நிற்க,

“என்னாச்சு வசந்த்… யூ.எஸ்.ல என்ன நடந்தது? உனக்குத் தெரியாம இருக்காது…. வசந்த்… அங்கயும் போய் அவளை சுத்திட்டு இருந்தியா?” வேல் அவனிடம் சந்தேகமாக விசாரணை நடத்த,

“இல்ல சார்… எனக்கு அவளைப் பத்தி எந்த விவரமும் தெரியல சார்… சாரி…” அதற்கு மேல் அவளைப் பற்றி பேச விரும்பாமல், அவன் சொல்லவும்,

“சரி விடு…” நாகரீகம் கருதி, அதற்கு மேல் அவனை வற்புறுத்தாமல், ஒரு பெருமூச்சுடன் வகுப்பிற்குள் சென்றார் வேல்.

அவரைப் பின்தொடர்ந்து வசந்தும் உள்ளே நுழைய, வேல் நேராக மித்ராவின் அருகே சென்று நின்றார். வசந்த் தன்னை வஞ்சம் வைத்து பழி வாங்குவது போலத் தோன்றவும், நெஞ்சம் வலிக்க, தான் பட்ட காயங்களை தானே கிளறிக் கொள்வது போல, பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த மித்ரா, வேல் வந்ததைக் கூட அறியாமல், எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

“மித்ரா… மித்ரா… சார்டி…” அனிதா அவசரமாக அவளை உலுக்கவும்,  கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள், அவர் பேசுவதற்கு முன், “சாரி சார்… ஜஸ்ட் ஃபார் ஃபன் செய்துட்டேன்… இனிமே இப்படி செய்ய மாட்டேன்…” என்று வருந்திக் கூறியவள், தலை குனிந்து நிற்க,

“மித்ரா… நானும் உன்னை ரொம்ப திட்டிட்டேன்… சாரி மித்ரா…” வேலும் மன்னிப்பு வேண்ட,

“பரவால்ல சார்… விடுங்க… ஆனா, எனக்கு இன்னைக்கு லீவ் வேணும்… எனக்கு வீட்டுக்குப் போகணும்… ரொம்ப தலை வலிக்குது…” மித்ரா அனுமதி கேட்கவும், அவள் முகத்தைப் பார்த்தவர்,

“சரி… போயிட்டு வா… டேக் கேர்…” என்று அவளுக்கு அனுமதி வழங்க, கண்களைத் துடைத்துக் கொண்டவள், வேகமாக அங்கிருந்து வெளியில் சென்றாள்.

“உன்னால முடிஞ்சதை… கச்சிதமா செய்துட்ட இல்ல…” பாலாஜி வசந்தைக் கடிய,

“நான் என்னடா செய்தேன்… நேத்து அவளோட கார் வரை போய், என்கூட சினிமாவுக்கு வான்னு கூப்பிட்டதை கண்டுக்கவேயில்லை அவ… அது என்ன என்னை மிஞ்சி போறது… அதுவும் தவிர, நம்ம கிளாஸ்க்கு கெட்ட பெயர் வரக் கூடாதுன்னு தான்…” வசந்த் சொல்லவும், “ரொம்…ம்…ம்….ம்..,ப நல்ல எண்ணம்…” என்று முணுமுணுத்துக்கொண்டே, பாலாஜி தனது இடத்தில் சென்று அமர்ந்தான்.

 

மித்ரா காரில் சென்று அமர்ந்து, ஸ்டீயரிங் வீலில் சாய்ந்து, மனதில் அடைத்து வைத்த துக்கங்கள் அனைத்தும் வெளியேற, கதறத் தொடங்கினாள். சிறிது நேரம் அழுதவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வந்தனாவிற்கு அழைத்தாள்.

“வந்தனா… தூங்கறியா?” வந்தனாவிற்கு கால் செய்து அவள் கேட்கவும், அவளது அழுகுரலை கேட்ட வந்தனா பதறிப்போனாள்.

“நீ பதர்ற அளவு எனக்கு ஒண்ணும் ஆகல… உன்னோட கொஞ்சம் பேசணும் போல இருந்தது… அது தான்…”

—-                                                   

“இல்ல வந்தனா… நான் அழல… சும்மா கோல்ட் பிடிச்சிருக்கு… குரலை வச்சு கேட்கறியா?” தனது குரலை இயல்பாக மாற்றிக்கொண்டே அவள் பேச முயல, அந்தப் புறம் வந்தனா கேட்ட கேள்வியில், தன்னால் அதற்கு மேல் மறைக்க முடியாதென்று புரிந்த மித்ரா கேவத் தொடங்கினாள்.

—-

“ம்ம்.. என்னால நடிக்க முடியல வந்தனா… ரொம்ப கஷ்டமா இருக்கு… நான் ஏன் இங்க வந்தேன்னு இருக்கு வந்தனா…. எல்லா சமயத்துலேயும் என்னால சிரிச்சு சிரிச்சு சமாளிக்க முடியலடா… அதுலயே நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன் வந்தனா… ஐம் ஐ நாட் டிசர்வ்ட் டு பீ ஹாப்பி… நான் ஏன் பிறந்தேன் வந்தனா… வாழ்க்கையே சலிப்பா இருக்கு…” தன் மனதில் உள்ள காயங்களை அவள் கொட்டித் தீர்க்கத் தொடங்க, அவளது காரை நோக்கி வசந்த் வருவதைப் பார்த்தவள்,

“வந்தனா… அவங்க வராங்க… நான் காரை எடுக்கறேன்… எனக்கு அவங்க கூட போராட தெம்பில்லை… அவங்க இப்போ எதைப் பேசினாலும், நான் உடைஞ்சிடுவேன்… ரொம்ப டிப்ரெஸ்ட்டா இருக்கு…  நான் எப்பவும் போல ராத்திரி உன்கிட்ட பேசறேன்…” என்று கூறியவள், அவன் அருகில் வருவதற்குள், காரை கிளப்பிக் கொண்டு, வேகமாக வெளியேறினாள்.

வசந்த் அருகில் வரவும், மித்ரா காரை உயிர்ப்பிக்கவும் சரியாக இருக்க, அவளின் செயலில் ஏமாற்றம் பரவ, சாட்டையடி வாங்கிய உணர்வில், “இவளுக்கு வர வர ரொம்ப திமிரு ஏறிப் போச்சு… ஒருவேளை, அந்த அவன்கிட்ட பேசிட்டு இருந்திருப்பாளோ? அது தான் நான் வந்த உடனே ஓடறாளா? இருடி, உனக்கு ஒட்டு மொத்தமா ஆப்பு வைக்கறேன்….” வசந்த் தன் மனதினில் கறுவிக் கொண்டிருந்தான்.

“என்ன சார்… மித்ரா கிட்ட வம்பு செய்ய வந்தீங்களோ? இல்ல… இன்னும் அவளை அழ வைக்க ஏதாவது மிச்சம் மீதி வச்சிருக்கியா?” பாலாஜி கடுப்புடன் கேட்கவும்,

“நீயும் ஏண்டா என்னை எதிரி மாதிரியே பார்க்கற? அந்த அவன் கூட பேசிட்டு திமிரா போறாடா… நான் அவளோட…. அவளோட பிரெண்ட் தானே? ஏன் என்கிட்டே முன்ன மாதிரி நின்னு ஒரு வார்த்தை பேசினா என்ன? எல்லாம் திமிரு… மொத்தமும் திமிரு… அந்த வந்தனா கொடுக்கற தைரியம்” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் பேசவும்,

“ஆமா… இப்போவாவது அவ இப்படி இருக்காளேன்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… உன் முகத்தை இப்படி பார்க்கவும் சந்தோஷமா இருக்கு…” என்றபடி, அவன் தனது வண்டியைக் கிளப்ப, பாலாஜியிடம் மித்ரா ஏதாவது சொல்லி இருப்பாளோ என்ற சந்தேகம் வசந்துக்கு எழுந்தது.

‘பாலாஜியின் இயல்பு இதுவல்லவே…’ என்று எழுந்த சந்தேகத்தையும் அடக்கிக் கொண்டு, வசந்த் வீட்டை நோக்கிச் சென்றான்.

வீட்டிற்கு சென்ற மித்ராவை, மீண்டும் வந்தனா அழைத்து பேச, பேச்சின் முடிவில், பழைய முகமூடியை மீண்டும் அணியும் தெம்பும் வந்திருக்க, உற்சாகத்துடன் சமையல் அறையில் புகுந்திருந்தாள்.

அப்பொழுது வீட்டின் உள்ளே வந்த சந்தோஷ், “என்ன? வீட்ல வாசனை செமையா தூக்குதே…” என்று ஆச்சரியத்துடன், சமையல் அறையை நோக்கிச் செல்ல, அங்கு நின்றிருந்த மித்ராவைப் பார்த்து, “ஹையோ…” என்று ஜெர்க்கடித்தான்.

“என்ன சந்தோஷ்… உன் உடம்பு இப்படி ஜெர்க்காகுது… நான் செய்திருக்கற சூப்பைக் குடி.. எல்லாம் சரியா போகும்…” என்று அவசரமாக ஒரு கப்பில் ஊற்ற,

“மித்ரா.. உனக்கு அண்ணனா பிறந்ததுக்கு இப்பிடி ஒரு பனிஷ்மெண்ட்டா… வேண்டாம்டா தங்கமே… நான் வெளிய போயே சாப்பிடறேன்… என்னை ஆள விடு…” என்று அவன் ஓரடி உள்ளே நுழைய,

“வெளிய ஓடறதுன்னா பின்னால காலை வைக்கணும்… முன்னாடி வரக் கூடாது… என் சமையல் தானே உன்னை அந்தளவு உள்பக்கமா  கட்டி இழுக்குது…” என்று கேலி செய்தவள்,

“அண்ணி… இதைக் கொஞ்சம் டேஸ்ட் பாருங்க…” என்று சிறிய கிண்ணத்தில், எதையோ போட்டுக் கொடுக்க, உள்ளே எட்டிப்பார்த்த சந்தோஷ், அங்கு அமர்ந்து கொண்டிருந்த ரோஹிணியையும், சமையல் செய்யும் அம்மாளையும் பார்த்து சிரிக்கத் தொடங்கினான்.

“என்ன அண்ணி… இன்னைக்கு நீங்க சோதனை எலியா மாறிட்டீங்களா?” என்றபடி, அவள் அருகே அமர,

“சந்தோஷ்… இன்னைக்கு எவ்வளவு விதம் விதமா சமைச்சிருக்கா தெரியுமா? எல்லாமே ரொம்ப டேஸ்ட்டியா இருக்கு… நீயும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரு…” என்றபடி, மித்ரா கொடுத்ததை சுவைக்கத் தொடங்கினாள்.

“அப்போ தைரியமா சாப்பிடலாம்ன்னு சொல்றீங்க?” சந்தோஷ் சந்தேகமாக இழுக்க, ரோஹிணியோ பதில் சொல்லும் நிலைமையில் கூட இல்லாமல், அவள் கொடுத்ததை சுவைத்துக் கொண்டிருந்தாள். 

“ஹே சந்தோஷ்… நீ ஒண்ணும் ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம்… வெளிய போய் சாப்பிடு…” என்றபடியே அவனிடம் சூப்பை நீட்ட, அதை வாங்கி பருகியவனின் கண்கள் வெளியே தெரித்து விழுந்துவிடும் போல் ஆச்சரியத்தில் விரிந்தது.

“ஹே அமுக்குணி… எப்படி இவ்வளவு டேஸ்ட்டியா சமைச்சு இருக்க?” சந்தோஷ் கேட்டுக் கொண்டே ருசிக்கவும், மனோவும், திவாகரும் சாப்பிட வீட்டிற்கு வரவும், அவர்களும் அங்கு குழுமினர்.

அவர்களும் மித்ரா செய்வதை ருசித்தவாறே, அந்த சமையல் அறையை ரெண்டாக்கிக் கொண்டிருக்க, “மித்ரா… எனக்கு காரமா பிரியாணி வேணும்ன்னு கேட்டேனே… மறந்திறாதே…” என்று ரோஹிணி நியாபகப்படுத்தவும், தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டி, அதை செய்ய தயாரானாள்.

ஒவ்வொரு பொருட்களாக, அவள் அடுப்பில்லுள்ள கடாயில் போடப் போட, வசந்தின் நினைவுகள் என்ன தடுத்தும் நில்லாமல், மித்ராவின் மனதில் ஆட்சி செய்யத் துவங்கின. வசந்திற்கு காரமான உணவுகள் என்றால் பிடித்தம் அதிகம்… அவனுக்கு சமைப்பதற்காகவே கற்றுக் கொண்டது, ஹைதராபாத் மட்டன் பிரியாணியும், பெப்பர் சிக்கனும். அவற்றை செய்தால், ஒரு பிடி பிடிப்பான். அதற்காவே மாதம் இருமுறை அதை செய்து தருவது மித்ராவின் வழக்கம்.

அவனது நினைவுகளுடனே சமையல் செய்தவளுக்கு, அந்த நினைவலையில் மூழ்குவது போல மூச்சுத் திணற, அந்தத் திணறலை அதிகரிக்க விடாமல், குக்கரின் விசில் அவளைக் காப்பாற்றியது. அவளது கவனம் முழுவதும் சமையலில் இல்லாமல் வேறு எங்கோ இருப்பதைப் கவனித்த திவாகர், மனோவை சந்தேகமாக ஏறிட, மனோ சந்தோஷைப் பார்க்க, சந்தோஷ் தோளைக் குலுக்கிக்கொண்டு, ரோஹிணியைப் பார்க்க, ரோஹிணியோ, எதையும் கவனிக்காமல் மித்ரா கொடுத்திருந்த கிண்ணங்களில் உள்ள உணவுகளில் கவனத்தை பதித்திருந்தாள்.

“என்னவோ சரியில்ல மனோ… அவளோட கை தான் வேலை செய்யுதே ஒழிய, கவனம் சுத்தமா இங்க இல்ல… அது நல்லாவே தெரியுது…” திவாகர் சொல்ல,

“ம்ம்… ஆமாம். எதுவோ சரியில்ல திவா… நாளைக்கு அவ காலேஜுக்குப் போன உடனே, அவளோட ரூம்ல நுழைஞ்சுட வேண்டியது தான்… டீசென்சி எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது….. நாளைக்கு நுழைவோம்.. தங்கமலை ரகசியத்தை கண்டுபிடிப்போம்…” என்று சந்தோஷ் சொல்லவும், மனோவும், திவாகரும் ஒப்புதலாக தலையசைத்தனர்.

“அண்ணி… வழக்கம் போல உங்க அருமை நாத்தனார் கிட்ட போட்டுக் கொடுத்திறாதீங்க….” எங்கே ரோஹிணி அவளிடம் ஏதாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில், சந்தோஷ், ரோஹிணியை வம்பிழுப்பது போல எச்சரிக்கை செய்ய, அவன் தலையைத் தட்டியவள்,

“அவ நல்லா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே… நிஜமாவே அவ நல்லாதான் இருக்கப் போறா…” என்று ரோஹிணி சொல்லவும்,

“ஹம்… அந்த அமுக்குணி… யார்கிட்டயும் அதிகமா பேசாமையே வீட்ல எல்லார்கிட்டயும் ஸ்கோர் செய்து வச்சிருக்கா பாரேன்… எவ்வளவு சப்போர்ட்டுடா வீட்ல…” சந்தோஷ் கிண்டலடிக்கும் நேரம், குக்கரின் விசிலில் கலைந்த மித்ரா, சந்தோஷின் கிண்டலில், பெயருக்கு புன்னகைத்தாள்.

மதியம் உணவு உண்ண வந்த அனைவரின் வயிறும், மித்ராவின் கைப்பக்குவத்தால் நிரம்பியது. “எப்படி மித்ரா… இவ்வளவு பிரமாதமா சமைக்க கத்துக்கிட்ட…” விஜி கேட்கவும்,

“என் கையாலேயே கரணம் போடுன்னு தனியா இருக்க விட்டீங்க இல்ல… அதுவும், கூட ஒரு சாப்பாட்டு ராமிய விட்டுட்டு… அவ என்னைப் பார்த்துப்பாளாம்… அவளை நம்பி என்னை இங்க இருந்து மூட்டை கட்டுனீங்களாம்… நல்…ல்….ல்லா என்னைப் பார்த்துக்கிட்டா போங்க பெரியம்மா… காலையில எழுந்ததும் குடிக்கிற காபில இருந்து, ராத்திரி தூங்கும்போது குடிக்கிற பால் வரை நான் தான் அவளுக்கு எடுத்துட்டு போய் தரணும்… சரியான சோம்பேறி…

நிஜமாவே வாழைப்பழ சோம்பேறின்னா அவ தான்… வாழைப்பழத்தை சாப்பிடுன்னா…. உரிச்சு சாப்பிடணுமேன்னு அலுத்துப்பா.. எல்லாம் என் தலையெழுத்து…” அவள் சலிப்பாக கூறுவது போல் இருந்தாலும், அவளது முகத்தில் இருந்த பெருமிதம் கலந்த புன்னகை, வந்தனாவிடம் அவளுக்குள்ள சிநேகத்தைச் சொல்ல, அனைவரும் அவளை பேச விட்டு வேடிக்கைப் பார்த்தனர்.

“நிஜமாவே அவளுக்கு சமைக்கத் தெரியுமா தெரியாதா?” சந்தோஷ் சந்தேகமாக கேட்க,

“ரொம்ப சூப்பரா சமைப்பா சந்தோஷ்… உனக்குத் தெரியுமா.. ஒருநாள் காலையில எனக்கு லேட் ஆகிடுச்சு… ஒரு பௌல்ல கார்ன் ஃபிளேக்ஸ் போட்டு வை… நான் வரதுக்குள்ள ஊறிடும்… சாப்பிட்டு அப்படியே கிளம்பலாம்ன்னு சொன்னேன்…” மித்ரா கதை சொல்ல,

“என்ன, தண்ணியில ஊறப்போட்டு வச்சிருந்தாளா?” பொறுமையில்லாமல் திவாகர் கேட்க,

“அது தான் இல்ல… வெறும் கார்ன் ஃபிளேக்ஸ பௌல்ல போட்டு வச்சுட்டு, நான் வந்த உடனே, ‘என்ன மித்ரா இது? நீ சொன்ன மாதிரி, நான் போட்டு வச்சா, இது ஊறவே இல்லையே’ன்னு கேட்கறா? எனக்கு எப்படி இருக்கும் சொல்லு…” மித்ரா சொல்லவும், அனைவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

“இவளை வச்சுட்டு நான் என்ன செய்யறது? கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு நாக்கே செத்துப் போச்சு… வேற வழி இல்லாம சமைக்க கத்துக்கிட்டேன்… கூகிள் ஆண்டவர் துணையோட” மித்ரா கதை சொல்லி முடிக்க, ருக்மணி அவள் தலையை வருடி, சிரித்தார்.

“பாட்டி.. இன்னும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்…. என்னெல்லாம் கத்துகிட்டேன்னு உங்களுக்கு எல்லாம் சொல்லவா?” மித்ரா சிரித்துக் கொண்டே கேட்க, அவள் குரலில் இருந்த கசப்பை கண்டறியும் நிலையில் அங்கு யாரும் இல்லாமல்,

 “ஹையோ முடியல மித்ரா… விட்ரு…” என்று சிரித்து பேசிக்கொண்டே தங்கள் உணவை முடித்தனர்.

“இந்த ஞாயிற்றுக்கிழமையே… நம்ம ரோஹிணிக்கு வளைக்காப்பு செய்துடலாம்ன்னு இருக்கேன் விஜி.. அவங்க அப்பா அம்மாகிட்ட பேசிட்டு சொல்லுங்க… நாளும் நல்ல நாளா தான் இருக்கு. மித்ரா இருக்கும்போதே செய்தா நல்லா இருக்கும்ன்னு ரோஹிணி காலையில என் கிட்ட வந்து கேட்டா… நானும் ஜோசியரைப் பார்த்து கேட்டேன்… அவரும் நாள் நல்லா இருக்குன்னு சொல்லிட்டார்…” ருக்மணி சொல்லவும், அனைவரும் உற்சாகத்துடன் தலையசைத்தனர்.

தன் மேல் ரோஹிணி வைத்திருக்கும் அன்பை கண்டு கண்கலங்கி, “அண்ணி…” என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 

மாலையில் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தவளின் மொபைலுக்கு வசந்த் அழைத்துக் கொண்டே இருந்தான். அவனது பெயரை திரையில் பார்த்தவளின் கைகள் நடுங்கத் தொடங்கியது. வியர்க்க விறுவிறுக்க, செல்லையே வெறித்துக் கொண்டிருந்தவள், ரோஹிணி அருகில் வரவும், அதை எடுத்து ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தாள்.

“இன்னும் ஒருவாரம் தான் மித்ரா… அப்பறம் எந்த பிரச்சனையும் இல்ல…” தனக்குத் தானே சமாதானம் செய்துக் கொண்டவள், கண்களை மூடிக்கொண்டு, ஆயாசமாக அங்கிருந்த இருக்கையில் சாய்ந்தாள்.

“என்னாச்சு மித்ரா…” அருகில் நெருங்கிவிட்ட ரோகிணி கேட்கவும்,

“இல்ல அண்ணி.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா உட்காரலாம்ன்னு…” அவள் வார்த்தைகளை மென்மையாக சொல்ல,

“சரி வா… நாம வெளியில போயிட்டு வரலாம்… வளைக்காப்புக்கு எல்லாம் வாங்குறதுக்காக ஷாப்பிங் போகலாம்…” கண்ணடித்துவிட்டு, ரோஹிணி அவளை அழைத்துச் செல்ல, அன்றைய அவளது நாள் வேறெந்த பழைய நினைவுகளும் குறுக்கிடாமல் முடிந்தது.

images

 

 

மறுநாள், கல்லூரிக்குள் நுழைந்த மித்ராவின் கார் பார்க்கிங்கில் நின்றவுடன், அவளுக்காகவே காத்திருந்த வசந்த் காரினுள் பாய, மித்ரா அதிர்ந்து நடுங்கிப்போனாள்.

அவளது அந்த நேர நடுக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த வசந்த், அவளை இழுத்து அணைக்க முற்பட, அவனது கைகள் அவளைத் தீண்டியதும், மித்ராவின் நடுக்கம் குறைந்து, அவளது தைரியம் விழித்துக் கொள்ள, கோபமாக அவனைப் பிடித்து தள்ளினாள்.

புதிதாகப் பிறந்திருந்த அவளது பலத்தையும், கோபத்தையும் கண்ட வசந்த், “சமி….” என்று திகைக்கவும்,

“என்னைப் பார்த்து, வான்னா வரதுக்கும் போன்னு சொன்னா போறதுக்கும், நான் உன் வீட்டு நாய் இல்ல… அது சரி, நீ எங்க, என்னை போன்னு சொன்ன… என்கிட்டே சொல்லாம கொள்ளாம நீதானே இந்தியாவுக்கு ஓடி வந்த… நான்… நான் அங்க எந்த நிலைமையில…” கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,

“எனக்கும் உணர்வுகள் இருக்கு வசந்த்… முதல் தடவை என் உணர்வுகளை, விளையாட்டாவே காலால மிதிச்சு நசுக்கி சாகடிச்ச…. நீ அப்படி செஞ்சும் கூட, அதுக்கப்புறமும் உன்னை நம்பி… வசி… இப்போ கூட உனக்கு, நீ செய்யறது, செஞ்சது இதெல்லாம் என்னன்னு கொஞ்சம் கூட புரியவே இல்லையே… இப்போவும், நான் வேறொருத்தன கல்யாணம் செய்துக்கப் போறேனேன்னு தானே உனக்கு இந்த தவிப்பு… எப்பவுமே நான் உன்னை மட்டுமே சார்ந்து இருக்கணும்… உன்னை விட்டு வேற யாரையும் பார்க்க கூடாது…. யார் கூடவும் வாழக் கூடாது… ஏன், எனக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கக் கூடாது… அது தானே உன் எண்ணம் …

உன்னைப் பொறுத்தவரை, நான் உனக்கு ஒரு பொம்மை.. நீ வச்சு விளையாடற பொம்மை… அப்படித் தானே?” மித்ரா கோபமாக கேட்கவும், அவள் கையைப் பற்றியவன்,

“சமி… நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு… ஸ்வப்னா கூட…” அவன் தொடங்குவதற்குள்,

“என்ன…. ‘அவ கூட நடக்கப் போற கல்யாணம் ஒரு கட்டாய கல்யாணம்… எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கல மித்ரா… எனக்கு உன்னைத் தான் பிடிச்சிருக்கு… ஊருக்காக அவளும், என் ஆசைக்காக நீயும்…’ அப்படின்னு சொல்ல வரியா? நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல வசந்த்… சத்தியமா நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.. என்னை விட்டுடு வசந்த்… இதுக்கும் மேல, உனக்கு கொடுக்கறதுக்கு, என் உயிரை தவிர என்கிட்டே எதுவுமே இல்ல… அதுவும் வேணும்னா எடுத்துக்கோ வசந்த்… கொடுத்துட்டு நிம்மதியா போயிடறேன்… வேணுமா சொல்லு… சொல்லு…” அவனது சட்டையைப் பிடித்து உலுக்கிக் கத்தவும்,

அவளது கையை தன் சட்டையில் இருந்து மெல்ல பிரித்தவன், “ஸ்வப்னா கூட நடக்கப்போற என்னோட கல்யாணத்துக்கு நீ வருவியான்னு கேட்கத் தான் வந்தேன்… பிரெண்ட்ஸ் எத்தனை பேர் வருவாங்கன்னு அம்மா கேட்க சொன்னாங்க…” வசந்த் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொல்லவும், முதலில் சிறிதளவு அதிர்ச்சியுடன் திகைத்தவளின் இதழில், மெல்ல ஏளனப் புன்னகை வந்து குடி கொண்டது.

“நான் தான், கூட பழகற பசங்க எல்லார் கூடவும் சுத்தற பொண்ணாச்சே… நான் வந்தா உங்க கல்யாணம் சிறக்குமா? உனக்கு அசிங்கமா இருக்கும் இல்ல… அந்த அசிங்கம் உனக்கு வேண்டாம். அதனால நான் வரல… அடுத்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு எனக்கு பிளைட்… வரும்போதே டிக்கட் புக் பண்ணிட்டுத் தான் வந்தேன்” என்று கூறியவள், அவனை வெறுப்பாக பார்த்துவிட்டு, காரை விட்டு கீழே இறங்கி நின்றாள்.

உன்னில் வீணாய்ப் போன

என் நினைவுகளை

அழிக்க சக்தியற்று

 நாதியில்லாமல்

 வலியோடு துடித்துத்

தொலைக்கும் இதயம் !!

வசந்த் காரின் உள்ளேயே அமர்ந்துக்கொண்டு அவளைப் பார்க்கவும், சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள், அவன் காரைவிட்டு இறங்குவதாக இல்லை என்று தெரிந்து, காரை விட்டு விலகி நடக்க, வசந்த் அவசரமாக காரில் இருந்து இறங்கினான். கார் கதவு மூடும் சத்தத்தில், திரும்பியும் பார்க்காமல், ரிமோட்டை வைத்து காரை லாக் செய்துவிட்டு, வகுப்பு இருக்கும் திசையில் நடந்தாள், நெருப்பாக கொதித்த இதயத்தை அடக்கிக் கொண்டு.

வீட்டில்….

மித்ரா கல்லூரிக்கு கிளம்பிய நிமிடத்தில் இருந்து நடந்த சோதனையில், அவர்கள் எதிர்ப்பார்த்த எதுவுமே கிடைக்காமல், அவர்கள் தேடுவது மித்ராவின் கையில் இருக்கும் பையில், அவள் செல்லுமிடத்திற்கு எல்லாம் அவளுடன் கூடவே பத்திரமாக வலம் வருவதை அறியாமல், சோர்ந்து அமர்ந்தனர், அவளது ஆசை சகோதர்கள்….

 

மௌனங்கள் தொடரும்….

LEAVE A REPLY