SHARE

ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதிமீது சருகைப்போல் உன்பாதை வருகின்றேன்
கடைத்தேற்றிவிடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே

 

10665377_318880724985372_5802691175103215897_n

 

 

அன்று மாலையில், பாலாஜி நேராக சென்று நின்றது வேல் சாரிடம்…. மித்ராவின் தயக்கத்தைப் பற்றி குறிப்பாக கூறியவன், அதே போல அனிதாவைப் பற்றியும் கூற, “நான் பேசறேன் பாலாஜி.. அவங்க வீட்ல பேசி நான் பெர்மிஷன் வாங்கறேன்…” என்று வாக்கு கொடுத்து பேசவும் செய்தார்.

ஒரு பேராசிரியரே வீட்டிற்கு அழைத்து அனுமதி கேட்கவும், அனிதாவின் வீட்டில் அனுமதி வழங்க, மித்ராவின் வீட்டிலோ, “ஓ… டூர் போறீங்களா? நல்ல விஷயம் தானே… காலேஜ் லைஃப்லையே இதெல்லாம் என்ஜாய் பண்ணிடணும்…” ருக்மணி சொல்லவும்,

“ரொம்ப தேங்க்ஸ்ங்கம்மா… போன வருஷம் வராதவ… இந்த வருஷமும் அப்படியே இருந்துட்டா என்ன செய்யறதுன்னு தான் நேரடியா உங்களையே போன்ல கேட்டுட்டேன்” அவர் இயல்பாகச் சொல்ல, ருக்மணி அதிர்ந்தார்.

“என்ன சொல்றீங்க சார்… போன வருஷம் டூர் போனீங்களா? எனக்குத் தெரியாதே?” அவர் சொல்லவும்,

“ஆமாங்கம்மா… போனோம்… மித்ரா வரலைன்னு சொல்லிட்டா?” அவரது பதிலில், ருக்மணி மனதினில் மிகவும் வருந்தினார்.

அதை மறைத்துக் கொண்டு, “கண்டிப்பா இந்தமுறை நான் அனுப்பறேன் சார்… அவ வரலைன்னா என்ன ஆகிடப் போகுதுன்னு விடாம, போன் செய்து மெனக்கெட்டு கேட்டீங்களே… ரொம்ப நன்றி சார்…” அவருக்கு நன்றி தெரிவித்து, போனை வைத்த ருக்மணி, மித்ராவின் நிலை குறித்து யோசனையில் ஆழ்ந்தார்.

“மித்ரா, இப்படி நம்ம வீட்டுலயே ஒட்டாம, எந்த விஷயத்தையும் மனசுவிட்டுப் பேசாம இருக்கறதும், அவளுக்கு ஒவ்வொண்ணையும் நாமளே பார்த்துப் பார்த்து செய்யறது, அவளோட பிற்காலத்துக்கும் சரியா வருமா?”, மூளையில் உதித்த கேள்வியில், “என்ன செய்யலாம்?” என்ற சிறிது நேர யோசனைக்குப் பிறகு, உஷாவை அழைத்தவர், தனது யோசனையையும், அதற்கான காரணத்தையும்  கூறினார்.

“அத்தை… என்ன சொல்றீங்க? அதுக்காக அவ்வளவு தூரம் அனுப்பணுமா? அவ சின்ன குழந்தை அத்தை” பதட்டத்துடன் உஷா கூறவும்,

“இல்ல உஷா… அவ சுபாவமாவே அமைதின்னு நினைச்சு நம்ம அவளை இப்படியே விட்டது தப்பு… அவளுக்கு எதையும் தனியா சமாளிக்கத் தெரியணும்… வாய்விட்டு பேசக் கூட யோசிக்கிறது நல்லாவே இல்ல… உஷா… நம்ம வீட்டுப் பொண்ணு நம்மகிட்டயே பேச தயங்கறான்னா… அது நல்லாவா இருக்கு சொல்லு…. அதை தயக்கம்ன்னு சொல்லணுமா இல்ல வேற எப்படி சொல்றதுன்னு புரியல…

அவளுக்கு தேவையான ஒண்ண கூட, நாமளே பார்த்து செய்யணும்னா, இப்போதைக்கு நம்ம செய்யறோம் சரி…. ஆனா, பிற்காலத்துல அவளுக்கு வரவனும் இப்படி பார்த்துப் பார்த்து செய்வான்னு என்ன நிச்சயம்?

மொதல்ல அவளுக்கு தன்னம்பிக்கை வளரணும்… தைரியமா துணிவோட இருக்கணும்… வாழ்க்கையோட நெளிவு சுளிவு புரியணும்… அதுக்கு, அவ நம்மளை விட்டு தள்ளி நின்னு தன் கையால கரணம் போட்டாத்தான் நடக்கும்… அப்போ தான் அவளால வாழ்க்கையில ஜெயிக்க முடியும்…” ருக்மணி சொல்லவும், திகைத்த உஷா,

“இல்லைங்க அத்தை… அதுக்காக அவளை அமெரிக்கா வரை அனுப்பி வைக்க வேணுமா?” தயக்கத்துடன் இழுக்க,

“இங்கயே தூரமா வேற ஏதாவது ஹாஸ்டல்ல சேர்க்கலாம் தான்… ஆனா, அங்க அவ சமாளிக்க முடியாம ஓடி வந்துட்டா, நாம நினைக்கிறது நடக்காதே உஷா. நாளைக்கு அவளுக்குன்னு ஒரு தனியா குடும்பம் ஆனா, அவளுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கு…. அந்த சமயத்துல  அவ இப்படியே இருந்தா சரியா இருக்குமா?

இதுவே வெளிநாட்டுலன்னா, அவளே தான் எல்லாம் சமாளிக்கணும்… அங்கே அவளுக்கு கிடைக்கிற எக்ஸ்போஷர், அவளை மாத்தலாம் இல்லையா?” ருக்மணி கேட்கவும், உஷாவிற்கும் அது சரியாகப் பட, மித்ரா, அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் அன்றே தொடங்கியது.

வீட்டிற்கு வந்த மித்ராவிடம் உஷா விஷயத்தைக் கூறவும், மித்ராவின் மனதில் முதலில் உதித்தது வசந்தின் முகமே…. “அங்க நான் தனியாவா?” அவள் இழுக்கவும்,

“பாட்டி கூப்பிடறாங்க, வா மித்ரா…” என்று உஷா ருக்மணியிடம் அழைத்துச் சென்றார்.

“மித்ரா… சந்தோஷ் கோச்சிங் போன இடத்துலேயே நீயும் என்ட்ரன்ஸ்க்கு படிக்கப் போ… நான் அந்த மாஸ்டர் கிட்ட பேசிடறேன்.. இந்த டெர்ம் எக்ஸாம் எழுது… நீ கண்டிப்பா பாஸ் பண்ணி நல்ல யுனிவெர்சிட்டில சீட் வாங்கிடுவ…” ருக்மணி முடிவாகச் சொல்ல, 

“இல்ல பாட்டி… என்னால அவ்வளவு தூரம் எல்லாம் போக முடியாது…” மித்ரா முணுமுணுக்கவும்,

“இதுல பயப்பட ஒண்ணும் இல்ல மித்ரா… அண்ணனுங்க எல்லாம் போயிட்டு வந்தாங்க இல்ல… உன்னை மாதிரியே எத்தனையோ பேர் அங்க படிப்பாங்க… உங்க அப்பாவோட பிரெண்ட் சர்வேசன் அங்க தானே இருக்கான்… அவனோட பொண்ணு கூட, அங்க தான் படிக்கப் போறா… அவ கூட தான் உன்னை சேர்க்கப் போறேன்… சர்வேசனுக்கு போன் பண்ணி விசாரிச்சிட்டேன்… அவ அங்கேயே வளர்ந்த பொண்ணுங்கறதுனால, அவ உன்னை நல்லா பார்த்துப்பா… அதனால, அவளோட தான் உன்னை தங்க வைக்கப் போறேன்…  சர்வேசனும் அப்பப்ப வந்து பார்த்துப்பான்… 

அதனால, நீ கண்டிப்பா போயிட்டு வரணும்… வந்த உடனே உங்க அப்பாவோட பாக்டரி நிர்வாகத்தை நீ ஏற்று நடத்தணும் மித்ரா… அது தான் எங்க ஆசை… நீயும் படிச்சு முடிச்சிட்டு வந்துட்டேன்னா, உங்க எல்லார்கிட்டையும் நிர்வாகத்தைக் கொடுத்துட்டு நான் ரெஸ்ட் எடுப்பேன்… எனக்கும் வயசாகிடுச்சு மித்ரா…” ருக்மணி தனது திட்டத்தைச் சொல்லவும், வழக்கம் போல மித்ரா தலையை ஆட்டி வைத்தாள்.

“ம்ம்… சொல்ல மறந்துட்டேன் பாரு…. நீ டூருக்கு போயிட்டு வந்து கோச்சிங் கிளாஸ்ல சேர்ந்தா போதும்…” அவள் டூர் செல்வதைப் பற்றியும் ருக்மணி உறுதிப் படுத்தவும், மித்ராவின் முகத்தில் ஆயிரம் விளக்குகளின் பிரகாசம் தெரிந்தது.

அதையும் வெளிக்காட்டாமல், தன்னுள் அடக்கியவள், ருக்மணியையே பார்த்துக் கொண்டு நிற்க, “போயிட்டுவா மித்ரா… இப்போ போய் எக்ஸாம்க்கு படி…” ருக்மணி கூறவும், தன்னுடைய சந்தோஷத்தை வெளியில் காட்டாமல், அவள் தனது அறைக்குள் நுழைய முயன்றாலும், அவளது நடையின் துள்ளல், அதை ருக்மணிக்கு நன்றாக எடுத்துக் காட்டியது.

“அவ கண்டிப்பா யூ.எஸ். போயே ஆகணும் உஷா…” ருக்மணி உறுதியாக கூறிவிட்டு, “விஜியைக் கொஞ்சம் என் ஆபீஸ் ரூமுக்கு வரச் சொல்லு… இன்னைக்கு தரகர் வந்தாரா?” என்று கேட்டுக் கொண்டே, தனது அலுவலக அறைக்குள் சென்றார்.

அதே துள்ளலுடன், வசந்தின் போனிற்கு காத்திருந்தவள், அவன் அழைத்ததும், “வசந்த்… நானும் டூருக்கு வரப் போறேன்… எங்க பாட்டி போக சொல்லிட்டாங்க….” மித்ரா சந்தோஷத்துடன் கூவவும்,

“ஹே சூப்பர் மித்ரா… வா வா… நாம ஜாலியா என்ஜாய் பண்ணலாம்… அங்க உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப் போறேன்…” உற்சாகத்துடன் வசந்த் சொல்லவும், மித்ராவிற்கும் அதே உற்சாகம் தொற்றிக்கொள்ள,

“அது என்னன்னு சொல்லுங்களேன்…”

“சொல்ல மாட்…ட்…ட்…டேனே…. அது என்னன்னு அப்போ வந்து தெரிஞ்சிக்கோ…” அவன் மேலும் வம்பு செய்ய, அதற்கு மேல் வற்புறுத்திக் கேட்காமல், மித்ரா, அந்த நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கத் தொடங்கினாள்.

மனதினில் குமிழிட்ட சந்தோஷங்கள் ஒவ்வொன்றும், வசந்தின் நினைவை அதிகரிக்க, இத்தனை நாட்கள் விளங்காத அந்த உணர்வு, அவளுக்கு புரிவது போல இருந்தது. பாலாஜியிடம் வராத உணர்வு, வசந்திடம் மட்டும் வருவானேன்? மித்ரா தன்னுடைய எண்ணங்களை புரிந்துக்கொள்ள செய்த முயற்சிகளால் அடுத்த நாள் தொடங்கவிருந்த இன்டெர்னல் தேர்விற்கு அவள் படிக்கத் தவறினாள்.

அதே நேரம், “மித்ரா டூருக்கு வரப் போறா? நமக்கு ஜாலி தான்… அவளை கூட்டிட்டு நல்லா சுத்திட்டு வரலாம்… ஹ்ம்ம்… இப்போவே நிறைய பேரோட பொறாமைப் பார்வை என் மேல… அங்க அவ கூட சேர்ந்து இருக்கற மாதிரி  போட்டோ எடுத்து, அதை காலேஜ்ல சுத்தல்ல விட்டா???” அவனது மனம் இவ்வாறாக யோசித்ததில் அவனும் அடுத்த நாள் பரிட்சைக்கு படிக்கத் தவறினான்.

551341_430602590359832_1107241747_n

 

மறுநாள் காலை கல்லூரிக்கு நுழைந்து கொண்டிருந்த வசந்த்தை பி.ஜி. மாணவன் ஒருவன் நிறுத்தினான்.

“என்ன வேணும்?” வசந்த் கேட்கவும்,

“ம்ம்… எனக்கு உங்க கிளாஸ் சங்கமித்ரா கிட்ட இன்ட்ரோ கொடேன்… எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு… பார்க்க பளிச்சுன்னு அமைதியா இருந்தே, என் மனசைக் கொள்ளை அடிச்சிட்டாப்பா… கேன்டீன்ல போய் அவ ஜூஸ உறியர போது என் மனசையும் சேர்த்து உறிஞ்சிட்டா…” அவன் மித்ராவைப் பற்றி, ரசனையுடன் சொல்லிக் கொண்டே வர, வசந்தின் மனதில் தீ பற்றி எரிந்தது.

“இப்போ என்ன, நான் உனக்கு மாமா வேலை பார்க்கணுமா?” அவன் கடுப்புடன் கேட்கவும்,

“ச்சே… என்ன ப்ரதர் அப்படி சொல்லிட்ட… ஜஸ்ட் நீ என்னைப்பத்தி அவ கிட்ட இன்ட்ரோ கொடு போதும்… மத்ததெல்லாம் நானே அவகிட்ட பேசிக்கறேன்…” அந்த சீனியர் மாணவன் சொல்லவும், வசந்த் அவன் சட்டையைப் பிடித்தான்.

“அதுக்கும், இப்போ நீ சொன்னதுக்கும் என்ன வித்தியாசம்… என்ன தில்லு இருந்தா… அவகிட்ட என்னையே போய், உன்னோட லவ்வைச் சொல்லச் சொல்லுவ?….”  கோபத்தில் அவன் கத்த,

“நான் உன்னை என்னோட லவ்வை சொல்லச் சொல்லல பிரதர்… இன்ட்ரோ மட்டும் கொடு… மீதிய நானே பார்த்துக்கறேன்…. நீ காலேஜ்ல கடலைப் போடாத ஒரு அழகான பொண்ணாவது பாக்கி இருக்காங்களாடா? சீனியர் ஜூனியர்ன்னு யாரையாவது விட்டு வச்சிருக்கியா? இப்போ என்னவோ உங்க கிளாஸ் பொண்ண சொன்ன உடனே ரோஷம் வருதோ? நீ இன்ட்ரோ கொடுக்கலைன்னா போ… நானே போய் சொல்லிக்கறேன்… ஏதோ முறையா போகலாமேன்னு பார்த்தா… ஓவரா எகிறிட்டு இருக்க…” அந்த சீனியர் மாணவன், கத்திவிட்டு, கான்டீனை நோக்கிச் செல்ல,

“ஹே… அவகிட்ட போன… உன்னை சும்மா விட மாட்டேன்…” என்று வசந்த் கத்தவும்,

“அவ அங்க தானே போயிருக்கா? அதனால அங்க போவேன்… போய் என்ன செய்யறேன் பாரு…” சூளுரைக்காத குறையாக வேகமாக கேன்டீனை நோக்கி நகர்ந்தவனை, வசந்த் பிடித்து நிறுத்தினான்.

“என் மேலயா கையை வைக்கற?” அந்த சீனியர் கேட்கவும், அங்கு இருந்த நிலைமையைப் பார்த்த ரவி, பாலாஜியை அழைக்க ஓடி, வகுப்பு மாணவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வர, அதற்குள்ளாகவே, வசந்த்தின் கை, அவனது சட்டையை பிடித்திருந்தது.

“என் சட்டையைவே பிடிச்சிட்டியா?” சீனியர் கத்தவும், அங்கு வந்த பாலாஜி,

“டேய் வசந்த்… கைய எடுடா… என்ன நடக்குது இங்க? இப்போ எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” அவன் கத்தவும்,

“மித்ராவை இவன் லவ் பண்றானாம்…” வசந்த் சொல்லவும், பாலாஜி இப்பொழுது அந்த சீனியரின் சட்டையைப் பிடித்திருந்தான். அவ்வாறே கைக்கலப்புகள் முற்றத் தொடங்க, அது டிபார்ட்மெண்ட் பிரச்சனையாக உருவெடுக்கத் தொடங்கியது. முதல்வர் வரை கம்ப்ளைன்ட் சென்று அனைவரும் அவர் முன்னால் நின்றனர்.

மதியம் வரை அனைவரையும், கிரௌண்ட்டில் நிறுத்தி வைக்க, இறுதியில், வேல் சென்று, மன்னிப்பு கேட்டு, அவர்களை வகுப்பிற்கு அழைத்து வந்தார். ‘நம்ம கிளாஸ் பசங்களுக்கும், சீனியருக்கும் சண்டையாம்… பிரச்சனை பெருசாகி, ப்ரின்சி வரை போய்டுச்சு… இன்னிக்குன்னு கரஸ்பான்டன்ட் வந்து, அவர் வரைக்கும் போயிருச்சு… நம்ம பசங்களும் வேல் சாரும் அங்க தான் இருக்காங்க…’ கிளாஸ் மாணவிகள் பேசிக்கொள்ள,

“இந்த பசங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்போ அடிதடின்னு போய்… அதனால டூரையும் கான்செல் செஞ்சுடப் போறாங்க…” ஈஸ்வரி புலம்ப,

“இப்போ அதுவா முக்கியம்… பசங்களை சஸ்பென்ட் பண்ணிட்டா அவங்களுக்கு கேம்பஸ் வரும்போது பிரச்சனையா போகும்…” மித்ரா கவலையுடன் அனிதாவிடம் சொல்லவும், அனிதா, நித்யாவைப் பார்த்தாள்.

“இந்த வசந்த்துக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை… ஏற்கனவே அவங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு சொல்லுவாங்க… இப்போ மாட்டினா? ஹையோ கடவுளே…” மித்ராவின் கவலை அவனிடமே இருக்க,

“நீ அவனை லவ் பண்ணறியா?” பட்டென்று நித்யா, மித்ராவிடம் கேட்கவும், மித்ரா அதிர்ந்து விழித்தாள்.

“உண்மையைச் சொல்லு…” அனிதா பிடித்து உலுக்கவும்,

“ம்ம்…” என்று தலையசைத்தவள், “ஆனா… இது யாருக்குமே தெரியாது அனிதா… ப்ளீஸ்… யாருகிட்டயும் சொல்லிறாதே…” மித்ரா கெஞ்சத் துவங்கினாள்.

சிறிது நேரம் என்று தொடங்கிய அமைதி, சில நிமிடங்களாக நீடிக்க… மித்ரா தவித்துப் போனாள். அவளை தவிக்க விட்டவர்கள், “எங்ககிட்டயே சொல்லாம மறைச்சிட்ட இல்ல கள்ளி… என்னம்மா பதட்ட படற…” என்று அனிதா கேட்கவும், நிம்மதி பெருமூச்சு விட்ட மித்ரா…

“சொல்லக் கூடாதுன்னு இல்ல… ஆனா, என்னவோ தயக்கம்…” மித்ரா இழுக்கவும்,

“எங்களுக்குத் தெரியாதா உன்னைப் பத்தி… சரி விடு… சார் சைடுல என்ன ரியாக்ஷன்…” நித்யா கேட்கவும், “பிடிக்கும்ன்னு தான் நினைக்கிறேன்…” மித்ரா இழுக்க,

“நினைக்கறியா? இன்னைக்கு சண்டையே உன்னால தானே… அது உனக்குத் தெரியுமா? உன்னைப் பத்தி அந்த சீனியர் ஏதோ சொல்லவும், வசந்துக்கு வந்ததே கோபம்… நான் பார்த்துட்டு தானே வந்தேன்….” நித்யா கிண்டலாகக் கூற, கேட்ட மித்ராவின் மனதில் வெண்சாமரம் வீசப்பட்ட காதல், சிம்மாசனமிட்டு அமர்ந்தது.

“நிஜமாவா!!” கண்கள் விரிய மித்ரா கேட்கவும்,

“ஆமா மித்ரா…” நித்யா சோகமாகச் சொல்லவும், துணுக்குற்ற மித்ரா, “என்னாச்சு?” என்று கேட்க,

“ஹும்… நான் மட்டும் பையனா இருந்திருந்தா உன்னை கடத்திட்டு போயிருப்பேன்… ஹும்… அந்த வசந்த் இப்படி உன்னைத் தட்டிட்டு போயிட்டானே..” நித்யா பெரிதான ஒரு பெருமூச்சொன்றை வெளியிட, மித்ரா, சுணக்கம் மறந்து சிரிக்க, அவள் கன்னத்தில் பட்டென்று முத்தமிட்டவள், “ஐ லவ் யு மித்ரா…. நான் தான் முதல்ல சொன்னேன்… பெட்டெர் லக் நெக்ஸ்ட் ஜென்மம் நித்யா…” என்று தனக்குத் தானே வாழ்த்திக்கொள்ள, முதலில் வெட்கத்துடன் நெளிந்த மித்ரா, அவள் கூறியதைக் கேட்டு, அவளை அடிக்கத் துரத்தினாள்.

அவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த வகுப்பு மாணவர்களைப் பார்த்து, இருவரும் அமைதியாக தங்கள் இடங்களில் அமர்ந்தனர். அவர்களுடன் உள்ளே நுழைந்த வேல், “என்ன நடந்துச்சு பாலாஜி… ஏன் அவங்க கூட சண்டைக்கு போனீங்க?” என்று கேட்கவும்,

“நம்ம கிளாசைப் பத்தி தப்பா பேசினாங்க சார்… அதுனால தான்…” பாலாஜி உண்மையை மறைத்துச் சொல்லவும்,

“அதுக்காக நீ அவன் மேலே கை வைப்பியா பாலாஜி… வசந்த் வந்து தடுக்கலைன்னா என்ன ஆகி இருக்கும்…” அவர் கேட்கவும், ராஜேஷ் வாய் திறக்கப் போக, பாலாஜி, அவன் கையைப் பிடித்து அழுத்தினான்.

மித்ரா புரியாமல் வசந்த்தைப் பார்க்க, வசந்த், தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, பக்கத்தில் இருந்த பாபுவிடம் பேசிக் கொண்டிருக்க,

“ஒண்ணும் இல்ல சார்… நான் சஸ்பென்ட் ஆகி இருப்பேன்… அவ்வளவு தான்… அதுக்காக எல்லாம், எங்க கிளாஸை பத்தித் தப்பா பேச விட்டு, கேட்டுட்டு  இருக்க மாட்டோம்…” பாலாஜி பொதுவாகச் சொல்லவும், வேல் அவனைத் தட்டிக் கொடுத்து,

“சஸ்பென்ட் எல்லாம் செய்ய மாட்டாங்க… அதே போல உங்க டூர் ப்ரோக்ராமும் பாதிக்காது… ஆனா இனி இப்படி செய்யக் கூடாதுன்னு வார்ன் பண்ணிருக்காங்க…. புரியுதா? இன்னிக்கு எழுத வேண்டிய எக்ஸாமும் நாளைக்கு சேர்த்து எழுதுவீங்களாம்… இப்போ படிங்க…” வேல் கூறிவிட்டு, பாலாஜியை தனியே அழைத்துக்கொண்டு செல்ல, வசந்த் அப்பொழுது நிமிர்ந்து அமர்ந்தான்.

அவனிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருந்தாலும், அவளது இயல்பை மீறி, மித்ராவினால் கேட்க முடியாமல் போக, மனதில் தோன்றிய குழப்பம், அவளை அலைக் கழிக்கத் தான் செய்தது. அன்று, கல்லூரி முடிந்தவுடன், தன்னிடம் கூட சொல்லாமல் சென்ற வசந்த்தைப் பார்த்தவள்,

“என்ன மித்ரா… அவன் சொல்லாம போயிட்டானேன்னு இருக்கா?” என்றபடி, அவள் அருகில் வந்த பாலாஜியிடம்,

“ஹ்ம்ம்… கோபமா இருக்காங்களா?” சம்பந்தம் இல்லாமல் அவள் கேட்கவும்,

“இல்லையே… ஏன் கேட்கற?”

“இல்ல… ஏன் பாலாஜி… உன்னை வேல் சார் சண்டைக்கான காரணத்தைக்  கேட்கும்போது, அவங்க எழுந்து, நான் தான் சண்டைப் போட்டேன்னு சொல்லி இருக்கலாம் இல்ல… உண்மையைச் சொல்லாம உட்கார்ந்து இருந்தாங்க… உன்னை சஸ்பென்ட் செய்திருந்தா என்ன ஆகறது?” மனதின் அலைப்புறுதல் தாளாமல், அவள் பாலாஜியிடம் கேட்டுவிடவும், பாலாஜி, அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“அவன்தான் சண்டைக்குக் காரணம்ன்னு, நான் சொல்ல ரொம்ப நேரம் ஆகாது மித்ரா… ஆனா, அவங்க வீட்ல இது தெரிஞ்சா, அவனை ஒருவழி செய்திருவாங்க… அதுனால தான் நானும் வாயே திறக்கல… ஆமா, அவன் தான் சண்டை போட்டான்னு உனக்கு எப்படித் தெரியும்?” பாலாஜி கேட்கவும்,

“என்னால தான்னும் தெரியும்…” ஒருவித கர்வம் குடிகொண்ட குரலில், அவள் சொல்லவும்,

“பரவால்லையே…. மித்ரா கூட ஷார்ப்பா இருக்கா… இது என்னடா அதிசயமா இருக்கு” கிண்டல் செய்த பாலாஜி,

“நான் இப்போ அவன் வீட்டுக்குத் தான் போறேன்… ஏதாவது சொல்லணுமா?” அவன் கேட்க, மறுப்பாக தலையசைத்தவள், “போன்லையே பேசிக்கறேன்…” என்று அவனிடம் இருந்து விடைப்பெற்றாள்.

அன்று அவனுக்கு முதல் முறையாக தானே அழைத்தவள், “வசந்த்…. சாரி அண்ட் தேங்க்ஸ்…” என்று கூறவும்,

“ஹே… நமக்குள்ள என்ன சாரி மித்ரா… உனக்கு யாரு இதைப் பத்தி சொன்னது… பாலாஜியா?”

“ம்ம்… இல்ல… நித்யா… மதியமே சொல்லிட்டா”

“ஹ்ம்ம்… அப்பறம், நான் அங்க ப்ரின்சி கிட்ட டங்குவாரு கிழிஞ்சி டான்ஸ் ஆடிட்டு இருந்தா… நீ இங்க ஓடிப் பிடிச்சு விளையாட்டிட்டு இருந்தியா?” ஒருமாதிரிக் குரலில் அவன் கேட்கவும், வாய் விட்டு சிரித்தவள்,

“அது வேற… நித்யா லொள்ளு பண்ணிட்டு இருந்தா… அதனால தான் அவளை துரத்தினேன்… வேற ஒண்ணும் இல்ல… சரி… நாளைக்கு படிக்க நிறைய இருக்கு… நாம போய் படிக்கலாம்… இப்போ போனை வைக்கவா?”

“மித்ரா… உன்னைப் பத்தி யாரும் எதுவும் சொல்ல விட மாட்டேன்… உனக்கு எந்த தீங்கும் வர விட மாட்டேன்…” ஆழ்ந்த குரலில் அவன் சொல்லவும்,

மனம் நிறைந்த அன்புடனும், கனவுகளுடனும், “ம்ம்… போனை வைக்கிறேன்…” என்று வெட்கக் குரலில் கூறியவள், இணைப்பைத் துண்டிக்காமல் இருக்க,

“மித்ரா… போனை வைக்கலையா?” ரகசியக் குரலில் வசந்த் கேட்க,

“நீங்களே மொதல்ல வைங்க…” அதே போன்ற குரலில் மித்ரா சொல்லவும்,

“ஹையோ கொல்றாளே…” என்று மனதில் நினைத்தவன், “நீ தானே போன் செய்த… அப்போ நீ தானே வைக்கணும்…” அவன் மேலும் தொடர,

“இல்ல… நீங்களே வைங்களேன்…” மித்ரா கெஞ்சவும், “ரெண்டு பேரும் சேர்ந்தே வைக்கலாம்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வசந்த்… என்ன செய்யற?” என்ற குரல் கேட்கவும், வசந்த்தின் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது.

எப்போதும் போல் இல்லாமல்

உன் சந்திப்பிற்கு முன்

இன்னும் கொஞ்சம்

அழகுபடுத்தச் சொல்லி

வற்புறுத்தும்

புதிய குழப்பங்கள்!!

 

அதே வேகத்துடன் நாட்கள் சென்று, அவர்கள் டூர் கிளம்பும் நாளும் வந்தது. பஸ்சில் அவர்கள் ஏறி அமர்ந்ததும், முன் சீட்டில் அமர்ந்திருந்த மித்ராவிற்கு, “அறிவுகெட்டவளே…. பின்னால வந்து உட்காரு… சின்ன பிள்ளைங்க மாதிரி முன் சீட்டுல உட்கார சீட்டு பிடிக்கற…” என்று திட்டி, வசந்த் மெசேஜ் அனுப்ப, அந்த திட்டுகள் கூட இனித்தன மித்ராவிற்கு.

அவனைத் திரும்பிப் பார்த்த மித்ரா, புன்னகையுடன் தலையசைத்து, “டயர் இருக்கற பக்கம் உட்கார்ந்தா தூக்கி தூக்கி போடும் நித்யா… நாம சென்ட்டரா பார்த்து உட்கார்ந்துக்கலாம்…” தன்னுடன் அவர்களையும் அழைக்க,

“நீ நடத்தும்மா…” என்று கேலி செய்த நித்யாவும் அனிதாவும், அவளுடன் பின் பக்கம் இருக்கும் ஒரு சீட்டிற்குச் செல்ல, அவர்களது பயணம் இனிதே தொடங்கியது.

வசந்த் கூறியது போல, பஸ்சில் இருந்த சிடி பிளேயர் இயங்கத் துவங்கியது. அவர்கள் செல்ல வேண்டிய கொச்சின் வரும்வரை வரிசையாக படம் ஓடிக்கொண்டே இருக்க, மித்ரா புன்னகையுடன் வசந்த்தைப் பார்த்தாள். அவளுக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த அவன் புன்னகைத்து, ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, “எப்படி!!” என்று கேட்கவும், “சூப்பர்…” என்றவள், தொடர்ந்து படம் பார்க்க, நடுநடுவே, அந்த படத்தில் வரும் காட்சிகளை, அவளிடம் பேச வசதியாக முன்னால் சாய்ந்தபடி, வசந்த் விளக்கிக் கொண்டே வர, மித்ரா முழுவதுமாக, அவன் வசம் சாய்ந்தாள்.  

எதைத் தொலைத்தேன்

என தெரியவில்லை

தேடிக் கொண்டிருப்பது மட்டும்

உன்னிடத்தில் !!!

“மித்ரா… இந்த பாட்டெல்லாம் கேட்டுப்பாரேன்… உனக்கு பிடிச்ச பாட்டெல்லாம் சொல்லு… நான் உன் மொபைல்ல போட்டுக் கொடுக்கறேன்… உனக்கு எப்போ கேட்கணும்னு நினைச்சாலும் நீ கேட்டுக்கலாம்… இந்த பாட்டு பிடிச்சிருக்கா?” வசந்த் கேட்டுக்கொண்டே, தனது மொபைலை ஹெட்செட்டுடன் இணைத்து, அவள் காதுக்குள் கொடுக்க, மித்ரா அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது அந்த செய்கை மித்ராவின் மனதில் ஒரு இனிய இதத்தைப் பரப்ப, அவள் கண்கள் கலங்கியது. “வசந்த்…” மித்ரா வெளியே வராத குரலில் அழைக்கவும், அந்த அழைப்புக் கூட அவனை எட்டி, “என்னாச்சு மித்ரா…” என்று கேட்கவும், அவனைப் பார்த்து ‘ஒண்ணும் இல்ல’ என்று தலையசைத்து, ‘தேங்க்ஸ்…’ என்று முணுமுணுத்து, கண்களை மூடி, பாடல்களை ரசிக்கத் தொடங்கினாள்.

அத்தனை நாட்களாக மறைத்து வைத்த உணர்வுகள், இன்று, எத்தனை முயன்றும், மித்ராவின் பார்வை வசந்த்தை காதலுடன் தீண்ட, வசந்தோ, அவளது செல்லை குடைவதிலேயே மும்முரமாக இருக்க, அவர்கள் அருகில் அமர்ந்திருந்த பாலாஜியின் கண்களில், அவளது காதல் ததும்பிய பார்வை தவறாமல் பட்டது.

“மித்ரா…” மனதில் அதிர்ந்தவன், அவளையே கவனிக்கத் தொடங்கினான். மித்ராவின் கண்களில் தெரியும் காதலும், வசந்தின் கண்களில் எப்பொழுதும் இருக்கும் அலட்சியமும், அதையும் மீறி, அவனது பார்வை, தனது இரையை சுற்றும் கழுகு போல, அவளைச் சுற்றியே இருக்க, பாலாஜி விக்கித்துப் போனான்.

மாணவிகள் தங்கும் இடத்தில் இருந்து, வெளியில் வரும் மித்ராவை, வசந்த் பார்வையால் தொடர, “என்னடா புதுசா அவளைப் பார்க்கற மாதிரி பார்க்கற?” என்று கேட்டுக்கொண்டே பாலாஜி அவன் அருகில் வந்தான்.

“இல்ல இந்த பனியில அவ அழகான ரோஸ் மாதிரி இருக்கா இல்ல பாலாஜி..” வசந்த் ரசித்துக் கேட்கவும்,

“உனக்கு அவளை பிடிச்சிருக்கா வசந்த்?” பாலாஜி நூல் விட்டுப் பார்க்க,  தோளைக் குலுக்கிக்கொண்ட வசந்த், அங்கிருந்து நகர்ந்தான். அவன் மனதிலும் எதுவோ இருப்பது போலத் தோன்ற, பாலாஜிக்கு (தாற்காலிக) நிம்மதி ஏற்பட்டது.

ஹார்பருக்குச் சென்று, அதில் போட்டிங் போகும்பொழுதும், டேமில்  அவள் எட்டிப்பார்த்து குதூகலிக்கும் பொழுதும், அதரம்பள்ளி நீர்வீழ்ச்சியில்  அவள் கால்களை ஆட்டி விளையாடிய பொழுதும், வசந்த் அவள் அருகில் இருப்பது போலவே பார்த்துக் கொண்டான்.

ஒரு பாறையின் மீது ஏறி நின்ற மித்ரா, வேண்டுமென்றே விழுவது போல விளையாடிக்கொண்டிருக்க, சிறிது நேரம் அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, “மித்ரா… விளையாட்டு வினையா போகும்…” என்று எச்சரிக்க, அதே நேரம் அவளது கால் வழுக்கி, நீருக்குள் விழுந்தாள்.

“ஹே மித்ரா…” வசந்த் பதட்டத்துடன் அவளிடம் விரைய, அங்கிருந்த பாறையில் ஒன்று, அவளது நெற்றியில் கீறி, ரத்தம் வழிந்தது. “ஹையோ மித்ரா… அப்போவே அவன் சொன்னான் இல்ல… கேட்டியா?” வசந்த் அவளை கடிந்துக் கொண்டு,

“நித்யா… அவளை அங்க கூட்டிட்டு வாங்க… நான் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வரேன்…” என்று பஸ்சை நோக்கி ஓடினான்.

“நான் அப்போவே சொன்னேன் இல்ல மித்ரா… இப்போ பாரு…” பாலாஜி வருந்தவும்,

“காலை நனைச்சு விளையாட நல்லா இருந்தது பாலாஜி… எதிர்பாராம கால் கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு… நான் நல்லா தான் நின்னுட்டு இருந்தேன்…” வருத்தமாக மித்ரா சொல்லவும், வசந்த் கையில் பஞ்சு, மருந்துடன் வந்து சேர்ந்தான்.

அவளுக்கு மருந்திட்டு, பிளாஸ்டர் ஒட்டும் வரை அவள் அமைதியாக இருக்க, “போய் பேசாம ஒரு இடத்துல உட்காரு… இப்படியா கீழே விழுந்து வைப்ப… ரொம்ப வலிக்குதா என்ன?” அவளது முகம் சுருங்குவதைப் பார்த்து வசந்த் கேட்கவும், மித்ரா தலையசைத்து, தண்ணீரில் காலை நனைக்க,

“சொல்லிட்டே இருக்கேன்… திரும்ப அதையே செய்யறா பாரு… காலை எடுடி…” தலையில் வலிக்காமல் கொட்டிய வசந்த், அவளை கடிய, அவளது நெற்றியில் அடிபட்ட வலியையும் மீறி, அவனது ‘டி’ என்ற அழைப்பு மித்ராவிற்கு இனித்து, அவளுக்கு புன்னகையை வர வைத்தது. 

அவள் அருகில் அமர்ந்த வசந்த், அவளை அதிகம் நீரில் விளையாடாமல் பார்த்துக்கொள்ள, சிறிது நேரத்தில் மித்ராவிற்கு தலைவலிக்கத் தொடங்கியது.

“மித்ரா… முடியலைனா பஸ்க்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு… உன் முகமே சரி இல்ல…” மீண்டும் அவள் அருகில் வந்த கோகிலா மேடம் சொல்லவும்,

“இல்ல மேடம்… எனக்கு ரொம்ப வலி தெரியல… சின்ன சிராய்ப்பு தானே…” மித்ரா சமாளிக்கவும்,

“அது தான் மேடம் சொல்றாங்க இல்ல… பஸ்ஸுக்கு கிளம்பு…” வசந்த் அவள் காதில் முணுமுணுத்தான்.

அவன் சொன்னதே வேதமாக, “சரி மேடம், நான் போறேன்..” என்று எழவும், அதுவரை அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனிதாவும், நித்யாவும் அவளுடன் நடக்க,

“அனிதா, நித்யா… நீங்க இங்க என்ஜாய் பண்ணுங்க… நான் அவ கூட பஸ்க்கு போறேன்…” பாலாஜி சொல்லவும், சந்தோஷமாக அனிதா விளையாடத் துவங்க, நித்யா அவளுடன் இணைய, பிறர் அறியாமல் வசந்த் மித்ராவைத் தொடர்ந்து பஸ்சிற்கு சென்றான். 

பஸ்சிற்கு வந்த உடன், “இந்த மாத்திரையைப் போட்டுட்டு பேசாம தூங்கு… நல்லா தலை வலிக்குது போல… முகமே வாடி இருக்கு…” வசந்த் சொல்லவும்,

“ஆமா… ஹாஸ்பிட்டல் ஓனர் சொல்றார் கேட்டுக்கோ… நான் போய் குடிக்க டீ வாங்கிட்டு வரேன்…” பாலாஜி அங்கிருந்து நகரவும்,

“இவரு… பெரிய சூப்பர் மார்கெட் ஓனர்…” வசந்த் ஏளனம் செய்ய, அவர்களைப் பார்த்து சிரித்தாள். அவன் கொடுத்த மாத்திரையை முழுங்கியவளின் மனதில், வசந்த் பலமடங்கு உயர்ந்து நின்றான்… அதே போலவே, டூர் முடிந்து, வீட்டிற்குச் சென்று சேரும் வரை அவன் தன் மீது காட்டிய கரிசனம், மித்ராவின் மனதில் ஆழப் பதிந்தது. அந்த டூரின் முடிவில், மித்ராவின் மனதில் வேர் விட்டிருந்த காதல் பாலாஜிக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது.

உன்னைப் பற்றி மட்டுமே

சிந்தித்துச் செலவழியும்

என் நேரங்களை

மீட்டெடுக்கும் வழி தெரியவில்லை !!!

வசந்த் அவளை அக்கறையாக கவனிப்பதைப் பார்த்து பாலாஜியின் மனதில் தோன்றிய நிம்மதியை, “வீட்ல எனக்கும் ஸ்வப்னாக்கும் கல்யாணம்ன்னு  பேசிக்கிறாங்க… நான் வேலைக்கு போய் ரெண்டு மூணு வருஷத்துக்குப் பிறகு வைக்கிறாங்களாம்…” என்று அடுத்து வந்த நாட்களில், வசந்த் கூறிய வார்த்தைகள் குலைக்க, பாலாஜி மித்ராவை நினைத்து தவித்துப் போனான்.

மௌனங்கள் தொடரும்….

LEAVE A REPLY