SHARE

“என்ன மாரியக்கா? நான் எப்போ அவருக்கு உங்களை சாப்பாடு எடுத்துட்டு போகச் சொன்னேன்? அவரு ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்காரு மாரியக்கா…” வெளியில் வந்த கொடி மாரியை நிறுத்திக் கேட்க,

“நீ தானே கொடி அன்னைக்கு வந்து, ‘டாக்டர் சார்க்கு சமைக்க கூட ஆள் இல்லாம இருக்காரு.. இங்க நல்ல ஹோட்டல் எங்க இருக்கு? வெளிய தான் சாப்பிடறாரு போல. நீங்க நல்ல சமையலா சமைச்சு கொடுங்க’ன்னு சொன்னியே கொடி… உனக்கு மறந்து போச்சா என்ன?” மாரி வியப்புடன் கேட்க, இப்பொழுது குழம்புவது கொடியின் முறையாக மாறியது.

“நான் சொன்னேனா? உங்ககிட்டயா? ஏன் அக்கா… நானே தினம் தினம் செத்து செத்து பிழைச்சிக்கிட்டு இருக்கேன். என் சாப்பாடையே நான் ஒருவேளை முழுசா சாப்பிடறேனா என்னன்னே எனக்குத் தெரியல.. அப்படி இருக்கும் போது, டாக்டர் சார் சாப்பிடலன்னு நான் எங்க கவனிச்சு உங்ககிட்ட சொல்லி இருக்கப் போறேன்க்கா..” சலிப்புடன் சொல்லியவளைப் பார்த்த மாரி, யோசனையுடன் அவளது முகம் பார்க்க, அதற்குள் குணாவின் வீட்டுக் கதவு திறப்பது போல் இருக்கவும்,

“ஐயோ அக்கா… அந்த ஆளு வரான் போல இருக்கு. நான் வீட்டுக்கு போறேன்…” அவள் பதட்டப்பட,

“கொஞ்சம் சீக்கிரமா வா.. நான் உன்னை உன் வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வேலைக்குப் போறேன்..” என்ற மாரி வேகமாக நடக்கவும், கொடி அவருடன் இணைந்து நடந்தாள்.

உணவு விஷயத்தை மறந்த கொடி அங்கிருந்து நகர்ந்து செல்ல, அதை மறவாத பீஷ்மாவோ யோசனையில் ஆழ்ந்தான்.

“எதுக்கு இந்த கொடி மாரிக்கிட்ட சாப்பாட்டை நான் கொடுக்கச் சொல்லலைன்னு சொல்றா? ஒருவேளை கொடி என் மேல அக்கறை இருக்கற மாதிரி காட்டினா… நானும் அந்த குணா போல அவ மேல ரொம்ப உரிமை எடுத்துப்பேன்னு நினைக்கிறாளோ?” என்ற யோசனையுடன் மெல்ல உணவினை உண்ணத் துவங்க, பீஷ்மாவிற்கு கொடியின் பதட்டம் கண் முன் விரிந்தது.

“அவ சொன்னது உண்மையா இருக்குமோ? இருக்கும்… அந்த குணாவோட கண்ணுல நேத்தே அந்த கொலைவெறியும் அவமானப்பட்ட சீற்றமும் தெரிஞ்சது.. என்ன வேணா செய்வான்? ஆனா.. அவனை எப்படி சமாளிக்கறது?” என்று நினைத்துக் கொண்டவன், மெல்ல உணவினை உண்டு முடித்து, மாத்திரையையும் விழுங்கி விட்டு, தனது பணியைக் காணச் சென்றான்.                  

சிறிது நேரம் வரை எந்த வித மாறுதலும் இன்றி செல்ல, உன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என்பது போல மருத்துவமனைக்கு வந்த குணா, பீஷ்மாவின் முன்பு அமர்ந்தான். குணா உள்ளே நுழைவதைப் பார்த்த துரை, அவன் ஏதோ பிரச்சனை செய்யத் தான் வந்திருக்கிறான் என்று உணர்ந்து வேகமாக பீஷ்மாவிடம் ஓடி வர, அதற்குள் குணாவும் அருகில் வந்திருக்கவும், எதுவும் பேச முடியாமல் மெளனமாக நின்றான்.

“என்ன துரை? அய்யா வந்திருக்காங்க.. ஒரு சேர் எடுத்துப் போடுட்டு போய் உங்க வேலையைப் பாருங்க. இங்க நான் பார்த்துக்கறேன்..” பீஷ்மா நக்கலாகச் சொல்லவும், துரையின் கண்கள் பளிச்சிட அங்கிருந்து விலகிச் செல்ல, பீஷ்மா குணாவைப் பார்த்தான்.

“உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?” ஒருமாதிரிக் குரலில் பீஷ்மா கேட்க, குணா அவனை முறைக்க,

“ஐ மீன்… உடம்புக்கு என்ன பண்ணுதுன்னு கேட்க வந்தேன்… அதுக்குள்ள என்னைப் போய் முறைக்கறீங்களே.. அது தான் வாய் தவறி வார்த்தை வருது… என்னை அப்படி பார்க்காதீங்க.. ரொம்ப பயம்…ம்…ம்….மா இருக்கு” பீஷ்மா மிகவும் பவ்யமாகச் சொல்லவும், குணாவின் கோபம் அதிகமாக ஏறியது.

“ஏண்டா… என்னைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா என்ன? என் கையைப் பிடிச்சதுக்கு உன்னைக் கொன்னுடுவேன்…” குணா எகிற,

“அய்யா… என்னய்யா சொல்றீங்க? நான் உங்க கையைப் பிடிச்சேனா? என்ன சொல்றீங்க? ஐயோ… போயும் போயும் நான் உங்க கையைப் பிடிப்பேனா?” என்று பீஷ்மா போலியாக அலற, குணா அவனை அடிக்க கையை ஓங்கி, ஓங்கிய கை வலியை மூளைக்கு உணர்த்த, ‘அம்மா…’ என்று அலறத் துவங்கினான்.

“ஐயோ சார்… அம்மாவுக்கு என்ன ஆச்சு? நீங்க சும்மா என்னைப் பார்க்க வந்திருக்கீங்கன்னு நானும் ரொம்ப சந்தோஷமா நினைச்சிட்டு இருக்கேன்… நீங்க என்ன சார்.. நீங்க வந்ததும் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னா நான் உடனே வந்திருப்பேனே..” மேலும் குணாவை கோபத்தின் எல்லைக்கே பீஷ்மா அவனைக் கூட்டிச் செல்லவும், குணா பல்லைக் கடிக்க, பீஷ்மா அவனை கூர்ந்து நோக்கினான்.

“என் மேல கை வச்சதுமில்லாம என்னை கிண்டல் செய்யறியா?” குணா எகிற,

“நான் எங்க கிண்டல் செய்தேன்….” பீஷ்மா சொல்லிக் கொண்டே நேராக அமர்ந்தவன்,

“எனக்கு வேலையில இருக்கும்போது வம்பு தும்பு எதுவும் பிடிக்காது. இந்த தொழில் ரொம்ப புனிதமானது. அதனால பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன். சொல்லுங்க.. எதுக்கு இங்க வந்திருக்கீங்க?” குணாவை பொறுமையாக பார்த்துக் கொண்டே பீஷ்மா கேட்கவும், தனது கையைக் காட்டியவன்,

“நேத்து முறுக்கி விட்டுட்டு வந்த இல்ல.. கை வலிக்குது… மருந்து போட்டு மாத்திரை கொடு…” என்று கெத்தாக குணா சொல்லிவிட்டு அமரவும்,

“இந்த ஹாஸ்பிட்டல்ல கட்டி வச்சிருந்த மாட்டுக்கிட்ட காட்ட வேண்டியது தானே…” குத்தலாகச் சொன்னவன், அவனது கையைப் பிடித்து இழுக்க, குணா மேலும் அலற,

“இங்க பக்கத்துல வாங்க பாஸ்… கொஞ்சம் உங்க கைல எத்தனை எலும்பு முறிவு ஆகி இருக்குன்னு பார்க்கறேன்…” என்றவன், அவனது கையை ஆராயத் தொடங்க,

“கையை உடைச்ச நீயே இப்படி கட்டுப் போடறது ரொம்ப நல்லா இருக்கு… அதே போல உனக்கும் எப்படி வைத்தியம் செய்யறதுன்னு கத்துக்கோ… இன்னைக்கோ நாளைக்கோ உனக்கே உபயோகம் ஆகும்…” குணா நக்கலாகச் சொல்லவும்,

“எங்களைப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்… உன் கையை முறுக்கும் போதே நான் உடையாத மாதிரி தான் முறுக்கினேன்… எங்க தட்டினா எங்க உடையும்ன்னு எங்களுக்குத் தெரியும்.. ஏன்னா… நான் இன்பில்ட் ரவுடி..” சொல்லிக் கொண்டே பீஷ்மா, ‘துரை..’ என்று அழைக்க, துரை அங்கே ஓடி வந்தான்.

“இவருக்கு இந்த மருந்தை கொடுத்து அனுப்பி வை.. கைல ஒரு முறிவும் இல்ல… டிஷ்யூ கொஞ்சம் பிசகி இருக்கு.. அவ்வளவு தான்..” என்று கூறிவிட்டு, மருந்துச் சீட்டை துரையிடம் நீட்ட,

“அவ்வளவு தானா சார்… நல்லா பார்த்தீங்களா? எங்க ஐயான்னா எங்களுக்கு உசுரு சார்… அவரு தான் எங்களுக்கு எல்லாமே…” என்று துரை வெகு சீரியசாக சொல்லவும்,

“நல்லா பார்த்துட்டேன் துரை.. ஆனா.. கை உடையறதும் உடையாம இருக்கறதும் இனிமேலும் அவர் கையில தான் இருக்கு… நீங்க போய் மருந்து கொடுங்க..” பீஷ்மா கிண்டல் செய்ய, பீஷ்மாவை முறைத்துக் கொண்டே குணா துரையின் பின்னால் செல்ல, பீஷ்மா அவனது முறைப்பின் அர்த்தம் புரிந்து மனதினில் புன்னகைத்துக் கொண்டான்.

 

“என்ன துரை.. டாக்டர் கூட சேர்ந்து நக்கல் எல்லாம் பலமா வருது போல. நீ நம்ம ஊரு தானே..” குணாவின் கேள்விக்கு, போலியான பயத்துடன் அவனைப் பார்த்த துரை,

“அய்யா… நான் நக்கல் பண்றேனா? நீங்க என்ன அய்யா சொல்றீங்க? உங்களைப் போய் நான் நக்கல் பண்ணுவேனா?” என்று துரை பரிதாபமாகக் கேட்கவும், குணா அவனை அமைதியாக பார்க்க, அவனது பார்வையை தவிர்த்தவன், தனது வேலையைத் தொடர்ந்தான்.

“டாக்டர் சார் கொஞ்சம் ஒரு மாதிரியான ஆளா தான்  இருக்காரு அய்யா.. கொஞ்சம் சூதனமா நடந்துக்கோங்க அய்யா.. எனக்கு இதுக்கும் மேல என்ன சொல்றதுன்னே தெரியல…” மாத்திரைகளை எடுத்துக் கொண்டே கவனமாக அய்யாவின் மீது பார்வை பதியாமல் பேசிக் கொண்டிருந்த துரை, அந்த மாத்திரைகளை எப்பொழுது எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கவும், மீண்டும் உள்ளிருந்து ‘துரை..’ பீஷ்மாவின் குரலில்,

“டாக்டர் சார் கூப்பிடறாரு.. நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்கய்யா… நான் வரேன்…” துரை ஓடவும்,

“இருடா… இன்னைக்கு உனக்கு கச்சேரி வைக்கிறேன்…” என்று குணா கருவிக் கொண்டே சென்றான்.

தோட்டத்தில் கொடி வேலையை செய்துக் கொண்டிருந்தாலும், உள்ளம் முழுவதும் அவளுக்கு படபடப்பாக தான் இருந்தது.

“என்ன கொடி.. வேலையில கவனம் இல்லாம செய்யற? பறிச்ச பூவை எல்லாம் கூடையில போடாம எங்க கீழ போடற?” மாரி கேட்கவும் தான், தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள்,

“என்னவோ தெரியல மாரிக்கா மனசு கிடந்து அடிக்குது. ஒரு மாதிரி படபடன்னு இருக்குக்கா. அந்த டாக்டருக்கு ஒண்ணும் ஆகாது இல்ல..” குழம்பிய குரலில் கேட்கும் கொடியை ஒருமாதிரி பார்த்த மாரி,

“என்ன அந்த தம்பி மேல புதுசா கரிசனம் உனக்கு?” மாரியின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத குழந்தையாக விழித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த மாரிக்கே பரிதாபமாக இருக்க, அந்த பேச்சை விடுத்து,

“அவரு ரொம்ப நல்லவரு கொடி.. எனக்குத் தெரியும். உன்னை அவரு நல்லா வச்சு பார்த்துப்பாரு.. அந்த கடவுளே தான் உனக்குத் துணையா அவர அனுப்பி இருக்காருன்னு நான் நம்பறேன்” தன் பொக்கில் சொல்லிக் கொண்டே சென்ற மாரியின் அருகே சலசலப்பு கேட்க,

“அக்கா… பாம்பு போகுது போல… ஜாக்கிரதை…” கொடி எச்சரிக்கை செய்யவும், மாரி ஒரு புன்னகையுடன் வேலையைத் தொடர, அவரை புரியாத பார்வை பார்த்துவிட்டு கொடி தனது பணியைத் தொடர்ந்தாலும், என்னவோ அவள் உள்ளிருந்த படபடப்பு மட்டும் குறைய மறுத்தது.

“டாக்டர் தம்பிக்கு ஒண்ணும் ஆகாம அந்த தெய்வம் காப்பாத்தும் கொடி… இது சத்திய வாக்கு. நீ உன் வேலையைப் பாரு…” மாரியின் குரலில் இருந்த உறுதி கொடிக்கு சற்று ஆறுதலாக இருந்தது.  

மாலை வழக்கம் போல தனது வேலை முடிந்த பிறகு பீஷ்மா வெளியில் உலாவுவதற்காக தனது காமெராவை எடுத்துக் கொண்டு நடந்தான். அவனைப் பின் தொடர்ந்து யாரோ வருவது போல இருக்கவும், குணா அனுப்பிய ஆட்கள் என்று யூகித்தவன், “வாங்கடா… உங்களுக்கு இருக்கு கச்சேரி…” மனதினில் நினைத்துக் கொண்டு தனது நடையைத் தொடர,

“என்ன டாக்டர் சார்… நான் வர்ரது தெரிஞ்சும் நீங்க இப்படி என்னை விட்டுட்டு போறது சரியா?” மலரின் குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தவன், அவளைப் பார்த்து பெரிதாக புன்னகைத்தான்.

“நீங்க பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டே இருங்க.. நான் பின்னால வரேன்… என்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது…” மலர் சொல்லவும், ‘எதுக்கு?’ என்று புரியாமல் கேட்டவனிடம் மர்மப்புன்னகையைச் சிந்தியவள்,

“சொல்றதை செய்ங்க… நான் உங்க கூட பேசிக்கிட்டே வரேன்…” என்று சொன்னவள், பீஷ்மா திரும்பி நடக்கவும், சிறிது நேரம் அமைதியாக வந்தாள்.

“உங்களை அடிச்சுப் போட ஊருக்குள்ள ஆள் வந்தாச்சு. நீங்க என்னடான்னா கண்டுக்காம என்னைப் பார்க்க ஆத்தங்கரை ஓரம் வந்துகிட்டு இருக்கீங்க? உங்களுக்கே இது எல்லாம் ஓவரா இல்ல…” கிண்டலாக கேட்டு சிரித்தவளின் முகம் பார்க்க முடியாமல் தவித்தவன்,

“ஓவரா எல்லாம் இல்ல.. ஆனா.. நீ செய்யறது தான் ரொம்ப ஓவர்…” பீஷ்மா குறைபடவும்,

“நான் என்ன செய்தேன்?” மலர் கேட்டு நிறுத்த, பட்டென்று பீஷ்மா மீண்டும் திரும்ப,

“உங்களை நான் திரும்பிப் பார்க்காம பேசுங்கன்னு சொன்னேன்…” என்று அதட்டினாள்.

“அதட்டல் எல்லாம் பலமா தான் இருக்கு.. சரி… நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு. எனக்கு சாப்பாடு செய்து தரச் சொல்லி மாரியக்கா கிட்ட நீ தானே சொன்னே. காலையில நானா… நானான்னு கேட்கற? இது நியாயமா?” என்று நியாயம் கேட்டவனைப் பார்த்து களுக்கென்று சிரித்தவள்,

“ஆமா… கேட்டா என்ன? சும்மா எல்லாம் ஒரு நடிப்பு தான். அதனால தானே இன்னைக்கு முழுக்க என்னை நினைச்சிக்கிட்டே இருக்கீங்க… அதுக்குத் தான் அப்படி சொன்னேன்” சிரிப்புடன் சொன்னவளின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு திரும்பிப் பார்க்க முடியாமல் திணறியவன்,

“உனக்கு ஆனாலும் இந்த அலும்பு ஆகாது கொடி.. நீ இது போல எதுவும் சொல்லலைன்னாலும் உன்னை நான் நினைச்சிட்டுத் தான் இருப்பேன்…” வெகு சீரியசாக சொன்னவனின் பதிலைக் கேட்டவள் ஓரிரு வினாடிகள் நின்ற பின் அவனைத் தொடர்ந்து, அந்த ஆற்றங்கரைக்குச் செல்ல, அவர்களைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு குணாவின் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.

“நீ அந்த கல்லுல உட்காரு.. நான் இங்க உட்கார்ந்துக்கறேன்…” மலரின் எதிரில் அமர்ந்தவன், அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். சிறு கல்லை எடுத்து அவன் மீது போட்டவள், “என்னை எதுக்கு இப்படி பார்க்கறீங்க?” வெட்கத்துடன் கேட்டவளின் முகத்தை மென்மையாகப் பார்த்தவன்,

“நீ இப்படியே சிரிச்சிட்டே இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்…” என்றவன், “எங்க? நீ தான் அழுது வடிஞ்சிக்கிட்டு இருக்க… உன் முகத்துக்கு அது தான் செட் ஆகுது” பீஷ்மா பேசிக் கொண்டே செல்ல, மலர் யோசிப்பது போல அமர்ந்திருந்தாள்.

“என்ன பலமான யோசனை?” பீஷ்மா கேட்கவும்,

“இல்ல.. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க எதுக்கு இப்படி ஒரு கிராமத்துக்கு வேலைக்கு வரணும்ன்னு நினைச்சீங்க டாக்டர் சார்..”

“எனக்கு சின்ன வயசுல இருந்தே கிராமத்துல இருக்கணும்ன்னு ரொம்ப ஆசை. அதுவும் சிட்டில இந்த தொழிலைப் பார்க்கறதை விட, இந்த உதவி தேவையான வில்லேஜ்ல பார்த்தா, நான் படிச்ச படிப்பு நாலு பேருக்கு ப்ரயோஜனமா இருக்கும்ன்னு எனக்கு ஆரம்பத்துல இருந்தே யோசனை… அது தான்…” என்றவன்,

“கூடவே என்னோட காதல் பைங்கிளியும் இங்க இருக்கான்னு ஒரு பட்சி சொல்லிச்சு… அதான் நான் வந்துட்டேன்…” கேலியாக முடித்தவனின் மீது அடுத்த கல் வந்து விழுந்தது.

“அம்மா… ஐயோ…” வலியால் துடித்தவனைக் கண்ட மலர் பதறி எழ, நிஜமாகவே அவன் மீது ஒரு சிறிய அளவிலான கருங்கல் அவனது காலின் அடியில் கிடந்தது.

“அடிப்பாவி… கல்லைத் தூக்கிப் போடறேன்னு இப்படியா போடுவ..” வலியிலும் அவன் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் நின்றிருந்தவளை நிமிர்ந்துப் பார்த்தவன், அவள் கண்களில் தெரிந்த கனலைக் கண்டு தயங்கி எழ, அதற்குள் அவள் அங்கிருந்த ஒருவன் மீது பாய்ந்திருந்தாள்.

“டேய்…” என்ற சத்தம் மட்டுமே பீஷ்மாவின் காதில் விழ, அடுத்த சில நிமிடங்கள் என்ன நடந்தது என்பதை பீஷ்மா உணர்ந்து முடிப்பதற்குள், அவனைத் தாக்க வந்த அனைவரும் ஆளுக்கு ஒரு திசையில் விழுந்து கிடந்தனர்.

அதைப் பார்த்து பேரதிர்ச்சியில், “கொடி… ஏய் கொடி…” பீஷ்மா சத்தமாக அழைத்தபடி அவளை உலுக்க நினைக்க, கீழே இருந்தவர்களோ அவனைப் பார்த்து பதறி எழுந்து ஓட முடியாமல் ஓடவும், பீஷ்மா அவர்களைப் பார்த்து குழம்பி நின்றது சில வினாடிகளே.

இன்னமும் அதிர்ச்சியும் கொடியின் வேகம் கண்ட திகைப்பும் சேர்ந்து பீஷ்மாவின் நெஞ்சம் துடித்துக் கொண்டிருக்க, அதை விட, அவள் அந்த அடியாட்களை தாக்கியதில் அவளுக்கு ஏதும் அடி பட்டிருக்குமோ என்ற கவலையும் சேர்ந்துக் கொண்டது. 

“கொடி… என்ன இதெல்லாம்..” திகைப்பு விலகாமலே கேட்டவன், அவளது கவனம் அங்கில்லாமல் இருக்கவும், என்ன நடந்தது என்பதை அறிந்துக் கொள்ள அவன் மீண்டும் கொடியைப் பிடித்து உலுக்க நினைத்து அவள் அருகில் செல்ல முயல,

“வேண்டாம்…. என்னைத் தொடக் கூடாது…” சொல்லிக் கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கண்கள் ரத்த நிறம் கொண்டிருக்க, முகமோ அதற்கு போட்டிப் போடுவது போல தகதகவென்ற தணல் போல ஜொலித்தது.

“கொடி… கொடி.. உனக்கு என்ன ஆச்சு? உனக்கு எதுவும் இல்லையே… அவனுங்களை எதுக்கு இப்படி அடிச்ச? உனக்கு ஏதாவது ஆகி இருந்ததுன்னா?” பீஷ்மா பதட்டமாகக் கேட்க, அப்பொழுது தான் தன்னிலை அடைந்தவள் போல தொப்பென்று அங்கிருந்த மணலில் அமர்ந்தவள், தனது முந்தானையால் முகத்தை துடைத்துக் கொள்ள, அவளது முகம் சாந்த நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

“கொடி.. கொடி… உனக்கு ஒண்ணும் இல்லையே…” ஏதோ தவறாகத் தோன்ற பீஷ்மா கேட்கவும்,

“அவனுங்க… அவனுங்க உங்க மேல கல்லைப் போட்டு உங்களை கொல்லப் பார்த்தாங்க. அவங்க தூக்கின கல்லுல இருந்து விழுந்த ஒரு பகுதி தான் உங்களை காயப்படுத்திச்சு…” பதட்டமாகச் சொன்னவளை பரிதாபமாகப் பார்த்தவன், தான் கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான்.

“ஆத்துல இத்தனை தண்ணி ஓடும் போது எதுக்கு சார் குப்பித் தண்ணி…” நக்கலாக கேட்டவள், அருகில் இருந்த ஆற்றுத் தண்ணீரை குடித்துவிட்டு, தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

“கொடி.. என்னாச்சு உனக்கு? கையைக் காட்டு…” குழம்பிய நிலையில் பீஷ்மா கேட்க,

“எனக்கு என்ன ஆச்சு?” பரிதாபமாக திரும்ப கேள்விக் கேட்டவளைப் பார்த்தவன், அவளது மன அழுத்தமே இதற்குக் காரணம் என்று கருதி,

“ஒண்ணும் இல்ல கொடி.. அவங்க என்னை அடிக்க வந்ததைப் பார்த்து உனக்கு கோபம் வந்திடுச்சு… அது தான்… வேற ஒண்ணும் இல்ல… நீ வீட்டுக்குப் போ…” பீஷ்மா யோசனையுடன் சொல்லவும்,

“எனக்கு ஒண்ணும் இல்லைங்க… நீங்க போங்க. எனக்கு இங்க கொஞ்ச நேரம் இருக்கணும்..” அவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் சொன்னவளை அங்கு தனியே விட்டுச் செல்ல மனம் வராதவன், அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல எண்ணி,

“இங்க நீ ஒண்ணும் தனியா இருக்க வேண்டாம்… நீ என் கூட கிளம்பு. நான் உன்னை வீட்டுல விட்டுட்டு போறேன்…” விடாமல் குரலை உயர்த்திச் சொன்னவனை நிமிர்ந்து முறைத்தவள்,

“நீங்க போங்கன்னு சொன்னேன்… நான் உங்களை ராத்திரி வந்து பார்க்கறேன்… அப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்… இப்போ கிளம்புங்க” என்று கூறிவிட்டு, விடு விடுவென்று அந்த ஆற்றங்கரையோரம் அவள் நடக்கத் தொடங்க, அவளையே சிறிது தூரம் வெறித்துக் கொண்டிருந்த பீஷ்மா, கோபமாக திரும்பி வீட்டிற்கு நடந்தான்.

வீட்டிற்கு வந்து வெகுநேரமாகியும் பீஷ்மாவின் கோபம் அடங்க மறுத்துக்கொண்டே இருந்தது. “என்ன கோபம் அவளுக்கு? வீட்டுக்கு வான்னு சொன்னா வர்ரது இல்ல…” அவளை கறுவிக் கொண்டே அமர்ந்திருந்தவனின் முன்பு கொடி வந்து நின்றாள்.

அதே நேரம் கூண்டுப் புலி போல வீட்டை அளந்துக் கொண்டிருந்த குணா, தான் அனுப்பிய ஆட்கள் வந்து சேர்ந்த நிலையை எண்ணி எண்ணிப் பார்த்தான். அங்கு நடந்ததை விளக்க அவர்களுக்கும் புரியவில்லை… தெரியவும் இல்லை… ‘யார் அடித்தது?’ என்ற கேள்விக்கும் அவனுக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.

“ச்சே… இங்க இருந்து போங்கடா..” என்றவன், தனது மாட்டு வண்டியில் அவர்களை அள்ளிப் போட்டு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டின் உள்ளே நுழைந்தவனுக்கு பீஷ்மாவிடம் தோற்றுப் போனதொரு உணர்வு.

அடிபட்ட புலி போல சுற்றிக் கொண்டிருந்தவனின் கண்களில், பதுங்கிப் பதுங்கி கொடி அவனது வீட்டை நோக்கிச் செல்வது தெரிய, பீஷ்மாவை அசிங்கப்படுத்திவிடும் ஆவேசத்தில், பீஷ்மாவின் வீட்டின் முன்பு ஊரைக் கூட்டினான்.

10 COMMENTS

  1. சூப்பர் கொடிக்கு பேய் புடிச்சுருச்சு போல அதான் இப்படி பண்றாள அடுத்து என்ன கொடிக்கு கல்யாணம் மா

LEAVE A REPLY